Blog

  • நாலடியார் நயம் – 34

    நாலடியார் நயம் – 34

    நாங்குநேரி வாசஸ்ரீ

    34. பேதைமை

    பாடல் 331

    கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
    நிலையறியாது அந்நீர் படிந்தாடி அற்றே
    கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
    வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.

    கொல்லும் தொழிலில் வல்ல எமன் உயிரைக்
    கொண்டுபோகும் நாளை எதிர்நோக்கியிருக்க
    கொஞ்சமும் உணராது இவ்வுலக வாழ்வெனும்
    கொடும் வலையில் இறுமாந்து இருப்பவரின் பெருமை
    கொலை செய்பவர் உலையில் போட்டு நெருப்பை மூட்ட
    கவலையின்றி தன்நிலை உணராது அந்நீரில் மூழ்கிக்
    களித்து ஆடும் ஆமை போலாம்.

    பாடல் 332

    பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
    ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்
    இற்செய் குறைவினை நீக்கி அறவினை
    மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.

    குடும்பத்துக்குத் தேவையான செயலைக்
    குறைவற முடித்து அறச் செயல் செய்ய
    பின் யோசிப்போமென அலட்சியமாயிருப்போர்
    பெருமை பெருங்கடலில் மூழ்கிக் குளிக்கச்
    சென்றோர் ஓசை அடங்கியபின் குளிக்கலாமென
    சிந்தித்துக் காத்திருப்பது போலாம்.

    பாடல் 333

    குலந் தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
    விலங்காமல் எய்தியக் கண்ணும் – நலஞ்சான்ற
    மையாறு தொல்சீர் உலகம் அறியாமை
    நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.

    நற்குலம், தவம், கல்வி வாழும் முறை
    நல்லொழுக்க முதிர்ச்சி எனும் ஐந்தும்
    நன்கு ஒருவரிடம் பொருந்தியிருந்தும்
    நன்மைமிகு குற்றமற்ற பழஞ்சிறப்புடை
    நானிலத்திற்கு ஏற்ற நற்செயல் அறியாது
    நடத்தல் நெய்யில்லாப் பால்சோற்றுக்கு ஒப்பாம்.

    பாடல் 334

    கல்நனி நல்ல கடையாய மாக்களின்;
    சொல்நனி தாமுணரா வாயினும் – இன்னினியே
    நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று
    உற்றவர்க்குத் தாம்உதவ லான்.

    பிறருக்கு உதவாத அற்ப மனிதரைவிட
    பலவிதத்தில் கற்கள் நல்லன தம்மைப்
    பாதுகாத்து அடைந்தவர்க்கு அப்போதே
    படுப்பதும் நிற்பதும் நடப்பதும் உட்காருவதுமான
    பல செயல்களுக்கு உதவுவதால்.

    பாடல் 335

    பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
    கறுவுகொண் டேலாதார் மாட்டும் – கறுவினால்
    கோத்தின்னா கூறி உரைக்கால் பேதைக்கு
    நாத்தின்னும் நல்ல தினத்து.

    தான்பெறத்தக்கதென எதுவுமில்லாதபோதும்
    தக்க பயனைப் பெற்றவன்போல்
    தன்கோபத்தை ஏற்காதவரிடமும் பகையுடன்
    தீயசினத்தினால் அன்பில்லாச் சொற்களைத்
    தாம் கூட்டிச் சொல்லாமற்போனால் நல்ல
    தினவானது அறிவீனனின் நாக்கைத் தின்றுவிடும்.
    (தினவு என்பது அரிப்பு எனும் பொருள்படும்)

    பாடல் 336

    தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
    எங்கண் வணக்குதும் என்பர் – புன்கேண்மை
    நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
    கற்கிள்ளிக் கையிழந் தற்று.

    நல்ல தளிர்நிறை புன்னைமலரும்
    நற்கடற்கரையுடை வேந்தனே!
    நம்மிடம் விருப்பமில்லாதார்பின் சென்று
    நம்மை விரும்புபவராய் இவரைச் செய்வோமென
    நினைப்பவரின் அற்ப உறவு கல்லைக் கிள்ளி
    நல்ல கையைப் போக்கிக் கொள்வதுபோலாம்.

    பாடல் 337

    ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
    போகா தெறும்பு புறஞ்சுற்றும்; – யாதும்
    கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
    விடாஅர் உலகத் தவர்.

    தமக்குக் கிட்டாதெனத் தெரிந்தும் நெய்ப் பாத்திரத்தை
    தவறாது எறும்புகள் சுற்றிக்கொண்டேயிருக்கும் அதுபோல்
    தராதவராயினும் பொருள் உள்ளவரை உலகத்தார்
    தொடர்ந்து விடாது சுற்றிக்கொண்டேயிருப்பர்.

    பாடல் 338

    நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார்
    இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் – எல்லாம்
    இனியார்தோள் சேரார் இடைபட வாழார்
    முனியார்கொல் தாம்வாழும் நாள்.

    நாள்தோறும் பெறத்தக்க நன்மை அடையார்
    நல்லறம் செய்யார் இல்லாதவர்க்கு ஒன்றும்
    நல்கார் எல்லா இன்பமும் அளிக்கும்
    நல்ல மனைவியின் தோளைத் தழுவார்
    நற்புகழுடன்வாழார் இப்படிப்பட்டவர் தாம்வாழும்
    நாளையெல்லாம் வெறுக்கமாட்டார்களா?

    பாடல் 339

    விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
    விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை – தழங்குகுரல்
    பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
    ஆய்நலம் இல்லாதார் மாட்டு.

    தம்மை ஒருவர் புகழ்ந்து பேச
    தாம் இத்தகு புகழுரைகளை
    விரும்பமாட்டோம் எனப் புறக்கணித்து
    வெறுக்கும் மூடரின் நட்பு கடல்சூழ்
    உலகையே தருவதாக இருப்பினும்
    உயர் சான்றோர் விரும்பமாட்டார்.

    பாடல் 340

    கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
    பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
    மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
    பித்தனென் றெள்ளப் படும்.

    தான் கற்ற கல்வியையும் மேன்மையையும்
    தம் குடிப்பிறப்பையும் அயலார் புகழ்ந்துரைப்பின்
    தக்க பெருமையாம் அல்லாது அவன்
    தம்மைத்தாமே புகழ்ந்து கூறின் ஏற்காது
    தொடர்ந்து கேலிபேசுவோர் பலராகி
    தக்க மருந்தாலும் தணியாத பித்தனெனத்
    தூற்றி அனைவராலும் இகழப்படுவான்.
    (மைத்துனர்- கேலி பேசுவோர்).

    Share
  • என்ன பொல்லாத கவிதை?

    என்ன பொல்லாத கவிதை?

    பாஸ்கர் சேஷாத்ரி

    முண்டியடித்துக் கொண்டு அலைகள் வந்தன
    முழுசாய் கால்களைத் தொடாமல் சென்றன
    ஆரவாரமாய் நண்டுகள் மணலேறி வந்தன
    அவசரமாய்த் துளைக்குள் தலை குனிந்து புகுந்தன
    திக்கேதும் அறியாமல் தென்றல் மேல் வீசின
    கண்களை அடைத்துவிட்டு சிக்காமல் போயின
    விண்மீன்கள் இறங்கி வந்து உடைகளாக மாறின
    பொன்மணலும் பொடிப்பொடியாய் மேலும் நசுங்கின
    வெண்ணிலவும் கிறங்கி வந்து கண்களாய்த் தெரிந்தன
    மின்மினியும் கூட்டம் கூடி இருளைப் பழித்தன
    அலையின் இரைச்சலும் நொடியில் தொலைந்தன .
    எங்கும் முழுமையில்லை ஏதும் முழுமையில்லை
    பாதியிலே புகுந்து மீதியிலே போகும் வாழ்வு இது
    கடலறியும் என் கவலை, கவிதை என்ன அறியும்?

    Share
  • தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆவது எப்படி?

    17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் நீங்கள் இணையவழியே உறுப்பினர் ஆக முடியும். இதோ ஒரு வழிகாட்டி.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்- 1 (அயலிலாட்டி)

    அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்- 1 (அயலிலாட்டி)

    ச. கண்மணி கணேசன் (ஓய்வு),
    முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை:

    தொகைநூல்களாக உள்ள அகஇலக்கியங்களில் கூற்று நிகழ்த்த உரியவர் யார் என்பதைத் தொல்காப்பியர் கண்டு வரையறுத்துக் கூறியுள்ளார். அவர் விரித்துக் கூறும் பட்டியலில் இடம்பெறாத பல பாத்திரங்கள் அகப்பாடல்களில் உள்ளன. அவற்றைச் சிறுபாத்திரங்கள் எனலாம். அவற்றைத் தொகுத்து அகரவரிசைப் படுத்தி ஒவ்வொரு பாத்திரமாகக் கண்டு விதந்து விளக்கிச் சுவைக்கும் போது இலக்கியத்திறன் வெளிப்படுவதுடன் படைப்பாளியுடன் வாசகராகிய நாம் ஒத்துணர்வு கொண்டு இலக்கிய வானில் பறக்கலாம்.

    சிறுபாத்திர வகைகள்:

    தலைவனும் தலைவியும் தலைமைப் பாத்திரங்கள் என்னும் தகுதிக்கு உரியவராக; தோழி, செவிலி, பாங்கன் முதலாய கூற்று நிகழ்த்துவோர் துணைப் பாத்திரங்கள் ஆகின்றனர். அகப்பாடலின் இடப்பின்புலத்திற்குத் துணை செய்யும் கருப்பொருளாகிய மக்கள் தவிர்ந்த சிறுபாத்திரங்கள் பலதரப்பட்டனவாக உள.

    அவை பின்வருமாறு:

    1. காட்சியில் நேரடியாக இடம்பெற்றுக் கேட்பினும்; பேசாத பாத்திரங்கள்

    2. காட்சியில் நேரடியாக இடம்பெறினும் கேட்காத; கேட்க இயலாத; பேசாத தனிப்பாத்திரங்களும், குழுப்பாத்திரங்களும்

    3. காட்சியில் இடம்பெறாது; கூற்றில் இடையே சுட்டப்படும் தனிப்பாத்திரங்களும், குழுப்பாத்திரங்களும்

    4. காட்சியில் இடம்பெறாது; பேசியதாகக் கூறப்படும் தனிப்பாத்திரங்களும், குழுப்பாத்திரங்களும்

    அயலிலாட்டி = பக்கத்து வீட்டுக்காரி

    மனிதன் ஒரு சமூக விலங்கு என்பது உலகியல் வழக்கு. சமூகமாகச் சேர்ந்து வாழும்  மனிதனுக்குக் குடியிருக்கும் இல்லத்தின் அருகில் வசிக்கும் இல்லத்தார் நெருங்கிய தொடர்புடையவர் ஆகின்றனர். ஆனால் அகப்பாடல் நாடகவழக்கில் அண்டை வீட்டாருக்குப் பேசும் உரிமை இல்லை. பாடல் சான்ற புலவனின் திறம் நாடக வழக்கையும் உலகியல் வழக்கையும் இணைப்பதால் ‘பக்கத்து வீட்டுக்காரி’ சிறுபாத்திரமாகி இடம்பெறுகிறாள். நற்றிணை- 65ல் தோழியும், குறுந்தொகை- 201ல் தலைவியும், அகநானூறு- 386ல் தோழியும் ‘பக்கத்து வீட்டுக்காரி’ பேசியதாகக் கூறுகின்றனர். இப்பக்கத்து வீட்டுக்காரிகள் இரு திறத்தினர்.

    1. தன் வேலையைப் பார்த்துக்கொண்டு; தன் போக்கில் பேசிச் செல்பவள்.

    2. தலைவியின் இல்லத்திற்கு நேரில் வந்து அவளைச் சந்தித்துப் பேசுபவள்.

    நற்றிணை சித்தரிக்கும் அயலிலாட்டி:

    தலைவனுக்கும் தலைவிக்கும் இன்னும் மணவினை நிகழவில்லை.

    அவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவிக்கு ஆறுதல் சொல்ல முனைகிறாள் தோழி.

    “அமுதம் உண்க நம் அயலிலாட்டி
    ………………….
    பெருமலை நாடனை வரூஉம் என்றோளே” (மேற்.)

    ‘அவ வாய்க்கிச் சக்கரை தான் போடணும்’ என்று வாழ்த்துவது இன்றும் பேச்சில் உள்ள வழக்கே. அதுபோலத்தான் இங்கு தோழியும் வாழ்த்துகிறாள். யாரிடமோ பேசிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரி ‘வந்துவிடுவான்’ என்கிறாள். அது யார்? என்ன விபரம்? என்றெல்லாம் தோழிக்கும் தெரியாது; தலைவிக்கும் தெரியாது. நமக்கும் அது தேவையில்லை. ஆனால் அச்சொற்கள் அசரீரி போல; நல்ல நிமித்தமாகப் பட்டது; நம்பிக்கை ஊட்டியது. அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் ‘சாகாவரம் கொடுக்கும் அமுதத்தை அவள் உண்பாளாக’ என்று வாயாரப் புகழ்ந்து போற்றுகிறாள்.

    கிடங்கில் எனும் ஊர் போன்ற இனிய சொற்கள் என்பது அயலிலாட்டியின் பேச்சுக்குக் கபிலரின் கவித்துவ உவமை. அதையடுத்துத் தலைவியின் துன்ப நிலையைச் சொல்லாமல் சொல்லும் உள்ளுறை உவமை. அவ்வப்போது பெருகும் காட்டாறு; பெருகுங்கால் கலங்கும் கரையின்  பாசி; கலங்கி நீருடன் கலந்து வீழும் வெள்ளருவி; தன் தாகம் தீர அங்கு நீரருந்தும் யானை; அதே இடத்திற்கு வரும் புலி; புலியுடன் போர் செய்து புண்பட்ட யானை; அதன் கோட்டை விரும்பிய வில்திறன் மிகுந்த வேடர்; அவர் செலுத்திய கணைகள் புண்ணைத் தாக்க தாங்கவியலாத் துன்பத்தில் அலறிய யானை; அந்த அலறல் இடிமுழக்கம் போல் எதிரொலிக்கும் மலை; அம்மலைத்  தலைவனைக் கருதிக் காத்திருக்கும் தலைவி என இறைச்சியுடன் கூடிய அகச்சுவை ததும்புகிறது இப்பாடலில்.

    இங்கு அயலிலாட்டியின் பங்கு ‘நற்சொல் கூறல்’. தலைவி விரைவில் மணவினை பெறுவாள் எனும் கூடல் நிமித்தமாகிய உரிப்பொருள் விளக்கத்திற்கு வழிவகை செய்பவள் ஆகிறாள் அயலிலாட்டி.

    குறுந்தொகை சித்தரிக்கும் அயலிலாட்டி:

    “அமிழ்தம் உண்க நம் அயலிலாட்டி” என்பவள் குறுந்தொகைத்

    தலைவி. இங்கும் அச்சொற்கள் நன்நிமித்தமாகக் கொள்ளப்படுகின்றன. ‘அவன் வருவான்’ என்ற நற்சொல்லை முன்னர் கேட்டவள்; பின்னோக்கு உத்தியாக (flash back) அதுபற்றித் தோழியிடம் விவரிக்கிறாள்.

    பெயர் தெரியாப் புலவர் பாடிய இப்பாடலிலும் அகப்பாடலுக்கே உரிய உள்ளுறை அழகு பொருளாழத்துடன் அமைந்து சுவை கூட்டுகிறது. நீலநிறத்து இறக்கைகளைக் கொண்ட வௌவால்; அது உண்ட மாம்பழத்தில் பாலின் இனிமையும் சேர்ந்தது போன்று மிதமிஞ்சிய இனிமை. அடுத்து அந்த வௌவால் உண்டது புளிப்பு மிகுந்த நெல்லிக்கனி. நீரருந்திய பின்னர் தொடர்ந்து அது ஓய்வெடுத்தது மூங்கில் புதர்கள் மிகுந்த சோலை. அதாவது தொங்கிக் கொண்டு முட்களே இல்லாத மூங்கிலின் உச்சியில் இனிதாகத் துயின்றது.

    இங்கே புலவர் சொல்லாமல் சொல்லும் குறிப்புப் பொருள்; தான் விரும்பிய தலைவனோடு இல்லறம் நடத்தும் இன்பம்; நெல்லிக்கனி உண்டபின் நீரருந்திய நாவில் தங்கும் இனிப்புச்சுவை போன்றது என்பது தான். தலைவி தன் பிறந்த வீட்டில் அனுபவித்த செல்லமும், செல்வ வசதியும் பாலின் இனிமை கூட்டிய மாம்பழச்சுவை மாதிரி தான். என்ன தான் இனிமை என்றாலும் மாம்பழம் உண்ட பின்பு நீர் அருந்தினால் நாவில் துவர்ப்பு தானே மிஞ்சும். தன் களவுக்காலம் ஊரார் புறம்பேசும் முட்குத்துகளின் இன்னலோடு அமைந்து இருந்தாலும்; மனதிற்கினிய மணாளனோடு நடத்தும் இல்லறசுகம் ஊராரின் வம்புப் பேச்சே இல்லாத; சிறந்த  அமைதியான வாழ்க்கையை அவளுக்கு அளிக்கிறது. இத்தகு நிலைமை தனக்கு வாய்க்கும் என்பதை அயலிலாட்டி சொன்ன ‘அவன் வருவான்’ என்ற நற்சொல் மூலம் அறிந்து ஆற்றி இருந்ததாகத் தோழியிடம் எடுத்துச் சொல்கிறாள் தலைவி.

    ஆற்றியிருத்தல் என்னும் முல்லைத்திணை உரிப்பொருளை அழுத்தமாகக்  கூற அயலிலாட்டியின் நற்சொற்கள் பயன்பட்டதாகத் தலைவி உரைக்கிறாள்.

    அகநானூற்று அயலிலாட்டி:

    தலைவி விடியவிடியத் தலைவனின்றித் தனித்து தவித்திருக்கிறாள். அவனது புறத்தொழுக்கம் தலைவிக்குத் தாங்கொணாத் துயரைத் தருகிறது. ஆனாலும் அதுகுறித்து அவளுக்கும் தோழிக்கும் விபரமேதும் தெரியவில்லை. மனஅழுத்தத்திற்கு ஆளாகி; ஒப்பனை செய்யாதவளாய்த், தூங்காத விழிகளோடு சோர்ந்து போய்த் தன் இல்லத்தில் இருப்பவள் முன் அயலிலாட்டி பகற்பொழுதில்  வருகிறாள். ’நானும் இதே சேரியில் தான் வசிக்கிறேன்; என் வீடு சற்றுத் தள்ளி இருக்கிறது. நீ இவ்வளவு சோர்ந்து போவதேன்? என்று கேட்டு மோதிரமணிந்த தன் விரல்களால் அவளது தலையை நீவி; நெற்றியைத் தடவி; ஆறுதல் கூறி; உனக்குத் தங்கை ஆகும் தகுதி உடையவள் நான்’ என ஒரு பெரிய உண்மையைச் சிரமமே இல்லாமல் கூச்சமின்றித் தெளிவாக்கி விட்டுச் செல்கிறாள். பின்னர் தலைவன் வரும்போது தோழி ‘எனக்கு வெட்கமாக இருக்கிறது’ என்று கூறி வாயில் மறுத்து நிற்கிறாள். பரணரின் இப்பாட்டில் அயலிலாட்டி தலைவனின் புறத்தொழுக்கத்திற்குத் துணை நின்றவள்.

    தனது பாடல்களில் வரலாற்றுக் கருத்துக்களைப் பெய்து உவமிக்கும் தனித்தன்மை உடையவர் பரணர். இப்பாடலிலும் தோழியின் நாணத்திற்கு வரலாற்று நிகழ்ச்சி உவமை ஆகிறது. பாணன் எனும் பெயரிய மற்போர் வீரன் ஆரியப்  பொருநனைத் தனது பெருவலி கொண்ட மார்பினால் மோதித் துன்புறுத்தி; அவன் முழவு போன்ற திரண்ட தோள்களைக் கையகப்படுத்தி நெரித்துத்; தோற்கடித்து எழவொட்டாமல் வென்றதைக் கண்டு; கணையன் எப்படி நாணம் கொண்டானோ அப்படிப்பட்ட நாணம் எனக்கும் தோன்றுகிறது என்கிறாள் தோழி. தலைவனின் இழிந்த ஒழுக்கத்தையும் உள்ளுறை மூலம் தோழி குத்திக் காட்டுகிறாள். ‘பொய்கையிலுள்ள நாற்றம் மிகுந்த நீர்நாய் பகல் பொழுதில் வாளைமீனை இரையாகக் கொள்ளத் தேடும் ஊரை உடையவனே’ என்னும் கூற்றில் உள்ள வசை தலைவனுக்குரியது.

    மருதத் திணைக்கு உரிய ஊடல் எனும் உரிப்பொருள் விளக்கத்திற்கு அயலிலாட்டி எனும் சிறுபாத்திரம் பயன்பட்டுள்ளது.

    முடிவுரை:    

    அயலிலாட்டியின் சொல் நற்சொல்லாக அமைய; தலைவி விரைவில் மணவினை பெறுவாள் எனும் கூடல் நிமித்தமாகிய உரிப்பொருள் விளக்கத்திற்கு வழிவகை செய்பவள் ஆகிறாள். ஆற்றியிருத்தல் என்னும் முல்லைத்திணை உரிப்பொருளுக்கு அவளது நற்சொற்கள் பயன்பட்டதாகத் தலைவி உரைக்கிறாள். மருதத் திணைக்குரிய ஊடல் எனும் உரிப்பொருள் விளக்கத்திற்கும் இப்பாத்திரம்     பயன்பட்டுள்ளது.

    Share
  • உடுத் தொகுப்புகளின் குடும்பங்கள் (Constellation families)

    உடுத் தொகுப்புகளின் குடும்பங்கள் (Constellation families)

    வெ. சுப்ரமணியன்

    உடுத் தொகுப்புகளின் பெயர்களுமே (Names of the Constellations), உடுக்களின் பெயர்களைப் (Names of the stars) போலவே, பலவிதமான மூலங்களிலிருந்து வந்தவை. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கதையையும் பொருளையும் கொண்டவை. பொதுவாகப் பழைய உடுத் தொகுப்புகளின் பெயர்கள் கிரேக்க புராணங்களிலிருந்து வந்தவை. அதே நேரத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட உடுத் தொகுப்புகள் பெரும்பாலும் அறிவியல் கருவிகள் மற்றும்  அயல் விலங்குகளைக் கொண்டு பெயரிடப்பட்டன. உடுக்களுடன் தொடர்புடைய கதைகள் ஒரு உடுத் தொகுப்பிற்கும் அடுத்த உடுத் தொகுப்பிற்கும் இடையிலேயே வேறுபடுவதால் பெயரிடுவதில் கண்டிப்பான விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

    இராசி உடுத் தொகுப்புகளைப் (zodiac constellations) போலவே கிரேக்க அல்லது ரோமானியத் தொன்மங்களில் சொல்லப்பட்டுள்ள கதாபாத்திரங்களைக் குறிக்கும் பல உடுத் தொகுப்புகளின் பெயர்கள் அநேகமாக நமக்கு நன்கு அறிமுகமானவைதான். இவை அனைத்தும் கிமு (BCE) இரண்டாம் (2) ஆம் நூற்றாண்டில் கிரேக்க வானியலாளர் தாலமியால் (Ptolemy)  உருவாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன.

    தற்போது அறியப்பட்டுள்ள எண்பத்தெட்டு (88) உடுத் தொகுப்புகளும் எட்டு (8) குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உடுத் தொகுப்பின் குடும்பங்கள் (Constellation families) என்பது வான் கோளத்தில் உடுத் தொகுப்புகளின் அண்மை (Proximity), பொதுவான வரலாற்றுத் தோற்றம் (Common historical origin) அல்லது பொதுவான தொன்மக் கருப்பொருள் (common mythological theme)  போன்ற சில வரையறுக்கப்பட்ட பண்புகளைப் பகிர்ந்து கொள்ளும் உடுத் தொகுதிகளின் தொகுப்பாகும்.

    கிளாடியஸ் தாலமி
    Claudius Ptolemaeus
    (born c. 100 CE—died c. 170 CE)

    மேற்கத்திய பாரம்பரியத்தில், வடக்கு உடுத் தொகுப்புகளில் (Constellations) பெரும்பாலானவை தாலமியின் கணித மற்றும் வானவியல் நூலான அல்மாஜெஸ்டில் (Almagest) தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து கிளைத்தவையே என்றாலும் அதன் வேர்கள் மெசபட்டோமிய வானியல் வரைக்குமே  செல்லுகின்றன. தூரத் தெற்கில் உள்ள பெரும்பாலான உடுக்கள் 16 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டுகளில் தெற்கில் பயணித்த மாலுமிகள் மற்றும் வானியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவிலும் சீனாவிலும் தனி மரபுகள் எழுந்தன.


    1975 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வானாய்வுக் கூடத்தின் (Harvard Observatory) இயக்குநரான டொனால்ட் எச். மென்செல் (Donald H. Menzel) பல பாரம்பரிய குழுக்களைத் தன்னுடைய பிரபலமான கணக்கில் சேகரித்து அவற்றை எ ஃபீல்ட் கைட் டு தி ஸ்டார்ஸ் அண்ட் பிளானட்ஸ் (A Field Guide to the Stars and Planets ) என்ற நூலில் சரிசெய்து ஒழுங்குபடுத்தினார். இதனால் 88 உடுத் தொகுப்புகளை (Constellations) 8 உடுத் தொகுப்புக் குடும்பங்களுக்குள் (Constellation families) அடக்கி விட முடிந்தது.

    படம் : உடுத் தொகுப்புக் குடும்பங்கள்
    By Cmglee, Timwi, NASA – Own work, 
    http://svs.gsfc.nasa.gov/vis/a000000/a003500/a003572, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=27881844

    இந்த எட்டுக் குடும்பங்களில், முதலாவது இராசிக் குடும்பம் (Zodiac family). வானத்தை வடக்கு தெற்காகப் பிரிக்கும் கிரகணப் பாதையைக் (Ecliptic path) கடந்து செல்கிறது. கிரகணப் பாதை என்பது வானத்தில் ஆண்டு முழுவதும் சூரியன் இயங்குவதாகத் தோன்றும் பாதை. இராசிக் குடும்பத்தில் மேஷம் (Aries), ரிஷபம் (Taurus), மிதுனம் (Gemini), கடகம் (Cancer), சிம்மம் (Leo), கன்னி (Virgo), துலாம் (Libra), விருச்சிகம் (Scorpius), தனுசு (Sagittarius), மகரம் (Capricornus), கும்பம் (Aquarius), மீனம் (Pisces) ஆகிய  பனிரெண்டு உடுத் தொகுப்புகள் உள்ளன. கிரகணப் பாதை ஓபியுச்சஸ் விண்மீன் தொகுப்பின் (Ophiuchus constellation)  வழியாகவும் செல்கிறது என்றாலும் இது  இராசி உடுத் தொகுதிக் குடும்பத்துடன் அடையாளப் படுத்தப்படவில்லை.

    அடுத்து வரும் ஹெர்குலஸ் குடும்பம் (Hercules Family) மிகப் பெரியது. ஹெர்குலஸ் குடும்பம் வடக்கு மற்றும் தெற்கு வான் கோளங்களில் கிட்டத்தட்ட சமமான பகுதிகளைக் கொண்டுள்ளது. இது சரிவு (Declination) + 60  முதல் − 70° வரை நீண்டுள்ளது. இக்குடும்பத்தில் மட்டும் இருபது (20) உறுப்பினர்கள். வான் கோளத்தில் உடுத் தொகுபுகளின் அண்மையின் அடிப்படையில் இக் குடும்பத்தினர் இணைக்கப் பட்டுள்ளனர். ஹெர்குலஸ் (Hercules), சஜிட்டா (Sagitta), அக்விலா (Aquila), லைரா (Lyra), சிக்னஸ் (Cygnus), ஹைட்ரா (Hydra), கிரேட்டர் (Crater), கோர்வஸ் (Corvus), ஓபியுச்சஸ் (Ophiuchus), செர்பன்ஸ் (Serpens) , சென்டாரஸ் (Centaurus), லூபஸ் (Lupus), கொரோனா ஆஸ்ட்ரேலிஸ் (Corona Australis), வல்பெக்குலா (Vulpecula), ஸ்கட்டம் (Scutum), டிரையாங்குலம் ஆஸ்ட்ரேலி (Triangulum Australe), க்ரக்ஸ் (Crux), செக்ஸ்டன்ஸ் (Sextans) மற்றும் ஆரா (Ara) ஆகிய உடுத் தொகுப்புகள்  அடங்கும்.

    மூன்றாவதாக உர்சா மேஜருக்கு அதாவது பெருங்கரடி உடுக் கூட்டத்திற்கு அருகிலுள்ள பத்து (10) வடக்கு வான் அரைக் கோள உடுத் தொகுதிகளை  உள்ளடக்கியது  உர்சா மேஜர் குடும்பம் (Ursa Major Family). இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் உர்சா மேஜர் (Ursa Major), உர்சா மைனர் (Ursa Minor), டிராகோ (Draco), கேன்ஸ் வெனாட்டி (Canes Venatici), போய்ட்ஸ் (Boötes), கோமா பெரனிசஸ் (Coma Berenices), கொரோனா பொரியாலிஸ் (Corona Borealis), கேமலோபார்டலிஸ் (Camelopardalis), லின்க்ஸ் (Lynx) மற்றும் லியோ மைனர் (Leo Minor). உர்சா மேஜர் என்ற பெயரிடப்பட்ட உடுத் தொகுப்பில்தான் புகழ்பெற்ற பிக் டிப்பர் (Big Dipper) உள்ளது.

    நான்காவதாக வருவது பெர்சியஸ் குடும்பம் (Perseus Family). பெர்சியஸ் குடும்பத்தில் (Perseus Family) பெர்சியஸுடன் தொடர்புடைய தொன்மக் கதாபாத்திரங்களின் பெயர்களைக் கொண்ட ஆறு (6) உடுத் தொகுதிகளைக் கொண்டது. பெர்சியஸ் குடும்பம் தொன்மக் கதாபாத்திரங்களுடன் தொடர்புடைய காசியோபியா (Cassiopeia), செபியஸ் (Cepheus), ஆண்ட்ரோமெடா (Andromeda), பெர்சியஸ் (Perseus) பெகாசஸ் (Pegasus)  மற்றும் செட்டஸ்  (Cetus) ஆகியவற்றையும் தொன்மக் கதாபாத்திரங்களுடன் தொடர்பற்ற ஆரிகா (Auriga), லாசெர்டா (Lacerta)  மற்றும் டிரையாங்குலம் (Triangulum) போன்ற  மூன்று (3) அருகில் உள்ள உடுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது. இவற்றில் செட்டஸைத் தவிர்த்து  மற்ற  உடுக் தொகுப்புகள் அனைத்தும் கிரகணப் பாதைக்கு வடக்கில் அமைந்துள்ளன. செட்டஸ் மட்டுமே கிரகணப் பாதைக்குத் தெற்கில் அமைந்துள்ளது.  இந்தப் பெர்ஸியஸ் குடும்பம் வட வான் அரைக் கோளத்தின்  துருவத்திற்கு அருகில் இருந்து அதாவது சரிவு – 90° முதல் – 30°  வரை பரவியுள்ளது.

    ஐந்தாவதாக ஓரியன் குடும்பம் (Orion Family) வருகிறது.  ஓரியன் குடும்பம், எட்டு குழுக்களில் மிகச் சிறியது, ஓரியனின் தொன்மக்கதையுடன் தொடர்புடைய ஐந்து  (5) உடுத் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. இது வானில் ஹெர்குலஸ் குடும்பத்திற்கு  எதிர் பக்கத்தில் உள்ளது. ஓரியன் குடும்பத்தில் ஓரியன் (Orion), கேனிஸ் மேஜர் (Canis Major), கேனிஸ் மைனர் (Canis Minor), லெபஸ் (Lepus) மற்றும் மோனோசெரோஸ்  (Monoceros) ஆகியவை அடங்கும்.

    இந்த உடுக் குழுக்கள் கிரேக்க புராணங்களிலிருந்து உருவாகின்றன, வேட்டைக்காரர் (ஓரியன்) மற்றும் அவரது இரண்டு நாய்கள் (கேனிஸ் மேஜர் மற்றும் கேனிஸ் மைனர்) முயலைத் (லெபஸ்) துரத்துகின்றன. மோனோசெரோஸ் என்னும் யூனிகார்ன், தொன்மத்துடன் தொடர்புடையது அல்ல. யூனிக்கார்ன் உடுத் தொகுப்பு மற்ற நான்கு உடுத் தொகுப்புகளுக்கும் இடையில் அமைந்துள்ளது என்பதால் மென்செல் (Menzel) முழுமைக்காக  இந்தக் குழுவில் சேர்த்துள்ளார்,

    ஆகாய நீர்கள் குடும்பம் (Heavenly Waters) ஆறாவது உடுத் தொகுப்புக் குடும்பம். இந்தக் குடும்பத்தில் ஒன்பது (9) உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக் குடும்பமானது மெசொபடோமியப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது.  தனுசிற்கும் (Sagittarius)  ஓரியனுக்கும் (Orion) இடையில் உள்ள மங்கலான வானத்தின் பகுதியை மெசொபடோமியப் பாரம்பரியத்தின் நீர் கடவுளான ஈ (Ea) என்கி (Enki) அல்லது யை பாதாளத்தின் நீர்களுடன்  (Waters of the Abyss) தொடர்புபடுத்துகிறது.

    சுமேரியக் கடவுள் ஈ (Ea)  அல்லது என்கி (Enki)
    படம் : நன்றி Pinterest

    கும்பம் (அக்வாரிஸ்) மற்றும் மகரம்  (காப்பிரிகார்னஸ்) ஆகிய இரண்டு உடுத் தொகுப்புகளும் மெசொபடோமிய பாரம்பரியத்தின் வழிவந்தவை. இவை இரண்டும்  இராசிக்  குடும்பத்தில் (Zodiac family) இல்லாமலிருந்தால், இயற்கையாகவே இந்த ஆகாய நீர்கள் குடும்பத்தில் உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் ஏற்கனவே அவைகள் இராசிக் குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் அவைகளுக்கு மாற்றாக மென்செல் இப்பகுதியை வேறு வகையில் விரிவுபடுத்தினார்.

    ஏதோவொரு வடிவத்தில் தண்ணீருடன் தொடர்புடைய  உடுத் தொகுப்புகளான டெல்ஃபினஸ் (Delphinus), ஈக்விலியஸ் (Equuleus),  எரிடனஸ் (Eridanus), பிஸ்கிஸ் ஆஸ்ட்ரினஸ் (Piscis Austrinus),  கரினா (Carina), பப்பிஸ் (Puppis), வேலா (Vela), பிக்ஸிஸ் (Pyxis) மற்றும் கொலம்பா (Columba) ஆகியவற்றை  ஒன்றிணைத்து ஆகாய நீர்கள் (Heavenly Waters) குடும்பத்தை அவர் உருவாக்கினார். கரினா, பப்பிஸ் மற்றும் வேலா ஆகியன வரலாற்று ரீதியாக முன்னாள் உடுத் தொகுப்பான ஆர்கோ நாவிஸின் (Argo Navis) ஒரு பகுதியாக இருந்தவை.  கிரேக்க பாரம்பரியத்தின்படி ஜேசனின் கப்பலைக் (ship of Jason) இது  குறிக்கிறது.

    16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெட்ரஸ் பிளான்சியஸால் (Petrus Plancius) அறிமுகப்படுத்தப்பட்ட பல தென் வான் அரைக் கோள உடுத் தொகுப்புகளைப் பேயர் குடும்பம் (Bayer Family) தன்னிடத்தில் கொண்டுள்ளது.

    பெட்ரஸ் பிளான்சியஸால்
    (Petrus Plancius
    1552  – 1622

    அயல் விலங்குகளின் பெயர்களைக் கொண்ட உடுக்கள் 16 ஆம் நூற்றாண்டில் டச்சு மாலுமிகளான பீட்டர் டிர்க்ஸூன் கீசர் (Pieter Dirkszoon Keyser) மற்றும் ஃபிரடெரிக் டி ஹூட்மேன் (Frederick de Houtman) ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டன.

    இதில் முக்கியமாக ஜோஹான் பேயர் (Johann Bayer) குடும்பத்தைச் சேர்ந்த உடுக்களான டொராடோ (Dorado), க்ரஸ் (Grus), டுகானா (Tucana), கெமிலியன் (Chamaeleon), வோலன்ஸ் (Volans), ஏப்பஸ் (Apus), பாவோ (Pavo), பீனிக்ஸ் (Phoenix), ஹைட்ரஸ் (Hydrus), சிந்து (Indus), மற்றும் மஸ்கா (Musca) ஆகியவைகளே இடம் பெற்றுள்ளன. பேயர் மஸ்காவைத்  தேனீ (Apis) என்று பெயரிட்டார், ஆனால் காலப்போக்கில் அது மறுபடி பெயர் மாற்றம் பெற்றது.

    பேயரின் பன்னிரண்டாவது புதிய தெற்கு விண்மீன் டிரையாங்குலம் ஆஸ்ட்ரேல் (Triangulum Australe),  மென்செலால் இது ஹெர்குலஸ் குடும்பத்தில் வைக்கப்பட்டது. இந்த விண்மீன்கள் தொகுப்புகள் தொலைதூரத் தெற்கு வானத்தில் அமைந்திருப்பதால், அவற்றின் உடுக்களைப் பண்டைய கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்கும் தெரிய வாய்ப்பின்றி இருந்தது.பேயர் குடும்பம் தெற்கு வான் துருவத்தை வட்டமிடும் ஒழுங்கற்ற ஆனால் தொடர்ச்சியான பட்டையை (Band) உருவாக்குகிறது.

    லா கெய்ல் குடும்பம் (La Caille Family) 1756 ஆம் ஆண்டில்  நிக்கோலா லூயிஸ் டி லாகெயிலால் (Nicolas Louis de Lacaille) பெரும்பாலான விஞ்ஞான கருவிகளின் பெயரிடப்பட்ட உடுத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன. விஞ்ஞான கருவிகளைக் குறிக்க  அவர் அறிமுகப்படுத்திய பதிமூன்று (13) உடுத் தொகுதிகளில் பனிரெண்டைக் (12) தன்னகத்தே கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் டேபிள் மவுண்டனில் (Mons Mensa)  தனது தொலைநோக்கியை அமைத்ததை நினைவு கூரும் வகையில் இவ்வாறு பெயரிட்டார் . இந்த லா கெய்ல் குடும்பத்தில் (La Caille Family)

    நார்மா (Norma),  சர்க்கினஸ் (Circinus), டெலிஸ்கோப்பியம் (Telescopium), மைக்ரோஸ்கோபியம் (Microscopium), ஆக்டான்ஸ் (Octans) ஸ்கல்ப்சர் (Sculptor), ஃபோர்னாக்ஸ் (Fornax), கெய்லம் (Caelum), ஹொரோலஜியம் (Horologium), மென்சா (Mensa), ரெட்டிகுலம் (Reticulum), பிக்டர் (Pictor) மற்றும் ஆன்ட்லியா (Antlia) ஆகிய பனிரெண்டு உடுத் தொகுப்புகள் அடங்கும். மீதமிருந்த லாகெய்ல் கருவியான பிக்சிஸை (Pyxis) ஆகாய நீர்கள் குடும்பத்துடன் மென்செல் ((Menzel)   சேர்த்தார்.

    மீண்டும் சந்திப்போம்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 20

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 20

     மீனாட்சி பாலகணேஷ்

               (காமநோன்புப் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    அரிதாகப் பாடப்பட்டுள்ள பெண்பால் பிள்ளைத்தமிழின் அழகிய பருவங்களுள் ஒன்றே காமநோன்புப் பருவமாகும். இதுவும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் ஒன்றில்மட்டுமே காணப்படுகிறது. முழுமையான பருவமாகப் பத்துப்பாடல்களால் பாடப்பட்டுள்ளது. திருமாலின் இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவற்றின் ஒப்பற்ற தொன்மங்களையும், ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியின் அழகமைந்த கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டு தனிப்பெருமை வாய்ந்து விளங்குகிறது இக்காமநோன்புப் பருவம்.

    ஆண்டாள், தான் காமநோன்பு மேற்கொண்டதனை, ‘தையொரு திங்கள்’ எனும் பாசுரத்தில் அழகுறப் பாடியுள்ளாள். ஆகவே இப்பிள்ளைத்தமிழை இயற்றிய புலவரும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்பப் பெண்பாற் பிள்ளைத்தமிழில் வரக்கூடும் ‘ஐங்கிணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றல்’ எனும் பருவத்தையே, சிறுமியர் ஆற்றில் நீராடி, பாவைகளைச் செய்து, ஐங்கணைக்கிழவனாகிய மலர் அம்பு வீசும் காமதேவனாகிய மன்மதனுக்கு சூடிக்கொடுத்த் சுடர்க்கொடியாள் ஆர்வமுடன் நோற்கும் நோன்பான ‘காமநோன்புப்பருவமாகப் பாடி மகிழ்ந்துள்ளார் எனலாம்.

    நூலில் இப்பருவம் பொன்னூசற்பருவத்தின் பின் கடைசிப்பருவமாக வைக்கப்பட்டுள்ளது. ஐந்து முதல் ஒன்பது வயதுள்ள சிறுமியரால் மட்டுமே செய்யப்படுவது காமநோன்பாகும். இது விளையாட்டன்றி, நல்லதொரு மணாளனை அடைய இளம்பெண்கள் நோற்கும் நோன்பாகும். இது வடநாட்டில் ‘காத்யாயனி நோன்பு’ என அறியப்படும். காத்யாயனி எனப்படும் அன்னை பார்வதியின் சகோதரனான கிருஷ்ணனை மணாளனாகப் பெற இளம்பெண்கள் நோற்ற நோன்பே இது. இது பற்றிய விளக்கங்களை ஸ்ரீமத் பாகவதத்தில் காணலாம்.

    ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழில் இப்பருவத்திலுள்ள பத்துப்பாடல்களும் ‘காமநோன்பது தவிர்கவே!’ எனும் சொற்களுடன் முடிவடைகின்றன. பாடல்களின் உட்பொருளை ஆழ்ந்து நோக்கினால், “பெண்ணே! நீ உன் செயல்களால், நீ நோற்ற நோன்பினால் அவ்விறைவனை அடைந்து விட்டாய்! இனிக் காமநோன்பு நோற்பதெதற்கு? அதனைத் தவிர்த்துவிடு,” எனக் கூறுவதனைக் காணலாம்.

    பிள்ளைத்தமிழ்ப் பாடல்களைக் காணப்புகுமுன் ஆண்டாள் எவ்வாறு காமநோன்பு நோற்றாள் என அவளே தனது திருமொழிகளில் பதிவு செய்துள்ளதனை அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?

    ஆண்டாளின் பாசுரங்கள் இந்நோன்பு நோற்கும் வகைமுறையை நன்கு விளக்குகின்றன. மார்கழிமாதம் முழுமையும் திருப்பாவை பாடி, பாவைநோன்பு நோற்றபின், தைமாதம் முழுவதும் தரையை நன்கு சுத்தப்படுத்தி, சம்பிரதாயமான கோலங்களை இட்டு வழிபாடு செய்யும் அவ்விடத்தை நன்கு அலங்கரிக்கிறாள் ஆண்டாள்.

    ‘தையொரு திங்களும் தரைவிளக்கித்
    தண்மண் டலமிட்டு1….‘ காமதேவனையும் அவன் தம்பி சாமனையும் வழிபடுகிறாள்.

    பின்பு கண்ணபிரான் வரும்வழியை நுண்ணிய வெண்மணலால் அலங்கரித்துவைத்து, கீழ்வானம் வெளுக்குமுன்பு எழுந்து நீராடி, காலை, பகல், மாலை ஆகிய மூன்றுபொழுதுகளிலும் பலவிதமான நன்மலர்களைச் சாற்றிக் காமனை வழிபடுகிறாள்.

    ‘காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்
    கட்டியரிசி அவலமைத்து2,’ அவற்றை ஒன்றுசேர்த்து, அக்கார அடிசிலாக்கிச் சமைத்தும், காமநூலில் தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் மந்திரம் ஓத, சுவரில் காமனின் பெயரை எழுதிவைத்து, அவனுடைய கொடி, குதிரைகள், கரும்புவில் ஆகியவற்றையும் எழுதிக்கொண்டும் காமனிடம் தன்னைக் கண்ணபிரானிடம் சேர்த்துவைக்க வேண்டிப் பூசிக்கிறாள். இவ்வாறெல்லாம் செய்தவள்,

    ‘மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
    வாழகில் லேன்கண்டாய் மன்மதனே3!’ என்றும் அவனிடம் தனது உறுதியையும் மொழிகிறாள்.

    இவ்வாறெல்லாம் நோன்புநோற்றதனால்தான்

    ‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
    முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
    மத்துனன் நம்பி மதுசூதனன் வந்து தன்னைக்
    கைத்தலம் பற்றக் கனாக்கண்டு4 பின் அக்கண்ணனையே மணாளனாகவும் பெற்றனள் அல்லவோ? ஆகவே அவள் இன்னும் எதற்காகக் காமநோன்பு நோற்றல்வேண்டும்? ‘அதனைத் தவிர்ப்பாயாக!’ என்று வேண்டும் பாடல்கள் சுவையானவை.

    ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் சிலவற்றை நோக்கலாமா?

    புலவர் கூறுவார்: ‘தமிழால் ஆன பாமாலைகளே தனக்கு விருப்பமானவை என்றும்,  கையால் தொடுத்துப் பூமாலை அணிவித்துத் தொண்டுசெய்யும் அன்பர்களே தனக்கு விருப்பமான தொண்டர்கள் என்றும் கொண்டு ஒப்பற்ற ஒளிவடிவாகிய திருமால் திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன் ஆகியோர் பின் சென்றான்.

    அத்திருமாலானவன் தான் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடலை விட்டு நீங்கி, திருமாலிருஞ்சோலைமலை, வேங்கடமலை ஆகிய இருமலைகளின் மீது இருவடிவங்கள் தரித்து உன்னைப் பெறுவதற்காகத் தவம் செய்து நிற்கின்றனனே!

    பொன்னி நதியான காவேரியின் நடுவில் (திருவரங்கத்தில்) பள்ளிகொண்டுள்ள அவன் தன் மதிமுகத்தினைத் தெற்குநோக்கி வைத்தவண்ணம் துயில்கின்றான். அவனுக்கு இரு தேவியர் காவல் உள்ளனர். இருப்பினும் தேவாமுதத்தினையும் சிறந்த செல்வத்தையும் அடைய காவல்களை மீறிச்செல்ல யார்தான் தயங்கமாட்டார்கள்? அமுதம்போன்ற உன்னையடைய அவன் இக்கட்டுக்காவல்களால் தயங்கிநிற்பானோ எனும் பொருள் தொக்கிநிற்கின்றது.

    புதுவை அந்தணர்களில் சிறந்தவரான ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வாரின் புதல்வியே! இதனால் நீ காமநோன்பினைத் தவிர்த்தல் வேண்டும்,’ எனும் கருத்துச் செறிந்த பாடல்.

    ‘சொல்தமிழ்ப் பாமாலை நாட்டியும் பூமாலை
               சூட்டியும் தொண்டுபுரிவார்
    தொண்டர்தம் தொண்டரென்று அவர்கள்பின் தொடரும்…
                 ………………………………….
    உம்பரமு தும்திருவும் எய்துதற்கு எவர்களே
                உலகத்தில் எதிர்கொண்டிடார்?
    கற்றவர் புகழ்ந்ததென் புதுவைஅந் தணர்புதல்வி!
                காமநோன் பதுதவிர்கவே5!’ என்பன பாடல்வரிகள்.

    ‘உன்னையடைய அவ்வேங்கடவன் தவமியற்றுகிறான், நீ எதற்காக நோன்பியற்றுகிறாய்?’ என்றுகூறிக் காமநோன்பினை அவள் தவிர்க்க வேண்டியதனை வலியுறுத்தும் சுவையான பாடலிது.

    மற்றொரு பாடல் இன்னும் கற்பனைவளம் சுரக்க அமைந்துள்ளது. புலவர் கூறுவார்:

    ‘அண்ணல் அவன் சுந்தரத்தோள் அழகன் என உலகம் கூறுவது என்னவோ உண்மைதான். ஆனால் மறைகளோ அது பொய் என்பதுபோல, அவனை ‘ஆண் அல்லன், பெண் அல்லன், அலி அல்லன்’ என்றும், (குள்ள)வாமன வடிவங்கொண்டவன் என்றும் தூற்றுவது போலப் போற்றும்!

    ‘முன்பு வெண்ணெய் திருடி உண்ட குற்றம் ஒன்று மட்டுமின்றி, வேறுபல குற்றங்களும் செய்தவன் அவன்! மாடுகளை மேய்ப்பவன்! ஆயர் குலத்தவன்; வில்விசயனுக்குத் தேர்ப்பாகனாக ஏவல் செய்திருந்தவன்.

    ‘மண்ணாசை கொண்ட பாண்டவர்களுக்காக ஓலையைத் தூக்கிக்கொண்டு தூதனாக அலைந்தவன். இவன்மீது அடுக்கிக்கூற வேறு என்னவெல்லாம் குற்றங்களைச் செய்துள்ளானோ? அவனிடம் நீ வலிந்து  ஆசைகொண்டது ஏனோ? (உன்னை மணக்க அவனிடம் என்ன தகுதி இருக்கின்றது?) உன் காமநோன்பைத் தவிர்க!’ என் வேண்டுவதாக அமைந்த பாடல்.

    அண்ணலார் சுந்தரத் தோளழக ரெனுமுலகம்
               அஃதுண்மை யன்றிமறைதான்
    ஆணலன் பெண்ணல்ல னலியல்ல னென்பதுடன்
               அரியகுற ளுருவனென்றும்
     ……………………………………………………………..
    மற்றுமெக் குற்றமென் றெண்ணுவே னவனைநீ
    வலியவேட் கின்றதென்னோ
             கண்ணகன் புத்தூர் விளங்கவரு கோதையே
    காமநோன் பதுதவிர்கவே!6
             ……………………………………………………….’

     ஈண்டு,

    ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
    கானலும் ஆகான்; உளனல்லன்; இல்லையல்லன்
    பேணுங்கால் பேணு முருவாகும்; அல்லனுமாம்
    கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே!7 எனும் ஆழ்வார் பாடல் நினைவுகூரத்தக்கதாம்.

    திருமாலின் பெருமைகளை, அவற்றை மாற்றி இழிசெயல்களாகக் கூறுவது போலக்கூறி (தூற்றுமறைத் துதியாக) அத்தகைய ஒருவனை மணக்கவா இக்காமநோன்பு? அதனைத் தவிர்ப்பாயாக என்கிறார் புலவர்! வளமான, சுவையான, இனிமையான கற்பனை!

    மேலுமொரு பாடலில் காமனையும் ஆண்டாளையும் ஒப்பிடுகிறார் புலவர்.

    ‘காமனிடமுள்ளது ஒரு கரும்புவில்; இளங்குமரி உன்னிடமோ இரு கரிய புருவங்களெனும் வில் உள்ளது. காமன் பொருத்தமான தேன்சிந்தும் கருங்குவளை மலரம்பினை வண்டெனும் நாணைப்பூட்டிச் செலுத்துவான்; நீயோ, உன் கண்மலர்களாகிய அம்புகளை அழகாக அவை புகவேண்டிய இடத்தில் (அரங்கன் நெஞ்சினில்) கருணை எனும் நாண்கொண்டு செலுத்தி அவனுடைய நிறையெனும் அறிவைத் திறைகொள்ளும் பார்வையையுடையவள்.

    ‘ஒருகரும்பு ருவவிற் குமரனவ னிருகரும்
                 புருவவிற் குமரியாநீ
     ஒன்றுகட் காவியம் பாணத்தை யளியநா
                ணுறநின் றுடக்குமவன்8,’        

    ‘இருளையே தன்னிடமாகக் கொண்ட இரவே காமனுக்கு யானையாகும். நீயோ தாபத்தினால் பெருமூச்சு எழுவதனால், ஈரம் வற்றாத கத்தூரியை அணிந்ததும், அணியப்பட்ட கச்சுடன் நிமிர்ந்து விளங்குவதுமான முலைகளை இருயானைகளாகக் கொண்டவள்.

    ‘கரியமுகில் போன்ற அழகரைக் காதலில் வெற்றிகொள்ள இத்துணை தகுதிகள் உனக்கிருக்க, நீ உருவமற்ற காமனை ஏன் வேண்டி நிற்கிறாய்? உன் அழகிய திருவுருவே போதுமே! காமநோன்பினைத் தவிர்த்து விடுக!’ எனக் கூறும் பாடல்.

    கருமுகிற் குழகரழ கரைவெல்ல வுருவிலாக்
                 காமனேன் வில்லிப்புத்தூர்க்
    கன்னியே! நினதுதிரு வுருவொன்று மமையுமே
                 காமநோன் பதுதவிர்கவே8.

    இதுபோன்றே அடுத்தடுத்த பாடல்களில் ‘வாரணமாயிரம்,‘ எனும் நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கனாக்கண்டதாக விவரிக்கும் வரிகளை நினைவுகூரவைத்துப் பாடல்களை இயற்றியுள்ளமை மிக்க நயமானதாகும்.

    ஐங்கணைக்கிழவனான காமவேளை ஆர்வமுடன் சிறுபெண்கள் வழிபடுவது என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். இதற்குப் பாவைநோன்பும், ஆண்டாள் திருப்பாசுரங்களும் சான்றுகளாக உள்ளன.

    பிள்ளைத்தமிழ் இலக்கண நூல்கள் வகுத்த இலக்கணத்திற்குப் பொருந்த சிற்சில பிள்ளைத்தமிழ் நூல்களிலேயே அவ்வருமையான பருவங்களைப் புலவர்கள் பாடிப் பதிவு செய்து வைத்துள்ளதனைக் காண்கிறோம். ஆகவே இவை படித்துப் போற்றி மகிழத்தக்கனவாக விளங்குகின்றன.

    இனி அடுத்த பகுதியில் பொய்தல் விளையாட்டின் மற்றொரு பருவத்தைக் கண்டு களிப்போம்.

     பார்வை நூல்கள்:

    1, 2, 3. ஸ்ரீ ஆண்டாள்- நாச்சியார் திருமொழி “தையொரு திங்கள்”

    4. ஸ்ரீ ஆண்டாள் – நாச்சியார் திருமொழி “வாரணமாயிரம்”

    5, 6. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.

    7. ஆழ்வார் பாடல் – திவ்வியப்பிரபந்தம்.

    8. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.

    (தொடரும்)

    Share
  • நால்வரியார் -2

    நால்வரியார் -2

    சி. ஜெயபாரதன், கனடா

    ஆற்றை நோக்கிப் போனேன்
    அழுக்கு மூட்டை துவைக்க,
    நேற்று ஓடிய  வைகை ஆறு
    நீர் வெள்ளம் எங்கே போச்சு ?

    கல்விப் பட்டம் வாங்க பல்கலைக்
    கழகம் நோக்கிப் போனேன்.
    எந்தப் பட்டம் வேணும், சொல்
    எட்டு லட்சம் கட்டு முதலில் !

    காற்று வாங்கப் போனேன்
    கடற்கரைத் தென்றலிலே.
    நாற்ற நச்சு வாயுக் களால்
    நாசி அடைச்சுப் போச்சு!

    உன் வாயிதழ் ஒன்று சொல்லும்
    உன் விழிகள் வேறு சொல்லும்
    அங்க அசைவு மாறாய்ச் சொல்லும்
    ஆத்மா வேறு திசை செல்லும்

    Share
  • Q&A: ஒரு மருந்தை எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கச் செய்வது எப்படி?

    சுதா மாதவன் அவர்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாலடியார் நயம் – 33

    நாலடியார் நயம் – 33

    நாங்குநேரி வாசஸ்ரீ

    33. புல்லறிவாண்மை

    பாடல் 321

    அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
    பொருளாகக் கொள்வர் புலவர்; – பொருளல்லா
    ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
    மூழை சுவையுணரா தாங்கு.

    அருளின் காரணத்தால் அறம் உரைக்கும்
    அன்புடையவர் வாய்ச்சொல்லை நல்லோர்
    அளவற்ற பயன்தருவதாய் மதித்து ஏற்பர்
    அப்பெரியோர் சொல்லை ஒன்றுக்கும் உதவா
    அற்ப பேதையோ துடுப்பு பால் சோற்றின்
    அருஞ்சுவை உணராதென்பதுபோல் இகழ்ந்து
    அறியாமையுடன் பேசுவான்.

    பாடல் 322

    அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
    செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;
    கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
    செவ்வி கொளல்தேற்றா தாங்கு.

    தோலைக் கவ்வித் தின்னும் புலையரின் நாய்
    தித்திக்கும் பால் சோற்றின் சுவை அறியாததுபோல்
    பொறாமை இல்லோர் அறநெறி கூறுங்கால்
    பண்பில்லா நற்குணமற்றோர் காதுகொடுத்தும் கேளார்.

    பாடல் 323

    இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம்
    எனைத்தானும் தாங்கண் டிருந்தும் – தினைத்துணையும்
    நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள்
    பொன்றிலென் பொன்றாக்கால் என்?

    கண் இமைக்கும் நேரத்தில் இன்னுயிர் போகும் தன்மையைக்
    கண்ட பின்னும் தினை அளவேனும் அறநெறி கேட்பதும்
    அதன்வழி நடப்பதுமாகிய நற்செயல் புரியாத வெட்கமும்
    அறிவுமற்ற மக்கள்  இருந்தாலென்ன? இறந்தாலென்ன?

    பாடல் 324

    உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்,
    பலர்மன்னும் தூற்றும் பழியால், – பலருள்ளும்
    கண்டாரோடு எல்லாம் நகாஅது எவனொருவன்
    தண்டித் தணிப்பகை கோள்.

    வாழும் நாட்கள் சில, உயிர் உடம்பை
    விட்டு போவதைத் தடுக்கக் காவலில்லை
    பிறர் தூற்றும் பழிச்சொற்களோ மிகப் பல
    பின்னும் யாவருடனும் இன்பமாய்ச் சிரித்துப்
    பேசாது தனித்திருந்து பலரைப் பகைத்து வாழ்வதில்
    பயன் தான் என்ன?

    பாடல் 325

    எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
    வைதான் ஒருவன் ஒருவனை; – வைய
    வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
    வியத்தக்கான் வாழும் எனின்.

    பலர் கூடியிருக்கும் அவையில் ஒருவன் தன்னைப்
    பிறர் முன் காரணமின்றி இகழ்ந்தும் பதிலுரைக்காது
    பொறுமையுடன் இருப்பானாகில் அவனை இகழ்ந்த
    புல்லறிவாளன் நிச்சயம் அழிவான் அல்லாது
    பாருலகில் வாழ்ந்துகொண்டிருப்பானாகில்
    பெரும் வியப்பிற்குரியவனே.

    பாடல் 326

    மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
    ஊக்கி அதன்கண் முயலாதான் – தூக்கிப்
    புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள்
    தொழுத்தையால் கூறப் படும்.

    முதுமை வருமுன்னே அறநெறியை
    மேற்கொண்டு முயலாதானை வீட்டின்
    வேலைக்காரியும் வெளியிலே தள்ளி
    ‘வீட்டின் வெளியிலேயே இரு, இங்கிருந்து
    விரைந்து போய் விடு’, போலும் கடும்
    சொற்களை மனம் நோகக் கூறுவாள்.

    பாடல் 327

    தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
    ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் – தாமயங்கி
    ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
    போக்குவார் புல்லறிவி னார்.

    தாமும் இன்பம் அடையார்
    தகுதியுடை நல்லவர்க்கும்
    தக்க நன்மை செய்யார் உயிருக்குத்
    தகுந்த காவலாயிருக்கும் அறநெறியையும்
    தேடிச்சேரார் செல்வத்தில் மயங்கி
    தாம் செய்வதறியாது வாழ்நாளைத்
    தவறாக வீணாய்க் கழிப்பர்.

    பாடல் 328

    சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
    இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் – இறுகிறுகிப்
    பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
    பொன்னும் புளிவிளங்கா யாம்.

    மரணத்துக்குப் பின் போகப் போகும்
    மறுமை உலகுக்குரிய அறமெனும்
    மதிப்பான சோற்றை தோள்மூட்டையாய்
    மிக அழுத்தமாகப் பிடிக்காது பணத்தை
    மிகவும் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு
    அறத்தைப் பின்னர் செய்வோம் என எண்ணும்
    அறிவற்றோர் இறக்கும் தருவாயில் சைகையால்
    அங்குள்ளோர்க்கு பொன் உருண்டையை எடுத்துவர
    அறிவுறுத்தினாலும் அவர் புளிப்பான விளாங்காயே
    அவர் விருப்பமெனச் சொல்லிப் பொன்னைக் கவர்ந்துசெல்வர்.

    பாடல் 329

    வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
    மறுமை மனைத்தாரே யாகி; – மறுமையை
    ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
    சிந்தியார் சிற்றறிவி னார்.

    வறுமையுற்றபோதும் தீராநோய் வந்தபோதும்
    வேண்டிய தருமங்கள் செய்வர் அற்பஅறிவுடையார்
    வளம் நிறைந்த காலத்திலவர் மறுமைக்கு
    வேண்டிய அறம் பற்றி கடுகளவேனும் சிந்தியார்.

    பாடல் 330

    என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
    கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை – அன்னோ
    அளவிறந்த காதல்தம் ஆருயிர் அன்னார்க்
    கொளஇழைக்கும் கூற்றமும் கண்டு.

    அளவற்ற அன்புக்குரிய தம்
    அரிய உயிரொத்தவரைக் கொண்டு
    போக முயலும் எமனைக் கண்டும்
    பெறர்கரிய மனிதப் பிறவி பெற்றும்
    அறம் செய்ய நினையாது தம் வாழ்நாளை
    அற்ப அறிவினர் வீணாய்க் கழிக்கின்றார்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(306)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(306)

    ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்
    காழி யெனப்படு வார்.

    – திருக்குறள் – 989 (சான்றாண்மை)

    புதுக் கவிதையில்...

    சான்றாண்மை என்னும்
    கடலுக்குக்
    கரைபோன்ற சால்புடையோர்,
    இயற்கையின் இயல்பு மாறி
    உலக அழிவு ஏற்படும்
    ஊழிக்காலத்திலும்
    தமது நிலையிலிருந்து
    மாறுபட மாட்டார்கள்…!

    குறும்பாவில்...

    சான்றாண்மைக் கடலின்
    கரைபோலும் சான்றோர் நிலைமாறார்,
    அழிவுதரும் ஊழிக்காலத்திலும்…!

    மரபுக் கவிதையில்...

    கடலாம் சால்பதன் கரைபோன்ற
    கண்ணிய மிக்க சால்புடையோர்,
    கடலது தானும் கரையுடைத்தே
    காசினி தனிலே பேரழிவாம்
    இடரது தந்திடும் ஊழியிலும்
    இயல்பது சிறிதும் மாறிடாமல்
    தொடர்ந்தே யென்றும் சால்புடனே
    தூயராய் நிலைத்து வாழ்வாரே…!

    லிமரைக்கூ..

    சால்பாம் கடலதன் கரையே
    சால்புடையோர், மாறிடார் ஆழியழிக்கும் ஊழியிலுமவர்
    ஆவதில்லை யதனுக் கிரையே…!

    கிராமிய பாணியில்...

    வாழணும் வாழணும்
    ஒலகத்தில வாழணும்,
    நல்ல கொணமுள்ள
    சான்றோனா வாழணும்..

    நல்ல கொணமுங்கிற
    கரகாணாக் கடலுக்குக்
    கரதான் நல்லவனா
    சான்றோனா வாழுறவன்..

    காத்து மழவந்து
    கடல்பொங்கி வந்து
    ஒலகத்தயே அழிக்கிற
    ஊழிக் காலத்திலயும்,
    அவன் கொணம் மாறாம
    நல்லவனா
    நெலச்சி நிப்பானே..

    அதால
    வாழணும் வாழணும்
    ஒலகத்தில வாழணும்,
    நல்ல கொணமுள்ள
    சான்றோனா வாழணும்…!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 21

    பழகத் தெரிய வேணும் – 21

    நிர்மலா ராகவன்

    (அச்சம் என்பது மடமையா?)

    ‘உனக்கு எவ்வளவு தைரியம்!’ என்று சிலரைப் பாராட்டுகிறோம். ‘இவர்களுக்கெல்லாம் பயம் என்பதே கிடையாதா!’ என்ற பிரமிப்பு எழுகிறது.

    ஏன் இல்லாமல்?

    பயம் என்பதும் ஓர் உணர்வுதான். எந்த மனிதருக்கும் இயற்கையாகவே அமைந்திருப்பது.

    “அச்சமும் தைரியமும் சகோதரர்கள்” (பழமொழி).

    சாதாரணமாக, பழக்கமில்லாத ஒரு காரியத்தில் இறங்க நேரிட்டால் எவருக்கும் அச்சம் எழத்தான் செய்யும். அதற்காக எதுவும் செய்யத் துணிவில்லாமல் சும்மா இருக்கமாட்டார்கள் இவர்கள். அந்த பயத்தை எதிர்த்து நிற்பார்கள்.

    எதற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று புரிந்துவிட்டால், அநாவசியமாக எல்லாவற்றிற்கும் பயப்பட வேண்டியதில்லை. தானே துணிச்சல் பெருகும்.

    ‘சிலருக்குத்தான் வாழ்க்கை நன்றாக அமைகிறது!’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள் பலர்.

    சிறப்பான வாழ்க்கை தற்செயலாக அமைவதில்லை. அது நம் கனவுகளை நனவாக்க நாமே மாறுவதைப் பொறுத்தது. வீண் பயம் கனவுகளைத் தகர்த்துவிடும்.

    அச்சத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் தைரியமும், அதன் விளைவாக தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. பயந்துகொண்டே இருந்தால், மகிழ்ச்சி ஏது! அனுதினமும் செத்துச் செத்துப் பிழைக்கவேண்டுமா?

    எதற்குப் பயப்படலாம்?

    பயமே கூடாது என்பதல்ல. ‘தீய பழக்கங்களில் ஈடுபட பயம்’ என்பது சரி.

    சட்டத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்யத் துணிவதும் முட்டாள்தனம்.

    உலகமே ஒரு சின்ன நோய்க்கிருமியால் ஆடிப்போயிருக்கிற தற்போதைய நிலையில், ‘வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதாவது!’ என்று பலர் கோலாலம்பூரில் உள்ள ஒரு குளத்தில் மீன்பிடிக்கப் போயிருக்கிறார்கள். பதினைந்து கார்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனவாம். ஆக, `உணவுப்பொருட்கள் வாங்க காசில்லை’ என்ற ரகமில்லை.

    இவர்களது இந்த ‘துணிச்சலான’ செய்கையால் பலருக்கும் நோய் பரவக்கூடும். அதற்கான தண்டனை: தலா 1,000 ரிங்கிட் (20,000 ரூபாய்) அபராதம்.

    பயமுறுத்தி காரியத்தைச் சாதிப்பவர்கள்

    கதை

    எங்கள் பள்ளியில், ஈராண்டுகள் தலைமை ஆசிரியை இருக்கவில்லை. அந்த இடம் மூத்த உதவியாளராக இருந்த நபீசாவின் கையில். அதிகாரத் திமிருடன் எல்லாரையும் ஆட்டிவைத்தாள், உணர்வு ரீதியாக வதைத்தாள்.

    தனக்கு மேலே வேறு ஒருவர் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டு, பயம் எழுந்தது நபீசாவுக்கு.

    “இப்போது வரவிருக்கும் தலைமை ஆசிரியை புலிமாதிரி!” என்று அச்சுறுத்திவிட்டு, “எனக்கும்தான் உத்தியோக உயர்வு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது,” என்று நம்பத்தகுந்த சில அப்பாவிகளிடம் நைச்சியமாகக் கூறினாள்.

    அவர்களும் பரிதாபப்பட்டு, எல்லா ஆசிரியர்களையும் அழைத்து, “நபீசா இங்கேயே தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருக்கிறோம். `எஸ்’ என்று எழுதுங்கள்,” என்றுவிட்டு, ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள்.

    எல்லாரும் பயந்து, அதன்படி எழுதிக்கொடுத்தார்கள்.

    ஒருத்தி மட்டும் ‘நோ’ என்று பெரிதாக எழுதினாள்.

    எரிச்சலுடன், “அவள்தான் நம்மைப் படாதபாடு படுத்துகிறாளே! எதற்காக ஒத்துக்கொண்டீர்கள்?” என்று சிலரைக் கேட்டாள் அவள். (யார் என்று புரிகிறதா?)

    “நாளைக்கே அவள் உயர்பதவி ஏற்று, இங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான்!” என்ற பதில் கிடைத்தது.

    “அச்சம் ஒரு கரடியை அது இருப்பதைவிடப் பெரிதாகக் காட்டும்” என்று சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    நல்லவேளையாக, நபீசாவின் திட்டம் பலிக்கவில்லை. அவளை வேறு பள்ளிக்கு அனுப்பினார்கள்.

    அங்கிருந்த ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே, “உன்னைப்பற்றி நிறையக் கேட்டிருக்கிறோம். உன் அதிகாரத்தை எங்களிடம் காட்டலாம் என்று நினைக்காதே,” என்று மிரட்ட, அவள் அடங்கிப்போனாளாம்.

    நம்மை அச்சுறுத்த நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காவிட்டால் அந்த பயம் அவர்களையே போய்ச்சேரும்.

    எங்கள் பள்ளியில் பயத்தால் எல்லாரும் பணிந்துபோனார்கள் – என்னைத்தவிர. அதனால் மேலும் குறுகிப்போனார்கள்.

    குழந்தைமாதிரி

    ‘சிறுவர்களுடனேயே பழக நேர்வதால் பெரும்பாலான ஆசிரியைகள் குழந்தைத்தன்மையுடன் நடக்கிறார்கள்!’ என்று ஒரு தோழி என்னிடம் கூறிச் சிரித்தாள்.

    வயதில் பெரியவர்களைக் கண்டு குழந்தைகள் பயப்பட்டு, அவர்கள் சொன்னபடி நடக்கலாம். எத்தனை வயதானாலும், உயர் அதிகாரிகளைக் கண்டு பயந்து நடந்தால் என்ன ஆகும்?

    கதை

    அரசாங்கத்தின் ஓராண்டு கால மேற்பயிற்சி அது – விடுமுறைக்காலங்களுடன்.

    முழுமையாகக் கலந்துகொண்டவர்களுக்கு மாத வருமானத்தைத் தவிர கூடுதலான பணமும் உண்டு, ஆனால் விடுமுறையின்போது அவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டுப்பாடங்களை முதலிலேயே முடித்துக் கொடுத்துவிட வேண்டும்.

    நான் பாடத்தை முடித்து சமர்ப்பித்துவிட்டு, ‘வெளிநாடு போகப்போகிறேன்,’ என்று எழுதியும் கொடுத்தேன்.

    `வெளிநாடு போனவர்களுக்குப் பணம் கிடைக்காது,’ என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நவாவி முரட்டுத்தனமாக அறிவித்தார்.

    நான் தனிமையில் அவரைச் சந்தித்து, “விதிப்படி நான் எல்லாம் சரியாகச் செய்திருக்கிறேனே!” என்று விவாதித்தேன்.

    உடலை இறுக்கிக்கொண்டு, “நான் இந்த விதிகளை எழுதவில்லை,” என்றார் நவாவி.

    பயிற்சி முடிவடையும் தறுவாயில், மேலிடத்திலிருந்து ஒருவர் வந்து அதில் கலந்துகொண்ட 450 பேருக்கு உரை நிகழ்த்தினார்.

    “உங்களுக்கு எதிலாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்,” என்றார்.

    நான் சும்மா இருப்பேனா? என் வழக்கைச் சொன்னேன்.

    “இதுபற்றி பிறகு பேசலாம்,” என்று சமாளிக்கப் பார்த்தார்.

    “இல்லை. எனக்கு இப்போதே தெரியவேண்டும்,” என்றேன், பிடிவாதமாக. “நான் எல்லாம் முறைப்படி செய்திருக்கிறேன். பணத்துக்காகக் கேட்கவில்லை. என்னைத் தண்டிப்பதுபோல் பணம் கொடுக்க மறுப்பது என்ன நியாயம்?”

    அவர் பயந்தார். “நீங்கள் சொல்வது சரிதான். எங்கள் தவற்றுக்கு மன்னியுங்கள்,” என்று பின்வாங்கினார். “நீங்கள் என்னிடம் சொன்னதை ஒரு கடிதத்தில் எழுதிக்கொடுங்கள்,” என்று சமரசத்துக்கு வந்தார்.

    ஒரு கேலிப் புன்னகையுடன், நான் மேடையைவிட்டு இறங்குமுன், நவாவி அடைத்த குரலில், “எனக்கு முதலிலேயே தெரியாது,” என்றார்.

    அவரது மன்னிப்பை ஏற்கும் வண்ணமாக, நான் தலையை ஒருமுறை லேசாக மேலும் கீழும் ஆட்டிவிட்டு நடந்தேன்.

    அன்று நான் கதாநாயகியாக உயர்ந்துவிட்டது பிறகுதான் புரிந்தது.

    நான் பழகியிராத சில பெண்கள், “உங்கள் விலாசத்தைக் கொடுங்கள்,” என்று உறவாடினர்!

    என் நிலையிலிருந்த சிலர், “என்ன எழுதவேண்டும்? சொல்லிக்கொடுங்கள்,” என்று என்னைப் பிடித்துக்கொள்ள, அலுப்பாக இருந்தது.

    நான் ஒரு பள்ளியிலிருந்து மாற்றல் கேட்டுப்போகையில், “ஐயோ! எங்களுக்காக சண்டை போடுகிறவர் நீங்கள் மட்டும்தான். நீங்களும் போய்விட்டால் நாங்கள் என்ன செய்வது!” என்று ஆசிரியை ஒருத்தி அரற்ற, “Fight your own battles (நீங்களே போடுங்கள்),” என்றேன் எரிச்சலுடன்.

    சண்டை போடுவதால் நிறைய சக்தி விரயமாகிறது. சில சமயம் பலனளிக்கும். விரோதிகள் பெருகுவர். ஆனால், உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்தோம் என்ற திருப்தி நிலைக்கும்.

    Share
  • நோய்த்தொற்றைத் தடுக்க இதுவும் ஒரு வழியா?

    நோய்த்தொற்றைத் தடுக்க இதுவும் ஒரு வழியா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கோவிட்-19 பரவிக்கொண்டிருந்ததால் அமெரிக்காவில் கடைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.  எல்லாவற்றையும் விட திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டன; சில திருமணங்களில் விருந்தினர் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டது; சில திருமணங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. ஆனால் 1918-இல் ஸ்பேனிஷ் ஃப்ளூ என்னும் வைரஸால் பரப்பப்படும் வியாதி உலகம் முழுவதும் பரவியபோது ஒரு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தில் அங்கு இறந்தவர்களும் உயிரோடு இருந்தவர்களும் கலந்துகொண்டார்கள். எப்படித் தெரியுமா? அந்தத் திருமணம் ஒரு கல்லறைத் தோட்டத்தில் நடத்திவைக்கப்பட்டது. கொடிய வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்தபோது அங்கு எப்படி ஒரு திருமணம் நடத்தப்பட்டது என்று அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும்.

    1918 நவம்பர் மாதம் 4-ஆம் தேதி The Evening World என்ற பத்திரிக்கையில் வந்த செய்தி: நியூயார்க்கிலுள்ள மவுன்ட் ஹெப்ரான் கல்லறைத் தோட்டத்தில் இலக்கம் 369, பத்தாவது கிழகுத் தெருவில் வசிக்கும் மிஸ் ரோஸ் ஸ்வார்ட்ஸ் என்பவருக்கும் இலக்கம் 638, பதினோராவது கிழக்குத் தெருவில் வசிக்கும் ஆபிரஹாம் லேச்டெர்மன் என்பவருக்கும் நேற்று மதியம் யூதமதத் தலைவர் உங்கர் முன்னிலையில் திருமணம் நடந்தது. மேலும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது: கொடிய வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுத்து நிறுத்த ஒரு கல்லறைத் தோட்டத்தில் ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்ற மிகப் பழைய யூத வழக்கப்படி இந்தத் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.  கொடிய நோய்த் தொற்றுப் பரவலைத் தடுத்து நிறுத்த முன்வந்த இந்தத் தம்பதியை வாழ்த்துவதற்கு 2000 பேர் வந்திருந்தனர்.

    இந்தத் திருமணம் ‘கருப்புக் கல்யாணம்’ என்று அழைக்கப்பட்டது. நியூயார்க்கின் குயின் பகுதியில் நடத்திவைக்கப்பட்ட இந்தத் திருமணம் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த யூதர்களின் வழக்கப்படி நடத்தப்பட்டது. அப்போது நியூயார்க்கில் மட்டும் இருபதாயிரம் பேர் இந்த வியாதிக்குப் பலியாகியிருந்தனர்; உலகளவில் லட்சக் கணக்கான பேர் உயிர் இழந்திருந்தனர்.  பிலடெல்பியா, வின்னிபெக், மானிடோபா என்ற ஊர்களிலும் கல்லறைத் தோட்டங்களில் இம்மாதிரித் திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டன; மானிடோபாவில் சில யூதர்கள் கல்லறைத் தோட்டத்தின் மறு பகுதியில் ஒரு இறுதிச் சடங்கும் நடத்தினர்.  ‘இறந்தவர்களின் முன்னிலையில் ஒரு சமூகத்தின் எளிய ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தால் ஒன்று சேர்ந்தால் கடவுளின் கவனம் அப்படித் திருமணம் செய்துகொண்டவர்களுடைய சகாக்களின் கஷ்டத்தை நோக்கித் திரும்பும்’ என்று பிலடெல்பியா லெட்ஜரில் குறிப்பிட்டிருந்ததாம்.

    சமீபத்தில் ‘Tablet’ என்னும் ஒரு யூத மத ஆன்லைன் இதழில் ஒரு கட்டுரையில் காலரா போன்ற பெரிய வியாதிகள் பரவுவதைத் தடுக்க இம்மாதிரி சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்றும் ‘எளிய’ என்று குறிப்பிடும்போது சமூகத்தின் விளிம்பில் இருந்த அனாதைகள், பிச்சைக்காரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரில் இருவரைத் திருமணத்திற்குத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  மேலே குறிப்பிட்ட நியூயார்க் நகரில் நடந்த திருமணத் தம்பதிகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்களா என்று உறுதியாகத் தெரியவில்லை.  மேலும் அந்தத் திருமணம் பின்னால் நிலைத்திருந்ததா, அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தனவா, அவர்கள் கடைசிவரை சந்தோஷமாகக் குடும்பம் நடத்தினார்களா என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.  ரோஸ் என்ற ஒரு அனாதைப் பெண் இருந்ததாக அந்த ஊரின் 1910 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிட்டிருக்கிறது; முப்பது வருஷங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வேலைபார்க்க முடியாத லேச்டெர்மன் என்று ஒருவர் இருந்ததாகத் தெரிகிறது.  ஆனால் இவர்கள் இருவரும்தான் ஹெப்ரானில் திருமணம் செய்துகொண்டவர்களா என்று ஊகிக்க முடியவில்லை.  அப்படி ஒரு திருமணம் நடந்தது என்பது மட்டும் அந்த நகரின் அதிகாரியின் கோப்புகளிலிருந்து உறுதியாகத் தெரிகிறது. இருவரின் பெயரில் கொஞ்சம் வித்தியாசமும் இருந்தது.

    சென்ற மார்ச் மாதம் இஸ்ரேலில் ஒரு கல்லறைத் தோட்டத்தில் அம்மாதிரி ஒரு திருமணம் நடந்திருக்கிறது.  இது நவீன காலமாதலால் சமூக விலகல் போன்ற விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு நவீன முறைப்படி நடந்த திருமணம். இந்தியப் பிரதமர் குடிமக்கள் எல்லோரையும் விளக்கை அணைத்துவிட்டு கையைத் தட்டும்படி கூறியது அப்படியொன்றும் சிரிப்புக்கிடமான காரியம் இல்லையோ?

    நியூயார்க் நகரில் நடந்த திருமணத்தைப் பொறுத்தவரை கொடிய நோய்தொற்றுப் பரவலை அந்தக் கருப்புக் கல்யாணம் தடுத்து நிறுத்தியதா என்று தெரியவில்லை.  அதே பத்திரிக்கையில் கருப்புக் கல்யாணம் பற்றிய செய்தியின் இடது பக்கத்தில் கொட்டை எழுத்துத் தலைப்பில் ‘இன்ஃப்ளுயென்ஸா முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது’ என்ற செய்தி வெளிவந்திருக்கிறது!

    கொடிய வியாதி அதன் பிறகு 24 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு வியாதி நகரை விட்டுப் போனதற்கான ஆவணங்களும் கிடைத்திருக்கின்றன. அந்தக் கால மருத்துவர்களும் அந்த நோய் பற்றி ஆராய்ச்சி செய்தவர்களும் நோய்த்தொற்று பரவல் முடிந்ததற்கான பெருமையை திருமணத்தை நடத்திவைத்த அந்த யூத மதத்தலைவருக்கும் அந்த மணமக்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள்; சமூக விலகல், ஆரோக்கிய பராமரிப்பு, வியாதி உள்ளவர்கள் தனித்திருத்தல் ஆகியவற்றுக்குத்தான் அந்தப் பெருமையைக் கொடுத்திருப்பார்கள்.

    Share
  • யாராத்தா குட்டை

    யாராத்தா குட்டை

    சேஷாத்ரி பாஸ்கர்

    நாகேஸ்வர ராவ் பூங்கா அதன் பெயரை பெறுவதற்கு முன் உள்ளூர் மக்கள் அதற்கு வைத்த பெயர் யாராத்தா குட்டை. இன்று அப்படி சொன்னால் அது கெட்ட பேச்சு என்பார்கள்.

    அங்கு எப்படி குட்டை உருவானது என தெரியவில்லை.

    ஒரு வேளை இரண்டு வருடங்கள் முன்பு இங்கு பெய்தது போல அம்பது வருடங்கள் முன்பு மழை வந்திருக்கலாம். ஒரே குட்டை பிரதேசம். காட்டு வெளி நிலம். எதிரே உள்ள தேவாலயம் அப்போது காட்டு கோயில் என அழைக்கப்பட்டது. ஆறு மணிக்கே வெளியே போக பயப்படும்படியான ஊர்.

    காரணம் திருடர்கள் இல்லை. இருட்டு. பேய் பிசாசு பயம். சங்கிலியை பறித்து கொண்டு ஓட இரண்டு சக்கர வாகனம் பெரிதாய் இல்லை. மிஞ்சி போனால் ஒரு வாடகை மிதி வண்டி. மன்னிக்கவும். அவர் சைக்கிள். வியாதி இல்லை.

    காற்று மிதம். மழை சுகம் கொஞ்சம் கஷ்டம். மாசு இல்லை. பெரிய வெளிச்ச விளக்குகள் இல்லை. தெருவின் குப்பைகள் வியாதி பரப்புவதாய் இல்லை. முக்கியமாய் பிளாஸ்டிக் இல்லை. இன்றுள்ள மருத்துவமும், கைபேசியும் அன்று உண்டா என்று விவாதம் செய்தால் என்னிடம் பதில் இல்லை.

    நான் சொல்ல வந்தது ஒப்பீடு இல்லை. வாழ்வு சுமை பற்றிய என் கவலை. எட்டு குழந்தைகள் பெற்ற தாய் எல்லோருக்கும் கல்யாணம் செய்து விட்டு சென்ற வருடம் இறந்ததை நான் அறிவேன். ஏன், சில வீட்டில் அம்மாவும் பெண்ணும் ஒரே நாளில் விலக்காகி இருந்த கதை கூட உண்டு. இன்று ஒரு குழந்தை பிரசவத்திற்கு பாடு படுத்தும் ஸோ கால்ட் மாட்டு பெண் எங்கே? எட்டு பெற்றவள் எங்கே? ஆரோக்ய ரீதியில் இதை பேசுகிறேன். சின்ன அடி பட்ட என் அம்மாவுக்கு ஹார்லிக்ஸ் வாங்கி வருவதற்குள் பாத்திரம் தேய்த்து விட்டு செல்வி பார்க்க ஆரம்பித்து விட்டாள். சின்ன அடி கூட எனக்கு பட்டால் அதை எல்லோர்க்கும் சொல்லி மாஞ்சு போய் நிற்கும் நான் அவர்கள முன் தூசி தான்.

    நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் எத்தனை கோடி பாட்டு தான் ஞாபகம் வருகிறது. இன்று அரை டிராயர் போட்டு கொண்டு எகனாமிக்ஸ் பேசி கொண்டு நடக்கும் யுவன், யுவதிகளுக்கு இது தெரியாது.

    இந்த பூங்கா மூன்று பேரின் சொத்து. ஒன்று தர்மாம்பாள் முதலியார். இன்னொருவர் நாகேஸ்வரர். அவருக்கு அம்ருதாஞ்சன் கட்டிடமும் அப்போது சொந்தம். மெட்ராஸ் பிரெசிடென்சியில் அப்போது போட்ட தர்மம். இன்று சுந்தரம் பைனான்ஸ் வரை வந்து இருக்கிறது.

    நிஜ தர்மவான்கள் இருந்த ஊர் அது. நமக்கு தெரியாது. ஒரு வேளை அங்கிருந்த, இருக்கும் மரங்கள் அறியும். அன்று ராமாயி அம்மாளும், நைனியப்ப முதலியாரும், குமாரசாமி ராஜாவும், அரவாமுதன் அய்யங்காரும் இந்த நிலத்தை தரவில்லையெனில் நமக்கு நகரில் ஒரு நாலு ஏக்கர் பசுமை தோட்டம் கிடைத்திருக்குமா என்ன? சரித்திரம் மறக்கப்படகூடாது.

    இது திறக்கப்பட்ட எண்பதாவது வருடம் இது. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.

    Share
  • நாலடியார் நயம் – 32

    நாலடியார் நயம் – 32

    நாங்குநேரி வாசஸ்ரீ

    32. அவையறிதல்

    பாடல் 311

    மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
    அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
    கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன்
    சொன்ஞானம் சோர விடல்.

    மெய்நூலறிவினையுடையோரின் அவையில் சேர்ந்து
    முயன்று ஒன்றைத் தெரிந்துகொள்வதை விடுத்து
    அங்கு அறியாமை விளைக்கும் பேச்சைச் சொல்லி
    அதையே பரப்பி நிலைநாட்ட முயலும் சிற்றறிவாளரிடம்
    அறிவார்ந்த மொழிகளைச் சொல்லாது விடுக!

    பாடல் 312

    நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும்
    தீப்புலவன் சேரார் செறிவுடையார்; – தீப்புலவன்
    கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
    தோட்புடைக் கொள்ளா எழும்.

    வாய்க்கு வந்த பாடத்தைச் சொல்லி உட்கருத்தை
    வகையாய் அறிந்தவன் போல் அவையைக் கூட்டும்
    தீய புலவனை அடக்கமுடைய நற்புலவர் சேரார் காரணம்
    தனது தாழ்ச்சி கருதி அத்தீயபுலவன் அவர்தம் குலத்தைப்
    பழிப்பான் அல்லது தோளைத் தட்டி சண்டைக்கு எழுவான்.

    பாடல் 313

    சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
    கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார்; – கற்ற
    செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்
    பலவுரைக்கும் மாந்தர் பலர்.

    பேச்சாற்றலை ஆதாரமாகவைத்து விரைந்து
    பேச விரும்புபவர் மற்றவரின் அறிவுக் கூர்மையையும்
    பெரும் வல்லமையையும் அறியார், தாம் கற்றதைப்
    பிறர் மனதில் புகும்படி சொல்லுதலையும் அறியார்
    பிறரிடம் தோற்பதின் காரணமும் தெரிந்துகொள்ளாது
    பலவற்றை வீணாகப் பேசிக்கொண்டேயிருப்பவர் பலர்.

    பாடல் 314

    கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
    பெற்றதாம் பேதையோர் சூத்திரம் – மற்றதனை
    நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
    புல்லறிவு நாட்டி விடும்.

    ஆசிரியரை வழிபட்டுக் கல்லாத அறிவற்றவன்
    அவர் பிறருக்குச் சொல்லிக்கொடுத்த சூத்திரத்தை
    தற்செயலாய்த் தெரிந்துகொண்டு நன்கு கற்றவர்
    அவையில் நாணாது கூறி புல்லறிவை வெளிப்படுத்துவான்.

    பாடல் 315

    வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
    கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு – ஒன்றி
    உரைவித் தகம்எழுவார் காண்பவே, கையுள்
    சுரைவித்துப் போலும்தம் பல்.

    வெற்றிபெற வேண்டும் எனும் குறிக்கோளால்
    விலங்கினை ஒத்து உண்மைப் பொருளை ஏற்காது
    வெகுண்டு போருக்குச் செல்வதுபோல் விளங்குபவரை
    விரும்பி அடைந்து நற்கல்வியைச் சொல்வதற்கு
    விழைபவர் சுரை விதை போன்ற தம் பற்கள்
    விழக்காண்பர் தம் கையில்.

    (எதையாவது பேசி எதிரியை வெற்றிக்கொள்ளப் பார்க்கும் அறிவற்றவருக்கு நற்கல்வியை உபதேசிக்கப் போனால் பல்லை உதிர்த்துக் கையில் கொடுப்பார்கள் (அடிப்பார்கள்).

    பாடல் 316

    பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத
    மூடர் முனிதக்க சொல்லுங்கால், – கேடருஞ்சீர்ச்
    சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
    ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.

    பாடலை மனப்பாடம் மட்டுமே செய்து அதன்
    பொருளை அறிவதில் தெளிவில்லா மூடன்
    பயனற்ற சினம் விளைக்கும் வார்த்தைகளைப்
    பேசும்போது கேடில்லா மேன்மையுடைப்
    பெரியோர் அம்மூடனைப் பெற்ற தாய்க்கு இரங்கிப்
    பொறுமையுடன் அமைதியாய் நிற்பர்.

    பாடல் 317

    பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
    கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; – மற்றும்
    முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
    அறிதற் கரிய பொருள்.

    பெறத்தக்க பொருட்களைப் பெற்றுக் கொள்ளும்
    பொதுமகளிரின் தோள்களைப்போல் ஆசிரியரைப்
    போற்றி நெறிப்படி கற்போர்க்கு நூலின் பொருள்
    பாங்காய் விளங்குமெனினும் தளிரையொத்த மேனியுடை
    பொதுமகளிரின் உள்ளம் போல் நெறிப்படி கல்லாதவர்க்கு
    பொதிந்திருக்கும் உட்பொருள் அறிதற்கு அரியதாம்.

    பாடல் 318

    புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
    உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் – மற்றவற்றைப்
    போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
    தேற்றும் புலவரும் வேறு.

    புத்தகங்களை அதிகமாய்ச் சேர்த்தும் அதன்
    பொருள் அறியாதவராய் வீடெல்லாம் நிறைத்தாலும்
    படித்துப் பொருளுணர்ந்து பிறரைத் தெளிவிக்கும்
    புலவரும் அப்புத்தகத்தைப் பாதுகாக்கும் புலவரும் வெவ்வேறே.

    பாடல் 319

    பொழிப்பகல நுட்பநூல் எச்சம்இந் நான்கின்
    கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் – பழிப்பில்
    நிரை ஆமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
    உரையாமோ நூலிற்கு நன்கு?

    குற்றமில்லாக் கூட்டமாகிய காட்டுப்பசுக்களைக்
    கொண்ட உயர்ந்த மலைநாட்டு வேந்தனே! நூலின்
    பொருளைச் சுருங்கக் கூறும் பொழிப்புரையும்
    பொருள் விளங்க விரித்துக்கூறும் அகல உரையும்
    சாரத்தைக் கூறும் நுட்ப உரையும் நூலில் வெளிப்படையாய்ச்
    சொல்லாது குறிப்பாலுணர்த்தும் விசேட உரையும் எனும்
    நால்வழிகளிலும் நன்கு ஆராய்ந்து விளக்காதவரின் உரை
    நூல்களுக்கு நல்ல உரையாகுமோ?

    பாடல் 320

    இற்பிறப் பில்லார் எனைத்தநூல் கற்பினும்
    சொற்பிறரைக் காக்கும் கருவியரோ? – இற்பிறந்த
    நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
    புல்லறிவு தாமறிவ தில்.

    உயர்குடிப் பிறப்பு இல்லார் எத்தகு
    உயர்ந்த நூலைக் கற்றிருப்பினும்
    கல்லாத பிறரின் சொற்குற்றங்களைக்
    காட்டி இகழாத அடக்கம் கொண்டவரோ?
    நற்குடிப் பிறந்த அறிவாளர் நூற்பொருளை
    நன்கு அறியாதவரின்  புல்லிய அறிவினை
    நன்குணர்ந்தாலும் கண்டுகொள்ளாதிருப்பர்.

    Share
  • நாற்பதடி கடோத்கஜன்

    நாற்பதடி கடோத்கஜன்

    பாஸ்கர் சேஷாத்ரி

    நாளெல்லாம் நின்றிருப்பான்
    கண் எட்டியவரை எங்கும் கிளைகள்
    கீழே நின்றால் வானமே தெரியாது
    பச்சை இருட்டில் கோடாய் வெளிச்சம்
    உடல்சிலிர்த்து கொஞ்சம் சூரியன் காட்டும்

    இலைகளின் இடையே மேகம்ஓடும்
    காகம் குருவி காபந்து காட்டும்
    வரம் ஒன்று இருப்பின் தினம்-
    இதன் கனியாய் நிதமும் பிறப்பேன்
    அதனுடனே இருப்பேன்

    செயலறு என்றே மரங்கள் சொல்லும்
    ஆனந்தப் பைத்தியம் நான்
    எவர் பேச்சும் கேட்கமாட்டேன்.

    Share