அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

புகைப்படக் கலைஞர் கீதாமதி எடுத்த இப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தில் இருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (06.12.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 287

 1. புலர் காலை வனப்பில்
  புல் வெளி பரப்பில் ஒரு படுகொலை
  புள் அலகினில் அகப்பட்ட
  புழு துடிக்கிறது மனதும் கூட வலிக்கிறது

  உயிர் போராட்டம் இரண்டுக்கும்
  உருவாக்கிவிட்டது யாரோ?
  உருவாக்கியவனாலா? இல்லை
  உருவானவையாலா?

  உணவுத் தேடல் ஒருபுறம்
  உயிரின் வாடல் மறுபுறம்
  உற்றுநோக்கினால் வலியது பிழைக்கும் என்ற
  உலகின் இயக்க விதி உதிக்கிறது

  வாழ்வியல் உண்மைகளை
  வழமையாக சொல்லிச் செல்கிறது
  வாழ வாய்ப்பளித்த இயற்கை வெளி
  வழக்கமான தடுமாற்றங்களுடனே நாம்

  கல்லாய்க் கரடாய்க் கிடந்த மண்ணில்
  புல்லாய் பூண்டாய் பூத்த செடிகளும் கொடிகளும்
  புள்ளினமும் புழுவினமும் இன்ன பிறவும்
  புதிர்களை போட்டு அவிழ்க்கின்றன புரிதலுடனே

  புரியாத மானுடம் மட்டும்
  புதிது புதிதாய் பேராசை கொள்கிறது
  புவியின் புணர்ச்சி விதி தெரியாமல்
  புலம்பித் தவித்து பழியை பலர்மீதும் போட்டு

 2. இயற்கைச் சட்டம்…

  குஞ்சுகளின் பசிதீர்க்கக்
  கிடைத்தது பறவைக்கு
  புழு ஒன்று,
  அது
  தன் குஞ்சுகளுக்கு இரை
  தேடிவந்தபோது..

  பறவைக் குஞ்சுகளுக்கு
  இரை கிடைக்கும்போது
  இல்லாமல் போனதே
  புழுவின் குஞ்சுகளுக்குத் தாய்..

  இதுதான்
  இயற்கைச் சட்டமோ..

  இதோ இங்கே,
  காத்திருக்கிறான் மனிதன்-
  பறவைக்காக…!

 3. இரையாகத் துடிக்கும் புழுக்கள்

  கருமுட்டைதனிலிருந்து
  உயிர் கொண்டு,
  மேல்புழுவாய் வளர்ந்து
  சிறகு வளர்த்து
  சீர்வண்ணப் பூச்சியாகி
  உலகளந்து ஊர் மெச்ச வலம்வந்து
  மலரமர்ந்து
  மதுரத்தேன் தான் குடித்து
  முழுவாழ்க்கை வாழ்ந்திடாமல்
  சிறுத்தொகைக்கும்
  சிற்றின்ப போதைக்கும்
  சாதிமதச் சார்பு கொண்டும்
  மதுக்கோப்பைக் குப்பிக்கும்,
  ஆள்பவரை அமர்த்தவைக்கும்
  வாய்ப்பதனைத் தவறவிட்டு
  ஆண்டுகள் ஐந்தும் அழுதுநின்று
  அரசியல் வல்லூறுகளின் அலகினிலே
  இரையாகத் துடிக்கும் புழுக்களெனப்
  புரியாமல் தவிக்கின்றோம்…

  புதுத்தேர்தல் வரம் நேரம்!
  புதுப்பாதை வகுப்போமா? – அன்றி
  புதைச்சேற்றில் வெளியேற வழியின்றி
  புலம்பல்களை மொழியாக்கி
  தலைவிதியை நொந்திருந்து
  தவிப்பதையேத் தொடர்வோமா?

 4. வாயில் உன் உணவு
  வானத்தில் என்னப் பார்க்கிறாய்
  நிலத்தில் நிரம்ப உணவுண்டு
  நீர்நிலைகளில் மிதக்கிறாய்

  பசுமை செடிகொடி இலைகளிலே
  பாய்ந்து பரந்துப் பிடிக்கின்றாய்
  புழு பூச்சி புல்பூண்டு
  என்றே சொன்னால் மிகையாகா
  அனைத்தும் உங்களின் உணவன்றோ
  அதிசயப் பிறவி நீங்களன்றோ

  பறவையினமே உங்களைப் போல்
  பறந்து திரிய நினைக்கிறோமே
  பாடியாட மனம் தவிக்கிறதே
  உனைப் பார்ப்பதால் மனம் களிக்கிறதே

  சுதா மாதவன்

Leave a Reply

Your email address will not be published.