சேக்கிழார் பாடல் நயம் – 86 (ஏரின்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி

ஏரின்   மல்கு  வளத்தி  னால்வரும்   எல்லை  யில்லதோர்   இன்பமும்
நீரில்   மல்கிய   வேணி   யார்அடி  யார்தி   றத்துநி   றைந்ததோர்
சீரின்   மல்கிய  அன்பின்  மேன்மை  திருந்த  மன்னிய  சிந்தையும்
பாரின்  மல்க  விரும்பி  மற்றுஅவை  பெற்ற  நீடு  பயன் கொள்வார்.

உரை :

ஏர்த்தொழிலால் நிறைந்து பெருகும்உழவு வளங்களினாலே வரும் உணவும், அவை கொண்டு ஆக்கப் பெறும் அளவில்லாத பிற செல்வமும், கங்கை தங்கிய சடையார்  அடியவர்கள் திறத்திலே நிறைந்த மிக்க அன்பினது மேன்மை திருந்தும்படி நிலைத்த மனமும், உலகிலே வளர்ந்து நிலவுமாறு விரும்பி, அவைகளைத் தாம் பெற்றதனா லாகிய நீடிய பயனை அடைந்த வராய், மாறனார்  விளங்கினார்.

விளக்கம் :

இப்பாடலில்  ‘ஏரின் மல்கு  வளம் என்ற தொடர்’  ஏர்த்தொழிலாகிய வேளாண்மையால் மிகுதியாய்   விளைந்த விளைச்சலையும், அந்த விளைவினாலே பெருகிய பலவகை உணவுப்பொருள்களையும்,  அதனால் வந்து சேரும் எல்லாவகைச் செல்வங்களையும்  குறித்தது.

‘எல்லையில்லதோர்’  என்ற தொடர்,  (ஏரின்றெனில் விளைவு-உணவு இல்லை; அஃதின்றேல் உயிரில்லை என்பர்;  ஆதலின்) எல்லாவகை நலமும்   அடங்க மல்கு வளம் என்ற  பொருள் தந்தது.

‘’ஓர்’’ என்ற சொல் ஒப்பற்ற என்ற பொருள் பெற்றது. உழுதொழிலுக்கு இணை ஏதுமில்லை  என்பதை,

“உழுவார்  உலகத்தார்க்கு  ஆணி   அஃதாற்றாது
எழுவாரை  எல்லாம்  பொறுத்து“,

“சுழன்றும்  ஏர்ப்பின்னது  உலகம்அதனால்
உழந்தும்    உழவே  தலை“,

“பலகுடை நீழலுநம்  தம்குடைக்கீழ்க்   காண்பார்,
அலகுஉடை   நீழல்  அவர்“

ஆகிய  திருக்குறட் பாக்கள்  விளக்குகின்றன. ஏரின் வளத்தாலே உலகம் இயல்கின்றது. பொன் முதலிய வேறு எவ்வகையிற் சிறக்கினும் உழவில்லையேல் உலகம் உணவின்றி இறக்கும். இவ்வுண்மையை இந்நாள் உலகம் மறந்து அலைந்து பேய் போல்  பிறவற்றின் பின்னே திரிகின்றது; ஏருக்குத் தீமையும் புரிகின்றது; இதனால் ஏர்வளம் சுருங்கவும், அது பிற வளங்களைத் தரமாட்டாது வாடவும் வைக்கும் இந்நாள் உலக நிலை பெரிதும் வருந்தத்தக்கது. உலகம் ஏர்க்கண்ணே திரும்பித் திருந்தி யுய்வதாக.

இனி, இப்பாடலில்  ‘’நீரின்மல்கிய வேணியர்’’ என்ற தொடர், நீராகிய கங்கை, மல்கிய நீரின்  வேணி என மாற்றிக் கொள்க. நீரின்மல்கிய- உலகத்திற்கு ஆதரவாக முன்னே கூறிய ஏரின் வளத்திற்கு  ஆதரவாகிய நீரின் மல்கிய என்று குறிப்பார்,  இதனை அடுத்துவைத்த அழகு காண்க.உலகினர் பசி போக்கும் உழவுத்தொழிலுக்கே உரிய நீரைப் பெட்ரா கங்கையைத் தம் தலைமேல் வைத்துக் கொண்டாடினார்சிவபிரான் என்கிறார் கவிஞர்.அந்நீருக்கும் ஆதரவு இறைவன தருளே என்பது குறிப்பாம்.

“ஏரின்  உழாஅர்   உழவர் புயலென்னும்,
வாரி வளங்குன்றிக் கால்“

எனத்திருவள்ளுவர்கூறுவதைக்  காண்க. இப்பொருத்தங்களை இம்முறையே,

“பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியி னின்ற
நீரவன் காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண்….“

என்று அப்பர் பெருமான் அருளியிருப்பதும் காண்க. (இங்குப் பரிசாக நிலவேந்தர் நினைவுறுதலாவது தமது நீதி முறைக்காக இறைவன் கருணை கூர்ந்து வானம் வழங்கச் செய்து தம் கீழ்உள்ள உயிர்களை வாழுமாறு செய்கிறானென்று  நிலவேந்தர்  எண்ணுகின்றனர் )

அடுத்து, ‘வேணியர் அடியார் திறத்து’  என்ற தொடர், வேணி என்பது ஒன்றோடொன்று கூட்டிக்கொண்டிரும்  கூந்தல். வேணியாரது அடியார்களின் திறத்திலே  திருத்தமாக இருக்கும்படி, என்பது பொருள்.

அடுத்து ‘பாரின் மல்க விரும்பி’  என்ற தொடர், “யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்“ என்றபடி உலகினரும் செல்வமும் சிவசிந்தையும் பெற்று என்றும் பெருகி நீடுக என்று விரும்பி. என்ற பொருள் தரும்.  செல்வம் பெற்றோர்க்கு  அதனை வழங்கும் சிந்தனை உண்டாக வேண்டும்.

“பூதபரம்பரை பொலிய“,

“மன்றுளா ரடியாரவர் வான்புகழ்,
நின்ற தெங்கு நிலவி யுலககெலாம்“

என்ற பெரிய புராணத் திருவாக்குகள் காண்க. இதனானே, இம்பர் ஞாலம் விளக்கினார் என மேற் பாட்டிற் கூறியதும் காண்க.

அடுத்து, ‘மற்றவை பெற்ற நீடு பயன்’ என்ற தொடர், மற்று அந்தச் செல்வமும் சிந்தையும் தாம் பெற்றதனால் உளதாகிய நீடிய பயனைக் குறித்தது,“கற்றதனாலாய பயன்“ என்றாற்போல் பொருள்   கொள்வது சிறப்பு. நீடுபயன் – தம்மோடொழியாது பின்னரும் வழிவழி நீடி வருவதாகிய பயன். அவை பெற்ற பயன் தாம் அடியவர்களைப் பேணுவதனோ டொழியின், அது தம்மோடு நின்றுவிடும். தாம் பேணுவது போலப் பாரில்  வாழும்  பிறரும் பேணுவாராயின் அப் பயன் நீடி வரும் – என எண்ணி, உலகில் யாவரும் செல்வமும்,  சிவசிந்தையும் பெற்று அடியாரைப் பேணி ஒழுகி உய்ய  வேண்டும்   என்றதனையே  நாயனார் விரும்பினார் .

இவ்வாறு பாரின் மல்க விரும்பி வந்தமை காரணமாகவே, பின்னர், இவர் சிவப்பேறு எய்திய காலத்து

“இருநிதிக் கிழவன்தானே,
முன்பெரு நிதியம் ஏந்தி மொழிவழி யேவல்கேட்ப
இன்பமார்ந் திருக்க“

என்று இறைவன் அருளினன் என்று சேக்கிழார் கூறினார். செல்வமும் சிவசிந்தையும் தாம் பெற்றதன் நீடுபயன் கொண்டவர் அப்பயனை  உலகமும் பெற்று மல்க விரும்பிய நாயனாரது மனத்தின் சிறப்பை  இப்பாட்டாற் கூறினார். (அவ்வாறு எண்ணிய மனத்தோடு உபசரித்த வாக்கின் தொழில், அடுத்து வரும் பாட்டாலும், பாதம் விளக்கி அருச்சித்து அமுதூட்டுவதாகிய காயத்தின் தொழில் அதன்மேல் வரும் பாட்டானும் கூறுகின்றார்.)

சிவபூசை அடியார் பூசைகளில் மன முதலாயின முக்கரணங்களும் ஒன்ற வழிபடும் முறையும், மகேசுவர பூசை முறையும் வகுத்துக் காட்டியவாறுமாம். மகேசுவர பூசையிலே மகேசுவரர்கள் செய்யும் ஆசீர்வாதத்தின் பலனாலே உலகிலே செல்வமும்,  சிவசிந்தனையும் பெருகி நிலவும். நீடுபயன் – காலத்தால் நீடுவதன்றி அளவினாலும் நீடுவதாம் – பெரியதாம். அரன் பூசையினும் அடியார் பூசை இரட்டைப் பயனுடைய தென்பது ஆகமங்கள் மொழிந்த உண்மை,

“படமாடக்கோயிற் பகவற் கொன்றீயின்,
நடமாடக் கோயில் நம்பர்க்கங்கு   ஆகா;
நடமாடக் கோயில்  நம்பர்க்கொன்று  ஈயின்,
படமாடக் கோயில்  பகவற்கு  அதாமே“

என்பது திருமூலர் திருமந்திரம்.

“கபாலீச்சரம்  அமர்ந்தான்,
ஒட்டிட்ட பண்பின்  உருத்திர பல்கணத்தார்க்கு,
அட்டிட்டல் காணாதே போகியோ பூம்பாவாய்“

என்ற ஆளுடைய பிள்ளையார் திருமயிலைத் தேவாரத்தையும், அதனை வடித்தெடுத்துக் காட்டிய

“மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும்,
அண்ணலார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல்,
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்,
உண்மையாம்  எனில் உலகர்முன் வருக“

என்ற புராணத் திருவாக்கும்,

“வேத உள்ளுறை யாவன விரிபுனல் வேணி,
நாதர் தம்மையும்  அவரடி யாரையும்  நயந்து,
பாத அர்ச்சனை புரிவதும் பணிவதும்  என்றே,
காத லால் அவை இரண்டுமே செய்கருத்து உடையார்“

என்ற (திருநீலநக்கர்) புராணமும் இங்கு நினைவுகூரத் தக்கன. ஆகவே நாயனார் பெற்ற செல்வத்தையும்   அதனைப் பிறர்க்குப் பகிர்ந்தளிக்கும்   சிவசிந்தையையும், அவரைப் போலவே உலகமும்  பெற்று ஒங்க வேண்டும் என்பது சேக்கிழாரின் உள்ளக்  கிடக்கை. செல்வம் பெற்றார் அதனை வழங்கும் சிந்தையும் பெறுதல் வேண்டு மல்லவா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *