பத்திரப் பதிவுத் துறையினர், இப்போது செய்ய வேண்டியது என்ன?

0

அண்ணாகண்ணன்

பத்திரப் பதிவுக்கான நேரத்தை மாலை 5 மணி வரை தமிழக அரசு  நீட்டித்துள்ளது. ஆனால்,  ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மக்கள் எப்படி வெளியே வருவார்கள்? ஓர் இடத்தை வாங்குவது என்றால், பலமுறை சென்று பார்த்து, வில்லங்கம் இருக்கிறதா என்று சோதித்து, கடன், பாகப் பிரிவினை, உயில் எனப் பல கோணங்களிலும் சரிபார்த்துத்தானே வாங்குவார்கள்? இதற்கு வழக்கறிஞர்கள், வங்கித் துறையினர், பத்திரப் பதிவுத் துறையினர் எனப் பலரையும் சந்தித்துப் பேச வேண்டியிருக்கும். இடையில் தரகர் வேறு இருப்பார். இவர்கள் அனைவரிடமும் தொலைபேசியில் அல்லது இணையத்தில் பேசிவிட முடியுமா? பல இலட்சம் கைமாறுகிற ஒரு விற்பனைக்கு எத்தனை முறை மக்கள் சிந்திப்பார்கள் என அரசு யோசிக்கவில்லையா?

ஏற்கனவே பேசிமுடித்து, பதிவு மட்டும் நிலுவையில் இருப்பவற்றை  முடிக்கலாம் என்றும் சொல்ல இயலாது.   ஏனெனில், அது மிகச் சிறிய எண்ணிக்கை. மேலும், தொற்று பரவி வரும் நிலையில், இத்தகைய பரிமாற்றங்களைத் தவிர்க்க வேண்டும். இவர் வாங்குகிற இடத்தில் அல்லது அதற்கு அருகில் தொற்று இருந்தால், அந்த இடத்தின் மதிப்புக் குறையும். வாங்கவும் அஞ்சுவார்கள். மேலும் பத்திரப் பதிவு முடிந்து, பட்டாப் பெயர் மாற்றம், பொறுப்பினைக் கைமாற்றுதல், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, நில வரி, வீட்டு வரி செலுத்துகை ஆகிய அனைத்துக்கும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் அவர் வெளியே செல்ல முடியாது. மேலும், போலி ஆவணங்களைக் காட்டி, மோசடி செய்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. அவசரமாகப் பணம் தேவை, அதனால்தான் பாதி விலைக்கு விற்கிறேன் என அளந்துவிட்டால், யார் இவற்றை எல்லாம் சரிபார்ப்பது? கொரோனா காலத்திற்குப் பிறகு, நில வழிகாட்டி மதிப்பை அரசு மறுவரையறை செய்ய வேண்டியிருக்கும். எனவே பழைய வழிகாட்டி மதிப்பில், இப்போது விற்பனை செய்வதோ, அதற்குப் பத்திரம் வாங்குவதோ பொருந்தாது. அப்படிச் செய்தால், வாங்குபவருக்கே நட்டம் ஏற்படும்.

மேலும், இது பத்திரப் பதிவுக்கான நேரமே இல்லை. மாறாக, இதற்கு முந்தைய பத்திரப் பதிவு ஆவணங்கள் அனைத்தையும் மின்னாக்கம் செய்வதில் பத்திரப் பதிவுத் துறையினர் இப்போது முழுமையாக ஈடுபட வேண்டும். மின்னாக்கப் பணிகளை வெளியாரிடம் ஒப்படைத்திருந்தால், அவற்றை வலையேற்றிச் சரிபார்க்க வேண்டும். ஆயிரம் ஆவணங்களுக்கு ஒன்றையாவது சரிபார்த்து, வெவ்வேறு சாதனங்கள், உலாவிகளின் வெவ்வேறு பதிப்புகள் வழியாகச் சரிபார்த்து, சேவையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பத்திரப் பதிவுத் துறையினர் அனைவருக்கும் மின்னாக்கத்திற்கும் இணையவழிச் சேவைக்கும் இதில் ஏற்பட வாய்ப்புள்ள தொழில்நுட்ப இடர்களை, சவால்களை எதிர்கொள்வதற்கும்  இது தொடர்பான மக்களின் விசாரணைகளுக்குப் பதில் அளிப்பதற்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.

இந்த மின்னாக்கம், மின்னாளுகை மற்றும் பயிற்சிகளைப் பத்திரப் பதிவுத் துறைக்கு மட்டுமில்லாமல், இதர துறைகள் அனைத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும். இதை ஓய்வுக் காலமாகக் கருதாமல், பயிற்சிக் காலமாக மாற்றினால், எதிர்காலத்தில் உரிய பயன் கிட்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *