இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக  (47)

[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F/[/mixcloud]

என்னதான் சொன்னாய் அப்படி?

10460321_685391018219040_5872195989517013130_n

சாற்றிய மாலைகளில், தேனீக்களின்
சங்கீதச் சுற்றுகள் போல்,
சாலையில் நடக்கும்போது
முகவாய் தடவி,
நாசியைக் கடந்துசெல்லும் மூலிகை வாசம் போல்,
நேற்றைய கனவில் எனக்கே எனக்காய்
நீ ஒரு கவிதையைச் சொன்னாய்..
நினைவை மறித்து…கனவைப் பறித்து…
நெஞ்சை அறவே நிறுத்திச் சிரித்தபடி…..

தூங்கிக் கிடந்த சொர்க்கங்கள், நீ
பொட்டு வைத்ததும் பதறின
உயிரில்..
தூர்ந்தே போன துவாரங்களில்
தேவ கீதங்கள் விளைந்தன
ஏங்கித் தவித்த புல்லின் நுனிகள்
எட்டிப் பார்த்தபடி எழுந்தன
எங்கே எங்கே என்றுதான் எல்லாம்
உன்திசை நோக்கி ஒசிந்தன

உருகி, உருகியபடி, எல்லாம் இங்கே
உனக்காகத்தான் காத்திருக்கிறது
ஒயிலான நிதானமாய், நீ
ஒவ்வோர் அடியாய்..ஒவ்வோர் அடியாய்..
உயிரெலாம் தவிக்க எடுத்து வைப்பதும்……….
உயிரை இழந்து இழந்து பிழைப்பதும் கூட
உவப்பாகி விட்டது

இத்தனைக்கும் இறுதியில், உன்
சுவாச சாமரத்தின் கதகதப்பில்
தழுதழுக்க வைக்கும்போது
நீ
அப்போதுதான்
திடீரென வந்ததுபோல் பேதலிக்கிறது புத்தி.
வருவதே தெரியாமல் வந்து நிற்பது
திறமையோ? கருணையோ?

வந்தாயே!

அதிருக்கட்டும்
பொன்னை உருக்கித் தேனில் குழைத்து
என்ன சொல்லிப் போனாய் நீ?

காலை…விழிப்பு….என்னும்
கரடு முரடான அவமானங்களில் வெட்கியபடி
கனவை நினைவுகூர்தல்
சாத்தியமில்லையே சகி!

இதயத்தின் இழைகளை
சின்ன இழைகூட மிச்சமின்றி மீட்டி
இனி
அடுத்துச் சொல்ல ஏதுமில்லாமல்
உன்னை முழுதாக
எடுத்துச் சொன்னவள்தான் நீ

இருந்தாலும்
நேற்றைய கனவில்
என்ன சொல்லியிருப்பாய்
என்பதைத் தவிர வேறேதும்
சிந்திக்க விடாமல்
சிரிக்கிறாய் நீ

ஒன்று செய்யேன்..
நிம்மதியின் சுனையான உன் மடியில்,
நேர்ந்துகொண்ட என்னைச் சாய்த்து,

மானாய் மீனாய் என்னுயிரை
மாறி மாறி விழுங்கும் கண்களை
மலர்த்தி மலர்த்தி என்னைப் பார்த்து,

மாலைச் சிவப்பு மாறும் தருணமாய்க்
கோலம் செய்யும் உதட்டைக் குவித்து,

மறந்ததெல்லாம் நினைக்கவைத்து
நினைத்ததெல்லாம் மறக்கவைக்கும்
மாய விரல்களால், என்றன்
மலிந்த தலைகோதி,

மலையுச்சி குகைக்கோயிலில்
மறைந்து ஒலிக்கும்
சுருதியைப்போல் சுண்டும் உன்
சுவாசத்தை கீதமாக்கி,

மொட்டை மாடியிலிருந்து
காற்றின் படிகளில் இறங்கி வந்து
தோளைத் தொட்டுச் செல்லும் புறாவின் சிறகைப் போல

மெல்ல…மிக மெல்ல….
என்னைத் தூங்கவை

கனவில் வா
கவிதை சொல்
கதவைச் சாத்திவிடு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *