கவிஞர் ஜவஹர்லால்

 

பார்வையில்  கூர்மை  மிகவேண்டும் – கண்ணிற்

பளிச்சென  உண்மை  படவேண்டும்.

சீர்மையைப்  போற்றும்  திறம்வேண்டும் – நிலவும்

தீமைகள்  சாடும்  உரம்வேண்டும்.

 

அல்லவை  செய்வோர்  தமைக்கண்டால் – பாட்டால்

அடிக்கும்  துணிவு  வரவேண்டும்

நல்லவை  செய்வோர்  பாதமலர் – போற்றி

நாளும்  வணங்கும்  உளம்வேண்டும்.

 

அதிகா  ரத்தின்  வால்பிடித்தே – வாயால்

அனுதினம்  புகழா   மனம் வேண்டும்.

எதுதான்  வந்து  மோதிடினும் – எழுத்தில்

இழுக்குச்  சேரா  நெறிவேண்டும்

 

அடிதடிக்  கும்பல்  அதட்டலுக்கே – சற்றும்

அஞ்சாத்  துணிவு  மிக வேண்டும்

இடித்துப்  பொடியா   யாக்கிடினும் – நந்தம்

எழுத்து  எழுந்து  வர வேண்டும்

 

பள்ளமே  கிடப்போர்  மேடுவர – எழுதிப்

பாதிப்  புக்கள்  தரவேண்டும்.

உள்ளமே  நொந்து  கிடப்போரை – மயில்

இறகாய்த்  தடவும்  திறம் வேண்டும்.

 

நல்லவை  இவைகள்  இல்லையெனில் – இந்த

நாட்டில்  எழுத்தே  எதற்காக?

அல்லவை  ஒழிக்க  வில்லையெனில் – எழுத்தே

அரும்புவ  தெல்லாம்   எதற்காக?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *