என்ன பொல்லாத கவிதை?
பாஸ்கர் சேஷாத்ரி
முண்டியடித்துக் கொண்டு அலைகள் வந்தன
முழுசாய் கால்களைத் தொடாமல் சென்றன
ஆரவாரமாய் நண்டுகள் மணலேறி வந்தன
அவசரமாய்த் துளைக்குள் தலை குனிந்து புகுந்தன
திக்கேதும் அறியாமல் தென்றல் மேல் வீசின
கண்களை அடைத்துவிட்டு சிக்காமல் போயின
விண்மீன்கள் இறங்கி வந்து உடைகளாக மாறின
பொன்மணலும் பொடிப்பொடியாய் மேலும் நசுங்கின
வெண்ணிலவும் கிறங்கி வந்து கண்களாய்த் தெரிந்தன
மின்மினியும் கூட்டம் கூடி இருளைப் பழித்தன
அலையின் இரைச்சலும் நொடியில் தொலைந்தன .
எங்கும் முழுமையில்லை ஏதும் முழுமையில்லை
பாதியிலே புகுந்து மீதியிலே போகும் வாழ்வு இது
கடலறியும் என் கவலை, கவிதை என்ன அறியும்?