இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 6

2

-மீனாட்சி பாலகணேஷ்

தமிழின் இயல்பயில் மதுரை மரகதவல்லி!

a9b859c1-d01d-45b1-8382-55b4feeac8d9

மதுரை மாநகர் திமிலோகப்படுகிறது. அந்த நான்மாடக்கூடலின் அரசி தடாதகைக்குத் திருமணம் நடைபெறப் போகின்றது. மணமகன் யார் தெரியுமா? மிக மிக உயர்ந்தவன்: மூவுலகுக்கும் முதல்வன்; எவருக்குமே எளிதில் கிடைத்தற்கரிய தன்மையன். ஆயினும் அன்பினால், பக்தியால், தொண்டினால் அவனை எளிதாக அடையலாம். ஊரும் உலகமும் உற்றாரும், மற்றோரும் இதனையறிந்து ஆனந்தக் களிப்பில் திளைத்துள்ளனர்.

‘பிறப்பிலிப் பெருமான், விடையேறும் வள்ளல், தூவெண்மதி சூடியவன், அடியார் உள்ளங்கவர் கள்வன், அவர்கள் தேடும் மெய்ப்பொருள், தில்லைச் சிற்றம்பலத்தில் ஆனந்த நடனமாடும் அரசன், நீலகண்டன், ஐந்தெழுத்தில் உறைபவன், முதலும் முடிவுமான பரம்பொருள்,’ என்றெல்லாம் போற்றி ஏற்றப்படும் சிவபிரான் தான் அவன்.

உடலெங்கும் சுடலைப்பொடி பூசி, அரவங்களை அணிகலன்களாகத் தரித்தும், புலி, யானைத் தோலினை ஆடையாக உடுத்தவனுமான அவனைத் திருமண வைபவத்திற்காக, மணப்பெண்ணின் அண்ணனான திருமாலும், தேவர்களின் அரசனான இந்திரனும், மற்றுமுள்ள பல முனிவர்களும் கூடி, பட்டாடை அணிவித்து, சடைமுடிக்கு வாசநறுநெய் பூசி, ஆபரணங்களை அணிவித்து, எல்லோர் உள்ளங்களையும் கவரும் வகையில் ஆணழகனாக, சொக்க வைக்கும் நாதனாக, அழகுமிகுந்த கல்யாணசுந்தரனாக மாற்றி விட்டனர். எழில்மிகு அரசிக்கேற்ற பேரரசர்!

சுந்தரக் கடவுளை யானைமீதேற்றி, கட்டியக்காரர்கள் கட்டியங்கூற, வாழ்த்தொலிகள் விண்ணை எட்டிட, மங்கல வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக அரண்மனை மணமண்டபத்துக்கு அழைத்து வருகின்றனர்.

மணமகனைப் பற்றி அறியாதவர்களுக்கும், அறிந்தாலும் இன்னொருமுறை கேட்டு மகிழ விரும்புபவர்களுக்கும், அவருடைய பெருமைகள், கட்டியக்காரர்களாலும் முனிபுங்கவர்களாலும் எடுத்தோம்பப்படுகின்றது!

“திரிபுரம் அழித்த எம்பிரான், உயர்ந்த முகட்டினைக் கொண்ட மேருமலையைப் போருக்காக வில்லாக வளைத்தவர் என அறிமின்!” கட்டியக்காரன்.

“ஆ! இவரையா நம் அரசி தடாதகை போருக்கழைத்தாள்!” என வியந்தனர் குடிமக்கள்.

“சமணர்களுக்கு எதிரான சொற்போர் புரியத் திருஞானசம்பந்தர் எனும் சிறுவருடைய பாடல்கள் எழுதிய ஓலைச்சுவடிகள் வைகை நீரை எதிர்த்துச் செல்லுமாறு அருளியவர்!” முனிவரொருவர்.

“ஆகா! என்னே எம்மிறைவன் கருணையுள்ளம்,” என மக்கள் வியந்தனர்.

“அரகர சிவசிவ’ எனும் ஒலியெழுப்பி இறையை வழுத்த வல்லார்க்கு மிதமிஞ்சிய செல்வத்தினையும், தேவர்களின் கற்பகத்தருவையும் கொடுக்க வல்லவர் எம்பெருமான் காணீர்!” வேறொரு புலவர்.

“என்னே இவர் கொடைவண்மை!” என மக்களிடையே மகிழ்ச்சி ஆரவாரம்!

புலவர் பெருமானான குமரகுருபரர் காலம் நோக்கித் தம்மையும் ஈசன் தனது கருணையினால் ஆட்கொண்டதைப் பாடுகிறார்: “சிறியவனான எனது அற்பமொழிகளையும் ஆய்ந்தெடுத்த தமிழ்ப்புலவர்களின் அழகிய பாடல்களுக்கு சமமாகக் கொண்டு தன் தலைமேற் கொண்டவர்.”

“ஓ! வடவரையாகிய இமயத்தினின்று வந்தாலும், தமிழின் மேல் பெருங்காதல் கொண்ட இவர் நம்மரசி தடாதகைக்கு ஏற்ற நாயகரே!” எனக் கூறிக் கொண்டனர் மக்கள்.

“இசையிலக்கணம் அறிந்த இரு கந்தருவர்கள் பாடும் இனிய இசை திசைதொறும் பரவுமாறு அவர்களை வெண்ணிறம் பொருந்திய சங்கக் குழைகளாக மாற்றிக் காதிலணிந்தவர் இவர்,” என அடுத்த கட்டியம் கூறப்படுகின்றது.

“ஆகா! இறைவர் இயல், இசை முதலான முத்தமிழிலும் வல்லவர் போலும்!” என மக்கள் கூறி அதிசயித்தனர்.

‘எங்கள் இன்னிசை எப்பொழுதும் தங்கள் திருச்செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்,’ (தற்காலத்து ‘வாக்மேன்’ அல்லது ஐ-பாட் போன்று!) என இசைவல்லுனர்களாகிய இணைபிரியாத, இரு கந்தருவர்கள் ஈசனிடம் வேண்டிக்கொண்டனராம். கம்பளன், அசுவதரன் எனும் அவர்கள் இசையின் இலக்கணம் அனைத்தும் அறிந்து இன்னிசையினை எட்டுத்திக்கிலும் பரப்பிப் பாடுபவர்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி சிவபிரான் அவர்களைத் தனது காதிலணியும் தோடுகளாக மாற்றி அணிந்துகொண்டாராம்.

“பச்சைநிற அறுகம்புல்லுடன் வெண்மையான நிலவொளி பரந்துவிரிவதும் அழகுமிகுந்து செம்பவளக்காடு போல நெருக்கமானதுமான சடைக்கூட்டங்களை உடையவர்.” என்கிறான் கட்டியக்காரன்.

நோக்குபவர்க்கு ஒரு அற்புதக் காட்சி கண்முன் விரிகின்றதாம்: சிவந்து உயர்ந்த சடாமுடி; அதில் ஒய்யாரமாக அமர்ந்து வெள்ளிய ஒளிபரப்பும் சந்திரன்; இன்னொரு புறம் சடையினின்று இழிதரும் கங்கை. சடையை ஒருவர் கண்டார்; நிலவை மற்றொருவர் காண கங்கையினை வேறொருவர் கண்டு வியக்கின்றனர். அவனழகில் தம்மை இழக்கின்றனர்.

“பாண்டிய நாட்டு மக்களே! முனிவர்களே! தேவர்களே! இன்னும் கேள்மின்! எம்பெருமானாகியவர், தாமரைமலரில் அமர்ந்த பிரமனாலும் எழுத இயலாத அரிய வேதநெறியோடு கூடிய பாடல்களின் பொருளானவர்!”

“ஆ! அந்த தேவாதிதேவனே நம்மரசிக்கு நாயகனாக வந்தானோ?!” என ஆனந்தக் களிப்பெய்தும் மக்கள் கூட்டம்.

“ஆதலால், பெரியோர்களே! தாய்மார்களே! வணங்கத்தக்க வெள்ளியம்பலத்தில் நடனமிடும் இவரின் பரதப்பதங்களை உள்ளத்தில் பதித்துத் தொழுமின்!” என ஒரு தொண்டர் கூற, அனைவரும் வீழ்ந்து மணமகனாக வந்த எம்பெருமான் திருவடிகளைப் பணிகின்றனர்.

***

dcb7add1-f0ca-407a-8aae-e398e8afbe8b

இத்தனையும் கேட்ட தடாதகையின் தாய் காஞ்சனமாலையும் தோழியரும், தமையன் திருமாலும் அமைச்சர் முதலானோரும், உள்ளம் மகிழ்ந்து தம் அருமை மகளின் பெருமைகளை விளக்கமாக உலகத்தோர் அறியக் கூறுவது போல (மணமகனைச் சார்ந்தவர்களிடமோ?) கூறுகிறார்கள்! ‘எங்கள் பெண் இத்தகைய மணமகனுக்கு எல்லாவிதத்திலும் ஒப்பானவளே!’ எனத் தெரிவிக்கும் பெருமிதம் அவர்கள் சொற்களில் இழைந்தோடுகின்றது!

“வாசனையூட்டப்பட்ட எண்ணெயினைத் தடவி வாரி முடித்த அழகிய நீண்ட கரிய கூந்தலைக் கொண்டவள் எங்கள் மகள்! முத்துப்போன்ற பற்கள் அவள் புன்னகை புரியும்போது நிலவொளி போன்று ஒளிரும் தெரியுமா?

“எம் இறைவனான சிவபிரான் அவளுடைய காதலுக்கு உரித்தாகி (அதுவும் ஒரு அழகான கதை – 4-ம் பகுதியில் கண்டோம்) இன்று கைத்தலம் பற்ற வந்துற்றான்; பாரீர்! இவளுடைய கண்களாகிய அம்புகள் அவனுக்கு சரிசமமாக எதிர் நின்று போர் செய்கின்றன! -ஆம்! இமயாசலத்தில் ஈசனைக் கண்டு போர் செய்ய எதிர்த்து நின்று பின் தன் நிலையுணர்ந்து மணம் புரிந்து கொள்ளத் தயாராகி விட்டவள் அல்லவா இந்தப் பெண்?

“குறுகிய இடை தளரும்படியான இளமை நிறைந்த தனங்களையுடையவள்; ஆம்! ஆம்! மிக்கு அழகு வாய்ந்தவள் எம் மகள். எப்படிப்பட்ட அழகு எனில், கேளுங்கள்! இவளைத் தமது தலைவியாகக் கொண்டு அவளுடைய அழகுத் திருவுருவைத் தம் மனத்தில் எழுதிப் பார்க்க அழகான வெண்மையான தாமரை மலரில் அமர்ந்த அந்த இளமங்கையான கலைவாணியும், ஆயிரவிதழ்த் தாமரையில் உறையும் மற்றொரு பெண்ணரசியான மின்னற்கொடியாள் திருமகளும் எத்துணையோ முயன்றனர்; ஆயினும் அவர்களால் அது இயலவில்லை- அவ்வாறாயின் இவளுடைய பேரழகு எத்தன்மைத்து என நீங்களே ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம் அல்லவா?” செவிலித்தாயர் கூறுகின்றனர்.

“இவ்வாறு கலைமகளும் அலைமகளும் வழிபடும் தையலாள் இவள். மகரமீன்கள் துள்ளும் அலைகடலான திருப்பாற்கடலில் தோன்றிய தேவாமிர்தம் போன்றவள் எங்கள் பெண்ணரசி. அந்த அமுதத்தினையே சொரிவது போன்ற இனிய சொற்களைப் பேசப்பழகிய இளம்கிள்ளை இவள். பெண் அன்னம் போன்ற மடநடை பயில்பவள்; இளைய மென்மையான பிடி (பெண்யானை) போன்றவள்,” மிகுந்த வாஞ்சையுடன் கூறுகிறான் அண்ணனான திருமால்.

“மலர்மாலைகளை எப்போதும் அணிவதால் நறுமணமிகுந்ததும் மலையை ஒத்ததுமான தோள்களில் இந்த உலகைத் தாங்கி அரசாட்சி செய்த வழுதியாகிய மலயத்துவச பாண்டியனின் கண்மணி எனத் திகழும் பெண்மணி எந்தன் மகள்,” எனக் கூறும்போது அரசி காஞ்சனமாலைக்குப் பெருமிதம் நிறைந்த உவகையில் கண்ணீரே பெருக்கெடுகின்றது!

“அழகு விளங்குகின்ற நிறைந்த செல்வமுடையவள்- அரசு, நாடு, அழகு, கல்வி, வீரம் எதிலும் குறைந்தவள் இல்லை இவள்,” என்கின்ற அன்னையிடம் தன் பெண்ணரசி, அவளை மணம் கொள்ள வந்திருக்கும் இறைவனுக்கு எல்லா விதங்களிலும் பொருத்தமானவளே என நிரூபிக்கும் ஆவல் தளும்பி வழிவதனை நாம் உணரலாம்.

“தேன்போல் மணமும் இனிமையும் பொருந்திய தமிழ் மொழியுடன் அவள் இயல்பாகவே பொருந்திப் பழகுகின்றாள் பாருங்கள்.” முத்தமிழும் கற்றுணர்ந்த முதல்வனுக்கு இவள் தப்பாத இணை என்று ஆவல் பொங்க அறிவிக்கிறாள் உயிர்த்தோழி!

“அத்தகைய மதுரை மரகதவல்லியான எம்மகளை உம் கையில் தாரைவார்த்துத் தருகிறேன், அவளைக் காப்பது இனி உமது பொறுப்பு; கடமை,” என உலகத்துத் தாய்மார்கள் அனைவரையும் போல மதுரை அரசி மீனாட்சியின் அன்னை காஞ்சனமாலையும் கூறுவதாக அமைகிறது இப்பாடலின் இப்பகுதி.

***

சிகர வடவரை குனிய நிமிர்தரு
செருவில்ஒருபொரு வில்லெனக் கோட்டினர்
செடிகொள்பறிதலை அமணர் எதிரெதிர்
செலவொர்மதலைசொல் வைகையிற் கூட்டினர்
திருவும்இமையவர் தருவும் அரவொலி
செயவலவர்கொள நல்குகைத் தீட்டினர்
சிறியஎனதுபுன் மொழியும் வடிதமிழ்
தெரியும்அவர்முது சொல்லெனச் சூட்டினர்.
பகரும் இசைதிசை பரவ இருவர்கள்
பயிலும்இயல்தெரி வெள்வளைத் தோட்டினர்
பசிய அறுகொடுவெளிய நிலவிரி
பவளவனமடர் பல்சடைக் காட்டினர்
பதும முதல்வனும் எழுத அரியதொர்
பனுவல்எழுதிய வைதிகப் பாட்டினர்
பரசும் இரசதசபையில் நடமிடு
பரதபதயுகம் உள்ளம்வைத் தேத்துதும்.
தகரம் ஒழுகிய குழலும் நிலவுமிழ்
தரளநகையும்எம் ஐயனைப் பார்த்தெதிர்
சருவிஅமர்பொரு விழியும் மறுகிடை
தளரவளர்வதொர் செவ்விமுற் றாக்கன
தனமும் மனனுறஎழுதி எழுதரு
தமதுவடிவையும் எள்ளிமட் டூற்றிய
தவளமலர்வரும் இளமி னொடுசத
தளமின்வழிபடு தையலைத் தூத்திரை
மகரம் எறிகடல் அமுதை அமுதுகு
மழலைபழகிய கிள்ளையைப் பேட்டன
மடவநடைபயில் பிடியை விரைசெறி
வரைசெய்புயமிசை வையம்வைத் தாற்றிய
வழுதியுடையகண் மணியொ டுலவுபெண்
மணியைஅணிதிகழ் செல்வியைத் தேக்கமழ்
மதுரம் ஒழுகியதமிழின் இயல்பயில்
மதுரைமரகத வல்லியைக் காக்கவே.

(மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- குமரகுருபரர்)

சிவபிரான் மதுரை மரகதவல்லியைக் காக்க மிகப்பொருத்தமான மணாளன்! குமரகுருபரர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் காப்புப்பருவத்தின் இந்த அருமையான பாடல் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் விதம்விதமான காட்சிகளைக் கவினுற நமது மனக்கண்ணில் சித்திரம் எழுதி உள்ளத்தை உவகையிலாழ்த்துகின்றது.

***

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

_

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 6

  1. பிள்ளைத் தமிழால் நம் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டு விட்டீர்கள். மீனாளின் பெருமை பேசுவதும் எளிதோ அல்லது ஐயனின் பெருமை எனும் பாற்கடலை யாரரால்தான் அள்ளமுடியும்..
    மிக அருமையாக உள்ளது. நன்றி!
    அன்புடன்
     திவாகர்

  2. மிக்க நன்றி திரு. திவாகர் அவர்களே! தமிழிலக்கியங்களைப் படித்து ரசித்து அதைப்பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு உற்சாகமூட்டியமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *