வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-28
தி. இரா. மீனா
பொந்தாதேவி
காஷ்மீரில் உள்ள மண்டாவ்பூர் அரசபரம்பரையில் வந்த பொந்தா தேவியின் இயற்பெயர் நிஜாதேவி.இளம்வயதிலிருந்தே சிவபக்தையான அவள் கல்யாண் வந்தாள். அவளுடைய பக்தியால் கவரப்பட்ட சிவன் உள்ளம் மகிழ்ந்து அவருக்கு ஒரு போர்வை [பொந்தே] தந்ததாகவும் அது முதல் அவர் பொந்தாதேவி என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கதை சொல்லப் படுகிறது. மனிதர்களிடையே சமத்துவம் வேண்டும் என்பது அவருடைய விருப்பம். எல்லா இடங்களிலும் அலைந்து திரிபவன் என்ற பொருளில் ’பிடாடி’ என்பது இவர் முத்திரையாகும்.
“வெற்றிடம் என்பது கிராமத்திற்குள் இருக்கிறதா?
வெற்றிடம் என்பது கிராமத்திற்கு வெளியில் இருக்கிறதா?
அந்தணர்பகுதி ஒரு கிராமத்திற்குள்ளா?
தாழ்ந்தவர்பகுதி கிராமத்திற்கு வெளியிலா?
எங்கே நீங்கள்போனாலும் வெற்றிடம் என்பது அதேதான்
சுவரைப் பிரிப்பதால்தான்
உள்வெற்றிடமும் வெளிவெற்றிடமும்
எங்கிருந்து பார்த்தாலும்
உங்கள் அழைப்புக்குச் செவிகொடுப்பது பிடாடிதான்”
இன்றும் கன்னட மக்களால் அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் வசனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
போகண்ணா
’நிஜகுரு போகேஸ்வரா’ என்பது இவரது முத்திரையாகும். இவர் வசனங்கள் பேச்சு மொழியில் அமைந்தவை.
“உன் சரணர் வாழ்க்கை சுடரின் கைவிளக்கு
உன் சரணர் சஞ்சாரம் காற்றின் கைநறுமணம்
கற்பூர மன்னனை தீயின் சிம்மாசனத்தில் வைத்து
மன்னன் சிம்மாசனத்தை விழுங்கினானா
சிம்மாசனம் மன்னனை விழுங்கியதா என்ற வகையில்
கண்களெனும் அரியணை மீது
சத்குரு என்ற மன்னனை அமரவைத்தால்
இலிங்கம் அரியணையை விழுங்கியதா?
அரியணை இலிங்கத்தை விழுங்கியதா?
இவ்விரண்டையும் விழுங்கிய அதிசயத்தை
நிஜகுரு போகேஸ்வரனே உன் சரணரில் பார்க்கலாம்.”
மடிவாளப்பா
’குரு மகந்தா ’ இவரது முத்திரையாகும்.
“என்கால் என் கை என்கண் என் நாசி
என்வாய் என்மெய் என்மனம் என்னுயிர்
இவைபோன்றது அனைத்தும் என்னுடையதென்பது எதுவாம்?
இவையனைத்தும் தானானான்
நிருபம நிராள மஹத்பிரபு மஹாந்த யோகியே“
“வந்ததைப் புறக்கணிக்காமல் வராததை விரும்பாமல்
அறுசுவை கலந்து சுவைத்துண்டு
கவலை மறந்து இன்பமொடு கூடி
நட்பு பகையை ஒன்றாக்கி,வாழ்வில் ஒளிர்ந்து
பற்றற்ற தன்மையை வளமாக்கிக் கொள்ளாமல்
பிறப்பு நோயின் துன்பத்தில் நிலையாகி
செத்துச் செத்துப் போனது .காலம் பல பிறவிகள் பல
நிருபம நிராள மஹத்பிரபு மஹாந்த யோகியே“
மடிவாள மாச்சிதேவா
வீராவேசமான நோன்புடையவர். சிவசரணர்களின் உடையைத்துவைத்து தூய்மைபடுத்துவது இவர் காயகம்.பிஜ்ஜளனின் மதயானையை அடக்கியது, நூலிய சந்தையனுக்கு இஷ்டலிங்கத்தின் அவசியத்தைப் பற்றித் தெளிவு படுத்தியது, கல்யாண் புரட்சிக்குப் பிறகுஉளுவிக்குச் சென்ற சிவசாரணப் படையின் தலைவனாக இருந்து பிஜ்ஜளனின் படையோடு போராடி சரணர்களையும்,சரண இலக்கியங்களையும் பாதுகாத்தது ஆகியவை இவர் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளாகும். ’கலதேவரதேவா’ இவரது முத்திரையாகும்.
1. “அங்கமும் இலிங்கமும் உறவென்று சொல்பவரின்
பேச்சினைக் கேட்க கூடாது
அங்கமும் இலிங்கமும் இணைந்தென்ன
இலிங்கமும் மனமும் இணையாத போது?
மனம் உண்மையில் நின்ற பிறகு
இலிங்கத்தின் உறவென்ன சொல்வாய் கலிதேவரதேவனே.”
2. “அறிவையறிவால் அறிந்தேனென செயலின்றி இருக்கக்கூடாது
இனிப்புடன் இனிப்பு சேர்ந்தால் இனிப்பு குறையுமா?
செல்வத்துடன் செல்வம் சேர்ந்தால் வறுமை வருமோ?
செய்வது சிவழிபாட்டுச் செயலாக வேண்டும்
இது கலிதேவதேவரோடிணைவதாகும் நூலியசந்தையனே“
3. “சாப்பிட்டால் பூதமென்பார்
சாப்பிடவில்லையெனில் சகோரப் பறவையென்பார்
வீட்டிலிருந்தால் சம்சாரியென்பார்
காட்டிலிருந்தால் குரங்கென்பார்
பேசினால் பாவியென்பார்
பேசவில்லையெனில் ஊமையென்பார்
தூங்கவில்லையெனில் திருடனென்பார்
தூங்கினால் உயிரற்றவனென்பார்
இந்த எண்வகையிலிருந்தும் விடுபடமுடியாது பாராய்
கலிதேவரதேவனே“
4. “மண்ணின்மீது கல்லெடுத்துச் சிலையாக்கினால்
கல்லுடைப்பவன் அங்கேயே குருவானான் கல்லும் சீடனாம்
முன்னால் சரித்திரமறியாத குரு
எதிர்கால நல்லுரை ஏற்காத சீடனென
இவ்விரண்டும் கல்லுடைப்போனின் கல்போலாம்
காணாய் கலிதேவய்யனே“
5. “பக்தன் பக்தன் எனச் சொல்வீர்
நீங்கள் பக்தராவது எப்படி?
நித்தமும் பரிசுத்தலிங்கம் அங்கையிருக்க
மண்ணின் மீதுள்ள சிலையை வணங்கும்
பயனற்றவரை என்னென்பேன் கலிதேவய்யனே“
6. “வசனக் கட்டுக்கோப்புப் பற்றிப் பேசி
பொழுது போக்குவோர் பக்தராவரோ ஐயனே?
தன் போலன்று வசனம்; வசனம் போலன்றுதான்
அது எப்படியெனில்
உடல் உள்ளம் செல்வமெனப் பின்னால் வைத்துக் கொண்டு
சொற்கோவையை முன்வைத்துக் கொண்டு
எசமானரைக் கண்ட நாய் வாலாட்டுவது போல
ஆனதென்றான் கலிதேவர தேவய்யன்“
[தொடரும்]