Tag: மீனாட்சி பாலகணேஷ்

  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-19

    மீனாட்சி பாலகணேஷ்

    கைவண்ணமும் கால்வண்ணமும்…

    சிறு மல்லிகைச்செண்டு போலும் அழகான பெண்மகவு. இந்தப் பிஞ்சுக்குழந்தையைக் கண்ணுறும்போது, பெற்றோருக்குத் தம் கவலைகள் அனைத்தும் மறந்துவிடுகின்றன. ஏழையோ எளியவனோ, உடல்நிலை சரியில்லாதவரோ, “ஏன் இவ்வுலகில் பிறந்தோம்?” என சலித்துக் கொள்பவர்களும் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல், குழந்தையின் அழகிலும், குறும்பிலும் மழலையிலும் உள்ளம் பறிகொடுத்து விடுகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சி எனும் பேரானந்தக்கடலில் மூழ்கிவிடுகிறார்கள்.

    நல்லிசைப்புலமைப் பெரியோர் கூற்றில் குழந்தைக்குத் தாய்மார்கள் அமைவது மூன்றுவிதம். முதலாமவள், தன் குழந்தை மற்ற குழந்தைகளைப்போலும், இன்னும் சிறிது புத்திசாலியாகவும் வளருவதனைக்கண்டு பெருமிதம்கொள்ளும் சாமானிய மானிடத்தாய்; இரண்டாமவள், ‘தெய்வமே எனக்கு இக்குழந்தையாக வந்து பிறந்துள்ளது,’ என உருகும் பக்தித்தாய். இவள் குழந்தையின் செயல்களுக்கெல்லாம் ஒரு தெய்வப்பொருளைக் காரணம் கற்பித்துக் கொள்பவள்; மூன்றாமவள், இன்னும் ஒருபடி மேல்சென்று, குழந்தையின் வடிவில் பரம்பொருளைத் தரிசிக்கும் ஞானத்தாய்! தன்னை உய்விக்க இவ்வுலகில் வந்துதித்த தெய்வமே இக்குழந்தை எனத்தெளிவாக இருப்பவள். இந்த மூன்றுவிதமான தாயின் நிலைகளையும் எல்லாப் பிள்ளைத்தமிழ் நூல்களிலுமே கண்டுணர்ந்து மகிழலாம்; மெய்சிலிர்க்கலாம்!

    திரிசிரபுரம் மாகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பல பிள்ளைத்தமிழ் நூல்களைத் தமிழ்ச்சுவையும் பக்திச்சுவையும் பொங்கிப்பெருக இயற்றியுள்ளார். திருக்குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் இவற்றுள் ஒன்று. அதிலிருந்து ஓரிரு பாடல்களின் நயத்தைக் காணலாமா?

    *********

    856ce7c0-e568-4007-9426-24a6b1cd62d3
    மலர்போன்ற சிறுகரங்களைச் சேர்த்து சப்பாணி கொட்டுவாயாக எனக் குழந்தையைத் தாயும் மற்றும் செவிலியரும் வேண்டுகின்றனர். குழந்தையின் வளர்ச்சியில் அது தனது கையால் ஒலியெழுப்ப இயலும் என உணரும் பருவமிது. மேலும், கையைப் பயன்படுத்தி, இன்னாரைச்சுட்டி, ‘அம்மா, அப்பா,’ எனவெல்லாம் உணரும், உணர்த்தும் பருவமும் கூட. தாயும், செவிலியரும் குழந்தையைக் கைமுகிழ்த்தொரு (இருகைகளையும் இணைத்துச்சேர்த்து) சப்பாணிகொட்ட வேண்டுகின்றனர். சக(ஹ) + பாணி= சப்பாணி; இரு கரங்களையும் இணைத்துக் கொட்டுதல். கையின் உபயோகத்தைக் குழந்தை புரிந்துகொண்டு அக்கைகளால் என்னவெல்லாம் செய்ய இயலும் என உணர்ந்து, செய்து, களித்துத் தானும் மகிழ்ந்து தாயையும் மற்றோரையும் களிப்பில் ஆழ்த்துகிறது. இது வளரும் குழந்தையின் கைகளுக்குப் பயிற்சியும்கூட ஆகும். இவ்வாறெல்லாம் சப்பாணிகொட்டும் சின்னஞ்சிறு கையைத் தாயானவள் பெருமிதத்துடன் போற்றுகிறாள். மங்களவல்லியான இந்தப் பெண்மகவு தலைவனான சிவபிரான் செய்யும் நிருத்தத்திற்குத் தாளம்தாக்குகின்றது (கொட்டுகின்றது). அம்பிகை தாளம்கொட்டுவதைக் காரணமாக்கி சிவப்பரம்பொருளின் நடனத்தை அழகுறப்போற்றுகிறார் பிள்ளையவர்கள்.

    அத்தனாகிய சிவபிரான் தன் கையிலேந்திய தமருகத்தை ( துடி, உடுக்கை) ஒலியெழுப்பி ஆக்கும் (படைக்கும்) தொழிலைச் செய்கின்றான். அவனுடைய அமைந்தகரமானது அபயமளித்துப் புரக்கின்றது. தீயாகிய அனலை ஏந்திய கரம் சாம்பலாய் அனைத்தையும் அழிக்கும் தொழிலைச் செய்கின்றது. முயலகன் தலைமீது ஊன்றியிருக்கும் திருப்பாதம் திரோதம் என்னும் மறைத்தல் தொழிலைச் செய்கின்றது. இந்த மறைப்பைப்போக்கி முத்தியளித்து உய்விக்கும் தொழிலைத் தூக்கிய திருவடியாகிய குஞ்சிதத்தாள் செய்கின்றது.

    bfedbda9-c32a-49de-af24-065738a98665

    இங்கு, ‘தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
    சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்- ஊற்றமா
    ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முத்தி
    நான்ற மலர்ப்பதத்தே நாடு,’

    என்று இக்கருத்தை அழகுற வலியுறுத்தும் உண்மை விளக்கப்பாடல் இங்கு சிந்தை கூரத்தக்கது.

    ஆடலரசனின் ஐந்தொழில் நடனத்தில் ஆழ்ந்து கருத்தூன்றிய பெரியோர்கள் அக்கருத்துக்களைத் தாமியற்றும் பாடல்களில் பலவிடங்களில் பொருத்தமாக இணைத்துக் காட்டுவது பயில்வோருக்குப் பேரின்பத்தை நல்கும். இப்பாடலும் அத்தகைமைத்தே!

    இந்த ஐந்து செய்கைகளும் இடையறாது நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. சுருதி எனப்படும் எழுதாமறையாகிய வேதங்கள் ஐயனுடைய இத்தொழிலைப்போற்றி வாழ்த்துகின்றன. ‘இனி, நம்மைத் தொடரும் துன்பம் தொலைந்துபோயிற்று; ஐயனின் இந்த ஐந்தொழில் புரியும் நடனத்தினால் நாம் உய்ந்தோம்,’ என்று சகல உலகங்களும் போற்றிப் பாடிப் புகழ்கின்றனவாம். இந்த ஆனந்தத் திருநடனத்தைக் கண்ணுற்ற புலிப்பாத முனிவன் என அறியப்படும் வியாக்ரபாதர், பணி நெடுந்தவமுனிவன் என அறியப்படும் பதஞ்சலி முனிவர் ஆகிய இருவரும் ஆனந்தத்தில் மூழ்கிவிடுகிறார்கள்.
    இவ்வாறு தில்லையம்பலத்தில் மாதேவனாகிய எம்பெருமான் ஆடுகின்ற புதுமையான இந்த நடனத்திற்கு இயைந்தவண்ணம் அம்மை தன் திருக்கைகளால் தாளம் இடுகிறாள். அவளுடைய திருக்கைகள் அழகுறத் தாளமிடும்போது தாமரைமலர் போலச் செந்நிற ஒளிதுளும்பக் காணப்படுகின்றன. ‘அந்த ஒளிமிகுந்த கைகளைச் சேர்த்துக்குவித்து ஒரு சப்பாணி கொட்டியருளுக! இனிமையான தமிழின் வளம் நிறைந்த குடைந்தைநகரில் வாழும் மங்களவல்லியே சப்பாணி கொட்டியருளுக,’ என வேண்டுகிறாள் தாய் என்பது புலவர் பாடல்.

    இவள் அன்னை பராசக்தியல்லவா? அதனால் ஐயனின் நடனத்திற்கியைவாகக் கைகளைக் குவித்துத் தாளமிடுகிறாள் எனும் கற்பனை இனிமையானது.

    ஆக்குந் தொழிற்றமரு கம்புரக் குந்தொழி லமைந்தவப யஞ்சாம்பரா –
    வழிக்குந் தொழிற்றீ மறைக்குந் தொழிற்றலை யமைந்தூன்று தாண்மறைப்புப்,
    போக்குந் தொழிற்குஞ் சிதத்தா ளிவைந்தும் பொலிந்திடச் சுருதிவாழ்த்தப் –
    புன்மையின் றுய்ந்தன மெனச்சகல புவனமும் போற்றெடுத் தேத்தமடமை,
    நீக்கும் புலிப்பத முனித்தலைவ னும்பணி நெடுந்தவ முனித்தலைவனு –
    நிறைமகிழ் திளைப்பமா தேவன்மன் றிடைநவி னிருத்தக் கியைந்ததாளந்,
    தாக்குந் திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே
    தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே.

    சப்பாணி என்பது கைகளால் கொட்டப்படுவதனால், சப்பாணிப்பருவத்தில் அக்கைகளைப் புகழ்ந்து பாடுவது பிள்ளைத்தமிழுக்குரிய ஒரு வழக்கு. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் திருக்கைகளின் பெருமையே சப்பாணிப்பருவத்தில் பாடுபொருளாக அமைந்துவிட்டதென்று முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் கூறுவார்.

    ———–

    கைவண்ணம் கண்டோம்; இனி அன்னையின் கால்வண்ணத்தைக் காண்போமே!

    தளர்நடை பயிலத்துவங்கியுள்ளாள் குழந்தை. இதனையே, ‘கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி,’ என்கிறார் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். தத்தித் தத்தி மயில்போல நடந்து வரும் குழந்தையைக்கண்டு பரவசத்தில் உள்ளம் பறிகொடுத்து, தாயின் நிலையிலும், அடியாரின் நிலையிலும் இருவிதமாகவும் நின்று, அவளைப் பலவிதமாக வர்ணிக்கிறார் புலவர். தெய்வக்குழந்தையல்லவா இந்த மங்களாம்பிகை? ‘இவளைக் கண்ணால் கண்டாலே பிறவிக்கடலில் மூழ்கிப்படும் துயரமெல்லாம் பறந்தோடும்; பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல ஆரவாரிக்கும்,’ என்பது பொருள்!

    சிவபிரானின் பெருமைகள் அனைத்தும் அன்னை பார்வதியாம் மங்களவல்லிக்கே உரித்தாக்கப்படுகின்றன. சிவனும் சக்தியும் இணைபிரியாதவர்களல்லவா? அயனும் திருமாலும் அன்னமாகவும், வராகமாகவும் உருவெடுத்து ஐயனின் அடிமுடி காணப்புகுந்த வரலாறு இது. தீயோர்களை நாசம்செய்யும் சுதரிசனம் எனும் சக்கரப்படையை ஏந்தியவன் திருமால். அவன் ஒரு விலங்காக (பன்றி, வராகம்) வடிவெடுத்து தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் இரண்டு திருப்பாதங்களைத் தேடிக்காணமுயன்றான். பூமியின் அடிவரை சென்று தேடியும் காணஇயலாமையால் மனமும் உடலும் துவண்டு மீன்கள் நிறைந்த கடலில் (இங்கு பாற்கடலில் எனப் பொருள்கொள்ள வேண்டும்) விழுந்து இளைப்பாறுகிறான். அடுத்து பிரம்மா அன்னப்பறவை வடிவெடுத்து சிவனின் முடிதேடியதனை அழகுற விளக்குகிறார். உயர உயரப்பறந்து தேடியும், முடியைக் காண இயலவில்லை. இனி எங்குபோய்த் தேடுவது எனச் சிந்திப்பவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கின்றதாம். அவன் தேடிய சிவபிரானின் முடியானது ஊடல்கொண்ட அன்னையிவள் சின்னஞ்சிறு பாதங்களின்மேல் வைக்கப்பெற்றுள்ளது. ஆகவே, பிரம்மன் தான் தேடும் சிவபிரானின் முடியைக்காண ‘அன்னையின் பாதங்களை நாடினாலே போதுமே; ஆகவே, அதனைச் செய்வோம்,’ என எண்ணுகிறான். இனிய கற்பனை. குறுக்குவழியில் இலக்கை அடைவது பற்றிய சிந்தனை புராணகாலம் தொட்டு இருந்துள்ளது போலும்!! யாருக்கும் எட்டாத பரம்பொருளின் திவ்விய வடிவை, முடியை, எளிதிலடைந்து விட முடியுமா? முடியாதுதான். அண்ணல் சிவபிரானின் முடி அயன் கண்களுக்கெட்டாத கற்பகக்கனியாகி விட்டது.

    இனி என் செய்வான்? அன்னம் ஆகி (ஓதிமம்) வருந்திக் களைத்து நின்ற அவன் கருத்து குழந்தையாகி நடைபயிலும் அன்னையின் தேன்நிறைந்த மலர்போன்ற திருவடிகளில் பதிகின்றது. அது பயிலும் மென்னடையில் அவன் சிந்தையும் கருத்தும் பதிகின்றது; அயன் தேடிவந்ததென்னவோ, சிவபிரான் திருமுடிக்காட்சியைத்தான். ஆனால், அது எட்டாக்கனியாகிவிட்ட நிலையில், அன்னையின் நடையழகு அவன் கருத்தைக் கவர்ந்துகொண்டுவிட்டது. மற்ற அன்னங்கள் இவள் நடையைக் கற்க ஆவல்மிகுந்து அவளைப் பின் தொடர்கின்றன. தாமரைமலரில் வீற்றிருக்கும் இந்த (பிரம்மா) அன்னமும் அவைகளுடன் அன்னையைப் பின் தொடர்கின்றதாம்.

    இவ்வாறு அன்னங்கள் பின்தொடருமாறு தளர்நடை பயில்பவள், வானளாவ உயர்ந்த இமயமலையில்பிறந்த வனிதையாகிய மங்களவல்லி. இவள் தங்குமிடமோ வேதியர்கள் ஓதும் மறைவாழ்த்தொலி விண்ணளாவ முழங்கும் திருக்குடந்தை நகராகும். அம்மடந்தையை வருக வருகவே எனத் தாயர் அழைப்பதாகப் புலவர் கற்பனை விருந்து படைக்கிறார்.

    ஊன்றோய் சுதரி சனப்படையா னொருமா வுருக்கொண் டும்பர்பிரா
    னுபய பதமுங் காண்பான்புக் கொன்றுங் காணா துழிதந்து
    மீன்றோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி யிவள்சிற் றடிதொடரின்மேற்
    விழைந்து முயன்ற முடிகாணன் மேவு மேவா விடினுமிவ
    டேன்றோய் மலர்த்தாட் டொடர்பொன்றே திருந்து மெனவுட் கொடுமலர்
    றிகழோ திமமென் னடைகற்பான் செறியோ திமங்க ளொடுந்தொடர
    வான்றோ யிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே
    மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே.

    சிந்தை களிகூரக் கால்வண்ணம் கண்டோமல்லவா? இனியும் தொடர்ந்து கண்டு மகிழ்வோம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *****

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் -18

    -மீனாட்சி பாலகணேஷ் 

    கேசவா! நாராயணா! மாதவா!

    ஆயர்பாடியில் நந்தகோபனின் திருமனை அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாயிலில் அழகான கோலங்கள்! எங்கும் அழகான தோரணங்கள்! மலர்மாலைகள்! பட்டாடைகள் அணிந்த இடைச்சியர். இவர்கள் தயிர், பால் விற்பனையை இன்று பொழுதோடு முடித்துக்கொண்டு வந்துவிட்டார்கள். சிறுவன் கண்ணனுடைய ஆய்ப்பாடித்தோழர்களும் வந்துள்ளனர். முற்றமெங்கும் ஓடியாடி மகிழும் அவர்களது மணியோசை போன்ற இனிய குரலோசை கேட்கவில்லையா? தொழுவத்தில் அசைபோடும் மாடுகளும் கூட இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனபோல் ஆவலோடு தலையை உயர்த்திப் பார்க்கின்றனவே!

     பெரிய தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், இன்னும் கிருஷ்ணனுக்குப் பிடித்தமான பலவகைத் தின்பண்டங்கள், மங்கலப்பொருட்கள் அனைத்தும் அழகுற அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. யசோதையும் வாயிலையே நொடிக்கொருமுறை நோக்கியபடி உள்ளும் புறமும் சென்றுவருகிறாள். ஆவலோடு துவங்கிய இந்த நாள், நெடுநேரமாகிவிட்டதால் இப்போது எதிர்பார்ப்பின் எல்லையைமீறி, சலிப்பையும், ஆற்றாமையையும் அவளிடம் எழுப்பிவிட்டுவிட்டது. பாவம், என்னவாயிற்று?

    “எத்தனையோமுறை சொல்லியாயிற்று. உன் தந்தைக்கு இதற்கெல்லாம் நேரமே இல்லை; என்பேச்சை அவர் காதிலேயே வாங்கிக்கொள்வதில்லையடா கிருஷ்ணா! ear-piercing-ceremony1போதாத குறைக்கு இந்தக் கம்சன் எனும் கொடியவனும் உனக்குத் தீங்கு விளைவிக்க என்றே எப்போதும் காத்துக்கொண்டு இருக்கின்றான். உனக்கு ஏதேனும் ஆயிற்றென்றால் உன்னை யார்தான் காப்பாற்றுவார்கள்? நான் என்னதான் செய்வேன் என் கண்ணா? நீயானால் தனியே  பட்டிமேயும் கன்றைப்போல் ஊரெல்லாம் சுற்றியலைந்து திரிகிறாய். என் கேசவநம்பீ! அதனால்தான் உனக்குக் காதினைக் குத்திவிடலாம் என எண்ணினேன். அதற்காகவே இவர்களை வரவழைத்தும் உள்ளேன் பார்! எல்லாப்பொருட்களையும் வெற்றிலை பாக்கினையும் தயாராக வைத்துள்ளனர் பார்த்தாயா? நீ எங்கேயடா என் குழந்தாய்?” எனத் தனக்குத்தானே அவனிடம் கூறுவதுபோல கூறிக்கொள்கிறாள்.

     தன் சிறுகுழந்தைக்குக் காதுகுத்தவேண்டும் என்று அன்னைக்கு ஆசை! இந்தக் காதுகுத்தல்’ என்ற அழகான சிறுநிகழ்வில் பலபொருட்கள் அடங்கி நிற்கின்றன. அவளுடைய ஆதங்கம் யார் அந்த விழாவிற்கு முக்கியமோ, அவனே எங்கோ ஒளிந்துகொண்டுள்ளான், வராமலிருக்கிறான் என்பதே!

    (குழந்தைக்குக் காதுகுத்துவது என்பது நமது நாட்டில் இன்றளவும் ஒரு சிறுவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஒரு நல்ல தினத்தில் சுற்றமும் நட்பும் சூழ, குழந்தையின் தலைமயிரை மழித்து, காதினில் துளையிட்டு ஒரு சிறு கடுக்கனை அணிவிக்கும் வழக்கம் உள்ளது. குழந்தைக்குப் பரிசுகளும் அனைவருக்கும் விருந்தும் அன்று உண்டு.

    காதினைக் குத்தித் துளையிடுவதால் மூச்சடைப்பு வராது என மருத்துவரீதியாகக் கூறப்படுகிறது. இளம்வயதிலேயே காதுகுத்துவதால் புத்திக்கூர்மை அதிகரிப்பதாகவும், சிந்தனாசக்தி வளருவதாகவும், முடிவுகளைத் துணிந்து எடுக்கும் திறன் கிட்டுவதாகவும் தத்துவ, விஞ்ஞான ரீதியாகக் கூறுகின்றனர். மேலும் பெண்குழந்தைகளுக்கு – ஆண்மக்களுக்கும் கூட- விதம்விதமான காதணிகளை அணிவித்து அழகுபார்க்கப் பெற்றோர் தலைப்படுகின்றனர்.)

     யசோதைக்கும் தன் மகனின் காதினைக்குத்தித் தோட்டினை அணிவித்து அழகுபார்க்கவேண்டும் என ஆசையிராதா என்ன?

      போய்ப்பாடு உடையநின் தந்தையும் தாழ்த்தான்;
                       —பொருதிறல் கஞ்சன் கடியன்
              காப்பாரும் இல்லை, கடல்வண்ணா! உன்னை,
                       —தனியேபோய் எங்கும் திரிதி;
              பேய்ப்பால் முலைஉண்ட பித்தனே! கேசவ
                       —நம்பீ! உன்னைக் காதுகுத்த
              ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்;
                       —அடைக்காய் திருத்திநான் வைத்தேன்.

    (பெரியாழ்வார் திருமொழி)

    மற்றகுழந்தைகளுக்குக் காதுகுத்துவதைக் கிருஷ்ணன் பார்த்திருக்கிறான். அவ்வமயம் அவர்கள் வலியில் துடித்து அழுவதனையும் கண்டிருப்பதனால், அவன் இப்போது இந்தப்பக்கமே வர மறுக்கிறான். ”நான் வரமாட்டேன். வலிக்கும், எரியும்”, எனக்கூறும் அவனிடம் பல ஆசைவார்த்தைகளைக் கூறுகிறாள் அன்னை.

    “நாராயணா, பார் இந்த அழகான தங்கக்காதணிகளை! எப்படிப் ‘பளபள’வென ஒளிவீசுகின்றன எனப்பார்த்தாயா? இது உனக்காகவே நான் செய்துவைத்தது. எண்ணும் எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரானே! உனக்கு எரிச்சல் ஏற்படாதவாறு உன் காதுக்குத் திரியை நான் இடுவேன், இவை உன் கண்களுக்கும் நல்லது. வாராய்,” எனக் கெஞ்சி அழைக்கிறாள்.

    “அழகான பவளவடத்தினை அரையில் அணிந்தும், மலர்ப்பாதங்களில் அணிந்துள்ள கிண்கிணி ஆர்ப்பரித்து அழகான ஒலியை எழுப்பவும் செய்தபடி என்னருகே வருவாய்,” என ஆசையாக வேண்டுகிறாள்.

                வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி
                       —மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப,
              நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத
                       —நாராயணா! இங்கே வாராய்;
              எண்ணற்கு அரிய பிரானே! திரியை
                       —எரியாமே காதுக்கு இடுவன்;
              கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
                       —கனகக் கடிப்பும் இவையா!

    (பெரியாழ்வார் திருமொழி)

     “மாதவா! உன் காதினில் திரியை இடும்போது சிறிதேதான் வலிக்கும். ஆனால் அவ்வலி தெரியாதிருக்க உனக்குச் சுவையான தின்பண்டங்களைத் தருவேன்; அத்தனையும் செய்து வைத்துள்ளேன். கோவிந்தா! உனக்குப் பலாப்பழம் கொண்டுவந்து வைத்திருப்பதைப்பார்!” எனப் பலவிதமாக அவனை வேண்டுகிறாள். அவன் ஒன்றினையும் கேட்டுக்கொள்வதாக இல்லை!

    ஓடியோடி ஒளிபவனை எவ்வாறோ பிடித்து, அவனுடைய ஒருகாதில் துளையிட்டு காதணியையும் போட்டுவிட்டாள் யசோதை. இவனோ உடனே அதைப்பிடுங்கி வீசிவிட்டு ஓடிவிட்டான்.

    “திரிவிக்கிரமா! நீ சிறுகுழந்தையாக இருந்தபோதே, உன்தலை சரியாக நிற்காத மிக்க இளம்பொழுதிலேயே உன் காதினைக் குத்தாமல் விட்டது என் தவறுதான்,” எனத் தன்னையே நொந்துகொள்கிறாள்.

     “கூழைக்காது எனக்கூறிப் பெண்கள் நகைப்பார்கள் சிரீதரா! உன்னொத்த மற்ற ஆய்ப்பாடிச்சிறுவர்கள் தத்தம் காதுகளைப் பெருக்கிக்கொண்டு நடமாடுவதைக் கண்டாயா?” என்பவளிடம், “என்காது வீங்கி எரிந்து வலித்தால் அப்பெண்களுக்கும் உனக்கும் என்ன ஆயிற்றாம்? வலிப்பது எனக்கு; மகிழ்வது நீயும் அவர்களுமா?” என்கிறான் இவன்.

     மேலும், “இல்லையாடா கண்ணா! மிக இலேசாகத்தான் வலிக்கும்; உனக்கு உண்ணக் கனிகள் தருவேன்; தட்டு நிறைய வைத்திருக்கிறேன் பார்! பெரிய பெரியSakatasura2 அப்பங்களையும் உனக்காகவே செய்து வைத்திருக்கிறது பார்,” எனவெல்லாம் கூறியவளிடம், “என் காதில் வலி உண்டாகும்படித் திருகி இக்கடுக்கனை இடுவதனால் உனக்கு என்ன மகிழ்ச்சி? எனக்குக் காது வலிக்கும்; வரமாட்டேன் போ,” என்கிறான். “உனக்கு மிகவும் விருப்பமான நாவற்பழம் தருவேன்; முலைப்பால் அருந்திப் பூதனை எனும் அரக்கி, வண்டிச்சகடம் இறுத்து சகடாசுரன் எனும் அரக்கன் ஆகியவர்களைக் கொன்றவனே, தாமோதரனே! இங்கு வருவாயாக!” என்கிறாள்.

                வாஎன்று சொல்லி என்கையைப் பிடித்து
                       —வலியவே காதிற் கடிப்பை
              நோவத் திரிக்கில், உனக்கு இங்கு இழுக்குற்றென்?
                       —காதுகள் நொந்திடும்; கில்லேன்;
              நாவற்பழம் கொண்டு வைத்தேன், இவைகாணாய்;
                       —நம்பீ! முன்வஞ்ச மகளைச்
              சாவப்பால் உண்டு சகடுஇறப் பாய்ந்திட்ட
                       —தாமோதரா! இங்கே வாராய்.

    (பெரியாழ்வார் திருமொழி)

    பின் என்னவாயிற்றோ, நாமறியோம்! கி. பி. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வார் என்னும் திருமால் அடியார் எழுதிய இச்சுவைமிகு பாசுரங்களைப் படித்து இரசிக்கும் தருணத்தில் இப்பாசுரங்கள் அவர் கண்ணனைச் சிறுகுழந்தையாகக் கண்டு, அவனுடைய வளர்ச்சியின் பலகட்டங்களிலும் நிகழும் நிகழ்வுகளைப் பாடல்களாக்கி அனுபவித்துப் போற்றி மகிழ்ந்ததை உணர்கிறோம்.

    Hugkrish3பெரியாழ்வாரின் பாசுரங்கள் பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கிய அமைப்பாக இல்லையெனினும், அத்தகைய இலக்கிய அமைப்பிற்கு முன்னோடியாகத் திகழ்கின்றன. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் வரிசைப்படுத்தப்பட்ட பத்து பருவங்களில் காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், அம்புலி ஆகியவற்றையே இங்குக் காண்கிறோம். இவற்றுடன் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்களில் காணாத சிறப்பாகக் கண்ணனின் திருமேனி அழகு, குழந்தை தளர்நடை நடந்துவருதல், அணைக்க அழைத்தல், குழந்தை அன்னையைப் புறம்புல்குதல், அப்பூச்சிகாட்டி விளையாடுதல், அன்னை குழந்தையை முலையுண்ண அழைத்தல், காதுகுத்துதல், நீராட அழைத்தல், குழல்வாரக் காக்கையை அழைத்தல், பூச்சூட, அந்திக்காப்பிட அழைத்தல் ஆகியனவற்றையும் அழகுறப் பாடியுள்ளார்.

     இந்தப் பாசுரங்களின் அழகு, இவை கண்ணனை முன்னிலைப்படுத்தி யசோதை கூறும் கூற்றுகளாக அமைவதுதான். காதுகுத்துதல் எனும் நிகழ்ச்சியில் சில பாடல்கள் கண்ணன் – யசோதை இருவர் கூற்றாக அமைந்து பயிலுவோர்களைப் பரவசமூட்டுகின்றன. காதுகுத்த அழைத்தல் எனும் இப்பாசுரங்களில் வைணவர்கள் உயர்வாகக்கருதும் திருமாலின் பன்னிரு நாமங்களையும் (கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, சிரீதரா, இருடீகேசா, பற்பநாபா, தாமோதரா, அச்சுதா) பாடலுக்கொன்றாக அமைத்துள்ளமை படிப்போர் உள்ளத்தைப் பக்தியிலாழ்த்திப் பரவசப்படுத்தும்.

     பெரியாழ்வார் தாம் கிருஷ்ணன்மீது கொண்ட அன்பின் வெளிப்பாட்டை  ஒரு இலக்கியத்தின் இலக்கண நியதிகளுக்குள் அடக்க முயலவில்லை. அது மடைதிறந்த வெள்ளமெனப் பெருக்கெடுத்துப் பாய்வதனை இப்பாடல்களில் உணர்ந்து உள்ளம் மகிழலாம். அவருடன் சேர்ந்து நாமும் கிருஷ்ணன் எனும் குழந்தையைக் கொஞ்சலாம்; அவன் குறும்புகளில் மயங்கலாம்; ஆனந்தத்தில் திளைக்கலாம். பாடப்பட்ட எளிய இனிய தமிழ்ப்பாசுரங்களை நாமும் பாடிக் களிக்கலாம்.

    அனைத்திற்கும் சிகரமாக, இவ்வாறெல்லாம் குழந்தையின் பிள்ளைப்பருவத்தைப் பகுத்துப் பாடுவதென்பது தமிழுக்கே உரிய தனித்தன்மை எனவெண்ணி இறும்பூதெய்தலாம். சிறப்புவாய்ந்த ஒரு சிற்றிலக்கியமாக அது தழைத்தோங்கியுள்ளதையும் எண்ணி மகிழலாம்.

    ***

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்}

    பெரியாழ்வார் திருமொழிப் பாசுரம் – மீனாட்சி பாலகணேஷ்

     

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்- 16

    மீனாட்சி பாலகணேஷ்

    சதுரானனனைச் சிறையிட்ட சதுரன்

    மாலை மயங்கி இரவு வந்துற்றது. கதிரவன் மேற்குத்திசையில் மலையின்பின் மறைந்தும்விட்டான். ஆகாயவீதியில் சின்னஞ்சிறு முல்லையரும்புகள் கொடிகளில் மலர்வதனைப்போல் விண்மீன்கள் மின்னிமின்னி முகிழ்த்தன. முழுநிலவு கதிரவனிடத்திலிருந்து தான் இரந்துபெற்ற ஒளியால் மஞ்சள்நிற மதியமலராகத் தானும் பூத்து நிற்கின்றது. சூரியனிடமிருந்து காந்தி பெற்ற சூரியகாந்திப் பூப்போல காணப்படுகிறது எனலாமா? இவற்றினாலெல்லாம் உவகைகொண்ட இயற்கையன்னை தன் இளம் குழந்தையான தென்றலை மலர்களின் நறுமணத்தை ஏந்தி, எங்கணும் ‘குறுகுறு’ நடையிட்டு உலவிவரச் செய்கின்றாள்!

    இதனால் முன்னிரவு தொடங்கியமை அனைவராலும் உணரப்படுகின்றது! உலகமே ஒடுங்கி அமைதியாகத் துயில் கொள்ளும் பொழுது இதுவாம். இன்னும் முதிர்ச்சியடையாத பறவைக்குஞ்சுகள், பகற்பொழுதெல்லாம் ஓடியாடித் தாய்ப்பறவைகள் கொண்டுவந்த உணவினை ஆவலாக வாய்திறந்து திறந்து உண்ணுகின்றன. தாய்ப்பறவைகள் இரவு துயில்கொள்வதற்காக முடங்கும் கூடுகளில் இவ்விளம் பார்ப்புகளும் தாய்ப்பறவைகளுடைய சிறகுகளினடியில் பாதுகாப்பாகச் சேர்ந்து ஒடுங்குகின்றனவாம். பகல்பொழுது தோறும் இன்னிசை முழங்கும் வரிகளையுடைய வண்டுகளும் துயிலச்சென்றன- எங்கு தெரியுமா? தாமரைமலர்களின் கதவுகளை அடைத்துக்கொண்டு அவை உறங்கச்சென்றனவாம்- (முளரிக் கதவமடைத்து வரிவண்டும் துயின்றன)! உலகமே இரவுப்பாடகனின் தாலாட்டிற்குச் செவிசாய்த்து மயங்கி உறங்கலாயிற்று.

    மாலை வந்துற்றதென்று ‘எதிராசர்களெ’ன அறியப்படும் முனிபுங்கவர்கள் அந்திநேரத்திற்கான மந்திரங்களையோதி தாம் செய்யவேண்டிய அந்திக்கடன்களையும் வழிபாடுகளையும் இயற்றினர். பகலும் இரவும் சந்திக்கும் மாலைப்பொழுது ‘சந்தி’ என ஆன்றோர்களால் கூறப்பட்டது; அந்த (சந்தி)அந்திப்பொழுதினில் வேதமந்திரங்களை ஓதி முனிவர்கள் இறையை வழிபட்டனர். இதனை சந்திக்கும்நேரத்து வழிபாடு- ‘சந்தியாவந்தனம்1’ எனப் பெரிதும் போற்றுவர். அதுமட்டுமல்லாது, அம்முனிவோர், இறைவனையே தமது இதயக்கமலமாம் உள்ளத்திலும் இருத்திச் சிந்தித்தவாறே கண்ணிமைகளை மூடி உடலால் செய்யத்தக்க நடவடிக்கைகளை ஒடுக்கி, துயிலத்துவங்கினர்.

    இந்த முருகன். ஆற்றல்மிக்கவன் எனக் கருதப்பட்ட பிரமனையே பிரணவ மந்திரத்தின் பொருளை அவன் அறிந்திராமையால், சிறையிலிட்டான். ஆகவே அவன் சதுரானனுக்கும் சதுரனாகின்றான். இந்த எட்டிக்குடிவாழ் முருகன் உறங்காமல் விழித்தபடிக்குத் தொட்டிலில் கிடக்கிறான். அவளை உறங்குமாறு வேண்டித் தாலாட்டுக்கூறுகின்றாள் அன்னை என்கிறார் புலவர்.

    யாரிந்தப் புலவர் பெருமகனார்? இவர் தாம் கோவைக் கவியரசு நடேச கவுண்டர். அவர் இயற்றியது சொல்நயமும் பொருள்நயமும் அணிநலமும் மிகுந்த எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழாகும். அதிலமைந்த ஒரு தாலப்பருவத்துப் பாடலிதுவாம்.

    ராகம்- நீலாம்பரி:

    கதிரோன் குடபால் மலைமறைந்தான்
    ககனத் தடத்திலுடு வரும்பின
    கதிர்மா மதிய மலர்பூத்துக்
    கமழ்பூந் தென்றலுல விடுமால்
    முதிரா விளம்பார் பினந்தாயர்
    முடங்குஞ் சிறையி லொடுங்கினபூ
    முளரிக் கதவ மடைத்து
    வரிமுழங்கும் வண்டுந்துயின்ற னவால்
    எதிரா சர்களந்தியின் மறைக
    ளியம்பிக் கடன்க ளியற்றியபின்
    இதயக் கமலத் துணையிருந்தி
    இமைகள் பொருந்தி யொடுங்கினர்காண்
    சதுரா னனனைச் சிறையிட்ட
    சதுரா தாலோ தாலேலோ
    தமிழா கரவெட் டிக்குடிவாழ்
    தலைவா தாலோ தாலேலோ
    (எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

    அழகான சித்திரம்போன்ற இயற்கை வருணனைகள். தாமரை கூம்புவதையும் வண்டின் இயக்கம் நிற்பதையும் அவை உறக்கத்திலாழ்வதெனக்கூறி அழகுறப் புனையப்பெற்ற பாடல்வரிகள் உள்ளத்தில் களிப்பை மிகுவிக்கின்றன. பறவைப்பார்ப்புகள் தாயின் சிறகிலொடுங்கி உறங்குவதை நாம் மனக்கண்ணில் கண்டே இன்புறலாம்! ‘முளரிக் கதவமடைத்து வண்டுகளும் உறங்குகின்றன’ என்பதும் மிக நயமான மிகைப்படுத்தப்படாத சொற்பிரயோகம். இவ்வாறு பிள்ளைத்தமிழ் பாடும் இக்கவிஞர்களை வித்தாரகவி என அழைப்பது முற்றிலும் பொருத்தமானதே!

    ‘மலர்ந்து மலராத பாதிமலர்போல வளரும் விழிவண்ணமே’ எனப்பாடிய கவிஞரும் இவர்களில் சேர்த்திதானல்லவா?

    c47b71c7-9b48-4902-8b13-1a8b7b7983fe
    (1இந்துக்களில் ஒரு சாரார் ஒருநாளில் மூன்றுமுறை சந்தியாவந்தனம் செய்வார்கள்; மந்திர உச்சாடனம், பிராணாயாமம், மனதை ஒருமைப்படுத்தும் தியானம் ஆகிய மூன்று முக்கியமான செய்கைகளைக்கொண்டது சந்தியாவந்தனம். மந்திர உச்சாடனமாக காயத்திரி மந்திரம் உச்சரித்தல் புத்திக்கூர்மையை வளர்க்கும்; பிராணாயாமம் மன அழுத்தத்தினைக் குறைக்கும்; காலையில் மித்திரனையும், பகலில் சூரியனையும், மாலையில் வருணனையும் குறித்துச் சந்தியாவந்தனம் செய்யப்படும்).

    *****

    தொட்டிலில் கண்வளர்த்தப்பட்ட குழந்தை உறங்காமல், உறங்கப் பிடிக்காமல் சிணுங்குகின்றது; அழுகின்றது. தாய், தாலாட்டு எனும் விதத்தில் அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிச் செய்யப்போகும் அரும் பெருஞ்செயல்களையும், அவனுடைய தற்போதைய குறும்புகளையும் இன்னும் பல நிகழ்வுகளையும் பற்றிப்பாடுகிறாள்.

    இவ்வுலகை முறையாக, அழகாக, திருத்தமாக ஈன்றவள் அன்னை பராசக்தி; அவள் தன்னுடைய குழந்தையான முருகனுக்கு முலைப்பால் அருத்துவிக்கிறாள்; பாலுண்ட குழந்தையின் வயிறு நிரம்பியுள்ளது; அதனால் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பியுள்ளது; அவனை அலைகள் நிறைந்த கடலில் சேரும் சரவணப்பொய்கையில் உள்ள அழகான ஒரு பூந்தொட்டிலில் கண்வளரக் கிடத்தினாள் அன்னை!

    6f2ecd0a-5704-4cba-a806-f633a1f299a1
    ஆனால் என்னாவாயிற்று? குழந்தை உதடுகள் நெளிய, சிறியதாகத் துவங்கி, பெருங்குரலெடுத்து அழவாரம்பித்து விட்டான்! ஏனெனில், ஆறுமுகப்பெருமானான அவன் ஆறுதாமரை மலர்களில் ஆறுகுழந்தைகளாக வளர்ந்தவன்; ஆறு கார்த்திகைப்பெண்டிர் அவனுக்குப் பாலூட்டி வளர்த்தனர். அவர்கள் ஊட்டிய பால் மருந்தினைவிட இனியதாம். அன்னை பாலூட்டியது போதாதென இக்குழந்தை இப்போது அந்த அறுவரின் முலைப்பாலிற்காக ஏங்கி அழுகின்றானாம்;

    இக்குழந்தை சாமானியக் குழந்தையல்லவே?

    அவன் அழுதால் வானவர்கள் எனும் தேவர்களின் பகைவனான சூரபதுமன் முதலான அரக்கர்களும் உடன் அழுகின்றார்களாம்!! இது என்ன புதுக்கதை? அதாவது முருகன் இவர்களை வதைத்த காரணத்தால் அச்சங்கொண்டு சூரர்கள் அழுகின்றனர் எனக் கொள்ளவேண்டும். மாயங்கள் நிறைந்த ஒரு பெரிய மலையும் அழுகின்றதாம்; அதுவென்ன? கிரவுஞ்சமலையை வேலெறிந்து சிதைத்தவன் அன்றோ நமது குமரப்பெருமான்? ஆகவே குமரனின் குரல்கேட்ட போதிலேயே அம்மலையான அரக்கன் அச்சங்கொண்டு ஓலமிட்டுக் கதறுகின்றான் எனப்புலவர் கற்பனை செய்துள்ளார். அழகாக இல்லை?

    இவர்கள் அனைவரையும், மலை, அரக்கர்கள் அனைவரையும் விருப்பம்கொண்டு இவ்வுலகில் படைத்த மாயையும் அவர்களுக்கு முருகனின் கையால் நேர்ந்த கதியினைக் கண்டு வருந்தி அழுகின்றாளாம்.

    இந்தச் செயல்களெல்லாம் செய்த குமரனான பச்சிளம்மகவோ விம்மி விம்மி அழுகின்றதாம். இது அவன் செய்யும் மாயை!! அன்னையின் அணைப்புக்காக ஏங்கி அழும் மானுடக்குழந்தைகள் போலவே முருகப்பிரானான இக்குழந்தையும் ஏங்கியழுகின்றானாம்! அறுவர் முலைப்பாலுக்கு ஏங்கியழும் குழந்தையாகக் கற்பனை செய்து ‘அழாதே குழந்தாய்’ எனக் கூறுகிறார் புலவர்.

    மேலும் இக்குழந்தை ‘வேதன்’ எனும் வேதங்களை ஓதும் பிரமனையும் சினந்து அவனது அறியாமைக்காகத் தலையில் குட்டி தளைபூட்டிச் சிறையிலிட்டு மிகுந்த காவலில் வைத்து அழவைத்தவனல்லவோ? ‘ இவனை இவ்வுலகுக்குத் தந்த தந்தையாகிய சிவபிரானுக்கும் குருவாகி பிரணவத்தின் பொருள் கூறி உபதேசித்த சுவாமிநாதன் அல்லவா இவன்? தாலேலோ; இவன் குமரன்- தமிழ்த்தெய்வமான, தமிழனான முருகன்- அழகன்- எட்டிக்குடிவாழ் தலைவன்; தாலேலோ,’ எனப் போற்றுகிறார் கவியரசு நடேச கவுண்டர் அவர்கள்.

    திருந்தப் புவனங்கள் ஈன்றவள்தன்
    திருமா முலையுண்டு அகங் குளிர்ந்து
    திரைவாரி திசேர் சரவணத்தில்
    செவ்விப் பூந்தொட்டிலில் அமர்ந்து
    மருந்திலினிய அறுவர்முலை
    மாந்த விரும்பி வாரியழ
    வானோர் பகையாம் சூரரழ
    மாயம் பெருத்த குன்றமழ
    விரும்பிப் படைத்த மாயையழ
    விம்மிவிம்மி யழுங் குழந்தாய்
    வேதனழ வன்றளை பூட்டி
    மிகுங்கா வலிடை விட்டவனே
    தருந்தந் தைக்குக் குருமொழிசொல்
    சாமி தாலோ தாலேலோ
    தமிழா கரவெட் டிக்குடிவாழ்
    தலைவா தாலோ தாலேலோ
    (எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

    இதே கருத்தினைக் கொண்ட ஒரு பாடல் அருணகிரிநாதரின் திருப்புகழிலும் காணப்படுகிறது. இவ்வழகிய கருத்துக்களை உள்வாங்கித் தமது பாடல்களிலும் வெளிப்படுத்தியுள்ளார் கவியரசு அவர்கள்.

    திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப்பால்
    அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர்கொங்கை
    விரும்பிக் கடலழக் குன்றழச் சூரரழ விம்மியழும்
    குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென்று ஓதும் குவலயமே
    (அருணகிரிநாதர்- கந்தரலங்காரம்- 5ம் பாடல்)

    பெரும் புலவோர்கள், காலத்தால் வேறுபட்டாலும், ஒரேவிதமான கருத்துக்களைத் தமது பாடல்களில் வெளிப்படுத்துவர்; இது அவர்களின் கல்வி, கருத்து, சிந்தையின் மேன்மையைப் புலப்படுத்துகின்றது. பிற்காலத்தில் தமிழை விரும்பிப் பயிலும் நமக்கெல்லாம் கருத்திற்கினிய விருந்தாகி எண்ணங்களையும் ஏற்றப்படுத்துகின்றது. உயர்ந்த இலக்கியத்தின் தன்மை இதுதான் என அறுதியிட்டுக் கூறலாம்.

    இன்னும் தொடர்ந்து இதுபோலும் பாடல்களைப் படித்து மகிழலாம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *****

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்- 15

    மீனாட்சி பாலகணேஷ்

    அசைந்தொசிகின்ற பசுங்கொடி!

    52b4e2a2-574f-4199-bdde-3b4d4e5a0038

    மேகக்கூட்டங்கள் சாளரங்கள் வழியே எட்டிப்பார்த்துப் புன்னகைக்கும் நான்மாடக்கூடல் எனப்படும் மதுரைமாநகர். அங்கு மலயத்துவச பாண்டியனின் அழகுபொலியும் திருமாளிகை. நாமும் உள்ளேசென்று பார்க்கலாமா? அரசன் விரைந்து தன் பட்டத்தரசி காஞ்சனமாலையின் அந்தப்புரத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறான். ஆம்! தன் செல்வத்திருமகளைக் காணும் ஆவலில்தான் அங்கு செல்கிறான். தடாதகை எனும் அக்குழந்தை நவரத்தினங்கள் பதித்த தரையில் தவழ்ந்தாடிக் கொண்டிருக்கிறாள். கண்ணுற்ற மன்னனின் உள்ளம் உவகைப் பெருங்கடலில் நீந்துகிறது. கையை உயர்த்தி வளைத்து அக்குழந்தையை, “இங்கே என்னிடம் வா கண்ணே,” என்றழைத்தபடி, அன்னத்தூவியால் நிறைக்கப்பெற்ற ஒரு மென்மையான ஆசனத்தில் அமர்கிறான் மலயத்துவச பாண்டியன்.

    குழந்தை தன் தந்தையிடம் தாவிக் குதித்தோடித் தவழ்ந்து செல்கிறாள். தன்வயிறு குளிர இன்னமுதூட்டிய தாயின் வயிறு குளிரும்படி, அமுதனைய இனிய தண்மையான பசுங்குதலை மழலைமொழியைப் பேசுகிறாள் குழந்தை மீனாட்சி. தன்னருகே தவழ்ந்தோடிவந்த அருமை மகளை வாஞ்சையுடன் வாரியெடுத்து மார்போடணைத்து உச்சிமுகருகிறான் அரசன். அவனுடைய திருமார்பில் தனது குட்டிப் பொற்பாதங்களைப் பதித்து நிற்கிறாள் இச்சிறு பெண்குழந்தை. அதனால் அவன் மார்பில் அணிந்துள்ள குங்குமக்குழம்பானது அந்தக் குட்டிப்பாதங்களில் படிகின்றது. காணும் அரசி காஞ்சனமாலைக்கும், மற்றும் பணிப்பெண்டிருக்கும் உள்ளமும் உடலும் ஒருங்கே சிலிர்க்கின்றன. பாடலைப் பயிலும் நமக்கே மெய்ப்புளகம் உண்டாகின்றது எனில் அருகே இருந்து பார்த்து அனுபவித்தவர் எவ்வளவு பெரியதவம் புரிந்தவராவர் என அறியவொண்ணுமோ? 

    மலயத்துவச பாண்டியன் பெரிய வலிமைவாய்ந்த தோள்களை உடையவன்; அரச கம்பீரம் மிக்கவன்; அவனுடைய நீண்ட கைகள் முழங்கால்கள்வரை படிகின்றன; அந்தக் கரத்தைப் பற்றியவண்ணம் மீனாட்சி எழுந்து நிற்கிறாள். அமர்ந்திருக்கும் தந்தையின் மார்பின் குங்குமச்சேற்றினை அளைந்து, அவன் கரத்தைப்பிடித்து எழுந்துநின்று அவனுடைய தோள்களில் ஏறமுயல்கிறாள். அவை எத்தகைய தோள்கள்? இசை (புகழ்) உலவுகின்ற தமிழாலாகிய மாலையை அணிந்துள்ள பருத்ததோள்! ஆகா! எத்தனை கருத்துச்செறிந்த சொற்கள் இவை!

    தமிழுக்கு அன்னை மீனாட்சி; முத்தமிழ் வளர்ந்தது மதுரையம்பதியில்; முச்சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தவர்கள் பாண்டியமன்னர்கள். ஆகவே பாண்டிய மன்னனான மலயத்துவசனின் தோள் புகழ்மிக்க தமிழாலாகிய மாலைகளை அணிந்த தடந்தோள் எனப் புலவர்பெருமானார் குமரகுருபரரால் பெருமையுடன் வருணிக்கப்படுகின்றது.

    தோளில் ஏறிக்குழந்தை தந்தையினுடைய பிடரியில் அழகுற அமர்ந்து கொள்கிறாளாம். இவ்வயதுக்குழந்தைகள் தந்தையின் கழுத்தினைக் கட்டிக்கொண்டு இவ்வாறமர்ந்தவண்ணம் ஆடுவார்கள். மீனாட்சியும் அவ்வாறே ஆடுகின்றாளாம்! அவளுடைய பச்சைப்பசேலென்ற மரகதத்தினையொத்த திருமேனியின் பசுமையான ஒளி ததும்பிநிறைந்து அந்த இடத்தையே, அறையையே, அரசமாளிகையையே நிறைக்கின்றது! கொற்கையின் முத்துக்கள் போல, அவளுடைய திருவாயில் சின்னஞ்சிறு பற்கள் முளைக்கத் துவங்கியுள்ளன. சிவந்தவாயில் தெளிந்தநிலா போலப் புன்னகை பரவியரும்புகின்றது. அழகாகத் தந்தையின் கழுத்திலமர்ந்து செங்கீரை ஆடுகிறாள் குழந்தை மீனாட்சி! அவள் தென்னன் எனும் புகழ்பெற்ற மலயத்துவச பாண்டியனுக்கும் அழகிய பொன்மலை எனப்படும் இமயத்தின் மன்னனான இமவானுக்கும் ஒப்பற்ற மகளாக விளங்குபவள்.

    இவ்வாறெல்லாம் மீனாட்சியை அழகுற விளக்கிப் பாடுபவர் குமரகுருபரரே அல்லாது யாரால் இயலும்? கேட்பவர் உள்ளம்களிகூர, செவிகளில் அமுதம்னிறைய, சிந்தையில் அன்புமீதூரக் கண்களில் கொற்கையின் முத்துக்கள்போல் நீர்முத்துக்கள் பெருகிச் சொரியவைக்கும் அழகான செங்கீரைப்பருவப்பாடல் இதுவாகும்.

    இன்றுவரையும் தனக்கு ஈடிணையற்ற அழகான பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தம் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்பதனால் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளவேண்டும்.

    உண்ணிலா உவகைப் பெருங்களிதுளும்பநின்
    றுன்றிருத்தாதைநின்னை
    ஒருமுறைகரம்பொத்தி வருகென அழைத்திடுமுன்
    ஓடித்தவழ்ந்துசென்று
    தண்ணுலாமழலைப் பசுங்குதலை அமுதினிய
    தாய்வயிறுகுளிரவூட்டித்
    தடமார்ப நிறைகுங்குமச்சே றளைந்துபொன்
    தாள்தோய்தடக்கைபற்றிப்
    பண்ணுலா வடிதமிழ்ப் பைந்தாமம்விரியும்
    பணைத்தோள்எருத்தமேறிப்
    பாசொளிய மரகதத்திருமேனி பச்சைப்
    பசுங்கதிர்ததும்பமணிவாய்த்
    தெண்ணிலா விரியநின் றாடும்பசுந்தோகை
    செங்கீரை ஆடியருளே
    தென்னற்கும் அம்பொன்மலைமன்னற்கும் ஒருசெல்வி
    செங்கீரை ஆடியருளே

    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- குமரகுருபரர்)

    *****

    இந்த செங்கீரைப் பருவத்தில் சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சியும் இடம் பெறுகின்றது. ஆச்சரியமாக இருப்பினும், அழகு திகழ அமைந்த இப்பாடல், சிறு குழந்தைகளுக்கிடையேயான ஒரு விளையாட்டைப் பாடும்முகமாக, உலகியல், மானுட உளவியல், தெய்வத் தத்துவம், உலக உருவாக்கம் எனும் தொடர்ந்து நடக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைச் சுழற்சி முதலியனவற்றை உட்பொருளாகக் கொண்டு திகழ்கின்றது.

    சிறு குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில், ஆண் குழந்தைகள் சிலர் முரட்டுத்தனமான விளையாட்டுகளை விளையாடுவர். மற்றக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களை உடைப்பது, அவர்கள் கட்டும் மணல் அல்லது சிறு மண்வீட்டைக் காலால் எற்றி உதைத்துச் சிதைப்பது, அவர்கள் பின்னலைப் பிடித்திழுத்து அவர்களைத் துன்புறுத்துவது என்பன இவற்றுள் சில.

    உளவியல் ரீதியாக இதைக் காணப் போனால், நாம் வாழும் மானிட சமுதாயத்தை ஆதாரமாகக் கொண்டே இவை நிகழ்கின்றன எனலாம். அன்னையர் சமைப்பது, வீட்டிற்குரிய பணிகளைச் செய்து வீட்டை நன்முறையில் பராமரிப்பது, தமது குழந்தைகளைப் பேணுவது போன்றவற்றை நோக்கியே சிறுமியரும் தாய்மாரின் அடிச்சுவட்டில் சிற்றில் இழைத்து மணல் சோறாக்கி, குழந்தைகளைப் பேணும் விளையாட்டை விளையாடுவர். சிறுவர்களும் தந்தை, அண்ணன் முதலானோர் உடல் வலிமை தேவைப்படும் செயல்களைச் செய்வது போலத் தாமும் செய்ய முயல்வர். இவையே, சிற்றில் சிதைத்தல், சிறுபறை முழக்குதல், சிறுதேர் உருட்டல், என்ற விளையாட்டுகளாகப் பரிணமித்ததோ என்னவோ!

    உலகங்களையே சிறிய வீடாக உருவாக்கி விளையாடும் சிறுமியாக மீனாட்சியன்னை உருவகிக்கப் படுகிறாள். இவ்வாறு அவள் பெருமையைப் பேசுமிடத்து, சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. அன்னை உருவாக்கும் அழகிய சிற்றிலையும் ஒருவன் சிதைக்க இயலுமா? அவ்வாறு செய்யத் துணிந்த அவன் யார்? அவன் ஒரே ஒருவன் தான்- அவனே அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்த தலைவனான சிவபிரான்.

    இந்தப் பாட்டைக் கண்டு மகிழலாமா?

    சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எவ்வாறு? முதலில், நெடிய சக்கரவாள மலையை எல்லா உலகங்களையும் வளைத்து நிற்கும் சுவராக அமைக்கிறாள். எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை இந்தச் சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலைநிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளிவிளக்குகளைப் பொருத்திவிடுகிறாள். முழுதும் எழுந்தெழுந்து மோதும் ஊழிக்கால வெள்ளத்தில் கழுவப்படும் புவனங்களே அவளுடைய பழைய பாத்திரம் பண்டங்கள்; அவற்றை வரிசையாக அடுக்கி வைத்து, புதுக்கூழான இனிய அமுதத்தைச் சமைக்கிறாள். இவ்வாறு பலமுறை தாயாகிய மீனாட்சி சலிப்பின்றிச் செய்து வருகிறாள்.

    அவற்றை அழித்த வண்ணமாக இருக்கிறான் பித்தனான சிவபிரான். அவன் ஒரு முற்றவெளியான தில்லையில், சிதம்பரத்தில் திரிகின்றவன்; ஊமத்தம்பூவை அணிந்திருக்கும் பெரும்பித்தன்; கூத்தன் அவன் அழித்ததுடன் நில்லாது மீனாட்சியின் முன்நின்று கூத்தாடுகின்றானாம்!

    வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்னசெய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள்.

    (உ- ம்) திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்.
    ‘கூவிப் பரிந்து முலைத்தாயர்…
    …………………………………..
    ஆவித்துணையே வழியடிமை
    அடியேம் சிற்றில் அழியேலே
    அலைமுத் தெறியும் திருச்செந்தூர்
    அரசே சிற்றில் அழியேலே,’ என வேண்டுவர் சிறுமியர்.

    அல்லது சினம்கொண்டு கூச்சலிடுவார்கள்; இல்லாவிடில் அழுவார்கள். ஆனால் மீனாட்சி என்னசெய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும்மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டிவிளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்! இவ்வாறு விளையாடுகின்ற ஒப்பற்ற இளமையுடன் கூடிய பச்சைப் பெண்பிள்ளையே! செங்கீரை ஆடி அருளே!’ என வேண்டுகிறார் குமரகுருபரர்.

    தாயான மீனாட்சி (பராசக்தி) உலகத்தை அடிக்கடி ஆக்குதலையும் அவற்றைச் சிவபிரான் அடுத்தடுத்து அழித்தலையும் ஆகியசெய்கைகள் சிறுமியர் சிற்றில்இழைத்தலும். சிறுவர்கள் அவற்றை அழித்தலும் ஆகிய செய்கைகளாக உருவகித்துக்கூறப்பட்டன. மானிடப்பெண்கள் வீட்டிற்கு வேண்டியவற்றைச் செய்வதுபோல, எல்லா உலகங்களையும் படைக்கும் பராசக்தியும் தன் கடமைகளாக இவற்றைச்செய்கின்றாள். அவற்றைத் திரும்பத்திரும்ப அழித்துத் திருவிளையாடல் புரிகிறான் சிவபெருமான்.

    எற்றுபுனல் என்பது அலைமோதும் ஊழிப்பெருவெள்ளமாகும். இதில் அண்டங்களைக் கழுவிஎடுத்து அன்னை புதுக்கூழாகிய இன்னமுதைப் படைக்கின்றாள். இவ்வாறாக உலகை உருவாக்குவதையே மீனாட்சி சிற்றில்இழைப்பதாகப் புலவர் கற்பனை செய்கிறார். உன்மத்தம்கொண்டு பித்தனாகிய கூத்தபிரான் மீண்டும்மீண்டும் சிதைக்கிறான். இவ்வாறு உலகஉருவாக்கமும் அழிவும் மாறிமாறி வருவது சுட்டப்படுகிறது. அவை மீனாட்சி அம்மையின் சிற்றில்உருவாக்கமாகவும் ஈசனின் சிற்றில்சிதைத்தலாகவும் அமைந்துள்ளன.

    ஆண்பால் பிள்ளைத்தமிழில் ஒரு தனிப்பருவமாகப் பாடப்பெறும் சிற்றில்பருவம் இப்பாடலில் குறிப்பிடப்படுகின்றது.

    இறைவனின் படைத்தலும் காத்தலும் கரத்தலும் அழித்தலும் அருளுதலும் ஆகிய ஐந்தொழில்கள் ஓயாது நடை பெறுவதை தத்துவ விளக்கமாக இப்பாடல் அழகுறக் காட்டுகிறது. அதுவும் சிவபெருமான் தான் செய்யும் திருவருள் தொழில்களைத் தனது திருமேனியாக விளங்கும் சக்திமூலமாகவே செய்தருள்கிறான் என்பது மறைபொருளாக விளங்குகிறது எனக் கொள்ளலாம்1. சிவபிரான் சிற்றில் சிதைப்பது என்ற சிறு விளையாட்டை பிரபஞ்சப் பெருநடனத் தத்துவத்தைப் பொதிந்து நமக்கு குமரகுருபரனார் அருளியுள்ளார் என்றே தோன்றுகிறது. படிக்கப் படிக்கப் புதுக் கருத்துக்களைச் சிந்தையில் ஊற்றெடுக்க வைக்கும் தெய்வப் பாடல்கள் இவை.

    ( 1சிவபிரான் சிதைத்த சிற்றில்- மீனாட்சி பாலகணேஷ்- 8 அக்டோபர் 2014- தமிழ் ஹிந்து இணையதளம்)

    சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசையஎட்டுச்589b9f74-8541-4f10-b0ff-9400a1312f52
    சுவர்க்கால் நிறுத்திமேருத்
    தூணொன்று நடுநட்டு வெளிமுகடுமூடியிரு
    சுடர்விளக் கிட்டுமுற்ற
    எற்றுபுன லிற்கழுவு புவனப்பழங்கலம்
    எடுத்தடுக் கிப்புதுக்கூழ்
    இன்னமுத முஞ்சமைத் தன்னைநீபன்முறை
    இழைத்திட அழித்தழித்தோர்
    முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
    முன்னின்று தொந்த மிடவும்
    முனியாது வைகலும் எடுத்தடுக்கிப்பெரிய
    மூதண்ட கூடமூடும்
    சிற்றில்விளை யாடுமொருபச்சிளம் பெண்பிள்ளை
    செங்கீரை ஆடியருளே
    தென்னற்கும் அம்பொன்மலைமன்னற்கும் ஒருசெல்வி
    செங்கீரை ஆடியருளே
    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- குமரகுருபரர்)

    *****

    9e840919-9334-41f2-a810-22874180b793
    ஒருகாலை மடக்கி, மற்றொருகாலை நீட்டி, இருகைகளையும் தரையில்பதித்தபடி, குழந்தை தவழ்ந்தாடுகிறது. இளஞ்செடியொன்று தென்றலில் ஆடுவதுபோல அழகுற ஆசைந்தாடுகிறாள் குழந்தை. பார்ப்பவர் உள்ளங்கள் பாசத்திலும் பரவசத்திலும் தாமும் இசைந்தாடுகின்றனவே!

    குழந்தையின் முகம் வெண்ணிலவுபோல அழகானமுகம்; அதில் புன்னகை எனும் நிலாக்கீற்று தோன்றி அசைந்தாடுகிறதாம்; படுத்துக்கிடந்த ஒரேநிலையிலிருந்து குழந்தை புரண்டெழுந்து இப்பொழுது மெல்ல நகரக் கற்றுக்கொண்டு விட்டது. ஆகவே உற்சாகமாக அறையின் எல்லாப்பக்கங்களிலும் செங்கீரையாடித் தவழ்ந்தோடி வருகின்றது. அக்குழந்தை செங்கீரையாடும்போதில் என்னவெல்லாம் ஆடியதாம் பார்க்கலாமா?

    தாய் குழந்தையின் தலைமயிரை வாரிமுடித்து உச்சிக்கொண்டையாக்கிக் கட்டியுள்ளாள்; அந்த முடிச்சூழியமனது அதிலணிந்த அணியுடன் ஆடுகிறது. வளைந்த அழகிய புருவங்கள்- ஒருபெண் வளர்ந்தபின் அழகுமங்கையாகத் திகழப்போகிறாள் என்பதனை அவளுடைய பச்சிளம் பருவத்திலேயே கூறிவிட இயலும். அவ்வாறே மீனாட்சியின் புருவங்கள் கொடிபோல் வளைந்து காணப்படுகின்றன. அதனுடன் அவளுடைய நெற்றியில் அணிவிக்கப்பட்ட சுட்டியும் நெறிந்து அசைந்தாடுகின்றது; அடுத்து மீன்களின் போரைக் காண்கிறோம்- போர்செய்கின்ற கண்களாகிய மகரமீன்கள், அவற்றுடன் பொருதும் மகரவடிவிலான இரு காதணிகளுடன் ஆடுகின்றன.

    அன்னையின் இக்கண்கள் செய்யும் போரைப்பற்றி எல்லாக் கவிஞர்களும் வகைவகையாகப்பாடி வைத்துள்ளனர். அதைப்பற்றியே ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதிவிடலாம்! இப்போதைக்கு ஒன்றே ஒன்று- ‘கட்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடொரு கைவில் குனித்து நின்ற’ எனும் ஊசற்பருவத்துப்பாடல் வரிகளை நினைவுகூர்வோம்2. கையில் வில்லேந்தி சிவபிரானை இமயாசலத்தில் போருக்கழைத்தவள் தடாதகையான மீனாட்சி. அவர் நேரில்வந்ததும், ‘இவரே தன்கணவன்,’ என்றறிந்து நாணமடைகிறாள். ஓரக்கண்களால் கணைதொடுக்கும் நோக்கினைச் செலுத்தியவண்ணம் கையிலேந்திய வில்லினைத் தாழ்த்திப்பிடித்து தலைகுனிந்து காதலன்முன்பு நிற்கிறள். மிக அழகான பாடல் இது.

    செங்கீரையாடும் குழந்தை மீனாட்சியிடம் திரும்ப வருவோம். அவள் நூபுரம் எனும் அணிஇடப்பெற்ற காலை நீட்டி, மற்றொருகாலை மடக்கித் தவழுவதால் காலில் உள்ள கிண்கிணி எனும் மற்றோர்அணி ‘கிண்கிண்’ எனும் இனியஒலியை எழுப்புகிறதாம். ஆடை அணிவிக்கப்பட்டுள்ள கொடிபோலும் இடையானது துவண்டு தளர்ந்து ஆடுகிறதாம். வயிறு சரிகின்றது; கொப்பூழ் மறைந்துவிளங்கும் கருக்கொண்ட ஆலிலைபோலும் வயிற்றில் உலகிலுள்ள அசையும், அசைவற்ற பொருட்கள் அனைத்தும் ஆடுமாறு செங்கீரை ஆடுக! உலகம் உய்ய முடிசூடியருளிய மீனாட்சியம்மையே செங்கீரையாடுக! என அன்னையர் வேண்டிக் கொள்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.

    அன்னை பராசக்தி எல்லாப்பொருட்களிலும் கலந்துறையும் தெய்வம். அசையும் அசையாப்பொருட்கள் அனைத்தும் அவளாலேயே அவளாணைப்படி இயங்குகின்றன. ஆகவே அவள் செங்கீரையாடும்பொழுதில் அனைத்தும் ஆடுகின்றன. இது பேரானந்தம் பெருகப் பக்தியில் விளைந்த பாடல். குழந்தையும் தெய்வமும் இரண்டறக் கலந்துவிட்ட பாடல். அன்னை பராசக்தி புலவர்வாக்கில் நின்று தானே இயற்றிவைத்ததெய்வப்பாடல்.
    ( 2 இலக்கியச்சித்திரம்-4- வல்லமை மின்னிதழ்).

    முகமதி யூடெழு நகைநில வாட
    முடிச்சூ ழியமாட
    முருபுரி வக்கொடி நுதலிடு சுட்டி
    முரிப்பொ டசைந்தாட
    இகல்விழி மகரமும் அம்மகரம்பொரும்
    இருமக ரமுமாட
    இடுநூ புரவடி பெயரக் கிண்கிண்
    எனுங்கிண் கிணியாடத்
    துகிலொடு சோர்தரு கொடிநுண்மருங்குல்
    துவண்டு துவண்டாடத்
    தொந்தி சரிந்திட உந்திகரந்தொளிர்
    சூலுடை யாலடைமற்
    றகில சராசரம் நிகிலமோ டாடிட
    ஆடுக செங்கீரை
    அவனி தழைந்திட மவுலிபுனைந்தவள்
    ஆடுக செங்கீரை
    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- குமரகுருபரர்)
    *****

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ______________________________________

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-14

     

    மீனாட்சி பாலகணேஷ்

     

    உமை சிறுவீடு கட்டியருளே!

     b9d3e4c3-abb5-4467-af72-ded1305dd2bd
    பிள்ளைத்தமிழ் நூல்கள் தாம் எடுத்தியம்பும் அனைத்துப் பருவங்களையும், தத்துவம், சமயம், தொன்மம், சுவைமிகு புனைகதைகள் என இவற்றையெல்லாம் பாடல்களில் இணைத்து சந்தநயமும் பொருள்நயமும் விளங்க அழகுற எடுத்துரைக்கும் தன்மையனவாகும். முந்தைய அத்தியாயங்களில் கண்டதுபோன்ற சுவைமிகுந்த கதைகள்மட்டுமே இவ்விலக்கியத்திற்கு அழகு சேர்க்கவில்லை. குழந்தையின் ஒவ்வொரு செய்கையையும், குழந்தையாகப் போற்றப்படும் அந்தத் தெய்வம் செய்யும்செயலுடன் பொருத்திப்பாடுவதே இவற்றைப்பாடிவைத்த நல்லிசைப் புலவோரின் கவிதைநயத்திற்கும் அழகுணர்ச்சிக்கும் சான்றாக விளங்கி, அவர்களை ‘வித்தாரகவி’ எனும் போற்றுதலுக்கும் உரியவராக்கின. இதற்கான எடுத்துக்காட்டினை இப்போது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ள தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் கண்டு களிக்கலாம். இவ்வாசிரியர் 19-ம் நூற்றாண்டில் நல்லதுக்குடி எனும் ஊரில் வாழ்ந்தவராவார் என அறிகிறோம். இப்பிள்ளைத்தமிழ் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்களிலிருந்தும் வேறுபட்டு விளங்குகிறது. ஏனெனில் இதில் வழக்கிற்கு மாறாக பதினைந்து பருவங்கள் விரித்துரைக்கப்படுகின்றன.

    பத்துப்பருவங்களுக்குப் பத்துப்பாடல்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டமைவன பிள்ளைத்தமிழ் நூல்கள். பிங்கல நிகண்டு பெண்பாற்பிள்ளைத்தமிழுக்குப் பத்தொன்பது பருவங்களையும் திவாகர நிகண்டு பன்னிரண்டு பருவங்களையும் கூறும். தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் நூல் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், பந்தாடல், ஊசல், பாவையாடல், கழங்காடல், அம்மானை, நீராடல், குதலை மொழியாடல் எனப் பதினைந்து பருவங்களைக் கொண்டு இலங்குகிறது. ஈற்றயலான நான்கு பருவங்களில் இரண்டு அல்லது மூன்று பாடல்களே ஒரு பருவத்திற்குப் பாடப்பட்டுள்ளன. ஆண்பால் பிள்ளைத்தமிழில் சிற்றில் பருவத்தில் ஆண்குழந்தைகளைச் சிறுமிகள் தங்களது சிற்றிலை அழிக்காதே என வேண்டுவதாக அமையும். இங்கு பெண்பால் பிள்ளைத்தமிழில் அமைந்த சிற்றில் பருவத்தில் பெண்குழந்தை சிவகாமியைத் தாயாரும் மற்றோரும் சிற்றில் எனப்படும் சிறுவீடு கட்டியருளே! என வேண்டுகின்றனர். பாடலைக் காண்போமே!

    ******

    சிறுமி சிவகாமி சிற்றிலிழைக்க முயன்றவண்ணம் இருக்கிறாள். அருகில் நின்று இதனைப் பார்க்கும் தாய் தன்மகளை ஊக்குவிக்கிறாள்; எவ்வாறு சிறுவீடு கட்டவேண்டும் எனத் தன் சின்னஞ்சிறு மகளுக்குக் கூறுகிறாள். அவளும் ஒருகாலத்தில் இவ்வாறு சிற்றிலிழைத்து விளையாடியது உண்டல்லவா?

    “முதலில் தூண்களைக் கால்களாக வை குழந்தாய்! பின்பு மண்ணை வைத்து அடைசுவர்களாகச் செய். பின்பு குறுக்கும் நெடுக்குமாகக் கைம்மரத்தை வை; அதுதான் ஓடுகளைத் தாங்கும் வலுவான மரமாகும் தெரியுமா? நீ கட்டும் இந்த வீட்டிற்கு ஒன்பது வாயில்களை அமைக்கவேண்டுமம்மா!
    “அடுத்து இந்தக்கூரை மரங்களை எவ்வாறு இணைப்பது தெரியுமா? கயிற்றால் இறுகக்கட்டிப்பின் சேற்றைப்பூசி சுவரை வலுப்படுத்த வேண்டும்,” என்னும் தனது அன்னையை நோக்கி ஆடலரசனின் காதல்நாயகி சிவகாமி, “சரி அம்மா, உன் விருப்பப்படியே, இன்னும் அழகாக அமைத்துவிடுகிறேன்,” என எல்லாம் அறிந்த ஒரு புன்னகை பூக்கிறாள். அன்னை வியந்துநோக்க, வீட்டினுள் விளக்கினை ஏற்றி, சிலவீடுகளை அழித்து, இன்னும் பல சிறுவீடுகளை உண்டுபண்ணி அருள்விளையாடல் புரிகிறாள். பார்த்தவண்ணம் நிற்கும் அன்னை மயங்குகிறாள். சிவகாமசுந்தரி தான் சமைத்த வீடுகளைக் கண்டு கைகொட்டி மகிழ்கிறாள்.
    என்ன இது முன்பின் முரணாக உள்ளது எனத்தோன்றுகிறதா? பாடலாசிரியர் இதில் பிரபஞ்சப்படைப்பின் பெரும்தத்துவத்தை அல்லவோ உட்பொருளாக்கி இப்பாடலை அமைத்துள்ளார்.
    அவர் நோக்கில் மற்றொருமுறை காணலாமா? எலும்பும் தசையும் கொண்ட ஓர் உடலை அன்னை பராசக்தி படைக்கும் அழகு இங்கு கவிதைநயம் பொங்கக் கூறப்படுகின்றது.
    தசை எனப்படும் மண்ணைவைத்து அதன்மீது தூண்கள் எனப்படும் கால்களை வைத்து உடலெனப்படும் சுவரை வைக்கிறாள். பின் இருபுறமும் கைகளாகிய கைம்மரங்களை வைக்கிறாள். மனித உடலின் ஒன்பது துளைகளாகிய வாயில்களை விட்டும், எலும்புகளாலான கூரைமரங்களை நரம்புகளால் முறையாக அமைத்து இறுகக்கட்டுகிறாள். பிறகு மேலே ஒரு பெரிய தோலினைக் கொண்டு அதனைச் சரிவரப் போர்த்துகிறாள். இது முழுவீட்டினையும் சாந்தால் மெழுகுவதனை ஒக்கும். மயிர்களால் அழகான கூரை அமைத்துவிடுகிறாள். இனி, தான் இவ்வாறு கட்டியவீட்டினை அழகுபடுத்தும் பணிதுவங்குகிறது. ஒவ்வொரு உயிரும் செய்துள்ள பாவபுண்ணியங்கள் எனும் இருவினைகளை ஆராய்ந்து சீர்தூக்கி அதிலிருந்து அவ்வுயிர் ‘அனுபவிக்க வேண்டிய வினை’ எனும் சேற்றைப்பூசுகிறாள். இது வீட்டிற்கு வண்ணம் பூசுவதனைப் போன்றது. இவ்வினைகளால் வரும் இன்பதுன்பங்களைப் பகுத்துணர்ந்து அனுபவிக்கக் கண்களைக் கொடுத்தருளுகிறாள்- இது விளக்கினைப் பொருத்துவதற்குச் சமமாகும்.

    e9912af1-9d47-4a34-bc7c-8857ebb53af9
    இவ்வாறு இவ்வுலகில் உள்ள எண்பத்துநான்கு இலட்சம் வகைப்பட்ட உயிரினங்களும் குடியிருந்து வாழ்வதற்காக அவரவர்களுக்கேற்ற வகையில் சிறுவீடுகளைப்படைத்தருளி, அவற்றை தகுந்த தருணத்தில் அழித்தொடுக்கி, பின்னும் வலிமைமிக்க பலவீடுகளை (யானை, சிங்கம் போன்றவற்றின் உடல்களை) உண்டுபண்ணுகிறாள் பாராசக்தி அன்னை. “இப்படிப்பட்ட அருள்விளையாடல் செய்யும் உமையாகிய அன்னையே! சிவகாமசுந்தரி என உலகம் போற்றும் விமலையே! சிறுவீடு கட்டியருள்க!” என வேண்டுகிறார் புலவர்.
    படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் நடைபெறும் இந்தப் பிரபஞ்சப்பெருவிளையாட்டினை சிவபிரானின் பாதியாகிய அன்னை சிவகாமசுந்தரியே நிகழ்த்துவதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் கிருட்டிணையர். (ஆ ப்ரஹ்ம-கீட ஜனனீ என்பது லலிதா சஹஸ்ரநாமம்- பிரம்மன் முதல் புழு வரை அவளால் படைக்கப்படுகின்றன என்பது இதன் பொருள்; படைப்புக்கடவுளான பிரம்மனையுமே அவள்தான் படைக்கிறாளாம்).
    ஆக, பராசக்தியாகிய சிவகாமசுந்தரி சிற்றில் இழைக்கும் விளையாட்டு எத்தனை பெரிய தத்துவத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது என உணர்ந்து அதிசயிக்கலாம். அவள் இழைக்கும் சிற்றில்கள் ஒன்றில் நாமும் உள்ளோம் எனும் எண்ணமே மெய்சிலிர்க்கவைக்குமே!


    மண்வைத்துக் கால்வைத்துத் தூணினால்
    சுவர்வைத்து வலிய கைம்மரமும் வைத்து
    வாசல் ஒன்பது விட்டு மோட்டுவளை
    பக்கத்துவளை வரிச்சலும் நரம்பால்
    பண்புற்றிடக் கட்டி மேலெலாம் தோலுடன்
    பலமயிர்க் கற்றை இட்டுப்
    பழவினைச் சேறுகட்டி இன்பதுன்பங்கள்
    கண் பாத்துண விளக்கும் ஏற்றி
    எண்பத்து நான்கு நூறாயிரம் பேதமாய்
    இனிய சிறுவீடு தோறும்
    எவ்வுயிர்களும் குடியிருந்து விளையாடவே
    இன்னமும் அழித்து அழித்துத்
    திண்பெற்ற பலவீடு கட்டிவிளை யாடும்
    உமை சிறுவீடு கட்டியருளே!
    சிவகாம சுந்தரி எனும் பெரிய
    விமலையே! சிறுவீடு கட்டியருளே!
    (தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-
    சிற்றில் பருவம்- நல்லதுக்குடி கிருட்டிணையர்)
    சிற்றிலிழைத்து விளையாடும் இச்சிறு பெண்பிள்ளை, அச்சிறுவீட்டினுள்ளே பலவிதமான பாவைகளைக் குடிவைத்து விளையாடுகின்றாள். இவள் உலகுக்கே பேரரசியல்லவா?இவளிடம் இல்லாத பாவைகளே இல்லை எனலாம். (பணக்கார வீட்டுக் குழந்தைகள் சமீபத்தில் வெளியான Barbie, starwar figures ஆகிய பாவைகளை வைத்துக்கொண்டு விளையாடுவது போலவே இதுவும்).
    அவளுடைய விளையாட்டுகள் சிலவற்றை நாமும்தான் காணலாமே!
    சண்டமுண்டர்கள் எனும் அரக்கர்கள், பின்பு மகிடன் எனும் அரக்கன் ஆகியோர் தேவர்களை அவர்களது பதவிகளிலிருந்து நீக்கிவிட்டுத் தாமே ஆட்சி செய்தார்கள். அன்னை பராசக்தி வீராங்கனையாகத் தானே தோன்றி (சாமுண்டி, மகிடாசுரமர்த்தினி), அவ்வரக்கர்களை அழிக்கிறாள். இதற்காக எண்ணற்ற வீரர்களையும், காளி, வாராஹி ஆகிய தெய்வங்களையும் படைக்கிறாள்.
    மீனாட்சியாகித் தானே மதுரையைத் தன் துணைவன் சிவபிரானுடன் அரசாள்கிறாள்.
    சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என அரசகுலங்களை உண்டுபண்ணி, அவர்களுக்குள் நட்புறவைச் சிலபொழுதுகளிலும், சண்டைசச்சரவைச் சில பொழுதுகளிலும் செய்வித்தாள். சிலபொழுது பூமியை நீர்வறட்சியால் வருந்தச் செய்கிறாள். சிலபொழுது பெரும்வெள்ளத்தால் சேதமும் அடையச் செய்கிறாள் அன்னை.
    பலபொழுதுகளில் அனைத்தையுமே இன்பமயமாக இயங்கச் செய்கிறாள். நம்மை இசையையும் நடனத்தையும் நூல்களையும் பயிலச் செய்து கலைகளை வளர்க்கிறாள். அகிலத்தையே இவ்வாறு படைத்து ஆட்டுவிக்கிறாள்.
    அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான புலவர் அன்னை சிறுபெண்ணாய் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தினையுமே பராசக்தியின் ஆடல்களாகக் கண்டு வாழ்த்துகிறார். மிக எளிமையாக இதற்குப் பொருளுணர வேண்டுமாயின் பின்வருமாறு பொருள்கொள்ளலாம்:
    ஆற்றல்வாய்ந்த தெய்வங்களின் பாவைகள், பூவுலகில் வாழும் ஆடு, மாடு, யானை முதலான விலங்குகளின் பாவைகள், கடலில் வாழும் ஜீவராசிகளின் பாவைகள், பலவிதமான பறவைகளின் பாவைகள், விரைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் புழு, பூச்சிகள், மரவட்டை, பாம்பு ஆகியனவற்றின் பாவைகள், செடி, கொடி, மரங்கள் ஆகியனவற்றின் பாவைகள் என ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களின் பாவைகளை எல்லாம் எண்பத்துநான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களால் இவளே அப்பாவைகளைச் செய்கிறாளாம். அன்னை பராசக்தி இவ்வுயிர்களை பஞ்சபூதங்களால் விளையாட்டாகவே உண்டுபண்ணுகிறாள். அது மட்டுமா? அவற்றைக் கனவு, நினைவு / விழிப்பு, உறக்கம் ஆகிய நிலைகளில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி வைத்து தினமும் விளையாடுகிறாள்.
    (எல்லா உயிர்களுக்கும் பராசக்தி அன்னை திரும்பத்திரும்பப் படைத்து அளிக்கும் பலவிதமான வடிவங்கள் இப்பாடலில் நயம்படக் கூறப்படுகின்றன).
    வல்ல தெய்வப் பாவை மானிடப்
    பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
    மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
    மருவு பறவைப் பாவையும்
    ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும்
    பாவையும் உறும் தாவரப் பாவையும்
    ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப்
    பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்
    எல்லவே சாக்கிரம் கனவொடு
    சுழுத்தியுடன் எழும் பூதாசார வடிவாய்
    எண்பத்து நாலுலக்கத்தான கொள்கையினில்
    எண்ணிறந்திடும் கோலமும்
    பல்லுயிர்ப் பாவை விளையாடு நற்
    பூவையே பாவை விளையாடி அருளே!
    பரம சிவகாம சுந்தரி அம்மை இனிய
    பொற்பாவை விளையாடி அருளே!
    (பாவை- பொம்மை; பொறி- அறிவு; சாக்கிரம்- விழிப்பு; சுழுத்தி- உறக்கம்)
    (தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-
    பாவை விளையாடல் பருவம்- நல்லதுக்குடி கிருட்டிணையர்)
    இவ்வுலகில் நிகழும் அனைத்துச் செயல்களையும் பராசக்தியின் விளையாட்டாகக் கண்டு மகிழ்ந்து பாடிப்போற்றும் இந்நூலாசிரியர் சக்தி உபாசகர் என எண்ண இடமுள்ளது.
    பிள்ளைத்தமிழ் பிரபந்தத்தின் அமைப்பில் ஒவ்வொரு பருவத்திற்குமான பத்துப்பாடல்களில், தொன்மச் செய்திகள், அழகியல், சந்தநயம், அணிநயங்கள் மட்டுமின்றி, சைவசித்தாந்த, தத்துவ, சமய விளக்கங்களையும் கூட்டிப் பாடல்களை அமைப்பதே நல்லிசைப்புலவோரின் வழக்காகும் எனப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் கூறுகிறார்.
    தொடர்ந்து படித்து ரசித்து மகிழ்வோம்.

    (ஆய்வுக்கு உதவிய நூல்: நல்லதுக்குடி கிருட்டிணையர் பாடிய தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்- மூலமும் உரையும்- உரையாசிரியர்: முனைவர் திரு. கா. நாகராசு- 2015)

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-13

    மீனாட்சி பாலகணேஷ்

    நீ தகப்பனுக்குச் சுவாமி என்பதுலகறியும்!

    56126e17-4f9e-41e7-bf91-f4a1edd787b0

    சிறுமிகள் ஐந்தாறுபேர் சேர்ந்து ஒரு அழகான மண்வீட்டைக் கட்டுகிறார்கள். இதற்குச் சிற்றிலிழைப்பது எனப்பெயர். ஒரு வீட்டைக்கட்டி, இலைதழைகள் கொண்டு கூரையையும் அமைத்துப் பின் அதில் குடித்தனம் நடத்துவதாகப் பாசாங்கு செய்து விளையாடுகின்றனர். இங்கு ஒருபெண் சின்னச்செப்புகளை- அவை மரத்தாலோ, உலோகத்தாலோ அல்லது மண்ணாலோ செய்யப்பட்டிருக்கும்- அடுப்பில் ஏற்றிச் சோறு சமைப்பாள். அவரவர் வசதிக்கேற்ப மணலையோ, செல்வந்தர் வீட்டுக் குழந்தைகளாயின், முத்துக்களையோ நவரத்தினங்களையோ அதில் அரிசியெனப் பெய்து சமையல் நடக்கும். சாப்பிடுவதாகப் பாசாங்கு செய்யமாட்டார்கள். ஏனெனில் அதற்குள் யாராவது ஒரு சிறுவனோ சிறுமியோ தங்கள் வீட்டிலிருந்து ஏதாவது தின்பண்டத்தைக் கொண்டு வருவார்கள். அதனை உண்டு மகிழ்வர் இச்சிறுமியர்.

    ஆற்றங்கரைமணலில் அழகான சிற்றிலையிழைத்து விட்டார்கள் இச்சிறுமியர். தேன்மொழிதான் வயதில் சற்றே பெரியவளானதால், அவள் சிவந்தநிற மலர்களை அடுப்பிலிட்டு நெருப்பாக்கி, சோற்றுப்பானையை இட்டு, சோறும் பொங்கிவிட்டாள். மஞ்சரி தன்வீட்டிலிருந்து தாய் செய்திருந்த சில பணியாரங்களையும், பொரி, அவல், வெல்லம், தேங்காய்ச்சில்லுகள் என வகைவகையாக எல்லாம் கொண்டு வந்துவிட்டாள். இலைபோட்டுப் பரிமாற வேண்டியதுதான்- அப்போது ஓடோடி வருகிறான் அச்சிறுவன்- யாரவன்? பெயர் சாமிநாதன்! இவர்களுடைய தோழன்தான்! ஒரு அன்னையின் தோரணையில் இடையில் கைகளை ஊன்றியவண்ணம், “சரி! சரி! அவனுக்கும் ஒரு இலை போட்டுவிடடி,”என்கிறாள் தேன்மொழி.

    அதற்கெல்லாம் நேரமே இல்லாமல், வந்தவன் இவர்களின் சிற்றிலைக் காலால் எற்றி அழிக்க முற்படுகிறான். அவனுக்கு இவர்கள்மீது வெறுப்போ பகையோ ஒன்றும் இல்லை. இவர்கள் இழைத்த சிற்றிலை அழிப்பது அவன் வயதொத்த சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டு. அழித்தபின் அவர்கள் அழுவதனைக் கண்டு கைகொட்டி நகைப்பான். சரியான சமயத்தில் தேன்மொழி பாய்ந்து அவனைப் பிடித்து இழுத்து ஒருபுறம் நிறுத்திவிடுகிறாள். அவர்கள் சிற்றில் அழிவிலிருந்து பிழைத்தது! விக்கித்துநின்ற மற்ற சிறுமியர் இப்போது சாமியை (சாமிநாதனை அவர்கள் அப்படிதான் அழைப்பார்கள்!) ‘பிலுபிலு’வெனப் பிடித்துக் கொள்கின்றனர்; கேள்விக்கணைகளும் கூச்சலுமாக ஒரே ஆரவாரம்:

    வாருங்கள், நாமும் அருகே சென்றுதான் பார்க்கலாமே!

    தேன்மொழி பன்னிரண்டு பிராயம் நிரம்பியவள். சிறுபிள்ளை விளையாட்டுகளுடன், தெய்வ பக்தி நிரம்பிய தாய்தந்தையர் கூறும் கதைகளையும் தத்துவங்களையும் கேட்டு வளர்ந்தவள்; வளருபவள். அவள் ஆத்திரம் கொள்ளாமல் அமைதியாக, ஆனால் கண்டிப்பாகக் கேட்கிறாள்: “என் பாட்டனார் கூறிய தத்துவம் ஒன்றுண்டு; எம் அன்னை (ஆய்) இவ்வாறுதான் சிற்றில் இழைப்பாளாம்; அவற்றை எமது தந்தையாகிய அத்தன் சிவபிரான் அழித்துக் கூத்தாடுவானாம். எம் அன்னைக்குக் கோபமே வராதாம். பேசாமல் அவன் ஆட்டத்தை நின்று ஆனந்தமாகக் கண்டவண்ணம் கையால் தாளமுமிடுவாளாம்1. பெண்களுக்கே உரியதான பொறுமையாலும், பேரன்பினாலும், இந்த இளம்பெண்களாகிய இவர்களும் ( நாங்களும்- இம்மடவார்) நான் என்ன செய்தாலும் அவ்வாறு பொறுத்துக்கொள்ளும் தகைமைவாய்ந்தவர்களென்று நீ தவறாக எண்ணிக்கொண்டாய் போலும், சாமிநாதா! உனக்குத் தகுந்த தண்டனை கொடுக்க எம் தாய்மார்களை நாங்கள் கூவியழைப்போம் தெரியுமா?” என வாதிடுகிறாள்.

    மஞ்சரி, “நீ எல்லாரிடமும் சென்று சும்மாயிருக்கும்படிக் கூறுவாய்; உன்னிடம் அதனைக் கூறுவார்- அதாவது, ‘நீ சும்மாயிரு சாமிநாதா,’ எனக்கூறுவார் ஒருவருமில்லை எனத் தெரிகிறது. அதுதான் எங்களிடம் இவ்வாறு வந்து வம்புசெய்கிறாய்,” எனக் கூற, கோதை எனும் சிறுமி, “அடியே! அதுதான் இவன், இந்தச் சாமிநாதன் தகப்பன் சாமியாயிற்றே2! உலகமே அறிந்த கதையல்லவோ அது,” எனப்பழித்து முகத்தைச் சுளிக்கிறாள்.

    “அம்மாடி! நீ குறும்புசெய்யும் சிறுவர்களின் கூட்டத்துக்கு அரசனல்லவோ ?” எனக் கேட்டுச் சிறுமியர், “எங்கள் சிற்றிலை தயவுசெய்து அழிக்காதே சாமி! அழகான இந்தத் திருவேரகம் எனும் ஊரில் வாழ்கின்ற குருமணியே, எங்கள் சிற்றிலை அழிக்கவேண்டா,” எனக் கையெடுத்துக் கும்பிட்டு வேண்டுகின்றனர்.

    அந்தச் சாமிநாதன் எனும் கள்ளச்சிறுவன், திருவேரகம்வாழ் குமரன், தகப்பன்சாமியான சுவாமிநாதன் குறுமுறுவல் கொள்கிறான்.

    1.அன்னை சிற்றிலிழைப்பதென்பது உலகங்களைப்படைக்கும் செயல்; அத்தன் உன்மத்த நடனமாடி அதனை அழிப்பதென்பது ஊழிக்காலத்தே உலகினை இறைவன் அழிப்பதென்பதாகும். இந்தப் பிரபஞ்சப் பெருநடனத்தைக் காலந்தோறும் ஓய்வொழிவின்றி அன்னையும் அத்தனும் நிகழ்த்துகின்றனர்; இதனையே இங்கு புலவர் சிறுவர் விளையாட்டாகக் கூறுகிறார். குமரகுருபரனாரும் இதே கருத்தினை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அழகுற எடுத்தாண்டுள்ளார்:

    எற்றுபுன லில்கழுவு புவனப்பழங்கலம்
    எடுத்துஅடுக் கிப்புதுக்கூழ்
    இன்னமுதமும் சமைத்து அன்னைநீபன்முறை
    இழைத்திட அழித்தழித்தோர்
    முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
    முன்னின்று தொந்தமிடவும்…………

    (செங்கீரைப்பருவம்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்)

    2. தகப்பன் சுவாமி- படைப்புக் கடவுள் பிரமன் பிரணவ மந்திரத்தின் பொருள் அறிந்திலன்; அதனால் அவனைச் சிறையிலிட்ட குமரனிடம் தந்தை சிவபிரான் அதன் பொருளைக் கேட்க, அவருக்கு, தந்தைக்கு உபதேசம் செய்கிறான் முருகன்; இது திருவேரகத்தில் நிகழ்ந்தது, அதனால் முருகன் தகப்பன் சுவாமி எனக் கொண்டாடப்படுகிறான்.

    3. குறும்பர் குலத்தரசன்- குறும்பு செய்யும் சிறுவர்களுக்கெல்லாம் தலைவன்; குறும்பர் எனப்படும் மலைவாழ் குறவர்களின் அரசன் என இருபொருள்படும்)

    எம்மா யிழைக்கும் சிற்றிலெலா மெந்தை யழித்துக் கூத்தாட
    எள்ளத் தனையும் சினவாம லினிது தாள மிடுகின்றாள்
    தம்மா தரவா லிம்மடவார் தாமு மெமக்கத் தகையரெனத்
    தவறா யெண்ணிக் கொண்டனையாம் தண்ட மிடத்தா
    யரையழைப்போம்
    சும்மா இருக்கும் படிஎவர்க்கும் சொல்ல வல்லாய் உனக்கதனைச்
    சொல்வா ரிலைநீ தகப்பனுக்குச் சுவாமி யென்ப துலகறியும்
    அம்மா குறும்பர் குலத்தரசே அடியேம் சிற்றி லழியேலே
    அணியே ரகம்வாழ் குருமணியே அடியேம் சிற்றி லழியேலே

    (திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- நடேச கவுண்டர்)

    கவியரசு நடேச கவுண்டர் இயற்றியுள்ள திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழில் உள்ள சிற்றில் பருவத்துப்பாடல் இது. அம்மையப்பன் இயற்றும் படைத்தல்-காத்தல்-அழித்தல் எனும் பெரும் தத்துவத்தைச் சிறார்களின் சிற்றில் விளையாட்டாக்கியும், “உன்னிடம் நாங்கள் எதனை எப்படிக்கூறுவது? நீதான் தகப்பன் சுவாமியாயிற்றே,” என்று திருவேரகத்தலத்தின் புராணத்தை இதனுட்படுத்தியும், ‘குறும்பர் குலத்தரசே’ என முருகனைப்பற்றி இருபொருள்படும்படியும் கவியரசு நடேச கவுண்டர் அவர்கள் பாடியுள்ள நயம் இரசிக்கத்தக்கதாம்.

    *****

    94b8d03b-5ba1-46a9-b8e6-f4d75ab74eb9
    சிறுமியர் சிற்றிலிழைத்துப்பின்பு தமது பாவைகளுக்கு ஒரு திருமணவிழாவினையும் நடத்த முனைந்துள்ளனர். சிறுமி சுந்தரியின் அழகான மரப்பாவை திருமணப்பெண்; மஞ்சள் நிறப்பட்டாடை அணிவிக்கப்பட்டுப் பொலிகிறாள்! அடுத்தவள் மேகலையின் மரப்பாவைதான் மணமகன். ஒருகை சிறிது ஒடிந்திருந்தாலும், முறுக்குமீசையும் தலைப்பாகையுமாக கனகம்பீரமாக நிற்கிறான் அவன்! மேலும் சில மணமக்கள்- மற்றச் சிறுமியர்களுடையவை. அவரவர்கள் தங்கள் அன்னையிடமிருந்து வாங்கிய பட்டுத்துண்டுகளாலும் மலர்மாலைகளாலும் இவற்றினை அலங்கரித்து தமது கழுத்து அணிகளையும் பூட்டி இப்பாவைகளுக்குத் தத்தம் இல்லங்களில் முன்பொருதினம் நிகழக்கண்ட மணவினைப்படி, மணமுடிக்கக் கருதியுள்ளனர். அதற்காகத்தான் பெருவிருந்தொன்றினையும்(!) ஏற்பாடு செய்துள்ளனர். இந்தச் சுவாமிநாதனோவெனில் இவர்கள் சிற்றிலை அழிப்பதிலேயே முனைப்பாக உள்ளான்; என்னவொரு அரக்கத்தனமான விளையாட்டிது?

    சினம்பொங்க மேகலை கூறுகிறாள்: “ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு திருமணத்தை முடிக்கவேண்டும் சாமிநாதா. பண்டொருநாள் உன் தந்தை புத்தூர் எனும் ஊரில் ஒரு பெண்ணின் திருமணத்தினை என்னவோ கதைகூறி4 நிறுத்திவிட்டார். அதனால் வந்த பாவத்தினால் தன்னுடைய இருகால்களும் வருந்தும்படிக்கு இருள்படர்ந்த இரவுநேரத்தில் கல்லும் முள்ளும் நிறைந்த திருவாரூர் வீதியில் தம் அடியவருக்காகத் தூதுசென்று நடந்தலைந்தார் என்பதனை நீ அறிந்திருக்கவில்லை போலுள்ளது சாமிநாதா!”

    “ஆமாம்! நீ எங்கள் சிற்றிலையும் அழித்து இந்தப் பாவைகளுக்கு நாம் புரியவிருக்கும் திருமணத்தையும் நிறுத்தி விட்டாயானால் எத்தனை பெண்களிடம் தூதாகக் கால் சிவந்துவருந்த நடக்கவேண்டி வருமோ எனத்தெரியவில்லையே, பாவம்!” எனப்போலியாக வருந்துகிறாள் மஞ்சரி.

    “எல்லாவற்றையும் நன்கு சிந்தித்துக்கொள்; நாங்கள் சிறுமிகள்; ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறோம். எங்கள்மீது இரக்கம் இல்லாமல் எங்களுடைய சிற்றிலைச் சிதைக்காதே அப்பா! திருவேரகம்வாழ் முருகா, எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என முறையீடு செய்கின்றனர் சிறுமிகள்.

    தகப்பன்சுவாமியான முருகன் இவ்வேண்டுதலுக்குச் செவிசாய்க்காதிருப்பானோ? கட்டாயமாக இல்லை. அருட்கடலல்லவா அவன்?

    4. சிவபிரான் முதியவர் வடிவில் வந்து புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் மகளுக்கும் சுந்தரருக்கும் நடக்கவிருந்த திருமணத்தை, ‘சுந்தரன் என் அடிமை’ என எழுதிய ஓலையைக்காட்டி ஆட்கொண்டு, திருமணத்தை நிறுத்திவிட்டார். அதனையே சிறுமியர் கூற்றாகப் புலவர் இவ்வாறு கூறுகிறார்.

    5. அதனால் வந்த பாவம் தொலையுமாறு (இது புலவர் இந்தப் பாடலின் சுவைக்காகக் கற்பனை செய்த கருத்து) அதே சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் திருவாரூர் வீதியில் திரும்பத்திரும்ப அலைந்து தூது சென்றார் சிவபிரான்.)

    உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒருகால்முன்
    ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
    முந்தை யிருளினில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
    முயன்று பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
    வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்க்கால் சிவக்க எத்தனைகால்
    மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ
    சிந்தை நினைந்து சிறியேம்செய் சிற்றில் சிதையேல் சிதையேலே
    திருவே ரகம்வாழ் முருகோனே சிற்றில் சிதையேல் சிதையேலே

    (திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- நடேச கவுண்டர்)

    தகப்பன் சுவாமி என்றது ‘நீ தகப்பனுக்கும் ஒருபடி மேல். அவன் ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்தியதற்கே இவ்வளவு அலைய நேரிட்டது. நீ பல பாவைகளின் (பெண்கள்/ விளையாட்டு பொம்மைகள்) திருமணங்களை நிறுத்தினால் எப்படியெல்லாம் அலைய நேரிடும்?’ எனப் பேதைச் சிறுமிகள் கேட்பதாகக் கற்பனை செய்து பாடியது மிக அருமை.

    இதுபோலும் அருமையான பாடல்களை மேலும் அடுத்தடுத்துக் காண்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    _

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-12

    மீனாட்சி பாலகணேஷ்

    தேவாதிபர்சூழ் தென்னளகைத்திரு!

    தென்னளகை நகர்! எங்குள்ளது இது? இதுவே தென்தஞ்சாவூர் எனப்படும் லால்குடி. இதன் அழகான தமிழ்ப்பெயர் திருத்தவத்துறை என்பதாகும். இங்கு உறைபவள் பெருந்திருப்பிராட்டி அன்னை. வடமொழியில் ஸ்ரீமதி எனக்கூறுவர். உமையவளின் இன்னொரு வடிவமே இவள். அண்ணல் சிவபிரான் இங்கு சப்தரிஷீசுவரர் என அறியப்படுவார். இத்தலத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், ஆங்கீரஸர், மரீசி ஆகிய ஏழு ரிஷிகள் தவம் செய்ததால் ஈசனுக்கு சப்தரிஷீஸ்வரர் எனப்பெயர்.

    நமது தமிழ்த்தாத்தா உ. வே. சா.வின் ஆசிரியரான திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியுள்ள சந்தநயமும் தமிழ்நயமும் நிறைந்த பல பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று இத்திருத்தவத்துறையில் உறையும் பெருந்திருப்பிராட்டியார் மீதான பிள்ளைத்தமிழ்.

    *****

    ஏழெட்டு மாதங்கள் நிரம்பிய அழகிய பெண்குழந்தை; குறுநகை அரும்பித்தவழும் சிவந்த கனிவாய்; பச்சைமரகத மேனி; பரிவுடன் துலங்கும் இரு கருவிழிகள்; இளம் பிஞ்சுமகள்; பார்க்கும் தாய்க்குப் பெருமிதத்தில் நெஞ்சு விம்முகிறது. பக்கத்தில் தாதியரும் செவிலியும் நின்று, “கைவீசம்மா கைவீசு,” எனவும், “முத்தம் கொடடி கண்ணே,” எனவும் வேண்டுகின்றனர். “மாத்தேன் போ,” எனப் பொய்யாக மறுத்து, தன் சிவந்த கைகளைக் கொட்டி மகிழ்கிறாள் இந்தப் பச்சிளம்குழவி. பின் தனது குமுதவாயின் தேன்போலும் எச்சில் ஒழுக, அழுத்தமாக ஒரு முத்தத்தினை அன்னையின் கன்னத்தில் பதிக்கிறாள். பார்ப்போர் உள்ளமெலாம் பரவசத்திலாழ்ந்து அவளை, அக்குழந்தையைப் பராசக்தியின், பார்வதியின் வடிவமாகவே கண்டு களிக்கின்றனர். சிந்தையெலாம் களிகூர, தமது கற்பனைகளைத் திரட்டிக் காட்சிகளை மனக்கண்ணில் எழுப்புகின்றனர்.

    குழந்தையை அன்னை பராசக்தி எனத் தெளிந்து, அன்னையைக் குழந்தையாக்கி, அக்குழந்தையைக் குமரியாய், நீலகண்டனின் இல்லக்கிழத்தியாய், அகிலமெலாம் ஈன்ற பேரருள் வடிவாய்க் கண்டு களிகூரும் புலவர் வாக்கினில் சொற்சித்திரமாக வரையப்பட்ட ஒரு அற்புதக்காட்சி இது!


    சிவபெருமான்- எல்லா உலகுகளுக்கும் அவற்றிலுள்ள உயிர்களுக்கும் தலைவன்; அவனுடைமை அனைத்துமே வெண்மை நிறங்கொண்டது. வெண்மை நிறம் தெளிவு, மனவுறுதி ஆகிய தன்மைகளை விளக்குவது. ஈசன் வெள்ளிப்பனி படர்ந்த சிகரங்களைக் கொண்ட இமயத்தில் உறைபவன்; வெள்ளை நிறங்கொண்ட எருது அவனுடைய வாகனமாம்; இரண்டாயிரம் வெள்ளைக் கொம்புகளையுடைய வெள்ளைக்களிறு அவனுடையது; அதற்கு அயிராவணம் எனப்பெயர். இது இந்திரனுடைய அயிராவதத்தினின்றும் வேறுபட்டது. வெண்மையான பிறைச்சந்திரன் அவன் சடையில் ஒளிர்கிறான்; வெண்மையான ஒரு காளையைச் சின்னமாகக்கொண்ட வெண்மையான கொடியையுடையவன். வெண்மையான முத்துக்களை வாரியிறைக்கும் வெண்புனலான கங்கை அவன் சடையிலிருந்து பொங்குகின்றது; வெண்ணீற்றினை உடலெங்கும் பூசியவன்; வெண்சங்கினாலான இருகுழைகளைக் காதிலணிந்தவன். அதற்குப் பொருத்தமான வெள்ளிய சங்குமணி இவற்றாலான வடங்களைக் கழுத்திலணிந்தவன். வெள்ளைவெளேரென்ற தும்பைமலர்களாலான மாலையினை அணிந்துள்ளான். வண்டுகளின் ஆரவாரத்தினால் அதிலிருந்து மிகுதியாகத் தேன் துளிகள் திவலைகளாகப் பரந்தெழுகின்றன. இவ்வாறெல்லாம் பெருமைவாய்ந்த பிரான் ஒருசெயல் செய்கிறான்; அதுவே பெருந்திரு எனும் இம்மகளின் செவ்விதழ்களில் வெள்ளிய ஒரு புன்னகையை அரும்புவிக்கிறது.

    என்ன செய்தான் பிரான்? அவளுடைய அழிவற்ற செல்வம் நிலைபெற்ற தூய அடிகளில் தனது முடிவணங்கிப் பணிந்தானாம்- உமைக்கும் சிவனுக்கும் சிறுபிணக்கு- அதன் தொடர்பாக சிறு ஊடல்- ஊடலைத் தணிவிக்க ஐயன் அவளுடைய தாமரைத்திருவடிகளில் தன் சிரம்பதித்து வணங்கி நிற்கிறான் என்கிறார் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்.
    இதன்காரணமாகவே அவளுடைய செவ்விதழ்களிலும் வெற்றிப்பெருமிதம் பொங்கும் வெள்ளிய இளமுறுவல் தவழ்கின்றதாம். அந்தக்காட்சியைக் கற்பனையில் கண்டு, “முறுவல்கொண்ட செவ்விதழ்களால் எமக்கு ஒரு முத்தம் தா கண்ணே! தேவரும் மூவரும் சூழ்ந்து நின்றுபணியும் தென்னளகை எனப்படும் தென்தஞ்சையின் திருவே- பெருந்திருவே (ஸ்ரீமதித்தாயே) எமக்கு ஒரு முத்தம்தா குழந்தாய்!” என வேண்டுகின்றனராம்.

    இப்பாடலில் ‘வெண்மை’ எனும் சொல்லாட்சியைக் கண்டு பிள்ளையவர்களின் கவித்திறத்தினை உணர்ந்து வியக்கலாம். அன்னையின் இதழ்களில் அரும்பும் நகையும்- முறுவலும்- ஐயனுடைய வெண்மைப் பொருட்களுக்கேற்ற வெண்ணகை என்பது பாராட்டத்தக்கது. வெள்ளைப்புன்னகை என்பது மனதில் களங்கமற்றதும் இதயத்தின் ஆழத்திலிருந்து வருவதுமாகும். இத்தகைய சொற்சிலம்பம் செய்யும் புலவோர்களை வித்தாரகவி என்பது வழக்கு. பிள்ளையவர்களின் தமிழ்ப்புலமையை நாம் உணர்ந்து ரசித்து மகிழ இந்நூல் வாய்ப்பளிக்கின்றது.

    வெள்ளிப் பொருப்பும் வெள்விடையும்
    வெள்ளை யிரண்டா யிரமருப்பு
    வெள்ளைக் களிறும் வெண்பிறையும்
    வெள்ளே றுயர்த்த வெண்கொடியுந்
    தள்ளித் தரளங் கொழித்துமறி
    தருவெண் புனலும் வெண்ணீறுஞ்
    சங்கிற் புரிந்த வெண்குழையுந்
    தகுவெண் மனவு மணிவடமுந்
    துள்ளிச் சுவைத்தே னுவட்டெடுக்குந்
    தும்பைப் புதுவெண் மலர்த்தொடையுந்
    தொலையா வுடைமை யாப்படைந்த
    தூயவடிகண் முடிவணங்கத்
    தெள்ளிச் சிறுவெண் ணகையரும்புஞ்
    செவ்வாய் முத்தந் தருகவே
    தேவா திபர்சூழ் தென்னளகைத்
    திருவே முத்தந்தருகவே.

    (திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்-
    மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

    *****

    இக்குழந்தை, பெருந்திருப்பிராட்டி, அன்னையாக இருந்து தன்குழந்தையாகிய முருகனின் வாய்முத்தத்தினை நித்தம் பெற்று மகிழ்கிறாள்.

    இப்பாடல் முருகனின் வீரத்தினையும் மங்கையர் மயங்கும் அவனது பேரழகினையும் புயவலிமையையும் போற்றுகிறது.

    9a948df7-85ee-4b38-a628-7bd5c52537e7
    மாயவித்தை செய்யும் (இந்த்ரஜாலம் உருட்டி வரும்) அசுரர்களின் சேனை சமுத்திரமெனப் பொங்கிவருகின்றது. குமரப்பெருமானின் படையின் ஒன்பதின்மரான நவவீரர்கள் கூர்வேலினைக் கையிலெடுத்துச் சினம்பொங்க எழுச்சிபெற்று அந்தச் சேனாசமுத்திரத்தினுள் நுழைந்து வெட்டிச்சிதைத்த உடல்களின் மாமிசம் நாறுகின்றது (ஊன் நாறு). வானளாவ இந்த நாற்றம் பரவிடும்படி பச்சை மாமிசத்தினைச் சுவைத்து, அதன் கொழுப்பெனும் நெய்யொழுகக் குடலையுருவி ஈரலை வாயிலிட்டுக் குருதியைக் குடிக்குமாறு கொடியவில்லினை வளைத்துப் பல கணைகளை விடுத்து, அவர்களை இவ்வாறு வதைத்து, அமரர் எனப்படும் தேவர்கள் வாழும் நகரினைப் புதுப்பித்து நிற்கிறது குமரனின் வீரச்சேனை.

    இப்படிப்பட்ட வீரத்தைக் கொண்ட படையினைச் செலுத்தும் குமரனின் புயவலிமையைக் கண்டு மயங்காதவர்கள் யார்? அதுவும் அவன் அழகன்; இளைஞன். வீரனான அவனைக் காதலுடனும் வியப்புடனும் கண்கள் விரிய நோக்குகின்றனர் அரமங்கையர். அவர்கள் வாசமிக்கதும் தேன்சொரிவதுமான மலர்களைத் தம்கூந்தலில் சூடியுள்ளனர் (தேன்நாறு கூந்தல் அரமங்கையர்கள்). அவன் வளைத்த வில்லிற்கு ஈடாகத் தம் புருவமாகிய வில்லினை வளைத்துக் கண்அம்புகளை அவனுடைய திரண்ட புயத்தை நோக்கி எய்கின்றனர் (ஒளிர் கண் அம்பு திரள் புயத்தெய்ய). அந்த வீரத்திருமகன், செவ்வேள் எனப்படும் முருகப்பெருமான் கலாபமயில் மீதேறி வருகின்றவன். அவன் குழந்தையாக அன்னைமடியில் தவழ்ந்தபோது பால்மணம் (பால் நாறு) வீசும் அவனுடைய திருவாயின் முத்தத்தினை நீ பெற்றனையல்லவா? அந்த உனது செம்பவளவாயின் முத்தத்தினை நீ எமக்களித்தருளுவாயாக. தாமரைமலரில் உறையும் பிரமதேவன் போற்றும் மங்கலமான மகளே உனது பவளவாயின் முத்தத்தினை அருளுவாயாக.

    இவ்வாறு மகனைப்போற்றி, அன்னையைக் களிப்படையச் செய்து அவளது வாய்முத்தத்தினை யாசித்து நிற்கின்றனர் மற்ற தாதியரும் செவிலித்தாயும்! மிக வித்தியாசமான கற்பனை. வன்சிலை வளைத்துக் கணைகளைப் பகைவர் மேல்விடுவதுபோல் விற்புருவம் வளைத்துக் கண்ணாகிய கணைகளை முருகனின் தோள்மீது மங்கையர் விடுவதாகச் சொற்சிலம்பம் செய்து பாடி வைத்துள்ள நயம் சிந்தைக்கு விருந்தாகும்.

    ஊனாறு நுதிவைப் படைக்கைநவ
    வீரரொ டுருத்தெழுந் திந்த்ரஞால
    முருட்டிவரு சூர்முதற் சேனா
    சமுத்திரத் துழைநுழைந் துடல்பிளந்து,
    வானாறு பைந்தடி சுவைத்துநெய்
    யொழுகீருள் வாய்ப்பெய்து குருதிமாந்த
    வன்சிலை குனித்தடுங் கணைபல
    பணித்தமரர் வாழுநக ரம்புதுக்கித்
    தேனாறு கூந்தலர மங்கையர்கள்
    புருவமென் சிலைகுனித் தொளிர்கணம்பு
    திரள்புயத் தெய்யக் கலாபமயின்
    மீதுவரு செவ்வே ளெனுங்குழவிதன்,
    பானாறு மழலைவாய் முத்தங்கொ
    ணினதுசெம் பவளவாய் முத்தமருளே
    பங்கயத் திறைபரசு மங்கலர்க்
    கொருபுதல்வி பவளவாய் முத்தமருளே.
    (உருத்தெழுந்த- சினமுறத் தோன்றிய; உழை- இடம்; ஈருள்- ஈரல்;)
    (திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்-
    மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

    திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இன்னும்பல பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். இன்னும் வரும் அத்தியாயங்களில் அவற்றின் சில பாடல்களின் நயத்தைக் கண்டு மகிழலாம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-11

    மீனாட்சி பாலகணேஷ்

    பெருங்களிவரச் சிறுகுறும்பு செய்முருகன்!

    b18ccb75-7045-4cbd-bc2e-23828d505057

     

    முன்புகண்ட இலக்கியச்சித்திரங்களுள் ஒன்றில் குழந்தை விநாயகன் தந்தை சிவபிரானின் மடிமீதேறிக் குறும்புகள் செய்வதனைக்கண்டு களித்தோம். அவன் தம்பி முருகன், தான் அண்ணனுக்குச் சளைத்தவனில்லை எனும்வண்ணம் குறும்புகள் செய்வதனை குமரகுருபரர் இயற்றியருளியுள்ள முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழில் கண்டு களிக்கலாம். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழே இவர் இயற்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும். பின்பு வைத்தீசுவரன் கோவிலில் உறையும் முத்துக்குமாரசுவாமி எனும் முருகப்பெருமான் மீது இப்பிள்ளைத்தமிழை இயற்றினார் என அறிகிறோம். பெரும்புலவர்கள் அனைவரின் சிந்தனைகளும் கருத்துக்களும் ஒன்றாகவே இருக்கும் என்பதற்கு இந்தப்பாடல்கள் சிறந்த எடுத்துக்காட்டு. குமரகுருபரரின் காலம் 17-ம் நூற்றாண்டாகும். இவருடைய பிள்ளைத்தமிழ் நூல்களே தமிழில் முதலில் எழுதப்பட்ட நூல்கள். பிற்காலத்துப் புலவர்களும் (18-ம் நூற்றாண்டு) இத்தகைய சிந்தனைகளைத் தம் நூல்களில் புகுத்தியுள்ளனர். இனிச் சித்திரத்தினைக் காணலாமே!

    *******

    குழந்தை முருகன் தன் தாய்தந்தையருடன் விளையாடியவண்ணம் இருக்கிறான். அதனைப்பார்ப்போருக்கு அதுவொரு கண்கொள்ளாக் காட்சியாக உள்ளதாம். குழந்தைகள் என்ன குறும்பு செய்தாலும் அதனை அனைவருமே ரசித்து மகிழ்வோமல்லவா?

    அன்னை பார்வதியின் மடிமீதர்ந்துள்ளவனின் இனிய இளமையான வாயிலிருந்து தேன்போலும் நீர் (எச்சில்) ஒழுகுகின்றது; அது அவன் அணிந்துள்ள வெண்பட்டாடையை நனைக்கின்றது. ஓரிடத்தில் அமரக்கூடிய குழந்தையா இவன்? தாயின் மடியிலிருந்து தாவித் தன் தந்தை சிவபிரானின் மார்பில் ஏறிவிடுகின்றான்; அங்கும் தன் பிஞ்சுக்கால்களால் துவைத்துக் களித்து ஆடுகிறான்; காண்பவர்க்கு இது முருகன் குரவைக்கூத்தாடுவதாகத் தெரிகின்றதாம். அழகான, இன்பமான கற்பனை!

    ஐயன்கையில் உள்ள உடுக்கை (துடி) மத்தளம்போல் மிகுந்த ஒலியை எழுப்புவது. அதனைத் தனது சிறுகைகளில் எடுத்துக்கொண்டுவிட்ட முருகப்பெருமான் அதனைச் சிறிய பறைபோன்று ஒலி எழுமாறு முழங்கச் செய்து மகிழ்கிறான். அவர் ஒருகையில் ஏந்தியுள்ள அனலை அவருடைய (மோலி)சடையிலிருந்து ஒழுகும் கங்கைப்புனலைச் சொரிந்தே அணைத்துவிடுகின்றான். தலையில் அணிந்துள்ள இளம்பிறையைக் கையாலெடுத்து அவருடைய கழுத்தில் நெளிகின்ற பாம்பின் வாயிலிட்டுவிடுகிறான் இளங்குமரன்! அவர்கையில் ஏந்தியுள்ள சிறுமானுக்கு, சடையினின்று அறுகம்புல்லை எடுத்து உண்ணக்கொடுக்கின்றான்.

    அண்ணன் கணேசனுக்கு, தான்சளைத்தவனில்லை என நிரூபிக்கிறானோ என வியக்கவைக்கின்றதல்லவா?

    இனி என்ன செய்யலாம் என எண்ணியவன், தந்தையான சிவபிரானின் அழகுமிகுந்த சிவந்த திருமேனியினை மிதித்துத் துவைத்து விளையாடுகின்றான். இந்தக்கூத்தினால் அவர் மேனியில் பூசியுள்ள வெண்ணீற்றுத்துகள்கள் மேலே பரந்தெழும்படி புழுதியாடல் செய்கின்றான் அவன். அவருடைய சடை காடெனப்பரந்து விரிந்துகிடக்கின்றது; அதிலிருந்து கங்கைநீர் பெருகிவழிகின்றது. இதில் குழந்தை முருகன் தனது விழிகளெல்லாம் சிவக்குமாறு (சேப்ப) முழுகித்துளைந்து நீராடி விளையாடுகிறான்.

    ‘இவ்வாறு, தான் வளர்ந்துவரும் காலத்தில் (இளமை முதிர்ந்து வரும் பருவத்தில்- குழவுமுதிர்) காண்போர் பெரும்களிப்புக்கொள்ளுமாறு சிறுசிறு குறும்புகளைச் செய்தவனே! வருக! குரவமலர்களின் நறுமணம் கமழும் கந்தபுரியில் குடிகொண்டிருக்கும் குமரகுருபரனே வந்தருள்க!’ எனத்தாயின் நிலையில் நின்று குமரகுருபரனார் வேண்டுகின்றார்.

    இதில் வெளிப்படும் கருத்துக்கள் ஆச்சரியம் விளைவிப்பன. குழந்தைகள் வளர்ந்துவரும் அறியாப்பருவத்தில் எவ்விதமான குறும்புகளைச் செய்யினும், தாய்தந்தையர் அதனை மகிழ்ச்சியுடன் இரசிப்பதனைக் கண்கூடாகக் காண்கிறோம். அன்னையும் அத்தனும் தம்குழந்தை முருகனின் குறும்புச்சேட்டைகளை அமைதியாக அனுபவித்து மகிழ்வதனை நாம் குமரகுருபரர் வாக்கில் படித்துமகிழ்வது மிக்க இன்பமளிப்பதாகும்.

    மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்டுகில்
    மடித்தல நனைப்பவம்மை
    மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி எம்பிரான்
    மார்பினில் குரவையாடி
    முழவுமுதிர் துடியினில் சிறுபறை முழக்கிஅனல்
    மோலிநீர் பெய்தவித்து
    முளைமதியை நெளியரவின் வாய்மடுத் திளமானின்
    முதுபசிக்கு அறுகருத்தி
    விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு தூளெழ
    மிகப்புழுதி யாட்டயர்ந்து
    விரிசடைக் காட்டினின் றிருவிழிகள் சேப்பமுழு
    வெள்ளநீர்த் துளையமாடிக்
    குழவுமுதிர் செவ்விப் பெருங்களி வரச்சிறு
    குறும்புசெய் தவன்வருகவே
    குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட
    குமரகுரு பரன்வருகவே.
    (முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்)

    குமரனின் குறும்பு விளையாட்டுகள் இத்துடன் நிற்பதாயில்லை. இப்போது அவனுடைய விளையாட்டு பார்வதி அன்னையிடமும் தொடர்கின்றது.

    தமது படர்ந்த சடைக்காட்டினிடையில் சிவபிரான் ஒரு கலைமதியை- பிறைச்சந்திரனை வைத்துள்ளார். உமையம்மையின் அழகான கொண்டையில் முத்துக்களால் (நித்திலம்) செய்யப்பட்ட பிறைபோன்ற ஒரு அணிகலன் அழகுசெய்கின்றது. “அட! இரு பிறைச்சந்திரன்கள். இரண்டையும் இணைத்தால் முழுநிலவாகுமே,” என எண்ணுகிறான் குமரன். இரு இளம்பிறைகளையும் ஒன்றாக இணைக்கிறான். அது அழகான முழுமதியாகக் காட்சியளிக்கின்றதனைக்கண்டு மகிழ்ச்சியில் குழந்தை தனது கைகளைக் கொட்டிக் ‘கலகல’வெனச் சிரித்து மகிழ்கின்றான்.

    முருகன் செய்துவைத்துள்ள இந்த முழுமதி போன்ற அணிகலனை உண்மையான முழுமதியே என எண்ணி, சிவபிரான் சடையில் அணிந்துள்ள பாம்பு அதனை உண்பதற்காக ஓடோடி வருகின்றது. அதன் படத்தைக்கண்ட முருகன் அதனைக் காந்தள்மலர் என எண்ணிக்கொண்டுவிட்டன்; அதனை முடியிலணிந்துகொண்டு அழகு செய்துகொள்ளலாமே எனப்பறிப்பதற்காக அதனருகில் சென்றான். அப்போது அப்பாம்பு பயங்கொண்டு வெகுவேகமாக ஓடலாயிற்று.

    சிவபிரான் ஊழிமுதல்வனாகையினால் தனது திருமுடியில் ஒரு மண்டையோட்டை அணிந்திருப்பார். அந்த மண்டையோட்டின் ஒருபல் வெளியே துருத்திக்கொண்டு அது நகைப்பதைப்போலக் காணப்படும். இத்தகைய குறும்புகளினிடையே குமரப்பெருமான் தனது தலையை நிமிர்த்தி அதனை நோக்கியபோதில் அந்த மண்டையோடு தனது இச்செயல்களைக்கண்டு நகைப்பதாகக் கருதிச் சினம்கொண்டானாம். தனது தந்தையான சிவபிரான் முன்பொருநாள் சினங்கொண்டு கிள்ளிய மலரயனின் தலைதான் அது எனக்கருதினான் முருகன். உதட்டினைச் சுழித்தவண்ணம் சினத்துடன் அத்தலையினை நோக்கி, “நீ முன்பு என்கையால் உன்தலையில் குட்டுப்பட்டதை மறந்தனையோ? இப்போது நகைக்கலாயிற்றோ?” எனக்கேட்டான்.

    சின்னஞ்சிறுகுமரனின் அதட்டுதலும் சினமும் நமக்கும்தான் நகைப்பை வருவிக்கின்றது. ஆயினும் பிள்ளைப்பிராயத்தில் பெரியபெயர் பெற்றவனல்லவா? நாம் நகைக்கலாகுமோ? ஆகவே ஆசையினாலும் அன்பினாலும் புன்னகைக்கிறோம்.
    “இதழினை அதுக்கி (உதட்டினைச் சுழித்து) இவ்வாறு கேட்கும் குமரநாயகனே வருவாயாக! குரவமலர்கள் நிறைந்த கந்தபுரியில் குடிகொண்ட குமரகுருபரனே வருக!” எனப்புலவர் குமரகுருபரர் பாடிவேண்டுகிறார்.

    கட்டுண்ட படர்சடைக் காட்டெம்பி ரான்வைத்து
    கலைமதியோ டையநீயக்
    கவுரிதிரு முடியின்நித் திலமிட் டிழைத்திட்ட
    கதிரிளம் பிறையிணைப்பத்
    தெட்டுண்ட போல்முழுத் திங்களென்று ஏக்கறும்
    சுழுமணிச் சூட்டுமோட்டுச்
    செம்பாம்பு பைவிரித் தாடுதலும் ஓடிநின்
    சிறுநறுங் குஞ்சிக்கிடும்
    மட்டுண்ட பைங்குலைக் காந்தளென் றணையஅம்
    மாசுணம் வெருண்டோடலும்
    மணிமுடியின் நகுதலையை மற்றெமை நகைத்தியால்
    மலரயன் தலைநீமுனம்
    குட்டுண்ட தறியாய்கொல் எனவித ழதுக்கும்
    குமாரநாய கன்வருகவே
    குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட
    குமரகுரு பரன்வருகவே.
    (முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்)

    பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கியங்கள் இத்தகைய அருமையான கற்பனைநயம் செறிந்த பாடல்களை மிகுதியாகக் கொண்டவையாகும். தேடிப்பிடித்துப் பயிலுவோமானால், இவற்றின் அருமைகளையும் பெருமைகளையும் உணர்ந்து களிப்பெய்தலாம். இன்னும்வரும் அத்தியாயங்களில் தொடர்ந்து இவற்றைக்காண்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-10

    மீனாட்சி பாலகணேஷ்

    புலியும் அம்புலியும்!

    காலங்கள் மாறினும் சிலகாட்சிகள் மட்டும் மாறுவதேயில்லை! மாறாதகாட்சிகளாயினும் அவற்றின் புதுமையும் இனிமையும் நெஞ்சை மகிழ்விக்கவும் நெகிழ்விக்கவும் தவறுவதேயில்லை! நாம் எதனைப்பற்றிப் பேசப்புகுந்தோம் தெரியுமா? வாருங்கள், இதோ காணலாம் ஒரு இனிய இலக்கியச்சித்திரத்தினை!

    இந்தப் பெரியமாளிகையின் நிலாமுற்றத்தில் பரபரப்பும், ஓடியாடுதலும் இன்று மிகுந்துகாணப்படுகின்றது. ஏன் தெரியுமா? இன்று பௌர்ணமி எனப்படும் முழுநிலா மாலை. மாளிகைப் பணிப்பெண்கள் அனைவரும் நிலாச்சோறு உண்பதற்கு ஏற்பாடுசெய்ய ஓடியாடிக்கொண்டுள்ளனர்; அன்னையின் கையில் சிறு பெண்குழந்தை, பாலன்னத்தை வெள்ளிக்கிண்ணத்திலிருந்து எடுத்து அன்னை வானில் எழுந்து பளிச்சிடும் நிலாவைக்காட்டிக் கதைகூறியபடியே குழந்தைக்கு ஊட்டுகிறாள். இரண்டு கவளங்கள் உண்டகுழந்தைக்கு, அந்தப் பால்போலும் அழகுநிலாவிடம் ஆர்வம் மிகுகின்றது.

    “அம்மா, அம்புலிமாமாவை என்னோடு விளையாட இங்கே அழைத்துவாயேன்,” என ஒரு மாபெரும் கட்டளையை இடுகிறாள் இந்தச் சுட்டிச்சிறுமி. அரசிளங்குமரியல்லவா இந்தக் கிள்ளைமொழிக்குழந்தை? உடனே நிறைவேற்றவேண்டாமா?

    பணிப்பெண்கள் சாம, தான, பேத, தண்ட உபாயங்களை மாற்றிமாற்றி உபயோகித்து, அம்புலியைத் தங்கள் சிறுமியுடன் விளையாட வருமாறு அழைக்கின்றனர். அம்புலி அவ்வளவு எளிதாக வந்துவிடுமா என்ன? அவனும் செருக்குற்று நிற்கிறான். ‘இவர்களழைத்து இந்தச்சிறுமியுடன் நான் விளையாடப்போக வேண்டுமோ? நான் உலகிற்கே தலைவனான சிவபிரானின் சடையில் குடியிருப்பவன், இப்பெண்கள் என்னை மிரட்டி விரட்டினால் விரட்டட்டுமே, பார்த்து விடலாம்,’ என மெத்தனமாக இருக்கிறான்!

    தானத்தையும் (அதாவது நீ கீழிறங்கி இக்குழந்தையுடன் விளையாட வந்தால் என்னென்ன பெறலாம் எனக்கூறுவது) பேதத்தையும் (வராவிடில் எதையெல்லாம் இழக்க நேரிடும் எனவும் கூறுகிறாள்) கலந்து விரவி அழகான சொல்விளையாட்டாகப் பல கதைகளைப் பகிர்ந்துகொண்டு, அம்புலியைக் கூப்பிடுகிறாள் பாடலில் வல்ல செவிலித்தாய் ஒருத்தி! அவற்றைக் கொஞ்சம் கேட்கலாமா?

    “என் நாதன் ஒரு வெம்புலியைத் தோல்உரித்தனன்; நாமும் அவனுக்கு ஈடாக ஒரு வண்புலித்தோலை உரிக்கலாம் என்று இவள் உன்னைக் கூப்பிடுகிறாள் என்று அச்சங்கொண்டு வராமல் இருக்கிறாயோ அம்புலியே!” என்கிறாள்.

    உடனே மற்ற பெண்கள் அவளைச் சூழ்ந்துகொண்டு, “அதுவென்ன ஐயன் புலித்தோல் உரித்த கதை! எமக்கு முழுமையாக இக்கதையினைக் கூறுவாய்” எனக் கேட்கலாயினர். அவளும் நயம்பட அதனைக் கூறுகிறாள்!

    10a157d8-614f-4855-aefc-201cbf1fa4be
    “புலிக்கால்முனிவரான வியாக்கிரபாதர், பதஞ்சலி எனும் முனிபுங்கவர் ஆகியோர் போலும் அருந்தவமுனிவர்கள் போற்றும் சிறந்த ஊர் திருப்புலிநகர் ஆகும். அவ்வூரின்கண் சிவ அபராதம் செய்தவர்களை வாளால் கண்டனம்செய்த கோட்புலிநாயனார் என்னும் பெருமைமிக்க ஒரு அடியார் இருந்தார். அவ்வூரில் வாழ்ந்த வள்ளல்தன்மை மிகுந்த மற்றொரு அடியார் சிறப்புலி நாயனார் ஆவார். இவர்களுக்குப் பேரருள் செய்தவன் நமது சிவபெருமான்.

    “ஒருநாள் நமது உமையம்மை ஐயனிடம் ஏதோ காரணத்தினால் ஊடல் கொண்டபோது எம்பிரான் என்னசெய்தார் தெரியுமா? அவளது ஊடலைத் தீர்க்கும்வகையில் அவளைத் தன்னுடன் சேர்த்து இறுகத்தழுவிக்கொண்டு அவளை நகைபுரியச் செய்யும்வண்ணம் வினோதமான பல செய்திகளையும், தான் செய்த நகைப்புக்குரிய செயல்களையும் கூறினார்: “யாம் ஒரு புலியின் தோலையுரித்து அதனை எம் இடையில் அணிந்துள்ளதைப்பாராய் தேவி! இது தாருகாவனத்து முனிவர்கள் மிகுந்த கருவம்கொண்டு அபிசார வேள்வி செய்து வரவழைத்து என்மீது ஏவிய கொடியபுலியின் தோல்,” என்று அந்தக் கதையினை நகைத்தவண்ணம் உமையாளுக்குக் கூறினான்.

    659a37b0-9193-42a1-9b3a-5f29d4870d4a
    “அதுகேட்ட நமது உமையவள், “நாமும் ஒரு புலித்தோலை உரித்து நமது நாதனுக்கு ஈடாக வெற்றிச்செயல் செய்யலாம்,” என அம்புலியை அழைக்கிறாள் என்று அச்சம்கொண்டு இந்த அம்புலி சிவபிரானின் தலையை இறுகப்பற்றிக்கொண்டு வராமல் இருக்கிறது போலும்,” எனக்கூறவும், மற்ற நங்கையர் அனைவரும் கரம்கொட்டிக் ‘கலகல’ என நகைத்திடவும், அந்த நிலாமுற்றமே அவர்கள் நகையொலியில் தானும் மிளிர்கின்றது.

    “ஏ அம்புலியே! கேட்டனையோ இந்தக்கதையை? காலம் தாழ்த்தாது வந்தாயானால், இந்தக் கவுரியின் அருளைப்பெற்று உய்யலாம் தெரியுமா?” என்கிறாள் ஒருத்தி!

    “ஒருவேளை அவளுடைய மாற்றாளாகிய கங்கையோடு நட்புபூண்டவன் இந்த அம்புலியாகிய திங்கள்புலி எனச்சினம் கொள்வாள் உமையம்மை எனும் அச்சமோ என்னவோ!” எனச் சிலபெண்கள் குறும்புபேசிக் களிக்கின்றனர்.

    “அதனாலென்ன? ‘இவன் அம்புலி! உன்னோடு விளையாட வந்தனன் தாயே! இவன்மீது சினம்கொள்ளாதே!’ எனக்கூறித் தப்பவைத்துவிடுவோம்! ‘பயப்படாதே நிலாவே! அண்ணாமலையானுக்கு இனியவளான இந்த உண்ணாமுலையுடன் விளையாட வந்துவிடு!” எனக்கூறி அம்புலியை அழைக்கிறாள் மற்றொருபெண்!

    (குந்தலவராளி)

    செம்புலி பதஞ்சலி யெனுந்தவர்கள் போற்றத்
    திருப்புலி நகர்க் கண்டனஞ்
    செய்தருளி வாட்புலி யெனும் பெரிய கோட்புலி
    சிறப்புலிக் கருளுநாதன்
    வெம்புலி யுரித்தன னெனப்புலவி தீரும்வண
    மெய்ப்புலி நகைத்துரைக்கின்
    வெற்றிகொள நாமுமொரு வண்புலி யுரித்துமென
    வேண்டிவரு கென்றெனளெனக்
    கம்புலி யிருத்தியோ தாழாது வருதியேற்
    கவுரியருள் பெற்றுய்யலாம்
    கங்கை யொடு பழகுதிங் கட்புலியே னாவெனைக்
    காயினென் செய்வதென்னி
    லம்புலி யெனச் சொலித் தப்புவிப் பேமுண்மை
    யம்புலீ யாடவாவே
    அண்ணா மலைக்கினிய யுண்ணா முலைக்கனியோ
    டம்புலீ யாடவாவே.

    (உபாயம்- தானம், பேதம் )
    (மெய்ப்புலி- உடலினைப்புல்லி, தழுவி; கம்புலி- சிவபிரான் தலையை இறுகப்பற்றி)
    (திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- அம்புலிப்பருவம்)

    17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த அழகிய பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர் சோணாசல பாரதியார் என்பவராவார். இவர் இன்னும் கார்த்திகைத்தீப வெண்பா, சோணாசலவெண்பா ஆகிய பலநூல்களையும் படைத்துள்ளார். இப்பிள்ளைத்தமிழ்ப்பாடல்கள் பலவிதமான அணிகளையும் கவிதைநயங்களையும் கொண்டு திகழ்கின்றன. இப்பாடலிலும் இப்பிள்ளைத்தமிழ் நூலில் காணும் இன்னும் பலபாடல்களிலும் ‘சொல்பின்வருநிலையணி’ மிக அழகாகக் கையாளப்பட்டுள்ளது. புலி எனும் சொல் பலபொருள்களைக்கொண்டு (புலி- வேங்கை; வாட்புலி, கோட்புலி, புல்லி, தழுவி, திங்கட்புலி, அம்புலி) அமைந்து இனிய சந்தநயத்துடன் பயில்வோருக்குக் கவிதையின்பம் தருகின்றன.

    ********

    அம்புலி வரவில்லை! சேடியரும் சளைக்காமல் பலகதைகளையும் கூறி அவனை வரக்கூவுகின்றனர்.

    செவிலித்தாய் கூறுகிறாள், “அம்புலியே! இந்த மான்போலும் பெண்ணரசியின் கருணையினால் பிரமனும் பாவமொழிந்து உய்ந்தான். உனது பாவத்தையும் இவள் போக்கியருளுவள்; இவளுடன் விளையாட விரைவில் வந்துவிடு.”

    “அந்தக் கதையைக் கூறக்கா,” என மற்ற பெண்கள் துளைத்தெடுக்க, அதனையும் நயம்பட விரித்துரைக்கிறாள் அவள்!

    “திருமகளும் திருமாலும் கூடி ஈன்றெடுத்த மகன் தாமரையிலமரும் பிரமன்; அவன் படைப்புக்கடவுள். அவன் திலோத்தமை எனும் அழகுமிகுந்த பெண்ணைப்படைத்து ஈன்றான். அவளுடைய பேரழகினைக்கண்டு தகப்பனான அவனுக்கே விலங்குபோல அவளிடம் இச்சைபிறந்தது. மானுருக்கொண்டு அவளைத் துரத்தினான்.”

    “ஐயோ! பின் என்னவாயிற்று?” கதை கேட்கும் ஆவலில் இப்பெண்கள் நிலவிடம் இடும் சண்டை சிறிதுநேரம் தடைபட்டு நிற்கிறது!

    “பின் என்ன? எங்கெல்லாமோ ஓடிய திலோத்தமை இம்மலையினை அடைந்து அருணைப்பெருமானைத் துணைசெய்யக் கூவியழைத்தாள். அப்போது அவருடன் இந்தப் பெண்மானான பெருமையுடைய உண்ணாமுலையம்மைதான் வந்தாள். திலோத்தமையை உய்வித்தாள்; அம்மையின் கருணையினால் பிரமனும் தான்பெற்ற பெண்ணை விழைந்த கொடும்பாவம் நீங்கப்பெற்றான். பிழையினை மன்னித்துக் கொடும்பாவத்தினையும் போக்குதல் இவள் இயல்பாகும். ஆகவேதான் அம்புலியினை இவள்பால் வந்து சரணடையக் கூப்பிடுகிறேன்,” என்கிறாள்.

    “அம்புலி செய்த பிழை யாதோ? பாவம் எதுவோ?” அறியாத இளம் சேடியர் செவிலியன்னையை வினவ, அவள் தொடர்ந்து கூறுகிறாள்.

    “இந்தச் சந்திரன் தனது குருவான பிருஹஸ்பதியின் பத்தினியையே விரும்பியவன்; அதுவே அவன் செய்த பெரும்பிழை! ஆயினும் நம் உண்ணாமுலையாளை அடைந்தால் அவனுக்கும் இவள் அருளமாட்டாளா என்ன?”

    “ஆம், அருளுவளே, இந்தச் சந்திரனின் குலத்தில் தோன்றிய ஒரு பாண்டியமன்னன்- வச்சிராங்கத பாண்டியன் என்பவன்- ஒரு குதிரைமீதேறி இவ்வருணாசலமலையின்மீது வேட்டைக்கு வந்தாராம்; பலவிலங்குகளைக் கொன்றுபின் ஒரு புனுகுப்பூனையைத் துரத்தினாராம். புனுகுப்பூனையும் அதனைத் துரத்தியவண்ணம் குதிரைமீது மன்னனுமாக மலையை வலம் வந்தனராம். பயத்தில் பூனை தனது உடலைவிட்டுத் தேவ உருவம் பெற்றதாம். குதிரையும் களைத்துவிழுந்து தேவ உருவம் பெற்றதாம். இருவரும் தேவர்கள் தொழ அங்குவந்த இந்திரவிமானத்திலேறினராம். ‘ஒரு சாபத்தால் இவ்வாறு விலங்குகளாக இருந்தோம். இவ்வருணையைக் கால்களால் வலம்வந்த புண்ணியத்தால் மீளவும் தேவரானோம் என பாண்டிய மன்னனிடம் ‘கால்களால் கிரிவலம் வருதலின் உயர்வை’க் கூறி உணர்த்தினர் என என் பாட்டியார் கூறுவார்களக்கா! ” என்றாள் ஒருபெண்.

    “நிச்சயமாக! தேவர்களும் இத்தலத்தின் பெருமையை நினைந்து வணங்குகின்றனர். இவனுக்குத்தான் என்ன மதியீனம்?” என இகழ்கிறாள் தாய். “உவமானம் அற்ற எங்கள் அருமை மான்விழிக்குமரியான இந்த உண்ணாமுலை, நீ அவளடிகளை அடைந்தால் உனக்குப் பெரிதும் மகிழ்ச்சி தருவாள்; ஆகவே, விளையாட வந்துவிடுவாய் அம்புலியே,” என வேண்டுகிறாள்.

    இப்பாடலில் மான்’ எனும் சொல் விளையாட்டினைக் கண்டு ரசிக்கலாம்!

    “திருமகளெனும் மான் (திரு+மான்) கருமைநிறமுள்ள திருமாலுடன் (கரு+மான்) கூடி ஈன்றெடுத்த மகன் தான் பிரமன். அவன் தான் பெற்ற திலோத்தமை எனும் பெண்மானை, மானுருக்கொண்டு சேர ஆசைகொண்டான். ஓடோடிவந்து திருவருணையை அடைந்த அவள் ‘அருணைப்பெருமானே,’ என முறையிட, உடன் வந்தவள் இந்த மான் (உண்ணாமுலை); திலோத்தமையும் உய்ந்தாள். பிரமன் செய்த கொடும்பாவத்தினையும் அம்மை நீக்கினாள். குருவிற்கிழைத்த பாவத்தை நீ தொலைக்கவும் இவளே அருளுவாள்.

    “ஒரு குதிரையிலேறி (ஒருமான் இவர்ந்து) உனது குலத்தோன்றலான (மருமான்) பாண்டியன் இழைத்த பாவத்தினை (காலாலன்றிக் குதிரைமேல் கிரிவலம் வந்தது) போக்கி, பூனை, குதிரை ஆகியன தேவ உருபெற்று இந்திரவிமானத்திலேறிச் சென்ற மகிமை வாய்ந்த மலையிலுறையும் மான்விழியாளான இந்த உண்ணாமுலை எனும் பெண்மான் உனக்குத்தரும் மகிழ்ச்சி (தருமான்) பெரிதாகையால் அவளோடு விளையாடவா!” என அழைக்கின்றனர்.

    அம்புலி வந்தானோ என்னவோ? நமக்கு படித்து இன்புற அருமையான வித்தாரகவிதையாகக்கிடைத்த இப்பாடல்கள் உள்ளனவே!

    (சுருட்டி)

    திருமான் மகிழ்ந்துபுணர் கருமா னயந்துபெறு
    செய்யமா நளினனீன்ற
    திலோத்தமைப் பெண்மானை யிச்சையான் மானுருச்
    சேருபுது ரத்தவருணைப்
    பெருமா னெனாவந்த வந்தமானிந்தமான்
    பெம்மா னளிக்கவுய்ந்தாள்
    பிரமனும் பவநீங்கி யெத்தினன் குரவற்
    பிழைத்தபவ நீயுமகல்வா
    யொருமா னிவர்ந்துனது மருமா னிழைத்தபவ
    மோவியிந் திரவிமான
    மூர்த்தும்ப ருற்றவித் தலமகிமை யோர்ந்தடையி
    னுவமான மற்றவெங்க
    ளருமான் விழிக்குமரி தருமான் மகிழ்ச்சிபெரி
    தம்புலீ யாடவாவே
    அண்ணா மலைக்கினிய வுண்ணா முலைக்கனியொ
    டம்புலீ யாடவாவே.

    (உபாயம்- தானம்)
    (திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- அம்புலிப்பருவம்)

    (இப்பாடலில் பொதிந்துள்ள சில அழகிய தொன்மங்களை அருணைப்புராணத்திலிருந்து விளக்கியளித்த முனைவர் ஐயா திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்)

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-9

    மீனாட்சி பாலகணேஷ்

    செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே!

    ஒரு சிறுமியர் கூட்டம். மண்ணால் சிறுவீடுகட்டி- சிற்றிலிழைத்து- விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் இச்சிறு பெண்கள். பாடுபட்டுச் சுவர்களை மூன்றுபக்கமும் நிறுத்தியாயிற்று. சிறு கிளைகளை ஒடித்துவந்து கூரையாகக் குறுக்காக இட்டு அதன்மீது இலைதழைகளைப்பரப்பி, வீட்டின் கூரையையும் எழுப்பியாயிற்று. மூன்று கற்களை அடுக்கி செங்கமலம் எனும் சிறுமி சிவந்த மலர்களை அள்ளிவந்து அவ்வடுப்பிலிட்டு பற்றவைத்தும் விட்டாள். வயதில் சற்றே பெரியவளான மங்கை அதன்மீது ஒருசிறு மண்சட்டியை ஏற்றி அதில் நிறைய மணலினையும் இட்டு சோறுசமைப்பதாகப் பாவனை செய்கிறாள்.

    “ஆஹா, வெண்பொங்கலா அக்கா?” என மோப்பம் பிடிக்கின்றனர் மற்ற சிறுமிகள். பசி வயிற்றை உண்மையாகவே கிள்ளுகின்றது. இப்போது இவர்களுக்கு வேண்டியது எல்லாம் சிறுவர்கள் விரும்பும் விதம்விதமான -உண்மையான- தின்பண்டங்கள்தாம்.

    என்ன செய்யலாம்? உடனே சிவகாமி, “அதோ பாருங்களடி! நமது நண்பன் கணேசன் தொலைவில் தொந்தியசைய வருகிறான் பாருங்கள்,” என உற்சாகமாகக் கைகளைத் தட்டியவண்ணம் குதூகலிக்கிறாள். எல்லாரும் அத்திசையையே ஆவலாகப் பார்க்கின்றனர்.

    ec1cf0fc-7336-4147-8835-4f978939a98d
    கணேசனேதான்! மெல்ல ஆடியசைந்து வருகின்றான்; இடதுபக்கம் இடுக்கிக்கொண்டிருக்கும் பாத்திரம் நிறையத் தின்பண்டங்கள்; வலது கையில் பாதி தின்றதொரு பணியாரம். அதனையும் அவசரஅவசரமாகத் தின்றுகொண்டேவருகிறான்! நண்பர்களை வந்தடையுமுன் முடிந்தமட்டும் தன்னிடமுள்ள பணியாரங்களைத் தின்றுவிடவேண்டும் என்ற பேராசை. சிறிது மிகுந்தால், ‘போனால் போகட்டும்,’ என அவர்களுக்குக் கொடுத்துவிடலாம் என்பது அவன் எண்ணம்போலும்!

    ஒருவழியாக அவன் பக்கத்தில் வந்து நிற்கிறான். சிறுமிகள் அனைவரும் ஓடோடிச் சென்று ஆவலுடன் அவனைச் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பார்க்கப் பார்க்க அவன் பணியாரங்களை வாயிலிட்டு மென்று சுவைக்கிறானே தவிரப் பகிர்ந்துகொள்வதாகக் காணோம்! வாய்த்துடுக்கு மிக்கவளான மங்கை அவனிடம், “கணேசா! தொந்தியை ஆட்டிக்கொண்டு, மெல்ல வருகிறாயே! இன்று விளையாட்டிற்கு நீ பணியாரம் கொண்டுவருவதாகக் கூறியதை மறந்துவிட்டாயோ? நீ சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்தில் மிகுந்ததையாவது எங்களுக்குத் தருவாய் என்று நாங்கள் ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லையா உனக்கு? எங்களுக்குக்கொடுக்காமல் நீயே தின்றுவிடப்போகிறாயா?” என்று கடிந்துகொள்வதுபோலக் கேட்கிறாள்.

    கணேசனுக்கு எப்போதும் சினமே வராது. இன்று என்னவோ உண்டமயக்கம் போலும்! அவர்கள் கட்டிவைத்திருக்கும் சிறுமண்வீட்டினைத் தன் காலால் விளையாட்டாக எற்றி உதைக்கிறான்; கூரை பிய்ந்து, ஒருபக்கச்சுவரும் உடைந்துவிழுகின்றது. சிறுமிகளுக்குக் கண்களில் நீர்தளும்புகின்றது.

    “இடையூறுகள் செய்வதில் மன்னன்’ எனும் பெயரை எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதில் உனக்கு என்ன ஆசையோ கணேசா! ஏன் எங்கள் சிற்றிலைச்சிதைத்தாய்? நீ எவ்வளவு நல்லவன்? எங்களுக்கெல்லாம் பெரியவன்; எங்களிடம் மிகுந்த அன்பு கொண்டவன் அல்லவா? தயவு செய்து எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என்று அவன் கரத்தைப்பற்றிக்கொண்டு கெஞ்சுகின்றனர் அச்சிறுமிகள்.

    பெருத்த வயிறு தயங்கமெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
    பெரும்பண் ணியமு மேந்தியேம்பாற் பேணி வருநின் கரவினைக்கண்
    டருத்தி யொடுநீ யுண்டபரி கலசே டத்தை யடியேங்கட்
    களிக்க வருவாயென்றுவகை யரும்பி வழிபார்த் திருந்தேமை
    வருத்த லழகோ விக்கினஞ்செய் மன்னனெனும்பேர் பேதையரேம்
    மாட்டுத் தெரிப்ப தொருபுகழோ மடவாரூடன் மவுணரென்றும்
    திருத்துங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
    தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே
    (கலைசைப் பிள்ளைத்தமிழ்)

    பெருத்த வயிறு அசையுமாறு மெல்ல அடிவைத்து நடந்து, உள்ளங்கையில் பெரிய பணியாரத்தையும் ஏந்தி நாங்கள் சிற்றிலிழைத்து விளையாடும் இந்த எமது இருப்பிடம் தேடிவரும் உனது தந்திரமான எண்ணத்தினை – எங்களுடன் பகிர்ந்து கொள்ளாது நீயே உண்டுவிடும் உனது வஞ்சனைமிகுந்த எண்ணத்தினை (கரவினை) நாங்கள் அறிவோம். இருப்பினும் மிகுந்த ஆசையுடன் நீ உண்ட பரிகலமாகிய பாத்திரத்தில் உள்ள சேடத்தினையாவது (மிகுதியானதை) எங்களுக்கு அளிக்க வருவாய் என்று நாங்கள் நீ வரும் வழியை எதிர்பார்த்திருந்தோம். அப்படிப்பட்ட எங்களை நீ வருத்தலாகுமோ? ‘இடையூறுகள் செய்வதில் இவன் மன்னன்’ என்ற பெயரை எங்களிடத்தில் நீ பெற்றுக்கொள்வதும் உனக்குப் புகழாகுமோ? இளமையான பெண்களும் அரக்கர்களும் என்றும் உன்னைப் போற்றி வழிபடும் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவனே எமது சிற்றிலைச் சிதைக்காதே! தெளிந்த மதி கொண்டவர்களுக்குத் தேனாக விளங்கும் செல்வனே, எமது சிற்றிலைச் சிதைக்காதே!- என்பது பொருள்!

    அருமையான சிற்றிலக்கியச் சித்திரம் அல்லவோ இது? சிவஞானயோகிகள் எனும் புலவர்பெருமான் படைத்த கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் நூலிலிருந்து இப்பாடல் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆண்பால் பிள்ளைத்தமிழின் பாட்டுடைத்தலைவன் முருகப்பிரானாகவே இருப்பான். இது ஒன்றே விநாயகனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ். இன்னொருவிதத்திலும் இப்பிள்ளைத்தமிழ் வேறுபட்டு விளங்குகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப்பாடல்களைக் கொண்டமையும் பிள்ளைத்தமிழ் நூல்களுள் இது ஒவ்வொருபருவத்திற்கும் ஐந்து பாடல்களையே கொண்டுவிளங்கிடினும், சொற்சுவையும் பொருட்சுவையும் செறிந்து கருத்தினைக் கவரும்வண்ணம் அமைந்து பயில்வோர் உள்ளத்தைக் கொள்ளைகொள்கின்றது. ஆசிரியரின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டு எனப்படுகின்றது. இவர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் எனும் இன்னொரு பிள்ளைத்தமிழையும் இயற்றியுள்ளார். அதனைப் பின்பொரு நாள் காண்போம்.

    ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கே உரித்தான சிற்றிற்பருவம் (சிறுமியர் அமைத்து விளையாடும் சிற்றிலைச் சிதைத்தல்), சிறுபறைப்பருவம், சிறுதேர்ப்பருவம் ஆகியன இந்நூலில் அழகுறப்புனையப்பட்டுள்ளன. அவற்றில் சிற்றிற்பருவத்திலமைந்தது மேற்கண்ட இப்பாடல்.

    அடுத்து இன்னொரு இனிய காட்சி நம் கண்முன் விரிகின்றது.

    614b8ad7-11de-4bd1-9517-523fc90f4b67
    எப்போதும் மோனத்திலிருக்கும் எம்பிரான் சிவபெருமான் அம்மோனநிலைகலைந்து சற்றே அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கிறார். தகப்பனார் சிறிது இவ்வாறு அமர்ந்திருந்தாலும் சிறிய குழந்தைகள் உடனே உரிமையுடன் அவர்மீது ஏறி விளையாடுவார்களல்லவா? குழந்தை விநாயகனும் இதற்கு விலக்கல்லவே! ‘குறுகுறு’வென நடந்துவந்து சிவபிரான் மடிமீதேறித் தோள்களை அடைய எத்தனிக்கிறான். குழந்தையின் பூப்போன்ற மேனிஸ்பரிசம் பட்டதும் ஐயனின் திருமேனி அன்பில் குழைந்து இளகுகின்றதாம்! அழகான, நுணுக்கமான, உணர்வுபூர்வமான கற்பனை!

    ஐயனின் தோள்மீதேறி இருகால்களையும் வாகாக இருபுறமும் போட்டுக்கொண்டு குறும்புகள்செய்ய வசதியாக அமர்ந்துகொள்கிறான் விநாயகன். அவனைப் பொறுத்தவரை தன் தந்தையை அழகுசெய்வதாகக் கருதுகிறான். அவருடைய சடைமுடியும், அதிலுள்ள அணிகலன்களும், உடலின் சாம்பல்பூச்சும் அவனுக்குப் பிடித்தமானவையாக இல்லை. தன்விருப்பப்படி அவரை அலங்கரிக்கத் திட்டமிடுகிறான் குழந்தை! அவர் சடாமுடியிலணிந்துள்ள கொன்றைமலர்வேணியினைப் பிடித்திழுத்து உதறி வீசியெறிகிறான். ‘காடுடைய சுடலைப்பொடி பூசிய’ பெருமானின் உடலைக் கழுவ எத்தனிக்கிறான். வாகாக அவருடைய சடையினின்று இழிதரும் கங்கைப்புனலைத் தனது தும்பிக்கையால் பிடித்து உறிஞ்சியெடுக்கிறான். (இக்காலத்தில் வாகனங்களைக்கழுவ ரப்பர்குழாய்களால் நீர் பீய்ச்சுவதைப்போல) அவ்வாறு உறிஞ்சிய நீரை அவர்மீது பீய்ச்சியடித்து சாம்பல்பொடிபடர்ந்த அவரது திருமேனியைக் கழுவுகின்றானாம்!

    புள்ளிகள் நிரம்பிய அரவங்கள், தலையிலணிந்த மாலை, வெண்மையான எலும்புகளாலாகிய மாலை, கையில் அவர் வைத்திருக்கும் மான், இடையிலுள்ள புலித்தோல் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக ‘வெடுக்,வெடுக்’கென எடுத்தெடுத்து அவருடைய கரத்திலுள்ள தீயினில் இட்டுப்பொசுக்குகிறான். பின் தலையிலணிந்த பிறையினை நோக்கி, ‘இது முழுமையான வட்டநிலவாக இல்லையே என்ன செய்யலாம்,’ என ஒருகணம் சிந்திக்கிறான். பிரான் அணிந்திருக்கும் வலிய வளைந்த ஒரு பன்றிக்கொம்பினை எடுத்து அந்தப்பிறைநிலாவுடன் பொருத்திப்பார்க்கிறான். அட! அது அழகாகப் பொருந்தி வட்டவடிவாகக் காண்கின்றது; குழந்தையின் உள்ளம் மகிழ்கின்றது. இடையில் இந்த மானையும் வைத்தால் முழுநிலவாகுமே எனக்கருதி, மானையும் அதன் நடுவே வைத்துப் பொருத்துகிறான். பின் அந்த முழுநிலவை ஆகாயத்தில் உலவவிடுக்கின்றான்! வான்தரு எனும் தெய்வீகக் கற்பகத்தருவின் மலர்களாலும் இலைகளாலும் அதற்கு மேலும் அழகு செய்கின்றான்.

    இப்போது அவனுக்கு மகிழ்ச்சிபொங்குகிறது. “எல்லாம் பொருத்தமாக அமைந்துவிட்டது! ஒரு குறையும் இல்லை,” எனக்கைகளை அசைத்துக்கூறியபடி பெருமகிழ்ச்சிகொள்கிறான் விநாயகன் எனும் குறும்புக்குழந்தை.

    “இவ்வாறு எல்லாம் செய்து அசைத்து மகிழும் கரங்களால் சிறுபறை முழக்குவாயாக! தென்கோ இருந்தநகரின் செங்கழுநீர் (உற்பலம்) விநாயகனே! நீ சிறுபறை முழக்கி விளையாடி அருளுக,” எனத் தாயாரும் மற்றோரும் வேண்டுவதாக அமைந்த இந்த சிறுபறைப்பருவப்பாடல் தனியழகு கொண்டு விளங்குகிறது.

    வேறெந்த பிள்ளைத்தமிழிலும் காணாத கருத்தாக, குழந்தை கணேசன் தன் தகப்பனை அலங்கரிக்கும் அழகு, கவிநயமும், சொன்னயமும் மிகுந்து விளங்கும் பாடலினால் பேரழகுடன் விளங்கி நம்மைக் களிப்பிலாழ்த்துகிறது.

    குறுகுறு நடந்தெய்தி எம்பிரான் திருமேனி
    குழைய மேலேறி வேணிக்
    கொத்தினைக் கோத்தலைத்து உதறி வான்
    குளிர்புனல் புழைக்கை எற்றி
    பொறியரவு தலைமாலை வெள்ளென்பு கைம்மாப்
    புலிச்சரும முதலணி எலாம்
    பொள்ளென எடுத்தெடுத்து அங்கை அனலிற் பெய்து
    போக்கி இளமதியை வன்றி
    எறுழுலவை ஒன்றப் பொருத்தித் திருக்கைமான்
    இடைவைத்து முற்று மதிசெய்
    திருவிசும்பு உய்த்துவான் தருத்தரும் பேரணி கொடு
    எங்கணும் அலங்க ரித்து
    சிறுமை இலை இனியென அசைக்கும் கரம்கொண்டு
    சிறுபறை முழக்கி அருளே
    தென்கோ விருந்த நகருற்பல விநாயகன்
    சிறுபறை முழக்கி அருளே
    (கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்- சிவஞான முனிகள்)

    இந்த விநாயகக் குட்டனை வாரியணைத்து உச்சிமுகர நமக்குமே உள்ளம் ஆவலில் துடிக்கின்றதல்லவா?

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-8

    -மீனாட்சி பாலகணேஷ்

    இமவான் தடமார்பில் தவழும் குழந்தை


    கண்முன் விரியும் ஒரு அழகான சொற்சித்திரம்

    இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவனுக்கு ஐந்து கரங்கள். இன்னொருவனுக்கு ஆறுமுகங்கள். இருவரும் அண்ணன் தம்பிகள். இன்னும் புரியவில்லையா? அண்ணன் ஐந்து கரத்து ஆனைமுகத்தோனான விநாயகன். தம்பி ஆறுமுகத்துப் பன்னிருகை வேலவன் எனப்படும் முருகன்.

    விநாயகனின் யானைமுகத்தில் சிறு தந்தம்- அது கீற்றுப்பிறைநிலா போல அழகாக இருக்கிறது. அதனைத் தடவியபடி அவன் தன்னுடன் விளையாடும் இளையவனான முருகனைப் பார்த்துக் கேட்கிறான்:

    “வேலா, உனக்கு அழகான ஆறுமுகங்கள் உள்ளனவே, எதற்காகவடா தம்பீ?”

    கொலைபுரியும் தொழிலைக் கொண்ட ஒளிவீசும் நீண்டவேலைக் கையில் ஏந்திக் கொண்டு குறிபார்த்து, மரங்களையும், கிளைகளையும், காய்ந்த இலைகளையும் இலக்காக்கி எய்து விளையாடிக் கொண்டிருக்கிறான் குமரன். விநாயகன் கேட்டதுதான் தாமதம்; வீச ஏந்திய வேலினைத் தாழ்த்திப் பிடித்தவன், இடுப்பில் கைவைத்துக்கொண்டு அண்ணனைப் பார்த்து ‘இடியிடி’யெனச் சிரித்தான். பின்பு, “அண்ணா, உனக்கு இதுகூடத் தெரியாதா? நம் தகப்பனாருடைய ஆறு முகங்களிலிருந்தும்* உண்டான பொறிகளிலிருந்து நான் பிறந்தபோது ஆறு குழந்தைகளாக வடிவம் கொண்டிருந்தேன் அல்லவா? இது உனக்குத் தெரிந்ததுதானே ஐங்கரா? ஆறு கார்த்திகைப்பெண்கள் என்னைச் சீராட்டினார்கள் அல்லவா? நம் தாயாரான பார்வதி அன்னை என்னைக் காண வந்தார். அவருடைய எல்லையற்ற அன்பிலும் பாசத்திலும் எனது ஆறுவடிவங்களையும் ஒருசேர அணைத்துக் கொண்டு கொஞ்சினாள் நம் அன்னை. ஆகவே நான் ஓருடலும் ஆறு தலைகளும் பன்னிரண்டு கைகளும் கொண்டவனானேன்.

    “இதுவும் நன்றாக உள்ளது. ஏன் தெரியுமா? அப்பனும் அன்னையும் என்னைக் கொஞ்சும்போது எனது இத்தனை கன்னங்களிலும் முத்தம் கொடுத்து விளையாடுவார்களல்லவா? அதற்காகத்தான் எனக்கு இத்தனை முகங்கள்,” எனக் கைகளை விரித்துக்காட்டி மழலையில் மொழிந்தான் குமரன். அண்ணன் கணேசன் புன்னகை புரிந்து தலையை ஆட்டித் தம்பியின் வியாக்கியானத்தை ரசித்தான்.

    அருகிலேயே அமர்ந்து சிவபிரானும் அன்னையான மலைமகளும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேருமலையை வில்லாக வளைத்த கணவராகிய பிரானோடு சேர்ந்து இதனைச் செவியுற்றாள் சைலக்குயில் (சயிலக்குயில்- மலையில் வசிக்கும் குயிலான பார்வதி) எனப்படும் அன்னை! குழந்தையின் மழலைகேட்டு இருவரின் ஆனந்தத்திற்கும் அளவேயில்லை! கணவரை நோக்கிப் புன்னகை சிந்தியவண்ணம் அழகாக மறுமொழி கூறிய தனது இளையமகனான குமரனை வாரியணைத்துக் கொண்டாள் பார்வதி அன்னை. இவளே காந்திமதி என்ற பெயரில் சாலிப்பதி எனும் திருநெல்வேலியில் எழுந்தருளியுள்ளாள்.

    அவன் தனது அண்ணனிடம் கூறியபடியே, “என் கண்ணே! எத்தனை அழகாகப் பேசினாய். இப்போதுதான் நானே உனது ஆறு தலைகளுக்கான விளக்கத்தினைப் புரிந்துகொண்டேன்,” என்றுகூறித் தனது அழகிய தலையைக் குனிந்து மடியில் அமர்ந்திருக்கும் குமரனை அவனது கொழுவிய கன்னங்களில் மாறிமாறி முத்தமிடுகிறாள்.

    இத்தகைய செயலைப்புரியும் காந்திமதித் தாயை ‘வருக வருகவே!’ எனக் குழந்தையாக்கித் தாய் அழைப்பதாக வித்துவான் சொக்கநாதப்பிள்ளை அவர்கள் திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் வருகைப் பருவப் பாடலாக இதனைப் பாடியுள்ளார்.

    (*சிவபிரானுக்கு ஐந்து முகங்கள்- சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம்; இவற்றுடன் பரமஞானியரின் உள்நோக்குக்கு மட்டுமே புலப்படும் உள்முகமாக உள்ள அதோமுகம் என ஆறாவதுமுகம்).

    கண்முன் இலக்கியச்சித்திரம் விரிந்ததா? பாடலையும் காண்போம்:

    கலையை வளைத்த பிறைக்கோட்டைங் கரத்தோன்
    துணைவன் தனைநோக்கிக்
    கவின்தோய் முகமா றுன்னுருவிற்
    காணு நிமித்தங் கழறுகென
    கொலையை வளைத்த நெடுங்கதிர்வேற் குகவேள்
    நமையீன் றவர்உவகை
    கொழிப்ப வொருமித் தென்னைமுத்தங்
    கொண்டு விளையா டுதற்கெனலும்
    மலையை வளைத்த கணவரொடு மகிழ்கூர்ந்
    திளைய மதலைதனை
    வாரி யெடுத்து மடியில்வைத்திவ்
    வாறின்றுணர்ந்தே மெனப்பேசித்
    தலையை வளைத்து முத்தமிடுஞ் சயிலக்
    குயிலே வருகவே!
    சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே
    வருக வருகவே!
    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் -வருகைப் பருவம்)

    வேறொரு இனியகாட்சியைக் காணச்செல்லலாமா?

    பிடிவாதம் செய்யும் ஒரு சிறு பெண்குழந்தை. அதனிடம் பொய்யாகச் சினம்கொண்டுபேசும் தாய்! சுவாரசியமாக இல்லை? என்னவென்றுதான் பார்ப்போமே வாருங்கள்.

    “வா கண்ணே! முகம்கழுவி, உன்னைச்சிங்காரிக்கிறேன்,” என ஆசையாகத் தாய் அழைக்கிறாள். குழந்தைக்கோ விளையாட்டு மும்முரம். சிறுசெப்புகளில் மண்சோறு சமைக்கிறாள். இலைகளைப் பறித்துப் பொரியல்செய்கிறாள். “அம்மா வா, நான் சமைத்த சோற்றைச்சாப்பிடு,” என்று மழலையில் கூறுகிறாள்.

    கையில் பட்டுப்பாவாடை, கழுத்திற்கான அணிகலன்கள், மை, திலகம் முதலானவற்றை ஏந்தியபடி தாயின் அருகில் பணிப்பெண் நிற்கிறாள். குழந்தையின் புழுதிபடிந்த உடைகளையும் கைகால்களையும் கண்ட தாய் சலித்துக்கொள்கிறாள்.
    “நான் அழைக்கஅழைக்க நீ வராமலே இருந்தால், நான் இங்கிருந்து போய்விடுவேன். உனக்கு முகம், கைகால் கழுவி, உனது அழகான வேல்போலும் விழிகளுக்கு மைதீட்டமாட்டேன். பிறைமதிபோன்ற நெற்றியில் அழகியதிலகத்தையும் எழுதமாட்டேன். அழகான மணிகளால் செய்யப்பட்ட இந்த ஆபரணத்தை உனக்கு அணிவிக்கமாட்டேன்.”

    குழந்தைக்கு அலங்காரம் செய்துகொள்ள ஆசை; பெண்குழந்தையல்லவா? அலங்காரப்பிரியை அவள்! தனது விளையாட்டை விட்டுவிட்டுவர மனமில்லாமல் தாயை ஏக்கத்தோடு பார்க்கிறாள். இதுதான் வாய்ப்பெனத் தாய் தனது அச்சுறுத்தல்களைத் தொடர்கிறாள்.

    “உன்னிடம் அன்பாகப் பேசவும் மாட்டேன் குழந்தாய்! புழுதிபடிந்த உன் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் போ! அலங்காரம் செய்தபின் எனது முலைப்பாலையும் ஊட்டமாட்டேன். ஆசையாக எனது இடுப்பில் உன்னைத் தூக்கிவைத்துக்கொண்டு தேரோடும் வீதியில் சென்று வேடிக்கை காட்டுவேனல்லவா? அதையும் செய்யமாட்டேனடி பெண்ணே!”

    குழந்தைக்குத் தாளவில்லை! இவையனைத்தும் அன்னையிடம் அவளுக்குண்டான தினசரி சலுகைகள். எப்படி அவற்றை இழக்கமுடியும்? குழப்பத்துடன் அன்னையைப் பார்க்கிறாள்.

    அன்னையோ விடுவதாயில்லை! விரலால் எச்சரித்தபடி, “உனது சிவந்த கனிவாயில் முத்தமிட்டு உன்னைக் கொஞ்சமாட்டேனடி பார்த்துக்கொள்! அழகான மணிகள் குலுங்கும் தொட்டிலில் படுக்கவைத்து, உன்னை உறங்கவைக்கப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் பாடமாட்டேன் தெரியுமா?” என்கிறாள்.

    இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது செப்புகளை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் சேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள்.

    தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள். பார்க்கும் நம் முகங்களில் புன்னகை அரும்புகிறது இல்லையா?

    இவள் இமவானின் அகன்றமார்பில் (விசாலமான இமயமலையில்) தவழும் குழந்தையல்லவோ? இவளையா கோபிப்பது?

    ‘வருக வருக என் குழந்தையே! சாலிப்பதி எனப்படும் நெல்லையில் வாழ்கின்ற காந்திமதித்தாயே, விரைந்து வருகவே!’ என நாமும் பாடியவாறே குழந்தையை எண்ணத்தில் அணைத்துக் கொள்கிறோம். பாடல் இதோ:

    வாரா திருந்தா லினிநானுன் வடிவேல்
    விழிக்கு மையெழுதேன்
    மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால்
    இழைத்த பணிபுனையேன்
    பேரா தரத்தி னொடுபழக்கம் பேசேன்
    சிறிதும் முகம்பாரேன்
    பிறங்கு முலைப்பா லினிதூட்டேன் பிரிய
    முடனொக் கலையில் வைத்துத்
    தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய
    கனிவாய் முத்தமிடேன்
    திகழு மணித்தொட் டிலிலேற்றித் திருக்கண்
    வளரச் சீராட்டேன்
    தாரார் இமவான் தடமார்பிற் றவழுங்
    குழந்தாய் வருகவே
    சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே
    வருக வருகவே.
    பேராதரம்- மிகுந்த அன்பு; ஒக்கலை- இடை.
    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்

    வித்துவான் சொக்கநாதப்பிள்ளை)
    அன்னைத் தெய்வத்தைக் குழந்தையாக்கி இவ்வாறு வருந்தியும், வேண்டியும், உரிமையுடன் கோபித்தும், பின் கொஞ்சியும் அழைத்தால் அவள் வந்து அருள்செய்யாமல் இருப்பாளா?

    *****

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-7

    -மீனாட்சி பாலகணேஷ்

    சீர்கொண்ட நக்கீரனைச் சிறை விடுத்த குமரன்!

    497aca37-7444-48b4-93a2-226ca492d518

    நக்கீரர் ஒரு பெரும் புலவர் என நாமறிவோம். திருமுருகாற்றுப்படை இவரால் இயற்றப்பட்டது. அவரை முருக பக்தராகத்தான் கண்டுள்ளோம். ஆனாலும் அவர் ஆரம்பத்தில் சிவபக்தராகவே இருந்து பின் முருகனையும் வழிபடலானார் என்பதற்கு ஒரு அழகான கதை உள்ளது. இதை ஒரு கவின்மிகு இலக்கியச்சித்திரமாகப் படைக்கிறார் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியரான பகழிக்கூத்தர்.

    நக்கீரர் சிவபூசைக்குச் செல்லும் வழியில் நாள்தோறும் திருப்பரங்குன்றத்திலுள்ள சரவணப்பொய்கையில் நீராடிவிட்டுப் பின் மதுரைசென்று ஆலவாயண்ணலை வழிபட்டுச் செல்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தார்.


    dbcc85e6-6d74-4eae-be8d-f444547334c2

    ஒருநாள் காலை வழக்கம்போல நக்கீரர் சரவணப்பொய்கையில் சென்று நீராடினார். கரையில் இருந்த ஒரு அரசமரத்தடியே அமர்ந்தார். ‘சிவாயநம,’ எனும் திரு ஐந்தெழுத்தைச் சிந்தையிலே எண்ணி மோனநிலையிலிருந்தார்.

    அப்போது அரசமரத்திலிருந்து ஓர் இலை கீழே இருந்த பொய்கையில் விழுந்தது. விழுந்த இலை சரியாக விழலாகாதா? தெய்வ சித்தத்தினால் அது பாதி நீரிலும் பாதி இலை நிலத்திலுமாக விழுந்தது! ஆகா! என்ன ஆச்சரியம்! நீரில் விழுந்த ஒரு பாதிப்பகுதி பாதி மீனாக மாறிவிட்டது. நிலத்தில் விழுந்த மறு பாதிப்பகுதி ஒரு பறவையாகி விட்டது. ஆனால் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. ஒன்றைவிட்டு ஒன்று பிரியவேண்டி, அவை ஒன்றினை ஒன்று பற்றி இழுக்கலாயின.

    கண்விழித்த புலவர் நக்கீரர் இந்தத் துடிப்பைக் கண்ணுற்றார். அவர் மனம் பதைத்தது. சிவபூசனையை மறந்துவிட்டு இதனைப்பற்றி என்ன செய்யலாம் எனச் சிந்தித்தார். உடனே அவ்விடத்தில் ஒரு பூதகணம் தோன்றி, “நீ சிவபூசையின் போது பிறழ்ந்தாய்,” என அவரை நையப் புடைத்துக் கொண்டுபோய் மலைக்குகையில் தான் ஏற்கெனவே சிறைவைத்திருந்த தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பூசைவழுவியர்களுடன் தான் உண்பதற்காகச் சிறை வைத்துவிட்டது.

    பூதத்தின் எண்ணத்தினை அறிந்துகொண்ட நக்கீரர் தம் குற்றத்தினை உணர்ந்தவராகி முருகப்பெருமானை நோக்கி திருமுருகாற்றுப்படை என்னும் நூலினை இயற்றிப்பாடி, அவனருளை வேண்டினார். அவர் தமிழில் மனம் மகிழ்ந்த முருகன் நேரில் தோன்றி, பூதத்தினைத் துரத்தி, நக்கீரரையும், மற்றவர்களையும் விடுதலை செய்தான் என ஒரு வரலாறு உண்டு.

    1136c059-67e1-4b3f-8d1c-81582c04ba34

    இந்த வரலாற்றினைச் செங்கீரைப்பருவப் பாடலொன்றில் உரைக்கிறார் பகழிக்கூத்தர்.

    “இவ்வாறாகச் சீர்கொண்ட நக்கீரனை விடுதலை செய்தவனே! செங்கீரையாடியருளுக! அலைகளை வீசியெறியும் திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூரில் விரும்பிக் குடியிருக்கும் வடிவேலனே, செங்கீரையாடியருளுக,” எனத் தாய் வேண்டுவது போலப் பாடியுள்ளார்.

    ஏர்கொண்ட பொய்கைதனில் நிற்குமொரு பேரரசின்
    இலைகீழ் விழின்ப றவையாம்
    இதுநிற்க நீர்விழின் கயலாமி தன்றியோர்
    இலையங்கு மிங்கு மாகப்
    பார்கொண்ட பாதியும் பறவைதா னாகஅப்
    பாதியும் சேல தாகப்
    பார்கொண்டி ழுக்கஅது நீர்கொண் டிழுக்கவிப்
    படிகண்ட ததிச யமென
    நீர்கொண்ட வாவிதனில் நிற்குமொரு பேழ்வாய்
    நெடும்பூதம் அதுகொண் டுபோய்
    நீள்வரை எடுத்ததன் கீழ்வைக்கும் அதுகண்டு
    நீதிநூல் மங்கா மலே
    சீர்கொண்ட நக்கீர னைச்சிறை விடுத்தவா
    செங்கீரை யாடி அருளே
    திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலனே
    செங்கீரை யாடி அருளே.
    (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்-செங்கீரைப்பருவம்- பகழிக்கூத்தர்)

    இப்பாடலில் பொதிந்துள்ள சில கருத்துக்களை நாம் நோக்க வேண்டும். நக்கீரர் போன்ற சிறந்த அடியார் அத்துணை எளிதாகப் பூசையினின்றும் வழுவிட இயலாது. ஆகவே, அவர் வழுவினார் என உண்மையாகவே நாம் எண்ணுவதற்கு, உலகில் அபூர்வமாக நிகழும் ஒரு அதிசயமான நிகழ்வை- நீரில் விழுந்த இலை பாதி மீன், பாதி பறவையானது- ஆதாரப்படுத்தி, அதைக் கண்டுதான் நக்கீரர் தமது மோனம் கலைந்தார் என்கிறார் கதை புனைந்தவர். நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடியதற்குக் காரணமாக இக்கதை கூறப்படுகிறது. இதற்கு ஆதாரம் ஒன்றுமில்லை எனப் பெரியோர் கருதுகின்றனர். இருப்பினும் பகழிக் கூத்தர் ஒரு இலக்கியநயத்திற்காக இக்கருத்தினை எடுத்தாண்டுள்ளார்.

    முருகப்பெருமான் என்றாலே அவனுடைய தமிழ்க்காதலும், அருள் நிறைந்த வீரமும், வள்ளியிடம் அவன் புரிந்த விளையாட்டுகளும் தான் எல்லோர் எண்ணங்களிலும் நின்று மகிழ்விக்கும். அதற்கொப்பவே இப்பாடலும் அமைந்துள்ளது.
    குழந்தையைப் பற்றிய தமிழ் நூல் என்றாலும், தெய்வக் குழந்தைகளைப் பற்றி அவர்களின் காதல், வீரம், கொடை, அருள் ஆகிய எல்லாத் தன்மைகளையும் விவரித்து, புலவர்கள் தமது கவிதை நயத்தை வெளிப்படுத்த, எல்லாவகைச் சிற்றிலக்கியங்களையும் போலவே இதனையும் ஒரு பெருவாய்ப்பாகக் கருதினர் என்றால் மிகையாகாது.

    அவ்விதத்தில், அடுத்ததொரு பாடலை நாம் நோக்கினால் அது, முருகன் போர்க்களத்தில் வீரம்காட்டி அசுரர்களை அழித்த திறத்தை நமது உள்ளம் நடுநடுங்குமாறு வருணிக்கும்! அக்காட்சியைப் பகழிக்கூத்தனார் இலக்கிய ஓவியமாக வரைந்ததைக் காணலாமே!
    *****
    வெம்மையும் கடுமையும் நிறைந்த போர்க்களம். முருகனின் படைகளுக்கும் சூரபத்மனின் அரக்கப்படைகளுக்கும் கடும்போர் நடக்கின்றது.

    முருகனின் வேல்- அது பெருமை நிறைந்த கதிரவனின் பொன்னிறத்தைக் கொண்டு கூர்மையான தகடுபோன்ற இலைவடிவத்தையும் கொண்டு ‘தகதக’வென மின்னியவண்ணம் உள்ளது. அது தன்னிருப்பிடத்தை (முருகனின் திருக்கரம் தன்னை) விட்டு வெளிப்போந்து பகைவர்களை அழிக்கிறது. அதுகண்டு மகிழ்ந்து ‘இடாகினிகள்’ எனப்படுபவரான துர்க்கையின் ஏவல்பெண்கள் தமது சிவந்த வாயினை ஆச்சரியத்தினால் பிளந்தபடி களிப்பில் குதித்தாடுகின்றனராம்;

    தலையையிழந்து (வெட்டப்பட்டு) குறையுற்ற உடல்கள் (பிணங்கள்) விரோதமாகக் குதிக்கின்றனவாம்; முதிய எருமைக்கடாவின்மீது அமர்ந்துவரும் ‘மறலி’ என அறியப்படும் இயமன் இந்த அழிக்கும் தொழிலுக்கு உடந்தை. அவனோ, இடையறாது ஓய்வுஒழிவின்றித் தனது தொழிலைச் செய்யவேண்டியிருப்பதனால், தனது கைகள் சலித்து, முருகனிடம் மன்றாடி வேண்டி நிற்கின்றானாம்! உடல்முழுமையும் கண்களைக் கொண்ட தலைவனான இந்திரன் (உடல்விழிக் குரிசல்) தேவசேனாபதியாகிய முருகனை- தனது மருமகனுமாகிய அத்திருமகனை, திருமால் மருகனை- கொண்டாடி நிற்கின்றான்.

    நெடிய ஆகாயத்தின் உச்சியில் சிறிதுகூட இடைவெளியின்றிப் பருந்துகள் பறந்து (தமக்குப் பெரும் விருந்து கிட்டியதால்) விளையாடி மகிழ்கின்றன. இறந்து கிடக்கும் பகையரசர்களின் தலையிலுள்ள அழகிய பொற்கிரீடங்களைப் பறித்தெடுத்துப் பேய்கள் பந்தாடி மகிழ்கின்றன.

    மலைக்காடுகளிலும் பாலை நிலங்களிலும் உறையும் தெய்வமான காளியின் (பாலைக்கிழத்தியின்) மூன்று கிளைகளாகப் பிரிந்த திரிசூலம் பகைவர்களின் பெருக்கெடுக்கும் குருதிவெள்ளமாகிய சேற்றில் ஆடுகின்றதாம்.
    இங்ஙனம் பகைவரை வென்று வாகைசூடிய குமரனின் திருமுகத்தில் சிறு புன்னகை விளையாடுகின்றதாம்.

    போதுமா போர்க்களக்காட்சிகள்?உள்ளம் அச்சத்திலும் அருவருப்பிலும் துடிக்க, இதனைப்பயிலும் நாம், குழந்தை முருகனின் சிறுமுறுவலால் சிறிது ஆசுவாசம் அடைகிறோம். இந்தச் சிறுகுழந்தைஎவ்வாறு இந்தச் சாகசங்களையெல்லாம் செய்தான் எனத்தாய் தவிப்பதுபோலச் சிலகணம் மயங்குகிறோம். பின் தெளிந்து கவிதையின் நயத்தை ரசிக்கிறோம்.

    அன்னையிடம் வேல்வாங்கி, அவள் ஆசிகளையும் திருவருளையும் உடன்வாங்கிச் சென்று, சூரபத்மனை வென்று, தேவர்களைச் சிறைவிடுத்த முருகப்பெருமானின் வீரதீர பராக்கிரமத்தினை ஒரேயொருபாடலில் எத்துணை அழகாகக் காட்டிப் போர்க்கள நிகழ்வுகளையும் நேரில் காண்பது போலவே செய்துவிட்டார் புலவர் பெருமகனார்.

    ‘அத்தகைய வீரச் செயல்களைச் செய்த எம் குழந்தை குமரா! நீ செங்கீரை ஆடி அருளுகவே!
    ‘அழகான சிவந்த கொண்டையை உடைய வெண்ணிறச் சேவலைத் தனது கொடியில் (பதாகையில்) கொண்டவனே, கையைத் தரையில் ஊன்றிச் செங்கீரை ஆடியருளுவாயாக,’ எனத் தாயன்பு மிக, பகழிக்கூத்தருடன் நாமும் பாடி மகிழ்கிறோம்.

    வீறாட வெங்கதிர்ப் புகர்முகக் கூரிலை
    மிகுத்தவே லுறை கழித்து
    வெவ்வாய் பிளந்துசிறு கட்பேர் இடாகினிகள்
    விளையாட வெங்க வந்த
    மாறாட முதுபகட் டுயர்பிடர்க் கரியநிற
    மறலிஇரு கைச லித்து
    மன்றாட உடல்விழிக் குரிசல்கொண் டாடநெடு
    மாகமுக டிடைவெ ளியறப்
    பாறாட அம்பொற் கிரீடம் பரித்தலகை
    பந்தாட விந்தா டவிப்
    பாலைக் கிழத்திமுக் கவரிலைச் சூலம்
    பசுங்கொழுங் குருதி வெள்ளச்
    சேறாட வென்றுசிறு முறுவலா டுங்குமர
    செங்கீரை யாடி அருளே
    செந்திறக் குடுமிவெண் சேவற் பதாகையாய்
    செங்கீரை யாடி அருளே.
    (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்-செங்கீரைப்பருவம்- பகழிக்கூத்தர்)

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 6

    -மீனாட்சி பாலகணேஷ்

    தமிழின் இயல்பயில் மதுரை மரகதவல்லி!

    a9b859c1-d01d-45b1-8382-55b4feeac8d9

    மதுரை மாநகர் திமிலோகப்படுகிறது. அந்த நான்மாடக்கூடலின் அரசி தடாதகைக்குத் திருமணம் நடைபெறப் போகின்றது. மணமகன் யார் தெரியுமா? மிக மிக உயர்ந்தவன்: மூவுலகுக்கும் முதல்வன்; எவருக்குமே எளிதில் கிடைத்தற்கரிய தன்மையன். ஆயினும் அன்பினால், பக்தியால், தொண்டினால் அவனை எளிதாக அடையலாம். ஊரும் உலகமும் உற்றாரும், மற்றோரும் இதனையறிந்து ஆனந்தக் களிப்பில் திளைத்துள்ளனர்.

    ‘பிறப்பிலிப் பெருமான், விடையேறும் வள்ளல், தூவெண்மதி சூடியவன், அடியார் உள்ளங்கவர் கள்வன், அவர்கள் தேடும் மெய்ப்பொருள், தில்லைச் சிற்றம்பலத்தில் ஆனந்த நடனமாடும் அரசன், நீலகண்டன், ஐந்தெழுத்தில் உறைபவன், முதலும் முடிவுமான பரம்பொருள்,’ என்றெல்லாம் போற்றி ஏற்றப்படும் சிவபிரான் தான் அவன்.

    உடலெங்கும் சுடலைப்பொடி பூசி, அரவங்களை அணிகலன்களாகத் தரித்தும், புலி, யானைத் தோலினை ஆடையாக உடுத்தவனுமான அவனைத் திருமண வைபவத்திற்காக, மணப்பெண்ணின் அண்ணனான திருமாலும், தேவர்களின் அரசனான இந்திரனும், மற்றுமுள்ள பல முனிவர்களும் கூடி, பட்டாடை அணிவித்து, சடைமுடிக்கு வாசநறுநெய் பூசி, ஆபரணங்களை அணிவித்து, எல்லோர் உள்ளங்களையும் கவரும் வகையில் ஆணழகனாக, சொக்க வைக்கும் நாதனாக, அழகுமிகுந்த கல்யாணசுந்தரனாக மாற்றி விட்டனர். எழில்மிகு அரசிக்கேற்ற பேரரசர்!

    சுந்தரக் கடவுளை யானைமீதேற்றி, கட்டியக்காரர்கள் கட்டியங்கூற, வாழ்த்தொலிகள் விண்ணை எட்டிட, மங்கல வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக அரண்மனை மணமண்டபத்துக்கு அழைத்து வருகின்றனர்.

    மணமகனைப் பற்றி அறியாதவர்களுக்கும், அறிந்தாலும் இன்னொருமுறை கேட்டு மகிழ விரும்புபவர்களுக்கும், அவருடைய பெருமைகள், கட்டியக்காரர்களாலும் முனிபுங்கவர்களாலும் எடுத்தோம்பப்படுகின்றது!

    “திரிபுரம் அழித்த எம்பிரான், உயர்ந்த முகட்டினைக் கொண்ட மேருமலையைப் போருக்காக வில்லாக வளைத்தவர் என அறிமின்!” கட்டியக்காரன்.

    “ஆ! இவரையா நம் அரசி தடாதகை போருக்கழைத்தாள்!” என வியந்தனர் குடிமக்கள்.

    “சமணர்களுக்கு எதிரான சொற்போர் புரியத் திருஞானசம்பந்தர் எனும் சிறுவருடைய பாடல்கள் எழுதிய ஓலைச்சுவடிகள் வைகை நீரை எதிர்த்துச் செல்லுமாறு அருளியவர்!” முனிவரொருவர்.

    “ஆகா! என்னே எம்மிறைவன் கருணையுள்ளம்,” என மக்கள் வியந்தனர்.

    “அரகர சிவசிவ’ எனும் ஒலியெழுப்பி இறையை வழுத்த வல்லார்க்கு மிதமிஞ்சிய செல்வத்தினையும், தேவர்களின் கற்பகத்தருவையும் கொடுக்க வல்லவர் எம்பெருமான் காணீர்!” வேறொரு புலவர்.

    “என்னே இவர் கொடைவண்மை!” என மக்களிடையே மகிழ்ச்சி ஆரவாரம்!

    புலவர் பெருமானான குமரகுருபரர் காலம் நோக்கித் தம்மையும் ஈசன் தனது கருணையினால் ஆட்கொண்டதைப் பாடுகிறார்: “சிறியவனான எனது அற்பமொழிகளையும் ஆய்ந்தெடுத்த தமிழ்ப்புலவர்களின் அழகிய பாடல்களுக்கு சமமாகக் கொண்டு தன் தலைமேற் கொண்டவர்.”

    “ஓ! வடவரையாகிய இமயத்தினின்று வந்தாலும், தமிழின் மேல் பெருங்காதல் கொண்ட இவர் நம்மரசி தடாதகைக்கு ஏற்ற நாயகரே!” எனக் கூறிக் கொண்டனர் மக்கள்.

    “இசையிலக்கணம் அறிந்த இரு கந்தருவர்கள் பாடும் இனிய இசை திசைதொறும் பரவுமாறு அவர்களை வெண்ணிறம் பொருந்திய சங்கக் குழைகளாக மாற்றிக் காதிலணிந்தவர் இவர்,” என அடுத்த கட்டியம் கூறப்படுகின்றது.

    “ஆகா! இறைவர் இயல், இசை முதலான முத்தமிழிலும் வல்லவர் போலும்!” என மக்கள் கூறி அதிசயித்தனர்.

    ‘எங்கள் இன்னிசை எப்பொழுதும் தங்கள் திருச்செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்,’ (தற்காலத்து ‘வாக்மேன்’ அல்லது ஐ-பாட் போன்று!) என இசைவல்லுனர்களாகிய இணைபிரியாத, இரு கந்தருவர்கள் ஈசனிடம் வேண்டிக்கொண்டனராம். கம்பளன், அசுவதரன் எனும் அவர்கள் இசையின் இலக்கணம் அனைத்தும் அறிந்து இன்னிசையினை எட்டுத்திக்கிலும் பரப்பிப் பாடுபவர்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி சிவபிரான் அவர்களைத் தனது காதிலணியும் தோடுகளாக மாற்றி அணிந்துகொண்டாராம்.

    “பச்சைநிற அறுகம்புல்லுடன் வெண்மையான நிலவொளி பரந்துவிரிவதும் அழகுமிகுந்து செம்பவளக்காடு போல நெருக்கமானதுமான சடைக்கூட்டங்களை உடையவர்.” என்கிறான் கட்டியக்காரன்.

    நோக்குபவர்க்கு ஒரு அற்புதக் காட்சி கண்முன் விரிகின்றதாம்: சிவந்து உயர்ந்த சடாமுடி; அதில் ஒய்யாரமாக அமர்ந்து வெள்ளிய ஒளிபரப்பும் சந்திரன்; இன்னொரு புறம் சடையினின்று இழிதரும் கங்கை. சடையை ஒருவர் கண்டார்; நிலவை மற்றொருவர் காண கங்கையினை வேறொருவர் கண்டு வியக்கின்றனர். அவனழகில் தம்மை இழக்கின்றனர்.

    “பாண்டிய நாட்டு மக்களே! முனிவர்களே! தேவர்களே! இன்னும் கேள்மின்! எம்பெருமானாகியவர், தாமரைமலரில் அமர்ந்த பிரமனாலும் எழுத இயலாத அரிய வேதநெறியோடு கூடிய பாடல்களின் பொருளானவர்!”

    “ஆ! அந்த தேவாதிதேவனே நம்மரசிக்கு நாயகனாக வந்தானோ?!” என ஆனந்தக் களிப்பெய்தும் மக்கள் கூட்டம்.

    “ஆதலால், பெரியோர்களே! தாய்மார்களே! வணங்கத்தக்க வெள்ளியம்பலத்தில் நடனமிடும் இவரின் பரதப்பதங்களை உள்ளத்தில் பதித்துத் தொழுமின்!” என ஒரு தொண்டர் கூற, அனைவரும் வீழ்ந்து மணமகனாக வந்த எம்பெருமான் திருவடிகளைப் பணிகின்றனர்.

    ***

    dcb7add1-f0ca-407a-8aae-e398e8afbe8b

    இத்தனையும் கேட்ட தடாதகையின் தாய் காஞ்சனமாலையும் தோழியரும், தமையன் திருமாலும் அமைச்சர் முதலானோரும், உள்ளம் மகிழ்ந்து தம் அருமை மகளின் பெருமைகளை விளக்கமாக உலகத்தோர் அறியக் கூறுவது போல (மணமகனைச் சார்ந்தவர்களிடமோ?) கூறுகிறார்கள்! ‘எங்கள் பெண் இத்தகைய மணமகனுக்கு எல்லாவிதத்திலும் ஒப்பானவளே!’ எனத் தெரிவிக்கும் பெருமிதம் அவர்கள் சொற்களில் இழைந்தோடுகின்றது!

    “வாசனையூட்டப்பட்ட எண்ணெயினைத் தடவி வாரி முடித்த அழகிய நீண்ட கரிய கூந்தலைக் கொண்டவள் எங்கள் மகள்! முத்துப்போன்ற பற்கள் அவள் புன்னகை புரியும்போது நிலவொளி போன்று ஒளிரும் தெரியுமா?

    “எம் இறைவனான சிவபிரான் அவளுடைய காதலுக்கு உரித்தாகி (அதுவும் ஒரு அழகான கதை – 4-ம் பகுதியில் கண்டோம்) இன்று கைத்தலம் பற்ற வந்துற்றான்; பாரீர்! இவளுடைய கண்களாகிய அம்புகள் அவனுக்கு சரிசமமாக எதிர் நின்று போர் செய்கின்றன! -ஆம்! இமயாசலத்தில் ஈசனைக் கண்டு போர் செய்ய எதிர்த்து நின்று பின் தன் நிலையுணர்ந்து மணம் புரிந்து கொள்ளத் தயாராகி விட்டவள் அல்லவா இந்தப் பெண்?

    “குறுகிய இடை தளரும்படியான இளமை நிறைந்த தனங்களையுடையவள்; ஆம்! ஆம்! மிக்கு அழகு வாய்ந்தவள் எம் மகள். எப்படிப்பட்ட அழகு எனில், கேளுங்கள்! இவளைத் தமது தலைவியாகக் கொண்டு அவளுடைய அழகுத் திருவுருவைத் தம் மனத்தில் எழுதிப் பார்க்க அழகான வெண்மையான தாமரை மலரில் அமர்ந்த அந்த இளமங்கையான கலைவாணியும், ஆயிரவிதழ்த் தாமரையில் உறையும் மற்றொரு பெண்ணரசியான மின்னற்கொடியாள் திருமகளும் எத்துணையோ முயன்றனர்; ஆயினும் அவர்களால் அது இயலவில்லை- அவ்வாறாயின் இவளுடைய பேரழகு எத்தன்மைத்து என நீங்களே ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம் அல்லவா?” செவிலித்தாயர் கூறுகின்றனர்.

    “இவ்வாறு கலைமகளும் அலைமகளும் வழிபடும் தையலாள் இவள். மகரமீன்கள் துள்ளும் அலைகடலான திருப்பாற்கடலில் தோன்றிய தேவாமிர்தம் போன்றவள் எங்கள் பெண்ணரசி. அந்த அமுதத்தினையே சொரிவது போன்ற இனிய சொற்களைப் பேசப்பழகிய இளம்கிள்ளை இவள். பெண் அன்னம் போன்ற மடநடை பயில்பவள்; இளைய மென்மையான பிடி (பெண்யானை) போன்றவள்,” மிகுந்த வாஞ்சையுடன் கூறுகிறான் அண்ணனான திருமால்.

    “மலர்மாலைகளை எப்போதும் அணிவதால் நறுமணமிகுந்ததும் மலையை ஒத்ததுமான தோள்களில் இந்த உலகைத் தாங்கி அரசாட்சி செய்த வழுதியாகிய மலயத்துவச பாண்டியனின் கண்மணி எனத் திகழும் பெண்மணி எந்தன் மகள்,” எனக் கூறும்போது அரசி காஞ்சனமாலைக்குப் பெருமிதம் நிறைந்த உவகையில் கண்ணீரே பெருக்கெடுகின்றது!

    “அழகு விளங்குகின்ற நிறைந்த செல்வமுடையவள்- அரசு, நாடு, அழகு, கல்வி, வீரம் எதிலும் குறைந்தவள் இல்லை இவள்,” என்கின்ற அன்னையிடம் தன் பெண்ணரசி, அவளை மணம் கொள்ள வந்திருக்கும் இறைவனுக்கு எல்லா விதங்களிலும் பொருத்தமானவளே என நிரூபிக்கும் ஆவல் தளும்பி வழிவதனை நாம் உணரலாம்.

    “தேன்போல் மணமும் இனிமையும் பொருந்திய தமிழ் மொழியுடன் அவள் இயல்பாகவே பொருந்திப் பழகுகின்றாள் பாருங்கள்.” முத்தமிழும் கற்றுணர்ந்த முதல்வனுக்கு இவள் தப்பாத இணை என்று ஆவல் பொங்க அறிவிக்கிறாள் உயிர்த்தோழி!

    “அத்தகைய மதுரை மரகதவல்லியான எம்மகளை உம் கையில் தாரைவார்த்துத் தருகிறேன், அவளைக் காப்பது இனி உமது பொறுப்பு; கடமை,” என உலகத்துத் தாய்மார்கள் அனைவரையும் போல மதுரை அரசி மீனாட்சியின் அன்னை காஞ்சனமாலையும் கூறுவதாக அமைகிறது இப்பாடலின் இப்பகுதி.

    ***

    சிகர வடவரை குனிய நிமிர்தரு
    செருவில்ஒருபொரு வில்லெனக் கோட்டினர்
    செடிகொள்பறிதலை அமணர் எதிரெதிர்
    செலவொர்மதலைசொல் வைகையிற் கூட்டினர்
    திருவும்இமையவர் தருவும் அரவொலி
    செயவலவர்கொள நல்குகைத் தீட்டினர்
    சிறியஎனதுபுன் மொழியும் வடிதமிழ்
    தெரியும்அவர்முது சொல்லெனச் சூட்டினர்.
    பகரும் இசைதிசை பரவ இருவர்கள்
    பயிலும்இயல்தெரி வெள்வளைத் தோட்டினர்
    பசிய அறுகொடுவெளிய நிலவிரி
    பவளவனமடர் பல்சடைக் காட்டினர்
    பதும முதல்வனும் எழுத அரியதொர்
    பனுவல்எழுதிய வைதிகப் பாட்டினர்
    பரசும் இரசதசபையில் நடமிடு
    பரதபதயுகம் உள்ளம்வைத் தேத்துதும்.
    தகரம் ஒழுகிய குழலும் நிலவுமிழ்
    தரளநகையும்எம் ஐயனைப் பார்த்தெதிர்
    சருவிஅமர்பொரு விழியும் மறுகிடை
    தளரவளர்வதொர் செவ்விமுற் றாக்கன
    தனமும் மனனுறஎழுதி எழுதரு
    தமதுவடிவையும் எள்ளிமட் டூற்றிய
    தவளமலர்வரும் இளமி னொடுசத
    தளமின்வழிபடு தையலைத் தூத்திரை
    மகரம் எறிகடல் அமுதை அமுதுகு
    மழலைபழகிய கிள்ளையைப் பேட்டன
    மடவநடைபயில் பிடியை விரைசெறி
    வரைசெய்புயமிசை வையம்வைத் தாற்றிய
    வழுதியுடையகண் மணியொ டுலவுபெண்
    மணியைஅணிதிகழ் செல்வியைத் தேக்கமழ்
    மதுரம் ஒழுகியதமிழின் இயல்பயில்
    மதுரைமரகத வல்லியைக் காக்கவே.

    (மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- குமரகுருபரர்)

    சிவபிரான் மதுரை மரகதவல்லியைக் காக்க மிகப்பொருத்தமான மணாளன்! குமரகுருபரர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் காப்புப்பருவத்தின் இந்த அருமையான பாடல் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் விதம்விதமான காட்சிகளைக் கவினுற நமது மனக்கண்ணில் சித்திரம் எழுதி உள்ளத்தை உவகையிலாழ்த்துகின்றது.

    ***

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    _

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 5

    -மீனாட்சி பாலகணேஷ்

    கண்ட கதை வேண்டா, நீலகண்டன் கதைசொல்!

    bala

    சிறுகுழந்தைகளைத் தாலாட்டுப்பாடி உறங்கவைப்பது தாய்மார்களுக்கு ஒரு இனிய அனுபவம். தால் என்றால் நாக்கு எனப்பொருள். நாவை அசைத்து, ‘ருலுலுலு வாயீ,’ என அவள் எழுப்பும் ஓசை குழந்தைக்கு என்ன மாயமோ மந்திரமோ, அது அந்தப் பொருளற்ற ஒலியினைக் கேட்டவாறே கண்ணயர்ந்து விடுகின்றது.

    குழந்தை உளவியல் வாயிலாகக் காணப்புகுந்தால், இவ்வொலி, அச்சிறு மகவிற்குத் தாயின் அருகாமையைக் காட்டி உறுதி செய்கின்றது. கர்ப்பவாசத்தை விட்டு இவ்வுலகிற்கு வந்து சில மாதங்களே ஆன மகவு, தாயின் அரவணைப்பை அல்லும் பகலும் எதிர்நோக்குகின்றது. சில குழந்தைகள் தாயின் மடியை விட்டு இறங்கினாலேயே அமைதியின்றி அழவாரம்பிக்கும். அதனால் தான் கிராமப்புறங்களில், தாய் தன்னை அணைத்திருப்பதைப் போலவே குழந்தை உணரும் என்பதாலேயோ என்னவோ தாயின் பழைய புடைவையால், ஏணை எனும் தூளியைக் கட்டி அதில் மதலையைக் கண்வளர்த்துவார்கள்.

    அதுபோன்றே தாயின் குரல் கேட்கும்போது, தன்னருகே தான் அவளிருக்கிறாள் எனும் பாதுகாப்பு உணர்வில் குழந்தை அமைதி கொள்கின்றது. இதற்காகவே தாய்மார்கள் தாம் குழந்தையின் அருகாமையில் இருக்கிறோம் என உணர்த்தும் வண்ணம் பலவிதமான பாடல்களை இயற்றிப் பாட ஆரம்பித்தனர். தாமாக இன்னும் ஓடியாட இயலாத சின்னஞ்சிறு குழந்தைகள் தாயின் குரல் கேட்டு அவளுடைய அரவணைப்பை உணர்கின்றனர்.

    தாலாட்டுப் பாடல்கள் என்பன உலகின் அனைத்து நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒரு தனி இலக்கியமாகவே வளர்ந்தது எனலாம். குழந்தை பசியால் அழும்போதில் தாய்ப்பால் இயல்பாகவே அன்னையிடம் சுரப்பதைப் போல, குழந்தையை உறங்கவைக்கவும் தாய்மையின் வெளிப்பாடாகவே தாலாட்டுப் பாடல்கள் உருப்பெற்றன.

    தமிழில் தாலாட்டுப் பாடல்கள் என இருப்பினும், தமிழுக்கே உரிய தனிப்பெருமை வாய்ந்த பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் தாயர் தாலாட்டுப் பாடி மகவை உறங்கவைக்கும் தாலப்பருவம் மூன்றாவது பருவமாக அமைக்கப்பட்டு பத்துப்பாடல்களால் அழகுறப் பாடப்படுகிறது.

    kannan

    இதில் தாய் குழந்தையை உறங்கும்படி வேண்டுவாள், அக்குழந்தை அவளுக்கு எத்துணை அருமை என விவரிப்பாள், அக்குழந்தையின் விளையாட்டுகளை நினைவுபடுத்திக் கொண்டு மகிழ்வாள்; அவனோ அவளோ பெரியவர்களானதும் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் தனது உள்ளத்து ஆசைகளையும், கனவுகளையும் பற்றியும் பாடுவாள். இது மானிடக் குழைந்தைகட்குப் பொருந்தும்.

    தெய்வக் குழவியாயிடின்…?

    அந்த தெய்வத்தின் திருவிளையாடல்களைக் கூறி அவற்றை இக்குழந்தைப் பருவத்தோடு பொருத்திப் பாடி மகிழ்வாள்; செயற்கரிய செயல்களில் பெருமை கொள்வாள். இத்தகைய குழந்தை என்னுடையவள் என்று பூரித்து அன்பின் மிகுதியில், உணர்ச்சிப் பெருக்கில், பக்தியில், பாசத்தில் எல்லையில் நின்று களிப்பாள். குழந்தைக்காகவே பற்பல பாடல்களையும் இயற்றுவாள். இதனைத்தான் அடியார்களும், நல்லிசைப் புலமை வாய்ந்த சான்றோர்களும் செய்தனர்.

    அன்பின் மிகுதியால் தாங்கள் குழந்தையாகக் கொண்டாடும் தமது தெய்வங்களை செல்லமாகச் சினந்து கொண்டும், அதன் குறும்புகளால் பொய்யாகச் சலிப்படைந்தும், மகிமைகளால் சிலிர்ப்படைந்தும் பலவாறு ஏத்துவர்; போற்றுவர்; பரவினர்.

    கோவை கவியரசு நடேச கவுண்டர் அவர்கள் தமது ஆன்மநாயகராகக் கொண்டு வழிபட்ட சீர்காழி பிரம்மபுரீசுவரரின் நாயகியாம் திருநிலை நாயகியின்மீது சொல்நயம், பொருள்நயம், கற்பனைநயம், இன்னும் பல தமிழ்நயங்கள் மிகுந்த பாடல்களால் ஒரு பிள்ளைத்தமிழ் நூலினை இயற்றியருளியுள்ளார். அதன் தாலப் பருவத்திலிருந்து இரு பாடல்களைக் கண்டு களிக்கலாமா?

    * * * * *

    “அம்மா, காகம், நரி, பூனை, புலி போன்ற கண்ட கண்ட கதைகளெல்லாம் கூறாதே! நீலகண்டன் பற்றிய கதை சொல்! என்றாய் குழந்தாய்! நானும் உனக்காக அவர் கங்கையை எவ்வாறு அடக்கித் தன் சடையில் தரித்துக் கொண்டார் என்ற கதையைக் கூறினேன். கண்ணனாகிய திருமால் பெண்ணாகி மோகினி வடிவம் தரித்து வந்தபோது, அசுரர்கள் மட்டுமல்ல, அண்ணல் சிவபிரானும் அக்கண்ணப்பெண்ணின் அழகில் மயங்கியதைக் கூறினேன். நீ இவற்றைக் கேட்டுவிட்டு, ‘என் கொழுநன் மற்ற பெண்களுடன் குலாவிய கதையையா கூறுகிறாய்,’ என்று ஊடிச் சினம் கொண்டாய்! உன் கண்கள் சினத்தால் சிவந்தன; இமைக்காது உறங்கவும் மறுத்தாய் பார்!

    “உலகத்து நியதி ஒன்றினை இங்கு உனக்கு நான் உணர்த்த வேண்டும்! ஒரு தடாகத்தில் மற்ற எத்தனை மலர்கள் மலர்ந்திருந்தாலும் தாமரை மலர் அதிலிருந்தால் அது தாமரைத் தடாகம் என்று தானே வழங்கப்படும்? அது போன்று கங்கையும், மோகினியான திருமாலும் இறைவனைக் கலந்தாலும் அவனை, அந்த மாதேவனை, உலகத்தோர் ‘பார்வதிபதி’ என்று தானே அறிவார்கள்? அந்த விமலனுக்கு இனிய மனைக்கிழத்தி உன்னையன்றி வேறு எவருமில்லையடி குழந்தாய்! ஆதலால் நீ ஊடல் கொள்ள வேண்டாம். நான்மறைகளும் கூட இதையே கூறுகின்றன; இன்னும் வேறு என்ன சான்று உனக்கு வேண்டும்? சினத்தை விட்டொழிப்பாயாக இமயக்கொடியே! காழித் திருநிலைப் பூங்கொம்பே! தாலோ தாலேலோ, துயில் கொள்வாய்,” என்று தாய் கூறுகிறாளாம்.

    வேறெந்த பிள்ளைத்தமிழ் நூலிலும் காணாத அருமையான கற்பனை இது! உவமை நயமும் வியக்கத்தக்கது.

    ஊடும் குழந்தை உமையும், அருகிலொரு தாயும் தொட்டிலை ஆட்டியவாறு நம் கண்முன் தோன்றும் காட்சி சித்திரமாக விரிகின்றது அல்லவா?

    கண்ட கதைவேண் டாநீல
    கண்டன் கதைசொ லென்றாய்க்குக்
    கங்கை சடைமேற் கரந்தகதை,
    கண்ணப் பெண்ணைக் கலந்தகதை
    விண்டோம்; ஊடல் கொண்டாய்கொல்;
    விழிகள் சிவந்தாய் இமைக்கில்லாய்;
    விமலர்க் கினிய மனைக்கிழத்தி
    விளம்பி லுன்னை யலதுண்டோ?
    வண்டு மொய்க்கும் பிறமலர்கள்
    மலர்ந்த தடந்தா மரைத்தடமே
    மாதே வன்பார் வதிபதியே;
    மறையும் இதற்குச் சான்றாமே
    கொண்ட முனிவா றுகவிமயக்
    கொடியே தாலோ தாலேலோ!
    குளிர்பூங் காழித் திருநிலைப்பூங்
    கொம்பே தாலோ தாலேலோ!
    (திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

    குழந்தை சமாதானமாகி விட்டாள்; ஆனால் உறங்கவில்லை; வாய் ஓயாது என்னவெல்லாமோ பேசிக்கொண்டும், கேள்விகளைக் கேட்டுக் கொண்டும், கண்மூடாது கிடக்கிறாள். தாய் சலிப்பு (பொய்யானது தான்! எந்தத் தாய் குழந்தையை உண்மையாகச் சினந்து கொள்வாள்?) மீதூரக் கூறுகிறாள்:

    “அம்மா குழந்தாய்! உன்னை வாகீசுவரி- வாக்குசாதுரியம் மிக்கவள்- எனப் பெருமைப் பட்டுக் கொண்டோம். அதற்கேற்ப நீயும் இடைவிடாது பேசுகின்றாய்; மூகேசுவரி எனவும் ஏத்தினோம் (மூகாம்பிகை என ஒரு பிரபலமான அம்பிகை கோவில் உண்டு) அதற்கேற்பவும் நீ சில பொழுதுகள் நடந்து கொள்ள வேண்டாமோ? (அதாவது வாய்பேசாது மௌனமாக இருக்க வேண்டும்); தற்சமயம் சிறிதே கண் துயிலாயோ? நீரில் குதித்து நீந்தி விளையாடும் கயல்மீன் போன்ற கண்கள் கொண்ட மீனாட்சி எனப் பெருமைப்பட்டோம். நீயும் அதற்கேற்ப இரவும் பகலும் உறங்காது விழித்திருக்கிறாய்! (தாய்மீன் தனது குஞ்சுகளைக் காக்க வேண்டிக் கண்ணிமைகளை மூடாது இருக்குமாம்; அதுபோன்று அன்னை மீனாட்சியும் குழந்தைகளாகிய நம்மை அனவரதமும் காக்க வேண்டி கண்களை மூடுவதில்லையாம்!). பதும (தாமரை) விழியாள் என்றோம்- அதற்கேற்ப (தாமரை மலர் இரவில் குவிந்து மூடுவது போல) நீயும் கண்மூடி உறங்க வேண்டாமோ? பாவை போன்ற பெண்ணே! வாய் திறந்து பேசிக் கொண்டே இராது, பட்டால் கட்டிய இந்த ஏணையில் உறங்குவாயாக! சண்பை நகர்த் தலைவியே! திருஞான சம்பந்தருக்குப் பாலமுதம் அளித்த தாயல்லவோ நீ! தாலோ தாலேலோ!” என உறங்க வைக்கிறாள் அன்னை.

    திருமாளிகையில் ஓர் அறையில் நிகழும் இந்தச் சிறு வாக்குவாதத்தை நாமும் மனக்கண்ணில் கண்டு களிக்க, குழந்தையின் குறும்பை எண்ணி நம் இதழ்களில் நம்மையறியாமலே புன்னகை மலர்கின்றது.

    மதுர வாகீ சுவரியென்றோம்
    மலர்வாய் மழலை மொழியாயால்
    மாமூ கேசு வரியாகி
    மணியே சிறிதே துயிலாயோ
    குதிகொள் கயற்கண் ணாளென்று
    குறித்தே மிரவு பகலுறங்காய்
    குவளைக் கண்ணா யென்றாலும்
    கூடாய் துயிலிவ் விரவெல்லாம்
    பதும விழியா யென்றின்னே
    பகர்ந்தோ மிரவு விழிமூடிப்
    பாவாய்! தூவாய் திறவாமல்
    பட்டே ணையினி லுறங்குகவே
    சதுர மறைசேர் சண்பைநகர்த்
    தலைவீ தாலோ தாலேலோ!
    சம்பந்தர்க்குப் பாலளித்த
    தாயே தாலோ தாலேலோ!
    (திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

    இந்தத் திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் எனும் நூல் கற்பனை வளம் நனி சொட்டச் சொட்ட எழுதப்பட்டுள்ளது. பயிலுந்தொறும் பரவசமூட்டும் இனிமையான நயமிகுந்த பாடல்கள். இனிய தமிழ்ச் சித்திரங்களான இன்னும் சிலவற்றைப் பிறிதொரு சமயம் காணலாமே!

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-3

    கலைமகள்- அலைமகள்- எம் குமரனைக் காக்க!

    -மீனாட்சி பாலகணேஷ்

    asi


    abal
    முருகப்பெருமான் உறையும் திருப்போரூர் எனும் ஊர் நெய்தல் நிலங்கள் நிறைந்து விளங்குவது. அழகான இயற்கை ஆனந்த நடனம் புரியும் இடம். ஒருபுறம் தாழைக்காடு; மற்றொருபுறம் புன்னைமரங்கள் அடர்ந்த காடு; இவற்றுடன் நெய்தலுக்கே உரித்தான காடும் செறிந்து விளங்குகின்றது. இவற்றில் மலர்ந்த நறுமலர்கள் வாசம் வீசுகின்றன. வாசமலர்கள் மகரந்தப் பொடிகளை வாரி இறைத்துள்ளன. இதனால் அவ்வூர்த்தெருக்கள் அனைத்தும் திருமணம் நிகழும் பெரிய தெருவைப் போன்று விளங்குகின்றன. இது எவ்வாறு எனப்பார்ப்போமா?

    திருமணம் நிகழும் தெருவில், தெருவை அடைத்துப் பெரிய பந்தல் போடப்பட்டு, பந்தலை வாசமும் வண்ணமும் மிகுந்த நறுமலர்களால் அலங்காரம் செய்வித்திருப்பார்கள். இந்த மலர்கள் அனைத்தும் இனிய நறுமணத்தினைத் தெருவெங்கும் கமழச்செய்யும். மேலும், இடைவிடாது விருந்து பரிமாறப்படுவதனால், அத்தெருவில் போவோர் வருவோர் அனைவரும் பசியாறிக் களைப்பை நீக்கிக்கொள்வார்கள்.

    அதுபோலவே, இங்கும் தாழம்பூக்கள் மலர்ந்து கொழிக்கின்ற தாழைக்காடானது தனது இனிய நறுமணத்தினால் கயல்மீன்களால் உண்டான நெய்தல் நிலத்துப் புலால் நாற்றத்தினைப் போக்குகின்றது. நெய்தல் நிலத்தில் ஓடியாடும் நண்டுகள் மகரந்தப்பொடிகளை வயிறுநிறைய உண்டு பசியாறுகின்றன. ஆகவே திருப்போரூரின் நெய்தல் நிலம் திருமணத்தெரு போன்ற இத்தகைய சிறப்புகளைக் கொண்டதாகத் திகழ்கின்றது.

    கண்களின் முன்பு இக்காட்சி அழகாக விரியவில்லையா? எத்துணை அழகிய உவமைகள்? உயர்வுநவிற்சியணியின் துணைகொண்டு இயற்கையின் சிறப்பை, நாட்டுநடப்புடன் கூட்டி விவரித்த நயத்தை ரசிப்பதா? வியப்பதா?

    இத்தகைய அழகிய திருப்போரூரில் முருகன் எனும் இளங்குமரன் எழுந்தருளியுள்ளான். அவன் சிறுவன்; குழந்தை; அவனைக் காக்க வேண்டி எல்லாத் தெய்வங்களையும் அன்னையர் அழைத்து வேண்டிக் கொள்கின்றனர். திருமால், விநாயகர், சிவபிரான், உமையம்மை, அலைமகள், கலைமகள், இந்திரன், சத்தமாதர், முதலியோரை அழைத்து வேண்டிக் கொள்வது பிள்ளைத்தமிழ்க் கவிமரபாகும்.

    குமரன் உறையும் திருப்போரூரை வருணித்த புலவர் பிரானாகிய சிதம்பர அடிகள் (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழை இயற்றியவர்) அன்னையர் கலைமகளை அழைப்பதைப் பாடலின் அடுத்த வரிகளில் அதே இயற்கை அழகின் துணைகொண்டு இனிமை பொங்க விளக்கியருளுகிறார்.

    நெய்தல் நிலத்தில் பல வண்ணமலர்கள் பூத்துக் ‘கொல்’லெனச் சிரிக்கின்றன. அவற்றைப் பார்க்கும் அன்னைக்கு அது தன் குழந்தை முருகனைக் காக்க, தான் வணங்கி அழைக்கும் கலைமகளைப் போலக் காட்சி அளிக்கின்றனவாம். அது எங்ஙனம்? அவள் காண்பதென்னவோ, வெண்தாமரையின் மேல் அழகுற வீற்றிருக்கும் ஒரு அன்னப்பேடைத்தான்! அன்னவாகினி தானே கலைமகள்?

    asarasகூட்டமாக மலர்ந்த வெள்ளிய நெய்தல் மலர்கள் அன்னத்தின் (கலைமகளின்) திருமேனிபோல விளங்குகின்றன. கருங்குவளை மலர்கள் அவள் கண்களென விளங்க, அக்கண்கள் போர்செய்யும் இருசெவிகளென வள்ளைக்கொடி துலங்குகின்றது. குமிழமலர் கலைமகளின் அழகான நாசியாக விளங்குகின்றது. கொடிகளில் சிரிக்கும் முல்லையரும்புகள் அவளுடைய வெண்ணிற அரும்புப்பற்களைப்போல் காட்சியளிக்கின்றன. தேன்நிறைந்த அல்லிமலர் (குமுதம்) அவளுடைய மறையோதும் வாயினைப் போலுள்ளது. காந்தள்மலர்கள் (தோன்றிமலர்) வளைக்கரம் போலக் காட்சியளிக்கின்றன. கார்முகை எனப்படும் கோங்கமலரின் அரும்புகள் போன்ற கொங்கைகள் அவளுடையவை. எய்துவதற்கரிய சிலம்பணிந்த திருவடிகளாகத் தாமரை மலர்கள் இலங்குகின்றன. இவ்வாறெல்லாம் தெய்வத்தன்மை பொருந்திய ஒரு அன்னப்பறவை வெண்தாமரை மலர் மீது வீற்றிருப்பது, கலைமகளே வெண்தாமரை மீதமர்ந்து மறைநூல்களை ஓதியிருந்தது போலக் காணப்படுகின்றது.

    ‘இத்தகைய கலைமகள் எமது இளங்குமரனைக் காக்க,’ எனத் தாயர் வேண்டுகின்றனர்.

    இயற்கையில் இறைவனைக் காண்பது எத்துணை இன்பமாக இருக்கின்றது?

    நெய்தலங் காடுமிரு காவிபொரு வள்ளையும்

    நிகழ்குமிழும் முகைமுல்லையும்

    நிறைநறைக் குமுதமுந் தொடியுடைத் தோன்றியொடு

    நேர்கன்னி கார்முகையும்

    எய்தரிய நூபுரம் கமலமுஞ் செறிகடவுள்

    எகினம்வெள் ளைக்கமலமீ

    தேர்பெற்ற மறைமுதல கலைசொற் றிருந்தென

    இருந்தவளை அஞ்சலிப்பாம்

    கைதையங் கானமும் புன்னையங் கானமும்

    கானல்நெய் தற்கானமும்

    கடிமணத் தொடுநறவும் மகரமும் தந்திலகு

    கல்யாண மாமறுகென

    மைதவழ் பொழிற்புளினம் மலிகயற் புலவையும்

    வலைஅலவநுறு பசியையும்

    வாரா தகற்றொயொளிர் நெய்தலஞ் சமரபுரி

    வருகுகனை அருள்புரியவே.

    (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்

    கலைமகள் காப்பு- சிதம்பர அடிகள்)

    இனி அடுத்து என்ன கூறுகின்றார் புலவர் பெருமகனார்?

    பெருமை பொருந்திய திருப்பரங்குன்றம், திருவாவினன்குடி, அழகிய சோலைகள் சூழ்ந்த திருவேரகம் (சுவாமிமலை), திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), சிறந்து விளங்கும் பழமுதிர்சோலை எனக்கூறப்படும் மறைபுகழும் பதிகள்தோறும் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், திருப்போரூரையும் தனக்கு ஒரு படைவீடாகக் கொண்டு எழுந்தருளியுள்ளான்.

    திருப்போரூர் இயற்கைவளம் கொழிக்கும் ஊர். திரும்பிய இடமெல்லாம், பூத்துக்குலுங்கும் சோலைகளும், வாவிகளும் அவற்றில் மலர்ந்து மணம்பரப்பும் மலர்களும் பார்ப்பவர் மனத்தே பற்பல கற்பனைகளைப் பெருக்கெடுக்கச் செய்கின்றன. தடாகங்களில் தாமரை மலர்கள் விரிந்து தலையசைக்கின்றன. அவை முருகனின் செவ்விய திருவடிகள்போல அழகுறக் காணப்படுகின்றன. மேலும் சில தாமரைமலர்கள் மொட்டுக்களாக உள்ளதால் விரியாது கூம்பிநிற்கின்றன. இவை தேவர்கள் முருகனின் திருவடிகளைக் கைகூப்பித்தொழுவது போலக் காணப்படுகின்றன. இல்லை இல்லை.. தேவர்கள் ‘எம் கந்தனைக் காக்க,’ என யாரையோ வேண்டிநிற்கின்றனர்.

    யாரை?

    பெரிய மேகக்கூட்டம் ஒன்று தனது ஆயிரம் (பத்துநூறு) முடிகள்தோறும் ஆயிரம் கதிரவர்களை முடிகளாகக்கொண்டு விளங்குகின்றது. சந்திரன் நிலவாகிய வெள்ளத்தைப் பொழிய, அதன்மீது அழகிய தாமரைக்காடு ஒன்று மிதந்து அந்தக் கருமுகிலை உரிமையுடன் தனதாக்கிக் கொள்கின்றது. அந்த முகிலினிடை நால்வகை மலர்களும் அரும்பியுள்ளன (கோட்டுப்பூ- சண்பகம் முதலியன: கொடிப்பூ- முல்லை முதலியன; நிலப்பூ- எட்பூ, திருத்துழாய் முதலியன; நீர்ப்பூ- தாமரை முதலியன). இவற்றின் நடுவே அழகிய மின்னல் ஒன்று இருந்து ஒளிர்கின்றது. இது இயற்கை காட்டும் எழில்.

    கவிதை புனையும் புலவர் கண்களுக்கு இக்காட்சி என்ன தெரிவிக்கிறது?

    asri

    ஆதிசேடனின் ஒளிவீசும் ஆயிரம் தலைகள் கொண்ட பாம்பணையின் மீது , வெள்ளிய பாற்கடலில் ‘அறிதுயில்’ கிடக்கும் கருமுகில் வண்ணனை உரிமை கொண்டவள் அலைமகளான திருமகள். நால்வகை மலர்களாலும் புனையப் பெற்ற மாலைகள் அணிந்த அவனுடைய மார்பில் அவள் ‘மின்னலெ’ன இருந்து ஒளிர்கின்றாள். அந்தத் திருமகளை நோக்கி, ‘எம் குமரனைக் காக்க,’ என வேண்டித் தேவர்கள் கைகளாகிய தாமரை மொட்டுக்களைக் குவித்து வணங்கி வேண்டி நிற்பதாகப் புலவர் கற்பனை செய்துள்ளார்.

    பொற்குவடு பத்துநூறு இலகுமுடி தொறும்இரவி

    பூணெனக் கொண்டுமதியம்

    பொழிநிலவு வெள்ளத்தின் மிசைமிதந்து அழகுசெறி

    புண்டரிகம் மண்டுபுயலை

    அற்புதத் தொடுகொண்டு மிளிரஅப் புயல்நடு

    அரும்புநால் வகைமலரொடும்

    அஞ்சொதி மினலொன்று இருந்தென இருந்தொளிர்

    அணங்கினை நினைந்துதொழுவாம்

    எற்செறி திருப்பரங்குன்றாவி னன்குடி

    இரும்பொழில் திருவேரகம்

    ஈறில்சீ ரலைவாய் விளங்குபழ முதிர்சோலை

    என்னுமறை புகழ்பதிதொறும்

    கற்குவடு தொறுமினிய நற்சமர புரியும்உறை

    கடவுளைக் கடவுளரெலாம்

    கைம்மலர் குவிக்கஇரு கால்மலர் படைத்தவொரு

    கந்தனை அளிக்கவென்றே.

    (புயல்- மேகம்; மினல்- மின்னல்; அளிக்க- காக்க)

    (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்

    திருமகள் காப்பு- சிதம்பர அடிகள்)

    இயற்கையோடிணைந்து, காணும் அழகிய காட்சிகளெல்லாம், அவ்விறைவனின் தொடர்பான காட்சிகளே எனக் கற்பனை செய்யும் உள்ளம் இறையருள் பெற்ற நல்லிசைப் புலவோருக்கே வாய்க்கும்.

    ‘வானாகி மண்ணாகி,’ என்னும் மாணிக்கவாசகரின் பாடல் இதன் தொடர்பாகச் சிந்தித்துப் பார்க்கத் தக்கது.

    ********************************

    Share