Blog

  • நாலடியார் நயம் – 13

    நாலடியார் நயம் – 13

    நாங்குநேரி வாசஸ்ரீ

    13 .தீவினை அச்சம்

    பாடல் 121

    துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
    மக்கள் பிணத்த சுடுகாடு – தொக்க
    விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
    புல்லறி வாளர் வயிறு.

    சுடுகாடுகள் துயரத்தைக்
    கொடுக்கும் இல்வாழ்க்கையில்
    கிடந்துழன்று அவற்றினின்று
    பற்றுவிடும் வழிஅறியாதாரின்
    பிணத்தை உடையன
    அற்பரின் வயிறுகளோ
    அதிகளவு பறவைகளுக்கும்
    விலங்குகளுக்கும் சுடுகாடுகளாம்.

    பாடல்122

    இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
    கரும்பார் கழனியுள் சேர்வர் – சுரும்பார்க்கும்
    காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
    கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.

    வண்டுகள் ஒலிக்கும் காட்டில்
    வாழும் கவுதாரியையும் காடையையும்
    பிடித்துக் கூட்டில் அடைப்பவர்
    பகைவர்களுக்கு அடிமையாய்
    காலில் விலங்கு பூட்டப்பட்டு
    வலிய பயனில்லா
    வட்டை நிலத்திலோ
    கழனிகளிலோ அடிமையாய்
    வேலை வாங்கப்படுவர்.

    பாடல் 123

    அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
    துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்
    அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
    பழவினை வந்தடைந்தக் கால்.

    அக்காலத்தில் (முற்பிறப்பில்) நண்டைப் பிடித்து
    அதன் காலை ஒடித்து
    விரும்பித்தின்ற தீவினை
    வந்தடைந்த போது
    உள்ளங்கை சங்குமணிபோல்
    உருத்தோன்ற விரலெல்லாம்
    குறைந்தழுகித் துயரம் தரும்
    குட்ட நோய் உண்டாகப் பெறுவர்.

    பாடல் 124

    நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
    எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் – பரப்பக்
    கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
    கடுவினைய ராகியார்ச் சார்ந்து.

    நெய்யைப்போல் நன்மை செய்வனவும்
    நெருப்பிலிட்டுக் காய்ச்சும்நேரம்
    உடலில் பட்டால் எரிக்கும்படி
    காய்ந்து துன்பநோய் தருவதுபோல்
    நல்லொழுக்கம் தவறா நல்லோரும்
    கடும் தீயவரைச் சார்ந்தால்
    கொடும் தீமையே புரிவர்.

    பாடல் 125

    பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
    வரிசை வரிசையா நத்தும் – வரிசையால்
    வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
    தானே சிறியார் தொடர்பு.

    பெரியோர் நட்பு பிறைச்சந்திரன்
    போல் படிப்படியாய் நாளும் வளரும்
    சிற்றறிவுடையோர் நட்பு வானத்தே
    தோன்றும் முழு வட்ட நிலா போல்
    தினந்தோறும் சிறுத்துத் தானே
    தேய்ந்து குறைந்துவிடும்.

    பாடல் 126

    சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
    சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
    சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
    பாம்பகத்துக் கண்ட துடைத்து.

    நற்குணமுள்ளவர் என மதித்து
    நட்பு கொள்கிறாய்!
    நட்புகொண்டவரிடம் நற்குணம்
    இல்லையெனில் சார்ந்தவனே கேள்!
    அது வாசனை மிகு சந்தனம்
    அங்குள்ளது என நினைத்து
    செப்பைத் திறந்தவன் உள்ளே
    சர்ப்பத்தைக் கண்டது போலாம்.

    பாடல் 127

    யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
    தேருந் துணைமை யுடையவர் – சாரல்
    கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
    மனம்வேறு செய்கையும் வேறு.

    மலைச் சாரல்களில் ஒளிவிடும்
    மணிகள் மிகு நாட்டின் வேந்தனே!
    கேள்! மனதை ஆராய்ந்தறியும்
    வல்லமையுடையோர் எவருளர்?
    மக்களின் மனம் வேறு
    மனிதன் நினைத்தபடி செய்யாது
    மேலுக்கு வஞ்சனையாய் ஆற்றும்
    செயல்கள் வேறு.

    பாடல் 128

    உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்
    கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை – தெள்ளிப்
    புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
    மனத்துக்கண் மாசாய் விடும்.

    தெளிந்த அருவிநீர் சேற்றைத்
    தள்ளி ஒதுக்கும் மலைநாட்டு மன்னனே!
    மனதால் விரும்பாது வஞ்சகமாக
    மயக்கும் உறுதியான செயல்செய்பவரின்
    மிகுநட்பு மனதில் குற்றமுள்ளதாய் நிற்கும்.

    பாடல் 129

    ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
    ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் – ஆக்கம்
    இருமையும் சென்று சுடுதலால் நல்ல
    கருமமே கல்லார்கண் தீர்வு.

    பகைகொண்டு வீசிய ஒளிமிகும் வாள்
    பகைவர் கையில் அகப்பட்டால்
    தைரியத்தைக் கெடுப்பது உறுதி
    தீயோர்க்குச் செய்த உதவி
    இம்மை மறுமையிலும் தொடர்ந்து
    வருத்தலால் அத் தீயொரிடமிருந்து
    விலகி இருத்தல் நல்லது.

    பாடல் 130

    மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
    எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! – எனைத்தும்
    சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
    உறுபயனோ இல்லை உயிர்க்கு.

    மனமே! மனையாளிடத்து ஆசை விடமாட்டாய்
    மக்கட்செல்வத்துக்கு பொருள் சேர்க்க ஏங்கி
    எவ்வளவு காலம் வாழப்போகிறாய்?
    அற்பகாலமாயினும் செய்யும்
    அறச்செயலாலன்றி உயிருக்கு
    அடையும்படியான நற்பயன் வேறுஇல்லை.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 22

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 22

    தி. இரா. மீனா

    பசவேசர் தொடர்ச்சி

    16. “பனைமரத்தடியில் பால்குடமிருந்தால்
    பால்குடமென்று சொல்லமாட்டார்கள் குடமென்பார்
    இந்த நிந்தனையின் சிந்தனையைப் பொறுக்க மாட்டான்
    கூடலசங்கமதேவன்“

    17. “இசையின் நுணுக்கம் தெரியாது
    இசைவரிகளின் அளவு தெரியாது
    தாளகதி தெரியாது
    இசைக்கருவியை மீட்டிடத் தெரியாது
    அமுதகணம் தேவகணமறியேன்
    கூடலசங்கதேவனே ,உனக்குக் கேடு ஏற்படாமல்
    நான் விரும்பியபடி பாடுவேன்“

    18. “நெய்யின் சுவைக்கு ஈட்டியை நக்கும்
    நாய் போன்றது என்வாழ்வு
    உலகப்பற்று என் மனதை விடவில்லை
    இதைப் பொறுப்பது உனது தர்மம் கூடலசங்கமதேவனே“

    19. “உலகில் பெரியதொரு கடைவைத்து
    நம்மகாதேவ வணிகசெட்டி உட்கார்ந்திருந்தார்
    ஒன்றான மனமெனில் ’சட்’ டெனப் பேசுவார்;
    இருமனமென்றால் பேசமாட்டார்
    தம்படி இழக்கமாட்டார், அரைத் தம்படி பயனடையார்
    நம்கூடலசங்கமதேவன் புத்திசாலி“

    20. “இசைப்பிரியன் சிவனென்பார் அவன் இசைப்பிரியனல்லன்!
    வேதப்பிரியன் சிவனென்பார் அவன் வேதப்பிரியனல்லன்!
    நாதமிசைத்த இராவணனுக்கு ஆயுள் பாதி ஆனதே !
    வேதமோதிய பிரம்மன் தலையறுந்து போனதே!
    நாதப்பிரியனுமில்லை, வேதப்பிரியனுமில்லை
    பக்திப்பிரியன் நம்கூடலசங்கமதேவன்“

    21. “நாளை வருவது இன்றே நமக்கு வரட்டும்
    இன்று வருவது இப்போதே வரட்டும்
    இதற்கு அஞ்சுவது யார்?
    “ஜாதய்ய மரணம் துருவம்“ – என
    கூடலசங்கதேவன் எழுதியதைத் திருத்த
    ஹரிபிரம்மானாலும் இயலாது“

    22. “ஆயுள் முடிந்தாலன்றி மரணமில்லை
    சொன்ன சொல் தவறினாலன்றி வறுமையில்லை
    உலகத்தவர் பழிச்சொல்லுக்கு அஞ்சுவதேனோ?
    கூடலசங்கமதேவரின் துணைகிடைத்த பின்னும்?

    23. “நீரைக் கண்டால் மூழ்குவார்
    மரத்தைக் கண்டால் சுற்றுவார்
    வற்றிப் போகும் தண்ணீரையும் காயும் மரத்தையும்
    நம்புபவர்கள் உன்னை எப்படியறிவார்கள்
    கூடலசங்கமதேவனே?”

    24. “நீருக்கு ஆம்பல் அழகு, கடலுக்குத் திரையழகு
    பெண்ணுக்கு குணமழகு, வானிற்குப் பிறையழகு
    கூடலசங்கமனின் அடியாருக்கு
    நெற்றியின் நீரழகாம்“

    25. “பாவம் புண்ணியம் அவரவர் விருப்பம்
    ’ஐயா’ என்றால் மோட்சம் ’அடே’ என்றால் நரகம்
    இறைவனே! சரணனே வெற்றி உண்டாகட்டும் உனக்கு.
    “வாழ்க நீ” எனச் சொல்வதிலேயே
    கைலாசமுள்ளது கூடலசங்கமதேவனே“

    26. “மாரியும் மாகாளியும் வேறில்லை
    மாரியென்றாலென்ன?
    கண்கள் தவறாகப் பார்த்தால் மாரி
    நாக்கு தவறாகப் பேசினால் மாகாளி
    கூடலசங்கமதேவனின் நினைவை மறந்தால் அது மாரி.”

    27. “சமத்துவ அன்பு, சமத்துவ இன்பம்
    சமத்துவ சுகம் அறியவில்லையெனில்
    இலிங்கம் வணங்கி என்ன பயன்?
    கூடலசங்கமதேவனை வழிபட்டு
    நதியுள்  நதி இணைந்தது போல இல்லையெனில்
    இலிங்கம் வணங்கிப் பயனென்ன?”

    28. “உலகின் குறையத் திருத்த நீங்கள் ஏன் முயல்கிறீர்கள்
    உங்கள் உடல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்
    உங்கள் மனங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்
    அடுத்த வீட்டுத் துன்பத்திற்காக அழுபவர்களை
    கூடலசங்கமதேவன் நம்புவதில்லை”

    29. “வேடன் பிடித்துவரும் முயலுக்கு விலைகொடுப்பார்
    அரசன் பிணமெனில் பொடிக்காசும் தரமாட்டார்
    முயலினும் கீழானது மனித வாழ்க்கை
    கூடலசங்கம சரணரை நிறைமனதுடன் நம்புவாய்“

    30. “மனதிற்குப் பிடிக்காத கணவன்
    மனதில் நிலைப்பதில்லை தோழி
    சிவனல்லாது வேறு புருஷர்கள்
    எனக்குப் பிடிக்காது தோழி
    கன்னியாயிருக்கும் போது கூடினேன்
    சிறுவயதில் உன்னுடன் வாழ்ந்தேன்
    உன் ஆணை ஐயனே கூடலசங்கமதேவனே”

    31. “என்னென்பேன் என்னென்பேன் ஒன்றிரண்டானதை?
    என்னென்பேன் என்னென்பேன் இரண்டொன்றானதை?
    என்னென்பேன் என்னென்பேன் அழியாப் பெருமையை?
    வள்ளல் கூடலசங்கமதேவன் தானேயறிவான்“

    32. “வழிபாடுள்ளவரை இலிங்கத்தைப் பாடினேன்
    பேச்சுள்ளவரை ஜங்கமரைப் பாடினேன்
    நாவுள்ளவரை பிரசாதத்தைப் பாடினேன்
    இம்மூன்றும் அழிந்தபிறகு என்னையே பாடினேன்
    கூடலசங்கமதேவனே!”

    33. “சம்சாரமென்பது காற்றில் உள்ள விளக்கு
    செல்வமென்பது சந்தைக்கூட்டம்
    இதை நம்பிக் கெடவேண்டாம் – செல்வமென்பது
    மறக்காமல் கூடலசங்கமதேவனுக்குச் செய்யும் பூஜை”

    34. “பூலோகமென்பது இறைவனின் நாணயச்சாலை
    இங்கு செல்லுபடியெனில் அங்கும் செல்லுபடியாவார்
    இங்கு செல்லுபடியில்லையெனில் அங்கும் இல்லை
    கூடலசங்கமதேவனே.”

                                              [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 79 (என்ன)

    சேக்கிழார் பாடல் நயம் – 79 (என்ன)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    என்ன   அவ்வுரை   கேட்டுஇயற்   பகையார்
            ‘’யாதும்  ஒன்றும்என்   பக்கல்   உண்டாகில்
    அன்ன   தெம்பிரான்   அடியவர்   உடைமை;
            ஐயம்   இல்லைநீர்  அருள்செயும்’’   என்ன
    ‘’மன்னு    காதலுன்   மனைவியை   வேண்டி
              வந்தது    இங்கு”என   அங்கணர்    எதிரே
    சொன்ன   போதிலும்    முன்னையின்   மகிழ்ந்து
              தூய   தொண்டனார்   தொழுதுரை   செய்வார்!  

    இயற்பகை நாயனாரை நோக்கி நீறு பூசிய அந்தணராயும், தூர்த்த வேடம் உடையவராயும் ஊரார்முன் ஒரு சிவனடியாராகச் சிவபெருமானே இயற்பகையார் வாழும் தெருவில் நடந்து வந்தார். அவருடைய  திருமேனியில் இருவகை வேடமும் பொலிந்தது! அவ்வாறு  வந்த சிவனடியார் இயற்பகையார்  வாழும்  இல்லத்து  வாயிலில்  புகுந்து நின்றார். இயற்பகையாரோ, ‘’எந்தையாகிய  சிவபிரான் அடியார் எழுந்தருளினார்!‘’ என்றெண்ணி எப்போதும் நின்ற இன்பம் மிக்க ஆதரவுடைய உள்ளத்தில்  பேரன்பு  ததும்ப  அவர்முன் சென்று வணங்கினார்;  சிறப்பு மிக்க பாத பூசைகள் செய்து, ‘’எம் முன்னோர்கள் செய்த பெருந்தவத்தின் விளைவாகவோ, என் முன் எழுந்தருளினீர்?’’ என்று போற்றினார்.

    அங்கே வஞ்சனையுடன் வந்த மறையவர் ‘’கொன்றைமலர் அணிந்த சடையை யுடைய சிவபிரானடியார்கள் தம் விருப்பத்தைக் கூறி வேண்டினால், குற்றமாயினும் அதனை   மிகச்சிறந்த குணமே என்றெண்ணி அதனைச் சிறிதும் மறுக்காமல் வழங்குவீர் என்று ஊரார் கூறிய உண்மையைக்  கேள்வியுற்றேன்! இன்று, இங்கு  உங்களிடம் ஒரு பொருளை வேண்டி வந்துள்ளேன்! அதற்க்கு நீர் இசைந்தால் நான் என் கருத்தைக் கூறுவேன்!’’ என்றார்.

    அதனைக் கேட்ட இயற்பகையார் ‘’நீங்கள் விரும்பிய பொருள் யாதாயினும், அப்பொருள் என்னிடம் இருக்குமாயின், அப்பொருள் எம்பிரான் அடியவர்க்கே  உரியதாகும்;  இதில் சிறிதும் ஐயமில்லை; நீங்கள் விரும்பும் பொருள் இன்னது என்று தெளிவாகக் கேட்டருள்க‘’ என்று பணிவுடன் கூறினார். அடியாராகிய  அந்தணர், ‘’மிகுந்த காதலுடன் இருக்கும் உன் மனைவியையே வேண்டிப் பெற்றுக்  கொள்ள இங்கே வந்தேன்’’ என்றார். அவர்தம் இவ்வேண்டுகோளை தம் எதிரே அஞ்சாது நின்று கேட்டபோதிலும், அதற்காக  உள்ளம் கலங்காமல், முன்பு இருந்த மகிழ்ச்சியைவிட மிக்க மகிழ்ச்சி  கொண்டு, தூய்மைமிக்க தொண்டராகிய இயற்பகை நாயனார், மீண்டும் அந்த அந்தணரைப் பணிவுடன் வணங்கினார்.

    இப்பாடலில் ‘’யாதும்’’ என்ற சொல் எப்பொருளாக இருந்தாலும் என்ற பொருளை உடையது. மேலும் ‘’ஒன்றும்‘’ என்ற சொல்லுக்கு, ஒப்பற்றது, உயர்ந்தது, என்றும் நான் பிரியக்கூடாத என் தனித்த உடமை என்றெல்லாம் கருதத்  தக்கது  என்பது பொருள். ‘’எம்பிரான் அடியவர் உடைமை’’ என்ற தொடருக்கு, ‘’எளியேன் முன் வந்து நின்ற  தேவரீராகிய எம் தலைவரின் உடைமையே!‘’ என்பது கருத்து.

    இறைவன் அடியார்களை இறைவனாகவே கருதி வணங்குவதும், அவர்கள் எழுந்தருளும் இல்லங்களைக் கோயிலாகவே கருதி வழிபடுதலும் அடியார் செயல் என்பதைச் சிவஞான போதம்,

    ‘’மாலற  நேயம்  மலிந்தவர்  வேடமும்,
     ஆலயம் தானும்  அரண் எனது தொழுமே!’’

    என்று கூறுகிறது. மாணிக்க வாசகர் இறைவனை ‘’ உடையாய் ‘’ என்று கூறியதும் இதைக் கருதியே! மேலும்,

    ‘’உற்றாரை  யான் வேண்டேன்  ஊர்வேண்டேன்  பேர்வேண்டேன் ..
     குற்றாலத்     தினிதுறையும்    கூத்தாஉன்  குரைகழற்கே
     கற்றாவின்   மனம்போலக்  கசிந்துருகி  வேண்டுவனே‘’

    என்று பாடுகிறார், அப்பரடிகளோ

    ‘’கனியினும் கட்டி    பட்ட  கரும்பினும்
     பனிம   லர்க்குழல்   பாவைநல்   லாரினும்
    தனிமு   டிக்கவித்   தாளும்   அரசினும்
    இனியன் தன்னடைந்   தார்க்குஇடை  மருதனே ‘’  

    என்ற  பாட்டில் ‘பாவை நல்லாரினும் இனியன்’ என்கிறார்; சுந்தரர்,

    ‘’மற்றுப் பற்றெனக்கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்!’’ என்று தம் உறவுகளின் மேலுள்ள புற்றுக்களை நீக்கி,  இறைவன் திருவடியையே பற்றினார். திருவாதவூரடிகள் புராணம்,

    “உருப்பொ லாதவர்  இழிகுலத்  தவர்நல்
         லொழுக்க மில்லவர்  என்று நம்மளவில் 
    விருப்பி லாதவர்  எனினும்  மெய்ந்நீறும்  
         மிக்க  சாதன வேடமும் கண்டால்  
    தரிப்பி லாதுசென்று எதிருற வணங்கித்  
        தக்க போனகம்  அளித்தவர்க்கு எளிதா   
    விருப்பர் தாமவ ரடியவர்க் கடியார் 
           என்பர் யான்எனது எனும்செருக் கறுப்பார்.”

    என்று பாடுகிறது. ஆகவே இயற்பகை நாயனாரின் மனம் இறைவனையும் சிவனடியாரையுமே  எல்லாவற்றிலும் மேலாகக்  கருதியது. மேலும் இப்பாடலில்,

    ‘’அங்கணர் எதிரே சொன்ன போதிலும்’’ என்ற தொடரால், அவர் மனைவியின் மேல் எனக்கு ஆசை, என்று புறத்தே போய்ச் சொன்னாலும் உடனே அது கேட்டுமிகவும் வெகுள்வார் உள்ள உலகில்,’’ தமக்கு எதிரே நின்று அந்தணர் சொன்ன போதிலும்’’ என்ற பொருள் புரிகிறது. அதன் பின் ‘’முன்னையின் மகிழ்ந்து, தொழுதுரை   செய்வார்! ‘’ என்ற தொடரால்  கேட்பதற்கு முன் இருந்ததை விட அதிகமாக உள்ளத்தில் மகிழ்ந்தார் இயற்பகையார் என்பதும், மீண்டும் அந்த அந்தணரை முன்பைவிட அதிகமாகத் தொழுதார் என்பதும்   புலனாகின்றது.

    கம்பராமாயணத்தில் வசிட்டர் கூறியதைக் கேட்ட  தசரதன்,

    ‘’மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை
     பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அப்பெருவில்
     இற்ற அன்றினும் எறி மழுவாளவன் இழுக்கம்
     உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்’’

    என்ற பாடலை நினைவூட்டுகிறது. இயற்பகையாரின் உண்மையான உளப்பாங்கினை  உரியவாறு எடுத்துக்  காட்டும் சேக்கிழாரின் திறம் போற்றுதற்கு உரியது.

    Share
  • Annakannan Ideas 41: Smart Bin

    Annakannan Ideas 41: Smart Bin

    Here is my idea of Smart Bin, which I had submitted in the Startup India – WhatsApp Grand Challenge on 10th March 2019. But, in the end of April 2020, read a news with the title: IIT-supported start-up develops smart bin system to prevent coronavirus. It is similar to my idea; but, I have more enlarged vision & explained here.

     

    (To subscribe my YouTube channel, please click here: http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாலடியார் நயம் – 12

    நாலடியார் நயம் – 12

    நாங்குநேரி வாசஸ்ரீ

     12. மெய்ம்மை

    பாடல் 111

    இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
    வசையன்று வையத் தியற்கை – நசையழுங்க
    நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
    கொன்றாரின் குற்றம் உடைத்து.

    வரிசையாய் வளையல்கள் அணிந்தவளே!
    வேண்டி இரப்போர்க்குத் தர இயலாப்
    பொருளை இல்லை எனச் சொல்லுதல்
    பழியன்று  உலகியற்கையே
    கொடுப்பதாய் ஆசைகாட்டிப் பலநாள்
    கழிந்தபின் இல்லையென்றல்
    செய்நன்றி மறப்பதினும் சீரிய குற்றமாம்.

    பாடல் 112

    தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
    எக்காலுங் குன்றல் இலராவர்! – அக்காரம்
    யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
    தேவரே தின்னினும் வேம்பு.

    தக்கசான்றோரும் அல்லாதாரும்
    தத்தம் குணங்களில் எப்போதும்
    குறைதல் இல்லாதிருப்பர்
    கசக்காது வெல்லம் எவர் தின்றாலும்
    கசக்கும் வேப்பங்காய் தேவரே தின்றாலும்.

    பாடல் 113

    காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
    மேலாடு மீனின் பலராவர் – ஏலா
    இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
    தொடர்புடையேம் என்பார் சிலர்.

    குளிர்ந்த மலைகளுடை நாட்டின்
    வேந்தனே! செல்வம் உள்ள காலத்தே
    நெருங்கிய உறவினர் பலர் இருப்பர்
    நட்சத்திரங்களை விட அதிகமாய்
    நலிந்து வறுமையுறும் காலம்
    உறவினராய்த் தொடர்பவர்
    உரிமையுடன் ஒருசிலரே.

    பாடல் 114

    வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
    நடுவணது எய்த இருதலையும் எய்தும்
    நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
    அடுவது போலும் துயர்.

    குற்றமற்ற இவ்வுலகில் நிலைத்துக்
    காணப்படுவதாய்த் தோன்றும்
    அறம் பொருள் இன்பம் எனும்
    அம் மூன்றனுள் நடுவிலுள்ள
    பொருளை அடைந்தோன் அதன்
    பொருட்டு முதலிலுள்ள அறத்தையும்
    இறுதியிலுள்ள இன்பத்தையும் அடைவான்
    இதனைப் பெறாதவன் கொல்லன்
    இரும்பை உலையிலிட்டு காய்ச்சுவது
    போலும் வறுமையுற்று வருந்துவான்.

    பாடல் 115

    நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
    கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும்
    புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
    செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.

    நல்ல பசுவின் கன்றானால்
    நல்விலைபோகுமதன் இளங்கன்றும்
    படிக்காதவராய் இருப்பினும்
    பணக்காரரின் வாய்ச்சொற்கள்
    பயன்கருதி ஏற்றுக்கொள்ளப்படும்
    சிறிதே ஈரமுள்ள காலத்தே உழும்
    சமயம் கொழு உட்செல்லாது
    மேலே நிற்பதுபோல்
    மேலுக்குத் தலையசைத்து
    கேட்பதுபோல் தோன்றினாலும்
    வறியவனின் வாய்ச்சொற்கள் ஒரு
    வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

    பாடல் 116

    இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
    அடங்காதார் என்றும் அடங்கார் – தடங்கண்ணாய்
    உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
    கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

    அகன்ற கண்களையுடையவளே!
    பேய்ச்சுரைக்காயை உப்புடன்நெய்
    பால் தயிர் பெருங்காயம் சேர்த்துச்
    சமைத்தாலும் கசப்பு அடங்காததுபோல்
    விரிவாக மெய்யறிவு நூல்களை
    வாசித்துணர்ந்தாலும் எப்பொழுதும்
    அடக்கமில்லாமல் இருப்பவர்
    அடங்காமலே இருப்பர்.

    பாடல் 117

    தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க
    என்னை அவரோடு பட்டது – புன்னை
    விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
    உறற்பால யார்க்கும் உறும்.

    புன்னையின் அழகிய
    பூமணம் வீசும் சோலைகள்சூழ்
    கடற்கரையுடை வேந்தனே!
    தம்மை நிந்திப்பவரை அவர்
    தொடங்குமுன் தயைபாராமல்
    தாம் நிந்திக்கக்கடவர்
    அவரோடு தமக்குண்டாகிய
    தொடர்பால் வருவதுதான் என்ன?
    வரவேண்டிய நன்மைதீமை எவர்க்கும்
    வினைப்பயனால் வந்தே தீரும்.

    பாடல் 118

    ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
    பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல்
    ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
    உருவு பலகொளல் ஈங்கு.

    பசுக்கள் உருவத்தால் வேறுபடினும்
    பாலின் நிறத்தில் வேறுபாடில்லை
    தருமமும் பால்போல் ஒரு
    தன்மையுடைத்தே எனினும்
    ஆற்றும் வழிமுறைகள்
    அப்பசுக்களின் உருவங்கள்
    போல் பலவாம்.

    பாடல் 119

    யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
    யாஅர் உபாயத்தின் வாழாதார்? – யாஅர்
    இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்
    கடைபோக செல்வம்உய்த்தார்.

    ஆராய்ந்து நோக்கின் ஒரு பழிச்சொல்
    அற்று வாழ்ந்தவர் யார்?
    ஒரு தொழிலின்றிவாழ்ந்தவர் யார்?
    எவர் வாழ்வின் இடையே துன்பம்
    எய்தாதவர்? வாழ்நாள் முழுவதும்
    செல்வத்தை அனுபவித்தோர் யார்?

    பாடல் 120

    தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று
    யாங்கணும் தேரின் பிறிதில்லை; – ஆங்குத்தாம்
    போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
    கூற்றம் கொண்டுஓடும் பொழுது..

    தம்மோடு உயிருக்குத் துணையாய் வருவது
    தாம் செய்த நல்வினையன்றி வேறில்லை
    அதுவரை ஆடை அணிகளால் பாதுகாத்த
    அழகுடம்பும் உயிருக்குத் துணையாய் வராது
    எமன் உயிரைப் பறித்துக்கொண்டு ஓடும்காலம்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 18.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 18.2

    மீனாட்சி பாலகணேஷ்

     (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    இத்தொடரில் பெண்பால் சிற்றில் பருவத்தில் அடுத்து நாம் காணப்போகும் நூல் தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஆகும். இதில் இப்பருவம் மிகவும் சிறப்பாக, அழகிய நயங்களுடன் பத்துப் பாடல்களால் பாடப்பட்டுள்ளது.

    உலகுக்கே அன்னையான சிவகாமி எனும் உமையவள் அண்டகோடிகளை, பிரம்மாண்டங்களைத் தோற்றுவிப்பதனை, சிறுவீடுகட்டி அவள் விளையாடுவதாக நயம்பட உரைக்கிறார். காஞ்சிப்பதியில் சிவபிரான் அம்மைக்கு இருநாழி நெல் அளித்ததனையும் அம்மை அதனைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி உலகங்களைப் புரந்ததாகவும் காஞ்சிப்புராணத்தில் காண்பதற்கியைய, இங்கும் அக்கருத்தை எடுத்தோம்புகிறார்.

                ‘…………………………………………..
             அட்டதிக்கும் கால்கள்நட்டு நெடுமேரு
                       நடுவு அசையாததூண் நிறுத்தி
             …………………………………………….
                       விளை பச்சைநெல் இருநாழியில்
             பல்லுயிரும் உண்டு தேக்கிட்டிடும்
                       ……………………………………..
             திடமருவு பெருவீடு கட்டி விளையாடும்
                       உமை சிறுவீடு கட்டியருளே!’1

    ‘ஆ ப்ரஹ்ம கீட ஜனனீ’ என லலிதா சகஸ்ரநாமம் அன்னையை ஏத்துகின்றது. பிரம்மன் முதல் புழு வரை அவளால் படைக்கப்படுகின்றன என்பது இதன் பொருள்; படைப்புக்கடவுளான பிரம்மனையுமே அவள்தான் படைக்கிறாளாம். படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் நடைபெறும் இந்தப் பிரபஞ்சப்பெருவிளையாட்டினை சிவபிரானின் பாதியாகிய அன்னை சிவகாமசுந்தரியே நிகழ்த்துவதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் கிருட்டிணையர். பராசக்தியாகிய சிவகாமசுந்தரி சிற்றில் இழைக்கும் விளையாட்டு பெரிய தத்துவத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது.

    பின்னொரு பாடலில் அன்னை கட்டிடும் சிறுவீட்டின் அமைப்பினை விளக்கியுள்ளமை, உடற்கூற்றியலில் விளக்கப்பட்டுள்ள மனித உடலின் அமைப்பை ஒத்துள்ளது வியக்கத்தக்கதாகும். தசை எனப்படும் மண்ணினை வைத்தும் தூண்களாகிய கால்களை வைத்தும், உடல் எனப்படும் சுவரை அமைத்தும், வீட்டினைத் தாங்கக் கைம்மரங்கள் என்னும் இரு கரங்களை வைத்தும் அமைக்கிறாள்; உடலில் உள்ள ஒன்பது துளைகளை ஒன்பது வாயில்களாக அமைக்கிறாள்; கூரை மரங்களை நரம்புகளால் முறையாகக் கட்டுகிறாள்; அதன்மீது மண்பூசுவது போன்று தோலைப் போர்த்து, மயிர்க்கற்றைகளால் கூரையையும் வைக்கிறாள். வாழ்வின் இன்பதுன்பங்களைப் பகுத்து அனுபவிக்க கண்களை விளக்குகளாக ஏற்றுகிறாள். இவ்வாறு அனைத்துயிர்களும் வாழும்பொருட்டு எண்பத்துநான்கு இலட்சம் வகைப்பட்ட வலிமைமிக்க பலவீடுகளை, அதாவது பற்பல உயிர்களுக்காக அவை வாழும் உடலெனும் வீடுகளைத் தோற்றுவித்தும், அழித்தும், பின்னும் தோற்றுவித்தும் இடையறாது அருள்விளையாட்டுப் புரிகிறாள். உயிரினங்களின் வகை எண்பத்து நான்கு இலட்சம் எனப் புராணங்கள் விளக்குகின்றன. அனைத்தையும் அவற்றிற்குரிய வீடுகளாகிய உயிர்க்கூடுகளில் வகைவகையாகப் படைக்கிறாள் என அதியற்புதமாக இப்பாடல் விளக்குகின்றது.

                ‘மண்வைத்துக் கால்வைத்துத் தூணினால்
                       சுவர்வைத்து வலியகைம் மரமும்வைத்து
             வாசல் ஒன்பதுவிட்டு மோட்டுவளை
                       பக்கத்துவளை வரிச்சலும் நரம்பால்
             பண்புற்றிடக் கட்டிமேலே லாம்தோலுடன்
                       பலமயிர்க் கற்றை இட்டு
             …………………………………………….
             எண்பத்து நான்குநூறா யிரம்பேதமாய்
                       இனிய சிறுவீடு தோறும்
             ………………………………………….
    திண்பெற்ற பலவீடு கட்டிவிளை யாடும்
             உமை சிறுவீடு கட்டியருளே2!’

    இழைக்கப்படும் சிறுவீடானது, மனித உடலின் கைகள், கால், தோல், மயிர் போன்ற பல பாகங்களுக்கும் தொடர்புபடுத்தி விளக்கப்பட்டிருப்பது மிக்க அருமை. உடற்கூற்றியல் எனும் அறிவியல் பகுப்பு இதில் முழுமையாக ஒரேபாடலில் அருமையாக விளக்கப் பெற்றுள்ளது தமிழுக்குப் பெருமை!

    சிற்றிலிழைத்து விளையாடும் இச்சிறு பெண்பிள்ளை, அச்சிறுவீட்டினுள்ளே பலவிதமான பாவைகளைக் குடிவைத்து விளையாடுகின்றாள். அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான புலவர் அன்னை சிறுபெண்ணாய் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தினையுமே பராசக்தியின் ஆடல்களாகக் கண்டு வாழ்த்துகிறார். மிக எளிமையாக இதற்குப் பொருளுணர வேண்டுமாயின் பின்வருமாறு பொருள்கொள்ளலாம்:

    ஆற்றல்வாய்ந்த தெய்வங்களின் பாவைகள், பூவுலகில் வாழும் ஆடு, மாடு, யானை முதலான விலங்குகளின் பாவைகள், கடலில் வாழும் ஜீவராசிகளின் பாவைகள், பலவிதமான பறவைகளின் பாவைகள், விரைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் புழு, பூச்சிகள், மரவட்டை, பாம்பு ஆகியனவற்றின் பாவைகள், செடி, கொடி, மரங்கள் ஆகியனவற்றின் பாவைகள் என ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களின் பாவைகளை எல்லாம் எண்பத்துநான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களால் இவளே அப்பாவைகளைச் செய்கிறாளாம். அன்னை பராசக்தி இவ்வுயிர்களை பஞ்சபூதங்களால் விளையாட்டாகவே உண்டுபண்ணுகிறாள். அது மட்டுமா? அவற்றைக் கனவு, நினைவு / விழிப்பு, உறக்கம் ஆகிய நிலைகளில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி வைத்து தினமும் விளையாடுகிறாள்.

    எல்லா உயிர்களுக்கும் பராசக்தி அன்னை திரும்பத்திரும்பப் படைத்து அளிக்கும் பலவிதமான வடிவங்கள் இப்பாடலில் நயம்படக் கூறப்படுகின்றன.

                வல்ல தெய்வப் பாவை மானிடப்
                       பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
             மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
                       மருவு பறவைப் பாவையும்
             ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும்
                       பாவையும் உறும் தாவரப் பாவையும்
             ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப்
                       பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்
             எல்லவே சாக்கிரம் கனவொடு
                       சுழுத்தியுடன் எழும் பூதாசார வடிவாய்
             …………………………………………………….
             பரம சிவகாம சுந்தரி அம்மை இனிய
                       பொற்பாவை விளையாடி அருளே3!

    (பாவை- பொம்மை; பொறி- அறிவு; சாக்கிரம்- விழிப்பு; சுழுத்தி- உறக்கம்)

    சிவகாமி அன்னையைச் சிறுவீடு கட்டியருள வேண்டிடும் புலவர் பெருமகனார், தில்லையில் உள்ள பொன்மன்றின் அமைப்பினை விளக்கி அவ்வண்ணமே ஒரு சிறுவீட்டினைக் கட்டியருள சிவகாமியம்மையை வேண்டுகிறார்.

    சிதம்பரம் கோயிலின் அமைப்பு, மனித உடலும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்4 என்பது திருமூலர் வாக்கு. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து கோசங்களைக் (Layers) கொண்டமைந்துள்ளது. அதே போன்று சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள்  உள்ளன. மனித இதயம் இடப்புறம் அமைந்திருப்பதுபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லாது இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை  மூச்சுவிடுகிறான். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21,600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72,000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் உள்ள ஓடுகளை 72,000 ஆணிகள் இணைக்கின்றன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்படுகிறது.

    இப்பிள்ளைத்தமிழினை இயற்றிய நல்லதுக்குடி கிருட்டிணையர் பொன்மன்றின் அமைப்பினை இன்னுமே விரிவாக விளக்கி அதனைச் சிவகாமியம்மை எவ்வாறு கட்டுகிறாள் என விளக்குகிறார். இது அன்னை மனித உயிர்களைப் படைக்கும் பாங்கினை அழகுற விளக்குகிறது.

    பொன்மன்றில் விளங்கும் பிரமபீடத்திற்கு ஆறு சாத்திரங்களையும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைப் பெரிய தூண்களாகவும் அமைக்கிறாள். இருபத்தெட்டு சிவாகமங்கள், ஐம்பெரும் பூதங்கள், பதினெண் புராணங்கள் ஆகியவை சிறிய தூண்களாகவும் உத்திரங்களாகவும் வைக்கப்படுகின்றன. ஆயகலைகள் அறுபத்துநான்கும் அழகிய வரிச்சல்களுடன் பொருந்திய கைம்மரங்களாக பொருத்தப்பட்டு, அவைமீது ஒளிவீசும் தங்க ஓடுகள் 21,600 வைத்து அவற்றை 72,000 ஆணிகளால் பொருத்தி இணைத்து, மேலும் இருநூற்றுஇருபத்துநான்கு புவனங்களையும் தாமரைமலரின் வடிவில் ஆக்கிய தட்டுக்களாகவும் சைவசித்தாந்தத் தத்துவங்களான தொண்ணூற்றாறு தத்துவங்களையும் பலகணிகளாக ஆக்கி, ஒன்பது கலசங்களை மனித உடலின் ஒன்பது வாயில்களாக அமைத்து சிற்றம்பலம் எனும் உறுதியான வீட்டினைக் கட்டுகிறாள் அன்னை. பின்னர் அங்கு தானே இறைவனுடன் குடிகொள்கிறாள்.

    இவ்வாறு அரியதான எம்மை, எமது மனித உடலைப் படைத்தருளுமுகமாக சிறுவீடு கட்டியருளுக என வேண்டுவதாக அமைந்த பாடலிது.

                ஆறு சாத்திரம் நாலுவேதம் அதிதூண்
                       ஆகமங்கள்………………….
             ……………………………………………………
                       மரம்நாட்டி எழுபத்து இரண்டாயிரம்
             ………………………………………
             கூறு தொண்ணூற்றாறு தத்துவம் பலகணிகள்
                       கும்பம் ஒன்பது வாசலும்
             …………………………………………………..
                       விமலையே! சிறுவீடு கட்டியருளே5!

    பிள்ளைத்தமிழ் பிரபந்தத்தின் அமைப்பில் ஒவ்வொரு பருவத்திற்குமான பத்துப்பாடல்களில், தொன்மச் செய்திகள், அழகியல், சந்தநயம், அணிநயங்கள் மட்டுமின்றி, சைவசித்தாந்த, தத்துவ, சமய விளக்கங்களையும் கூட்டிப் பாடல்களை அமைப்பதே நல்லிசைப்புலவோரின் வழக்காகும் எனப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் கூறுகிறார். இன்னும் இப்பிள்ளைத்தமிழ் நூலின் பல பாடல்களும் பல சமயக் கருத்துக்களையும் விளக்கங்களையும் உள்ளடக்கிக் கொண்டு பொலிகின்றன.

    மற்றும் ஒரு பெண்பால் பிள்ளைத்தமிழான ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ், சிறுமியரின் சிற்றில் பருவத்தை அழகுறப் பாடிப் பதிவு செய்து வைத்துள்ளது. இதன் ஆசிரியர் (பெயர் தெரியக் கிடைக்கவில்லை) ஆண்டாளைத் திருமகளாகவே கொண்டு அக்கருத்துக்களிலேயே பாடல்களைப் பாடியுள்ளார்.

    சிற்றில் பருவத்துப் பத்துப்பாடல்களில் ஆறு மட்டுமே கிடைத்துள்ளன. ஆயினும் கருத்து நயமும் உவமை உருவகங்களும் வைணவத்தின் பொருண்மைகளும் செறிந்த பாடல்கள் இவை. சமயத் தத்துவங்களை அழகுறப் பொதிந்துகொண்டு விளங்குகின்றன.

    மேருமலையை ஆதாரமாகக் கொண்டும், மற்ற மலைகளை இடைத்தூண்களாக வைத்தும் செய்விக்கப்பட்ட மணிமண்டபம் உனது கொலுமண்டபம். மேலும், காவல் நிறைந்த  புறமனைகள் ஏழும் கடலால் சூழப்பட்ட ஏழுதீவுகள் ஆகியனவும் பள்ளியறை முதலான அமைப்புகளாவன. இவை பூமியாகிய நிலாமுற்றத்திற்கு அரணாகின்றன. சுடரும் கதிரவன் விளக்காகிறான். அண்டச்சுவரும், கடலையே அகழியாகவும் கொண்டு, பொன்னுலகம் ஐந்தினையும் உப்பரிகைகளாகக் கொண்டு விளங்கும் அருமையான வீட்டைக் காக்கும் பெண்ணரசியே! உலகிற்கு அன்னையான புதுவை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) வாழ் திருமகளே! தென்னரங்கேசன் முதலான ஐந்து பேரும் குடிபுகுவதற்காக நினது சிற்றிலை இழைப்பாயாக! என வேண்டும் பாடல்.

    இவ்வைந்து பேரும் திருமாலின் ஐந்து வடிவங்களே! தென்னரங்கேசன்- ஸ்ரீரங்கத்து அரங்கன், திருமலையில் குடிகொண்ட திருவேங்கடவன், திருமாலிருஞ்சோலையில் அமர்ந்த பிரான், திருத்தண்கா அப்பன், வடபத்ரசாயி எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர்ப் பெருமாள் ஆகியோராவர்.

                ஆதார மேருபூ தரநள் ளிடைத்தூண
                       மருவரைக ளெண்டிசைக்கா
             …………………………………………..
             பூதாதி வழிவந்த வண்டபித் தியுமாப்
                      பொரும்புறக் கடலகழியாப்
             பொன்னுலக முதலைந்தும் உப்பரிக் கையதாப்
                       …………………………………….
             சீதார விந்தமலர் வளவயற் புதுவையுட்
                       சிற்றிலை யிழைத்தருள்கவே
             தென்னரங் கேசன்முத லைவருங் குடிபுகச்
                       சிற்றிலை யிழைத்தருள்கவே6

    இப்பருவத்துப் பாடல்கள் அனைத்தும் பெண்மகவு இழைக்கும் சிறுவீடானது எவ்வாறு மனித உடலை ஒத்துள்ளது எனவும், பராசக்தி எனும் அன்னை எங்ஙனம் நம்மைப் படைத்துப் புரந்தளிக்கிறாள் என்றும் பலவித நயங்களில் கூறியுள்ளமை மிக உயர்வாக உள்ளன.

                                                                                                                          (தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1, 2, 3, 5. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்- நல்லதுக்குடி கிருட்டிணையர்.
    4. திருமந்திரம்- திருமூலர்
    6. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

    Share
  • குறளின் கதிர்களாய்…(299)

    குறளின் கதிர்களாய்…(299)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்… (299)

    ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ்.

           – திருக்குறள் -156 (பொறையுடைமை)

    புதுக் கவிதையில்…

    தமக்குத்
    தீங்கு செய்தோரைத்
    தண்டித்தவனுக்குக் கிடைப்பது
    அன்று
    ஒருநாளைய இன்பமே..

    ஒறுக்காமல் அதனைப்
    பொறுத்து விட்டவனுக்குப்
    பூமி அழியும் நாள்வரைப்
    புகழ் நிலைத்திடுமே…!

    குறும்பாவில்…

    தீங்கு செய்தவரைத் தண்டிப்பவனுக்குக்
    கிடைப்பது ஒருநாள் இன்பமே, அதைப்பொறுத்து
    விட்டவனுக்கு உலகுள்ளவரைப் புகழே…!

    மரபுக் கவிதையில்…

    துன்பம் தமக்குத் தந்தவர்கள்
         துடிக்கும் படியே ஒறுத்திட்டால்,
    அன்றைய ஒருநாள் மட்டும்தான்
         அவனுக் குரிய இன்பமதே,
    நின்றதைப் பொறுத்தே ஒறுத்திடாமல்
         நிறைந்த மனத்துடன் மன்னித்தால்,
    இன்று மட்டும் இன்பமல்ல
         இப்புவி உளவரைப் புகழாமே…!

    லிமரைக்கூ..

    தீங்கு செய்தோரை இகழ்ந்து
    தண்டிப்பவனுக்கு ஒருநாளே இன்பம், பொறுத்தவனைப்
    புவியுள்ளவரைப் பேசுவர் புகழ்ந்து…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும் பொறும வேணும்,
    ஒலக வாழ்க்கயில பேர்சொல்ல
    ஒசந்த கொணமாம் பொறும வேணும்..

    தனக்கொருவன் தீங்குசெஞ்சா
    அவனப் புடிச்சித்
    தண்டன குடுப்பவனுக்கு
    அந்த ஒருநாள் மட்டுமே இன்பம்,
    ஆனா
    அவன மன்னிச்சித் தண்டனகுடுக்காம
    உட்டவனுக்கு
    ஒலகம் அழியும்வரப்
    பேரும்புகழும் நெலைக்குமே..

    அதால
    வேணும் வேணும் பொறும வேணும்,
    ஒலக வாழ்க்கயில பேர்சொல்ல
    ஒசந்த கொணமாம் பொறும வேணும்…!

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 17

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 17

    அவ்வைமகள்

    17. நேர்படப் பேசி எளிவந்து வெகுண்டு

    ஸ்டீவ் ஜாப்ஸின் சரிதத்தை எழுதிய ஐசக்சன், ஜாப்ஸை, நேர்காணல் கண்டே ஒவ்வொன்றையும் உண்மையாக எழுதினார் என்பது அனைவரும் அறிந்த சேதி. இவ்வாறன நேர்காணல்களில், ஐசக்சன் பற்பல கேள்விகளை ஜாப்ஸிடம் கேட்பதுண்டு.

    ஒருசமயம், ஐசக்சன் கேட்கிறார்:

    “நீங்கள் உங்கள் தொழில்நுட்பப் பணியில், உங்களிடம் பணிபுரிபவர்களிடம், கராறாகவும் தயவு தாட்சணியம் பார்க்காமலும், அழுத்தமாகப் பேசுவது ஏன்?”

    இனிமையாகப் பேசினால் இன்னமும் கூட வெற்றி கிடைத்திருக்குமோ என்ற ஆதங்கத்தில் எழுப்பப்பட்ட கேள்வியாகவே, ஐசக்சனின் இந்தக் கேள்வி அமைந்திருக்கிறது.

    இக்கேள்விக்கு ஜாப்ஸ் அளித்த பதிலைக் காண்போம்:

    “இது மக்களுக்கான படைப்புப் பணி; சாதாரணப் பொது மக்களின் தேவையை, விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனது அலுவலகத்தில் இருக்கும் அனைவருடைய ஒட்டுமொத்தக் கடமை. அதிலே, எவருக்கும் எவ்விதமான அனுசரிப்பும், விட்டுக்கொடுத்தலும் கூடாது. சமுதாயம் தழுவியத்தான விசாலப் பார்வையோடு பொருட்களை உருவாக்குகிற இடத்தில், தனிப்பட்டவர்கள்,  தங்கள் குறுகிய பார்வையைத் தியாகம் செய்தே ஆக வேண்டும்.

    ஓட்டுமொத்தமாய் அனைவருக்கும் ஒரே இலக்கு, ஒன்றேயான விசாலப் பார்வை எனும்போது இங்கே, ஒட்டுமொத்தமான சிதறலில்லாத கவனம் ஒவ்வொவொரு நபருக்கும் தேவை. அடுத்து, காலவிரயம் இல்லமால் பணிகள் நடக்கவேண்டும். போட்டி நிறைந்த இந்தத் தொழில்நுட்ப உலகத்தில், ஒவ்வொவொரு நொடியும், ஒவ்வொவொரு முயற்சியும் முதலீடு.

    எனவே, செய்யும் வேலையின் எதிர்பார்ப்புக்களை, அதன் நுட்பங்களை, என்னுடன் பணிபுரிபவர்களுக்கு, நான் வெகு நேர்மையாக, உண்மையாக, ஒளிவுமறைவின்றி, தெள்ளத்தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும்.

    எனவே, நான் நேர்படப் பேசுகின்றேன். தப்பு என்றால் அதை தப்பு என்று வெகுத் தெளிவாக, நேரிடையாக, உடனடியாக அத்தருணத்திலேயே சொல்லியாகவேண்டும் என்பது என் கடமை. அதுவே என் இயல்பு.

    இதைவிடச் சிறப்பாகப்  பேசவேண்டும் என்றால் சொகுசாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும், Gentlemen Club ல் வேண்டுமானால் அதனை எதிர்ப்பார்க்கலாம். அங்கே எல்லோரும் டை கட்டிக்கொண்டு  இருப்பார்கள் –  வெல்வெட் பூச்சு போட்டு பிறர் மனம் நோகாதபடி, நாசூக்கு மொழியில் (Brahmin language) பேச வேண்டிய அவசியம் அவர்களுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு  பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது எனக்குத் தெரியாத ஒன்றும் கூட.

    நான் கலிபோர்னியாவின்  நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்தவன். நேரிடையாக, ஒளிவுமறைவு இன்றி, பிறர் முகத்தில் உறைக்கும்படி பேசுவது மட்டுமே எனக்குத் தெரியும். அதை மட்டுமே  நான் செய்வேன்.

    நான் அழுத்தமாகப் பேசுகிறவன் தான். ஆனால், நான் என்ன பேசுகிறேன் எப்படிப் பேசுகிறேன், எதற்காக அவ்வாறு பேசுகிறேன் என்று தெரிந்து பேசுகிறவன்.

    இது வாழ்வாதாரம். இது தொழிற்கூடம் – இது வியாபாரப் பொருள் செய்யுமிடம் – இங்கு வேலை செய்ப்பவர்கள் எல்லோரும் வேலை செய்யக் கடைமை பட்டவர்கள் – அதுவும் பிறருக்கு, நாங்கள் விற்றுக் காசாக்கவேண்டிய  கணினிக்கருவிகளைத் தயார் செய்கிறவர்கள் நாங்கள் – இங்கே எங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் முகமன் செய்ய – முகத்துதி செய்ய என்ன தேவை இருக்கிறது? என்று சாட்டையால் அடிப்பது போல விருட்டெனப் பேசும் ஜாப்ஸின் பதிலில் எத்துணைப் பொருள் பொதிந்திருக்கிறது என்பதை நினைத்து நம்மால் நம்மால் உண்மையிலேயே பெருமை கொள்ளமுடிகிறது.

    இங்கே தான், அரசியல்வாதிகளின் மொழிக்கும் ஜாப்ஸைப் போன்ற அறிவாளிகளின் – அறிவியலாளர்களின் மொழிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கிறோம்.

    பொய்யை மெய்யாகத்தோன்றுமாறும், படுகொலைகளை நியாயப்படுத்துவதாகவும், வாக்காளர்களின் கண்களை மறைத்து, அவர்களின்  மதியை மயக்கி மாயா ஜாலம்  செய்து அவர்களை வசியப்படுத்தும் கவர்ச்சிப் பொறிகளான சொற்களைப் பிரயோகிக்கும் அரசியல்வாதிகள் இந்த சமுதாயத்திற்கு எத்துணை பாதகம் விளைக்கிறார்கள் என்பது கண்கூடு.

    அரசியல் பரிபாஷைகள் மற்றும் அரசியல் மொழியின் பொருள் இலக்கணத்தை பலரும் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். இதில், குறிப்பிடத்தக்கவர் ஜுனியர் கீ என்பவர் [1]; அரசியல் மொழி பற்றி கீ என்ன சொல்லுகிறார் என்றால்: ஆண்டான் – அடிமை; அதிகாரம் – அடக்குமுறை ஆகியவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் போதிப்பதானதுதான் அரசியல் மொழி. அரசியல் மொழி என்பது வெகு கவனத்தோடு உருவாக்கப்பட்டு எடுத்தாளப்படுவது. அரசியல் மொழியைப் பிரயோகிப்போர் – தன்னின் பிடிவாதத் தன்மையிலும் சுயநல வெறியிலும், எந்த மாறுதலையும் ஏற்படுத்திக்கொள்வதைத் தடுத்தும், மாறுதல்கள் பிறரில், குறிப்பாக ஏழை எளியோர்களில்   கட்டாயம் நிகழ்வதை உறுதி செய்வதுமான ஒரே குறிக்கோளோடு வசியமும் நஞ்சும் கலந்த மாயையான மொழியில் பேசுகிறார்கள்.

    சமுதாயத்திலே, பிரிவினை மனப்பான்மையையும், பேதங்கள் நிலைப்பாடுபெறுமாறும் பேசப்படும் கபடமான அரசியல் மொழியை, அலுவலகத்திலே பயன்படுத்தினால் அது சுரண்டலுக்கும், சுயநலத்துக்கும், கொத்தடிமைகளாய் பணியாட்களைப் பயன்படுத்தப்  பயன்படுமே தவிர, அங்கே, பணியாளிர்களின் வளர்ச்சியையோ, அவர்களின் ஊக்கம் மிக்க ஆக்கபூர்வமான கிரியாசக்தியையோ தூண்டவியலாது என்பது வெள்ளிடைமலை. இன்று பல அரசுநிறுவனங்களும் அரசுசார் நிறுவனங்களும் இத்தகைய நிர்வாகக் கோளாறுகளால் சிதிலப்பட்டு, சீரழிவதை நாம் கண்டவாறுதான் இருக்கிறோம்.

    இதுபோன்றே அரசியல்வாதிகள் நடத்துகின்ற. நடிகநடிகையர் நடத்துகிற பல்வேறு நிறுவனங்களும், கல்விக்கூடங்களும் கூட, சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணை செய்யாத, கவர்ச்சிப் போதையில் மக்களை திசைதிருப்பி சீரழிப்பதையும் நாம் கண்டவாறு இருக்கிறோம்.

    எனவே, நிர்வாகத்த்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறவர்கள் அரசியல் சார்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்பதோடு அரசியல் பரிபாஷைகளை உபயோகிக்காத பேராண்மை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்  என்பது தெளிவு.

    சொல்லப்போனால், ஜாப்ஸ் அரசியல்வாதிகளைப் பற்றி  அறியாதவர்  அல்லர். அரசியல் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அவர் வெகுவாகவே அறிந்தவர். அதுவும் ஒரு டெக் கம்பெனியை நடத்துவது என்றால் அரசியல் உலகத்தின் பிடியில் சிக்காமல் தப்புவது கடினம். அதுவும் அமெரிக்க அரசியலின் பூடகமும் நெருக்கடிகளும் வித்தியாசனவை. இங்கு, தொழில் நடத்த வேண்டுமென்றால் அரசியல்வாதிகளுக்கு Lobbying செய்தாக வேண்டும். அதாவது, அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கும், அவர்களது ஜீவிதத்திற்கும் என, வாஷிங்டன் டி.சி யில், அரசியல்வாதிகளுக்குப் பணம் மொய் எழுதினாலொழிய, அவர்கள்  தொழிற்கூடங்களின்  பிரச்சினைகளை செவிமடுக்கவும் மாட்டார்கள்.

    இவ்வாறான நெருக்கடி இருக்கும் ஒரு நிலையில், அரசியலை மிக தைரியத்தோடும் உறுதியோடும் எதிர்த்த ஒரே தொழிலதிபர் ஜாப்ஸ்! அரசியல்வாதிகள் வந்துதான் தன் தொழில் நடக்கவேண்டும் என்கிற தேவையை அடியோடு எடுத்தெறிந்த ஜாப்ஸின் அசாத்திய தைரியத்தை இன்றும் என்றும் உலகு புகழ்ந்தபடி இருக்கும்.

    ஜாப்ஸின் வாழ்நாள் வரையில் ஆப்பிள் நிறுவனம் வாஷிங்க்டன் டி.சி. யின் பக்கம் தலைசாய்க்கவில்லை  என்றால் அந்த வீரத்தின் உரத்தை நீங்களே புரிந்து கொள்ளமுடியும்.

    தலைவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் பிறருக்கு அஞ்சி பயந்து நடந்துகொள்ளக்கூடாது. தவறு ஒன்று நடக்கும்போது, அதைத் தவறு என்று சுட்டிக்காட்ட மறுப்பவன் எப்படித்  தலைவனாக முடியும் என்பது ஜாப்ஸின் மிகப்பெரிய வினா.

    அரசியல் தலைமை, அரசின் தலைமை, அலுவலகத் தலைமை, குடும்பத்த தலைமை  என, சிறிதோ பெரிதோ என்ற வித்தியாசமின்றி, தலைமைக்கென சிறப்பு குணாதிசயங்கள் இருப்பதை வெகு தெளிவாகக் கண்டவர் ஜாப்ஸ்.

    தலைமைக்குரிய சிறப்பு குணாதிசயங்களில் அவர் முதலாகக் கருதியது அச்சமின்மையையே!

    அச்சமின்மையை, இறைவனின் குணாதிசயமாக வேதம் கூறுகிறது. அரசனை இறைவனோடு ஒப்பிட்டுப் பேசுவது உலகின் பல நாடுகளிலும் இருப்பதான ஒரு பழக்கம்.

    இது வழி, ஜாப்ஸின், தலைவர்கள் அச்சமற்றவர்களாக  இருக்கவேண்டும் என்கிற கருத்து வேதவாக்கு நடைமுறைக்கானது, வெற்று மொழியாய் நிற்பதற்கானது அன்று என்பதை  வலியுறுத்துகிறது. இவ்வழியில் பார்த்தால், வெளிப்படையாக, உள்ளது உள்ளவாறு – அது பிறரது மனதைப் புண்படுத்தும் எனினும் கூட, தலைவன் சொல்லியாகவேண்டும் என்கிற கடப்பாட்டில் உள்ளான் என்பதை ஜாப்ஸ் வாழ்நாள் முழுதும் நடந்துகாட்டியே சென்றார்.

    சுவாமி சிவானந்தா தனது “Conqest of Fear” எனும் நூலில் [2]  கூறுகிறார்: “அச்சமின்மை என்பது உன் பிறப்புரிமை” என்று.

    இதையேதான், நாவுக்கரசரும், தேவாரப் பதிகத்தில்,

    நாமார்க்கும் குடியல்லோம்நமனை அஞ்சோம்;
    நரகத்தில் இடர்ப்படோம்நடலை இல்லோம்;
    ஏமாப்போம்பிணி அறியோம்பணிவோம் அல்லோம்;
    இன்பமே எந்நாளும்துன்பமில்லை.

    அரசியலிலிருந்து, அரசியல் மொழியிலிருந்து புறத்தே நின்று செய்வதே தொழில் தர்மம் என்பது தான் ஜாப்ஸின் தாரக மந்திரமாய் இருந்தது எனலாம்.

    திருநாவுக்கரசர் சொன்னதுபோல, வீழ்ச்சியைத் தழுவாது, நரக வேதனையில் இடர் படாது, தேங்கி நில்லாது, ஏமாப்பு எய்தாது, மனப் பிணியும் சோர்வும் கொள்ளாது, எவருக்கும் அடிபணிதல் செய்யாது, இவ்வுலகில் தொழிற்கூடங்கள் நடத்தவேண்டுமென்றால் நேர்படப் பேசித் தெளிவுறுத்தும் அச்சமின்மை மட்டுமே தேவை என்பது ஜாப்ஸின் அசைக்கமுடியாத உறுதி.

    இவ்வகையில், அமெரிக்க அதிபர். ஓபாமா பற்றி ஜாப்ஸ் குறிப்பிட்ட சில கருத்துக்களும் கூட வெகு பிரபலம். அவற்றை  நாம் இங்கே சற்று சிந்திப்பதும் பொருத்தமுடைத்ததாய் இருக்கும்.

    ஜாப்ஸ் சொல்கிறார்: “நான் ஒபாமாவின் தலைமை கண்டு மிகுந்த ஏமாற்றம் அடைகிறேன். அவர்  தலைவனாக இருந்து தலைமைப்பொறுப்பில் மற்றவர்களை வழிநடாத்த சிரமப்படுகிறார்.”

    “ஒபாமா எல்லோருக்கும் முகஸ்துதி செய்கிறார், எவரையும் கடிந்துவிடக்கூடாது என்றே நடந்துகொள்கிறார்.”

    ஒரு நாட்டின் தலைவருக்கு எல்லோருக்காகவும் விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை என்ன? என்று ஓங்கிக் கேட்கும் ஜாப்ஸின் துணிச்சலான வாசகம் இன்றும் என்றும் வரலாற்று ஏடுகளிலே நிலைத்த பதிவாகவே காலம் வெல்லும்.

    ஒரு மாபெரும் நாட்டின் புகழ்மிக்க அதிபரை பற்றி இப்படிப்பேசுவது சரியா என்றால், “எனக்கு அத்தகைய பயம் ஏதும் இல்லை, நான் என்னுடைய தலைமைப்பணியில் குளறுபடி ஏதும் இல்லாமல் இருக்கிறேன்!”

    “ஆப்பிள் நிறுவனத்திறகு 30,000 உற்பத்திப் பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள் ஆனால் இங்கே அமெரிக்கர்கள் எவரும் பொறியாளர்களாகப் பணிசெய்யும் கல்வித் தகுதியோ அல்லது பயிற்சித்தகுதியோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.” எனவே, Dream Act எனப்படும் ஏற்பாட்டின் மூலம், வெளிநாட்டு பொறியியல் மாணவர்களுக்கு, அமெரிக்காவில் வேலைசெய்ய விசா வழங்கவேண்டும் என்றது ஜாப்ஸின் ஆலோசனை.

    ஆனால், Dream Act க்கு, அமெரிக்காவின் ரிபப்ளிக்கன் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டபோது, ஒபாமா இந்த Dream Act ஐ அவரால் ஏன் அமுலுக்குக் கொண்டு வரமுடியவில்லை என விளக்கம் அளித்தார்.

    ஒபாமாவின் விளக்கத்திற்கு பதிலிறுப்பவராக, ஜாப்ஸ் என்ன சொன்னார் என்றால்: “ஒரு நாட்டின் புத்திசாலியான தலைவராக இருந்து கொண்டு தனது  கையாலாகாத்தனத்துக்கு ஒபாமா விளக்கம் அளிப்பது என்னை நிரம்ப கோபப்படுத்துகிறது!”

    “இந்த அரசு தொழிற்கூடங்களுக்கு நட்பாயில்லை. ஒரு தொழிற்கூடத்தைத் தொடங்கவோ நடத்தவரோ இங்கே, ஆயிரம் முட்டுக்கட்டைகள் – தடைகள் – அனாவசியச் செலவுகள்! ஆப்பிள் நிறுவனத்திற்கு, சீனாவில் 70,000 உற்பத்திப்  பொறியாளர்கள் பணிசெய்து கொண்டிருக்கிறார்கள். நம்மால் வெளிநாட்டிலே வேலை செய்து கொள்ளமுடியும். ஆனால் இங்கு எதுவும் நடக்காது. ஒபாமா ஒருமுறைக்கு மேல் மீண்டும் ஆட்சிக்கு வரவியலாத நிலைக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறார்.”

    ஜாப்ஸ் தன்மீது வீசிய விமரிசனங்களை ஒபாமா எவ்வாறு பொறுத்துக் கொண்டார் என்று  தெரியவில்லை. ஆனால், “அமெரிக்கக் கல்வி பழுதாகிப்போன பயனற்ற கல்வி –  இதனை அமெரிக்க  அதிபர் சீர்படுத்தியாகவேண்டும். இங்கு ஒரு ஆண்டுக்கு பதினோரு மாதங்கள் என்று – ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிவரையிலும், பள்ளிக்கூடங்கள் நடக்கவேண்டும்” என்று ஜாப்ஸ் சொன்ன மாத்திரத்தில் அதனைக் கூர்ந்து கவனித்தவரானார் ஒபாமா, தனது கட்சிக்காரர்களிடம், ஜாப்ஸ் சொல்வதுபோல, 30,000 உற்பத்திப் பொறியாளர்களைப் பயிற்சி தந்து, தயார்படுத்த நாம் ஏதேனும் செய்தாக வேண்டும் என்று பேசினார். அதோடு நின்றாறில்லை, ஒபாமா, ஜாப்ஸிடம் இதுபற்றி தொலைபேசியிலும் இருமுறை பேசினார்.

    ஓபாமா – ஜாப்ஸ் இருவரின் தொடர்பு இன்னமும் கூட அடுத்த நிலைக்குப் போனது – இருவரும் ஒரு முறை நேரிலே சநதித்தனர். ஜாப்ஸும்  கூட ஒபாமாவின் அரசியல் வெற்றிக்குக் கொஞ்சம் உதவவும் கூட விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

    ஒரு நாட்டின் அதிபர், ஒரு சாதாரண தொழிற்கூடத் தலைவரை, நாடி, அறிவுரையும் ஆலோசனையும், உதவியையும் பெற்றது இன்றுவரை, உலக அதிசயமே!

    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

    என்று வள்ளுவர் கூறியது நம் நினைவிற்கு இப்போது வருகிறது. இக்குரலுக்கு பொழிப்புரை தந்திருக்கிற பலரும், இக்குறளைச் சரியாகப் பொழித்த்துரைக்கவில்லை என்றே இப்போது நம்மால் உணரமுடிகிறது.

    நிரந்தினிது என்கிற பதத்தை சுவை பட, இனிமையாக என்று அனைத்துப் பொழிப்புரையாளர்களும் கூறுகிறார்கள்.

    ஜாப்ஸ் என்றும்  ஒருபோதும்  இனிமையான வார்த்தைகளைத் தெரிந்து எடுத்துக் பேசுகிறவர் இல்லை. ஆனால், ஆணித்தரமான, அழுத்தமான, புரிதலும், தெளிவும், ஊக்கமும் தருவதான எளிமையான, நேரடிச் சொற்களை, விரைவாகக் கூறி,  கேட்போருள் சிந்தனை எழுச்சியையும், துரிதமான செயல்முனைப்பையும்  ஊட்டுபவர்.

    சொல்லப்போனால், ஜாப்ஸ் பலசமயங்களில், தனது சகப் பணியாளர்களிடம், ஏன் சில நிருபர்களிடம் கூட, மலிவான, சகஜன, தாழ்வான மொழியாடலைப் பயன்படுத்துபவர் தான். இவ்வாறு, இனிமையில்லாத அழுத்தமான சொல்லாடலைக் கொண்டவராக ஜாப்ஸ் இருந்தபோதும்,  அவரது வாக்கை உலகம், வெறுப்பின்றி உளப்பூர்வமாக இனிதே விரைந்து கேட்டு, செயலாற்ற விரும்பிய தன்மையை நாம் அறிந்தவராதலால், “இனிது” என்பதை சொல்பவரிடமிருந்து விலக்கி, கேட்பவர்களுக்குப்  பண்பாகத் தருவது சிறப்பு தரும் என்றே முடிவு செய்யத் தோன்றுகிறது.

    எனவே, சொல்லுதல் வல்லார்ப் பெறின்நிரந்தினிது விரைந்து தொழில் கேட்கும் ஞாலம” என்று சீர்படுத்தி இக்குறளுக்கு, பொழிப்புரை தருதல் பொருத்தமாக அமையும் என்று உணர்கிறோம்.  ஒரு சொல் செயலாக மாறவேண்டும் என்றால்  அங்கே சொல் இனிமை வேண்டுமா – சொற்கோர்வை வேண்டுமா – எதுகை மோனை நயங்கள் வேண்டுமா என்று பார்த்தால் –  இவையெல்லாம் தேவையில்லை என்றே நம்மால் இப்போது சொல்லமுடியும்.

    சொல்லப்பட்டச் சொற்களுக்கு, கேட்பவரின் இசைவும் ஏற்பும், இவ்வார்த்தைக்கு, நான், செயல் வடிவம் தந்தேயாக வேண்டும் என்கிற உளஎழுச்சியும் உருவாகுமேயானால், அப்போது மட்டுமே  ஒரு சொல் செயலாக மாறும். மறறெப்போதும் அல்ல.

    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்

    என்று பிறிதொரு குறளிலே வள்ளுவர், ஒருவரது சொல்வன்மையை, கேட்டாரைப் பிணிக்கும் தன்மையிலும் – கேளாரையும் கேட்குமாறும்,  கேட்டு நடக்குமாறும்  வேட்கை கொள்ளச் சொல்லும் தன்மையிலும் நிறுத்துவத்தைக் காண்க.

    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

    என்றபடியாக, எந்தத் தடையையும் எல்லாத் தடையையும் தகர்த்துத் தாண்டி எளிமையும், சுருக்கமும் கலந்த, நேரடியான துரித சொற்களாலும், சோர்வற்ற உழைப்பாலும், அச்சமென்பதை வீசியெறிந்து விட்டு செம்மார்ந்த சகஜ வாழ்க்கை வாழ்ந்து போனவர் ஜாப்ஸ்.

    எனவே தான், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பணிசெய்த ஸ்கல்லி ஜாப்ஸை, “செயல்வீரர் – தான் சொல்வதை – தானே நடத்திக் காட்டுபவர் மட்டுமல்ல – அவர் சொல்வதை மற்றவர்களும் ஏற்று, அவர் சொன்னதை திறம்படச்  செயல் வடிவமாக, செய்துகாட்டுமாறு செய்பவர்!”

    (மேலும் பேசுவோம்)  

    துணை நின்றவை

    1. V.O. Key, Jr. (1948).  Politics, Parties & Pressure Groups. New York: Thomas Y. Crowell Company, Second Edition, p. 3.
    2. sri swmai sivananda (1997). Conquest of Fear.  Shivananda Nagar: Divine Life Society, Fifth Edition.

    Share
  • உள்ளே.. உள்ளே!

    உள்ளே.. உள்ளே!

    கவியோகி வேதம்

    வானம் வரையும் ஓவியத்துள்-ஒரு
    மயக்க மருந்தே இருக்குதப்பா!
    மோனம் சொல்லும் சொற்களுக்குள்-ஒரு
    முனிவன் இருத்தல் தெரியுதப்பா!

    விண்ணில் புகையும் முகிலுக்குள்-ஒரு
    விருந்தே சமைதல் புரியுதப்பா!
    மண்ணில் அதுவே கர்ப்பமப்பா!-அது
    மனிதன் உணவாய்ப் பிறக்குதப்பா!

    இழையும் காற்றில் ரகசியத்தை-நம்
    “எடிஸன்’ கண்டான்! விளக்காச்சு!
    நுழையும் ஒலியைப் பிசைந்திடவும் -அது
    நுட்பக் கணினி என்றாச்சு!

    ஆம்!
    மனமே எழுத்தின் கருவூலம்!-அதில்
    வார்த்தைக் கவிதை ஒருஜாலம்!
    இனிப்பின் உள்ளே பலபுரட்சி!-நீ
    இதனை ஆய்ந்தால் வரும்மிரட்சி!

    ‘உள்ளே பார்த்தல்’- ஓர்அறிவாம்!-அதில்
    உண்மை ஒளிரும்! கண்டறிவாய்!
    உள்ளே என்றும் நான்உள்ளேன்-கூட
    ஒருவன் உள்ளான்! கண்டுகொண்டேன்!

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 6

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 6

    மீ. விசுவநாதன்

    சன்யாசம் தந்தார் குருதேவர்

    பூவி னாலே செய்த
    பொன்னாம் கரத்தி னாலே
    காவி உடையும், தண்ட
    கமண்ட லமுமே தந்து
    ஆவி சேர்த்த ணைத்து
    அன்புச் சீட ரோடு
    சேவிக் கவேண்டி அங்கே
    சேர்ந்தார் அதிஷ் டானம் !  (51)

    மகாவாக்கிய உபதேசம்

    மகத்தாம் மந்தி ரமான
    “மகாவாக் யத்தை”ச் சீடன்
    அகத்தில் பதியும் வண்ணம்
    அபிந வவித்யா தீர்த்த
    ஜகத்கு ருவேதான் ஓத
    ஜகமே பக்தி யாலே
    முகத்தில் இன்பம் பொங்க
    ஓமென் றோதிற் றம்மா !  (52)

    ஸ்ரீ பாரதீ தீர்த்தரானார்”

    சார தைமுன் வைத்து
    சாளக் கிராம பூஜை
    ஆரா தனைகள் செய்ய
    அப்ப டியேசீ டனும்தன்
    நேரா னகுரு பூஜை
    செய்ய, குருசீ டர்கு
    பார தீதீர்த் த“ராகப்
    பட்டம் தந்த ழைத்தார்!  (53)

    தேவதா தர்சனம்

    சார தாவின் முன்பு
    சற்றே தியானம் செய்து
    தோர ணகண நாதன்
    தோத்தி ரமும்செய் திட்டார்
    நேரே சங்க ரர்சந்
    நிதிமுன் வேண்டிக் கொண்டு
    நீரோ டும்துங் கையை
    நெருங்கி அக்கரை சேர்ந்தார் ! (54)

    சிஷ்ய சுவாமிகளின் பெருமை

    மாலை தரிச னத்தில்
    வந்த பக்தர் பார்த்து
    பாலை நிகர்த்த சீடர்
    பண்பை மெச்சி மெச்சி,
    “மேலாம் குருவின் ஆசி
    மேலும் கிடைக்க நீங்கள்
    காலம் தோறும் பக்தி
    கவனம் செய்க” என்றார்!  (55)

    குருவைப் போற்றுக

    “சீடர் தேர்வில் நன்கு
    தேர்ச்சி பெற்று விட்டேன்
    நாடு போற்றும் வண்ணம்
    ஞானி ஒருவர் தன்னைத்
    தேடித் தந்து வாணி
    சிந்தை குளிர வைத்தாள் !
    கூடி வந்து உங்கள்
    குருவைப் பணிக” என்றார் ! (56)

    ஸ்ரீ சாரதா பீடத்தின் ஆசார்யர்கள்

    பாரம் பர்யம் மிக்க
    பாரே போற்றும் பீடம் !
    ஆரம் பமுத லாக
    அமைந்த யோகி யர்கள்
    ஈரம் மிகுந்த நெஞ்சும்
    ஈசன் உருவு மாக
    நேரம் காலம் எல்லாம்
    பிரும்மத் தியானம் செய்வோர்! (57)

    பார தீதீர்த் தர்“அப்
    பண்பு வம்சம் வந்தோர் !
    நார தமுனி போல
    ஞானச் செல்வ ராவார் !
    பேரும் புகழும் வேண்டார்
    பேசாப் பொழுதை வேண்டி
    ஊரும் உலகும் வாழ
    உள்ளே தவமி ருப்பார் !  (58)

    பெருமை மிகு ஸ்ரீ பாரதீ தீர்த்தர்

    தெளிந்த நீரைப் போல
    நிறைந்து கற்ற தெல்லாம்
    எளிய உவமை மூலம்
    எடுத்துச் சொல்லும் நேர்த்தி
    உளியால் சிற்பம் செய்யும்
    உயர்ந்த சிற்பிக் கீடாய்க்
    களிப்பார் கற்றோர்; சொல்லில்
    கரைவார் எளியோர் அங்கே! (59)

    வித்யை விநயம் ரெண்டும்
    விரும்பி இவரைத் தேடி
    பக்தி செய்யும் ; வீணாம்
    பகட்டு விலகி ஓடும்;
    முக்தி நெறியைச் சொன்ன
    மூல குருவின் ஆசி
    சக்தி அளிப்ப தாலே
    சரித்தி ரத்தில் நின்றார் !  (60)

    Share
  • திருக்கடவூரில் கால சம்ஹார விழா

    திருக்கடவூரில் கால சம்ஹார விழா

    மரபின் மைந்தன் முத்தையா

    திருக்கடவூரில் இன்று கால சம்ஹார விழா – கால சம்ஹார மூர்த்திக்கு அபிடேக ஆராதனை

    சூலமேந்தி வீறு கொண்டான் சூரசம்ஹாரன்
    சூட்சுமமாய் அருள வந்தான் ஏழைப் பங்காளன்
    கால காலன் கருணை கொண்டான் காத்து ரட்சிக்க
    கழல்களிலே மலர்கள் தூவி நாமும் அர்ச்சிக்க

    மார்க்கண்டேயன் அழுத போது முன்னே வந்தவன்
    மார்க்கமுண்டு எனும் உறுதி நமக்குத் தந்தவன்
    காக்க வேண்டும் காக்க வேண்டும் காலகாலனே
    காலமறிந்து சூலம் வீசு எங்கள் ஈசனே

    Share
  • மதுரை குஞ்சரத்தம்மாள்

    மதுரை குஞ்சரத்தம்மாள்

    முனைவர் ம.குமரவேல்
     
    (ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது  கேள்விப்பட்டதுண்டா? அந்தக் கொடிய வரலாற்றைப் படியுங்கள்)
     
    1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம், தாது வருடப் பஞ்சம் என அழைக்கப்படுகிறது. வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைக்கூடத் தோண்டி எடுத்துத் தின்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கைக் கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்துத் தின்று உயிர் பிழைத்துக் கிடந்த கொடிய பஞ்சமது.
     
    கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிறுடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது. பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. அதில் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கதை, குஞ்சரம் அம்மாவினுடையது.
     
    குஞ்சரம், தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான  தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான்.
     
    தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.
     
    கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து, வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.
     
    பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.
     
    வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்.
     
    இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போகிறாள் என்று பெருந்தனக்காரர்கள் பேசிக்கொண்டனர். அவளின் செய்கை, அவர்களை கூசச் செய்தது. ஆனால், கஞ்சி ஊற்றும் செய்தி கேட்டு மக்கள் வந்துகொண்டேயிருந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக, துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்கக் குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர். ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை. தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது. அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.
     
    தேவையின் பயங்கரம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதபடி இருந்தது. ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி, தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள். தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில்தான் கலெக்டர் கஞ்சித் தொட்டியைத் திறக்க முன் வந்தார். ஒரு வகையில் அதற்குக் குஞ்சரத்தின் செயல்தான் காரணம். நகரில் மூன்று இடங்களில் அரசு, கஞ்சித் தொட்டியைத் திறந்தது. நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.
     
    பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு, எல்லாவற்றையும் எரித்தது. அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துகளை உலையிலே போட்டாள்.
     
    கல் பதித்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், முத்துக்கள், காசு மாலை, மோதிரம், ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி, தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்குப் பசிப்பிணி தீர்த்தது.
     
    தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்துக் கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு, கஞ்சியாய் மாறியது. தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.
     
    அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானாள், யாரைப் பற்றிப் பேச யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில்கூடக் குஞ்சரத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள். அவள் முகம் மலர்ந்திருந்தது. தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக் கிடந்தாள்.
     
    ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு  விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய். தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை. சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கியபொழுது வடக்கு ஆவணி வீதி கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது. கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இதுதான் என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.
     
    நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் இரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப் புரண்டு கதறியழுதனர். அவள் நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள். எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல, வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.
     
    அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது, சலங்கையைப் படையலிட்டு வணங்கித் தெய்வமாக்கிக் கொண்டனர், மாமதுரை மக்கள்.
    Share
  • (Peer Reviewed) பரிமேலழகரின் பருந்துப் பார்வை

    (Peer Reviewed) பரிமேலழகரின் பருந்துப் பார்வை

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்

    முன்னுரை

    திருக்குறளுக்கு உரைகாண்பதில் இருவகை நெறிகள் பின்பற்றப்படுவதாகத் தெரிகிறது. ஒன்று நூல் முழுமையையும் ஓரலகாகக் கொண்டு உரை காண்பது. ஆயிரத்து முந்நூற்றுப் முப்பது குறட்பாக்களையும் தனித்தனிக் குறட்பாக்களாகக் கொண்டு (உதிரிப்பூக்கள்போல) உரை காண்பது மற்றொன்று. மரபுசார்ந்த உரையாசிரியர் எவரும் பிந்தைய நெறியைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. திருக்குறள் தனிப்பாடல்களின் தொகுப்பன்று என்பதால் திருக்குறளை ஓரலகாகக் கொண்டே உரை காணவேண்டும் என்னும் கொள்கையை உடையவர் அழகர். அதாவது ஏதாவது ஒரு குறட்பாவை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு தம் அறிவுக்கும் கருத்திற்கும் கொள்கைக்கும் மொழிப்புலமைக்கும் ஏற்ப உரைசொல்லித் தமக்குத் தாமே மகிழ்ந்து பாராட்டிக் கொள்ளும் உரைக் கொள்கை அழகருக்கு உடன்பாடன்று. ‘திருக்குறள்’ என்னும் தொடரியில் (சங்கிலியில்) 1330 கண்ணிகள் இருக்கின்றன என்பதே அழகர் நோக்கு. இதனை உறுதி செய்வதற்குப் பல சான்றுகளைக் காட்ட இயலும். அளவு கருதியும் படிப்பார் காலம் கருதியும் சுருக்கமாக ஒன்றினைக் காணலாம்.

    ஆய்வுத் தலைப்பு

    ‘பரிமேலழகரின் பருந்துப் பார்வை’ என்னுந் தலைப்பில் இவ்வாய்வு நிகழ்த்தப் பெறுகிறது.

    ஆய்வுக்களமும் எல்லையும்

    “படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு” 1

    என்னும் குறட்பாவும் அதற்கான பரிமேலழகர் உரைப்பகுதி மட்டுமே  இவ்வாய்வுக்கான களமும் எல்லையுமாகக் கொள்ளப்படுகிறது.

    ஆய்வு நோக்கம்

    மூலநூலில் ஒரு குறிப்பிட்ட குறட்பாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உறுப்புக்களின் நிரலுக்கான காரணத்தைக் கண்டறிவதில் உரையாசிரியர் ஒருவருக்குள்ள பொறுப்புணர்வைப் பரிமேலழகர் உரைவழி அறிவதையே இக்கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    ஆய்வுப் பயன்

    ஆழம், வலிமை கொண்ட அடிப்படைத் தரவுகள் ஏதுமின்றி தமிழிலக்கிய ஆய்வுலகத்தால் பெரிதும் புறக்கணிப்புக்கு ஆளாகியிருக்கும் அழகரின் உரைத்திறனை இனிவரும் தமிழ்த் தலைமுறையாவது அவருடைய திருக்குறள் உரைவழி உணர்ந்து மகிழ வேண்டும் என்பதையே இக்கட்டுரை தனது பயனாகக் கருதுகிறது.

    கட்டுரை அமைப்பு

    1. குறட்பாக்கள் தனிப்பாக்களா?
    2. திருக்குறள் ஓரலகா?
    3. காமத்துப்பாலின் கதி
    4. பரிமேலழகரின் பருந்துப் பார்வை

    என்னும் குறுந்தலைப்புக்களில் இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    1. குறட்பாக்கள் தனிப்பாக்களா?

    யாப்பியல் அடிப்படையில் பாக்களில் மிகக் குறுகிய வடிவம் கொண்டது குறள் வெண்பா. ‘திருக்குறள்’ என்பது அடையடுத்த ஆகுபெயராய்த் திருக்குறள் என்னும் நூலுக்குப் பெயராகி நிற்கிறது. நூல் என்ற அளவில் பால், இயல், அதிகாரம் என்னும் பகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருக்குறளின் இந்தப் பகுப்பே அதன் உள்ளடக்க உணர்நெறியையும் உரைகாண் நெறியையும் தீர்மானிக்கிறது. அதாவது இந்தப் பகுப்புக்குள் வரும் குறட்பாக்கள் தங்களுடைய பகுப்புக்கான அடிப்படைப் பொருளையே தங்களது மையக்கருத்துக்களாகக் கொண்டிருக்கின்றன  என்பது பெறப்படும். சான்றாக

    “உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
    பாத்தியுள் நீர்சொரிந் தற்று” 2

    என்பது ‘அவையறிதல்’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ள பத்துக் குறட்பாக்களில் ஒன்று. இவ்வதிகாரப் பொருண்மையை அழகர்,

    1. அவையறிந்து சொல்லுதல்

    2. அவையறியாக்கால் வரும் குற்றம்

    3. அவையளவு அறிந்தார் செய்யும் திறம்

    4. மிக்கார் அவைக்கண் செய்யும் திறம்

    5. அவையிழுக்கால் வரும் குற்றம்

    6. ஒத்தார் அவையில் மட்டும் பேசுதல்

    7. தாழ்ந்தார் அவைக்கண் எதுவும் பேசாமை

    என ஏழு உட்பிரிவுக்குள் கொண்டு வருகிறார். இந்தப் பகுப்பில் மற்றவை ஒரு பக்கம் இருப்பினும் இறுதி நான்கு குறட்பாக்களை இரண்டு பொருண்மைகளை விளக்குவதாக அழகர் கருதுகிறார். ஒன்று ஒத்தார் அவையில் மட்டுமே பேசுதல் வேண்டும். தாழ்ந்தார் அவையில் வாயே திறக்கக்கூடாது. இவற்றுள் 717, 718 ஆகிய இரண்டு குறட்பாக்களையும் ஒத்தார் அவையில் மட்டுமே பேசவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது எனக் கருதி அவற்றுள் மேலே காட்டிய குறட்பாவிற்குப்,

    “பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினையுடையவர் அவைக்கண், கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும்” 3

    என்று பொழிப்பெழுதிக் காட்டுகிறவர், பத்து குறட்பாக்களையம் எழு கருத்துக்களுக்கானவை எனக் கொள்கிறார். இந்த ஏழு கருத்துக்களும் ஒன்றையொன்று நோக்கியவை. தழுவியவை. ஒரே நிகழ்வின்கண் கடைப்பிடிக்க வேண்டியவை. இத்தகைய பன்முகப் பொருண்மையோடு தொடர்புடைய இக்குறட்பாவைத் தனியாகக் கொண்டு உரைகண்டால் ஏதோ வழியிற் கண்ட ஒருவனோடு உரையாடுவதைப் பற்றி வள்ளுவர் சொல்லுவதாகக் கருதுவதற்கு வாய்ப்புண்டு.  அங்ஙனம்  உரைகண்டால் குறட்பாவின் பொருளாழம் புலப்படாது, முன்னும் பின்னுமான கருத்துக்கள் அதனை அணிசெய்யாது. அதிகாரத்தின் மற்ற குறட்பாக்கள் உணர்த்தும் பொருட்களைப் பிரித்தறிய இயலாது. ‘அவையறிதல்’ என்பது அவை கூடும் கட்டடத்தை அறிவதன்றி, அவையில் அமர்ந்துள்ள சான்றோர்களின் பெருமையையும் நிலையையும் தன்மையையும் அறிந்து நடந்துகொள்ள வேண்டிய முறைமையையும் பற்றியது என்னும் பொருண்மை வெளிப்படுதற்கு வாய்ப்பின்றிப் போய்விடும் என்பது அறிதல் வேண்டும்.

    1.1 திருக்குறள் சிக்கலுக்குக் காரணம்

    இந்நாள் வரை திருக்குறளில் உரைச் சிக்கல் எழுந்தமைக்கான  காரணங்களுள் தலையாயது அதனை உதிர்ப்பூக்களாகக் கொண்டு உரை சொன்னதுதான். திருக்குறள் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட நூல் என்பதையும் சங்க இலக்கியம் போலத் தொகுப்பு நூல் அல்ல என்பதையும் புரிந்து கொண்டாலொழிய இந்நிலை தொடரவே செய்யும். சொல்லுக்குள் எழுத்துப் போலத் திருக்குறளில் குறுட்பாக்கள். தனியலகாகக் கொண்டு உரை சொல்லக்கூடாது என்பதன்று. அவ்வாறு சொல்கிறபோது சொல்வார் கருத்தினும் அதிகாரம், இயல், பால் ஆகியவை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்பது கருத்து. திருக்குறள் பொருட்பால் கருத்துக்களைத் தனிமனிதனுக்கு வள்ளுவர் சொன்னதாகக் கொண்டு உரைசொல்லப்புகின் தோன்றும் உரைமயக்கம் களையமுடியாத மயக்கமாகிவிடும்.

    2. ஓரலகாகக் கொள்வதால் உண்டாகும் பயன்கள்

    திருக்குறளை ஒரே அலகாகக் கொண்டு உரை காண்பதால் பல சிறப்புக்களை அறிந்து கொள்ள முடிவதோடு எந்தப் புள்ளியிலும் முரணில்லாத நூலின் ஆற்றொழுக்கு அமைப்பு புலப்படும். கூறியது கூறலுக்கான காரணம் புலப்பட்டு அது அனுவாதமாக அமைந்துவிடும். இயலுக்கு இயலும் பாலுக்குப் பாலும் அதிகாரத்திற்கு அதிகாரமும் குறட்பாவிற்குக் குறட்பாவும் தம்முள் இயைந்து நிற்கும் கட்டுமானச் சிறப்பு புலனாகும். இவற்றுள் சிலவற்றை அழகர் உரையடிப்படையில் நிறுவவும் முடியும்.

    1. ‘மங்கலம் என்ப மனைமாட்சி’ 4 என்னும் குறட்பாவைப் பின்வரும் அதிகாரத்தோடு ஒப்பு நோக்கிய அழகர் முன்னதிகார இறுதிப்பாவிற்கும் பின்னதிகாரப் பொருண்மைக்கும் இயைபு கூறுவான் “வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிநலம் கூறி வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் கூறப்பட்டது” 5 என்று கூறமுடிகிறது.

    2. ‘பணிவுடையன் இன்சொலன்’6 என்னும் குறட்பாவுரையில் ‘இம்மைப்பயனையும்’7அல்லவை தேய அறம் பெருகும்”8 என்னும் குறட்பாவுரையில் ‘மறுமைப் பயனையும்’9 கூறுவதற்கு ஓரலகு உரை நெறியே உதவுகிறது.

    3. ‘உண்மை அறிவே மிகும்’10 என்பதற்கும் ‘கற்றனைத்தூறும் அறிவு’ 11 என்பதற்குமான முரணை “இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின் மேல் ‘உண்மையறிவே மிகும்’ (குறள்.373) என்றதனோடு மலையாமை அறிக” 12 என்னும் அழகர் விளக்கம் களைகிறது.

    4. ‘அறத்தினூங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு’ 13 என முன்னர்க் கூறிப் பின்னர் ‘அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை” 14 என்பது கூறியது கூறல் ஆகாது அநுமதித்தலானது என்பதை ‘அதனால் (மறத்தலால்) கேடு வருதற் கூறுதல் பயன் நோக்கி’ 15 என்னும் உரையால் அறியலாம். காட்டுக்கள் விரிக்கின் பெருகும்.

     3. காமத்துப்பாலின் கட்டமைப்பு

    திருக்குறளை உதிரிப்பூக்களாகக் கொள்வதால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவது காமத்துப்பாலே. நேரடியாகத் தமது கருத்துக்களைச் சொல்வதைக் ‘கயமை’ என்னும் அதிகாரத்தோடு நிறைவு செய்து கொள்ளும் திருவள்ளுவர் காமத்துப்பாலின் கட்டமைப்பை அகப்பொருள் மரபிற்கிணங்க நாடகப் பாங்கில் அமைத்துக் கொள்கிறார். அதனுள் அமைந்த இருநூற்று ஐம்பது குறட்பாக்களில் ஒன்றுகூட ஆசிரியர் கூற்றாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டால் திருக்குறளை உதிரிப்பூக்களாகக் கொள்வதால் உண்டாகும் பொருளிடர் புரியக்கூடும். அகப்பொருள் மாந்தருள் தலைமகன், தலைமகள், தோழி என்னும் மூவர் கூற்றாகவே காமத்துப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே தொட்டதற்கெல்லாம் திருவள்ளுவர் கூறினார் என்னும் முனைப்புடையார் காமத்துப்பாலை அங்ஙனம் அவ்வளவு எளிதாக பயன்படுத்திக் கொள்ள இயலாது.

    3.1 கற்பனைக்கும் எட்டாத குழப்பம்

    காமத்துப்பால் பதிவுகளைத் திருவள்ளுவர் கூறியதாகக் கொண்டு பொருள் காண முற்படின் உண்டாகும் ஏதம் பலவாம். எள்ளலும் பலவாம். என்னை?,

    “அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும்என் நெஞ்சு!” 16

    என்று திருவள்ளுவரைத் தலைமகனாக்க வேண்டி வரும்.

    “நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக்கு அறிந்து” 17

    வள்ளுவர் ஆணா பெண்ணா என்னும் ஐயம் ஏற்படாதா?

    “துனியும் புலவியும் இல்லாயின் காமம்
    கனியும் கருக்காயும் அற்று” 18

    என்று திருவள்ளுவர் சொன்னால் சுவைக்குமா? தலைமகன் சொல்லக் கேட்டால் இனிக்குமா?

    “வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினீர் என்று” 19

    என்பது வள்ளுவருக்கும் வாசுகிக்கும் பொருந்தினாலும் சுவைக்காதல்லவா? திருக்குறளை ஓரலகாகக் கொண்டு அதன் உள்ளடக்கத்தை அதிகாரம், இயல் மற்றும் பால் பகுப்புப் பொருண்மைக்கேற்ப உரை கண்டால் இத்தகைய சிக்கல்களோ குழப்பங்களோ வர வாய்ப்பில்லை. திருக்குறளின் பெருமையும் திருவள்ளுவரின் பெருமையும் ஒருசேரக் காக்கப்படும். அகத்திணை உணர்வு பிறர்க்குப் புலப்படுமாறு வெளிப்படுவதில்லை. அதனாலேயே அது அகம் எனப்படும் என்னும் நுண்ணியம் திருவள்ளுவர் அறிந்ததால்தான் முதலிரண்டு பால்களை ஆசிரியர் கூற்றாகவும் காமத்துப்பாலை தலைமக்கள் கூற்றாகவும் வடிவைமைத்தார் என்பதாம்.

    “ஒத்த அன்பால் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து  இன்பமுறுவது ஒரு பொருள் ஆதலின் அதனை அகம் என்றார். எனவே அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகம் என்பது ஒரு ஆகுபெயராம்” 20

    என்னும் நச்சினார்க்கினியரின் விளக்கத்தை நோக்கினால் தலைமக்களுக்கே மீளக் கொணர முடியாததோர் உணர்வு படைப்பாளனாகிய திருவள்ளுவருக்கு எப்படிக் கொணரவியலும் என்பது புலனாகலாம். எனவேதான் காமத்துப்பாலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் காதலுணர்வு தலைமக்களுக்கு உரியதேயன்றித் திருவள்ளுவருக்கு உரியதன்று. அவ்வுணர்வு வெளிப்பாட்டில் ஏதேனும் ஐயம் தோன்றின் காமத்துப்பால் தலைமக்களை வினவ முடியாது என்பது நுண்ணியம். சங்க இலக்கிய அகப்பாடல்களைப் பாடிய சான்றோர் அனைவரும் தாமே நேரடியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாது அகப்பொருள் மாந்தர் கூற்றுவழி வெளிப்படுத்தியிருப்பதும் இது பற்றியே. ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர்’ என்னும் விதியை அவர்கள் புரிந்து கொண்ட பாங்கு இத்தகையது. பெயருக்கே உரிமையில்லை என்னும்போது உணர்வுக்கு உரிமை கோர இயலுமா?

    4. பரிமேலழகரின் பருந்துப் பார்வை

    அடிப்படைக் கட்டமைப்பில் கவனம் செலுத்தும் பெரிய நிறுவனமொன்றின் மேலாண் அலுவலரைப் போலத் திருக்குறளுக்கு உரைகண்டவர் அழகர். ஒருபக்கம் நிரலாகப் படித்துக் கொண்டே வர மறுபக்கம் உரையெழுதிக் கொண்டே போகும் பொழுதுபோக்கு அவர் அறியாதது. பொறுமை, கவனம், நிதானம், பரந்த புலமை, ஆழ்ந்த சிந்தனை, பொறுப்புணர்வு முதலிய உயரிய பண்புகளை அவர் இயல்பாகக் கொண்டிருந்ததால் அவர் உரையில் முரண்பாடு என்பது சிறிதும் கிடையாது என்பதை யாரும் மறுக்கவியலாது. திருக்குறளை ஓரலகாகக் கொண்டு நோக்கி உரையெழுதிய காரணத்தால் அழகரால் குறளும், குறட்பாக்களால் அழகரும் பெருமையுற்ற பாங்கு பின்வரும் ஆய்வுப்பகுதியால் ஓரளவு துலக்கமுறக்கூடும்.

    4.1 அங்க நிரலும் அழகர் அறிந்த நிரலும்

    இறைமாட்சி என்னும் அதிகாரத்தின் முதற்குறட்பா இப்படி அமைகிறது.

    “படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு” 21

    குறட்பாவில் சொல்லப்பட்ட ஆறு உறுப்புக்களையும் (ஒன்றிலும் குறைவில்லாமல்) உடையவன் அரசருள் அரிமாவாகத் திகழ்வான்” என்பது குறட்பாவின் உள்ளடக்கம். இந்த உள்ளடக்கத்தை எழுதிவிட்டுப் பேசாமல் அழகர் சென்றிருக்கலாம். குறட்பாவில் உள்ள உறுப்புக்களின் (அங்கங்களின்) நிரலை அவர் நோக்குகிறார். அந்த நிரல் அவர்க்கு உடன்பாடில்லை. ‘அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு’ என்ற நிரலில்தான் (ORDER) அமைந்திருக்க வேண்டும். ‘மாறி அமைந்திருக்கிறதே’ என்று சிந்திக்கிறார். அதனால்,

    “அமைச்சு நாடு அரண் பொருள் படை நட்பு என்பதே முறையாயினும் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார்” 22

    என்று குறட்பாவின் நிரல் மாறியிருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து பதிவிடுகிறார். செய்யுள் நோக்கிப் பிறழ்தல் என்றால் என்ன? ஒன்றுமில்லை. எதுகைச் சுவை. ‘உடையான் அரசருள் ஏறு’ எனப் பின்னடியில் அமைவதால் ‘உடை’ என்பதற்கேற்பப் ‘படை’ என முதலடியின் முதற்சீரை அடிஎதுகையாக அமைத்தார் என்பது அழகர் கருத்து.  மேலும்,

    “படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு”

    என்னும் கட்டுமானமே வெண்பா யாப்பு நெறி காத்து நிற்கிறது என்பதுமாம். செய்யுள் நோக்கி என்பது யாப்பினையும் உள்ளடக்கியதாதலின். இதனால் ‘உடையான்’ என்னும் ஈற்றடி முதற் சொல்லோடு இயையுமாறு இறையுறுப்புக்களில் படைதவிர்த்த வேறு ஏதேனும் ஒன்றினை முதலடியின் தொடக்கச் சீராக அமைத்துக் குறள் வெண்பாவின் கட்டுமானத்தைக் காக்க இயலாது என்னும் யாப்புண்மையையும் அழகர் அறிந்திருக்கிறார் எனவும் கருதமுடியும். இனி,

    “அமைச்சு நாடு அரண் பொருள் படை நட்பு என்பதே முறை” 23

    என்னும் அழகர் கூற்றுக்குச் சான்று எங்கே இருக்கிறது? குறளிலேயே இருக்கிறது. திருக்குறள் உரைக்களத்தில் ஏனைய உரையாசிரியர் அனைவரையும் புறமுதுகிட்டு ஓடச் செய்கின்ற இடங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது.

    1. 64 ஆம் அதிகாரத்திலிருந்து 73 ஆம் அதிகாரம் முடிய பத்து அதிகாரங்கள் அமைச்சு பற்றியும், (அமைச்சு)

    2. 74 ஆம் அதிகாரம் நாடு பற்றியும் (நாடு)

    3. 75 ஆம் அதிகாரம் அரண் பற்றியும் (அரண்)

    4. 76 ஆம் அதிகாரம் பொருள் பற்றியும் (பொருள்)

    5. 77, 78 ஆகிய இரண்டு அதிகாரங்களும் படைமாட்சி பற்றியும் (படை)

    6. 79 முதல் 95 வரையிலான பதினேழு அதிகாரங்கள் நட்பு பற்றியும் (நட்பு)

    திருக்குறளில் ஆராயப்படுகின்றன. இந்த அமைப்பு திருவள்ளுவரால் அமைக்கப்பட்டது. அழகரால் அமைக்கப்பட்டதன்று. இந்த அதிகார நிரலை நோக்கிய பின்பே 381வது குறட்பாவிற்கு உரையெழுதுகிறார். எழுதவே குறட்பாவில் கண்ட வைப்புமுறை நிரலுக்குப் பொருத்தமான அமைதி கூற முடிகிறது. இத்தகைய நிரலமைதியை மற்ற உரைகளில் காண்பது அரிது.

    இதனால் முப்பத்தொன்பதாம் அதிகாரத்தின் முதற்குறளின் முதலடியின் தொடை அமைப்பு ‘செய்யுளுக்காகத்தான் செய்யப்பட்டது’ என்னும் தனது கருத்தினை அதற்குப் பின்னாலே அமைந்திருக்கும் இருபத்து நான்கு அதிகாரங்களைத் தாண்டித் தொடர்ந்து அமைந்த முப்பத்திரண்டு அதிகாரங்களையும் உற்று நோக்கிக் கண்டறிந்து உறுதி செய்திருக்கிறார் அழகர் என்பதை அறியலாம்.

    இன்னும் தெளிவாகச் சொன்னால் முப்பத்தொன்பதாவது அதிகாரத்தின் முதற் குறட்பாவின் தொடையமைப்புக் கட்டுமானத்திற்குத் தான் சொல்லும் காரணத்தை நிலைநாட்டுதற்குரிய தரவுகளை, இருபத்தைந்து அதிகாரங்கள் பின்னாலே சென்று அங்கிருந்து தொடர்ந்து தேடித் தந்திருக்கிறார் அழகர். பருந்து தன் ‘இரைக்காக’ மேலிருந்து கீழ் நோக்கிப் பாயும்! அழகர் தன் ‘உரைக்காக’ அப்படிப் பாய்ந்திருக்கிறார் (படித்திருக்கிறார்).

    நிறைவுரை

    நூற்பொருள் தெளிவு, சொற்பொருள் தெளிவு, இலக்கியச்சுவை, இலக்கண நுட்பம், உரைநடைத் திட்பம், வெளிப்பாட்டு உத்தி, சொற்சுருக்கம் என்னும் பன்முகச் சிறப்பு வாய்ந்த பரிமேலழகரின் திருக்குறள் உரை தமிழியல் உலகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகியிருப்பது தமிழ்ப் புலமையை நிறைவு செய்ய உதவாது என்பதும் (மறுதலையாக) அதனைத் திட்டமிட்டு நிரலாக ஓதுதல் மேற்சொன்ன திறன்களைப் பெற ஏதுவாகும் என்பதும் திருக்குறளை உதிரிப்பூக்களாகக் கொள்வது பல உரைச்சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதும் காமத்துப்பால் பொருண்மை பெருங்குழப்பத்துள் மூழ்கிவிடும் என்பதும் திருக்குறள் பனுவலை ஓரே அலகாகக் கொள்வதால் விளையும் நன்மைகள் பல என்பதும் அத்தகைய நெறியைப் பின்பற்றிய அழகர் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ‘படைகுடி’ என்னும் குறளுக்கு எழுதிக்காட்டிய உரைச்சிறப்பு வியப்புக்குரியது என்பதும் விளக்கப்பட்டுத், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் என்பவற்றின் அடிப்படையில் அமையும் த்மிழ்ப்புலமை, பரிமேலழகர் உரைப்புலமை இன்றிச் செறிவோ சீர்மையோ பெறாது என உறுதியுடன் முன்னெடுத்து இக்கட்டுரை தன்னை நிறைவுசெய்து கொள்கிறது.

    சான்றெண் விளக்கம்

    1. திருவள்ளுவர்           திருக்குறள்                                                            கு.எண். 381

    2. மேலது                                                                                                                          கு.எண். 718

    3. பரிமேலழகர்            மேலது உரை

    4. திருவள்ளுவர்           திருக்குறள்                                                              கு.எண். 60

    5. பரிமேலழகர்             மேலது உரை

    6. மேலது                                                                                                                            கு.எண். 95

    7. மேலது                                                                                                                             கு.எண். 96

    8. திருவள்ளுவர்        திருக்குறள்                                                                    கு.எண். 96

    9. பரிமேலழகர்        மேலது உரை

    10. திருவள்ளுவர்        திருக்குறள்                                                                  கு.எண். 373

    11. மேலது                                                                                                                             கு.எண். 396

    12. பரிமேலழகர்        மேலது உரை

    13. திருவள்ளுவர்        திருக்குறள்                                                                     கு.எண். 31

    14. மேலது                                                                                                                               கு.எண். 32

    15. பரிமேலழகர்        மேலது உரை                                                                   கு.எண். 32

    16. திருவள்ளுவர்        திருக்குறள்                                                                       கு.எண். 1081

    17. மேலது                                                                                                                                 கு.எண். 1128

    18. மேலது                                                                                                                                  கு.எண். 1306

    19. மேலது                                                                                                                                   கு.எண். 1317

    20. நச்சினார்க்கினியர்     தொல்.பொருள்.அகம்.உரை                நூ.எண். 1

    21. திருவள்ளுவர்        திருக்குறள்                                                                          கு.எண். 381

    22. பரிமேலழகர்        மேலது உரை

    23. மேலது

    துணைநூற் பட்டியல்

    1. நச்சினார்க்கினியர்
    தொல்காப்பியம் பொருளதிகார உரை
    தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
    மறுபதிப்பு – 1967

    2. திருக்குறள் பரிமேலழகர் உரை
    வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
    உமா பதிப்பகம், சென்னை – 600 001.
    முதற்பதிப்பு – 2009

    3. எஸ்.வையாபுரிப்பிள்ளை
    தமிழ்ச்சுடர் மணிகள்
    குமரி மலர்க் காரியாலயம்
    தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
    முதற்பதிப்பு – 1949

    4. புலவர் ச.சீனிவாசன்,
    திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்
    மெய்யப்பன் தமிழாய்வு மையம்,
    53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001.
    முதற்பதிப்பு 2002

    5. முனைவர் நா.பாலுசாமி
    பன்முகப் பார்வையில் பரிமேலழகர்
    அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007.
    முதற்பதிப்பு – 2005

    6. மு.வை.அரவிந்தன்
    உரையாசிரியர்கள்
    8/7 சிங்கர் தெரு,
    பாரிமுனை, சென்னை – 600 108.
    முதற்பதிப்பு – 1968


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    1. பரந்துபட்ட களத்தில் விரிந்த நிலையில் செய்யப்படும் ஆய்வுகளைவிட, குறிப்பிட்ட சிறிய களத்தில் நிகழ்த்தப்படும் நுண்ணாய்வுகள் சிறக்கும். மறைமலையடிகளாரின் ‘முல்லைப்பாட்டாராய்ச்சி’  அறிஞர் வே.வேங்கடராசுலு  செட்டியார் எழுதிய ‘புனையா ஓவியம்’ அறிஞர் மு.வ. அவர்களின் ‘ஓவச்செய்தி’ ‘கொங்கு தேர்வாழ்க்கை’ முதலியன இக்கூற்றை உறுதிசெய்யக் கூடும்.  இக்கட்டுரை அத்தகையது!.

    2. ‘பொருளுக்கேற்ற மொழி நடை’ என்பது உரைநடைக்கானது.  ‘பொருளுக்கேற்ற யாப்பு’ என்பது கவிதைக்கானது.  இக்கட்டுரையின் மொழிநடை பொருண்மைக்கேற்ப அமைந்துள்ளது சிறப்பு.

    3. குறட்பாக்களை ‘உதிரிப்பூக்களாகக்’ கொள்வதால் ஏற்படும் ‘பொருள்’ இழப்புகளைச் சில சான்றுகளுடன் கட்டுரையாளர் நிறுவியிருப்பது நேர்முகமாகவோ எதிர்முகமாகவோ மேலும் சில தொடராய்வுகளுக்கு வழிவகுக்கக் கூடும். வழிவகுக்க வேண்டும். ஆய்வு ஒரு தொடரோட்டம்’ என்பார் அறிஞர் தமிழண்ணல்.

    4. காமத்துப்பாலின் நாடகப் பாங்கு குறித்து ஆய்வாளர் தரும் விளக்கம் நுட்பமானது. மரபு சான்றது. ஏனைய இரண்டு பால்களும் நூலாசிரியரின் கருத்துகளால் நிரம்ப, காமத்துப்பால் அகத்துறை மாந்தர்களின் உணர்வுகளால் நிரம்பி வழிகிறது. இதற்கு ஆசிரியர்  நச்சினார்க்கினியரின் அகத்திணையியல் உரைவிளக்கத்தைத் துணையாக்கிக் கொண்டிருப்பது இவர்தம் ஆய்வுத் திறனுக்குச் சான்று.

    5. திருக்குறளை ஓரலகாகக் கொள்வதால் உண்டாகும் நன்மைகளை உறுதிப்படுத்த கட்டுரையாளர் அழகர் உரையிலிருந்து காட்டியிருக்கும் சான்றுகள் போற்றத்தகுந்தவை. குறிப்பாக  ‘அனுவாதம்’ பற்றிய பதிவு, கட்டுரையாளரின்  ‘நுண்ணியம் அளக்கும் கோலாக’ அமைந்திருக்கிறது.

    6. பின்னால் நிற்கும் அதிகாரப் பொருண்மைகள் அத்தனையையும் நோக்கியபின் ‘செய்யுள் நோக்கிப் பிறழவைத்தார்’ என்னும் அழகரின்  ‘ஒரு தொடர் (தொடை) அமைதி’ அவருடைய உரைக்கோட்பாட்டையும் பொறுப்புணர்வையும் ஒருங்கே  சுட்டுகிறது. ‘திருக்குறள் ஓரலகு முறை உரை’ என்னும் கருதுகோளுக்குப் பொருத்தமான குறளுரையைத் தெரிவு செய்திருப்பது ஆய்வாளரின் உழைப்பைக் காட்டுகிறது.

    7. எதையெதையோ இலக்கியம் எனக் கருதி மயங்கும் தமிழியல் உலகம் இலக்கியத்தின் எலலாக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் அழகர் உரையைக் கற்றறியாமல் போனதால் ஏற்பட்டிருக்கும் புலமை இழப்பு இனியும் தொடர்தலாகாது எனக் கட்டுரையின் பயனாகக் கூறியிருப்பது கவனத்திற்குரியது.

    8. ஆய்வுக்கான கருதுகோள், நோக்கம், களம், எல்லை, நெறி முதலியவற்றை ஆய்வேட்டுச் சுருக்கம் (SYNOPSIS) போலல்லாது   மேற்கண்ட அனைத்தும் அடங்க, சுருக்கமாக ஒரே பத்தியில் கூறுவது கட்டுரையின் புறக்கட்டுமானத்தை இன்னும் செறிவாக்கும்.

    9. “ஒரு சாதாரண உரையாசிரியர் ‘படைகுடி’ (381) எனத் திருவள்ளுவரே நிரலாகச் சொல்லிவிட்டதால் ‘பின்னாலே உள்ள அதிகார வைப்புமுறையே  தவறு’ என்று இவரே அனைத்து அதிகாரங்களையும் மாற்றியமைத்து ‘இதுதான் வள்ளுவர் கருதியமைத்தது’ எனச் சாதித்திருக்கக்கூடும். என்று ஆய்வாளர் குறிப்பிடாமல் போனது பண்பாடு கருதி  போலும்!

    இத்தகைய உள்ளடக்க ஆய்வுகள் மனத்திற்கு அமைதியளிக்கின்றன. எனக்குக் கிட்டிய அமைதியும் மகிழ்ச்சியும்  ஆய்வாளர், பதிப்பாளர், படிப்பாளர் என அனைவருக்கும் கிட்டும் என்பது எனது நம்பிக்கை! ஆய்வாளருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!


     

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 16

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 16

    அவ்வைமகள்

     16. தோழமையின் பரிசுத்தம்

    மனித உறவுகள் பலப்பல – அவற்றுள் நட்பு – தோழமை என்னும் உறவு இன்றியமையாத ஒன்று.

    தனிமனிதர்கள், சமுதாயம் என்னும் தோப்பை உருவாக்க வேண்டுமெனில், அதற்கு நட்பே நிலமாக, வித்தாக, நீராக, எருவாக, களைநீக்கியாக, வேலியாக, எல்லாமுமாக அமைகிறது என்பதைத் தெற்றென விளக்கியவர் வள்ளுவர் ஒருவரே.

    செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்குரிய யாவுள காப்பு

    என்று நட்பியலைத் துவங்கும் வள்ளுவர் நட்பின் கூறுகள் ஒவ்வொன்றையும் தனது குறட்பாக்களில் விண்டு விண்டு வைத்து வாக்கியச் சாட்டையால் விளாசித் தீர்க்கிறார்.

    நட்பியலின் பதினாறு அதிகாரங்களில் மட்டுமல்ல; திருக்குறளில் பல்வேறு பிற இடங்களிலும் கூட நட்பின் சிறப்புக்கள் வெளிப்படுகின்றன. அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறன் இல் விழையாமை பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம், ஒப்புரவு அறிதல், கல்லாமை, கூடாவொழுக்கம் ஆகிய அதிகாரங்களிலேயும் கூட நட்பின் பல கூறுகள் பேசப்படுகின்றன.

    இவற்றுக்கெல்லாம் மேலாக, வாழ்க்கைத் துணைநலம், இல்வாழ்க்கை, மக்கட்பேறு ஆகிய அதிகாரங்கள் தருகின்ற சித்தாந்தங்களிலே கூட நட்பின் மகத்துவதை, வள்ளுவர் மேம்படுத்துகின்ற பாங்கை நாம் மறப்பது எவ்வாறு?

    நட்பு – தோழமை என்கிற உறவை, வள்ளுவர் இத்துணை விரிவாகப் பேசுவதன் காரணம் அதன் முக்கியத்துவமே.

    வள்ளுவரின் நட்பு பற்றிய கருத்துக்களை ஆராதனை செய்தவன் பாரதி. கண்ணன் என் தோழனில், வள்ளுவரது நட்பியல் பரிமாணங்களை நீளவகலத்தோடு அவன் ஆழமாக ஏன் ஆக்ரோஷணமாகவே  பிரதிபலிக்கிறான்.

    உள்ளத்திலே கர்வம் கொண்ட போதினிலே
    ஓங்கியடித்திடுவான் – நெஞ்சில்
    கள்ளத்தைக் கொண்டொரு வாரத்தை  சொன்னால் அங்கு
    காறி உமிழ்ந்திடுவான் -சிறு
    பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட
    பாசியை எற்றிவிடும் – பெரு
    வெள்ளத்தைப்போல் அருள் வார்த்தை சொல்லி
    மெலிவு தவிர்த்திடுவான்

    வள்ளலாரும் ஸ்டீவ் ஜாப்சும் என்ற தலைப்பின் கீழ், நாம் இருவர் பற்றியும், பேசி வரும் இத்தருணத்தில், நட்புக்கு இங்கே என்ன வேலை என்று எண்ணத் தோன்றும்.

    ஸ்டீவ் ஜாப்ஸ் செய்த தொழிற்நுட்பப் புரட்சி, சமுதாயம் தழுவிய உலகளாவியதொரு புரட்சி. இந்தப் புரட்சி, தொழிற்கூடம், தொழிற்பணிகள், பணியார்களுடனான தொடர்பு, அவர்களோடு தோளுடன் தோள் நின்று பணிசெய்வது, இரவு  பகல் பாராமல் பணிசெய்யுமாறு அவர்களை ஊக்கப்படுத்தி   நெறிமுறை செய்வது என்பதோடல்லாது, வணிகம், பண மாற்று லாப நிர்வாகம், மக்கள் தொடர்பு, ஊடகத் தொடர்பு, கூட்டங்களை ஏற்பாடு செய்வது, கூட்டங்களில் பேசுவது, பத்திரிகை யாளர்களுடன் பேசுவது என எத்தனையோ பணிகளை உள்ளடக்கியது.

    இவை எல்லாப் பணிகளிலும் ஒன்று மையமானது – ஆதாரமானது – அதுவன்றி மற்றைவை எவையும் நடக்கா – இயங்கா எனும்படியான ஒன்று உண்டு என்றால் அதுதான் நட்பு – தோழமை. மிகக் குறிப்பாக, ஜாப்ஸின்  நிறுவனமான ஆப்பிளில், பணி செய்தவர்களிடம் அவரது தோழமை என்கிற தலைப்பில் நமது விவாதம் மிக முக்கியமானது.

    இங்கு, முதலில், ஸ்டீவ் ஜாப்சிற்கு நட்பு உணர்வு – தோழமை நேசம் இருந்ததா – இருந்திருந்தால் – அது எவ்வாறு இருந்தது என்பதே நம் சிந்தனை.

    இத்தருணத்தில், மீண்டும் நாம் வள்ளுவனிடம் சென்றாக வேண்டும்.

    அறம், பொருள், இன்பம் என முப்பாலையும் முனைப்புடன் தந்திட்ட வள்ளுவத்தில், பொருட்பாலை ஏழு இயல்களாகப் பிரித்தல் மரபு: அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என்று. இதில், குடியியலுக்கு முன்பாக, படையியலுக்குப் பின்னாக, நட்பியலை வள்ளுவர் வைத்த நேர்த்தி இருக்கிறதே அப்பப்பா! அதனை எண்ணுந்தோறும்  எண்ணுந்தோறும் நம்முள் பரவசம் பெருகும்.

    குடிமைக்கு நட்புதான் முதன்மை – மற்றவை எல்லாம் அப்பால் என்று அநாயாசமாய் வள்ளுவன் சொல்லிப்போன பெற்றியைப் போற்ற வார்த்தைகள் போதா.

    ஆம்! வள்ளுவன் காட்டியது போல, ஒரு நிறுவனம் என்பது குடிமை, அது ஒரு நாட்டின் நிர்வாகம் போன்றது. நிறுவனம் நாடென்பதால், ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஒரு நாட்டின் மக்கள் போன்றவர்கள். நிறுவனத்தின் தலைவன் அரசனே போலாகிறான்.

    இந்நிலையில், அரசனைப் பற்றி வள்ளுவன் கூறுவதைக் கவனிப்போம்:

    காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்

    காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும் என்பது இக்குறளின் பொருள்.

    மன்னனின் நிலம் மீக்கூறுவதற்கு இரட்டைக் கட்டளையை விதிக்கிறார் வள்ளுவர். தோற்றத்தில் எளிமை – கடுஞ்சொல் இல்லாமல் இருப்பது.

    தோற்றத்தில் எளிமையானவர் என்பது ஜாப்ஸின் மாபெரும் அடையாளம்தான். அவர் எளிமையை உலகே அறியும் – அதுவும் இன்றைய ஊடகங்களில் வலம் வரும் அவரின் உருவப் படங்கள் மீண்டும் மீண்டும் அவரது எளிமையைப் பறைசாற்றுவதை நாமறிவோம். எனவே அவரது தோற்ற எளிமை நமது விவாதப் பொருளாக இருக்க இயலாது.

    அதேநேரத்தில், தோற்றத்தின் எளிமையால் மட்டுமே ஒருவன் பிரசித்தி பெற்ற நல்ல தலைவனாக மாறிவிட இயலாது என்று வள்ளுவர் ஏற்கனவே சொல்லிவிட்டதால் ஸ்டீவ் ஜாப்ஸின் பிரசித்தத்திற்கு அவர் எளிமைத் தோற்றம் மட்டுமே காரணமாய் இருந்திருக்க வாய்பில்லை என்று கொள்வோம்.

    தோற்றத்தின் எளிமையோடு வாக்குக் கடுமை இல்லாது இருந்தாலொழிய தலைவன் உருவாவதில்லை என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கடுஞ்சொல் அற்றவராய் இருந்தாரா என்பதை நாம் பரிசோதிக்க வேண்டியிருக்கிறது.

    கடுஞ்சொற்கள் ஒருவர் வாயில் –உருவாகுவது எவ்வாறு என்று பார்த்தால், பளிச்சென்று தெரியும் மூன்று காரணங்கள் உண்டு. (1) அதிகாரத் திமிர் (2) தனக்கு எல்லாம் தெரியும் என்பதான தலைக்கனம்; (3) கீழ்மையான பழக்கவழக்கங்கள்/சொல்லாடல் உள்ள குடும்பத்தில் பிறந்திருப்பது அல்லது – கீழ்த்தரமான நண்பர்களுடன் சேர்க்கை வைத்திருப்பது என்று.

    ஒரு மன்னனுடைய – தலைவனுடைய வாயில் கடுஞ்சொற்கள் உருவாவதற்கு மூன்றாவது  காரணம் ஏற்பு இல்லாத ஒன்றாகவே இருக்கும். எனவே பெரும்பாலும், அதிகாரத் திமிரும், தனக்கு எல்லாம் தெரியும் என்கிற தலைக்கனமுமே ஒரு மன்னனை- ஒரு தலைவனைக் கடுஞ்சொல் பேச வைக்கும்.

    ஸ்டீவ் ஜாப்சைப் பொருத்தவரை அதிகாரத் திமிரும், தனக்கு எல்லாம் தெரியும் என்கிற தலைக்கனமும் கொண்டவராக எவராலும் சித்தரிக்கப்படவில்லை என்பதனாலும், அவரும் அவரது நிறுவனமான ஆப்பிளும் பிரசித்தம் அடைந்தவை என்பதனாலும்  அவர் கடுஞ்சொல் பேசாதவர் என்று முடிவு செய்துவிட்டுப் போய்விடலாம்.

    ஆனால், பழகுபாங்கில் ஜாப்ஸின் சொல்லாடலின் தன்மை உண்மையிலேயே எவ்வாறு இருந்தது என்பதை  அறிந்துகொண்டு அதன்பின் இதுபற்றி முடிவு செய்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்.

    ஸ்டீவ் ஜாப்சின் ஆப்பிள் நிறுவனப் பணியாளர்கள் பெரும்பாலாருடைய ஒருமித்த கருத்து என்னவென்றால், ஜாப்ஸ் பேச்சிலே நெளிவு சுளுவு இருக்காது – கண்டிப்பும் அழுத்தமும் எப்போதும் இருக்கும் – பல தருணங்களில் கேட்பவர்களுக்கு அதைச் சுலபமாய் எடுத்துக் கொள்ளவியலாது!  குறிப்பாக, பணியில், “இதைசெய்வது கடினம்” என்று பணியாளர் எவரேனும் சொன்னால் அதை அவர் ஏற்றுக்கொள்ளவே மாட்டார் – என்பதே!

    இந்த விமரிசனத்தைக் கேட்ட மாத்திரத்தில், ஜாப்ஸ் தலைக்கனம் பிடித்த தற்குறி, கடுஞ்சொல் உடையவர் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அது அப்படி இல்லை.

    ஜாப்ஸின் அணுகுமுறை எவ்வாறானது என்பதை விளக்க ஒரு எடுத்துகாட்டை  நமக்கு அளிக்கின்றனர் ஆப்பிள் பணியாளர்கள்.

    தமது அலுவலகத்தில், ஜாப்ஸ் ஒருநாள், லாரி கென்யன் என்ற பெயருடைய ஒரு பொறியாளரின் அறைக்குள் நுழைகிறார். நுழைந்து கென்யனிடம், மேகின்டாஷ் இயக்க தளம் (Macintosh Operating System) இயக்கத் துவங்குவதற்கு (booting time) அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதே என்று புகார் செய்கிறார். கென்யன் ஜாப்சிற்கு விடையாக, இயக்கத் துவக்கம் தாமதமாவதற்கான காரணங்களை எடுத்துச் சொல்கிறார்.

    ஜாப்சோ, கென்யன் தந்த விளக்கத்தைக் கேட்கக் கூட விரும்பவில்லை என்பார் போல – கென்யன் பேசிமுடிக்கும் முன்பே குறுக்கிட்டுப் பேசுகிறார். “அது ஒருவரது வாழ்வைப் பாதுகாக்கும் என்பதாக எடுத்துக்கொண்டு, , மேகின்டாஷ் இப்போது இயக்கத் துவக்கத்துக்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசத்திலிருந்து ஒரு பத்து வினாடிகளைக் கத்தரித்து எடுத்து விடமுடியுமா?” என்றபடியே மடமடவென வெண்பலகைக்குச் சென்று   ஒரு கணக்கு போட்டுக் காட்டுகிறார். “ஐம்பது லட்சம் பேர் மேகின்டாஷ் பயன்படுத்துவதாகக் கொள்வோம். ஒருவருக்கு பத்து வினாடிகள் என்று எடுத்துக் கொண்டால், ஆண்டொன்றுக்கு முன்னூறு லட்சம் மனித மணிகளாகும். இது நூறு பேரின் முழு வாழ்நாளாகும்!” என்று சுருக்கென நறுக்குத் தெரித்தாற்போல் சொல்லிவிட்டு,  கென்யனின் அறையை விட்டு வெளியேறுகிறார்.

    கென்யனுக்கு, இதனால் ஜாப்ஸின் மீது கோபம் கொப்புளித்ததா? அவர் ஜாப்சை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தினாரா? அல்லது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆப்பிளை விட்டு வெளியேறினாரா?

    இல்லை!

    மாறாக – சில வாரங்களிலேயே இருபத்தி எட்டு வினாடிகள் சீக்கிரமாக மேகின்டாஷ் இயக்கத் தொடங்குமாறு செய்தார் ஜாப்ஸ் கேட்டது வெறும் பத்து வினாடிகள்  மட்டுமே.

    ஆட்களைத் தட்டிகொடுத்து வேலை வாங்க வேண்டும் என்று சொல்வார்களே அதைப் போன்றது இது. தட்டிக் கொடுப்பது என்பதனைச் சவால் தருவது என்பதாகக் கொண்டவர் ஜாப்ஸ் என்பது புரியும்.

    சிந்தித்துப் பாருங்கள் – தட்டிக் கொடுப்பது என்பது வேலை செய்யாதவனை வேலை செய்யவைப்பதான பாணி. அங்கே வேலை செய்யா ஒருவனை ஊக்குவிப்பதுதான் நோக்கம் – இங்கே, பணியின் தரம் முக்கியமில்லை – நீ எப்படி செய்தாலும் பரவாயில்லை – நீ வேலை செய் என்பதான நிலை அது. ஆனால், ஜாப்ஸின் துறை முன்னோடியான தொழில்நுட்பத்துறை – ஆப்பிளுக்கு வேலைக்கு வருபவர்கள், வேலை செய்ய விழையாமல் வருவதில்லை – அத்தகைய நபர்கள் தெரிவு செய்யப் படுவதுமில்லை. ஒருவேளை எதோ தவறுதலாக வேலை செய்ய விழையா நபர்கள் எவரேனும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பின், அவர்கள் தக்க வைக்கப்படமட்டார்கள் என்பது ஆப்பிளில் ஒரு நெறி முறை – ஏனெறால் – அது ஒரு தொழில்நுட்ப நிறுவனம்  – இங்கே பொருட்கள் விற்பனையாகி வியாபாரம் நடக்கவேண்டும் அன்றேல் இங்கே பிழைப்பு நடக்காது. உருவாக்கப்படும் பொருட்களின் தரமும் உழைப்பும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு இசைந்தனவாய் இருந்தால்தான் பொருட்கள் விலை போகுமே தவிர வேறெந்த ஒன்றாலும் இல்லை. பொருட்கள் வியாபாரச் சந்தையில் தோற்றதென்றால் ஒரு தொழில்நுட்பப் பணிச்சாலையை நடத்தமுடியாது. எனவே தான், சவால் தந்து ஊக்குவிக்க வேண்டிய நிலைப்பாட்டை ஜாப்ஸ் எடுக்க வேண்டியவராகிறார்.

    ஆப்பிளில், ஒவ்வொரு தொழிலாளிக்கும் சவால் என்றால் அது நித்திய சவால். வினாடிக்கு வினாடி, நிமிடத்திற்கு நிமிடம், மணிக்கு மணி, நாளுக்கு நாள் என்பதான தொடர்ந்த சவால்கள் அவர்கள் முன்னே இருக்கும். உலகின் அதிபிரமாதமான பொருட்களை உருவாக்க வேண்டும் என்று ஓயாத சவால். இதுதான் ஆப்பிளின் நித்தியக் கட்டளை.

    இவ்வாறான தொடர் சவால் நிலையும், அதற்கான தொடர் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய நிலைமையினால், “நீங்கள் பயமுறுத்தப்படுவதாக நினைக்கவில்லையா?” என்று கேட்டபோது , அந்தப் பணியாளர்கள் என்ன சொன்னார்கள்  தெரியுமா?

    “ஜாப்ஸின், உலகின் அதிபிரமாதமான பொருட்களை உருவாக்கவேண்டும் என்கிற ஆவல் உன்னதமான காரணத்திற்கானது. தொழில்நுட்பத்தின் மூலம் உலகை மாற்ற வேண்டும் என்பது ஜாப்ஸின் ஆசை. இதுகாறும் எவையெல்லாம் செய்ய இயலாது என்று உலகமக்கள், நினைத்திருந்தார்களோ, அவ்வகையான அற்புதச் செயல்களை அவர்கள் செய்யுமாறு அவர்களை தொழில்நுட்பத்தின் மூலம் பலப்படுத்தும் புனித நோக்கம் இது!”  (அடிக்குறிப்பு  1 ஐ க் காண்க)

    மீக்கூறும் மன்னன் நிலமாக ஆப்பிள் நிறுவனம் – மன்னனாக ஜாப்ஸ் என்பதற்கு ஜாப்ஸ் தனது  நிறுவனத்தில் பணிசெய்த ஊழியர்களிடம் காட்டிய தோழமையும், அவர்களுக்கு ஜாப்ஸ் தெரிந்தெடுத்துக் கொடுத்த ஊக்கச் சொற்களுமே என்பதை சொல்லாமல் இருக்க எவராலும் முடியுமோ?

    இதைத்தான் பாரதி “பெருவெள்ளத்தைப்போல் அருள் வார்த்தை சொல்லி
    மெலிவு தவிர்த்திடுவான்” என்று சொன்னானோ?

    ஆப்பிள் பணியாளர்களுக்கு, சவால்களோடு  இன்னுமொரு ஊக்க சக்தியும் ஜாப்சிடம் இருந்து வந்தது அதுதான் அவர் நெகிழ்ந்து கண்ணீர் வடிப்பது. செய்யமுடியாத சாதனை ஒன்றைப் பணியாளர்கள், ஆப்பிளில், நிகழ்த்திவிட்டார்கள் என்றால் ஜாப்ஸ் அழுது கரைந்துவிடுவார். அந்த நெகிழ்வில் ஜாப்ஸ் தமக்குத் தந்த சவாலில் தாம் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்து போக, அடுத்து வரப்போகிற இன்னும் பெரிய சவாலுக்குப் பணியாளர்கள் காத்திருப்பார்களாம்.

    அவரது நெகிழ்ந்து கரையும் தன்மை பற்றி, ஐசக்சன் (ஜாப்ஸின் சரிதையை எழுதியவர்) கேட்டபோது, அப்போதைக்கப்போது நான் பரிசுத்தத்தின் முன்னிலையில் இருப்பதைக் காண்கிறேன் – அது ஆத்மப்  பரிசுத்தம் – அன்பின் பரிசுத்தம்.  (அடிக்குறிப்பு – 2 ஐக் காண்க)

    ஜாப்ஸ் தங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையம் விசுவாசத்தையும் ஆப்பிள் பணியாளர்கள் சிலாகிக்க, பணியாளர்களின் விசுவாசத்தை ஆத்மப்  பரிசுத்தம் – அன்பின் பரிசுத்தம் என்று ஜாப்ஸ் சிலாகித்த  காதல் அடியார்கள் மீது, இறைவன் அன்புறுவதும்; இறைவனின்பால் அடியார்கள் அன்புறுவதுமான காதல் போன்ற அளப்பெரும் தன்மையுடையது.

    காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, நெக்கு உள்ளார்வம் மிகப்பெருகி நினைந்து, நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்   – என்னும் திருஞானசம்பந்தரின் தேவார வரிகள் நம்முள் ஆற்றா இன்பமாய் அலர்ந்து அலைசெய்வதான நெக்குருகும் நேரமிது.

                                                                   (மேலும் பேசுவோம்)

                                                                    

    அடிக்குறிப்பு

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 18.1

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 18.1

    மீனாட்சி பாலகணேஷ்

     (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பத்துப்பருவங்களுக்கும் மிகுதியான விளையாட்டுப் பருவங்களும் நிகழ்வுகளும்தான் பிள்ளைப்பருவத்தை இனிமையுடையதாகச் செய்கின்றன. பிள்ளைத்தமிழுக்கென இலக்கணம் வகுத்த நூல்களும் அதிகப்படியான பருவங்களைப் பாட வாய்ப்புள்ளதனை நன்கு விளக்குகின்றன. இனி இத்தொடரில் அவையனைத்தையும், அவை அமைந்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்களிலிருந்து ஒவ்வொன்றாகக் கண்டு இன்புறலாம்.

    பிங்கல நிகண்டு பெண்பால் பிள்ளைத்தமிழுக்குப் பத்தொன்பது பருவங்களை விவரிக்கின்றது. இப்பருவங்கள் காப்பு, செங்கீரை, சொல்வதைக்கற்றல், அமுதூட்டல், தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய இருபாலருக்கும் பொதுவான பருவங்களுடன், மூன்றாம் ஆண்டில் தான்விளையாடும் பாவைக்கு ‘மணம் பேசுதல்’ (குழமணம் மொழிதல்), ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுவரை மன்மதனையொத்த கணவனைப்பெறக் ‘காமநோன்பு நோற்றல்’, குளிர்ந்த நீராடல், பதுமைகளை (பாவைகளை) வைத்து ‘பாவைவிளையாடல்’, அம்மானையாடல், கழங்காடல், பந்தடித்தல், சிறுசோறு அடுதல், சிற்றில் இழைத்தல், ஊசலாடல் எனும் பருவங்களுள் சிலவற்றையோ பலவற்றையோ கொண்டு அமையும். இவையே பத்தொன்பது பருவங்களாகும்.

    ‘பேணும் சிறப்பிற் பெண்மக வாயின்
    மூன்றா மாண்டிற் குழமண மொழிதலு
    ஐந்தின் முதலா யொன்பதின் காறு
    மைங்கணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
    பனிநீர் தோய்தலும் பாவை யாடலும்
    அம்மனை கழங்கு பந்தடித் தாடலுஞ்
    சிறுசோ றடுதலுஞ் சிற்றி லிழைத்தலும்
    ஊச லாடலும் மென்றிவை யுள்ளிட்டுப்
    பேசிய பெண்பாற் பிள்ளைப் பாட்டே,’1 என பிங்கல நிகண்டு கூறுகின்றது.

    திவாகர நிகண்டு இதிலிருந்து சிறிது வேறுபட்டு இருபால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான காப்பு, செங்கீரை, தால், அமுதூட்டல், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களையும், பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கான குழமணம் மொழிதல், ஐங்கணைக்கிழவனை ஆர்வமொடு நோற்றல், பனிநீர் தோய்தல், பாவையாடல், சிறுசோறடுதல், சிற்றிலிழைத்தல், ஊசலாடல் ஆகிய பதினான்கு பருவங்களைக் கூறுகிறது.

    உலகவழக்கில் பெண்குழந்தைகளான சிறுமியருக்கென்று சில இனிய விளையாடல்கள் அமைந்துள்ளன. அவை தமது தாய்மார், வயதில் பெரிய பெண்களான அக்காள்மார் மற்றும் உறவினப்பெண்டிர் இவர்கள்  மனையில் குழந்தை வளர்த்தல், சமையல் செய்தல், குடும்பநலன் பேணுதல், தம் மக்களுக்கு மணம்பேசி முடித்தல் ஆகிய வாழ்வியல் தொடர்பான செயல்களைக் கண்டு, தாமும் அவ்வாறு செய்ய ஆசைகொண்டு, சிறு பெண்குழந்தைகளால் பாவனையாக, பொய்யாக விளையாடப்படும். இதுவே ‘பொய்தல் விளையாட்டு’ என வழங்கப்பட்டது. தமக்கென மணலாலும் தழைகளாலும் ஒரு சிறுவீட்டினைக் கட்டிக்கொண்டும், பாவைகளைக் குழந்தைகளாகக் கருதிக்கொண்டு கருத்தோடு பேணியும், சமையல் முதலானவற்றைச் செய்வதுபோல பாவனை செய்து கணவன் முதலானோருக்கு உணவளித்தும், தம் மக்களுக்குத் திருமணம் செய்வது போலப் பாவைகளுக்கு மணம்பேசி முடித்தும் சிறுமிகள் விளையாடுவர். இந்தப் ‘பொய்தல் விளையாட்டி’னுள் பாவை விளையாடல், குழமணம் மொழிதல், சிற்றிலிழைத்தல், சிறுசோறு அடுதல் ஆகிய நான்குமே அழகுறக் கலந்து விரவி அமைந்துள்ளதனைக் காணலாம்.

    இவற்றுள் குழமணம் மொழிதல் எனும் பருவம் மட்டுமே எந்தப் பிள்ளைத்தமிழிலும் தனிப்பட எடுத்துப் பாடப்படவில்லை.

    சிற்றில் இழைத்தல் பருவம், சிறுமியர் வண்டல் மணலினால் ஆற்றங்கரையில் சிறிய வீடுகளைக் கட்டி விளையாடுவதனை விளக்கும். இதே பெயர்கொண்ட சிற்றிற்பருவம் ஆண்பாற் பிள்ளைத்தமிழில், சிறுமியர் இழைத்த சிற்றிலை சிறுவர்கள் அழிப்பதாகவும், சிறுமியர் அவ்வாறு செய்யவேண்டா என அவர்களை வேண்டுவதாகவும் அமையும். இதனைப் பெண்பால் பிள்ளைத்தமிழில் ‘சிற்றில் பருவம்’ அல்லது ‘சிறுவீட்டுப் பருவம்’ எனவும் கூறுவர். இதுவன்றி, ‘சிறுசோற்றுப் பருவம்’ எனும் ஒரு பருவமும் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழில் காணப்படுகின்றது. இவை அனைத்தையுமே சிறுமியர் விளையாடும் பாவனை விளையாட்டான ‘பொய்தல் விளையாட்டி’ன்  அங்கங்கள் என சங்க இலக்கியங்கள் கூறும்.

    ‘மணம்கமழ் மனைதொறும் பொய்தல் அயர2,’ என மதுரைக்காஞ்சியும்

    ‘ஆடுவார் பொய்தல் அணிவண்டு இமிர் மணல்3,’ எனப் பரிபாடலும் கூறுகின்றன.

    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் (ஆண்பாற்) சிற்றிற்பருவத்துப் பாடலொன்று சிறுபெண்கள் ‘பாவனை’யாக, பொய்யாக விளையாடும் விளையாட்டினை நயமுற விளக்குகிறது.

    தாம் பாடுபட்டு இழைத்த சிற்றிலை உதைத்து அழிக்க ஓடோடிவரும் சிறுவன் முருகனிடம் சிறுமியர், நயமாகவும், கெஞ்சியும், சாமர்த்தியமாகவும், ‘ஒளி பொருந்திய குளிர்ந்த முத்துக்களாலான அரிசியும், அதற்கு உலைபெய்த நறுந்தேனும் கவிழ்ந்து சிதறாதோ? சமைக்கும் பாண்டமான நந்தின் கடமான சங்கு உடைந்து போய்விடாதோ? மாதுளைமலர்களைப் பெய்து நாம் அமைத்த உலைத்தீ அவிந்து விடாதோ? பவளக்கொடிகளால் எம் சிறுவீட்டிற்கு நாம் ஆசையாக இட்டுள்ள விளக்கு அணைந்துவிடாதோ? நாங்கள் (பாவைத்) திருமணம் எனக்கூறிச் செய்துவைத்துள்ள விருந்து வீணாகப் போகாதோ? (பாவனையாக) முலைப்பாலருந்துவித்து உறங்க வைத்துள்ள எமது மகவு (பாவை) தாமரை போன்ற தனது கண்களை விழித்தெழுந்து தேம்பி அழும் அல்லவோ? ஆகவே எமது சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்,’ என வேண்டுவதாக அமைந்த பாடல்.

    ‘நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே
                னுளையுங் கவிழாதோ
    நந்தின் கடமு முடையாதோ நளிமா
                 துளைத்தீ யவியாதோ..
     ………………………………………
                அடியேம் வதுவையெனச்
    சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா
                விருந்தும்4………………………..,‘ என்பன பாடல் வரிகள்.

    தமது தாய்மார்கள் செய்வதுபோல, வீட்டை சுத்தம் செய்வதும், அடுப்பில் உலையேற்றிச் சமைப்பதும், குழந்தையை நீராட்டி, அதற்குப் பால்கொடுத்து, உறங்க வைப்பதும் இவர்களுடைய விளையாட்டு. எதிர்காலத்தில் தாம் ஆற்றவேண்டிய கடமைகளுக்காக இப்போதே தயாராகிறார்கள் போலுள்ளது! இதுவே சின்னஞ்சிறுமிகளின் மனோபாவம்! பொங்கிப்பெருகும் தாய்மை உணர்வை இச்சிறு பிராயத்திலிருந்தே வெளிப்படுத்தும் குழந்தைத்தனம் நிறைந்த அழகு இதுவே! இது ஆண்பாற் பிள்ளைத்தமிழானதனால் சிறுவீடு கட்டுவதும், சிறுசோறு சமைப்பதும், பாவை விளையாடலும் அதனுள் ஒரு அங்கமாகக் குழமணம் மொழிதலும் ஒருங்கே கூறப்பட்டுள்ளன. பொய்தல் விளையாட்டின் ஒரு  அங்கமான ‘குழமணம் பேசுதல்’ இப்பாடல் ஒன்றில் மட்டுமே சுட்டப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் “மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே5,” எனும் பாடல், “ஆற்றோரம் மணலெடுத்து, அழகழகாய் வீடுகட்டி6,” எனும் பாடல் ஆகியன இக்கருத்தின் அடிப்படையிலேயே எழுந்ததெனலாம். இன்றளவும் சின்னஞ்சிறுமியர் பொம்மைகளைக்கொண்டு பலவிதமான விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வதனையும் காணலாம்.

    இவை தொடர்பான நிகழ்வுகளே பெண்பால் பிள்ளைத்தமிழில் பாவை விளையாடல், சிற்றிலிழைத்தல், சிறுசோறு அடுதல் என்ற மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுப் புலவர்களின் கற்பனைக்கேற்பப் பாடப்பட்டுள்ளன. குழமணம் மொழிதலின் விரிவான விளக்கங்களை எப்பிள்ளைத்தமிழிலும் காணக் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே!

    ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் மட்டுமே காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி ஆகிய முதல் ஏழு பருவங்களுடன், சிற்றில் பருவம், சிறுசோற்றுப் பருவம், காமநோன்புப் பருவம் என சில புதுமையான பருவங்களுடன் மொத்தம் பதினோரு பருவங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

    சிற்றில் பருவமானது பெண்பால் பிள்ளைத்தமிழில் வழக்கமாகப் பாடப்பெறாது இருப்பினும், அது சிறுவீடு கட்டுதல், சிறுசோறு சமைத்தல் எனும் இரு செயல்களைக் கொண்டமைந்துள்ளமையால் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் இதனை இரு பருவங்களாக்கியுள்ளார் எனக் கருதலாம். சிறுமியர் விளையாட்டும் இத்தகைமைத்தே என்பதனைக் கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் சிற்றிற்பருவத்துப் பாடலொன்றின் கருத்திலிருந்து காணலாம். அதில் சிற்றிலிழைத்த சிறுமியர், சிறுசோறாக உண்ண சிறுவன் கணேசன் கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களுக்காகக் காத்திருப்பதனைக் காணலாம். பொய்யாக, மணலையும், சிறுமுத்துக்களையும் அரிசி எனக்கூறிப் பெய்து சிறுசோறு சமைத்த சிறுமியர், மற்ற சிறார்கள் தமது மனைகளிலிருந்து கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வர் என்பது கண்கூடு. சிறுவர்களும் இவர்களுடன் சேர்ந்து விளையாட்டிலும், விருந்திலும் பங்கேற்று மகிழ்வர் என அறியலாம்.

    ‘பெருத்தவயிறு தயங்க மெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
    பெரும் பண்ணியமுமேந்தியேம்பாற் பேணிவருநின் கரவினைக்கண்டு
    அருத்தியொடு……,’7

    என்பன பாடல் வரிகள். இப்பாடலின் விரிவான விளக்கத்தை ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றில்பருவத்தில் காணலாம். இனி, பெண்பால் பிள்ளைத்தமிழின் நயங்களைக் காணலாமா?
    சிற்றில் பருவம் (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    மிகச்சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் மட்டுமே சிற்றில்பருவம் எனத் தனியாக ஒரு பருவத்தில், இறைவி சிறுமியாக சிற்றிலிழைக்கும் மேன்மையைப் போற்றி மிகவும் இரசித்தும், பக்தியிலாழ்ந்தும், பலநயங்களைப் புகுத்தியும் பாடியுள்ளதனைக் காணலாம்.

    வயிரவன்கோவில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் நூலில் ஒன்பதாம் பருவமாக, நீராடலுக்கு மாறாக சிற்றிலிழைத்தல் (சிற்றில் பருவம்) பத்துப்பாடல்களில் பாடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு உயிரும் இருந்து வாழும்படி அவையவற்றிற்கு உரிய வகையில் வடிவுடையம்மையாகிய பராசக்தி வீடுகளை அமைக்கும் சிறப்பை விளக்கும் பாடலொன்றைக் காணலாம். பாடலே இனிய எளிய நடையிலமைந்துள்ளமையால் விளக்கம் தேவையில்லை!

    மூவருறை யுயர்வீடு முத்தியின் பென்றோது
                  முழுநிதியம் வைக்கும் வீடு
     மோனஞா னானந்த சிவயோக நிலைகண்ட
                  முனிவர்கள் வசிக்கும் வீடும்
    …………………………………………………….

    பாவிய சிறப்புமலி வீடுமாழ் பாதலம்
                  பற்றிவாழ் நாகர் வீடும்
    பகுத்துத் தனித்தனி யியற்றிவிளை யாடுநீ
                       ………………………………………..
    தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
                 யள் சிறுவீடுகட்டி யருளே8 என்பது பாடல்.

    மேலும் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்களில் காண்பதுபோல் இதுவும் அம்மை சிறுவீடமைப்பதனை உருவகமாக சிறுவர்களின் விளையாட்டான ‘பொய்தலாட்டயர்வ’தாகக் குறிப்பிடுகின்றது. எடுத்துக்காட்டாக ஒருபாடல் அவள் ஈரேழு உலகைப் படைத்தும் அதற்கு முத்தொழில் புரியும் அதிகாரிகளாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை நியமித்தும், சன்மார்க்க துன்மார்க்கங்களில் உயிர்களைச் செலுத்தியும், அதனைக் கண்காணித்தும் ஆகியன செய்வதனைப் பொய்தல் விளையாட்டு எனக் கூறுவதில் உள்ள கருத்தொற்றுமை வியக்கத் தக்கதாம்.

    ‘அண்டமென் றோதுபெரு வெளியிலீ ரேழுநகர்
                       ………………………………….
     பிண்டத் தினுந்தந்து பொய்தலாட் டயரும்
                     பெருந்தகைச் சிறிய விடையாய்
             ………………………………
    திண்டடஞ் சோவடுக நாதபுர மேவுபரை
                    சிறுவீடு கட்டி யருளே9,’ என்பன பாடல் வரிகள்.

    பின்னும் இதில் அன்னை உயிர்களுக்குத் தகுதியான உடல்களை எழுவகைத்தாதுக்கள் எனப்படும் இரத்தம், சுக்கிலம், மூளை, தசை, எலும்பு, நரம்பு, தோல் இவற்றோடு ஐந்துவகை பௌதிகப் பொருட்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியனவற்றைப் பொருத்தி இணைத்து எழுபத்திரண்டாயிரம் எண்ணிக்கையிலான நரம்புகளையும் அதனூடே இழைத்தும், மூன்றரைக்கோடி மயிர்களை வேய்ந்தும், ஒன்பது வாயில்களை அமைத்தும், இன்னபிற செய்வித்தும் பலவிதமான வீடுகளை உயிரினங்களுக்குச் சிற்றில் அமைப்பதுபோன்று படைக்கிறாள். அவை பழுதுபடின் வேறு வீடுகளை அமைத்துக் கொடுக்கிறாள். இவ்வாறு பிறப்பு, இறப்பு, பாவ புண்ணியங்களுக்கேற்ற மறுபிறப்பு ஆகியனவற்றை அருமையாக எடுத்தியம்பும் பாடலிது.

     ‘எழுவகைத் தாதுவினோ டைவகைப் பௌதிகமு
                  மேய்வித்து நீடி மல்கு
     மெழுபத் திரண்டா யிரத்தொகை நரம்பினையு
                       ………………………
     பழகுற வமைத்துமன் பதைகட்கு வாழ்வீடு
                  பற்பல விழைத்திட் டவை
     பழுதுபடின் வேறுமவ் வாறுபுரி யம்மையே
                       …………………………..
     தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
                  யள்சிறுவீடு கட்டி யருளே10,’ என்பது பாடல்.

    நுட்பமான கருத்துக்களாக உடலின் அமைப்பை விளக்கி அவற்றைச் சிறுமிகள் இழைக்கும் சிறுவீட்டின் அமைப்போடு ஒப்புநோக்குதல் வியக்கத்தக்கதாம். இதுபோலும் பொருளும் நயமும் மிக்க பத்துப்பாடல்கள் உள்ளன.

                                                              ****

    புதுவை திரிபுரசுந்தரியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப்பருவத்தைத் தவிர்த்து சிற்றிலிழைத்தல் பருவம்  எட்டாம் பருவமாக வைக்கப்பட்டு பத்துப்பாடல்களால் சிறப்புற பாடப்பெற்றுள்ளது. இவற்றுள் முதலைந்து பாடல்கள் அன்னை எவ்வெவற்றைக்கொண்டு சிறுவீடு கட்டுவது போன்று ஈரேழு உலகங்களையும் படைத்தருளுகிறாள் என விளக்குகிறது.

    ‘பொன்புற மிலங்குநெ டுவட்டவா ளக்குன்று
                   புரிசையா கத்திகாந்துப்
    புறக்கடற் கோட்டை சூழகழி யாத்திசைகள்11
                       ……………………………..’

    எனச் சிறுவீட்டின் அமைப்பையும், அதில் வாழும் உயிர்களைக் காக்க அவள் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்குப் பதவியளித்ததனையும் கூறுகிறது.

    ‘முத்தலைச் சூலமேந் திப்பொடி யணிந்தோங்கு
    மூரிவெள் விடையவர்க்கு
    முந்நீர் நிறங்கொண் டுமண்ணுண் டுவிண்ணீண்ட
    முண்டகக் கண்ணருக்கும்12…. என்பன பாடல் வரிகள்.

    இத்தகைய அருமையான கருத்துக்களைக் கொண்டமைந்ததால் இப்பருவத்தின் பாடல்கள் பெண்பால் பிள்ளைத்தமிழில்  சிறப்பாக விளங்குகின்றன.

                                                                                      (தொடரும்)

    பார்வை நூல்கள்

    1. பிங்கல முனிவர்- பிங்கல நிகண்டு
    2. மதுரைக்காஞ்சி, வரி 589.
    3. பரிபாடல், 20, வரி 23.
    4. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    5. தஞ்சை ராமையா தாஸ்- ‘காவேரியின் கணவன்’ திரைப்படப் பாடல், 1959
    6. கண்ணதாசன்- ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ திரைப்படப்பாடல், 1964
    7. சிவஞான முனிவர்- கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
    8, 9, 10. சேந்தன்குடி வி. நடராசக்கவிராயர்- வயிரவன் கோயில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
    11, 12. புதுவை முத்துக்குமாரன்-  திரிபுரசுந்தரியம்மை பிள்ளைத்தமிழ்

    Share