நாலடியார் நயம் – 32
நாங்குநேரி வாசஸ்ரீ
32. அவையறிதல்
பாடல் 311
மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன்
சொன்ஞானம் சோர விடல்.
மெய்நூலறிவினையுடையோரின் அவையில் சேர்ந்து
முயன்று ஒன்றைத் தெரிந்துகொள்வதை விடுத்து
அங்கு அறியாமை விளைக்கும் பேச்சைச் சொல்லி
அதையே பரப்பி நிலைநாட்ட முயலும் சிற்றறிவாளரிடம்
அறிவார்ந்த மொழிகளைச் சொல்லாது விடுக!
பாடல் 312
நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும்
தீப்புலவன் சேரார் செறிவுடையார்; – தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.
வாய்க்கு வந்த பாடத்தைச் சொல்லி உட்கருத்தை
வகையாய் அறிந்தவன் போல் அவையைக் கூட்டும்
தீய புலவனை அடக்கமுடைய நற்புலவர் சேரார் காரணம்
தனது தாழ்ச்சி கருதி அத்தீயபுலவன் அவர்தம் குலத்தைப்
பழிப்பான் அல்லது தோளைத் தட்டி சண்டைக்கு எழுவான்.
பாடல் 313
சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார்; – கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.
பேச்சாற்றலை ஆதாரமாகவைத்து விரைந்து
பேச விரும்புபவர் மற்றவரின் அறிவுக் கூர்மையையும்
பெரும் வல்லமையையும் அறியார், தாம் கற்றதைப்
பிறர் மனதில் புகும்படி சொல்லுதலையும் அறியார்
பிறரிடம் தோற்பதின் காரணமும் தெரிந்துகொள்ளாது
பலவற்றை வீணாகப் பேசிக்கொண்டேயிருப்பவர் பலர்.
பாடல் 314
கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் – மற்றதனை
நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு நாட்டி விடும்.
ஆசிரியரை வழிபட்டுக் கல்லாத அறிவற்றவன்
அவர் பிறருக்குச் சொல்லிக்கொடுத்த சூத்திரத்தை
தற்செயலாய்த் தெரிந்துகொண்டு நன்கு கற்றவர்
அவையில் நாணாது கூறி புல்லறிவை வெளிப்படுத்துவான்.
பாடல் 315
வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு – ஒன்றி
உரைவித் தகம்எழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலும்தம் பல்.
வெற்றிபெற வேண்டும் எனும் குறிக்கோளால்
விலங்கினை ஒத்து உண்மைப் பொருளை ஏற்காது
வெகுண்டு போருக்குச் செல்வதுபோல் விளங்குபவரை
விரும்பி அடைந்து நற்கல்வியைச் சொல்வதற்கு
விழைபவர் சுரை விதை போன்ற தம் பற்கள்
விழக்காண்பர் தம் கையில்.
(எதையாவது பேசி எதிரியை வெற்றிக்கொள்ளப் பார்க்கும் அறிவற்றவருக்கு நற்கல்வியை உபதேசிக்கப் போனால் பல்லை உதிர்த்துக் கையில் கொடுப்பார்கள் (அடிப்பார்கள்).
பாடல் 316
பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால், – கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.
பாடலை மனப்பாடம் மட்டுமே செய்து அதன்
பொருளை அறிவதில் தெளிவில்லா மூடன்
பயனற்ற சினம் விளைக்கும் வார்த்தைகளைப்
பேசும்போது கேடில்லா மேன்மையுடைப்
பெரியோர் அம்மூடனைப் பெற்ற தாய்க்கு இரங்கிப்
பொறுமையுடன் அமைதியாய் நிற்பர்.
பாடல் 317
பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; – மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.
பெறத்தக்க பொருட்களைப் பெற்றுக் கொள்ளும்
பொதுமகளிரின் தோள்களைப்போல் ஆசிரியரைப்
போற்றி நெறிப்படி கற்போர்க்கு நூலின் பொருள்
பாங்காய் விளங்குமெனினும் தளிரையொத்த மேனியுடை
பொதுமகளிரின் உள்ளம் போல் நெறிப்படி கல்லாதவர்க்கு
பொதிந்திருக்கும் உட்பொருள் அறிதற்கு அரியதாம்.
பாடல் 318
புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் – மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.
புத்தகங்களை அதிகமாய்ச் சேர்த்தும் அதன்
பொருள் அறியாதவராய் வீடெல்லாம் நிறைத்தாலும்
படித்துப் பொருளுணர்ந்து பிறரைத் தெளிவிக்கும்
புலவரும் அப்புத்தகத்தைப் பாதுகாக்கும் புலவரும் வெவ்வேறே.
பாடல் 319
பொழிப்பகல நுட்பநூல் எச்சம்இந் நான்கின்
கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் – பழிப்பில்
நிரை ஆமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு?
குற்றமில்லாக் கூட்டமாகிய காட்டுப்பசுக்களைக்
கொண்ட உயர்ந்த மலைநாட்டு வேந்தனே! நூலின்
பொருளைச் சுருங்கக் கூறும் பொழிப்புரையும்
பொருள் விளங்க விரித்துக்கூறும் அகல உரையும்
சாரத்தைக் கூறும் நுட்ப உரையும் நூலில் வெளிப்படையாய்ச்
சொல்லாது குறிப்பாலுணர்த்தும் விசேட உரையும் எனும்
நால்வழிகளிலும் நன்கு ஆராய்ந்து விளக்காதவரின் உரை
நூல்களுக்கு நல்ல உரையாகுமோ?
பாடல் 320
இற்பிறப் பில்லார் எனைத்தநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்கும் கருவியரோ? – இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.
உயர்குடிப் பிறப்பு இல்லார் எத்தகு
உயர்ந்த நூலைக் கற்றிருப்பினும்
கல்லாத பிறரின் சொற்குற்றங்களைக்
காட்டி இகழாத அடக்கம் கொண்டவரோ?
நற்குடிப் பிறந்த அறிவாளர் நூற்பொருளை
நன்கு அறியாதவரின் புல்லிய அறிவினை
நன்குணர்ந்தாலும் கண்டுகொள்ளாதிருப்பர்.