நினைப்போ நிஜமோ
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (48)
நினைப்போ நிஜமோ
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%AE/[/mixcloud]
நீ
படுத்துப் புரண்ட மஞ்சம் – முகத்தைப்
பதித்துக் களித்த நெஞ்சம் – நாணம்
விடுத்துக் கொடுத்த இன்பம் – என்னை
விட்டுப் பிரிந்த துன்பம் – இதனை
அடுத்துக் கிளம்பும் கனவு – அதனை
அடக்கத் திணறும் நினைவு – வாய்
மடுத்துப் பரவும் வாசம் – எங்கும்
மண்டிக் கிடக்கும் கண்ணே!
உரத்துச் சிரித்த சிரிப்பும் – அதில்
உதிர்ந்த முத்துத் தெறிப்பும் – அந்தக்
கரத்தில் இருக்கும்நெருப்பும் – அதில்
கலந்த தண்மை விரிப்பும் – பெரு
வரத்தைப் பதியம் போட்டு – அதை
வளர்த்து மகிழும் பொறுப்பும் – என்
சிரத்தை வணங்க வைக்கும் – உன்
சித்திரப் பதத்தில் மயங்கும்!
கூடிக் கொழிக்கும் வனப்பும் – அதைக்
கொட்டிக் கொடுக்கும் நினைப்பும் – மடி
தேடி அமர்ந்த மிடுக்கும் – என்னைத்
தேம்ப வைக்கின்ற செருக்கும் – இமை
மூடிக் கிடக்கும் போதும் – என்னை
முற்றும் அளக்கும் மதர்ப்பும் – மனம்
பாடிக் களிக்கத் துடிக்கும் – அது
படியில் குடமாய் உருளும்!
உயிரை எடுத்துக் கொடுத்து – பின்
உயிரைக் கொடுத்து எடுத்து – சில
வயிரச் சுவைகளைத் தொடுத்து – மணி
வாயின் அமிழ்தில் குழைத்து – கொஞ்சம்
விடுத்து விடுத்துச் சுவைத்து – விழி
கிறங்கி மனத்தில் குவித்து – கூடு
விடுத்த பறவையைப் போலே – உயிரை
விசைத்துப் பொருத்தினாயே!
எனக்கும் உனக்கும் பழக்கம் – இது
எதையும் கடந்த நெருக்கம் – ஒரு
மனதும் மனதும் மயங்கி – சிறு
மலரும் வண்டும் இணங்கி – வளர்
கனவும் நினைவும் கலந்து – புதுக்
காதல் கவிதை பிறந்து – இனி
எனதுன தெல்லாம் மறந்து – நீளும்
எல்லைக் கெதுபெயர் சொல்லேன்!
என்னை உன்னிடம் தந்தேன் – அதில்
எத்தனை நிம்மதி அடைந்தேன்! நீ
புன்னகை யோடுனைத் தந்தாய் – காலைப்
பொழுதாய்ச் சிவந்து கிளர்ந்தேன் – உன்
அன்பின் மடியில் கிடத்தி – என்னை
அமரனாக்கினாய் தேவி! நீ
இன்னமும் செய்யவொன் றுண்டோ? அடி
இறைவனை மிஞ்சுதல் நன்றோ?!