நிர்மலா ராகவன்

மாற்றம் ஏமாற்றமல்ல

நலம்-2-1-1-1

மாறுவது நல்வழியில் இருப்பின், அதுவே முன்னேற்றம் என்பது. இல்லாவிட்டால், காலத்தையும், விதியையும் பழித்துக்கொண்டு, வாழ்வில் பிடிப்பில்லாது இருக்கவேண்டியதுதான். இதைத்தான், ஆடை நனைந்த சிறு குழந்தைகள்தாம் மாற்றத்தை விரும்புவர் என்று விளையாட்டாய் சொல்வதுண்டு.

எதுவும் பழையபடியே இருந்தால், அது பழகிப்போய்விடுகிறது. புதிய வழி எப்படி இருக்குமோ என்ற அச்சமே மாற்றத்தை ஏற்கவிடாது தடுக்கிறது.

தெருவில் நடந்து போகையில், ஒரு வாகனம் நம் எதிரில் விரைந்து வந்தால் நேராகவே போவோமா? திசையை மாற்றுவதில்லையா? வாழ்க்கையும் அதுபோல்தான். சில தடங்கல்களை மாற்றத்தால் விலக்கலாம்.

மாற்றத்துக்கு முக்கியமானது `பிறர் என்ன சொல்லி விடுவார்களோ!’ என்ற பயத்தை விலக்குவது. `சரியானதுதான்’ என்று நமக்குப் பட்டதை துணிந்து செய்தால் வெற்றி நிச்சயம்.

“உலகில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், நீ உன்னையே மாற்றிக்கொள்!” (மகாத்மா காந்தி).

கதை

நான் ஆசிரியத் தொழிலில் புகுந்தபோது, கோலாலம்பூரிலிருந்த பிற ஆசிரியைகளைவிட மிகவும் மாறுபட்டிருந்தேன். பெரும்பாலானோர் சீனர்கள். எண்ணை வைத்து வாரிய என் ஒற்றைப்பின்னல் அவர்களை மட்டுமின்றி, மாணவிகளையும் முகம் சுளிக்க வைத்தது. நான் தனித்து உணர்ந்தேன்.

முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டேன். `ஒரு சொட்டுக்குமேல் எண்ணை வைத்துக்கொள்ளாதே! அடிக்கடி தலை சீவிக்கொள்,’ என்றெல்லாம் சக ஆசிரியைகள் நட்புரிமையுடன் போதித்தார்கள். `லிப்ஸ்டிக் அணியுங்கள், டீச்சர்!’ என்று கெஞ்சினார்கள் மாணவிகள்.

வெளி அலங்காரத்தில் அவர்களைப்போல சில மாறுதல்களைச் செய்துகொண்டதால் அவர்களுக்கு என்னைத் தங்களில் ஒருத்தியாக ஏற்க முடிந்தது.

என் புக்ககத்தினரைப் பொறுத்தவரை, கணவன் இறந்தபின்தான் ஒரு பெண் தலையை மழித்துக்கொள்வாள். எனவே அவர்கள் அதிர்ந்தார்கள். எல்லாரையும், எப்போதும் திருப்திப்படுத்த முடியாது.

என் பெயர் சற்று பிரபலமானதும், “என் பொண்ணும் ஒன்னைமாதிரியே தலைமயிரை வெட்டிண்டுட்டா!” என்று பெருமையுடன் சொன்னார்கள் சில தாய்மார்கள்!

கேலியைப் பொருட்படுத்தாதே!

`நடக்கிறோம், ஓடுகிறோம். இது போதாதா?’ என்று திருப்தியுடன் பலரும் இருக்க, `மனிதனும் பறக்கலாம்’ என்று நம்பி ஆராய்ச்சிகள் செய்த ரைட் சகோதரர்கள் எவ்வளவு கேலிக்கு ஆளானார்கள்! `

அவர்கள் நிகழ்த்திய மாற்றத்தால் உலகம் இன்று சுருங்கித்தான் விட்டது. பிறர் ஏற்கவில்லையே என்று அவர்கள் தமது ஆராய்ச்சியைப் பாதியிலேயே கைவிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்!

கல்வியால் மாற்றங்கள்

`ஏழைகள் ஏழைகளாகவே இருந்தால்தான் அடங்கி இருப்பார்கள், அவர்களை எதற்காக மாற்றுவது?’ என்று பின்தங்கிப்போனவர்களுக்கு கல்வி அறிவே கூடாது என்றிருந்த காலம் அது. ஒரு பிராமணர் சேரிகளுக்குச் சென்று, கல்வி போதித்ததால் அவரை அச்சமூகம் விலக்கி வைத்துவிட்டதாகப் படித்திருக்கிறேன். எந்தவித மாற்றமும் முதலில் எதிர்ப்புக்கு ஆளாகும்.

அதுபோல்தான் பெண்கள் கல்வி பயில்வதும். `நிறையப் படித்தால், கர்வம் வந்துவிடும். நம்மை மதிக்கமாட்டாள்!’ என்ற அச்சத்தால் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஆவதே துர்லபம் என்றிருந்தது போன நூற்றாண்டின் பாதிவரை.

பட்டப்படிப்புப் படித்த பெண் ஒருத்தி சில பழக்கவழக்கங்களை அறிவுபூர்வமாக எதிர்க்கும்போது, `இதுக்குத்தான் பெண்களைப் படிக்க வைக்கக்கூடாது என்கிறது!’ என்று உறவினர் கண்டனம் செய்வார்கள்.

படித்து வேலைக்குப் போகும் பெண்ணானவள் குடும்பத்தின் பொருளாதார நிலைமையை உயர்த்துவதோடு, சொந்தக்காலில் நிற்கவும் பழகுகிறாள். அவளுடைய தன்னம்பிக்கை கூடுகிறது. அதனால், குழந்தைகளும் நல்லவிதமாக வளர்க்கப்படுவார்கள். ஒருக்கால் கணவனை இழந்தாலும், பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கணவனை அச்சத்துடன் பார்த்து வந்த நிலை மாறி, இன்று நண்பனாகக் கருத முடிகிறது என்றால், அது பெண் கல்வியினால் அல்லவா? இதெல்லாம் புரியாது, பெண்கள் கல்வியறிவே அற்றவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்றிருந்த காலமும் உண்டு. துணிந்து அதை மாற்றியவர்களுக்குப் பாராட்டுகள்.

மாற்றுவது எப்படி?

பேசும், எழுதும் வார்த்தைகளாலும், புதிய எண்ணங்களாலும், செயலாலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

என்னிடம், `யாரும் உங்களைப்போல் புகார் செய்து எழுதுவதில்லை!’ என்றார் என் மாணவியின் தந்தை. முதல்முறையாக அப்போதுதான் சந்தித்திருந்தோம்.
என்ன புகார்?

தமிழ்ப்பெண்கள் நெற்றிப்பொட்டு வைத்துக்கொண்டு வந்தார்கள் என்ற காரணத்தால் அவர்கள் கன்னத்தில் அறைந்த தலைமை ஆசிரியைப்பற்றி;

தமிழ்ப்பையன் வகுப்பில் பேசினான், வீட்டுப்பாடம் செய்துகொண்டு வரவில்லை என்று அவனைத் தன் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அடித்த கட்டொழுங்கு ஆசிரியருக்கு எதிராக;

மாணவிகளை பாலியல் வதைக்கு உட்படுத்த முயன்ற ஆசிரியர்களைப்பற்றி;

தினமுமே, ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்கள் செய்த சில தவறுகளை ஒலிபெருக்கியில் அலறி, மாணவர்களும் கேட்டு பரிதாபப்படச் செய்த தலைமை ஆசிரியையைப்பற்றி;

மனைவியை அடித்துத் துன்புறுத்திய எனது பக்கத்து வீட்டுக்கார மலாய்க்காரரைப்பற்றி;

இங்குள்ள பிரபலமான கோயில் பிரகாரத்திலேயே ஒரு குரங்குக்குட்டியை கயிற்றில் கட்டி, அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கட்டணம் விதித்தவனையும், அதை அனுமதித்தவர்களையும்பற்றி. குரங்குக்குட்டி தன் சாகசங்களைக் காட்ட குட்டிக்கரணம் அடித்தபோது, அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த குட்டையான கயிறு அதைப் பின்னால் இழுத்ததைப் பார்க்க என் மனம் கொதித்தது.

இதைப்போல் இன்னும் எவ்வளவோ!

நான் கணவனால் வதைபடும் இந்தியப் பெண்களைப்பற்றி (ஆங்கிலத்தில்) எழுதி, எவ்விதம் நம் சமூகம் அதைக் கண்டும் காணாததுபோல் நடந்துகொள்கிறது என்று எழுதியபோது, முன்பின் தெரியாத ஒருவர் என்னைப் பொது இடத்தில் பார்த்தபோது, அடிக்காத குறை.

வதைபடும் பெண்களுக்கு அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியாத நிலையில், என்னைப்போன்ற பிறர் அதை அலசுவதில் என்ன தப்பு? (மனைவியை அடிப்பது இப்போது மலேசியாவில் சட்டவிரோதம்).

இப்படியாக, பிறருக்கு நன்மை விளைவிக்கும் பற்பல மாற்றங்களையும் எழுத்தால் ஒருவர் நிகழ்த்த முயன்றால், நிறைய எதிர்ப்புகளையும், அவமானங்களையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.

தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள், `எதிரிகள் வேண்டுமென்றால், ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்து,’என்று! (இதனால்தான் கோழைகள், `நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம். பிறர் எப்படி நாசமாகப் போனால் என்ன!’ என்று, சுயநலமிகளாக இருப்பதிலேயே திருப்தி அடைந்துவிடுகிறார்கள்போலும்!)

மாற்றம் நிகழ்ந்து, பிறர் அதனால் பயனடையும்போது நமக்கும் மகிழ்ச்சி உண்டாக, இப்படித்தான் துணிச்சலாகச் செயல்பட வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். தைரியம் அதிகரிக்கும்.

வேண்டாத மாற்றங்கள்

எல்லாவித மாற்றங்களும் நன்மையில்தான் முடியும் என்பதில்லை. உதாரணமாக, சிகரெட்டு பிடித்தாலோ, அல்லது மது அருந்தினாலோதான் நண்பர்களுடன் கலந்து பழகமுடியும் என்ற மாற்றம் தகாது. இளமையில் உற்சாகமாக இருப்பது போகப் போக வீண்செலவிலும், ஆரோக்கியக் கேட்டிலும்தான் முடியும்.

`தீயது’ என்று புரிந்தவுடன் விலக, அப்பழக்கங்களை மாற்றிக்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்பழக்கங்களை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் பிற நண்பர்கள் கேலி செய்வார்கள். `கெட்ட பழக்கம்’ என்று ஒருவர் மட்டும் சேராதிருப்பது அவர்களைப் பழிப்பது போலாகிவிடுகிறது. இது புரிந்தால், அஞ்சத் தேவையில்லை.

இயற்கை நிகழ்த்தும் மாற்றங்கள்

`நாங்கள் மாறவே மாட்டோம்!’ என்று பெருமை பேசுகிறவர்கள் இருக்கலாம். ஆனால், வயது ஏற ஏற, நாமும் மாறவேண்டும் என்று கருதவைக்கும் எண்ணம் ஒன்றும் நம்மில் பலருக்கு இருக்கிறது. வயது வந்த பெண் இருந்தால், தாய் அலங்காரத்தில் நாட்டம் கொள்ளக்கூடாது; தாய் தந்தையர் தனித்தனியே படுக்க வேண்டும் — இப்படி.

`எனக்கென்ன, வயதாகிவிட்டது!’ என்று அலுத்துக்கொள்வதுபோல் பெருமையாகச் சொல்லிக்கொள்பவர்களைத்தான் வயதுக்கேற்ற வியாதிகளும் அண்டுகின்றன.

என் தோழி ஒருத்தி தன் தந்தை தனது எண்பத்து இரண்டாம் வயதில் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆனார் என்று அவள் பெருமையுடன் தெரிவித்தாள். அவள் மலாய்க்காரி.

பசித்தால் சாப்பிடுகிறோம். உடற்பசி என்றால் மட்டும் கேவலமா! இத்தகைய மனப்போக்கினால், மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்பவர் விவரம் தெரியாத பெண்களுடன் சல்லாபம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

எனக்குப் பேரக்குழந்தை பிறந்ததும், என் சிநேகிதி மிஸஸ் கோ, “நீ இன்னும் நீச்சல் குளத்துக்குப் போகிறாயா?” என்று கேட்டாள்.

“ஏன் கூடாது?” என்று கேட்டேன்.

அவள் ஏதோ கேலி செய்தாள்.

நான் சட்டை செய்யவில்லை. வயதாகிவிட்டதே என்று நடக்காமல் இருந்துவிடுகிறோமா? நீச்சல் ஆரோக்கியமான பொழுதுபோக்குதானே! எதற்கு மாற்றிக்கொள்வது?

கதை

நான் ஆசிரியப் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கு ரோமியோவும் இருந்தார். தினம் ஒரு சீனப்பெண்ணின் கையைக் கோர்த்துக்கொண்டு நடந்ததால், எல்லாரும் அவரை அப்படித்தான் குறிப்பிடுவார்கள்.

நான் அவருடன் பேசியதே கிடையாது. அவருடைய இயற்பெயரையும் அறியேன். (வெவ்வேறு பாடங்களை எடுத்திருந்தோம்).

இருபது ஆண்டுகள் கழித்து, மேற்பயிற்சியின்போது என்னைச் சந்தித்து, “நீங்கள் மிகவும் மாறிவிட்டீர்கள்!” என்றார்.

நான் அதற்கு நேரிடையாகப் பதில் கூறாது, “உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறதா?” என்று விசாரித்தேன்.

“இருபது வயதில் மகள்,” என்றார், பெருமையுடன்.

“இருபது வருடங்களுக்கு முன்பு உங்கள் மகள் இப்போது இருப்பதுபோலவா இருந்தாள்?” என்று கேட்டுவிட்டு, அவர் வாயைப் பிளக்க வைத்துவிட்டு, அப்பால் நகர்ந்தேன்.

இயற்கை நமது உடலில் மட்டுமா மாற்றங்களை ஏற்படுத்துகிறது? நடை, உடை, பேச்சு எல்லாமே இடத்துக்குத் தக்கபடி மாறிவிடுகின்றன.

கதை

எங்கள் நண்பர் ஸலிஹின் மேற்படிப்புக்காக கானடா சென்றிருந்தார். திரும்பி வந்ததும், அவருடைய உச்சரிப்பு `அமெரிக்கானோ’ மாதிரி ஆகிவிட்டது என்று நண்பர்கள் கேலி செய்தார்கள்.

“நான் அங்கு வகுப்பில் பேசியபோது எல்லாரும் சிரித்தார்கள். (சாதாரணமாகவே, அவர் பேசுவது மலாய் மொழியா, அல்லது ஆங்கிலமா என்று புரியாது). அதனால் உச்சரிப்பை மாற்றிக்கொண்டேன். இப்போது இங்கும் எல்லாரும் சிரிக்கிறார்கள்!” என்றார் அழமாட்டாக்குறையாக.

கல்யாணமான பின்போ, அல்லது வேறு நாட்டுக்குச் செல்ல நேரிட்டாலோ, தம் குழந்தைகள் மாறிவிடுகிறார்களே என்று பெற்றோர் அங்கலாய்ப்பதிலும் அர்த்தமில்லை.

மாறாக, சிறுவயதில் தாம் போதித்த அன்பு, நேர்மை, பரோபகாரம் போன்ற நற்குணங்களை என்ன துன்பம் வந்தாலும் இழக்காது இருக்கிறார்களே என்று பெருமைப்படலாமே!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *