நாலடியார் நயம் – 34
நாங்குநேரி வாசஸ்ரீ
34. பேதைமை
பாடல் 331
கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியாது அந்நீர் படிந்தாடி அற்றே
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.
கொல்லும் தொழிலில் வல்ல எமன் உயிரைக்
கொண்டுபோகும் நாளை எதிர்நோக்கியிருக்க
கொஞ்சமும் உணராது இவ்வுலக வாழ்வெனும்
கொடும் வலையில் இறுமாந்து இருப்பவரின் பெருமை
கொலை செய்பவர் உலையில் போட்டு நெருப்பை மூட்ட
கவலையின்றி தன்நிலை உணராது அந்நீரில் மூழ்கிக்
களித்து ஆடும் ஆமை போலாம்.
பாடல் 332
பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.
குடும்பத்துக்குத் தேவையான செயலைக்
குறைவற முடித்து அறச் செயல் செய்ய
பின் யோசிப்போமென அலட்சியமாயிருப்போர்
பெருமை பெருங்கடலில் மூழ்கிக் குளிக்கச்
சென்றோர் ஓசை அடங்கியபின் குளிக்கலாமென
சிந்தித்துக் காத்திருப்பது போலாம்.
பாடல் 333
குலந் தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் – நலஞ்சான்ற
மையாறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.
நற்குலம், தவம், கல்வி வாழும் முறை
நல்லொழுக்க முதிர்ச்சி எனும் ஐந்தும்
நன்கு ஒருவரிடம் பொருந்தியிருந்தும்
நன்மைமிகு குற்றமற்ற பழஞ்சிறப்புடை
நானிலத்திற்கு ஏற்ற நற்செயல் அறியாது
நடத்தல் நெய்யில்லாப் பால்சோற்றுக்கு ஒப்பாம்.
பாடல் 334
கல்நனி நல்ல கடையாய மாக்களின்;
சொல்நனி தாமுணரா வாயினும் – இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று
உற்றவர்க்குத் தாம்உதவ லான்.
பிறருக்கு உதவாத அற்ப மனிதரைவிட
பலவிதத்தில் கற்கள் நல்லன தம்மைப்
பாதுகாத்து அடைந்தவர்க்கு அப்போதே
படுப்பதும் நிற்பதும் நடப்பதும் உட்காருவதுமான
பல செயல்களுக்கு உதவுவதால்.
பாடல் 335
பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் – கறுவினால்
கோத்தின்னா கூறி உரைக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல தினத்து.
தான்பெறத்தக்கதென எதுவுமில்லாதபோதும்
தக்க பயனைப் பெற்றவன்போல்
தன்கோபத்தை ஏற்காதவரிடமும் பகையுடன்
தீயசினத்தினால் அன்பில்லாச் சொற்களைத்
தாம் கூட்டிச் சொல்லாமற்போனால் நல்ல
தினவானது அறிவீனனின் நாக்கைத் தின்றுவிடும்.
(தினவு என்பது அரிப்பு எனும் பொருள்படும்)
பாடல் 336
தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பர் – புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.
நல்ல தளிர்நிறை புன்னைமலரும்
நற்கடற்கரையுடை வேந்தனே!
நம்மிடம் விருப்பமில்லாதார்பின் சென்று
நம்மை விரும்புபவராய் இவரைச் செய்வோமென
நினைப்பவரின் அற்ப உறவு கல்லைக் கிள்ளி
நல்ல கையைப் போக்கிக் கொள்வதுபோலாம்.
பாடல் 337
ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; – யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.
தமக்குக் கிட்டாதெனத் தெரிந்தும் நெய்ப் பாத்திரத்தை
தவறாது எறும்புகள் சுற்றிக்கொண்டேயிருக்கும் அதுபோல்
தராதவராயினும் பொருள் உள்ளவரை உலகத்தார்
தொடர்ந்து விடாது சுற்றிக்கொண்டேயிருப்பர்.
பாடல் 338
நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் – எல்லாம்
இனியார்தோள் சேரார் இடைபட வாழார்
முனியார்கொல் தாம்வாழும் நாள்.
நாள்தோறும் பெறத்தக்க நன்மை அடையார்
நல்லறம் செய்யார் இல்லாதவர்க்கு ஒன்றும்
நல்கார் எல்லா இன்பமும் அளிக்கும்
நல்ல மனைவியின் தோளைத் தழுவார்
நற்புகழுடன்வாழார் இப்படிப்பட்டவர் தாம்வாழும்
நாளையெல்லாம் வெறுக்கமாட்டார்களா?
பாடல் 339
விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை – தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.
தம்மை ஒருவர் புகழ்ந்து பேச
தாம் இத்தகு புகழுரைகளை
விரும்பமாட்டோம் எனப் புறக்கணித்து
வெறுக்கும் மூடரின் நட்பு கடல்சூழ்
உலகையே தருவதாக இருப்பினும்
உயர் சான்றோர் விரும்பமாட்டார்.
பாடல் 340
கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.
தான் கற்ற கல்வியையும் மேன்மையையும்
தம் குடிப்பிறப்பையும் அயலார் புகழ்ந்துரைப்பின்
தக்க பெருமையாம் அல்லாது அவன்
தம்மைத்தாமே புகழ்ந்து கூறின் ஏற்காது
தொடர்ந்து கேலிபேசுவோர் பலராகி
தக்க மருந்தாலும் தணியாத பித்தனெனத்
தூற்றி அனைவராலும் இகழப்படுவான்.
(மைத்துனர்- கேலி பேசுவோர்).