இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-8
-மீனாட்சி பாலகணேஷ்
இமவான் தடமார்பில் தவழும் குழந்தை
கண்முன் விரியும் ஒரு அழகான சொற்சித்திரம்
இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவனுக்கு ஐந்து கரங்கள். இன்னொருவனுக்கு ஆறுமுகங்கள். இருவரும் அண்ணன் தம்பிகள். இன்னும் புரியவில்லையா? அண்ணன் ஐந்து கரத்து ஆனைமுகத்தோனான விநாயகன். தம்பி ஆறுமுகத்துப் பன்னிருகை வேலவன் எனப்படும் முருகன்.
விநாயகனின் யானைமுகத்தில் சிறு தந்தம்- அது கீற்றுப்பிறைநிலா போல அழகாக இருக்கிறது. அதனைத் தடவியபடி அவன் தன்னுடன் விளையாடும் இளையவனான முருகனைப் பார்த்துக் கேட்கிறான்:
“வேலா, உனக்கு அழகான ஆறுமுகங்கள் உள்ளனவே, எதற்காகவடா தம்பீ?”
கொலைபுரியும் தொழிலைக் கொண்ட ஒளிவீசும் நீண்டவேலைக் கையில் ஏந்திக் கொண்டு குறிபார்த்து, மரங்களையும், கிளைகளையும், காய்ந்த இலைகளையும் இலக்காக்கி எய்து விளையாடிக் கொண்டிருக்கிறான் குமரன். விநாயகன் கேட்டதுதான் தாமதம்; வீச ஏந்திய வேலினைத் தாழ்த்திப் பிடித்தவன், இடுப்பில் கைவைத்துக்கொண்டு அண்ணனைப் பார்த்து ‘இடியிடி’யெனச் சிரித்தான். பின்பு, “அண்ணா, உனக்கு இதுகூடத் தெரியாதா? நம் தகப்பனாருடைய ஆறு முகங்களிலிருந்தும்* உண்டான பொறிகளிலிருந்து நான் பிறந்தபோது ஆறு குழந்தைகளாக வடிவம் கொண்டிருந்தேன் அல்லவா? இது உனக்குத் தெரிந்ததுதானே ஐங்கரா? ஆறு கார்த்திகைப்பெண்கள் என்னைச் சீராட்டினார்கள் அல்லவா? நம் தாயாரான பார்வதி அன்னை என்னைக் காண வந்தார். அவருடைய எல்லையற்ற அன்பிலும் பாசத்திலும் எனது ஆறுவடிவங்களையும் ஒருசேர அணைத்துக் கொண்டு கொஞ்சினாள் நம் அன்னை. ஆகவே நான் ஓருடலும் ஆறு தலைகளும் பன்னிரண்டு கைகளும் கொண்டவனானேன்.
“இதுவும் நன்றாக உள்ளது. ஏன் தெரியுமா? அப்பனும் அன்னையும் என்னைக் கொஞ்சும்போது எனது இத்தனை கன்னங்களிலும் முத்தம் கொடுத்து விளையாடுவார்களல்லவா? அதற்காகத்தான் எனக்கு இத்தனை முகங்கள்,” எனக் கைகளை விரித்துக்காட்டி மழலையில் மொழிந்தான் குமரன். அண்ணன் கணேசன் புன்னகை புரிந்து தலையை ஆட்டித் தம்பியின் வியாக்கியானத்தை ரசித்தான்.
அருகிலேயே அமர்ந்து சிவபிரானும் அன்னையான மலைமகளும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேருமலையை வில்லாக வளைத்த கணவராகிய பிரானோடு சேர்ந்து இதனைச் செவியுற்றாள் சைலக்குயில் (சயிலக்குயில்- மலையில் வசிக்கும் குயிலான பார்வதி) எனப்படும் அன்னை! குழந்தையின் மழலைகேட்டு இருவரின் ஆனந்தத்திற்கும் அளவேயில்லை! கணவரை நோக்கிப் புன்னகை சிந்தியவண்ணம் அழகாக மறுமொழி கூறிய தனது இளையமகனான குமரனை வாரியணைத்துக் கொண்டாள் பார்வதி அன்னை. இவளே காந்திமதி என்ற பெயரில் சாலிப்பதி எனும் திருநெல்வேலியில் எழுந்தருளியுள்ளாள்.
அவன் தனது அண்ணனிடம் கூறியபடியே, “என் கண்ணே! எத்தனை அழகாகப் பேசினாய். இப்போதுதான் நானே உனது ஆறு தலைகளுக்கான விளக்கத்தினைப் புரிந்துகொண்டேன்,” என்றுகூறித் தனது அழகிய தலையைக் குனிந்து மடியில் அமர்ந்திருக்கும் குமரனை அவனது கொழுவிய கன்னங்களில் மாறிமாறி முத்தமிடுகிறாள்.
இத்தகைய செயலைப்புரியும் காந்திமதித் தாயை ‘வருக வருகவே!’ எனக் குழந்தையாக்கித் தாய் அழைப்பதாக வித்துவான் சொக்கநாதப்பிள்ளை அவர்கள் திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் வருகைப் பருவப் பாடலாக இதனைப் பாடியுள்ளார்.
(*சிவபிரானுக்கு ஐந்து முகங்கள்- சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம்; இவற்றுடன் பரமஞானியரின் உள்நோக்குக்கு மட்டுமே புலப்படும் உள்முகமாக உள்ள அதோமுகம் என ஆறாவதுமுகம்).
கண்முன் இலக்கியச்சித்திரம் விரிந்ததா? பாடலையும் காண்போம்:
கலையை வளைத்த பிறைக்கோட்டைங் கரத்தோன்
துணைவன் தனைநோக்கிக்
கவின்தோய் முகமா றுன்னுருவிற்
காணு நிமித்தங் கழறுகென
கொலையை வளைத்த நெடுங்கதிர்வேற் குகவேள்
நமையீன் றவர்உவகை
கொழிப்ப வொருமித் தென்னைமுத்தங்
கொண்டு விளையா டுதற்கெனலும்
மலையை வளைத்த கணவரொடு மகிழ்கூர்ந்
திளைய மதலைதனை
வாரி யெடுத்து மடியில்வைத்திவ்
வாறின்றுணர்ந்தே மெனப்பேசித்
தலையை வளைத்து முத்தமிடுஞ் சயிலக்
குயிலே வருகவே!
சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே
வருக வருகவே!
(நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் -வருகைப் பருவம்)
வேறொரு இனியகாட்சியைக் காணச்செல்லலாமா?
பிடிவாதம் செய்யும் ஒரு சிறு பெண்குழந்தை. அதனிடம் பொய்யாகச் சினம்கொண்டுபேசும் தாய்! சுவாரசியமாக இல்லை? என்னவென்றுதான் பார்ப்போமே வாருங்கள்.
“வா கண்ணே! முகம்கழுவி, உன்னைச்சிங்காரிக்கிறேன்,” என ஆசையாகத் தாய் அழைக்கிறாள். குழந்தைக்கோ விளையாட்டு மும்முரம். சிறுசெப்புகளில் மண்சோறு சமைக்கிறாள். இலைகளைப் பறித்துப் பொரியல்செய்கிறாள். “அம்மா வா, நான் சமைத்த சோற்றைச்சாப்பிடு,” என்று மழலையில் கூறுகிறாள்.
கையில் பட்டுப்பாவாடை, கழுத்திற்கான அணிகலன்கள், மை, திலகம் முதலானவற்றை ஏந்தியபடி தாயின் அருகில் பணிப்பெண் நிற்கிறாள். குழந்தையின் புழுதிபடிந்த உடைகளையும் கைகால்களையும் கண்ட தாய் சலித்துக்கொள்கிறாள்.
“நான் அழைக்கஅழைக்க நீ வராமலே இருந்தால், நான் இங்கிருந்து போய்விடுவேன். உனக்கு முகம், கைகால் கழுவி, உனது அழகான வேல்போலும் விழிகளுக்கு மைதீட்டமாட்டேன். பிறைமதிபோன்ற நெற்றியில் அழகியதிலகத்தையும் எழுதமாட்டேன். அழகான மணிகளால் செய்யப்பட்ட இந்த ஆபரணத்தை உனக்கு அணிவிக்கமாட்டேன்.”
குழந்தைக்கு அலங்காரம் செய்துகொள்ள ஆசை; பெண்குழந்தையல்லவா? அலங்காரப்பிரியை அவள்! தனது விளையாட்டை விட்டுவிட்டுவர மனமில்லாமல் தாயை ஏக்கத்தோடு பார்க்கிறாள். இதுதான் வாய்ப்பெனத் தாய் தனது அச்சுறுத்தல்களைத் தொடர்கிறாள்.
“உன்னிடம் அன்பாகப் பேசவும் மாட்டேன் குழந்தாய்! புழுதிபடிந்த உன் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் போ! அலங்காரம் செய்தபின் எனது முலைப்பாலையும் ஊட்டமாட்டேன். ஆசையாக எனது இடுப்பில் உன்னைத் தூக்கிவைத்துக்கொண்டு தேரோடும் வீதியில் சென்று வேடிக்கை காட்டுவேனல்லவா? அதையும் செய்யமாட்டேனடி பெண்ணே!”
குழந்தைக்குத் தாளவில்லை! இவையனைத்தும் அன்னையிடம் அவளுக்குண்டான தினசரி சலுகைகள். எப்படி அவற்றை இழக்கமுடியும்? குழப்பத்துடன் அன்னையைப் பார்க்கிறாள்.
அன்னையோ விடுவதாயில்லை! விரலால் எச்சரித்தபடி, “உனது சிவந்த கனிவாயில் முத்தமிட்டு உன்னைக் கொஞ்சமாட்டேனடி பார்த்துக்கொள்! அழகான மணிகள் குலுங்கும் தொட்டிலில் படுக்கவைத்து, உன்னை உறங்கவைக்கப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் பாடமாட்டேன் தெரியுமா?” என்கிறாள்.
இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது செப்புகளை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் சேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள்.
தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள். பார்க்கும் நம் முகங்களில் புன்னகை அரும்புகிறது இல்லையா?
இவள் இமவானின் அகன்றமார்பில் (விசாலமான இமயமலையில்) தவழும் குழந்தையல்லவோ? இவளையா கோபிப்பது?
‘வருக வருக என் குழந்தையே! சாலிப்பதி எனப்படும் நெல்லையில் வாழ்கின்ற காந்திமதித்தாயே, விரைந்து வருகவே!’ என நாமும் பாடியவாறே குழந்தையை எண்ணத்தில் அணைத்துக் கொள்கிறோம். பாடல் இதோ:
வாரா திருந்தா லினிநானுன் வடிவேல்
விழிக்கு மையெழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால்
இழைத்த பணிபுனையேன்
பேரா தரத்தி னொடுபழக்கம் பேசேன்
சிறிதும் முகம்பாரேன்
பிறங்கு முலைப்பா லினிதூட்டேன் பிரிய
முடனொக் கலையில் வைத்துத்
தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய
கனிவாய் முத்தமிடேன்
திகழு மணித்தொட் டிலிலேற்றித் திருக்கண்
வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பிற் றவழுங்
குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே
வருக வருகவே.
பேராதரம்- மிகுந்த அன்பு; ஒக்கலை- இடை.
(நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்
வித்துவான் சொக்கநாதப்பிள்ளை)
அன்னைத் தெய்வத்தைக் குழந்தையாக்கி இவ்வாறு வருந்தியும், வேண்டியும், உரிமையுடன் கோபித்தும், பின் கொஞ்சியும் அழைத்தால் அவள் வந்து அருள்செய்யாமல் இருப்பாளா?
*****
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
********************************