இசைக்கவி ரமணன்

 

ஊழித் தீயிலும் தேன்

Balkanji-Santacruz1

 

என்னுள் ளிருக்கும் இருளை விழுங்கி
என்னை விட்டுவிடு! காளீ
எதிரே நின்று சிரித்தது போதும்
என்னைத் தொட்டுவிடு!
உன்னுள் ளிருக்கும் உள்ளத் தினில்நான்
ஒருநாள் எனைக்கண்டேன், இனி
ஒருபோ தும்நீ உதறமுடி யாதெனும்
உறுதியில் திமிர்கொண்டேன்!

எத்தனை பிறவிகள் என்னடி வினைகள்
என்னென்ன தண்டனைகள்! காளீ
எப்படி உனக்கு மனம்வந் ததடி
என்னைத் துவைத்தெடுக்க?
பித்தனை மணந்த பிச்சி யல்லவா
பிள்ளையும் பொருட்டில்லை! இனி
பின்கதை எதற்கு பிழைகள் உனக்கெது
பேசி மகிழ்வோம் வா!

நற்றமிழ்க் கவிதை நாளும் இரவும்
நாவில் நடமாட, காளீ
நனவும் கனவும் நாயகி நீயே
மனதில் நடமாட
கொற்றவை யே! என் கூட நடந்திடும்
ஒற்றைத் துணையே வா! யோகக்
கூரையில் நின்று கொக்க ரித்திடும்
கொள்ளை நெருப்பே வா!

“மகனே!” என்னும் மணிவார்த் தையினை
மறுபடி யும்சொல் சொல்! காளீ
மார்பை நிமிர்த்த மனிதர் கேட்க
மறவா தொருமுறை சொல்!
சுகமும் துயரும் தகர்ந்த தருணம்
சுதந்திர கீதெமெழும், உன்
சொந்தம் சொடுக்க முக்தியும் கூடச்
சொல்லிச் சொல்லி விழும்!

பிள்ளைப் பிராய விடலை மனதில்
வெள்ளம் போல்வந் தாய்! காளீ
பித்துப் பிடிக்க வைத்தாய், பலவித
பேதைமை கள்செய் தாய்
முள்ளை முகத்தில் மெள்ளத் தைத்தாய்
முட்டா ளாய்வைத் தாய், ஒரு
மூர்க்க இரவில் முத்தமிட்டாயே
முன்பின் நினைவுண்டா?!

நான்யா ரென்பதை நானெதற் கறிய?
நாடறி யும்படிச் செய்! காளீ
நானுன் மகனெனும் வானுயர் உண்மையை
நாவால் ஒலிக்கச் சொல்!
ஊனுள் ளவரை உரக்கச் சொல்வேன்
உன்மகன் உன்மகன் நான்! இந்த
ஒற்றை நினைவே ஊழி நெருப்பிலும்
ஊறி இனிக்கும் தேன்!

26.090.2014 / வெள்ளி / 19.06 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *