இந்த வார வல்லமையாளர்!
நவம்பர் 16, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு “நீச்சல்காரன்” ராஜாராமன் அவர்கள்
தமிழ் இணையக் கல்விக்கழகமும், தமிழ் விக்கிப்பீடியாவும் கூட்டு முயற்சியாகத் தமிழ் விக்கிபீடியாவில் ‘தமிழக ஊராட்சிகள்’ பற்றிய கட்டுரைகளைச் சேர்த்து வரும்பணி நடந்து வருகிறது. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் தானியக்கமாக விக்கிபீடியாவில் பதிவிடப்பட்டுள்ளதுடன் (பார்க்க: https://ta.wikipedia.org/s/4u75) இன்னும் ஓரிரு வாரங்களில் இப்பணி நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியில் முக்கியப் பங்கேற்று செயலாற்றி வருபவர் “நீச்சல்காரன்” என்னும் திருவாளர் சே. ராஜாராமன் அவர்கள். கணித்தமிழுக்காக அவர் தொடர்ந்து ஆற்றிவரும் தன்னார்வப்பணிகளைப் போற்றும் விதமாக நீச்சல்காரன் ராஜாராமன் அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்து பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
நீச்சல்காரன் வல்லமையின் வாசகர்களுக்கு அறிமுகமானவரே. இவரது, “கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா?“, “விளம்பரங்களுக்கு விலை போகிறோம்” என்ற கட்டுரைகளும், ‘மறுஜென்மம்‘ என்ற சிறுகதையும் வல்லமை மின்னிதழில் வெளிவந்துள்ளன. திண்ணை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்துக் கமலம் போன்ற மற்ற பிற இணைய இதழ்களிலும்; விஜயபாரதம் வார இதழ், வெற்றிநடை மாத இதழ், தமிழ் கம்ப்யூட்டர், அருவி காலாண்டிதழ் போன்ற அச்சுப் பதிப்பில் வெளியாகும் இதழ்களிலும் எழுதியுள்ளார்.
நீச்சல்காரன் பல்துறையில் திறமைபெற்றவர் என்பதுடன் அவரது சமூக அக்கறை என்ற பண்பும் சேர்ந்ததால், தனது திறமைகளை ஆக்கபூர்வமாகத் தன்னார்வப் பணிகளில் செலுத்திவருகிறார். குறிப்பாகக் கணித்தமிழ் சார்ந்த பங்களிப்பினால் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கு உதவும் வகையில் ‘நாவி’ என்ற சந்திப்பிழை திருத்தியையும் (http://dev.neechalkaran.com/p/naavi.html), ‘வாணி’ என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தியையும் (http://vaani.neechalkaran.com/) உருவாக்கி தனது நீச்சல்காரன் இணையத்தளத்தில் அனைவரும் விலையின்றிப் பயன்பெறும் வண்ணம் வெளியிட்டுள்ளார். ஆங்கில எழுத்தின் உதவியுடன் ஒலிபெயர்ப்பில் தமிழை எழுதிப் பழகிய இக்கால எழுத்தாளர்களுக்கு நீச்சல்காரன் உருவாக்கிய பிழைதிருத்திகள் உதவிகரமானது என்பதைக் கூறத் தேவையில்லை. ஒற்றுப்பிழைகளுடன் எழுதும் பொழுது வலி மிகும், வலி மிகா இடங்களைப் பற்றிய பரிந்துரைகளையும், பிழைகளைச் சுட்டிகாட்டியும் உதவுகிறது நாவி-சந்திப்பிழை திருத்தி. அவசரகதியில் தட்டச்சும் பொழுது அதிகத் தட்டச்சுப் பிழைகளுடன் எழுதுபவர்களுக்கும், பிழைதிருத்துகையில் மேலோட்டமாகப் படித்துச் செல்லும் கூரிய பார்வை கொண்டிராதவருக்கும் வாணி – தமிழ் எழுத்துப்பிழை திருத்தி இன்றியமையாத மென்பொருள். சந்திப்பிழை திருத்தியைப் பயன்படுத்திப் பார்த்தவரும், விக்கிபீடியாவில் அதிகக் கட்டுரைகளைப் பதிவிட்டவருமான முனைவர் செங்கை பொதுவன் அவர்கள் இதனை எழுத்தாளர்களுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
கணினி சார்ந்த ஐயங்களைத் தீர்க்க உதவும் தகவல்களும் விளக்கங்களும் கொண்ட “மானிட்டர் உலகம்” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார் நீச்சல்காரன். ‘எதிர்நீச்சல்‘, ‘தமிழ்ப்புள்ளி‘ என்ற இணையதளங்களில், இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் பல பதிவு செய்து வருகிறார்.
விக்கிபீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டுரைகள் எழுதிவரும் நீச்சல்காரன், விக்கிபீடியாவின் தமிழ் அகராதியான விக்சனரியின் சொற்தொகுப்பிலும் உள்ளிடலிலும் பங்கேற்றுள்ளார். விக்கியில் கட்டுரைகளை விரிவாகப் படிப்பதற்கு வழிசெய்யும் பல்வேறு இணைப்புகளையும் சேர்க்கும் ஒரு தானியங்கியையும் இவர் வடிவமைத்துள்ளார், தமிழ் விக்கி பீடியாவில் இயங்கிவரும் முக்கியத் தானியங்கி இது.
நீச்சல்பாட் -விக்கிப்பீடியா தொகுக்கும் தானியங்கி
தமிழ் அகராதித் தொகுப்பு
இணையப்படிப்பகம்
வலைப்பூ திரட்டி
தமிழ் டிவிட்/கீச்சு திரட்டி
கோலசுரபி
ஆடுபுலி ஆட்டம்
தமிழ்ச் சொற்புதிர்
தமிழ் மாயயெழுத்து வழங்கி
போன்ற மென்பொருள் செயலிகளையும் உருவாக்கி தமிழ் இணையப் பயனர்கள் பயன்பெற அளித்துள்ளார்.
தமிழ் மாயயெழுத்து வழங்கியில் உருவாக்கிய வல்லமையாளர் என்ற சொல்லின் தோற்றம் கீழே …
──────o───────────────────────o─────╔╦╗──o───────o───────────o── ╔═╗║╔═╗║╔═╗║╔═╦╦╗║╔╗║║║╔╦╔═╦╦╔╦────╔╬╚╝─╔╦──╔╦─╔═╗║─╔╦─╔╦╔╦╔═╦╦╦ ╠╗║║║─║║║─║║╠╗║║║║║║║║║║║╠╗║║║║────║╬╗─╔╬╬═╔╬╬═║─║║╔╬╬╗║║║║╠╗║║║ ╚╝╚╝╚╝╚╝╚╝╚╝╚╝╚╝║╚╩╝╚╩╝║║╚╝║║║║────║║║─╚═╝─╚═╝─╚╝╚╝╚═╝╝║║║║╚╝╚╝║ ──────────────────────────────╝─────╔╝────────────────────╝─────
இருபத்தெட்டு வயதாகும் நீச்சல்காரன் மதுரை யாதவர் கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றவர். புனேவில் சிறிதுகாலம் பணியாற்றிய நீச்சல்காரன் தற்பொழுது சென்னையின் புகழ்பெற்ற பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமொன்றில் பிணையக் கட்டுமானத் துறையில் (network-infrastructure) பணிபுரிகிறார். தனது ஓய்வு நேரத்தில் இணையத் தமிழ் தொடர்பான தன்னார்வப்பணிகளைச் செய்து வருகிறார்.
ஆங்கிலம் தவிர்த்த எந்தப் பிற மொழியின் கருவிகளுக்கும் வணிக அளவில் சந்தை இருக்கப்போவதில்லை, அதனால் கணித்தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்களின் வளர்ச்சியைத் தன்னார்வலர்கள், மொழி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசு மட்டுமே முன்னெடுக்க முடியும் என்று கருதும் நீச்சல்காரன், மொழி சார்ந்த நிறுவனம் மற்றும் அரசு ஆகியவற்றில் அவர் அங்கம் வகிப்பதில்லை என்பதால் தன்னார்வலராகத் தனது முயற்சிகளைத் தொடர விரும்புகிறார்.
தமிழ் இலக்கணப் பிழை திருத்தியை உருவாக்கும் திட்டம், பிற இந்தியமொழிகளின் வரிவடிங்களையும் தமிழுக்கு மாற்றும் ஒரு மென்செயலியை உருவாக்கும் திட்டம், மொழிமாற்றி, அருஞ்சொல் பொருள்மாற்றி, எதிர்ச்சொல் மாற்றி என வேறு சில திட்டங்களையும் செயலாக்க விரும்பும் நீச்சல்காரன் ராஜாராமனின் திட்டங்கள் வெற்றி பெற வல்லமை குழுவினரின் வாழ்த்துகளையும், அவரது கணித்தமிழ் தன்னார்வப் பணிகளுக்குப் பாராட்டையும் தெரிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
படங்கள் உதவி:
ஆங்கில மற்றும் தமிழ் இந்து நாளிதழ்
தகவல்கள் பெற்ற இடங்கள்:
[1] தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா!
http://tamil.thehindu.com/society/lifestyle/தப்பில்லாமல்-தமிழ்-எழுதலாம்-தமிழா/article7565616.ece
[2] நெட்டெழுத்து: இணைய ஊருக்கு உழைக்கும் நீச்சல்காரன்!
http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டெழுத்து-இணைய-ஊருக்கு-உழைக்கும்-நீச்சல்காரன்/article7184833.ece
[3] Save yourself from sandhi errors – The Hindu
http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/save-yourself-from-sandhi-errors/article5864196.ece
[4] தமிழ் நீச்சலில் ஈடுபட்டு பல்வேறு தானியங்கிக் கருவிகளை உருவாகிவரும் நீச்சல்காரன் – ஜோதிஜி, திருப்பூர், வலைத்தமிழ்
http://www.valaitamil.com/neechalkaaran-involved-in-technology-contribution_12048.html
தொடர்புகொள்ள:
neechalkaran@gmail.com
http://neechalkaran.com
Tweets by Neechalkaran
https://www.facebook.com/neechalkaran
https://plus.google.com/108891151460637064235/
https://www.youtube.com/user/neechalkaran
http://neechalkaran.blogspot.com/
http://www.neechalkaran.com/p/author.html
வலைப்பூவில்:
மணல்வீடு – http://arts.neechalkaran.com/
எதிர்நீச்சல் – http://tech.neechalkaran.com/
முத்துக்குளியல் – http://opinion.neechalkaran.com/
நீச்சல்காரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
பல்வேறு தமிழ் மென்பொருள் செயலிகளை புதிதாக உருவாக்கிய வல்லமையாளர்
நீச்சல்காரன் ராஜராமனுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்
இவ்வார வல்லைமையாளர் நீச்சல்காரனுக்கு எனது பாராட்டுகள்!
திரு நீச்சல்காரன் அவர்களை நன்கறிவேன். அவரது அபார உழைப்பும், தொழில்நுட்ப அறிவும், வேகமும், விவேகமும் பாராட்டத்தக்கன. இவ்வார வல்லமையாளராக தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள். அவரது பணி தொடரட்டும்.
வல்லமையாளர் நீச்சல்காரன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். இவரால் தமிழுக்கு மேலும் சிறப்புகள் சேரும்.