-செண்பக ஜெகதீசன் 

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
கருதி யிடத்தாற் செயின்.    (திருக்குறள்-484: காலமறிதல்) 

புதுக் கவிதையில்… 

உலகு ஒன்றும்
உன் கைகளுக்கு எட்டாததல்ல… 

உற்ற காலத்து
உரிய இடத்தில் செயலாற்றினால்,
உலகம் கூட

உனக்கு வசமாகும்…! 

குறும்பாவில்… 

காலம் இடமறிந்து
கடமையாற்றினால்,
உடமையாகிடும் உலகே…! 

மரபுக் கவிதையில்… 

நிலையா உலக வாழ்வினிலே
    -நடக்கா தென்பது எதுவுமில்லை,
விலையாய் ஏதும் வேண்டாமே

    –வினையைச் செய்திடு இடமறிந்தே,
அலையாய்ச் சென்றிடும் காலத்திலே

    –அறிந்து செயல்படு காலமதில்,
அலைந்தே வெற்றி தேடவேண்டாம்

    –அகிலம் உன்கை வசப்படுமே…! 

லிமரைக்கூ… 

காலம் இடமறிந்தே ஆற்றிடுவாய் கடமை,
வெற்றி உன்னைத் தேடிவரும்,
உலகமதும் ஆகிவிடும் உந்தன் உடமை! 

கிராமிய பாணியில்… 

கடமயச்செய்யி கடமயச்செய்யி
காலமறிஞ்சி கடமயச்செய்யி,
கடமயச்செய்யி கடமயச்செய்யி

எடத்தயும்பாத்து கடமயச்செய்யி… 

அப்போ,
எல்லாம்ஒனக்குக் கெடச்சிருமே

எதுலயும்வெற்றி கெடச்சிருமே,
ஒலகத்தநீ கேட்டாலும்

ஓங்கையில கெடச்சிருமே… 

அதால,

கடமயச்செய்யி கடமயச்செய்யி
காலமறிஞ்சி கடமயச்செய்யி,
கடமயச்செய்யி கடமயச்செய்யி

எடத்தயும்பாத்து கடமயச்செய்யி…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *