மறவன்புலவு க. சச்சிதானந்தன்

தினமலர் முதன்மை ஆசிரியர் திரு இரா கிருட்டிணமூர்த்தி அவர்கள், என் மீது வற்றாத அன்பு பாராட்டுபவர். அளவற்ற பாசத்தைப் பொழிவார். இனிமையின் இருப்பிடம். மென்மையான பேச்சு எனினும் வலிமையான கருத்துகள்.

தினமலர் முதன்மை ஆசிரியர் திரு. இரா. கிருட்டிணமூரத்தி அவர்களை 1986 முதல் முதலாகச் சந்தித்தேன். சென்னையில் ஒளி அச்சுக் கோப்பு முறையில் தமிழைப் பரவலாக எடுத்துச் செல்ல முதலீடு செய்கிறேன். நிதி நிறுவனத்தில் கடன் கேட்கிறேன். சந்தை இருக்கிறதா எனக் கேட்கிறார்கள். தினமலர் நாளிதழுக்கு ஒளி அச்சுக் கோப்பு செய்து தருவதாக அவரிடம் கடிதம் கேட்டேன். அவரை அதற்குமுனஅ அறியேன். ஆனாலும் கேட்ட உடனேயே தன் செயலாளரிடம் கடிதத்தைச் சொல்லி என்னிடம் கொடுத்தார்

அக்காலத்தில் முனைவர் தமிழப்பன் தினமலரில் ஆலோசகராக இருந்தார். பேராசிரியர் அறவாணன் அவரின் நெருங்கிய நண்பர். பேராசிரியர் வி. சி. குழந்தைசாமி, பேராசிரியர் ஐராவதம் மகாதேவன் ஆகியோரும் அவரின் நெருங்கிய நண்பர்கள். இவர்களோடு நானும் பழகுவதால் திரு. கிருட்டிணமூர்த்தி அவர்களை அடிக்கடி சந்திப்பேன். அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கருத்தரங்குகளில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பான கூட்டங்களில் என்னை உற்சாகித்து ஊக்குவிக்கும் பெரியவர் திரு. கிருட்டிணமூர்த்தி.

தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக அவரும் மும்பையில் இருந்த மென்பொருள் நிறுவனமும் இணைந்து முதன்முதலாக மின்னம்பலத்தில் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தனர். தொடர்ந்து தினமலர் நாளிதழில் மின் எழுத்துருக்களையே  பயன்படுத்தியவர்   திரு. கிருட்டிணமூர்த்தி. அக்காலத்தில் ஏனைய அச்சு ஊடகங்கள் ஒளி அச்சுக்கோப்பு முறைக்கு மாறவில்லை.

புதிதாக எத் தொழிநுட்பம் அறிமுகமானாலும் முதலில் எடுத்தாளும் தமிழ் ஊடகர் திரு. இரா. கிருட்டிணமூர்த்தி அவர்களும் அவர் இல்லாதாரும். தினமலர் அவ்வகையில் முன்னணி நாளிதழே..

அவருடைய நாணயவியல் கண்காட்சிகளுக்குச் செல்வேன். நாணயவியல் தொடர்பாக அவர் அண்மைக்காலம் வரை எழுதிய நூல்கள் யாவும் என்னிடம் உள. அவரது நாணயவியல் நூல்களைக் காந்தளகம் வழியாக சந்தைப்படுத்துவோம்.

கொழும்புக்கு வந்தார். கொழும்பு அருங்காட்சியகத்தில் அதுவரை அடையாளம் அறிந்திராத 44 நாணயங்களை அடையாளம் கண்டு நூலாக வெளியிட்டார்.

இலங்கையில் இருந்து சென்னை வந்திருந்த ஊடகர்  திரு வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களைத் திரு. கிருட்டிணமூர்த்தியடம் அழைத்துச் சென்றேன். இராஜீவ் காந்தியைக் கொன்றிராவிட்டால் ஈழத் தமிழர் தலைநிமிர்ந்திருப்பரே அவரிடம் கூறினார்.

யாழ்ப்பாண வரலாற்றுப் பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் அவர்களை அழைத்துச் சென்றேன். வராலாற்றுச் செய்திகளைப் பரிமாறினர் இருவரும்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை சென்னைக்கு வந்திருந்தார். மேனாள் ஆளுநர் சி. சுப்பிரமணியம் தலைமையில் சென்னையில் வாழ்ந்த மேனாள் அந்நாள் துணைவேந்தர்கள்யும் தமிழ் அறிஞர்களையும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன். திரு. கிருட்டிணமூர்த்தி அவர்களும்  வந்திருந்தார். அவரது பாராட்டு உரையில் யாழ்ப்பாணத்தில் கூடுதல் விகிதாரத்திவ் பல்துறை அறிஞர்களும் இருக்கிறார்களே, காரணம் என்ன என வினவினார்.

அவர் மற்றும் அன்று அவருடைய உடன்பிறப்புகள் அவருடைய பெறா மகன் திரு கோபால் அனைவருமே என் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பார்கள். என் வீட்டுக்கு வருவார்கள்.

அண்மையில் திரு. கிருட்டிணமூர்த்தி அவர்களைச் சென்று பார்த்தேன். திருக்கோயில் திருப்பணி தொடர்கிறதா எனக் கேட்டார். திருப்பணிக்கு நிதியும் தந்தார்.

88 வயது வரை வாழ்ந்த பெருமகனார். நிறைவான வாழ்வு வாழ்ந்த பெருமகனார். தமிழ் அறிஞர் உலகில் தமிழ் ஊடகத் துறையில் வரலாற்றுத் தடம் பதித்தவர். இன்று அவர் நம்மிடை இல்லை. துயருறும் பெறாமகன் திரு கோபால் அவர்களுக்கும் இல்லத்தாருக்கும் நெஞ்சார்ந்த இரங்கல். தினமலர் அலுவலகத்தாரே உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *