Tag: புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்

  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 24

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 24

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    கருத்துக்களே உவமமாகும் கவிதைகள்

    முன்னுரை

    கவிதைகளில் உவமை அமையும் பாங்கு பற்றி ஆராயும் தொல்காப்பியம் ஒரு இன்றியமையாக் குறிப்பினைத் தருகிறது. சில நேர்வுகளில் விளக்கப்பட வேண்டிய கருத்து அல்லது பொருள் உவமையாகிவிடக்கூடும். அவ்வாறு அது உவமையாகச் சொல்லப்படுங்கால் அதனை உவமமாகவே கொள்ள வேண்டுமேயன்றி உபமேயமாக அதாவது பொருளாகக் கருதி மயங்குதல் கூடாது. உவமம் அகத்திணைக்கே உரியது என்பது தொல்காப்பியம் காட்டும் தமிழ்க்கவிதைக் கோட்பாடு. அகம், புறம் என்னும் பொருள் வரையறையின்றி உவமம் பொது ஆளுகைக்கு உட்பட்டது தொல்காப்பிய நெறியின் நெகிழ்ச்சியாகவே கருத வேண்டும். இதன் தொடர்ச்சியாக அல்லது வளர்ச்சி நிலையாக ஒரு கருத்தே  மற்றொரு கருத்து விளக்கத்திற்கு உவமமாக அமைந்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. எனவே பொருளுக்கு உவமம், பொருளே உவமம், பொருளுக்கு மற்றொரு பொருளே உவமம்  என்னும் மூன்று நிலைகளைக் காணலாம். இதில் ‘கருத்துக்குக் கருத்து உவமம்’ என்னும் மூன்றாம் நிலையைப் பற்றிய சில கருத்துக்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    உவமங்களின் படிநிலை வளர்ச்சி

    உவம வகைகளையும் அவற்றின் நிலைக்களங்களையும் அதாவது எந்தச் சூழலில்  உவமம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் துல்லியமாக ஆராய்ந்திருக்கும் தொல்காப்பியம், பொருளையே உவமமாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறது. படைப்பிலக்கியக் கூறுகளைப் பற்றி ஆராயும் ஆய்வறிஞர்களின் வியப்புக்குக் காரணமான அமைப்பு இது. சிங்கம் போலப் பாய்ந்தான் என்றால் சரி. ‘இவனைப் போலச் சிங்கம் பாய்ந்தது’ என்றால் அது புதுமை. சிந்தனை மாற்றத்தின் வெளிப்பாடு. இதற்குத் தொல்காப்பியம் ஏற்பளித்திருக்கிறது.

    பொருளே உவமம் செய்தனர் ஆயினும்
    மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்

    என்னும் நூற்பா மேற்கண்ட கருத்தை உறுதி செய்யக் கூடும். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே தொல்காப்பியர் இந்நூற்பாவை அமைத்திருக்க வேண்டும். ‘இருதிணைப் பொருள்களுள் இவையெல்லாம் உவமமாக வரும்., இவையெல்லாம் பொருளாக வரும்’ என்னும் வரையறை தமிழில் இல்லை. கவிஞனின் சிந்தனைப் போக்குக்கு ஏற்றவாறு அமையும் உத்தி அது.

    வருமுலை யன்ன வண்முகை உடைந்து
    திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை” 

    என்னும் சிறுபாணாற்றுப்படை வரிகளில் ‘வருமுலையன்ன வண்முகை’ என உவமம் பொருளானது காணலாம். கவிஞன் நோக்கில் வண்முகை பொருளானதே இதன் காரணம்.

    அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
    மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
    பூக்கொய் மகளிரின் தோன்றும்

    ‘அணங்குகொல்? ஆய்மயில் கொல்? எனத் தலைவிக்கு மயிலை உவமிப்பதும் உண்டு. மேற்கண்ட குறுந்தொகைப் பாடலில் கண்டுள்ளவாறு மயிலுக்குப் பூக்கொய்யும் பெண்ணை உவமமாக்குவதும் உண்டு. திருக்குறள் தலைவிக்கு மயில் உவமமானால், குறுந்தொகை மயிலுக்குப் பெண் உவமமாகிறாள்.  மயில் உவமையாகத்தான் வரவேண்டும்., பெண் பொருளாகத்தான் வரவேண்டும் என்னும் கட்டுப்பாடு தமிழில் இல்லையென்பதற்கு இவை போல்வன போதுமான சான்றுகளாகலாம்.

    ஈரோட்டுப் பெரியாரின்  சட்டைபோல
    இருண்ட கடல், அண்ணாவின் பேச்சைப் போல
    நீரோட்டம்., சாண்டில்யன் கதையைப் போல
     நீண்டமலை

    ஆகியவை எல்லாம் நிலவில் இருப்பதாகக் கற்பனை செய்கிறார் கவிஞர் சுரதா.  நிலவுக்குக் கவிஞர் சென்றதே கற்பனையில்தான். கற்பனை நிலவில் அவர் கண்ட கடலின் கருப்புக்குத் தந்தை பெரியாரின் கருப்புச் சட்டைதான் நினைவுக்கு வந்திருக்கிறது. அங்கே இருந்த நீரோட்டத்தைக் கண்டவுடன் பேரறிஞர் அண்ணாவின் ஆற்றொழுக்கான பேச்சு அவருடைய நினைவுக்கு வந்திருக்கிறது. மலைத்தொடர்களைக் கண்டவுடன் சாண்டில்யன் கதை நினைவுக்கு வந்திருக்கிறது. அறிந்தவற்றைக் கொண்டு அறியாதனவற்றிற்கு உவமை சொல்ல வேண்டுதலின் இங்கே பொருள்கள் உவமமாகின்ற நிலைப்பாட்டைக் காணமுடிகிறது. சுரதாவுக்குப் பெரியாரின் சட்டை தெரியும். அண்ணாவின் பேச்சறிவார். சாண்டில்யன் நாவலையும் அறிவார். ஆனால் நிலவும் அதன் அமைப்பும் தெரியாது. கற்பனையில் மட்டுந்தான் தெரியும் என்பதால் உவமங்கள் இப்படி அமைந்திருக்கின்றன.

    கருத்துக்கு உவமம் கருத்தே

    பொருளுக்கு உவமம் அல்லது கருத்துக்கு உவமம் என்பதைத் தெளிவாக்கிக் கொண்டால்தான் கருத்துக்குக் கருத்து உவமம் எப்படி அமைகிறது என்பதைத் தெளிவாக்கிக் கொள்ள இயலும். சான்றாகத்,

    தீயவை  செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயாது அடி உறைந்தற்று

    என்பது ஒரு குறட்பா. தீயவற்றைச் செய்பவன் கெடுவான். இது உறுதி. இந்த உறுதிக்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்துகிறார் திருவள்ளுவர். நடந்து செல்கிறவனுடைய நிழல் அவனுடைய அடிக்குள்ளே சென்று அடங்குவது போல. அதாவது அவனுடைய நிழல் அவனுக்குள்ளே அடக்கம்! தீவினை நிழல் போன்றது. வினைப்பயன் செய்தவனையே சென்று சேரும். இந்தக் கருத்தினை விளக்குவதற்கு அடிக்குள் நிழல் மறைவதை உவமமாக்குவதுதான் பொருளுக்கு உவமம்.  இப்போது இந்த உவமத்திற்குப் பதிலாக இன்னொரு கருத்தினையே உவமமாக்குவது. அது எப்படி? இப்படி!

    இன்மையுள் இன்மை விருந்து ஓரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை

    இதுவும் ஒரு குறட்பா. பொதுவாக நாம் பற்றாக்குறையை வறுமை என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் இதன் பரிமாணத்தை இன்னும் கூடுதலாக்குகிறார். அதாவது ஒரு பண்பாடு முற்றிலும் அழிகிற அளவுக்குப் பொருளாதாரத்தில் ஒருவன் சந்திக்கின்ற நிலையே வறுமை என்கிறார். ‘விருந்தோம்பல்’ என்பது தமிழர் பண்பாடு. ஒரு அதிகாரத்தையே இதற்காக ஒதுக்கிப் பேசுகிற அளவுக்கு அது உயர்ந்த பண்பாடு. வீட்டிற்கு வந்த விருந்தினரை அவர் வருவது எந்தப் பொழுதாயினும் விருந்தோம்புவது கடமை. அக்கடமையைச் செய்ய முடியாது தவறுகிற நிலையே உண்மையான வறுமை நிலை. இது ஒரு கருத்து.

    ‘பொறுமை’ என்பது பொறுமையாக இருப்பதல்ல. பிறர் ஏசுவதைப் பொறுத்துக் கொள்வது என்பது சாதாரணம். திருவள்ளுவர் இதன் பரிமாணத்தைக் கூடுதலாக்குகிறார். பேசுகிறவனை வைத்து அந்தப் பொறுமையை அளவிடுகிறார். பொறுமை எப்போது சிறக்கிறது என்றால் அதாவது எது பொறுமை என்றால் அறிவற்ற பேதையர் சொல் பொறுக்கிற நிலைதான். அறிவற்ற பேதையர் பேசுகிறபோது நமக்குச் சினம் வரும். தாக்கலாமோ என்ற எண்ணம் வரும். துரியோதனன் அவையில் திருதராட்டிரன் செய்த செயலைத் தருமன் பொறுத்துக் கொண்டது போல. எனவே சாதாரண மக்களையோ அறிவாளிகளையோ பொறுத்துக் கொள்வது பொறுமையாகாது. பேதைகளைப் பொறுத்துக் கொள்வதுதான் பொறுமை. இது ஒரு கருத்து.

    இப்போது குறட்பாவை நோக்கினால் இரண்டு கருத்துக்கள் அதாவது இரண்டு வாழ்வுண்மைகள் புலப்படும். இரண்டு கருத்துக்கள் இரண்டு உவமங்கள் என்பதைப் பெற முடியும்.

    1. விருந்தோம்ப இயலாத நிலை வறுமையுள் வறுமை என்பது போலப் பேதையரைப் பொறுத்துக் கொள்ளுதலே பொறுமையாகும்.
    2. பேதையரைப் பொறுத்துக் கொள்ளுவதே பொறுமை என்பது போல விருந்தோம்ப இயலாத நிலையே வறுமையுள் வறுமை எனப்படும்.

    இந்த நுட்பத்தைப் பதிவு செய்ய வேண்டியே இவ்விரண்டு கருத்துக்களையும் ஒன்றற்கொன்று உவமமாக்கிக் கொள்ளுமாறு அமைத்துக் காட்டுகிறார்.  தனித்தனி உவமங்கொண்டு விளக்கினால் இரண்டு கருத்துக்கள் அவற்றுக்கான உவமங்கள் இரண்டு என படைப்பு விரியும். அணுவைத் துளைத்து உலகியல் சொன்ன திருக்குறளுக்கு இது பொருந்தாது அல்லவா? எனவே இதற்கு அது உவமம். அதற்கு இது உவமம் என்றாயிற்று என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாழ்வுண்மைகளைத் தொடர்ச்சியாக  வலியுறுத்திக் கொண்டே வருவதே நீதிநூல்களின் வெளிப்பாட்டு உத்தியாதலின் இத்தகைய கருத்துக்குக் கருத்தே உவமம் என்னும் நெறி பின்பற்றப்பட்டுள்ளது எனவும் அனுமானிக்கலாம்.

    உடலை விரும்பும் உயிரும் சூதினை விரும்பும் சூதனும்

    உடலுக்கு உணர்ச்சியில்லை. உயிருக்குத்தான் உணர்ச்சி. அந்த உயிர்தான் எல்லாவற்றையும் உணர்கிறது. எல்லா உணர்வுகளும் சுவைகளும் உயிருக்கானதே. பிணத்துக்கு இனிப்பு தெரியாது. கசப்பு புரியாது. இத்தகைய சிறப்புடைய இந்த உயிர், சிறப்பே இல்லாத உடலை விரும்புகிறது! உடலுக்கு நோய்வந்த போதும் அது அறுக்கப்படும்போதும் அது அழுகும் போதும் உயிர் அழுகிறது! கண்ணீர் உயிர்த்துடிப்பு! உயிரின் வெளிப்பாடு! எனவே எவ்வளவுதான் துன்பத்தில் உழன்றாலும் உயிர் உடலை விரும்புகிறது என்பது பெறப்படும்.  இந்தக் கருத்து அதாவது உவமேயம் விளக்கப்படல் வேண்டும்!. கருத்தைக் கருத்தாகவே சொன்னால் விளக்கம் பெறுவதைவிட உவம வாயிலாகச் சொன்னால் கூடுதல் விளக்கம் பெறப்படும். அதனால் திருவள்ளுவர் மற்றொரு கருத்தினை உவமமாக்குகிறார்.

    சூது விளையாடுபவன் இழப்பான்!. ‘இழப்பு வருகிறது வேண்டாம்’ என்றால் ‘விட்டால்தான் பிடிக்க முடியும்’ என்பான். நாம் கவனித்திருக்கிறோம். இழப்பு என்பது நன்கு தெளிவாகத் தெரிகிறது.  ஆனால் அதன் மேல் வைத்த காதலைச் சூதனால் விட முடியவில்லை. இது உவமம். திருவள்ளுவர் எழுதுகிறார்,

    இழத்தொறும் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழத்தொறூஉம் காதற் றுயிர்

    ‘எத்துணைதான் துன்பம் வந்தாலும் உடலையே விரும்பும் உயிரைப்போல், எவ்வளவுதான் இழந்தாலும் சூதன் சூதினையே விரும்புவான்’ என்பது மேற்கண்ட குறட்பாவின் கருத்தாகும். உடல்நலம் வலியுறுத்தும் மருந்துக்குச் சற்றும் தொடர்பில்லாத சூதினை ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் உவம அளவையால் திருவள்ளுவர் வலியுறுத்துவதைக் காணலாம்.

    உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார்.”

    என்பது பரிமேலழகரின் உரை நுட்பம். அழியக் கூடிய உடம்பின் மீது காதல் கொள்ளுவது உயிரின் அறியாமை. இழப்புக்குக் காரணமாகும் சூதின் மேல் காதல் கொள்ளுவது சூதனின் அறியாமை. இதுதான் அழகர் உரையின் சாரம்.

    குறைந்தால் இன்பம் கூடினால் துன்பம்!

    அளவாக உண்ணுதல் நோய்க்குத் தடை. உடல் நலத்திற்கு நன்மை. உடல் நலம் பேணுவார்க்கு இது ஒரு கருத்து. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதால் அளவாக உண்ணுதல் செல்வம் சேர்வதற்குக் காரணி என்பது பெறப்படும். படவே வாழ்வுக்கு அது இன்பம் என்பதும் பெறப்படும். ஆகக், ‘குறைவு நலம்பயக்கும்’ என்பது அறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைபெறும். இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் உவமமாக்கியிருக்கிறார். ஆக்கி, அதற்கு எதிர்மறையான கருத்தினையே உவமேயம் ஆக்கியிருக்கிறார். வெகு நுட்பமான அணுகுமுறை இது! குறைவுக்கு எதிர்மறை நிறைவு! இது பெருநிறைவு! அதாவது அளவுக்கு மிக அதிகமாக உண்பது. ‘பேரிரை’ உண்பவனுக்கு நோய் உறுதி என்பது சொல்லாமலே பெறப்படும். எனவே செல்வம் சேராது. இது பொருளாகிய உவமேயம். திருவள்ளுவர் எழுதுகிறார்,

    இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேரிரையான்கண் நோய்

    இதற்குச் சிறப்புரை எழுதிய பரிமேலழகர் ,“விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு” என எழுதிக்காட்டும் விளக்கம் உவமமும் பொருளுக்குரிய சிறப்பைப் பெறுகிறது என்பதை விளக்குகிறது. ‘இழிவறிந்து உண்’ என்பது விதி. ‘கழிபேரிரை உண்ணாதே’ என்பது எதிர்மறை. இரண்டின் கருத்தும் ஒன்றாகலின் ‘இரண்டானும் பெறுதற்கு’ என்று கூறினார். அதாவது விதியால் எதிர்மறையைப் பெறவேண்டும். எதிர்மறையால் விதியைப் பெறவேண்டும். இவ்வாறு ஒரு கருத்தை மற்றொரு கருத்துக்கு உவமமாக்கும் போக்கு, இன்றைய புதுக்கவிதை உலகிலும் நிலைபெற்றுள்ளது சுட்டத்தகுந்தது.

    தேசத்தைப் போலவே   
    நம் வாழ்க்கையும்
    இன்று
    தெருவில் நிற்கிறது

    எனக் காதலன் ஒருவன் கூறுவதாக அமைந்த கவிதை வாரிகளில் முச்சந்திக்கு வந்த காதலுக்குத் தெருவுக்கு வந்துவிட்ட தேசத்தின் சிறுமை உவமமாக்கப்படுகிறது.

    தேசமும் காதலும்

    தனிமனிதனின் ஒழுகலாறுகள் சமுதாயத்தின் போக்கையும் சமுதாயத்தின் போக்கு தனிமனிதனையும் பாதிப்பது இயல்பு. ‘காதல்’ என்பது ‘உயிர்த்துடிப்பு’ என்ற நிலையிலிருந்து கீழிறங்கிச் சமுதாயச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது என்ற நிலைப்பாட்டினாலும், பருவக்கிளர்ச்சி எனக் கருதப்பட்டதாலும்,  ‘திருமணத்தின் தொடக்க நிலை’ எனக் கருதாது, ‘தனித்ததொரு வாழ்வியல் கூறு’ என்னும் கருத்தியல் மேலோங்கி நிலைத்துப் போனதாலும் ‘முழுமையடைந்த காதல்’ என்பது எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளது. சங்க அகவிலக்கிய மரபிலிருந்து தமிழின் எந்த ஒரு மரபுநிலைத் தொடர்ச்சியும் காதலைத் ‘தனித்ததொரு வாழ்வுநிலை’ எனக் கருதியதற்கான சான்றில்லை.

    ‘வணங்கத்தக்க தேசத்தின் பெருமை முச்சந்திக்கு வந்ததுபோல’ என்னும் உவமையால், ‘உயிரின் பெருமை கூற வேண்டிய காதலும் சமுதாயத்தின் கேலிக்கு ஆளாகித் தெருவுக்கு வந்துவிட்டது’ என்னும் கருத்து விளக்கமுறுவதைக் காணலாம். ‘தேசம் தெருவுக்கு வந்துவிட்டது’ என்பதும் ஓர் உண்மை. ‘காதல் தெருவுக்கு வந்துவிட்டது’ என்பதும் ஓர் உண்மை. ஓருண்மையே பிறிதொரு உண்மைக்கு உவமமாகியிருப்பது அதாவது ஒரு கருத்தே மற்றொரு கருத்திற்கு உவமமாகியிருப்பது புதுக்கவிதை வரையிலும் தொடர்கிறது என்பது இதனால் புலப்படலாம்.

    நிறைவுரை

    வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு வகையாகச் சிறப்பு, நலன், காதல், வலி, கீழ்மை என்னும் ஐந்து நிலைக்களன்களில் பரிமாறப்படும் கவிதை உவமங்கள் அப்படியே தேங்கிவிடாமல்  விரிவடைந்து கொண்டே வந்திருக்கிறது., முற்சொன்ன நான்கு வகையாக அமைந்த உவமங்கள் என்பது முதல் நிலை. அவை விளக்கும் பொருள்களே உவமமாக அமைந்தது அடுத்த நிலை. இவையிரண்டனையும் கடந்த நிலையில் கருத்துக்கு மற்றொரு கருத்தே உவமம் என்னும் நிலை தமிழ்க்கவிதைகளின் உவமக் கொள்கைகளின் கொடுமுடி எனலாம். மானுடம் சிறக்க வந்த தமிழிலக்கியங்களுக்கான வரையறையைத் தரும் தமிழிலிலக்கணங்கள் வளர்ச்சி மற்றும் புதுமைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் உடையன என்பதை இதனால் உணர்ந்து கொள்ள இயலும்!

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 23

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 23

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘ஒன்றுக்குப் ‘பத்தான’ உவமங்கள்

    முன்னுரை

    ஒரு பொருளுக்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்தியதுதான் தமிழ்க்கவிதைகளின் தொடக்கக் கால உவமக் கோட்பாடு. ‘யானை போலப் பிளிறினான்,  வேங்கைபோலப் பாய்ந்தான், அரிமா போல முழங்கினான் என ஒரு வினைக்கு மற்றொரு வினையை உவமமாக்குவதும் மங்கையின் மருட்சிக்கு மானின் பார்வையையும், தோளுக்கு மூங்கிலையும், கழுத்துக்குச் சங்கையும், கண்ணுக்குக் குவளையையும், முகத்துக்குத் தாமரையையும், கூந்தலுக்கு மேகத்தையும், பல்லுக்கு முல்லையையும், பாதத்துக்கு நாய் நாக்கையும் உவமையாக்குவதை மரபாகக் கொண்டு விளங்குவது தமிழ்க்கவிதை உலகம். ஆனால் இதே கவிதையுலகத்தில் இன்னொருவகை உவமக்கோட்பாடும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஒன்றுக்கு மற்றொன்றை உவமையாக்குவது மட்டுமன்று ஒன்றுக்கு ஒரே நேரத்தில் பலவற்றை உவமையாக்கும் போக்கையும் தமிழ்க்கவிதை உலகம் அறிந்திருந்தது. பொருளாயினும் உணர்ச்சி வெளிப்பாடாயினும் பொருள் முற்றவும் புலப்படவும் உணர்ச்சி முற்றவும் வெளிப்படவும் கவிஞர்கள் ஒரு பொருளுக்குப் பல உவமைகளைப் பயன்படுத்தியும், ஒருநேர உணர்ச்சிக்குப் பலவகையான உவமைகளைப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். மரபுவழியாக வளர்ந்துள்ள இவ்வுவமக் கோட்பாட்டைச் சில எடுத்துக்காட்டுக்களால் இக்கட்டுரை விளக்குகிறது.

    தலைவனுக்கு உவமங்களான தலைவி

    தலைவியின் நலம்பாராட்டும் தலைவன் கூற்றாக அமைந்திருக்கும் குறட்பா ஒன்று தலைவியின் பேரழகைப் படம்பிடித்துக் காட்டும்.

    முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
    வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு.”

    என்னும் குறட்பாவில் தலைவியை முழுமையாகக் கட்புலனுக்குக் கொண்டுவரும் தலைவன் ஐந்து உவமங்களைத் தொகுத்துச் சுட்டுவதை அறியலாம். தலைவியை வேய்த்தோளவள் என்றே நோக்குகிறான். ‘வேய்த்தோளவட்கு’ என்னும் தொடருக்குப் ‘பெயரடையானும் ஓரியல்பு கூறப்பட்டது’ என்னும் ஆசிரியர் பரிமேலழகரின் உரைநுட்பம், தலைவியை எக்காலத்தும் உவமித்து ஒப்புநோக்கும் தலைவனின் மனநிலையைச் சுட்டிக்காட்டுவதை உணரமுடியும்.

    மகளுக்கும் தாய்க்குமுள்ள உறவு

    தனக்கு இனிப்பான தலைவியை உவமங்களால் காணும் தலைவனைப் போலவே, தனக்குப் பயன்படாத மகளை எண்ணி மருகும் தாயையும் தமிழ்க்கவிதை உலகம் கண்டிருக்கிறது. உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிச் சுரம் நாடிச் சென்ற செவிலியை நோக்கியுரைக்கும் அறிவில் முதிர்ந்த அந்தணர் உரையில்,

    பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
    மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என் செய்யும்?
    சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
    நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என் செய்யும்?
    ஏழ்புணர் இன்னிசை முரல்பவரக்கு அல்லதை
    யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என் செய்யும்?”

    எனப் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமங்கள் தலைவி தலைவனோடு கூடிய இல்லறக் கடமைக்கு உரியவளேயன்றிப் பெற்ற காரணத்தாலேயே பெற்றவளுக்குப் பயன்பட வேண்டும் கடப்பாடில்லை என்னும் நடைமுறை உண்மையை உணர்த்தி நிற்கின்றன. பாலை நிலத்;தில் கலங்கிக் கையற்று நிற்கும் தாய்க்கு உணர்த்த வேண்டிய உண்மை ஒன்றாயினும், உவமங்கள் பலவாய் நின்று உணர்ச்சியின் கன அளவை மிகுவித்துக் காட்டுவதைக் காணலாம். இல்லறக் கடமை தொடங்கும் போது பிறந்த இடத்துப் பாசம் பின்னுக்குச் சென்றுவிடுகிறது என்னும் வாழ்வுண்மையை உணர்த்துதற்கும் இவ்வுவமைகளின் பங்களிப்புச் செம்பாகம் அன்று., பெரிது.

    கண்ணகிக்கு இளங்கோ காட்டும் உவமைகள்

    ‘செந்தமிழ்ச் செல்வியும் சிலப்பதிகாரத் தலைவியுமான’ கண்ணகியை அறிமுகம் செய்யும் கவி இளங்கோ, அவளுடைய தோற்றப்பொலிவுக்கும் கற்பு மாண்புக்கும் தனித்தனியான உவமங்களைக் கூறியிருக்கிறார்.

    போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
    தீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும்
    மாதரார் தொழுதேத்த

    புறஅழகு நிரம்பியவள் கண்ணகி என்பதைக் கருதித் திருமகள் அழகையும் கற்பு மாண்பிற்கு அருந்ததியின் கற்பையும் உவமமாக்கியிருக்கிறார். ‘பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை’ என மாதவியைப் பின்னாலே அறிமுகம் செய்ய இருப்பதால்  கண்ணகி பிறப்பினாலும் பண்பினாலும் குறைபாடுடையவள் அல்லள் என்பதைப் புலப்படுத்துதற்காக அவளுடைய கற்பு மாண்புக்கு அருந்ததியை உவமமாக்கியிருக்கிறார்.

    பாஞ்சாலிக்கு வளர்ந்த சேலை

    பஞ்ச நதிகள் ஓடுகிற நாட்டில் பிறந்தவள் பாஞ்சாலி. பாரதத்தில் பஞ்சபாண்டவருக்கு யாகபத்தினியாகத் திகழ்ந்தவள். துரியோதனன் அவையில் அவள் மானபங்கப்படுத்தப்பட்ட பொழுது கோவிந்தன் அருளால் அவளுக்குப் புடவை வளர்ந்த நிலையை விவரித்துக் காட்டும் நிலையை மகாகவி  ஐந்து உவமங்களால் காட்சிப்படுத்துவதைக் காணமுடிகிறது.

    பொய்யர்தம் துயரினைப் போல்நல்ல
    புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்
    தையலர் கருணையைப் போல் –  கடல்
    சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல்
    பெண்ணொளி வாழ்த்திடுவார் அந்த
    பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல்
    கண்ணபிரான் அருளால்தம்பி
    கழற்றிடத் கழற்றிடத் துணி புதிதாய்
    வண்ணப் பொற்சேலைகளாம்அவை
    வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே

    இவ்வுவமைகள் வழிப் பாஞ்சாலியைத் தவம் பெற்ற தையலாகவே பாரதி நோக்கியிருக்கிறான் என்பதும், அவளைச் சாதாரண கவிதைப் பொருளாகவோ காப்பியப் பாத்திரமாகவோ எண்ணவில்லை என்பதும், ‘பொருளுக்கு உவமை’ என்னும் இயல்பான கவிதை அளவுகோலால் அவளை அளக்கவில்லை என்பதும் ஒன்றுக்கும் மேற்பட்ட உவமங்களால் அவள் சார்ந்த நிகழ்வுகளைச் சித்திரிப்பதே அவருடைய உட்கிடக்கை என்பதும் அனுமானத்தால் உணரத் தக்கதாகும். மேற்கண்ட உவமத் தொடர்களில் ‘பொய்யர்தம் துயரினைப்போல்’ என்பது குறிப்பிடத்தக்கது. பாஞ்சாலிக்குச் சேலை வளர்ந்தது அழகியல். பொய்யர்களுக்குத் துன்பம் வளர்வது அறவியல். அழகியல் சார்ந்த கவிதைப் பொருளை விளக்குதற்கு அறவியல் சார்ந்த வாழ்வுண்மை ஒன்றை உவமமாக்குவதும் தமிழ்க்கவிதைகளில் காணப்படும் உவமக் கோட்பாடுகளில் ஒன்று.

    தமிழுக்கும் தனக்குமுள்ள உறவு

    பாரதியைக் குருவாக ஏற்றுக்கொண்ட பாரதிதாசன் தமிழையும் தன்னையும் பிரித்தறிய இயலாமல் பின்னிக் கிடந்தவர். அவருக்கு முன்னாலும் பின்னாலும் அவர் போலத் தமிழ் பாடியவர் எவருமிலர் என்று துணிந்து சொல்லலாம். மொழியை உயிருக்கு நிகராக அவர் கருதியிருக்கிறார் என்பதைச் ‘செந்தமிழே உயிரே’ என்பது போன்ற வரிகளால் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அதனை இயற்கையின் அழகுக் கூறுகளில் ஒன்றாகவும் அவர் கருதினார் என்பது, அவருடைய ‘அழகின் சிரிப்பு’ என்னும் நூலின் இறுதியாகத் தமிழைப் பாடியிருப்பதால் உணர முடியும். அத்தகைய தமிழுக்கும் தனக்கும் உள்ள உறவை,

    “வெண்ணிலாவும் வானும் போலே
    வீரனும் கூர்வாளும் போலே
    வண்ணப்பூவும் மணமும் போலே
    மகர யாழும் இசையும் போலே
    கன்னல் தமிழும் நானும் அல்லவோ?”

    என்னும் வரிகளால் புலப்படுத்திக் காட்டுகிறார்.  ஒன்றையொன்று பிரிக்க இயலாது என்பதற்கும் பிரிந்திருக்க இயலாது என்பதற்கும் பிரித்தால் பயனில்லை என்பதற்கும் ஒன்றின்றி மற்றொன்றில்லை என்பனவுமான கவிஞனின் உள்ளக் கிடக்கை முழுமையும் இவ்வுவமைகளால் வெளிப்பட்டு நிற்கின்றன என்பதைக் காணமுடியும்.

    உவமங்களால் அமைந்த தின்பண்டங்கள்

    குழந்தைகளுக்குப் பிடித்தமானவை இரண்டு. ஒன்று விளையாட்டு. மற்றொன்று தின்பண்டம். ‘தின்பண்டம்’ என்னும் சொல்லே அதன் தொடர். வினையைக் குறிப்பதைக் காணலாம். தாயொருத்தித், தூங்காத தன் பெண் குழந்தையைத் தூங்க வைக்கச், செய்து தருவதாகச் சொல்லும் தின்பண்டங்களின் நிரலைப் பாவேந்தர் அடுக்கிக் காட்டுகிறார்.

    ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித்
    தேனில் துவைத்தெடுத்துத் தின்னென்று தாரேனோ?
    கொட்டித் தும்பைப்பூ குவித்ததுபோல் உன்னெதிரே
    பிட்டு நறுநெய்யில் பிசைந்து வைக்க மாட்டேனா?
    குப்பை மணக்கக் குடித்தெருவெல்லாம் மணக்க
    அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா?
    மீன் வலை சேந்தும் கயிற்றை வேய்ந்த வளையம்போல்
    தேன்குழல் நான்பிழிந்து தின்னத் தாரேனா?
    விழுந்துபடும் செங்கதிரை வேல்துளைத்ததைப் போல்
    உழுந்து வடை நெய்யொழுக உண்ணென்று தாரேனா?
    தாழையின் முள்போல் தகுசீரகச் சம்பா
    ஆழ உரலில் இடித்த அவலைப்
    கொதிக்கும் நெய்தன்னில்தான் கொட்டிப் பொறித்துப்
    பதக்குக்கு ஒருபதக்காய் பாகும் பருப்புமிட்டே
    ஏலத்தைத் தூவி எதிர்வைக்க மாட்டேனா?”

    பாவேந்தர் பட்டியலிடும் தின்பண்டங்களுக்கான உவமைகள் இயற்கையைச் சார்ந்தும் குழந்தைகளின் உள்ளங் கவர்வனவாகவும் இருப்பதோடு தின்பண்டங்களின் பக்குவத்தையும் பறைசாற்றுவதாக உள்ளன என்பதை அறியலாம்.

    ஒரே செயலுக்குப் பல உவமைகள்

    ஒரு பொருளுக்குப் பல உவமைகளைத் தொகுத்துச் சொல்லும் மரபைப் பின்பற்றி ஒரே வினைக்குப் பல உவமங்களை அடுக்கிக் காட்டி உள்ளத்தில் பதிய வைக்கின்ற முயற்சியும் தமிழ்க்கவிதைகளில் காணக்கிடக்கிறது.

    சிறுகுன்றை வெண்மேகம் மூடல் போலும்
    சிலைதன்னைத் துகில் கொண்டு மறைத்தல் போலும்
    இருகுன்றம் தலைகீழாய்க் கவிழ்ந்து பூமி
    இடைச்செல்ல முயல்கின்ற காட்சி போலும்
    மருவொன்றும் இல்லாத தந்தப் பேழை
    வைரத்துட் புதைந்துள்ள தன்மை போலும்
    ஒருஅன்றில் மற்றொன்றைச் சிறகு கொண்டே
    ஒருவர்க்கும் தெரியாமல்  மறைத்தல் போலும்

    ஒருமேனி மற்றொன்றில் ஒடுங்கிப் போக,
    ஒருவர்தான் மற்றொருவர் எங்கே என்று
    புரியாமல் பார்ப்போர்கள் அதிச யிக்கப்
    புனலோடு புனலாக அவனைக் கன்னி
    தெரியாமல் மறைத்துத்தன் தேனு தட்டைத்
    தேய்க்கின்றாள் தேய்க்கின்றாள் மாறி மாறி
    இரைகொண்ட கோழிதன் மூக்கைக் கல்லில்
    இப்படியும் அப்படியும் தேய்த்தல் போலே

    என அமைந்திருக்கும் கண்ணதாசன் பாடல் வரிகள் அகத்திணை நிகழ்வை ஏழு உவமங்களால் காட்சிப்படுத்தியிருக்கிறது. இது அகவிலக்கண மரபுக்கு மாறுபட்டிருக்கிறது என்பதைக் காட்டிலும் மரபுக்கு ‘ஊட்டச்சத்து’ வழங்கியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

    எப்படியெல்லாம் மழை பெய்கிறது?

    மொழி தெரிந்த யாருக்கும் எந்த நிலையிலும் மரபின் தாக்கம் இருக்கத்தான் செய்யும். அது தாய்வழிப் பண்பு போன்றது. ஒரு சாதாரண திரையிசைப் பாடலில் கூட அந்த உவம மரபு அமைந்து விடுவதைக் காணலாம். காதலர்கள் மழையில் நனைகிறார்கள். அவர்கள் மழையைப் பற்றிப் பாடியிருக்கலாம் அல்லது தங்கள் காதலின் தண்மையைப் பறறிப் பாடியிருக்கலாம். இங்கே குறிப்பிடப்படுவது மழையில் நனைந்து காதலர்கள் பாடுவது மரபன்று. உவமத் தோரண மரபே சுட்டப்படுகிறது.

    கஷ்டப்படும் ஏழை சிந்தும்
    நெற்றி வேர்வை போலே
    அவன் கஞ்சிக்காகக் கலங்கிவிடும்
    கண்ணீர்த்துளியைப் போலே
    முட்டாப் பயலே மூளையிருக்கா
    என்று ஏழை மேலே
    துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக்
    கொட்டுற  வார்த்தை போலே

    வழிகிற வேர்வை, வழிகின்ற கண்ணீர் கொட்டுகிற சொற்கள் இவற்றின் வேகம் உண்மையில் மழையின் கொட்டுகிற வேகத்தைவிடக் குறைவுதான்!, கவிதையல்லவா?, படைப்பாளன் என்ன செய்கிறான்? உவமத்திற்குத் தரவேண்டிய உயர்ச்சியை உவமத்தைக் கொண்டு பொருண்மையின் அடர்த்தியை மிகுவிக்கின்றான். சரியா? ‘மழை போல அழுதான், மழைபோலப் பேசினான், மழைபோல வேர்வை’ என்றால் உவமம் இயல்பான நிலையில் பயன்படுத்தப்பட்டு உவமங்களின் கோவையாக நின்றுவிடும். மாறாக, வேர்வைப்போல் பெய்தது, கண்ணீரைப்போல் பொழிந்ததுக் கடுஞ்சொற்களைப் போல் கொட்டியது என்கிறபோது உவமங்கள் சமுதாயத்தைப் படம்பிடிக்கப், பொருண்மையாகிய மழை அழகியலை அரங்கேற்றக் கவிதை களிநடம் புரிகிறது. கவிஞனின் படைப்பாற்றல் கடவுளின் படைப்பாற்றல்!

    நிறைவுரை

    ‘ஒன்று’ என்பது ‘ஒன்றோடொன்று’ என்றும் ‘ஒன்றைப்போல் ஒன்று’ என்றும் விரியும். முன்னது கணிதம். பின்னது இலக்கியம். இவை தம்முள் மாறுபடாது. ஒன்றைப்போல் ஒன்று என்பது காலப்போக்கில் ஒன்றைப்போல பல அல்லது ஒன்றுக்குப் பல என்னும் நிலை வந்தது. அந்த நிலையில் ஒரு பொருளுக்கு ஓர் உவமம் என்ற நிலை மாறியது. உவமங்களின் எண்ணிக்கை கூடியது. உவமங்களே தம்முள் தம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் உயர்நிலை வந்தது. இந்த உயர்நிலை உவமத்தின் பன்முகப் பரிமாணத்தை வெளிப்படுத்தி நிற்பதோடு பொருண்மையை வெகு துல்லியமாக விளக்கிக் காட்டவும் பயன்பட்டது. ஒன்றுக்குப் பல என்னும் உவம மரபு சங்க இலக்கியத்திலேயே தொடங்கி இன்று வரை நீடிக்கிறது என்பதும் சிந்தனைக்குரியதே!

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 22

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 22

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதைகளில் உவம மரபு

    முன்னுரை

    ‘மரபுக் கவிதை’ என்னுந் தொடர் யாப்பை மட்டும் உணர்த்துவதாகக் கொண்டு மயங்குவர் பலர். அவர் ஒரு பாட்டைத் திறனாய்வு செய்யத் தொடங்கியவுடனேயே ‘காய் காய் மா மா’ என்று கவிதையைக் கொத்துக் கறியாக்கிவிடுவர். வேட்டியும் புடவையும் எப்படி மரபு சார்ந்ததோ அதுபோலவே  கவிதையின் புறக்கட்டுமானமும் மரபு சார்ந்ததே! இதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் வேட்டியும் புடவையும் மட்டுமே ஒருவனை மனிதனாக்கிவிடுகிறது என்னும் நிலைப்பாட்டை அன்னார் எடுக்கிறபோதுதான் நமக்கு மடையளவு தண்ணீர் அணையளவு பெருகுகிறது. உள்ளடக்கத்தின் பரிமாணம், உத்தியின் புதுமைகள், உவமத்தின் பன்முகப் பரிமாணம் மற்றும் பயன்பாடு, வடிவக் கட்டுமானம் இவை அத்தனையும் கலந்த கலவைதான் மரபு என்பது.  பரத்தையரைப் பற்றியும் பத்தினியைப் பற்றியும் பாடுவது நம் தமிழ் மரபு.  நூன்மரபில் தொடங்கி மரபியலில் தமது நூலை முடித்துக் காட்டியிருக்கும் தொல்காப்பியம் சொல்ல வருவது அதுதான். ‘வாழையடி வாழையென வந்த தமிழ் மரபு’ அது. அந்த மரபு ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியங்களில் உவமத்திலும் உத்தியிலும் குடிகொண்டிருப்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

    தழுவும் தோளும் நழுவும் உள்ளமும்

    நாலடியாரில் நல்ல நூலுக்கு ஒரு உவமத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த உவமம் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

    பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிபட்டுக்
    கற்பவர்க் கெல்லாம் எளிய, நூல்., மற்றும்
    முறிபுரை மேனியர் உள்ளம் போன்று யார்க்கும்
    அறிதற்கு அரிய பொருள்

    என்பது அந்தப் பாட்டு. ஒரு நூல் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்லவரும் பாடல் இது. நூல் மொழியால் எளிமையாகவும் கருத்துக்களால் அரியதாகவும் இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வருகிறது. இதற்கு இந்தப் பாட்டில் விலைமகளிரின் இரண்டு உறுப்புக்கள் உவமங்கள் ஆக்கப்படுகின்றன. ஒன்று அவளுடைய தோள். மற்றொன்று அவளுடைய மனம். முன்னது காணக்கூடியது. பின்னது காட்டலாகாதது. பெறுவது கொள்பவர் என்றதனால் தான் பெற வேண்டியதை மிகச் சரியாகப் பெறும் இயல்புடையவர் என்பது பெறப்படும். பொருளை அவள் பெற்றுக் கொண்டதனால் அவளுடைய தோள் தழுவதற்கு எளிதாகி விடுகிறது. இனி அந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் பொருள் அரிதாக இருத்தல் வேண்டும். ‘அரிது’ என்றால் இதுவரை யாரும் சொல்லாதது. இதுகாறும் அறிந்து கொள்ள இயலாதது. அறிந்து கொள்ளுமாறு அமையாதது.  பெறுதற்கு அரிய பொருள். இந்த அருமை எதனைப் போல் அமைதல் வேண்டுமென்றால் தோள் எளிய விலைமாதரின் உள்ளம் போல் இருத்தல் வேண்டும். ஒரு நூல் கற்பவருக்கு எளிதாக இருக்க வேண்டும். எது போல என்றால் விலை மாதர் தோள்போல. அதே நூற்பொருள் உணர்வதற்கு  அரியதாக  இருத்தல் வேண்டும் எது போல என்றால் விலைமாதர் உள்ளம் போல். இதனால் பொருட்பெண்டிர் உள்ளம் பொருட்கொடுப்பவனிடம் சிக்காமல் நழுவுவதை உணரமுடியும். புறத்தில் எளிமை, அகத்தில் ஆழம் என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் விளக்கலாம்.

    பாரதி பாடல்களில் மரபு

    இதனை வேறுவகையாகவும் விளக்க முடியும். நூலின் சொல்லமைதி  எளிதாக இருக்கலாம். அது உரைக்கும் பொருளமைதி அரிதாக இருத்தல் வேண்டும். பாரதிக்கு இது கைவந்த கலை. பாரதியின் கவிதைகள் மொழியால் எளிமை வாய்ந்தவை. பொருளால் மிகவும் அரிதானவை.

    தேம்பி அழுங்குழந்தை நொண்டி’’

    என்னும் ஒரு வரி போதும். ‘தேம்புதல்’ தெரியும். ‘அழுவது’ தெரியும். ‘குழந்தையும்’ தெரியும். ‘நொண்டியும்’ தெரியும். தேம்பியழுபவனைக் கோழை என்றால் கூட ஏற்கலாம். ஆனால் நொண்டி என்கிறார் பாரதி. கால் இல்லாதவனே நொண்டி  என்பதுதான் உலகம் அறிந்தது. பாரதி இதனை எளிய தமிழ் கொண்டு மாற்றிக் காட்டுகிறான். ‘அழுகின்ற குழந்தை நொண்டி’ ஆனது. எப்படி? ‘தன்னால் முடியும்’ என்ற நம்பிக்கை குறைந்து ‘முடியாமல் போய்விடுமோ’ என்னும் கையற்ற நிலையில் அழுகிற கோழைத்தனம் மனத்துக்குள் வந்து விடுமோ?’ என்னும் அச்சத்தில் ‘அழுகின்ற குழந்தையை நொண்டி’ என்கிறான். மொழிநடை விலைமாதர் தோள் போல் எளிமையாகியிருப்பதையும் பொருள் அவர் உள்ளம் போல் அறிதற்கு அரிதாக இருப்பதையும் காணலாம்.

    துரியோதணன் அவையில் அனைவரும் சபதம் ஏற்கிறார்கள். அர்ச்சுனன் ஏற்கும் சபதத்தில் ஒரு குறிப்பு வருகிறது. அது என்ன குறிப்பு?

    தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு எங்கள்
    சீரிய நண்பன் கண்ணன் கழலாணை
    கார்த்தடங் கண்ணி எந்தேவி அவள்
    கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை!”

    இறைவன் மீதும் வில்லின் மீதும் விஜயன் சபதம் ஏற்றது சரி. ஆனால் பாஞ்சாலியின் கண்ணின்மீது சபதம் ஏற்கிறான். அதுவும் எப்படி வண்ணனை செய்து சபதம் ஏற்கிறான் என்றால் ‘கார்த் தடம் கண்ணி’ என்று அடைகொடுத்துப் பாராட்டிய கண்ணின் மீது சபதம் ஏற்கிறான். இதனைப் படிக்கிறவர்கள் சாதாரணமாகக் கடந்து போய்விடுவார்கள். ஆனால் பாரதியை முழுமையாக உள்வாங்கியவர்கள் ‘புதுமைப்பெண்’ பற்றி முன்னாலே அவன் சொல்லியிருப்பதைக் கவனிப்பார்கள்.

    காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதல்
    பெண்களின் கடைக்கண் பணியிலே

    என்று பெண்ணின் கண்ணசைவு ஆணிடம் உண்டாக்கும் பேராற்றலை உணர்ந்து கொள்ள முடியும். கடைக்கண் என்பது ஒரு வினைவேக மாற்றி. கடைக்கண் பார்வைக்கே இந்த வலிமை என்றால் கார்த்தடங்கண்ணியின் முழுப்பார்வைக்கு எவ்வளவு வலிமை இருந்திருக்கும்? இந்த மரபுத் தாக்கத்தினால்தான் பின்னாலே வந்த பாவேந்தர்,

    கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
    மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்

    என்றும் பாடமுடிகிறது. இத்தகைய மரபு உவமத்திலும் இழைகிறது என்பதுதான் இந்தக் கட்டுரையின்  சாரம்.

    களிறுகளோடு சாயும் கொடிகள்

    களப்போரில் ஈடுபடும் யானைகள் தங்களுடைய அடையாளப் படைக்கொடியைச் சுமந்து கொண்டு செல்லும். களிறு களத்தில் பட்டொழிந்தால் அதன் பருத்துக் கருத்த மேனியில் அந்தக் கொடியும் விழுந்து போர்த்திக் கொள்ளும். பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் காட்சி இது. அப்படியொரு காட்சியைக் கலிங்கத்துப் பரணி காட்டுகிறது,

    சாய்ந்துவிழும் கடகளிற்றின் உடனே சாய்ந்து
    தடங்குருதி மிசைப்படியும் கொடிகள் தாங்கள்
    காந்தருடன் கனல் அமளி அதன்மேல் வைகும்
    கற்புடை மாதரை ஒத்தல் காண்மின் காண்மின்!”

    என்பது அந்தக் காட்சியைச் சித்திரிக்கும் கலிங்கத்துப் பரணி பாடல். இரத்த வெள்ளத்தில் களிறு சாய, அந்தக் களிற்றின் குருதியிலேயே இந்தக் கொடிகளும் சாய்கின்றன. அது எதுபோல் இருக்கிறது என்றால் உடன்கட்டை ஏறும் பத்தினிப் பெண்டிர் தீயில் மூழ்குவதுபோல் இருக்கிறதாம். ‘கனல் அமளி’ என்பதனால் ‘தீயெரி’ என்பது பெறப்படும். களிற்றின் மேல் விழுந்து உயிரைப் போக்கிக் கொள்ளும் ‘அஃறிணைக் கொடிகளுக்குக் கணவனோடு தமது உயிரைப் போக்கிக் கொள்ளும் ‘உயர்திணைப் பெண்கள்’ உவமமாக வந்திருப்பதைக் காணலாம்.

    வாரணத்தைப் பிரியும் வண்டுகள்

    மேலே களத்தில் களிற்றோடு சாய்ந்துவிழும் கொடிகள் கணவனோடு உடனேகும் பத்தினிப்பெண்டிரை நினைவுபடுத்தின என்றால் மதநீர் ஒழுகும் வரை அதனைக் குடித்து மயங்கி யானையோடு உறவாடிய வண்டுகள். மதநீர் நின்றவுடன் யானையை விட்டுப் பிரிந்த நிலையைப் பரத்தையரோடு ஒப்பிடும் பாடலும் கலிங்கத்துப் பரணியில் உண்டு.

    மாமழைபோல் பொழிகின்ற தான வாரி
    மறித்துவிழும் கடகளிற்றை வெறுத்து வானோர்
    பூமழைபோல் பாய்ந்தெழுந்து நிரந்த வண்டு
    பொருட்பெண்டிர் போன்றவையும் காண்மின்! காண்மின்!”

    என்பது அந்தப் பாடல். யானை ஒன்று அதனோடு பறந்த கொடி அதனோடு சாய்ந்து விடுகிறது. யானையிடமிருந்து ஒழுகிய மதநீரைப் பருகித் திரிந்த வண்டுகள் அது அற்று நின்றவுடன் அதனைப் பிரிகிறது. அதனால் அவை பொருள் குறைந்தவுடன் விலகும் விலைமாதராயின. வண்டுகளுக்கு விலைமாதர் உவமமாய் வந்த பாடல் இது. நாலடியாரில் ஒரே நூலின் இருவேறு தன்மைகளுக்கு ஒரே உவமத்தின் இருவேறு பண்புகள் உவமமாக்கப்பட்டன. கலிங்கத்துப் பரணியில் இருவேறு தனித்தனிக் காட்சிகளில் இருவேறு பண்புடையவர்கள் உவமமாக்கப்பட்டனர். இனி வரும் பாடலில் ஒரே பொருளின் இருவேறு பண்புகளுக்கு இருவேறு உவமங்கள் பயன்படுத்தியிருக்கும் பாங்கினை ஆராயலாம்.

    தேவரின் சிந்தாமணியின் எளிமையும் அருமையும்

    தமிழிலக்கியத்தில் தேவரின் சிந்தாமணி பகலில் தோன்றும் நிலவு!. கண் பார்வைக்கு மறைந்த அழகு!. திரை மூடிய சிலை!. சிறையில் மலர்ந்த மலர்! “சிந்தாமணியை ஆராய்வதற்கு என்பால் ஓரளவு தகுதி உண்டு” என்று சொன்னவர் சாதாரண நபர் அல்லர். உ.வே.சா.! அதன் புறமொழி எளிமை. ஆனால் அகக்கட்டுமானம் மிகக் கடுமை. எனவே அதன் நிலைப்பாடு தெய்வத் தன்மை பொருந்தியது என்பது கருத்து. இவற்றையெல்லாம் உள்வாங்கிய கவிஞர் ஒருவர் எழுதுகிறார்.

    கலைதேர்ந்த விலைமாதர்  தொடுதோள் போன்று
                   கற்பார்க் கெல்லாம் மிக்க எளிதாய், அந்த
    விலைமாதர் உள்ளம்போல் திட்ப நுட்ப
                   விளக்கமெலாம் அறிதற்கே அரிதாய் நல்ல
    நிலைமாதர் கற்பனவே சிறந்ததோர் நூல்” 

    சொல்லளவில் எளிமையாயும் பொருளளவில் ஆழ்ந்தும் நுண்ணிதாகவும் இருத்தல் ஒரு நல்ல நூலின் இலக்கணமாம். சொல்லெளிமையும் பொருளருமையும் ஒரு நூலைச் சிறக்கச் செய்யும். பரத்தையரையும் பத்தினிமாரையும் துணிந்து உவமிக்கும் மரபாற்றல் சுரதாவுக்கு இருந்திருக்கிறது.

    நூலின் சிறப்புக்குப் பத்தினிப் பெண்டிரின் கற்பை உவமித்திருக்கும் கவிஞர் எளிமைக்கும் அருமைக்கும் விலைமாதரின் தோளையும் உள்ளத்தையும் உவமித்திருப்பது சிந்தனைக்குரியது. பொருட்பெண்டிராகிய விலைமாதர் எல்லாருக்கும் எளியர். எல்லாவற்றிலும் எளியர். அதனால் நூலின் புற அமைப்புக்கும் பொருண்மைக்கும் விலைமாதர் உவமமாயினர். பிறர் நெஞ்சுபுகாமையே கற்பாதலாலும்,  பிறப்பால் பெண்டிராயினும் கற்பால் உயர் நிலை என்பது பத்தினிப் பெண்டிருக்கே உரியதென்பதால் நூலின் நிலைபேற்றுச் சிறப்புக்குப் பத்தினிப் பெண்டிரின் கற்பும்  உவமமானது.

    நிறைவுரை

    மேலே காட்டப்பட்டிருக்கும் இலக்கிய எடுத்துக்காட்டுக்களை அதாவது உவமப் பகுதிகளை ‘தமிழ்க்கவிதை உவமக்கோட்பாடுகள்’ என்ற அடிப்படையில் ஆராய்ந்தால் அவற்றின் வளர்ச்சிநிலை புரியக்கூடும். ஒருமை மகளிரையும் வரைவின் மகளிரையும் நீதி நூல்கள் பாடிய நிலை மாறி, உவமங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். உடன்பாட்டையும் எதிர்மறையையும் உவம வழியாகவும் உணர்த்தியிருக்கிறார்கள் எனக் கருதலாம். நூலுக்கு உவமமான பொருட்பெண்டிர் வண்டுகளுக்கு உவமமாக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பொருட்பெண்டிரின் புறப்பகட்டு நூலின் புறக்கட்டுமானத்திற்கும் பத்தினியரின் கற்பு நெறி நூலின் நிலைபேற்றுக்கும் ஒப்பீட்டு உவமங்களாக வந்துள்ளன. உவமங்களில் மரபும் பின்பற்றப்படுகிறது. வாழ்க்கை நெறியும் கற்பிக்கப்பட்டுள்ளது.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 21

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 21

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதை உவமங்களில் வாழ்வியல்

    முன்னுரை

    வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில் உவமம் அமையலாம் என்பது பழந்தமிழ் நெறி. இந்த நெறி அப்படியே தேக்கமடைந்துவிடாமல் தொடர்ந்து பரிணாமம் பெற்றுவருகிறது என்பதுதான் இங்கே சொல்ல வரும் சேதி.  ‘தாமரைபோன்ற முகம்’ என்பது முகத்திற்குச் சொல்லப்பட்ட உவமம். ‘முகம் போன்ற தாமரை’ என்பது தாமரைக்குச் சொல்லப்பட்ட உவமம். பொருளும் உவமமும் தமக்குள் மாறுபடும் நிலை இது. முன்னது காதலியின் முகத்தைப் பார்த்த காதலன் வாய்மொழி!, பின்னது இயற்கையோடு இயைந்த கவிஞன் தாமரையோடு பேசிய மொழி! ‘பொருளே உவமம் செய்தனர் ஆயினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்’ எனத் தொல்காப்பியம் விதி செய்கிற அளவுக்கு இது சென்றிருக்கிறது. தமிழ் எல்லா நிலைகளிலும் வளர்ச்சி நோக்கியது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.  இந்தப் பின்புலத்தில் ஒரே நிகழ்வுக்கு மாறுபட்ட உவமங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாங்கினை இப்பகுதி ஆராய்கிறது.

    வாழ்வியலும் ஓர் அழகியலே!

    வாழ்க்கையின் மெய்ம்மைகளை உவமமாக்குவதாலோ கருத்துக்கு மற்றொரு கருத்தையே உவமமாக்குவதாலோ தமிழ்க்கவிதைகளில் பயன்படுத்தப்படும் உவமங்களில் அழகியல் குறைந்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. மாறாக உவமங்களை அழகியல் சார்ந்ததாகப் படைப்பதில் சங்க இலக்கிய மரபு தற்காலம்வரை உள்ளம் கவரும் வகையில் தொடர்ந்து வருகிறது என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் உறுதி செய்ய முடியும். ஒரே தன்மையான நிகழ்வுகளுக்குப் பட்டறிவின் அடிப்படையிலும் வாழ்வியல் அடிப்படையிலும் உவமங்களை அமைத்துக்காட்டும் திறனைத் தமிழ்க்கவிதைகளில் காணமுடியும்.

    பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல

    சமுதாயத்தின் பங்காளி படைப்பாளியாக மாறினால் படைப்பில் உயிர் இருக்கும். கரையில் இருந்து கொண்டு கால் நனையாமல் கடலைப் பாடுகிறவன் பாட்டில் ஈரம் இருக்காது. இளவரசன் நகருலா வருகிறான். அவனைக் காண்பதற்காகக் காதல் மேலிட, தன் வீட்டுக் கதவைத் திறப்பதற்காகச் செல்கிறாள் தலைவி, திறந்த கதவைத் தாழிட்டு வருகிறாள். மீண்டும் திறக்கிறாள். மீண்டும் தாழிடுகிறாள். இந்த நிகழ்வைச் சித்திரிக்கும் பாட்டு முத்தொள்ளாயிரத்தில் இருக்கிறது. ‘தலைவனைக் காண்பதற்காக ஆர்வத்துடன் செல்வதும், நாணத்தினால் கதவடைத்துத் திரும்புவதுமாகிய அவள் நெஞ்சத்து ஊசலாட்டத்தை,

    “ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
    காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்
    பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்நதார் போல
    வரும்., செல்லும்., பேரும் என் நெஞ்சு”

    என்னும் பாடல் காட்சிப்படுத்துகிறது. செல்வர்கள் வீட்டு வாயிற்படியில் இரப்பதற்காகச் செல்லும் இரவலனுடைய நெஞ்சம், ‘செல்லலாமா? கூடாதா? என்றலையும் ஊசலாட்டத்தோடு தலைவியின் நாணத்தால் வந்த ஊசலாட்டம் ஒப்பிட்டுக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.  பாட்டில் ‘காணிய’ (காண்பதற்காக) என்னும் ‘செய’வென் எச்சம் ‘அடைந்தேன்’ என்னும் தன்வினை கொண்டது. ‘அடைத்தேன்’ என நின்றது வலித்தல் விகாரம். பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் செல்வது என்னும் சிந்தனை திருவள்ளுவருக்கும் வந்திருக்கிறது.  கற்றலின் சிறப்புக் கூற வந்த அவர், ‘உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்க’ வேண்டும்’ என்று சொல்வார். புறம் சார்ந்த கருத்து விளக்கத்திற்குத் திருவள்ளுவரால் கையாளப்பட்ட இந்த உவமத்தை மிகச் சாதுரியமாக அகப்பொருளுக்கு அதுவும் பெண்ணொருத்தியின் மன ஊசலாட்டத்திற்கும் தயக்கத்திற்கும் உவமமாக்கியிருப்பது தமிழ்க்கவிதை உவமக் கோட்பாடுகளில் ஒன்றினை எதிரொளிப்பதாகும்.

    தயிர்கடையும் ஆச்சியின் கை

    தலைவியின் ஊசலாடும் நெஞ்சிற்கு முத்தொள்ளாயிரம் காட்டியிருக்கும் உவமம் வாழ்வியலைச் சார்ந்ததாகக் கொண்டால், நளவெண்பா காட்டியிருப்பது வாழ்வியலோடு அழகியல் சாந்ததாகக் கருத முடியும். ஊழ்வினை காரணமாகக் கானகத்தில் ஒற்றையாடையில் நளனும் தமயந்தியும் தனித்திருக்கின்றனர். கலிபகவான் அவர்களைப் பிரிக்கும் நோக்குடன் அவர் அருகே கத்தியாகக் கிடக்கிறார். கிடக்கும் கத்தியை எடுத்து ஒற்றையாடையை இருகூறாக்கி நளன் எழுந்து நடக்கிறான். நடந்து சென்றானா? என்றால் அதுதான் இல்லை. ‘ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்டாகப்’ பற்றியறுத்த நளன், துயில் கொள்ளும் தன் மனைவியாகிய தமயந்தியைக் கண்டு அவளருகே செல்வதும், மீள்வதுமாகத் தடுமாறுகிறான். இந்த நிலையைப் புகழேந்திப் புலவர் பாடுகிறார். பெருமாளைப் பாடிய வைணவராதலின், இடையர் வீட்டு நிகழ்ச்சியை உவமமாக்கி நளனின் நிலையைத் தெளிவுபடுத்துவதை அறியமுடிகிறது.

    “போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்
    ஆயர் கொணர்ந்த அடுபாலின் – தோயல்
    கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன்
    வடிவாய வேலான் மனம்”

    ‘உட்கார்ந்து பால்கறக்க முக்காலி பொன்னாலே. அணைஞ்சிருந்து பால்கறக்க அணைகயிறும் பொன்னாலே’ என்பது நாட்டுப்புற வழக்கு. இன்றைய மகளிர் சமுதாயம் மீளவும் பெறமுடியாத பேரிழப்பு உரியும் மத்தும். ஆய்ச்சியர் தயிரைக் கடைகிறபொழுது அவர்தம் கைகள் முன்னும் பின்னுமாகச் செல்லுவதை உற்றுநோக்கிய புகழேந்தி தாம் எழுதிய காப்பியத்தின் இன்றியமையாக் கட்டத்தில் அதனை உவமமாக்கிய திறன் பெரிதும் சிந்தனைக்குரியது.

    ஊசலான பாசம்

    தலைவியின் தடுமாறும் நெஞ்சிற்குப் பெருஞ்செல்வர் இல்லத்துக்குச் செல்லும் நல்கூர்ந்தார் உவமமானதைப்போல், மனைவியைப் பிரிந்த கணவன் தடுமாற்றத்திற்குத் தயிர் கடையும் இடைச்சியர் கை உவமமானதைப்போல், பாசமிக்கத் தாயொருத்தி தன் வீட்டுக்கும் கர்ப்பிணியான தன் மகள் வீட்டுக்கும் போவதும் வருவதுமாய் உள்ளாள் என்பதற்குத் தமிழ்க்கவிதை ஒன்றில் காட்டப்பட்டிருக்கும் உவமை காலத்தோடு ஒட்டியதாக உள்ளது. பாவேந்தரின்  அடையாளம் காட்டும் பனுவல்களில் குடும்ப விளக்கு தலைசிறந்தது. அதில் வரும் ஒரு காட்சியில் கர்ப்பிணியாக இருக்கும் தன் மகளை அதே பகுதியில் அவளுக்கு அருகில் குடியிருக்கும் அவள் தாய் கவனத்துடன் பராமரிப்பதைப் பாவேந்தர்,

    “நீடு மணிப்பொறி ஆடுங் காய்போல்
    தங்கம் தன்வீடு தன்மகள் வீடு
    நாடுவாள் மீள்வாள் மணிக்கு நாற்பது முறை”

    சுவர்க் கடியாரத்தின் ஊசல் (pendulum) இருமுனைக்கும் இங்குமங்குமாக அசைந்து அலைவதைப் போலக் ‘குடும்பவிளக்கு’ நாயகி தங்கம், தன் வீட்டிற்கும் தன் மகள் நகைமுத்து வீட்டுக்குமாய் நடந்ததாகப் பாவேந்தர் கவிதையோவியம் தீட்டியிருப்பதைக் காணமுடிகிறது.

    நாணத்தினால் வந்த முத்தொள்ளாயிரத் தலைவியின் தயக்கத்திற்குப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தாரும், தமயந்தியைப் பிரிந்த நளனின் பிரிவாற்றாமைக்கு ஆய்ச்சியரின் கைகளும், கருவுற்ற மகளைக் காணச் செல்லும் தாய்க்கு மணிப்பொறியின் ஊசலும் உவமங்களாய் வந்துள்ளமை நோக்கத்தக்கது. தயங்கும் தலைவி, ஆற்றாத கணவன், துடிக்கின்ற தாய் என்னுமாறு அமைந்த பாத்திரங்களின் வினைபாடுகளுக்கேற்ப நல்கூர்ந்தார், கைகள், ஊசல் என வேறுபடும் வினைகளைக் கொண்ட அழகியல் சார்ந்த உவமங்கள் அமைந்துள்ள பாங்கு சிந்திக்கத்தக்கது.

    நிறைவுரை

    ‘தமிழில் உவமக் கோட்பாடுகள்’ என்னும் ஆய்வுக்களத்தில் சமுதாயத்தை விட்டு உவமங்களைத் தேடும் அவலத்தைப் பெரும்பாலும் காண முடியாது. பழந்தமிழ் இலக்கியங்களில் உயர்வு நவிற்சி, இல்பொருள் உவமம்,  வெறுங்கற்பனை முதலியவை அந்நியப்பட்டே நிற்கின்றன. பாரதத்தின் கிளைக்கதையைப் படைப்பிலக்கியமாகச் செய்த புகழேந்தி ஆய்ச்சியர் இல்லத்தை எண்ணுவதும், அகத்திணை மரபினைக் கவிதைக் காட்சியாக்கும் முத்தொள்ளாயிர ஆசிரியர் நல்கூர்ந்தாரை நினைவில் கொள்வதும், நொடிக்கு ஒரு தடவை மகளைக் காணவரும் தாயைச் சித்திரிக்கும் பாவேந்தர் கடிகாரத்தின் ஊசலைக் கருத்திற் கொள்வதும் இலக்கியத்தில் சமுதாயப் பார்வைகளே  உவமங்களாக அமைகின்றன என்பதைக் ஓரளவு காட்டக் கூடும். ‘வருவதும் போவதுமான’ ஒரே செயலுக்குக் காலமிடையிட்ட கவிஞர் பெருமக்கள் காட்டுகிற உவமங்களில்தாம் எத்தனை வகை!

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 20

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 20

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கணக் குறியீடுகளும் உவமங்களும்

    முன்னுரை

    இலக்கண நூல்களில் அவற்றின் ஆசிரியர்கள் பொருள் புலப்பாட்டுக்காகப் பயன்படுத்தும் உவமங்கள், இலக்கண உரையாசிரியர்கள் நூற்பாக்கள் விளக்கம் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் உவமங்கள் என்னும் இவற்றைக் கடந்து இலக்கணக் குறியீடுகளையே இலக்கிய விளக்கத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு இலக்கியச் சூழலைக் காணமுடிகிறது. உயிர், மெய், குற்றியலுகரம், ஆய்தம், உடம்படுமெய், தழாஅத்தொடர் என்னும் இத்தகைய குறியீடுகளைப் பொருத்தமான உவமங்களாகக் கையாள்வதன் வழிக் கற்பனையைச் செழுமை செய்து கொள்ளும் முயற்சியைக் காணலாம். அன்புக்குரியவர்கள் தங்களை உயிரும் மெய்யுமாகக் கருதிக் கொள்வதும் எழுதுவதும் பேசுவதும் பெருவழக்கு. தாய் தன் குழந்தையை இவ்வாறு கொஞ்சி மகிழ்வதைத் தவிர மற்றவையெல்லாம் அவ்வளவு உயிர்ப்புடையன அல்ல என்பது வேறு. மேற்சொன்ன இலக்கணக் குறியீடுகளை இலக்கியச் சித்திரிப்பில் உவமங்களாகக் கையாள்வதற்கு விரிந்து பரந்த புலமையும் ஆழ்ந்த நுண்ணுணர்வும் தேவை. எனவேதான் இத்தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர் எண்ணிக்கையும் வெற்றி பெற்றவர் எண்ணிக்கையும் எதிர்விகிதத்தில்  அமைந்துபோயிருக்கிறது.

    இதுதான் ‘உடம்படுமெய்’ இலக்கணம்

    எழுத்துக்களில் மெய்யும் உயிரும் கலக்கும். ஆனால் உயிரும் உயிரும் கலப்பதில்லை. மானுட உறவுகளில் உடல் கலப்பு இல்லாமல் உயிர்க்கலப்பு அரிது. இரண்டு உயிர் கலக்குமா எனின் கலக்காது. ‘உடல் கலக்குமா?’ எனின் கலக்கும். எழுத்துக்களில் மிக அரிதான நிலையில் நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் உயிராகவே நிற்கக் கலக்க வேண்டிய நிலை வரும். அப்போது அவ்விரு உயிர்களும் புணர்வதற்கு மெய்யின் துணை தேவைப்படும். அந்த மெய்க்கு ‘உடம்படுமெய்’ என்று பெயர். (இதனை மெத்த கற்ற மேதைகள் சிலர் உடன்படுமெய் என்று எழுதுவர்) ஒற்றுமைப்படாத இரண்டு உயிர்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு மெய்யின் உதவி தேவை என்பதையே இது காட்டுகிறது. தொல்காப்பியம் இதனை,

    “எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
    உடம்படுமெய்யின் உருவுகொளல் வரையார்”

    என்று இலக்கணம் செய்திருக்கிறது. மெய்யுறு புணர்ச்சியைக் காட்சிப்படுத்துங்கால் மிகவும் எச்சரிக்கையாகச் சித்திரிக்க வேண்டிய பொறுப்பு கவிஞர்களுக்கு உண்டு. வள்ளற்பெருமான் தாம் எழுதிய இங்கிதமாலையில் இதனை வெளிப்படுத்தியிருப்பார். கலவியின்பத்தை மொழியில் காட்சிப்படுத்துவது அரிய கவிதைத் தொழில் நுட்பம்!

    “சொல்லரிதாய் மிக இனிதாய் நாழி கைபோம்!
    சுடர்விழிகள் ஈரிரண்டு நான்கு பூக்கள்
    புல்லிதழில் போய்ஒடுங்கும் தமைம றந்து
    பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்”

    என்பார் பாவேந்தர். பாவேந்தருக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலம்பாசிரியர் இளங்கோ கண்ணகியும் கோவலனும் துய்த்த புணர்ச்சி இன்பத்துக்குத் ‘தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என’ப் பாம்பின் புணர்ச்சியை உவமமாக்கி உணரவைத்தார். பாவேந்தருடைய நேரடி மாணாக்கர்களில் ஒருவரான சுரதா இதனை இன்னும் கூடுதல் இலக்கண நயத்தோடு பாடியிருக்கிறார். ‘பொருத்தம் உடலிலும் வேண்டும்’ என்பதை மறக்காத கவிஞர், தலைவனும் தலைவியும் கூடி மகிழ்ந்து அனுபவித்த இன்பதைக் காட்சிப்படுத்துகிறபோது,

    “நாவில் நீ! நெஞ்சில் நீ! அஞ்சன் ஆட்சி
    நல்லதமிழ்ப் பாடல் நீ அன்றோ?” என்றான்.
    ஓவம்மாள் ஈன்ற மகள் சிரிப்பை ஈன்றாள்
    உடம்படுமெய் இலக்கணத்தை இரவில் கண்டார்!

    எந்த உடல் முதலில் கலந்தது என்பது இருட்டுக்கும் தெரியாத புதிர். பாவேந்தர் இளங்கோவை மறக்கவில்லை. சுரதா பாவேந்தரை மறக்கவில்லை. இக்கவிஞர் யாரும் தமிழ்ப் பண்பாட்டையும் மரபையும் மறக்கவில்லை! இதுதான் தமிழினப் பண்பாட்டுக் கூறு! கவிதை என்பது ஒன்றினை உணர்த்துவது! விவரிப்பது அல்ல!

    தோன்றா எழுவாய்

    ‘படித்தாயா?’ என்னும் வினா இருக்கிறது. ‘நீ’ என்னும் எழுவாய் இல்லை. ‘படித்தானா?’ என்னும் வினா இருக்கிறது ‘அவன்’ என்னும் எழுவாய் இல்லை. ‘படித்தார்களா?’ என்னும் வினா இருக்கிறது. ‘அவர்கள்’ என்னும் எழுவாய் இல்லை. எழுவாய் இல்லை என்றாலும் அவ்வினாச் சொற்கள் இடத்தை உணர்த்தி வினாப்பொருளையும் உணர்த்துகின்றன. இவ்வாறு எழுவாய்த் தொடர் ஒன்றில் வெளிப்பட நிற்காது மறைந்து நிற்கும் எழுவாய்க்குத் ‘தோன்றா எழுவாய்’ என்று பெயர். தோன்றா எழுவாயின் மறைந்து நிற்கும் இந்தத் தன்மையைக் கவிஞர் ஒருவர் உவமமாக்குகிறார். எப்படி? இப்படி!. ‘வன்னிய வீரன்’ என்பது கவிஞர் சுரதா எழுதிய குறுங்காப்பியம். அந்தக் காப்பிய நாயகனான காத்தவராயனைப் பகைவன் கொல்ல முடியாமல் தவிக்கிறான். வெல்ல முடியாமல் விழிக்கிறான். பரத்தை ஒருத்தியைக் கொண்டு சூழ்ச்சியால் வன்னிய வீரனை வெல்ல திட்டமிடுகிறான். பரத்தை குப்பாச்சியிடம் மயங்கிக் கிடக்கும் வன்னியவீரனுக்குப் பாலில் நஞ்சு கலந்து கொடுக்கிறாள் குப்பாச்சி. குவளை தெரிகிறது. குவளையில் பால் தெரிகிறது. ஆனால் பாலுக்குள் கிடக்கின்ற நஞ்சு தெரியவில்லை. சுரதா,

    “ஆதிப்பொதுமகள் அளித்த சாறதனில்
    தோன்றா எழுவாய் போல் தோன்றாது இருந்த
    புதுவிடம் அன்னவன் உடலுட் புகுந்ததால்
    முத்தம் கொடுத்து முடித்தோன் முடிவில்
    சத்தம் கொடுத்தபடி சாய்ந்தனன் மெத்தையில்”

    என்று எழுதுகிறார். ‘தோன்றா எழுவாய் போல் இருந்த புதுவிடம்’ என்னும் இலக்கண உவமத்தால் மறைந்திருந்த நஞ்சினைக் காட்சிப்படுத்துகிறார். இலக்கணப் புலமை பெற்ற இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சிலருள் ஒருவரான சுரதாவே உவமைக் கவிஞர் என்னும் சிறப்புக்குரியவரானார்!.

    இடைநிலையும் வெண்டளையும்

    கடையெழு வள்ளல்களில் ஏனைய ஐந்து வள்ளல்களிலும் பாரியும் பேகனும் தனிச்சிறப்புக்கு உரியவர். இதனை ‘முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும்’ என்னும் வெண்பாமாலையால் அறியலாம். இவருள் பேகன் குளிரினால் நடுங்கிய மயிலுக்குப் போர்வை தந்ததாகக் கூறப்படுகிறது. இவனைப் பரணர், வன்பரணர், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார் முதலிய சான்றோர்கள் பாடியிருக்கிறார்கள். மனைவியிடமிருந்து பிரிந்து வேறொருத்தியுடன் வாழும் பேகனுக்கு அறிவூட்டி மீண்டும் இல்லறத்தில் ஈடுபட வைக்க அனைவரும் முயன்றனர். மன்னரில்லாப் புலவர் அவையில் புலவர் பலரும் வீற்றிருக்கப் பரணர் பேகன் புகழ் பாடுகிறார். பரணரின் புகழ்ப்பரணியைக் கேட்டவுடன் சினங்கொண்ட பெரும்பூதனார் எழுந்து பரணரை வினவுவதாக ஒரு கற்பனையைத் தற்காலக் கவிஞர் செய்திருக்கிறார். தமது இலக்கணப் புலமையைப் பயன்படுத்திப் பேகனைப் பாரட்டிய பரணரைக் கடிந்து கொள்கிறார்.

    நாட்டியத்து மயிலா? நடுங்குகின்ற மயிலா?

    தொன்மம் மற்றும் வரலாறு ஆகியவற்றில் காணும் நிகழ்ச்சிகளைத் தம் கற்பனையோடு இணைத்துப் புதியன படைப்பது தமிழுக்குப் புதியதன்று. இந்த நிரலில் பெரும்பூதனார் அறிவுரையும் அமைந்துள்ளது. பூதனார் என்ன வினவுகிறார்? “அவன் மயிலுக்குப் போர்வை தந்ததே அறியாமையின் விளைவு!. மயில் நடுங்கிறதா? கார்மேகம் கண்டு நாட்டியமாடுகிறதா? என்பது கூட அவனுக்குத் தெரியவில்லை!. அத்தகையவன் மனைவியின் வேதனையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? வருகின்ற பேரொலியெல்லாம் வேட்டுச் சத்தமாகத்தான் இருக்கவேண்டுமா? தும்மலாகவும் இருக்கலாம் அல்லவா?” என்று வினவும் பூதனார் “இடைநிலைகள் காலம் காட்டும்! சரி. அதற்காகக் காலம் காட்டுபவையெல்லாம் இடைநிலைகளாகிவிடுமா? வெண்பாவில் வெண்டளைகள் விரவும். சரி. அதற்காக வெண்டளைகள் விரவுகிற பாட்டெல்லாம் வெண்பாவாகிவிடுமா? மயில் தோகை விரித்தது உண்மை. மழைக்கு மயில் நடுங்கித்தான் தோகைவிரிக்குமா? அது மேகங்கண்டு நாட்டியமாடக் கூடாது என்று விதி உண்டா? கண்ணகியின் கண்ணீரைத் துடைத்தெறிய ஆவன செய்வீர்! என்று பரணரை நோக்கிக் கூறுகிறார். அந்தப் பாடல் இப்படி அமைந்திருக்கிறது!.

    “நாட்டியத்து மயிலுக்கும் குளிரி னாலே
    நடுங்குகின்ற மயிலுக்கும் வேறு பாடு
    காட்டுக்குள் அறியாத வேந்தன் நாட்டுக்
    கடமைகளை எவ்வாறு புரிந்து கொள்வான்?
    வேட்டுக்கும் தும்மலுக்கும் வேறு பாடு
    விளங்காதா? வெண்டளைகள் விரவு கின்ற
    பாட்டெல்லாம் வெண்பாவா? காலம் காட்டு
    பவையெல்லாம் இடைநிலையா? பாட்டுவேந்தே!

    “கார்போன்ற கருங்கூந்தல் நடுங்க ஏக்கக்
    கண்ணிரண்டும் புண்ணாகி நடுங்க வில்லின்
    கூர்போன்ற உதட்டுமுனை நடுங்க செங்கை
    குலைக்காந்தள் போல்நடுங்க உருட்டி விட்ட
    தேர்போலக் கிடக்கின்றாள் மனைவி! அந்தத்
    தென்பொதினிப் பொன்மயிலை மூடுதற்குப்
    போர்வைகொண்டு போகட்டும் பேகன்! என்று
    பூதனங்கு முழக்கமிட்டான்! பரணர் போனார்!”

    இலக்கணச்சுவை

    இந்தக் கவிதையில் பொருத்தமான இடத்தில் பொருத்தமான இலக்கணக் குறிப்புக்களை உவமமாக்கியிருக்கிறார். வினைச்சொல்லில் பெரும்பாலும் இடைநிலை காலம் காட்டும். சிறுபான்மை விகுதி காலம் காட்டும். பகுதி காலம் காட்டாதெனினும் பகுதி ஒற்று இரட்டித்துச் சிறுபான்மை இறந்த காலம் காட்டும். எனவே இடைநிலைதான் காலம் காட்டும் என்பதில்லை. வெண்பாவுக்குரிய தளை வெண்டளை. அதனால் அதில் அது வரவேண்டும் என்பதன்றி அதில் மட்டுந்தான் வரவேண்டும் என்பதில்லை. இந்த இலக்கணச் சிந்தனைகளை மயிலின் அசைவு பற்றிய சித்திரிப்புக்கு உட்படுத்தி, உவமமாக்கிக் கவிதை நயத்தை உயர்த்தியிருக்கிறார் கவிஞர் முருகுசுந்தரம்.

    தழுவு தொடரும் தழாஅத் தொடரும்

    வேற்றுமை, அல்வழி ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் ‘தழுவுதொடர்’ என்றும் ‘தழாஅத்தொடர்’ என்றும் இரண்டு உண்டு. ‘சங்கர் நூலைப் படித்தான்’ என்ற தொடரில் ‘நூலை’ என்னும் சொல் இயையாமல் விடுபட்டு நின்றாலும் பொருள்தொடர்பு அறாது. அதாவது ‘சங்கர்’ என்பது நிலைமொழி. ‘படித்தான்’ என்பது வருமொழி. இடையில் வந்திருக்கும் ‘நூலை’ என்னும் சொல் இரண்டனையும் பிரித்தாலும் சங்கர் படித்தான் என்னும் அவ்விரண்டுக்குமான பொருள் தொடர்பு அறுந்துவிடவில்லை என்பதைக் காணலாம். நிலைமொழி வருமொழிகள் அல்வழி, வேற்றுமைப் பொருள் புலப்பட ஒருங்கியைந்து நில்லாது இடையே பிற சொற்கள் வரச், சேய்மைப்பட நிற்கும் தொடர்மொழிக்கே தழாஅத் தொடர் என்று பெயர். அடுத்த சொல்லைத் தழுவாவிடினும் தொடர்ப் பொருள் சிதையவில்லை என்பதையே ‘தழாஅத் தொடர்’ என்பது உணர்த்துகிறது.  இதனை இன்னும் எளிமையாகப் புரியவைக்க முடியும். ‘நீர் குடித்தான்’ என்பது வேற்றுமைத் தொடர். ‘நீரைக் குடித்தான்’ என்பது வேற்றுமை வரி. இவ்விரண்டு தொடர்களிலும் நீர் என்பதும் குடித்தான் என்பதும் தழுவியே நிற்கின்றன என்பதை அறியலாம். ஆனால் நீர்க்குடம் என்று ஒரு தொடரை எடுத்துக் கொள்ளலாம். இது ‘நீரை உடைய குடம்’ என விரியும். ‘நீர்க்குடம்’ என்பதில் நீரும் குடமும் ஒன்றையொன்று தழுவி நிற்கிறது. ஆனால் ‘நீரை உடைய குடம்’ என்பதில் ‘நீரை’ என்ற சொல்லையும் ‘குடம்’ என்ற சொல்லையும் தழுவவிடாமல் ‘உடைய’ என்னும் சொல் தடுக்கிறது. (அதனால் நீர்க்குடம் என்பதை வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்பர்) நீரை உடைய குடம் என்பதைத்தான் தழாஅத்தொடர் என்கிறோம். இந்தத் தழாஅத்தொடர் என்னும் புணர்ச்சியிலக்கணக் குறியீட்டைக் கவிஞர் ஒருவர் பொருத்தமான இடத்தில் உவமமாகக் கொள்கிறார்.

    தலைவன் தழுவாத தலைவி

    தினைப்புனம் காக்கிறாள் தலைவி. அவள் நோக்கம் அங்குவரும் தலைவனைக் கண்டு மகிழ்வதே!. ஆனால் செவிலி அங்கு வந்து அவளை அழைத்துச் செல்கிறாள். தன்னோடு அண்மையாக வேண்டிய தலைவனைச் சேயனாக்கிச் செவிலியோடு இணைந்து இல்லம் திரும்பும் நிலையைக் கூறித் தலைவி தோழிக்கு அறத்தோடு நிற்பதை,

    “விழாத்தொறும் நூல்வெளியாக்கி என்றென்றும் விரிவுரைசெய்
    குழாத்தொடு தொண்டு செய்து ஓங்கும்கரந்தை குளிர்புனம் விட்டு
    அழாத்துயரோடு எமர் ஆணையிற்சோலை “அன்பர் வரின்
    தழாத் தொடர் ஆயினம்” என்று உரை சாற்றுவீர் எம் தத்தையரே”

    (கரந்தைக் கோவை)

    என்று பாடுகிறார் கவிஞர். ‘தன்னைத் தேடிவரும் தலைவரோடு தழாஅத் தொடர் ஆயினம்’ என்னும் தொடரில் தலைவனைத் தழுவாத, (தழுவ இயலாத) தன்னிலையைத் தழாஅத்தொடரோடு ஒப்பிடும் அருமை அறிக. நீரையும் குடத்தையும் ‘உடைய’ என்னும் சொல் தழுவவிடாமல் தடுக்கிறதாம்.  தலைவனையும் தன்னையும் செவிலி தழுவவிடாமல் தடுக்கிறாளாம். எனவே தழுவு தொடராயிருக்க வேண்டிய அவள் தழாஅத்தொடர் ஆனாளாம். இலக்கணத்தை இனிக்க வைக்க இப்படியும் ஒரு முயற்சி!

    மெல்லினம் விகாரமான கதை

    இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிஞர்களில் தமது சிந்தனையால் தனித்து விளங்குபவர் கவிஞர் அப்துல் ரகுமான். தனித்தன்மை மிக்க கருத்துக்கள், அளவையியல் சார்ந்து, அழகியல் குறையாமல் வெளிப்பட்டு நிற்கும் பாங்கை அவர்தம் கவிதைகளில் காணலாம். அகல்விளக்குகளாக இருக்க வேண்டிய பெண்களை ‘ஆண்கள் அடிமைப்படுத்தினார்கள்’ என்ற ஒரே ஒரு முழக்கத்தை முன்னிலைப்படுத்தித் தெருவிளக்குகளாக மாற்றி வைத்திருக்கும் கொடுமையை இன்றையச் சமுதாயம் செய்து கொண்டிருக்கிறது. அதற்குப் ‘பெண்ணுரிமை என்றும் பெயர் கொடுத்துத் தன் பெருமையை இழந்து கொண்டிருக்கிறது. பெண்மையின் அடர்த்தியைப் புரிந்து ஆற்றலைத் தெளிந்து, அதனை வணங்குவது வேறு. உரிமையளிப்பதாகச் சொல்லி அவர்களைத் தந்திரமாக அலுவலகத்துக்கு அனுப்பி உழைக்கச் செய்து அவர்தம் உழைப்பைச் சுரண்டுவது என்பது வேறு. இது தனித்த ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. ஆனால் இதுபற்றிய அப்துல் ரகுமான் கருத்து மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அக்கருத்தை அவர் உவமை வழியாக வெளிப்படுத்தும் பாங்கும் அளவையியல் நெறியும் மிகுந்த கவனத்திற்குரியதாகிறது.

    “பெண்ணே!
    உன் தளைகளை அகற்றும்
    ஆவேசத்தில்
    வாழ்க்கைக்கு ஆதாரமான
    பந்தங்களையும் அல்லவா வெட்டிவிட்டாய்!
    முன்பு
    புறம் உனக்கு
    மறுக்கப்பட்டது.
    இப்பொழுது
    அகத்தை நீ
    மறுதலிக்கிறாய்.
    மெல்லினமே!
    வல்லினமாகும் முயற்சியில்
    விகாரமாகி விட்டாயே”

    மேற்கண்ட கவிதை வரிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் மிகவும் ஆழமான சிந்தனைக்குப் பிறகு செய்யப்பட்ட பதிவுகளாகும். தளையும் பந்தமும் ஒரு பொருள் குறித்த இருசொல்லாயினும் இருவேறு நிலைப்பாடுகளைக் குறிக்கும். தளை பந்தமாகிறபோது பாட்டு இனிமையாகிறது. பந்தம் தளையாகிறபோது பாட்டு கசக்கிறது. தளை இலக்கண நெறி. பந்தம் இலக்கண உறவு. மறுக்கப்பட்ட புறத்தைப் பெறவேண்டிய பெண், மயக்கத்தால் தனக்குரிய அகத்தை மறுதலிப்பதையும், மெல்லினமாக இறைவனால் படைக்கப்பட்ட பெண், ஆணைப் போல் வல்லினமாக வேண்டும் என எண்ணியதன் விளைவாக இறுதியில் விகாரமாகி நிற்கின்றாள் என்ற உண்மையையும் இலக்கணக் குறியீடுகளால் சுட்டிக்காட்டும் உவமத்திறன் பெரிதும் சுவைத்தற்குரியது.

    நிறைவுரை

    மேற்சொல்லப்பட்ட இலக்கணக் குறியீடுகளை உவமமாகப் பயன்படுத்துவதில் கவிஞர் பலரும் ஈடுபட்டு வந்திருந்தாலும் எண்ணிக்கையில் மிகக்குறைந்த விழுக்காட்டினரே இதில் வெற்றி பெற்றுள்ளனர். ஆழ்ந்த இலக்கணப்புலமையும் இலக்கணக் குறியீடுகளுக்கான ஆழ்பொருளை நன்கு உள்வாங்குதலும் அவற்றை மறித்து நோக்கும் பேராற்றலும் பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்தலும் பொருளுக்கான பொருத்தத்தை நன்கு சிந்தித்து அமைத்தலுமாகிய ஆற்றல் எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை.  கவிப்பேரரசர் பலரும் வெல்ல முடியாத இந்தக் கவிதைத் தொழில் நுட்பம் அறிவும் உணர்வும் உணர்ச்சியும் கலந்த கலவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 19

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 19

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள் – 5

    முன்னுரை

    உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியரே இலக்கியம், இலக்கணம் என்னும் இரண்டனுக்கும் உரைகண்ட சான்றோர். பரிமேலழகரின் திருக்குறள் இலக்கிய உரையை அறிஞருலகம் இலக்கண உரை என்றே பெருமைப்படுத்தும். அச்சிறப்பு நச்சினார்க்கினியருக்கும் பொருந்தக்கூடும். இவருடைய இலக்கண உரைகளில் இலக்கிய மணம் வீசும். இலக்கிய உரைகளில் இலக்கணத் தெளிவு மேலோங்கி நிற்கும். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சிந்தாமணி முதலிய நூலுரைகளைக் கற்பார் இதனை அறியலாம். ஆழ்ந்த தமிழ்ப்புலமை, பல்லாயிரம் வரிகளை மனத்துக்குள் இருத்திக்கொள்ளும் பேராற்றல், ஆராய்ச்சி அறிவு, பல்துறை அறிமுகம், மக்களின் நடப்பியல் வாழ்வியல் நெறிகள் பற்றிய நோக்கு, வடமொழிப் புலமை என்னும் இவற்றின் பரிமாணமாக விளங்கும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரைப்பகுதிகளில் காணப்படும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    இலக்கியத்துள் காணும் இலக்கண நுட்பம்  

    நச்சினார்க்கினியர் உரைக்கருத்துக்களில் மட்டும் பிற உரையாசிரியர்களிடமிருந்து வேறுபடுபவரல்லர். அவருடைய பரந்துபட்ட இலக்கியப் புலமை இலக்கண உரைக்குப் பயன்படுவதைப் போலவே ஆழமான இலக்கணப் புலமை  இலக்கிய உரைகளுக்குப் பயன்படுகிறது. எனவே இருவகை உரைகளிலும் அவ்விருவகை உரையாசிரியர்களிடமிருந்து நோக்கு, உத்தி முதலிய எல்லாவற்றிலும் மாறுபடுகிறார். இலக்கியங்களை எடுத்துக்காட்டி இலக்கண விளக்கம் தரும் நச்சினார்க்கினியர்  இலக்கிய வரிகளையே உவமமாக்கி விளக்கம் தருவதும் உண்டு. ஏனைய உரையாசிரியர்களும் இவ்வாறு உரைவிளக்கம் செய்தாலும் இவருடைய இலக்கியப் புலமை தனித்தன்மை மிக்கதாய் விளங்குகிறது.

    விளியேற்பதில் உயிரீறும் மெய்யீறும்

    பெயர்ச்சொற்கள் இயல்பாக நின்றும் விளியாகும். சில மாற்றங்களைக் கொண்டும் விளியாகும். அத்தகைய மாற்றங்களுள் அஃறிணைப் பெயர்களும் அடங்கும். அவ்வஃறிணைப் பெயர்கள் விளியேற்குங்கால் இறுதி பற்றி மாறுபடும்.  புள்ளியீற்று அஃறிணைப் பெயர்களும் உயிரீற்று அஃறிணைப் பெயர்களும் விளியேற்குங்கால் ஏகாரம் பெறும் என்பது விதி.

    புள்ளியும் உயிரும் இறுதி யாகிய
    அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
    விளிநிலை பெறூஉம் காலந்தோன்றின்
    தெளிநிலை உடைய ஏகாரம் வரலே”151

    என்னும் நூற்பாவில் இந்தக் கருத்து பெறப்படுகிறது. மரம், ‘மரமே!’ என்றும் அணில் ‘அணிலே!’ என்றும் நாய் ‘நாயே!’ என்றும் புலி ‘புலியே!’ என்றும் விளிக்கப்படும்.   இவ்வாறின்றி ஏகாரம் பெறாமலும் விளியேற்கும் நிகழ்வுகளை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன. அஃறிணை நோக்கிப் புலம்பும் தலைமக்கள் கூற்று அவ்வாறு அமைந்திருக்கின்றன. அத்தகைய பயன்பாடு முழுவதையும் தொகுத்துத் தர எண்ணும் நச்சினார்க்கினியர் சிலவற்றை மட்டும் உவமமாகக் காட்டி விளக்குவதைக் காணமுடிகிறது.

    “வருந்தினை வாழி என் நெஞ்சம்!’ (அகம் -19:2)

     ‘கருங்கால் வெண்குருகு! ஒன்று கேண்மதி.’ (நற். 54)

    என்றாற் போலப் “பிறவாற்றான் விளி ஏற்பனவும் கொள்க”. மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் ‘நெஞ்சம்’ என்னும் மகர ஈறு ‘நெஞ்சம்’ என்றும், குருகு என்னும் உகர ஈறு ‘குருகு’ என்றும் விளிகொள்வதைக் காணலாம். சேனாவரையர் இத்தகைய எடுத்துக்காட்டுக்களைத் தந்து ‘தொடக்கத்தன’ என அமைதி கொள்கிறார். நச்சினார்க்கினியர் இவற்றை உவமமாக்கி, இவைபோல விதிக்கு வேறுபட்டும் வேறு சில நெறிகளிலும் விளியேற்பன உளவென விளக்குவதைக் காணலாம். அஃறிணைப் பெயர்களில் மகர ஈறும் உயிரீறும் வேறுவகையாக விளிகொள்ளும் பாங்கு இலக்கியங்களில் செறிந்து கிடக்கும் அளவையும் நுட்பத்தையும் நோக்கி அவற்றுள் சிலவற்றை உவமமாக்கிக் கூறும் நச்சினார்க்கினியரின் உவமத்திறன் போற்றத்தக்கதாய் உள்ளது.

    எழுத்தும் இறைவனும்

    அகர முதல் னகர இறுவாய் முப்பது எழுத்துக்களும் முதல் எழுத்துக்கள் எனத் தொகுத்துச் சொன்ன தொல்காப்பியம் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு, மெய்யெழுத்துக்கள் பதினெட்டு என்பதைப்பின்னாலே விவரிக்கிறது.  அவற்றுள் உயிரெழுத்துக்களைக் கூறும் நூற்பா,

    ஔகார இறுவாய்ப்
    பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப” 8

    என்றவாறு அமைகிறது. இந்த நூற்பாவின் விளக்கத்தில் நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் உவமத்தின் கொடுமுடியையும் அவருடைய ஆழமான பக்தியையும் சித்தாந்தப் பார்வையையும் ஒருங்கே காட்டுகிறது எனலாம். உயிரெழுத்துக்கள் மெய்களை இயக்குவதால் தனியாக அவை உயிரெனப்படுமா என்னும் ஐய வினாவை அவராகவே எழுப்பிக் கொண்டு அதற்கான விளக்கத்தையும் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

    மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வரிவடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்குமேல் உயிரென வேறோர் எழுத்தின்றாம் பிறவெனின், “மெய்யில் நிற்கும் உயிரும் தனியே நிற்கும் உயிரும் வேறென்க.! என்னை? ‘அகர முதல’ (குறள் – 1) என்றுழி அகரம் தனியுயிருமாய்க் ககரவொற்று முதலியவற்றிற்கு உயிருமாய் வேறு நிற்றலின். அவ்வகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அம்மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாதலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதொரு தன்மையையுடைத்தென்பது கோடும்,. “இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல

    உவமத்தை உவமத்திற்காகவே சொல்லுவது வேறு. இலக்கியத்தின் பயன்நோக்கிக் கையாள்வது என்பது வேறு. ‘அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயன்’ என்னும் தமிழிலக்கியப் பயன் கோட்பாடு காணப்படுவது இலக்கணத்திலேயே என்பதை நன்குணர்ந்த நச்சினார்க்கினியர் இலக்கண விளக்கத்திற்காகக் கையாளப்படும் உவமமும் கற்பாருக்கு நாற்பொருளையும் பயத்தல் வேண்டும் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் உவமம் கூறுவதைக் காணமுடிகிறது. முதற் குறட்பாவில் கடவுளின் உண்மையை, அதாவது கடவுள் இருக்கிறார் என்னும் அவரது இருப்பைக் கூறிய திருவள்ளுவரை நினைவுபடுத்தி மொழியிலக்கணம் கற்கின்ற மாணவருக்கும் அவ்வுண்மையை உணர்த்த வேண்டும் என்னும் கடமை உணர்வோடு சிந்திக்கத்தக்கதோர் உவமத்தை நச்சினார்க்கினியர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை அறியலாம். அதாவது உயிரின்றேல் மெய்யின் இயக்கம் இல்லை. இறைவன் இன்றேல் உலக இயக்கம் இல்லை என்பதாம்.

    உயிருக்குள் அகரமுண்டா?

    மெய்கள் இயங்குதற்கு அகர உயிர் காரணமென்பதைத் தொல்காப்பியம்,

    ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ 46

    என்னும் நூற்பாவில் விளக்குகிறது. தனிமெய்களினது நடப்பு அகரத்தொடு பொருந்தி நடக்கும் என்பது இதன் பொருள். நடப்பு என்பது ஒலிவடிவையும் வரிவடிவையும் குறிக்கும் அகரம் தவிர்த்த ஏனைய உயிர்கள் இயங்குவதற்கு அகரம் காரணமாவது யாங்ஙனம்? இதுபற்றித் தொல்காப்பியம் கூறியிருக்கிறதா என்னும் வினாவை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தாமே எழுப்பிக் கொண்டு அதற்கான விடைகாண முயல்கிறார். சென்ற பத்தியில் விளக்கிய அவ்வுவமத்தின் பேராற்றலை முற்றும் உணர்ந்தவராய் எழுதுகிறார்.

    இங்ஙனம் மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு கூறினாற்போல பதினோருயிர்க்கண்ணும் அகரம் கலந்து நிற்கும் என ஆசிரியர் கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு என்று உணர்த்துதல் அரிதாகலானுமென்று உணர்க

    இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும்  பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது’.

    அகரமுதலஎன்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம், அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றாலும், கண்ணன்எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானேஎனக் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க

    என்பது நச்சினார்க்கினியரின் உவம விளக்கம். உயிர் மற்றும் மெய் ஆகியவற்றின் இயக்கத்திற்கு அகரமே காரணமாகி நிற்கும் நுண்ணியத்தை   இறைத்தன்மையை  உவமமாக்கி விளக்கும் நச்சினார்க்கினியர், வள்ளுவர் கூறிய உவமத்தையும் வழிமொழிவதைக் காணமுடிகிறது.

    நிலத்தது அகலம் போல

    குற்றியலுரகத்தை நெடில், உயிர், வன்மை, மென்மை, இடைமை, ஆய்தம் என்னும் ஆறுவகையாகப் பாகுபடுத்தினர் இலக்கண ஆசிரியர்கள். தொல்காப்பியம் இதனை,

    நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
    குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே” 36

    என்னும் நூற்பாவில் சிந்திக்கிறது. “வல்லெழுத்துக்கள் ஆறினையும் ஊர்ந்து நெட்டெழுத்தின்பின்னும் ஐவகைத் தொடர்மொழியின் இறுதியிலும் நிற்றல் வேண்டும்” என இதற்கு நச்சினார்க்கினியர் பதசாரம் தருகிறார். குற்றியலுகரத்தின் முன்னெழுத்து கொண்டு பெயர் பெறுவது ஆறுவகைக்கும் பொதுவாக இருந்தாலும் தொல்காப்பியம் நெடில் தொடரைத் தனித்து ‘நெட்டெழுத்து இம்பரும்’ எனப் பிரித்தாளுகிறது. இது பற்றிச் சிந்திக்கும் நச்சினார்க்கினியர், உண்மையில் இது பிரிப்பன்று. ஈரெழுத்தில் அமையும் நெடில் தொடரும் தொடர் மொழியில் அமையும் ஏனைய ஐவகைக் குற்றியலுகரமும் ஈறுபற்றியதே. எனவே இதனைத் தனியாகக் கருதுதல் வேண்டாம்.

    நெட்டெழுத்தினது பின், தொடர்மொழி ஈறு என்பன நிலத்தது   
    அகலம் போல ஒன்றியற் கிழமைப்பட்டு நின்றன.”

    என்பது நச்சினார்க்கினியரின் உவம விளக்கம். இந்த விளக்கத்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் தனியாகாது, ஏனைய ஐந்துடன் ஒன்றி, ஆறே என்பதைப் பெறவைக்கிறார். வைத்து, தமது அளப்பரிய நினைவாற்றலுடன் “தொடர் மொழியீற்று” (36) வருமென்று ஆண்டுக் கூறியதனை ஐந்து வகைப்படுத்தி, அதனோடு நெட்டெழுத்து இம்பரும் என்றது ஒன்றேயாதலின் அதனையும் கூட்டி அறுவகைத்தென்றார்” (406) என்று நினைவூட்டுகிறார். நிலத்தது அகலம் என்னும் உவமம் குற்றியலுகரம் ஆறே என்பதை உறுதி செய்கிறது எனலாம்.

    நிறைவுரை

    இலக்கியத்திற்கு உரை எழுதுங்கால் இலக்கணத்தை மறக்காமலும் இலக்கணத்திற்கு உரைகாணுங்கால் இலக்கிய உணர்வோடும் எழுதுவது நச்சினார்க்கினியருக்கே உரிய சிறப்பு. இலக்கியப் பகுதிகளையே இலக்கண விளக்கத்திற்கு உவமமாக்கும் அவர், தமிழ்மொழியின் ஏனைய எழுத்துக்களில் அகரத்தின் ஆதிக்கத்தை இறைவனோடு பொருத்தி நோக்கிப் பொருத்தம் காட்டுகிறார். திருக்குறளின் உவமக் கோட்பாட்டில் ஈடுபாடு காட்டுகிறார். தலையின்றிக் கூந்தல் இல்லையாதல்போல நெடில்தொடர் இன்றிக் குற்றியலுகரம் நிறைவு பெறாது என்பதை ‘நிலத்தது அகலம்’ என்னும் உவமம் கொண்டு விளக்குகிறார். பானைச் சோற்றுக்குப் பதசோறாக அமைந்த இந்தக் கட்டுரை நச்சினார்க்கினியரின் ஏனைய இலக்கண, இலக்கிய உவமங்களைக் கண்டறிந்து துய்ப்பதற்கு ஏதுவாகலாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 18

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 18

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 4

    முன்னுரை

    ஒரு நூல் எழுதி உலகப்புகழ் பெறுவது தமிழ்ப்புலவர் பெருமக்களுக்கு வெகு இயல்பு. திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய படைப்பிலக்கியங்களைப் போலவே உரையிலக்கியத்திலும்; இந்தப் போக்கு காணப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு மட்டும் உரையெழுதிப் பெருமையுற்றவர் இளம்பூரணர் என்றால் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரையெழுதித் தனது பெயரை நிலைநிறுத்தியவர் சேனாவரையர். மக்கள் சமுதாயமே மொழியியலின் தாயகம் என்பதை உணர்ந்த தொல்காப்பிய நெறியில் தோய்ந்த அன்னார் தமது உரைகளில் வழக்குப் பற்றிய பலவற்றை இலக்கண விளக்கத்திற்காக உவமங்களாகப் பயன்படுத்தியிருக்கிறார். உலக வழக்கில் உள்ளனவற்றை உவமமாக்குதல், ஓர் உவமைக்குப் பல விளக்கங்கள் தருதல், ஓர் இலக்கண விளக்கத்திற்குப் பல இலக்கியங்களிலிருந்து உவமம் காட்டுதல், இலக்கணத்திற்கு மற்றொரு இலக்கணத்தையே உவமமாகக் கொள்ளுதல், பிறதுறை பயிற்சியினால் உவமங்களைக் கையாளுதல் எனப் பன்முகமாக அமைந்த சேனாவரையர் சொல்லதிகார உரையில் காணப்படும் உவமங்கள் சிலவற்றின் சிறப்பினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    சொற்களை அமைத்தலா? ஆக்குதலா?

    ‘கிளவியாக்கம்’ என்னும் தலைப்பில் அமைந்த சொல்லதிகாரத்தின் முதலியல் தமிழின் சொல்வழக்கில் உள்ள வழுக்களைச் சுட்டுதல், வழுவகற்றி அவற்றை வழங்க வேண்டுதல், சில காரணம் பற்றி அவ்வழுக்களை அமைத்துக் கொள்ளுதல் என்னும் முப்பெரும் கூறுகளை ஆராய்வதாக அமைந்திருக்கிறது. இம்மூன்று கூறுகளும் மொழிக்கட்டமைப்பைக் காக்கும் தலையாய நோக்கத்துடன் பெரிதும் தொடர்புடையன. சேனாவரையர் இவ்வதிகார நூற்பாக்களைப் பன்முறை நோக்கி, அவற்றின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ‘கிளவியாக்கம்’ என்னும் இயல் தலைப்பின் பெயர் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். வழு சுட்டுதல், வழுவற்க எனல், வழுவமைத்துக் கொள்ளுதல் என்னும் மூன்றும் சொற்களை ஆக்கிக் கொள்ளும் நெறிமுறைகளே எனக் கருதுகிறார். எனவே ‘சொற்களை ஆக்கிக் கொள்ளுதல்’ அதாவது ‘கிளவிகளை ஆக்கிக் கொள்ளுதல்’ என்பதை உணர்த்தும் பகுதிக்குக் ‘கிளவியாக்கம்’ என்னும் பெயர் பொருத்தமே என்னும் முடிவுக்கு வருகிறார்.

    “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்கமாயிற்று. ஆக்கம் அமைத்துக் கோடல். நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசி ஆக்கினார் என்பவாகலின். சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கமாயிற்று எனினும் அமையும்”

    மேற்கண்ட பகுதியிலிருந்து ‘மொழிசார்ந்த இலக்கணமேயானாலும் அவர் மக்கள் சமுதாயத்திலிருந்தே அவ்விலக்கணத்தை நோக்கியிருக்கிறார் என்பது புலனாகும். ‘அமைத்ததை’ ‘ஆக்கியது’ எனத் தொல்காப்பியர் கூறியிருப்பதற்குத் தொல்காப்பியர் கால வழக்கே காரணம் என்பது சேனாவரையர் உள்ளக்கிடக்கை. ‘கிளவியாக்கம்’ என்னும் தொடருக்குப் பொருள்கொள்வதில் தெய்வச்சிலையாரைத் தவிர ஏனைய உரையாசிரியர்கள் பெரும்பாலும் ஒத்த கருத்தினை உடையவர்கள் என்பதை அவரவர் உரைகளால் அறிய முடிகிறது. இருப்பினும் ஏற்ற சொற்களை அமைத்துக் கொள்ளுதலுக்குச் சேனாவரையர் கூறிய உவமத்தின் பொருள்புலப்பாட்டுத்திறன், ‘கிளவியாக்கம்’ என்னும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் பிறர் சொன்ன கருத்துக்களை நோக்கினால் நன்கு புலப்படும். ‘நொய்யும் நுறுங்கும்’ என்பது வழுக்களைக் குறித்தன. அவை களையப்பட்ட அரிசி உணவுக்காவது போல வழுக்களைந்த சொற்களே மொழிக்கு ஆக்கமாகும் என்பது உவமத்தாற் பெறப்படும் கருத்தாகும். உரையாசிரியர்களில் சேனாவரையர் மட்டுமே இந்த உவமத்தைக் கையாண்டு பொருள் விளக்கம் தந்திருக்கிறார். அவ்வுவமையால் கிளவியாக்கம் என்னும் முதல் இயலின் உள்ளடக்கம் முழுமையும் தெளிவாகி விடுவதைக்  காணலாம்.

    இரட்டைக் கிளவி ஒரு சொல்லா? பல சொற்களா?

    தமிழில் ஓர் எழுத்து தனித்து நின்று பொருளுணர்த்தும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் இணைந்து ஒரு சொல்லாக நின்றும் பொருளுணர்த்தும். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து நின்று தொடராகப் பொருளுணர்த்தும். இவற்றோடு ஒரே சொல் இரட்டித்து நின்றும் பொருளுணர்த்தும். அவ்வாறு அது பொருளுணர்த்துங்கால் குறிப்புப் பொருளாகவே வெளிப்படும். சான்றாக ஒருவன் பற்களைக் கடித்துத் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவதை வழக்கில் மக்கள் ‘அவன் பற்களை நறநறவென்று கடித்தான்’ என வழங்குவர். ‘நறவு’ என்னும் தமிழ்ச்சொல்லுக்குத் ‘தேன்’ என்று பொருள். இங்கே தேனுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை. ‘நற’ என்னும் சொல் இரண்டுமுறை அடுக்கிவந்து பற்களைக் கடித்தவன் பாங்கினைக் குறிப்பாகப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறு ஒரே சொல் இரட்டித்து நின்று குறிப்புப் பொருளைச் சுட்டுவதை ‘இரட்டைக் கிளவி’ என்பது தமிழிலக்கண வழக்கு. இந்தக் குறிப்புப் பொருள் இசை, பண்பு, வினை என்னும் மூன்றினையும் சார்ந்து வரும். இவ்வாறு அமையும் இரட்டைக் கிளவிக்குள் இரண்டு சொற்கள் இருந்தாலும் அது ஒருசொல்லாகவே கருதப்படும் என்பது சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் கருத்து. ‘ஒரு சொல்லாய் நின்று அப்பொருள் உணர்த்திற்று’ என்பது சேனாவரையர் உரைப்பகுதி. இரண்டு சொற்களை ஒரே சொல்லாகக் கருதமுடியுமா என்பதற்கான விடையை விளக்குவதற்காகச் சேனாவரையர் காட்டுகிற உவமம் மக்கள் வழக்குச் சார்ந்ததாக அமைந்திருக்கிறது.

    “ஈண்டு இரட்டைக் கிளவி என்றது, மக்களிரட்டை விலங்கிரட்டைபோல வேற்றுமையுடையனவற்றையன்றி, இலையிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை”

    என்பது இரட்டைக்கிளவியின் அமைப்பை விளக்குதற்குச் சேனாவரையர் காட்டும் உவமம்.  மக்களிலோ விலங்குகளிலோ இரட்டை என்றால் அவை ஒரே தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அவை தனித்தனியானவை. இரட்டைக்கிளவி அவை போன்றதன்று. இலைகளிலோ பூக்களிலோ இரட்டை என்றால் ஒன்றாகவும் இருக்கும் இரண்டாகவும் அமையும். ‘இரட்டைக்கிளவி’ என்பதும் இது போன்றதுதான் என்பதே சேனாவரையர் விளக்கம். இரட்டைக்கிளவியில் அமைந்திருக்கும் இரு சொற்களில் முன்னது குறைசொல்லாகவும் பின்னது முழுச்சொல்லாகவும் (குறுகுறுத்தான், கடுகடுத்தான், விறுவிறுப்பு — இவற்றுள் முன்னவை குறைசொல்லாகவும் பின்னவை முழுச்சொல்லாகவும் இருப்பதை நோக்கினால் சேனாவரையர் காட்டும் உவமம், இலக்கணப் பொருள் புலப்பாட்டுக்குச் செய்யும் பேருதவியைப் புரிந்து கொள்ள முடியும். ‘வில்வமரத்து இலைகள் புறத்தோற்றத்தில் மூன்றாகத் தோன்றினாலும் உண்மையில் அது ஓரிலையே’ என்பதாக விளக்கும் அறிஞர் சுந்தரமூர்த்தியின் கருத்து விளக்கமும் இங்கே சுட்டத்தகுந்ததாம். ‘இரட்டை’ என்னும் பன்மையும் ‘கிளவி’ என்னும் ஒருமையும் இணைந்தமைந்த ஒரு சொல்லாட்சியின் அடிப்படையை விளக்கப் பழந்தமிழ் உரையாசியர்கள் தொடங்கித் தற்கால இலக்கண அறிஞர்கள் முடியச் செய்திருக்கும் ஆய்வுகள் சிந்தனைக்கு விருந்தாக உள்ளன.

    ஆ தீண்டு குற்றியும் அந்தநாள் வழக்கும்

    சொல்லளவில் ஒன்றாக இருப்பது பொருள்நிலையில் மாறுபடும். இதற்குப் பலபொருள் ஒரு சொல் என்று பெயர். இது  பலபொருளைக் குறிப்பது வினை, இனம், சார்பு என்னும் முத்திறத்தால் அமையும். இம்முத்திறத்தாலும் அமையும் அல்லது பொருளுணர்த்தும் பலபொருள் ஒருசொல்லை வினையால் மட்டுமே வேறுபடும் எனத் தொல்காப்பியம் கூறியிருப்பதற்குச் சேனாவரையர் வழக்குச் சார்ந்த உவமத்தைப் பயன்படுத்தி விளக்கமளிக்கிறார். பழங்காலத்தில் பசுக்கள் உடல் தினவு எடுத்தால் உராய்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே மரக்கட்டைகளை நட்டிருப்பர். பசுக்களேயன்றி ஏனைய விலங்குகளும் தங்கள் உடல் தினவுகளைத் தீர்த்துக் கொள்ளும் அந்தக் கட்டையை மக்கள் வழக்கில் ‘ஆ தீண்டு குற்றி’ என்றே வழங்குவர். தினவு தீர்த்துக்கொள்ளும் விலங்குகளில் பசுக்கள் சிறப்புடைமையின் அதனை முன்னிறுத்தி ‘ஆ தீண்டு குற்றி’ என்றேயழைத்தனர். அந்த வழக்கியல் நிகழ்வை உவமமாக்கிக் கொள்கிறார் சேனாவரையர். ‘பல விலங்குகளும் பயன்படுத்திக் கொள்ளும் குற்றியை ‘ஆ தீண்டு குற்றி’ எனப் பசுவை மட்டும் விதந்து கூறுவதுபோலப், பலபொருள் ஒருசொல்லைப் பொருள் வேறுபடுத்தும் கூறுகள் இனம், சார்பென இருப்பினும் வினையின் சிறப்பு நோக்கி ‘வினைவேறுபடூஉம் பலபொருள் ஒருசொல்’ என்றார் என விளக்கமளிக்கிறார்.

    மா பூத்தது என்பது ஒரு தொடர். மாவும் மருதும் வளர்ந்தன என்பது ஒரு தொடர். கவசம் பூட்டிய வீரன் மாவைக் கொணர்க என்பது ஒரு தொடர். இம்மூன்று தொடர்களிலும் மா என்னும் ஒரு சொல் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கிறது. முதல் தொடரில் ‘பூத்தது’ என்ற வினையால் அது ‘மரம்’ என்பது பெறப்படும். இரண்டாவது தொடரில் ‘மருது’ என்னும் இனத்தால் ‘மா’ என்பது மரம் என்பது பெறப்படும். மூன்றாவது தொடரில் மருதமாகிய சார்புநிலையால் ‘மா’ என்பது குதிரை என்பது பெறப்படும். இம்மூன்றனுள்ளும் வினையால் வேறுபடுவதே பெரும்பான்மை என்பது அறிக.

    “இனமும் சார்பும் உளவேனும் வேறுபடுத்தற்கண் வினை சிறப்புடைமையின், அதனாற் பெயர் கொடுத்தார், ஆதீண்டு குற்றி என்பதுபோல”

    என்பது சேனாவரையர் தரும் உவம விளக்கம். பலபொருள் ஒருசொல்லின் பொருள் வேறுபாடு ‘வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் தேறத்தோன்றும்’ எனப் பின்னால் தொல்காப்பியம் கூறியிருந்தாலும், அது பற்றிய அறிமுக நூற்பாவில் இரண்டினை ஒழித்து, வினையை மட்டும் முன்னிறுத்தியமைக்கான காரணம் சேனாவரையரின் இந்த உவம விளக்கத்தால் அறியப்படுவதோடு, பழங்காலச் சமுதாய வழக்கங்களில் ஒன்றினையும் அறிந்து கொள்ள முடிகிறது.

    நிலவு கருப்பென்பாரும் உளர்

    பால் வெண்மை என்பதே சரி. பால் வெண்மையானது என்பது தவறு. காரணம் பாலுக்கு வெண்மை இயல்பு. இயல்பான நிறத்தை அப்படியே சொல்லவேண்டுமேயன்றி ஆனது என ஆக்கம் வரவழைத்தல் கூடாது. ‘தனது இயல்பில் திரியாது நின்ற பொருளை அதனது இயல்பு கூறுங்கால் ஆக்கமும் காரணமும் கொடாது இத்தன்மைத்து’ எனச் சுட்ட வேண்டும் என்பது தொல்காப்பிய விதி. அதாவது நீருக்குக் குளிர்ச்சியும் நெருப்புக்கு வெம்மையும் காற்றுக்குத் திரிதலும் நிலத்துக்கு உறுதியும் இயல்பானது. தண்ணீர் குளிர்ச்சி ஆனது என்பது பிழை வழக்கு. அந்தந்தப் பொருளுக்கான மேற்கண்ட தன்மையைக் குறிக்குமிடத்து நீர் தண்ணிது, தீ வெய்யது, காற்று உளரும், நிலம் வலிது எனக் கூறல் வேண்டுமேயன்றி நீர் தண்ணிது ஆயிற்று, தீ வெம்மை ஆயிற்று, காற்று உளர்தல் ஆயிற்று, நிலம் வலிதாயிற்று என ஆக்கச்சொல் வருவித்து உரைத்தல் மரபு வழுவாகும். இம்மரபினை,

    “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்”

    என்னும் நூற்பாவில் தொல்காப்பியம் சுட்டுகிறது. சிலர் ‘நிலம் வலிதாயிற்று’ என இயற்கைப் பொருளை ஆக்கத்தோடு கூறுவது பற்றிச் சேனாவரையர் சிந்தித்து எழுதுகிறார்.

    முதற்கண் எந்தெந்த இடத்தில் இயற்கைப் பொருளை ஆக்கத்தோடு கூறுவதை அமைத்துக் கொள்ளலாம் என்பதனை விளக்கிக் காட்டுகிறார். இயற்கையான நிலத்தில் கருங்கல், செங்கல் ஆகியவற்றையெல்லாம் இட்டு வன்னிலமாக மாற்றியதொன்றை நிலம் வலிதாயிற்று என்றால் சொல்பவன் நிற்கும் இடம் இயற்கை நிலமன்று. ஆதலின் அது பிழையன்று.

    சேற்று நிலத்தில் நின்ற ஒருவன் பின் இயற்கையான நிலத்தில் நிற்பானாயின் பின்னது முன்னதின் வலிமையுடைத்து என்பதனால் அதுவும் பிழையன்று.

    மேற்கண்ட இரண்டு இடங்களிலும் ‘நிலம் வலிதாயிற்று’ என்பது ஒப்பீட்டுத் தன்மை கொண்டது. ஆனால் இத்தகைய சூழல்கள் ஏதுமின்றி ‘இயற்கை நிலத்தில் நின்று கொண்டே ‘நிலம் வலிதாயிற்று’ என ஒருவன் கூறினால் அது மரபுவழுவாம். இவ்வாறு ஒருவன் கூறுவது ‘நிலவு கரிய நிறம் உடையது’ என்று கூறுவதுபோல் என விளக்கமளிக்கிறார்  சேனாவரையர்.

    “நிலம் வலிதாயிற்று’ என இயற்கைப் பொருள் ஆக்கம் பெற்று வருமால் எனின்…. கல்லும் இட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப்பட்ட நிலத்தை வலிதாயிற்றெனின் அது செயற்கைப் பொருளேயாம். நீர் நிலமும் சேற்று நிலமும் மிதித்துச் சென்று வன்னிலம் மிதித்தான் ‘நிலம் வலிதாயிற்று’ என்றவழி மெலிதாயது வலிதாய் வேறுபட்டதென ஆக்கம் ‘வேறுபாடு’ குறித்து நிற்றலின் இயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்ததன்றாம். அல்லது ‘நிலத்திற்கு வன்மை விகாரமென்று’ ஓர்ந்து ‘நிலம் வலிதாயிற்று’ என்னுமாயின் ‘திங்கள் கரிது’ என்பது போலப் பிறழ உணர்ந்தார் வழக்காய் ஆராயப்படாதென்க”

    திங்கள் வெண்மை என்பது உண்மை. வெண்மையைக் கருப்பென்று வழங்குவது  அஞ்ஞானம். மெய்ஞ்ஞானிக்கு விளக்கம் தேவையில்லை. ஞான சூன்யங்களுக்குச் சொன்னால் புரிந்து கொள்ள இயலும். ஆனால் அஞ்ஞானிக்கு அவன் சொல்வதே வேதம். கடுமையான அணுகுமுறையைப் பெரும்பாலும் கைக்கொள்ளாத சேனாவரையர் உலக வழக்குச் சார்ந்த  கடுமையான வெளிப்பாடொன்றை  உவமமாகக் கூறியதன் மூலம் மரபு காப்பதில் தனக்குள்ள உறுதியை வெளிப்படுத்தியுள்ளார் எனக் கருதலாம்.

    நிறைவுரை

    ‘ஆற்றூர் சேனாவரையர்’ என வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படும் சேனாவரையர் நெல்லை மாவட்டத்தில் தாமிரவருணிக்கு அருகில் உள்ள ஆற்றூரைச் சேர்ந்தவர். படைத்தலைவர்களின் வழித்தோன்றலாக இருந்திருக்கக் கூடும் என நம்பப்படும் இவரது உரையின் பன்முகச் சிறப்புக்களில் மக்கள் வழக்குகளை இலக்கண விளக்கத்திற்காக உவமங்களாக்கியனவே பெருமை எனக் கருதப்படுகிறது. சமுதாய வாழ்வியல் நெறிகளையும் நிகழ்வுகளையும் இலக்கண விளக்கத்தில் எடுத்துக்காட்டியவர் வேறு எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெரியபுராணச் சேக்கிழாரை இவரோடு ஒப்பிட இயலும். எதனையும் பரபரக்காது வரவரக் கண்டாய்வதே அறிவுடைமையாம் என்னும் கொள்கையுடையவர் சேனாவரையர். சொல்லதிகாரத்திற்கு இவர் எழுதியிருக்கும் உரையைக் கல்லாதவருக்குப் புலவர் உலகம் ஏற்பளிப்பதில்லை.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 17

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 17

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள் – 3

    முன்னுரை

    கவிச்சக்கரவர்த்திகள் என்னும் பெருமைக்குரியவர் மூவராயினும் கம்பனைத் தனித்துச் சுட்டுவது போலப், ‘பாரதி’ என்பார் பலராயினும் சுப்பிரமணியபாரதியையே சுட்டுமாறு போல இலக்கண இலக்கிய உரையாசிரியர் பலராயினும் அச்சொல் ஒருவரையே சுட்டுமாறு அமைந்திருக்கிறது. அந்தச் சிறப்பினைப் பெற்றவர் ஆசிரியர் இளம்பூரணர். தொல்காப்பிய அடவிக்குள் செல்லத் தடம் காட்டிய தண்டமிழ்ச் சான்றோர். கரையில்லாத் தமது தமிழ்ப்புலமையைக் கறையில்லா உரைசெய்து காலத்தால் அழிக்க முடியாத பெரும்புகழ் கொண்டவர். சேனாவரையம், நச்சினார்க்கினியம் மற்றும் பேராசிரியம் ஆகியவை தனித்தன்மை மிக்க உரைகளாகக் கருதப்படினும் அவற்றின் தனித்தன்மைக்கு மூலமாக இருந்தது இளம்பூரணரின் உரையே என்பதைக் கற்றார் அறிவர். ‘இளம்பூரண அடிகள்’ என அடியார்க்கு நல்லாரால் போற்றப்படும் அன்னார் எழுதிய தொல்காப்பியம் முழுமைக்குமான உரையில் ஆங்காங்கே இலக்கண விளக்கத்திற்காக அவர் பயன்படுத்தியிருக்கும் உவமங்களைப் பற்றிய சுருக்க ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    குலமகளும் கோபுரமும்

    அனைத்துவகைச் சிறப்புக்களை உடையதாயிருப்பினும் ஒரு நூலுக்குப் பாயிரம் என்பது இன்றியமையா ஒன்று. அது அறிமுகம். தோரணவாயில். முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்றெல்லாம் ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு அது அமையும். பொதுப்பாயிரம் எனவும் சிறப்புப் பாயிரம் எனவும் அது பகுக்கப்படுவதும் உண்டு. தொல்காப்பியத்திற்கும் அந்தப் பாயிரம் உண்டு. அதனை எழுதியவர் பனம்பாரனார் என்னும் சான்றோர். அந்தப் பாயிரம் தொல்காப்பியத்திற்கு அமைந்துள்ள பாங்கினை இளம்பூரணர் உவமம் கூறி விளக்குகிறார். ‘புகழ் புரிந்த இல் இல்லோரக்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை’ என்னும் குறட்பாவால் ‘கணவனுக்கு மனைவியே அணிந்துரை’ என்பதைக் குறிப்பிடுவார் திருவள்ளுவர். சிலப்பதிகாரக் காப்பியத்தில் தலைமகள் கண்ணகியைக் கோவலனினும் முற்படுத்தி அறிமுகம் செய்ததும் இது பற்றி என்க. இந்தக் கருத்தினை உள்வாங்கிய அல்லது மனத்தில் எண்ணிய இளம்பூரணர்,

    “பாயிரம் என்பது புறவுரை. அது நூற்குப் புறவுரையேல் அதுகேட்டு என்னை பயனெனின், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள்போல  இன்றியமையாச் சிறப்பிற்று”

    என்று எழுதுகிறார். எண்ணிப்பார்க்க இயலாத உவமங்களைக் கவிதைகளில் பிணைத்துக் காட்டியவர் சுரதா. அவருக்கு இளம்பூரணர் வழிகாட்டியாக இருக்கலாம். பாயிரத்தை நோக்கினால் நூலின் தகுதி தெரிந்துவிடும். மனைவியின் பெருமை நோக்கினால் கணவனின் பெருமை புலப்பட்டுவிடும் என்பது கருத்து. இங்கே ஒரு நுட்பத்தை இளம்பூரணர் பதிவு செய்கிறார்.  மனைவியில்லையேல் கணவன் இல்லையென்பதை ‘இன்றியமையாச் சிறப்பிற்று’ என்னும் தொடரால் புலப்படுத்துகிறார்.

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

    அக்காலத்தில் நகரங்கள் ஆலயங்களுக்குள் வடிவமைக்கப்பட்டன. மதுரை, திருவானைக்காவல், திருவரங்கம் முதலிய நகரங்கள் ஆலயத்திற்குள் அடக்கம். விமானம் என்பது கருவறைக்கு மேல் நிற்பது. கோபுரம் என்பது கோயிலுக்கு நுழைவாயிலாக அமைவது. நகரம் கோயிலுக்குள் அமைந்ததால் கோயிலுக்குக் கோபுரம் என்பதும் நகரத்திற்கு நுழைவாயிலாக அமைந்தது. இதனைச் சிந்திக்கும் இளம்பூரணர், ஒரு நூலுக்கும் அதன் பாயிரத்திற்குமான தொடர்பைத்,

    “திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயில் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலான்”

    என்று எழுதுகிறார். மனைவி இன்றிக் கணவன் அமையமாட்டான் என்பதை முன்னுவமத்தால் பெறவைத்த இளம்பூரணர், இந்த உவமத்தால் அத்தகைய அறிவுடைய மனைவி அழகுபொலி நங்கையாகவும் இருக்க வேண்டும் என்பதை ‘அலங்காரமாதற் சிறப்பு’ என்னும் தொடரால் பெறவைக்கிறார்.

    இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் குருடன்

    ‘பார்த்து நடந்தால் பாதை தெரியும்’ என்பார் கண்ணதாசன். பார்த்து நடப்பதற்குக் கைகாட்டி இன்றியமையாதது. அந்த கைகாட்டித்தான் பாயிரம். இப்பாயிரம் அமையாத அல்லது படிக்காத நிலையில் நேரடியாக நூலுக்குள் நுழைந்தால் என்ன ஆகும்? என்பது பற்றி அடிகள் சிந்திக்கிறார். அதற்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்துகிறார்.

    “பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனின் குறிச்சி புக்க மான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும்”

    என்று எழுதுகிறார். உள்ளடக்கத்தின் அறிமுகம் பாயிரம். தடங்காட்டி  வழிநடத்தும் பொறுப்பு அதற்குண்டு. அப்பாயிரம் இன்றேல் உள்ளடக்கத்தை அறியா மாணவன் தடமறியாக் காட்டுக்குள் சென்ற மானாக இடர்ப்படுவான் என்னும் உவமத்தை இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார்.

    நாலுழக்கு கொண்டதே நாழி

    ‘நாழி’ என்றால் ‘படி’ என்பது பலருக்கும் தெரியும். ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்பது சங்க இலக்கியம். ‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி’ என்பது மூதுரை. ஆனால் ‘நாழி’ என்னும் அளவு எப்படி வந்தது என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. நுட்பமான இந்த அளவைக்கு மூலம் கிடையாது என்பதுதான் கருத்து. இதனை இளம்பூரணர் தக்க இடத்தில் உவமமாக்குகிறார். எழுத்துக்களை உச்சரிப்பதற்குரிய கால அளவுக்கு மாத்திரை என்று பெயர். அம்மாத்திரை அளவை எப்படி நிர்ணயிப்பது என்று,

    “கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
    நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே”

    என்ற நூற்பாவில் தொல்காப்பியம் சிந்தித்திருக்கிறது. இந்த நூற்பாவில் கண்ணிமையின் அசைவும், கைந்நொடியின் ஒலியளவும் ஒரு மாத்திரைக்கான கால அளவு என்பதை உணர்த்தியிருக்கிறார். இளம்பூரணருக்கு என்ன ஐயம் வந்தது? இதனை ஒரு மாத்திரை என்று கொள்வது எப்படி? என்பதுதான். அதற்கு அவர் எழுதுகிறார்,

    “நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறு என்றதனான், நாலுழக்கு கொண்டது நாழி என்றாற்போல அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக”

    அடிகள் உவமத்தால், நாழி என்பது எல்லாருக்கும் தெரியும். அது நாலுழக்கு கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. நுண்ணறிவு கொண்டார்க்கே அது புலனாம். அதுபோலக் கண்ணிமையும் நொடியும் மாத்திரை என்பது நுண்ணுணர்வுடையோர்க்கே புலனாம் என்று உவமம் கொண்டு விளக்குகிறார்.

    சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது

    முதலெழுத்து, சார்பெழுத்து என்னும் பகுப்பில் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்றும் இடம்பெறுவது தொல்காப்பிய வழக்கு.

    “குற்றியலிகரம் குற்றியலுகரம்
    ஆய்தம் என்ற
    முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன”

    என்பது தொல்காப்பியம். முதல் எழுத்துக்களை முன்னர்ச் சுட்டி சார்பெழுத்துக்களை இந்த நூற்பாவில் சுட்டுகிறார் தொல்காப்பியர். முதலெழுத்தும் சார்பெழுத்தும் தனித்தனியாக விதந்தோதப்படுதலின் பின்னவை எழுத்தாகுமோ என்னும் ஐயத்தைக் களைய வேண்டிய கடப்பாடு உரையாசிரியருக்கு வருகிறது. இளம்பூரணர் இந்த ஐயத்தை ஓர் உவமத்தால் களைகிறார்.

    “சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது அதுபோல இகர உகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிர் ஆகற்பாலன”

    என்று எழுதிக் காட்டுகிறார். காட்டி, சார்ந்துவரல் மரபின் மூன்றெழுத்துக்களைத் தனியாக ஓதியது என்னையோவெனின் அவை பொருள் வேற்றுமையும் புணர்ச்சி வேற்றுமையும் கருதி வேறொரு தனியெழுத்தாகக் கூறினார் என்றும் காரணம் கூறுகிறார்.

    உயிர்மெய்யில் முன்னிற்பது எது? உயிரா? மெய்யா?

    அங்காந்த வாயினின்றும் வரும் ஆதியொலி அகரமெனின், உயிர்மெய்யை உச்சரிப்பது எவ்வாறு? அவ்வாறு உச்சரிக்குங்கால் முதலில் வருவது உயிரா மெய்யா? என்னும் அறிவுப்பூர்வமான ஐயம் வருவது இயல்பே. எழுத்துக்களின் தோற்றங்களை நிரலாகக் கூறிவரும் தொல்காப்பியம்,

    “மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே”

    என்னும் நூற்பாவில் உயிர்மெய்யின் தோற்றத்தைப் பற்றி ஆராய்கிறது. முன்னர்க் கூறியவண்ணம் உயிர்மெய்யில் முதலில் தோன்றும் ஒலி உயிரா மெய்யா என்னும் ஐயத்தைத் தொல்காப்பியம் இந்த நூற்பாவால் களைகிறது. ‘உயிர்மெய்யுள் உயிரும் மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று எனப் பதசாரம் எழுதிய இளம்பூரணர்,

    “மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையான் அக்கூட்டம் பாலும் நீரும் போல  உடன்கலந்ததன்றி விரல் நுனிகள்  தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தனவல்ல என்பது பெறுதும்”

    என்னும் இரண்டு உவமங்களால் விளக்குகிறார். இப்படி இருக்கிறது என்பதற்கோர் உவமமும் இவ்வாறு நிற்பதாகக் கருதிவிடக்கூடாது என்பதற்கு மற்றொரு உவமத்தையும் பதிவு செய்து உயிர்மெய்யுள் எது முன்னது என்று தெரியாத வண்ணம் ஒலி வெளிப்படும் என்னும் நுட்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    கலத்தலும் மயங்குதலும்

    ‘மயக்கமா? கலக்கமா?’ எனத் தொடங்கும் கண்ணதாசன் எழுதிய திரையிசைப் பாடல் பெருவழக்கு. ‘கலங்கி நிற்றல்’ என்பது வேறு. ‘கலந்து நிற்றல்’ என்பது வேறு. கண்ணதாசன் இப்படி எழுதுவதற்கு முன்னால் தொல்காப்பியர் கலத்தலா? மயங்குதலா? என்பது பற்றிச் சிந்தித்திருக்கிறார். தமிழில் சில சொற்கள் ஒரே பொருளைத் தருவதாகத் தோன்றினாலும் அவற்றிடையே நுட்பமான வேற்றுமை நிலவுவதை உரையாசியர்களின் துணைகொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. சான்றாகக் கலத்தல், மயங்குதல் என்பன ஒரே பொருள்  தருவது போலத் தோன்றும் இரு சொற்கள். இவ்விரண்டு சொற்களையும் பிணைத்து,

    “நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும்
    கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”

    என்பது தொல்காப்பிய மரபியலில் காணப்படும் நூற்பா பகுதியாகும். ‘கலந்த மயக்கம்’ என்னும் தொடரில் ஒரே பொருளைத் தரும் இரண்டு சொற்களை  நோக்கிய இளம்பூரணர் அவற்றுக்கிடையே நிலவும் பொருள் வேறுபாட்டை நேரடியாக விளக்குவதைவிட உவமையால் விளக்குவதே ஏற்றது எனக் கருதியவராய்க்,

    “கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செப்பும் உருக்கி ஒன்றாதல் போறல். ‘உலகம்’ என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். ‘உலகம்’ என்றது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என விரவி நிற்கும். ‘உலகினுட் பொருள்’ பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைப்படாது நிற்கும். அவ்விரண்டையும் உலகம் உடைத்தாதலின் ‘கலந்த மயக்கம்’ என்றார்”

    என விளக்கியிருப்பதை அறியமுடிகிறது. இவ்வுவமைகளால் தன்னிலை மாறாமல் இணைவது ‘கலத்தல்’ எனவும், தன்னிலை இழந்து இணைவது ‘மயங்குதல்’ எனவும் அவற்றின் பொருள் விளக்கமாவதைத் தெளியலாம்.

    நிறைவுரை

    ‘இலக்கண விளக்கத்திற்கும் உவமப்பயன்பாடு ஏற்றதே’ என்னும் கொள்கையில் உறுதியாயிருக்கும் இளம்பூரணர் உரையில், பாலும் நீரும் என்னும் உலகியல், ‘எல்லா விரலும் ஒன்றல்ல’ என்னும் வழக்கியல், தோற்றம் இயல்பைக் குறைக்காது என்பது பட நின்ற ‘சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது’ என்னும் தத்துவம் முதலியன உவமங்களாக வந்துள்ளன. கோபுரமும் குறிச்சியும் உவமமாக வந்துள்ளன. ‘கலத்தல், மயங்குதல்’ என்னும் சொற்பொருள் விளக்கத்திற்கும் உவமங்கள் பயன்பட்டுள்ளன. எடுத்துக்காட்டப்படும் இவை மட்டுமே இளம்பூரணரின் உவமங்கள் அல்ல இன்னும் இருக்கின்றன என ஆற்றுப்படுத்துகிறது இக்கட்டுரை.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 16

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 16

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 2

    முன்னுரை

    இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் பொருள் புலப்பாட்டுக் கருவியாக விளங்கும் உவமம், பல நேர்வுகளில் இலக்கண விளக்கத்திற்கும் பயன்பட்டுள்ளது. இலக்கியத்தின் அழகியல் கூறாக விளங்கும் உவமம், இலக்கணத்துள்ளும் இலக்கண உரைகளுக்குள்ளும் இலக்கணத் தெளிவுக்கான கருவியாக அமைந்திருக்கிறது. உவமத்தின் தலையாய பணி, பொருள் புலப்பாடே. அப்புலப்பாட்டுப்பணி இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முறையே அழகியல் உணர்வு, அறிவுத் தெளிவு என்னும் இருவேறு நோக்கங்களை நிறைவு செய்வதாக அமைந்திருக்கிறது. படைப்பின் பெருமையை அளந்துப் புலப்படுத்தும் கருவி உவமமே. இத்தகைய சிறப்பினைக் கொண்ட உவமம் மேற்கூறிய வண்ணம் இலக்கியத்தின் அழகியல் பகுதியை நிறைவு செய்வதோடு அதன் நிலைப்பேற்றுக்கும் பெருங்காரணமாக அமைகிறது. ஆனால் இலக்கணத்துள் அதன் பணி வேறாக அமைகிறது. இலக்கண நுட்பங்களை விளக்கிக் காட்டுவதற்கும் அளவையியல் அடிப்படையில் இலக்கண உரை அமைவதற்கும் பெருந்துணையாக அமைந்திருக்கின்றது. இந்த அடிப்படையில் நன்னூல் உரையாசிரியர் சங்கரநமச்சிவாயரின் உவமங்கள் இலக்கண விளக்கத்தின் மேல் செலுத்தும் ஆளுமையை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    உறவுகளும் உவமமாகலாம்.

    நூலின் வகைகளைக் கூறவந்த பவணந்தியார் ‘மும்மையின் ஒன்றாய்’ என அடையாளப்படுத்துகிறார். முதல் நூல், வழிநூல், சார்பு நூல் என்பன நூலின் மூன்று வகையாகும். அவற்றுள் ஒன்றின் திறன் மற்றொன்றில் காண்பது அரிது. ஒரு நூல் தனக்கு வழிநூலை நோக்கி முதனூலாகவும் முதனூலை நோக்க வழி நூலாகவும் அயல்நூலை நோக்க சார்பு நூலாகவும் அமையும். தொல்காப்பியத்திற்கு நன்னூல் வழிநூல். தொல்காப்பியத்திற்கு வழிநூலான நன்னூல் அகத்தியத்தை நோக்கச் சார்புநூலாம் என்க. எனவே இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை என்பது பெறப்படும். “முதல் நூல் வழிநூல் என்னும் இருதிறத்து நூல்களுக்கும் பொருள்முடிபு ஒருபுடைத்து ஒத்து, ஒழிந்தன எல்லாம் ஒவ்வாமையை உடையது சார்பு நூலாகும்” என்னும் சங்கர நமச்சிவாயரின் விளக்கம் இதனை உறுதி செய்யும். சார்பு நூல் என்பது தொல்காப்பியக் கொள்கைக்கு மாறுபட்டதாயினும் நன்னூலார் காட்டும் உவமத்திற்காக ஈண்டுச் சுட்டப்படுகிறது.

    “முதல்நூற்கு, வழிநூலும் சார்புநூலும் ஒருவற்கு மைந்தனும் மருமானும் போலும் என்க.”

    என்று எழுதுகிறார். தந்தைக்கும் மகனுக்கும் தொடர்பு உண்டு. ஆனால் தந்தைக்கும் மருமகனுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. இருப்பினும் அவனும் ஓர் உறவே. இலக்கண நூற்பாவிற்கு விளக்கம் கூறும்போது உவமத்தைக் கையாண்டு விளக்கம் கூறுவதும் அவ்வுவமங்களும் மானுட உறவுகளைப் பெருமைப்படுத்துவதுபோல் அமைந்திருப்பதும் தமிழியலின் உவமக்கோட்பாட்டைத் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம். ‘தந்தையை நோக்க மகன்’ என்னும் உவமத்தால் முதுனூலின் சாரம் வழிநூலில் அமைந்திருப்பது தவிர்க்க இயலாதது என்பது பெறப்படும்.

    சிந்தை கவரும் ‘சினை உவமங்கள்’

    வழிநூலின் வகைகளைக் கூறும் நன்னூலார் ‘தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு எனத்தகு நூல்யாப்பு ஈரிரண்டென்ப” (51) என்னும் நு{ற்பாவில் நான்காகப் பகுத்துரைக்கின்றார். ‘தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழியெர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமரபினவே’ என்று தொல்காப்பியம் கூறும். நன்னூல் சிறப்புப்பாயிரத்துள் இது பற்றி ஆராயும் சங்கர நமச்சிவாயர், ‘தொகைவிரி யாப்பு’ என ஒன்றிருக்க, தொகை, வகை, விரி எனப் பிரித்தோதுவது ஏன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அதற்கு விடை காண்கிறார்.

    “வழியின் வகையாகிய யாப்பினுள் ‘தொகைவிரி’ என ஒன்று போந்ததன்றித் தொகை, வகை, விரி எனப் போந்தது இல்லையாலோ எனின் நடுநின்ற வகை பின் நின்ற விரியை நோக்கின் தொகையாகவும் முன் நின்ற தொகையை நோக்கின் விரியாகவும் அடங்குதலின் இது தொகைவிரி யாப்பு என்றதன்பாற்படும் என்க. எனவே தொகை, விரி என இரண்டாய் வரினும் மரத்தினது பராரையினின்றும் கவடு, கோடு, கொம்பு, வளார் பலவாய ஒன்றோடொன்று தொடர்பட்டு எழுந்து நிற்றல்போல் தொகையினின்றும் ஒன்றோடு ஒன்று தொடர்படப் பகுக்கப்பட்டுப் பலவாய் வரினும் தொகைவிரி யாப்பேயாம் என்க” (சிறப்புப்பாயிரம்)

    என்று விளக்கமளிக்கிறார். இந்த விளக்கத்திற்கு மரத்தின் பராரை முதலிய பகுதிகள் உவமமாக்கப்பட்டுப் பொருள் புலப்பாட்டுக்கு உதவுவதைக் காணலாம்.

    வினைச்சொல்லில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களும் அடங்கும். எனினும் பகுதி, விகுதி என்பவையே கண்ணுக்குப் புலப்படுமாறு அமையும். ஏனைய நுண்ணிய பார்வைக்கும் புலமைக்கும் உரியவை.  பவணந்தியார் இந்தப் பார்வையை,

    “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலிற்
    பகுதி விகுதி பகுத்திடை நின்றதை”

    எனக் கூறுவதன் மூலம் அவ்விரண்டையுமே விதந்தோதுகிறார். தொடர்ந்து இடைநிலையைக் கூறும் அவர் ஏனைய உறுப்புக்களைக் கூறாது விடுகிறார். இதற்கான காரணத்தை ஆராய்ந்த சங்கர நமச்சிவாயர், இன்றியமையாதவற்றை முதலில் கூறி மற்றவற்றைப் பின்னர் கூறுவதாகத் தாம் எண்ணியதை ஓர் உவமத்தின் வழி விளக்குகிறார்.

    “மா பலா முதலியன பராரை முதலிய சினையோடு நின்றன எனக் கண்டது கூறுவார் போல”ப்  (146)  பகுபதம் பகுதி முதலிய உறுப்போடு நின்றது எனக் கண்டது கூறி, அப்பதம் தந்த தோலா நாவின் மேலோர் ஆணையின் நிற்றலின் ‘கண்டதற்கு’ என்றும் கூறினார்”

    என உவம விளக்கம் தருவதைக் காண முடிகிறது. கண்ணில் படுவதை முன்னர்க்கூறிப் பிறவற்றைப் பின்னர்க் கூறுவதற்கு உரையாசிரியர் மரங்களையும் அவற்றின் சினைப்பகுதியையும் உவமமாக்கியிருப்பது நோக்கத்தக்கது.

    கமுகந்தோட்டம் என்றாற்போல

    நன்னூலில் மூன்றாவது இயலாக அமைந்திருப்பது உயிரீற்றுப் புணரியல். பல்வகைப் புணர்ச்சிகளும் இவ்வியலுள் ஆராயப்பட்டுள்ளன. பல்வகைப் புணர்ச்சிகளும் ஆராயப்பட்டிருக்கும் ஓர் இயலுக்குக் குறிப்பிட்டதோர் புணர்ச்சியை மட்டும் பெயராக்கியதற்கு ஓர் உவமம் கூறி விளக்குகிறார் சங்கர நமச்சிவாயர். கமுகு என்றால் பாக்கு. கமுகந்தோட்டம் என்றால் பாக்குத் தோப்பு என்பதாகும். அதனுள் தென்னை, பலா, தேக்கு, மா எனப் பல்வகை மரங்களும் வளர்ந்து நிற்கும். எனினும் பெரும்பான்மை பற்றி அதற்குக் ‘கமுகந்தோட்டம்’ என்பது வழக்கு. அதுபோலப் பல்வகைப் புணர்ச்சிகளும் ஆராயப்படினும் பெரும்பான்மை உயிரீறு பற்றிய புணர்ச்சியே ஆதலின் இவ்வியலுக்கு இப்பெயர் அமைந்ததாக உவம விளக்கம் செய்கிறார் உரையாசிரியர்.

    முடவன் கோலூன்றி வந்தாற்போல

    ஙகர மெய் (ங்) அகர உயிர் ஒன்றுடன் கூடியே சொல்லுக்கு முதலில் வரும் அவ்வாறு சொல்லுக்கு முதலாகும் போதும், அ, இ, உ என்னும் சுட்டுக்களையும், எ, யா என்னும் வினாக்களையும் முதலாகக் கொண்டு வரும். தனித்து வராது. இதனைச்,

    “சுட்டு யா எகர வினாவழி அவ்வை
    ஒட்டி ஙவ்வும் முதலா கும்மே” (106)

    என்னும் நூற்பாவில் இலக்கணம் கூறுகிறார். இதற்கு உரைவிளக்கம் கண்ட சங்கர நமச்சிவாயர்,

    “ஙனம் என்பது இடத்தினையும் தன்மையினையும் உணர்த்தும் பலபொருள் ஒரு சொல்லாய் வரினும் தனித்து வரும் தன்மையதன்றி முடவன் கோலூன்றி வந்தாற்போலச் சுட்டு, வினாவாகிய இடைச்சொற்களை முன்னிட்டு வருதலான்”

    என்றெழுதுகிறார். இலக்கணத்திற்கு உரையெழுதும் உரையாசிரியர் பார்வையில் சுட்டும் வினாவும் முடவனாகிய ஙகரத்திற்கு உதவும் கோலாகத் தோன்றியிருக்கின்றன என்பதே இவ்வுவமப்பார்வையின் சிறப்பாகலாம்.

    நச்சினார்க்கினியரை வழிமொழியும் நமச்சிவாயர்

    உயிரும் மெய்யும் கலந்து வரும் எழுத்து உயிர்மெய் எழுத்து. ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ என்பதால் மெய்க்கும் மூலம் அகரம் என்பது பெறப்படும். அதாவது மெய்களின் இயக்கமும் அகரமின்றி அமையாது. இறைவன் எல்லா உயிர்களோடும் கலந்து நிற்பதை உவமமாக்கி நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் (தொல். மொழிமரபு. 46) உரைவிளக்க உச்சம். எனினும் ‘உயிர்மெய்’ என்றவிடத்து முதலில் பிறக்கும் ஒலி மெய்யா உயிரா என்பது பற்றி ஆழமான சிந்தனை உரையாசியர்களிடம் இருந்து வந்திருக்கிறது. ‘நெடுநல்வாடை’ இலக்கியத் தலைப்பில் நச்சினார்க்கினியர் காட்டிய பேரார்வம் ‘உயிர்மெய்’ என்னும் சொல்லாட்சி பற்றிய ஆய்விலும் நிகழ்ந்திருக்கிறது என்பதை,

    “மெய் முன்னர் நிற்ப உயிர் பின்வந்து ஏறுமென்றார். அம்முறையே  ஓசையும் பிறக்கும் என்றார். இதனானே மாத்திரை கொள்ளுங்கால் ‘உப்பும் நீரும் போல்’ ஒன்றேயாய் நிற்றலும், வேறுபடுத்திக் காணுங்கால் விரலும் விரலும் சேர நின்றாற்போல’ வேறாய் நிற்றலும் பெற்றாம். நீர் உப்பின் குணமே ஆயவாறுபோல உயிரும் மெய்யின் குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க” (தொல். நூ.ம.18 உரை)

    என்னும் அவருடைய விளக்கத்தால் அறிய முடியும். இந்தக் கருத்தினை உள்வாங்கிய நமச்சிவாயர் ‘நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே’ (நன்.109) என்னும் நூற்பாவின் விளக்கத்தில்,

    “எண்ணதிகாரத்துள் உயிர்மெய்யை ஓர் எழுத்தாக (நன்.60)  எண்ணினார் ஈண்டு இரண்டாக வைத்து இலக்கணம் கூறுவது என்னை எனின் “அப்பொடு பெய்த உப்பே போல’ உயிரொடு புணர்த்திய மெய் தன் அளவு தோன்றாது ஒன்றாய் நிற்றலின் ஒன்றுமாய், ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் ஒலித்து நின்ற நெறியான் இரண்டுமாய் நிற்றலின் என்று உணர்க’

    என்று எழுதுகிறார். இதனால் இலக்கணக் கருத்துக்களை வழிமொழியும் வழி நூலில் அந்நூலின் உரையாசிரியர் முதனூலின் உரைப்பகுதியையும் வழிமொழிவதை அறிய முடிகிறது.

    நிறைவுரை

    ஒரு நூலுக்குப் பலர் உரைகாணும் உரை மரபு தமிழுக்குப் புதியதன்று, முதனூல் நூற்பாக்களை ஆசிரிய வசனங்களாக வழிநூலாசிரியர் பயன்படுத்தியிருப்பது போலவே முதனூல் உரையாசிரியர்களின் உவமங்களையும் வழிநூல் உரையாசிரியர்கள் வழிமொழிந்திருக்கிறார்கள் அல்லது மறுத்திருக்கிறார்கள். மானுட உறவுகளும், மாற்றுத் திறனாளிகளும் இடம்பெறும் இந்த உரைகளில் இயற்கையைப் பற்றிய விரிந்த பார்வையும் அறிவும் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுகின்றன. சமுதாய விஞ்ஞானிகளாகவும் இயற்கையின் ரசிகர்களாகவும் அவர்கள் விளங்கியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 1

    முன்னுரை

    ‘இலக்கியத்தில் உவமம்’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. இலக்கிய உரைகளில் உவமம் என்பதும் அத்தகையதே. இலக்கண விளக்கத்தில் உவமம் என்பது சிலரால் அறியப்பட்ட உண்மை. இலக்கண உரைகளில் உவமம் என்பது அச்சிலருள்ளும் சிலரால் அறியப்பட்ட உண்மையாகும். கணிதத்தையொத்த இலக்கணத்தில் உவமப் பயன்பாடு பற்றிய சிந்தனையோ எதிர்பார்ப்போ அவ்வளவாக எழாது. அதற்கான சூழல் அங்கே இல்லை. ஆனால் தமிழிலக்கண உரைகள் இந்தக் கருத்தியலைப் புறந்தள்ளியிருக்கிறது. கல்வி அறிவு நோக்கியது. அதனால் அறிவு தெளிவு நோக்கியது என்பது பெறப்படும். ‘தெளிவு பெற்ற மதியினாய்’ என்பது பாரதி கருத்து. இந்த அடிப்படையில் யாப்பருங்கலக்காரிகை என்னும் செய்யுளிலக்கண நூலுக்குக் குணசாகரர் எழுதிய உரையில் வரும் ஓர் உவமம் பற்றிய ஆய்வாய் இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    வெண்பாக்களுள் நேரிசை வெண்பா

    பாக்கள் தனி. அவற்றின் கிளைகளான வகைகள் தனி. ஒவ்வொரு பாவாற்றுக்கான கால்வாய்கள் தனி. அவை இனம் என அழைக்கப்படும். சான்றாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பது நால்வகைப் பாக்களாகும். மருட்பா பொருட்பற்றிய பிரிவாதலின் யாப்புப் பற்றிய பாகுபாடுடைய முன்னவற்றோடு இயையாது. இணையாது. நான்கென்றலே மரபு. வெண்பாவில் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா என ஆறு வகைகள் உண்டு. ஆனால் இந்த ஆறுவகைகளும் புறக்கட்டுமானத்தில் கவிஞர் ஏற்படுத்திக் கொள்ளும் சில மாற்றங்களால் உண்டாகும் பெயர் மாற்றங்களே தவிர குறள் வெண்பாவைப்போலத் தனித்தன்மை உடையன அல்ல. அதாவது வெண்பாவின் வகைகள் ஆறாகக் கருதப்படினும் அவ்வளவும் குறள் வெண்பாவின் நீட்டியாகவே கருதப்படும் அளவிற்கே அமைந்துள்ளது. குறள் வெண்பாவின் அடுத்த நிலை நேரிசை வெண்பா. அது பற்றிய விளக்கத்தை அடுத்த பத்தி ஆராய்கிறது.

    இரு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா

    ‘ஈரடி வெண்பா குறள்’ என்பதற்குக் குறள் வெண்பா ஈரடியால் அமையும் என்பது பொருள். அத்தகைய குறள் வெண்பாக்கள் சில மாற்றங்களைப் பெற்று இணைய நான்கடியாய் உருமாற்றம் அடைந்தால் அது நேரிசை வெண்பா எனப்படும். தனித்தன்மையுடைய இரண்டு குறள்வெண்பாக்களே செயற்கையான நேரிசை வெண்பாவை உருவாக்கும் காரணிகளாக அமைகின்றன. காரிகை இலக்கணம் அப்படித்தான் சொல்கிறது. அது மட்டுமன்று வெண்பாக்களை அது அடிகளால்தான் அடையாளப்படுத்துகிறது. வெண்பாக்களினிடையில் படைப்பாளரால் கொண்டுவரப்படும் புறமாற்றங்களும் பெயர் வேற்றுமைக்குக் காரணமாகின்றன. இரண்டடியால் அமைவது குறள் வெண்பா. நான்கடியால் அமைவது நேரிசை வெண்பா. மூன்றடியால் அமைவது சிந்தியல் வெண்பா. பல அடிகளால் அமைவது பஃறொடை வெண்பா. மூன்றடியால் அமைகிற சிந்தியல் வெண்பா தனிச்சொல் பெற்றுவந்தால் அது நேரிசைச் சிந்தியல் வெண்பா. தனிச்சொல்லின்றி மூன்றடியால் வந்தால் அது இன்னிசைச் சிந்தியல் வெண்பா.  எனவே வெண்பாவின வகைகள் என்பன பொருட்பாகுபாட்டைச் சுட்டுவதன்று. வடிவ மாற்றத்தை மட்டுமே அதுவும் பெரும்பாலும் அடிகளால் உண்டாகும் மாற்றத்தையே சுட்டும் என்பது பெறப்படும்.

    பொற்கொல்லரும் பொடியும்

    ‘பொற்றுகள், மண்துகள், பற்பொடி, மிளகாய்த்தூள் என்னும் வழக்குகளைக் கேட்டிருக்கலாம். இவற்றுள் ‘பொற்றுகள்’ என்பது பொன்னின் தூளைப் பொதுவாகக் குறித்தாலும் அணிசெய்யும் பொற்கொல்லரின் இணைப்புத் தொழிலுக்குப் பயன்படும் ஓர் கருவிப் பொருளாகும். ஒரே தரமுடைய இரண்டு பொற்கம்பிகளை இணைக்க வேண்டுமாயின் அதே தரமுடைய கம்பியைக் கொண்டு இணைக்க இயலாது. பொற்கொல்லரின் ஆற்றலுக்குத் தங்கம் உருகாது. அதனால் சற்றுத் தரம் குறைந்த பொன்னைத் தூளாக்கி அதனை அவற்றிடை வைத்து ஊதினால் அது உருகித் தரமுடைய இரண்டு கம்பிகளையும் இணைக்கும். இவ்வாறு ஊதுவதற்குப் ‘பொடிவைத்து ஊதுதல்’ என்று பெயர். ஒரு நகையின் தரம் இத்தகைய பொடியின் அளவுக்குக் கூடவோ குறையவோ செய்யும்.  நுட்பமான வேலைப்பாடுடைய நகைகளைப் பொடிவைத்த நகைகள் என்று அழைக்கிற வழக்கும் உண்டு. இங்கு இது பற்றிய ஆய்வைவிட ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான பொற்கொல்லரின் செயலும் அதற்கு அவருக்குப் பயன்படும் பொடியுமே கருத்திருத்த வேண்டியது ஆகும்.

    நேரிசை வெண்பா உருவான கதை 

    யாப்பருங்கலக்காரிகைக்கு முன்னும் பின்னும் நேரிசை வெண்பா ஓரலகாகப் படைக்கப்பட்ட வரலாறு உண்மை என்பதைப் பல்வேறு நேரிசை வெண்பாக்களால் அறிந்து கொள்ள இயலும். ஆனால் காரிகைக் காலத்தில் இரண்டு குறள்வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பாவாகத் தோற்றம் பெற்றிருக்கிறது.

    “உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
    பன்னலமும் வந்தெய்தும் பார்”

    என்பது ஒரு குறள் வெண்பா.

    “தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
    ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

    என்பது மற்றொரு குறள் வெண்பா. இந்தத் தனித்தனிக் குறள் வெண்பாக்களைக் கவிஞர் சில மாற்றங்களால் ஒரு நேரிசை வெண்பாவாக மாற்றிவிடுகிறார்.

    “உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
    பன்னலமும் வந்தெய்தும் பார்போற்றும் – இன்றுள்ள
    தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
    ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

    செய்திருக்கும் மாற்றங்கள்:

    1. முதல் குறட்பாவில் நேரசையில் முடிந்திருக்கும் ஈற்றுச்சீரைத் தளைதட்டாது மூவசைச் சீராக்கியிருக்கிறார்.
    2. முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப இரண்டாம் அடியின் இறுதியில் அதாவது நான்காவது சீரை ஏழாவது சீருக்கும் எட்டாவது தனிச்சீருக்கும் தளைதட்டாத வகையில் தனிச்சொல்லை அமைத்திருக்கிறார்.

    இந்த மாற்றங்களைத்தான் ‘பாட்டில் ஒட்டுவேலை’ என்கிறோம் நாம். இந்த ஒட்டுவேலையைப் பொற்கொல்லரின் பொடிவைத்து ஊதும் வேலைக்கு ஒப்பிட்டு காரிகைக்கு உரையெழுதுகிறார் குணசாகரர். எப்படி? இப்படி,

    “‘சீரியவான் தனிச் சொல் அடி மூய்’ என்று சிறப்பித்த அதனால் முதற் குறட்பாவினோடு தனிச்சொல் இடைவேறுபட்டு விட்டிசைப்பின் ஒற்றுமைப்படாத உலோகங்களை, ஒற்றுமைப்படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல முதற் குறட்பாவின் இறுதிக்கண் ஒன்றும், இரண்டும் அசைகூட்டி உச்சரிக்கப்பட்டு இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவனவுமுள. அவை ஒருசார் ஆசிடை நேரிசை வெண்பா எனக் கொள்க.”

    குணசாகரரின் இந்த உரையால் நேரிசை வெண்பாவைப் பற்றிய பல உண்மைகள் வெளிப்படுகின்றன. காரிகையில் பயின்றுவரும் அடைச்சொற்களைக் கொண்டு இவற்றை அவர் தருகிறார்.

    1. நேரிசை வெண்பா என்பது தனியான ஓர் அலகன்று.
    2. இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா ஆகும்.
    3. முதல் குறள் வெண்பாவில் ஈற்றுப் பகுதியில் செய்யப்படும் மாற்றங்களே நேரிசை வெண்பாவிற்கான வடிவமாற்றமாகக் கருதப்படுகிறது.
    4. இந்த மாற்றத்தினை இரண்டு உலோகங்களை இணைப்பதற்குப் பொடி வைத்து ஊதும் பொற்கொல்லரின் செயலை உவமமாக்கிப் ‘பற்றாசிட்டு விளக்கினாற்போல’’ என விளக்கியிருக்கிறார்.

    நேரிசை வெண்பா –  வடிவப் பயன்பாடு

    ஆராய்ந்து நோக்கினால் இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா என்பது நடப்பியலுக்கு முரணாகவும் படைப்பாளர்தம் சிந்தனை வெளிப்பாட்டுக்குப் பொருந்தாத எதிராகவுமே அமைந்துள்ளதாகத் தெரிகிறது. கவிதை என்பது கருத்தியலின் உணர்ச்சி வெளிப்பாடாதலின் அங்கே வடிவக்கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்கு நேரமிருக்காது. இருந்தால் அது கவிதையாக பரிணமிக்காது. யாப்பென்னும் கலத்துள் கவிதை நிரம்ப வேண்டும் என்பதுதான் தமிழ் மரபுக் கவிதைகளின் வடிவக் கோட்பாடு. காரிகைக்கு முன்னவையான சிலப்பதிகாரத்திலும் பத்துப்பாட்டிலும் உள்ள நேரிசை வெண்பாக்கள் தனித்தன்மையான ஒரே அலகுகளாகவே அமைந்துள்ளன. காரிகைக்குப்பின் வந்த சோமேசர் முதுமொழி வெண்பா, மணிமேகலை வேண்பா, பாரத வெண்பா, பாரதியின் பல வெண்பாக்கள், வைரமுத்து, கடவூர் மணிமாறன், கரூவூர் கவிஞர் குழந்தை முதலியோர்தம் வெண்பாக்கள் எல்லாம் தனித்தனி அலகுகளாகவே அமைந்திருக்கின்றன. இரண்டு குறள் வெண்பாக்களின் கூட்டணியாக அவை இல்லை. இது வளர்சிந்தனைக்குரிய யாப்பியல் கருத்தாகக் கருதப்படலாம்.

    நிறைவுரை

    எதனையும் உவமம் காட்டி விளக்குவதும் உரைநெறியே என்பதைக் குணசாகரர் உணர்ந்து உரையெழுதியிருக்கிறார். இலக்கண விளக்கங்களுக்காக உவமங்கள் பயன்படுத்தப்படுவது கோட்பாடு எனின், உலகியல் சார்ந்த ஒரு தொழில் நிகழ்வை உவமமாக்குவதைப் பயன்பாடு என்று கருதலாம். ‘பொன்னார் மேனியனே’ என்பது தேவாரம். ‘பொன்மேனி’ என்று உவமம் கண்ட தமிழ்க்கவிதை உலகில், ‘பொற்பொடி’ பற்றிய இந்த உவமம் உவமப்பயன்பாட்டில் தனியிடம் பெறுகிறது.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 14

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 14

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    நன்னூலில் உவமங்கள் – 3

    முன்னுரை

    நல்லாசிரியர, அல்லாசிரியர் முதலியோருக்கு இருக்க வேண்டிய பண்புகளை நேரடியாகக் கூறிக் கூடுதல் சிறப்பியல்புகளை உவம அளவையால் எடுத்துரைத்த பவணந்தியார் மாணாக்கரை அவ்வாறு தகுதி நோக்கிப் பிரித்தாரல்லர். காரணம் கற்பித்தலுக்குத் தகுதி தேவை. கேட்பதற்கு அது தேவையில்லை. எல்லாரும் ஆசிரியர் ஆகிவிட இயலாது. ஆயின் அனைவரும் மாணவர் ஆகலாம். கற்பித்தல் பணியின் அருமையை உணர்ந்து கல்வியை உள்வாங்கிச் செரிக்கும் அளவில் மாணவர்களின் இயல்பு நிலை வரையறுக்கப்படுகிறது. இயல்பால் மாணாக்கர் முதல், இடை, கடை என மூவகைப்படுவர். பொதுவாக மாணவர்தம் சிறப்பியல்புகளைத் தொகுத்துக் கூறி முதல், இடை, கடை மாணாக்கார்தம் இயல்புகளை உவம அளவையால் எடுத்துரைக்கிறார்.

    கற்பித்தலும் கற்றலும்

    ‘கற்பித்தல்’ ஈதல் என்றால் ‘கற்றல்’ ‘கொள்வது’ அல்லவா? எப்படிக் கற்பிக்க வேண்டும் என்பதனை,

    “ஈதல் இயல்பே இயம்பும் காலை
    காலமும் இடனும் வாலிதின் நோக்கி
    சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
    உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
    வரையான், வெகுளான், விரும்பி, முகமலர்ந்து
    கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்
    கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப”

    என்னும் நூற்பாவில் நிரல்படுத்தியிருக்கிறார். இந்த நிரலில் ‘நோக்கி, வாழ்த்தி, அமைத்து, மலர்ந்து, அறிந்து’ என்னும் வினையெச்சங்கள் எச்சங்களாக நில்லாமல் ஆசிரியரின் பண்புகளாக விளங்குகின்றன என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும். இனி, எப்படிக் கொள்ளுதல் வேண்டும் என்பதையும் நன்னூல் தெளிவாக கூறுகிறது. ஆசிரியன் இருப்பிடம் தேடிக் காலத்தோடு செல்லவேண்டும். அவரை வழிபடலில் தயக்கம் கூடாது. (‘பிற்றைநிலை முனியாது’ என்றதும் அது.) சினங்கொள்ளுதல் கூடாது. ஆசிரியரது பண்போடு உறவாடுதல் வேண்டும். அன்னாருடைய குறிப்பறிதல் வேண்டும். ‘இரு’ என்றால் இருக்கவும் ‘சொல்’ என்றால் சொல்லவுமான ஆணைக்குக் கட்டுப்படும் அடக்கம் இருத்தல் வேண்டும். ‘கோடையில் நீர் தேடும் தாகமுற்றவனின் மனநிலையைப் பெறுதல் வேண்டும். செவி வாயாக வேண்டும். அக்கேள்விச் செல்வத்தைக் கொள்ளும் இடமாக மனமும் இருத்தல் வேண்டும்.  ‘மனநிறைவாகக் கொடுத்திருக்கிறோம்’ என நிறைவடைந்த ஆசிரியன் அனுமதித்த பிறகே இல்லம் திரும்புதல் வேண்டும். இந்தக் கருத்துக்களைத் தொகுத்துக் கூறும் பவணந்தியார் பாடம் கேட்கும் புறச்சூழலில் மாணவனின் நிலையைச்,

    “சித்திரப்பாவையின் அத்தகவு அடங்கி”

    என்னும் உவமத்தால் விளக்குகிறார் பவணந்தியார். சித்திரம் போல் இருத்தல் வேண்டும் என்னும் சிந்தனை அகநானூற்றில் வரும் சித்திரத்தலைவியை நினைவுபடுத்துவதாக அமைகிறது. தலைவன் பிரிவால் தான் பட இருக்கும் துன்பத்தைக் கருதாது, தலைவன் செல்லும் வழியருமை எண்ணி மருகும் தலைவி சித்திரம் போல் நின்றாள் என்பதை,

    “முன்னம் காட்டி, முகத்தில் உரையா
    ஓவச்செய்தியின் ஒன்று நினைத்து ஒற்றி”

    என்னும் வரிகள் உணர்த்தும். பாடம் கேட்கும் மாணவர்கள் சித்திரத்தைப் போல அமைதிகாக்க வேண்டும் என்பது கருத்து. உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத் தன்மைக்குச் சித்திரநிலை உவமமாவது தமிழ் மரபு. ‘மெய்திருப்பதம் மேவு என்ற போதிலும் இத்திரு துறந்து ஏகு என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை’ என இராமன் முகப்பொலிவைக் கம்பர் வண்ணனை செய்வார். இந்த உவமத்திலிருந்து பாடம் கேட்கும் நிலையில் மாணவனுக்கு இருக்க வேண்டிய ஒரே பண்பு அமைதி என்பது பெறப்படும்.

    அன்னப் பறவையும் அசைபோடும் பசுவும்

    தலை, இடை, கடை என மாணாக்கர்களைப் பிரித்த பவணந்தியார் தலை மாணாக்கருக்கு அன்னப்பறவையையும் பசுவையும் உவமமாக்கியிருக்கிறார். மானுடத்தின் வாழ்நாள் மிகக்குறைவானதாகையால் அக்குறிப்பிட்ட காலத்திற்குள் கற்க வேண்டியனவற்றையே கற்றல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் நாலடியார்,

    “கல்வி கரையில கற்பவர் நாள்சில
    மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்
    ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து”

    என உவமத்தால் விளக்கும். கருத்தளவிலும் மாணவர் இயல்பாகவும் பவணந்தியார் இதனை வலியுறுத்துகிறார். அடுத்து சூழ்நிலைக்கேற்ப இரையெடுக்கும் பசு, பிறகு அமைதியாகப் படுத்து உண்டவற்றை மீண்டும் வாய்க்குக் கொணர்ந்து அசைபோடும். பயனுள்ளவற்றைப் பிரித்துக் கற்கும்  மாணவன் அவற்றின் முழுப்பயன் அடைய மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து சிந்திக்க வேண்டும். தற்காலத்திலும் பயனுள்ளவற்றைக் கற்கவேண்டும் என்பதும் கற்றவற்றைப் பற்றிய சிந்தனை தொடர வேண்டும் என்பதும் ஒரு கல்விக் கொள்கையாக இருந்துவருகிறது என்பதை அறிதல் வேண்டும். பயனுள்ளவற்றைப் பகுத்தறியும் அன்னத்தையும் உண்ட இரையை நன்கு செரித்துக் கொள்வதற்காக அசைபோடும் ஆவையும் தலைமாணாக்கர்க்கு உவமமாக்கினார் பவணந்தியார்.

    நிலமும் கிளியும்

    ‘நிலத்திற்குரிமையாளன் நாளும் தன்னுடைய நிலத்திற்குச் சென்று அதனை நலம் விசாரிக்காவிடின், அந்நிலம் இல்லாளைப்போல ஊடிவிடும்” என்பது திருக்குறள் கருத்து. ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்திச் சோம்பலில்லாம ஏர்நடத்தி, கம்மா கரைய ஒசத்திக்கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி, சம்பாப் பயிரைப் பறிச்சி நட்டு, தகுந்த முறையில் தண்ணீர் விட்டு”  வளர்த்தால்தான் நிலம் பயன் தரும் என்பதை விளக்கிக் காட்டுவார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவ்விரு கருத்துக்களால் நிலத்தைப் பாதுகாத்து முறைப்படிப் பயிர் செய்துவரும் உழவனுக்கே அதன் பலன் கிட்டும் என்பது பெறப்படும். ஆசிரியனையும் அவனுடைய காரியமாகிய நூலையும் நாளும் ஓதி ஓதி சிந்தித்து உழைத்து மெய்ப்பொருள் காணும் இயல்புடைய மாணவனுக்கே கற்றலின் பயன் முழுமையாகக் கிட்டும். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பர். கிளிக்குத் தானாகப் பேச வராது. ஆசிரியன் செய்கின்ற முயற்சியின் அடிப்படையில் தன்னறிவைப் பெருக்காது அவர் சொல்வதை மட்டுமே உள்வாங்கிக் கொள்பவன் கிளியையொப்பான். இவ்வாறு உழைத்தாலன்றிப் பயன்பெற இயலாத நிலத்தையும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையையும்  இடை மாணாக்கர்க்கு உவமமாக்கினார் பவணந்தியார்.

    கடைமாணாக்கரும் நான்கு உவமங்களும்

    தலைமாணாக்கர்க்கும் இடைமாணாக்கர்க்கும் இரண்டிரண்டு உவமங்களைக் காட்டிய பவணந்தியார் கடை மாணாக்கார்க்கு நான்கு உவமப்பண்புகளை ஏற்றியுரைக்கிறார். ‘இல்லிக்குடம்’ என்பதற்குப் பலரும் ‘ஓட்டைக்குடம்’ என்று பொருள் சொல்வர். ‘ஒழுகும் விரைவு’ கருத்தானால் அவ்வுரை நேரியதே. ‘பசுமட்கலம்’ என்றும் கருதமுடியும். அது தன்னுள் வாங்குகிற நீரை வைத்துக் கொள்ள இயலாது புறத்தே கசியவிடும்.  மாணாக்கருள் சிலர் ஆசிரியர் கூறும் கருத்துக்களை உள்வாங்கிப் பொதிந்து வைக்க இயலாமல் புறத்தே விட்டுவிடுவர். தொடர்ந்து, மேய்கின்ற ஆட்டினை உவமமாக்குகிறார். ஆடு தன் வயிறு நிரம்பும் அளவிற்கு மேயாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயுமேயன்றி எதனையும் உருப்படியாக மேய்ந்து பசியாற்றிக் கொள்ளத் தெரியாது. மேலெழுந்தவாரியாகக் சிலவற்றைக் கற்கும் இடை மாணாக்கர் இத்தகையவர். கல்வி குழப்பத்திலிருந்து தெளிவு நோக்கியது. தெளிவிலிருந்து குழப்பத்தை நோக்கியது அன்று, எருமை தெளிவான நீரைக் கலங்கலாக்கும். மாணவர்களிலும் சிலர் அவ்வாறு இருப்பர். இறுதியாக மெய்ப்பொருள் கொண்டு பொய்ப்பொருள் தள்ளிவிடுவதே அறிவின் நோக்கம். மாறாக அல்லனவற்றைக் கொண்டு நல்லனவற்றைத் தள்ளிவிடும் மாணாக்கரும் உளர். அவர்க்கு உவமமாகச் சொல்லப்பட்டதுதான் நெய்யரி (பன்னாடை போன்றது).

    “அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
    இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
    அன்னர் தலையிடைகடை மாணாக்கர்”

    என்னும் நூற்பாவில் தலை, இடை, கடை மாணாக்கர்க்கான பண்புகளை உவமங்கள் வாயிலாகவும் விளக்கிக் காட்டியிருக்கிறார் பவணந்தியடிகள்.

    நிறைவுரை

    நல்லாசிரியர்களின் பண்புகள் சுட்டப்படுகின்றன. கூடுதல் பண்புகள் உவமங்களாலும் அடையாளப்படுத்தப்படுகின்றன. அல்லாசிரியர்களின் பண்புகள் சுட்டப்படுகின்றன. கூடுதலாக உவமங்களாலும் அடையாளப்படுத்தப்படுகின்றன. மாணவர்களை அவ்வாறு பாகுபடுத்தாத பவணந்தியார் அவர்களின் தரத்தை மட்டுமே வேறுபடுத்திக் காட்டுகிறார். தற்காலத்தில் மதிப்பெண்களால் அல்லது குறியீடுகளால் வரையறுக்கப்படும் நிலைக்கு இது ஒப்பாகலாம். சுருக்கமாகச்  சொன்னால் கற்பிக்கின்றவருக்குத் தகுதி நிர்ணயம் செய்வதற்கும் கற்பாருக்குத் தர நிர்ணயம் செய்வதற்கும் பவணந்தியாருக்கு உவமங்கள் கைகொடுத்திருக்கின்றன எனலாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 13

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 13

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    நன்னூலில் உவமங்கள் – 2

    முன்னுரை

    உள்ளத்தில் மென்மையும் முகத்தில் மலர்ச்சியும் அறிவில் அடர்த்தியும் பண்பில் நடுவுநிலையும் கொண்டிருப்பதே நல்லாசிரியர் ஒருவருக்கு இருக்க வேண்டிய இயல்பு என்பதற்கு மலர், மலை, துலாக்கோல் முதலியவற்றை உவமமாகச் சொல்லிக் காட்டிய பவணந்தியார், அல்லாசிரியருக்கு அவற்றினும் முரண்பட்ட பொருட்களை உவமமாக்கியிருக்கிறார். ‘இனிய கனி’ என்பதற்கு ‘ஔவை உண்ட நெல்லிக்கனி’ என்றும் ‘இன்னாத காய்’ என்பதற்குக் ‘காஞ்சிரங்காய் எட்டிக்காய்’ என்றும் பரிமேலழகர் எழுதிய முரணுரையைப் போன்றது இது. கற்பித்தல் பணி என்பது கருத்துக்களின் நிரலான வெளிப்பாடு. குழப்பத்தினின்றும் நீங்கித் தெளிவை நோக்கி நகர்வது. கற்றல் என்பது எளிதில் பெறக்கூடியது. ஏக்கத்துடன் கூடிய முயற்சியின் பயன். இந்தப் பண்புகள் இல்லாதவர்களையே பவணந்தியார் ஆசிரியர் அல்லாதவர் என்கிறார். அத்தகையோரை அடையாளப்படுத்தும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    கருத்துக்களின் வெளிப்பாடும் கழற்சிக்காய் குடமும்

    கழற்சிக்காய் என்பது ‘கழிச்சிக்கொட்டை’ என்றும் ‘கழிச்சிக்காய்’ என்றும்  பொதுவாக வழங்கப்படுவது. அது அக்காலப் பெண்களின் விளையாட்டுக் கருவி. பல்லாங்குழியில் புளியங்கொட்டை, சோழியைப் போல.

    “கைபுனை குறுந்தொடி தந்தப் பைப்பய
    முத்த வார்மணல் கொற்கழங்கு ஆடும்”

    என்பது பெரும்பாணாற்றுப்படை. விளையாட்டுக் காய்களை விளையாட்டு முடிந்ததும் ஒரு சிறிய கூடை அல்லது குடத்தில் இட்டு நிரப்பி வைத்துப், பிறகு தேவைப்படுகிறபோது கொட்டிப் பயன்படுத்திக் கொள்வது நடப்பியல். இந்த நிகழ்ச்சியைப் பவணந்தியார் உவமமாக்கியிருக்கிறார்.

    “பெய்த முறை அன்றிப் பிறழ்வுடன்தரும்
    செய்தி, கழற்பெய் குடத்தின் சீரே!”

    இந்த நூற்பாவில் கழற்பெய் குடம் என்பது பற்றி மேலே கண்டோம். ‘செய்தி’ என்றால் செயல். ‘ஒருவன் செய்தி கொன்றோர்க்கு’ என்றவிடத்துச் செய்தி என்பது ‘செயல்’ என்னும் பொருள்படுவது காண்க. விளையாட்டு முடிந்து குடத்துக்குள் நிரைக்கும்முறை வேறு அதனை அடுத்த விளையாட்டிற்காகக் கொட்டும்போது நிகழும் முறை வேறு. நிரப்புகிற நிரலில் கொட்டுகிற நிரல் அமையாது. முரணாகும். குழப்பமாகும். எது முன்பின் என்பது தெரியாது. இந்தக் குழப்பநிலையைத்தான் பவணந்தியார் உவமமாக்கியிருக்கிறார். கழல் என்பது அக்காலத்தில் பெரும்புழக்கத்திற்கு ஆளாகியிருந்ததால் அது நிறைந்த குடத்தை உவமமாக்கியிருக்கிறார். கழல் உவமமாகாது. கழலால் நிரப்பப்பட்ட ஆசிரியரே உவமமாவார். கற்பிக்கப்படும் பாடங்கள் பல்வகையாக உள்ளத்துக்குள் இருந்தாலும் அவற்றை நிரலாக ஒவ்வொன்றாக விளங்கும்படிச் சொல்லுவதே கற்பித்தல் பணி. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது அங்கொன்றும் இங்கொன்றுமாகப், பின்னும் முன்னுமாகக் கற்பிப்பது மாணவனுக்குப் பயன் தராது. அத்தகைய கற்பித்தல் முறையைக் கொண்டவன் எந்நாளும் ஆசிரியர் என்னும் தகுதிக்கு உரியவன் ஆகமாட்டான் என்பது கருத்து. இங்கே கழற்சிக்காய் உவமமன்று. அது பெய்யப்பட்டிருந்த குடமும் அதன் தலைகீழ்வினையுமே உவமம் என்பது அறிக.

    மடற்பனையும் ஆசிரியரும்

    ‘தாழையெல்லாம் மடற்கத்திச் சுழற்றவைத்து’ என்பார் பாவேந்தர். மடலை உடைய இரண்டு தாவரங்களுள் ஒன்று பனை. மற்றொன்று நெய்தல்நிலத் தாவரமான தாழம்பூ. தாழம்பூ மடலின் இருபுறமும் கூரான முட்கள் கத்திபோலக் காணப்படும். மடற்பனையின் புறத்தில் அதன் மட்டையெல்லாம் கத்திபோலக் காணப்படும். அவற்றை ஒதுக்கி மேலே ஏறிப் பழத்தைப் பறிக்க இயலாது. கடினம். பனம்பழம் சுவையானது ஆயினும் பெறவியலாத நிலையில் அது எப்போது விழுகிறதோ அப்போது காத்திருந்து பெற்றுச் சுவைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    “தானே தரக்கொளின் அல்லது தன்பால்
    மேவிக் கொளக்கொடா இடத்தது மடற்பனை”

    என்னும் நூற்பாவில் மடற்பனையின் இயல்பை விளக்கிக் காட்டுகிறார் பவணந்தியார். ‘எளிவந்த பிரான்’ என்பது இறைவனுக்கான புகழ்நாமங்களில் ஒன்று. ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்பது திருவாசகம். எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதால் அடியவனைத் தேடி இறைவன் அருள்பாலிப்பதைப் போல் மாணவனுக்கு ஓடிவந்து அருள் பாலிப்பதே நல்லறம். மாறாக தன்னை அண்ட முடியாத இடத்தில் வைத்துக் கொண்டு தான் எப்போது கொடுக்க இயலுமோ அப்போதுதான் மாணவன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் மனநிலை ஆசிரியன் தகுதிக்கு முரணானது.

    பருத்திக் குடுக்கையும் ஆசிரியரும்

    கல்வி கரையில என்றதால் அது கடல் என்பது பெறப்படும். யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைப்பதுபோல அளவற்ற கல்விச் செல்வத்தை ஆசிரியர் ஒருவர் தன்னுள் பொதிந்து வைக்கிறார். பொதிந்து வைக்கப்பட்ட அச்செல்வம் அவருக்கானது அன்று. பிறருக்கானது. அதனால்தான் கற்பித்தலை ‘ஈதல்’ என்றார் பவணந்தியார். அவரிடம் கற்பதை ‘உடையார் முன் இல்லார் இரப்பதுபோல் கற்க வேண்டும்’ என்றார் திருவள்ளுவர். இருப்பதைக் கொடுக்கின்ற இந்த நிகழ்வு தடையின்றி நிகழவேண்டுமாயின் உள்ளேயிருப்பதும் ஊறுவதும் தடையின்றி வெளிவரவேண்டும். ‘குடுக்கை’ என்றாலும் ‘குண்டிகை’ என்றாலும் ஒன்று. பருத்தியைக் குடுக்கையுள் வைத்துத் திணிப்பது ஒரு செயல். திணித்ததை வெளியில் எடுத்துத் தர எண்ணுகிறபோது ஒட்டுமொத்தமாகவோ சரளமாகவோ வெளியே வராது. கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்துத்தான் தரவேண்டி வரும்.

    “அரிதிற் பெயக்கொண்டு அப்பொருள் தான் பிறர்க்கு
    எளிது ஈவில்லது பருத்திக் குண்டிகை”

    என்னும் நூற்பாவில் உள்ளே அரிதாகப் பெய்யப்படுகிறபொருளை எளிதாகத் தர இயலாத குண்டிகை விளக்கப்படுகிறது. இந்தக் குண்டிகையன்ன ஆசிரியர் தான் கற்ற பொருளைத் தன்னிடம் இரந்த மாணவனுக்கு எளிதில் தர இயலாதாம்.  கொடுப்பதற்கென்றே சேர்த்த கல்வியை வைத்துப் பூட்டிக் கொள்கிற அல்லாசிரியர் இயல்புக்குப் பருத்திக் குணடிகையை உவமமாகச் சொன்னது பொருத்தமானதுதானே!

    தென்னையுள்ளமும் ஆசிரியரும்

    ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்பது தமிழகத்துப் பழமொழி. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்க வேண்டும்’ என்னும் முரணும் தமிழ் நெறியே. ‘உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து’ என்பது மற்றொரு வரைவிலக்கணம். இவற்றையெல்லாம் தொகுத்துச் சிந்தித்தால் ‘கற்றல்’ என்பது பணிவின் வெளிப்பாடு என்பதும் இரத்தலுக்கு இணையானது என்பதும் ‘கற்பித்தல்’ ‘அறச்செயல்’ என்பதும் கல்வி ஒரு செல்வம் என்பதும்  பெறப்படும். ஆசிரியர் இருக்கும் இடந்தேடி மாணவர் சென்று கற்ற காலம் ஒன்று. மாணவர்கள் கூடியிருக்கும் இடத்திற்கு ஆசிரியர் வந்திருந்து கற்பித்துவிட்டுச் செல்லும் காலம் ஒன்று. எந்தக் காலமாயினும் கற்றல் என்பது  தொழுது பெறுவதே. ‘தொழுபவர்க்கே கல்வி’ என்றும் கருதமுடியும். ஆனால் தொழுபவனை விட்டுத் தொழாதவனுக்குக் கல்வி கொடுப்பதும் நிகழ்கிறது. இத்தகைய இயல்புடைய ஆசிரியருக்குச் சொல்லப்பட்டிருக்கும் உவமமே ‘முடத்தெங்கு’ என்பதாகும். பெரும்பாலும் தென்னைக்கும் பனைக்கும் உள்ள அடிப்படை நிற்கின்ற பாகையில்தான அமையும். பனை நேராக நிற்கும். தென்னை நேராக நிற்காது. இந்த வளைவு தான் வேர்பிடித்திருக்கும் இடத்தை மறந்து அடுத்தவர் இடத்தில் தேங்காய்களைப் போடும் அளவிற்கு இருக்கும். வளைந்த இந்தத் தென்னைக்குத்தான் முடத்தெங்கு என்று பெயர்.

    “பல்வகை உதவி வழிபடு பண்பின்
    அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடத் தெங்கே”

    பாவேந்தர் பாரதிதாசன் ‘தென்னையுள்ளம்’ என்று இதனை அழைப்பார். அவர் வேறொரு சிந்தனைக்கு அதனை உவமமாக்குவார். தனது நாட்டுச் சுதந்திரத்தால் பிறர் நாட்டைத் துன்புறுத்தும் ஆட்சியாளர்களுக்கு அந்த உவமத்தை அவர் சொல்வார். எனவே முடத்தெங்கினைப் போலப் பணிந்து, உதவியவனுக்குப் பலனளிக்காது,  அப்பண்புகள் அறவே அற்ற சற்றும் தொடர்பற்ற ஒருவனுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியன் ‘முடத்தெங்கு’க்கு ஒப்பாவான் என்பது கருத்து.

    நிறைவுரை

    நல்லாசிரியருடைய பண்புகளைப் பற்றிக் கூறும்போது பண்புகளை முதலில் கூறி, உவமங்களைப் பின்னர் தொகுத்துக் கூறியது போலவே,

    “மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்
    அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்
    கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை
    முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
    உடையோர் இலர் ஆசிரியரா குதலே!”

    என்ற நூற்பாவிலும் அல்லாசிரியர் பண்புகளை முன்னர்க்கூறி, உவமங்களால் ஏனைய பண்புகளையும் உடன் கூறியிருக்கிறார். உவமங்கள் நான்கும் இயல்பாக அமையக் கூடாதவை என்பதை உணரமுடியும். “மொழிகுணம் இன்மையும்  இழிகுண இயல்பும் “அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்” என்னும் இயல்புகள் ஆசிரியர் பணிக்கு நுழைவுத் தேர்வு எழுதவே தகுதியற்றவை. நான்கு உவமங்களையும் கற்பிக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர் ஒருவருக்கு இருக்கக் கூடாத முரண்களுக்காக்கியிருக்கிறார் பவணந்தியார். இதனை ‘முரண் கொள் சிந்தை’ என்னும் தொடர் உணர்த்தக் கூடும். நல்லாசிரியர், அல்லாசிரியர் போலவே நன்மாணாக்கர், அல்மாணாக்கர் பற்றிய உவமங்கள் தொடர்ந்து ஆராயப்படும்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 12

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 12

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் –  613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    திருக்குறளும் நன்னூலும்

    முன்னுரை

    ‘இலக்கியத்திற்குத்தான் இலக்கணமே தவிர இலக்கணத்திற்காக இலக்கியமன்று’ என்பது மரபு. இலக்கியம் என்பது ஈண்டு வாய்மொழி இலக்கியங்களையும் உள்ளடக்கியதே. அதனால்தான் இலக்கண விதிகளுக்கு மாறுபட்டு மக்கள் வழக்கு அமைகிறபோது இலக்கண ஆசிரியர்கள் அவற்றுக்குப் புறனடை கண்டு அமைத்துத் தழுவிக்கொண்டனர். இந்தக் கட்டுரை ‘இலக்கியத்திற்கு இலக்கணம்’ என்பதை இலக்கியத்தில் பயின்று வந்துள்ள உவமங்கள் இலக்கணத்துள்ளும் பயின்று வரும் பாங்கினை ஆராய்வதாக அமைகிறது. தனித்தமிழ் மறை திருக்குறள். தொல்காப்பியத்தின் வழிநூல் நன்னூல். திருக்குறளில் பல்வேறு நேர்வுகளில் பல்வேறு அதிகாரங்களில் கையாளப்படும் உவமங்களை அவற்றின் பொருண்மை விளக்கப் பொருத்தம் கருதிப் பவணந்தியார் அவற்றை அப்படியே தமது நூலில் தொகுத்துரைப்பதை அறிய முடிகிறது. முந்தைய இலக்கியத்திலிருந்து பிந்தைய இலக்கணம் உரிமையோடு எடுத்துக் கையாண்ட சில உவமங்களின் சிறப்புக்களை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    நல்லாசிரியருக்கான அளவுகோல்

    தற்காலத்தில் குறிப்பிட்ட பட்டமும் அதற்கான ஆசிரியர் பயிற்சிக்கான பட்டமுமே ஆசிரியர்க்கான தகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சியும் தேவையில்லை. ஆனால் பழந்தமிழ்க் கல்விக் கோட்பாட்டில் பண்புகளே ஆசிரியர்களை நிர்ணயம் செய்தன. மாணவர்க்கும் அவை வலியுறுத்தப்பட்டன. ‘உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்கள்’. கற்பித்தலைத் தற்காலத்தைப் போல் வணிமயமாக்காமல் ‘ஈதல் இயல்பு’ என்றார்கள். கல்வி செல்வமானதால் கற்பித்தல் ஈதலாயிற்று. செல்வம் இரத்தற்குரியதாதலின் கற்றல் ‘கோடல்’ மரபாயிற்று. கல்விச் செல்வத்தைத் தகுதியுடையார்க்கு வழங்கும் ஆசிரியரின் பண்புநலன்களைப் பொருளாகவும் உவமத்தோடு பொருத்தியும் கூறும் நன்னூல் நிலம், மலை, மலர், துலாக்கோல் என்னும் பொருள்களை ஆசிரியர்க்கு உவமமாக்கியிருக்கிறது. இந்த நான்கையும் திருவள்ளுவர் பல்வகை நேர்வுகளில் தமது குறட்பாவில் பயன்படுத்தியுள்ளார். நீதி இலக்கியமொன்றில் பயன்படுத்தப்படும் உவமங்கள் இலக்கண நூலொன்றில் பயன்பட்டிருக்கும் பாங்கு இனி ஆராயப்படும்.

    நிலமும் ஆசிரியரும்

    பொறையுடைமை என்னும் அதிகாரத்தில் ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என ‘இகழ்ச்சியைப் பொறுக்கும் தன்மைக்கு’ நிலத்தை உவமமாக்குவார் திருவள்ளுவர். நிலத்தின் மேன்மையும் திண்மையும் பொறுமையும் அளவிட முடியாதது. நிலத்தைப் பயன்படுத்திக் கொள்கிற அளவிற்குத்தான் அதனால் பெறும் பயனும் இருக்கும். இந்தப் பண்புகளை ஆசிரியர்க்குப் பொருத்தினால்  வகுத்தறியப்பட இயலாத கல்வியின் பெருமை வாதப் பிரதிவாதங்களால் கலங்காத திண்மையும் இகழ்ச்சி கண்டு கலங்காத பொறுமையும் கற்பவனின் உழைப்புக்கேற்ற பயன் தரும் தன்மையுமாகிய சிறப்புக்கள் புலப்படும்.

    “தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
    பருவ முயற்சி அளவில் பயத்தலும்
    மருவிய நன்னில மாண்பா கும்மே!”

    என்னும் நூற்பாவால் நிலத்தின் தன்மையை விளக்கிக் காட்டும் நன்னூல், நல்லாசிரியர் ஒருவர்க்கே இது பொருந்தும் என்பதை நன்னிலம் என்ற சொல்லால் குறிப்பிடுவதைக் காணலாம்.

    மலையும் ஆசிரியரும்

    மலையுச்சியை ஐம்புலன் அடக்கியார் உயர்ச்சியோடு ஒப்பிடுவார் திருவள்ளுவர். ‘அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப்பெரிது’ என்பது குறட்பா. இந்த மலையென்னும் பொருண்மையின் சிறப்பை,

    “அளக்க லாகா அளவும் பொருளும்
    துலக்க லாகா நிலையும் தோற்றமும்
    வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே”

    என விளக்கியுரைப்பார். மலை பற்றிய பவணந்தியாரின் இந்த விளக்கத்தால் அளக்கவும் காணவும் இயலாத கல்வியின் அளவும் புலமையுடையோராலும் அசைக்கமுடியாத அதன் நிலையும் தொலைவிலுள்ளார் பார்வையிலும் படும் உயர்ச்சியும் பொருள் வரும்வழிக் குறுகினாலும் குறையாத கல்விச் செல்வத்தைக் கொடுக்கும் தன்மையும் ஆசிரியர் தம் பண்புகளாகக் கொள்ள முடிகிறது.

    மலரும் ஆசிரியரும்

    மலர் மென்மைக்கும் மலர்ச்சிக்குமானது. ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ ‘அனிச்சப்பூ கால்களையாள்’, ‘மலரினும் மெல்லிது காமம், என்றெல்லாம் திருக்குறள் பேசும். ஏனைய பணிகளினின்றும் முற்றிலும் வேறுபட்டது கற்பித்தல் பணி. மற்ற பணிகளில் செய்பவனுக்குத்தான் உயிர் இருக்கும். ஆனால் கற்பித்தல் பணி உயிரும் உள்ளமும் உள்ளவரைச் சார்ந்தவருக்கே அமையும். எனவே ஆசிரியரின் பணிக்கு அறிவைவிட மனநிலையே இன்றியமையாதது. அந்த மனம் மென்மையாக இருத்தல் வேண்டும். அந்த மென்மையை முகம் புலப்படுத்தல் வேண்டும். பூவை வெறுப்பார் பூவுலகில் யாருமிலர். மங்கலப் பொருட்களுள் தலையாயது. மங்கல நிகழ்வுகள் பூவின்றி அமையாது. ஆசிரியரின் உள்ளத்தின் மென்மைக்கும் புன்னகை பூத்த முகத்திற்கும் மலரை உவமமாகச் சொல்லியிருக்கிறார் பவணந்தியார்.

    “மங்கலமாகி இன்றி யமையாது
    யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
    பொழுதின் முகமலர் வுடையது பூவே”

    என்பது நன்னூல். இதனுள் மங்கல நிகழ்வுகளில் இடம்பெறுவதோடு அதன் இன்றியமையாமையையும் புலப்படுத்தியதன் மூலம் கற்றல் பணி ஆசிரியர்க்கு இன்றி அமையாது என்னும் நுட்பம் உணர்த்தியது காண்க.

    துலாக்கோலான ஆசிரியர்

    பகை, நொதுமல், நட்பு என்னும் முத்திறத்தார் மாட்டும் ஒப்ப நிற்கும்  நடுவுநிலைமை என்னும் பண்பு சான்றோர்க்கு அணியாகக் கருதப்படும். ‘உள்ளத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி’ என்பார் திருவள்ளுவர். அதற்கு உவமமாகக் காட்டப்படும் பொருள் துலாக்கோல் ஆகும். நீதிமன்றங்களில் அறமகள் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டுக் கையில் துலாக்கோல் பிடித்திருப்பதன் நோக்கம் யாவரும் அறிந்ததே. பொருளின் எடையைச் சரியாகக் காட்ட வேண்டுமானால் துலாக்கோல் தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ளல் வேண்டும். திருவள்ளுவர் இதனைச் ‘சமன் செய்து’ என்னும் வினையால் குறிப்பார். ‘முன்னே தான் சமமாக நின்று பின்னே தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் கோல்’ என்று விளக்கமளிப்பார் பரிமேலழகர். கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் விருப்பு வெறுப்பின்றி நடுவுநிலைமையோடு தன் பணியைச் செய்ய வேண்டும். துலாக்கோல் மாறாது. எடைக்கற்கள் மாறாது. ஆனால் பொருள்கள் மாறும். சிறப்பான பொருள்களும் சிறப்பற்ற பொருள்களும் மதிப்பிடப்படலாம். பொருளின் சிறப்புக் கருதி எடையை மாற்றிக் காட்டுதல் துலாக்கோலின் பெருமைக்கு ஏலாது.

    “ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
    மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே”

    என்னும் உவம விளக்கத்தால் கற்பித்தற்பொருளை ஐயத்திற்கிடமின்றிக் கற்பித்தலும் விருப்பு வெறுப்பின்றிக் கற்பித்தலுமாகிய பண்புகள் ஆசிரியருக்கு இருத்தல் வேண்டும் என்பது பெறப்படும்.

    நிறைவுரை

    ஊழ் ஆகூழ், போகூழ் என இருவகைத்தாதலின் அறிவும் இயற்கை அறிவு, செயற்கை அறிவு என இருவகைப்படும். முன்னது ‘உண்மையறிவு’ என்றும் பின்னது ‘நூலறிவு’ என்றும் திருக்குறள் குறிக்கும். குறிக்கவே ஆற்றலும் இயற்கையாற்றல் எனவும் செயற்கையாற்றல் என இருவகைத்து என்பதும் பெறப்படும். ஆசிரியருக்கு வரைவிலக்கணம் சொல்லவந்த பவணந்தியார் நற்குடிப் பிறப்பு, அருளுடைமை, தெய்வ நம்பிக்கை, உண்மையறிவு, சொல்லாற்றல் முதலிய இயற்கையமைதிகளைத் தொகுத்துச் சொல்லுகிறார். கற்பித்தல் பணிக்குத் தன்னை வடிவமைத்துக் கொள்ளும் ஆசிரியரின் இயல்புகளைச் சுட்டுகிறபோது நேரடியாக இன்னின்ன பண்புகள் எனச் சுட்டாது,  நிலமாகவும், மலையாகவும், மலராகவும், நிறைகோலாகவும் இருத்தல் வேண்டும் என உவமவழியாக அறிவுறுத்தியிருப்பதை அறியலாம். கற்பித்தல் பணி உள்ளம் சார்ந்த பணியாதலின் உள்ளத்தின் மென்மையை முன்னெடுப்பதே பவணந்தியாரின் கற்பித்தல் கொள்கை என்பதையும் அறியலாம். இனி இதற்கு முரணாக அமைந்த ஆசிரியர்களுக்கான உவமங்களை அடுத்த கட்டுரையில் காணலாம்.

    (தொடரும்…)   

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 11

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 11

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    நன்னூலில் உவமங்கள் – 1

    முன்னுரை

    தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பயின்று வரும் உவமங்கள் சிலவற்றின் பயன்பாட்டுச் சிறப்பை அறிந்த நிலையில் அதன் வழிநூலான நன்னூலில் பயின்று வரும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. எழுத்து, சொல் என்னும் இரு கூறுகளை மட்டுமே ஆராய்ந்திருக்கும் இந்த நூலிலும் இலக்கணக் கருத்துக்களை விளக்குதற்கு அவ்வளவாக உவமங்கள் பயன்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பொதுப்பாயிரத்துள் நூலின் தன்மை, நல்லாசிரியர், அல்லாசிரியர், நன்மாணாக்கன், அல்மாணக்கான் என்னும் சிலரது சிறப்பையும் இயல்பையும் உவமம் கூறி விளக்கிச் செல்லுகிறார் பவணந்தி. ஒருசில பொருளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உவமங்களை அவர் கூறிச்செல்வதையும் காண முடிகிறது. அவைபற்றிய ஒரு சுருக்கமான ஆய்வை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    கோட்டம் நீக்குவது நூல்

    கவிதையைச் சொற்களின் ‘குவியலாக்கி’ உள்ளத்தின் கொதிநிலையை அதிகப்படுத்துகிறவர் நிரம்பிய உலகம் இது. இந்த உலகில் கணிதம் போன்ற இலக்கணத்தைக் கவிதைப்பதத்தோடு அதாவது உவமச் செழிப்போடு பரிமாறுகின்ற வல்லாளர்களில் பவணந்தியும் ஒருவர் என்பதை அவருடைய நூலால் அறிய முடிகிறது

    “பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
    செஞ்சொல் புலவரின் சேயிழையா – எஞ்சாத
    கையே வாயாக கதிரே மதியாக
    மையிலா நூல்முடியும் ஆறு”

    தன்சொற்களே பஞ்சாகவும் செய்யுளே இழையாகவும் நூற்கின்ற புலவனே பெண்ணாகவும் குறையில்லா வாயே கையாகவும் அறிவே நூற்கும் கதிராகவும்  முடிவதே குற்றமில்லாத நூலாகும் என்னும் பொருளமையப் பாடியிருக்கும் மேற்கண்ட நூற்பாவில் அடுக்கிவரும் உவமங்களைக் காணலாம். பஞ்சு நூற்று ஆடை நெய்வது பெண்களுக்கான தொழில் என்னும் வரலாற்றுக் குறிப்பையும் பவணந்தி தருகிறார். தொடர்ந்து இத்தகைய சிறப்புடைய நூலுக்கு நு{ல் என்று பெயர்வந்த காரணத்தை ஆராய்கிறார்.

    “உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப்
    புரத்தின் வளமுருக்கிப் பொல்லா – மரத்தின்
    கனக்கோட்டம் தீரக்குநூல் அஃதேபோல் மாந்தர்
    மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு”

    என்னும் நூற்பாவில் அதனை உவமத்தால் விளக்குகிறார். மரம் முதலியவற்றின் கோணலைத் தீர்த்துச் செப்பம் செய்யும் நூல்போல் மனக்கோணலைத் தீர்த்துச் செப்பம் செய்வது நூலாம் என விளக்குகிறார். இந்த இரண்டு நூற்பாக்களிலும் அவர் காட்டியுள்ள உவமங்கள் நெசவு மற்றும் தச்சுத் தொழிலைச் சார்ந்திருப்பதை அறியலாம்.

    அதிகாரம் – இயல் – சூத்திரம்

    தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்பன அதிகாரப் பெயர்கள். எழுத்ததிகாரத்தில் நூன்மரபு, தொகைமரபு முதலியன இயல் தலைப்புக்கள். அவற்றுள் இருக்கின்ற நூற்பாக்கள் சூத்திரங்கள். அதிகாரத்தைப் படலமென்றும் இயலை ஓத்து என்றும் சூத்திரத்தை நூற்பா என்றும் அழைப்பதும் உண்டு. இந்த அமைப்பு பெரும்பாலும் எல்லா இலக்கண நூல்களுக்கும் பொருந்தும். சில இலக்கிய நூல்களும் இவற்றைப் பெறுவதுண்டு. இவற்றுள் இயலாகிய ஓத்து என்பதற்கும், நூற்பாவாகிய சூத்திரம் என்பதற்கும் நன்னூலாசிரியர் உவமங்களைக் கொண்டு விளக்கமளிப்பதைக் காணமுடிகிறது. இயல் என்பதற்கு,

    “நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
    ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
    ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர்!”

    என்னும் தொல்காப்பிய நூற்பாவை ஆசிரிய வசனமாக எடுத்தாளுகிறாரர் பவணந்தியார். இந்த நூற்பாவில் மணி என்பது பெயர்ச்சொல். அதற்கு அடையாக வந்திருப்பவை ‘நேர்’ ‘இனம்’ என்னும் இரண்டு சொற்கள். இது உவமத்தின் சிறப்பு. அதாவது ஒரே இனமாயுள்ள இரத்தினங்களை நிரல்பட வைப்பதுபோல என்பது உவமம். ‘ஒரே தன்மையான பொருள்களை நிரல்பட வைப்பது இயல்’ என்பது பொருள். ஒரே இனமாயினும் ஒத்த மணிகள் என்பது போல ஒரே தன்மையாக இருப்பினும் ஒத்த பொருள்களை நிரல்பட வைப்பதுதான் இயல் என்பது நோக்குதற்குரியது. இனிச் சூத்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எளிய உவமத்தால் விளக்கிக் காட்டுகிறார். அளவில் சிறிய ஆடி அளவில் பெரிய உருவத்தைத் தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல் சில எழுத்துக்களால் ஆன நூற்பாவாகிய சூத்திரம் பல இலக்கண உண்மைகளை அல்லது விதிகளை அடக்கியதாக அமைதல் வேண்டும் எனப் பொருள் விளக்கம் செய்கிறார். உவமமாகிய ஆடிக்கு அடைபுணர்க்காத பவணந்தியார், பொருளாகிய சூத்திரத்திற்குச் செம்மை, செறிவு, இனிமை, திட்பம், நுட்பம், சிறப்பு எனப் பல அடைச்சொற்களைப் புணர்த்தியிருக்கிறார்.

    “சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளைச்
    செவ்வன் ஆடியில் செறித்தினிது விளக்கித்
    திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்”

    உவமப் பயன்பாட்டில் இது ஒரு கோட்பாடு. ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ எனப் பொருளுக்கு அடைகூறிக் ‘கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’ என உவமத்திற்கு அடைபுணர்க்காது, பொருளுக்கு மட்டும் அடைபுணர்த்திருப்பது காண்க. இந்த நூற்பாவில் சூத்திரமாகிய பொருளின் இந்தப் பண்புகளையெல்லாம் மணியாகிய இரத்தினத்திற்குப் பொருத்திப் பொருள் காண்பது கற்பார் கடன்.

    இலக்கணத்திற்கு உவமங்களான இயற்கை

    மக்களாட்சி காலத்தில் வாழ்ந்தாலும் நம்மவர் பலர் பட்டங்கள் மற்றும் விருதுகளை மன்னராட்சிக் காலத்திலிருந்தே இறக்குமதி செய்து கொள்வார்கள். கவிக்கோ, கவிப்பேரரசு, கவிமுரசு, அரிமாப் பாவலர், இயக்குநர் சிகரம், மெல்லிசை மன்னர் என்னும் வழக்கை நோக்குக. இதுபோலவே இலக்கணம் மற்றும் இலக்கியங்களில் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படும் உவமங்கள் இயற்கை தழுவியனவாகவே அமைந்திருப்பது சிந்தனைக்குரியது.

    “ஆற்றொழுக்கு அரிமா நோக்கம் தவளைப்
    பாய்த்து பருந்தின் வீழ்வன்ன சூத்திர நிலையே!”

    என்னும் நூற்பா, இயலுள் அமைந்துள்ள சூத்திரம் எவ்வாறு அமையலாம் என்பதை விளக்குவதாக உள்ளது. ஆற்றுநீர் போலச் சீராக அமையலாம்.  சிங்கத்தின் பார்வை போல இடவலமாக, முன் பின்னாக நோக்கி அமையலாம். அடுத்ததை நோக்கிப், பின்னுள்ள ஒன்றினை நோக்கி அமையலாம். இயல்பான கண்களுக்குத் தெரியாமல் நுண்ணோக்கு உடையார்க்கே இலக்கண உண்மை புலப்படுமாறு அமையலாம். இந்த நான்கு வகையினை வரையறுக்கும் நன்னூலார் அவற்றுக்கு ஆறு, சிங்கம், தவளை, பருந்து என இயற்கைப் பொருள்களையே உவவமாக்குவதை அறியலாம்.

    நால்வகைச் சூத்திர நிலைகள்

    ‘உயிரும் உடம்புமாம் முப்பது முதலே’ என முதலெழுத்தை முன்னெடுத்த ஆசிரியர் நிரலாக (ஆற்றொழுக்காக) ‘உயிர் மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு அஃகிய இஉஐஔ மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத்தாகும்’ எனச் சார்பெழுத்துக்களைத் தொடர்ந்து ஓதியது ஆற்றொழுக்கு என்னும் சூத்திர நிலையின்பாற்பட்டதாகும். ‘நின்ற நெறியே உயிர்மெய் முதலீறே’ என்னும் நூற்பாவிற்கு உரையெழுதிய சங்கர நமசிவாயர், “மொழிக்கு முதலும் ஈறும் கூறுதலன்றி எழுத்திற்கு முதலும் ஈறும் கூறினார் என்று உணர்க. இச்சூத்திரம் சிங்க நோக்கம்” என்ற விளக்கம் காண்க. ‘ணன முன்னும் வஃகான் மிசையும் மக்குறுகும்’ என்னும் மகரக் குறுக்கம் பற்றிய விளக்கத்தைச் செய்யும் என எச்சத்து’ எனத் தொடங்கும் நூற்பாவோடும், பல்லோர் படர்க்கை எனத் தொடங்கும் நூற்பாவோடும் நோக்கியன்றிப் புரிந்து கொள்ள இயலாது என்பதால்  அதனைப் பருந்துப் பார்வையாக்கி அமைத்துக் கொள்வதாகச் சங்கர நமசிவாயர் கூறுகிறார்.

    உவமத்தால் வெளிப்படும் உள்ளடக்கச் சுருக்கம்

    இலக்கியத்தின் அழகியல் கூறான உவமத்தை இலக்கண விளக்கங்களுக்குப் பயன்படுத்துகிறபோது பொருளின் அதாவது உவமேயமாகிய  உள்ளடக்கத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் வெளிக்கொணரும் கருவியாக அது பயன்படுகிறது என்பதை அறியலாம்.

    “மேற்கிளந் தெடுத்த யாப்பினுள், பொருளொடு
    சில்வகை எழுத்தின் செய்யுளுக் காகிச்
    சொல்லும் காலை உரையகத் தடக்கி
    நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகித்
    துளக்க லாகாத் துணைமையெய்தி
    அளக்க லாகா அரும்பொருட் டாகிப்
    பல்வகை யானும் பயன்தெரி புடையது
    சூத்திரம்’

    என்னும் பொருளின் அனைத்துப் பரிமாணங்களையும் (சூத்திரப் பண்புகள் அத்தனையையும்) ‘ஆடி நிழலின் அறியத்தோன்றி’ என்னும் இரு சொற்களால் அடக்கியது காண்க. ‘கார்கூந்தல்’ என்றவழிக் ‘கார்’ என்னும் சொல்லுக்கான பயன்பாட்டின் நோக்கமும் ‘ஆடிநிழலின் அறியத் தோன்றி’ என்னும் சொல்லுக்கான பயன்பாட்டின் நோக்கமும் வேறு வேறானது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

    நிறைவுரை

    இலக்கியத்தின் அழகியல் கூறான உவமம் இலக்கண நூல்களுள் செய்திருக்கும் பணி வியப்புக்குரியது. ‘இப்படியெல்லாம் இருந்தால் அது சூத்திரம்’ என்பதை விட ‘அது இதுபோல் இருக்க வேண்டும்’ என்னும் உவமச் சுருக்கம்  பெரிதும் ஆழமானது. இலக்கியப் பயன்பாடு போலல்லாது இலக்கணத்தில் உவமப் பயன்பாடு பட்டுக் கத்தரித்தாற்போலத் தனது பணியைச் செய்திருக்கிறது. விரிவான சிந்தனைக்கும் ரசிப்புக்கும் இட்டுச் செல்ல வேண்டிய உவமத்தைப் பொருள் வரையறைக்குப் பயன்படுத்தியிருக்கும் இலக்கண ஆசிரியர்களின் சதுரப்பாடு தொடர்ந்துவரும் கட்டுரைகளிலும் ஆராயப்படும்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 10

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 10

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் – 3

    (வெட்டுண்ட அட்டையும் வீரனின் கவந்தமும்)

    முன்னுரை

    காஞ்சி, பாடாண் முதலிய வாழ்வியல் திணைகள் பெருமை சேர்த்தாலும் வெட்சி முதலியனவே புறத்திணைகளின் சாரமாகும். அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன அகத்திணைக் களங்களெனின் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவே புறத்திணைக் களங்களாகும். அவற்றுள் தும்பை சூடி நேருக்கு நேர் பகையெதிர்தல் தும்பைத்திணையாகும். தும்பைத் திணையின் போர்ச்சிறப்பினைக் காட்சிப்படுத்தும் தொல்காப்பியர் அட்டையை உவமமாக்குவதை அறியமுடிகிறது. ‘அட்டை போல ஆடுதல்’ என்னும் உவமத்தால் விளக்கப்படும் பொருள் இலக்கியக் காட்சியாயினும் வீரம் செறிந்த தமிழ்மரபின் நடப்பியல் உண்மை என்பதையும் அறியமுடிகிறது. உவம விளக்கத்தில் இது பற்றிய சில கருத்துக்களையும் இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    கொற்றவை வழிபாட்டில் ‘நவகண்டம், அரிகண்டம்?

    ‘அட்டையாடுதல்’ என்னும் உவமம் கற்பனைப் பொருளை விளக்குதற்கானது அன்று. தமிழனுடைய அரசியல் வரலாறு மற்றும் வாழ்வியல் சார்ந்த நடைமுறை வழக்கத்தில் காணப்பட்ட ஒரு நிகழ்வைச் சித்திரிப்பதற்குரியதாகும்.  ‘நவகண்டம்’, ‘அரிகண்டம்’ என்னும் இரண்டும் தமிழகத்தில் பழங்காலத்தில் நிலவிய வீர மரபாகும். ஒருவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும் முறைகள். ‘நவகண்டம்’  என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ ‘கொற்றவை’ எனும் பெண் தெய்வத்தை நோக்கி அறுத்துத் தன்னையே பலி கொடுத்துக் கொள்வது.  ‘அரிகண்டம்’ என்பது வாளால் தலையை மட்டும் துண்டித்துத் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்வது.

    1. மானுட ஆற்றல் பயனற்றுப்போய்விடுமோ என்னும் ஐயவுணர்வு தலையெடுங்குங்கால் ஒரு வேண்டுதலை நிறைவேற்றவோ மாண்புடன் இறக்கவோ இந்தப் பலிக்குத் தங்களைத் தாங்களே உட்படுத்திக் கொள்வர்.
    2. வலிமிகுந்த மாற்றரசருடன் நிகழும் போர்க்காலங்களில் வெல்வதற்கு வாய்ப்பு அரிதான ‌ தருணங்களிலும்,
    3. தேற்ற இயலாத உடல்நிலையால் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசன் குணமடைய வேண்டுகின்ற பொழுதிலும்
    4. நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரோ மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியோ மிகுந்த அவமானத்தினால் தன் வாழ்வை முடித்துக் கொள்ள நினைப்பவரோ, அவ்வாறு சாகாமல் வீர சொர்க்கம் அடைய விரும்புகிற பொழுதிலும்

    எனப் பல காரணங்களுக்காக ‘நவகண்டம்’ செய்து கொள்வர். இவ்வாறு தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்பவர் அக்காலத்தில் வீரர்களாகப் போற்றப்பட்டனர். அது மட்டுமல்ல, அவர்களுடைய சந்ததியினர் அவர்கள் உருவங்களை “வீரர் கல்லு” எனப்படும் சிலைகளாக வடித்துத் தொழுது வந்ததும் வழக்கமாக இருந்துள்ளது. நமக்கு இதுவரை கிடைத்த மிகப் பழமையான ‘வீரர் கல்லு’ கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இத்தகைய கற்கள் விரவிக் காணப்படுகின்றன.

    இலக்கியங்களில் கவந்தம்

    வேண்டுதலுக்காகவோ களத்திலோ தானாகவோ எதிரணி வீரர்களாலோ  தலை துண்டிக்கப்பட்டு உடல் மட்டும் துடிக்க துடிக்க ஆடுவதற்குப் பெயர்தான் கவந்தம் என்பது. இதனைத்தான் ‘அரிகண்டம்’ என்ற சொல் குறிக்கிறது. இது பற்றிய குறிப்புக்கள் இலக்கியப் பதிவாகவும் வரலாற்றுப் பதிவாகவும் காணக்கிடைக்கின்றன.

    “அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ?
    அரிந்த சிரம் அணங்கின்கை கொடுப்பராலோ?
    கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ?
    குறைஉடலம் கும்பிட்டு நிற்குமாலோ?”

    என்னும் கலிங்கத்துப்பரணி கவந்த நிகழ்ச்சியை முழுமையாகக் காட்சிப்படுத்துகிறது.

    “வெந்திறல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்கென்
    பலிக்கொடைப் புரிதோர்”

    என்னும் (இந்திரவிழவூர் எடுத்த காதை) வரிகள் மன்னர்க்கு நேர்ந்த துன்பம் தொலைவதற்காக அரிகண்டம் செய்தாரைக் குறிக்கிறது.

    “தோளும் தலையும் துணிந்து வேறாகிய
    சிலைத்தோள் மறவர் உடற்பொறை அடுக்கத்து
    எறிபிணம் இடறிய குறையுடல் கவந்தம்
    பறைக்கண் பேய்மகள் பாணிக்கு ஆட” (கால்கோட்காதை)

    என்னும் வரிகள் கவந்தம் என்ற சொல்லை நேரடியாகவே பதிவு செய்து பேய்க்களக்காட்சியைச் சித்திரித்துள்ளது. இத்தகைய பதிவுகளிலிருந்து கவந்தம் ஆடுதல் அல்லது அரிகண்டம் ஆடுதல் என்னும் வினைகள் உணர்ச்சி காரணமாக அமைந்த தற்காலிகச் செயல்கள் அல்ல என்பதும் அலகு குத்துதல் போலத் திட்டமிட்ட செயலே என்பதும் கருதுதற்கு ஏதுவாக அமைந்துள்ளன என்பதை அறியலாம்.

    தொல்காப்பியத்தில் கவந்தம்

    போர்க்களத்தில் மாற்றாரின் கணையும் வேலும் மெய்யெல்லாம் மொய்த்திருக்குங்கால், உயிர் போய்விடுமாயின் யாக்கை மட்டுமே நிற்கும். நின்ற அந்த யாக்கை வீரம் பொங்கக் குதித்து நிற்கும் நிலையைத் தொல்காப்பியப் பொருளதிகாரம்  புறத்திணைத் துறைகளுள் ஒன்றாகச் (தும்பை) சுட்டுகிறது.

    “கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
    சென்ற  உயிரின் நின்ற யாக்கை
    இருநிலம் தீண்டா அருநிலை வகையொடு
    இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே”

    என்னும் நூற்பாவில் மேற்சுட்டிய நிலை காட்சிப்படுத்தப்படுகிறது. இந்நூற்பாவிற்கு உரையெழுதிய இளம்பூரணர்,

    “கணையும் வேலும் படைத்துணையாகக் கொண்டு பொருதல் காரணமாகச் சென்ற உயிரின் நின்ற யாக்கை, ‘நீருள் அட்டை காலவயப்பட்டு உடலினின்று உயிர் பிரிக்கப்படுமாறு, இருபாற் படுக்கப்படும் அற்ற துண்டம் இணைந்தது போன்று ஆடலொத்த பண்பினையுடையது. (இருநிலம் தீண்டா அரு – நீருட் கிடக்கும் அட்டை)”

    என விளக்கிக் காட்டுவார். இந்நூற்பாவிற்கு உரையாசிரியர்கள் பலரும் தத்தம் கருத்துக்களுக்கேற்பப் பொருளுரையும் விளக்கவுரையும் எழுதிக்காட்டினும் உடம்பாடும் நிலைக்கு அட்டையாடுதல் உவமமாக்கப்பட்டுள்ளது என்னும் தொல்காப்பிய உண்மை உளங்கொளற்குரியதாம். ஊர்ந்து வரும் அட்டை இரு கூறான பின்பும் இரண்டும் தனித்து இயங்குதல் என்பது கருத்து. இருவேறு துண்டங்கள் என்பதையே கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.

    வெண்பாமாலையில் வெருவரு நிலை

    தொல்காப்பியத் தும்பைத்திணைப் பொருள் வரையறையில் மனம் பறிகொடுத்த ஐயனாரிதனார்,

    “விலங்கமருள் வியலகலம் வில்லுதைத்த கணைகிழிப்ப
    நிலந்தீண்டா வகைப்பொலிந்த நெடுந்தகை நிலை உரைத்தன்று”

    எனத் தும்பைத்திணை – வெருவரு நிலைத் துறைக்கான கொளுவை அமைத்திருக்கிறார். ‘நிலந்தீண்டா நெடுந்தகை நிலை’ எனக் கூட்டி நோக்கினால் அவருடைய தொல்காப்பியக் காதல் புரியக்கூடும்.

    “வெங்கண் முரசதிரும் வேலமருள் வில்லுதைப்ப
    எங்கும் மருமத்து இடைகுளிப்பச் செங்கண்
    புல்வாள் நெடுந்தகை பூம்பொழில் ஆகம்
    கலவாமற் காத்த கணை”

    ‘வெட்டுண்ட யாக்கை இருநிலம் தீண்டாது’ என்ற தொல்காப்பியத்திற்கு  வெண்பாமாலை தலைவி ‘தன் ஆகம் தீண்டிய அவனாகத்தை மண்மகள் புல்லாமல், அவன் மார்பில் தைத்த அம்புகள் காத்தனவாகக் கற்பிக்கிறார். கட்டுரையின் முற்பகுதியில் கூறியவண்ணம் சில குறிப்பிட்ட நேர்வுகளில் தங்களையே பலியிட்டுக் கொள்ளும் வீர மரபு தமிழ் மரபு என்பதை விளங்கிக்கொள்ள ‘அட்டையாடுதலை’ உவமமாக்கித் தொல்காப்பியம் விளக்கப், பின்வந்தோர் அதனை வழிமொழிந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

    நிறைவுரை

    திருவள்ளுவர் ‘ஒப்புரவு’ என்னும் அதிகாரத்தில் ‘விற்றுக்கோள் தக்கது’ எனவும் ‘கயமை’‘ என்னும் அதிகாரத்தில் ‘விற்றற்குரியர் விரைந்து’ எனவும் குறிப்பிடுவார். இக்குறிப்புக்களால் மனிதர்கள் தங்களையே விற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்குமோ என்னும் ஐயம் அடிமைகளின் வரலாற்றை நோக்குவார்க்கு வருவது இயல்பே. அதுபோலக் கவந்தம் ஆடுதல் என்பது களக்காட்சியாயினும் அது வாழ்வியல் பதிவோ என்னும் ஐயம் வருவது இயல்பு. நிகழ்வுகள் மட்டுமன்று உவமங்களால் விளக்கப்படும் பொருள்களும் வரலாற்றுப் பதிவுகளாகலாம் என்பதற்கு நவகண்டம், அரிகண்டம், கவந்தம் – அட்டையாடுதல் என்னும் சொற்கள் சிந்தனைக் காரணிகளாக நிற்கின்றன எனலாம்.

    (தொடரும்…)

    Share