படக்கவிதைப் போட்டி 286இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. ஐயப்பன் கிருஷ்ணன் எடுத்திருக்கும் இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 286க்கு வழங்கியிருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பதிவாளருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றிகள்!
கட்டுக்களை விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல் பறப்பதற்குப் பயிற்சி எடுக்கிறாரோ எந்த இளைஞர்?
கவிஞர்களைக் கேட்போம்!
*****
”காசு பணத்தின் ஆசையிலே காற்றாய்ப் பறந்து அழிகின்றானே மனிதன்!” என்று மனிதனின் பேராசையால் நேரும் விபரீதத்தைச் சுட்டிக்காட்டி வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
பறக்காதே…
ஆசை மனிதனுக் கதிகம்தான்
அளவோ டிருந்தால் வெற்றியேதான்,
ஆசைப் பட்டே வான்பறக்க
அழகாய்ப் பறக்கிறான் விமானத்தில்,
மோசம் வந்திடும் மனிதனவன்
முகிலுடன் பறக்கத் தான்சென்றால்,
காசு பணத்தின் ஆசையிலே
காற்றாய்ப் பறந்தே அழிகிறானே…!
*****
”ஏன் இந்தக் குதியாட்டம் இளைஞனே? தூரத்து வானைத் தொடும் முயற்சியில் கிட்டிய ஆரம்ப வெற்றியாலா? ஒதுக்கீட்டில் இலட்சங்கள் செலவின்றி இலட்சியம் நிறைவேறியதலா? காரணம் எதுவாக இருப்பினும் வழுக்குப் பாறையருகே இந்தச் சாகசம் ஆபத்தானது!” என்று எச்சரிக்கின்றார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.
எச்சரிக்கை
உள்ளம் களிப்பு
கொள்ள
உடல் உயரே
துள்ள
எள்ளளவும் பயம் இன்றி
ஏனிந்தக் குதியாட்டம் வாலிபனே?
தூரத்து நீலவானைத்
தொட்டு விடும் முயற்சியில்
ஆரம்பத்து வெற்றி கண்ட
ஆனந்தக் கொண்டாட்டமோ!
7.5% இட ஒதுக்கீட்டில்
இலட்சங்கள் செலவில்லாமல்
இடம் கிடைத்த மகிழ்ச்சியோ!
ஈராண்டாய்க் காதலித்துப்
போராடிப் பலனின்றி
இதயம் மிகக் கனத்த வேளை
இருவீட்டார் சம்மதத்தால்
எழுந்தது இந்தக் களிப்பாமோ!
வருத்திடும் கொரானா நோயினை
எதிர்த்திடும் தடுப்பூசிக்கு
மருத்துவ அங்கீகாரத்திற்கான
மகிழ்ச்சியின் வெளிப்பாடோ!
எல்லையில்லா மகிழ்ச்சியில்
இதயம் திளைத்தாலும்
எச்சரிக்கை இல்லாது
எழும்பி உயர குதித்து
வழுக்கும் பாறையில் அடிபட்டு
வாழ்க்கையை
நரகமாக்கிடாதே வாலிபனே!
*****
”உயர உயரப் பறந்து போ! பட்சியாய் மாறு; பரவச வானம் உன்வசம் தான்!” என விண்ணை நோக்கித் தாவும் மனிதனுக்கு ஊக்கமூட்டுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.
வானத்தைத் தொடப் பறக்கிறாயா?
இல்லை உன்னுடனே அழைத்து வரத் துடிக்கிறாயா?
வானமே எல்லைதான்
வானவில் அதன் அங்கம்தான்
நட்சத்திரக் கூட்டமும் அதிலுண்டு
சந்திர சூரியரும் அதில் உலா வருவர்
அவர்களையும் பிடித்து வா!
மேகங்கள் உனை மூழ்கடிக்கும்
உலகமே உன் கையிலெனத் தோன்றும்
உயரஉயரப் பறந்து போ!
பட்சிகளாய் மாறு
பரவச வானம் உனது தான்!
*****
”இந்திர உலகம் எட்டிடவே மந்திரம் ஏதும் கிடையாது; பெரியோர் உரைத்த நல்வழி சென்றால் வெற்றிக்கு இங்குத் தடையேது! என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
துள்ளிக் குதித்து வானம் தொட்டு
உள்ளம் உவந்து களித்திருக்க
நித்தமும் ஏங்கித் தவித்திருந்தால்
இன்பம் கிட்டிட வாய்ப்பு இல்லை!
வெள்ளத்தளவே மலர் நீட்டம் என்று
வள்ளுவம் கூறும் கூற்றைப் போல்
தெள்ளிய சிந்தையின் வழிவந்த
தன் திறம் இன்றித் தந்திரம் இல்லை!
வெள்ளை மனமும் கருணைக் குணமும்
உள்ளவர் இன்பம் அழிவதில்லை
கள்ளும் கயமையும் தந்திடும் களிப்பு
காலம் முழுவதும் தொடர்வதில்லை!
தொல்லிய பெரியோர் உரைத்தது போல்
நல்லறம் செய்து உய்தலன்றி
இந்திரன் உலகம் எட்டிடவே
மந்திரம் ஏதும் இங்கு இல்லை!
*****
உயரத் தாவும் இந்த இளைஞனை மையமாக வைத்து உயர்வான கருத்துக்களைக் கவிதைகளில் பொதிந்து தந்திருக்கும் நம் கவிஞர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…
தூங்கிய விழிகள் துடித்து விழித்தன
ஏங்கிய மனது எட்டித் தாவியது
ஓங்கிய வானம் விட்டு விலகி விரிந்தது
எங்கும் இல்லை எனக்கு எல்லை!
சிறகில்லை ஆயினும் என்ன?
சிறகானது கரம் இரண்டும் – விரியட்டும்
சிறு முயற்சி தானே? சிக்கினால் சிகரம்!
சிக்காது சறுக்கினால் பயிற்சி!
வெளியே வழியாய் ஒளியே துணையாய்
வளியோடு வளியாய் ஒலியல்லா மொழியில்
விழியின் வழியே விழுங்கி அழகினால்
களிகொண்டு துள்ளித் திரியத் துணிந்தேன்!
எட்டாதன எல்லாம் கிட்டும்!
கிட்டாதன எல்லாம் எட்டும்!
விடாத முயற்சியின் வினையால்
விடை பெறட்டும் அயர்ச்சி!
விண்ணளக்கும் நம்பிக்கையோடு
விசையுடைய நரம்புகள் இணையட்டும்!
விதைபிளந்த விளைபயிர் முனை போல எழு!
விரிவானும் விளையாட்டுக் களமாகட்டும்!
நீல வானும் நீட்டும் நீண்ட கரம்
நிலவும் கூட நீ வா என விழி சிமிட்டும்
நிலமகளோ எனை ஏற்றிவிடுவாள்
நீ சாதிக்கப் பிறந்தவன் என்றே!
”உயரத் தாவும் இந்தச் சிறு முயற்சியில் எட்டினால் சிகரம்; சறுக்கினால் அதுவும் பயிற்சியே! விண்ணளக்கும் நம்பிக்கையோடு விசையுடைய நரம்புகள் இணையட்டும்; விரிவானும் விளையாட்டுக் களமாகட்டும்!” என்று தேர்ந்த சொற்களைப் பெய்து தம் கவிதையைச் சிறப்பாய் நெய்திருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
நடுவருக்கும் வல்லமை குழுமத்திற்கும் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள்
சக கவிஞர்கள் கவிதைகளும் சிறப்பு . அனைவருக்கும்பாராட்டுக்கள்