புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க..
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (50)
புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க..
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF/[/mixcloud]
உன்முகம் பார்த்துப் பார்த்துத்தான்
ஒவ்வொரு காலையும் புலர்கிறது! அதில்
உதிக்கும் புன்னகை தயவில்தான்
உயிரும் உயிராய் மலர்கிறது
என்மனம் என்றே எதுவுமில்லை
இதயம் மட்டும் துடிக்கிறது, நீ
எதிரே இருந்தும் எங்கே என்று
ஏனோ பாவம் தவிக்கிறது…
இதயம் என்பது உள்ளே இல்லை
இரண்டு விழிகளில் சிரிக்கிறது
இம்மியும் எனக்குத் துன்பம் வந்தால்
இருகரம் ஒன்றாய் அணைக்கிறது
கதைகள் கனவுகள் கற்பனை எல்லாம்
கண்முன் தினமும் நடக்கிறது
காலம் எந்தன் தலையணை அருகே
கவிதைத் தாளாய்க் கிடக்கிறது
ஒவ்வொரு சமயம் இருக்கின்றாயா
என்றொரு கேள்வி குடைகிறது
ஒவ்வொரு நேரம் உன்னைத் தவிர
ஒன்றும் இல்லை புரிகிறது
கவ்விய தாயின் வாயில், குட்டிக்
கன்றாய்க் கிடக்கின்றேனே! உன்
காதல் என்னும் காவல் ஒளியில்
கண்ணைத் திறக்கின்றேனே!
இதயக் கதவைத் திறந்து திறந்து
எத்தனை முறைநான் பார்த்தாலும், அதன்
இருண்ட மூலையில் புன்னகை நினைப்பை
விளக்காய் ஏற்றிப் பார்த்தாலும்
பதிந்து பதிந்து பரந்து விரிந்து
பலவித வண்ண வடிவாக, உன்
பாதம்! சதங்கை கீதம்! இவையே
பார்த்து நெகிழ்கிறேன் என் தேவி!
என்னை முழுதும் இழந்தேனா? அதில்
ஏழை மகிழ்ந்தேனா?
உன்றன் நிழலை அடைந்தேனா? அதில்
ஊமை பிழைத்தேனா?
என்னை இழப்பது போலோர் இன்பம்
எதிலும் இல்லையம்மா! உன்
எதிரே நின்று நின்று கரைவதே
எனக்கு முக்தியம்மா!
எங்கும் இருந்தும் எனக்கே எனக்காய்
எதிரே வந்தாயே!
எல்லாம் ஆகியும் ஏழையை அணைத்து
எல்லாம் தந்தாயே!
பொங்கும் புனலாய்க் கண்ணில் இதயம்
பொங்கிப் பொங்கிவர..
புன்னகை ஒன்றின் பூரணமாய் நீ
புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க…..
படத்திற்கு நன்றி