படக்கவிதைப் போட்டி – 293
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
புகைப்படக் கலைஞர் ஆர். கே. லக்ஷ்மி எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (17.01.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
உன் முதுகில் சவாரி செய்ய
கிளிகளுக்கு அனுமதி
பச்சைக் கிளிகளுக்கு அனுமதி
சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை
கேட்டாயா என்ன சொல்லிற்று
பட்சிகளுடன் செலவழிக்கும் நேரம்
நம் கவலைகளை மறக்கும்
உணர்ந்தாயா அதில் மகிழ்ந்தாயா
நிரம்ப கிளிகளை அனுமதி
உன் முதுகில் சவாரி செய்ய
காதிற்கு தேனிசைதான்
மனதிற்குள் குலுங்கும் மலர்தோட்டம்தான்
உழைக்கும் முதுகின் வலிக்குப் பஞ்சழுத்தம் தான்
அனுபவி பட்சிகளோடு அனுபவி
சுதா மாதவன்
காலம் இது
போட்டு வைத்த படக்கட்டைப்
பொறுக்கியெடுக்கப் பழக்கிவைத்து
எதிர்காலம் உரைப்பேனென்று
ஏமாற்றிப் பிழைப்பவர் போல்
பணக்கட்டும் சின்னப்படமும்
போட்டிப்போட வாக்கு வாங்கி
காட்டி வைத்த வித்தைகளை
மீட்டெடுக்க விழையும் காலமிது!
ஆண்ட ஆளின் முதுகிலேறி
அவர் உரையை மொழிந்துவிட்டு
ஐந்தாண்டு கழித்து மீண்டும்
அடியவரின் வாசல் வந்து
காத்து நிற்கும் காலமிது!
பறந்து செல்லும் பச்சைக்கிளி
அரிசிமணி ஆசையிலே
சுதந்திரத்தை இழந்ததுபோல்
பெற்றெடுத்த உரிமைதனை
விற்றுவிட்டுத் தவித்திடாமல்
குற்றமற்ற தலைவர்களைத்
தேர்வு செய்யும் காலமிது