இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-9

0

மீனாட்சி பாலகணேஷ்

செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே!

ஒரு சிறுமியர் கூட்டம். மண்ணால் சிறுவீடுகட்டி- சிற்றிலிழைத்து- விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் இச்சிறு பெண்கள். பாடுபட்டுச் சுவர்களை மூன்றுபக்கமும் நிறுத்தியாயிற்று. சிறு கிளைகளை ஒடித்துவந்து கூரையாகக் குறுக்காக இட்டு அதன்மீது இலைதழைகளைப்பரப்பி, வீட்டின் கூரையையும் எழுப்பியாயிற்று. மூன்று கற்களை அடுக்கி செங்கமலம் எனும் சிறுமி சிவந்த மலர்களை அள்ளிவந்து அவ்வடுப்பிலிட்டு பற்றவைத்தும் விட்டாள். வயதில் சற்றே பெரியவளான மங்கை அதன்மீது ஒருசிறு மண்சட்டியை ஏற்றி அதில் நிறைய மணலினையும் இட்டு சோறுசமைப்பதாகப் பாவனை செய்கிறாள்.

“ஆஹா, வெண்பொங்கலா அக்கா?” என மோப்பம் பிடிக்கின்றனர் மற்ற சிறுமிகள். பசி வயிற்றை உண்மையாகவே கிள்ளுகின்றது. இப்போது இவர்களுக்கு வேண்டியது எல்லாம் சிறுவர்கள் விரும்பும் விதம்விதமான -உண்மையான- தின்பண்டங்கள்தாம்.

என்ன செய்யலாம்? உடனே சிவகாமி, “அதோ பாருங்களடி! நமது நண்பன் கணேசன் தொலைவில் தொந்தியசைய வருகிறான் பாருங்கள்,” என உற்சாகமாகக் கைகளைத் தட்டியவண்ணம் குதூகலிக்கிறாள். எல்லாரும் அத்திசையையே ஆவலாகப் பார்க்கின்றனர்.

ec1cf0fc-7336-4147-8835-4f978939a98d
கணேசனேதான்! மெல்ல ஆடியசைந்து வருகின்றான்; இடதுபக்கம் இடுக்கிக்கொண்டிருக்கும் பாத்திரம் நிறையத் தின்பண்டங்கள்; வலது கையில் பாதி தின்றதொரு பணியாரம். அதனையும் அவசரஅவசரமாகத் தின்றுகொண்டேவருகிறான்! நண்பர்களை வந்தடையுமுன் முடிந்தமட்டும் தன்னிடமுள்ள பணியாரங்களைத் தின்றுவிடவேண்டும் என்ற பேராசை. சிறிது மிகுந்தால், ‘போனால் போகட்டும்,’ என அவர்களுக்குக் கொடுத்துவிடலாம் என்பது அவன் எண்ணம்போலும்!

ஒருவழியாக அவன் பக்கத்தில் வந்து நிற்கிறான். சிறுமிகள் அனைவரும் ஓடோடிச் சென்று ஆவலுடன் அவனைச் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பார்க்கப் பார்க்க அவன் பணியாரங்களை வாயிலிட்டு மென்று சுவைக்கிறானே தவிரப் பகிர்ந்துகொள்வதாகக் காணோம்! வாய்த்துடுக்கு மிக்கவளான மங்கை அவனிடம், “கணேசா! தொந்தியை ஆட்டிக்கொண்டு, மெல்ல வருகிறாயே! இன்று விளையாட்டிற்கு நீ பணியாரம் கொண்டுவருவதாகக் கூறியதை மறந்துவிட்டாயோ? நீ சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்தில் மிகுந்ததையாவது எங்களுக்குத் தருவாய் என்று நாங்கள் ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லையா உனக்கு? எங்களுக்குக்கொடுக்காமல் நீயே தின்றுவிடப்போகிறாயா?” என்று கடிந்துகொள்வதுபோலக் கேட்கிறாள்.

கணேசனுக்கு எப்போதும் சினமே வராது. இன்று என்னவோ உண்டமயக்கம் போலும்! அவர்கள் கட்டிவைத்திருக்கும் சிறுமண்வீட்டினைத் தன் காலால் விளையாட்டாக எற்றி உதைக்கிறான்; கூரை பிய்ந்து, ஒருபக்கச்சுவரும் உடைந்துவிழுகின்றது. சிறுமிகளுக்குக் கண்களில் நீர்தளும்புகின்றது.

“இடையூறுகள் செய்வதில் மன்னன்’ எனும் பெயரை எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதில் உனக்கு என்ன ஆசையோ கணேசா! ஏன் எங்கள் சிற்றிலைச்சிதைத்தாய்? நீ எவ்வளவு நல்லவன்? எங்களுக்கெல்லாம் பெரியவன்; எங்களிடம் மிகுந்த அன்பு கொண்டவன் அல்லவா? தயவு செய்து எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என்று அவன் கரத்தைப்பற்றிக்கொண்டு கெஞ்சுகின்றனர் அச்சிறுமிகள்.

பெருத்த வயிறு தயங்கமெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
பெரும்பண் ணியமு மேந்தியேம்பாற் பேணி வருநின் கரவினைக்கண்
டருத்தி யொடுநீ யுண்டபரி கலசே டத்தை யடியேங்கட்
களிக்க வருவாயென்றுவகை யரும்பி வழிபார்த் திருந்தேமை
வருத்த லழகோ விக்கினஞ்செய் மன்னனெனும்பேர் பேதையரேம்
மாட்டுத் தெரிப்ப தொருபுகழோ மடவாரூடன் மவுணரென்றும்
திருத்துங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே
(கலைசைப் பிள்ளைத்தமிழ்)

பெருத்த வயிறு அசையுமாறு மெல்ல அடிவைத்து நடந்து, உள்ளங்கையில் பெரிய பணியாரத்தையும் ஏந்தி நாங்கள் சிற்றிலிழைத்து விளையாடும் இந்த எமது இருப்பிடம் தேடிவரும் உனது தந்திரமான எண்ணத்தினை – எங்களுடன் பகிர்ந்து கொள்ளாது நீயே உண்டுவிடும் உனது வஞ்சனைமிகுந்த எண்ணத்தினை (கரவினை) நாங்கள் அறிவோம். இருப்பினும் மிகுந்த ஆசையுடன் நீ உண்ட பரிகலமாகிய பாத்திரத்தில் உள்ள சேடத்தினையாவது (மிகுதியானதை) எங்களுக்கு அளிக்க வருவாய் என்று நாங்கள் நீ வரும் வழியை எதிர்பார்த்திருந்தோம். அப்படிப்பட்ட எங்களை நீ வருத்தலாகுமோ? ‘இடையூறுகள் செய்வதில் இவன் மன்னன்’ என்ற பெயரை எங்களிடத்தில் நீ பெற்றுக்கொள்வதும் உனக்குப் புகழாகுமோ? இளமையான பெண்களும் அரக்கர்களும் என்றும் உன்னைப் போற்றி வழிபடும் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவனே எமது சிற்றிலைச் சிதைக்காதே! தெளிந்த மதி கொண்டவர்களுக்குத் தேனாக விளங்கும் செல்வனே, எமது சிற்றிலைச் சிதைக்காதே!- என்பது பொருள்!

அருமையான சிற்றிலக்கியச் சித்திரம் அல்லவோ இது? சிவஞானயோகிகள் எனும் புலவர்பெருமான் படைத்த கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் நூலிலிருந்து இப்பாடல் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆண்பால் பிள்ளைத்தமிழின் பாட்டுடைத்தலைவன் முருகப்பிரானாகவே இருப்பான். இது ஒன்றே விநாயகனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ். இன்னொருவிதத்திலும் இப்பிள்ளைத்தமிழ் வேறுபட்டு விளங்குகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப்பாடல்களைக் கொண்டமையும் பிள்ளைத்தமிழ் நூல்களுள் இது ஒவ்வொருபருவத்திற்கும் ஐந்து பாடல்களையே கொண்டுவிளங்கிடினும், சொற்சுவையும் பொருட்சுவையும் செறிந்து கருத்தினைக் கவரும்வண்ணம் அமைந்து பயில்வோர் உள்ளத்தைக் கொள்ளைகொள்கின்றது. ஆசிரியரின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டு எனப்படுகின்றது. இவர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் எனும் இன்னொரு பிள்ளைத்தமிழையும் இயற்றியுள்ளார். அதனைப் பின்பொரு நாள் காண்போம்.

ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கே உரித்தான சிற்றிற்பருவம் (சிறுமியர் அமைத்து விளையாடும் சிற்றிலைச் சிதைத்தல்), சிறுபறைப்பருவம், சிறுதேர்ப்பருவம் ஆகியன இந்நூலில் அழகுறப்புனையப்பட்டுள்ளன. அவற்றில் சிற்றிற்பருவத்திலமைந்தது மேற்கண்ட இப்பாடல்.

அடுத்து இன்னொரு இனிய காட்சி நம் கண்முன் விரிகின்றது.

614b8ad7-11de-4bd1-9517-523fc90f4b67
எப்போதும் மோனத்திலிருக்கும் எம்பிரான் சிவபெருமான் அம்மோனநிலைகலைந்து சற்றே அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கிறார். தகப்பனார் சிறிது இவ்வாறு அமர்ந்திருந்தாலும் சிறிய குழந்தைகள் உடனே உரிமையுடன் அவர்மீது ஏறி விளையாடுவார்களல்லவா? குழந்தை விநாயகனும் இதற்கு விலக்கல்லவே! ‘குறுகுறு’வென நடந்துவந்து சிவபிரான் மடிமீதேறித் தோள்களை அடைய எத்தனிக்கிறான். குழந்தையின் பூப்போன்ற மேனிஸ்பரிசம் பட்டதும் ஐயனின் திருமேனி அன்பில் குழைந்து இளகுகின்றதாம்! அழகான, நுணுக்கமான, உணர்வுபூர்வமான கற்பனை!

ஐயனின் தோள்மீதேறி இருகால்களையும் வாகாக இருபுறமும் போட்டுக்கொண்டு குறும்புகள்செய்ய வசதியாக அமர்ந்துகொள்கிறான் விநாயகன். அவனைப் பொறுத்தவரை தன் தந்தையை அழகுசெய்வதாகக் கருதுகிறான். அவருடைய சடைமுடியும், அதிலுள்ள அணிகலன்களும், உடலின் சாம்பல்பூச்சும் அவனுக்குப் பிடித்தமானவையாக இல்லை. தன்விருப்பப்படி அவரை அலங்கரிக்கத் திட்டமிடுகிறான் குழந்தை! அவர் சடாமுடியிலணிந்துள்ள கொன்றைமலர்வேணியினைப் பிடித்திழுத்து உதறி வீசியெறிகிறான். ‘காடுடைய சுடலைப்பொடி பூசிய’ பெருமானின் உடலைக் கழுவ எத்தனிக்கிறான். வாகாக அவருடைய சடையினின்று இழிதரும் கங்கைப்புனலைத் தனது தும்பிக்கையால் பிடித்து உறிஞ்சியெடுக்கிறான். (இக்காலத்தில் வாகனங்களைக்கழுவ ரப்பர்குழாய்களால் நீர் பீய்ச்சுவதைப்போல) அவ்வாறு உறிஞ்சிய நீரை அவர்மீது பீய்ச்சியடித்து சாம்பல்பொடிபடர்ந்த அவரது திருமேனியைக் கழுவுகின்றானாம்!

புள்ளிகள் நிரம்பிய அரவங்கள், தலையிலணிந்த மாலை, வெண்மையான எலும்புகளாலாகிய மாலை, கையில் அவர் வைத்திருக்கும் மான், இடையிலுள்ள புலித்தோல் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக ‘வெடுக்,வெடுக்’கென எடுத்தெடுத்து அவருடைய கரத்திலுள்ள தீயினில் இட்டுப்பொசுக்குகிறான். பின் தலையிலணிந்த பிறையினை நோக்கி, ‘இது முழுமையான வட்டநிலவாக இல்லையே என்ன செய்யலாம்,’ என ஒருகணம் சிந்திக்கிறான். பிரான் அணிந்திருக்கும் வலிய வளைந்த ஒரு பன்றிக்கொம்பினை எடுத்து அந்தப்பிறைநிலாவுடன் பொருத்திப்பார்க்கிறான். அட! அது அழகாகப் பொருந்தி வட்டவடிவாகக் காண்கின்றது; குழந்தையின் உள்ளம் மகிழ்கின்றது. இடையில் இந்த மானையும் வைத்தால் முழுநிலவாகுமே எனக்கருதி, மானையும் அதன் நடுவே வைத்துப் பொருத்துகிறான். பின் அந்த முழுநிலவை ஆகாயத்தில் உலவவிடுக்கின்றான்! வான்தரு எனும் தெய்வீகக் கற்பகத்தருவின் மலர்களாலும் இலைகளாலும் அதற்கு மேலும் அழகு செய்கின்றான்.

இப்போது அவனுக்கு மகிழ்ச்சிபொங்குகிறது. “எல்லாம் பொருத்தமாக அமைந்துவிட்டது! ஒரு குறையும் இல்லை,” எனக்கைகளை அசைத்துக்கூறியபடி பெருமகிழ்ச்சிகொள்கிறான் விநாயகன் எனும் குறும்புக்குழந்தை.

“இவ்வாறு எல்லாம் செய்து அசைத்து மகிழும் கரங்களால் சிறுபறை முழக்குவாயாக! தென்கோ இருந்தநகரின் செங்கழுநீர் (உற்பலம்) விநாயகனே! நீ சிறுபறை முழக்கி விளையாடி அருளுக,” எனத் தாயாரும் மற்றோரும் வேண்டுவதாக அமைந்த இந்த சிறுபறைப்பருவப்பாடல் தனியழகு கொண்டு விளங்குகிறது.

வேறெந்த பிள்ளைத்தமிழிலும் காணாத கருத்தாக, குழந்தை கணேசன் தன் தகப்பனை அலங்கரிக்கும் அழகு, கவிநயமும், சொன்னயமும் மிகுந்து விளங்கும் பாடலினால் பேரழகுடன் விளங்கி நம்மைக் களிப்பிலாழ்த்துகிறது.

குறுகுறு நடந்தெய்தி எம்பிரான் திருமேனி
குழைய மேலேறி வேணிக்
கொத்தினைக் கோத்தலைத்து உதறி வான்
குளிர்புனல் புழைக்கை எற்றி
பொறியரவு தலைமாலை வெள்ளென்பு கைம்மாப்
புலிச்சரும முதலணி எலாம்
பொள்ளென எடுத்தெடுத்து அங்கை அனலிற் பெய்து
போக்கி இளமதியை வன்றி
எறுழுலவை ஒன்றப் பொருத்தித் திருக்கைமான்
இடைவைத்து முற்று மதிசெய்
திருவிசும்பு உய்த்துவான் தருத்தரும் பேரணி கொடு
எங்கணும் அலங்க ரித்து
சிறுமை இலை இனியென அசைக்கும் கரம்கொண்டு
சிறுபறை முழக்கி அருளே
தென்கோ விருந்த நகருற்பல விநாயகன்
சிறுபறை முழக்கி அருளே
(கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்- சிவஞான முனிகள்)

இந்த விநாயகக் குட்டனை வாரியணைத்து உச்சிமுகர நமக்குமே உள்ளம் ஆவலில் துடிக்கின்றதல்லவா?

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.