இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-19
மீனாட்சி பாலகணேஷ்
கைவண்ணமும் கால்வண்ணமும்…
சிறு மல்லிகைச்செண்டு போலும் அழகான பெண்மகவு. இந்தப் பிஞ்சுக்குழந்தையைக் கண்ணுறும்போது, பெற்றோருக்குத் தம் கவலைகள் அனைத்தும் மறந்துவிடுகின்றன. ஏழையோ எளியவனோ, உடல்நிலை சரியில்லாதவரோ, “ஏன் இவ்வுலகில் பிறந்தோம்?” என சலித்துக் கொள்பவர்களும் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல், குழந்தையின் அழகிலும், குறும்பிலும் மழலையிலும் உள்ளம் பறிகொடுத்து விடுகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சி எனும் பேரானந்தக்கடலில் மூழ்கிவிடுகிறார்கள்.
நல்லிசைப்புலமைப் பெரியோர் கூற்றில் குழந்தைக்குத் தாய்மார்கள் அமைவது மூன்றுவிதம். முதலாமவள், தன் குழந்தை மற்ற குழந்தைகளைப்போலும், இன்னும் சிறிது புத்திசாலியாகவும் வளருவதனைக்கண்டு பெருமிதம்கொள்ளும் சாமானிய மானிடத்தாய்; இரண்டாமவள், ‘தெய்வமே எனக்கு இக்குழந்தையாக வந்து பிறந்துள்ளது,’ என உருகும் பக்தித்தாய். இவள் குழந்தையின் செயல்களுக்கெல்லாம் ஒரு தெய்வப்பொருளைக் காரணம் கற்பித்துக் கொள்பவள்; மூன்றாமவள், இன்னும் ஒருபடி மேல்சென்று, குழந்தையின் வடிவில் பரம்பொருளைத் தரிசிக்கும் ஞானத்தாய்! தன்னை உய்விக்க இவ்வுலகில் வந்துதித்த தெய்வமே இக்குழந்தை எனத்தெளிவாக இருப்பவள். இந்த மூன்றுவிதமான தாயின் நிலைகளையும் எல்லாப் பிள்ளைத்தமிழ் நூல்களிலுமே கண்டுணர்ந்து மகிழலாம்; மெய்சிலிர்க்கலாம்!
திரிசிரபுரம் மாகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பல பிள்ளைத்தமிழ் நூல்களைத் தமிழ்ச்சுவையும் பக்திச்சுவையும் பொங்கிப்பெருக இயற்றியுள்ளார். திருக்குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் இவற்றுள் ஒன்று. அதிலிருந்து ஓரிரு பாடல்களின் நயத்தைக் காணலாமா?
*********
மலர்போன்ற சிறுகரங்களைச் சேர்த்து சப்பாணி கொட்டுவாயாக எனக் குழந்தையைத் தாயும் மற்றும் செவிலியரும் வேண்டுகின்றனர். குழந்தையின் வளர்ச்சியில் அது தனது கையால் ஒலியெழுப்ப இயலும் என உணரும் பருவமிது. மேலும், கையைப் பயன்படுத்தி, இன்னாரைச்சுட்டி, ‘அம்மா, அப்பா,’ எனவெல்லாம் உணரும், உணர்த்தும் பருவமும் கூட. தாயும், செவிலியரும் குழந்தையைக் கைமுகிழ்த்தொரு (இருகைகளையும் இணைத்துச்சேர்த்து) சப்பாணிகொட்ட வேண்டுகின்றனர். சக(ஹ) + பாணி= சப்பாணி; இரு கரங்களையும் இணைத்துக் கொட்டுதல். கையின் உபயோகத்தைக் குழந்தை புரிந்துகொண்டு அக்கைகளால் என்னவெல்லாம் செய்ய இயலும் என உணர்ந்து, செய்து, களித்துத் தானும் மகிழ்ந்து தாயையும் மற்றோரையும் களிப்பில் ஆழ்த்துகிறது. இது வளரும் குழந்தையின் கைகளுக்குப் பயிற்சியும்கூட ஆகும். இவ்வாறெல்லாம் சப்பாணிகொட்டும் சின்னஞ்சிறு கையைத் தாயானவள் பெருமிதத்துடன் போற்றுகிறாள். மங்களவல்லியான இந்தப் பெண்மகவு தலைவனான சிவபிரான் செய்யும் நிருத்தத்திற்குத் தாளம்தாக்குகின்றது (கொட்டுகின்றது). அம்பிகை தாளம்கொட்டுவதைக் காரணமாக்கி சிவப்பரம்பொருளின் நடனத்தை அழகுறப்போற்றுகிறார் பிள்ளையவர்கள்.
அத்தனாகிய சிவபிரான் தன் கையிலேந்திய தமருகத்தை ( துடி, உடுக்கை) ஒலியெழுப்பி ஆக்கும் (படைக்கும்) தொழிலைச் செய்கின்றான். அவனுடைய அமைந்தகரமானது அபயமளித்துப் புரக்கின்றது. தீயாகிய அனலை ஏந்திய கரம் சாம்பலாய் அனைத்தையும் அழிக்கும் தொழிலைச் செய்கின்றது. முயலகன் தலைமீது ஊன்றியிருக்கும் திருப்பாதம் திரோதம் என்னும் மறைத்தல் தொழிலைச் செய்கின்றது. இந்த மறைப்பைப்போக்கி முத்தியளித்து உய்விக்கும் தொழிலைத் தூக்கிய திருவடியாகிய குஞ்சிதத்தாள் செய்கின்றது.
இங்கு, ‘தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்- ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு,’
என்று இக்கருத்தை அழகுற வலியுறுத்தும் உண்மை விளக்கப்பாடல் இங்கு சிந்தை கூரத்தக்கது.
ஆடலரசனின் ஐந்தொழில் நடனத்தில் ஆழ்ந்து கருத்தூன்றிய பெரியோர்கள் அக்கருத்துக்களைத் தாமியற்றும் பாடல்களில் பலவிடங்களில் பொருத்தமாக இணைத்துக் காட்டுவது பயில்வோருக்குப் பேரின்பத்தை நல்கும். இப்பாடலும் அத்தகைமைத்தே!
இந்த ஐந்து செய்கைகளும் இடையறாது நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. சுருதி எனப்படும் எழுதாமறையாகிய வேதங்கள் ஐயனுடைய இத்தொழிலைப்போற்றி வாழ்த்துகின்றன. ‘இனி, நம்மைத் தொடரும் துன்பம் தொலைந்துபோயிற்று; ஐயனின் இந்த ஐந்தொழில் புரியும் நடனத்தினால் நாம் உய்ந்தோம்,’ என்று சகல உலகங்களும் போற்றிப் பாடிப் புகழ்கின்றனவாம். இந்த ஆனந்தத் திருநடனத்தைக் கண்ணுற்ற புலிப்பாத முனிவன் என அறியப்படும் வியாக்ரபாதர், பணி நெடுந்தவமுனிவன் என அறியப்படும் பதஞ்சலி முனிவர் ஆகிய இருவரும் ஆனந்தத்தில் மூழ்கிவிடுகிறார்கள்.
இவ்வாறு தில்லையம்பலத்தில் மாதேவனாகிய எம்பெருமான் ஆடுகின்ற புதுமையான இந்த நடனத்திற்கு இயைந்தவண்ணம் அம்மை தன் திருக்கைகளால் தாளம் இடுகிறாள். அவளுடைய திருக்கைகள் அழகுறத் தாளமிடும்போது தாமரைமலர் போலச் செந்நிற ஒளிதுளும்பக் காணப்படுகின்றன. ‘அந்த ஒளிமிகுந்த கைகளைச் சேர்த்துக்குவித்து ஒரு சப்பாணி கொட்டியருளுக! இனிமையான தமிழின் வளம் நிறைந்த குடைந்தைநகரில் வாழும் மங்களவல்லியே சப்பாணி கொட்டியருளுக,’ என வேண்டுகிறாள் தாய் என்பது புலவர் பாடல்.
இவள் அன்னை பராசக்தியல்லவா? அதனால் ஐயனின் நடனத்திற்கியைவாகக் கைகளைக் குவித்துத் தாளமிடுகிறாள் எனும் கற்பனை இனிமையானது.
ஆக்குந் தொழிற்றமரு கம்புரக் குந்தொழி லமைந்தவப யஞ்சாம்பரா –
வழிக்குந் தொழிற்றீ மறைக்குந் தொழிற்றலை யமைந்தூன்று தாண்மறைப்புப்,
போக்குந் தொழிற்குஞ் சிதத்தா ளிவைந்தும் பொலிந்திடச் சுருதிவாழ்த்தப் –
புன்மையின் றுய்ந்தன மெனச்சகல புவனமும் போற்றெடுத் தேத்தமடமை,
நீக்கும் புலிப்பத முனித்தலைவ னும்பணி நெடுந்தவ முனித்தலைவனு –
நிறைமகிழ் திளைப்பமா தேவன்மன் றிடைநவி னிருத்தக் கியைந்ததாளந்,
தாக்குந் திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே
தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே.
சப்பாணி என்பது கைகளால் கொட்டப்படுவதனால், சப்பாணிப்பருவத்தில் அக்கைகளைப் புகழ்ந்து பாடுவது பிள்ளைத்தமிழுக்குரிய ஒரு வழக்கு. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் திருக்கைகளின் பெருமையே சப்பாணிப்பருவத்தில் பாடுபொருளாக அமைந்துவிட்டதென்று முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் கூறுவார்.
———–
கைவண்ணம் கண்டோம்; இனி அன்னையின் கால்வண்ணத்தைக் காண்போமே!
தளர்நடை பயிலத்துவங்கியுள்ளாள் குழந்தை. இதனையே, ‘கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி,’ என்கிறார் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். தத்தித் தத்தி மயில்போல நடந்து வரும் குழந்தையைக்கண்டு பரவசத்தில் உள்ளம் பறிகொடுத்து, தாயின் நிலையிலும், அடியாரின் நிலையிலும் இருவிதமாகவும் நின்று, அவளைப் பலவிதமாக வர்ணிக்கிறார் புலவர். தெய்வக்குழந்தையல்லவா இந்த மங்களாம்பிகை? ‘இவளைக் கண்ணால் கண்டாலே பிறவிக்கடலில் மூழ்கிப்படும் துயரமெல்லாம் பறந்தோடும்; பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல ஆரவாரிக்கும்,’ என்பது பொருள்!
சிவபிரானின் பெருமைகள் அனைத்தும் அன்னை பார்வதியாம் மங்களவல்லிக்கே உரித்தாக்கப்படுகின்றன. சிவனும் சக்தியும் இணைபிரியாதவர்களல்லவா? அயனும் திருமாலும் அன்னமாகவும், வராகமாகவும் உருவெடுத்து ஐயனின் அடிமுடி காணப்புகுந்த வரலாறு இது. தீயோர்களை நாசம்செய்யும் சுதரிசனம் எனும் சக்கரப்படையை ஏந்தியவன் திருமால். அவன் ஒரு விலங்காக (பன்றி, வராகம்) வடிவெடுத்து தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் இரண்டு திருப்பாதங்களைத் தேடிக்காணமுயன்றான். பூமியின் அடிவரை சென்று தேடியும் காணஇயலாமையால் மனமும் உடலும் துவண்டு மீன்கள் நிறைந்த கடலில் (இங்கு பாற்கடலில் எனப் பொருள்கொள்ள வேண்டும்) விழுந்து இளைப்பாறுகிறான். அடுத்து பிரம்மா அன்னப்பறவை வடிவெடுத்து சிவனின் முடிதேடியதனை அழகுற விளக்குகிறார். உயர உயரப்பறந்து தேடியும், முடியைக் காண இயலவில்லை. இனி எங்குபோய்த் தேடுவது எனச் சிந்திப்பவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கின்றதாம். அவன் தேடிய சிவபிரானின் முடியானது ஊடல்கொண்ட அன்னையிவள் சின்னஞ்சிறு பாதங்களின்மேல் வைக்கப்பெற்றுள்ளது. ஆகவே, பிரம்மன் தான் தேடும் சிவபிரானின் முடியைக்காண ‘அன்னையின் பாதங்களை நாடினாலே போதுமே; ஆகவே, அதனைச் செய்வோம்,’ என எண்ணுகிறான். இனிய கற்பனை. குறுக்குவழியில் இலக்கை அடைவது பற்றிய சிந்தனை புராணகாலம் தொட்டு இருந்துள்ளது போலும்!! யாருக்கும் எட்டாத பரம்பொருளின் திவ்விய வடிவை, முடியை, எளிதிலடைந்து விட முடியுமா? முடியாதுதான். அண்ணல் சிவபிரானின் முடி அயன் கண்களுக்கெட்டாத கற்பகக்கனியாகி விட்டது.
இனி என் செய்வான்? அன்னம் ஆகி (ஓதிமம்) வருந்திக் களைத்து நின்ற அவன் கருத்து குழந்தையாகி நடைபயிலும் அன்னையின் தேன்நிறைந்த மலர்போன்ற திருவடிகளில் பதிகின்றது. அது பயிலும் மென்னடையில் அவன் சிந்தையும் கருத்தும் பதிகின்றது; அயன் தேடிவந்ததென்னவோ, சிவபிரான் திருமுடிக்காட்சியைத்தான். ஆனால், அது எட்டாக்கனியாகிவிட்ட நிலையில், அன்னையின் நடையழகு அவன் கருத்தைக் கவர்ந்துகொண்டுவிட்டது. மற்ற அன்னங்கள் இவள் நடையைக் கற்க ஆவல்மிகுந்து அவளைப் பின் தொடர்கின்றன. தாமரைமலரில் வீற்றிருக்கும் இந்த (பிரம்மா) அன்னமும் அவைகளுடன் அன்னையைப் பின் தொடர்கின்றதாம்.
இவ்வாறு அன்னங்கள் பின்தொடருமாறு தளர்நடை பயில்பவள், வானளாவ உயர்ந்த இமயமலையில்பிறந்த வனிதையாகிய மங்களவல்லி. இவள் தங்குமிடமோ வேதியர்கள் ஓதும் மறைவாழ்த்தொலி விண்ணளாவ முழங்கும் திருக்குடந்தை நகராகும். அம்மடந்தையை வருக வருகவே எனத் தாயர் அழைப்பதாகப் புலவர் கற்பனை விருந்து படைக்கிறார்.
ஊன்றோய் சுதரி சனப்படையா னொருமா வுருக்கொண் டும்பர்பிரா
னுபய பதமுங் காண்பான்புக் கொன்றுங் காணா துழிதந்து
மீன்றோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி யிவள்சிற் றடிதொடரின்மேற்
விழைந்து முயன்ற முடிகாணன் மேவு மேவா விடினுமிவ
டேன்றோய் மலர்த்தாட் டொடர்பொன்றே திருந்து மெனவுட் கொடுமலர்
றிகழோ திமமென் னடைகற்பான் செறியோ திமங்க ளொடுந்தொடர
வான்றோ யிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே
மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே.
சிந்தை களிகூரக் கால்வண்ணம் கண்டோமல்லவா? இனியும் தொடர்ந்து கண்டு மகிழ்வோம்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
*****