அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

புகைப்படக் கலைஞர் மாரியப்பன் கோவிந்தன் எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.02.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 296

 1. வண்டி கூறும் வாழ்க்கைப் பாடம்

  சிறு திவலைகள் சேர்ந்து
  சிறு துளிகளாய் மாறி
  பெருவெள்ளமாகிறது போல

  எளிதான எடை கொண்ட
  கூடைகள் குவியலாய்
  பலதாய் பெருகி பாரமாக
  தள்ளுவண்டி கூட தடம் மாறும்

  அதுபோலத்தான்…
  நம் வாழ்க்கையும்

  அமிர்தமே ஆனாலும் அளவிற்கு மிஞ்ச
  நஞ்சாகி விடும்
  எதற்கும் அளவீடு உண்டு
  எவை தேவையோ அதனை கொண்டு
  எளிமை வாழ்க்கை கண்ட
  மா மனிதர் நம் மண்ணில் வாழ்ந்தவர்கள்
  எண்ணில் அடங்கர்..

  இக் கருத்தினை
  ஏட்டில் வடித்து தந்த நீதி நூல்கள்
  எங்கோ முடங்கி கிடக்கிறது
  ஏராளமாய் முதிர் கனிகளாய்
  பரிசங்கள் படாமல் இன்னும்

  தேடி எடுத்து
  இளைய இத்தலைமுறைக்கு
  கொடுக்கும் கடமை நமதே..

 2. வாழ்வென்னும் பாதையில் ஓடும் எங்கள் வண்டி
  வயிறுதனை காக்கவே வலி்களையும் தாண்டி

  ஏற்றப்படும் சுமைகளோ இங்கே பலவாகும்
  ஏற்றுக் கொண்டு சுமப்பதே எங்கள் வாழ்வாகும்

  கூலி பெறும்பொழுது குடும்பமது நினைவில் வரும்
  குண்டு குழி சாலைகளும் குதூகலத்தைத் தரும்

  பாவி எங்கள் பாதையிலே அந்த டாஸ்மாக் வரும்
  பாதி பணம் செலவழிய பள்ளங்கள் பெரிதாகும்

  புயல்மழை வரும்பொழுது ஒதுங்குவதற்கும் இடமில்லை
  பொந்துக்குள் வாழும் எலிபோன்றதே எங்கள் நிலை

  உழைத்து உழைத்து வியர்த்தாலும் உறக்கம் வருவதில்லை
  உண்பதற்கு மூன்று வேளை உணவுகூட கிடைப்பதில்லை

  இலவச அரிசியெல்லாம் எதற்கென்று ஏசுகின்றார் பலர்
  அதுகூட இல்லையெனில் என்னவாகும் எங்கள் நிலை

  வாக்குதந்து வாக்குக் கேட்டு எத்தனையோ தேர்தல்கள் வரும்
  எங்கள் வாழ்க்கையில் என்றுதான் நல்லதொரு மாற்றம் வரும்?

  கூடைகூடைகளாய் சுமைகள்தான் தினம் பெருகிவிடும்
  விடைதெரியா வினாவுடன் பயணமும் தொடர்ந்துவிடும்!

 3. பாரம்…

  வண்டிப் பயணங்கள்
  வந்திடும் வாழ்க்கையில் பலவாய்,
  வண்டியோட்டிக்கு
  வாழ்க்கைப் பயணமே
  வண்டியானது..

  வாழ்க்கை பாரத்தைக் குறைக்க
  வண்டியில் ஏற்றுகிறார்
  அதிக பாரம்..

  மிதிக்கும் கால்களுக்கு
  வலுவில்லாதபோதும்
  வலு வந்துவிடுகிறது,
  வாழ்க்கை வண்டியும்
  சேர்த்து ஓட்ட்டுவதால்..

  இவர் போன்றவர்களுக்கு
  இரங்குங்கள்,
  ஏறிவிடாதீர்கள் வண்டியில்-
  இறங்குங்கள்…!

  செண்பக ஜெகதீசன்…

 4. பயணம் தொடர்

  எதிர்பார்த்து காத்திருந்து
  ஏங்கித் தவித்து ஏமாறி
  காயத்தின் வடுக்களை
  காலமெலாம் சுமந்து
  மயங்கித் தவித்து
  மனமொடிந்து மாள்கின்றோம்

  மெய்யன்புத் தேடலிலே
  துரோகத்தின் தாக்கத்தால்
  தூக்கி எறியப்படும் நேரம்
  சந்தேகத்தின் பாரம்
  நம்பிக்கையின் அச்சை
  முறிக்காமல் காத்திருப்போம்

  நடக்காதவற்றை நீக்கி
  நம்பிக்கை மனதிருத்தி
  நேர்மறை நல்லெண்ணம்
  நமதாக்கித் தொடர்ந்திருந்து
  நாளைய பொழுதை நமதாக்கி
  நம் பயணம் நாம் தொடர்வோம்

 5. விதியா இல்லை வினையா?

  விதியை வெல்ல முயன்ற இவனது
  மதி கூட சதி செய்து விட
  வயிற்றை நிரப்ப வழி தேடி
  வாழ்க்கைச் சக்கிரத்தை ஓட்ட
  சோர்வடைந்தாலும் சோற்றுக்காக
  பசியுடன் தன் பிள்ளைகளுக்காக
  மிதிக்கிறான் மிதிவண்டிச் சக்கிரத்தை

  இவனது விதி இவனோடு போகட்டும்
  இவனது தலைமுறையாவது வாழட்டும் பசியில்லாமல்….

  இதற்கு விடை இன்னும்
  வினாக்களாகவே நிற்கின்றன
  விஞ்ஞானத்தின் கண்டு பிடிப்புகள்
  விண்ணைத் தொட்டாலும்….

  வெல்ல முடியவில்லை இவ்விதியை
  விடையையும் தேடி தர முடியவில்லை
  விஞ்ஞானிகளால் அரசியல் தலைவர்களால்

  இது விதியின் சதியா இல்லை
  இது மதியின் கதியா அல்லது
  இவனது வினையின் பயனா

  இன்னும் இங்கு இருக்கிறார்கள்
  இவ்வறுமைக் கோட்டின் கீழே
  இல்லை இதற்கு விடை ஏட்டினிலே
  இருப்பவரின் இதயங்களில் தான்
  இருக்கிறது இதற்கு விடை…

  அது வரை மிதி வண்டிகள் ஓடும்
  ஆறு வழிச் சாலையிலும்
  அகல வழி சாலையிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *