Blog

  • மதிப்புக்கூட்டு வரி உயர்வு..

    பவள சங்கரி

    தலையங்கம்

    நேற்று அதிரடியாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மதிப்புக் கூட்டு வரியின் மூலமாக விலையேற்றத்தை அதிகரித்துள்ளனர். அபரிமிதமான இந்த விலையேற்றத்தின் காரணம் என்ன என்று தெரியவில்லை. இதன் மூலமாக தமிழ்நாட்டில் எத்தனை கோடி உரூபாய் அரசு கருவூலத்திற்கு வந்துள்ளது. இது இந்தியச் சுதந்திர நாட்டின் ஒரு பகுதியா அல்லது அந்நிய ஆட்சியே மீண்டும் வந்துவிட்டதா? எல்லையில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதா அல்லது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளதா. இந்த வரி உயர்வின் மூலம் நிலைமை சீராகலாம் என்பதற்கு அந்நியர் ஆட்சி சுதந்திரப் போராட்டத்தின் போது உப்புக்கு வரி விதித்ததுபோல, அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோலுக்கும், டீசலுக்கும் வரி விதித்துள்ளனர். தேவையற்ற இலவசங்களை அறிவித்துவிட்டு அதற்குத் தேவையான பொருட்களின் மீது வரி விதிப்பது என்ன நியாயம். ஒரு சதவிகிதம் பேருக்கு அதுவும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு இலவசங்களை அளிப்பதற்காக 99% மக்களுக்கு வரி விதித்து வேதனை அளிக்கலாமா? நேற்று பெசண்ட் நகர் கடற்கரையில் பெண்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் கூடி, ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று முழங்கியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் அனுமதியின்றி அங்கு கூடியுள்ளது சட்டப்படி தவறு என்றும், ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று கோருவது அவர்களுடைய தரப்பில் அது தவறானது என்பது போல கலைந்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். அப்போது அந்தப் பெண்கள் ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று முழங்கியவாறு சுதந்திரப் போராட்டப் பாடல்களைப் பாடியவாறு ஊர்வலமாகச் சென்றுள்ளனர். இனி இதுபோல் தேவையற்ற வரி உயர்வுகளை அனைத்துப் பொது மக்களும் ஒன்றுகூடி ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்த வேண்டிய சூழலும் ஏற்படலாம்.

    இப்பொழுது தமிழகத்தை ஆளும் கட்சி சந்தேகத்திற்குரிய நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றதை ஆட்சேபித்து சென்னை உயர்நீதி மன்றம், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடமும் இந்தப் பிரச்சனைகளை கொண்டு சென்றுள்ள இந்த நேரத்தில் இந்த அபரிமிதமான வரிவிதிப்பில் அனைத்துத் துறையினர், மக்களிடமும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதே உண்மை நிலை.

    சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு நிலுவையில் இருக்கும் இந்த நேரத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கான வரியை அதிகரித்திருப்பது சட்டப்படி செல்லுபடியாகுமா என்ற ஐயமும் மக்கள் மத்தியில் உள்ளது.

    Share
  • படக்கவிதைப் போட்டி – (102)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17160640_1252909488096581_1882365069_n
    24942309@N07_rமுத்துக்குமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.03.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ’’பந்திக்கு முந்தவில்லை, பார்க்குது கண்ணனை,
    அந்தநாள் ஞாபகத்தில் அஞ்சனைசேய் -சந்தித்த
    ராமனாய் ,சாகேத ராஜீவ லோசனனாய்:
    தாமரைக்கண் காட்டித் தர’’….கிரேசி மோகன்….!

    Share
  • மலர்ந்த மனிதம்!

    பவள சங்கரி

    மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஈரோட்டில் ஒரு நகராட்சிப் பள்ளியில் மாணவர்களை நன்கு படிக்கவும், 100 % வெற்றி பெறவும் மனிதாபிமானமிக்க, ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுகிறார்கள் அப்பள்ளி ஆசிரியர்கள். ஆம், கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மாலை நேர தனி வகுப்பு இலவசமாக எடுப்பதோடு, அந்த மாணவர்கள் சோர்வில்லாமல், உற்சாகமாக படிக்கவேண்டும் என்பதற்காக, அந்த ஆசிரியர்கள் தங்கள் சொந்தச் செலவில், அந்த குறிப்பிட்ட தேர்வுக் காலங்களில், ஒரு நாளைக்கு ஒரு ஆசிரியர் என்று மாணவர்களுக்கு சிற்றுண்டி (4 இட்லி/சட்னி/சாம்பார்) வாங்கிக்கொடுக்கிறார்கள். இன்னொரு மனிதாபிமான விசயம், அப்பள்ளியின் முன்னாள் மாணவர், இன்று ஒரு சிறிய உணவு விடுதியின் உரிமையாளர், ரூ 10 இட்லியை 5 உரூபாய்க்கு கொடுக்கிறார்! இதல்லவோ மனிதம்!

    Share
  • எழுத்தெதற்கு ?

     

    கவிஞர் ஜவஹர்லால்

     

    பார்வையில்  கூர்மை  மிகவேண்டும் – கண்ணிற்

    பளிச்சென  உண்மை  படவேண்டும்.

    சீர்மையைப்  போற்றும்  திறம்வேண்டும் – நிலவும்

    தீமைகள்  சாடும்  உரம்வேண்டும்.

     

    அல்லவை  செய்வோர்  தமைக்கண்டால் – பாட்டால்

    அடிக்கும்  துணிவு  வரவேண்டும்

    நல்லவை  செய்வோர்  பாதமலர் – போற்றி

    நாளும்  வணங்கும்  உளம்வேண்டும்.

     

    அதிகா  ரத்தின்  வால்பிடித்தே – வாயால்

    அனுதினம்  புகழா   மனம் வேண்டும்.

    எதுதான்  வந்து  மோதிடினும் – எழுத்தில்

    இழுக்குச்  சேரா  நெறிவேண்டும்

     

    அடிதடிக்  கும்பல்  அதட்டலுக்கே – சற்றும்

    அஞ்சாத்  துணிவு  மிக வேண்டும்

    இடித்துப்  பொடியா   யாக்கிடினும் – நந்தம்

    எழுத்து  எழுந்து  வர வேண்டும்

     

    பள்ளமே  கிடப்போர்  மேடுவர – எழுதிப்

    பாதிப்  புக்கள்  தரவேண்டும்.

    உள்ளமே  நொந்து  கிடப்போரை – மயில்

    இறகாய்த்  தடவும்  திறம் வேண்டும்.

     

    நல்லவை  இவைகள்  இல்லையெனில் – இந்த

    நாட்டில்  எழுத்தே  எதற்காக?

    அல்லவை  ஒழிக்க  வில்லையெனில் – எழுத்தே

    அரும்புவ  தெல்லாம்   எதற்காக?

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 68

    education-1-1-1

    உணர்வு சார் நுண்ணறிவும் சுய அடையாளமும்

    தேடலின் பாதையில் கிடைக்கக்கூடிய அறிவு மற்றும் உணர்வுகள் விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான அடித்தளத்தை உண்டாக்குகின்றன. தன்னைப்பற்றிய விழிப்புணர்வுகள் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள், பொருட்கள், மனிதர்கள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வுகள் என்ற இரண்டுக்கும் உள்ள உறவு நிலைகளைப் பற்றிய கற்றலையும் அறிவையும் அளிக்கின்றன. இந்த உறவு நிலையை பயம், விந்தை, அன்பு, ஆச்சரியம் போன்ற உணர்வுகள் மேம்படுத்தவோ அல்லது விலக்கிவிடவோ செய்ய வாய்ப்புள்ளது. ஆகவே வளரும் பருவத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் இந்தத் தேடல் நிலைகளைப் புரிந்துகொண்ட சரியான தர்க்கரீதியான அறிவுபூர்வமான உணர்வுகளைப் பெறவும் வலுப்படுத்தவும் உதவ வேண்டும். பல நேரங்களில் இந்த உறவுகளைப் பற்றிய தவறான அனுபவங்களையோ உணர்வுகளையோ கொடுத்தால் வாழ்க்கை முழுவதும் உணர்வுகளின் தேக்கமும் அதைத் தொடர்ந்த விபரீத மனநிலைகளும் மனப்பக்குவமும் ஏற்பட வாய்ப்புண்டு.

    உதாரணமாக நிழல்களைக் கண்டு பயப்படுதல், ஒருவரின் உடல் பாங்குகளைக் கண்டு அச்சுறுதல், சில பறவைகள் பூச்சிகளைக் கண்டு அச்சுறுதல், சில உறவுகளுடன் அதிக அளவில் சார்புநிலைகளை ஏற்படுத்தல், விருப்பு -வெறுப்பு நிலைகளை வளர்த்தல் போன்ற பல மன நிலைகளை இந்த வளர்ச்சிநிலையில் பெற வாய்ப்புக்கள் உண்டு. இவை அனைத்தும் விழிப்புணர்வை வளர்க்கும் பாதையில் கிடைக்கும் மலர்களும் முட்களும் ஆகும். இவைகளின் உண்மையான நிலையினை அறிவுபூர்வமாக உட்கொள்ளுவதே கற்றலின் வெற்றி.

    இந்தத் தேடலின் பயிற்சியும் விளைவுகளும் தன்னைப் பற்றிய ஒரு அடையாளத்தை மனதிலும் அறிவிலும் ஏற்படுத்த, வளர்க்க மற்றும் போற்ற உதவுகின்றன. தன்னைப் பற்றிய ‘சுய அடையாளம் ‘ (Self- identity) மனவளர்ச்சிக்கும்  வாழ்க்கைப் பாதையை உறுதி செய்வதற்கும் இன்றியமையாதது. வளரும் குழந்தைகளிடம் இந்த “சுய-அடையாளத்தை’ வளர்ப்பதில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்த ‘சுய- அடையாளமே’ கற்றலின் போக்கு, திசை, விளைவுகள், முயற்சியின் வடிவங்கள், வளமை, வளர்ச்சி நிலைகள் ஆகியவற்றை வடிவமைப்பதற்கும் உரமிடுவதற்கும் துணையாக அமைகின்றது.

    சுய-அடையாளத்தைப் பெறுவதற்கு முதல் படியாக தங்களைத் தாங்களே மதிக்கக் (Respecting the self) கற்றுக்கொள்ள பழக்கவேண்டும். தங்களைத் தாங்களே மதிக்காதவர்கள் மற்றவர்களிடமிருந்து சரியான தரமான மதிப்பை பெறுதல் மிகவும் கடினம். இந்தக் கற்றலுக்கான அடையாளங்கள் என்ன என்பது பற்றிய உலகளாவிய ஆரய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக தன்னுடைய உடலைப் பேணுதல் இதன் முதல் படி. தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்தல், தங்கள் மனநிலைகளைப் பேணிக்காத்தல், உடமைகளை சீராக வைத்தல்,  நல்ல உடைகளை அணிதல், நல்ல உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளுதல், நல்ல சிந்தனை, நல்ல பேச்சு வார்த்தைகள், ஆரோக்கியமான சூழ்நிலைகள், சுற்றுப்புறச்சுத்தங்கள் இவை அனைத்தும் நம்மையும் நம்முடைய சூழ்நிலைகளையும் நாமே போற்றுவதற்கான அறிகுறிகள்.

    ஒருவகையில் பார்க்கப்போனால் “சுய அடையாளம் ” என்பது நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் ஒரு கட்டுப்பாடு. உதாரணமாக நேரம் தவறாமை, கால நிர்வாகம், ஒழுக்கமான நாணயமான வாழ்க்கை, வார்த்தை நாணயம் போன்ற பல சிறப்பான வாழ்க்கை முறைகள், குணாதிசயங்கள் சுய அடையாளத்துக்கு முன்னுரையாக அமைகின்றன.

    பிற்கால வாழ்க்கைப் பயணத்திற்கு சுய -அடையாளங்கள் பாதுகாப்பான சாலைகள். நல்ல சுய-அடையாளங்களைப் பெற்றவர்கள் பல துறைகளிலும் தலைவர்களாகவும் முன்னோடிகளாகவும் ஒளிர வாய்ப்புக்கள் அதிகமாக அமைகின்றன. இதைக் கற்றுக்கொள்வதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் முன்மாதிரியாக இருத்தல் அவசியம்.

    சரியான சுய-அடையாளங்களை இளம் வயதில் பெற முடியாத பலரும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இதே தேடலில் முயன்று இயலாமையில் தோல்வி மனப்பான்மைக்கு இரையான பல கதைகள் உண்டு. மற்றும் பிற்காலத் தேடலில் அவர்கள் பெரும்பாலும் சரியான முன் மாதிரிகள் கிடைக்காமல், தங்களுடைய அடையாளங்களை மற்றவர்களோடு ஒரே மாதிரியாக வைக்க முயற்சி செய்தும் மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்வு  மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்வதும் இந்த சமுதாயம் அறிந்ததே.

    ஆகவே பள்ளிகளில் கிட்டத்தட்ட ஐந்து- ஆறு வயதுதொட்டே இந்த வாழ்க்கைக்கல்விக்கான கருத்துக்களை மறைமுகமாகவும் அனுபவபூர்வமாகவும் கற்பதற்க்கான  சூழ்நிலைகளை ஏற்படுத்துதல் அவசியமானதாகத்  தெரிகின்றது.

    (தொடரும் )

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (46)

    நிர்மலா ராகவன்

    மாற்றம் ஏமாற்றமல்ல

    நலம்-2-1-1-1

    மாறுவது நல்வழியில் இருப்பின், அதுவே முன்னேற்றம் என்பது. இல்லாவிட்டால், காலத்தையும், விதியையும் பழித்துக்கொண்டு, வாழ்வில் பிடிப்பில்லாது இருக்கவேண்டியதுதான். இதைத்தான், ஆடை நனைந்த சிறு குழந்தைகள்தாம் மாற்றத்தை விரும்புவர் என்று விளையாட்டாய் சொல்வதுண்டு.

    எதுவும் பழையபடியே இருந்தால், அது பழகிப்போய்விடுகிறது. புதிய வழி எப்படி இருக்குமோ என்ற அச்சமே மாற்றத்தை ஏற்கவிடாது தடுக்கிறது.

    தெருவில் நடந்து போகையில், ஒரு வாகனம் நம் எதிரில் விரைந்து வந்தால் நேராகவே போவோமா? திசையை மாற்றுவதில்லையா? வாழ்க்கையும் அதுபோல்தான். சில தடங்கல்களை மாற்றத்தால் விலக்கலாம்.

    மாற்றத்துக்கு முக்கியமானது `பிறர் என்ன சொல்லி விடுவார்களோ!’ என்ற பயத்தை விலக்குவது. `சரியானதுதான்’ என்று நமக்குப் பட்டதை துணிந்து செய்தால் வெற்றி நிச்சயம்.

    “உலகில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், நீ உன்னையே மாற்றிக்கொள்!” (மகாத்மா காந்தி).

    கதை

    நான் ஆசிரியத் தொழிலில் புகுந்தபோது, கோலாலம்பூரிலிருந்த பிற ஆசிரியைகளைவிட மிகவும் மாறுபட்டிருந்தேன். பெரும்பாலானோர் சீனர்கள். எண்ணை வைத்து வாரிய என் ஒற்றைப்பின்னல் அவர்களை மட்டுமின்றி, மாணவிகளையும் முகம் சுளிக்க வைத்தது. நான் தனித்து உணர்ந்தேன்.

    முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டேன். `ஒரு சொட்டுக்குமேல் எண்ணை வைத்துக்கொள்ளாதே! அடிக்கடி தலை சீவிக்கொள்,’ என்றெல்லாம் சக ஆசிரியைகள் நட்புரிமையுடன் போதித்தார்கள். `லிப்ஸ்டிக் அணியுங்கள், டீச்சர்!’ என்று கெஞ்சினார்கள் மாணவிகள்.

    வெளி அலங்காரத்தில் அவர்களைப்போல சில மாறுதல்களைச் செய்துகொண்டதால் அவர்களுக்கு என்னைத் தங்களில் ஒருத்தியாக ஏற்க முடிந்தது.

    என் புக்ககத்தினரைப் பொறுத்தவரை, கணவன் இறந்தபின்தான் ஒரு பெண் தலையை மழித்துக்கொள்வாள். எனவே அவர்கள் அதிர்ந்தார்கள். எல்லாரையும், எப்போதும் திருப்திப்படுத்த முடியாது.

    என் பெயர் சற்று பிரபலமானதும், “என் பொண்ணும் ஒன்னைமாதிரியே தலைமயிரை வெட்டிண்டுட்டா!” என்று பெருமையுடன் சொன்னார்கள் சில தாய்மார்கள்!

    கேலியைப் பொருட்படுத்தாதே!

    `நடக்கிறோம், ஓடுகிறோம். இது போதாதா?’ என்று திருப்தியுடன் பலரும் இருக்க, `மனிதனும் பறக்கலாம்’ என்று நம்பி ஆராய்ச்சிகள் செய்த ரைட் சகோதரர்கள் எவ்வளவு கேலிக்கு ஆளானார்கள்! `

    அவர்கள் நிகழ்த்திய மாற்றத்தால் உலகம் இன்று சுருங்கித்தான் விட்டது. பிறர் ஏற்கவில்லையே என்று அவர்கள் தமது ஆராய்ச்சியைப் பாதியிலேயே கைவிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்!

    கல்வியால் மாற்றங்கள்

    `ஏழைகள் ஏழைகளாகவே இருந்தால்தான் அடங்கி இருப்பார்கள், அவர்களை எதற்காக மாற்றுவது?’ என்று பின்தங்கிப்போனவர்களுக்கு கல்வி அறிவே கூடாது என்றிருந்த காலம் அது. ஒரு பிராமணர் சேரிகளுக்குச் சென்று, கல்வி போதித்ததால் அவரை அச்சமூகம் விலக்கி வைத்துவிட்டதாகப் படித்திருக்கிறேன். எந்தவித மாற்றமும் முதலில் எதிர்ப்புக்கு ஆளாகும்.

    அதுபோல்தான் பெண்கள் கல்வி பயில்வதும். `நிறையப் படித்தால், கர்வம் வந்துவிடும். நம்மை மதிக்கமாட்டாள்!’ என்ற அச்சத்தால் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஆவதே துர்லபம் என்றிருந்தது போன நூற்றாண்டின் பாதிவரை.

    பட்டப்படிப்புப் படித்த பெண் ஒருத்தி சில பழக்கவழக்கங்களை அறிவுபூர்வமாக எதிர்க்கும்போது, `இதுக்குத்தான் பெண்களைப் படிக்க வைக்கக்கூடாது என்கிறது!’ என்று உறவினர் கண்டனம் செய்வார்கள்.

    படித்து வேலைக்குப் போகும் பெண்ணானவள் குடும்பத்தின் பொருளாதார நிலைமையை உயர்த்துவதோடு, சொந்தக்காலில் நிற்கவும் பழகுகிறாள். அவளுடைய தன்னம்பிக்கை கூடுகிறது. அதனால், குழந்தைகளும் நல்லவிதமாக வளர்க்கப்படுவார்கள். ஒருக்கால் கணவனை இழந்தாலும், பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கணவனை அச்சத்துடன் பார்த்து வந்த நிலை மாறி, இன்று நண்பனாகக் கருத முடிகிறது என்றால், அது பெண் கல்வியினால் அல்லவா? இதெல்லாம் புரியாது, பெண்கள் கல்வியறிவே அற்றவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்றிருந்த காலமும் உண்டு. துணிந்து அதை மாற்றியவர்களுக்குப் பாராட்டுகள்.

    மாற்றுவது எப்படி?

    பேசும், எழுதும் வார்த்தைகளாலும், புதிய எண்ணங்களாலும், செயலாலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

    என்னிடம், `யாரும் உங்களைப்போல் புகார் செய்து எழுதுவதில்லை!’ என்றார் என் மாணவியின் தந்தை. முதல்முறையாக அப்போதுதான் சந்தித்திருந்தோம்.
    என்ன புகார்?

    தமிழ்ப்பெண்கள் நெற்றிப்பொட்டு வைத்துக்கொண்டு வந்தார்கள் என்ற காரணத்தால் அவர்கள் கன்னத்தில் அறைந்த தலைமை ஆசிரியைப்பற்றி;

    தமிழ்ப்பையன் வகுப்பில் பேசினான், வீட்டுப்பாடம் செய்துகொண்டு வரவில்லை என்று அவனைத் தன் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அடித்த கட்டொழுங்கு ஆசிரியருக்கு எதிராக;

    மாணவிகளை பாலியல் வதைக்கு உட்படுத்த முயன்ற ஆசிரியர்களைப்பற்றி;

    தினமுமே, ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்கள் செய்த சில தவறுகளை ஒலிபெருக்கியில் அலறி, மாணவர்களும் கேட்டு பரிதாபப்படச் செய்த தலைமை ஆசிரியையைப்பற்றி;

    மனைவியை அடித்துத் துன்புறுத்திய எனது பக்கத்து வீட்டுக்கார மலாய்க்காரரைப்பற்றி;

    இங்குள்ள பிரபலமான கோயில் பிரகாரத்திலேயே ஒரு குரங்குக்குட்டியை கயிற்றில் கட்டி, அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கட்டணம் விதித்தவனையும், அதை அனுமதித்தவர்களையும்பற்றி. குரங்குக்குட்டி தன் சாகசங்களைக் காட்ட குட்டிக்கரணம் அடித்தபோது, அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த குட்டையான கயிறு அதைப் பின்னால் இழுத்ததைப் பார்க்க என் மனம் கொதித்தது.

    இதைப்போல் இன்னும் எவ்வளவோ!

    நான் கணவனால் வதைபடும் இந்தியப் பெண்களைப்பற்றி (ஆங்கிலத்தில்) எழுதி, எவ்விதம் நம் சமூகம் அதைக் கண்டும் காணாததுபோல் நடந்துகொள்கிறது என்று எழுதியபோது, முன்பின் தெரியாத ஒருவர் என்னைப் பொது இடத்தில் பார்த்தபோது, அடிக்காத குறை.

    வதைபடும் பெண்களுக்கு அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியாத நிலையில், என்னைப்போன்ற பிறர் அதை அலசுவதில் என்ன தப்பு? (மனைவியை அடிப்பது இப்போது மலேசியாவில் சட்டவிரோதம்).

    இப்படியாக, பிறருக்கு நன்மை விளைவிக்கும் பற்பல மாற்றங்களையும் எழுத்தால் ஒருவர் நிகழ்த்த முயன்றால், நிறைய எதிர்ப்புகளையும், அவமானங்களையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.

    தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள், `எதிரிகள் வேண்டுமென்றால், ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்து,’என்று! (இதனால்தான் கோழைகள், `நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம். பிறர் எப்படி நாசமாகப் போனால் என்ன!’ என்று, சுயநலமிகளாக இருப்பதிலேயே திருப்தி அடைந்துவிடுகிறார்கள்போலும்!)

    மாற்றம் நிகழ்ந்து, பிறர் அதனால் பயனடையும்போது நமக்கும் மகிழ்ச்சி உண்டாக, இப்படித்தான் துணிச்சலாகச் செயல்பட வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். தைரியம் அதிகரிக்கும்.

    வேண்டாத மாற்றங்கள்

    எல்லாவித மாற்றங்களும் நன்மையில்தான் முடியும் என்பதில்லை. உதாரணமாக, சிகரெட்டு பிடித்தாலோ, அல்லது மது அருந்தினாலோதான் நண்பர்களுடன் கலந்து பழகமுடியும் என்ற மாற்றம் தகாது. இளமையில் உற்சாகமாக இருப்பது போகப் போக வீண்செலவிலும், ஆரோக்கியக் கேட்டிலும்தான் முடியும்.

    `தீயது’ என்று புரிந்தவுடன் விலக, அப்பழக்கங்களை மாற்றிக்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்பழக்கங்களை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் பிற நண்பர்கள் கேலி செய்வார்கள். `கெட்ட பழக்கம்’ என்று ஒருவர் மட்டும் சேராதிருப்பது அவர்களைப் பழிப்பது போலாகிவிடுகிறது. இது புரிந்தால், அஞ்சத் தேவையில்லை.

    இயற்கை நிகழ்த்தும் மாற்றங்கள்

    `நாங்கள் மாறவே மாட்டோம்!’ என்று பெருமை பேசுகிறவர்கள் இருக்கலாம். ஆனால், வயது ஏற ஏற, நாமும் மாறவேண்டும் என்று கருதவைக்கும் எண்ணம் ஒன்றும் நம்மில் பலருக்கு இருக்கிறது. வயது வந்த பெண் இருந்தால், தாய் அலங்காரத்தில் நாட்டம் கொள்ளக்கூடாது; தாய் தந்தையர் தனித்தனியே படுக்க வேண்டும் — இப்படி.

    `எனக்கென்ன, வயதாகிவிட்டது!’ என்று அலுத்துக்கொள்வதுபோல் பெருமையாகச் சொல்லிக்கொள்பவர்களைத்தான் வயதுக்கேற்ற வியாதிகளும் அண்டுகின்றன.

    என் தோழி ஒருத்தி தன் தந்தை தனது எண்பத்து இரண்டாம் வயதில் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆனார் என்று அவள் பெருமையுடன் தெரிவித்தாள். அவள் மலாய்க்காரி.

    பசித்தால் சாப்பிடுகிறோம். உடற்பசி என்றால் மட்டும் கேவலமா! இத்தகைய மனப்போக்கினால், மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்பவர் விவரம் தெரியாத பெண்களுடன் சல்லாபம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

    எனக்குப் பேரக்குழந்தை பிறந்ததும், என் சிநேகிதி மிஸஸ் கோ, “நீ இன்னும் நீச்சல் குளத்துக்குப் போகிறாயா?” என்று கேட்டாள்.

    “ஏன் கூடாது?” என்று கேட்டேன்.

    அவள் ஏதோ கேலி செய்தாள்.

    நான் சட்டை செய்யவில்லை. வயதாகிவிட்டதே என்று நடக்காமல் இருந்துவிடுகிறோமா? நீச்சல் ஆரோக்கியமான பொழுதுபோக்குதானே! எதற்கு மாற்றிக்கொள்வது?

    கதை

    நான் ஆசிரியப் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கு ரோமியோவும் இருந்தார். தினம் ஒரு சீனப்பெண்ணின் கையைக் கோர்த்துக்கொண்டு நடந்ததால், எல்லாரும் அவரை அப்படித்தான் குறிப்பிடுவார்கள்.

    நான் அவருடன் பேசியதே கிடையாது. அவருடைய இயற்பெயரையும் அறியேன். (வெவ்வேறு பாடங்களை எடுத்திருந்தோம்).

    இருபது ஆண்டுகள் கழித்து, மேற்பயிற்சியின்போது என்னைச் சந்தித்து, “நீங்கள் மிகவும் மாறிவிட்டீர்கள்!” என்றார்.

    நான் அதற்கு நேரிடையாகப் பதில் கூறாது, “உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறதா?” என்று விசாரித்தேன்.

    “இருபது வயதில் மகள்,” என்றார், பெருமையுடன்.

    “இருபது வருடங்களுக்கு முன்பு உங்கள் மகள் இப்போது இருப்பதுபோலவா இருந்தாள்?” என்று கேட்டுவிட்டு, அவர் வாயைப் பிளக்க வைத்துவிட்டு, அப்பால் நகர்ந்தேன்.

    இயற்கை நமது உடலில் மட்டுமா மாற்றங்களை ஏற்படுத்துகிறது? நடை, உடை, பேச்சு எல்லாமே இடத்துக்குத் தக்கபடி மாறிவிடுகின்றன.

    கதை

    எங்கள் நண்பர் ஸலிஹின் மேற்படிப்புக்காக கானடா சென்றிருந்தார். திரும்பி வந்ததும், அவருடைய உச்சரிப்பு `அமெரிக்கானோ’ மாதிரி ஆகிவிட்டது என்று நண்பர்கள் கேலி செய்தார்கள்.

    “நான் அங்கு வகுப்பில் பேசியபோது எல்லாரும் சிரித்தார்கள். (சாதாரணமாகவே, அவர் பேசுவது மலாய் மொழியா, அல்லது ஆங்கிலமா என்று புரியாது). அதனால் உச்சரிப்பை மாற்றிக்கொண்டேன். இப்போது இங்கும் எல்லாரும் சிரிக்கிறார்கள்!” என்றார் அழமாட்டாக்குறையாக.

    கல்யாணமான பின்போ, அல்லது வேறு நாட்டுக்குச் செல்ல நேரிட்டாலோ, தம் குழந்தைகள் மாறிவிடுகிறார்களே என்று பெற்றோர் அங்கலாய்ப்பதிலும் அர்த்தமில்லை.

    மாறாக, சிறுவயதில் தாம் போதித்த அன்பு, நேர்மை, பரோபகாரம் போன்ற நற்குணங்களை என்ன துன்பம் வந்தாலும் இழக்காது இருக்கிறார்களே என்று பெருமைப்படலாமே!

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(158)

    -செண்பக ஜெகதீசன்

    குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
    வடுவன்று வேந்தன் றொழில். (திருக்குறள் -549: செங்கோன்மை) 

    புதுக் கவிதையில்…

    மற்றவர்கள் துன்புறுத்தலின்றி
    மக்களைப் பாதுகாத்தல்
    மன்னனின் கடமை…
    மக்கள்தம் குற்றங்களுக்காக
    அவரைத் தண்டித்தல்
    பழியன்று,
    தொழிலாகும் மன்னவர்க்கு…! 

    குறும்பாவில்…

    பிறரிடமிருந்து மக்களைக் காக்கும் மன்னன்,
    தவறிழைப்போரைத் தண்டித்தல் குறையன்று…
    அவன் கடமை அது! 

    மரபுக் கவிதையில்…

    மற்றவர் கொடுக்கும் இடரழித்தே
         -மக்களைக் காத்தல் மன்னர்கடன்,
    கொற்றவர் இவர்க்குப் பழியன்று
         -குடிகள் எவரும் தவறிழைத்தால்,
    குற்றங் கண்டு தண்டித்து
         -குடிகள் நலனைக் காத்திடலே,
    நற்றுணை யாக யிருப்பதுதான்
         -நல்ல மன்னர் தொழிலன்றோ…! 

    லிமரைக்கூ…

    மாற்றார் செய்திடும் கொடுமை
    தடுத்துக்காக்கும் மன்னன், தவறுவோரைத் தண்டிப்பது,
    பழியன்று, அவன்தன் கடமை! 

    கிராமிய பாணியில்…

    மன்னவரு மன்னவரு
    மக்களக் காக்கும் மன்னவரு,
    மத்தவங்க யாராலயும்
    துன்பம் வராம
    மக்களக் காக்கும் மன்னவரு…
    மக்கயாரும் தப்புசெஞ்சா
    தண்டிக்கிற மன்னவரு,
    அது அவுருக்குப் பழியில்ல
    அவுரோட தொழிலுதானே… 

    அவுருதான்,
    மன்னவரு மன்னவரு
    மக்களக் காக்கும் மன்னவரு…!

     

     

     

    Share
  • தெருக்கூத்துக் கலைஞர் பட்டுக் கவுண்டர்!

    -முனைவர் மு.இளங்கோவன்

    நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு இரண்டு நண்பர்கள் அண்மையில் வந்தனர். ஒருவர் முன்பே அறிமுகம் ஆனவர். அவரின் பெயர் திரு. குணசேகரன் என்பதாகும். பொ.தி.ப. சாந்தசீல உடையார் அலுவலகத்தில் கணக்கராகப் பணிபுரிந்தவர். உடன் வந்தவர் அவரின் தம்பி திரு. சரவணன் ஆவார். வந்தவர்கள் பலபொருள்குறித்து என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் எங்களின் பேச்சானது தெருக்கூத்து நோக்கி நகர்ந்தது.

    புதுச்சேரியில் மிகுதியான தெருக்கூத்துக் கலைஞர்கள் இருந்துள்ளமையையும் அவர்களைப் பற்றிய போதிய பதிவுகள் இல்லாமல் உள்ளதையும் அவர்களிடம் தெரிவித்தேன். என்னுடன் உரையாடிய சரவணன் தெருக்கூத்துக் கலைஞர் என்பதையும், கலைமாமணி கோனேரி இராமசாமி அவர்களின் கலைக்குழுவில் உள்ளவர் என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்.

    சரவணன் அவர்களிடம், தங்களுக்குத் தெரிந்த மூத்த தெருக்கூத்துக் கலைஞர்கள் புதுவையில் உள்ளனரா? என்று வினவினேன். கல்விப் புலத்திலிருந்து தங்கள் கலையை நோக்கி வினவுபவர் உள்ளாரே என நினைத்து, ஆர்வமுடன் உரையாடலை அவரும் தொடர்ந்தார். தங்கள் உறவினர்கள் பலர் கூத்துக்கலைஞர்கள் எனவும், தங்கள் உறவினருள் அகவை முதிர்ந்த கூத்துக்கலைஞர் ஒருவர் இப்பொழுதும் உள்ளார் எனவும் தெரிவித்தார். அன்றுமுதல் அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக் கலைஞரைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டேன்.

    கூத்துக்கலைஞர் சரவணன் தம் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலாகத் திருமணக்கூடங்கள், விழா மேடைகள் ஆகியவற்றை ஒப்பனைப்படுத்தும் கலைஞராகவும் கூடுதல் பணிகளைச் செய்வது உண்டு. திருமண நாளில் மண்டபங்களில் மணமேடையை அழகுப்படுத்துவது, அதனைப் பிரித்தெடுத்து மீண்டும் அடுத்த மண்டபத்துக்குக் கொண்டு செல்வது, அங்குப் பணி முடிந்த பிறகு வீட்டுக்குக் கொண்டுவருவது என்று எப்பொழுதும் பணி அழுத்தமாக இருப்பவர். நான் அழைக்கும்பொழுது இதனைக் கூறி, விலகிக்கொள்வார். அவர் அழைக்கும்பொழுது நான் அலுவலகத்தில் உழன்றுகொண்டிருப்பேன்; அல்லது அயலகப் பயணங்களில் இருப்பேன். இருவரும் சந்திக்கும்பொழுது ஒளி ஓவியர் எங்களுடன் இணையமுடியாதபடி சூழல் இருக்கும்.

    இன்று(04.03.2017) மாலை ஒளி ஓவியர், கூத்துக்கலைஞர், நான் மூவரும் ஒருபுள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் புதுவையின் கடைசி எல்லைப்பகுதியில் இருந்த நாவற்குளம் பகுதியை அடைந்தோம். ஒருகாலத்தில் நாவல் மரங்கள் நிறைந்திருந்த பெரும் தோப்புகளும், பனந்தோப்புகளும், பொன்விளையும் பூமியுமாக இருந்த நாவற்குளம் என்ற செம்மண் நிலம் இன்று, சிமெண்டு மாளிகைகள் எழுப்பப்பெற்று, சமூகத்தில் முதன்மையானவர்கள் வாழும் இடமாக மாறிவிட்டது.

    எங்களின் வருகைக்குக் குணசேகரனும் சரவணனும் காத்திருந்தனர். சாலையை ஒட்டிய ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டின் முன்பகுதியில் ஒரு அகவை முதிர்ந்த பெரியவர் அமர்ந்திருந்தார். என்னை அழைத்துச் சென்று அந்தப் பெருமகனாரிடம் அறிமுகம் செய்தனர். முன்பு என்னைப் போல் மூவர் சென்று உரையாடித் திரும்பியுள்ளனர். அவர்களின் செயலால் சோர்வுற்று இருந்த பெரியவர் என்னையும் அந்தப் பட்டியலில் இணைத்து, நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை. மனச்சோர்வுடன்தான் பேசினார்.

    குடும்பத்தில் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தனர். அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக்கலைஞரை உள்ளே அழைத்து, விளக்கொளியில் அமரச் செய்து உரையாடத் தொடங்கினோம். “பேட்டி”காணும் செய்தியாளர்கள் என்ற பெயரில் யாரேனும் வந்திருந்தால் வந்த வேகத்தில் திரும்பியிருப்பார்கள். ஐயாவை எங்களின் வழிக்குக் கொண்டு வருவதற்குப் பெரும் பாடுபட்டோம்.

    என் பெயர் பட்டுக் கவுண்டர். அப்பா பெயர் பெரியதம்பி, அம்மா பெயர் காத்தாயி. இப்பொழுது எனக்குத் தொண்ணூற்றெட்டு வயது ஆகிறது என்றார். பிறந்து வளர்ந்தது, படித்தது, வாழ்ந்தது எல்லாம் இந்த ஊரில்தான். தாய் மாமன் சு. இராஜகோபால் அவர்களிடம் தெருக்கூத்துப் பாடல்களையும், நாடகப் பாடல்களையும் கற்றுக்கொண்டேன் என்றார். இந்தத் தகவலைப் பெறுவதற்குள் பெரும் முயற்சி எனக்குத் தேவைப்பட்டது. நான் கத்திக் கதறி விவரங்களை வாங்குவதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூடினர். அகவை தொண்ணூற்று எட்டு என்றாலும் இன்னும் கண்ணாடியில்லாமல் செய்தித்தாளைப் படிக்கின்றார்.

    திரு. பட்டுக் கவுண்டர் அவர்கள் பெருகிய நிலங்களைக் கொண்ட வளமான வாழ்க்கை வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா அந்நாளைய பிரெஞ்சு அரசுக்குத் துப்பாக்கிக்குப் பயன்படும் பொருள்களைச் செய்து வழங்கியுள்ளார். அதனால் புதுவையின் ஒதுக்குப்புறமாக இருந்த இவர்களின் நிலங்கள் வரை புதுச்சேரியின் எல்லையைப் பிரெஞ்சியர் அமைத்தனர் என்பதை அறியமுடிந்தது. சற்றுத் தொலைவில் ஆங்கிலேயர்களின் முகாம்(கேம்ப்) இருந்துள்ளதையும் உரையாடலில் அறிந்தேன்.

    Pattu2பட்டுக் கவுண்டர் தம் வீட்டை ஒட்டிய பகுதியில் அக்காலத்து இளைஞர்களாக இருந்த உறவினர்களை ஒன்றிணைத்துத் தெருக்கூத்தினைக் கற்றுள்ளார். இவர்களுக்கு ஆசிரியராக இருந்து, இராஜகோபால் என்பவர் தெருக்கூத்துக் கலையை அனைவருக்கும் பயிற்றுவித்துள்ளார். பலநாள் பயிற்சி எடுத்து, அரங்கேறிய தெருக்கூத்துக் கலைஞர்கள் கோவில் திருவிழாக்களிலும், கோடைக் காலங்களிலும் அந்தநாளில் தெருக்கூத்து ஆடியுள்ளனர். பக்கத்து ஊர்களிலிருந்து தெருக்கூத்துக்குத் தேவையான இசைக்கருவிகள், ஒப்பனை செய்வதற்குரிய அணிகலன்கள், கட்டைகள் வாடகைக்கு அமர்த்திப் பயன்படுத்தியுள்ளனர். அருகில் உள்ள ஊர்களுக்கும் சென்று தெருக்கூத்து ஆடியுள்ளனர்.

    பட்டுக் கவுண்டர் தருமன், கண்ணன், நாரதன், வசிஷ்டர், அபிமன்யு என்று பல்வேறு பாத்திரங்களில் ஆர்வமாக நடித்தவர். இன்றும் மெல்லிய குரலில் இந்தப் பாத்திரங்கள் பாடும் பாடல்களைப் பாடிக்காட்டித் தம் இளமைக்காலத் தெருக்கூத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பாடல்களைப் பாடும்பொழுது அடிக்கடி களைப்படைந்துவிடுகின்றார். நினைவுக்குச் சில பாடல்களையும் உரையாடல்களையும் ஒளிப்பதிவு செய்துகொண்டோம். இருபத்தைந்து வயதில் தெருக்கூத்து ஆடத் தொடங்கிய பட்டுக் கவுண்டர் 60 வயது வரையும் தெருக்கூத்தின் உச்ச நிலையைத் தொட்ட கலைஞராக விளங்கியுள்ளார். தெருக்கூத்துக் கலைஞர்கள் சிலரிடம் புகுந்துள்ள மது, புலால் உண்ணுதல் என்ற பழக்கங்கள் இல்லாதவராகவும், அறச்சிந்தனை கொண்டவராகவும் விளங்கும் பட்டுக் கவுண்டர் அவர்கள் போற்றி மதிக்கத்தக்க கலைஞர் என்பதில் ஐயமில்லை.

    பட்டுக் கவுண்டர் அவர்களின் மகன் பெருமாள்சாமியும் தெருக்கூத்துக் கலைஞர். இப்பொழுது பகலில் தச்சுத்தொழிலும், இரவில் தெருக்கூத்துப் பணியுமாக உள்ளார். பட்டுக் கவுண்டரின் பெயரன் பற்குணன் கணினி வரைகலையில் பயிற்சிபெற்று வருகின்றார். இவரும் இளம் அகவையிலையே தாத்தாவுடன் இணைந்து தெருக்கூத்தினைப் பார்ப்பது, பாரதக் கதை கேட்பது என்று விருப்பத்துடன் இருந்து, தெருக்கூத்தில் கண்ணன் வேடம் அணிந்து, பாட்டிசைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவருபவர். மூன்று தலைமுறைக் கூத்துக்கலைஞர்களை ஓரிடத்தில் சந்தித்த மன நிறைவு எனக்கு ஏற்பட்டது. மூவரின் பாடலையும் ஒளிப்பதிவு செய்தோம்.

    நாவற்குளம் பகுதி வளர்ச்சி அடைவதற்குச் சாலை அமைக்கவும், பள்ளிக்கூடம் கட்டவும், கோயில் கட்டவும் கோடிக்கணக்கான மதிப்புடைய தம் நிலங்களை அன்பளிப்பாக வழங்கிய கொடை நெஞ்சர் பட்டுக் கவுண்டர் என்பதை அறிந்து கைகுவித்து வணங்கித் திரும்பினேன்.

    Share
  • சைவமும் வைணவமும்!

    -தமிழ்த்தேனீ

     “ஜாதி  இருக்கிறது“
    “சிலரை சீண்டினால் நாம் தாக்கப் படுவோம்
     சீலரைச் சீண்டினால் நாம் ஆக்கப் படுவோம்”                    -தமிழ்த்தேனீ

    நிகமாந்த  மஹா தேசிகர்,  இராமானுஜர்  ஆகியோர் வைணவத்தையும்   வளர்க்க, பரப்ப  வந்த மகான்கள். ஆதி சங்கரர் சைவத்தைப் பரப்பவந்த மகான். இப்படிப் பல மஹான்கள் வாழ்ந்த  இந்தப் புனிதபூமியில்  இன்னமும்  சத்விஷயங்கள் எவை அசத் விஷயங்கள் எவை என்னும் ஞானத்  தெளிவில்லாமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சற்றே ஞானத்தை நோக்கி நுகர்வோமா?

    “உறையின் அழகில் மயங்காது கத்தியின் கூர்மையை நோக்குவதுபோல் சான்றோரின் சாதியைக் கேட்காது அவர்களின் ஞானத்தைக் கேட்பீராக!!“ என்று கபீர்தாசர் கூறுகிறார்.

    நோக்குதல் என்பதோர் உயர்செயல். நோக்கும் நோக்கெலாம் அன்னை பராசக்தி  என்றார் மஹாகவி பாரதியார். வேத வாக்கியம் என்ன சொல்கிறது என்றால், ஒரு சொல்லை ஒரு வசதிக்காக ஒரு வரிசையில் போட்டுப் பொருள் கொள்கிறோம், ஆயின் அனைத்தின் ஆணிவேரும் இறைமையில் கொண்டுபோய் சேர்க்கிறது என்று. விதை இல்லாமல் வேரே இல்லை  என்பது உண்மைதானே.   ஜாதி என்ற அடையாளத்தை ஒருவர் இந்நோக்கில் பார்த்தால் அதுவும் அங்குதான்  இட்டுச் செல்லும்.

    ஜாதி ஒரு அடையாளம். அடையாளம் என்பது என்ன? எதனால்  வருகிறது…இப்படியே நுண்ணறிவு கொண்டு ஆராய்ந்துகொண்டே போனால் அது நம்மை அழைத்துச் செல்லும் இடம் பூஜ்ஜியம் அதாவது  பூஜ்ஜியத்துக்குள்ளே இருந்துகொண்டு நம்மை எல்லாம் ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இறையை நோக்கியே நகர்கிறது.  மாத்வர்கள் பூஜ்ய ஶ்ரீராகவேந்திராய என்கிறார்கள். இதைத்தான் அவரவர்  பாணியில்  ஶ்ரீ நிகமாந்த  மஹாதேசிகரும்  ஸ்ரீராமானுஜரும், ஆதிசங்கரரும் தெளிய உரைத்தனர். யதார்த்தம், வெகு யதார்த்தம், நாரணனும் சிவனும் ஒண்ணு  இந்த ஞானமில்லாதவன்  மண்ணு  என்பார்கள் பெரியோர். அமலன் ஆதிபிரான் என்று நம்மாழ்வார் அருளிச்செய்த  திருவாய்மொழியார் நம்மாழ்வாரைத் தமிழ்செய்த மாறன், சடகோபன் என்றெல்லாம் வர்ணிப்பதில்  மிகவும் சந்தோஷம்.

    ஆகவே  சைவத்துக்கும் வைணவத்துக்கும் சாக்தத்துக்கும்  இருக்கும் பேதங்கள் இடையே மனிதர்களால் ஏற்படுத்தப் பட்டவை. இதிலே குழப்பமே இல்லை.  ஸ்மார்த்தர்களும் (சைவர்களும் ), வைணவர்களும் எல்லோருமே.  ஸ்ரீமன் நாராயணனின் அடியார்கள்தாம். சாக்தத்தைக் கடைப்பிடிப்போரும் அப்பனில்லாமல் அம்மைக்கும் மதிப்பில்லை  என்பதை உணர்ந்தவரே.  மனிதர்களின்  அணுக்கூற்றுக்களின் படியே விஞ்ஞான ரீதியாக எடுத்துக்கொண்டாலும், வேதமூலமாக எடுத்துக் கொண்டாலும்  பெண்குழந்தைகள் தாயைவிடச் சற்றே அதிகமாகத் தகப்பனை விரும்புவதும், பிள்ளைக் குழந்தைகள் தகப்பனைவிடச் சற்றே அதிகமாகத் தாயை விரும்புவதும்தான் மிக நுணுக்கமான வேதியல் பூர்வமான வேதபூர்வமான நுணுக்கம்.

    ஆகவே சற்றே அதிகமாகத் தாயை அதாவது சக்தியை  விரும்புவோரும் தகப்பனை  வெறுப்பதில்லை, மாறாகத் தாயை, ஆதி சக்தியைச் சற்றே அதிகமாக விரும்புகிறார்கள் அவ்வளவே.

    ஆதிசங்கரரே காலடி என்னும் க்ஷேத்திரத்தில் நாராயணனை  நரசிம்மாவதாரமாய்க் கண்டவர் என்று கூறுவர். அதற்கு ஒருகதை  சொல்வார்கள் என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்கள். ஒரு காட்டிலே ஒரு வேடுவன் ஆதிசங்கரர் தவம் செய்து கொண்டிருப்பதைப்  பார்த்துவிட்டு, அவர் என்ன செய்கிறார் என்று வினவ அவர்  வேடுவனிடம்  பரப் ப்ரும்மமான ஸ்ரீமன் நாரணனைக் காண  தவமிருப்பதாக சொன்னார். அதற்குக் கண்களை மூடிக் கொண்டிருந்தால்  எப்படி அவரைக் காண முடியும் அவர் எப்படி இருப்பார் என்று கூறுங்கள், இந்தக் காட்டில் எனக்குத் தெரியாத பகுதிகளே இல்லை நான் கண்டுபிடித்துத் தருகிறேன் என்றான். அதற்கு ஆதிசங்கரர் ஸ்ரீமன் நாராயணன் சிங்கமுகமாகவும்,  மனித உடலாகவும் இருப்பார். அவரை அந்த வேடுவன் கண்டுபிடிப்பது கடினம் என்று கூறவே வேடுவன் எனக்குத் தெரியாத ஒரு மிருகமும் காட்டிலில்லை   அந்த மிருகத்தை மாலை அந்தி சாயும் பொழுதுக்குள்  கண்டுபிடித்துத் தருவதாகவும் அப்படி இல்லையென்றால்  தானே இறந்துவிடுவதாகவும் சத்தியம் செய்துவிட்டு தேடத்துவங்கினான்.   அவன் சிந்தையில் சிங்கமுகமும் மனித உடலும் முழுவதுமாக ஆக்ரமித்திருந்தது. மாலை வரை தேடிவிட்டு கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை புரிந்துகொள்ள ஒரு கயிறு எடுத்து அதை முடிந்து மரத்தில் மாட்டித் தலையை உள்ளே நுழைக்கும்போது  ஸ்ரீமன் நாராயணன் நரசிங்க அவதாரம் அவன் எதிரில் நின்றது பயங்கரமான கர்ஜனை  கேட்டது. அட இங்கேதான் இருக்கிறாயா? நல்லவேளை  ஒரு வினாடி தாமதித்திருந்தாலும் என் உயிர் போயிருக்குமே  என்று மரத்திலிருந்து கயிற்றை அவிழ்த்து,  அதுதானே என்னிடம் சிக்காமல் எந்த மிருகமும் இருந்தததில்லையே வா என்று வேடன்.  அழைத்தவுடன் அமைதியாக வேடுவனிடம் வந்து அவன் கட்டிய கயிற்றில் கட்டுப்பட்டு அவன் பின்னே நடந்தது  நரசிங்கம்.

    பக்தர்களின் உண்மையான  ஏகாக்ர சித்தத்துக்கு ஆண்டவன் கட்டுப் படுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்ரீமன் நாராயணன் அந்த வேடுவனிடம் கட்டுப்பட்டான்.

    அவன் ஆதிசங்கரரிடம் அழைத்துச் சென்று இதோ நீங்கள் கேட்ட  மிருகம் என்று நரசிங்கத்தைக் காட்டினான்.  ஆனால் அவர் கண்களுக்கு கயிறு மட்டும் தெரிந்தது, நரசிங்கம் தெரியவில்லை ஒரு வேடுவனுக்கு காட்சி அளித்த ஸ்ரீமன் நாராயணா  காட்சி அளிக்கக் கூடாதா எனக்கு என்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்ள ஸ்ரீமன் நாராயணன்  காலடி என்னும் இடத்தில் அவருக்குக் காட்சிதந்தான் என்று கூறுவர். அதனால் அன்றும் இன்றும் சங்கராசாரியார் அவர்களும்  நாராயணா, நாராயணா, நாராயணா என்று மும்முறை  கூறுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல  ஸ்ரீ மஹாபெரியவாள் தினம் பிக்ஷை செய்ய ஆரம்பிக்கும் முன், அங்கிருக்கும் சிஷ்யர்களை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமப் பாராயணத்தைச் சொல்லும்படி சமிக்ஞை செய்வார்கள். (தலையில் கையினால் குட்டிக்கொண்டு சமிக்ஞை செய்வார்கள்; “சுக்லாம்பரதரம்” என்று ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம்) அவர்கள் எல்லோரும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் தினம் இரண்டு ஆவர்த்தி சொல்லுவார்கள். ஸ்ரீ பெரியவாள் அதை ச்ரவணம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம்.

    சைவம் வைஷ்ணவம் அனைத்துக்கும் பொதுவானவன் ஸ்ரீமன் நாராயணன். அங்கு பேதமில்லை. பேதங்கள் நாமாக ஏற்படுத்திக் கொள்வதுதான். புத்தருக்கு ஒரு போதிமரம் போல் நமக்கு அறிவுறுத்தும் போதிமரங்களே  முக்கியம். ஆராய்ந்து பார்த்தால் வைணவமோ சைவமோ இருபாலாரும் அனைவருமே வணங்கத்தக்க பெரு நிலையை அடைந்த பரமாத்மாக்கள்,

    ப்ராமணர்களால் வணங்கப்படும் ராமன் க்ஷத்ரியன், க்ருஷ்ணன்   ஆயன் இடையன், சிவன் அம்பலக் கூத்தன் அனைத்துத் தேவதைகளும்  அனைத்து தெய்வங்களுமே ப்ராமணர் அல்லாத குலத்தைச் சேர்ந்தவர்தாமே? அப்புறம் ஜாதி என்ன? மதம் என்ன?   அறிவு விழித்துக் கொள்ளுதலே நலம்.

    தோணிமாறலாம், பாதை மாறலாம் போய்ச்சேர வேண்டியது  அனைவருக்குமே  ஒரே இடம்தானே? ஆனால் பெரியவர்களைப் பற்றி எழுதும்போது  கூடியவரையில் அவர்களுடைய இயல்பான நடைப் பாடுகளையும், மிகச் சரியான செய்திகளையும்  நாம் ஆராய்ந்து வெளியிட்டோமானால் நமக்கு இன்னும் நிறைய விஷயங்கள் கிடைக்கும்.  மூலக்கூறுகள் சிதையாமல் இருக்கும் என்பது   அடியேனின் தாழ்மையான கருத்து.

    “சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
    நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
    இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
    பட்டாங்கில் உள்ளபடி”  (நல்வழி என்னும் நூலில்  ஔவையார்)

    ”காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்
    கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
    நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
    நோக்க நோக்கக் களியாட்டம்.” [ஐய பேரிகை] என்று மஹாகவி பாரதியார் கூறுகிறார்.

    என் சிறுவயதில் என் தந்தையாரைக் காண  எல்லாச் சாதிகளையும்  அனைத்து மதங்களையும் சார்ந்தவர்கள் வணிகத்  தொடர்பாக  வருவார்கள். அவர்கள் அழைத்துக்கொள்ளும் விதம் என் மனதிலே பதிந்தது.  வாங்க செட்டியாரே, வாங்க நாயிடு, வாங்க முதலியாரே, வாங்க பாய், வாங்க கிறித்துவரே  என்றெல்லாம் ஜாதியின் பெயரையே சொல்லி  அழைப்பார்  என் தந்தை. அவர்களும்  சொல்லுங்க  ஐயங்காரே  இன்னிக்கு  நாம் என்ன  செய்யணும்  வியாபாரத்தைப் பத்தி பேசுவோமே  என்பார்கள்.

    ஆக  அவர்கள் மனதிலே ஜாதிகளின் மேல் வெறுப்பில்லாமல் இயல்பாக வாழ்ந்தனர்.   எல்லோருமே அவரவர்  ஜாதி வழக்கங்களை அவரவர் மத வழக்கங்களைக் கடைப்பிடித்தாலும் அடுத்தவர்  ஜாதியை, மதத்தை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லாதவர்களாக இருந்தார்கள்.

    ஆனால் நாம்  இப்போது எல்லோருடைய மதத்தின், ஜாதியின் பெயரை வாய்விட்டு  சொல்லாமல்  இருக்கிறோமே தவிர  மனத்திலே மற்ற  ஜாதிகளை, மதத்தை  மதிக்காமல் வெறுக்கிறோம்.    மனிதனைப் பார்ப்பதில்லை. அவன் குலத்தினைப் பார்க்கிறோம், மதத்தினைப் பார்க்கிறோம்.

    நம் எல்லோருடைய  நோக்கமும்  நாம் எந்த  நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும்  வாழ்கின்ற  நாட்டை நம் தேசம் போலக் கவனித்து  நாம் வாழும் நாட்டின்  முன்னேற்றத்துக்கு உதவ வேண்டிய காலகட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து  சில விஷமிகள் தூண்டிவிடும்  பிரிவினைவாதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு  தீவிரவாதமென்னும் பிரிவினையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

    நம் இலக்கும் நோக்கும்  வேறு. செல்ல வேண்டிய தூரமும் அதிகம். குறுக்கு வழிச்சாலைகளுக்குள் புகுந்தால் போகும்நேரம் அதிகமாகும். மிகச் சரியான முடிவு அது மட்டுமல்ல  பழமை வாய்ந்த பல பொக்கிஷங்கள் இப்போதே நம்மால் கவனிக்கப்படாமல் போகின்றன.

    21ஆம் நூற்றாண்டின் சமூகவியற்பார்வையில் 11ஆம் நூற்றாண்டு   இந்தியாவைக் காணவியலாது. ஆகவே 21ஆம்  நூற்றாண்டிலும்  எல்லோராலும் படிக்க, கவனிக்கக்கூடிய வகையில் எல்லாப் பொக்கிஷங்களையும் (very chip) போன்ற விஞ்ஞான வளர்ச்சிகளைப் பயன்படுத்திச் சேமித்து வைத்துவிட்டுப் போக வேண்டும் என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். பழையதைப் பேசுவதைவிடப் பாதுகாத்து இனிவரும் சந்ததியினர் விவரம் அறிந்துகொள்ள சுலபமான வழிமுறைகளை ஏற்படுத்துதல் நம் நோக்கமாக இருக்க வேண்டும். வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையைப் பலப்படுத்தி நாட்டை முன்னேற்றவேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படுவோம்.  அனைவரும் கைசேருங்கள்!

    வந்தே மாதரம்!
    ஜெய்ஹிந்த்!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 101-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குரிய படத்தை எடுத்திருப்பவர் திரு. லோகேஷ்வரன் ராஜேந்திரன். இப்படத்தைத் தேர்வுசெய்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி உரியது.

    hen and rooster

    பெட்டைக்கோழியும் கொண்டைச்சேவலும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள நேரம்பார்த்து நிற்பதுபோல் தோன்றுகின்றது. தள்ளி நின்றிருக்கும் மற்றொரு சேவல்தான் இச்சண்டையில் வெற்றியாளர் யார் என்பதை முடிவுசெய்யும் நடுவரோ?

    நம் ஊகம் இருக்கட்டும். கவிஞர்கள் காத்திருக்கிறார்கள் படத்திற்குத் தோதாகப் பாப்புனைய! அவர்களின் கருத்தையும் அறிந்துவருவோம்!

    *****

    ”அடுத்தவர் சண்டையைத் தள்ளிநின்று வேடிக்கை பார்க்கும் மடமையை மனிதரிடம் கற்றனவோ இந்தக் கோழிகள்?” என்று வேதனையோடு வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனிதனிடம் கற்றது…

    அடுத்தவர் மோதிட வேடிக்கையாய்
    அதனைப் பார்த்தே ரசித்திடுவான்,
    தடுத்திட வராமல் தள்ளிநின்று
    தூண்டி விடுவான் அரசியலில்,
    அடுத்தே அவனிடம் வளர்ந்ததாலே
    அந்த குணமே கோழிகட்கும்,
    தடுக்கும் எண்ணம் இல்லாமல்
    தொடர விட்டிடும் சண்டையையே…!

    *****

    ”என்னைத் தூற்றுவார் தூற்றட்டும்; புதுமைப்பெண்ணென்று போற்றுவார் போற்றட்டும்! சமத்துவம் பிறக்கச் சண்டைதான் வழியென்றால் சமர் செய்வேன்; சமரசம் செய்யேன்!” என்று சிலிர்த்துநிற்கும் வீரக்கோழி இது!” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    அச்சம் என்பது மடமையடா
    கொண்டை சிலிர்த்து கோபமாய்
    பார்ப்பதினால்!
    அஞ்சிடும் பெட்டைக் கோழி நான்
    என்று நினைத்தாயோ!
    பெண் விடுதலை சொன்ன
    கவிபாரதி ஊர் பிறந்த
    பறவையடா நான்!
    வீர மங்கை வேலு நாச்சியார்
    புகழ் சொல்லும்
    தமிழகக் கோழியடா நான்!
    அரவணைக்கும் மாந்தருக்கு
    அன்புத் தோழியடா நான்!
    அநியாயம் செய்பவர்க்கு
    செந்தணலடா நான்!
    சமத்துவம் பிறப்பதற்கு
    சண்டை தான் வழியென்றால்
    சண்டைக் கோழியென!
    சமர் செய்து வென்றிடுவேன் !
    தூற்றுவார் தூற்றட்டும்!
    புதுமைப் பெண்ணென்று
    போற்றுவார் போற்றட்டும் !

    *****

    ”கத்தியின்றி இரத்தமின்றி வெற்றுக்காலுடன் நாங்கள் நடாத்தும் இப்போரே உண்மையான அகிம்சைப் போர். காட்டுக்கோழியாயிருந்தால் காலனிடமிருந்து தப்பியிருப்போம்; நாட்டுக்கோழியானதால் நித்தமும் கண்டம் எமக்கு!” என்று தன் சுயசரிதையைச் சோகம் தோய்ந்த நயமுடன் செப்பும் கோழிச்சேவலைக் காண்கிறோம் பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதையில். 

    சேவலின் கூவல்

    வைகரையில் கூவியுனைஎழ வைத்துன்
    துயில்கலைந்ததும் கேளுமடா என்சரிதம்!

    செந்நிறக் கொண்டை சிவந்தயென் கண்கள்..
    நிமிர்ந்தயென்பார்வை மிடுக்கானநடை கொண்ட..
    “கோழி” யெனும்பெயரே சேவலெனைமட்டும் குறிக்குமாம்!
    “சேவல்” “மயில்” “நாடு” யெனப் பன்பெயரென் புகழ்சொல்லும்!

    பெட்டைக்கோழியிடம் மட்டற்ற ஆதிக்கம்பெற…ஆணவ ஆண்கோழிகள் சண்டையிடுவது இயற்கையானால்…
    கோழியெனைச் சூதாக வைத்தாடுவது தகுமா?.மீண்டும்!
    பாவிமனிதனெனும் பழிவேண்டச் சேவல்சூதாட்டம் வேணுமா?

    சிவன்குமரப் பெருமானின் கொடியிலேறியதால்..எனைவைத்து..
    சூதாட்டம்கூட “தென்திருவிளையாட்டானது”?..சூதில்நான்..
    வெற்றிபெற்றால் “வெற்றி” யெனப் பெயர்படுவேன்!
    தோல்வியெனில் “கோச்சை” யென நானறிவேன்!

    செந்நீரைச் சிந்தியெந்தன் சேவலுயிர் போனாலும்..
    செந்தமிழன் வீரமென்று சீராட்டுமென் தென்திருநாடு!காலில் கத்திகட்டிக் கட்டாலிகள் விளையாடும்..
    கள்ளாட்டம் புத்திகெட்டமானுடனின் செயலாகும்!வெற்றுக்காலுடன் கத்தியின்றி ரத்தமின்றி யான்பெறும்..
    வெற்றியென்பது உண்மையகிம்சை வெற்றியாகும்!

    காட்டமான சண்டையில் வெற்றிபெற என்னினத்தை..
    காளிமுன்பு காவுகொடுத்தான் கயவனொருவன்!காட்டுக்கோழியானால் காலனெனைத் துரத்தமாட்டான்!
    நாட்டுக்கோழியானதால் நித்தம்நித்தம் ஆயுள்கண்டம்!

    கோதாவில் கழுத்தறுந்து உயிரிழந்த பரிதாபத்தால்..
    கடாயில்பல மசாலாவுடன் கோழிநான் குருமாவானேன்!
    நெட்டைக்கழுத்தை நீட்டியென் பகைவன்மேல் பறந்து..
    பட்டைதீட்டிய கத்தியால் எதிரிக்கழுத்தை அறுத்ததால்..
    குலத்தைக் கெடுக்க வந்த கோடரிபோல்..என்..
    இனத்தை நானேகெடுத்து வாழ்வில் இழுக்குற்றேன்!

    பதார்த்த குணசிந்தாமணி படித்தவர் என்னிடமரும்..
    மருத்துவகுணமுண்டென்று மருந்தாகயெனைச் சமைத்துண்டார்!

    சாமக்கோழியென் அலறும் அறைகூவலுனக்கு..
    சமையல்கட்டினுளென் வேதனையறிய வைக்குமடா!

    சேவற்கொடியோன் அருளீன்ற என்னுயிரை…இனியும்..
    காவல்காக்கமுடியா தென்பது இயற்கைவிதியாமோ?..

    *****

    ”தன்னினத்தைத் தான் மாய்க்கும் பொல்லாக் கயமையினைக் கோழியினமான எம்மிடமும் திணித்து, எம்மைச் சண்டையிட வைத்து இரசிக்கின்றானே பாவி மனிதன்! எவ்வுயிரும் வாழவேண்டும் எனும் நல்லுளங் கொண்டு பொன்னுலகு சமைப்போம்; போரிடலை மாய்ப்போம்!” என்று நல்லுரை நவில்கிறது திரு. இளவல் ஹரிஹரனின் கவிதையில் வரும் சேவல்.

    தமிழ்க்கடவுள் முருகனவன்
      தனிக்கொடியில் விளங்கியதும்
    அமைதியினைக் கிழித்தபடி
      அதிகாலைக் கூவியதும்

    உறங்குகின்ற உயிர்களெலாம்
        உன்குரலால் விழித்ததுவும்
    நிறங்கொண்ட செங்கொண்டை
        நிமிர்ந்திடவே நடந்ததுவும்

    கிராமத்து வீடுகளில்
        கிளரழகைக் கொடுத்ததுவும்
    வராமலேயே போனதென்ன
        வண்ணமிழந்த சித்திரமாய்!

    கலாசாரப் பெயர்சூடி
        காலினிலே கத்திகொண்டு
    விழாமேடை சந்தைத்திடலில்
        வீறுகொண்ட வேங்கையெனச்

    சண்டையிடும் சேவலென
         சாதிமாறிப் போனதென்ன…
    வன்கொடுமை தனைக்காட்ட
         வன்மமுடன் வளர்ந்ததென்ன…

    தன்னினத்தைச் சண்டையிட்டுத்
         தான்மாய்க்கும் காட்சியினை
    கண்ணிறைய ரசிக்கின்ற
         கயமைதான் மனிதனிடம்…

    தன்குணத்தைப் பிறவுயிர்கள்
         தலைமீதே ஏற்றிவிட்டுப்
    பந்தயத்துச் சேவலெனப்
         பாயவிடும் மாயமென்ன…

    எவ்வுயிரும் தம்முயிராய்
        எண்ணவைக்கும் உயர்ந்ததொரு
    தெய்வமனங் கொண்டுவாழத்
        தேடல்புரி மனிதனவன்

    சேவற்கட்டு புரிவதென்ன
          சேர்ந்தவுயிர் அழிவதென்ன…
    ஆவலுடன் பந்தயத்தில்
          அநியாயஞ் செய்வதென்ன…

    இந்நிலைமை மாறிடவே
         எவ்வுயிரும் வாழ்ந்திடவே
    பொன்னுலகைச் செய்திடுவோம்
         போரிடலை மாய்த்திடுவோம்.

    பறவைகளின் வாயிலாய் நல்ல வாழ்வியல் சிந்தனைகளைச் சிறக்கச் சொல்லியிருக்கின்றனர் நம் கவிஞர்கள். அவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தேர்வு செய்திருப்பது…

    வீம்புச் சண்டைவேணாண்டா மச்சானே! – சித்தே
    விழுந்தமுன்னா எழும்ப மாட்டம் மச்சானே!

    நாம் விழுந்தா அவனுக்கென்ன மச்சானே – வந்து
    நம்ம மண்ணைப் புடிச்சுக்குவான் மச்சானே!

    இப்பதானே வந்திருக்கோம் மச்சானே! – அட
    இதுக்குள்ளயேன் வம்புச் சண்டை மச்சானே!
    தப்புன்னாலும் தவறுன்னாலும் மச்சானே! –நாம
    தக்க வைப்போம் நம்ம மண்ணை மச்சானே!

    எட்டி நின்னு புதினம் பார்த்து மச்சானே! – நாம
    எப்ப வீழ்வமெண்டிருக்கான் மச்சானே!
    விட்டமுன்னா நம்ம மண்ணை மச்சானே! – அத
    மீட்கிறது சுலபமில்ல மச்சானே!

    மத்தியிலே நின்னுக்குவான் மச்சானே! – தான்
    மன்னனென்று பீத்திக்குவான் மச்சானே!
    புத்திகெட்டு விழுந்தமுன்னா மச்சானே! – நம்ம
    பூமி பறி போயிடும்டா மச்சானே.

    போனவங்க போகட்டும்டா மச்சானே! – நம்ம
    பூமி இப்போ முக்கியம்டா மச்சானே!
    ஆனதெல்லாம் ஆகட்டும்டா மச்சானே! – ஆனா
    அந்நியன் வந்தாளலாமோ மச்சானே?!

    ஒற்றுமையா இருந்திடலாம் மச்சானே! – நமக்கு
    உள்ளதின்னும் சிலகாலம் மச்சானே!
    வெற்றி காண வேணுமுன்னா மச்சானே! – அதுக்கு
    வேளை வரும் பொறுத்திருடா மச்சானே!             

    நம்மிடம் குறைவாயிருப்பது ஒற்றுமை. அதனாலன்றோ வெள்ளையன் நம் மண்ணை எளிதில் கொள்ளையிட முடிந்தது.

    அதுகண்டு உளம்நொந்து, ஒற்றுமையின் பெற்றியைப் பாடவந்த பாரதி,

    ”ஒன்றுபட் டால்உண்டு வாழ்வு நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
    நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
    இந்த ஞானம்வந் தாற்பின்
    நமக்கெது வேண்டும்?” என்றான். 

    பாரதி நமக்கு போதித்த அந்த ஞானத்தையே இந்தக் கோழியும் தன்னருகில் சண்டைக்குச் சிலிர்த்துநிற்கும் தன் (சேவல்) மச்சானிடம் பக்குவமாய்ச் சொல்கிறது.

    கோழியின் வழியே மானுட சமூகத்திற்கு(ம்) நல்லறிவு கொளுத்தியிருக்கும் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    கண்ணன் வாக்கு காண்டீபன் போக்கு….!

    ‘’அர்ஜுனர் போக்கு , அயக்ரீவர் வாக்காகும்:
    கர்ஜனை செய்கின்றார் கீதையை -மர்ஜரக்(பூனைக்)
    குட்டி(பூனைக் குட்டி ந்யாயம்) விஜயன் , கபாலத்தில் மாதாமால்(தாய்ப்பூனை)
    கொட்டு நீலமேகம் காப்பு’’….கிரேசி மோகன்….!
    வாழப் பழத்தோலை வாத்ஸல் யமா(ய்)உரித்து
    வாழப் பழம்கீதை வாயூட்டீ: -கோழையந்த
    குந்திசேய்க்கு வீரம் கவுரவம் தந்தவர்
    மந்திக்கும் மார்ஜர மால்’’….!கிரேசி மோகன்…

    மார்ஜரத்தை எதுகைக்காக மர்ஜரம் என்று கொண்டுள்ளேன் ஸாரி….!
    Stain Wash செய்ய சொட்டு நீலம் டோய்
    Brain Wash செய்ய கொட்டு நீலமேகம்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170304 - Vanvihari -watercolor -lores

    ”சத்தியம் யாதவர், சாரங்க மாதவர்
    நித்திய நூதனர், நந்தகோபர் -’’பெத்தால்தான்
    பிள்ளையா’’என்பதை,பாகவதம் சொல்லுதே:
    வள்ளல் யசோதை வசம்’’….கிரேசி மோகன்….!

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் உண்டாகத் தானாக உருவாகும் பிண்டத் தூசித் திரட்டுகள்

    Image result for dust traps in planet formation

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++

    சூரிய குடும்பப்  பின்னலில்
    ஆப்பம் போல் சுட்டுக்
    கோள்கள் திரண்ட தென்ன ?
    சூரிய மண்டத்தில் பூமி மட்டும்
    நீர்க்கோ ளான மர்மம் என்ன ?
    நீள்வட்ட வீதியில் நில்லாமல்
    ஒரே மட்டத்தில் சுற்றுவ தென்ன ?
    பூமியில் மட்டும்
    புல்லும், புழுவும், புறாவும்
    ஆறறிவு மானிடமும்
    பேரளவில் பெருகிய தென்ன ?
    அகக்கோள் பாறையாய்,
    புறக்கோள் வாயுவாய்
    பரிதி சுற்றி வருவ தென்ன ?
    பிண்டத் தூசி தானாய்த் திரண்டு
    அண்டக் கோளான தென்ன ?
    பரிதி மண்டலத்தில்
    வக்கிரமாய்ச் சுழன்று
    சுக்கிரன் மட்டும்
    திக்குமாறிப்
    போன தென்ன ?
    தன்னச்சில் சுழலாமல் கருநிலா
    முன்னழகைக் காட்டிப்
    பின்னழகை
    மறைப்ப தென்ன ?

    ++++++++++++++

    planet-fornation-1

    இதுவரைக் கூழாங்கற்கள் எப்படிச் சேர்ந்து கோள்கள் ஆயின வென்று நாங்கள் விளக்குவதில் சிரமப்பட்டோம்.  இப்போது மற்ற பரிதிகளைச் சுற்றும் ஏராளமான கோள்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.  அவை இந்தப் புதிரை எப்படித் தீர்ப்பதென்று வழி காட்டியுள்ளன.  இரண்டு தடை அரண்கள் உடைபட வேண்டும்.  முதலாவது சவால், தூசி மணிகள் ஊடே வாயு இழுக்கப்பட்டுத் தட்டாக மாறி, விரைவாகப் பரிதி மையம் நோக்கி நகர்ந்து கோளாகாமல் அழிந்து போவது.

    இரண்டாவது சவால், திரளும் தூசி மணிகள் [Dust Grains] வேக மோதல்களில் முறிந்து போய், சிற்சில பெரிய துணுக்குகளாய்ப் பிரிந்து, தட்டுவடைபோல் திரட்சி ஆகாமல் [Reverse Aggregation Process] போவது. கோள்களில் இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கும் அரங்கம் “பிண்டத் தூசி திரட்டு” [Dust Traps]  என்று குறிப்பிடப் படுகிறது.  இந்த மிக அழுத்த அரங்குகளில் [High-Pressure Regions] நகர்ச்சி மெதுவாகி, தூசி மணிகள் [Dust Grains] திரள்கின்றன.  மெது வேகத்தால் மோதும் போது தூசி மணிகள் சிதறிப் போவது தவிர்க்கப் படுகிறது.

    டாக்டர் ஜான் ஃபிரான்காய் கன்ஸாலெஸ் [ Lead Author Center of Research Astrophysics Lyon, France]

    dust-traps-1

    Image result for dust traps in planet formation

    Image result for dust traps in planet formation

    பிண்டத் தூசி திரட்டுகளில் [Dust Traps]  பொருத்தமான உபரிகள் [Right Ingredients] இருப்பதைக் கண்டுபிடித்ததில் எங்களுக்குப் புல்லரிப்பு ஏற்பட்டது.  பல்வேறு சூழ்நிலை அரங்குகளில் பிண்டத் தூசி திரட்டுகள் தானாய் உண்டாயின.  கோள்கள் உருவாவதற்கு நீண்ட காலப் பிரச்சனை இருந்து வந்த போது,  இதுவே எளிய திடமான தீர்வு முறை என்று உறுதி யாகியுள்ளது.

    டாக்டர் ஜான் ஃபிரான்காய் கன்ஸாலெஸ் [ Lead Author Center of Research Astrophysics Lyon, France]

    dust-trap-3

    சூரிய மண்டலக் கோள்கள் உருவாகப் புதியதோர் கண்டுபிடிப்பு 

    கோள்கள் உருவாகுவதற்கு பேபி விண்மீன்களைச் சுற்றிலும் பிண்டத் தூள், தூசி, வாயு சேர்ந்த தட்டுகள் உண்டாக வேண்டும் என்று முதலில் வானியல் விஞ்ஞானிகள் கருதினர்.   ஆனால் இதுவரை தூசி, வாயு போன்றவை  எப்படிச்  சேர்ந்து கோளாயின என்னும் அடிப்படை விளக்க முடியாமல் திணரினர்.   பிரென்ச்-பிரிட்டன் – ஆஸ்டிரிய குழுவொன்று டாக்டர் ஜான் ஃபிரான்காய்ஸ் கன்ஸால்வெஸ் தலைமையில், கணினிப் போலி இயக்கம் மூலம் [Computer Simulations] “பிண்டத் தூசித் திரட்டுகள்” [Dust Traps] இருப்பு முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்டன.  பிறகு கெப்ளர் விண்ணோக்கி மூலம் அவற்றின் இருப்பு விண்வெளியில் கண்டு உறுதிப் படுத்தப் பட்டன.

    dust-trap-details

    இதுவரை 3500 மேற்பட்ட கோள்கள் அண்டவெளியில் விண்மீன்களைச் சுற்றிவரக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. விஞ்ஞானிகள் கணினிப் போலி மாடலில் என்ன கண்டார்கள் ?   “பிண்டத் தூசி திரட்டுகளில் கூழாங்கல் துணுக்குகள் ஒன்றுகூடிச் சேர்ந்து, கோளை ஆக்கும் செங்கலாக [Building Blocks] அமைகின்றன.  அந்தப் பிண்டத் தூசி கண்டுபிடிப்பைப் பற்றி டாக்டர். கன்ஸால்வெஸ், பிரிட்டனின் ராயல் வானியல் குழுவினர் [Royal Astronomical Society]  மாத இதழில், 2017 பிரப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகி யுள்ளது.

    dust-trap-protoplanet

    எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை.  அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல.  தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றியதாக  முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும்.   அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.

    பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

    ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency)  [ஏப்ரல் 15, 2008]

     planet-fornation

    பிண்டத் தூசித் திரட்டு அண்டக்கோள் ஆவது 

    பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு

    பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids]  என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது.  முரண் கோள்கள்  சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு  மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு;   அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது,  ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos]  ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.

    Hypergiant Star with disks of dust.

    முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள்  [Beads like Chondrules]  எறிகற்களில் காணப்பட்டன.  அவை  இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது.  இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.

    முடிவுகள் இவைதான் :

    1.  முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள்.   அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    2.  உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே.  சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா.  அவையும்  கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

    நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

    விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

    aj

    இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

    இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

    பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

    வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !  அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

    பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

    பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

    பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

    பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

    [தொடரும்]

    ++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html[சூரியன்]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (What will Happen to the Sun ?)
    17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008]

    19.  http://www.spacedaily.com/reports/A_twist_on_planetary_origins_999.html  [January 15, 2015]

    20. http://www.spacedaily.com/reports/Meteorite_material_born_in_molten_spray_as_embryo_planets_collided_999.html  [January 15, 2015]

    21.  http://www.huffingtonpost.com/2013/06/07/planet-formation-theory-dust-traps_n_3401806.html  [June 7, 2013]

    22.  https://academic.oup.com/mnras/article-abstract/467/2/1984/2869861/Self-induced-dust-traps-overcoming-planet [January 7, 2017]

    23. https://phys.org/news/2017-02-spontaneous-astronomers-link-planet-formation.html [February 27, 2017]

    24.  https://www.eurekalert.org/pub_releases/2017-02/ras-st022417.php  [February 27, 2017]

    25. http://www.spacedaily.com/reports/Dust_Traps_Missing_Link_in_Planet_Formation_999.html  [February 28, 2017]

    26. https://www.sciencedaily.com/releases/2017/02/170228084236.htm  [February 28, 2017]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  [March 3, 2017]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170303 - Tvameva - indian ink - watercolor -lores

    ”ஆடுறாரே கீதையைப் பாடுறாரே கோகுல
    மாடு(உ)ராய ஆனந்த மா(ய்ஆ)யாட்டம் -போடுறது:
    பார்த்தன் அருகிருந்தால் பாவபுண்யம் பார்க்கணுமே
    வார்த்தையில்லா ஜீவன் வசு’’….கிரேசி மோகன்….!

    Share