இந்த வார வல்லமையாளர்!
ஜனவரி 11, 2016
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு ரிஃபாத் ஷாருக் அவர்கள்
வல்லமையின் இந்தவார வல்லமையாளர், இந்தியாவின் இளம் அறிவியலாளராகப் பாராட்டப் பட்டுள்ள, தமிழ்நாட்டின் மேல்நிலைப் பள்ளி மாணவரான திருவளர் செல்வன் ரிஃபாத் ஷாருக் (Mohamed ‘Rifath Shaarook’ Raaj M D / https://www.facebook.com/rifath.stechlabs) அவர்கள். இந்தச் சாதனையாளரை வல்லமைக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் குவைத் நகர் வாழ் தமிழன்பர் திரு. பி.எம். இப்ராஹீம் (BM Ibrahim / https://www.facebook.com/ibrahimadvt) அவர்கள். சென்ற வாரம் ஜனவரி 3 – 7, 2016, மைசூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 103வது இந்திய அறிவியல் மாநாட்டில் (The 103rd edition of Indian Science Congress – ISC / http://www.isc103.in/) கரூரை அடுத்த பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிஃபாத் ஷாருக் தனது கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரிஃபாத் ஷாருக் கரூர் ‘கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் (Crescent Matric Higher Secondary School) பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்
இந்திய அறிவியல் மாநாட்டின் சிறுவர்களுக்கான 23ஆம் “ராஷ்ட்ரீய கிஷோர் வைகையானிக் சம்மேளனம்” (23d Rashriya Kishore Vaigyanik Sammelan / Children’s Science Congress) அமைப்பு முன்னெடுத்த மாணவர்களுக்கான போட்டியில், “இயற்கை அடிப்படையில் பருவநிலையைக் கண்டறிதல்“(Understanding Climate with Nature) என்ற கருத்தில் ஆய்வுகள் பள்ளி மாணவர்களிடம் இருந்து வரவேற்கப்பட்டன. “சாட்டிலாஸ்கோப்“(Sateloscope) என்ற கருவியை தனது ஆசிரியர் பச்சமுத்து (Pachamuth A) அவர்களின் மேற்பார்வையில் வடிவமைத்தார் ரிஃபாத் ஷாருக்.
சாட்டிலாஸ்கோப் என்பது உருவில் சிறிய ஒரு செயற்கைக்கோள் மற்றும் தொலைநோக்கி ஆகியவற்றினை இணைத்து உருவாக்கப்பட்ட கருவி (a nano satellite which is a combination of satellite and telescope). பொதுவாக நாம் அறிந்துள்ள செயற்கைக் கோளைவிட உருவில் சிறியதாகவும் எடையில் குறைவாகவும் உள்ளது இந்தக் கருவி. அதனால் குறைந்த எரிபொருளுடன், சிறிய விண்கலம் மூலம் விண்வெளிச் சுற்றுப்பாதையில் இதனை நிறுவிவிட முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள வரிச்சுருள் பாகமானது கருவியைச் சுற்றி ஒரு செயற்கைக் காந்தப்புலத்தை உருவாக்கி, கருவி சுற்றுப்பாதையில் இருந்து விலகிவிடுவதைத் தவிர்க்கும் வகையிலும், சூரியக்கதிர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வண்ணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தில் இக்கருவியின் பங்கு சிறந்த முறையில் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது செயல்படும் நிலையில் உள்ள ஒரு கருவி. இத்துடன் செவ்வாய் கிரகத்தின் கனிம வளங்களை ஆராய உதவும் மேலும் இரு கருவிகளையும் (‘Nano Mars Lander and the other is ‘Nano Mars Rover’) செயல்படும் நிலையிலேயே ரிஃபாத் ஷாருக் போட்டிக்காகச் சமர்ப்பித்திருந்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட 89 கண்டுபிடிப்புகளில் இறுதிச் சுற்றில் மூன்று மாணவர்களின் கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. பிறகு அவற்றிலும் ரிஃபாத் ஷாருக் வடிவமைத்த கருவியே சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு இந்திய அறிவியல் மாநாட்டு வழங்கிய மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பரிசைத் தட்டிச் சென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் இவர். இப்பரிசு வியாழனன்று வழங்கப்பட்டு ரிஃபாத் ஷாருக் பாராட்டப் பட்டார்.
***
சுட்டி விகடனின் ‘சீனியர் சுட்டி ஸ்டார்’ பாராட்டைப் பெற்றவரான மாணவர் ரிஃபாத் ஷாருக் இதற்கும் முன்னரே அறிவியல் சாதனைகளுக்காக அறியப்பட்டவர். ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு’ நடத்தும் “இந்திய இளம் அறிவியலாளர் ” போட்டியில் ( ‘Young Scientist India-2015’ organised by Space Kids India) பங்கேற்று நாட்டிலேயே முதல்முறையாக விண்வெளிக்கு அருகில் வானிலை ஆய்வுக் கருவியைச் செலுத்தி சாதனை நிகழ்த்தினார். ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் மறைவுக்குப் பின் சில நாட்களிலேயே நிகழ்த்தப்பட்ட இவரது இச்சாதனை அப்துல் கலாமின் மறைவுக்குச் சிறந்த அஞ்சலியாகக் கருதப்பட்டது.
‘இங்கிலாந்தின் அதிஉயர குழுவின்’ (U.K. high altitude society) உறுப்பினரான ரிஃபாத் ஷாருக் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (The National Aeronautics and Space Administration – NASA) இணைய தளத்தின் மூலம் தனது விண்வெளி தகவல் அறியும் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்பவர். ஒருமுறை அறிவிக்கப்பட்ட செயற்கைக் கோள் போட்டியில் வெளிநாட்டு மாணவர்கள் பங்கு பெற அனுமதியில்லை என்ற குறிப்பிற்குப் பிறகு, பின்னொருநாள் அதனை முயல வேண்டும் என்று திட்டமிட்டார். ஹீலியம் வாயு பலூனுடன் வானிலை தரவுகள் சேகரிக்கும் கருவிகளைப் பொருத்தி, விண்ணில் உள்ள வாயுக்கள் பற்றி பருவநிலை ஆய்வுக்கு உதவும் வகையில் அதனை அதிக உயரத்தில் விண்வெளிக்கு அருகில் கருவியை செலுத்தி சாதனை நிகழ்த்தினார்.
அதில் இணைக்கப்பட்டிருந்த 10 வகை ஆய்வுக் கருவிகளுடன் 70,000 அடி உயரம் திட்டமிட்டபடி பலூன் உயர்ந்து, 242 கிமீ கடந்து, பலூன் வெடித்து பாராசூட்டின் உதவியுடன் கூத்தானூரில் தரையிறங்கியது. புவியிடத்தைக் குறிக்கும் ஜி பி எஸ் கருவி மூலம் அதனைத் தொடர்ந்து சென்று பருவநிலையைப் பற்றி கருவிகள் பதிவு செய்த தகவல்களை ரிஃபாத் ஷாருக் சேகரித்து வெளியிட்டார். இது போன்ற உயரங்களில் பலூன் பறக்கவிட்டு ஆய்வுகள் செய்யப்படுவதை அன்று வரை வானிலை உயர் ஆய்வு மையங்கள் மட்டுமே மேற்கொண்டுவந்தன. பள்ளிமாணவர் ஒருவர் அத்தகைய செயலை நிகழ்த்திக் காட்டியதே அதன் சிறப்பு. இதற்காகச் சென்ற ஆகஸ்ட் மாதம் பாராட்டப்பட்டவர் ரிஃபாத் ஷாருக்.
சிறுவயதில் காகித ராக்கெட் செய்து பறக்கவிட்டு விளையாடிய தன்னை உண்மையான ராக்கெட் விடவேண்டும் உற்சாகப்படுத்தியவர் அந்நாட்களில் இஸ்ரோவில் பணிபுரிந்த தனது தந்தை என்று செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ரிஃபாத் ஷாருக். இவரை ஊக்கப்படுத்தி அறிவியல் ஆர்வத்தை வளர்க்க உறுதுணையாக இருந்த ரிஃபாத் ஷாருக்கின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், இவரது திட்டத்திற்கு உதவி செய்த பிற ஆர்வலர்களும் கூட இத்தருணத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை.
மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின், இந்தியா ஒரு வல்லரசாக உருவாகவேண்டும் என்ற கனவினை நனவாக்க, வலிமையான இந்தியாவை உருவாக்க விரும்பும் இளையபாரதத்தினருக்கு ரிஃபாத் ஷாருக் ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதற்காகப் பாராட்டுகள். விண்வெளி ஆராய்வுத் துறை பயன்பெற அவர் பற்பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி, மேலும் மேலும் உயர்ந்து நாளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர்களை வழிநடத்த வல்லமை இதழ் குழுவினரின் வாழ்த்துகள்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
__________________________________________________
வல்லமையாளரைத் தொடர்புகொள்ள:
Facebook : https://www.facebook.com/rifath.stechlabs
LinkedIn member : https://in.linkedin.com/in/rifath-shaarook-945a6698
Google.Plus.Com : https://plus.google.com/106488140532656756020/
youtube.com : https://www.youtube.com/channel/UCFuX8hbTIN60XKd8lI6hH_Q
Blogger : http://stlppt.blogspot.com/
__________________________________________________
செய்திகள் பெற்ற தளங்கள்:
Tamil Nadu‘s Mohamed Rifath wins 23rd Children Science Congress
Current Affairs Recap of the Day: 8 January 2016
https://www.fresherslive.com/news/current-affairs-recap-of-the-week-3-january-to-9-january-2016/
TN lad’s nano sat project is winner – ICAST
http://www.icast.org.in/news/2016/jan16/jan07TOI.pdf
Dharwad boy’s model among best 3 exhibits in children’s congress
http://www.deccanherald.com/content/521644/dharwad-boys-model-among-3.html
Chennai teenager launches helium weather balloon
http://www.deccanchronicle.com/150824/nation-current-affairs/article/chennai-teenager-launches-helium-weather-balloon
Space Kidz India Sends Payload Concieved By A Teen Into Near Space
Space Kidz India Sends Payload Concieved By A Teen Into Near Space
__________________________________________________