‘ஜோக்கர்’ இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள்

2

-நாகேஸ்வரி அண்ணாமலை

சர்கார் படத்தைப் பார்த்து மிகவும் ஏமாற்றமடைந்திருந்த எனக்கு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘ஜோக்கர்’படம் மிகுந்த மன நிறைவைத் தந்தது. அதன் விமர்சனத்தைப் படித்திருந்த எனக்கு அதைப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் – அதாவது சர்கார் படத்தைப் பார்த்த பிறகுதான்– கிடைத்தது. இந்தப் படம் அமெரிக்காவில் திரையிடப்படவில்லை என்று நினைக்கிறேன். எல்லா வகையிலும் சர்கார் படத்திற்கு நேர் மாறு ஜோக்கர் படம்.

முதலில் விஜய்யின் சண்டை போடும் திறனையும் exercise dance ஆடும் திறமையையும் நம்பி சர்கார் படத்தை எடுத்திருக்கிறார்கள். எப்படியும் படம் சோடை போகாது, செலவழித்த பணம் கண்டிப்பாகத் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை எடுத்திருக்கிறார்கள். ஆனால் ஜோக்கர் படத்தில் எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லை. எல்லோரும் இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆகிறார்கள். இதுவரை ரசிகர்களுக்குத் தெரியாத நடிகர்களை வைத்துப் படம் எடுப்பதற்கு எவ்வளவு தன்னம்பிக்கை வேண்டும்! ஜோக்கரின் பட்ஜெட் மூன்று கோடியாம்! பிரபல நடிகர்களை வைத்து எடுத்தஇன்னொரு படத்தின் (சர்கார் என்றுதான் நினைக்கிறேன்) பட்ஜெட் முன்னூறு கோடி!

சர்கார் யதார்த்தத்திற்கு நேர்விரோதம் என்றால் ஜோக்கார் முழுக்க முழுக்க யதார்த்தமான படம். கழிப்பறை இல்லாத ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டிக் கொடுப்பதாக அரசியல்வாதிகள் வாக்களித்துவிட்டு எவ்வளவு ஊழல் புரிகிறார்கள் என்று காட்டுவதில் எத்தனை யதார்த்தம்! ‘இதுவரை வாழ்றதுக்குத்தான் வழியில்லாமல் இருந்தது. இப்போது பேள்றதுக்கும் வழியில்லாமல் போய்விட்டது’ என்ற வசனத்தில் எத்தனை உண்மை இருக்கிறது!

சர்கார் படத்தில் கதாநாயகன் அமெரிக்காவிலிருந்து தன் ‘படைகளோடு’ வந்து அரசியல்வாதிகளோடு சண்டை போட்டு அரசியலைச் சுத்தப்படுத்தப் பார்க்கிறாராம். ஜோக்கர் படத்தில் ஒவ்வொரு குடிமகனின் கையாலாகாத்தனமும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. வீட்டில் கழிப்பறை இல்லாதால் தன்னை மணக்க மறுத்த பெண் பின் மனம் மாறித் தன்னை மணந்துகொண்டதும் அகமகிழ்ந்து போகிறான் கதாநாயகன். ஆனால் அரைகுறையாகக் கட்டப்பட்ட கழிப்பறையே அவன் மனைவிக்கு எமனாக வாய்த்துவிட்டதும் பின் அவளுக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போனபோது மனம் பேதலித்துப் போனதும் மிகவும் இயற்கை. தன்னைத்தானே நாட்டின் ஜனாதிபதியாகக் கற்பனை செய்துகொண்டு மக்களுக்கு உதவுவதும் அல்லது உதவ முயற்சிப்பதும் அருமை. மனைவியைக் கருணைக்கொலை செய்வதற்கு அவர் அரசிடம் அனுமதி பெறுவதற்குத் திண்டாடுவதும் அவருடைய வழக்கு உச்சநீதிமன்றம் வரை போவதும் இந்தியாவில் ஏழைகள் படும் பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஒவ்வொரு இந்தியனும் படும்பாட்டையும் அவனுடைய கஷ்டங்களுக்குப் பரிகாரமே இல்லாமல் இருப்பதும் யதார்த்தமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. மக்களுக்கு நன்மைகள் கிடைக்க கதாநாயகன் செய்யும் காரியங்கள் எல்லாம் வீணாகப் போகின்றன. எதுவும் செய்ய முடியாமல் தவித்துக் கடைசியில் தன் உயிரையும் பலி கொடுக்கிறான் கதாநாயகன். கதாநாயகன் தோற்பது தமிழ் சினிமாவுக்குப் புதிது. அவனுக்கு உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளர் கடைசியில் கூறுவதுபோல் அரசியல்வாதிகளைத் திருத்தப் பாடுபடும் அவர்கள் பைத்தியக்காரர்களாகக் கருதப்படுகிறார்கள். நாட்டில் ஊழல் தொடர்கிறது; நாட்டு மக்கள் தொடர்ந்து துன்பத்துக்கு ஆளாகிறார்கள். இந்த நிலையை மாற்ற முயற்சிக்கும் செயற்பாட்டாளர்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை. இதை மிகவும் அழகாக எடுத்துச் சொல்கிறது படம்.

முப்பது மைல் பிரயாணம் செய்து பத்து டாலர் செலவழித்து சர்கார் படத்தைப் பார்த்துவிட்டு வந்தபோது மனமெல்லாம் ஏமாற்றம் நிறைந்திருந்தது. என்ன சொல்ல வருகிறார்கள் என்ற ஆயாசம். இப்படித்தான் அரசியலைச் சுத்தப்படுத்த முடியுமா என்ற வேதனை. ஆனால் பணம் எதுவும் செலவழிக்காமல் தொலைக்காட்சியில் வீட்டிலிருந்துகொண்டே பார்த்த ஜோக்கர் படம் இந்தியாவில் மக்களின் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்பதை நினைத்து மனதில் ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்தினாலும், ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற மனநிறைவைத் தந்தது. முன்னூறு கோடி ரூபாய் செலவழித்து எடுத்த படம் கொடுக்காத மனநிறவை மூன்று கோடி செலவழித்து எடுத்த படம் கொடுத்தது. தமிழக மக்கள் இம்மாதிரிப் படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திருந்தால் இம்மாதிரிப் படங்கள் இன்னும் நிறைய வந்திருக்கலாம். தமிழ்நாட்டிற்கு இன்னும் விடிவு காலம் வரவில்லையென்றே சொல்ல வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “‘ஜோக்கர்’ இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள்

  1. உண்மைதான், பார்த்தபோதே தேசிய விருதுக்கான படம் என்பதை என் உள்மனம் சொன்னது, எனது மேலதிகாரிக்கு இப்படத்தை பார்ப்பதற்கு சிபாரிசு செய்தேன், பார்த்துவிட்டு இதுவும் ஒருபடமா என்கிறார் , தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது , மௌனமாகிப்போனார் , அரசியல் வாதிகளுக்கு செம்பு தூங்குபவர்கள் ,இவ்வாறுதான் விமர்சிப்பார்கள். ஒவ்வொரு ஏழை குடிமகனும் தன்னை அந்த ஜனாதிபதியாகவே காண்கிறான்.

  2. நம்மிடையே திரைப்படம் குறித்த புரிதல் இல்லை. ஏனெனில் இங்கே படம் பார்ப்பதே தவறு. புத்தகம் படிக்க வேண்டும். திரைப்படம் குறித்து பேச, படிக்க பெற்றோர் அனுமதி கிடையாது. திரைப்படம் குறித்த அடிப்படை அறிவு இல்லாததால் தான் இன்னும் ரசிகர் மன்றம் தொடர்கிறது.. நடிகர் அரசியல் வேண்டும் என்கிறது. அரசியல் அடிப்படை அறிவும் இல்லை. என்ன செய்வான் இந்த இளைஞன்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *