அன்பிற்கினிய நண்பர்களே!
படக்கவிதைப் போட்டியைத் தொடங்கி, இதோ 300ஆவது வாரத்தைத் தொட்டுவிட்டோம். ஏராளமான புதிய கவிஞர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் அடையாளம் காண, இந்தப் போட்டி உதவியுள்ளது. இதில் ஊக்கத்துடன் பங்கேற்ற, இதற்குத் துணை நின்ற கவிஞர்கள், தங்கள் புகைப்படங்களை வழங்கிய புகைப்படக் கலைஞர்கள், படங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கிய சாந்தி மாரியப்பன், ராமலக்ஷ்மி உள்ளிட்ட தேர்வாளர்கள், நடுவராகத் தொடர்ந்து சீரிய செயலாற்றி வரும் மேகலா இராமமூர்த்தி. சில வாரங்களுக்கு நடுவராகச் செயலாற்றிய கவிக்கோ ஞானச்செல்வன், தொடர்ந்து வெளியிட்ட பவளசங்கரி, வல்லமை ஆசிரியர் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். ஒரே போக்கில் தொடர்ந்து செல்ல வேண்டாம் என்பதால், இந்த வாரத்துடன் இந்தப் போட்டியை நிறைவு செய்கிறோம். இதுவே இந்த வரிசையில் கடைசிப் போட்டி. அடுத்த வாரங்களில் வேறு புதிய போட்டியை அறிமுகப்படுத்துவோம். இப்போது இந்த வாரப் போட்டிக்குச் செல்வோம்.
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
புகைப்படக் கலைஞர் அமுதா ஹரிஹரன் எடுத்த இப்படத்தை அவர்களது தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (28.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
















