படக்கவிதைப் போட்டி – 297

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
புகைப்படக் கலைஞர் சரவணன் தண்டபாணி எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (07.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
பயன் பெறட்டும்…
வாழைக் குலையது விளைந்ததென
வயலில் வெட்டிக் கொண்டுசென்றால்,
ஏழையை ஏய்க்கிறான் சந்தையிலே
இடையே புகுந்திடும் தரகனுமே,
வாழ வழியிலை உழவனுக்கே
வழிப்பறி கொள்ளைதான் வழியினிலே,
பாழும் மனிதரே திருந்திடுவீர்
பயனது பெறட்டும் விவசாயியே…!
செண்பக ஜெகதீசன்…
வாழை
உழைக்கும் மக்கள் குறும்பசியைத் தீர்த்து வைக்கும் வாழை
ஏழை மக்கள் வீட்டினிலும்
குடியிருக்கும் வாழை
உயிர்ச்சத்து தாதுஉப்பு
உயர்ந்திருக்கும் வாழை
உடல் நலத்தைச் சீராக்க
உதவி செய்யும் வாழை
மருந்தாக மக்கள் நலம்
காத்து நிற்கும் வாழை
விருந்தோம்பல் வேள்விகளில் கொலு
வீற்றிருக்கும் வாழை
மனிதர் வாழ்க்ஸில் மங்களங்கள்
சேர்த்திருக்கும் வாழை
புனிதச் சின்னமாக என்றும்
பூத்திருக்கும் வாழை
அகிலம் எங்கும் கிடைக்கும் பழம்
ஆண்டவனுக்குப் படைக்கும் பழம்
இல்லை இதற்கு எங்கும் இவ்வுலகில்
ஈடு உண்டோ சொல்வீர்காள்…
உடலை பேண உதவும் இந்தப் பழம்
ஊரெங்கும் எளிதாக கிடைத்திடுமே
எத்தனையோ வகைகளும் உண்டு
ஏழைகூட வாங்க இயலும் பழமிது
ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இதனை
ஐந்து வயது குழந்தைகூட திங்கலாம்
ஒன்றை தினமும் சாப்பிட கிடைக்கும்
ஓடி உழைத்திட பல சத்துக்கள்
காயாக இருக்க கறிக்கும் உதவுதே
கால்நடைகளும் உண்டும் களிக்குதே
பாட்டி தாத்தா பாங்காய் உண்ணவே
பழுத்த பழம் அவரின் பசி தீர்க்குமே
மனிதன் உண்ட பின் இதன் தோலும்
மண்ணுக்கும் உரமாகுதே காணீர்
புதுமை வேண்டி ரசாயனத்தை இதில்
புகுத்த போகுதே உயிர் சத்துக்கள்
வகை வகையான இந்த வாழை
வாழ வைக்க வந்தது நமக்கிது வரமே
வாழையடி வாழையாக நாம் வாழவே
வந்த வாழையை வளர்த்திடுவோமே