Tag: இசைக்கவி ரமணன்

  • ஜாகேஷ்வர் புஷ்டி மாதா

    இசைக்கவி ரமணன்

    7

     

    தன்னிதயக் கமலத்தில் லயித்திருப்பாள்1
    தண்ணொளியைத் தான்பருகும் தரிசனத்தைப்
    புன்முறுவ லாயிதழில் விரித்திருப்பாள்
    போதாந்த மெளனத்தில் பொருந்தி நிற்பாள்
    கன்மமெனும் அரக்கன்மேல் காலை வைத்துக்
    கர்ச்சிக்கும் சிங்கத்தில் தங்கி நிற்பாள்
    புன்மைகள் தீர்க்கின்ற புஷ்டி மாதா
    புத்தியினில் வந்தாட்சி புரிக தாயே!

    தாயுனக்கு நான்செல்லப் பிள்ளை யாயின்
    தரணிக்கே நானுற்ற பிள்ளை; என்றும்
    வாயினிக்க உன்பெயரே வழங்கும்; சொல்லும்
    வார்த்தைகள் சத்தியமாய் முழங்கும்; வெற்றுக்
    காயினிக்க வைக்கின்ற கனியே! காணும்
    கண்ணுக்குள் வந்துகொஞ்சும் களியே! நின்று2
    நீயிருக்கும் ஜேகேச்வரத்தில், என்றன்
    நிழலாடும் பேறென்னே புஷ்டி மாதா!

    எனக்கொன்று தெரியவில்லை என்றிருந்தேன்
    எனக்கொன்றும் புரியவில்லை என்றறிந்தேன்
    தினம்கொல்லும் மனதோடு திசைதிரிந்து
    தெருப்புழுதி மிகப்படியத் தேம்பி நின்றேன்
    உனக்கேநான் உனக்கேயென் றுணர்ந்தபின்னே
    எனக்கினியும் என்னவேண்டும் இயம்பு தாயே!3
    வினாக்குறியை வியப்பாக்கும் புஷ்டி மாதா!
    விதிமாற்றிக் கதிசமைக்கும் விந்தை நீயே!

    தினந்தோறும் உன்பாதம் கழுவிக்கொண்டு
    தீர்த்தத்தைப் பரவசமாய் அருந்திக்கொண்டு
    வனந்தோறும் வளையவரும் காற்றைப் போல
    உனைச்சுற்றி உனைச்சுற்றி ஓடிக்கொண்டு
    நினைந்தாலும் உன்புகழைப் பாடிக்கொண்டு
    நெஞ்சார உன்னோடு பேசிக்கொண்டு
    வனப்பான கன்னத்தை வருடிக்கொண்டு
    வாழுமிந்தப் பேறார்க்கு வாய்க்கும் தாயே?

    தொட்டுவிட முடியாத நிலகளெல்லாம்
    தோகைவிரித் தாடவைத்தாய் கண்ணின் முன்னே4
    விட்டுவிட முடியாத வீண்மையெல்லாம்
    விலகிநின்று பார்க்கின்ற வித்தை தந்தாய்
    சுட்டுவிட முடியாத வினைக்கூட்டத்தைச்
    சொக்கட்டான் காய்களாக்கிச் சொல்லித் தந்தாய்
    பட்டமரம் எங்குமிங்கே பாரிஜாதம்!
    பாதம்போல் மிக மென்மை ஏது தாயே!

    பால்தெளித்த குங்குமப்பூப் பாதம்; நூறு
    பெளர்ணமியைக் கடைந்தெடுத்த வதனம்; எண்ணில்
    மால்தருமோரு உடைகொண்ட வண்ணம்; நோக்கின்
    மயலழித்து வாழ்த்துமந்தஜாசம்
    கால்சதங்கை சலசலக்கக் கலகலத்தாய்
    கன்னத்தே காதணியை மின்னச் செய்தாய்
    வேல்பழிக்கும் விழியாளே புஷ்டி மாதா!
    நீயிருக்கும் நினைவொன்றே நிறைவு தாயே!

    மூவேளை மாறுமிவள் கோலம்; அன்னை5
    முழுமேனி அறியாது ஞாலம் ; கோடி
    தேவாதி தேவர்தொழும் தெய்வம்; எட்டுத்
    திசையெங்கும் எழில்வீசும் கருவம்! சின்னப்
    பாவாடை கட்டிவரும் பாலை; எந்தப்
    பாலையிலும் இவள்பசுமைச் சோலை; சற்றும்
    கூவாமல் உதவிக்கு வருவாள்; எந்தன்
    குறைதீர்க்க வரவழைத்தாள் புஷ்டி மாதா!

    பரிசுத்தம் இவள்காட்டும் பாவம்; எந்தப்
    பதவிக்கும் முடிவான பாதம்; அந்தத்
    துரியநிலை பெரியநிலை அன்று! கைகள்
    தொழுதழுது நிற்கட்டும் முன்பு; மிக்க
    அருகிலுள தாய்த்தோன்றும் காட்சி; ஆனால்
    அரிதெதிலும் அரிதிவளின் மாட்சி; யாவும்
    புரிகின்ற புரியாத புதிரே! நெஞ்சைப்
    புடம்போடும் என்புஷ்டிக் கருணைத் தாயே!

    நீயுறவு நீசிறகு நீபரிவின் சிகரம்6
    நின்நினைவு முக்தி: நினை மறப்பதே மரணம்
    நீ உலவும் உண்மை; நீ நிறமற்ற வெண்மை
    நினைவுகன வூடுருவும் நிகரற்ற தன்மை
    நீ சரிவில் கரமே! நெஞ்சிலெழும் ஸ்வரமே!
    நின் உள்ளங் கையிலென்றன் பிஞ்சு விரலே!
    நினதுகடன் எனது சுகமே புஷ்டி மாதா!

    என்றும்நான் உன்செல்லப் பிள்ளை எனும்போது
    இதைமிஞ்சும் பதவியிவ் வண்டத்தில் ஏது?
    உன்மடியில் எனது சிம்மாசனம் தாயே!
    உலகாளும் போது, அமுது ஊட்டுவது நீயே!
    என்றுமுள தாருக வனத்திலுறை தீயே!
    எஞ்ஞான்றும் என்னுயிரின் உயிர்ச்சோதி நீயே
    பொன்றாத வரமருளும் புஷ்டியுமைத் தாயே!
    போற்றியுன் புகழ்பாடப் புவியில் பிறந்தேனே!

    (நவம்பர் 2007, தனிமையில் இருந்தபோது)

    படங்களுக்கு நன்றி

    http://vedantavaibhavam.blogspot.in/2012/03/2012.html

    Share
  • நவராத்திரி 2014 (4) திலகமிட்டனள்…

    இசைக்கவி ரமணன்

    திலகமிட்டனள்…

    abhirami

    கங்கைக் கரையில், ஒரு
    காலைப் பொழுதில், என்
    அங்கமெங்கும் தங்கம்மின்னும் நீர்த்திவலை, நான்
    அமர்ந்திருந்தேனொரு ஆனந்த நிலை

    கண்கள் பனிக்க, நெஞ்சம்
    களியில் துள்ள, உயிர்ப்
    புண்க ளாறும் போதுவரும்
    புதிய சுகம், கொஞ்சம்
    புயல் கொஞ்சம் தென்றலெனப் புரண்டுவரும்

    தொல்லை இருளை. ஒளி
    அள்ளி விழுங்கும், பகல்
    துள்ளிவிளை யாடிவரும்
    தூய பொழுது, அது
    தொட்டுமனம் வெட்கப்பட்டுத்
    தேடும் விழுது

    அந்தக் கணத்தில், துளி
    அண்டக் கருப்பாய்
    அந்தக்கரை யோரம்வந்தாள்
    அக்கறை யின்றி,
    அலட்சியத்தில் ஆள்விழுங்கும் சின்னஞ் சிறுமி

    என்ன கருப்பு! அதில்
    என்ன திருத்தம்! அதில்
    மின்னல்துள்ளும் சின்னவிழி
    என்ன பொருத்தம்!

    என்ன மிடுக்கு! மூக்கில்
    சின்ன மினுக்கு! நெஞ்சில்
    ஏறிவிளை யாடும்பிள்ளைக்
    கென்ன செருக்கு!

    சின்னத் தட்டினில், ஒரு
    சித்திரச் சுடர், அதன்
    தெற்கு மூலைதன்னிலொரு
    குங்குமக் கடல், அதைச்
    சீண்டிவிளை யாடும் சின்னஞ்
    சிறிய விரல்!

    முன்னே நின்றவள், நெஞ்சில்
    முரசறைந்தாள், ஒரு
    முத்தத்தினில் முக்திதரும்
    காளிநானென! தேவர்
    முண்டித் தடுமாறிவிழும் சோதிநானென!

    முறுவலில்லை, சிறு
    முனைப்புமில்லை, தன்
    முன்னந்தலை சாய்த்தபடிப்
    “பொட்டு வைக்கவா?” என்று
    மோக இதழ் வழிக் கிள்ளை மொழியில் சொல்லி

    முன்பு வந்தனள், சற்றும்
    மூச்சிடாமலே, என்
    முன்னிதழில் வெப்பம்வர
    மூச்சுமிட்டனள், கங்கை
    மொத்தக்குளிர் மூண்டவிரல் நெற்றி தொட்டனள்

    தொட்ட கணத்தில், உயிர்
    தூர்ந்து கிளர்ந்தே, ஒரு
    விட்டம்வரை இடியுண்டு
    வெலவெலக்க, குளிர்
    விரல்தொட் டுயிர்குடைந்து வெடவெடக்க

    பட்டாம் பூச்சிக் கண், சற்றும்
    பதறாமலே, எனைப்
    பார்த்திருந்த பார்வையின்னும்
    பார்த்திருக்கிறேன், அந்தப்
    பார்வையின் நினைப்பில் உயிர் வேர்த்திருக்கிறேன்

    சின்னப் பதங்கள், தம்மைச்
    சேர்த்து வைக்கிறாள், நான்
    செய்வ தறியாது வீழ்ந்து தீண்டி வீழ்கிறேன்

    என்னைக் கடந்தாள், வார்த்தை
    ஏதுமின்றியே, நான்
    ஏங்கி நிற்கிறேன், வாழ்க்கை
    ஏதுமின்றியே!

    26.090.2014 / வெள்ளி / 20.25 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

    Share
  • நவராத்திரி 2014 (3) நீ நான்

    இசைக்கவி ரமணன்

     

    நீ நான்

    10457543_788192834556028_2618142506044421818_n

    நெஞ்சத்தில் நீ
    பஞ்சுக்குள் தீ
    இன்னும்தான் ஏதேனும் எஞ்சுமோ? கொஞ்சம்
    இதழ்திறந்து சொன்னால்தான் என்னவோ?

    கண்ணெல்லாம் நீ
    காலெல்லாம் நான்
    காரியம் வேறேதும் உண்டுமோ? அடி!
    காதல்நான் மாண்டாலும் மண்டுமோ?

    உள்ளுக்குள் நீ
    ஊருக்குள் நான்
    உலகுக்கு நானென்ன சொல்வதோ? நீ
    உன்வாயை அவலின்றி மெல்வதோ?

    உன்பிடியில் நான்
    உன்மடியில் நான்
    உன்னடியில் ஒற்றைமலர் நானல்லவா? இந்த
    ஒப்பற்ற நிலைபெறவே ஊனல்லவா?

    என்விழியில் நீ
    என்கவியில் நீ
    என்கான வெளியெங்கும் நீயல்லவோ? நீ
    எனைப்பெற்றுத் தினம்மகிழும் தாயல்லவோ!!

    26.090.2014 / வெள்ளி / 19.35 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

    Share
  • நவராத்திரி 2014 (2) – ஊழித் தீயிலும் தேன்

    இசைக்கவி ரமணன்

     

    ஊழித் தீயிலும் தேன்

    Balkanji-Santacruz1

     

    என்னுள் ளிருக்கும் இருளை விழுங்கி
    என்னை விட்டுவிடு! காளீ
    எதிரே நின்று சிரித்தது போதும்
    என்னைத் தொட்டுவிடு!
    உன்னுள் ளிருக்கும் உள்ளத் தினில்நான்
    ஒருநாள் எனைக்கண்டேன், இனி
    ஒருபோ தும்நீ உதறமுடி யாதெனும்
    உறுதியில் திமிர்கொண்டேன்!

    எத்தனை பிறவிகள் என்னடி வினைகள்
    என்னென்ன தண்டனைகள்! காளீ
    எப்படி உனக்கு மனம்வந் ததடி
    என்னைத் துவைத்தெடுக்க?
    பித்தனை மணந்த பிச்சி யல்லவா
    பிள்ளையும் பொருட்டில்லை! இனி
    பின்கதை எதற்கு பிழைகள் உனக்கெது
    பேசி மகிழ்வோம் வா!

    நற்றமிழ்க் கவிதை நாளும் இரவும்
    நாவில் நடமாட, காளீ
    நனவும் கனவும் நாயகி நீயே
    மனதில் நடமாட
    கொற்றவை யே! என் கூட நடந்திடும்
    ஒற்றைத் துணையே வா! யோகக்
    கூரையில் நின்று கொக்க ரித்திடும்
    கொள்ளை நெருப்பே வா!

    “மகனே!” என்னும் மணிவார்த் தையினை
    மறுபடி யும்சொல் சொல்! காளீ
    மார்பை நிமிர்த்த மனிதர் கேட்க
    மறவா தொருமுறை சொல்!
    சுகமும் துயரும் தகர்ந்த தருணம்
    சுதந்திர கீதெமெழும், உன்
    சொந்தம் சொடுக்க முக்தியும் கூடச்
    சொல்லிச் சொல்லி விழும்!

    பிள்ளைப் பிராய விடலை மனதில்
    வெள்ளம் போல்வந் தாய்! காளீ
    பித்துப் பிடிக்க வைத்தாய், பலவித
    பேதைமை கள்செய் தாய்
    முள்ளை முகத்தில் மெள்ளத் தைத்தாய்
    முட்டா ளாய்வைத் தாய், ஒரு
    மூர்க்க இரவில் முத்தமிட்டாயே
    முன்பின் நினைவுண்டா?!

    நான்யா ரென்பதை நானெதற் கறிய?
    நாடறி யும்படிச் செய்! காளீ
    நானுன் மகனெனும் வானுயர் உண்மையை
    நாவால் ஒலிக்கச் சொல்!
    ஊனுள் ளவரை உரக்கச் சொல்வேன்
    உன்மகன் உன்மகன் நான்! இந்த
    ஒற்றை நினைவே ஊழி நெருப்பிலும்
    ஊறி இனிக்கும் தேன்!

    26.090.2014 / வெள்ளி / 19.06 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

    Share
  • நவராத்திரி 2014 (1) வா!

    இசைக்கவி ரமணன்

    tiree.shakti.r.k..jpg_480_480_0_64000_0_1_0

    வா!
    அழைக்க வேண்டுமா?
    உன்னை!
    நான்!
    அழைக்க வேண்டுமா?
    அப்போதுதான் வருவாயா?

    நிலவழைத்து வந்ததா இந்த நீண்ட வானம்? தன்
    நினைவழைத்து வந்ததா குயிலின் நெஞ்சில் கானம்?
    மலரழைத்து வந்ததா மடியில் தேனின் மோனம்? அடி!
    மகவழைக்கக் காத்திருக்குமா அன்னை நேசம்?

    கண்ணெடுத்தும் பாராமல் கழனியிலே கால்பதித்துக்
    கடும்வெய்யிலில் பாடுபடும் அன்னை, அவள்
    கட்டிவைத்த தூளியிலே குட்டிநிலா சற்றுபுரள
    கலசத்திலே பால்ததும்பும் என்னை!
    கண்ணாலே அடைகாக்கும் எண்ணத்தால் அடைகாக்கும்
    உண்ணாமல் காவல்செய்யும் உயிர்கள், இந்தக்
    காட்சியெலாம் நீவிரித்த கவிதையல்லவா? உன்றன்
    கவிதையிலே வரியெடுத்துச் சொல்லவா?

    என்னைப் பெற்ற உன்னை என்றன் நெஞ்சினிலே ஏற்றிவைத்து
    ஏதேதோ பெயர்கள்வைத்துக் கூவுவேன், நான்
    என்னபெயர் சொன்னாலும் சொல்லுகின்ற கணத்தினிலே
    உன்னைநெஞ்சில் பெற்றதைப் போல் உருகுவேன்!
    அன்னியமா? நீ விருந்தா? அரசியலா? வாணிபமா?
    அலட்டியது போதுமுடன் வந்திடு!
    அன்புநண்பர் காத்திருக்கும் பொன்னிலாவின் முற்றத்திலே
    ஆனந்தத் தமிழ்க்கவிதை தந்திடு!

    23.09.2014 / செவ்வாய் / 07.45

    Share
  • கடவுளும் கவிஞனும்

     
    அன்புடையீர்!

    வணக்கம்.

    நேற்று மாலை (15.09.2014) நான் நிகழ்த்திய ”கடவுளும் கவிஞனும்” என்னும் சொற்பொழிவின் ஒளிப்பதிவை நீங்கள் இங்கே காணலாம்:

    http://www.kalakendra.com/shopping/isaikkavi-ramanan-kadavulum-kavignanum-free-streaming-p-3612.html

    பதிவுகளைச் செய்துவரும் Swathi Soft Solutions நிறுவனத்திற்கும், தொடர்ந்து உழைத்துவரும் நண்பர் திரு. ரஞ்சித் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்,

    ரமணன்

    Share
  • மக்கள் தொலைக்காட்சி வழங்கும் “பண்ணிசை வித்தகர்கள்” நிகழ்ச்சி

    அன்புடையீர்!

    வணக்கம்!

    மக்கள் தொலைக்காட்சி வழங்கும் “பண்ணிசை வித்தகர்கள்” நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளி காலை 7.00 மணிக்குக் காணத் தவறாதீர்கள்!

    அதன் முன்னோட்டத்தை, இதோ காணலாம்:

    நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

    அன்புடன்,

    ரமணன்

    Share
  • புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க..

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (50)

    புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க..

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF/[/mixcloud]

    10696393_527498384049731_9145572385221776042_n
    உன்முகம் பார்த்துப் பார்த்துத்தான்
    ஒவ்வொரு காலையும் புலர்கிறது! அதில்
    உதிக்கும் புன்னகை தயவில்தான்
    உயிரும் உயிராய் மலர்கிறது
    என்மனம் என்றே எதுவுமில்லை
    இதயம் மட்டும் துடிக்கிறது, நீ
    எதிரே இருந்தும் எங்கே என்று
    ஏனோ பாவம் தவிக்கிறது…

    இதயம் என்பது உள்ளே இல்லை
    இரண்டு விழிகளில் சிரிக்கிறது
    இம்மியும் எனக்குத் துன்பம் வந்தால்
    இருகரம் ஒன்றாய் அணைக்கிறது
    கதைகள் கனவுகள் கற்பனை எல்லாம்
    கண்முன் தினமும் நடக்கிறது
    காலம் எந்தன் தலையணை அருகே
    கவிதைத் தாளாய்க் கிடக்கிறது

    ஒவ்வொரு சமயம் இருக்கின்றாயா
    என்றொரு கேள்வி குடைகிறது
    ஒவ்வொரு நேரம் உன்னைத் தவிர
    ஒன்றும் இல்லை புரிகிறது
    கவ்விய தாயின் வாயில், குட்டிக்
    கன்றாய்க் கிடக்கின்றேனே! உன்
    காதல் என்னும் காவல் ஒளியில்
    கண்ணைத் திறக்கின்றேனே!

    இதயக் கதவைத் திறந்து திறந்து
    எத்தனை முறைநான் பார்த்தாலும், அதன்
    இருண்ட மூலையில் புன்னகை நினைப்பை
    விளக்காய் ஏற்றிப் பார்த்தாலும்
    பதிந்து பதிந்து பரந்து விரிந்து
    பலவித வண்ண வடிவாக, உன்
    பாதம்! சதங்கை கீதம்! இவையே
    பார்த்து நெகிழ்கிறேன் என் தேவி!

    என்னை முழுதும் இழந்தேனா? அதில்
    ஏழை மகிழ்ந்தேனா?
    உன்றன் நிழலை அடைந்தேனா? அதில்
    ஊமை பிழைத்தேனா?
    என்னை இழப்பது போலோர் இன்பம்
    எதிலும் இல்லையம்மா! உன்
    எதிரே நின்று நின்று கரைவதே
    எனக்கு முக்தியம்மா!

    எங்கும் இருந்தும் எனக்கே எனக்காய்
    எதிரே வந்தாயே!
    எல்லாம் ஆகியும் ஏழையை அணைத்து
    எல்லாம் தந்தாயே!
    பொங்கும் புனலாய்க் கண்ணில் இதயம்
    பொங்கிப் பொங்கிவர..
    புன்னகை ஒன்றின் பூரணமாய் நீ
    புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க…..

    படத்திற்கு நன்றி

     

    Share
  • எல்லை என்பது

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (49)

    எல்லை என்பது

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%A4/[/mixcloud]

    10599449_623510557769007_4186651122590924176_n

    எல்லை என்பது
    இல்லை! இதற்கு மேல்
    இன்னொன்று இருக்க முடியாது
    இப்படிச்
    சொல்லிச் சொல்லித்தான்
    எல்லைகள் சொள்ளையாகிப் போயின

    சிறகின்றிப் பறந்த மனிதன்
    கால்முளைத்து மலினப்பட்டான்

    பரந்து கிடக்கிறது வானம்! அதைப்
    பருகிப் பாடுகிறது பறவை!

    எல்லையற்ற பிரபஞ்சத்தில்
    எங்கேநாம்? எவ்வளவு நாம்?
    ஆனால் நம் உள்ளேதான்
    அண்டமும் பிண்டமும்

    வீடும் வீதியும் வீணாகும் தேகமும்
    கூடாகுமோ என்று கூரையைப் பிளந்துகொண்டு
    கொக்கரிப்பது ஒருவகை

    படைகளும் அம்புகளும் பரபரத்து வந்தாலும்
    முன்னே யோகதண்டம் நட்டு
    முகவாய் சற்றே தூக்கிப்
    பதறாமல் அமர்ந்து பார்த்திருப்பது ஒருவகை

    ஏறி இறங்குமொரு மலைவெளியில்
    யாரோ எறிந்த மாராப்பு போல
    வளைந்து நெளிகின்ற சிற்றோடையால்தான்
    வனப்பு விகசிக்கிறது

    பாறையில் தலைகாட்டும்
    பசும்புல்தான் அதற்குப்
    பதவி கொடுக்கிறது

    பொட்டுவைத்த நெற்றி
    முத்தமிட்ட கன்னம்
    கூட்டக் களேபரத்தில் முறுவலிக்கும் குழந்தை
    வானைத் தின்றபடி வளையவரும் வெண்ணிலா

    இப்படி
    பெரிதுகளுக்குச் சிறிதுகள்தான்
    பெருமை சேர்க்கின்றன
    அவற்றுள்ளும்
    சின்னஞ் சிறுசுகள்
    இன்னும் கவர்கின்றன

    ஓடையில் துள்ளும் கெண்டை
    ஒசிந்த புல்லில் சிரிக்கும் சிறுமலர்
    பொட்டைச் சுற்றியொரு வியர்வை அரும்பு
    கன்னத்தில் காயாத ஈரம்
    குழந்தையின் வாயில் தின்பண்டத் துகள்
    வெண்ணிலவின் தங்கக் கவசம்

    எது பெரிது? எதுதான் சிறிது?
    எல்லையென்று ஒன்று ஏது?

    என்ன பார்க்கிறாய் நீ?
    உன்னைவிட உயர்ந்தவன் என்றோ
    உன்னை உயர்த்துபவன் என்றோ
    என்றும் நான் நினைப்பதற்கு
    எதுவுமில்லை கண்மணி

    நிலவாய் இருந்த நீ
    நிலத்திற்கு இறங்கிவந்தாய்
    முகம் துடைக்கும் முகிலாகச்
    சற்று
    முன்பு வந்து காத்திருந்தேன்

    ஒருமுறை துடைத்துவிட்டுத்
    தூர எறிந்துவிடு
    வையத்தில் அப்படித்தான்
    வற்றாத சுனைகள் தோன்றின.

     

    Share
  • நினைப்போ நிஜமோ

    இசைக்கவி ரமணன்

    உனக்கே உனக்காக  (48)

    நினைப்போ நிஜமோ

    10516698_295389760644498_189508891943409258_n

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%AE/[/mixcloud]
    நீ
    படுத்துப் புரண்ட மஞ்சம் – முகத்தைப்
    பதித்துக் களித்த நெஞ்சம் – நாணம்
    விடுத்துக் கொடுத்த இன்பம் – என்னை
    விட்டுப் பிரிந்த துன்பம் – இதனை
    அடுத்துக் கிளம்பும் கனவு – அதனை
    அடக்கத் திணறும் நினைவு – வாய்
    மடுத்துப் பரவும் வாசம் – எங்கும்
    மண்டிக் கிடக்கும் கண்ணே!

    உரத்துச் சிரித்த சிரிப்பும் – அதில்
    உதிர்ந்த முத்துத் தெறிப்பும் – அந்தக்
    கரத்தில் இருக்கும்நெருப்பும் – அதில்
    கலந்த தண்மை விரிப்பும் – பெரு
    வரத்தைப் பதியம் போட்டு – அதை
    வளர்த்து மகிழும் பொறுப்பும் – என்
    சிரத்தை வணங்க வைக்கும் – உன்
    சித்திரப் பதத்தில் மயங்கும்!

    கூடிக் கொழிக்கும் வனப்பும் – அதைக்
    கொட்டிக் கொடுக்கும் நினைப்பும் – மடி
    தேடி அமர்ந்த மிடுக்கும் – என்னைத்
    தேம்ப வைக்கின்ற செருக்கும் – இமை
    மூடிக் கிடக்கும் போதும் – என்னை
    முற்றும் அளக்கும் மதர்ப்பும் – மனம்
    பாடிக் களிக்கத் துடிக்கும் – அது
    படியில் குடமாய் உருளும்!

    உயிரை எடுத்துக் கொடுத்து – பின்
    உயிரைக் கொடுத்து எடுத்து – சில
    வயிரச் சுவைகளைத் தொடுத்து – மணி
    வாயின் அமிழ்தில் குழைத்து – கொஞ்சம்
    விடுத்து விடுத்துச் சுவைத்து – விழி
    கிறங்கி மனத்தில் குவித்து – கூடு
    விடுத்த பறவையைப் போலே – உயிரை
    விசைத்துப் பொருத்தினாயே!

    எனக்கும் உனக்கும் பழக்கம் – இது
    எதையும் கடந்த நெருக்கம் – ஒரு
    மனதும் மனதும் மயங்கி – சிறு
    மலரும் வண்டும் இணங்கி – வளர்
    கனவும் நினைவும் கலந்து – புதுக்
    காதல் கவிதை பிறந்து – இனி
    எனதுன தெல்லாம் மறந்து – நீளும்
    எல்லைக் கெதுபெயர் சொல்லேன்!

    என்னை உன்னிடம் தந்தேன் – அதில்
    எத்தனை நிம்மதி அடைந்தேன்! நீ
    புன்னகை யோடுனைத் தந்தாய் – காலைப்
    பொழுதாய்ச் சிவந்து கிளர்ந்தேன் – உன்
    அன்பின் மடியில் கிடத்தி – என்னை
    அமரனாக்கினாய் தேவி! நீ
    இன்னமும் செய்யவொன் றுண்டோ? அடி
    இறைவனை மிஞ்சுதல் நன்றோ?!

    Share
  • என்னதான் சொன்னாய் அப்படி?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (47)

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F/[/mixcloud]

    என்னதான் சொன்னாய் அப்படி?

    10460321_685391018219040_5872195989517013130_n

    சாற்றிய மாலைகளில், தேனீக்களின்
    சங்கீதச் சுற்றுகள் போல்,
    சாலையில் நடக்கும்போது
    முகவாய் தடவி,
    நாசியைக் கடந்துசெல்லும் மூலிகை வாசம் போல்,
    நேற்றைய கனவில் எனக்கே எனக்காய்
    நீ ஒரு கவிதையைச் சொன்னாய்..
    நினைவை மறித்து…கனவைப் பறித்து…
    நெஞ்சை அறவே நிறுத்திச் சிரித்தபடி…..

    தூங்கிக் கிடந்த சொர்க்கங்கள், நீ
    பொட்டு வைத்ததும் பதறின
    உயிரில்..
    தூர்ந்தே போன துவாரங்களில்
    தேவ கீதங்கள் விளைந்தன
    ஏங்கித் தவித்த புல்லின் நுனிகள்
    எட்டிப் பார்த்தபடி எழுந்தன
    எங்கே எங்கே என்றுதான் எல்லாம்
    உன்திசை நோக்கி ஒசிந்தன

    உருகி, உருகியபடி, எல்லாம் இங்கே
    உனக்காகத்தான் காத்திருக்கிறது
    ஒயிலான நிதானமாய், நீ
    ஒவ்வோர் அடியாய்..ஒவ்வோர் அடியாய்..
    உயிரெலாம் தவிக்க எடுத்து வைப்பதும்……….
    உயிரை இழந்து இழந்து பிழைப்பதும் கூட
    உவப்பாகி விட்டது

    இத்தனைக்கும் இறுதியில், உன்
    சுவாச சாமரத்தின் கதகதப்பில்
    தழுதழுக்க வைக்கும்போது
    நீ
    அப்போதுதான்
    திடீரென வந்ததுபோல் பேதலிக்கிறது புத்தி.
    வருவதே தெரியாமல் வந்து நிற்பது
    திறமையோ? கருணையோ?

    வந்தாயே!

    அதிருக்கட்டும்
    பொன்னை உருக்கித் தேனில் குழைத்து
    என்ன சொல்லிப் போனாய் நீ?

    காலை…விழிப்பு….என்னும்
    கரடு முரடான அவமானங்களில் வெட்கியபடி
    கனவை நினைவுகூர்தல்
    சாத்தியமில்லையே சகி!

    இதயத்தின் இழைகளை
    சின்ன இழைகூட மிச்சமின்றி மீட்டி
    இனி
    அடுத்துச் சொல்ல ஏதுமில்லாமல்
    உன்னை முழுதாக
    எடுத்துச் சொன்னவள்தான் நீ

    இருந்தாலும்
    நேற்றைய கனவில்
    என்ன சொல்லியிருப்பாய்
    என்பதைத் தவிர வேறேதும்
    சிந்திக்க விடாமல்
    சிரிக்கிறாய் நீ

    ஒன்று செய்யேன்..
    நிம்மதியின் சுனையான உன் மடியில்,
    நேர்ந்துகொண்ட என்னைச் சாய்த்து,

    மானாய் மீனாய் என்னுயிரை
    மாறி மாறி விழுங்கும் கண்களை
    மலர்த்தி மலர்த்தி என்னைப் பார்த்து,

    மாலைச் சிவப்பு மாறும் தருணமாய்க்
    கோலம் செய்யும் உதட்டைக் குவித்து,

    மறந்ததெல்லாம் நினைக்கவைத்து
    நினைத்ததெல்லாம் மறக்கவைக்கும்
    மாய விரல்களால், என்றன்
    மலிந்த தலைகோதி,

    மலையுச்சி குகைக்கோயிலில்
    மறைந்து ஒலிக்கும்
    சுருதியைப்போல் சுண்டும் உன்
    சுவாசத்தை கீதமாக்கி,

    மொட்டை மாடியிலிருந்து
    காற்றின் படிகளில் இறங்கி வந்து
    தோளைத் தொட்டுச் செல்லும் புறாவின் சிறகைப் போல

    மெல்ல…மிக மெல்ல….
    என்னைத் தூங்கவை

    கனவில் வா
    கவிதை சொல்
    கதவைச் சாத்திவிடு

    Share
  • உனக்கே உனக்கே உனக்காக!

    இசைக்கவி ரமணன்

    உனக்கே உனக்காக   (46)

    உனக்கே உனக்கே உனக்காக!
    (பாடல்)

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95%E0%AE%95/[/mixcloud]

    10451142_525203130945923_8197705392472800775_n

     

    உனக்கே உனக்கே உனக்காக! இந்த
    உடலும் அந்த உயிரும், அந்த
    உயிரில் மலரும் ஒவ்வொரு உணர்வும்
    உனக்கே உனக்காக!
    உனக்கே உனக்கே உனக்காக!

    வெண்ணிலவோ பொன்னிலவோ, அது
    வாழ்வதும் மறைவதும் வானத்திலே
    வீணைதரும் ராகமெல்லாம், வந்து
    மேவும் மெல்லிய விரல்களிலே
    கண்முழுதும் கனவுகளாய், உன்
    கால்படும் படாத பாதையிலே, நான்
    நின்றிருப்பேன் நீ சென்றிருப்பாய், என்
    கண்ணீர்த் துளிகளின் சாலையிலே! (உனக்கே)

    நள்ளிரவில் ரகசியமாய் என்மனதில் ஒரு மலர்விரியும்
    என்னுயிரே தேன் துளியாய் நீவருவாயென இனித்திருக்கும்
    நீவரலாம் பருகிடலாம் நிழலும் படாமல் விலகிடலாம்
    தேன் துளியே கண்ணீர்த்துளியாய் தெருவினிலெங்கோ உதிர்ந்திடலாம்
    மறுபடியும் இரவுவரும் மலர்விரியும் அதில் தேன் துளிர்க்கும் (உனக்கே)

    உறவும் பிரிவும் இல்லாமல் உரிமை ஒன்றும் கோராமல்
    இரவும்பகலும் நில்லாமல் இடைவிடாமல் நலம்பாடி
    இன்பம் துன்பம் இல்லாமல் இடையில் எங்கோ ஆடுகிறேன்
    உன்னில் என்னைத் தேடுகிறேன் ஒருகணம் கண்டால் வாழ்ந்திடுவேன்
    எனக்குள் இருக்கும் வனத்தில் சிரிக்கும்
    உனக்கே உனக்காய் வாழுகிறேன்! என்
    உயிரால் உன்னை வாழ்த்துகிறேன்! (உனக்கே)

     

    படத்திற்கு நன்றி

    Share
  • நீயே தவம்!

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக (45)

    நீயே தவம்!

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE/[/mixcloud]

    10616225_590718837705442_5172244511758978034_n
    நீயே தவம் நீயே வரம்
    நீயே நெஞ்சில் நிரந்தரம்
    நினைவில் கனவின் மலர்கள் விரியும் தினம் தினம், உன்
    நிழலினொளியில் தானே எந்தன் சுதந்திரம்!

    மது மயங்கும் மதுவே கண்ணாய்த் திறந்தது
    மனது பாவம் விண்ணைத் தாண்டிப் பறந்தது
    இதயம் முழுதும் அன்பின் வெள்ளம் நுழைந்தது
    எனது உனது என்னும் எண்ணம் மறந்தது

    தலைகோதும் தென்றல் காற்றே! அலைதூண்டும் நிலவே!
    நிலைமாறும் நெஞ்சுக்குள்ளே நின்றாடும் உறவே!
    இடைவிடாமல் அன்பால் என்னைக்
    கொல்லும் முல்லைப் பூவே! புயலே!

    உனதுமுகம் கனவினில் வரும்நிலவா?
    கனவிலொரு மறைவினில் எழும்மலரா?
    உனதுமனம் காதலின் திருவனமா?
    வனம்முழுதும் கணந்தொறும் வளர்ந்திடும் கடவுளும் தொழும் சுகமா?

    கவிதையுருவாகும் பேரழகே
    காலம்தடு மாறும் கண்ணழகே
    தவித்தமனம் தத்தித்தத்தி அடைந்திடும் மெத்தைமடி தனிலெனைத்
    தாலாட்டிடும் குரலே! நெஞ்சில்நிதம்
    தாளமிடும் விரலே!

    (நீயே தவம்)
    சொல்லில் சொல்ல முடியாதம்மா உன் நேசம்
    விலக விலக வளரும் விந்தை உன் பாசம்
    எல்லை தாண்டி உந்தன் அன்பின் எழில் வீசும்
    எண்ணமெங்கும் கன்னம் குழையும் ஒரு வாசம்

    உயிரெல்லாம் உனதே என்னும் உணர்வொன்றே எனது
    பயிர்போல மழையே உனையே பார்த்து ஏங்கும் மனது
    எல்லைகள் தீரும் வேளை
    எதிரே வந்தாய் இதுவே உறவு

    கண்களென்ன மின்னல்களின் கனவா?
    கனியிதழ்கள் அமிழ்தம் தரும் சுனையா?
    வானவில் பட்டுப்பட்டுக் கன்னங்களில் தொட்டுவிளையாடுவது
    நாணமெனும் சுவையா?

    நீயெனது உயிர்வருடும் விரலா?
    உயிருள்ளில் ஊடுருவும் விழியா?
    விழியாலே கொஞ்சிக்கொஞ்சி நெஞ்சிலெங்கும் பஞ்சுப்பஞ்சுப் பறப்பதைப்
    பார்த்துச் சிரிக்கும் ரதியா?

    (நீயே தவம்)

    Share
  • தாமரைக் கண்ணாள்…

    இசைக்கவி ரமணன்

    தாமரைக் கண்ணாள்…

    (நேற்று மதியம். வேலை. அயர்வு. கொஞ்சம் காற்று தேவைப்பட்டது. இலக்கின்றிச் சற்றே ஊர்சுற்றப் போனேன். ஒரு முண்டகக் கண்ணி ஆலயம் அழைத்தது. முகமே மொத்த உருவமாக, அகன்ற கமலக் கண்களே முகமாக அமர்ந்திருக்கும் அவள் எதிரே சற்று அமர்ந்தேன், உயிரில் ஓர் ஆசுவாசம் நேர்ந்தது)

    470

     

    தாமரைக் கண்ணியின் முன்னிலையில்1545644a-6cc1-4b2c-8b67-9ce52cb2b54a_S_secvpf

    தவழும் குழந்தை போலுள்ளேன்

    நான்மறை போற்றும் நாயகியை

    நாவில் அமர்ந்து மொழிபவளை

    ஒமெனச் சொல்லி உயிர்முனையில்

    உணர்வை நிறுத்திச் சுடர்பவளை

    நாமம் உருவம் அருவமெலாம்

    நடத்தும் விழிகளில் நான் கரைந்தேன்!

     

    ஒளியின் ஊற்றே இவள்விழியோ?amman

    உயிருக் குயிர்தரும் சாமரமோ?

    களியின் வசந்தக் கதவுகளோ?

    கருணைக் கடலின் கரையலையோ?

    தெளிவே அருளத் திறந்தவிழி

    தேவையைத் தீபமாய் ஏற்றும்விழி

    அளித்து மகிழவே அகன்ற விழி

    அமிழ்தின் வழியதைப் பணிகின்றேன்!

     
    காணக் காண வினைகளெலாம்eb608269-8b12-4845-8268-b62b2a8b2cd6_S_secvpf

    காடு காடாய் எரியுதடா!

    பேணப் பேணச் சிறியமனம்

    பெருவெள் ளத்தில் புரளுதடா!

    பூண இயலாப் பூரணத்தில்

    பொருந்திக் கரைந்து போவென்றே

    ஆணை யிட்டே ஈர்க்கின்ற

    அழகு விழிகளைப் பணிகின்றேன்!

     

    விரிந்த விழிகளின் பொன்னொளியில்amma

    வீழ்ந்து மறைவதே வெற்றியடா!

    தெரிந் தழைக்கும் தெய்வத்தின்

    திசையில் கிடத்தல் முக்தியடா!

    பரிந்து நமையே பார்ப்பவளைப்

    பார்த்து வாழ்வதே பக்தியடா!

    சரிந்த கணத்தினில் சந்தித்த

    சக்தியின் விழிகளைப் பணிகின்றேன்!

     

    எங்கோ எதற்கோ திரிந்தவன் முன்durga_face

    எதேச்சையாக எதிர்ப்பட்டாள்

    தங்க இடமின்றித் தவித்தவனைத்

    தழுவி முகந்து மடிவைத்தாள்

    சிங்க முதுகில் நின்றபடி

    சிரித்துப் பிடரி சிலுப்புமென்

    தங்க மனதுத் தாயவளின்

    தாமரைக் கண்களைப் பணிகின்றேன்!

     

     

     

    07.09.2014 / ஞாயிறு

    Share
  • நானும் நீயும் நாளும் இரவும்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (44)

    நானும் நீயும் நாளும் இரவும்

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE/[/mixcloud]

    10624987_654161001345716_6964382405334813555_n

    நானும் நீயும்
    நாளும் இரவும்
    பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும்
    வானம் புவியை
    வருடும் கோட்டில்
    வரிசை வரிசையாய் அமர்ந்திருக்கும்!

    தேனும் மலரும்
    தென்றலும் வந்து
    தெம்பு வேண்டி இளைப்பாறும்! அதில்
    கானம் கவிதை
    யாவும் காதலில்
    களஞ்சியமாகக் கொழித்திருக்கும்!

    அவசரமாய்ச் சில தேவியர்கள்
    அமரர்கள் பார்க்கா வண்ணம், தம்
    கவலைகள் தீர நம் காதல் சொற்களைக்
    கவர்ந்து செல்வர் மெல்ல!

    திவலைகளாய் நாம் இருவரும் இரவில்
    சிந்திய கண்ணீர்த் துளிகளைக் கண்டு
    கவலைப் பட்டுச் சில விண்மீன்கள்
    கள்ளத் தனமாய் இறங்கும்

    தீபச் சுடரின் பரபரப்பாய், நீ
    சிரித்த சிரிப்பின் திகழ்ச்சியிலே
    திகைத்த மின்னல் நடுவழியில், ஒரு
    கேள்வியின் வடிவில் சிலைத்திருக்கும்!

    பாபம் துடைக்கும் பரிவினிலே, நீ
    பாஷையை மீறிச் சொன்னதெல்லாம்
    படித்துறையாகிப் பழம்பெரும் முனிவர்
    பவித்திரமாக முழுக்கிடுவார்!

    நானும் நீயும் பேசியதாக
    நான்சொன்னதெல்லாம் பிழைதான்
    நான்யார்? கண்ணை இமைக்காமல்
    நமச்சிவாயன் முன் நந்தி!
    தேனாற்றங்கரை திமிறியதைப்போல், நீ
    திரும்பித் திரும்பிச் சொன்னதெல்லாம்
    தித்திக்கத் தித்திக்கச் சிரித்ததெல்லாம்
    திணறத் திணற அணைத்ததெல்லாம், ஒரு
    தீர்ப்பைப் போலே கொடுத்ததெல்லாம்
    வானெங்கும் பல காவியங்களில்
    வந்து விட்டதாம் கேட்டாயா?

    நீ
    சொன்னவற்றுக்கே இப்படி என்றால்
    சொல்லாது வைத்துக் கொண்டவை?!

    Share