Blog

  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 5

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 5

    மீ. விசுவநாதன்

    “ஸ்ரீ சாதாவின் கட்டளை”

    சன்யாசி என்னைப் பார்த்து
    சாரதா கட்டளை போட்டாள்!
    “உன்னுடைய  சீட னாக
    ஒளிமிகு மகனையே  தந்தேன்
    நன்றென்றும் நடக்கு மென்று
    நாமகள் ஆசியும் செய்தாள்”
    அன்னவளின் வாக்கு தன்னை
    அருளுடன் உம்மிடம் சொன்னேன்” (41)

    “ஆனந்தம்”

    என்று குருநாதர் சொல்ல
    இன்பத்தில் தந்தை மூழ்கி
    நன்று நன்றென்றே அந்த
    ஞானகுரு முகத்தை நோக்கி,
    “என்றோ செய்துள்ள புண்யம்
    இன்றெங்கள் குலத்தைக் காத்துக்
    குன்றா வேதநெறி வாழும்
    கொடுப்பினையும்  தந்த தென்றார்!” (42)

    “தாயிடம் சொன்னார் தந்தை”

    நரசராவ் பேட்டை சென்று
    நடந்ததை எடுத்துச் சொன்னார்!
    பரமனின் செய்கை என்று
    பக்தியால் “தாயும்” ஏற்றார்!
    அரனவன் அருளின் ஊற்று
    அளித்ததாய் சுற்றம் சொல்ல
    சிரமதில் கைகள் வைத்து
    சிந்தையில் மகிழ்ந்தார் பெற்றோர். (43)

    “1974ஆம் வருடம்
    சீடரைத் தேர்வு செய்த குரு”

    நவராத்ரி முடிந்து தேரில்
    நாமகள் வலமும் வந்தாள்!
    சிவரூப குருவும் தேவி
    சிந்தையில் மூழ்கிப் பின்னே
    அவராக வெளியில் வந்து
    அங்குள பக்தர் பார்த்து
    நவகோளும் நன்மை செய்யும்
    நாளதில் சீடன் தேர்வு     (44)

    சிறப்பாக நடக்கு மென்றார்!
    சீதா ராமாஞ்ச நேயப்
    பிறப்புக்கு மாற்றாய் உள்ள
    பேறு சன்யாசம் தந்து
    முறையான சீட ராக்கி
    முன்னோர் குருவழியில் செல்வேன்
    பிறைகொண்ட பித்தன் உள்ளான்
    பிழையே துமின்றிதினம் காப்பான்!”  (45)

    “சீடரின் கவலையும், பணிவும்”

    சீடனாக இருக்கும் யோகச்
    சேர்க்கை எனக்குண் டாமோ?
    ஓடத்தில் உலகை வைத்தால்
    ஒழுங்காய்ப் பயணம் போமோ?
    பாடத்தை முறையாய்க் கற்றேன்
    பற்று விட்டேன் அல்லேன்!
    பீடத்தில் அமரும் சக்தி
    பிள்ளை எனக்குண் டாமோ?   (46)

    இப்படி எண்ணிய நெஞ்சுள்
    எதிர்க்குரல் கேட்ட தங்கே!
    “எப்படி ஏறினும் அந்த
    ஏணியாம் குருவே காவல்!
    தப்படி வைத்திடா ஞானி
    தருவது கொள்ளல் தர்மம்!
    அப்படி எண்ணியே நீயும்
    அடுத்தடி வைக்க வேண்டும்!”  (47)

    “சிஷ்ய சுவீகாரத்தின் முன்தினம்”
              (10.11.1974)

    முந்தைய நாளில் சீடன்
    முறையாகக்  குருவைப் போற்றி
    சந்திர மௌலீ மற்றும்
    சாரதாவை வணங்கி வந்தார்!
    அந்தியில் பூஜை கண்டு
    அஷ்டசிரார்த் தாமும் செய்தார்!
    புந்தியில் “ராம நாமம்”
    பொலிவுறவே இரவில் சொன்னார்! (48)

    (சிஷ்ய சுவீகார தினம் – 11.11.1974)

    காலையில் நீராடி சந்தியா
    கடமைகள் செய்தார்; ஹோமமும்
    மேலையோர் சொற்படியே செய்துபின்
    மேற்கிருந் துவரும் துங்கையில்
    மந்திர கோஷத்தில் குளித்தவர்
    மண்ணிலே யார்க்கும் அன்புடன்
    சந்திர கிரணம்போல் குளிர்ச்சியாய்த்
    தவத்தின துபலன் ஈயவும்              (49)

    உறுதி செய்தார்; பூணூல்
    உடனறுத்து நீரில் விட்டார்!
    அறுதி யிட்ட துறவை
    அவர்ஏற்ற வகையைப் போற்றி
    குருவும் அழைத்தார்; நூலோர்
    குழுவாக வேதம் ஓத
    அருவும் உருவு மான
    அதிஷ்டானம் வந்த டைந்தார்!    (50)

     (யாத்திரை தொடரும்)

    Share
  • ஈழத்து நாடக கலைஞர்: ஏ.ரகுநாதன்

    ஈழத்து நாடக கலைஞர்: ஏ.ரகுநாதன்

    முல்லைஅமுதன்

    ஈழத்தின் நாடக, திரைப்பட வரலாற்றில் மறந்திவிட முடியாத மாபெரும் கலைஞன் .ரகுநாதன் என்பதில் மாற்றுக்கருத்தேதுமில்லை.

    வாழ்நாளில் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர். 05/05/1935இல் மலேசியாவில் பிறந்தாலும், தன் சிறுபராயம் தொட்டே யாழ்ப்பாணம் நவாலியில் தன் தாயுடன் வாழ்ந்துவந்தார். தனது கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பயின்றார். நாடகக் கலைக்குப் பேர்போன மானிப்பாய், நவாலியில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்த மானிப்பாய் இந்துக் கல்லுரி பெரிதும் உதவியது.

    நானும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் பயின்ற காலத்தில் கல்லூரி இல்லங்களிடையே நடைபெறும் நாடகப்போட்டிகளில்  மத்தியஸ்தராக,பார்வையாளராக, சிறப்பு விருந்தினராக வந்து நம்மைப்போன்றவர்களை ஊக்குவித்ததும் இன்றும் மறக்கமுடியாதது.

    சுந்தரர் இல்ல போட்டி நாடகமான ‘மூன்று துளிகள்’  கலைஞர்  (அமரர்) நற்குணசேகரன் (1933 – 2020) இயக்கினார். நாடக ஒத்திகையின் போதும், அதன் பின்னரும் நாடகம் பற்றிய பல அரிய விடயங்களைப் பகிரும் ஒரு நண்பராய் திரு.ஏ.ரகுநாதன் ஆனார். கலை ஆர்வத்தில்  தன்  அரச பதவியே இராஜினாமச் செய்திருந்தார். கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நாடகங்களை அரங்கேறிய  அனுபவங்களைப் பலதடவைகள் என்னுடன் பகிர்ந்துள்ளார்.

    யாழ்ப்பாணத்தில்  லிபர்ட்டி  பிலிம்ஸாரின்  ‘உறங்காத உள்ளங்கள்’  திரைப்படத்தை  ஆரம்பித்து  அதற்கான  சில காட்சிகளும் படமாக்கப்பட்ட  சூழலில் அது தொடரமுடியாது போனது.

    ஏற்கனவே கடமையின் எல்லை, நிர்மலா, நெஞ்சுக்கு நீதி, தெய்வம் தந்த வீடு, புதிய காற்று போன்ற ஈழத்துத் திரைப்படங்களில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தாலும் நாடகமே தன் மூச்சு என அடிக்கடி சொல்வார்.

    கலையரசு  சொர்ணலிங்கம் அவர்களின் பாராட்டுடனும், பயிற்சியுடனும் ‘தேரோட்டி மகன் உட்பட பல நாடகங்களில் நடித்தார். தேரோட்டி மகன், சாணக்கியன், வேதாளம் சொன்ன கதை, அவனைக் கொன்றவள் நீ, சலோமியின் சபதம், பார்வதி பரமசிவம், ஆராவமுதா அசடா எனப்  பல நாடகங்கள் பலரின்  பாராட்டைப் பெற்றமையும்  இங்கு  குறிப்பிடத்தக்கது.

    1966இல் வெளிவந்த கடமையின் எல்லை திரைப்படத்திற்குப் பிறகு 1968இல் நண்பர்களுடன் இணைந்து ‘நிர்மலா’ எனும் திரைப்படத்தைத் தயாரித்தார். தமிழக திரைப்படங்களின் அனுபவம் மிக்க இவரின் நண்பரின் கைவண்ணமும் இணைய நல்லதொரு படமாக வெளிவந்தது. நல்ல விமர்சனங்களைப் பெற்றுத்தந்தாலும் நம்மவர்களின் தென்னிந்திய சினிமாமோகம் தயாரிப்பாளரின் கையைச் சுட்டுக்கொள்ளும் நிலைமை வந்தது. ஆனாலும் ரகுநாதனின் உற்சாகம் அதிகமாகவே ஏற்பட முனைப்புடன் செயல்பட்டார். அதன் தொடர்ச்சியாகவே வி. கே. டி. பொன்னுச்சாமியின் தயாரிப்பில் இலங்கையில் முதன் முதலில் சினிமாஸ்கோப் வடிவில் வெளிவந்த ‘தெய்வம் தந்த வீடு’ திரைப்படத்தை 1978இல் வெளியிட்டார். ஆர்வமுள்ளவர்களை, அனுபவம் மிக்கவர்களை தேடிச்சென்று ஊக்கம் கொடுப்பதுடன், தன்னுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் ஏற்படுத்தியவர்.

    பலதிரைப்படங்கள் வெளிவரவிருந்த சூழல், பல ஆரம்ப பூஜைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட படங்கள் எனச் சிறப்பான வெளிச்சம் வரவிருந்த சூழலில் தான் 83 ஜூலைக்கலவரம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. வாழமுடியாத சூழலிலே புலம்பெயர்ந்தார். தமிழகத்தில் இருந்த காலங்களிலும் தன் கலை முயற்சியை விடவில்லை.

    பின், பாரிஸ் வந்துசேரவே, கலைகள், கலைஞர்கள் சங்கமிக்கும் நாடாக பாரீஸ் இவருக்காகியமையினால், நாடகம், குறும்படங்கள், திரைப்படங்கள் எனத் தொடர்ந்தார். அவற்றுள் இன்னுமொரு பெண்முகத்தார் வீடுபேர்த்தி, நினைவு முகம்மௌனம், தயவுடன் வழிவிடுங்கள்தீராநதி, மீளுதல், தொடரும், முள்ளும் மலராகும், மாறுதடம், பூப்பெய்தும் காலம், தொடரும்அழியாத கவிதை, இனியவளே காத்திருப்பேன் (2012), WITNESS IN HEAVEN சாட்சிகள் சுவர்க்கத்தில் (2018) குறிப்பிடத்தக்கன.

    எனது வீட்டுக்கு வந்தபோது நிறையப் பேசிய பொழுதுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நமது கலைஞர்களை ஒன்றிணைத்து நீண்டது திரைத் தொடரை ஆரம்பிக்க இருப்பதாகச் சொன்னார். லண்டன் ஈழவர் திரைக்கலை மன்றம்/ஈழவர் சினி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ்  அமைப்பினரும்  இணைந்து செயல்பட்டதால் அங்கும் ரகுநாதனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 2009இற்குப் பின்னர் ஏற்பட்ட அசாதாரண  சூழலினால் ஈழவர் திரைக்கலை மன்ற செயல்பாடுகள் பற்றிச் சரிவரத் தெரியாததினால் ரகுநாதனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் இடையே தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு பேசுவதுண்டு எனினும் பிரான்ஸ் செல்லும் காலங்களிலும் சந்திக்கும் சூழலும் ஏற்படவில்லை.

    எழுத்தாளர் விபரத்திரட்டு ஒன்றினை வெளியிடும் ஆர்வத்தில் தொடர்புகொண்டு சில தகவலைப் பெற்றுக்கொண்டேன்.

    ஈழத்து நூல் கண்காட்சியினை ஆரம்பிக்கவென ஆயத்தங்களில் இறங்கியபோது முதலாவது வாழ்த்தைத் தெரிவித்திருந்தார். அதனையொட்டி ஆரம்பிக்கப்பட்ட காற்றுவெளியில் அவரின் நேர்காணலை வெளியிட வேண்டும் என்கிற ஆதங்கத்தைச் சொல்லியிருந்தேன். முடியாது போயிற்று. இலங்கையிலிருந்தபோது எப்படி என்னுடன் பழகினாரோ அதே போலவே பழகினார். காற்றுவெளி பற்றிப் பேசிய போதே இலங்கையில் நிழல் (1968) சஞ்சிகை நடத்தியதாகச் சொன்னார். இதனை அறிந்திருக்கவில்லை. புனிதலிங்கத்தின் ‘திரை’ சஞ்சிகையே ஓரளவு திரையுலக செய்திகளைத் தந்ததாக அறிவேன். இன்னும் வந்திருக்கலாம்.

    பாரீஸ் வந்தபின் ‘பாரிஸ் முரசு‘ பத்திரிகைக்கு ஆசிரியாராக இருந்தததாகச் சொன்னார். சில இதழ்களையும் பார்த்திருக்கிறேன். பல அனுபவங்களைப் பெற்றவரான ரகுநாதனிடம் வழமையாக எல்லோரிடமும் கேட்பது போல அவ்வனுபவங்களைக் கொண்டு நாவலாக எழுதலாமே எனக் கேட்டிருந்தேன். பார்ப்போம் என்றார். எனினும் ’தமிழன் இதழில் கலை அனுபவங்களை ஒரு ஒப்பனை இல்லாத முகம் எனும் பெயரில் எழுதியாகச் சொன்னார். அதே போல ‘எனக்காகப் பூக்கும் (1999)’ நாவலையும் தந்தார். திரைப்படத்திற்காக நினைத்திருந்ததை நாவலாக்கியதாவும் சொன்னார். இன்னும் எழுதக்கூடிய அனுபவங்களைக் கொண்டிருந்தவரால் எழுத முடியவில்லை என்றே நினைக்கிறேன். சிறுகதைகளும், கவிதைகளும் எழுதியிருப்பாதாக அறியும் பட்சத்தில் அவரின் படைப்புக்களைத் தேடும் முயற்சியும் படைப்பாளர்களின் கைகளுக்கு வருகின்றது.

    ஐரோப்பிய  கலைஞர்களின் ஒருங்கிணைப்பில் எந்தையும் தாயும்‘, ‘தூண்டில்காரன்  போன்ற நாடகங்களிலும் நடித்திருந்தார்.

    பறாளையூர் பிறேமகாந்தனின் ரோஜாப்பூ இதழுடனும் தொடர்பில் இருந்தார். தனது பங்களிப்பு இல்லையெனினும் அது நாடகமெனினும், திரைப்படமெனினும் அதன் வெளியீட்டிற்கு உதவியாக இருந்திருக்கிறார் என அறிய முடிகிறது. வாடைக்காற்று திரைப்படத்திற்கும் அவ்வாறே உதவியவர் என அறிய முடிகிறது.

    நல்ல வாசிப்பாளரும் கூட. ஆனாலும் நாவல்களை, சிறுகதைகளைப் படமாக்கும் ஆர்வம் இல்லாதவராக இருப்பினும், திரைக்கேற்ப கதைகள் இருப்பின் படமாகலாம் என்றும் சொல்லியிருந்தார்.

    மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நிர்மலாவின் புதிய பிரதியை மாணவர்களுக்காக  திரையிட்டார். நாடகத்திற்கான நடிப்பு, காட்சியமைப்பு, அதன் கட்டமைப்பு வேறு. திரைப்படத்திற்கான நடிப்பு, வடிவமைப்பு வேறு. அதனைக் கற்றுணர்ந்தவனே நல்ல நடிகனாக பிரகாசிக்க முடியும் என்பார்.

    எனது நாடக முயற்சிக்கெல்லாம் ஆலோசனை தந்தவர்களில் பா.சத்தியசீலன், வி.ரி.ஏ.விஷ்வா இவர்களுடன் கலைஞர்.ஏ.ரகுநாதனும் ஒருவர். எழுத்தாளர். அப்பச்சி மகாலிங்கம் அவர்களையும் அறிமுகம் செய்து தந்தார்.

    இன்று இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கையில் வெகுதூரம் வந்துவிட்டோம் எனினும் இவர்களிடமிருந்து பெற்ற அனுபவமே கடந்துவந்த பாதைகளின் சுவடுகளாய் அமைந்தன என்பேன்.

    வாழ்நாள் சாதனையாளரான கலைஞர்.ஏ.ரகுநாதன் இன்று நம்மிடையே இல்லை என்பது நெஞ்சம் கனக்கின்ற நாளாய் ஆகின்றது. வயதின் எல்லைகளும், நோய்களும் உடலை அலைக்கழிக்கும் போது கனவுகளுக்கான ஆயுளும் குறைந்தே போகுமோ?

    எவ்வளவுதான் சாதித்திருந்தாலும், எத்தனை உயரத்தின் உச்சிக்குப் போனாலும் ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் நிறைவடையாத கனவுகளும் இருந்திருக்கும்.

    எனினும், கலைஞர்.ஏ.ரகுநாதன் நமது ஈழத்துக் கலை உலகின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என்பதே உண்மை.

    கலையுலகின் வரலாற்றை இவர் பதிவு செய்திருந்தார். இவரின் வரலாற்றைக் காலம் பதிவு செய்யும். ஈழத்தின் நாடக, திரைப்பட கலைஞர்களை மறந்துவிட்டது போல ரகுநாதனின் பணியை கலைஞர்கள் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(298)

    குறளின் கதிர்களாய்…(298)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(298)

    கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
    முன்னின்று பின்னோக்காச் சொல்.

           – திருக்குறள் -184 (புறங்கூறாமை)

    புதுக் கவிதையில்…

    இரக்கம் ஏதுமின்றி
    எதிரில் நின்று
    ஒருவனைக் கடிந்து
    சொன்னாலும் சொல்லாம்..

    அவன்
    கண்முன் இல்லாதபோது
    பின்விளைவைப் பாராமல்
    அவனைப் பற்றிப்
    புறங்கூறும் சொல்லைப்
    பேசாதே…!

    குறும்பாவில்…

    கண்முன் ஒருவனைக்
    கடிந்து பேசிடினும், பேசாதே புறஞ்சொல்
    அவன் இல்லாதபோது இழிவாய்…!

    மரபுக் கவிதையில்…

    கண்முன் நிற்கும் ஒருவனிடம்
         கருணை நெஞ்சில் ஏதுமின்றி
    புண்படக் கடிந்து பேசிடினும்
         பெரிதாய் ஒன்றும் தவறில்லை,
    கண்முன் னவனே யிலாதபோது
         கருதா ததனின் பின்விளைவை,
    கண்ணிய மின்றிப் புறம்பேசும்
         கதைதான் என்றும் வேண்டாமே…!

    லிமரைக்கூ…

    கண்டித்திடு கண்களின் முன்னே
    கருணையிலாதே ஒருவனை, கருதாது பின்விளைவை
    புறம்பேசாதேயவன் போன பின்னே…!

    கிராமிய பாணியில்…

    பேசாத பேசாத
    பொறஞ்சொல்லு பேசாத..

    எரக்கமே இல்லாம
    எதுருல நிக்கிற ஒருத்தனக்
    கண்டிச்சி எதுவும் பேசலாம்..

    கண்முன்ன அவன் இல்லாதப்போ
    கட்டாயமா அவனப்பத்திப்
    பொறம்பேசாத,
    எதுவும் யோசிக்காம..

    அதால
    பேசாத பேசாத
    பொறஞ்சொல்லு பேசாத…!

    Share
  • திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை

    திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை

    கவித்தலம்  கை. அறிவழகன்

    திருவாரூர் மாவட்டத்தில் பேரளம் என்னும் ஊருக்கு அருகில்  அமைந்துள்ள ஊர்தான்  திருமீயச்சூர்  என்பதாகும். இவ்வூரில் அமைந்துள்ள பழமையான கோவில் மேகநாத சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் உள்ள இறைவி பெயர் லலிதாம்பிகை. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இக்கோவிலைப் பாடியுள்ளார். இந்தக்  கோவிலின் உள்ளேயே இளங்கோயில் ஒன்று உள்ளது. இதனைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது  56 ஆவது சிவத்தலமாகும்.  இந்தத்  தலத்தையும் இறைவனையும் பற்றித் தற்காலத்தில் எழுதப் பெற்ற நூல்தான் திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை என்பதாகும். இதனை இயற்றியவர் கவித்தலம் கை. அறிவழகன்  ஆவார் .

    திருவிரட்டை மணிமாலை என்பது காரைக்கால் அம்மையார் காலத்திலிருந்து புலவர்களால் தொன்றுதொட்டுப் பாடப்பட்டு வருகின்றது. இது  வெண்பாவும்  கட்டளைக் கலித்துறையும் விரவிய நடையில் அந்தாதி அமைப்பில் பாடப்படும். இதிலிருந்து சிறிது மாறுபட்ட நடையில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. கட்டளைக்கலித்துறை, அந்தாதி ஆகியவை இதில் பயின்று வரவில்லை. மாறாக வெண்பாவோடு விருத்தம் பயின்று வந்துள்ளது. பத்து நேரிசை வெண்பாக்களும் பத்து அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களும் செய்யுள்களாக அமைந்துள்ளன.

    இக்கோவிலில்  ஒவ்வோர்  ஆண்டும் சித்திரை மாதம் 21 ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரை சூரியனின் கதிர்கள் கருவறையில் உள்ள சிவபெருமான் மீது பட்டு வழிபடுவது சிறப்பாகும். ஆகவே, இந்தச் சித்திரைத் திங்களில் இந்நூல் உருவாக்கப் பட்டுள்ளது. இதனைப்  படித்து  ஈசனின் திருவருளை எல்லோரும் பெற வேண்டுகிறோம்.

    திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை

                                விருத்தம்                                

    பூசும் நீறும்  பொங்கரவும்  புலியின்  தோலு  முடனாக
    மாசில் பெற்றம்  மிகவூர்ந்தே  மங்கைப் பங்கர்  வீதிவர
    வீசுங்  கவரி வெண்கதிரான்  வெள்ளை  நிலவும்  மகிழ்வுடனே
    ஆசில்  மீயச்  சூரானை  யங்கே  நீரே  காண்மின்காள் .

                                       வெண்பா

    திருமீயச் சூரானைத் ;திக்கெலாம் போற்றும்
    பெருமானைப் பெற்றம  தூரும் – உருவை
    ஒருமித்துக்  காணு  முயர்நிலைப்  பெற்றால்
    வருமிப் பிறவியே வா     (1)

                                       விருத்தம்

    அப்பர் பாட அகமகிழ்ந்தே அன்பாய்ப்  பொழிந்தார்  நல்லருளை
    எப்பேர் சொல்லி யழைத்தாலும் இரங்கும்  குணத்தைக் கொண்டவராம்
    தப்பே செய்தீ ரென்றாலும் தந்தை யவரிட  முறையிடவே
    ஒப்பா ரும்மைக் குழந்தையென  வொறுத்தற்   செய்யா தருள்வாரே

                                       வெண்பா

    நயனங்க  ளாயிரம் நன்மேனி கொண்டான்
    அயனோடு மாலும் அறியார் – வியனாய்த்
    திகழ்ந்தானே  யெங்கும் திருமீயச் சூரில்
    அகழ்ந்தானும் காணா அரண் .   (2)

                                           விருத்தம்

    பாச  மென்னு மிருளிடையே  பலநா லுழலு மாதனையே
    வேசங் கொண்ட  வினையாவும் விட்டுச்  செல்லும் நிலையடைய
    தேச மெங்குந்   திரண்டொளிரும்  தேவ தேவன் திருவடியை
    ஆசைக்  கொண்டே பற்றுவதா  லனைத்தும் நீங்கப் பெற்றிடலாம்.

                                       வெண்பா

    தீங்கரும்பைத்  தென்னை இளநீரைத்  தீர்விலாத்
    தேங்கமழ்ச்  சோலைப் புதுமலரைப்  :– பாங்காகத்
    தென்றல் வருடும் திருமீயச் சூர்காண
    நன்றே நடக்கும் நமக்கு . (3)

                                       விருத்தம்

    பாயச் செல்லும் பகரே ற்றில்  பக்கத்  துமையாள்  சூழ்ந்துவர
    நேயர் போற்றும்  நேயரவர் நெஞ்சக் கோவில் குடிகொண்டார்
    தாயை யொத்த தன்மையினார் தந்தை தானு மவரன்றோ
    மீயச் சூரில் மேவிவரும் மேக நாதர் தாள்பணிவாம்

                                       வெண்பா

    கன்னல்  சுவையமுதைக்   காலத்தே  ரோட்டியே
    நன்னலம்  செய்திடும் நாயகனை – தென்னன்
    திருமீயச்  சூரானை த் தேவனைத்  தேனை
    அருமறையை   அள்ளுவாய்  ஆங்கு .  (4)

                                       விருத்தம்

    திங்க ளரவைத்  தீண்டாமற்  றிகழும் முடிமேற் றெளிவுடனே
    கங்கைப் பாயுஞ் செஞ்சடையார்  கறுத்த வேழந் தோலுரித்தே
    பொங்கு மரவ மாலையொடு போர்த்திக் கொண்டார் புனிதரிவர்
    தெங்கள் பாயும் மலர்ச்சோலை  திருமீ  யச்சூரை  இடங்கொண்டார்

                                       வெண்பா

    தோல்விநிலை  மாறத்   துயரம் கலைந்தோட
    பால்மதியைச்   சூடும்  பரமனை – நால்மறையின்
    வீரனை வெற்றியை விளக்கைத்   திருமீயச்
    சூரனைச்   சுற்றியே வ .   (5)

                                       விருத்தம்

    காழி  மண்ணிற் கதறியழும்  கருணைக் குழவிப் பசியாற்றி
    ஏழின்  னிசையை இயற்றுவித்த எழிலாந் தமிழா மிறைநெறியை
    ஊழிக்    காலத்   துள்ளொளியை   யுவகை கொண்டே மீயச்சூர்
    வாழி வாழி  என்றேனீர்  வணங்கிச் செல்ல தீதிலையே

                                       வெண்பா

    நில்லா  உலகில்  நீடிக்கா   தெப்பொருளும்
    செல்லா வினையுஞ்  சிதையாதே – ஒல்லும்
    அருட்திரு  மீயச்சூர்  ஆளும் அரசைப்
    பொருளெனக்   கொண்டால்   புகழ்.   (6)

                                       விருத்தம்

    ஊரூர் சென்றே பலியேற்று முலக முய்யப்  படியளக்கும்
    தாரூ  ரரவந்   தரித்தபிரான்  தவழும் பிறையைத்  தலைச் சூடி
    ஆரூர் வாழும் அருந்தொண்டன் அன்பர்க் கன்ப  னென்பதனால்
    தேரூர் கொண்டே சேர்த்தளித்தான்  கோளிலி மூட்டைக்   குவைநெல்லை

                                       வெண்பா

    ஒளியாகி  நின்றானை  உள்ளுளே நிற்கும்
    வளியாகி  வந்ததோர் வாக்கை – தெளிவாய்த்
    திகழும்  திருவைத் திருமீயச் சூரை
    புகழும் மொழியே பொலிவு.  (7)

                                       விருத்தம்

    கோவை பாடிய  கோமகனைக்  கொடுமை செய்தான் பாண்டியனே
    ஏவல் செய்யும் ஒருவனென  எட்டி நின்றான் பிட்டுக்குத்
    தாவும் வைகைத் தடியடியால் தரைமேல் உயிர்கள் துடித்தனவே
    ஆவல் கொண்டே வாசகரின்   அடியிணை தொழுதான் மாறனுமே

                                       வெண்பா

    மின்னுமொழி  மேகலையாள்  மேவியதோர் நெஞ்சத்தர்
    மன்னியசீர் மாண்பருளும்  மாதேவர் – நன்னிலைசேர்
    மீயச்சூர்த்   தேவர் மிளிர்கொன்றை நாயகரே
    ஏயவுலகிற்  கெல்லாம் இறை.   (8)

                                       விருத்தம்

    மால்தான் காணா மந்திரத்தை மக்கள் காண எளிதாக
    வேல்வாள் கண்ணாள் அம்பிகையும் விரவி நிற்கும் கோலமதை
    மேல்நாள் செல்லும் நிலைவருமுன்  மேவிச் செல்வீர் மீயச்சூர்
    நால்வர் பெற்ற நலம்யாவும் நாளும் ஆங்கே பெற்றிடலாம்

                                       வெண்பா

    அறிவினுக் கெட்டா அதிசயத் தேனைப்
    பொறிநிலை  நீங்கியே   போமுன்  – நெறிசேர்
    இளங்கோயில்  ஈசர் திருமீயச் சூரை
    வளங்கொள்ளப்  பாடி வணங்கு.  (9)

                                       விருத்தம்

    சதிபல நினைவுடை  சலக்கரையும் சலம்புணர் மனம்படு அரக்கரையும்
    முதிரிள  வளநகை முறுவலுற   மதில்பல எரிஎழ  அழித்தனரே
    துதிநிலைத் தமிழுடன் தொடர்ந்துடனே    துயர்கெட  மதியுடன்  பலபாட
    எதிரிகள் எவருமே விலகிடுவார்  எமபயம்  கொடுநினை  வழிந்திடுமே

                                       வெண்பா

     எல்லை எதுவுமின்றி  எங்கும் நிறைந்தொளிர
    அல்லிலே ஆடும் ஆட்டத்தான் – வல்லான்
    உருக்குன்றா  பத்திமையார் உள்ளத்துள் ஓங்கி
    இருக்கின்றான்   மீயச்சூர் இறை. (10)

                                                    திருச்சிற்றம்பலம்

    Share
  • நாலடியார் நயம் – 9

    நாலடியார் நயம் – 9

    நாங்குநேரி வாசஸ்ரீ

     9. பிறர் மனை நயவாமை

    பாடல் 81

    அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
    நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் – நிச்சலும்
    கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
    நம்பற்க நாணுடை யார்.

    பெரிது காமத்தால் வரும் அச்சம்
    பெறும் இன்பமோ சிறிது
    மனதில் நினைத்துப் பார்த்தால்
    மண்ணுலகை ஆளும் அரசனின்
    மரணதண்டனைக்கும் உரியது
    நித்தமும் நரகவேதனை தரும்
    நேர்மையற்ற பாவச்செயல் ஆதலின்
    நாணமுடையோர் பிறன்மனைவியை
    நினைத்து ஆசைப்படாதிருப்பாராக!

    பாடல் 82

    அறம்புகழ் கேண்மைபெருமைஇந் நான்கும்
    பிறன்தாரம் நச்சுவார் சேரா – பிறன்தாரம்
    நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
    அச்சத்தோடு இந்நாற் பொருள்.

    தருமம் புகழ் தக்கார் நட்பு
    தகுந்த பெருமை எனும்
    இந்நான்கும் பிறன்மனைவியை
    இச்சைகொள்வோரிடம் சேரமாட்டா
    மாறாகப் பகை பழி பாவம்
    மற்றும் அச்சம் இந்நான்கும்
    மாற்றான் மனைவி மேல்
    மயங்கி ஆசைகொள்வோரிடம்
    பொருந்தி வந்து சேரும்.

    பாடல் 83

    புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
    துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
    எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
    உட்கான் பிறன்இல் புகல்.

    மாற்றான் மனைவியை நாடி
    மனையுள் புகும்போது அச்சம்
    வீட்டிலிருந்து வெளியே திரும்பி
    வரும்போதும் அச்சம்
    மயங்கிக் களிக்கும்போது அச்சம்,
    மற்றவர் அறிவரோ என அச்சம்
    இடையறாது அச்சம் எப்போதும்
    இதையெல்லாம் சிந்தியாது
    இன்னொருவன் மனைவியிடம்
    இச்சைகொள்வது என்னபயன் கருதியோ?

    பாடல் 84

    காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
    ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; – நீள்நிரயத்
    துன்பம் பயக்குமால்; துச்சாரி, நீகண்ட
    இன்பம் எனக்கெனைத்தால் கூறு.

    பிறர் காணின் குலத்திற்குப்
    பழி உண்டாகும் கையில்
    அகப்பட்டால் கால்முறியும்
    ஆண்மையற்ற இப்பிறர்மனை
    புகுதலைச் செய்யும்நேரம்
    பயம் தோன்றும் பின் ‘
    நரகமாகிய துன்பம் தோன்றும்
    நல்லொழுக்கம் அற்றோனே இதில்
    நீ கண்ட இன்பம் எவ்வளவு? சொல்.

    பாடல் 85

    செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்
    கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ – உம்மை
    வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை
    அலியாகி ஆடிஉண் பார்.

    சிறிதும் நல்லொழுக்கமின்றி
    சிறியோருடன் சேர்ந்து அழகிய
    கோலம் எழுதப்பெற்ற
    கொங்கை உடையாளின்
    தோளைச் சேர விரும்பி
    தம் வலிமையால் பிறர்
    மனைவியிடம் முன்பு சென்றவரே
    மண்ணுலக இப்பிறப்பில்
    அலியாய்க் கூத்து
    ஆடி உண்டு வாழ்பவர்.

    பாடல் 86

    பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
    கல்யாணம் செய்து கடிபுக்க – மெல்லியல்
    காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
    ஏதின் மனையாளை நோக்கு.

    பலர் அறிய மணப்
    பறை கொட்டி
    நல்ல நாள் பார்த்து
    நன்மணம் புரிந்து
    தன் காவலிற் புகுந்த
    மென்மைத் தன்மையுடை
    மனைவி வீட்டிலிருக்க
    மாற்றான் மனைவியை
    கெட்ட நோக்கில் ஒருவன்
    காண்பது எதனால்?

    பாடல் 87

    அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
    வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று – நம்பும்
    நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்
    தலைநக்கி யன்னது உடைத்து.

    அயலார் பழித்துரைக்க
    அருமை உறவினர் பயந்திருக்க
    அயலான் மனைவியைத் தழுவி
    அகமகிழ்ந்த அனைவராலும் நம்ப
    அரிதான இயல்புடையவனது
    அற்ப காம நுகர்ச்சி
    அரவத்தின் தலையை நக்கியது
    அன்ன தன்மை உடையது.

    பாடல் 88

    பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;
    உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!
    விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
    உரையாதுஉள் ஆறி விடும்.

    கொடியது காமநோய்!  அக்
    கொடும் நோய் மனவலிமை
    மிக்காரிடம் வளராது ஒருக்கால்
    மிக்கு வளர்ந்தாலும் வெளிப்படாது
    சிறிது வெளிப்பட்டாலும் அயலாரிடம்
    செல்லாது நாண வேண்டியதால்
    மனவலிமை மிக்க அவர்தம் காமம்
    தோன்றாது உள்தணிந்து ஆறிவிடும்.

    பாடல் 89

    அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
    வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; – வெம்பிக்
    கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
    அவற்றினும் அஞ்சப் படும்.

    அம்பும் தீயும் ஒளிக்கதிர் சூரியனும்
    அதிவெப்பத்துடன் சுட்டாலும்
    புற உடலையே சுடும்
    பெருஞ்சூடெனும் காமம்
    அகத்தே மனதை வருத்திச்சுடுதலால்
    அனைத்தையும்விட அஞ்சத்தக்கதாம்.

    பாடல் 90

    ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
    நீருள் குளித்தும் உயலாகும்; – நீருள்
    குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
    ஒளிப்பினும் காமம் சுடும்.

    ஊர் நடுவே பற்றி எரியும்
    உருவம் கொண்ட செந்தீக்கு
    அமிழ்ந்து தப்பிக்க இயலும்
    அருகில் இருக்கும் நீருள்
    ஏறிக்குன்றில் ஒளிந்தாலும்
    எழுந்து மூழ்கிக் குளித்தாலும்
    என்செயினும் காமம் சுட்டெரிக்கும்.

    Share
  • பத்திரப் பதிவுத் துறையினர், இப்போது செய்ய வேண்டியது என்ன?

    பத்திரப் பதிவுத் துறையினர், இப்போது செய்ய வேண்டியது என்ன?

    அண்ணாகண்ணன்

    பத்திரப் பதிவுக்கான நேரத்தை மாலை 5 மணி வரை தமிழக அரசு  நீட்டித்துள்ளது. ஆனால்,  ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மக்கள் எப்படி வெளியே வருவார்கள்? ஓர் இடத்தை வாங்குவது என்றால், பலமுறை சென்று பார்த்து, வில்லங்கம் இருக்கிறதா என்று சோதித்து, கடன், பாகப் பிரிவினை, உயில் எனப் பல கோணங்களிலும் சரிபார்த்துத்தானே வாங்குவார்கள்? இதற்கு வழக்கறிஞர்கள், வங்கித் துறையினர், பத்திரப் பதிவுத் துறையினர் எனப் பலரையும் சந்தித்துப் பேச வேண்டியிருக்கும். இடையில் தரகர் வேறு இருப்பார். இவர்கள் அனைவரிடமும் தொலைபேசியில் அல்லது இணையத்தில் பேசிவிட முடியுமா? பல இலட்சம் கைமாறுகிற ஒரு விற்பனைக்கு எத்தனை முறை மக்கள் சிந்திப்பார்கள் என அரசு யோசிக்கவில்லையா?

    ஏற்கனவே பேசிமுடித்து, பதிவு மட்டும் நிலுவையில் இருப்பவற்றை  முடிக்கலாம் என்றும் சொல்ல இயலாது.   ஏனெனில், அது மிகச் சிறிய எண்ணிக்கை. மேலும், தொற்று பரவி வரும் நிலையில், இத்தகைய பரிமாற்றங்களைத் தவிர்க்க வேண்டும். இவர் வாங்குகிற இடத்தில் அல்லது அதற்கு அருகில் தொற்று இருந்தால், அந்த இடத்தின் மதிப்புக் குறையும். வாங்கவும் அஞ்சுவார்கள். மேலும் பத்திரப் பதிவு முடிந்து, பட்டாப் பெயர் மாற்றம், பொறுப்பினைக் கைமாற்றுதல், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, நில வரி, வீட்டு வரி செலுத்துகை ஆகிய அனைத்துக்கும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் அவர் வெளியே செல்ல முடியாது. மேலும், போலி ஆவணங்களைக் காட்டி, மோசடி செய்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. அவசரமாகப் பணம் தேவை, அதனால்தான் பாதி விலைக்கு விற்கிறேன் என அளந்துவிட்டால், யார் இவற்றை எல்லாம் சரிபார்ப்பது? கொரோனா காலத்திற்குப் பிறகு, நில வழிகாட்டி மதிப்பை அரசு மறுவரையறை செய்ய வேண்டியிருக்கும். எனவே பழைய வழிகாட்டி மதிப்பில், இப்போது விற்பனை செய்வதோ, அதற்குப் பத்திரம் வாங்குவதோ பொருந்தாது. அப்படிச் செய்தால், வாங்குபவருக்கே நட்டம் ஏற்படும்.

    மேலும், இது பத்திரப் பதிவுக்கான நேரமே இல்லை. மாறாக, இதற்கு முந்தைய பத்திரப் பதிவு ஆவணங்கள் அனைத்தையும் மின்னாக்கம் செய்வதில் பத்திரப் பதிவுத் துறையினர் இப்போது முழுமையாக ஈடுபட வேண்டும். மின்னாக்கப் பணிகளை வெளியாரிடம் ஒப்படைத்திருந்தால், அவற்றை வலையேற்றிச் சரிபார்க்க வேண்டும். ஆயிரம் ஆவணங்களுக்கு ஒன்றையாவது சரிபார்த்து, வெவ்வேறு சாதனங்கள், உலாவிகளின் வெவ்வேறு பதிப்புகள் வழியாகச் சரிபார்த்து, சேவையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும், பத்திரப் பதிவுத் துறையினர் அனைவருக்கும் மின்னாக்கத்திற்கும் இணையவழிச் சேவைக்கும் இதில் ஏற்பட வாய்ப்புள்ள தொழில்நுட்ப இடர்களை, சவால்களை எதிர்கொள்வதற்கும்  இது தொடர்பான மக்களின் விசாரணைகளுக்குப் பதில் அளிப்பதற்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.

    இந்த மின்னாக்கம், மின்னாளுகை மற்றும் பயிற்சிகளைப் பத்திரப் பதிவுத் துறைக்கு மட்டுமில்லாமல், இதர துறைகள் அனைத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும். இதை ஓய்வுக் காலமாகக் கருதாமல், பயிற்சிக் காலமாக மாற்றினால், எதிர்காலத்தில் உரிய பயன் கிட்டும்.

    Share
  • அறவாழ்வைப் போற்றிய அறிஞர் – மு. வரதராசனார்

    அறவாழ்வைப் போற்றிய அறிஞர் – மு. வரதராசனார்

    -மேகலா இராமமூர்த்தி

    கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்களாகப் பணியாற்றிச் சென்றிருப்போர் எத்தனையோ பேர். அவர்கள் அனைவரையும் மாணவர்கள் நினைவில் வைத்துப் போற்றுகின்றார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களில் மிகச் சிலரையே மாணவருலகம் என்றும் நன்றியோடு போற்றுகின்றது; நினைந்து மகிழ்கின்றது; அத்தகையோரில் ஒருவர்தாம் மு.வ. என்றழைக்கப்படும் மு.வரதராசனார்.

    1912-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25-ஆம் நாள்  வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் முனிசாமி, அம்மாக்கண்ணு இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் மு.வ. திருவேங்கடம் என்று ஏழுமலையானின் பெயரும், வரதராசன் என்று அவருடைய பாட்டனாரின் பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டன. வீட்டிலே திருவேங்கடமாகவும் வெளியுலகுக்கு வரதராசனாகவும் திகழ்ந்தார் அவர்.  

    திருப்பத்தூர் நகராட்சிப்பள்ளியிலும் உயர்நிலைப்பள்ளியிலும் முறையே தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் பெற்றார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் உரைநடையால் ஈர்க்கப்பட்ட மு.வரதராசனார், அவருடைய நூல்களை இடையறாது கற்றார்; அவருடைய சொற்பொழிவுகளிலும் உளம்தோய்ந்து, திரு.வி.க. எங்கு பேசினாலும் அங்குச் சென்று அவர் பொழிவுகளைத் தவறாது கேட்டார். திரு.வி.க.வோடு நெருங்கிப் பழகும் நற்பேறும் மு.வ.வுக்கு வாய்த்தது. மு.வ.வுடனான தம் நட்பைப் பற்றித் திரு.வி.க.வும் மிகவும் உயர்வாகத் தம்முடைய வாழ்க்கைக் குறிப்புக்களில் பதிவுசெய்துள்ளார் என்பது எண்ணத்தக்கது.

    1928-ஆம் ஆண்டு, தம் பதினாறாம் அகவையில், பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மு.வ., அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராய்ச் சிலகாலம் பணியாற்றினார். அங்கே கடுமையாக உழைத்ததனால் அவருடைய உடல்நலம் குன்றியது. எனவே பணியிலிருந்து விடுபட்டு வேலம் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கே அவர் தங்கியிருந்த மூன்று ஆண்டுகளையும் தமிழுக்கே அர்ப்பணித்து எண்ணற்ற தமிழ் நூல்களைத் தாமே முயன்று கற்றார்.

    1934-ஆம் ஆண்டு வித்துவான் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றார். 1935-ஆம் ஆண்டு தம்முடைய உறவினர் மகளாகிய இராதா அம்மையாரை மணமுடித்தார். திருமணத்தன்றுகூட ஆடம்பர உடை உடுத்தவில்லை மு.வ.
    மாமனார் உடை தைக்கவென்று அவருக்குக் கொடுத்த ஐம்பது உரூபாயில் முப்பது உரூபாய்க்குக் கதராடை வாங்கிக்கொண்டு, மீதமிருந்த இருபது உரூபாயை மாமனாரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

    உடுக்கவும் உண்ணவும் வழியின்றி எத்தனையோ ஏழை மக்கள் இம்மண்ணில் வாடி இருக்கையில் பட்டாடை முதலிய பகட்டை நாடுவதை அந்த நற்பண்பாளாரின் மனம் விரும்பாததே அதற்குக் காரணம். மாமனார் வீட்டில் எதைச் சுரண்டலாம், எவ்வளவு வரதட்சணை வாங்கலாம் என்பதிலேயே குறியாயிருக்கும் இன்றைய மணமகன்கள், எளிமைக்கும், மாமனார் செல்வத்தை நயவாத பெருந்தன்மைக்கும் மு.வ.விடம் பாடம் பயிலவேண்டும்.

    இல்லறத்தில் நுழைந்ததனால் கல்வியைக் கைவிடவில்லை வரதராசனார். மணமுடித்த கையோடு வித்துவான் இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேர்ச்சிபெற்றுத் திருப்பனந்தாள் காசிமடம் வழங்கிய தமிழ் முதன்மைக்கான 1000 உரூபாய்ப் பரிசைப் பெற்றார். 1934 முதல் 39 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

    1939-இல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்; அதே ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை விரிவுரையாளராக (tutor) பணியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு அவருக்கு “கீழ்த்திசை மொழிகளின் விரிவுரையாளர்” (Lecturer in Oriental Languages) எனும் பொறுப்பு அக்கல்லூரியில் வழங்கப்பட்டது.

    1944-இல் “தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்” (Origin and development of verbs in Tamil) என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். 1945-ஆம் ஆண்டு  பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக உயர்ந்தார்.

    1948-ஆம் ஆண்டு  ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை (The treatment of Nature in Sangam Literature) என்பதை ஆய்ந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்டம் பெற்றார் மு.வரதராசன். இதில் குறிப்பிடத்தக்க செய்தி யாதெனில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முதன்முதலில் தமிழ்த்துறையில் முனைவர்ப் பட்டம்பெற்ற பெருமைக்குரியவர் மு. வரதராசனாரே என்பதுதான்.

    பச்சையப்பன் கல்லூரியில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, பி.ஓ.எல். வகுப்பு மாணவர்களுக்கு மொழியியல் பாடமாக வைக்கப்பட்டது. ஆனால் அதனைக் கற்பிப்பதற்குரிய நூல்கள்அப்போது தமிழில் இல்லை. எனவே மொழியியல் கற்பிக்க வேண்டியிருந்த அவரே மொழியியல் நூலை எழுதும் கடமையையும் மேற்கொண்டார்.  கற்பிக்கும் பாடத்தை நூலாக்குவதும், நூலாக்கும் பாடத்தைக் கற்பிப்பதும் இரட்டை நன்மைகள் ஆயின. அவ்வகையில் வரதராசனாருடைய ’மொழியியல்’ என்ற நூல் 1947ஆம் ஆண்டிலும், மொழியியற் கட்டுரைகள், மற்றும் மொழி வரலாறு எனும் இரு நூல்களும் 1954ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. இவ்வாறு மொழியியல் கலையை முதலில் நாடெங்கும் பரப்பிய நல்லறிஞர் மு.வ. ஆவார்.

    1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய மு.வ., 1971-இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராய்ப் பொறுப்பேற்று 1974 வரை அங்கே சிறப்புறப் பணியாற்றினார்.

    1972-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி (The college of Wooster) அவருக்கு டி.லிட். என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட்.  பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வரதராசனாரே என்பது நாம் எண்ணி மகிழத்தக்கது.

    மு.வ.வின் தமிழுள்ளத்திலிருந்து முதன்முதலில் வெளிப்பட்ட இலக்கிய ஆய்வுநூல், ’தமிழ் நெஞ்சம்’ என்பதாகும். பண்டைத் தமிழ்ப் புலவோரின் வாழ்வினை அவர்கள் பாடிய புறப்பாடல்களின் துணையோடு பல்வேறு கோணங்களில் ஆய்ந்திருக்கும் இந்நூல், சென்னைப் பல்கலைக்கழத்தில் இரண்டுமுறை பாடமாக வைக்கப்பட்டது. இரண்டாம் முறை பாடமாக வைக்கப்பட்டபோது கிட்டிய வருவாய் அனைத்தையும், சென்னை, ஷெனாய் நகரிலுள்ள திரு.வி.க. உயர்நிலைப்பள்ளிக்கு அள்ளிக் கொடுத்தது மு.வ.வின் தமிழ் நெஞ்சம்.

    வரதராசனாரின் பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகள் பல்வேறு நூல்களாகத் தொடர்ந்து வெளிப்பட்டன. இவற்றுள் ‘அளிநிலை பொறாஅது’ எனத் தொடங்கும் 28 அடி நீளமுள்ள அகநானூற்றுப் பாடலை விளக்க எழுந்ததே 179 பக்கங்கள் கொண்ட ’ஓவச்செய்தி’ என்ற அவருடைய நூல்.

    ’கொங்குதேர்’ என்று தொடங்கும் குறுந்தொகை இரண்டாம் பாடலை விளக்க எழுந்ததே ’கொங்குதேர் வாழ்க்கை’ எனும் நூல். ஒரே ஒரு பாடலை விளக்க எழுந்த இவ்விரு நூல்களைப் போலவே, ஒரே துறையால் அமைந்தது ’புலவர் கண்ணீர்’ என்ற நூல்; ஒரே திணையை விளக்க வந்தது ‘முல்லைத் திணை’ என்ற நூல். ஒரே பொருளால் அமைந்தது ’மணல் வீடு’ எனும் மற்றொரு நூல். இவ்வாறே நற்றிணை விருந்து, குறுந்தொகை விருந்து, மாதவி, கண்ணகி, இளங்கோவடிகள், திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், குறள்காட்டும் காதலர் என்று எண்ணிறந்த இலக்கிய ஆராய்ச்சி நூல்களை எழுதிக் குவித்திருக்கின்றார் வரதராசனார்.

    இவையத்தனையையும் விஞ்சி இன்றும் மு.வ.வுக்குத் தனித்ததோர் அடையாளமாய்த் திகழ்வது திருக்குறளுக்கு அவர் வரைந்த தெளிவுரையே ஆகும். விற்பனையில் மிகப் பெரிய சாதனைபடைத்த இந்நூல், பல போட்டிகளுக்கும் கையடக்கப் பரிசாக இன்றளவும் வழங்கப்பட்டு வருகின்றது.

    மனித வாழ்வில் மடல்கள் எனப்படும் கடிதங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. தொலைபேசிகளும் திறன்பேசிகளும் இல்லாத அக்காலத்தில், ஒருவரோடு ஒருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளக் கடிதங்களே தூதுவர்களாய்ச் செயற்பட்டன. ஆனால் பெரும்பாலோர் கடிதங்களை வெறும் குடும்பச் செய்திகளின் கொள்கலமாக ஆக்கிவிடுவதே வழக்கம். அவ்வாறின்றி அவற்றை உலகச் செய்திகளையும் உயர் விழுமியங்களையும் தாங்கியவையாக மாற்றிய பெருமைக்குரியோர் மிகச்சிலரே.

    பண்டித நேரு தம் மகளார் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் உலக வரலாற்றைச் சுமந்திருக்கும் கருத்துப் பேழைகள் ஆயின; மறைமலையடிகள் எழுதிய கோகிலாம்பாள் கடிதங்கள் சிறந்த இலக்கியமாயின. அவைபோலவே பேராசிரியர் மு.வ. அவர்கள் அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என்ற தலைப்புகளில் எழுதிய கடிதங்கள், அறவிழுமியங்களை அறிவுறுத்தும் அறிவுப் புதையல்களாகவும், சிறந்த வாழ்க்கை வழிகாட்டிகளாகவும் விளங்குகின்றன.

    நாவல், நாடகம், சிறுகதை போன்ற துறைகளிலும் முத்திரை பதித்தவர் மு.வ. அவர் எழுதிய நாவல்கள் மொத்தம் பதின்மூன்று. அவற்றில், காதலின் பல்வேறு கோணங்களைச் சித்திரித்தது ’செந்தாமரை’; தாய்மையின் மகத்துவத்தைப் புலப்படுத்தியது ’பெற்ற மனம்’; பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை எடுத்துக்காட்டியது ’கள்ளோ காவியமோ?’; கலைமனத்தின் உணர்வுகளைப் படம்பிடித்தது ’கரித்துண்டு’; உணர்ச்சிக்கும் அறிவுக்குமிடையே கிடந்து அல்லலுறும் இளைஞர்களின் அவலப்போக்கை வெளிச்சமிட்டது ’அகல்விளக்கு’; அரசு அலுவலங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தோலுரித்துக் காட்டியது ‘கயமை’. மலர்விழி, அல்லி, நெஞ்சில் ஒரு முள் போன்றவை குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை விவரித்தன.

    இவற்றில் கள்ளோ காவியமோ எனும் நாவல் புனைகதை உலகில் மு.வ.வுக்கு நல்ல புகழை ஈட்டித் தந்தது. அகல்விளக்கு நாவல் 1962-இல் சாகித்ய அகாதமியின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினை வென்றது. மு.வ.வின் நாவல்களைப் படிக்கவிரும்புவோர் முதலில் படிக்க வேண்டியது அகல்விளக்கு என்பார்கள்.

    இவையல்லாமல் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், விடுதலையா, மொழிநூல் ஆகிய மூன்று நூல்களும் தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் பரிசைப் பெற்றன. பெற்ற மனம் என்ற நாவல் அதே பெயரில் திரைப்படமாகவும் 1960-இல் வெளிவந்தது.

    வரதராசனாரின் நாவல்கள், நாவலுக்கான இலக்கணங்களைக் கொண்டிருக்கவில்லை; அவை கருத்துரை நாவல்களாக உள்ளன என்ற விமரிசனமும் சிலரால் வைக்கப்படுவதுண்டு.

    ”நாவலை நான் வெறும் பொழுதுபோக்குக்காகப் படைக்கவில்லை; இடையிடையே ஓரிரு நிகழ்வுகளை வாசகர்களைக் கவரும்நோக்கில் நாவலில் வைத்தாலும், வாழ்வியல் முன்னேற்றக் கருத்துக்களையும் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளையும் எடுத்துச்சொல்வதாகவும், அதே சமயத்தில் வெறும் நீதி போதனை நூலாக இல்லாதவகையிலும் நாவலை உருவாக்குவதே என்னுடைய நோக்கம்” என்று அவரே ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பது மேற்கண்ட  விமரிசனத்துக்கான விடையாகவும் அமையக்கூடியது.

    படைப்பிலக்கியங்களைப் பொதுவாகக் கலைப்படைப்புகள் என்றும் ஆய்வுப்படைப்புகள் என்றும் இரண்டாகப் பிரிப்பர். கலைப்படைப்புகளில் உணர்ச்சிகள் முக்கியத்துவம் பெறும்; ஆய்வுப் படைப்புகளில் நுண்ணிய அறிவு இன்றியமையா இடம்பெறும். படைப்பாளர்கள் ஆய்வாளர்களாக வெற்றிபெறுவது கடினம்; ஆய்வாளர்கள் படைப்பாளர்களாவதும் அரிது. ஆனால் வரதராசனாரோ கலைப்படைப்பாளராக மட்டுமன்றி ஆய்வுப்படைப்பாளராகவும் திகழ்ந்த சாதனையாளர்.

    1967-ஆம் ஆண்டு நடுவண் அரசு மு.வ.வுக்கு பத்மஸ்ரீ பட்டம் நல்கியது. ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டாய இந்தியை எதிர்த்தோரைக் கொடுமைக்கு ஆளாக்கிய அவ் அரசிடமிருந்து, அவ்வுயரிய பட்டம்பெற மு.வ. விரும்பாததால் பத்மஸ்ரீயை வேண்டாமெனத் துறந்தார். இச்செயல் அவருடைய மொழிப்பற்றுக்குச் சிறந்த சான்றாகும்.

    1974-ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மதுரைப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தரான மு.வ.வுக்கு அன்று எதிர்பாராதவிதமாக நெஞ்சில் கடுமையான வலியேற்பட்டதால் பட்டமளிப்புவிழா உரையைக்கூட நின்றுபேச இயலாமல் அமர்ந்தவாறே படித்தார். பின்னர் சென்னைக்கு வந்தவர், அங்கே தம் வீட்டில் நடக்கவும் இயலாமல் ஓய்ந்து படுத்துவிட்டார். மருத்துவர்களாகப் பணிபுரிந்த அவருடைய புதல்வர்களும், அவர்பால் பேரன்பு கொண்டிருந்த மாணாக்கர்களும் ஆங்கில மருத்துவடச் சிகிச்சை எடுத்துக்கொண்டால் உடல் நலம் பெறலாம் என்று அவரை வற்புறுத்தியும், இளமை முதலே இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டிருந்த மு.வ, அதனை ஏற்க மறுத்துவிட்டார். ஓரிரு நாள்களில் அவர் உடல்நிலை மிகவும் மோசம் அடையவே, அனைவரின் வற்புறுத்தலையும் ஏற்று மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே அவருக்குப் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. எனினும் அவர் உடல் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை அக்டோபர் 10, 1974-இல் அவர் நல்லுயிர் அமைதியுற்றது.

    அகல்விளக்காய்த் தம் எளிய வாழ்வைத் தொடங்கிய மு.வ., சீரிய உழைப்பாலும், கூரிய அறிவாலும் கலங்கரை விளக்காய் ஒளிர்ந்து, தமிழறிஞர்கள் பலரையும் தமிழுலக்குக்கு உருவாக்கித் தந்த தகைமையாளர். அறவாழ்வையும் நற்பண்பையும் தம் இருகண்களாய்க் கொண்டு, அளப்பரிய தமிழ்ப்பணிகளை ஆற்றிச்சென்றிருக்கும் அத்தமிழ்ச் சான்றோரைப் போற்றுவோம்; அவர்தம் படைப்புக்களைக் கற்றுப் பயன்கொள்ளுவோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://ta.wikipedia.org/wiki/மு._வரதராசன்
    2. பெருந்தகை மு.வ.  – டாக்டர். சி. பாலசுப்பிரமணியன், எம்.ஏ, எம்.லிட், பிஎச் டி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    3. https://www.hindutamil.in/news/blogs/216584-10-2.html

    Share
  • (Peer Reviewed) தமிழ்ச் சமுதாயத்தின் புன்மை – அடிமைமுறை

    (Peer Reviewed) தமிழ்ச் சமுதாயத்தின் புன்மை – அடிமைமுறை

    -மு.கயல்விழி
    உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை
    பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்-632501.

    *****

    திட்டச் சுருக்கம்:-

         உலகில் அடிமைமுறை என்பது மிகவும் பழமையானது. தமிழகத்திலும் இடைக்காலத்தில் அது பேரளவில் காணப்பட்டது. தமிழ்நாட்டில் மன்னர்கள் மட்டுமன்றிக் கோயில்களும், மடங்களும், செல்வர்களும், அரசு அலுவலர்களும் அடிமைமுறையைக் கையாண்டனர். அடிமைகள் மிருகங்கள் போன்று நடத்தப்பட்டனர். போர்கள், பஞ்சங்கள், பக்தி போன்ற பல காரணங்களால் இவ்வடிமை முறை இடைக்காலத்தில் நிலைபெற்றது.

    முன்னுரை:

         மனிதன் ஆறாம் அறிவுடையவன். எனவே அவன் உலக உயிர்கள் அனைத்திலும் மேம்பட்டவனாகத் திகழ்ந்தான். அத்தகைய மனிதன் உலக உயிர்கள் அனைத்தையும் அடக்கியாண்டான். அதே சமயம் பறவைகள், விலங்குகள் போன்றே மனிதன் மனிதனையும் அடிமைப்படுத்தினான். இது அடிமைமுறை (Slave System) எனப்பட்டது. அடிமைமுறை எல்லா நாடுகளிலும் இருந்துள்ளது. இப்புன்மையை ஒழிக்கப் பெரியோர்கள் எவ்வளவோ முயன்றாலும் மது, திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்று இதுவும் அழிக்க முடியாத ஒன்றாகவே திகழ்ந்தது. உயர் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியுமிக்க இக்காலத்திலும் ஆப்பிரிக்காவிலுள்ள சூடான் (Sudan), எத்தியோப்பியா (Ethopia) போன்ற நாடுகளில் அடிமைமுறை இருப்பது இதை உணர்த்தும். தமிழ்ச் சமுதாயத்தின் சிறப்புக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிமைமுறை அதன் பெருமையைக் குலைக்கும் களங்கமாகவும், கரும்புள்ளியாகவும் இன்றளவும் திகழ்ந்து வருகின்றது.

    அடிமைமுறையின் பழமை:

         அடிமைமுறை என்பது மனிதன் தோன்றிய காலம் முதலே தோன்றிய ஒன்று. தமிழ்நாட்டில் இம்முறை முதன்முதலாக எப்பொழுது தோன்றியது என்று துல்லியமாகத் தெரியவில்லை. தொல்காப்பியர் காலத்துக்கு முன்னே இம்முறை இருந்துள்ளது. இதைத் தொல்காப்பியர் உறுதிசெய்கின்றார்.

    ”அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
    கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர்
    ” (தொல்.பொரு. அகத்.25)

    இதன்பின் வந்த திருவள்ளுவரும் அடிமைமுறையை உறுதிசெய்து,

    ”மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
    அடிமை புகுத்தி விடும்”
    (குறள்: 608)

    என்று கூறிச்செல்கின்றார். பின்பு வந்த பல்லவர் காலத்திலும் இம்முறை இருந்ததைச் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனால் அடிமைப்படுத்தப்பட்டதைக் கொண்டு அறியலாம். ஆனால் இவையெல்லாம் சிறிய அளவிலே இருந்தன. உரோம், கிரேக்க நாடுகளைப் போன்று பெரிய அளவில் பரவலாக அடிமைமுறை காணப்படவில்லை. பின்பு வந்த சோழர், பாண்டியர் காலத்தில் இது பல்கிப் பெருகிச் சமுதாயத்தையே சீர்கேடாக்கும் வகையில் வளர்ந்து நின்றது.

    தமிழ்நாட்டில் அடிமைமுறைக்கான காரணங்கள்:

         பழந்தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான அடிமைகள் இருந்துள்ளனர். அவர்கள் பல காரணங்களுக்காக அடிமைப்பட்டனர் அல்லது அடிமைப்படுத்தப்பட்டனர். அவை வருமாறு:-

    1. அயல்நாடுகளுடனான போரின்பொழுது தோற்ற நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அடிமைகளாகப் பிடித்து வரப்பட்டனர்.
    2. சிலர் இறைப்பணியாற்ற விருப்பத்துடன் தம்மைத் தாமே அடிமைகளாக விற்றுக்கொண்டனர்.
    3. பணத்துக்காக அப்பாவிகள் பிடிக்கப்பட்டு அடிமைச் சந்தைகளில் விற்கப்பட்டனர்.
    4. இயற்கைச் சீற்றங்கள் மிகுந்த காலத்தில் வரிசெலுத்தவியலாத பொதுமக்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டதுடன் அவர்களும் அடிமைகளாக்கப்பட்டனர்.
    5. கொடிய பஞ்சத்தின்போது தம்மைக் காத்துக்கொள்ளப் பலர் தம்மை கோயில்களுக்கும், மடங்களுக்கும் அடிமைகளாக விற்றுக் கொண்டனர்.
    6. குடும்பப் பெண்கள் சிலர் கணவன்களால் அடிமைகளாக விற்கப்பட்டனர்.
    7. அடிமைகளை அவர்களின் பரம்பரையினருடன் சேர்த்தும் விற்பனை செய்தனர்.
    8. பிராமணர்கள் ஒருபோதும் அடிமைகளாக்கப்படவில்லை.

    தமிழகத்தில் அடிமைமுறையின் இயல்புகள்:

       உலகில் அடிமைமுறையை அறிமுகம் செய்தவர்கள் உரோமானியர்களே. தம்மிடம் தோற்ற நாடுகளிலிருந்து அவர்கள் பல்லாயிரக்கணக்கான அடிமைகளைப் பிடித்துவந்தனர். உரோமாபுரி முழுவதும் ஏராளமான அடிமைச் சந்தைகள் காணப்பட்டன. அங்கு அரசர்களே அடிமைமுறையை ஆதரித்தனர். தமிழகத்தில் கோயில்களும், மடங்களும், செல்வர்களும் இம்முறையை ஆதரித்தனர். இடைவிடாத போர்களும், இயற்கைச் சீற்றங்களும் இதற்குக் காரணிகளாய் அமைந்தன. இடைக்காலப் பொதுமக்கள் சமய உந்துததலால் இறைப்பணி புரியக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் தம்மைத் தாமே அடிமைகளாக விற்றுக்கொண்டனர். பலர் தம்மையும், தம் சந்ததியினரையும் அடிமைகளாக விற்றுக்கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கையை இதற்குச் சான்றாய்க் கொள்ளலாம்.

         அரசர்களே அடிமைமுறையை ஆதரித்ததால் அடிமைகளை விற்பதும், வாங்குவதும் பழங்காலத் தமிழகத்தில் சர்வ சாதாரண நிகழ்வாய்த் திகழ்ந்தது. தமிழ்நாட்டில் அடிமைகள் மிருகங்கள் போன்று நடத்தப்பட்டனர். அவர்கள் உடம்பில் எஜமானர்களின் இலச்சினைகள் பொறிக்கப்பட்டன. சிவன் கோயிலுக்கு விற்கப்பட்ட அடிமைகளுக்குச் சூல அடையாளமும், வைணவக் கோயில்களுக்கு விற்கப்பட்டவர்களுக்குச் சக்கர இலச்சினையும், அரசு அடிமைகளுக்கு அரசு முத்திரையும் பொறிக்கப்பட்டன. சில சமயம் அடிமைகள் சீதனப் பொருள்களுள் ஒன்றாய்க் கருதப்பட்டு வழங்கப்பட்டனர். சான்றாகக் கிழவன் வயிதராயன் என்பவனுக்குத் தன் மனைவியின் சீதனமாக 36 அடிமைகள் கிடைத்தனர்.

         பஞ்ச காலங்களில் எளியவர்கள் தம் வயிற்றுக் கொடுமையிலிருந்து தப்பிக்க அக்காலத்தில் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த கோயில்களுக்கும், மடங்களுக்கும் தம்மை விற்றுக் கொண்டனர். சான்றாகத் திருப்பாபுரம் கோயிலுக்கு வேளாளன் ஒருவன் வறுமையின் கொடுமையால் தன் மனைவியையும், இரு மகள்களையும் விற்றுக்கொண்டதைச் சான்றாகக் கொள்ளலாம் (ARE.No:86/1911). கடமை தவறியவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவனது அடிமைகளும் ஏலம் விடப்பட்டனர். சான்றாக ஊட்டத்தூரைச் சார்ந்த பிராமணன் ஒருவன் அவ்வூர் கோயில் நகைகளைத் திருடிவிட்டதால் அவன் சொத்துக்களுடன் அவனது அடிமைகளும் ஏலம் விடப்பட்டனர். கொத்தடிமைமுறை தாங்காத அடிமைகள் தப்பியோடும்பொழுது பிடித்துவரப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். சான்றாக, திருச்செங்காட்டான்குடிக் கோயில் அடிமைகள் அதன் உரிமையாளன் ஸ்தானப் பட்டன் என்பவன் செய்த கொடுமைகள் தங்காது தப்பியோடிய பொழுது மூன்றாம் குலோத்துங்க சோழனால் பிடித்துவரப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர் (ARE.No:94/1926).

         கோயிலுக்கு விடப்பட்ட அடிமைகள் கோயில் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் கோயிலின் உரிமைப் பொருளாய்க் கருதப்பட்டனர். அவர்கள்மீது மன்னர்கள்கூட உரிமை பாராட்ட இயலவில்லை. சான்றாக முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1088-இல்) காளஹஸ்தி கோயில் தேவரடியார்கள் தவறுதலாக அரசுப்பணிக்குக் கொண்டு வரப்பட்டு அரண்மனையில் பணியாற்றினர். அவர்கள் முதுகில் அரசு இலச்சினை பொறிக்கப்பட்டது. பின்பு உண்மை தெரிந்தபின் அவர்கள் கோயிலுக்கே திரும்ப வழங்கப்பட்டனர். அவர்களின் முதுகிலிருந்த அரசு இலச்சினை அழிக்கப்பட்டு சூல இலச்சினை பொறிக்கப்பட்டது (ARE.No:141/1922).  இது தவிர வேறு விதமான அடிமைமுறையும் அக்காலத்தில் காணப்பட்டது.

    கி.பி.1002-இல் திருவிடந்தைக் கோயிலுக்கு 12 மீனவக் குடும்பங்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். இவ்வடிமைகள் கோயில் பணி செய்யாமல் மீன்பிடித் தொழில் செய்துவந்தனர். ஆனால் இவர்கள் ஈட்டிய வருவாயில் 3/4 கழஞ்சு பொன்னைக் கோயிலுக்கு வழங்கினர். மேலும் இக்கோயிலில் சிறப்புடன் நடக்கும் இராஜராஜன் பிறந்தநாள் திருவிழாவான சதயத் திருவிழாக் கொண்டாட்டத்தில் 7 நாட்களும் கோயில் பணியாற்றினர். அவர்களுக்கு ஊதியமாக கோயில் படையல் (உணவு) மட்டுமே வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் அடிமை முறையின் பதிவுகள்:

         சங்க காலத்தில் குறைவாகக் காணப்பட்ட அடிமைமுறை  இடைக்காலத்தில் பல்கிப்பெருகியது. இதைக் கல்வெட்டுச் சான்றுகள் உறுதிசெய்கின்றன. தஞ்சை மாவட்டம் பெரும்பள்ளம் கோயிலுக்கு நாங்கூர் அந்தணன் 13 காசுகளுக்குத் தன் அடிமைகள் 6 பேரை விற்றான் (ARE.No:216/1925).  நந்திவர்ம மங்கலத்து அதிகாரியான சந்திரசேகரன் என்பவன் வயலூர் கோயிலுக்குப் பணிபுரியப் பல அடிமைகளை விற்றான். பாண்டிய நாட்டுக் கருங்குளத்து இராஜசிம்மேஸ்வரக் கோயிலுக்கு அரசு அதிகாரி ஒருவன் பறை கொட்டும் உவச்ச அடிமையை விற்றான் (ARE.No:230/1927-28).  திருவலம் கோயிலுக்கு அழகிய பாண்டிய பல்லவராயன் என்பவன் தன் குடும்பப் பெண்களையே சூல இலச்சினை பொறித்து அடிமைகளாக விற்றான் (ARE.No:149/1936-37).  திருவாலங்காட்டுக் கோயிலுக்கு 4 தேவரடியார்கள் 700 காசுக்கு விற்கப்பட்டனர் (ARE.No:80/1913).  வயித ராயன் என்ற அதிகாரி தன் மனைவியைத் திருச்செங்கட்டான்குடிக் கோயிலுக்குத் தேவரடியராக விற்றான்.

         திருவாலங்காட்டுக் கோயில் பணிக்கு கோயில் நிர்வாகம் 36 அடிமைகளை கி.பி.1208-இல் விலைக்கு வாங்கியது (ARE.No:90/1926). கி.பி.1209-இல் நிகழ்ந்த பஞ்சத்தில் வேளாளன் ஒருவன் தன்னையும் தன் மனைவி மற்றும் இரு மகன்களையும் 110 காசுக்குத் திருப்பாபுரம் கோயிலுக்கு விற்றுக் கொண்டான் (ARE.No:86/1911).  கி.பி.1208-இல் சூலமங்கலம் கோயிலுக்குப் பணிபுரியச் சில அடிமைகள் விற்கப்பட்டனர் (ARE.No:296/1911).  இதற்காகத் தயாரிக்கப்பட்ட பிரமாணச் சீட்டில் “கிராமகதமாய் வரும் அடியார்” என்று அவர்களின் அடிமைத்தனம் பொறிக்கப்பட்டது. எதிரிலிச் சோழ கங்க நாடாள்வான் என்பவன் கி.பி.1219இல் திருமறைக்காட்டுக் கோயிலுக்கு 5 ஆண்களையும், 5 பெண்களையும் 1000 கழஞ்சு பொன்னுக்கு விற்றான் (ARE.No:499/1904).  தஞ்சை அச்சுதமங்கலம் கோயிலில் உள்ள மடத்தில் கல்தச்சன் ஒருவனும் அவன் குடும்பமும் கி.பி.1219இல் அடிமைகளாகப் பணியாற்றினர் (ARE.No:409/1925).  நாகப்பட்டினம் மாவட்டம் கொருக்கை கோயிலில் 100க்கும் மேற்பட்ட அடிமைகள் அக்காலத்தில் பணியாற்றினர் (ARE.No:110/1892).  மேலப்பெரும்பள்ளம் கோயிலுக்கு நம்பிக்காட்டு நங்கை என்ற பெண் தன்னையும் தன் குடும்பத்தையும் 15 காசுகளுக்கு விற்றுக் கொண்டாள் (ARE.No:218/1925).  திருவொற்றியூர் கோயிலுக்கு வயலூர் கிழவன் என்பவன் நெல்லைக் குத்தி அரிசியாக்கும் பணிக்கு 5 அடிமைப் பெண்களைத் தானமாக வழங்கினான். கிழவன் வயிதராயன் என்பவனுக்கு மனைவியின் சீதனமாய் 36 அடிமைகள் கிடைத்தனர் (ARE.No:75/1925).

         திருவாலங்காட்டுக் கோயிலில் பல அடிமைகள் கோயில் பணியாற்றினர். திருவிடந்தைக் கோயிலுக்கு 12 மீனவக் குடும்பங்கள் அடிமைகளாகப் பணியாற்றினர் (ARE.No:274/1910). மூன்று வேளாளர்களும், இரண்டு பெண்களும் திருவக்கரைக் கோயிலுக்கு அடிமைகளாக கி.பி.1099ல் விற்கப்பட்டனர் (ARE.No:183/1904).  அடிமைகள் உடலில் தாம் அடிமைகள் என்ற அடையாளம் பொறிக்கப்பட்டது. இதைக் கல்வெட்டுகள் ‘இலாஞ்சினை இட்டு” ‘இலாஞ்சினை சாத்தி” என்றழைக்கின்றன. அக்காலத்தில் அடிமைகள் “அடியார்கள்” என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். “எங்களுக்குக் கிரமாந்தமாய் வரும் அடியார்” என்ற கல்வெட்டு வாசகம் இதை உணர்த்தும் (ARE.No:296/1911).  அடிமைகளை விற்கும் பொழுது ‘ஆள்விலைப் பிரமாண இசைவுச் சீட்டு” எழுதப்பட்டது. இவ்வாறு பழந்தமிழ்ச் சமுதாயத்தில் அடிமைமுறை நன்கு வேரூன்றி விருட்சமாய் வளர்ந்து நின்றது.

    தமிழகத்தில் அடிமைமுறையின் வீழ்ச்சி:

         இடைக்காலத்தில் சிறப்புற்றுத் திகழ்ந்த அடிமைமுறை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியைச் சந்தித்தது. தமிழகத்தில் முடியுடை வேந்தர்களின் வீழ்ச்சிக்குப்பின் ஏற்பட்ட ஓயாத படையெடுப்பால் இம்முறை வீழ்ச்சியடைந்தது. தமிழ்ச் சமுதாயம் வறுமையில் பீடிக்கப்பட்டது. அடிமைமுறையை வளர்த்த கோயில்களும், மடங்களும் தம் சிறப்பை இழந்து பெரும் பின்னடைவைச் சந்தித்தன. செல்வர்கள் வறியவர்களானார்கள். படையெடுப்பாளர்கள் கோயில்களிலும், மடங்களிலும் இருந்த செல்வங்களையெல்லம் சுரண்டிச் சென்றனர். தமிழ்மக்கள் அனைவரும் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். படையெடுப்பாளர்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிமைகளாகப்  பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் தனியாக அடிமைமுறை என்ற ஓர் அமைப்பு முற்றிலுமாய்த் தமிழகத்திலிருந்து மறைந்தது. இவ்வாறு மன்னர்களாலும், மடங்களாலும், திருக்கோயில்களாலும், செல்வர்களாலும் பலநூற்றாண்டுகளாய் வளர்க்கப்பட்ட இவ்வடிமை முறை கால நிர்பந்தத்தாலும், அரசியல் சூழலாலும் முற்றிலுமாகச் சுவடு தெரியாமல் மறைந்துபோனது.

    முடிவுரை:

          ஒரு சமுதாயத்தைப் பாராட்ட பல காரணங்களைச் சொல்லலாம். சிறந்த ஆட்சியாளர்கள், அறிவார்ந்த பொதுமக்கள், ஏற்றத்தாழ்வற்ற சமூகம், மேம்பாடான கல்வி நிலை, வளமான பொருளாதார நிலை, சிறப்பான கலாசாரம், உன்னதப் பண்பாடு போன்றவற்றுடன் அனைத்துத் துறைகளிலும் நாடு தன்னிகரற்ற வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இடைக்காலத் தமிழகம் இத்தகு சிறப்புகளைக் கொண்டிருந்தது. எனவே இச்சமூகத்தில் பிறந்ததற்குப் பல அறிஞர்கள் பெருமை கொண்டு அகமகிழ்ந்து தம்மைத் தாமே பாராட்டிக்கொண்டனர். ஆனால் இச்சமூகத்தில்தான் அடிமைமுறை போன்ற புன்மைகளும் இருந்தன என்பதை அவர்கள் மறந்தனர். இப்புன்மையை ஒழிக்கவேண்டிய தமிழ் மன்னர்கள் அவற்றை முனைப்புடன் ஆதரித்தது வியப்புக்குரியது. இச்சமூக அவலத்தை ஆதரிக்கும் கேந்திரியங்களாகக் கோயில்களும், மடங்களும் திகழ்ந்தன. இந்நிறுவனங்கள் சமூகத்தில் பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாய் மன்னர்களும் அவ்வழியே சென்று இம்முறையை ஆதரித்து வளர்த்தனர். இடைக்கால ஐரோப்பாவில் திருச்சபை (Papacy) பெற்றிருந்த செல்வாக்கை இவை தமிழகத்தில் பெற்றிருந்தன. திருச்சபையின் அதிகாரத்தை ஒழிக்க அங்குள்ள மன்னர்கள் அரிதின் முயன்றனர். ஆனால் தமிழ் மன்னர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் அதை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியதால் இப்புன்மை ஒழியாமல் பல்கிப் பெருகியது.

         இடைக்காலத் தமிழ்ச் சமூகம் வலியோர்களை உயர்த்துவதிலும், மெலியோர்களை நசுக்குவதிலும் முனைப்புக் காட்டியது. மேலும் மேல்நாட்டின் தலைசிறந்த மேதாவிகளான மார்டின் லூதர் (Martin Luther), வால்டேர் (Voltaire), ரூஸோ (Jean-Jacques Rousseau), ஜான் விக்ளிப் (John Wycliffe), விக்டர் யூகோ (Victor Hugo), அலேக்சாண்டர் டூமா (Alexandre Dumas), சர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) போன்றோர் தம் எழுத்துக்களாலும், பேச்சுக்களாலும் சமூக அவலங்களையும், சீர்கேடுகளையும் படம்பிடித்துக்காட்டிப் பதிவு செய்துவிட்டுச் சென்றனர். இதனால் அம்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு, சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள் தோன்றிச் சமூகப் புன்மைகள் மறைய அவை உதவின. இது போன்ற எழுத்தாளர்களும், சீர்திருத்தவாதிகளும் ஒருவர் கூடத் தமிழகத்தில் தோன்றாதது மாபெரும் இழப்பாகும். இதனால் பழந்தமிழ்ச் சமுதாயத்தின் புன்மைகளைப் பொதுமக்கள் அறிய முடியாமலும், அவற்றை ஒழிக்க முடியாமலும் போயிற்று. அடிமைமுறை என்பது பழந்தமிழ்ச் சமுதாயத்தின் சீர்கேடு என்பதுடன், அறிவார்ந்த நம் முன்னோர்கள் எளியோர் மீது இழைத்த மாபெரும் சமூக அநீதி (Social Injustice) என்பதை மறுக்கவியலாது.

    சுருக்கம் (Abbrevations):

    1.ARE-Annual Report on Indian Epigraphy

    பார்வை நூற்பட்டியல் (Bibliography):

    1.Neelakanta Sastri.K.A,(1975), The Cholas, Chennai: University of Madras.

    2.Neelakanta Sastri.K.A,(1939), Studies in Chola History and Administration, Chennai:

     The University of Madras.

    3.Appadorai.A.(1990). Economic Conditions in South India (1000-15000), Chennai: University of  Madras.

    4.Pillai.K.K.(1969) A Social History of The Tamils, Chennai: University of Madras.

    5.Swaminathan.A, (1991), Social and Cultural History of Tamil Nadu, Chennai: Deepa Publications.

    6.பிள்ளை.கே.கே. (1977), தமிழ்நாட்டு வரலாறு- மக்களும்

     பண்பாடும், சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

    *****

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    இடைக்காலத் தமிழகத்தில் நிலவிய அடிமைமுறை பற்றி விரிவாக ஆய்ந்து பல கருத்துக்களை இக்கட்டுரையில் வெளியிட்டிருக்கின்ற ஆய்வாளர்,  திறமிகு ஆட்சியாளர்கள், அறிவார்ந்த பொதுமக்கள், மேம்பட்ட கல்விநிலை, உயரிய பண்பாடு எனும் பல சிறப்புக்கள் அன்றைய தமிழகத்துக்கு இருந்தாலும் மனிதர்களுக்குள் வேற்றுமையை வளர்த்துச் சமத்துவத்துக்குச் சமாதி கட்டும் அடிமைமுறையை ஆட்சியாளர்களும், சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருந்தோரும் ஆதரித்ததையும், அதனை அழியாமல் காத்துவந்ததையும் பாராட்டவியலாது என்பதை அழுத்தமாய்ப் பதிவுசெய்திருக்கின்றார்; அதற்கு அவருக்குப் பாராட்டுக்கள்!

    எனினும், சொற்பிழைகள், ஒரேசெய்தி ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் இடம்பெற்றுள்ளமை போன்றவற்றையும் ஆய்வாளர் கவனத்தோடு களைந்திருந்தால் கட்டுரை மேலும் சிறப்பாய் அமைந்திருக்கும்.

     

    Share
  • கொரோனா வரமா? சாபமா?

    கொரோனா வரமா? சாபமா?

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண்,  ஆஸ்திரேலியா

    கொரோனா வரமா சாபமா என்றால்… வரமென்றும் கருதலாம். சாபமென்றும் கருதலாம். சாபமென்னும் வேளை அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள். அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகள். அதனால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை. நாளாந்த வாழ்க்கையினையே புரட்டிப் போட்ட போக்கிரித்தனம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் குடும்பத்தைக் கூட்டி வைத்திருப்பதை நன்மையென்றே எடுத்துக் கொள்ளலாம். மனரீதியில் பாதிப்புகள் வருவதாக பல செய்திகள் வந்தாலும் வீட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டிலே இருக்கின்ற ஒரு நிலை உருவாகி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகாலை அவசரப்பட்டு எழத் தேவையில்லை. அடித்துப்பிடித்து வேலைக்கு ஓடிப்போக வேண்டியதில்லை. பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப வேண்டியதும் இல்லை. அவர்கள் சுவையற்ற உணவுகளை உண்ண வேண்டியதும் இல்லை. கணவனும் மனைவியும் பிள்ளைகளுடன் சேர்ந்திருந்து மகிழ்வுற நல்ல தருணம். வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டியும் தனிமை என்னும் இருளைக் கடந்து வெளிச்சம் என்னும் மகிழ்வுக்குள் வந்துவிட்ட நிலைமை.

    தனித்திருத்தல் என்பது தடுப்புச் சுவராகும். விழித்திருப்பதென்பதும் நம்மையும் காத்து மற்றவர்களையும் காப்பாற்றுவது என்பதாகும். வீட்டில் இருப்பது என்பது வீட்டையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கு ஒப்பானதாகும்.

    ஓய்வு நேரம் கிடைக்காத என்று ஏங்கிய பலருக்கு கொரோனாவின் வரவால் நல்ல ஓய்வு கிடைத்திருக்கிறது. கிடைத்த ஓய்வைச் சாபமென நினைத்துச் சஞ்சலப்படுவதாகப் பல செய்திகள் நாளும் பொழுதும் வந்த வண்ணம் இருக்கின்றன. வீடற்றவர்கள் பலர் தெருவை வீடாக்கி சீவிதத்தை ஓட்டி வருகிறார்கள். அன்றாடங் காய்ச்சிகள் அவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையே பெரிய சங்கடம்! உண்ண உணவு கிடைத்தால் அவர்களுக்கு அதுவே ஆனந்தம்! தனிமை என்பதை அவர்கள் நினைத்தே பார்ப்பதும் இல்லை. வயிறு பசித்தால் உணவு கிடைக்கவேண்டும் கிடைத்தால் அதுவே நிம்மதி என்பதுதான் அவர்கள் நிலை.

    இருப்பதற்கு வீடு இருக்கிறது. அது சொந்த வீடாக இருக்கலாம். அல்லது வாடகை வீடாகக்கூட இருக்கலாம். எப்படியோ ஒரு வீடு  அமைந்துவிடும். வீட்டில் இருப்பதே பெரிய பாதுகாப்பு! வீதியை வீடாக்கி இருப்பார்க்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே! அவர்கள் வயிற்றை நிரப்பவே வழி தேடுகிறார்கள். ஆனால் வீடும் இருக்கிறது. வேலையும் இருக்கிறது. கொரோனாவால் வீட்டிலே இரு என்னும் நிலையை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது பொருத்தமற்ற ஒரு சிந்தனையே எனலாம். நல்ல ஒரு தருணம் நம்மைக் காத்திட நம்மைச் சார்ந்தவர்களைக் காத்திட வாய்த்திருக்கும் வேளை அதனைச் சாபமாக ஏன் நினைக்க வேண்டும். நல்ல வரமாக நினைத்தால் குறைந்தா போய்விடுவோம்?

    பிள்ளைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லலாம். அவர்களுடன் இருந்து விரும்பிய விளையாட்டை விளையாடலாம். எல்லோரும் சேர்ந்து சமைத்து மகிழலாம். நல்ல நூல்களை வாசிக்கலாம். உறவுகளுடன் , நட்புகளுடன் தொலைபேசியில் சுகம் விசாரிக்கலாம். பிராத்தனைப் பாடல்களை ஒன்று கூடிப்பாடலாம். நல்ல இசைநிகழ்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கலாம். கணினியில் பட்டி மண்டபங்கள், நற்சிந்தனைகள், பார்க்கலாம். சிரிப்பு நாடகங்களைக் கண்டு நம்மை மறக்கலாம். இப்படி என்ன என்ன நல்லன எல்லாம் இருக்கின்றனவோ அவற்றைக் குடும்பத்துடன் பார்த்து மனதைச் சிதற விடாமல் மகிழலாம் அல்லவா? அதற்கான நல்ல தருணமே இந்தத் தனிமைப்படுத்தல் என்பதை ஏன் மனத்தில் கொள்ள  மறுக்கிறோம்!

    பசுமையான நல்ல நினைவுகளை மீட்கலாம். அதனைக் குடும்பத்தாருடன் பகிர்ந்து பழைய வாழ்வினுக்கே செல்லலாம் அல்லவா? இளமையில் செய்த குறும்புத்தனங்களைக் குடும்பத்தாருடன் பகிர்ந்து மனம்விட்டுச் சிரித்து மகிழலாம் அல்லவா?

    கொரோனாவின் கொடூரம் ஒருபுறம். வீட்டில் இருக்கிறோமே என்றும் வருந்தினால் அது அதைவிடக் கொடூரமாயும் ஆகிவிடும். அத்தியாவசியத் தேவைகளில் வேலை செய்கின்ற மருத்துவர்கள், காவல்துறை சார்ந்தவர்கள், ஆம்புலன்ஸ் சாரதிகள், துப்பரவுத் தொழிலாளர், இவர்கள் யாவரும் குடும்பத்தை விட்டு, கொடூரக் கொரோனாவுக்குள் வேலைசெய்யும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை கொரோனா பற்றிய கொடூரத்தில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறும் அறிவுரையால் வீட்டிலே இருக்கின்ற நிலையை எப்படி வெறுக்க முடியும்? அப்படி இருப்பது மன உளைச்சலைத் தருகிறது என்று சொல்லுவது மனித தர்மமா? சற்று நிதானித்துச் சிந்திக்க வேண்டும்!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 13

    பழகத் தெரிய வேணும் – 13

    நிர்மலா ராகவன்

     (குடும்பத்தினருடன் நெருக்கமா!)

    நூறு வருடங்களுக்கு ஒருமுறை வரும் பேரிடர்கள் நாம் மறந்துவிட்ட முக்கியமான ஒன்றை உணர்த்துகின்றன.

    சொத்து, சுகம், தொழில் என்று எவ்வளவுதான் இருந்தாலும், ஆபத்து சமயத்தில் உதவவோ, அனுசரணையாக இருக்கவோ குடும்பத்தினர், நெருக்கமான உறவினர்கள்போல் எவரும் கிடையாது.

    தற்போது, உலகிலுள்ள பல நாடுகளிலும் தொற்றுநோய் பரவாமலிருக்க மனிதர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை.

    ‘எப்போதும் நம்முடன் இருப்பவர்களேதாமே!’ என்ற அலட்சியத்துடன் பலர் தம் குடும்பத்தினரைக் கவனிப்பதோ, அவர்களுடன் அதிகம் பேசுவதோ குறைந்துவிட்டது. இந்த நிலையில் அவர்களுடன் மட்டுமே நாள் முழுவதும் புழங்கவேண்டும் என்ற கட்டுப்பாடு பலருக்குத் தண்டனை போலத்தான்.

    ‘என் வீட்டில் நிம்மதியே கிடையாது!’ என்பவர்கள் அன்பு, மகிழ்ச்சி இவற்றால் கிடைக்கக்கூடிய நிம்மதி நாம் பிறருக்கு அளிப்பதைப் பொருத்திருக்கிறது என்பதை உணர்வதில்லை.

    குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்படுவது இயற்கை. குடும்பத் தலைவரோ, தலைவியோ தான் சொல்வதையே எல்லாரும் கடைப்பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் யாருக்குத்தான் நிம்மதி கிடைக்கும்?

    ஹிட்லரைப் போன்றவர்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். குடும்பத்திலும் இப்படிப்பட்ட சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள். எல்லா நாடுகளிலும், இனங்களிலும்.

    ஒரு சூழ்நிலையிலிருந்து வித்தியாசமான ஒன்றிற்கு மாறுகையில், ‘என் பழக்க வழக்கங்கள்தாம் சிறந்தவை!’ என்று வலுக்கட்டாயமாக அவற்றைத் தம் சந்ததியினரிடம் புகுத்துவது பலரது வழக்கம். இதனால் பாதிப்பு என்னவோ இளைய தலைமுறையினருக்குத்தான்.

    கதை

    எங்கள் குடும்ப நண்பர் சண்முகம் தன் தங்கைக்கு மனநிலை சரியாக இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். அதில் அலுப்பும் தென்பட்டது. செலவாகிறதே என்று இல்லை.

    “உண்மையைச் சொல்கிறேன். எங்கப்பாதான் இதற்குக் காரணம். அவர் தோட்டப்புறத்திலிருந்து நகரத்துக்கு வந்தவர். ஆனால், இன்றும், அவர் சிறுவயதில் கடைப்பிடித்த பழக்கவழக்கங்களை நாங்களும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி!” என்று புலம்பினார் என்னிடம்.

    உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அன்றாடம் செய்வதற்கு உருப்படியாக எந்த வேலையும் இல்லாவிட்டால் மனம் எந்த நிலைக்கு ஆளாகும்? இதோ ஒரு கதை.

    தந்தைதான் பெரும்பொருள் சேர்த்து வைத்திருக்கிறாரே, உத்தியோகத்திற்கு வேறு போய்ச் சம்பாதிக்க வேண்டுமா என்று வீட்டிலேயே இருந்து காலத்தைக் கழிக்க எண்ணினார் வெங்கட்ராமன்.

    நண்பர்களிடம் இனிமையாகப் பேசுவார். வீட்டுக்கு வெளியில் பலருக்கும் இவரைப் பிடித்திருந்தது.

    வீட்டிலோ!

    ‘தனக்குத்தான் எல்லாம் தெரியும்,’ என்ற மிதப்புடன், மகன் சங்கர் செய்யவேண்டிய ஒவ்வொரு காரியத்தையும் விளக்குவார். தந்தையே செய்து காட்டியிருந்தால், தானே அதைப்போல் செய்திருப்பான்.

    அவன் குடும்பத்துக்கு மூத்த மகன் ஆதலால் இயற்கையிலேயே பொறுப்புணர்வு மிக்கவன்.

    மகனுக்குச் சுயபுத்தியே கிடையாது என்று நிச்சயித்தவர்போல் அவர் நடந்து கொண்டது,  சங்கரைத் தன் திறமையையே சந்தேகிக்க வைத்தது.

    அவன் அடைந்த பலவீனத்தால் அவருடைய அதிகாரம் அதிகரித்தது. எப்படியெல்லாம் கையாண்டால் அவனை அதிகமாகத் துன்புறுத்தலாம், அவனுடைய பயம் அதிகரிக்கும் என்று யோசித்தவர்போல், வார்த்தைகளை வீசுவார். ‘நீ செய்து கிழித்தாய்!’ என்ற கேலி, ‘நான்தான் சொன்னேனே, உன்னால் முடியாதென்று!’ என்ற ஏளனம்.

    அவரையே தன் முன்மாதிரி என்று எண்ணியதால், அவர் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டான் சங்கர். தந்தையை எதிர்த்து நிற்க முடியாத நிலை.

    இருபத்தைந்து வயதானபோதும், அவனைச் சிறுபிள்ளைபோலவே நடத்தினார். வேலை முடிந்து, அவன் நேராக வீடு திரும்பவேண்டும். சற்றுத் தாமதமானால், நெடுநேரம் வசவு தொடரும்.

    வெங்கட்ராமனைப்போன்ற சர்வாதிகாரிகள் மாற மாட்டார்கள். தாம் செய்வதுதான் சரியென்று வாதாடுவார்கள்.

    ‘என்மேல் எந்தத் தவறும் இல்லை,’ என்று புரிந்து, அவர்கள் கையில் சிக்கிக்கொண்ட அபாக்கியவான்கள் தாமே விலகினால்தான் உண்டு. ஆனாலும் அது எளிதன்று. துணிச்சல் அறவே பறிக்கப்பட்ட நிலையில், வாழ்நாள் முழுவதும் பிறருடன் பழகுவதில் கலக்கம்தான் விளையும்.

    சரித்திர சர்வாதிகாரிகளின் பரம்பரை

    ஹிட்லருக்குக் குழந்தைகள் கிடையாது. அவருடைய தந்தையின் முதல் மனைவிமூலம் பிறந்த ஐந்து சகோதர சகோதரிகளும் தமது பரம்பரை தொடரக்கூடாது, ஹிட்லரின் மரபு அவர்களிடம் இருந்துவிடக்கூடும் என்ற பயத்தில் அதை ஒழிக்க எண்ணி, குழந்தைகளே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

    கம்போடியாவின் KILLING FIELDS பற்றிக் கேள்விப்படிருப்பீர்கள். 20,000 பேர் சித்ரவதை செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டனர். சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக அவர்களுடைய மண்டையோடுகளைக் குவித்து வைத்திருப்பதை நேரில் பார்த்தபோது, எனக்கு அளவில்லாக் கலக்கம் ஏற்பட்டது. நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்குமுன் நடந்த படுகொலையாக இருந்தால் என்ன! ஒரு மனிதனின் ஈவிரக்கமற்ற செயலால் விளைந்த பாதிப்பு இன்றும் அதிர வைக்கிறது.

    இந்த வதைக்குக் காரணமாக இருந்தவர் POL POT. இப்போது, இவருடைய மகள் நெல் பயிரிடும் விவசாயி.

    ருஷ்யாவின் ஸ்டாலின், இத்தாலியின் முஸ்ஸோலினி ஆகிய கொடுமைக்கார சர்வாதிகாரிகளின் வழித்தோன்றல்கள் கலைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    நாடுகளை விடுங்கள்! குடும்பத்தில் ஏன் ஒருவர் சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார்?

    கதை1

    ஒருவரோடு இணைந்து தொழிலில் இறங்கியவர் முருகேசன். அந்த ‘நண்பர்’ பணத்தைச் சுருட்டிக்கொண்டு போனதால், முருகேசனுக்குப் பெரும் நஷ்டம். பணப்பிரச்னை மட்டுமின்றி, குடும்பத்தினர்முன் ஏமாளியாக நிற்க வேண்டியிருக்கிறதே என்ற அவமானம்.

    அதை மறைக்க, அவர்களை முந்திக்கொண்டார். உத்தியோகத்தில் வெற்றிநடை போட்ட மனைவியை ‘முட்டாள்’ என்று பழித்தார். அப்படியும் மனம் ஆறாது, தன் மகளையும் ஓயாது அதிகாரம் செய்தார்.

    அவரது மனநிலை புரிந்து மனைவி அடங்கிப்போனாள். மகளுக்கோ தந்தைமேல் வெறுப்புத்தான் ஏற்பட்டது. பலர் முன்னிலையில் மரியாதை இல்லாது அவரிடம் பேச முற்பட்டாள்.

    பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எதுவுமின்றி அடிமைபோல் வாழ நேரிட்டால், தம்மை அவ்வாறு நடத்தும் குடும்பத் தலைவர்மீது ஆத்திரம் வராமல் என்ன செய்யும்?

    தன் பொறுப்பில் இருப்பவர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்காக உழைப்பதும் ஒரு குடும்பத் தலைவரின் கடமை. அது புரியாது, ‘என்னை யாரால் எதிர்க்க முடியும்!’ என்ற திமிருடன் நடந்தால், பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி, அக்குடும்பத்திலுள்ள அனைவருமே பாதிக்கப்படுவார்கள்.

    கதை 2

    ஒரு தெருவிபத்தில் மாட்டிக்கொண்ட கந்தசாமிக்குக் கைவசம் இருந்த தொழில் போயிற்று. சுயவருமானமின்றி, மனைவியின் உழைப்பில் காலம் தள்ளவேண்டிய நிலை. மனம் நொந்து, தன் குடும்பத்தினரிடம் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார். தன் மனம் நொந்ததுபோல், பிறரும் அவதிப்படவேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான வீம்பின் விளைவு அது.

    தனக்கு ஒப்பாத காரியத்தை யாரும் செய்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தார் கந்தசாமி. எல்லாருக்கும் நிம்மதி பறிபோயிற்று.

    முருகேசன், கந்தசாமி இருவருமே தம்மைப் பலவீனர்களாக உணர்ந்தவர்கள். அதை மறைக்க, அதிகாரத்தை நாடினார்கள்.

    வாழ்க்கையில் சறுக்குவது எவருக்கும் நடக்கக்கூடியதுதான். எப்படி மீண்டும் தலை நிமிரலாம் என்று யோசித்தால் நிலைமையை ஓரளவு சமாளிக்கத் தெம்பு வரும்.

    கதை

    மைமூனாவுக்கு ஐம்பது வயது இருக்கும். பிரசவமான பெண்களுக்கும், பிறருக்கும் உடம்பு பிடித்துவிட்டு, அதில் கிடைக்கும் சொற்ப சம்பாத்தியத்தில் உடலை வளர்ப்பவள்.

    “என் மகனுக்கு ஆண்குறி வளைந்திருக்கும். மருத்துவர் அறுவைச் சிகிச்சையால் அதை நேராக்கிவிட முடியும் என்றார். நான், ‘வேண்டாம்’ என்றுவிட்டேன். இவனும் எங்காவது போய்விட்டால், கடைசிக் காலத்தில் என்னை யார் வைத்துக் காப்பாற்றுவார்கள்?” என்று அவள் சொல்லிக்கொண்டே போனபோது, எனக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. கணவன் தன்னை நிராதரவாக விட்டுப்போனதற்கு, தன்னையும் அறியாது மகனைத் தண்டிக்கிறாள்!

    தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், பிள்ளைகளுக்காவது நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று பொறுமை காத்து, அன்புடன் அவர்களை வளர்த்தால், அந்த அன்பைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்களா!

    ‘பலர் அப்படி நடப்பதில்லையே!’ என்கிறீர்களா?

    எது முக்கியம் என்பதை உணர்த்தவே சக குடும்பத்தினருடன் வீட்டைவிட்டு நகராது இருக்க மகுடத் தொற்றி வந்திருக்கிறதோ?

    அதிகாரப்போக்கு, அல்லது எதற்கெடுத்தாலும் சண்டை பிடிப்பது என்று இருந்தால், வாழ்க்கை நரகம்தான்.

    எல்லாரும் ஒரேமாதிரி சிந்திக்க வேண்டியதோ, நடக்க வேண்டியதோ இல்லை என்று உணர்ந்து நடந்தால் எவரது சுதந்திரமும் பறிக்கப்படுவதில்லை. ஒருவருடைய ஆற்றலும் முழுமையாக வெளிப்படும்.

    சில குடும்பங்களில் ஒவ்வொருவருமே சிறந்து விளங்குவதன் ரகசியம் இதுதான்.

    Share
  • நாலடியார் நயம் – 8

    நாலடியார் நயம் – 8

    நாங்குநேரி வாசஸ்ரீ

     8. பொறையுடைமை

    பாடல் 71

    கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
    பேதையோடு யாதும் உரையற்க – பேதை
    உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
    வழுக்கிக் கழிதலே நன்று.

    மாலைபோலும் குளிர்அருவி சூழ்
    மலைகளை உடைய
    மன்னனே! புத்தியில்லா
    மனிதனிடம் எதையும் சொல்லாதே!
    மீறிச்சொல்லுங்கால் அவன்
    மாறுபட்டு பதிலுரைப்பான்
    முடிந்தவரை அவனிடத்திருந்து
    மீண்டு தப்பித்தல் நல்லது.

    பாடல் 72

    நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
    தாரித் திருத்தல் தகுதிமற்று – ஓரும்
    புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
    சமழ்மையாக் கொண்டு விடும்.

    குணமற்றோர் பண்பற்றசொல்லைக்
    கூறும்வேளை அச்சொல் பொறுத்து
    இருத்தலே தகுதியாம் இயலாது பதில்
    இயம்பின் அச்செய்கை கடல்சூழ்
    உலகத்தாரால் புகழுக்குரியதாய்
    உணரப்படாது பழிக்குரியதாய்க்
    கொள்ளப்படும்.

    பாடல் 73

    காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
    ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ – போதெல்லாம்
    மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
    ஆவ தறிவார்ப் பெறின்.

    மலர்களிலெல்லாம் அழகான வண்டுகள்
    மகிழ்ந்து ஒலிக்கும் நிறைந்த கடலின்
    குளிர்ச்சிமிகு கரையயுடை வேந்தனே!
    நன்மை தருவதை மட்டுமே ஆராய்ந்து
    நவிலும் அறிஞரைத் துணையாகப் பெறின்
    அன்பினால் அவர் கூறும் கடுஞ்சொல்
    அயலார் மகிழ்ந்து உரைக்கும் இனிய
    சொல்லினும் தீதாகுமோ?

    பாடல் 74

    அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
    உறுவது உலகுவப்பச் செய்து – பெறுவதனால்
    இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
    துன்புற்று வாழ்தல் அரிது.

    அறியத்தகும் நன்மைதீமை அறிந்து
    அடக்கமுடையாராகி
    அஞ்சத்தகும் பழிபாவத்திற்கு
    அஞ்சி செய்வனவற்றை
    அகிலம் மகிழச்செய்து
    அறநெறியில் வந்த பொருளால்
    அகமகிழ்ந்து வாழும் இயல்புடையார்
    அகிலத்தில் எக்காலத்தும் துன்பம்
    அனுபவித்து வாழ்தல் இல்லை.

    பாடல் 75

    வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
    தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
    ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
    தூற்றாதே தூர விடல்.

    பேதமையின்றிச் சேர்ந்து
    பிரிக்கமுடியா நண்பர்களான
    பின்பு தீயொழுக்கம் ஒருவனைப்
    பற்றும்வேளை மற்றொருவன்
    பொறுக்க முடிந்த அளவு
    பொறுத்துக்கொள்க! முடியாமற்
    போகின் அவன் குற்றத்தைப்
    பிறர் அறிய வெளிப்படுத்திப்
    பழிக்காமல் விட்டுவிலகுக!

    பாடல் 76

    இன்னா செயினும் இனிய ஒழிகென்று
    தன்னையே தான்நோவின் அல்லது – துன்னிக்
    கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
    விலங்கிற்கும் விள்ளல் அரிது.

    வனங்கள் நிறை நாட்டுடை
    வேந்தனே! நண்பர்கள் நமக்கு
    தீமை செய்யினும் அவை
    தமக்கு நன்மையாக மாறும்
    என நம்பி அச்செயல் வினைப்பயன்
    என்றெண்ணி தன்னைத்தான்
    வெறுப்பதல்லாமல் நெருங்கி
    வந்து ஒன்றிப் பழகியவரை
    விடாதே!  சேர்ந்தபின் பிரிதல்
    விலங்கினிடத்தும் இல்லை.

    பாடல் 77

    பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
    அரிய பொறுப்ப என்றன்றோ – அரியரோ
    ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
    நல்லசெய் வார்க்குத் தமர்.

    ஒல் என்றொலிக்கும் அருவிகளுடன்
    ஓங்குயர் மலைகளுடை வேந்தனே!
    பெரியோருடனான மேன்மைமிகு நட்பு
    பொறுப்பர் அவர் நம் அரிய குற்றங்களை
    என்றெண்ணத்தாலன்றோ? நன்மைகளே
    எக்காலத்தும் புரிவார்க்கு நல்ல நட்பு
    கிடைத்தலும் அரிதோ?

    பாடல் 78

    வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
    அற்றம் அறிய உரையற்க – அற்றம்
    மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
    துறக்கும் துணிவிலா தார்.

    உடல்மெலியும் பசித்துன்பம் வரினும்
    உதவும் குணமில்லாதோரிடம்
    உம் வறுமையச் சொல்லாதீர்!
    உயிரை விடும் துணிவில்லாதவர்
    உதவும் குணமுடையாரிடம் வறுமையை
    உரைக்கலாமேயல்லாது மற்றவரிடத்திலல்ல.

    பாடல் 79

    இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
    இன்பத்தின் பக்கம் இருந்தைக்க – இன்பம்
    ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
    பழியாகா ஆறே தலை.

    இன்பம் தந்த செயலில்
    இழிவு நேரினும்
    இன்பம் வருகிற பக்கம்
    இருக்கின்ற உனக்கு
    இன்பம் இடையறாது பெருகி
    இருந்து நீங்காமல்
    இருப்பதைக் கண்டாலும்
    இடையூறு கிளக்கும் பழி
    இல்லாத செயல் புரிவதே சிறந்தது.

    பாடல் 80

    தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின்
    ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க – வான்கவிந்த
    வையக மெல்லாம் பெறினும் உரையற்க
    பொய்யோடு இடைமிடைந்த சொல்.

    தான் கெட்டாலும் நல்லவர்க்குத்
    தீமை செய்ய நினையாதே!
    தம் உடலின் சதை முழுதும்
    தாங்க முடியாத பசியால் உலரினும்
    தகுதியற்ற உண்ணத்தகாதவர்
    தரும் உணவை உண்ணாதே!
    தூய வானம் மூடிப்போர்த்த
    தரணி கிட்டுமாயினும் பொய்கலந்த
    தீச்சொற்களைச் சொல்லாதே!

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 15

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 15

    அவ்வைமகள்  

     15. எளிமையே வலிமையாய்

    ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்புப் பொறியாளரான ஜானதன் ஐவ், ஸ்டீவ் ஜாப்ஸிற்கு மிகவும் பிடித்தவர் – பணியில் ஒரு ஆத்ம நண்பர் போன்றவர் என்றும் கூறப்படுபவர். இவர் ஜாப்ஸின், ஆப்பிள் நிறுவனத்தின் எளிமை விதியைப் பற்றிக் கூறும்போது, எளிமையை அடைய, விடயங்களில் மிக ஆழமாகச் செல்லவேண்டும். எளிமை என்பது குறைத்துக் கொள்ளுவது (minimalist approach) அல்ல. எளிமை என்பது ஒழுங்கீனத்தை (clutter), அகற்றி ஒழுங்குபடுத்துவது அல்ல.

    எடுத்துக்காட்டாக, நாங்கள் உருவாக்கும் பயன்பாட்டுப் பொருட்களில் மறைகள் (screws), பொத்தான்கள் (buttons), தேவையற்ற நகர்திரைகள்  (navigational screens) இல்லாதவையாக அவற்றை எளிமைப்படுத்துவது என்பதைக் கவனிப்போம். இது வெறுமனே மறைகளையும், பொத்தான்களையும், நகர் திரைகளையும் கழற்றி வீசிவிடுவது அல்ல. அவ்வாறு செய்தால் அந்தப் பயன்பாட்டுப் பொருளே, பயன்படுத்தவியலாது போகும்.

    மாறாக, மறை, பொத்தான், இவற்றால் இணைக்கப்படும் பொருட்களின் வடிவம், அமைப்பு, நீள, அகல, தடிமப் பரிமாணங்களோடு அவை எவற்றால் செய்யப்பட்டிருக்கின்றன, அவற்றின் கனம் என்ன, அடர்த்தி என்ன, உறுதித்தன்மை என்ன, மற்ற பாகங்களுடன் அவை இணைந்திருக்கும் பங்கு என்ன, பாங்கு என்ன, அந்த இணைப்பின் உண்மையான தேவை என்ன எனப் பல்வேறு விடயங்களைப் பற்றி, சரியாய் ஆழமாக முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.

    அடுத்ததாக, மறையை நோக்கி விட்டால் அதற்கு பதிலாக  என்ன செய்வது, பொத்தானுக்கு பதிலாக என்ன ஏற்பாட்டை செய்வது – எத்தனை நகர்திரைக்ள உள்ளன – அவை ஒவ்வொன்றின் பயனும் என்ன – இதில் எவற்றை நீக்க முடியும் , அதில் எவற்றை  நோக்கினால், கருவி,  எவ்விதப் பிரச்சனையுமின்றி வேலை செய்யும் என ஏகப்பட்ட விடயங்களை ஆழ்ந்து ஆய்வு செய்யவேண்டும்.

    அடுத்து மாற்றுவழிகளாக, பற்பல பரிசோதனை முயற்சிகள் செய்யவேண்டும். கடைசியில் தான், சரியான மாற்றுஏற்பாடுகள் நம் மனத்தில் உதிக்கும்.

    இவை யாவற்றையும் செய்தாலொழிய,  மறைகள்,  பொத்தான்கள், தேவையற்ற நகர்திரைகள் இல்லாதவையாக எங்களின் கருவிகளை  எளிமைப்படுத்துவது முடியாது.

    ஐவ் சொன்னது போலவே, இவ்வாறாக, தங்கள் தயாரிப்பில் உருவாகும் ஒவ்வொரு கணினி சார் பயன்பாட்டுப் பொருளையும் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனம் தவம் இயற்றுவது போன்ற ஒரு கடும் சாதனையாக, முழுதான விசுவாசத்துடனும் தான் ஒவ்வொரு பொருளையும் வடிமைத்து வெளியிட்டது.

    iMac, iPod, iPod nano, iTunes Store, Apple Stores, MacBook, iPhone, iPad, App Store, OS X Lion, Pixar film என ஒரு டஜன் பொருட்களை ஆப்பிள் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், “உங்கள் ஆப்பிள் பொருட்களில் உங்களுக்குப் பிடித்த ஒன்று எது என் ஜாப்ஸிடம் கேட்டபோது”, ஆப்பிள் தயாரிக்கும் பொருட்களில் உயர்வு தாழ்வில்லை – எதுவொன்றாயினும் இங்கே எளிமை – பயன்பாட்டு எளிமை என்பது நிரந்தரப் பண்பு என்றார். (Walter Isaacson (2012). Real Leadership Lessons of Steve Jobs,  Harvard Business Review, April 2012, ,https://hbr.org/2012/04/the-real-leadership-lessons-of-steve-jobs)

    இப்போது வாழ்ந்து கொண்டு வருகிற, லியோ பபௌடா கூறுவார்: “எளிமை என்பது இரண்டு விடயங்களில் இருக்கிறது: இன்றியமையாதது எது என்பதை அடையாளம் காணுவதிலும்; மற்றவற்றைப் புறந்தள்ளுவதிலும்” என்று.

    இன்றியமையாததை அடையாளங்கண்டு கொள்வதிலும் மற்றவற்றைப் புறந்தள்ளுவதிலும் ஸ்டீவ் ஜாப்ஸிற்கு ஒரு பிரத்யேக ஆற்றல் இருந்தது. அவசியத்தை எந்த விலைகொடுத்தும் நிலைநிறுத்தியும் அநாவசியத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தெறிந்தும் வாழ்ந்த அவரைப் பற்றிய விமரிசனங்கள் பலப் பல.

    ஆனால், ஜாப் தன்மீது வீசப்பட்ட விமரிசனங்களை பயபக்தியோடும் கட்டாயம்  அக்கறையோடும் கவனித்தவராகவே தெரிந்தார்.  விமரிசனங்களில், தனது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவுவதான எந்த ஒன்றையும், எத்தனைக் கடுமையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுவார் என்றே கூறப்ப்டுகிறது. இந்த மனோபாவத்தை அவர் வெகு சீக்கிரமே கற்றுக்கொண்டுவிட்டதாகவே பலரும் கருதுவர். ஆப்பிளில் அவருக்கு ஏற்பட்ட முதல் தோல்விக்குப் பிறகு – சறுக்கல்களையும் – சாடல்களையும் எவ்வாறு எதிர்திசைக்கு மாற்றுவது என்பதே அவரது நோக்கமாக இருந்ததாகவே பெரும்பாலோர் ஜாப்பின் மறைவுக்குப்பின் அவருக்குத் தருகிற மதிப்பீடாக உள்ளது.

    கணினிப் பொருட்கள் புரட்சியில் ஜாப் தம்மீது வந்து விழுந்த விமரிசனங்களை, எத்தனை எளிமையாய் இலகுவாய்க் கையாண்டார் என்பதில் பல சுவாரசியங்கள் – ஆச்சரியங்கள் உண்டு.

    மற்றவர்கள், பெரிய கணினியை சிறிதாக்கிகொண்டிருக்கும்போது, செல் போனைப் பெரிதாக்கிகொண்டு போனவர் ஸ்டீவ் ஜாப்ஸ். சொல்லப்போனால், ஜாப் செல்போனைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் – அப்போதிருந்த செல்போனைவிடச் சிறந்த ஒரு செல்போனைக் கண்டுபிடித்தார் – அதுதான் ஐபோன்.

    புதுசாகக் கண்டுபிடிக்காத ஒன்றை பெரிய கண்டுபிடிப்பைபோல ஏன் அனைவரும் பேசுகிறார்கள் என்றால் – ஐபோன் வெறும் செல் போன் அன்று – அது ஒரு தளம்  (platform). அந்தத் தளம் உருவாகிய அந்தக் கணத்தில், அத்தளத்தில், மற்றவர்கள் தமது அரங்குகளை நிறுவ வந்தார்கள். “App” எனப்படும் அரங்க வாயில்கள் ஐபோனுக்காகவென்றே மடமடவென உலகெங்கிலுமிருந்த பல்லோராலும் உருவாக்கப்பட்டன. சனவரி 9, 2007 ல் வெளிவந்த ஐபோனுக்கு, 2017 மத்தியில், இரண்டு மில்லியன் அரங்க வாயில்கள் உருவாக்கப்பட்டுவிட்டன என்றால், அதன் பிரம்மாண்ட வளர்ச்சியை உய்ந்துணரமுடியும்.

    தன்னைச் சுற்றியுள்ள, கணினி ஜாம்பவான்கள் முதல் – பல்வேறு சிறு – குறு கணினி ஆர்வலர்களும் கூட, கணினி எனும் களத்தில், காற்பதம் ஊன்றி நின்று வளர ஐபோன் ஒரு மாபெரும் உந்துசக்தியாய் விளங்கியது. இத்தகையப் புரட்சி வேறெவருக்கும் நினைந்தும் பாரா விடயமாய் இருந்தது என்பது உண்மையே.

    அதேபோன்று, Digital Music எனப்படும் கணினிசார் மின்னிசையை — ஐடியூன் – வித்திட்ட கர்த்தாவாக, ஸ்டீவ் ஜாப்ஸ் கருதப்படுவதை அறிகிறோம். பார்க்கப்போனால், மின்னிசையைக் கண்டுபிடித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் அல்லர். 1979 லேயே கேன் க்ரேமர் (பிரிட்டிஷ் விஞ்ஞானி) mp3 மின்னிசை இசைப்பானின் முன்னோடியைக் கண்டுபிடித்து வைத்திருந்தார். பிரான்டன்பர்க் எனும் ஜெர்மானிய விஞ்ஞானி 1987 ல், அதை அடுத்தநிலைக்கு எடுத்துச் செல்ல, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஓரளவு நல்லநிலைக்கு மின்னிசை இசைப்பான் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தது.

    இந்நிலையில் மின்னிசை இசைப்பானை ஐடியூனில் (ஏப்ரல் 2003)  போட்டது ஸ்டீவ் ஜாப்ஸின் புரட்சி. ஒரு ஆயிரம் பாடல்களை, கைக்கடக்கமான ஐபாடில் ஏற்றிக்கொண்டு, வேண்டும்போதெல்லாம் இசைவெள்ளத்தில், மிதந்து மகிழும்படியான வசதி இதனால் வந்தது.

    ஆனால், இந்த ஐடியூனின் வசதியை இசை உலகம் வரவேற்கவில்லை. ஜாப்ஸ், இசையுலகின் எதிரியாக விமர்சிக்கப் பட்டார். ஒரு பாடலை ஐடியூனில் இறக்கிக்கொள்ள 99 சென்ட் என்ற விலையை ஜாப்ஸ் நிர்ணயித்திருந்தார். ஒருவர் குறைந்த பட்சம் பன்னிரண்டு பாடல்களை ஐடியூனில் இறக்கிக் கொண்டாலொழிய, இசை உலகு லாபம் காணமுடியாது, பன்னிரண்டு பாடல்களை ஐடியூனில் இறக்கிக் கொள்ள எவரே முன்வருவார் என்பதே இசை உலகின் வருத்தம். ஜாப்ஸோ, வெறும் பன்னிரண்டு பாடல்களா? அதைவிடவும் கூடுதலாகவே பாடல்கள் இறக்கிக் கொள்ளப்படுவது  கண்டிப்பாய் நடக்கும் என்றார். அவர் சொன்னபடியே நடந்தது.

    ஐடியூனால் இசை உலகு நிறைத்த நிறைவை அடைந்ததோடு  மட்டுமல்லாது  இசையில் புதுப்புது பாணிகளும், புதுப்புது பாடல்கள், புதுப்புது பாடகர்கள் என வளரலானது. இன்று, ஆல்பங்களை விட, தனிப்பாடல்கள் அபரிமித வளர்ச்சியை எட்டியுள்ளன. இது ஐடியூனின் சாதனை.

    இந்த ஏற்பாட்டால், ஐடியூனின் லாபமும் வளர்ந்து கொண்டே போகிறது. இவ்வளர்ச்சியால், ஐடியூன், இன்று வணிக உலகின் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

    இசை எனும் சாகாக் கலையை, கணினி எனும் , இன்றியமையாத் தொழில்நுட்பத்தோடு ஜாப்ஸ் சேர்த்தது மிகப்பெரிய ஜாலம். இவ்விரண்டையும் ஒருசேர வளருமாறு செய்த ஜாப்ஸின் புரட்சியை மாபெரும் வெற்றி என்றே வணிக மாறும் தொழில் நுட்ப உலகங்கள் பறைசாற்றுகின்றன.

    ஆனால் இந்த வளர்ச்சி ஒரே நாளில் வந்து விடவில்லை, நிறைய முயற்சிகள் – விமரிசனங்களை எல்லாம் ஜாப்ஸ் கடக்க வேண்டியதாயிருந்தது  ஜாப் முதலில், ஐபாட் (ipod)  வெளியிட்டபோது – அது கனமாக இருந்தது – அதன் கனத்தைக் குறைசொல்லிப் பல்வேறு திசைகளிலிருந்தும்  எதிர்மறை விமரிசனங்கள் வந்தன.

    ஆனால் சீக்கிரத்திலேயே, அவர்கள் வாயடைக்கும்படியாக ஐபாட் நேனோவை வெளியிட்டார் ஜாப்ஸ்.

    அடுத்து, நேனோ நீளமாய் இருக்கிறது என்று விமரிசனம் எழுந்தது – ஜாப்ஸ் ஷஃப்ளை வெளியிட்டு அவர்கள் வாயை அடைத்தார்.

    அதேபோன்று, ஜாப்ஸ், ஐபேடை (ipad) வெளியிட்டபோது – போன், லேப் டாப், டெஸ்க் டாப்   இருக்கிறபோது ஐபேட் எதற்கு என்று கடுமையான விமரிசனம் எழுந்தது. ஆனால் சீக்கிரத்திலேயே, அவர்கள் வாயடைக்கும்படியாக, பர்சுக்குள் வைக்கும்படி மினி ஐபேடை வெளியிட்டார் ஜாப்ஸ்.

    இவ்வாறு ஒவ்வொரு விமரிசனமும் ஒரு புது படைப்பாய் மாறிய விந்தையை உலகே கண்டு வியந்தது என்றால் அது மிகையில்லை.

    பிரபல எழுத்தாளரும் திரைக்கதை வசன கர்த்தாவுமான ரே ப்ரேட்பரி (Ray Bradbury) விமரிசனங்களைப் பற்றிக் கூறும்போது, மனிதர்கள் எவரை  நேசிக்கிறார்களோ, அவர்களை விமரிசிப்பார்கள் என்பார். ஒருவேளை ஜாப், தமது விமர்சனக் கர்த்தாக்களை ப்ரேட்பரியின் பார்வையில் பார்த்தாரோ என்றும்  கூட நம்மை எண்ணவைக்கின்றன அவரின் செயல்கள். ஜாப்ஸின் மறைவுக்குப் பிறகு, அவரைப் பற்றி பேசுபவர்கள், அவர் விமரிசனங்களை மனப்பூர்வமாய் வரவேற்றார் என்றே சொல்கிறார்கள்.

    விமரிசனங்களும் ஜாப்சும் என்று பேசும்போது, நாம் இன்னொரு கண்ணோட்டத்திலும் இதைப் பார்க்க வைப்பதான நிகழ்வுகளும் உண்டு.

    அதனைப் புரிந்துகொள்ள பிராங்க்ளின் ஜோன்ஸ் விமரிசனங்கள் பற்றி என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்பது நல்லது  “விமரிசனங்கள் உறவினர்களிடமிருந்தோ நண்பர்களிடமிருந்தோ, எதிரிகளிடமிருந்தோ வருவதாக இருந்தால், அதை எவரின் மனமும் ஏற்றுக்கொள்ளாது” என்று.

    பொதுவாக, நம்மில் பெரும்பாலோர், இவ்வாறானவர்களே. விமரிசனங்களைக் கண்டு சினமுறுவது – வெகுண்டெழுவது – அல்லது உள்ளுக்குள்ளேயே புகைந்து குமுறுவதுமமான வழக்கம் நம்மில் வெகுபலருக்கு உண்டு. எனவே ஜாப்சிற்கு இவ்வாறான உன்ர்ச்சிக் கொந்தளிப்பு இருந்து, ஒவ்வொரு விமரிசனத்துக்குப் பிறகும், தனது  பதிலாக, தனது திறமையை நிலைநாட்ட எத்தனித்தாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

    நமது இந்தக் கண்ணோட்டத்திற்கு சார்பாக சில செய்திகளும் ஜாப்ஸின் வாழ்வில் உண்டு; அவற்றைக் கவனித்துவிட்டு மேலே தொடர்வோம். ஸ்டீவ் ஜாப்ஸின் சகோதரி, மோனா  சிம்ப்சன்  “He was an intensely emotional man,” என்கிறார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்புப் பொறியாளரான ஜானதன் ஐவ்; “He’s a very, very sensitive guy” என்கிறார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்த ஜான் ஸ்கல்லி, ஸ்டீவ் ஜாப்ஸ் அழுது கரைந்திருக்கிற பல தருணங்களை நினைவு கூர்கிறார். ஸ்கல்லியின் முற்று கீழே தரப்பட்டுள்ளது. (Business Insider, March 31, 2016 https://www.businessinsider.com/steve-jobss-crying-reveals-his-emotional-side-2016-2)

    “He focused his emotions entirely on the products that he was building,” Sculley says. “He took on overwhelming amounts of hard work and was willing to sacrifice things in his personal life because we wanted to create products that people would love and he was very emotional about that.”

    அளவிடமுடியாத கடின உழைப்பு தந்தும், சுய வாழ்வில் பலவற்றைத் தியாகம் செய்தும், கணினிசார் கருவிகளை உருவாக்குவதில் முழுமூச்சுடன் ஈடுபட்ட ஜாப்ஸினுள், பெருத்த உணர்ச்சிப் பிரவாகம், இருந்ததை ஸ்கல்லி உறுதியிட்டுக் கூறுவதை கவனியுங்கள்.

    “இவ்வுலக மக்கள் நேசிக்கும் பொருட்களை மட்டுமே நான் செய்யவேண்டும் என்பதான உணர்ச்சி வேள்வி அது” என்பதை ஸ்கல்லி வாயிலாக நாம் அறியும்போது நம்முள் தோன்றும் புனித உணர்வை நம்மால் விவரிக்க இயலவில்லை.

    சமூக நேசர்கள் மட்டுமே புரட்சியை விளைவிக்கிறார்கள் என்று ஏற்கனவே பார்த்தோம், சமுதாயத்தின் குரலுக்கு, செவிசாய்க்க இசைகிறவன்(ள்) எவனோ(ளோ),  அவர் அச்சமுதாயத்தின்  தேவையை உணர்ச்சி பூர்வமாக அறிந்துகொண்டவராய், அத்தேவையை நிறைவு செய்கிறபோது மட்டுமே சமூக நேசனாகிறார். ஆக சமூக நேசம் என்பது ஒரு புரட்சியாளனுக்கு முதலீடு மட்டுமல்ல – விளைச்சலும் கூட.

    ஊற்றிருந்து உள்ளம் களிப்போராய், சதாசர்வ காலமும், சமூக எண்ணத்துடன் – சமூக நேசகர்களாக, புரட்சியாளர்கள் வாழ்ந்து போவதன் இரகசியம் இதுதான்!

    (மேலும் பேசுவோம்)

    Share
  • பூலோக சொர்க்கம் மொரீசியஸ் – தெ.ஈசுவரன் உரை

    பூலோக சொர்க்கம் மொரீசியஸ் – தெ.ஈசுவரன் உரை

    அண்ணாகண்ணன்

    இலங்கைத் தொழிலதிபர், அமரர் தெ.ஈசுவரன், இலங்கைக்கான மொரீசியஸ் நாட்டின் கௌரவத் தூதராக இருந்தவர். இயல்பிலேயே அமைதியும் நிதானமும் பொறுமையும் கொண்ட அவரது பேச்சும் தெளிந்த நீரோடை போல் இருக்கும். ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை ஏற்றுமதி நிறுவனம், மொரீசியஸ் தூதரகப் பணி, கம்பன் கழகத் தலைவர், பிள்ளையார் கோவில் அறங்காவலர், ஆஞ்சநேயர் கோவில் கட்டுமானப் பணி, இலங்கையின் மிக உயரமான புத்தர் சிலை எழுப்புதல், சாயிபாபா அறக்கட்டளை, பல்வேறு பொது நிகழ்ச்சிகள்… எனப் பற்பல பணிகளுக்கு இடையில், உட்கார்ந்து எழுதுவதற்கு அவருக்கு நேரமில்லாமல் இருந்தது.

    2010 காலக்கட்டத்தில், அவருடைய அர்த்தமுள்ள அனுபவங்கள் நூலை அவர் சொல்லச் சொல்ல, நான் எழுதினேன். அதன் பதிப்பாசிரியராகவும் பணியாற்றினேன். இதற்காகக் கொழும்பு மாநகரில் இரு மாதங்கள், அவருடன் இணைந்திருந்தேன். சென்னைக்குத் திரும்பிய பிறகு, நேரில் சந்திக்க இயலாதபோது என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, அப்படியே பேசி, ஒலிக்கோப்பாக அனுப்பிவிடுங்கள். நான் தட்டச்சு செய்து அனுப்புகிறேன் என்று கூறினேன். அந்தக் காலத்தில் இன்றுபோல், ஒலியை எழுத்தாக்கும் மென்பொருள் கருவிகள், தமிழில் நடைமுறைக்கு வரவில்லை.

    அப்படி ஒரு முறை 2011இல் மொரீசியஸ் நாட்டைப் பற்றிய இந்தக் கட்டுரையை அவருடைய குரலில் பதிந்து அனுப்பியிருந்தார். பேச்சையே மென்மையாக, ஒரு தியானம் போல அவர் நிகழ்த்தியுள்ளதை இந்த உரையில் நீங்கள் கேட்கலாம்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 255

    படக்கவிதைப் போட்டி – 255

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (26.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 254-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 254-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. பிரேம்நாத் திருமலைச்சாமியின் கலைவண்ணத்தில் உருவான இந்த நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 254க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. நிழற்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்!

    ”புன்னகையால் அன்னையை மட்டுமல்லாது
    அகிலத்தையே மயக்கிடும் ஆற்றல்பெற்றது கனிமழலை!
    என்றென்றும் நிலைக்கட்டும் இந்த அழகின் சிரிப்பு!” என்று வாழ்த்திவிட்டு, இப்படத்திற்குக் கவிஞர்கள் வடித்துத் தந்திருக்கும் கற்கண்டுக் கவிதைகளைச் சுவைத்துவரப் புறப்படுவோம்!

    *****

    ”அன்னையைப்போல் அல்லாமல் நீ படிப்பில் சிறக்க வேண்டும்; உயர்ந்த நிலையும் கண்டிட வேண்டும்” என்று மழலையிடம் மனந்திறக்கும் அன்னையைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

    உயர் நிலை…

    அன்னை யென்றே ஆக்கியேதான்
    அடுத்த நிலைக்கே உயர்த்திவிட்டாய்,
    என்னைப் போலப் படிப்பறிவில்
    எளிய நிலையிலே விட்டிடாமல்
    உன்னை நானும் படிக்கவைத்தே
    உயர்ந்த நிலையில் வைத்திடுவேன்,
    தன்னை யறிந்திடத் தங்கமேயுனைத்
    தகுந்த முறையில் வளர்ப்பேனே…!

    *****

    அச்சமற்ற பெண்ணாய், மங்காத பொன்னாய், தாழ்வகற்றும் தண்ணிழலாய், மடமையிருள் போக்கும் மாவிளக்காய்த் தன் பிள்ளைக்கனி திகழவேண்டும் என விரும்பும் அன்புத் தாயை நம் கண்முன் நிறுத்துகின்றார் திருமிகு. ச. கண்மணி கணேசன்.

    பிள்ளைக்கனி

    செல்லம்மா – நீ சாதித்துப் பேர்வாங்கப் பிறந்தவள்; உன்சாதனை
    நாலுபேருக்கு வழிகாட்டி ஒளியூட்டுவதாய் இருக்கட்டும்!

    முத்தம்மா – நீ முன்னேறி மின்னப் பிறந்தவள்; உன்பாதை
    தடைக்கற்களைப் படிக்கட்டுகளாக்கும் வித்தையைச் சொல்லட்டும்!

    சின்னம்மா – நீ பதினாறும் பெறப் பிறந்தவள்; உன்இல்லறம்
    ஆலாய்த்தழைத்து அறுகாய்வேரோடி நல்லறம் ஆகட்டும்!

    அன்னம்மா – நீ நிமிர்ந்து நிற்கப் பிறந்தவள்; உன்ஆளுமை
    நாண்அச்சமின்றி மானிடம் மணக்க மிளிரட்டும்!

    தங்கம்மா – நீ என்றுமென் பேர்சொல்லப் பிறந்தவள்; உன்வாழ்வு
    மங்காத பொன்னாய்ப் புடம்போட்டு ஒளிரட்டும்!

    தாயம்மா – நீ தாழ்வகற்றத் தண்ணிழலாய் உதித்தவள்; உன்பிறவி
    சேயாகித் தரணியெங்கும் தமிழ்ப்புகழ் கூட்டட்டும்!

    நல்லம்மா – நீ எதையும் எதிர்கொள்ளப் பிறந்தவள்; உன்மேனி
    வெல்லும் அழகொடு திடம்பெற்றுப் பொலியட்டும்!

    பொன்னம்மா – நீ இலக்குநோக்கிப் பாயப் பிறந்தவள்; உன்மனம்
    மன்னும்விளக்காய் ஆயிரமாயிரம் அகலொளி ஊட்டட்டும்!

    கண்ணம்மா – நீ கற்றுக் கரைசேரப் பிறந்தவள்; உன்கல்வி
    மண்ணின் இருள்போக்கும் மாவிளக்காய்த் திகழட்டும்!

    அமிர்தம்மா – நீ சமைத்துப் பசியாற்றவும் பிறந்தவள்; இப்போது
    என்னிடம் வாநாம் ‘பப்பு கடஞ்சி’ விளையாடுவோம்!

    *****

    ”பாசப் பந்தே! பரிமளமே! பூடணம் வேண்டா ஆடகப் பொன்னே! சாதிக்கப் பிறந்தவள் நீ! உலக சரித்திரம் படைத்துவிடு!” என்று மங்கல மொழிகளால் மழலையை வாழ்த்துகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    பாசப்பந்து நீதானே
    பரிமளமாய் இருப்பவளே
    முளைப்பற்கள் வருமுன்னே
    முகம் சாய்த்துச் சிரிப்பவளே

    தத்தி நடக்கும் கால்களோடு
    தாவிப் பிடிக்கும் கைகளும்
    தாயும் பாசப்பரிவோடு உனை
    தாங்கித் தான் பிடிக்கிறாளோ?

    தங்கம் வெள்ளி உனக்கெதற்கு?
    சர்வ பூஷணம் நீதானே!
    கவலைகள் நூறிருப்பினும் உனைக்
    கொஞ்சி மகிழும் தாயவள்!

    அவள் கனவு என்னவென்று
    கேட்டு நீயும் வளர்ந்திடு
    சாதிக்கப் பிறந்தவள் நீ
    சரித்திரம் படைத்திடு
    உலக மகா சரித்திரம் படைத்திடு!

    *****

    ”அன்னை மடி மெத்தையிலே ஆடிடும் தத்தை எனக்கு அன்னையின் அன்பே உயிர்காப்பு!” என்று தாயின் உயர்வைப் போற்றிடும் சேயைக் காட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    அன்பின் அரிச்சுவடி

    அன்னைமடி மெத்தையிலே
    ஆடுமொரு தத்தை நான்!
    இத்தரையில் பிறந்தவரில்
    ஈடுஇணை அற்றவள் நான்!
    உத்தமராய் இவருமெனை
    ஊட்டி தினம் வளர்த்திடவே
    எத்தனையோ பிறவிக்கடன்
    ஏட்டினிலும் எழுதவொண்ணா
    ஐயிரு திங்கள் வைத்தீன்று
    ஒப்புரவுடனே வாழ்வதற்கு
    ஓயாமல் காத்து நிற்கும்
    ஒளடதமாம் இவர் அன்பெனும்
    ஆயுதமேயென் உயிர் காப்பு!

    *****

    தாய் சேய் உறவை அற்புதமாய்த் தம் பாக்களில் நெய்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    உன்னுதட்டில் தெறிப்பதெல்லாம்
    என்னுயிரின் சிரிப்பு!
    உன்னுருவம் தானடி
    என் விழியின் சிலிர்ப்பு!

    குயிலும் குருவியும்
    சிரிக்கிறது மேலே
    உந்தன் மொழியோ
    புரிந்தது போலே!

    ஆழி அருவியின்
    ஆலாபம் சங்கீதம்
    அத்தனையும் அடங்கியதே
    அழகியுன் ரீங்காரம்!

    மகளே நீயே
    மாயக் கண்ணாடி!
    எந்தன் மறுவுருவைக்
    காட்டிவிட்டாய் முன்னாடி!

    அம்மாவென நானலற – நீ
    ஒருமுறை பிறந்தாயடி!
    அம்மாவென நீயழைக்க – நான்
    ஒவ்வொருமுறையும் பிறக்கிறேனடி!

    ”மகளே! நீயே என் உயிரின் சிரிப்பு, விழியின் சிலிர்ப்பு! மாயக் கண்ணாடியான உன்னில் என்னைக் காண்கிறேன்! நான் அம்மாவென்று அலற நீ பிறந்தாய்! நீ அம்மாவென்று அழைக்கும் ஒவ்வொரு முறையும் நான் பிறக்கிறேன்!” என்று மகளுக்கும் அன்னைக்குமிடையே பின்னிப் பிணைந்திருக்கும் உன்னத உறவை உணர்வுபூர்வமாய் விவரித்திருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share