அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்- 1 (அயலிலாட்டி)

0

ச. கண்மணி கணேசன் (ஓய்வு),
முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை:

தொகைநூல்களாக உள்ள அகஇலக்கியங்களில் கூற்று நிகழ்த்த உரியவர் யார் என்பதைத் தொல்காப்பியர் கண்டு வரையறுத்துக் கூறியுள்ளார். அவர் விரித்துக் கூறும் பட்டியலில் இடம்பெறாத பல பாத்திரங்கள் அகப்பாடல்களில் உள்ளன. அவற்றைச் சிறுபாத்திரங்கள் எனலாம். அவற்றைத் தொகுத்து அகரவரிசைப் படுத்தி ஒவ்வொரு பாத்திரமாகக் கண்டு விதந்து விளக்கிச் சுவைக்கும் போது இலக்கியத்திறன் வெளிப்படுவதுடன் படைப்பாளியுடன் வாசகராகிய நாம் ஒத்துணர்வு கொண்டு இலக்கிய வானில் பறக்கலாம்.

சிறுபாத்திர வகைகள்:

தலைவனும் தலைவியும் தலைமைப் பாத்திரங்கள் என்னும் தகுதிக்கு உரியவராக; தோழி, செவிலி, பாங்கன் முதலாய கூற்று நிகழ்த்துவோர் துணைப் பாத்திரங்கள் ஆகின்றனர். அகப்பாடலின் இடப்பின்புலத்திற்குத் துணை செய்யும் கருப்பொருளாகிய மக்கள் தவிர்ந்த சிறுபாத்திரங்கள் பலதரப்பட்டனவாக உள.

அவை பின்வருமாறு:

1. காட்சியில் நேரடியாக இடம்பெற்றுக் கேட்பினும்; பேசாத பாத்திரங்கள்

2. காட்சியில் நேரடியாக இடம்பெறினும் கேட்காத; கேட்க இயலாத; பேசாத தனிப்பாத்திரங்களும், குழுப்பாத்திரங்களும்

3. காட்சியில் இடம்பெறாது; கூற்றில் இடையே சுட்டப்படும் தனிப்பாத்திரங்களும், குழுப்பாத்திரங்களும்

4. காட்சியில் இடம்பெறாது; பேசியதாகக் கூறப்படும் தனிப்பாத்திரங்களும், குழுப்பாத்திரங்களும்

அயலிலாட்டி = பக்கத்து வீட்டுக்காரி

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பது உலகியல் வழக்கு. சமூகமாகச் சேர்ந்து வாழும்  மனிதனுக்குக் குடியிருக்கும் இல்லத்தின் அருகில் வசிக்கும் இல்லத்தார் நெருங்கிய தொடர்புடையவர் ஆகின்றனர். ஆனால் அகப்பாடல் நாடகவழக்கில் அண்டை வீட்டாருக்குப் பேசும் உரிமை இல்லை. பாடல் சான்ற புலவனின் திறம் நாடக வழக்கையும் உலகியல் வழக்கையும் இணைப்பதால் ‘பக்கத்து வீட்டுக்காரி’ சிறுபாத்திரமாகி இடம்பெறுகிறாள். நற்றிணை- 65ல் தோழியும், குறுந்தொகை- 201ல் தலைவியும், அகநானூறு- 386ல் தோழியும் ‘பக்கத்து வீட்டுக்காரி’ பேசியதாகக் கூறுகின்றனர். இப்பக்கத்து வீட்டுக்காரிகள் இரு திறத்தினர்.

1. தன் வேலையைப் பார்த்துக்கொண்டு; தன் போக்கில் பேசிச் செல்பவள்.

2. தலைவியின் இல்லத்திற்கு நேரில் வந்து அவளைச் சந்தித்துப் பேசுபவள்.

நற்றிணை சித்தரிக்கும் அயலிலாட்டி:

தலைவனுக்கும் தலைவிக்கும் இன்னும் மணவினை நிகழவில்லை.

அவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவிக்கு ஆறுதல் சொல்ல முனைகிறாள் தோழி.

“அமுதம் உண்க நம் அயலிலாட்டி
………………….
பெருமலை நாடனை வரூஉம் என்றோளே” (மேற்.)

‘அவ வாய்க்கிச் சக்கரை தான் போடணும்’ என்று வாழ்த்துவது இன்றும் பேச்சில் உள்ள வழக்கே. அதுபோலத்தான் இங்கு தோழியும் வாழ்த்துகிறாள். யாரிடமோ பேசிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரி ‘வந்துவிடுவான்’ என்கிறாள். அது யார்? என்ன விபரம்? என்றெல்லாம் தோழிக்கும் தெரியாது; தலைவிக்கும் தெரியாது. நமக்கும் அது தேவையில்லை. ஆனால் அச்சொற்கள் அசரீரி போல; நல்ல நிமித்தமாகப் பட்டது; நம்பிக்கை ஊட்டியது. அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் ‘சாகாவரம் கொடுக்கும் அமுதத்தை அவள் உண்பாளாக’ என்று வாயாரப் புகழ்ந்து போற்றுகிறாள்.

கிடங்கில் எனும் ஊர் போன்ற இனிய சொற்கள் என்பது அயலிலாட்டியின் பேச்சுக்குக் கபிலரின் கவித்துவ உவமை. அதையடுத்துத் தலைவியின் துன்ப நிலையைச் சொல்லாமல் சொல்லும் உள்ளுறை உவமை. அவ்வப்போது பெருகும் காட்டாறு; பெருகுங்கால் கலங்கும் கரையின்  பாசி; கலங்கி நீருடன் கலந்து வீழும் வெள்ளருவி; தன் தாகம் தீர அங்கு நீரருந்தும் யானை; அதே இடத்திற்கு வரும் புலி; புலியுடன் போர் செய்து புண்பட்ட யானை; அதன் கோட்டை விரும்பிய வில்திறன் மிகுந்த வேடர்; அவர் செலுத்திய கணைகள் புண்ணைத் தாக்க தாங்கவியலாத் துன்பத்தில் அலறிய யானை; அந்த அலறல் இடிமுழக்கம் போல் எதிரொலிக்கும் மலை; அம்மலைத்  தலைவனைக் கருதிக் காத்திருக்கும் தலைவி என இறைச்சியுடன் கூடிய அகச்சுவை ததும்புகிறது இப்பாடலில்.

இங்கு அயலிலாட்டியின் பங்கு ‘நற்சொல் கூறல்’. தலைவி விரைவில் மணவினை பெறுவாள் எனும் கூடல் நிமித்தமாகிய உரிப்பொருள் விளக்கத்திற்கு வழிவகை செய்பவள் ஆகிறாள் அயலிலாட்டி.

குறுந்தொகை சித்தரிக்கும் அயலிலாட்டி:

“அமிழ்தம் உண்க நம் அயலிலாட்டி” என்பவள் குறுந்தொகைத்

தலைவி. இங்கும் அச்சொற்கள் நன்நிமித்தமாகக் கொள்ளப்படுகின்றன. ‘அவன் வருவான்’ என்ற நற்சொல்லை முன்னர் கேட்டவள்; பின்னோக்கு உத்தியாக (flash back) அதுபற்றித் தோழியிடம் விவரிக்கிறாள்.

பெயர் தெரியாப் புலவர் பாடிய இப்பாடலிலும் அகப்பாடலுக்கே உரிய உள்ளுறை அழகு பொருளாழத்துடன் அமைந்து சுவை கூட்டுகிறது. நீலநிறத்து இறக்கைகளைக் கொண்ட வௌவால்; அது உண்ட மாம்பழத்தில் பாலின் இனிமையும் சேர்ந்தது போன்று மிதமிஞ்சிய இனிமை. அடுத்து அந்த வௌவால் உண்டது புளிப்பு மிகுந்த நெல்லிக்கனி. நீரருந்திய பின்னர் தொடர்ந்து அது ஓய்வெடுத்தது மூங்கில் புதர்கள் மிகுந்த சோலை. அதாவது தொங்கிக் கொண்டு முட்களே இல்லாத மூங்கிலின் உச்சியில் இனிதாகத் துயின்றது.

இங்கே புலவர் சொல்லாமல் சொல்லும் குறிப்புப் பொருள்; தான் விரும்பிய தலைவனோடு இல்லறம் நடத்தும் இன்பம்; நெல்லிக்கனி உண்டபின் நீரருந்திய நாவில் தங்கும் இனிப்புச்சுவை போன்றது என்பது தான். தலைவி தன் பிறந்த வீட்டில் அனுபவித்த செல்லமும், செல்வ வசதியும் பாலின் இனிமை கூட்டிய மாம்பழச்சுவை மாதிரி தான். என்ன தான் இனிமை என்றாலும் மாம்பழம் உண்ட பின்பு நீர் அருந்தினால் நாவில் துவர்ப்பு தானே மிஞ்சும். தன் களவுக்காலம் ஊரார் புறம்பேசும் முட்குத்துகளின் இன்னலோடு அமைந்து இருந்தாலும்; மனதிற்கினிய மணாளனோடு நடத்தும் இல்லறசுகம் ஊராரின் வம்புப் பேச்சே இல்லாத; சிறந்த  அமைதியான வாழ்க்கையை அவளுக்கு அளிக்கிறது. இத்தகு நிலைமை தனக்கு வாய்க்கும் என்பதை அயலிலாட்டி சொன்ன ‘அவன் வருவான்’ என்ற நற்சொல் மூலம் அறிந்து ஆற்றி இருந்ததாகத் தோழியிடம் எடுத்துச் சொல்கிறாள் தலைவி.

ஆற்றியிருத்தல் என்னும் முல்லைத்திணை உரிப்பொருளை அழுத்தமாகக்  கூற அயலிலாட்டியின் நற்சொற்கள் பயன்பட்டதாகத் தலைவி உரைக்கிறாள்.

அகநானூற்று அயலிலாட்டி:

தலைவி விடியவிடியத் தலைவனின்றித் தனித்து தவித்திருக்கிறாள். அவனது புறத்தொழுக்கம் தலைவிக்குத் தாங்கொணாத் துயரைத் தருகிறது. ஆனாலும் அதுகுறித்து அவளுக்கும் தோழிக்கும் விபரமேதும் தெரியவில்லை. மனஅழுத்தத்திற்கு ஆளாகி; ஒப்பனை செய்யாதவளாய்த், தூங்காத விழிகளோடு சோர்ந்து போய்த் தன் இல்லத்தில் இருப்பவள் முன் அயலிலாட்டி பகற்பொழுதில்  வருகிறாள். ’நானும் இதே சேரியில் தான் வசிக்கிறேன்; என் வீடு சற்றுத் தள்ளி இருக்கிறது. நீ இவ்வளவு சோர்ந்து போவதேன்? என்று கேட்டு மோதிரமணிந்த தன் விரல்களால் அவளது தலையை நீவி; நெற்றியைத் தடவி; ஆறுதல் கூறி; உனக்குத் தங்கை ஆகும் தகுதி உடையவள் நான்’ என ஒரு பெரிய உண்மையைச் சிரமமே இல்லாமல் கூச்சமின்றித் தெளிவாக்கி விட்டுச் செல்கிறாள். பின்னர் தலைவன் வரும்போது தோழி ‘எனக்கு வெட்கமாக இருக்கிறது’ என்று கூறி வாயில் மறுத்து நிற்கிறாள். பரணரின் இப்பாட்டில் அயலிலாட்டி தலைவனின் புறத்தொழுக்கத்திற்குத் துணை நின்றவள்.

தனது பாடல்களில் வரலாற்றுக் கருத்துக்களைப் பெய்து உவமிக்கும் தனித்தன்மை உடையவர் பரணர். இப்பாடலிலும் தோழியின் நாணத்திற்கு வரலாற்று நிகழ்ச்சி உவமை ஆகிறது. பாணன் எனும் பெயரிய மற்போர் வீரன் ஆரியப்  பொருநனைத் தனது பெருவலி கொண்ட மார்பினால் மோதித் துன்புறுத்தி; அவன் முழவு போன்ற திரண்ட தோள்களைக் கையகப்படுத்தி நெரித்துத்; தோற்கடித்து எழவொட்டாமல் வென்றதைக் கண்டு; கணையன் எப்படி நாணம் கொண்டானோ அப்படிப்பட்ட நாணம் எனக்கும் தோன்றுகிறது என்கிறாள் தோழி. தலைவனின் இழிந்த ஒழுக்கத்தையும் உள்ளுறை மூலம் தோழி குத்திக் காட்டுகிறாள். ‘பொய்கையிலுள்ள நாற்றம் மிகுந்த நீர்நாய் பகல் பொழுதில் வாளைமீனை இரையாகக் கொள்ளத் தேடும் ஊரை உடையவனே’ என்னும் கூற்றில் உள்ள வசை தலைவனுக்குரியது.

மருதத் திணைக்கு உரிய ஊடல் எனும் உரிப்பொருள் விளக்கத்திற்கு அயலிலாட்டி எனும் சிறுபாத்திரம் பயன்பட்டுள்ளது.

முடிவுரை:    

அயலிலாட்டியின் சொல் நற்சொல்லாக அமைய; தலைவி விரைவில் மணவினை பெறுவாள் எனும் கூடல் நிமித்தமாகிய உரிப்பொருள் விளக்கத்திற்கு வழிவகை செய்பவள் ஆகிறாள். ஆற்றியிருத்தல் என்னும் முல்லைத்திணை உரிப்பொருளுக்கு அவளது நற்சொற்கள் பயன்பட்டதாகத் தலைவி உரைக்கிறாள். மருதத் திணைக்குரிய ஊடல் எனும் உரிப்பொருள் விளக்கத்திற்கும் இப்பாத்திரம்     பயன்பட்டுள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *