நாலடியார் நயம் – 33

நாங்குநேரி வாசஸ்ரீ
33. புல்லறிவாண்மை
பாடல் 321
அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; – பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு.
அருளின் காரணத்தால் அறம் உரைக்கும்
அன்புடையவர் வாய்ச்சொல்லை நல்லோர்
அளவற்ற பயன்தருவதாய் மதித்து ஏற்பர்
அப்பெரியோர் சொல்லை ஒன்றுக்கும் உதவா
அற்ப பேதையோ துடுப்பு பால் சோற்றின்
அருஞ்சுவை உணராதென்பதுபோல் இகழ்ந்து
அறியாமையுடன் பேசுவான்.
பாடல் 322
அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல்தேற்றா தாங்கு.
தோலைக் கவ்வித் தின்னும் புலையரின் நாய்
தித்திக்கும் பால் சோற்றின் சுவை அறியாததுபோல்
பொறாமை இல்லோர் அறநெறி கூறுங்கால்
பண்பில்லா நற்குணமற்றோர் காதுகொடுத்தும் கேளார்.
பாடல் 323
இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் – தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கால் என்?
கண் இமைக்கும் நேரத்தில் இன்னுயிர் போகும் தன்மையைக்
கண்ட பின்னும் தினை அளவேனும் அறநெறி கேட்பதும்
அதன்வழி நடப்பதுமாகிய நற்செயல் புரியாத வெட்கமும்
அறிவுமற்ற மக்கள் இருந்தாலென்ன? இறந்தாலென்ன?
பாடல் 324
உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்,
பலர்மன்னும் தூற்றும் பழியால், – பலருள்ளும்
கண்டாரோடு எல்லாம் நகாஅது எவனொருவன்
தண்டித் தணிப்பகை கோள்.
வாழும் நாட்கள் சில, உயிர் உடம்பை
விட்டு போவதைத் தடுக்கக் காவலில்லை
பிறர் தூற்றும் பழிச்சொற்களோ மிகப் பல
பின்னும் யாவருடனும் இன்பமாய்ச் சிரித்துப்
பேசாது தனித்திருந்து பலரைப் பகைத்து வாழ்வதில்
பயன் தான் என்ன?
பாடல் 325
எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; – வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.
பலர் கூடியிருக்கும் அவையில் ஒருவன் தன்னைப்
பிறர் முன் காரணமின்றி இகழ்ந்தும் பதிலுரைக்காது
பொறுமையுடன் இருப்பானாகில் அவனை இகழ்ந்த
புல்லறிவாளன் நிச்சயம் அழிவான் அல்லாது
பாருலகில் வாழ்ந்துகொண்டிருப்பானாகில்
பெரும் வியப்பிற்குரியவனே.
பாடல் 326
மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் – தூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள்
தொழுத்தையால் கூறப் படும்.
முதுமை வருமுன்னே அறநெறியை
மேற்கொண்டு முயலாதானை வீட்டின்
வேலைக்காரியும் வெளியிலே தள்ளி
‘வீட்டின் வெளியிலேயே இரு, இங்கிருந்து
விரைந்து போய் விடு’, போலும் கடும்
சொற்களை மனம் நோகக் கூறுவாள்.
பாடல் 327
தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் – தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.
தாமும் இன்பம் அடையார்
தகுதியுடை நல்லவர்க்கும்
தக்க நன்மை செய்யார் உயிருக்குத்
தகுந்த காவலாயிருக்கும் அறநெறியையும்
தேடிச்சேரார் செல்வத்தில் மயங்கி
தாம் செய்வதறியாது வாழ்நாளைத்
தவறாக வீணாய்க் கழிப்பர்.
பாடல் 328
சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் – இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.
மரணத்துக்குப் பின் போகப் போகும்
மறுமை உலகுக்குரிய அறமெனும்
மதிப்பான சோற்றை தோள்மூட்டையாய்
மிக அழுத்தமாகப் பிடிக்காது பணத்தை
மிகவும் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு
அறத்தைப் பின்னர் செய்வோம் என எண்ணும்
அறிவற்றோர் இறக்கும் தருவாயில் சைகையால்
அங்குள்ளோர்க்கு பொன் உருண்டையை எடுத்துவர
அறிவுறுத்தினாலும் அவர் புளிப்பான விளாங்காயே
அவர் விருப்பமெனச் சொல்லிப் பொன்னைக் கவர்ந்துசெல்வர்.
பாடல் 329
வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனைத்தாரே யாகி; – மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.
வறுமையுற்றபோதும் தீராநோய் வந்தபோதும்
வேண்டிய தருமங்கள் செய்வர் அற்பஅறிவுடையார்
வளம் நிறைந்த காலத்திலவர் மறுமைக்கு
வேண்டிய அறம் பற்றி கடுகளவேனும் சிந்தியார்.
பாடல் 330
என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை – அன்னோ
அளவிறந்த காதல்தம் ஆருயிர் அன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமும் கண்டு.
அளவற்ற அன்புக்குரிய தம்
அரிய உயிரொத்தவரைக் கொண்டு
போக முயலும் எமனைக் கண்டும்
பெறர்கரிய மனிதப் பிறவி பெற்றும்
அறம் செய்ய நினையாது தம் வாழ்நாளை
அற்ப அறிவினர் வீணாய்க் கழிக்கின்றார்.