படக்கவிதைப் போட்டி – 291
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
புகைப்படக் கலைஞர் ஆர்.கே.லட்சுமி எடுத்த இப்படத்தை ஃபிளிக்கர் தளத்தில் இருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (03.01.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
ஐந்து முகங்கள் நூற்றியருபதோ பற்கள்
புன்னகை வெள்ளமோ புரண்டோடியது
கன்னங்குழியோடு ஓர் புன்னகை
காந்தமதை தோற்கடித்த ஒர் புன்னகை
மின்னலை வெட்டியதோ ஓர் புன்னகை
மீண்டு வரமுடியாத ஓர் புன்னகை
மகிழ்ச்சிக் குவியலோடு ஒரு புன்னகை
ஒற்றுமைக்கு ஓர் இலக்கணம்
இம்மழலைக் கூட்டங்கள்
தோளில் போட்ட கைகளோடு
தோரணைப் பார்வை
எதை நோக்கி என்றே தெரியவில்லை
தோல்வியேக் காணாத
தோழமையோடு இருக்கட்டும்
சுதா மாதவன்
மாறிடும் மனிதன்…
சிரிக்கும் சின்னஞ் சிறுமலர்கள்
சிந்தையில் நஞ்சிலா நறுமலர்கள்,
தெரியா சூது வாதுடனே
தெளிந்த நீர்நிலைச் சிரிப்பினிலே,
புரியா வயதின் புனிதங்கள்
பொய்யிலா பிள்ளைச் செல்வங்கள்,
அரிய காட்சி வளர்ந்தபின்னே
அனைத்து வஞ்சமும் சேர்வதாலே…!
செண்பக ஜெகதீசன்…
குழந்தைப் பருவம்
ஆட்டம் பாட்டு விளையாட்டு என்று
வாட்டம் துன்பம் கேடுகள் நீக்கி
கூட்டம் குழுவாய்க் கூடி நின்று
காட்டும் இன்பம்போல் ஏதுமில்லை
பணிச்சுமைகள் ஏதுமில்லை
பிணிப்புடுங்கள் நோய்களில்லை
கனியமது மொழிகள் போல
தேனமுதுச் சுவைகள் இல்லை
கள்ளங் கபடம் ஏதுமின்றி
வெள்ளப்பெருக்கின் ஓட்டம்போல்
துள்ளித் துள்ளி ஆட்டமிடும்
பிள்ளைப்பருவம் போல் வேறில்லை
அச்சம் நாண வேடங்கள் போட்டு
நெஞ்சில் உள்ளதை மறைப்பதில்லை
வஞ்சம் அறியாக் குழந்தையாய் இருப்பின்
கொஞ்சமும் இன்பம் குறைவதில்லை…