யாரும் யாருக்காகவுமில்லை!
-முனைவர் ஏ. கோதண்டராமன்
துன்பம் சூழுலகில்
கைவிடப்பட்டதாகக்
கைவிடப்பட்டவர்கள் எந்தக்
கேள்விகளாலும்
வேள்வி செய்யாதீர்…
புறக்கணிக்கப்பட்டதாய்
புலம்பிப்புலம்பி
நடந்த அவமானங்களையே
நஞ்சாய்
நினைந்து வருந்தாதீர்…
இறுகப்பூட்டிய மனங்கள்
திறக்க வேண்டி
காத்திருக்காதீர்கள்..
அடைக்கப்பட்ட மனங்களின்பின்னே
பெருங்கதையிருக்கலாம்..
துன்பங்களால்
ரணப்பட்டுக்கிடக்கும்
மனிதர்களே
காலமெனும் அருமருந்தேந்தி
வரங்களால்
வாழ்க்கையை வானவில்லாக்குங்கள்..
பேரன்பென்ற
பெருங்கானகத்தீயில்
யாரையும் தேடாதீர்கள்…
இனி
உன்னிடம் வரப்போவதில்லையென
வாக்குமூலத்தால்
கண்ணீர்த்ததும்ப
நீயின்றி நானில்லையென
வேதாந்தம் பேசி
வாழ்க்கையைத் தொலைத்து
வீழ்ந்தே பழகாமல்
எழுந்து பழக்கப்படு!
யாரும் யாருக்காகவுமில்லை..
பெயர்: முனைவர் ஏ. கோதண்டராமன்
உதவிப்பேராசிரியர்-தமிழ்த்துறை,
அ. மா. ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம்,
சென்னை – 600 114.
Email: ekraman36@gmail.com.