நவராத்திரி 2014 (3) நீ நான்
இசைக்கவி ரமணன்
நீ நான்
நெஞ்சத்தில் நீ
பஞ்சுக்குள் தீ
இன்னும்தான் ஏதேனும் எஞ்சுமோ? கொஞ்சம்
இதழ்திறந்து சொன்னால்தான் என்னவோ?
கண்ணெல்லாம் நீ
காலெல்லாம் நான்
காரியம் வேறேதும் உண்டுமோ? அடி!
காதல்நான் மாண்டாலும் மண்டுமோ?
உள்ளுக்குள் நீ
ஊருக்குள் நான்
உலகுக்கு நானென்ன சொல்வதோ? நீ
உன்வாயை அவலின்றி மெல்வதோ?
உன்பிடியில் நான்
உன்மடியில் நான்
உன்னடியில் ஒற்றைமலர் நானல்லவா? இந்த
ஒப்பற்ற நிலைபெறவே ஊனல்லவா?
என்விழியில் நீ
என்கவியில் நீ
என்கான வெளியெங்கும் நீயல்லவோ? நீ
எனைப்பெற்றுத் தினம்மகிழும் தாயல்லவோ!!
26.090.2014 / வெள்ளி / 19.35 / வள்ளியூர்-சென்னை ரயிலில்