நானும் நீயும் நாளும் இரவும்
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (44)
நானும் நீயும் நாளும் இரவும்
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE/[/mixcloud]
நானும் நீயும்
நாளும் இரவும்
பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும்
வானம் புவியை
வருடும் கோட்டில்
வரிசை வரிசையாய் அமர்ந்திருக்கும்!
தேனும் மலரும்
தென்றலும் வந்து
தெம்பு வேண்டி இளைப்பாறும்! அதில்
கானம் கவிதை
யாவும் காதலில்
களஞ்சியமாகக் கொழித்திருக்கும்!
அவசரமாய்ச் சில தேவியர்கள்
அமரர்கள் பார்க்கா வண்ணம், தம்
கவலைகள் தீர நம் காதல் சொற்களைக்
கவர்ந்து செல்வர் மெல்ல!
திவலைகளாய் நாம் இருவரும் இரவில்
சிந்திய கண்ணீர்த் துளிகளைக் கண்டு
கவலைப் பட்டுச் சில விண்மீன்கள்
கள்ளத் தனமாய் இறங்கும்
தீபச் சுடரின் பரபரப்பாய், நீ
சிரித்த சிரிப்பின் திகழ்ச்சியிலே
திகைத்த மின்னல் நடுவழியில், ஒரு
கேள்வியின் வடிவில் சிலைத்திருக்கும்!
பாபம் துடைக்கும் பரிவினிலே, நீ
பாஷையை மீறிச் சொன்னதெல்லாம்
படித்துறையாகிப் பழம்பெரும் முனிவர்
பவித்திரமாக முழுக்கிடுவார்!
நானும் நீயும் பேசியதாக
நான்சொன்னதெல்லாம் பிழைதான்
நான்யார்? கண்ணை இமைக்காமல்
நமச்சிவாயன் முன் நந்தி!
தேனாற்றங்கரை திமிறியதைப்போல், நீ
திரும்பித் திரும்பிச் சொன்னதெல்லாம்
தித்திக்கத் தித்திக்கச் சிரித்ததெல்லாம்
திணறத் திணற அணைத்ததெல்லாம், ஒரு
தீர்ப்பைப் போலே கொடுத்ததெல்லாம்
வானெங்கும் பல காவியங்களில்
வந்து விட்டதாம் கேட்டாயா?
நீ
சொன்னவற்றுக்கே இப்படி என்றால்
சொல்லாது வைத்துக் கொண்டவை?!