Tag: நாகேஸ்வரி அண்ணாமலை

  • இஸ்ரேல் தேர்தல்: அரேபியர்களே, கண்டிப்பாக வாக்களியுங்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9, 2019) அன்று இஸ்ரேலில் பார்லிமென்ட் (இஸ்ரேலில் இதற்குப் பெயர் க்னெசட்) தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. தேர்தலுக்குச் சில தினங்கள் முன்பு இஸ்ரேல் சிரியாவின் ஹோலன் ஹைட்ஸை ஆக்கிரமித்திருப்பதை அங்கீகரிக்கும்படி இப்போதைய இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைக் கேட்டுக்கொண்டார். ட்ரம்ப்பும் நேத்தன்யாஹுவும் கூட்டாளிகள்;நயவஞ்சகக் கயவர்கள். அதனால்தான் இருவருக்கும் ஒத்துப்போகிறது. ஹோலன் ஹைட்ஸை ஆக்கிரமித்திருப்பதற்கு ட்ரம்ப் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அங்கீகாரத்தைக் கொடுத்திருப்பதால் ட்ரம்ப்பின்ஆசீர்வாதத்தால் தேர்தலில் தான்ஜெயித்துவிடலாம் என்று நேத்தன்யாஹு மனக்கோட்டை கட்டுகிறார்.

    இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களில் சிலர்– இஸ்ரேல் ஜனத்தொகையில் இவர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்கு – இந்தத் தேர்தலில் பங்குகொள்வதா வேண்டாமா என்பது பற்றி வெகுவாக யோசித்துவருகிறார்களாம்.அப்படி நினைப்பவர்கள் தாங்கள் வாக்களிப்பதால் என்ன பயன் என்று நினைக்கிறார்கள். இவர்களின் மனதை மாற்றுவதற்காக டேமர் நஃபர் (Tamer Nafar) என்னும் ஹிப் ஹாப் பாடகர் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். ‘டேமர் கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டும்’என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருக்கும்,அரேபிய மொழியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஒரு பெரிய விவாதத்தை எல்லோரிடமும் உண்டாக்கியிருக்கிறது. டேமர் இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர், இஸ்ரேல் குடிமகன். இந்த வீடியோவில் ஓட்டுப் போட வேண்டாம் என்பவராகவும் போட வேண்டும் என்பவராகவும் தானே நடித்துக் கடைசியில் கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டும் என்ற முடிவுக்கு வருவதாக இருக்கிறது. சென்ற சில வாரங்களாக அவருக்குள்ளே நடந்த விவாதத்தின் விளைவு இது.

    ஓட்டுப் போட வேண்டாம் என்னும் வாதத்தை வெகுவாக எதிர்த்து,‘உங்கள் ஓட்டுக்களை வீணடித்துவிடாதீர்கள். நீங்கள் ஓட்டுப் போடுவதால் நேத்தன்யாஹுவைப் பதவியிலிருந்து விலக்குவதோடு சிறைக்கே அனுப்ப முடியும்’என்று கூறுகிறார்.

    ஓட்டுப் போட வேண்டாம் என்பவரை நஃபர் 1 என்றும், போட வேண்டும் என்பவரை நஃபர் 2 என்றும் குறிப்பிடுகிறேன்.

    நஃபர் 1:‘இந்த மண் நமக்கு (அரேபியர்களுக்கு) சொந்தமானது, ஆனால் நாடு அவர்களுடையது ( யூதர்களது). இஸ்ரேல் பாராளுமன்றம் எனக்குரியதல்ல’.

    நஃபர் 2:‘செக்கல் (இஸ்ரேல் நாணயம்) இஸ்ரேலுக்குரியதுதான். ஆனால் நாம் அதை உபயோகிக்கிறோம்.அந்தப்பணத்தில்தான் வரி கட்டுகிறோம். அது இஸ்ரேல் ராணுவத்துக்குப் போகிறது. வீட்டுத் தோட்டத்தில் தேயிலை வளருங்கள். வரி கட்ட த் தேவை வராது. அப்போது காஸாவில் போடும் குண்டுகளுக்கு உங்கள் பணம் போகத் தேவையில்லை’ என்றுஅவருக்குப் பதிலடி கொடுக்கிறார்.

    நஃபர் 1:‘இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்கள் தேர்தலில் ஓட்டுப் போடுவதால் அவர்களுக்கு யூதர்களோடு சம உரிமைகள் இருப்பதாக மேலைநாடுகளுக்குக் காட்டிக்கொள்ள இஸ்ரேலுக்கு வசதியாக இருக்கிறது. மேலும் என்னுடைய ஓட்டு எதையும் மாற்றப் போவதில்லை. ஏவுகணைகள் உபயோகப்படுத்தப்படும் போரில் நான் கத்தி வைத்துக்கொண்டு சண்டை போடுவதுபோல் இருக்கிறது. பீரங்கிகளை வைத்துக்கொண்டு அவர்கள் சண்டை போடும்போது என்னிடம் கல் மட்டுமே இருக்கிறது’.

    நஃபர் 2:‘நாம் பாலஸ்தீனத்தை விடுவிக்கப் போவதில்லை என்பது நிஜம்தான். ஆனால் நம் ஓட்டுக்கள் லிபெர்மேனை (இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்) ஒழிக்கலாம். அதோடு நேத்தன்யாஹுவைச் சிறைக்கு அனுப்பலாம் என்னும்போது நான் ஓட்டளிக்கத் தயார்’

    பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அந்தத் தொகுதியில் ஓட்டுப் போட்டவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பெற்றிருக்கும் கட்சிக்குத்தான் அங்கீகாரம் உண்டு. அரேபியர்கள்நிறையப் பேர் ஓட்டுப்போடமுன்வந்தால் அந்த சதவிகிதம் கூடிவிடும். அப்போது குறைந்த வாக்குகள் பெறும் லிபெர்மேன் கட்சி தோற்றுவிடும்.

    இந்த லிபெர்மேன்தான் 2015-இல் நடந்த தேர்தலில் அரேபியர்களின் கட்சிகள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகக் குறைந்தபட்ச சதவிகிதத்தைக் கூட்டினார். ஆனால் அரேபியக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘கூட்டுக் கட்சிகள்’ என்ற அமைப்பை உருவாக்கி தேர்தலில் ஜெயித்து பாராளுமன்றத்தில் 13 இடங்களைப் பெற்றனர். இந்தத் தேர்தலில் போன தேர்தலைவிட நிறைய அரேபியர்கள் பங்கெடுத்துக்கொள்வார்கள் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. அரேபியர்களுக்கு எதிராகச் செயல்படும் நேத்தன்யாஹுவின்மேல் இவர்களுக்கு ரொம்பக் கோபம் இருக்கிறது. ஓட்டுப் போட வேண்டாம் என்று அரேபியர்களிடம் கூறினால் அரேபிய அரசியல் கட்சித் தலைவர்களின் இந்த நம்பிக்கை வீணாகிவிடும்.

    அதிக எண்ணிக்கையில் அரேபியர்கள் ஓட்டுப் போடும் வாய்ப்பு இன்னும் இருப்பதாகத் தான் நம்புவதாகவும் அப்படி நடக்கும் பட்சத்தில் அது தர்மத்தின் வெற்றியாக (poetic justice) இருக்கும் என்றும்நஃபர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். நேத்தன்யாஹுவுக்கு எதிராகப் போட்டியிடும் மாஜி ராணுவ அதிகாரி பென்னி கேன்ட்ஸுக்கும் நேத்தன்யாஹுவுக்கும் வெற்றி வாய்ப்புகள் சமமாக இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நஃபர் பென்னி கேன்ட்ஸ் ஜெயிக்க வேண்டும் என்கிறார். (காஸாவில் எத்தனை பயங்கரவாதிகளை, அதாவது பாலஸ்தீனர்களைக் கொன்றேன் என்று பென்னி கேன்ட்ஸ் மார்தட்டிக்கொண்டதால் சில பாலஸ்தீனர்கள் அவருக்கு ஓட்டுப்போட விரும்பவில்லையாம்.) நேத்தன்யாஹுவின் மேலுள்ள குற்றச்சாட்டுக்கள் ஊழலுக்காக இருப்பதற்குப் பதிலாக போர்க் குற்றங்களுக்காக இருக்கக் கூடாதா என்று தான் விரும்புவதாக நஃபர் மேலும் கூறுகிறார்.

    நஃபர் பாலஸ்தீனர்களின் மகனாகப் பிறந்தவர். 2000-இல் இரண்டாவது பாலஸ்தீனப் புரட்சி ஏற்பட்டபோது அரசியல் கலந்த பாட்டுக்களாகப் பாட ஆரம்பித்தார். 2016-இல் இவர் தயாரித்த சுயசரிதைப் படமான ‘ஜங்ஷன் 48’ மிகவும் பிரபலமானது. பரிசு பெற்ற படங்களுக்கான ஒரு விழாவில் நஃபர் பங்கெடுத்துக்கொண்டிருந்தபோது கலாசார மந்திரி மிரி ரெஜிவ் கூட்டத்திலிருந்து வெளியேறினார்; இவருடைய படங்களைத் தடைசெய்ய முயன்றார்.

    போன தேர்தலில் அரேபியர்களின் ‘கூட்டுக் கட்சி’க்கு ஓட்டளித்த நஃபர் இப்போது அது உடைந்துவிட்டதாகவும் கப்பல் மூழ்கிவிட்டதாகவும் கூறுகிறார்.

    நஃபர் 2 கடைசியாகக் கூறுகிறார்: எனக்கிருக்கும் ஒரே ஆயுதம் ஓட்டுரிமைதான். இதை நான் பயன்படுத்தியே ஆக வேண்டும். இஸ்ரேல் அரசியலில் சில தீவிர வலதுசாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் பாலஸ்தீனர்களை இஸ்ரேலை விட்டே வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். என்னுடைய ஓட்டுரிமையைப் பயன்படுத்தி, இஸ்ரேல் எங்களை வெளியே அனுப்பும் லாரிகளில் என் சக அரேபியர்களோடு பேசிக்கொண்டிருப்பதற்குப் பதில் இஸ்ரேலிலேயே இருந்துகொண்டு அவர்களுக்குப் பாடிக்கொண்டிருக்கும் என் உரிமையை விட மாட்டேன்.

    இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களை வெளியேற்றி (இவர்களுக்கு இஸ்ரேல் குடியுரிமை உண்டு) இஸ்ரேல் நாட்டை யூதர்களுக்கு மட்டுமே உரிய நாடாக ஆக்க வேண்டும் என்ற ஒரு திட்டம் சில தீவிர வலதுசாரிகளிடம் இருக்கிறது.

    Share
  • கோலன் ஹைட்ஸ்: இஸ்ரேலின் நயவஞ்சகம்

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல் என்ற நாடு 1948-இல் உருவானதே பல பாவக் காரியங்களின் விளைவால்தான். யூதர்கள் கிறிஸ்துவுக்கு முன்னால் (கி.மு.) பல நூற்றாண்டுகள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்துவந்த போதிலும் பல நாடுகளைச் சேர்ந்த அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்துவந்தனர். ஜெருசலேமிலிருந்த அவர்களுடைய முதல் கோவில் முழுவதும் இடிக்கப்பட்டது. அதன் பிறகு அதே இடத்திலேயே இரண்டாவது கோவிலையும் கட்டிக்கொண்டனர்.மேலும் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் அவர்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்தபோது அந்தக் கோவிலும் இடிக்கப்பட்டது. ரோமானியர்களை எதிர்த்துப் போர்புரிந்த யூதர்கள் அவர்களால் நசுக்கப்பட்டதால் ஜெருசலேமை- அதாவது பாலஸ்தீனத்தை- விட்டே புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயினர். கி.பி. 132-இல் பாலஸ்தீனத்தை விட்டு ஐரோப்பாவில் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த யூதர்கள் எல்லா நாடுகளிலும் அங்குள்ள மக்களோடு கலவாமல் தனித்தே வாழ்ந்துவந்தனர். தாங்கள் பெரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்ததே அவர்கள் மற்ற இனத்தவர்களோடு ஒட்டாமல் இருந்ததற்கும் மற்ற இனத்தவர்கள் இவர்களை ஒதுக்கிவைத்ததற்கும் முக்கிய காரணம். எல்லா நாடுகளிலும் இவர்கள் மருத்துவம் போன்ற பல தொழில்கள் செய்துவந்தாலும் நிறைய வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலையும் செய்துவந்தனர். இந்தத் தொழிலும் இவர்கள்மேல் மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படவும் அவர்களைப் பிரித்துவைக்கவும் காரணமாயிற்று.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஹெர்ஸல் என்னும் வியன்னாவைச் சேர்ந்த யூதர் ஒருவர் பிரான்சில் பத்திரிக்கை நிருபராக வேலைசெய்தபோது அங்கு ஒரு யூதருக்கு நேர்ந்த அநியாயத்தைக் கண்டு மிகவும் மனம் வருந்தி யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று விரும்பி அதற்கான திட்டங்களில் ஈடுபட்டார். உலகெங்கிலுமுள்ள யூதர்களை ஒன்றுதிரட்டி அதற்கான வழிகளைக் கண்டறிய முற்பட்டார். அப்போது முதல் உலக யுத்தம் முடிந்து ஆட்டோமான் பேரரசு கவிழ்ந்து பல துண்டுகளாகப் பிரிந்திருந்தது. யுத்தத்தில் வென்ற நாடுகள் துண்டாகிப் போன அந்த நாடுகளைத் தங்கள் வசம் ஆக்கிக்கொண்டன. ஆட்டோமான் அரசின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் வந்தது. சுமார் 1800 வருஷங்களுக்கு முன் பாலஸ்தீனத்திலிருந்து ரோமானியர்களால் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாலஸ்தீனத்தைத் தங்கள் புண்ணிய பூமி என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டு அங்கு குடியேற ஆரம்பித்தனர்.

    முதல் உலகப் போரில் பிரிட்டனுக்கு உதவிய,அப்போது பிரிட்டனில் வாழ்ந்துவந்த வெயிஸ்மேன் என்னும் யூதர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியில் யூதர்களுக்கு ஒரு நாடு அமைக்க உதவுவதாக வாக்களித்தது. இதற்கு முன்பே பாலஸ்தீனத்திற்குள் ஐரோப்பாவின் பல இடங்களிலுமிருந்து பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் வர ஆரம்பித்திருந்தனர். இவர்கள் தங்களோடு கொண்டுவந்திருந்த பணத்தினாலும் புதிய தொழில் நுணுக்கங்களாலும் பாலஸ்தீனர்களிடமிருந்து நிலங்களை வாங்கிப் போட்டு பாலஸ்தீனத்தை வளப்படுத்தியதோடு தங்களையும் அங்கு நிலைப்படுத்திக்கொண்டனர். யூதர்களின் வரவால் தங்கள் நலன்களுக்குப் பங்கம் வந்ததைக் கண்ட பாலஸ்தீனர்கள் அவர்களோடு மோதத் துவங்கினர். தான்ங்கள் அமைத்துக்கொண்ட ஒரு குடிப்படையால் யூதர்கள் பாலஸ்தீனர்களை எளிதாக வென்றனர். பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் கொடுக்க முடிவுசெய்துபீல் என்னும் ஒரு அதிகாரியை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியது. பாலஸ்தீனத்தைப் பிரிப்பது அவ்வளவு எளிதல்ல என்று பீல் அறிக்கை கொடுத்தார். பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்குமிடையே மோதல்கள் தொடர்ந்தன.

    இனி தன்னால் பாலஸ்தீனத்தை நிர்வகிக்க முடியாது என்று எண்ணிய பிரிட்டன் பாலஸ்தீனத்தைக் கண்காணிக்கும்பொறுப்பை ஐ.நா.விடம் ஒப்படைத்துவிட்டு பாலஸ்தீனத்தை விட்டுச் சென்றுவிட்டது. ஐ.நா. பாலஸ்தீனத்தின் 55 சதவிகிதத்தை யூதர்களுக்கும் 45 சதவிகிதத்தை பாலஸ்தீனர்களுக்கும் பிரித்துக் கொடுக்க முடிவுசெய்தது. தாங்கள் நினைத்ததற்கு மேலேயே தங்களுக்குக் கிடைத்திருப்பதால் யூதர்கள் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டுச்சென்ற அன்றே இஸ்ரேல் என்ற தங்கள் நாட்டைப் பிரகடனப்படுத்திக்கொண்டனர். தங்கள் நாட்டை யூதர்களோடு பங்கு போட்டுக்கொள்வதா என்ற குமுறலோடு பாலஸ்தீனர்கள் ஐ.நா.வின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் முழுப் பாலஸ்தீனத்தையும் பெற்றுவிடலாம் என்று நம்பினார்கள். அன்று அவர்கள் செய்த தவறு இன்றுவரை பாலஸ்தீனர்களுக்கென்று ஒரு நாடு கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

    இஸ்ரேல் நாடு உருவானதை எதிர்த்து சிரியா, எகிப்து,லெபனான் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது போர்தொடுத்தன. பாலஸ்தீனர்களுக்கு முழுப் பாலஸ்தீனத்தையும் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள் என்பதைவிட ‘எரிகிற நெருப்பில் கிடைத்தது லாபம்’ என்ற எண்ணத்திலும் அவர்கள் இஸ்ரேலோடு போர்புரியத் தயாராகினர். ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறியிருந்த யூதர்களின் பணபலத்தாலும் அமெரிக்காவின் உதவியாலும் பாலஸ்தீனத்தில் குடியேறியிருந்த யூதர்கள் தங்களுக்கென்று ஒரு குடிப்படையை அமைத்துக்கொண்டிருந்தனர். அதுவே இஸ்ரேலின் ராணுவமும் ஆனது. பலம் பொருந்திய ராணுவத்தின் மூலம் அரபு நாடுகளை எளிதாகப் போரில் வென்றதோடு ஐ.நா. பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனர்களுக்கென்று கொடுத்த சில நிலங்களையும் பிடித்துக்கொண்டனர்.

    அதன் பிறகு இஸ்ரேலோடு அரபு நாடுகள் ஆறு முறை போர் புரிந்தன. எல்லாப் போர்களிலும் இஸ்ரேல் வென்று பாலஸ்தீனத்திலும் சிரியா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளிலும் அந்த நாடுகளுக்குச் சொந்தமான இடங்கள் சிலவற்றையும் பிடித்துக்கொண்டது. அப்படி 1967-ஆம் வருடப் போரில் சிரியாவிடமிருந்து பிடித்துக்கொண்டதுதான் கோலன் ஹைட்ஸ் என்னும் இடம். இந்த இடத்தை 1981-இல் இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்டது. ஜோர்டானிடமிருந்து பிடித்துக்கொண்ட கிழக்கு ஜெருசலேமிலும் வெஸ்ட் பேங்கிலும் தன்னுடைய குடியிருப்புகளைக் கட்டிப் புதிதாக இஸ்ரேலுக்கு வந்த யூதர்களைக் குடியமர்த்தியது. இதற்கிடையே 1995-இல் நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பயனால் வெஸ்ட் பேங்கிலும் காஸாவிலும் பாலாஸ்தீனர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்குவதென்று முடிவாகியது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவாவது கிடைத்ததே என்று பாலஸ்தீனர்களும் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டனர். ஆனால் அதன் பிறகு இஸ்ரேல் பிரதம மந்திரியாகப் பதவியேற்ற நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்தைப் பின்பற்றாததோடு வெஸ்ட் பேங்கில் குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டே போனார். ஒபாமா அமெரிக்க ஜனத்திபதியாக இருந்தபோதாவது நேத்தன்யாஹு பாலஸ்தீனர்களுக்குச் செய்துவந்த அநியாயங்களைக் கொஞ்சமாவது பயந்துகொண்டு செய்துவந்தார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆன பிறகு எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், அமெரிக்கா தன் பக்கம் இருக்கிறது என்ற பலத்தில் தடித்தனமாகக் காரியங்கள் செய்துவருகிறார். அடுத்த மாதம் நடக்கப் போகும் தேர்தலில் ஜெயிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க எண்ணி சிரியாவில் தான் ஆக்கிரமித்துக்கொண்ட கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேலோடு இணைத்துக்கொள்ள முயன்று அதற்கு ட்ரம்ப்பின் ஆதரவையும் கேட்டார். ட்ரம்ப்பும் இஸ்ரேல் சிரியாவின் கோலன் ஹைட்ஸைத் தன்னோடு இணைத்துக்கொண்டதை அமெரிக்கா அங்கீகரிப்பதாகக் கூறும்ஜனாதிபதி ஆணை ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார். உடனேயே அதற்கு நன்றி தெரிவித்து நேத்தன்யாஹு ட்விட்டும் அனுப்பிவிட்டார். தான் செய்திருக்கும் இந்த அநியாயத்திற்கு அமெரிக்காவின் அங்கீகாரம் கிடைத்துவிட்டதால் வரப் போகும் தேர்தலில் தான் ஜெயித்துவிடுவோம் என்று நேத்தன்யாஹு நம்புகிறார்.

    இந்த இரண்டு கயவர்களும் (crooks)சேர்ந்து செய்திருக்கும் இந்தக் காரியத்தால் சிரியா தன்னுடைய நிலத்தில் ஒரு பகுதியை இழந்திருக்கிறது. அதற்குமேல் இனி என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகின்றனவோ. இதையடுத்து வெஸ்ட் பேங்கிலும் நிறைய இடங்களை (ஏற்கனவே அங்கு யூதக்குடியிருப்புகள் நிறைய இருக்கின்றன) சேர்த்துக்கொள்ளப் போவதாக நேத்தன்யாஹு கோடி காட்டியிருக்கிறார். அங்கு வாழும் பாலஸ்தீனர்கள் மூன்றாம்தரக் குடிமக்களாக இஸ்ரேலால் நடத்தப்படுவார்கள்.

    உலகில் ஒரு இனம் இன்னொரு இனத்திற்குச் செய்த பெரிய அநீதிகளில் இதுவும் ஒன்று.

    Share
  • பிளாஸ்டிக் கொடுமை

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    பிளாஸ்டிக்கைப் பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. எங்கள் நண்பர்களிடமெல்லாம் பிளாஸ்டிக்கை மறுபடி உபயோகிப்பது பற்றி நிறையக் கூறிவிட்டோம். ஆனாலும் இன்னும்சிலர் பிளாஸ்டிக் பைகளை, டப்பாக்களைத் தாறுமாறாக உபயோகிக்கிறார்கள். அவற்றை மறுசுழற்சி செய்வதில்லை; திரும்ப உபயோகிப்பதும் இல்லை. இவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை.

    இன்று பத்திரிக்கையில் வந்த செய்தி மனதில் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கரை வந்துசேர்ந்த ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் 88 பவுண்டு பிளாஸ்டிக் (40 பவுண்டு பைகள், மீதி குப்பையில் இருந்த பல விதமான பிளாஸ்டிக் சாமான்கள்) இருந்ததாம். அதன் எடையே 1100 பவுண்டுதான். அதன் எடையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கு பிளாஸ்டிக்கை சுமந்து கொண்டிருந்திருக்கிறது அந்த வாயில்லா ஜீவன். அதன் உடலைப் பிரேத பரிசோதனை செய்தவர் இதுவரை இத்தனை பிளாஸ்டிக் சாமான்கள் ஒரு பிராணியின் வயிற்றுக்குள் இருந்ததில்லை என்கிறார். திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் வெகு நாட்களாக அங்கு இருந்ததால் அப்படியே கட்டியாகி செங்கல்போல் ஆகியிருந்ததாம்.

    பிளாஸ்டிக்கை உட்கொள்ளுவதால் திமிங்கலங்களுக்கு வயிறு நிறைந்த ஒரு உணர்ச்சி ஏற்படுமாம். அதனால்தான் அவை பிளாஸ்டிக்கினால் மற்றப் பிராணிகளைவிட அதிகமாக ஈர்க்கப்படுகின்றனவாம். ஆனால் இப்படிப்பட்ட பிளாஸ்டிக்கினால் அந்தப் பிராணிக்கு அதற்குத் தேவையான எந்தவித உணவுச் சத்தும் கிடைப்பதில்லை. இப்படி வயிற்றில் பிளாஸ்டிக் சேருவதால் அவற்றின் எடை குறைகிறது; பலம் குறைகிறது; வேகமாக நீந்தும் சக்தியை இழக்கின்றன. அதனால் இவற்றை உண்ணும் அல்லது தீமை விளைவிக்கும் மற்றவகை ஜீவராசிகளிடமிருந்து தப்ப முடியவில்லை. ஒரு முறை அவற்றை உட்கொண்டுவிட்டால் அந்தத் திமிங்கலங்களால் அவற்றை ஜீரணிக்கவும் முடியாது; வெளியே தள்ளவும் முடியாது.

    2015-இல் நடந்த ஒரு ஆராய்ச்சியின் முடிவின்படி வருடத்திற்கு 50 லட்சத்திலிருந்து ஒரு கோடியே முப்பது லட்சம் மெட்ரிக் டன் வரை பிளாஸ்டிக் குப்பைகள் கடலுக்குள் சேருகின்றனவாம். இப்படிக் கடலுக்குள் பிளாஸ்டி குப்பை சேருவதில் சீனா முதல் இடத்தையும் இந்தோனேஷியா இரண்டாவது இடத்தையும் பிப்பைன்ஸ் மூனறாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனவாம். இந்தியா இந்தப் பட்டியலில் சேராததற்கு முக்கிய காரணம் இந்தியர்களால் நிறையச் சாமான்கள் வாங்க முடியவில்லை என்பதுதான் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். மேலும் மேலே குறிப்பிட்ட நாடுகளில் சட்டங்களும் அவ்வளவு கடுமையாக இல்லாததும் அவை சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப் படாததும் காரணங்கள் என்று சொல்கிறார்கள். மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் உருப்படியாக மறுசுழற்சி செய்யப்படுவதும் இல்லை.

    கடல்களிலோ ஆறுகளிலோ பிளாஸ்டிக் குப்பைகள் சேரும்போது பல வகை இனப் பிராணிகள் அழிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. அதிலும் திமிங்கலங்கள் நிறையப் பிளாஸ்டிக்கை தங்கள் வயிற்றுக்குள் வைத்துக்கொள்ள முடிவதால் அவைதான் நிறையப் பாதிக்கப்படுகின்றன. பிப்ரவரி மாதம் ஸ்பெயினில் இறந்த ஒரு திமிங்கலத்தின் வயிற்றிலும் குடலிலும் 64 பவுண்டு பிளாஸ்டிக் குப்பை இருந்ததாம்;போன வருடம் ஜூன் மாதம் தாய்லாந்தில் ஒரு திமிங்கலம் 18 பவுண்டு குப்பையைச் சாப்பிட்டிருந்ததாம்; நவம்பரில் இந்தோனேஷியாவில் ஒரு திமிங்கலம் 13 பவுண்டு குப்பையை விழுங்கியிருந்ததாம்.

    இந்த அப்பாவிப் பிராணிகள் நமக்கு எத்தனையோ விதத்தில் – உணவாக, மருந்தாக – பயன்படுகின்றன. இவற்றுக்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதானா?மேலும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு நமக்கு எவ்வளவு உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகள் இந்த அப்பாவிப் பிராணிகளுக்கும் இருக்கின்றன. இதை நாம் ஏன் உணறுவதில்லை? உணர்ந்து பிளாஸ்டிக் உபயோகத்தை ஏன் குறைப்பதில்லை? அல்லது அறவே விடுவதில்லை?

    இனி ஒவ்வொரு மனித இனத்தைச் சேர்ந்தவனும் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தும் முன் அது தேவையா என்று பல முறை யோசிக்க வேண்டும்; கண்டிப்பாகத் தேவையென்றால் மட்டுமே வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் அதை மறுபடி மறுபடி உபயோகிக்க வேண்டும். இதற்குமேல் உபயோகிக்க முடியாது என்னும் பட்சத்தில் அதை மறுசுழற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் நாம் மிகச் சிறிய அளவுதான் பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்க முயற்சி செய்கிறோம். இது ஒரு சிறிய ஆரம்பம்தான். ஆனால் அதையாவது ஆரம்பிப்போமே.

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை என்ற ஒன்று அமலானதே. அது என்னவாயிற்று. ஊழல் நிறைந்த தமிழ்நாட்டில் அது எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?

    Share
  • அமெரிக்க ஜனநாயகத்தின் வலிமை

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அமெரிக்கச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு வெளிப்படையாகத் தெரிய வந்திருக்கிறது. எல்லாச் சமூகங்களிலும்போல் அமெரிக்காவிலும் இடதுசாரிகள், வலதுசாரிகள், பழமை விரும்பிகள், புதுமைவாதிகள் என்று பல பிரிவுகள் உண்டு. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதுவரை அரசல் புரசலாக இருந்த இந்தப் பிளவுகள் இப்போது வெளிப்படையாகத் தோன்றியிருக்கின்றன. வெள்ளை இனவாதிகளின் கை மிகவும் ஓங்கியிருப்பதாகத் தெரிகிறது.

    இவர் சொல்லும் பொய்களுக்கு அளவேயில்லை. தினமும் பொய்களாகக் கூறிக்கொண்டு நடுநிலை வகிக்கும் பத்திரிக்கைகளை மக்களின் எதிரிகள் என்கிறார். நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் அடிக்கடி உண்மையே வெல்லும்,உண்மையை மறைக்க முடியாது என்ற வாக்கியங்கள் அடங்கிய ஒரு பக்க விளம்பரங்களை வெளியிட்டாலும் ட்ரம்ப் பொய்களை உதிர்ப்பதை நிறுத்துவதில்லை. மற்றவர்கள் என்னென்ன பொய்கள் சொல்லுகிறார்கள் என்று இவர் சொல்கிறாரோ அந்தப் பொய்களை இவர்தான் தினமும் கூறிவருகிறார். அமெரிக்காவில் ஜனாதிபதிகள் தங்கள் நெருங்கிய உறவினர்களைத் தங்களுடைய ஆலோசகர்களாகவோ பெரிய அரசுப் பதவிகளிலோ வைத்துக்கொள்ளுவதில்லை. எங்கேயோ ஒரு சிலர்தான் அப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள். ஜான் கென்னடி தன்னுடைய தம்பி ராபர்ட் கென்னடியை அட்டர்னி ஜெனரலாக வைத்துக்கொண்டார் என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பட்ட ஜனாதிபதிகள் மிகவும் குறைவு. ட்ரம்ப்போ தன் மகள், மருமகன், மகன் என்று நெருங்கிய உறவினர்களைத் தனக்கு அரசியல் ஆலோகசகர்களாக அரசாங்கச் செலவில் வைத்துக்கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்தும் அவர்களை வற்புறுத்தித் தன் மருமகனுக்கு மிகவும் ரகசியமான அரசாங்க ஆவணங்களைப் பார்க்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்கும் அமெரிக்க நடுவராக மருமகனை நியமித்திருக்கிறார். இவர் இந்தத் தீர்வுக்குப் பாலஸ்தீனத்தில் நிறையத் தொழில்களைத் தொடங்கி பால்பஸ்தீனர்களின் வாழ்க்கையை மேம்படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். இந்தச் சாக்கில் பாலஸ்தீனத்தில் நிறைய முதலீடு செய்து கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். இதுதான் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இவருடைய தீர்வு!

    உலகில் சர்வாதிகாரிகள் உள்ள நாடுகளைப்போல் அமெரிக்காவில் தானும் சர்வாதிகாரியாக விளங்க வேண்டும் என்று ட்ரம்ப்ஆசைப்படுகிறார். பதவிக்கு வரும் முன் ஒரு வியாபாரியாக இருந்த இவர் ஒரு ஜனநாயக நாட்டில் அரசை நடத்துவதற்குப் பல checks & balances இருக்கின்றன என்பதை அடியோடு புறக்கணித்துவிட்டுத் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்கிறார்.தான் பொய்களாகச் சொல்வதோடு தன்னைச் சார்ந்த மற்றவர்களையும் பொய்கள் சொல்லவைக்கிறார். பதவி ஆசையால் இவருடைய மந்திரிசபையில் பதவி ஏற்ற சிலர் இவருடைய அட்டகாசம் தாங்காமல் பதவியைத் துறந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்; இவர் கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்பவர்களைப் பதவியிலிருந்து தடித்தனமாக விலக்கியிருக்கிறார்.

    சமீபத்தில் சென்ற பத்து வருடங்களாக ட்ரம்ப்புக்கு வழக்கறிஞராக இருந்த மைக்கேல் கோகன் என்பவர் ட்ரம்ப் தன்னை நடத்திய விதத்தையும் பொய்கள் சொல்லவைத்ததையும் தாங்க முடியாமல் அவருக்கு எதிராகப் பல உண்மைகளை அமெரிக்கப் பாராளுமன்ற கீழவை உறுப்பினர்களிடம் கூறியிருக்கிறார். அரசு ஒழுங்காகக் காரியங்கள் செய்கின்றதா என்பதைக் கண்காணிக்க கீழவை அங்கத்தினர்கள் யாரையும் விசாரிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு விசாரணையின்போது தான் ட்ரம்ப்பால் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்பதை விலாவாரியாக கோகன் விளக்கினார். மேலும் ஒரு பெரிய எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார். 2020-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தோற்றுவிட்டால் அதை ஏற்றுஅவர் எளிதில் பதவி விலக மாட்டார் என்றும் நாடுபலாத்காரத்தில் இறங்கலாம் என்றும்ட்ரம்ப்பிற்காகத் தான் வேலைசெய்தபோது ஏற்பட்ட தன்னுடைய அனுபவத்திலிருந்து இதைக் கூறுவதாகவும் கூறியிருக்கிறார். இவருடைய எச்சரிக்கை அப்படியொன்றும் நடப்புக்கு அப்பாற்பட்டதல்லவென்றும் ட்ரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தின் தன்மையைக் குறைப்பதோடு அதை அழித்துவிடவும் கூடும் என்று பல பத்திரிக்கையாளர்கள் பயப்படுகிறார்கள். கிளின்டனின் வெளியுறவு மந்திரியாக இருந்த மேடலின் ஆல்பர்ட் எழுதிய ‘Fascism: A Warning’ என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளதுபோல் நாஜிக்கள் ஜெர்மனியைக் கைப்பற்றியது போலவோ ஃபாஸிஸம் இத்தாலியில் தலையெடுத்தது போலவோஅமெரிக்காவிலும் நடக்கலாம் என்றும் பலர் பயப்படுகிறார்கள். கலிபோர்னியா மாநிலகீழவை அங்கத்தினர் அமெரிக்க ஜனநாயகம் பெரிய ஆபத்தில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒருவர் அமெரிக்கக் குடியரசின் ஸ்தாபனங்கள் (institutions)– எஃப்.பி.ஐ, நீதித்துறை, பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள் – மிகவும் வலுவாக இருப்பதாகவும் ட்ரம்ப்பிற்கு எதிராகச் செயல்படத் தயங்காது என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

    ‘ஜனநாயக அரசுகள் எவ்வாறு தங்கள் முடிவை எதிர்கொள்கின்றன’(How Democracies Die)என்னும் புத்தகத்தை எழுதிய ஸ்டீவன் லெவிட்ஸ்கியும் டேனியல் ஸிப்லாட்டும் அமெரிக்க ஜனநாயகத்தை அப்படி எளிதாக ட்ரம்ப்பால்அழித்துவிட முடியாது என்கிறார்கள். 1930-களில் இருந்த ஜெர்மனி போலவோ இப்போதுள்ள துருக்கி, வெனிஸுவேலா, ஹங்கேரி போலவோ அமெரிக்கா இல்லையென்றும் அமெரிக்காவில் ஜனநாயக ஸ்தாபனங்களும் எதிர்க் கட்சியும் மிகவும் வலுவாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இருந்தாலும், அமெரிக்க விழுமியங்கள் மாறிக்கொண்டு வந்ததாலேயே ட்ரம்ப் போன்றவர்கள் பதவிக்கு வந்ததாகவும், இன்னும் மாறிய எண்ணங்கள் தொடர்ந்து இருப்பதாகவும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எச்சரிக்கிறார்கள். 2018 தேர்தலில் ஜனநாயக் கட்சியின் அங்கத்தினர்கள் பெரும்பான்மையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ட்ரம்ப்பின் ஏகாதிபத்தியத் தோரணைக்கு மக்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள். இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

    நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒரு பத்திரிக்கையாளர் ட்ரம்ப்பின் ஏகாதிபதியாக (autocrat) வேண்டும் என்ற ஆசைக்குத் தடைபோடத் தேர்தல்களும் எதிர்க்கட்சியும் இருக்கும்வரை ட்ரம்ப்பால் அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்த முடியாது என்கிறார்.

    இதே மாதிரி நாம் இந்தியாவைப் பற்றியும் சொல்ல முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். இந்திய ஜனநாயகம் அமெரிக்க ஜனநாயகத்தின் அளவு வலிமை பொருந்தியதாக இருக்கிறதா என்ற கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்ல முடியவில்லை. இந்து மதத்தையும் அதன் அங்கமாக விளங்கும் ஜாதிகளையும் அறவே ஒழிக்க வேண்டும் என்று பறைசாற்றிய பெரியார் வழியில் வந்த திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.வும் இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிக்கும் பி.ஜே.பி.யும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றுசேர்ந்திருப்பதைப் பார்த்தால் இந்தியாவில் அரசியல் விழுமியங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன என்று சொல்ல வேண்டும். அதன் விளைவாக இப்போது இருக்கும் ஜனநாயகத்தின் கொஞ்சநஞ்ச சாயலையும் முழுவதுமாக அழித்துவிட்டு, சந்தர்ப்பவாத அரசியல் மோதியை ஏகாதிபதி ஆக்கிவிடும்போல் தெரிகிறது.

    Share
  • எங்கள் தோட்டிச்சியைப் பற்றிய ஒரு குமுறல்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்தியாவில் மேட்டுக்குடி மக்களும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் பல வகையான உணவை உண்ணும் பாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறோம். இந்த வகுப்பைச் சேர்ந்த நாங்களும் அமெரிக்கா வந்த பிறகு எங்களுக்கு இன்னும் அதிகமாகப் பல வகையான உணவுகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தினமும் காலையில் அமெரிக்காவில்கூட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று இதில் எதையாவது ஒன்றைச் சாப்பிடுகிறோம். மதியம் சோறு, சாம்பார், ரசம், இரண்டு
    பொரியல்கள், தயிர் இத்யாதி. இரவு மறுபடி சோறு அல்லது சப்பாத்தி, தொட்டுக்கொள்ளப் பல வகையான துணைக்கறிகள். இடையில் சாயந்திரம் ஏதாவது தின்பண்டங்கள் மற்றும் காப்பி. ஒவ்வொரு சாப்பாட்டிற்குப் பிறகும் இனிப்புகள் வேறு. இடையிடையே பார்ட்டிகள் வேறு. (வேலைக்குப் போகும் பெண்கள் இவ்வளவு சமைப்பதில்லை என்பதால் இவ்வளவு வகைச் சாப்பாடு
    சாப்பிடுவதில்லை என்றாலும் வெளியில் நன்றாகச் சாப்பிடுகிறார்கள்.)

    நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் வீட்டில் எங்கள் கழிவுகளைச் சுத்தம் செய்த நாகா என்ற பெண்ணின் ஞாபகம் எனக்கு அடிக்கடி வந்தாலும் திடீரென்று இன்று அவளைப் பற்றிய ஞாபகம் அதிகமாக வந்தது. அப்போதே அவள் மீது எனக்கு ஒரு பரிவு உண்டு. கூட்டுக் குடும்பம் என்பதால் பழைய சாதம் எப்போதும் எங்கள் வீட்டில் இருக்கும். தினமும் நாகா பத்துமணி வாக்கில் எல்லோர் வீட்டிலும் வேலைகளை முடித்துவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்து நாங்கள் கொடுக்கும் பழைய சோற்றை உண்டு பசியாறுவாள். அப்போது அவளோடு பேசிக்கொண்டிருப்பது என்னுடைய
    பொழுதுபோக்குகளில் ஒன்று.

    எப்போதும் பழைய சோறு, பழைய குழம்புதான். எப்போதாவது ஆட்டிறைச்சிக் குழம்பு இருந்தால் நான் கொடுப்பேன். அதை மிகவும் ரசித்துச் சாப்பிடுவாள். பழைய சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள வறுத்த மோர் மிளகாய் கொடுத்தால் மிகவும் ஆசையாகச் சாப்பிடுவாள். ஆறு மிளகாய் கொடுத்தால் நான்கை சோற்றோடு முடித்துவிட்டு இரண்டை பேப்பரில் சுற்றி முந்தானையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு எடுத்துச் செல்வாள். வீட்டில் சாதம் மிஞ்சிவிட்டால் நாங்கள் கவலையே படுவதில்லை. தினமும் நாகா வருவதால் அவளுக்குத் தேவைப்படும் என்று வைத்திருப்போம்.

    எப்போதாவது நான் பழைய சோறு சாப்பிட்டால் எனக்கு ஒரு பானைத் தயிர் வேண்டும். நாகாவுக்கு அப்படியல்ல. நீராகாரத்தோடு பழைய சோற்றைக் கொடுத்தால் நீராகாரத்தை முழுவதுமாகக் குடித்துவிட்டுப் பின் சோற்றை உருண்டை, உருண்டையாகப் பிடித்து ஒரு சொட்டுக் குழம்புடன் வாயில் போட்டுக்கொள்ளுவாள். எனக்குப் பழைய சோறு சாப்பிட ஒரு பானைத் தயிர் மட்டுமல்ல, ஒரு பானைக் குழம்பும் வேண்டும். நாகாவின் தினசரிச் சாப்பாடு இது.

    காலையில் டீக்கடையில் அரை கப் காப்பி குடிப்பாள். பின் எங்கள் வீட்டில் நான் மேலே கூறிய பழைய சாதம், பழைய குழம்பு. மதியச் சாப்பாடாக வீட்டில் முந்தைய தினம் இரவு சமைத்த சாதத்தில் மற்றவர்கள் சாப்பிட்டது போக மிஞ்சியிருப்பதைச் சாப்பிட்டுக்கொள்வாள். இரவு மட்டும் சுடு சோறு, சுடச்சுட குழம்பு. அதுவும் பிரியாணி, பரோட்டா, சப்பாத்தி, குருமா, வெஜிடபிள் கட்லெட் என்று வகை வகையாகவா சாப்பிட்டாள்? எங்கள் ஊரில் கிடைக்கும் கருவாடும் கத்தரிக்காயும் போட்ட குழம்பு. கருவாடும் சாதாரணக் கருவாடுதான். விலையுயர்ந்த கருவாடெல்லாம் அவளால் வாங்க முடியாது. எப்போதாவது விலை குறைந்த மீன் வாங்கிக் குழம்பு செய்வாள். எப்போதாவது சாம்பாரும் சமைப்பாள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை காலனிவாசிகள் எங்கிருந்தாவது அடிமாடு ஒன்றை வாங்கிவந்து அங்கேயே அடித்து மாமிசத்தைப் பங்கு போட்டுக்கொள்வார்கள். மறு நாள் அந்த மாமிசத்தைப் பெரிய பெரிய துண்டாகப் போட்டு, சமைத்துச் சாப்பிட்டதைப் பற்றிக் கூறுவாள். எப்போதாவது விருந்தாளிகள் வந்துவிட்டால் தான் வழக்கமாகச் சமைக்கும் சோறு அநேகமாகக் காலியாகிவிடும் என்றும் மறு நாள் காலையில் எதையாவது சமைத்துவைத்துவிட்டு வந்ததாகவும் கூறுவாள்.

    தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது கூட வீட்டில் வடை சுடுவதோ, பொங்கல் ஆக்குவதோ கிடையாது. ஏன் இட்லி, தோசை கூட அவளுடைய சக்திக்கு அப்பாற்பட்டதுதான். ஒவ்வொரு தீபாவளியன்றும் வீடு வீடாகச் சென்று பலகாரங்கள் வாங்கி வருவாள். சிலர் இட்லி கூடக் கொடுத்திருப்பார்கள், அது ஏதோ பெரிய பலகாரம் என்பதுபோல். யாரும் அதிரசமோ, முறுக்கோ கொடுப்பதில்லை. கிட்டத்தட்ட எல்லா மத்தியதரக் குடும்பங்களிலும் தீபாவளிக்கு அதிரசம், முறுக்கு கண்டிப்பாகச் செய்வார்கள். மைசூர்ப்பாக், குலோப் ஜாமூன் போன்ற
    இனிப்புகளின் பெயர்கள்கூட அவளுக்குத் தெரியாது.

    அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு புரதச் சத்து, எவ்வளவு மாச்சத்து, எவ்வளவு கொழுப்புச் சத்து கலந்த உணவு உண்ண வேண்டும் என்று பலர் குறித்துவைத்துக்கொள்ளுவார்கள். இதற்கு மேல் என்ன சாப்பிட வேண்டும் என்று யோசனை கூற சத்துணவு ஆலோசகர்கள் (nutritionists) வேறு. எங்கள் நாகா என்ன சாப்பிட்டாள், எவ்வளவு சாப்பிட்டாள் என்று இந்த ஆலோசகர்களிடம்
    கூறி, அவள் எப்படி பெரிய வியாதிகள் எதுவும் இல்லாமல் எழுபது வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்தாள் என்று கேட்க வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை.

    இப்படித்தான் எல்லோரும் சாப்பிட வேண்டும்; இப்படிச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று நான் சொல்வதாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். அமெரிக்காவில் எல்லோருக்கும் பல விதமான உணவுகள் கிடைக்கின்றன. எங்களை எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டில் இந்திய உணவைச் சமைத்துக்கொள்ளுவதற்குத் தேவையான எல்லாச் சாமான்களும் கிடைக்கின்றன. அதற்குமேல் அமெரிக்கர்களின் உணவையும் வீட்டிலேயே சமைத்துக்கொள்ளலாம். அதற்குமேல் சீனர்களின் உணவு, தாய்லாந்து நாட்டின் உணவு, ஜப்பானியர்களின் உணவு, பிரெஞ்சு உணவு என்ற பல தரப்பட்ட நாடுகளின் உணவுகளையும்
    உண்டு மகிழ ஓட்டல்கள் இருக்கின்றன. இதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட எங்கள் நாகாவுக்குக் கிடைக்கவில்லையே என்பதை நினைக்கும்போது நெஞ்சு கனக்கிறது.

    பதினைந்து குடும்பங்கள் வசித்த ஒரு குடிசைக் காலனியில் வாழ்ந்துகொண்டு, உலகிலேயே அசுத்தமான தொழிலைச் செய்துகொண்டு, ஆகக் குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, நாகா சந்தோஷமாகவே வாழ்ந்துவந்தாள் என்று நினைத்து ஆறுதலடைய வேண்டியது தானோ? அப்படி ஒரு ஆறுதல் கிடைத்தாலும் நாம் ஏன் இப்படிப்பட்ட இழிவான தொழிலைச் செய்தவர்களைக் கீழ்த்தனமாக நடத்தினோம் என்பதை நினைக்கும்போது ரத்தம் கொதிக்கிறது.

    மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் அவலத்தை இனியாவது முழுவதுமாக ஒழிக்க வேண்டும். சட்டம் மட்டும் போதாது. ஸ்மார்ட் நகரங்களை நிர்மாணிப்பதில் அரசு கவனம் செலுத்துவதைவிட, நம் கழிவுகளைச் சுத்தம் செய்தவர்களின் வாழ்வைப் புதிதாக நிர்மாணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

    படத்திற்கு நன்றி – Sharmilee (https://www.sharmispassions.com)

    Share
  • அழியாத பிளாஸ்டிக்

    -நாகேஸ்வரி அண்ணாமலை

     

    அடுத்த அறுபது நொடிகளில், அதாவது ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதுமுள்ள மக்கள் பத்து லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களையும் இருபது லட்சம் பிளாஸ்டிக் பைகளையும் வாங்குவார்களாம். இவையெல்லாம் முற்றிலும் அழிந்து போவதற்கு ஆயிரம் வருஷங்களுக்கு மேல் ஆகுமாம். இது இப்படி நடந்துகொண்டிருக்க அவற்றில் சில மிகவும் நுண்ணிய துகள்களாக உடைந்து எண்ணிலடங்காத அளவில் கடலில் கலந்துவிடுகின்றன. இவை கடல் நீரிலும் குடிநீரிலும் நாம் தினமும் உபயோகிக்கும் உப்பிலும் காணப்படுகின்றன. மேலே குறிப்பிட்டவற்றோடு அவை போய்ச் சேரும் இன்னொரு இடம் மனிதனின் குடலுமாகும்.

    ஃபின்லாந்து, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போலந்து, ரஷ்யா, பிரிட்டன், ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளிலிருந்து எட்டு பேரின் மலத்தைச் சோதித்தபோது எல்லோர் மலங்களிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருந்தனவாம். இப்போதைக்கு மனிதனின் ஆரோக்கியத்திற்கு எந்தவித ஆபத்தும் இவற்றால் இல்லையென்றாலும் இன்னும் நிறையப் பேர்களைப் பரிசோதித்து விபரம் சேகரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுசெய்திருக்கிறார்கள்.

    பிளாஸ்டிக் நுண்துகள்களால் மனிதனுக்கு ஆபத்து எதுவும் இல்லையென்று இப்போதைக்கு முடிவுசெய்யப்பட்டிருந்தாலும் எத்தனையோ மிருகங்கள் பிளாஸ்டிக்கினால் பாதிக்கப்படுகின்றன. கடல்வாழ் மீன்கள் எத்தனையோ இந்த பிளாஸ்டிக் பைகளை விழுங்கி உயிர் இழந்திருக்கின்றன.

    சமீபத்தில் பதினேழு பவுண்டு எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் ஒரு திமிங்கலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக்கின் கெடுதல்கள் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். போப் பிரான்சிஸ், இந்த பூமி கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டது. இதை மாசுபடுத்தினால் கடவுளை நிந்திப்பதற்குச் சமம் என்கிறார். உலகில் எல்லோருக்கும் பிளாஸ்டிக்கின் இன்னொரு பக்கம் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் அதன் உபயோகத்தால் பல வசதிகள் இருப்பதால் தொடர்ந்து உபயோகித்து வருகிறோம். சிலர் அது மறு சுழற்சி செய்யப்பட்டால் வீணாவதில்லை என்று நினைக்கிறார்கள். இது மிகவும் தவறு. மறுசுழற்சி செய்யப்படும்போது எத்தனை பொருள்கள் வீணாகின்றன. மேலும் ஒரு குறுகிய சதவிகிதமே மறுசுழற்சி செய்வதன் மூலம் திரும்பக் கிடைக்கிறது. அதனால் reduce, reuse, recycle என்ற மந்திரத்தை நாம் பின்பற்ற வேண்டும். முதலில் கூடியவரை பிளாஸ்டிக் பொருள்களின் (எல்லாப் பொருள்களையும் என்றுகூட நான் சொல்லுவேன்) உபயோகத்தைக் குறைக்க வேண்டும். இயற்கை வளங்களைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். அதற்குமேல் வாங்கித்தான் தீர வேண்டுமென்றால் அந்தப் பொருளைத் தாங்கிவந்த டப்பாக்களை மறுபடி உபயோகப்படுத்துங்கள். அதற்கு மேலும் தேவையென்றால் இவற்றை மறுசுழற்சி செய்யும் இடங்களில் சேர்த்துவிடுங்கள்.

    அமெரிக்காவில் இப்போது பால், தயிர், வெண்ணெய் ஆகிய எல்லாம் பிளாஸ்டிக்கில் அல்லது பிளாஸ்டிக்கோடு இன்னொரு பொருள் சேர்த்துச் செய்யப்பட்ட டப்பாக்களில்தான் கிடைக்கின்றன. அமெரிக்கர்கள் இவற்றையெல்லாம் உபயோகித்துவிட்டுக் கீழே தூக்கி எறிவதைப் பார்த்தால் என் நெஞ்சமெல்லாம் வலிக்கும். சில சூப்பர்மார்க்கெட்டுகளில் சொந்தப் பைகளைக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு பைக்கு ஏழு சென்ட் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த மாதிரி உத்திகள்கூட அதிகப் பலனை விளைவிக்கவில்லை. அமெரிக்காவில் எல்லா நகரங்களும் பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்கத் தங்களாலான முயற்சிகளைக் கடைப்பிடிக்க முயன்று வருகின்றன. எதுவும் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்த மாதிரி தெரியவில்லை.

    அமெரிக்காவில் எதையும் sterilize பண்ணுவதால் அமெரிக்கர்களுக்கு நோய்தடுப்புச் சக்தி மிகவும் குறைந்துபோய்விட்டது. யாரும் குழாயிலிருந்து தண்ணீர் குடிப்பதில்லை. எல்லாம் பாட்டில்கள்தான்.

    அமெரிக்காவில் வசித்தாலும் நாங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைத்து வருகிறோம். பார்ட்டிகளுக்குப் போனால் எங்கள் சொந்தப் பிளேட்டுகளையும் டம்ளர்களையும் எடுத்துச் செல்கிறோம். பிரயாணம் செய்யும்போதோ வேறு எங்காவது வெளியில் செல்லும்போதோ கையோடு உணவை எடுத்துச் சென்றால் திரும்ப உபயோக்கிக்கக் கூடிய பிளேட்டுகளில்தான் எடுத்துச் செல்கிறோம். அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து கழுவி உபயோகப்படுத்துகிறோம். பிளாஸ்டிக்கில் கொண்டுபோயிருந்தால் அங்கேயே குப்பைக் கூடையில் எறிவதற்கு வசதியாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் அப்படிச் செய்வதில்லை.

    அமெரிக்காவில் ஓட்டல்களில் நாம் உண்டதுபோக மீதியை வீட்டிற்கு எடுத்து வந்துவிடலாம். அதனால் நம்மை யாரும் குறைவாக நினைக்க மாட்டார்கள். இப்போது இது எல்லோரும் ஒப்புக்கொண்ட பழக்கமாகிவிட்டது. ஓட்டல் சர்வர்களே doggie bag-ல்போட்டுக் கொடுக்கவா என்று நம்மிடம் கேட்பார்கள். இப்படி மிஞ்சிய உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் பைகளுக்கு doggie bag என்று பெயர். (அமெரிக்கர்கள் தாங்கள் உபயோகிக்கும் உணவில் 40 சதவிகிதத்தை வீணடிக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் கூறுவது இன்னொரு விஷயம்.)

    ரொட்டித் துண்டுகளோடு சாப்பிடும் peanut butter என்னும் நிலக்கடலை வெண்ணெயைச் சூப்பர் மார்க்கெட்டுகளில் பாட்டில்களிலோ பிளாஸ்டிக் டப்பாக்களிலோ விற்கிறார்கள். இப்போது கடைகளில் தினமும் மெஷினில் அரைத்து விற்கிறார்கள். தினமும் தயாரிக்கப்படும் இதில் preservative எதுவும் சேர்ப்பதில்லை. ஆனால் இப்படித் தினமும் தயாரிக்கப்படுவதையும் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்கிறார்கள். பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்க எண்ணிய நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து கண்ணாடி பாட்டில்களைக் கொண்டுபோய் கடையிலேயே அரைத்து எங்கள் பாட்டில்களில் போட்டுத் தரச் சொன்னோம். நாங்கள் அப்படிக் கேட்டவுடன், “ஷெல்பில் நிறைய இருக்கிறது. அதில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். திரும்பத் திரும்ப உபயோகிக்கக் கூடிய பாட்டில்களையே நாங்கள் விரும்புவதால் பிளாஸ்டிக் வேண்டாம் என்றும் எங்கள் பாட்டில்களிலேயே மெஷினில் அரைத்ததைப் போடும்படியும் சொன்னோம். கடை ஊழியர்களுக்கு அது புரியவே இல்லை. பிளாஸ்டிக்கை விட கண்ணாடி பாட்டில் கனமாக இருக்கும், அதனால் எங்களுக்குக் கொஞ்சம் குறைவாகவே கடலை வெண்ணெய் கிடைக்கும் (பிளாஸ்டிக் டப்பாக்களில் கடலை வெண்ணெயை நிரப்பி அதன் எடையைக் கணக்கிட்டு விலையைக் குறிப்பார்கள்) என்று கூறிப் பார்த்தார்கள். நாங்கள், “அதனால் பரவாயில்லை. பாட்டில்களில் அதைப் பெறுவதுதான் எங்கள் முக்கிய நோக்கம்” என்று எவ்வளவோ கூறிப்பார்த்தும் அவர்களுக்கு விளங்கவில்லை. பின் கடை மேனேஜரை வரவழைத்துப் பல முறை அவருக்கு விளக்கிய பிறகு வேண்டா வெறுப்பாக எங்கள் பாட்டில்களில் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள்.

    சென்ற ஒரு வருஷமாகக் கடை ஊழியர்களுக்கு எங்களுடைய இந்தப் பழக்கம் பழகிவிட்டதால் போனவுடனேயே எந்தத் தகராறும் செய்யாமல் எங்கள் பாட்டில்களிலேயே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடை இப்போது மூடப்பட்டுவிட்டது. இன்னொரு கடையிலும் இதே மாதிரி அன்றன்றே செய்து விற்கிறார்கள் என்று அறிந்து அங்கு போய் வாங்க முயன்றோம். இந்தக் கடையிலும் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் அதற்குச் சொன்ன காரணம் எங்களிடம் சிரிப்பை வரவழைத்துவிட்டது. அவர்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்கள் சுத்தமானவையாம் (sterilized); எங்கள் பாட்டில்கள் சுத்தம் செய்யப்படாதவையாம் (unsterilized); இதனால் எங்களுக்கு ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டு நாங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துவிடுவோமாம்! “எங்கள் பாட்டில்களில் நீங்கள் கொடுத்தாலும் நாங்கள் உங்கள் மீது வழக்குப் போட மாட்டோம் என்று எழுதிக் கொடுத்தால் எங்கள் பாட்டில்களில் நிரப்பிக் கொடுப்பீர்களா?” என்று கேட்டும் அந்தப் பகுதியில் இருந்த ஊழியர் ஒத்துக் கொள்ளவில்லை. பின் கடை மேனேஜரிடம் கேட்டு, அவரிடம் நிறைய பேசி அவரை இதற்குச் சம்மதிக்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. கடைசியாக அவர் சம்மதித்தாலும் கடலை வெண்ணெயின் எடையையும் விலையையும் கடையின் பெயரையும் குறிக்கும் ‘ஸ்லிப்பை’ பாட்டிலின் மேல் ஒட்டக் கூடாது என்று கூறிவிட்டார்கள். அந்த ‘ஸ்லிப்பை’க் கையில் வைத்திருந்து எல்லாச் சாமான்களுக்கும் விலைபோட்டு மொத்த பில்லையும் தயாரிப்பவரிடம் அதைக் காட்டிவிட்டு அதைக் கீழே போட்டுவிடுமாறு கூறினார்கள். எங்கள் பாட்டில்களில் அவர்கள் போட்டுக் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இருக்கக் கூடாதாம்!

    சுத்தம் என்ற பெயரில் அமெரிக்கா எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று பாருங்கள்!

    அமெரிக்கா இருக்கட்டும். இப்போது தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் உபயோகத்திற்குத் தடை வந்திருப்பதாக அறிந்தோம். ஊழலுக்கு ஒரு உதாரணமாகத் திகழும் தமிழ்நாட்டில் இந்தத் தடை எப்படி அமுல்படுத்தப்படுகிறது என்றும் மக்கள் எவ்வளவு தூரம் ஒத்துழைக்கிறார்கள் இருக்கிறார்கள் என்றும் அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது.

    Share
  • மீண்டும் போப் பிரான்சிஸின் பெருமை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்து மதத்தில் பிறந்ததால் மட்டுமே (இந்து மதச் சம்பிரதாயங்கள் எதையும் நான் பின்பற்றுவதில்லை) இந்து என்று கணிக்கப்படும் நான் ஏன் போப் பிரான்சிஸ் பற்றி ஒரு புத்தகம் எழுதினேன் என்று பலர் வியக்கிறார்கள். நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டேனோ என்றும் பலர் நினைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் போப் பிரான்சிஸ் பற்றி எழுதியது, நான் இதுவரை அறிந்திராத ஒரு மதத் தலைவர் அவர் என்பதால்.

    நான் இதுவரை அறிந்திருந்த மதத் தலைவர்கள் (நான் யாரையும் நேரில் சந்தித்ததில்லை) யாரும் இவரைப் போல் பரந்த மனப்பான்மையோடு இருப்பவர்களாகவோ, ஏழைகள், வறியவர்கள், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள் மீது அன்பும் பரிவும் காட்டுபவர்களாகவோ, குற்றம் புரிந்தவர்களையும் மன்னித்துச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களாகவோ, தன் மதம்தான் பெரியது என்று கூறாதவர்களாகவோ, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று எண்ணுபவர்களாகவோ, மதத்திற்கு அப்பாற்பட்டு உலக அமைதியிலும் பூமியின் சுற்றுச் சூழலிலும் அக்கறை செலுத்தி அடிக்கடி அறிவுரை கூறுபவர்களாகவோ இருக்கவில்லை. அவர்பால் நான் ஈர்க்கப்பட்டதற்கு இவருடைய இந்தக் குணங்களே முக்கிய காரணங்கள்.

    ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றாகிய அபுதாபிக்கு விஜயம் செய்திருக்கும் முதல் போப், போப் பிரான்சிஸ். 2016-இல் இவரை வாடிகனில் சந்தித்த அபு தாபியின் இளவரசர் அபு தாபிக்கு வரும்படி இவரை அழைத்திருக்கிறார். அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரான்சிஸும் இதுவரை எந்தப் போப்பும் விஜயம் செய்திராத, இஸ்லாம் மதத்தின் பிறப்பிடமான அரேபிய தீபகற்பகத்திற்கு வந்திருக்கிறார். அபு தாபி அரசில் சகிப்புத்தன்மைக்கு ஒரு துறை இருக்கிறதாம்! இந்த நாட்டின் இளவரசர் போப்பை தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. உலகில் வன்முறை ஒழிந்து அமைதி நிலவ வேண்டும் என்று விரும்பும் போப் பிரான்சிஸ், அவருடைய அழைப்பை ஏற்று அங்கு போவதற்கு ஒத்துக்கொண்டதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை.

    கிளம்புவதற்கு முன்னால் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் இருந்தவர்களிடம் போப், “ஏமனில் நிலவும் நிலைமை என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது. அங்கு குழந்தைகள் உணவின்றிக் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுடைய கூக்குரல் கடவுளுக்குக் கேட்கிறது. சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் ஏமன் மக்களின் துயரத்தைப் போக்கப் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.

    ஐக்கிய அரபு நாடுகள் உருவாவதற்கு முன்பே 1965-இல் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அபு தாபியில் கட்டப்பட்டது. அதன் பிறகு வேறு எந்தத் தேவாலயமும் கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. ஏமனில் ஹௌதி போராளிகளை அழிப்பதற்கு சௌதி அரேபியா உதவுவதோடு அபு தாபியும் சௌதி அரேபியாவின் கூட்டாளியாக இருக்கிறது. வாடிகனைச் சேர்ந்தவர்கள் போப் ஏற்கனவே விஜயம் செய்துள்ள ஆறு முஸ்லீம் நாடுகளில் மிகவும் ராஜ தந்திரமாக நடந்துகொண்டார் என்றும் இப்போது அபு தாபியிலும் பொது இடங்களிலாவது வெளிப்படையாக எதையும் கூற மாட்டார் என்றும் கூறினர்.

    ஆனால் போப் பிரான்சிஸோ, அபு தாபியில் நடந்த முதல் கூட்டத்தில், பல மதத் தலைவர்கள் கூடியிருந்த கூட்டத்தில், தன்னுடைய ராஜ தந்திரத்திலிருந்து கொஞ்சம் விலகி ஆணித்தரமாக அங்கு மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைக் கண்டித்துப் பேசினார். சாதாரணமாக போப், அவர் விஜயம் செய்யும் நாடுகளின் அரசுகளை அங்கிருக்கும்போதே கண்டித்துப் பேசுவதில்லை. ஆனால் அபு தாபியில் சிறுபான்மையராக இருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னால் பிரான்சிஸும் எகிப்தைச் சேர்ந்த ஒரு பெரிய மசூதியின் இமாமும் “மனித நேய ஆவணத்தில்” (Document of Human Fraternity) கையெழுத்திட்டனர்.

    பல நூற்றாண்டுகளாக விரோதிகளாக இருந்த முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் மதத்தின் பெயரால் வன்முறை, தீவிரவாதம், மதவெறி ஆகியவற்றை மக்களிடையே பரப்பி கடவுளின் பெயரால் அதை நியாயப்படுத்துவதை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளும் ஒரு கொள்கை விளக்க அறிவிப்பைப் போல் இந்த ஆவணம் இருக்கிறது. பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது, மதங்கள் போதிக்கும் அறிவுரைக்குப் புறம்பானது என்று பிரான்சிஸ் கூறினார். அகதிகளாக வருபவர்கள் எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது ஒவ்வொரு நாட்டின் கடமையென்றும் அகதிகள் வருவதைத் தடுக்கத் தடைகள் அமைப்பதையும் சுவர் கட்டுவதையும் கண்டிக்கும்படி எல்லா மதத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

    அபு தாபி மன்னரின் மாளிகைத் தோட்டத்தினூடே போப்பை அழைத்துச் சென்றபோது அவரைச் சுற்றிப் பெரிய பெரிய விலையுயர்ந்த கார்கள் வந்துகொண்டிருக்க, போப் பிரான்சிஸ் தன்னுடைய சாதாரண சிறிய காரில் பயணம் செய்தார். இவருடைய எளிமைக்கு இது ஓர் உதாரணம். போப் எந்த நாட்டிற்கு விஜயம் செய்தாலும் விலையுயர்ந்த கார்களைத் தவிர்த்துவிட்டுத் தன்னுடைய சிறிய காரில்தான் பயணிப்பார்.

    இறுதியாக மதங்கள் தோன்றிய நாளிலிருந்தே மதத்தலைவர்களைச் சர்ச்சைக்குள்ளாக்கி வரும் ஒரு கேள்வியை பிரான்சிஸ் கேட்டார்: மதங்கள் மனித இனங்களைப் பிரிப்பதற்குப் பதில், மனிதர்களிடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கு எப்படிப் பாடுபடலாம்?

    அவருடைய பதில்: சகிப்புத் தன்மையோடு எல்லோரும் ஒரே மாதிரியாக மதிக்கப்பட வேண்டும், யாரும் யாருக்கும் மாஸ்டரும் இல்லை, அடிமையும் இல்லை என்னும் புரிதல் எல்லோருக்கும் வேண்டும். மேலும் இந்தப் புரிதல் இருந்தாலொழிய மனித இனத்திற்கு எதிர்காலம் இல்லை என்கிறார் போப் பிரான்சிஸ்.

    இவரைப் போன்ற ஒரு மதத் தலைவரை யாரால் போற்றாமல் இருக்க முடியும்?

    Share
  • படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் செய்யும் மோசடி

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    மைக்கேல் கோகென் என்பவர் ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர். இவர் இவ்வளவு நாட்களாக ட்ரம்ப் செய்த சில தவறுகளை மூடிமறைத்து வந்தார். இப்போது வேறு வழியில்லாமல் தான் அமெரிக்கப் பாராளுமன்ற கமிட்டியின் முன்னால் பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார். இதற்கு அவருக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதித்திருக்கிறார்கள். இந்தியாவில் இம்மாதிரிக் குற்றங்கள் எல்லாம் – அதுவும் மேல் மட்டத்தில் நடந்தால் – கண்டுகொள்ளப்படாமலே போய்விடும். என்ன இருந்தாலும் கோகெனும் ட்ரம்பும் அமெரிக்காவில் இருப்பவர்கள் அல்லவா? அமெரிக்கா இன்னும் இந்தியா அளவுக்குத் தாழ்ந்து போகவில்லை.

    இம்மாதிரிக் குற்றங்களைப் படித்தவர்கள் செய்யும் குற்றங்கள் (white collar crimes) என்று அழைக்கிறார்கள். இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோர்களை – அவர்கள் மேல்மட்டத்தவர் என்றாலும் – அமெரிக்கா தண்டிக்காமல் விடுவதில்லை. இருப்பினும் அவர்கள் எந்த மாதிரி சிறைச்சாலைக்குப் போக விரும்புகிறார்கள் என்ற சலுகையை அமெரிக்கா அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

    கோகென் நியூயார்க் அருகிலுள்ள ஆடிஸ்வில் என்னும் ஊரிலுள்ள ஒரு சிறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதை ஒரு சிறை என்றுகூட சொல்ல முடியாது. ஒரு முகாமுக்குரிய எல்லா வசதிகளும் இங்கு உண்டு. கோகென் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த முகாம் இம்மாதிரியான மற்ற முகாம்களைவிட வசதிகள் குறைந்ததுதான். இருப்பினும் கோகென் இதைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு முக்கிய காரணம் இங்கு யூதக் குற்றவாளிகள் பலர்  இருப்பதுதான். மேல் மட்டத்தில் இருந்த யூதர்கள் பலர், படித்தவர்கள் புரியும் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள். நியூயார்க் மாநில சட்டசபையின் பெரும்பான்மை கட்சித் தலைவர் ஷெல்டனும் இவர்களில் ஒருவர்.

    இன்னொரு காரணம், யூதர்கள் உண்ண விரும்பும் ஒரு வகையான இறைச்சி. இதை இந்தச் சிறையில் கொடுக்கிறார்கள். யூதர்கள் ஒரு குறிப்பிட்ட சடங்கு செய்துமாடுகளையும் மற்ற மிருகங்களையும் பறவைகளையும் கொன்று அந்த இறைச்சியைத்தான் உண்ணுவார்கள். இன்னொரு காரணம், பெரும்பான்மையான யூதக் குற்றவாளிகளால் மதகுருவாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், இங்குள்ள யூதக் கோவில்களில் மத சம்பந்தப்பட்ட வகுப்புகளை நடத்துகிறார்கள். இவர்கள் வெளியே இருந்தபோது மதகுருவாக வேலை பார்த்தவர்கள். தினம் மூன்று முறை இம்மாதிரி கூட்டங்கள் நடத்த வசதி இருக்கிறது.

    மேலும் வாரம் ஒரு முறை – வெள்ளிக்கிழமை சூரியன் மறைந்ததிலிருந்து சனிக்கிழமை சூரியன் மறையும்வரை – யூதர்கள் வேலை செய்யாத விதியைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த விதியைக் கடைப்பிடிக்கவும் யூதர்களுக்கு இந்தச் சிறையில் அனுமதி உண்டு. யூதர்கள் பாஸோவர் (Passover) என்று ஒரு பண்டிகையைக் கொண்டாடுவார்கள். எகிப்திலிருந்து யூதர்களின் தலைவரான மோசஸ், அவர்களை எகிப்து அரசனின் அனுமதியோடு கானான் தேசத்திற்கு அழைத்துச் சென்றபோது அரசன் மனம் மாறி அவர்களை மறுபடி சிறைப்பிடிக்க முயன்றபோது, அவர்கள் அவசர அவசரமாகத் தயாரித்த உணவுகளைத் தங்களோடு எடுத்துச் சென்றார்களாம். அந்த உணவுகளை இப்போதும் பாஸோவர் அன்று சாப்பிடுகிறார்கள். இந்த உணவுகளைச் சிறையிலேயே தயாரித்துக்கொள்வதற்கும் அங்கு வசதி இருக்கிறதாம்.

    கோஷர் இறைச்சி, தினந்தோறும் மூன்று முறை வழங்கப்பட்டாலும் மௌனம் இருக்கும் சனிக்கிழமையன்றும் பாஸோவர் தினத்தன்றும் அந்தத் தினங்களுக்கு உரிய உணவுகளைச் சமைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. யூதர்கள் அணியும் தலைக்குல்லா, அவர்கள் அருந்தும் ஒரு வகைப் பானம், ஒரு வகையான ரொட்டி ஆகியவையும் இவர்களைப் பார்க்க வருபவர்களைச் சந்திக்கும் அறையில் விற்கப்படுகின்றனவாம். அவை கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் சிறையில் கிடைக்கிறதே என்று இந்தச் சிறையில் இருக்கும் யூதர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

    இவ்வளவு வசதிகள் இருந்தாலும் இந்தச் சிறை ஒன்றும் பிக்னிக் போகும் இடமல்ல என்கிறார், இங்கு பதினெட்டு மாதங்களைக் கழித்த ஒரு யூதர். ஒவ்வொரு நாள் காலையும் ஆறு மணிக்கு அங்குள்ளவர்களின் எண்ணிக்கையைப் பட்டியல் போடும்போது எல்லோரும் எழுந்திருக்க வேண்டும். சிறைக் காவலாளிகள் எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகளின் அறைகளுக்குள் வரலாம். அந்தரங்கம் கிடையாது. குறட்டை விடும் பலருக்கு அருகில்தான் தூங்க வேண்டும் என்றால் அதைத் தவிர்க்க முடியாது. மதவழிபாட்டைப் பின்பற்றுவதால் இந்தக் கஷ்டங்களை ஓரளவு தாங்கிக்கொள்ள முடிகிறதாம். இப்படி இந்தச் சிறையில் மத சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். மற்ற சிறைச்சாலைகளில் நிலைமை நேர் எதிர்.

    இங்குள்ள யூதர்களில் பலர், பெரிய பதவிகளில் இருந்தவர்கள். உதாரணமாக பலர் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், நிதி ஆலோசகர்கள், வணிகர்கள், மதகுருக்கள். இந்த மதகுருக்கள் பலர், பல வகையான மோசடிகள் புரிந்திருக்கிறார்கள். மதகுருக்கள் சிலருக்கு யூதர்களின் வேதமான தோராவின் உரையான டால்முட் (Talmud) தலைகீழ்ப் பாடம். ஆனாலும் எப்படி இவ்வகையான குற்றங்கள் புரிந்தார்கள் என்று தெரியவில்லை. இப்படிக் குற்றங்கள் புரிந்தவர்களே சிறைக்கு வந்ததும் மனம் மாறி மற்றவர்களுக்கு வேதத்தைப் போதிக்க ஆரம்பிக்கிறார்கள்.

    அமெரிக்க சமூகம் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வசதியானவர்கள் செய்யும் குற்றங்களைக் (white collar offences) கண்டித்து அவர்களையும் சிறைக்கு அனுப்பித் தண்டிக்கிறதே என்ற வியப்பு ஒரு பக்கம். தங்கள் மதத்தின் வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்களும் பெரிய பெரிய ஊழல்களும் பணம் சம்பந்தப்பட்ட மோசடிகளும் புரிந்திருக்கிறார்களே என்ற வியப்பு இன்னொரு பக்கம். வேதங்களை முழுமையாகப் படித்துவிட்டு இவர்களால் எப்படி இப்படிப்பட்ட குற்றங்களைப் புரிய முடிகிறது? பின்னால் சிறையில் மறுபடி எப்படி மத போதகர்களாக மாற முடிகிறது? அங்கும் இவர்களைப் பின்பற்றுவதற்கு பலர் இருக்கிறார்களே. இவற்றையெல்லாம் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.

    Share
  • ‘ஜோக்கர்’ இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள்

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    சர்கார் படத்தைப் பார்த்து மிகவும் ஏமாற்றமடைந்திருந்த எனக்கு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘ஜோக்கர்’படம் மிகுந்த மன நிறைவைத் தந்தது. அதன் விமர்சனத்தைப் படித்திருந்த எனக்கு அதைப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் – அதாவது சர்கார் படத்தைப் பார்த்த பிறகுதான்– கிடைத்தது. இந்தப் படம் அமெரிக்காவில் திரையிடப்படவில்லை என்று நினைக்கிறேன். எல்லா வகையிலும் சர்கார் படத்திற்கு நேர் மாறு ஜோக்கர் படம்.

    முதலில் விஜய்யின் சண்டை போடும் திறனையும் exercise dance ஆடும் திறமையையும் நம்பி சர்கார் படத்தை எடுத்திருக்கிறார்கள். எப்படியும் படம் சோடை போகாது, செலவழித்த பணம் கண்டிப்பாகத் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை எடுத்திருக்கிறார்கள். ஆனால் ஜோக்கர் படத்தில் எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லை. எல்லோரும் இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆகிறார்கள். இதுவரை ரசிகர்களுக்குத் தெரியாத நடிகர்களை வைத்துப் படம் எடுப்பதற்கு எவ்வளவு தன்னம்பிக்கை வேண்டும்! ஜோக்கரின் பட்ஜெட் மூன்று கோடியாம்! பிரபல நடிகர்களை வைத்து எடுத்தஇன்னொரு படத்தின் (சர்கார் என்றுதான் நினைக்கிறேன்) பட்ஜெட் முன்னூறு கோடி!

    சர்கார் யதார்த்தத்திற்கு நேர்விரோதம் என்றால் ஜோக்கார் முழுக்க முழுக்க யதார்த்தமான படம். கழிப்பறை இல்லாத ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டிக் கொடுப்பதாக அரசியல்வாதிகள் வாக்களித்துவிட்டு எவ்வளவு ஊழல் புரிகிறார்கள் என்று காட்டுவதில் எத்தனை யதார்த்தம்! ‘இதுவரை வாழ்றதுக்குத்தான் வழியில்லாமல் இருந்தது. இப்போது பேள்றதுக்கும் வழியில்லாமல் போய்விட்டது’ என்ற வசனத்தில் எத்தனை உண்மை இருக்கிறது!

    சர்கார் படத்தில் கதாநாயகன் அமெரிக்காவிலிருந்து தன் ‘படைகளோடு’ வந்து அரசியல்வாதிகளோடு சண்டை போட்டு அரசியலைச் சுத்தப்படுத்தப் பார்க்கிறாராம். ஜோக்கர் படத்தில் ஒவ்வொரு குடிமகனின் கையாலாகாத்தனமும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. வீட்டில் கழிப்பறை இல்லாதால் தன்னை மணக்க மறுத்த பெண் பின் மனம் மாறித் தன்னை மணந்துகொண்டதும் அகமகிழ்ந்து போகிறான் கதாநாயகன். ஆனால் அரைகுறையாகக் கட்டப்பட்ட கழிப்பறையே அவன் மனைவிக்கு எமனாக வாய்த்துவிட்டதும் பின் அவளுக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போனபோது மனம் பேதலித்துப் போனதும் மிகவும் இயற்கை. தன்னைத்தானே நாட்டின் ஜனாதிபதியாகக் கற்பனை செய்துகொண்டு மக்களுக்கு உதவுவதும் அல்லது உதவ முயற்சிப்பதும் அருமை. மனைவியைக் கருணைக்கொலை செய்வதற்கு அவர் அரசிடம் அனுமதி பெறுவதற்குத் திண்டாடுவதும் அவருடைய வழக்கு உச்சநீதிமன்றம் வரை போவதும் இந்தியாவில் ஏழைகள் படும் பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஒவ்வொரு இந்தியனும் படும்பாட்டையும் அவனுடைய கஷ்டங்களுக்குப் பரிகாரமே இல்லாமல் இருப்பதும் யதார்த்தமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. மக்களுக்கு நன்மைகள் கிடைக்க கதாநாயகன் செய்யும் காரியங்கள் எல்லாம் வீணாகப் போகின்றன. எதுவும் செய்ய முடியாமல் தவித்துக் கடைசியில் தன் உயிரையும் பலி கொடுக்கிறான் கதாநாயகன். கதாநாயகன் தோற்பது தமிழ் சினிமாவுக்குப் புதிது. அவனுக்கு உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளர் கடைசியில் கூறுவதுபோல் அரசியல்வாதிகளைத் திருத்தப் பாடுபடும் அவர்கள் பைத்தியக்காரர்களாகக் கருதப்படுகிறார்கள். நாட்டில் ஊழல் தொடர்கிறது; நாட்டு மக்கள் தொடர்ந்து துன்பத்துக்கு ஆளாகிறார்கள். இந்த நிலையை மாற்ற முயற்சிக்கும் செயற்பாட்டாளர்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை. இதை மிகவும் அழகாக எடுத்துச் சொல்கிறது படம்.

    முப்பது மைல் பிரயாணம் செய்து பத்து டாலர் செலவழித்து சர்கார் படத்தைப் பார்த்துவிட்டு வந்தபோது மனமெல்லாம் ஏமாற்றம் நிறைந்திருந்தது. என்ன சொல்ல வருகிறார்கள் என்ற ஆயாசம். இப்படித்தான் அரசியலைச் சுத்தப்படுத்த முடியுமா என்ற வேதனை. ஆனால் பணம் எதுவும் செலவழிக்காமல் தொலைக்காட்சியில் வீட்டிலிருந்துகொண்டே பார்த்த ஜோக்கர் படம் இந்தியாவில் மக்களின் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்பதை நினைத்து மனதில் ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்தினாலும், ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற மனநிறைவைத் தந்தது. முன்னூறு கோடி ரூபாய் செலவழித்து எடுத்த படம் கொடுக்காத மனநிறவை மூன்று கோடி செலவழித்து எடுத்த படம் கொடுத்தது. தமிழக மக்கள் இம்மாதிரிப் படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திருந்தால் இம்மாதிரிப் படங்கள் இன்னும் நிறைய வந்திருக்கலாம். தமிழ்நாட்டிற்கு இன்னும் விடிவு காலம் வரவில்லையென்றே சொல்ல வேண்டும்.

    Share
  • திரு ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நான் இப்போதெல்லாம் சினிமாவுக்குப் போவதே இல்லை.  இதற்கு வயது ஒரு காரணம்.  இப்போதைய விருப்பங்கள், ஆசைகள் வேறு விதமாக இருக்கின்றன.  நடிக, நடிகைகள் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்துப் பரவசப்பட்டது ஒரு காலம்.  இப்போது அவை எல்லாம் அறியாமையில் செய்த காரியங்கள் என்று புரிகிறது.  மேலும் வருஷத்தில் ஒன்பது மாதங்களை அமெரிக்காவில் கழிக்க ஆரம்பித்த பிறகு ரசிப்பதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பது புரிகிறது.

    இருந்தாலும் தமிழக அரசியலில் இன்னும் ஆர்வம் இருப்பதால் ‘சர்கார்’ திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டதும் அதைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பினேன்.  பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு சினிமாவுக்குப் போக வேண்டும் என்ற ஆசை என்னுள் முளைவிட்டது. அமெரிக்காவில் அந்தப் படம் திரையிடப்பட்ட இடங்களில் நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து மிக அருகில் இருந்தது, சுமார் முப்பது மைல் தொலைவில்.  ஒரு படம் பார்க்க முப்பது மைல் போவதா என்ற எண்ணம் எழுந்தாலும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலீட்டால் போவதென்று முடிவுசெய்தோம்.

    படம் ஆரம்பித்தவுடனேயே தன்னுடைய ஓட்டுரிமையை நிறைவேற்றுவதற்காக ஒரு பெரிய கம்பெனியின் தலைமை அதிகாரி அமெரிக்காவிலிருந்து தன் ‘படைகளோடு’ தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்பதைப் பார்த்தபோது கொஞ்சம் நெருடியது.  சரி இருக்கட்டும், போகப் போக உருப்படியாக ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்.  ஆனாலும் பின்னால் வந்த காட்சிகள் இந்த அபத்தமான ஆரம்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.  கதாநாயகன் விஜய் ஒற்றை ஆளாக எந்தவித ஆயுதமும் இல்லாமல் கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களோடு வரும்  இருபது பேரோடு சண்டை போட்டு ஜெயிக்கிறார்.  இப்படி அவர் செய்வது ஒரு முறையல்ல; மூன்று முறை.  கணினி கம்பெனியின் தலைமை அதிகாரிக்கு மூளை பலத்தோடு உடல்பலமும் இருக்கும் என்றே வைத்துக்கொண்டாலும் இத்தனை முறை, இத்தனை குண்டர்களோடு சண்டையிட்டு எந்தவித உடல் சேதாரமுமின்றி வர முடியும் என்று தமிழ் ரசிகர்கள் எப்படி நம்புகிறார்கள் என்று நம்ப முடியவில்லை.

    சாக்கடையாகி இருக்கும் தமிழக அரசியலைச் சுத்தப்படுத்த, தன் ஓட்டைப் பதிவுசெய்ய வந்த இடத்தில் ஒரு பெரிய கம்பெனியின் தலைமை அதிகாரி முயல்கிறார் என்று விமர்சனங்களின் மூலம் தெரிந்துவைத்திருந்த நான்  இப்படி ஒரு ஏமாற்றம் காத்திருக்கும் என்று நினைக்கவில்லை.  கடந்த ஐம்பது வருடங்களாகத் திராவிடக் கட்சிகள் மக்களைச் சிந்திக்கவிடாமல் செய்ததை நினைத்து மனம் குமுறிக்கொண்டிருந்த எனக்கு யாராவது, ஏதாவது சொரு வகையில் கடந்த ஐம்பது வருட தமிழக அரசியலைப் பற்றிக் கொஞ்சம் விமர்சித்தாலே கொஞ்சம் நன்றாக இருக்கும்.  இது பற்றி ஒரு சினிமாப் படமே வந்திருக்கிறது என்று நினைத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது. இது ஒரு அரசியல் அங்கதம் (Political satire) என்று எண்ணி மிகுந்த ஆசையுடன் வந்த எனக்கு இது வெறும் மசாலாப் படம் என்று தெரிந்ததும் மிகுந்த வேதனையாகிவிட்டது.

    ‘ஓம், ஒபாமா’ என்று ஒரு படத்தை மூன்று வருடங்களுக்கு முன்னால் சிகாகோ பல்கலைக்கழக வளாகத்திலேயே (எங்கள் வீட்டிலிருந்து அரை மைல் தொலைவில்) காட்டினார்கள்.  இறந்த அம்மையாரின் அமைச்சர்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் அவ்வளவு அழகாகக் கிண்டல் செய்திருந்தார்கள்.  தமிழ்நாட்டில் அது தடைசெய்யப்படலாம் என்பதற்காகவே அது அங்கு திரையிடப்படவில்லை என்று நினைக்கிறேன்.  இது பற்றிய விமர்சனத்தை அடுத்து வரும் URL-இல் பார்க்கலாம். http://sambarchutney.blogspot.com/2011/07/blog-post_2253.html

    விஜய்யை வைத்து எத்தனை மசாலாப் படங்கள் வேண்டுமானாலும் எடுங்கள்.  அது பெரிய வெற்றிப் படமாக அமைந்து உங்களுக்குப் பெரும் லாபத்தைக் கொடுக்கலாம்.  ஆனால் தமிழக அரசியலை நல்ல திசையில் திருப்புவதாகக் கூறிக்கொண்டு இம்மாதிரிப் படங்களை எடுத்தால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் உங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடலாம்.  அவர்கள் ஒரு மாதிரி அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள்; நீங்கள் இன்னொரு மாதிரி ஏமாற்றுகிறீர்கள்.  அவர்களும் உங்களுக்குப் பணத்தைக் கொட்டுகிறார்கள்.

    ஏமாற்றத்துடன்,

    நாகேஸ்வரி

    Share
  • நீங்கள் Mr. ஆ? Ms. ஆ?  அல்லது Mx. ஆ ? 

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் நடக்கும் பல வித்தியாசமான விஷயங்களில் இதுவும் ஒன்று.  ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் (transgender) ஏன் தாங்கள் Mr. என்றோ அல்லது Mrs. என்றோ அல்லது Ms. என்றோ அழைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.  அதனால் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ்களில் M என்றோ F என்றோ போட்டுக்கொள்ளாமல் இரண்டிலும் சேராமல் X என்று போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைக்கப் போகிறார்கள்.

    ஆரோவுட் என்னும் திருநம்பி (‘அவனுடைய’ என்றோ ‘அவளுடைய’ என்றோ தன்னை குறிப்பிடாமல் ‘அவர்களுடைய’  என்றே தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்; தமிழில் என்றால் இருவருக்கும் பொதுவாக ‘அவருடைய’ என்று குறிப்பிடலாம்; இந்த வசதி ஆங்கிலத்தில் இல்லை.) அவர்களுடைய பாலை (sex) அவர்களுடைய பிறப்புச் சான்றிதழில் மாற்றிக்கொண்டுள்ளார்கள்.  Female என்பதற்குப் பதிலாக male என்று போட்டுக்கொள்வதும் சரியாகத் தோன்றவில்லையாம்.   அதனால்   F (female) என்றும் இல்லாமல் M (male) என்றும் இல்லாமல் நடுநிலையாக X என்று போட்டுக்கொள்ளப் போகிறார்களாம்.

    இப்படி ‘X’ என்று பிறப்புச் சான்றிதழில் போட்டுக்கொள்வதிலும் ஒரு கஷ்டம் இருக்கிறது.  நியூயார்க் மாநிலப் போக்குவரத்துத்துறை வழங்கும் வாகன ஒட்டுநர் உரிமத்திலும்  மத்திய அரசு வழங்கும் பாஸ்போர்ட்டிலும் சமூக பாதுகாப்பு அட்டையிலும் (social security card) நடுநிலையான X என்ற நடுநிலை விருப்பத் தேர்வு (option) இல்லை.  ஒரே நபரின் பல சான்றிதழ்களில் ஒன்றில்  M என்றும்  இன்னொன்றில்  X என்றும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது குழப்பத்தை விளைவிக்கும் என்கிறார் திருநங்கை, திருநம்பிகளுக்காக வாதாடும் லாப நோக்கில்லாத ட்ரான்ஸ்செண்ட் லீகல் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆரோவுட்.  ஒருவரைக் குறிப்பிடுவதற்குச் சரியான அடையாளம் இல்லாவிட்டால் அவர்களைப் பற்றிய மற்ற விபரங்களும் தப்பாகிவிடலாம் என்கிறார் ஆரோவுட்.

    அமெரிக்காவில் பால் (sex) பற்றிய எண்ணங்கள் மாறிவருவதால், தங்களைப் பற்றிய அதிகாரபூர்வமான ஆவணங்களில் தங்கள் பாலை எப்படிக் குறிப்பிட வேண்டும்  என்று தாங்கள் விரும்பியபடி மாற்றிக்கொள்ளலாம் என்று சில மாநிலங்கள் மக்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கின்றன; மாநிலத்தின் உரிய அலுவலங்களுக்கு அப்படி மாற்றிக்கொடுக்க அதிகாரம் கொடுத்திருக்கின்றன.  நியுயார்க் நகர கவுன்சில் சென்ற செப்டம்பர் மாதம் ஒருவருடைய பிறப்புச் சான்றிதழில் ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத பால் – அதாவது  X என்று குறிப்பிடலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது.  இதைப் பின்பற்றி கலிஃபோர்னியா, ஆரகன், வாஷிங்டன், (தலைநகர் வாஷிங்டன் அல்ல, வாஷிங்டன் மாநிலம்) நியு ஜெர்ஸி ஆகிய மாநிலங்களும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவரப் போகின்றன.  வாஷிங்டன் மாநிலத்தில் இருபத்தாறு பேரும் கலிஃபோர்னியாவில் பதினாறு பேரும் இம்மாதிரி மாற்றங்களுக்காக விண்ணப்பித்திருக்கிறார்களாம்.  தலைநகரான வாஷிங்டன்  டி.சி.யும் மெயின் மாநிலமும் வாகன ஓட்டுநர் உரிமங்களில்  X என்று போட்டுக்கொள்ள உரிமை வழங்கினாலும் பிறப்புச் சான்றிதழ்களில் அப்படிப் போட்டுக்கொள்ள அனுமதி கொடுக்கவில்லை.  இதனால் பல குழப்பங்கள் விளைகின்றன.

    கலிஃபோர்னியாவைச் சேர்ந்த Mx. ஃபுருயா என்பவர்கள்தான் நாட்டிலேயே முதல் முதலாக மூன்றாவது பாலைக் குறிக்கும் X என்பதைப் பெற்றவர்கள்.   இவர்கள் சில மாதங்கள் கழித்து அம்மாநிலத்தின் வாகனத்துறைக்கு தங்களுடைய கார் ஓட்டும் உரிமத்தைப் புதுப்பிக்கச் சென்றபோது M அல்லது F என்ற இரண்டு பிரிவுகள்தான் இருந்தனவாம்.  இதைப் பற்றித் தாங்கள் யோசிக்கவில்லை என்று கூறிய வாகனத்துறை அதிகாரிகள் இந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டிலும் சேராத மூன்றாவதான X-ஐயும் சேர்க்கப் போவதாகக் கூறினார்களாம்.

    இந்தியா உட்படப் பத்து நாடுகளில் – ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, டென்மார்க், ஜெர்மனி, இந்தியா, மால்டா, நேபாளம், நியுஜிலாந்து மற்றும் பாகிஸ்தான் – பாஸ்போர்ட்டுகளிலோ அடையாள அட்டைகளிலோ மூன்றாம் பாலைச் சேர்க்க வசதி இருக்கிறதாம்.  இந்தியாவில் ஹிஜ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்க eunuch என்னும் ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான E-ஐ பாஸ்போர்ட்டில் போடும் வசதி 2005-லிருந்து இருக்கிறதாம்.   இத்தனை நாடுகள் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் இந்த வசதியைச் செய்து கொடுத்திருக்கும்போது ஏன் அமெரிக்கா மட்டும் செய்யவில்லை என்கிறார் அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் ஒரு வழக்கறிஞர்.  மாநில அரசு வாகனம் ஓட்டும் உரிமத்திலும் பிறப்புச் சான்றிதழிலும் X என்று ஒருவருடைய பாலைக் குறித்திருந்தால் (இவை இரண்டும் மாநில அரசால் வழங்கப்படுபவை),  வறுமைக் கோட்டுக்குக் கீழே வருபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் மருத்துவ உதவி அட்டையில் ஒருவரின் பாலைக் குறிக்கும் இடத்தில் M அல்லது F என்று மட்டும் குறித்திருந்தால் அந்தக் கார்டு அந்த நபருக்குரியதல்ல என்று மறுக்கப்பட்டு அவருக்கு மத்திய அரசின் இலவச மருத்துவ உதவி கிடைக்காமலே போய்விடலாம்.  இம்மாதிரிக் குழப்பங்களைத் தவிர்ப்பதற்கு எல்லா அடையாள அட்டைகளிலும் M மற்றும் F என்பவையோடு X என்பதும் இருக்க வேண்டும் என்று வாதாடுகிறார்கள் திருநங்கைகளும் திருநம்பிகளும்.

    ஆண், பெண் என்ற பெரும் பிரிவுகளில் தங்களைச் சேர்க்காமல் தங்களுக்கென்று தனி அடையாளம் வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.  பிறந்தவுடன் அவர்களின் பிறப்புறுக்களைப் பார்த்து அவர்களை ஆண் என்றோ பெண் என்றோ பிறப்புச்சான்றிதழ்களில் குறிப்பிட்டாலும் பின்னால் அவர்கள் வளர்ந்துவரும்போது பல மாற்றத்துக்கு உள்ளாகிறார்களாம்.  அப்படி மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு அவர்கள் தங்களை திருநங்கைகள் என்றோ திருநம்பிகள் என்றோ அடையாளப்படுத்திக்கொண்டால் அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.  ஆரோவுட் பிறப்பின்போது பெண் என்று குறிப்பிடப்பட்டு, பின் தங்கள் மனதிலும் உடலிலும் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்கள்: “நான் ஆணாக மாறிக்கொண்டிருந்தேன் என்பதைவிட பெண் என்பதிலிருந்து விலகிப் போய்க்கொண்டிருந்தேன்.  அதனால் பெண் என்பதற்குப் பதில் ஆண் என்று போட்டுக்கொள்வதும் சரியாகப்படவில்லை”.

    ஜனாதிபதி ஒபாமா (இப்போது நான் உட்படப் பலர் அவரை மிகவும் ‘மிஸ்’ பண்ணுகிறோம்.)  இவர்களுடைய உரிமைகளுக்காகப் பொதுக் கழிப்பறைகள், குளியலறைகள், பள்ளிகளில் உடைமாற்றும் வசதிகள் என்று இவர்களுடய அந்தரங்கத்தைக் காத்துக்கொள்ள நிறையச் செய்தார்.  எல்லோரின் நலன்களுக்காகவும் அரசாங்கத்தில் பல மாற்றங்கள் செய்ததுபோல் இவர்களின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் அவர் நன்கு புரிந்துகொண்டார்.  ஆனால் ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சீர்திருத்தங்களையும்  மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு காரியங்கள் செய்துவரும் இன்றைய ஜனாதிபதி ட்ரம்ப் இவர்கள் விஷயத்திலும் தன் கைவரிசையைக் காட்டப் போகிறார்.  அமெரிக்க மக்கள் ‘அமெரிக்கா’ என்ற பூமாலையை ட்ரம்ப் என்ற இந்தக் குரங்கு கையில் கொடுத்திருக்கிறார்களே.  இதை என்னவென்று சொல்வது!  தன்னைப் பொறுத்தவரை மூன்றாவது பால் என்பது இல்லையென்றும் பிறப்புச்சான்றிதழில் ஒருவருடைய பால் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதுதான் அவர்கள் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.  அதற்குரிய ஒரு அரசாணையையும் வெளியிடப் போகிறாராம்.  இதனால் தங்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டுத் தங்களுக்குரிய நன்மைகளை இழந்துவிடுவோமே என்று அமெரிக்காவில் இருக்கும் பதினாலு லட்சம் திருநங்கைகளும் திருநம்பிகளும் பயப்படுகிறார்கள்.

    Share
  • அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் நீண்ட பயணம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்கான நீண்ட பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்றாலும் இப்போது எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.  இருபது வருஷங்களுக்கு முன்புகூட இவர்கள் பலரால் நிந்திக்கப்பட்டார்கள்.  (இன்னும் சில சமூகங்களில் இவர்களுக்கு மரண தண்டனைகூடக் கொடுக்கப்படுகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.)

    1998-இல் வயோமிங் என்னும் மாநிலத்தைச் சேர்ந்த லாரமீ என்னும் ஊரில் ஒரு ஓரின ஈர்ப்பாளனை இரண்டு திருடர்கள் கடத்திக்கொண்டுபோய் துன்புறுத்திப் பின் ஒரு வேலியில் தொங்கவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.  அந்தப் பக்கமாக சைக்கிளில் போய்க்கொண்டிருந்த ஒருவன் – முதலில் வயல்களில் வைக்கப்படும் சோளக்கொல்லை பொம்மை என்று நினைத்துப் போகவிருந்தவன் – பின் நிலைமையை உணர்ந்து மருத்துவமனையில் அவனைச் சேர்த்தும் அவன் – மேத்யூ ஷெப்பர்ட் – இறந்துவிட்டான்.  வயோமிங்கில் நடந்த அவனுடைய ஈமச்சடங்குகளுக்கு நிறையப் பேர் வந்திருந்தாலும் சிலர் அது அங்கு நடைபெறுவதைக் கண்டித்து சுலோகங்கள் தாங்கிய அட்டைகளைச் சுமந்துவந்தனர்.  இதனால் அங்கு மகனுடைய அடக்கம் நடைபெற்றால் பின்னால் அவனுடைய கல்லறை அப்படி எதிர்த்தவர்களால் அசிங்கப்படுத்தப்படலாம் என்று பயந்து அவனுடைய பெற்றோர்கள் இருபது வருஷங்களாக மகனுடைய அஸ்தியை புதைக்காமல் வைத்திருந்தார்கள்.  இப்போது மகனுக்கு ஒரு பாதுகாப்பான இடம் கிடைத்திருக்கிறது.  கடைசியாக மகனுக்கு அவனுக்குப் பிரியமான இடத்தில் அவனுடைய கடைசி இருப்பிடம் அமைந்திருக்கிறது என்று அவனுடைய தந்தையும் தாயும் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கிறார்கள்.  முதலில் மகனுடைய அஸ்தியை வயோமிங்கின் மலைகளின் மீதும் சம வெளிகளிலும் தூவிவிட முடிவுசெய்தனர்.  இருந்தாலும் மகனிடம் தொடர்ந்து பேசுவதற்கு ஏதுவாக ஒரு பாதுகாப்பான இடம் தேடினர்.  இப்போது கடைசியாக வாஷிங்டன் நேஷனல் கதீட்ரலில் அஸ்தியைப் புதைக்க இடம் கிடைத்திருக்கிறது.  வரும் அக்டோபர் 26-ஆம் தேதி மேத்யூவின் அஸ்தி அங்கு புதைக்கப்படும்.  இது ஜெபக் கூட்டங்களும் ஞாபகார்த்தக் கூட்டங்களும் தினமும் நடைபெறும் கதீட் ரல்.  இங்கு பெரிய அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.   பெரிய புள்ளிகளான அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்ஸன், அமெரிக்கக் கப்பற்படையில் பெரிய அதிகாரியாக விளங்கிய ஜார்ஜ் டூயீ, ஹெலென் கெல்லர், அவருடைய ஆசிரியை ஆனா சல்லிவன் ஆகியோர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.  “இவர்களோடு மேத்யூவும் புதைக்கப்பட்டிருப்பது சிறந்த காரியம்தான்” என்று பிஷப் புத்தே கூறியிருக்கிறார். சமீபத்தில் அமெரிக்க செனட்டராக இருந்த, அமெரிக்காவின் கடற்படையில் பணிபுரிந்த, வியட்நாம் சிறையில் ஐந்தரை வருடங்கள் போர்க் கைதியாகக் கழித்த செனட்டர் மெக்கெயினைக் கவுரவித்து இறைவழிபாடு நடத்தினார்கள்.

    அக்டோபர் 26-ஆம் தேதியன்று பொதுமக்களுக்கான ஜெபக்கூட்டம் முடிவடைந்ததும் மேத்யூவின் குடும்ப அங்கத்தினர்களுக்காகத் தனிப்பட்ட முறையில் நடக்கப்போகும் நிகழ்ச்சியில் மேத்யூவின் அஸ்தி அங்கு புதைக்கப்படும்.  அந்த நிகழ்ச்சிக்கு பிஷப் புத்தேயும் ராபின்ஸனும் (இவர் 2003-இல் முதல் ஓரின ஈர்ப்பாள பிஷப்பாக எபிஸ்கோப்பல் தேவாலயத்தில் சேர்ந்தவர்) தலைமை தாங்குவார்கள்.  மேத்யூவின் பெற்றோர்கள் ஓரின ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினர் என்று பலவிதமான பால் பாகு

    பாடுகளுடையவர்களின் ((LGBTQ) உரிமைகளுக்காகப் பாடுபட்டு வருகிறார்கள்.  இவர்களோடு சேர்ந்து ராபின்ஸனும் பாடுபட்டு வருகிறார்.  மேத்யூவின் அம்மா கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தக் கதீட்ரலில் மேத்யூவின் அஸ்தியைப் புதைக்க ராபின்ஸன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

    மேத்யூவின் நண்பன் ஜேஸன் மார்ட்ஸன் நண்பனின் பெயரில் ஒரு பவுண்டேஷனை ஆரம்பித்து மேத்யூவுக்குப் பிரியமான உலக அரசியல், மனித உரிமைகள் பற்றி அவன் பெயர் விளங்குமாறு செய்யப் போகிறார்.  அக்டோபர் 26-ஆம் தேதி ஜேஸனும் மேத்யூவின் அஸ்தி புதைக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.  பிஷப் ராபின்ஸன் கூறியதுபோல் இம்மாதிரி பால் பாகுபாடு உடையவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா இப்போது – மேத்யூ கொல்லப்பட்டபோது இருந்ததைவிட – எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.  மத்திய அரசாலும்  சில மாநில அரசுகளாலும் ஓரின ஈர்ப்புத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

    2009-இல் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு மசோதாவில் மேத்யூவின் பெயர் இடம் பெற்றிருக்கிறது.  அந்த மசோதா சட்டமாக்கப்பட்டபோது ஒருவரை வெறுப்பதால் இழைக்கப்படும் கொலைகளில் (Hate Crimes- அமெரிக்காவில் இவ்வகைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை உண்டு) பால் பாகுபாட்டினால் ஒருவரை வெறுத்து இழைக்கப்படும் கொலைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.  2013-லேயே ‘மேத்யூ, என் நண்பன்’ என்னும் ஆவணப் படமும் கதீட் ரலால் வெளியிடப்பட்டது.

    “மேத்யூ கொலைசெய்யப்பட்டதிலிருந்து இந்த இருபது வருடங்களில்  எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  ஆயினும் இன்னும் எவ்வளவோ மாற வேண்டியிருக்கிறது.  பால் பாகுபாடு உடையவர்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்.  அவர்களும் கடவுளின் குழந்தைகள்.  அதனால் அவர்களுடைய பால் பாகு பாட்டினால் அவர்களை வெறுப்பதை விட்டுவிட்டு அவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்” என்றார் பிஷப் புத்தே.

    இப்போதைய போப் பிரான்சிஸும் ஓரின ஈர்ப்பாளர்கள் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, “அவர்களைப் பற்றிக் கணிப்பதற்கு நான் யார்?  அவர்களும் கடவுளின் குழந்தைகள்” என்றார்.

    “இந்தக் கத்தீட்ரலில்  புதைக்கப்பட்டிருக்கும் மற்றப் பெரிய மனிதர்களோடு எங்கள் மகன் மேத்யூவுக்கும் இடம் கிடைத்திருப்பது நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான மகிழ்ச்சியான விஷயம்” என்று மேத்யூவின் தந்தை கூறியிருக்கிறார்.

    அமெரிக்கா பல வழிகளில் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது.  பால் பாகுபாடுடையவர்களுக்கு சமூகத்தில் உரிய இடத்தை வழங்கியிருப்பதிலும் முதன்மை வகிக்கிறது.

    இருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அவருடைய ஆதரவாளர்களும் இதுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்கும் உரிமைகளை மறுத்துச் சட்டம் இயற்றிவிடுவார்களோ என்ற பயமும் வருகிறது.

    Share
  • இந்திய ஜனநாயகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    இன்றைய தேதியிட்ட (செப்டம்பர் 18) ‘இந்து’வில் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்திருக்கிறது.  இந்தச் செய்தி வேறு எந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன்; ஒரு பொறுப்பான பத்திரிக்கையான இந்துவிலிருந்து வந்தது என்ற ஒரே காரணத்திற்காக அதை நம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

    பீகார் மாநில ஜார்கன்டில் உள்ள கோத்தா மாவட்டத்தில் நடந்த ஒரு செயலை நினைத்துப் பார்க்கவே குமட்டுகிறது.  கோத்தா மாவட்ட, பி.ஜே.பி.யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துபே அங்கு ஒரு பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டச் சென்றிருந்தபோது நடந்த சம்பவம் இது.  நிகழ்ச்சி முடிந்து துபே தன் பேச்சை முடித்துக்கொண்டதும் ஒரு பி.ஜே.பி. கட்சித் தொண்டர் ஒருவர் ஒரு பித்தளைத் தட்டில் தண்ணீர் கொண்டுவந்து துபேயின் பாதங்களைக் கழுவி ஒரு துண்டால் துடைத்துவிட்டுப் பிறகு அந்தத் தண்ணீரை குடித்தாராம்!  அதைக் கண்டு அங்கு கூடியிருந்த கூட்டம், ‘பவான் பாய் ஷா வாழ்க’ என்று கரகோஷம் செய்து அந்தத் தொண்டரை வாழ்த்தியதாம்.  “நான் தவறு எதுவும் செய்யவில்லையே.  அவர் என்னுடைய அண்ணன் போன்றவர், அவரிடம் எனக்கிருக்கும் மரியாதையை இப்படிக் காட்டுகிறேன்” என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினாராம் ஷா. அந்தப் பாராளுமன்ற உறுப்பினரும், “இதில் என்ன தவறு? அவர் அப்படிச் செய்து என்னிடம் அவருக்குள்ள மரியாதையைக் காட்ட விரும்பினால் எந்தத் தவறும் இல்லை” என்றாராம்.  குடியாட்சி இருந்த காலத்தில்கூட மன்னர்களிடம் மரியாதையை இப்படி யாரும் காட்டினார்களா என்று தெரியவில்லை.  இந்தியாவில் குடியாட்சி மலர்ந்து 68 வருடங்கள் ஆகிவிட்டன.  இன்னும் முடியாட்சியில் கூட இல்லாத இந்த வழக்கத்தைப் பின்பற்றுகிறோம்.  நம் மக்களுக்குக் குடியாட்சி தேவைதானா என்ற கேள்வி எழுகிறது?

    இந்தியாவின் இன்னொரு மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒரு செய்தி.  சொத்துக் குவிப்பு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றதாலேயே குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு சிறைக்குச் செல்ல வேண்டியவர். சில அரசியல் காரணங்களுக்காக எழுதப்பட்ட தீர்ப்பு அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டதால் அவர்  சிறைக்குச் செல்லாமல் தப்பித்துக்கொண்டவர்.  இவருக்கு இந்தியாவின் குடிமக்களுக்குக் கொடுக்கப்படும் உச்ச விருதான ‘பாரத ரத்னா” விருதை வழங்க வேண்டும் என்று இப்போது தமிழ்நாட்டை ஆண்டுவரும் அம்மையாரின் கட்சியைச் சேர்ந்த அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது.   இப்படிப் பரிந்துரைப்பதின் மூலம் தமிழ்நாடு அரசு என்ன சொல்ல முயற்சிக்கிறது?  அம்மையார் செய்த ஊழல் அப்படியொன்றும் பெரிய ஊழல் அல்ல; அதை மன்னிப்பதோடு கௌரவிக்கவும் செய்ய வேண்டும் என்கிறதா?  அப்படியானால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறியதை யாரும் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்கிறதா?  இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அம்மையாருக்குப் ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அம்மையாரின் கண்மூடித் தொண்டர்களின் ஓட்டுக்கள்தான்.  அது எப்படிக் கிடைத்தால் என்ன.

    அம்மையாருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஊழல் புரிந்துள்ள பீகாரைச் சேர்ந்த லாலு பிரசாத்திற்கு மன அழுத்தமாம்!  மருத்துவமனையில் எல்லா வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இரவில் தெரு நாய்கள் குரைக்கும் தொல்லை தாங்க முடியாததால் தன்னுடைய தூக்கம் கெடுகிறது என்று குறை கூறிக்கொண்டும் வாழ்ந்துவரும் லாலுவுக்கு இப்போது மன அழுத்தமாம்.  அரசியலில் இருக்கும், ஒருவரொடொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் தன்னுடைய இரண்டு மகன்களைப் பற்றிக் கவலைப்படுகிறாராம்.  இந்தக் கவலைகளினால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு இவருக்கு மனநோய் மருத்துவர்கள் உதவப் போகிறார்களாம்.  பல லட்சங்கள் அரசுப் பணத்தைக் கையாடி அரசுக்கும் மக்களுக்கும் பெரும் நஷ்டம் விளைவித்த இவருக்கு ராஜ வைத்தியம் நடக்கிறது.

    இந்தியா என்ற ஜனநாயக நாட்டில் ஊழல் புரியலாம்; அரசுப் பணத்தைக் கொள்ளையடித்து சொகுசாக வாழலாம்.  யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை . இதுதான் இந்தியச் சுதந்திரம் கற்றுக்கொடுக்கும் பாடமா?

     

    Share
  • பாலஸ்தீனம்: அநீதியின் உச்சக் கட்டம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண ட்ரம்ப் ஜனாதிபதியானவுடன் தன் சொந்த மருமகன் ஜேரட் குஷ்னரை நியமித்தார்.  இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேறு எந்த தகுதியும் இல்லாதவர்.  ஆனால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க அவரால் முடியும் என்று ட்ரம்ப் உளறிக்கொண்டிருந்தார்.  எத்தனையோ முறை இஸ்ரேலுக்குச் சென்றுவந்த குஷ்னர் எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை.  இப்போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

    லட்சக்கணக்கான பாலஸ்தீன அகதிகளுக்கு உதவி வரும் ஐ.நா. சபையின் அமைப்பு (United Nations Relief Works Agency) ஒன்றிற்கு அமெரிக்க அரசு இதுவரை அளித்துவந்த உதவியை நிறுத்த முடிவு செய்திருப்பதாக ஐ.நா.வுக்கு அமெரிக்கா நிதி உதவி அளிக்கும் துறையில் வேலைபார்த்த பழைய அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.  இந்த முடிவை எடுத்ததில் குஷ்னருக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து உலகின் பல பகுதிகளிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் பாலஸ்தீனர்களின் அனுமதி இல்லாமலேயே நுழைந்து அவர்களின் நிலங்களைத் தந்திரமாக வாங்கிப் பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரத்தையே குலைத்து, வன்முறைகளால் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வெளியேற்றி அவர்களில் பாதிப் பேருக்கு மேலானவர்களை அகதிகளாக்கினர்.  அப்படி அகதிகளாகச் சென்றவர்களுக்குத் தங்கள் இடங்களுக்குத் திரும்பும் உரிமை இருக்கிறது என்று கூறிவரும் பாலஸ்தீன அரசியல்வாதிகள் அந்த உரிமை பற்றிப் பேசாதிருக்க வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபையின் அமைப்பு அவர்களுக்குச் செய்துவரும் உதவியை நிறுத்தி அவர்களைப் பணியவைக்க முயன்றுவருவதாக அகில உலக வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தில் வேலைபார்த்த டேவிட் ஹார்டன் என்பவர் கூறியிருக்கிறார்.

    ஒவ்வொரு வருடமும் அமெரிக்க வெளியுறவுத் துறை செப்டம்பர் மாத முடிவில் மேலே குறிப்பிட்ட, பாலஸ்தீன அகதிகளுக்கு, உதவிவரும் ஐ.நா. நிறுவனத்திற்கு பணம் பட்டுவாடா செய்யும். இந்த வருடம் இந்த உதவிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 35 கோடி டாலர் பணத்தில் ஏற்கனவே ஆறு கோடி டாலர் கொடுத்திருக்கிறது.  ஆனால் மீதிப் பணத்தைக் கொடுக்கப் போவதில்லை என்று குஷ்னரும் வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோவும் முடிவுசெய்திருப்பதாக ஹார்டன் கூறியிருக்கிறார்.  அந்தப் பகுதியிலுள்ள ஐம்பது லட்சம் அகதிகளுக்கு ஐ.நா. அமைப்பு உதவிவருவதாகவும் இந்த உதவி நிறுத்தப்படுமானால் அந்தப் பகுதியில் பெரிய கொந்தளிப்பு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

    2017 டிசம்பரில் ஜெருசலேம் இஸ்ரேலுக்குச் சொந்தம் என்று கூறியதோடு காஸாவுக்கும் வெஸ்ட் பேங்கிற்கும் அமெரிக்க அளித்துவந்த 20 கோடி டாலர் பணத்தையும் ட்ரம்ப் நிறுத்திவிட்டார்.  இப்படி அடி மேல் அடியாக பாலஸ்தீனர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் வன்முறையில் இறங்காமல் என்ன செய்வார்கள்?

    பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த யூதர்கள் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் தாங்கள் வாழ்ந்த தங்களின் புண்ணிய பூமி என்று பாலஸ்தீனத்திற்குச் சொந்தம் கொண்டாடி அதில் தங்களுக்கும் ஒரு நாடு வேண்டும் என்று அப்போது பாலஸ்தீனத்தை நிர்வகித்துவந்த பிரிட்டனின் சூழ்ச்சியோடு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக்கொண்டனர்.  அப்போது பாலஸ்தீனர்களிடமிருந்து முழு பாலஸ்தீனத்தையும் பறித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குள் திட்டம் போட்டிருந்தாலும் வெளியில் பாலஸ்தீனத்தைப் பாலஸ்தீனர்களோடு பகிர்ந்துகொள்ளத் தயார் என்பதுபோல் நடந்துகொண்டனர்.  பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் ஐ.நா.வின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத பாலஸ்தீனர்கள் யூதர்களைப்போல் ஐ.நா. தங்களுக்குக் கொடுத்த இடத்தில் பாலஸ்தீன நாட்டை உருவாக்கிக்- கொள்ளவில்லை.  அன்று அவர்கள் செய்த இந்த மாபெரும் தவறு பாலஸ்தீனத்தில் அவர்களுக்கு இடமே இல்லை என்னும் அளவுக்கு அவர்களைக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது.

    இஸ்ரேலிலேயே தங்கிவிட்ட, இப்போது இஸ்ரேலின் ஜனத்தொகையில் இருபது சதவிகிதம் இடம் பெற்றிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு முழு குடிமையுரிமைகளும் இஸ்ரேல் வழங்கும் என்ற நிலையிலிருந்து அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது அவர்கள் இஸ்ரேலின் குடிமக்களே இல்லை நிலைக்கு வந்திருக்கிறது.  சமீபத்தில் இஸ்ரேல் நாட்டுப் பாராளுமன்றம் இஸ்ரேல், யூதர்களுக்கு மட்டுமே உரிய நாடு என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.

    ஆயிரத்து நானூறு வருடங்களாகத் தாங்கள் வாழ்ந்துவந்த தங்கள் நாடு தங்களுக்கு இல்லை என்று ஆகிவிட்டதோடு அகதிகளாக பாலஸ்தீனத்திலும் அண்டை நாடுகளிலும் வாழ்ந்துவரும் பாலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா. செய்துவரும் உதவியையும் நிறுத்தி அவர்களை முழுவதுமாகப் பாலஸ்தீனத்திலிருந்தே விரட்டிவிட அமெரிக்கா புதிதாகத் திட்டமிடுகிறது.  எல்லா சமாதானப் பேச்சுக்களிலும் அகதிகளாக வெளியே சென்ற பாலஸ்தீனர்களுக்கு அவர்களுடைய இடங்களுக்குத் திரும்பிச் செல்ல உரிமை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  இப்போது அந்த அடிப்படைக் கொள்கையிலேயே கைவைக்கிறார் குஷ்னர்.  இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண குஷ்னர் வைத்திருக்கும் திட்டம் போலும்.  பாலஸ்தீனர்கள் அனைவரையும் பாலஸ்தீனத்திலிருந்து விரட்டிவிடலாம் என்ற பென்-குரியனின் திட்டம் இறுதியில் நிறைவேறப் போகிறதா?  இஸ்ரேல் என்ற நாடு உருவான நாளிலிருந்தே பாலஸ்தீனர்கள் சொல்லவொணா துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.  அவர்களுடைய உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன.  இப்போது அமெரிக்கா பாலஸ்தீன அரசியல்வாதிகளை மிரட்டி அடிபணியவைக்க முயற்சிப்பது  அநீதியின் உச்சக் கட்டம்.

    மனித இனம் இத்தனை வளர்ச்சி அடைந்தும் என்ன பிரயோஜனம்?  ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு அளிக்கும் கொடுமையைத் தட்டிக் கேட்க ஆளில்லை.

    Share
  • மதுரையில் ஆட்டோக்காரர்கள் படுத்தும் பாடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    இரண்டு வாரங்களுக்கு முன்னால் மதுரைக்குச் சென்றிருந்தேன்.  தமிழ்நாட்டில் எங்கிருந்து மதுரைக்குச் சென்றாலும் பேருந்திலோ ரயிலிலோதான் செல்வோம்.  அங்கும் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் ஆட்டோவில்தான் போவது வழக்கம்.  இதற்கு முன் எத்தனையோ முறை மதுரைக்குச் சென்றிருந்தாலும் அங்கு ஓடும் ஆட்டோக்களில் மீட்டர் இல்லை என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டிருக்கிறேன்.  மதுரையில் பேருந்திலிருந்து கோரிப்பாளையம் திறுத்தத்தில் இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு ஓட்டலுக்குப் போகச் சொன்னோம்.  அறுபது ரூபாய் வேண்டும் என்றார் ஆட்டோ டிரைவர்.  “ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கவா அறுபது ரூபாய் என்று?” நான் கேட்டேன்.  “ஆமாம்” என்றார் டிரைவர்.  அதன் பிறகு மீட்டர் போடச் சொல்லலாமே என்ற யோசனை எனக்கு வந்தது.  பெரிய உத்தியைக் கண்டுபிடித்துவிட்டதாக நான் நினைத்துக்கொண்டிருந்தபோது “மதுரையில் ஆட்டோக்களுக்கு மீட்டரே கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று ஆட்டோ டிரைவர் கேட்டபோதுதான் மீட்டர் இருக்கும் இடம் வெறுமையாகக் காட்சியளித்ததைக் கவனித்தேன்.  “ஏன் மதுரையில் ஆடோக்களுக்கு மீட்டர் வைப்பதில்லை என்று நான் அந்த டிரைவரிடம் கேட்டு முடிப்பதற்குள் இன்னொரு சவாரியை ஏற்றிக்கொண்டு டிரைவர் சென்றுவிட்டார்.  அடுத்து வந்த ஆட்டோ டிரைவரிடமும் மீட்டர் இல்லை.  இவர்களை மீட்டர் போட வைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட நாங்கள் அவர் ஐம்பது ரூபாய் கேட்டதும் உடனேயே அவருடைய ஆட்டோவில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தோம்.  மறு நாள், அதற்கடுத்த நாள் என்று மதுரையில் இருந்த இரண்டு நாட்களிலும் எங்கு சென்றாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் இஷ்டப்படி வாடகை கேட்டார்கள்.

    மைசூரிலும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் எங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.  ஒரு முறை வீட்டிலிருந்து ஒரு இடத்திற்குச் சென்றபோது ஆட்டோ டிரைவர் நாற்பது ரூபாய் கேட்டார்.  திரும்பிவந்தபோது அதே வழியாக வந்தும் அந்த ஆட்டோ டிரைவர் ஐம்பது ரூபாய் கேட்டார்.  இருவரும் மீட்டர் போட்டிருந்தார்கள்.  அப்படியும் இவ்வளவு வித்தியாசம்!  ஐம்பது ரூபாய் கேட்ட டிரைவரிடம், “இதே தூரத்திற்குச் சவாரிபோக இன்னொருவர் இன்று காலையில் நாற்பது ரூபாய்தானே கேட்டார்.  நீங்கள் மட்டும் ஏன் ஐம்பது ரூபாய் கேட்கிறீர்கள்?  உங்கள் ஆட்டோ நம்பரை குறித்துக்கொண்டு புகார் கொடுக்கப் போகிறேன்” என்றேன்.  அவருக்குப் பயம் வந்துவிட்டது.  நாற்பது ரூபாயே போதும் என்று கூறி வாங்கிச் சென்றுவிட்டார்.

    இப்படிச் சரியான மீட்டர் வைத்துக்கொள்ளாத, ஏமாற்றும் குணம் கொண்ட ஆட்டோ டிரைவர்களோடு மல்லாட வேண்டிய சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் மைசூர் ஆட்டோ டிரைவர்கள் எவ்வளவோ நியாயமானவர்கள்; அது மட்டுமல்ல மைசூர் ஆட்டோக்கள் எல்லாவற்றிலும் மீட்டர் பொருத்தியிருப்பார்கள்.  இல்லையென்றால் அது சட்டப்படி குற்றம்.  சில சமயங்களில் ஓடாத மீட்டர் வைத்திருப்போர் இருப்பார்கள்.  அவர்களும் போலீஸ்காரர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில், ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்குள் ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.  அப்படிப்பட்டவர்களின் ஆட்டோவில் ஏறி அமர்ந்த பிறகு அவர்கள் ஆட்டோவின் மீட்டர் வேலைசெய்யவில்லை என்பதை அறிந்து ஆட்டோவிலிருந்து இறங்கிவிடுகிறோம் என்று கூறினால் நியாயமான ஒரு தொகையாகக் கேட்பார்கள்.  சரி போகட்டும் என்று விட்டுவிட்டு நாங்களும் பயணத்தைத் தொடருவோம்.

    ஒரு முறை மிக நியாயமான ஒரு ஆட்டோ டிரைவர் எங்களுக்குக் கிடைத்தார்.  ஆட்டோ டிரைவர்களில் இப்படிப்பட்டவர்கள்கூட இருக்கிறார்களா என்று அதிசயித்து அவருக்கு எப்போதையும்விட அதிக டிப்ஸ் கொடுத்தோம்.

    கர்நாடகாவில் எல்லா ஊர்களிலும் ஆட்டோக்களில் மீட்டர் உண்டு.  இதற்கு விதிவிலக்கே இல்லை.  மைசூரில் மத்திய பேருந்து நிலையத்திலும் ரயில்வே ஸ்டேஷனிலும் pre-paid auto வசதி உண்டு.  கார்ப்பரேஷனைச் சேர்ந்த ஒருவர் இருபத்தி நான்கு மணி நேரமும் பயணிகள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களுக்கு உதவுவதற்கு இருப்பார்.  பயணிகள் வரிசையில் நின்று தாங்கள் போக வேண்டிய இடத்தை கூறினால் அதற்குரிய சரியான கட்டணத்தை ஒரு கம்யூட்டர் ரசீதில் எழுதிக் கொடுப்பார்.  அதில் எங்களை ஏற்றிச் செல்லவிருக்கும் ஆட்டோவின் பதிவு எண்ணும் இருக்கும். அதை நம்மிடமே வைத்துக்கொள்ளுமாறு ஆலோசனையும் கூறப்பட்டிருக்கும்.  ரசீதில் கூறப்பட்டிருக்கும் தொகையை ஆட்டோ டிரைவரிடம் கொடுத்தால் போதும்.  ஆட்டோக்காரர்களும் வரிசையில் நிற்பார்கள்.  தங்கள் முறை வரும்போது அவர்களுக்குரிய பயணியை ஏற்றிக்கொண்டு செல்வார்கள். இப்படி முறைப்படுத்துபவர்கள் இல்லாத இடத்திலிருந்து ஆட்டோ எடுத்தால் இதே தூரத்திற்கு நூறு ரூபாய் கேட்பார்கள்.  ஆனால் பேருந்து நிலையத்திலிருந்தும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்தும் வரும் ஆட்டோ டிரைவர்களுக்கு இதே தூரத்திற்கு 75 ரூபாய்தான் கொடுக்க வேண்டும்.  எனக்குக்கூட எப்படியோ இருக்கும்,  பேருந்து நிலையத்திலும் ரயில்வே ஸ்டேஷனிலும் காத்து நிற்பவர்கள் ஏன் குறைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று.  கர்நாடகாவில் குறைந்த கட்டணம் முப்பது ரூபாய்; தமிழ்நாட்டில் குறைந்த கட்டணம் ஐம்பது ரூபாய் என்கிறார்கள்.  மேலும் கர்நாடகாவில் ஒவ்வொரு ஆட்டோவிலும் டிரைவரின் புகைப்படம், அவரின் உரிம எண், அவருடைய முகவரி, அந்த ஆட்டோவுக்கே உரிய எண் ஆகியவை இருக்கும்.

    மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்குத் தெரியாது.  பக்கத்துப் பக்கத்து மாநிலங்களான கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் ஏன் இத்தனை வித்தியாசம்?  தமிழ்நாட்டில் ஆட்டோக்களில் ஏன் மீட்டர் இல்லை என்று பலரிடம் விசாரித்தும் யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை.  பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரிடம் கேட்டபோது ஷேர் ஆட்டோவில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு – எங்கிருந்து எங்கிருந்து வேண்டுமானாலும் – பத்து ரூபாய்க்குச் செல்லலாம் என்றார். நான் கேட்ட கேள்விக்கு ஒரு பேராசிரியர் கூறும் பதிலைப் பாருங்கள்.  நான்  கேட்ட கேள்விக்கு அவருக்குப் பதில் தெரியவில்லையா அல்லது உண்மையான பதில் அவ்வளவு நன்றாக இருக்காது என்று சொல்லவில்லையா?  ஒரு பேராசிரியருக்கு கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறத் தெரியவில்லை என்று நான் நினைக்கும் அளவுக்கு ஏன் அப்படி நடந்துகொண்டார்?

    தமிழ்நாட்டைச் சேராத ஒருவர் சொன்னது: ஆட்டோக்கள் பல அரசியல்வாதிகளிடம் இருக்கின்றன; அவர்கள் வைத்ததுதான் சட்டம்.  அவர்கள் ஆட்டோக்களில் மீட்டர் வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டார்கள் என்றும் ஆட்டோ டிரைவர்கள் முடிந்த அளவு பயணிகளிடம் வசூல் செய்துகொள்ளலாம் என்றும் அரசியல்வாதிகளுக்குரிய ‘பங்கை’க் கட்டிவிட்டால் போதும் என்றும் சொன்னார்.  தமிழ்நாடு ஊழலுக்குப் பெயர்போனது என்பது எல்லோருக்கும் தெரியும்.  இருந்தாலும் மத்தியதர மக்களும் ஏழைகளும் பயன்படுத்தும் ஆட்டோக்களுக்கு மீட்டர் வைத்து ஒரு நியாயமான கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டுவரக் கூடாதா?  இதிலுமா அவர்கள் கையை வைக்க வேண்டும்?  தமிழ்நாட்டிற்கு விடிவே இல்லையா?

    உண்மையான காரணம் என்ன அல்லது இதுதான் உண்மையான காரணமா என்று யாராவது எனக்கு விளக்கினால் நன்றாக இருக்கும்.

    Share