இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-10

0

மீனாட்சி பாலகணேஷ்

புலியும் அம்புலியும்!

காலங்கள் மாறினும் சிலகாட்சிகள் மட்டும் மாறுவதேயில்லை! மாறாதகாட்சிகளாயினும் அவற்றின் புதுமையும் இனிமையும் நெஞ்சை மகிழ்விக்கவும் நெகிழ்விக்கவும் தவறுவதேயில்லை! நாம் எதனைப்பற்றிப் பேசப்புகுந்தோம் தெரியுமா? வாருங்கள், இதோ காணலாம் ஒரு இனிய இலக்கியச்சித்திரத்தினை!

இந்தப் பெரியமாளிகையின் நிலாமுற்றத்தில் பரபரப்பும், ஓடியாடுதலும் இன்று மிகுந்துகாணப்படுகின்றது. ஏன் தெரியுமா? இன்று பௌர்ணமி எனப்படும் முழுநிலா மாலை. மாளிகைப் பணிப்பெண்கள் அனைவரும் நிலாச்சோறு உண்பதற்கு ஏற்பாடுசெய்ய ஓடியாடிக்கொண்டுள்ளனர்; அன்னையின் கையில் சிறு பெண்குழந்தை, பாலன்னத்தை வெள்ளிக்கிண்ணத்திலிருந்து எடுத்து அன்னை வானில் எழுந்து பளிச்சிடும் நிலாவைக்காட்டிக் கதைகூறியபடியே குழந்தைக்கு ஊட்டுகிறாள். இரண்டு கவளங்கள் உண்டகுழந்தைக்கு, அந்தப் பால்போலும் அழகுநிலாவிடம் ஆர்வம் மிகுகின்றது.

“அம்மா, அம்புலிமாமாவை என்னோடு விளையாட இங்கே அழைத்துவாயேன்,” என ஒரு மாபெரும் கட்டளையை இடுகிறாள் இந்தச் சுட்டிச்சிறுமி. அரசிளங்குமரியல்லவா இந்தக் கிள்ளைமொழிக்குழந்தை? உடனே நிறைவேற்றவேண்டாமா?

பணிப்பெண்கள் சாம, தான, பேத, தண்ட உபாயங்களை மாற்றிமாற்றி உபயோகித்து, அம்புலியைத் தங்கள் சிறுமியுடன் விளையாட வருமாறு அழைக்கின்றனர். அம்புலி அவ்வளவு எளிதாக வந்துவிடுமா என்ன? அவனும் செருக்குற்று நிற்கிறான். ‘இவர்களழைத்து இந்தச்சிறுமியுடன் நான் விளையாடப்போக வேண்டுமோ? நான் உலகிற்கே தலைவனான சிவபிரானின் சடையில் குடியிருப்பவன், இப்பெண்கள் என்னை மிரட்டி விரட்டினால் விரட்டட்டுமே, பார்த்து விடலாம்,’ என மெத்தனமாக இருக்கிறான்!

தானத்தையும் (அதாவது நீ கீழிறங்கி இக்குழந்தையுடன் விளையாட வந்தால் என்னென்ன பெறலாம் எனக்கூறுவது) பேதத்தையும் (வராவிடில் எதையெல்லாம் இழக்க நேரிடும் எனவும் கூறுகிறாள்) கலந்து விரவி அழகான சொல்விளையாட்டாகப் பல கதைகளைப் பகிர்ந்துகொண்டு, அம்புலியைக் கூப்பிடுகிறாள் பாடலில் வல்ல செவிலித்தாய் ஒருத்தி! அவற்றைக் கொஞ்சம் கேட்கலாமா?

“என் நாதன் ஒரு வெம்புலியைத் தோல்உரித்தனன்; நாமும் அவனுக்கு ஈடாக ஒரு வண்புலித்தோலை உரிக்கலாம் என்று இவள் உன்னைக் கூப்பிடுகிறாள் என்று அச்சங்கொண்டு வராமல் இருக்கிறாயோ அம்புலியே!” என்கிறாள்.

உடனே மற்ற பெண்கள் அவளைச் சூழ்ந்துகொண்டு, “அதுவென்ன ஐயன் புலித்தோல் உரித்த கதை! எமக்கு முழுமையாக இக்கதையினைக் கூறுவாய்” எனக் கேட்கலாயினர். அவளும் நயம்பட அதனைக் கூறுகிறாள்!

10a157d8-614f-4855-aefc-201cbf1fa4be
“புலிக்கால்முனிவரான வியாக்கிரபாதர், பதஞ்சலி எனும் முனிபுங்கவர் ஆகியோர் போலும் அருந்தவமுனிவர்கள் போற்றும் சிறந்த ஊர் திருப்புலிநகர் ஆகும். அவ்வூரின்கண் சிவ அபராதம் செய்தவர்களை வாளால் கண்டனம்செய்த கோட்புலிநாயனார் என்னும் பெருமைமிக்க ஒரு அடியார் இருந்தார். அவ்வூரில் வாழ்ந்த வள்ளல்தன்மை மிகுந்த மற்றொரு அடியார் சிறப்புலி நாயனார் ஆவார். இவர்களுக்குப் பேரருள் செய்தவன் நமது சிவபெருமான்.

“ஒருநாள் நமது உமையம்மை ஐயனிடம் ஏதோ காரணத்தினால் ஊடல் கொண்டபோது எம்பிரான் என்னசெய்தார் தெரியுமா? அவளது ஊடலைத் தீர்க்கும்வகையில் அவளைத் தன்னுடன் சேர்த்து இறுகத்தழுவிக்கொண்டு அவளை நகைபுரியச் செய்யும்வண்ணம் வினோதமான பல செய்திகளையும், தான் செய்த நகைப்புக்குரிய செயல்களையும் கூறினார்: “யாம் ஒரு புலியின் தோலையுரித்து அதனை எம் இடையில் அணிந்துள்ளதைப்பாராய் தேவி! இது தாருகாவனத்து முனிவர்கள் மிகுந்த கருவம்கொண்டு அபிசார வேள்வி செய்து வரவழைத்து என்மீது ஏவிய கொடியபுலியின் தோல்,” என்று அந்தக் கதையினை நகைத்தவண்ணம் உமையாளுக்குக் கூறினான்.

659a37b0-9193-42a1-9b3a-5f29d4870d4a
“அதுகேட்ட நமது உமையவள், “நாமும் ஒரு புலித்தோலை உரித்து நமது நாதனுக்கு ஈடாக வெற்றிச்செயல் செய்யலாம்,” என அம்புலியை அழைக்கிறாள் என்று அச்சம்கொண்டு இந்த அம்புலி சிவபிரானின் தலையை இறுகப்பற்றிக்கொண்டு வராமல் இருக்கிறது போலும்,” எனக்கூறவும், மற்ற நங்கையர் அனைவரும் கரம்கொட்டிக் ‘கலகல’ என நகைத்திடவும், அந்த நிலாமுற்றமே அவர்கள் நகையொலியில் தானும் மிளிர்கின்றது.

“ஏ அம்புலியே! கேட்டனையோ இந்தக்கதையை? காலம் தாழ்த்தாது வந்தாயானால், இந்தக் கவுரியின் அருளைப்பெற்று உய்யலாம் தெரியுமா?” என்கிறாள் ஒருத்தி!

“ஒருவேளை அவளுடைய மாற்றாளாகிய கங்கையோடு நட்புபூண்டவன் இந்த அம்புலியாகிய திங்கள்புலி எனச்சினம் கொள்வாள் உமையம்மை எனும் அச்சமோ என்னவோ!” எனச் சிலபெண்கள் குறும்புபேசிக் களிக்கின்றனர்.

“அதனாலென்ன? ‘இவன் அம்புலி! உன்னோடு விளையாட வந்தனன் தாயே! இவன்மீது சினம்கொள்ளாதே!’ எனக்கூறித் தப்பவைத்துவிடுவோம்! ‘பயப்படாதே நிலாவே! அண்ணாமலையானுக்கு இனியவளான இந்த உண்ணாமுலையுடன் விளையாட வந்துவிடு!” எனக்கூறி அம்புலியை அழைக்கிறாள் மற்றொருபெண்!

(குந்தலவராளி)

செம்புலி பதஞ்சலி யெனுந்தவர்கள் போற்றத்
திருப்புலி நகர்க் கண்டனஞ்
செய்தருளி வாட்புலி யெனும் பெரிய கோட்புலி
சிறப்புலிக் கருளுநாதன்
வெம்புலி யுரித்தன னெனப்புலவி தீரும்வண
மெய்ப்புலி நகைத்துரைக்கின்
வெற்றிகொள நாமுமொரு வண்புலி யுரித்துமென
வேண்டிவரு கென்றெனளெனக்
கம்புலி யிருத்தியோ தாழாது வருதியேற்
கவுரியருள் பெற்றுய்யலாம்
கங்கை யொடு பழகுதிங் கட்புலியே னாவெனைக்
காயினென் செய்வதென்னி
லம்புலி யெனச் சொலித் தப்புவிப் பேமுண்மை
யம்புலீ யாடவாவே
அண்ணா மலைக்கினிய யுண்ணா முலைக்கனியோ
டம்புலீ யாடவாவே.

(உபாயம்- தானம், பேதம் )
(மெய்ப்புலி- உடலினைப்புல்லி, தழுவி; கம்புலி- சிவபிரான் தலையை இறுகப்பற்றி)
(திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- அம்புலிப்பருவம்)

17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த அழகிய பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர் சோணாசல பாரதியார் என்பவராவார். இவர் இன்னும் கார்த்திகைத்தீப வெண்பா, சோணாசலவெண்பா ஆகிய பலநூல்களையும் படைத்துள்ளார். இப்பிள்ளைத்தமிழ்ப்பாடல்கள் பலவிதமான அணிகளையும் கவிதைநயங்களையும் கொண்டு திகழ்கின்றன. இப்பாடலிலும் இப்பிள்ளைத்தமிழ் நூலில் காணும் இன்னும் பலபாடல்களிலும் ‘சொல்பின்வருநிலையணி’ மிக அழகாகக் கையாளப்பட்டுள்ளது. புலி எனும் சொல் பலபொருள்களைக்கொண்டு (புலி- வேங்கை; வாட்புலி, கோட்புலி, புல்லி, தழுவி, திங்கட்புலி, அம்புலி) அமைந்து இனிய சந்தநயத்துடன் பயில்வோருக்குக் கவிதையின்பம் தருகின்றன.

********

அம்புலி வரவில்லை! சேடியரும் சளைக்காமல் பலகதைகளையும் கூறி அவனை வரக்கூவுகின்றனர்.

செவிலித்தாய் கூறுகிறாள், “அம்புலியே! இந்த மான்போலும் பெண்ணரசியின் கருணையினால் பிரமனும் பாவமொழிந்து உய்ந்தான். உனது பாவத்தையும் இவள் போக்கியருளுவள்; இவளுடன் விளையாட விரைவில் வந்துவிடு.”

“அந்தக் கதையைக் கூறக்கா,” என மற்ற பெண்கள் துளைத்தெடுக்க, அதனையும் நயம்பட விரித்துரைக்கிறாள் அவள்!

“திருமகளும் திருமாலும் கூடி ஈன்றெடுத்த மகன் தாமரையிலமரும் பிரமன்; அவன் படைப்புக்கடவுள். அவன் திலோத்தமை எனும் அழகுமிகுந்த பெண்ணைப்படைத்து ஈன்றான். அவளுடைய பேரழகினைக்கண்டு தகப்பனான அவனுக்கே விலங்குபோல அவளிடம் இச்சைபிறந்தது. மானுருக்கொண்டு அவளைத் துரத்தினான்.”

“ஐயோ! பின் என்னவாயிற்று?” கதை கேட்கும் ஆவலில் இப்பெண்கள் நிலவிடம் இடும் சண்டை சிறிதுநேரம் தடைபட்டு நிற்கிறது!

“பின் என்ன? எங்கெல்லாமோ ஓடிய திலோத்தமை இம்மலையினை அடைந்து அருணைப்பெருமானைத் துணைசெய்யக் கூவியழைத்தாள். அப்போது அவருடன் இந்தப் பெண்மானான பெருமையுடைய உண்ணாமுலையம்மைதான் வந்தாள். திலோத்தமையை உய்வித்தாள்; அம்மையின் கருணையினால் பிரமனும் தான்பெற்ற பெண்ணை விழைந்த கொடும்பாவம் நீங்கப்பெற்றான். பிழையினை மன்னித்துக் கொடும்பாவத்தினையும் போக்குதல் இவள் இயல்பாகும். ஆகவேதான் அம்புலியினை இவள்பால் வந்து சரணடையக் கூப்பிடுகிறேன்,” என்கிறாள்.

“அம்புலி செய்த பிழை யாதோ? பாவம் எதுவோ?” அறியாத இளம் சேடியர் செவிலியன்னையை வினவ, அவள் தொடர்ந்து கூறுகிறாள்.

“இந்தச் சந்திரன் தனது குருவான பிருஹஸ்பதியின் பத்தினியையே விரும்பியவன்; அதுவே அவன் செய்த பெரும்பிழை! ஆயினும் நம் உண்ணாமுலையாளை அடைந்தால் அவனுக்கும் இவள் அருளமாட்டாளா என்ன?”

“ஆம், அருளுவளே, இந்தச் சந்திரனின் குலத்தில் தோன்றிய ஒரு பாண்டியமன்னன்- வச்சிராங்கத பாண்டியன் என்பவன்- ஒரு குதிரைமீதேறி இவ்வருணாசலமலையின்மீது வேட்டைக்கு வந்தாராம்; பலவிலங்குகளைக் கொன்றுபின் ஒரு புனுகுப்பூனையைத் துரத்தினாராம். புனுகுப்பூனையும் அதனைத் துரத்தியவண்ணம் குதிரைமீது மன்னனுமாக மலையை வலம் வந்தனராம். பயத்தில் பூனை தனது உடலைவிட்டுத் தேவ உருவம் பெற்றதாம். குதிரையும் களைத்துவிழுந்து தேவ உருவம் பெற்றதாம். இருவரும் தேவர்கள் தொழ அங்குவந்த இந்திரவிமானத்திலேறினராம். ‘ஒரு சாபத்தால் இவ்வாறு விலங்குகளாக இருந்தோம். இவ்வருணையைக் கால்களால் வலம்வந்த புண்ணியத்தால் மீளவும் தேவரானோம் என பாண்டிய மன்னனிடம் ‘கால்களால் கிரிவலம் வருதலின் உயர்வை’க் கூறி உணர்த்தினர் என என் பாட்டியார் கூறுவார்களக்கா! ” என்றாள் ஒருபெண்.

“நிச்சயமாக! தேவர்களும் இத்தலத்தின் பெருமையை நினைந்து வணங்குகின்றனர். இவனுக்குத்தான் என்ன மதியீனம்?” என இகழ்கிறாள் தாய். “உவமானம் அற்ற எங்கள் அருமை மான்விழிக்குமரியான இந்த உண்ணாமுலை, நீ அவளடிகளை அடைந்தால் உனக்குப் பெரிதும் மகிழ்ச்சி தருவாள்; ஆகவே, விளையாட வந்துவிடுவாய் அம்புலியே,” என வேண்டுகிறாள்.

இப்பாடலில் மான்’ எனும் சொல் விளையாட்டினைக் கண்டு ரசிக்கலாம்!

“திருமகளெனும் மான் (திரு+மான்) கருமைநிறமுள்ள திருமாலுடன் (கரு+மான்) கூடி ஈன்றெடுத்த மகன் தான் பிரமன். அவன் தான் பெற்ற திலோத்தமை எனும் பெண்மானை, மானுருக்கொண்டு சேர ஆசைகொண்டான். ஓடோடிவந்து திருவருணையை அடைந்த அவள் ‘அருணைப்பெருமானே,’ என முறையிட, உடன் வந்தவள் இந்த மான் (உண்ணாமுலை); திலோத்தமையும் உய்ந்தாள். பிரமன் செய்த கொடும்பாவத்தினையும் அம்மை நீக்கினாள். குருவிற்கிழைத்த பாவத்தை நீ தொலைக்கவும் இவளே அருளுவாள்.

“ஒரு குதிரையிலேறி (ஒருமான் இவர்ந்து) உனது குலத்தோன்றலான (மருமான்) பாண்டியன் இழைத்த பாவத்தினை (காலாலன்றிக் குதிரைமேல் கிரிவலம் வந்தது) போக்கி, பூனை, குதிரை ஆகியன தேவ உருபெற்று இந்திரவிமானத்திலேறிச் சென்ற மகிமை வாய்ந்த மலையிலுறையும் மான்விழியாளான இந்த உண்ணாமுலை எனும் பெண்மான் உனக்குத்தரும் மகிழ்ச்சி (தருமான்) பெரிதாகையால் அவளோடு விளையாடவா!” என அழைக்கின்றனர்.

அம்புலி வந்தானோ என்னவோ? நமக்கு படித்து இன்புற அருமையான வித்தாரகவிதையாகக்கிடைத்த இப்பாடல்கள் உள்ளனவே!

(சுருட்டி)

திருமான் மகிழ்ந்துபுணர் கருமா னயந்துபெறு
செய்யமா நளினனீன்ற
திலோத்தமைப் பெண்மானை யிச்சையான் மானுருச்
சேருபுது ரத்தவருணைப்
பெருமா னெனாவந்த வந்தமானிந்தமான்
பெம்மா னளிக்கவுய்ந்தாள்
பிரமனும் பவநீங்கி யெத்தினன் குரவற்
பிழைத்தபவ நீயுமகல்வா
யொருமா னிவர்ந்துனது மருமா னிழைத்தபவ
மோவியிந் திரவிமான
மூர்த்தும்ப ருற்றவித் தலமகிமை யோர்ந்தடையி
னுவமான மற்றவெங்க
ளருமான் விழிக்குமரி தருமான் மகிழ்ச்சிபெரி
தம்புலீ யாடவாவே
அண்ணா மலைக்கினிய வுண்ணா முலைக்கனியொ
டம்புலீ யாடவாவே.

(உபாயம்- தானம்)
(திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- அம்புலிப்பருவம்)

(இப்பாடலில் பொதிந்துள்ள சில அழகிய தொன்மங்களை அருணைப்புராணத்திலிருந்து விளக்கியளித்த முனைவர் ஐயா திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்)

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *