Blog

  • குழவி மருங்கினும் கிழவதாகும்-15

    குழவி மருங்கினும் கிழவதாகும்-15

    மீனாட்சி பாலகணேஷ்

    (உணவூட்டல்)

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் அடுத்த பருவம் உணவூட்டல் பருவம் ஆகின்றது.

    ‘ஏழாந் திங்களி னின்னமு தூட்டலும்,1 என்பது பிங்கல நிகண்டுவின் பாடல்வரி. அரிதாகப் பாடப்பட்டுள்ள பருவங்களில் ஒன்றான இதுவும் கதிர்காமப்பிள்ளைத்தமிழில் மட்டுமே நயமுறப் பாடிப் பதியப்பட்டுள்ளதனைக் கண்டு மகிழலாம்.

    உணவூட்டல் எனும் செய்கையைப் பொருளாகக்கொண்ட இப்பருவம் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானதும் குழந்தை வளர இன்றியமையாததுமாகும். பெரியாழ்வார் கிருஷ்ணனைப் பற்றிப் பாடிப்பரவிய திருமொழிப்பாசுரங்களில் ‘அன்னை முலையுண்ண அழைத்தல்’ எனத் தனியாகப் பாசுரங்களைப் பாடியுள்ளார். இருப்பினும் எந்தப் பிள்ளைத்தமிழிலும் இதுவோ, உணவூட்டல் எனும் நிகழ்வோ தனிப்பருவமாக எடுத்துப் பாடப்படவில்லை என்பது வியப்பிற்குரியது. குழந்தை நல்ல அறிவாற்றலுடன், நற்குணங்களுடன் வளர சத்தான உணவைத் தாயும் செவிலியரும் தேர்ந்தெடுத்து ஊட்டிடல் வேண்டும். தானே உண்ணவியலாத பருவமாதலால், உணவைக் குழந்தைக்கு ஊட்டிவிடவும் வேண்டும். உணவு உண்ணாது சில குழந்தைகள் மறுத்துவிடும். அப்போது நிலவைக் காட்டியும், காக்கை, குருவி, நாய் ஆகியனவற்றைக் காட்டியும், தாய் உணவினை ஊட்டுவாள். சிலபொழுதுகளில் நல்ல கதைகளைக் கூறியும் உணவூட்டிடுவாள்.

    பாடல்களைக் காணலாம்:

    முதல்பாடல்: ஏறு எனப்படும் விடையிலேறி வரும் சிவபிரான் அருமையாகச் சீராட்டிடும் எங்கள் ஏறு (சிங்கம்) போலும் மகவே! இதில் ஏறு எனும் சொல்லை விடை, சிங்கம் எனும் இரு பொருட்களில் பயன்படுத்தியுள்ள நயத்தைக் காணலாம். குகைக்குள் சிங்கமானது நினது நடையினைக்கண்டு நாணமுற்று வருந்திக் கிடக்கின்றது.

    கதிர்காமத்திலுள்ள அழகிய மாணிக்ககங்கை எனப்படும் வடவையாற்றின்கண் உள்ள துறைகளில் ஆங்காங்கே நீராடும் தொண்டர்களுக்கு கடைக்கண்ணால் பார்த்து அருள் செய்யும் விடாத பெருமழை போல்பவனே! இதில் சுவையானதொரு தத்துவம் தொக்கி நிற்கிறது; முருகப்பெருமானுக்கு அடியாராகி விட்டவர்களை அவன் எப்போதுமே விடாது பெய்யும் கொடைமழைபோன்று அருள்பாலித்தவண்ணம் இருப்பவன் என்பதே அது.

    இனிக்கும் தீம்பாகினில் தோய்த்தெடுத்த கரும்பினின்றும் பெறப்பட்ட கற்கண்டுக் கட்டியே!

    ஆயர்கள் வைத்துள்ள தயிரினைக் கள்ளத்தனத்தால் உண்ட திருமாலின் மருமகனே! பாலருந்துங்கால் நகத்தாற் கீறிய முலையின் இன்னமுதினைப் பருகும் கோமான் நீ! இன்று அக்கொங்கைகளுக்கு ஒப்பான பொற்கிண்ணத்தில் படைக்கப்பட்டுள்ளதும் உள்ளன்பு எனும் நெய்யினைப் பெய்தமையால் அது சிவமணம் கமழ்வதாயும் உள்ளதாகச் சமைத்த அமுதனைய சோற்றினை, நீ உண்ணவேண்டும். இங்கு இறைவனுக்குப் படைக்கப்படும் அமுது எதுவாயினும் உண்மை அன்பு எனும் நெய்யினைப் பெய்து படைத்தால் அது சிவமணம் கமழும் அமுதாகிவிடும் எனும் செய்தி தொக்கி நிற்கின்றது. ஆயர்களின் தயிரைக் கண்ணபிரான் களவாடி உண்டமையால் அவர்கள் பெரும்பேறு பெற்றனர் எனும் கருத்தையும் காணலாம்.

    பொய்மையற்ற நின்னடியாரின் உள்ளங்களைக் கவர்ந்து உண்பதேபோன்று நான்தரும் இச்சோற்றினையும் உண்டருள வேண்டும் எனத்தாய் வேண்டுவதாக அமைந்த பாடல்.

             ஏறூரு மவனினிது கோதாட்ட வருமெங்க
                       ளேறே!மு ழைக்குள்யாளி
                  …………………………………………..
             கிண்ணத்து நறுமணஞ் சிவமணம் போன்மன்பு
                       கெழுனெய்ய ளாய்ச்சமைத்த
             சோறமுது மாயர்தயிர் தொட்டுண்ட கள்வன்மகிழ்
                       சூழ்மருக! உண்டருள்கவே!
              சொற்றொழும் பாளரது ளங்கவர்ந் துண்டல்போற்
                       சோறமுது முண்டருள்கவே.2

    குழந்தையின் இனிய செயல்களும், அக்குழந்தை முருகப்பிரானாகியமையால் அவனுடைய தெய்வத்தன்மையும் விளங்கித்தோன்றுமாறு பாடப்பெற்ற அருமையான பாடல்கள் இவையாகும்.

    சிறுகுழந்தை உணவுண்ண அவ்வளவு எளிதாக இயைவதில்லை. அதற்காக வெவ்வேறு விதமான நயமான சொற்களைக்கூறித்தான் தாய் உணவூட்ட வேண்டும். அவ்வாறே அடுத்த பாடல் அமைந்துள்ளதனைக் காணலாம்.

    இவ்வுலகிலேயே உனக்கு அளிக்கப்படும் இவ்வுணவுதான் மிக்க உயர்வானது எனத்தாய் கூறுகிறாள். இது குமரப்பெருமானுக்கு மிக நயமாகப் பொருந்துகின்றது. ‘பாற்கடல் எனும் ஆழியைக் கடைந்து குடத்தில் அள்ளி எடுத்த அமுதமும் இதற்கு நிகரன்று குழந்தாய்! அந்தணர்கள் தாமியற்றும் வேள்விகளில் நெருப்பில் அவி எனச் சொரியும் எவையும் இதற்கு நிகரன்று.

    ‘திருத்தமான செந்தமிழின் உலகவழக்கு, செய்யுள் வழக்கு ஆகியனவும் இதற்கு இணையல்ல அப்பா! வள்ளியம்மை நின்னிடம் ஊடல்கொண்டபோதினில் செய்யும் தருக்கம் செறிந்த சொற்களே இதற்கு நிகராகும் என்போம்.

    ‘மேலும் சீர்காழியில் உமையம்மையின் ஞானப்பால் உண்டமையால் சிவஞானம் பெற்றுக் கூறிய பாடல்களும் (கலை) இதற்கு நிகராகும். கதிர்காமத்திற்கு வரும் நின் அன்பர்கள் பலரும் கனிந்து குழைந்து நின்னைத் துதிக்கும் சொற்களும் இதற்கிணையாகும்.

    ‘கூவும் சேவலைக் கொடியினிற்கொண்ட கோவே! இவ்வுணவைச் சிறிது உண்பாயாக’! என்று தாய்ப்பாசம் மீதூர, ‘உனது அருள்வடிவாகிய உடல் கொழுத்து நீ உயரமாக வளருவதற்காகவும் இதனைச் சிறிதே உண்பாயாக!’ என வேண்டுவதாக அமைந்த அழகிய பாடல்.

            ஆழி கடைந்து குடம்நிறைத்த
                       அமுது மிதற்கு நிகரல்ல
            அந்தண் வேள்வி அவிசொரியும்
                       அதுவு மிதற்கு நிகரல்ல
             …………………………………..
             காழி ஞானப் பால்குழைத்த
                       கலையு மிதற்கு நிகராகும்
             கதிர் காமத் தன்பர்பலர்
                       கனிவும் குழைத்த திதுவாகும்
             …………………………………
             குறித்த அருண்மெய் கொழுத்துயரக்
                       கோவே சிறிதே யுண்டருளே!3

    இதற்கும் மேல் நயமான சொற்களைக்கூறி தெய்வக் குழந்தையை உணவருந்த வேண்ட இயலுமோ?

    இயலும் என்பதனை அடுத்த இனிமையான பாடல் நமக்கு உணர்த்துகிறது!

    “ஆடியவாறே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களையும் செய்யும் ஐயன் உயிர்களுக்குத் தன்னையடையும் பக்குவத்தை இந்த ஐவகைத் தொழில்களால் உண்டுபண்ணுகிறான். அதுபோன்றும் ஆரிய முனிவராகிய துர்வாச முனிவரின் வயிறு நிறையுமாறு கண்ணன் உண்டது போலும் நீயுண்ண வேண்டும்.

    இதிலொரு அழகான தொன்மத்தை நயமாக இணைத்துள்ளார் புலவர். வனவாசத்தில் பஞ்சபாண்டவர்கள் இருந்தபோது சினத்திற்குப் பெயர்பெற்ற துர்வாச முனிவர் உரியபொழுது கழிந்தபின் தமது பெரும் குழுவினருடன் விருந்தினராகச் சென்றார். திரௌபதியிடமிருந்த அட்சயபாத்திரத்தில், அவள் எல்லாருக்குமளித்துத் தானும் உண்டுமுடித்தபின் அன்றைய தினத்திற்கு வேறு உணவைப் பெற இயலாது. அவர் உணவில்லாமையால் சினம்கொண்டு பாண்டவர்களை வைதிடாவண்ணம் கண்ணபிரான் திரௌபதிக்கு அருள்செய்தான். எவ்வாறெனில் அவள் கழுவிக் கவிழ்த்திய சோற்றுப்பானையில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சோற்றுப்பருக்கையை அவன் உண்டமையால் நீராடச் சென்ற முனிவரும் அவர் குழுவினரும் வயிறுநிரம்பப் பெற்றோராகி, வேறு உணவினை ஏற்காமல், பாண்டவரையும் திரௌபதியையும் வாழ்த்திச் சென்றார் என்பது புராணம். அதுவே இங்கு கூறப்பட்டது. முருகன் உண்பதனால் உலகமே உண்ணும் எனும் பொருளில் இக்கருத்து இங்கே கூறப்பட்டது.

    இளம் கன்னிப்பெண்கள் காடுகளில் விளையாடுகின்றனர். அவர்கள் விளையாடும்போதெழும் ஓசை காடுகளில் ஒலிக்கின்றது. அவர்கள் விளையாட்டாகக் கூவி அதன் எதிரொலியை மலைகள் முழங்கக் கேட்டு மகிழ்கின்றனர். முருகன் மிகுதியான அருள் செய்வதும் அதுபோன்றதே.

    மானிடரைப் படைத்தும், நின்னடியாராகிய அவர்கள் உனது பேரருளைப் போற்றிக் கொண்டாடிடவும், பயிர்களுக்கு மேகங்கள் பொழியும் மழைபோன்றும் இருப்பவனே!

    வறுமையால் வாடும் தமிழ்ப்புலவர்கள் வயிறு நிறையுமாறு நீ ஒருவாய்ச்சோறாவது உண்பாயாக! நீயுண்ணும் இச்சோறு வள்ளியம்மை தரும் தினைமாவிற்கு இணையானது எனக்கொண்டு அதனை நீ உண்பாயாக!

                       ஆடுமி ருட்டிர ளயரப் பெரியோ
                                னாடியி ளைப்பதுபோ
                        லாரிய முனிவர ருந்தக்கண்ணன
                                ருந்திய முறையேபோற்
                       ……………………………………
                       வாடுத மிழ்ப்புல வோர்வயி றார
                                வாய்ச்சோ றார்குகவே
                        வள்ளித ருந்தேந் தினைமா வெனவே
                                வாய்ச்சோ றார்குகவே.4

    இவ்வாறெல்லாம் பலவித நயமான கருத்துக்களைக்கூறி குழந்தை முருகனை உணவருந்த வேண்டும் பகுதி சுவைமிகுந்ததாகும்.

    பார்வை நூல்கள்:

    1.பிங்கல நிகண்டு
    2, 3, 4. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

         (தொடரும்)

    Share
  • சக்குவின் சின்னிக்குட்டி

    சக்குவின் சின்னிக்குட்டி

    நிர்மலா ராகவன்

    “உங்கள் மனைவிக்கு ஹிஸ்டீரியா!”

    மருத்துவர் கூறியபோது, கருணாகரனுக்கு நிம்மதிதான் ஏற்பட்டது. எங்கே `பைத்தியம்’ என்று சகுந்தலாவைக் கணித்துவிடுவாரோ என்று பயந்துகொண்டிருந்தவன் ஆயிற்றே!

    காரணமின்றி அழுதவள். எதற்கெடுத்தாலும் சண்டை பிடிப்பவள். அவளுடைய மனக்குறை என்னவென்று அவனுக்குப் புரியவில்லை.

    திருமணமாகிய முதல் மூன்று வருடங்களில் சாதாரணமாகத்தானே இருந்தாள்? இப்போது, இரண்டு வருடங்களாக ஏன் இப்படி?

    தான் அடிக்கடி வேலை விஷயமாக வெளிநாடு போவதால், தனிமை அவளை வாட்டுகிறதோ? பெரிய உத்தியோகம் என்றால், பொறுப்புகளும் அதிகமாகத்தானே இருக்கும்! இதுகூடவா புரியவில்லை அவளுக்கு?

    கேட்டும் பார்த்துவிட்டான். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏதாவது கேட்டால், ஒரே அழுகை.

    கடைசி முயற்சியாக, வைத்தியம்.

    “இன்னும் பிள்ளை பிறக்கலியேன்னு அவங்களுக்கு ரொம்ப ஏக்கம். நம்ப சமூகத்தைப்பத்தி ஒங்களுக்குத் தெரியாதா! யார் வீட்டு விசேஷத்துக்காவது போனா, அக்கறையா, துக்கம் விசாரிப்பாங்க. சின்னக் குழந்தைங்களைத் தூக்க விடமாட்டாங்க!”

    தன்னிடம் மனைவி இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கோபமும், உடனே பச்சாதாபமும் ஏற்பட்டன.

    சகுந்தலாவிடம் நைச்சியமாகப் பேச்சுக்கொடுத்தான். ‘சில பேருக்கு, கல்யாணமாகி, பத்துப் பதினஞ்சு வருஷம் கழிச்சுக்கூட குழந்தை பிறந்திருக்கு. ஒனக்கு அவ்வளவு ஆசையா இருந்தா..,” அவன் சொல்லி முடிப்பதற்குள், அவள் குறுக்கிட்டாள்: “தத்து எடுக்கிற சமாசாரமே வேண்டாம்”.

    அதன் காரணத்தைக் கேட்கவெல்லாம் அவனுக்குப் பொறுமை இருக்கவில்லை.

    ‘எப்படியோ போ!’ என்று மனத்துக்குள் திட்டத்தான் அவனால் முடிந்தது.

    நல்லவேளை, அனுதினமும் இவளுடைய அழுமூஞ்சித்தனத்தைச் சகித்துக்கொண்டிருக்க வேண்டாம் என்ற ஆறுதல் எழுந்தது.

    அயல் நாட்டில் இரு வாரங்களைக் கழித்துவிட்டு வீடு திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

    சிரித்த முகத்துடன் சகுந்தலா!

    “இங்க வாங்களேன்,” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள். அவள் காட்டிய இடத்தில் ஒரு பூனைக்குட்டி தூங்கிக்கொண்டிருந்தது. சொகுசாக, மெத்து மெத்தென்று மடிக்கப்பட்டிருந்த ஒரு ஜமக்காளத்தின்மேல்.

    “இது எங்கேயிருந்து வந்தது?” சற்று எரிச்சலுடன் பிறந்தது கேள்வி.

    “தானே வருமா? நான்தான் நேத்து கொண்டுவந்தேன், என் ஃப்ரெண்ட் கோகிலா இல்லே, அவ வீட்டிலேருந்து!” பெருமையாகச் சொன்னாள்.

    சிறு வயதில், ‘பூனைகிட்ட போகாதே, பிறாண்டும். தொட்டா, அலர்ஜி வந்து, அரிக்கும்,’ என்று பலவாறாக எச்சரிக்கை விடுத்திருந்தாள் அவன் தாய். இப்போது, அந்த அறிவுரை ஞாபகத்தில் எழ, “வீட்டுக்குள்ளே விடாதே. அசுத்தம் பண்ணிடும்,” என்றபடி, அப்பால் நகர்ந்தான்.

    ஏதோ நினைத்துக்கொண்டவனாய், “இந்தக் குட்டி ரொம்ப சோனியா இருக்கே! ரோமமும் இல்லே. ஏன் சக்கு? ஒனக்கு ஆசையா இருந்தா, கடைக்குப் போய், அழகான, புசுபுசுன்னு இருக்கிற நாயோ, பூனையோ வாங்கிக்கிறது!”

    அவளுடைய ஆத்திரம் அவன் எதிர்பாராதது. “ஒங்களுக்கு சோனியா, அழகில்லாம ஒரு குழந்தை பிறந்தா அதைத் தூக்கிப் போட்டுடுவீங்களா?”

    எழுந்த வேகத்திலேயே அவள் ஆத்திரம் அடங்கியது. “இதுக்கு பேர் என்ன தெரியுமா? சின்னி! நல்லா இருக்கில்ல?”

    இவள் என்ன, வளர்ந்த குழந்தையா? ஆயாசம்தான் எழுந்தது கருணாகரனுக்கு.

    தாய்ப்பால் மறக்காத குட்டிக்கு அவள் தன் விரலைப் பாலில் நனைத்து, அதன் வாயில் வைத்தாள். அதுவும் தாயின் மடிக்காம்பு என்று நினைத்து சப்பியது.

    ஆறுமாதங்கள் கழிந்தன. சின்னியின் உடலில் பருவ மெருகு ஏறியிருந்தது தெருவில் போகிற ஆண்பூனை ஒன்றின் கண்களுக்குத் தப்பவில்லை. அது உரிமையுடன், வீட்டுக் காம்பவுண்டில் நுழைந்து, சின்னியைத் துரத்தியதைக் கண்டு கருணாகரனுக்குப் பயம் ஏற்பட்டது.

    போனால் போகிறதென்று மனைவிக்குத் துணையாய் ஒரு பூனைக்குட்டியைச் சகித்துக்கொண்டாயிற்று. இது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மூன்று அல்லது ஐந்து குட்டிகளைப் பிரசவித்தால் என்ன செய்வது! இது என்ன வீடா, அல்லது மிருகக்காட்சிசாலையா?

    ஒரு நீண்ட கம்பை எடுத்துக்கொண்டு ஆண் பூனையைத் துரத்தினான்.

    “என்ன செய்றீங்க?” அதட்டலாக வந்தது சகுந்தலாவின் குரல்.

    “ஒன்னோட பூனையை டாக்டர்கிட்ட கூட்டிப் போகணும்,” என்று முணுமுணுத்தான்.

    “எதுக்கு?” என்றாள், புரியாது.

    அவன் விளக்கியதும், “எந்த ஜன்மத்திலே செஞ்ச பாவமோ, என் வயிறு திறக்கலே. அறுவைச்சிகிச்சை செஞ்சாவது சின்னியையும் மலடியா ஆக்கணுமா? பிள்ளை பெத்து, பால் குடுக்கிற இயற்கையான சந்தோஷத்தை அதுக்குக் கிடைக்காம பண்ணினா, அது பெரிய பாவங்க!” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள் சகுந்தலா.

    அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. சின்னி வந்த நாளிலிருந்தே அவளது அழுகை குறைந்து, உற்சாகமாக இருந்தாளே! இப்போது மீண்டும் தொடர் அழுகையா!

    “நீயும் ஒன் பூனையும் எப்படியோ தொலைங்க”. மனம் வெறுத்துப் பேசினான்.

    “அப்பா கிடக்கார்! நீ வாடி சின்னிக்குட்டி,” என்று அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சியபோது, அவனுக்குள் பொறாமை கிளர்ந்தது அவனுக்கே அவமானமாக இருந்தது. ஒரு பூனைக்குட்டியுடன் போட்டியா?

    தன்னை அப்பா என்கிறாளே! அப்போது, அவள் அம்மாவா?

    சில மாதங்களில் அதுவே உண்மை என்று தெரியவந்தது.

    “சின்னியை மிருக வைத்தியரிடம் கூட்டிப்போகணும்”.

    அவள் கூறியது புரியவே சில வினாடிகள் பிடித்தன. “எதுக்கு சக்கு? நீதானே வேண்டாம்னு சொன்னே?”

    “அது அப்போ. நம்ப பிள்ளை பிறந்துட்டா, பூனைக்குட்டிங்களை யாரால பாத்துக்க முடியும்?” அலட்சியமாக வந்தது அவள் குரல்.

    உணவும் சுத்தமான குடிநீரும் கொடுத்து, அதற்கு ஈடாக தன் அடிப்படை உரிமையைப் பறித்துக்கொள்ளும் மனிதர்களின் குணம் புரியாது, சகுந்தலாவின் காலடியில் அமைதியாக உட்கார்ந்து, தன் உடலை நக்கி சுத்தப்படுத்திகொண்டிருந்த அந்த பூனைக்குட்டியைக் கண்டு கருணாகரனுக்குப் பரிதாபமாக இருந்தது.

    தனக்கு மட்டும் ஏன் குட்டிகள் இல்லை என்று என்றாவது அதற்கும் அழத்தோன்றுமோ?

    Share
  • சிந்திக்கச் சில கல்வெட்டுகள்

    சிந்திக்கச் சில கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    இந்தியத் துணைக் கண்டத்தில் சற்றொப்ப ஒரு லட்சம் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள் பிராமி, பிராகிருத கல்வெட்டுகள் தவிர்த்து பெரும்பாலன கோவில் சார்ந்த கல்வெட்டுகளே. இவற்றில் கோவிலுக்கு நன்கொடைகள் தந்த செய்திகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. தமிழ்க் கல்வெட்டுகள் 60,000 மேல் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் யாவும் பிராமணர்களின் இசைவால் கோவில் சுவற்றில் பொறிக்கப்பட்டவை. எனவே பிராமணரால் தான் இந்த வரலாற்றுப் பதிவு நமக்கு கிட்டியுள்ளது. பிராமணரின் கோவில் தொடர்பால் அவர்களைப் பற்றிய குறிப்புகள் அவற்றில் அதிகம் உள்ளன.

    கல்வெட்டில் அறியப்படும் சதுர்வேதி மங்கலங்கள் ஆற்றுப் பாசனத்தை சார்ந்த பிராமணக் குடியேற்ற ஊர்கள் ஆகும். பிரம்மதேயம் என்பது ஒரு பிராமணருக்கு தனிப்பட்ட முறையில் விலையில்லாமல், ஆவணப்பதிவுக் (registration fee) கட்டணம் இல்லாமல் மன்னனால் கொடுக்கப்பட்ட நிலங்கள் ஆகும். எனினும் பிரம்மதேயமாக அறிவிக்கப்பட்டு நேரடியாக மன்னனிடம் இருந்து முதன் முறையாகப் பெறும் பிராமணருக்கு மட்டும் தான் இந்த சலுகை கிடைக்கும். அங்ஙனம் பிரம்மதேய நிலத்தை பெற்ற ஒரு பிராமணர் வேறு ஒருவருக்கு அந்நிலத்தை விலைக்கு விற்றால் அது ஆவணப்  பதிவுக் கட்டணம் கட்டப்பட வேண்டியதாகின்றது. அதோடு இந்த விற்பனை நிகழ்வால் அந்நிலம் பிரம்மதேயம் என்ற பொருளையும் இழந்து விடுகின்றது என்பதை பலரும் உணர்ந்திருப்பது இல்லை. இதே போல் தவறாகப் பொருள் புரிந்து கொள்ளப்பட்ட இன்னொரு சொல் தான் இறையிலி என்பது. இறை என்பதற்கு மன்னன், வரி என்ற சொற் பொருள் உள்ளன. ஒரு மன்னன் இறையிலி அறிவித்தால் அதற்கு வரிகட்ட வேண்டியதில்லை என்று பரவலாக தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றது.  உண்மையில் மன்னன் தனக்கு வரவேண்டிய வரித்தொகையை கோவில் ஊர் அல்லது கோவிலின் வளச்சிக்கு பயன்படட்டும் என்ற நோக்கில் விட்டுக்கொடுப்பதை வரி கட்டத் தேவையில்லை என்று கொண்டால் மன்னன் எந்த நோக்கத்திற்கு இறையிலி அறிவித்தானோ அந்த நோக்கம் ஈடேறாது போகும். இப்படி ஆவதற்கு அவன் இறையிலி அறிவிக்காமலே இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும்.  அப்படியானால் இதன் உண்மைப் பொருள் தான் என்ன? இறையிலி என்றால் மன்னனுக்கு தான் வரி கட்டவேண்டியதில்லையே தவிர கோவில் வளர்ச்சிக்காக ஒருவர் கட்டாயமாக அந்த வரியை கட்டியே ஆகவேண்டும். ஆதலால் பொருட்படி அது மக்களுக்கான இறையிலி அல்ல மன்னனுக்கே அது இறையிலி. எனவே பிராமணர் அக்காலத்தே பிரம்மதேயம், இறையிலி ஆகிய சலுகைகளைப் பெற்று வரியே கட்டாமல் சுகபோக வாழ்வு வாழ்ந்தனர் என்ற தப்பான கருத்து சிலரால் அச்சிலும் இணையதளத்திலும் பரப்பப்பட்டு வருகின்றது. பிராமணர்களும் வரிகளைக் கட்டினர். அவர்களுக்கு வரிச் சலுகை ஏதும் இல்லை என்று சிந்திக்க கீழே இடம்பெறும் முதல் இரு கல்வெட்டுகள் சான்றாகின்றன. பிணை, தாலி காது அறுப்பு, போரில் பிராமணர் பங்கு பெறல் பற்றிய சிந்தனைக்கும் கீழே கல்வெட்டுகள் உள்ளன. சமூகப்பிரிவினையை, சமூக ஏற்றத் தாழ்வை சதுர்வேதி மங்கலங்களும் அதன் பிடாகைகளும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன என்று J.S. கிரேவால், சாந்தின் பீ போன்ற பேராசிரியர்கள் தவறான செய்திகளை அச்சில் வெளியிட்டுள்ளனர். அது தவறான கருத்து என்பதை இரண்டாவது கல்வெட்டு தெரிவிக்கின்றது.

    The State and Society in Medieval India by J. S. Grewal Page 207

    https://books.google.com/books/about/The_State_and_Society_in_Medieval_India.html?id=LKkBJyKdoZ8C

    நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் ஊரில், சேடபுரீசுவரர் கோவிலின் கருவறை தெற்கு, மேற்கு, வடக்குப்புற பட்டிகைளில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோற்சடபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ஸுந்தர பாண்ட்ய தேவர்க்கு யாண்டு 23 வது மகர நாயற்று அப[ர]பக்ஷத்து த்ருதியையும் பெற்ற ஆலியத்து நாள் உய்யகொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு பாம்புரமான குலோத்துங்க சோழ சருப்பேதி மங்கலத்து உடையார் திருப்பாம்புரமுடையார் கோயில் ஆதிசண்டேசுர தேவர், கன்மிகளுக்கு. இவ்வூர் திருக்குடந்தை _ _ _ செம்பியன் மாராயனும் முட்டைப் புறத்து சங்கர நாராயண பட்டனும் _ _ _ ணவ _ _ _ _ பிரமாணம் பண்ணிக் குடத்த பரிசாவது. இவ்வூர் பெரும் பற்றப் புலியூர் காசிபன் உலகமுண்டான் இராசநாராயண பிரமராயனும் திரு_ _ _பண்_ _ _சோனா_ _ _ _
    2. முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் இவ்மூவோம் இருபத்தொன்றாவதும் இருபத்திரண்டாவதும் வரை_ _ _[கொ]ற்றவாயில்  புவனயர் நிற்கையில் இந்த இ[ராச நாரா]யண பிரம[ரா]யன் நிலை நின்று கடமை இறாமல் ஓடிப்போகையில் இருபத்திரண்டாவது வரை சிகைக்கு நாட்டுக் கணக்கு கீழ் முத்தூருடையார் பேராயிரமுடையார் கணக்குப்படி இவர்பேரால் வந்த _ _ _ இராசநாராயண பிரம்மராயற்கு [பு]ணைப்பட்ட கவுசியன் அழகிய திருச்சிற்றம் பலமுடையான் _ _ _ _ இராசநாராயண பிரமராயற்க்கு [பு]ணைப்பட்ட எங்களை இறுக்க வேணும் என்கையில் இந்த இராசநாராயண பிரமராயன் _ _ _ க்ஷேத்ரமான மனைகளும் நிலங்களும் இன்னாய _ _ _ பாம்புரமுடையார் _ _ _ _
    3. க நாங்கள் புணைவிலையாக விற்றுக் குடுத்தோம். விற்றுக் குடுத்த மனைகளும் நிலங்களுமான இவ்வூர் நத்த[த்]து இவர் மனைகளுக்கு கீழ்பாற்கெல்லை இன்னாயனார் திருமடை விளாகத்து எல்லைக்கு மேற்கு தென்பாற்கெல்லை இன்னா[யனா]ர் திருக்குளத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை விழாவரு வீதிக்கும் சேலூர் சோலை அரசு பட்டன் மனைக்கும் திருவரங்கமுடையான் பட்டன் மனைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை விழாவரு வீதிக்கு தெற்க்கு ஆக [இ]சைந்த  இன்னான் கெல்லையுள் நடுவுபட்ட மனைகளும் _ _ _ _ _ ஆற்றுக்கு தெற்குப்பட்ட விளைநிலத்தில் உய்ய வந்த விளாகம் என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை பாம்பூர்க் கிழார் நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை ஓடை வாய்க்கா[லுக்கு] வடக்கும் மேல்[பாற்கெல்லை] _ _ _ _
    4. _ _ _ _ __  கீழ்பாற்கெல்லை பெருமருதூர் திருசெல_ _ பலவூர் சதிர பட்டன் நிலத்துக்கு வடக்கு மேற்பாற்கெல்லை_ _ _ உடையான் பட்டன் நிலத்துக்கு மேல்பாற்கெல்லை _ _ _ பட்ட ரு இரண்டு மாவும் _ _ _ _ [வ]டக்கடை _ _ _ என்று பேர்கூவப்பட்ட நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை வீற்றிருந்தான் பட்டன் நில்த்துக்கு மேற்கு
    5. கெல்லை _ _ _ _ மாதேவ பட்டன் உள்ளிட்டார் நிலத்துக்கு வடக்கும் மேற்பாற்கெல்லை கவுணியன் செம்பியன் மாராயந் பட்டன் நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை கோன் நிலத்துக்கு இசைந்த இன்னான் கெல்லையுள் நடுவுபட்ட ரு இரண்டு மாவும் தத்தமான்னாற்றுக்கு வடக்கு _ _ம் பற்றூரூடையான் உய்ய கொண்டான்_ _இவன்_ _ _ _நத்தத்துக்கு கீழ்பா
    6. ற்கெல்லை_ _ _ற்றூர் நத்தத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உடையார் பாம்புரமுடையார் திருநாமத்துக்காணி_ _ _ (கல்வெட்டு நிறைவுறாமல் நிறுத்தப்பட்டுள்ளது).

    அபரபக்ஷம் – தேய்பிறை; ஆதிசண்டேசுவரர் – சிவன் கோவிலகளில் முதல் மரியாதை செலுத்தப்படுபவர்; கன்மிகள் – கோவில் பொறுப்பாளர்; பிரமாணம் – உறுதி ஏற்பு ஆவணம்; பரிசாவது – ஏற்பாடு, வகை, விவரம்; நிற்கையில் – சாட்சியாக இருக்க; கடமை இறாமல் – அரசுக்கு செலுத்த வேண்டிய வரிஇனங்களை செலுத்தாமல்; புணை – பிணை, surety, collateral security, ஆள் ஜாமின்; க்ஷேத்ரம் – வயல் நிலங்கள், வீடு இவை யாவும்; பிரம்மராயன் – மன்னனால் கோவில் செயற்பாட்டை கவனிக்க அமர்த்தப்படும்  பிராமண அதிகாரி.

    விளக்கம்:  சடவர்ம சுந்தர பாண்டியனின் 23-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1273) நாகை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் சேடபுரீசுவரர் கோவிலில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. ஆதிசண்டேசுவர தேவரை வணங்கி கோயில் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கும் விவரமாவது “திருக்குடந்தை கவுணியன் செம்பியன் மாராயனும் முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் இந்த உறுதி ஏற்பு ஆவணத்தில் செய்து கொடுத்த ஏற்பாடு யாதெனில், இவ்வூரில் வாழும் பெரும் பற்றுப் புலியூர் காசிபன் உலகமுண்டான் இராசநாராயண பிரம்மராயனும், திரு_ _பண்_ _ _சோனா_ _ _, முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் ஆகிய இம்மூவரும் சுந்தர பாண்டியனின் 21-22 ஆம் ஆட்சிக் கால கட்டத்தில் கொற்றவாயில் புவனயர் சாட்சியாக இருந்திட இம்மூவருக்கும் இடையே ஒருவர் தவறினால் மற்றவர் அவர் சார்பாக வரி கட்டுவது என்ற பிணை (surety) ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் இந்த இராசநாராயண பிரம்மராயன் தன் கடமையில் வழுவாது நின்று அரசிற்கு செலுத்த வேண்டிய வரிஇனங்களை கட்டாமல் எங்கோ போய் மறைந்தான்.  நாட்டுக் கணக்கர் கீழ்முத்தூருடையார் பேராயிரமுடையார் ஆகியோரின் கணக்குப்படி இந்த இராசநாராயண பிரம்மராயன் பேரில் 22 –ம் ஆட்சி ஆண்டில் செலுத்த வேண்டிய வரி நிலுவையை அவருடன் இன்னொரு பிணையில் உள்ள கவுசியன் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் இராசநாராயண பிரம்மராயனோடு பிணையப்பட்ட எங்கள் இருவரையும் (திரு_ _பண்_ _ _சோனா_ _ _, முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டன் ஆகியோர்) கட்டச் சொன்னான். ஆகையால் இந்த இராசநாராயண பிரம்மராயனுக்கு சொந்தமான நிலங்களை இதாவது, வீடு விளைநிலம் ஆகியனவற்றை திருப்பாம்புர ஈசனுக்கு பிணைக்கு விலையாக விற்றுவிட்டோம்” என்று கூறியுள்ளனர். இந்நிலங்கள் பற்றிய எல்லை விவரங்கள் எஞ்சிய வரிகளில் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்தி நிறைவு செய்யப்படாமல் அப்படியே பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒரேஒரு ஆண்டிற்கான வரியை கட்டாததாலேயே ஒருவரது உடைமை முழுவதையும் விற்றுவிடுவது ஞாயமா? உடைமையின் மதிப்பு வரிநிலுவையை விட அதிகமாகத்தானே இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகின்றது. கல்வெட்டில் பிணைக்கட்ட அனைவரும் பிராமணர் என்று தெரிகின்றது.

    இக்கல்வெட்டின் மூலம் பண்டு ஒருவருக்கு ஒருவர் பிணை (ஆள் ஜாமீன்) கொள்ளும் முறை சமூகத்தில் இருந்தது தெள்ளப் புலனாகின்றது. அதோடு பிராமணரும் மற்றவரைப் போல வரி கட்ட வேண்டி இருந்தது என்பதற்கு இக்கல்வெட்டு ஒரு நல்ல சான்றாகும். இதுவல்லாமல் பிராமணர் அந்தராயத்தில் அடங்கும் நெல் வரி, காசாய வரியில் அடங்கும் குடிமகண்மை வரி, வீட்டிற்கான வாசல் வரி உள்ளிட்ட பல வரிகளையும் கட்ட வேண்டும் என்பதை மேலும் சில கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது. எனவே பிராமணர் வரி கட்டாமலேயே அரசு சலுகை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர் என்ற பரவலான கருத்து பிழையானது என்று தெரிகின்றது. எனவே யார் என்ன எழுதினாலும் சொன்னாலும் அதன் உண்மைத் தன்மை என்ன என்று தக்க சான்றுகளுடன் ஆராய வேண்டிய கட்டாயக் கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

    பார்வை நூல்: நன்னிலம் கல்வெட்டுக்கள் – I, எண்: 138/1977, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

    காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அரசர் கோயில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கருவறை வடக்கு முப்படைக் குமுதம் மற்றும் மேற்கு பட்டிகையில் பொறித்த 3 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடைபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு [ப]தினைஞ்சாவது மீந நாயற்று அபரபக்ஷத்து ஸப்தமியு[ம்] ச[னி]க்கிழமையும் பெற்ற [ஸ்வா]தி நாள் _ _ _ _ த்த ஸ்வதுர்வேதிமங்கலத்துப் பிடாகை மாத்தூர் ஸபை. [இவ்]வூர் திருவரசுர நாயனார் கோயிலில் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வார்க்கு ஸ்ரீ ஸேனாபதிப் பெருவிலை ஆக விற்றுக் குடுத்த பரிசாவது, இவ்வூர் ஸபையாரில் காஞ்சி சொக்கத் தேவரான [மூ]த்த வாமன பட்டன் பதினாலாவது வரையும் உழுது தன் பேர்க்கடமை செலவறாதே ஓடிப் போகையில். இவன் பேர்க்கடமைக்கு சேர்வை என்று எங்களை இப்பணம் _ _ _
    2. _ _ ன்று கோமுள்ள மாவிஸனம் பண்ணுகையாலே. எங்களுக்கு _ _ ங்க _ _ _ பாத்தி இல்லாதப்படியாலே _ _ _ _ _இதர்க்கு தேவரான [உ]த்த[ம] வாமன பட்டன் உள்ளிட்ட _ _ _ _ _ன நிலமான மேலைப்புதுத் திரு ந_ _த்து _ _ _சி குருகூர் ஸ்ரீ  சவ_மம் ப்ரயாகைத் திருப்பொரி பட்டன் உள்ளிட்டார் இராசேந்த்ர விளை நிலமான முன் மடைப் புதுத்திருத்து நந்த[கஸ]ம். வெண்ணைக் கூத்தன் _ _ _ தனால் இன்னிலம் ஒன்றே இரண்டு மாவுக்கும் பெறும் வஸ ஆக நிச்சயித்த அன்றாடு நற்காசு வாசிபடர் வராகன் பணம் 27
    3. [இரு]பத்தேழும் விலையாவதாகவும். இப்படி சம்மதித்து மாத்தூர் [எ]ழுவாத நா[ய]னார்க்கு ஸ்ரீவேதநாயகனும் இவற்கு விலை ஆக விற்றுக் குடுத்தோம் மாத்தூர் ஸபை ஊரோம். இப்படிக்கு இவை _ _ _ ஞ்சி இவாய்வ _ _ _ _ன் பட்டன் எழுத்து. இப்படிக்கு இவை வங்கிப்புறத்து திருவேங்கட பட்டன் எழுத்து. இப்படிக்கு இவை ஆதன்பாக்கத்து திருவேங்கட பட்டன் எழுத்து. இவர்கள் சொல்ல இப்ரமாணம் எழுதினேன் ஸ்ரீ சுத்தவல்லிச் சருப்பேதி மங்கலத்து உய்ய வந்த பெருமாள் கோயில் வீற்றிருந்தான் பட்டனேன். இவை என் எழுத்து.

    சேனாபதி ஆழ்வார் – விஷ்வக்சேனர். சிவன் கோவிலில் ஆதிசண்டேசுவரரை முதலில் வணங்குவது போல் பெருமாள் கோவிலில் விஷ்வக்சேனரை முதலில் வழிபடுவர். இவரை சேனை முதலி என்பர்; பிடாகை – ஒரு கோவில் ஊரின் பின்புறத்தே (backyard) அமைந்த உட்கிடையூர், a small village at the backyard of a bigger village; சபை – சதுர்வேதிமங்கலம், பிடாகை ஆகியவற்றின் ஊரவை; பேர்க்கடமை செலவறாதே – தன்பெயரில் ஏற்பட்ட அரசுக்கு கட்ட வேண்டிய வரியை செலுத்தாமல்; சேர்வை – தொண்டு, ஊழியம்; மாவிஸனம்- பெருந் தொல்லை; பாத்தி – பொறுப்பாதல், பிணையாதல், பங்கு.

    விளக்கம்:  சடவர்ம சுந்தர பாண்டியனின் 15- ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1265) காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அரசர் கோவிலில் தேய்பிறை ஏழாம் நாள் சனிக்கிழமை சுவாதி நட்சத்திரத்தன்று மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து வட பிடாகையான மாத்தூர் எனும் அரசர் கோயில் ஊரின் ஊரவையர் கூடினர். “மாத்தூர் பிடாகையின் திருவரசுரம் பெருமாள் கோயிலில் சேனாபதி ஆழ்வாரான விஷ்வகசேனரை வணங்கி பெருவிலையாக நிலம் விற்றுக் கொடுத்த விவரம் என்னவெனில், இவ்வூரின் ஊரவை உறுப்பினனான காஞ்சி சொக்கத் தேவரான மூத்த வாமன பட்டன் சுந்தர பாண்டியனின் 14- ம் ஆட்சி ஆண்டு வரை இவனுக்கான நிலத்தை உழுது பயன்கொண்டான். ஆனால் 15 –ம் ஆட்சி ஆண்டில் தன் பேரில் அரசுக்குக் கட்ட வரிஇனங்களைக் கட்டாமல் எங்கோ சென்று மறைந்தான். இதனால் இவன் பெயரில் உள்ள வரிகளைத் கட்டுவது தொண்டு, ஊழியம் என்றெல்லாம் சொல்லி எங்களைக் கட்டும்படி தொடர்ந்து பெருந் தொல்லை கொடுத்து வருகின்றனர். எங்களுக்கு அவனது வரியைக் கட்ட வேண்டிய பொறுப்போ பிணையோ இல்லாமையால் இதற்கு தேவரான உத்தம வாமன பட்டன், பிரயாகை திருப்பொரி பட்டன் உள்ளிட்டோர் வெண்ணைக் கூத்தன் என்பவனுக்கு ஒன்றே இரண்டு மா அளவுள்ள மூத்த வாமன பட்டனின் நிலத்தை அன்றாடு நற்காசு வாசிபடவர் வராகன் பணம் 27 க்கு விற்றுவிட ஒப்புக் கொண்டனர்.” பிற பட்டர்களும் இதற்கு ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

    மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்தின் வட பிடாகையான மாத்தூர் ஒரு வைணவ தளம். இக்கோவிலில் பணியாற்றும் பிராமணருக்கும் மற்ற கோவில்களில் உள்ளது போல கோவில் அருகிலேயே வீடுகள் அமைந்திருக்க வேண்டும். எனவே பிடாகைகளில் வைணவக் கோவில்கள் அறவே இருந்ததில்லை. பிராமணர் வீடுகளும் இல்லை, பிராமணர் சதுர்வேதி மங்கலத்தில் வாழ்ந்துகொண்டு பிற உழைக்கும் மக்களை பிடாகைகளுக்கு ஓரங்கட்டித் தாழ்வுபடுத்தி சமூகப்பிரிவினையை ஏற்படுத்திய புறச்சேரியே பிடாகைகள் என்ற அலிகார் பல்கலைக்கழக இணைப் பேராசிரியை சாந்தினி பீயின் கருத்தை இக்கல்வெட்டு சுக்கு நூறாக உடைத்தெறிவது நமக்குக் கண்கூடாகத் தெரிகின்றது.

    http://thalaivazhaivirundhu.blogspot.com/2018/03/blog-post_21.html

    பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் – IV, பக்கம் 109-110, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

    நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம் இஞ்சிக்குடி ஊரில் அமைந்த ஸ்ரீ பார்வதீசுவரர் கோவிலின் மகாமண்டபம் வலப்புறத் தூணில் உள்ள, 32 வரிக் கல்வெட்டு நீட்சி கருதி சாய்வுக் கோட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்தி ஸ்ரீ திரு / வுலளகளந்த  கணக் கிந்படி இரட்டபா டி ஏ[ழ]ரை இலக்கமு /  ங் கொண்டு ஆ / கோமல்லனை இரும / டி வெந்கண்டு _ _ _ குலைவிந்  கொட / _ _ _[கானை] தேவற்கு / [பா]டு ஆத[லை] /  இரட்ட  ராச்சியந்  /  துமிச்சு பேரா /  ற்றங்க[ரை] கேய் வ  / ந்து ஆகோமல்  /  லனோடு பொ[ரு] /  த பூசலில் ஆனை / முகத்தில் குதி  / ரை பாச்சியட்[ட]  /  சங்கரன் பெரி  /  யாநான கல்லி /  யாணபுரங் கொ / ண்ட சோழ பிர  / மாதராயந் [மக]  /  [ன்] ராஜாதிராஜனுக் / கும் அரையன் திரு  / ச்சிற்றம்பலம் /  முடையாநுக்கு  /  ம் இவநு_ _ _ _ /  ந்த சங்கரன் இரா / மநான ராஜேமஹே / ந்த்ர _ _ _  ராம நுக்கு _ _ _ _

    பாச்சியட்ட – பாயவிட்டு மறிக்க, தடுக்க; பிரமாதராயன் – மன்னனால் கோவில் செயற்பாட்டை கவனிக்க அமர்த்தப்படும் பிராமண அதிகாரி.

    விளக்கம்:  இரண்டாம் இராசேந்திரச் சோழனின் 10–ம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. மேலைச் சாளுக்கிய வேந்தன் ஆகவமல்லனான முதலாம் சோமேசுவரனை கி.பி. 1054 ல் கொப்பத்து பேராறான துங்கபத்திரைக் கரையை அண்டிய போர்க்களத்தில் இராசேந்திரச் சோழன் எதிர் கொண்டான். அப்போது யானைப் படையை நோக்கி குதிரைப்படையைப் பாயவிட்டு யானைப் படையை முன்னேற விடாமல் மறிக்க, தடுக்க என்ற செய்தியோடு வேறு ஒரு செய்திக்கு கல்வெட்டு தாவுகின்றது. சங்கரன் பெரியானான கலியாணபுரம் கொண்ட சோழ பிரமாதராயன் மகன் ராஜாதிராஜனுக்கும் அரையன் திருச்சிற்றம்பலமுடையானுக்கும் இவனொடு உறவுடையவனான சங்கரன் இராமனான ராஜேந்திர _ _ _ ராமநுக்கும் என்று மூவரைக் குறித்துவிட்டு அதற்கு மேல் கல்வெட்டுச் செய்தி ஏதும் கிட்டாமல் நின்றுவிடுகின்றது. ஏனென்றால் அதன் பின் கல்வெட்டின் சில வரிகள் சிதைந்துவிட்டன. எனவே செய்தி இன்னதென்று மேலும் தெளிவாகத் தெரியவில்லை.

    கோவிலில் கோவிலுக்கு தொடர்பற்ற செய்திகள் கல்வெட்டில் இடம்பெறா. இக்கல்வெட்டு இக்கோவிலில் இடம்பெற்றதென்றால் அது தொடர்பான செய்தி தான் சிதைந்த வரிகளில் இருக்கும். பிரம்மராயன் என்போர் கோவில் செயற்பாட்டை மேற்பார்வையிடவும் கோவில் செயற்பாடு சீராக நடந்து வரவும் வேந்தரின், மன்னரின் நேரடி பார்வையில் நியமிக்கப்பட்ட பிராமண அதிகாரிகள் ஆவர். தொழில் தர்மத்திற்கு மாறாக பிரம்மராயரான இந்த பிராமணர் போரில் கலந்து கொண்டு வீரசாவடைந்தார் என்று விளக்கப் பகுதியில் குறித்திருப்பது தவறானச் செய்தியாகப்படுகின்றது. கல்வெட்டுகளை படிப்போர் நூல் வெளியீட்டாளர் கொடுக்கின்ற விளக்கத்திற்கு மேல் தாமாக முயன்று எந்த கல்வெட்டிற்கும் பொருள் விளக்கம் கொள்ளப் போவதில்லை என்பதே நடப்பாக உள்ள நிலையில் இப்படியான தவறான விளக்கத்தை படிப்போர் அதையே உண்மை என்று கருதும் அவல நிலை தான் உள்ளது. ஒரு அரசு அமைப்பான தொல்லியல் துறை இத்தகு தவறுகளை தவிர்க்க வேண்டும்.

    பார்வை நூல்:  நன்னிலம் கல்வெட்டுக்கள் – I, எண்: 171/1977, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

    திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டை வட்டம், பாளையங் கோட்டையில்  அமைந்த கோபால சுவாமி கோயில் கருவறை வடக்கு அதிட்டானம் முப்படைக் குமுதத்தில் பொறித்த 9 வரிக் கல்வெட்டு.

    1. ழரை இலக்கமும் திண்டிரல் வென்றித் தண்டார் கொண்டு தன்னெழில் (வளர் ஊ) ழி உள் எல்லா யா
    2. ண்டு தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசு கொள் ஸ்ரீ (கோவிரா)ஜராஜ கேஸரி வர்ம
    3. ரான ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 25 ஆவது ராஜராஜ ம(ண்டலத்)து கீழ்க் களக் கூற்றத்து
    4. ப்ரஹ்மதேயம் ஸ்ரீ வல்லப (சதுர்வேதிம)ங்கலத்து மகா சபையோம். பெருங்குறி சாற்றின ம_ _ _க் கூட்ட குறைவ
    5. றக் கூடி இருந்து செறுகை சீமாமினவனம் யென்றிய னுள்ளிட்டாராவது நம்மூர் யெட _ _ _ விலே யவது புகுந்து ஊர்
    6. அழிப்போமென்று ப்ராமணரைப் படைகளம் பறிக்க பிராமணிகள்த் தாலியு_ _ காதுமறுத்துக் கவரா நிற்க
    7. கக் கவராமல் பட்ட வள்ளுவன் மாணிக்கன் மணியன்னான கவறை இகைற்சி_ _ மயில் ஒப்பனுக்கு உதிரப்ப
    8. ட்டியாகப் பணிச்ச நிலம் திருவரங்கனேரிக் குளத்தடியால் கொல்லன் வச்ச
    9. _ _உள்பட அடைஞ்சிலியிடை

    சாற்றின – அறிவித்த; செறுகை – ; பறிக்க – வலுவில் பிடுங்க; கவர் – கொள்ளையிடு; பட்ட – போரில் இறந்த; உதிரப்பட்டி – உயிர் ஈகம் செய்தவர் குடும்பத்திற்கு தரப்படும் இரத்த காணிக்கை நிலக் கொடை; பணிச்ச நிலம் –

    விளக்கம்:  இரட்டப்பாடி ஏழரை இலக்கம் என முதலாம் இராசராசனின் மெய்கீர்த்தியொடு தொடங்கும் இந்த கல்வெட்டு அவனது 25-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1010) வெட்டப்பட்டுள்ளது. இராசராச மண்டலத்தில் அடங்கிய கீழ்களக் கூற்றத்தில் அமைந்த பிரம்மதேயமான ஸ்ரீ வல்லப சதுர்வேதி மங்கல  (பாளையங்கோட்டை) மக்கள் அனைவரும் சேர்ந்து நடத்தும் கூட்டத்தில் மக்கள் திரளாக கூடி இருந்து எடுத்த முடிவு யாதெனில்,”நம்மூரில் புகுந்து ஊரையே அழிப்போம் என்று இங்குள்ள பிராமணர் உடைமைகளைப் படைக்களம் வலுவந்தமாகப் பிடுங்கியது. பிராமணிகளான மாமிகளின் தாலியையும் காதையும் அறுத்ததோடு கொள்ளையிட முற்பட்ட நேரத்தில் அப்படிக் கொள்ளையிட முடியாமல் தடுத்து போரில் இறந்து போன வள்ளுவன் மாணிக்கன் மணியன் ஆன கவறை இகைற்சி_ _ மயில் ஒப்பனுடைய குடும்பத்தாருக்கு இரத்த காணிக்கை நிலம் கொடையாக திருவரங்கனேரி குளத்தடி பக்கம் வழங்கப்பட்டது.

    வேந்தர், மன்னர்களின் பேராதரவு பெற்றவர்களாகக் கருதப்பட்ட பிராமணர்களுக்கே இப்படி ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழல் இருந்தது என்றால் மற்றவர் உயிர் பாதுகாப்பும் கேள்விக்கிடமானதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

    5-ம் வரியில் அதிகமான தட்டச்சுப் பிழை உள்ளது. நூலைப் படிப்பவர் யாரும் மூலக் கல்வெட்டொடு ஒப்பிட வாய்ப்பில்லாத போது ஒருவர் தட்டச்சிய கல்வெட்டு வாசகத்தை இன்னொருவரைக் கொண்டு சரிபார்த்த பின்னர் தான் அதை அச்சிடுட வேண்டும் அதுவே சரியானது. இந்தக் கல்வெட்டில் அவ்வாறு கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிகின்றது.

    பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் – I, பக்கம் 42, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-110

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-110

    நாங்குநேரி வாசஸ்ரீ

    110. குறிப்பறிதல்

    குறள் 1091

    இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

    இவளோட  மைபூசின கண்ணு பாக்குததுல ரெண்டு தினுசு நோக்கம் இருக்கு. ஒண்ணு எனக்கு சங்கடத்தத் தருததுக்கு. மத்தது அத நீக்குத மருந்தா இருக்கதுக்கு.

    குறள் 1092

    கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
    செம்பாகம் அன்று பெரிது

    நான் பாக்காத நேரம் என்னைய ஓரக்கண்ணால இவ பாக்குத பார்வை காதல்ல சரிபாதினு சொல்லிக்கிடமுடியாது. அதுக்கும் மேல.

    குறள் 1093

    நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
    யாப்பினுள் அட்டிய நீர்

    ஓரக்கண்ணால அவ என்னைய பாத்த பார்வையில வெக்கம் சாஸ்தி இருந்திச்சு. அது அவ என் மேல வச்சிருக்க நேசம்ங்குத பயிர வளக்கதுக்காவ ஊத்துத தண்ணி கணக்கா ஆவும்.

    குறள் 1094

    யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
    தானோக்கி மெல்ல நகும்

    நான் பாக்குதப்போ அவ தலயக் குனிஞ்சி பூமியப் பாப்பா. நான் பாக்காத நேரம் என்னையக் கண்டு பைய தனக்குள்ளார சிரிச்சிக்கிடுவா.

    குறள் 1095

    குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
    சிறக்கணித்தாள் போல நகும்

    நேரா பாக்காம ஒரு கண்ண சுருக்கிவச்சாப்ல பாத்து பாத்து தனக்குள்ளார சந்தோசப்பட்டுக்கிடுதா.

    குறள் 1096

    உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
    ஒல்லை உணரப் படும்

    நேசத்த மறைச்சிக்கிட்டு அசலார் கணக்கா கடுமையா வைதாலும் அவ நெஞ்சுக்குள்ளார இருக்க நேசம் வெரசலா வெளிய தெரிஞ்சிடும்.

    குறள் 1097

    செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
    உறாஅர்போன் றுற்றார் குறிப்பு

    கோவிச்சுக்கிடாம சொல்லுத கடுஞ்சொல்லும், பகையாளியப் பாக்குதது கணக்கா மொறைக்குததும் மனசுல நேசத்த வச்சிக்கிட்டு பொறத்த அசல்மனுசன் கணக்கா நடந்துக்கிடுதவங்களக் காட்டுத குறிப்பு ஆவும்.

    குறள் 1098

    அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
    பசையினள் பைய நகும்

    நான் பாக்குத நேரம் நேசத்த காணிக்காமாரி பைய சிரிப்பா. துடியிடை இருக்க அவ அப்பம் புது அழகோட இருக்கா..

    குறள் 1099

    ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
    காதலார் கண்ணே உள

    பொது எடத்துல முன்னப் பின்ன தெரியாதவுக கணக்கா பாத்துக்கிடுதது காதலர்களுக்கு பழக்கம் தான்.

    குறள் 1100

    கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல

    கண்ணோட கண்ணு கலந்து நேசமா பார்வையாலேயே பேசிக்கிடுத நேரம் வாய்ப் பேச்சுக்கு எந்த பிரயோசனமும் இல்ல.

    Share
  • ‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசகசாலை

    ‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசகசாலை

    எம். ரிஷான் ஷெரீப்

    கடந்த சில வருடங்களாக நாடு முழுவதிலும் ‘இலவச நூலகங்கள்’ எனும் முயற்சியை மேற்கொண்டு, பொது மக்களிடம், அவர்கள் வாசித்த புத்தகங்களைச் சேர்த்தெடுத்து வாசகசாலைகள் அற்ற ஊர்களில் பேரூந்து நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும், வைத்தியசாலைகளிலும் இலவச நூலகங்களை அமைத்த முயற்சி மிகுந்த வெற்றியளித்தது. அதைக் குறித்து நீங்களும் உங்கள் தளத்தில் பதிந்திருந்த எனது பதிவு பரவலான வரவேற்பைப் பெற்று பலரும் புத்தகங்களை அனுப்பியிருந்தார்கள். அந்தந்த இடங்களில் அமைக்கப் பெற்ற நூலகங்களுக்கு அந்தந்த இடங்களின் மேலதிகாரிகளுக்கே பொறுப்பை வழங்கியிருப்பதால் அவை இப்போது பலரதும் கவனத்தைப் பெற்று சிறப்பாக இயங்கி வருவதோடு, புத்தக வாசிப்பாளர்களாக பலர் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

    சிங்கப்பூரிலிருந்து எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், சென்னையிலிருந்து எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன், கோயம்புத்தூரிலிருந்து ஜே.வி. விஜயகுமார் ஆகியோர் பெருந் தொகையான தமிழ் புத்தகங்களை அனுப்பியிருந்ததால், அவற்றை கவிஞர் கருணாகரன் மூலமாக கிளிநொச்சியிலிருக்கும் வறிய கிராம நூலகங்களுக்கும், இன்னும் பிற நூலகங்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிந்தது. இவ்வாறாக இலவச வாசகசாலை விபரத்தை பலரதும் கவனத்துக்குக் கொண்டு சென்ற உங்களுக்கும், புத்தகங்களை அனுப்பி வைத்திருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும், பேரன்பும் என்றும் உரித்தாகும்.

    இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, கடந்த ஒன்றரை வருட காலமாக எனது ஊர் அமைந்துள்ள மாவட்டத்தில் வாசகசாலைகளற்ற மலைக் கிராமங்களுக்கு புத்தகங்களை எடுத்துச் சென்று அங்குள்ள சிறுவர்களை புத்தகங்களை வாசிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு பெட்டிக்குள் புத்தகங்களை இட்டு சைக்கிளில் ஏற்றிச் சென்று கிராமத்திலுள்ள பொது மண்டபமொன்றில் போயிருந்து, சைக்கிளையும் பெட்டியையும் கண்டு ஒன்று சேரும் பெற்றோர்களையும், பிள்ளைகளையும் கூப்பிட்டு அவர்களிடம் புத்தகங்களிலுள்ள கதைகளையும், வாசிப்பின் பயன்களையும் எடுத்துரைத்து இலவசமாகப் புத்தகங்களை வழங்கி விட்டு வருதல், இரண்டு கிழமைக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட தினத்தை அடுத்து வரப் போகும் தினமாகக் கூறுதல், குறிப்பிட்ட அத்தினத்தில் போய் அந்நூல்களைத் திருப்பி வாங்கிக் கொண்டு வேறு நூல்களை வழங்கி வருதல் இப்படியாக பதினைந்து கிராமங்களுக்கு இந்த இலவச நடமாடும் நூலக சேவையைச் செய்ய முடிந்தது.

    இந்த இலவச சேவையைப் பயன்படுத்தும் வாசகர்களிடம் முன்பு வழங்கிய நூல்களைத் திரும்பப் பெறும்போது பெரியவர்களிடமும், சிறுவர்களிடமும் அவர்களது வாசிப்பனுபவம் மற்றும் நூல் குறித்த விமர்சனத்தை கூறுமாறு அல்லது எழுதித் தருமாறு கோரப்படும். அவர்களும் தம்மாலியன்ற விதத்தில் நூலைப் பற்றிக் கூறும்போது அல்லது எழுதித் தரும்போது இச் சேவையின் பயனை ஆத்மார்த்தமாக உணர முடிகிறது.

    இந்த எண்ணக் கரு நண்பரும், சிறுவர் நல, பராமரிப்பு உத்தியோகத்தருமான திரு. மஹிந்த தசநாயக்கவுடையது. அவர் ஒரு வறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து பட்டதாரியானவர். எனவே கிராமப்புறங்களில் வாசிக்கத் தேவையான புத்தகங்கள் கிடைப்பதிலுள்ள சிக்கல்களை அவர் நன்கு அறிவார். அவரது முயற்சியால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மலைக் கிராமங்களில் இந்த இலவச நடமாடும் நூலக சேவையை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடிகிறது.

    இந்த வருடம், இந்தச் சேவையை எமது மாவட்டத்துக் கிராமங்களோடு மாத்திரம் நிறுத்தி விடாது, பிற மாவட்டங்களிலுள்ள வறிய கிராமங்களிலும் இதனை முன்னெடுக்கத் திட்டமிட்டோம். எனவே போரால் பாதிக்கப்பட்ட, பல வறிய கிராமங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத்துக்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு போகத் தீர்மானித்தோம். நான் தயாரித்துக் கொடுத்த பெட்டியை, நண்பர் மஹிந்த தசநாயகவின் மனைவி வாங்கிக் கொடுத்த சைக்கிளில் பிணைத்து யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தில் அனுப்பியாயிற்று. ஆனால் ஏற்கெனவே தமிழ் நூல்கள் எல்லாவற்றையும் விநியோகித்து முடித்திருந்தோம். எனவே புதிதாக நூல்களைக் கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது.

    வறிய தமிழ்ப் பிள்ளைகளுக்கு நூல்கள் வாங்க வேண்டும் என்ற விடயத்தைக் கூறியதும் மஹிந்த தசநாயக்கவின் சிங்கள நண்பரொருவர் இருபதாயிரம் ரூபாயை இலவசமாக அனுப்பியிருந்தார். அதை எடுத்துக் கொண்டு நானும், மஹிந்தவும் விடிகாலையே புறப்பட்டு கொழும்பிலிருக்கும் குமரன் புத்தக நிலையத்துக்குப் போய் இருபதாயிரம் ரூபாய்க்கு தமிழ்ப் புத்தகங்களைக் கொள்வனவு செய்தோம். இலவச நடமாடும் நூலக விடயத்தைக் கூறியதும், புத்தக நிலைய உரிமையாளர் திரு. குமரன் அவர்கள் (எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்களது மகன்) நாம் வாங்கிய நூல்களுக்கு தன்னாலியன்ற சிறந்த விலைக் கழிவினை வழங்கி உதவினார். அதனால் இலங்கை, இந்திய வெளியீடுகளான ஏறத்தாழ நூற்றைம்பது நூல்களை வாங்க முடிந்தது.

    அவற்றைப் பொதி செய்து எடுத்துக் கொண்டு நள்ளிரவு புகையிரதத்தில் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டு மறுநாள் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தோம். அங்கு, ஏற்கெனவே புத்தகங்கள் வழங்கப்பட வேண்டிய வறிய பிள்ளைகளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவிகள் இனங்கண்டு அவர்களை கொக்குவில் கோயிலருகே ஒன்றிணைத்திருந்தார்கள். அப் பிள்ளைகள் கொக்குவில் புகையிரத நிலையத்தருகே குடிசைகளில் வசிக்கும் பிள்ளைகள். அப் பிள்ளைகள் அந்த மாணவிகளோடு நெருக்கமாக இருப்பதையும், மாணவிகள் அவர்களோடு தமிழில் கதைப்பதையும் காண முடிந்தது. இரண்டு வயது பெண் குழந்தையொன்று மாணவியின் கையிலேயே அமர்ந்து கொண்டு தனது தாயிடம் செல்ல மறுத்தது. கொக்குவிலைச் சேர்ந்த துவாரகாவும் இன்னும் இரண்டு இளைஞர்களும் கூட அங்கு வந்து சேர்ந்து நூல்களை விநியோகிக்க உதவினார்கள்.

    காலையிலிருந்து கொக்குவிலில் சேர்ந்திருந்த சிறுவர்களுக்கு ஒரு தொகுதி நூல்களை விநியோகித்து விட்டிருந்தோம். எனினும் அங்கு இலவசமாக வழங்கப்படும் நல்ல நூல்களை எடுத்துக் கொண்டு சென்று வாசிக்கக் கூடிய பிள்ளைகளின் தட்டுப்பாடு நிலவியது. நாம் சென்றது வார இறுதி நாளில் என்பதால், பெருமளவான பிள்ளைகள் பிரத்தியேக (ட்யூஷன்) வகுப்புகளுக்குச் சென்றிருந்தமை எமக்கு ஆச்சரியமளித்தது. வாரத்தில் ஐந்து நாட்கள் பாடசாலையில் காலையிலிருந்து மாலை வரை படித்துக் களைத்துப் போன பிள்ளைகளை சனி, ஞாயிறு விடுமுறை தினங்களிலும் விடிகாலையிலிருந்து இரவு வரை பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்புவது சரியா? அவர்களுக்கு விளையாடுவதற்கோ, வேறு தமக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளைச் செய்வதற்கோ பெரியவர்கள் நேரம் கொடுப்பதே இல்லை. பாடசாலையில் ஒழுங்காகவும், முறையாகவும் கற்பித்தால் பிள்ளைகள் பணம் கொடுத்துக் கற்க வேண்டிய பிரத்தியேக வகுப்புகளுக்கான அவசியமே இல்லையே? தமிழ்ப் பிரதேசங்களில் ஏன் இந்த நிலைமை காணப்படுகிறது? இதைப் பற்றி மேலும் கூறினால் பிரத்தியேக வகுப்பாசிரியர்களும், சில பெற்றோர்களும் கோபிப்பார்கள். இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம். விடயத்துக்கு வருவோம்.

    யாழ் சிறுவர் நல, பராமரிப்பு உத்தியோகத்தர் ராஜீவனைத் தொடர்பு கொண்டபோது சுன்னாகம், மானிப்பாய் வழியே சங்கிலிப்பாய் கிராமத்துக்கு அவர் எம்மை அழைத்துச் சென்றார். அங்கு அவரது முயற்சியின் கீழ், திரு. கஜரூபன் அவர்களது ஒருங்கிணைப்பில் புத்தகங்களை வாசிக்கக் கூடிய ஐம்பது, அறுபது பிள்ளைகள் ஒன்று சேர்ந்திருந்தார்கள். நாட் கூலி வேலைகளுக்குச் செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள் என்பதால் தனிப்பட்ட வாசிப்புத் தேவைகளுக்காக நூல்களை வாங்கி வாசிப்பதென்பது அவர்களுக்கு பெரும் கனவு. அவ்வாறானவர்களுக்கு புத்தகங்களை வழங்க முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தோம். எஞ்சிய நூல்களை கஜரூபனிடம் கொடுத்தோம். இரு கிழமைக்குப் பின்னர் அப் பிள்ளைகள் வாசித்து முடித்த நூல்களைக் கேட்டு வாங்கி எஞ்சிய நூல்களை விநியோகிக்குமாறு கூறி விட்டு அன்றிரவு புகையிரதத்தில் புறப்பட்டு மறுநாள் வீடு வந்து சேர்ந்தோம். புதிதாகச் சேரும் தமிழ் நூல்களை எடுத்துக் கொண்டு அடுத்த மாதம் யாழ்ப்பாணம் செல்லவிருக்கிறோம்.

    ‘புத்தகங்களும் நானும்’ எனும் இந்த இலவச நடமாடும் நூலக சேவை குறித்து முன்பே நான் வெளிப்படையாக அறியத் தந்திருந்தால் நூல்களைப் பெற்றுக் கொள்வதிலும், நூல்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதியானவர்களைக் கண்டடைவதிலும், ‘நீங்கள் NGO வா?’ ‘அரசாங்கம் உங்களை அனுப்பியதா?’ ‘உல்லாசமா ஊர் சுற்ற வேண்டிய வயதில, இந்த வெயிலில் ஏன் இதைச் செய்து திரியுறீர்?’ போன்ற கேள்விகளை எதிர்கொள்ளாதிருக்கவும் முடிந்திருக்கும். பல மாவட்டங்களிலுமிருக்கும் வறிய தமிழ், முஸ்லிம் கிராமங்களில் இதைத் தொடர்ந்தும் செய்யவிருப்பதால் இப்போதேனும் இதைப் பதிந்து வைப்பது தாமதமில்லை என்று தோன்றுகிறது.

    பிள்ளைகளின் வாசிப்பு ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் சிநேகபூர்வமான சுற்றுச் சூழல் ஆகியவற்றை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டு ‘புத்தகங்களும் நானும்’ எனும் இலவச நடமாடும் நூலக சேவை பல பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்காலத்தில் பிள்ளைகள் தொழில்நுட்பக் கருவிகளோடு ஓரிடத்துக்குள் அடைபட்டு, ஒரு விதத்தில் தனிமைப்பட்டிருக்கும் நிலைமை காணப்படும் சூழலில் புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதன் மூலம் சுற்றுச் சூழலையும், சமூகத்தையும் நேசிக்கும் மனிதர்களாகி எதிர்காலத்தைச் சந்திப்பவர்களாக அப் பிள்ளைகளை மாற்ற முடியும். இதை இலக்காகக் கொண்டு நட்போடு கை கோர்ப்பதே ‘புத்தகங்களும் நானும்’ சேவையின் எதிர்பார்ப்பாகும்.

    வாசகர்கள் தாம் வாசித்து முடித்த நூல்களை இலவசமாக அனுப்பி வைத்தால் அவற்றையும் சேகரித்து வறிய கிராமப்புறங்களுக்கு இவ்வாறு வழங்குவோம். எழுத்தாளர்களும் தாம் வெளியிட்ட நூல்களின் பிரதிகளை அனுப்பி வைக்கலாம். வாசகர்கள் அந் நூல்கள் தொடர்பாக ஏதேனும் விமர்சனங்களை முன்வைத்தால் அவை எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இச் சேவையை, தன்னலம் பாராது சேவை மனப்பான்மையோடு தமது பிரதேசங்களிலும் முன்னெடுக்க விரும்புகிறவர்களும் எம்மை அணுகலாம்.  

    தொடர்புக்கு mrishansh@gmail.com

    பெரியவர்கள், பிள்ளைகளுக்கு வழங்க வேண்டியது முன்னுதாரணங்களையேயன்றி, அறிவுரைகளை அல்ல. அத்தோடு உலகத்தை நேசத்தோடு ஒன்றிணைக்க நல்ல புத்தகங்களாலும், புத்தக வாசிப்பாளர்களாலும் முடியும், இல்லையா?

    Share
  • குறளின் கதிர்களாய்…(287)

    குறளின் கதிர்களாய்…(287)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…

    வேலன்று வென்றி தருவது மன்னவன்
    கோலதூஉங் கோடா தெனின்.
           –திருக்குறள் –546 (செங்கோன்மை)

    புதுக் கவிதையில்…

    அரசனுக்கு
    வெற்றி தருவது
    பற்றிப் பகைவர் மேலெறியும்
    வேல் அல்ல..
    ஏந்தும் செங்கோலே,
    அதுவும்
    நீதிநெறி வழுவாது
    நல்லாட்சி நல்குவதானால்…!

    குறும்பாவில்…

    வேந்தனுக்கு வெற்றி தருவது
    வயவரை வீழ்த்திடும் வேலல்ல
    வழுவாத செங்கோல்தான்…!

    மரபுக் கவிதையில்…

    எதிரியை வீழ்த்திடக் களத்தினிலே
         எறிந்திடும் கைவேல் தருவதில்லை
    புதியதாய் வெற்றி எதனையுமே
       புவியினை யாண்டிடும் மன்னனுக்கே,
    அதிகமாய் வெற்றியைத் தருவதெல்லாம்
      அரசன் ஏந்திடும் செங்கோலே,
    அதுவும் நெறிமுறை தவறிடாத
      அரசது நல்லதாய் அமைந்தாலே…!

    லிமரைக்கூ..

    வெற்றியைத் தந்திடாது வேலே,
    நல்லாட்சி தந்திடும் அரசனின் செங்கோலே
    வெற்றிதரும் அனைத்திற்கும் மேலே…!

    கிராமிய பாணியில்…

    நல்லாயிருக்கணும் நல்லாயிருக்கணும்
    அரசாட்சி நல்லாயிருக்கணும்,
    நாட்டு மக்களுக்கு நல்லது செய்யிற
    நல்லாட்சியா இருக்கணும்..

    எதிரிமேல சண்டையில
    எறியிற வேலால
    வருவதில்ல ராசாவுக்கு வெற்றி,
    மக்களுக்குத் துன்பமில்லாம
    நல்லாட்சி செய்யிற
    செங்கோலாலத்தான் வருமே
    நெசமான வெற்றி..

    அதால
    நல்லாயிருக்கணும் நல்லாயிருக்கணும்
    அரசாட்சி நல்லாயிருக்கணும்,
    நாட்டு மக்களுக்கு நல்லது செய்யிற
    நல்லாட்சியா இருக்கணும்…!

    Share
  • மாமியார் இருக்கிறார்களா, வேண்டாம் இந்தச் சம்பந்தம்!

    மாமியார் இருக்கிறார்களா, வேண்டாம் இந்தச் சம்பந்தம்!

    நிர்மலா ராகவன்

    (பழகத் தெரிய வேணும் – 2)

    ‘மாமியார்’ என்று சொல்லி, ஒரு துரும்பைத் தூக்கிப்போட்டால்கூட அது துள்ளுமாம். இதனாலோ என்னவோ, மகளின் கல்யாணத்துக்கு முன், ‘மாமியார் இல்லாத இடமாகப் பாருங்கள்!’ என்று பலர் கோரிக்கை விடுக்கிறார்கள்.

    ஏன் மாமியாருக்கும் பெண்களுக்கும் ஒத்துப் போவதில்லை?

    கதை

    வேற்றுமொழிப் பெண்ணை மகன் காதலித்து, உறுதியாக அவளையே மணந்துவிட்டது குறித்து வந்தனாவிற்கு வருத்தம்.

    தன்போல் இல்லாமல், மருமகள் புவனா அதிகம் படித்து, லட்சக்கணக்கில் சம்பாதிப்பது வேறு அவளால் பொறுக்க முடியாது போயிற்று.

    நாள் முழுவதும் அலுவலகத்தில் உத்தியோகம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் புவனாவிடம், “எனக்கு ஒத்தாசையாக வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டு இரேன். எதுக்கு அலையறே?” என்று தினமும் குறை கூறுவாள்.

    ‘இப்படி ஓயாமல் என்னிடம் தப்பு கண்டுபிடிக்கும் மாமியாருடன் நான் வீட்டிலேயே தங்கியிருந்தால், எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்!’ என்று புவனா எண்ணியதில் என்ன வியப்பு?

    மெத்தப் படித்த டவுன் மருமகள் – கிராமப்புறத்தில் அதிகம் படிக்காது வளர்ந்த மாமியார். முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்ளும் தாய், உற்சாகமின்றி வளையவரும் மனைவி. இவர்களது மோதலில் புவனாவின் கணவனுக்குத்தான் தலைவலி.

    புவனா பதின்மவயதுப் பெண்ணாக இருந்தபோது, நான் அவளுக்கு அறிவுரை கூறினேன்: “கல்யாணமானதும், உன் சம்பளத்தை அப்படியே கணவன் கையில் கொடுத்துவிடாதே. இப்படித்தான் சீனப்பெண்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்களாம். சின்ன வீடு, குடி, சூதாட்டம் என்று ஆண்கள் பணத்தை விரயம் செய்துவிடுவார்கள். பெற்றோரோ, மனைவியோ, இன்னொருவர் சம்பாதித்த காசின் அருமை அதைச் சுலபமாகப் பெறுகிறவர்களுக்குத் தெரிவதில்லை”.

    இப்போது, தன் சம்பாத்தியத்தை தன் பெயரில் வங்கியில் சேமித்து வைக்கிறாள். கணவனும் அதைப் பொருட்படுத்துவதில்லை. (முதலிலேயே கண்டிப்பாகச் சொல்லி இருப்பாள்). பொருளாதாரச் சுதந்திரம் அவளுக்குச் சற்று தெம்பை அளிக்கிறது.

    அன்பு என்பது வகுத்தல் கணக்கு இல்லை, பெருக்கல் என்பது இவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. ஒருவர்மீது அன்பு செலுத்தினால், இன்னும் பலர்மேல் அன்பு வைக்க முடியாதா, என்ன!

    மாமியார்களின் புகார்

    “என்னை ‘அம்மா’ என்று அழைக்கிறாள். ஆனால், நான் சொல்வது எதையும் கேட்பதில்லை”.

    சிறுகுழந்தைகளாக இருந்தபோது, நம் பெண்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள். ஆனால், அவர்களுக்கு எத்தனை வயதானாலும், விடாப்பிடியாக ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருந்தால் அவர்களுடைய சுயமுயற்சி அற்றுப்போய்விடும் அபாயம் இருக்கிறதே!

    அவர்களுக்கு நேர்மாறாக வளர்க்கப்பட்டிருக்கும் சுதந்திரமான பெண்கள் பிறர் தம்மைக் கட்டுப்படுத்த முனையும்போது, அவர்களை அலட்சியப்படுத்தி, தம் வழியிலேயேதான் நடப்பார்கள்.

    சுபத்ரா இந்த விதிக்கு விலக்கு.

    கதை

    பெரிய படிப்பு படித்திருந்தும், சுபத்ராவை உத்தியோகம் பார்க்க அனுமதிக்கவில்லை கணவன். உடல்வதையாக அவன் என்ன கொடுமை செய்தபோதிலும் அடங்கியே இருந்தாள்.

    அவன் தந்தையும் அப்படித்தான் இருந்ததாகக் கூறி, மாமியார் அன்பைப் பொழிந்து, அவளைச் சமாதானப்படுத்துவாள்.

    ஒருமுறை, ரத்தக்களறியாகக் கிடந்தவள் பொறுக்கமுடியாது, காவல்துறையினரை வரவழைக்க, விவாகரத்தில் முடிந்தது.

    ஆனால், கதை இத்துடன் முடியவில்லை.

    “அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நீ வந்து பார்த்துக்கொள்,” என்று கணவன் தகவல் அனுப்ப, இன்னொரு ஊரிலிருந்து வந்தாள் சுபத்ரா.

    ‘எப்போது உங்களுடன் இருந்த உறவு முறிந்ததோ, அப்புறம் உங்கள் தாய் மட்டும் எனக்கு என்ன உறவு?’ என்று கேட்கத் தோன்றாத அவளுடைய நல்ல குணம் கணவனுக்குப் புரியாது போனது ஏன்?

    தன் ஒரே மகனது வாழ்க்கையில் இன்னொருத்தி குறுக்கிட்டுவிட்டாளே என்று ஆத்திரப்படுகிறார்கள் சராசரி மாமியார்கள்.

    ஏதோ ஒரு முறை கீழே விழுந்து அடிபட்டுக்கொண்ட அந்த விதவைத்தாய், ‘இனி நடக்கலாம்,’ என்று மருத்துவர்கள் பச்சைக்கொடி காட்டியபின்னரும் படுக்கையைவிட்டு எழுந்திருக்க மறுத்தாள். இடுப்பிலோ, காலிலோ வலி கிடையாது. ஆனால், வேண்டாத மருமகளைத் தண்டிக்க வேறு என்ன வழி?

    அந்த இரு பெண்களிடையே சிக்கிக்கொண்ட ஆணுக்குத்தான் சிரமம். யார் பக்கம் சாய்வது?

    எப்போதோ படித்த துணுக்கு நினைவுக்கு வருகிறது.

    முதலாமவர்: என் பெண்ணை மாப்பிள்ளை சினிமா, பீச் என்று அடிக்கடி அழைத்துப்போகிறார்!

    இரண்டாமவர்: ஆகா! கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது. உங்கள் மகன் எப்படி இருக்கிறான்?

    முதலாமவர்: அதை ஏன் கேட்கிறீர்கள்! என் மருமகள் அடிக்கடி சினிமாவுக்கு அழைத்துப் போங்கள், பீச்சுக்கு அழைத்துப் போங்கள் என்று அவனை நச்சரிக்கிறாள்.

    இரண்டாமவர்: அநியாயமாக இருக்கிறதே!

    ‘மாமியார் இல்லாத இடமாகப் பாருங்கள்!’ என்று கோரிக்கை விடுக்கிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள்.

    உலகின் போக்கு புரிந்து, தாய் தந்தையரைத் தனியே தவிக்க இசையாத மகன்களும் இல்லாமல் இல்லை.

    கதை

    பாலன் உயர்கல்வி பெற்றவன். செழிப்பான எதிர்காலம் இருந்தது. அதனால், பெண்ணைப் பெற்றவர்கள் அவனைத் தன் மருமகனாக்கிக்கொள்ள முயன்றார்கள். ஆனால், அவன் ஒரு விஷயத்தில் கராறாக இருந்தான்: “கல்யாணத்திற்குப்பின், என் பெற்றோர் என்னுடன்தான் இருப்பார்கள்!’

    சிலர் அஞ்சி விலக, ஒரு பெண் துணிந்து அவனை மணந்தாள்.

    மகள் தன் சொற்படி மட்டும் நடக்கவேண்டும் என்பதுபோல் மிரட்டி அவளை வளர்த்திருந்தார் வினுதாவின் தந்தை. தாயும் அவளைச் சரிவர கவனிக்காது, உத்தியோகத்திற்காகவே நெடுநேரத்தைச் செலவழித்திருந்தாள்.

    கல்யாணமான புதிதில், எந்த ஒரு காரியத்திற்கும் தாயின் ஆலோசனையை நாடினாள் வினுதா.

    “என்னிடம் கேட்கக்கூடாதா!” என்று மாமியாருக்குச் சற்று வருத்தம் ஏற்பட்டது.

    மகன் தாயைச் சமாதானப்படுத்தினான்: “இத்தனை வருடமும் அம்மாவிடம்தானே கேட்டுச் செய்திருக்கிறாள்! விட்டுப்பிடி!”

    மாமியார் பொறுமை காத்தாள்.

    புக்ககத்திற்கு வந்த வினுதாவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவளை அவள் போக்கில் விட்ட கணவன்!

    ‘உனக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதைச் செய்!’ என்று அவளுக்குப் பிடித்த கலையில் மீண்டும் ஈடுபட உற்சாகம் அளித்து, இயன்றவகையில் தானும் பங்கெடுத்துக்கொண்டான் பாலன்.

    தான் பெற்ற குழந்தையை வினுதா மிரட்டி வளர்க்க ஆரம்பித்தபோது, நல்லவிதமாக அறிவுரை கூறிய புக்ககத்தினரிடம், “எங்கப்பா இப்படித்தான் என்னை வளர்த்தார்,” என்றாள். திமிராக இல்லை. ‘நான் வேறு எப்படி நடக்கமுடியும்!’ என்ற விரக்தியுடன்.

    தான் பெற்ற பெண்ணைவிட அதிகமாக அவளிடம் அன்பு செலுத்தினாள் மாமியார். அவள் போக்கில் தலையிடாது, மாமனாரும் தன் மகிழ்ச்சியை அவளுடன் பகிர்ந்துகொண்டார்.

    நாளடைவில், கணவன் அளித்த சுதந்திரமும், வீட்டுப் பெரியவர்களின் அன்பும் அவளைச் சிறுகச் சிறுக மாற்றியது. குறைநிறைகளுடன் அவள் இருந்தபடியே ஏற்றதால், அவர்களிடம் மரியாதை பெருகியது.

    சில வருடங்களில், கணவனின் உறவினர்களைத் தனக்கும் வேண்டியவர்களாக ஏற்றாள். உளமார அவர்களை உபசரித்தாள்.

    இந்தக் கதையில், யாரால் அக்குடும்பம் எல்லாருக்கும் நிறைவளிப்பதாக மாறியது?

    ‘கேவலம் பெண்! தனக்குக் கீழ்ப்படிந்து நடந்தால்தான் அவள் நல்ல மனைவி!’ என்றெண்ணாது நடந்த பாலனைத்தான் முதலில் குறிப்பிடவேண்டும். மனைவியின் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டி, அத்துறையில் அவள் மேலும் வளர வழிவகுத்து இருக்கிறான்.

    ‘குழந்தைகளை இப்படி அதிகாரம் செய்து, மிரட்டி வளர்க்கிறாளே!’ என்று வருந்திய தாயைச் சமாதானப்படுத்தி இருக்கிறான்.

    ‘பெண் ஆணுக்கு அடிமை’ என்று, காலத்துக்கு ஒவ்வாத கருத்தைப் பின்பற்றும் ஆண்கள்தாம் மனைவிமாரைச் சாடுகிறார்கள். திருமணம் ஒருவனது நிம்மதியைக் குலைத்துவிடும் என்று முழங்குகிறார்கள்.

    மனைவிக்கும் உணர்வுகள் உண்டு, அவைகளை மதித்து நடந்தால் அவள் நல்ல மனைவியாக நடப்பது மட்டுமின்றி, சிறந்த மருமகளாகவும் பாராட்டப்படுவாள் என்று புரிந்து வைத்திருக்கும் பாலனைக் கேட்டேன்: “உன் மணவாழ்க்கை எப்படி இருக்கிறது?”

    “Fantastic!”

    திருமணமாகி சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் எத்தனை ஆண்கள் இப்படிச் சொல்வார்கள்?

    Share
  • அவள்

    அவள்

    பாஸ்கர் சேஷாத்ரி

    எனக்கு பிடித்த பாட்டு அவளுக்கும் பிடிக்கும்
    கமர்கட் என்றால் உயிர்
    சட்டையில் நான் கடித்துடைத்த சரி பாதி அவளுக்கு எப்போதும் உண்டு
    ரப்பர் பதிவில் கிடைத்த படத்தை அவள் அழிக்கவேயில்லை
    அவளுக்குச் சறுக்கு மரம் பயம் –
    நான் பயம் வரவழைத்துக்கொண்டேன்
    கருப்புப் பலகையில் வரையும் வீட்டில் ஓர் உருவம் அவள் என்று எனக்கு அப்போது தெரியாது
    நான் அவள் சீருடை போட்டுக்கொண்டேன்.
    அவள் அவளாகவே இருநதாள்
    நான் நானாக இல்லை
    ஒரு நாள் எல்லாம் உடைந்தது
    கழிவறையில் ரகசியமாய் நான் விசும்பினது போல பிறகு அழவில்லை .
    எதையும் இனம்காண முடியவில்லை .
    இப்போதும் .

    
    
    Share
  • அமெரிக்க ஜனநாயகம் செத்துவிட்டது

    அமெரிக்க ஜனநாயகம் செத்துவிட்டது

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மனிதன் முடியாட்சியிலிருந்து முன்னேறி குடியாட்சிக்கு வந்துவிட்டான் என்று மகிழ்ந்திருந்த சமயம் உலகின் நாடுகளுள் முன்னணியில் இருக்கும், ஜனநாயகத்திற்கு ஒரு உதாரணமாக விளங்கிய அமெரிக்கா இப்போது ஜனநாயக்தை இப்படிச் சாகடித்துவிட்டதே என்பதை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.  சென்ற சில மாதங்களாக அமெரிக்காவில் நடந்துவந்த நிகழ்ச்சிகள் மனதில் கவலையைத் தோற்றுவித்தாலும் ‘என்ன இருந்தாலும் இது அமெரிக்கா, ஜனநாயகம் எளிதில் இங்கு தோற்றுவிடாது என்று நம்பிக்கொண்டிருந்தேன்.  அந்த நம்பிக்கை பொய்த்துவிட்ட பிறகு இது கனவா, நனவா என்ற எண்ணத்தில் மனது உழல்கிறது.

    இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்திருக்கும் எனக்கு, இந்தியாவில் அரசியல்வாதிகள், பெரிய பதவிகளில் இருப்பவர்கள், பணம் படைத்தவர்கள் ஆகியோர் செய்யும் ஊழல்கள், திருட்டுத்தனங்கள் ஆகியவை பற்றி அறிந்திருந்த எனக்கு, அமெரிக்காவில் தினசரி வாழ்க்கையில் ஊழல்கள் இல்லாதது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும்.  இந்தியாவில் என் தந்தை இறந்த பிறகு என் பெற்றோர்களின் வீட்டை நான் சுவிகரித்துக்கொண்டபோது எங்கள் ஊர் நகராட்சியிடமிருந்து தண்ணீர் வசதி கொடுப்பதற்கான ரசீதை என் பெயருக்கு மாற்றுவதற்கு நகராட்சி அலுவலகத்திற்கு அத்தனை முறை நடந்தேன்.  அந்த அலுவலகம் எங்கள் வீட்டிலிருந்து பத்து வீடுகள் தள்ளி இருந்ததால் 50 முறை சளைக்காமல் நடந்தேன். லஞ்சம் கொடுப்பதில்லை என்று கடைசிவரை உறுதியாக இருந்தேன். மேலும் நகராட்சி கமிஷனர் நேர்மையானவராக இருந்ததால் என்னால் லஞ்சம் கொடுக்காமல் ரசீதை என் பெயருக்கு மாற்ற முடிந்தது. ஆனால் சமீபத்தில் எங்கள் பெற்றோர் வாழ்ந்த வீட்டை எங்கள் பகுதி மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு மிகக் குறைந்த வாடகைக்குக் கொடுத்தேன். ஆனால் அவர்களோ அவர்களின் கீழ் வேலைபார்த்த நிறுவனத்தோடு பகைமை கொண்டு அவர்களையும் எங்களையும் தண்டிக்க வேண்டி எங்கள் வீட்டையே பூட்டி சாவியை வருமான மாவட்ட அதிகாரியின் (RDO) அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டனர்.  நாங்கள் அமெரிக்காவில் இருந்ததால் வீட்டைத் திருமபப் பெற முடியவில்லை என்று நான் நினைத்தேன்.  ஆனால் அது சரியல்ல.  நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பிப் போன பிறகும் வீடு எங்களுக்குக் கிடைக்கும் சாத்தியம் இல்லாமல் இருந்தது.  பல மாதங்களாகப் பூட்டியிருந்த வீட்டின் நிலை பற்றி நான் வெகுவாக வருந்தி, கடைசியாக லஞ்சம் கொடுத்தால்தான் வீட்டைத் திரும்பப் பெற முடியும் என்பதை உணர்ந்து, ஒரு கணிசமான தொகையை லஞ்சமாகக் கொடுத்து  வீட்டைத் திரும்பப் பெற்றேன்.  இன்னும் எத்தனையோ சம்பவங்கள்.  சொல்லிக்கொண்டே போகலாம்.

    இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற இடத்திலிருந்து வந்து அமெரிக்காவில் வாழ ஆரம்பித்தபோது தினசரி வாழ்க்கையில் ஊழலே இல்லாமல் இருந்தபோது மிகவும் நன்றாக இருந்தது. வீடு வாங்கினால், விற்றால் எல்லாம் வெளிப்படை. எல்லாவற்றுக்கும் கணினி உபயோகிப்பதால் எதையும் மறைக்க முடியாது. எல்லா அரசு அலுவலகங்களிலும் இதமாக நடந்துகொள்வார்கள். எந்த இடத்திலும் எவ்வளவு கூட்டம் என்றாலும் வரிசை இருக்கும்; நாம் முன்னாலும் போக முடியாது; நம் இடத்தையும் யாரும் பிடித்துக்கொள்ள மாட்டார்கள்.

    கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தகுதிக்கேற்பத்தான் சேர்க்கை இருக்கும். அப்பா பணக்காரர் என்பதாலோ அல்லது பெரிய பதவி வகிப்பவர் என்பதாலோ ஒரு மாணவனுக்கு சலுகை கிடையாது. அதேபோல் துணைவேந்தர் நியமனம், ஆசிரியர்கள் நியமனம், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகிய எல்லாவற்றிலும் தகுதி இருந்தால்தான் முடியும்.

    அமெரிக்காவில் இம்மாதிரி விஷயங்களில் ஊழல் இல்லையென்றாலும் அரசியலில் வேறு மாதிரி ஊழல் இருப்பதாகச் சொல்வார்கள். பெரிய கம்பெனிகள் தங்களுக்கு ஏதுவாகச் சட்டம் இயற்றிக்கொள்வதற்கு அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் சமயத்தில் பணம் கொடுப்பார்கள். ஆனாலும் அந்தப் பணம் அவர்களுடைய பாக்கெட்டுகளுக்குப் போவதில்லை. தேர்தல் செலவுக்குத்தான் அதை உபயோகிக்க முடியும். பணம் வாங்கிக்கொண்டு தேர்தலில் ஜெயித்து பின் பணம் கொடுத்தவர்களுக்குச் சாதகமாகச் சட்டம் இயற்றினால் அதுவும் ஊழல்தான் என்று சொல்வோரும் உண்டு.

    அமெரிக்காவில் முன்பெல்லாம் விவாகரத்து செய்துகொண்டு இன்னொரு முறை திருமணம் செய்துகொண்டவர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஜெயிக்கும் வாய்ப்பு இல்லையென்பார்கள். ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை ரீகனைத் தவிர வேறு எந்த ஜனாதிபதியும் ஒரு முறைக்கு மேல் திருமணம் செய்துகொண்டதில்லை.  ஆனால் ட்ரம்ப் மூன்று முறை திருமணம் செய்துகொண்டும், பணம் இருப்பதால் எந்தப் பெண்ணையும் தன்னால் எதுவும் செய்ய முடியும் என்று பெருமை பேசிக்கொண்டும், பல பெண்களோடு தகாத உறவு வைத்துக்கொண்டும் இருந்தாலும் அமெரிக்க மக்கள் அவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

    ஜனாதிபதி ஆன பிறகும் அவர் செய்கைகளும் பேச்சுக்களும் ஒரு ஜனாதிபதி பேசுவதுபோல் இல்லை. தான் ஒரு சர்வாதிகாரிபோல் பேசிக்கொண்டும் நடந்துகொண்டும் இருக்கிறார். அப்படியும் அவருடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறையவில்லையாம்.  இன்னும் 40% பேர் அவருக்கு ஆதரவு கொடுக்கிறார்களாம். அந்தத் தைரியத்தில்தான் ட்விட்டரில் தினமும் ஏதாவது எழுதிக்கொண்டிருக்கிறார்.

    2016 ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய அரசு தலையிட்டு ட்ரம்ப் வெற்றிபெற உதவியது என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அது பற்றிய விசாரணை ஆரம்பிக்கும் முன்னால் எஃப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் கோமி என்பவரைத் தனக்குச் சாதகமாக சாட்சி சொல்லச் சொன்னார். அவர் மறுத்ததால் அவரைப் பதவியிலிருந்து நீக்கினார். அமைச்சரவையில் உள்ளவர்களை இஷ்டத்திற்கு நீக்குவது என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார்.

    2020 தேர்தலில் தனக்கு எதிராக, ஒபாமாவுக்கு துணைஜனாதிபதியாக இருந்த பைடன் போட்டியிடலாம் என்றும் தன்னை வென்றும்விடலாம் என்று பயந்த ட்ரம்ப் அவர்மீது எப்படியாவது ஏதாவது குற்றத்தைச் சுமத்திவிடலாம் என்று நினைத்து உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி செலென்ஸ்கியைத் தொலைபேசியில் கூப்பிட்டு உக்ரைன் நாட்டின் ஒரு கம்பெனியில் உயர் பதவியில் இருக்கும் பைடனின் மகனைப் பற்றி விசாரிக்கச் சொன்னார். அப்படி விசாரித்துத் தகவல் கொடுத்தால்தான் உக்ரைனுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த 391 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியைக் கொடுப்பதாகக் கூறினார். ஏற்கனவே அமெரிக்கப் பாராளுமன்றம் இந்த ராணுவ உதவியை உக்ரைனுக்குக் கொடுக்க அனுமதி கொடுத்துள்ளது. இப்படிப் பாராளுமன்றம் அனுமதி கொடுத்த பிறகு ஜனாதிபதி அதை நிறுத்திவைப்பது சட்டப்படி குற்றம். ட்ரம்ப் செலென்ஸ்கியைக் கூப்பிட்டது உள்தகவலாளி (whistle blower) ஒருவர் மூலம் வெளியே தெரிந்துவிட்டது. உடனேயே ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ட்ரம்ப்பின் மேல் விசாரணையை ஆரம்பித்தனர். முதலில் தான் உக்ரை ஜனாதிபதியோடு தொலைபேசியில் பேசவேயில்லை என்று பொய் சொன்னவர் பின்னால் பேசியதாக ஒப்புக்கொண்டாலும் அது தவறே இல்லை என்று வாதாடியதோடு இந்த விசாரணையே தேவையில்லாதது என்று ட்விட்டரில் எழுதிக்கொண்டிருந்தார்.

    கீழவை ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பதவி இறக்க விசாரனையை ஆரம்பித்து ட்ரம்ப் செலென்ஸ்கியோடு தொலைபேசியில் பேசியதை ஆதாரபூர்வமாக நிரூபித்து மேலவை உறுப்பினர்களின் சம்மதித்திற்காக செனட்டிற்கு அனுப்பினர். ஆனால் குடியரசுக் கட்சி செனட்டர்கள் ஒருவர்கூட ட்ரம்ப்பிற்கு எதிராக ஓட்டுப் போட விரும்பவில்லை. ட்ரம்ப்பின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்ச்சில் தான் வெளியிடவிருக்கும் புத்தகத்தில் ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதியோடு பேசியதை ஆதாரத்தோடு விளக்கியிருந்தார். புத்தகம் வெளிவருமுன்பே இந்தத் தகவல் ஒரு பத்திரிக்கைக்குக் கிடைத்துவிட்டது.  இவ்வளவு தூரம் வந்த பிறகு குடியரசுக் கட்சி உறுப்பினர்களால் ட்ரம்ப் செலென்ஸ்கியோடு பேசியதை மறுக்க முடியவில்லை. ஆனாலும் ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்க யாரும் முன்வரவில்லை. ட்ரம்ப் செய்தது குற்றம்தான் என்றாலும் பதவியை விட்டு இறக்கும் அளவுக்குப் பெரிய குற்றம் இல்லை என்று வாதாடுகிறார்கள். 1999-இல் கிளிண்டனைப் பதவியிலிருந்து இறக்கியே தீருவது என்று அவருக்கு எதிராக வாதாடிய கென்னத் ஸ்டார் என்னும் வழக்கறிஞர் இப்போது ட்ரம்ப் சார்பில் வாதாடினார். ட்ரம்ப் செய்தது தவறான செய்கைதானாம், ஆனாலும் பதவியிலிருந்து இறக்கப்படுவதற்குரிய குற்றம் இல்லை என்கிறார்கள் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

    தேர்தலில் தான் வெற்றிபெறுவதற்கு ட்ரம்ப் இன்னொரு நாட்டின் அதிபரின் உதவியைக் கோரியிருக்கிறார். அப்படி உதவி செய்தால்தான் ராணுவ உதவி செய்வதாகவும் அச்சுறுத்தியிருக்கிறார். இவையெல்லாம் குற்றங்கள் இல்லையென்றால் வேறு எவை குற்றம் என்று கருதப்படும்?

    அமெரிக்காவில் கட்சித் தலைவருக்கோ ஜனாதிபதிக்கோ பாராளுமன்ற உறுப்பினர்கள் பயப்படுவதில்லை. எதிர்க் கட்சி எடுக்கும் முடிவுகள் சரியென்று தோன்றினால் தங்கள் கட்சிக்கு எதிராக ஓட்டுப் போடவும் செய்வார்கள்.  இப்போது அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன வந்தது என்று தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அத்தனை பேரும் ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்க ஓட்டுப் போடப் போவதில்லை. ட்ரம்ப்புக்கு எதிராக ஓட்டுப் போட்டால் வரும் நவம்பர் மாதத் தேர்தலில் மக்கள் ஆதரவு இவர்களுக்குக் கிடைக்காதாம், தேர்தலில் வெற்றிபெற மாட்டார்களாம்.

    இதுவரை உலகில் ஜனநாயகத்திற்கே ஒரு மாடலாகத் திகழ்ந்த அமெரிக்காவிலேயே ட்ரம்ப் செய்யும் அநியாயங்களை மக்களின் பிரதிநிதிகள் தட்டிக் கேட்கவில்லையென்றால் அமெரிக்காவில் ஜனநாயகம் செத்துவிட்டதாகத்தான் கூற வேண்டும்.  சாதாரணமாக அமெரிக்கா வெளிநாட்டு விஷயங்களில் தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் அநியாயமாக நடந்துகொண்டாலும் உள்நாட்டு விவகாரங்களில் ஜனநாயக முறைப்படி நடந்துகொள்ளும் என்று பெயர்பெற்றிருந்தது.  ட்ரம்ப் விஷயத்தில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்டதைப் பார்த்தால் அமெரிக்க ஒரு ஜனநாயக நாடு என்று இனி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

    Share
  • இலக்கிய அமுதம் நிகழ்வு 09-02-2020

    இலக்கிய அமுதம் நிகழ்வு 09-02-2020

    தொடர்பிற்கு 

    சுந்தரராஜன் – 9442525191
    அ இராமச்சந்திரன் 2491 8096

    Share
  • மனது மொழிவழி நிரலாக்கம்

    மனது மொழிவழி நிரலாக்கம்

    மனது மொழிவழி நிரலாக்கம் NLP (Neuro Linguistic Programming) 
    எழுதியவர் : மோ.வெங்கட்ராம்வாசி PMP.
    வாசிஸ் கோச்சிங் பார் எக்சலன்ஸ், சென்னை http://www.vc4u.in/ 

    அறிமுகம்

    மனது மொழிவழி நிரலாக்கம் என்பது மனிதரின் எண்ணங்களை, நடத்தைகளை மாற்றி அவர்கள் விரும்பிய விளைவுகளை அவர்களின் வாழ்வில் உண்டாக்குவது.  மனது – மனதின் மற்றும் உடலின் நிலைகள், தகவல்தொடர்பு மற்றும் நடத்தையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தது. மொழிவழி – நமது மனம் மற்றும் உடல் நிலைகள் நம் மொழியிலும் வாய்மொழி அல்லாத தகவல்தொடர்புகளிலும் வெளிப்படுகின்றன. தெளிவற்றதாகவும் அறியப்படாமலும் புதைந்து இருக்கும் உள்மன தகவல்களை அணுக மொழி ஒரு கருவி. வாழ்த்துச்சொல்வதும், வசைபாடுவதும்  மொழியின் மூலம்  தான் நடக்கின்றன. நிரலாக்கம் – இது நம் மனதையும் உடல் நிலைகளையும் மாற்றும் திறனைக் குறிக்கிறது. இது பழக்கவழக்கம், எண்ணங்கள், உணர்வுகள், எதிர்வினைகள், நம்பிக்கைகள் மற்றும் மரபுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மனதில் உள்ள நிரல்களை மொழிவழியே உரையாடி மாற்றலாம். பழக்கவழக்கங்களை மாற்றுவது அவ்வளவு எளிதானதா? உதாரணத்திற்கு புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதை பற்றி ஒரு அறிஞர் சொன்னார் ‘புகை பிடித்தலை நிறுத்துவது எனக்கு மிகவும் எளிதாயிருந்ததால் நான் அதனை நூறு முறை செய்திருக்கிறேன்.’ மனது மொழிவழி நிரலாக்கத்தை  உருவாக்கியர்கள் ரிச்சர்ட் பேண்ட்லெர் & ஜான் கிரிண்டர். அவர்கள் இருவரும் விர்ஜினியா சடிர், மில்டன் எரிக்சன், ஃபிரிட்ஜ் பேர்ல்ஸ் போன்ற மனநல சிகிச்சையாளர்களை மாதிரியாக்கம் செய்து மனது மொழிவழி நிரலாக்கத்தை உருவாக்கினார்கள். மனது மொழிவழி நிரலாக்கத்தில் காட்சிப்படுத்தலும், கற்பனையும் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. மனது மொழிவழி நிரலாக்கம் உள்ளடக்கமற்றது. அதாவது சிகிச்சையாளர் சிக்கலைப் பற்றி விரிவாக அறியாமல் திறம்பட செயல்பட முடியும்.

    மனம் 2 வகைப்படும். வெளிமனம் மற்றும் ஆழ்மனம். வெளிமனம் – திட்டமிடுதல், மனஉறுதி, நுண்சிந்தனை திறன், குறுகிய கால நினைவு, முடிவுகள் போன்றவைகளை செய்கின்றது. ஆழ்மனம் – உணர்ச்சி, படைப்பாற்றல், தானியங்கி உடல்செயல்பாடு (இதயத்துடிப்பு, மூச்சுவிடுதல்), நீண்ட கால நினைவு, பழக்கவழக்கங்கள், உள்ளுணர்வு போன்றவைகளை செய்கின்றது.  5 புலன்களின் வாயிலாக நாம் உணர்பவை நம் மனதில் பதிவாகிறது காட்சியாக, ஒலியாக, உணர்வாக, வாசனையாக மற்றும் சுவையாக. மனது மொழிவழி நிரலாக்கம் மூளையின் பயனர் கையேடு போன்றது. அது உலகை மாற்றாது. அது உலகத்தை நீங்கள் பார்க்கும் பார்வையை மாற்ற உதவுகிறது. நாம் ஒருவருக்குக்  கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பரிசு, தனக்குள்ளேயே உள்ள புதையல்களை அவர்களின் உள்மனதில் கண்டுபிடிக்க உதவுவதாகும்.

    மனது மொழிவழி நிரலாக்கத்தின் பயன்கள்

    மனித மேன்மையை மாதிரியாக்குதல், மனது மாற்றல், கல்வி, பயிற்சி, விற்பனை, தலைமைத்துவம், சந்தைப்படுத்தல், சிகிச்சை (பயம், பழக்க அடிமைத்தனம், மனச்சோர்வு, அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு (PTSD), பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (OCD).

    மனது மொழிவழி நிரலாக்கத்தின் 4 தூண்கள்

    ஒத்துணர்வு – நன்கு தொடர்பு கொள்ளும் நெருக்கமான மற்றும் இணக்கமான உறவு. புலன் உணர்வாற்றல் – 5 புலன்களைப் பயன்படுத்துதல் மற்றும் உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள சூழலுக்கும் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருத்தல். எது வேலை செய்கிறது, எது வேலை செய்யவில்லை என்பது குறித்து விழிப்புடன் இருப்பது முக்கியம். விளைவு சிந்தனை – எதைச் செய்தாலும் நமக்கு ஒரு தெளிவான குறிக்கோள் இருக்க வேண்டும். நெகிழ்வான நடத்தை – ஒரு வேலையை முடிக்கப்பல வழிகளை உருவாக்கும் திறமை உங்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது.

    RAS (ரெட்டிகுலர் ஆக்டிவேசன் சிஸ்டம்)

    நம் மூளையில் சுண்டு விரல் அளவில் உள்ள இந்த பாகம், ஒரு வடிகட்டி போன்று செயல்பட்டு, நமக்குத் தேவையான தகவல்களை மட்டும், தானாகவே, நம் கவனம் தேவைப்படாமல், உள்ளே அனுப்புகிறது. நம் நம்பிக்கைகளின்படி இந்த வடிகட்டுதல் நடக்கிறது. இதற்குத்தான் எண்ணமே வாழ்வு என்றார்கள். என் பெரிய பையனுக்கு நான் விஷால் என்று பெயரிட முடிவு செய்திருந்தபோது, நான் சில வருடங்களாக அலுவலகம் சென்று வந்த சாலையில், பல கடைகளில் இருந்த விஷால் என்ற பெயர் என் கண்ணில் பட்டது. அப்பெயர்களை அதற்கு முன்பு நான் கவனிக்கவில்லை. அப்போது RAS என்னைப் பார்க்கவைத்தது. உங்கள் வாழ்க்கை இலக்கை, உங்கள் RASக்கு தெரிய வையுங்கள்.

    விலகிய நிலை நுட்பம்

    ஒரு நுட்பத்தைப் பயன்படுத்துவோம். நீங்கள் ஒரு வாகனம் ஓட்டுவது மாதிரி கற்பனை செய்யுங்கள். இது தொடர்புடைய நிலை. நீங்கள் ஒரு வாகனம் ஓட்டுவதை நீங்களே பார்ப்பதுபோல் கற்பனை செய்யுங்கள். இது விலகிய நிலை. உங்கள் மனதை வலிக்கச்செய்த  ஒரு சம்பவத்தைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் தொடர்புடைய நிலையில் இருந்து விலகிய நிலைக்குச் செல்லுங்கள். அதாவது அந்த மன வருத்த சூழ்நிலையில் நீங்கள் இருப்பதை, தூரத்திலிருந்து நீங்களே பார்ப்பது போல சில நொடிகள் நினையுங்கள். அந்த மனவருத்த நிகழ்வை  மீண்டும் சிந்தியுங்கள், இப்போது அது தரும் மன அழுத்தம் குறைந்திருப்பதை உணருவீர்கள். இந்த நுட்பம் வேலை செய்வது விலகிய நிலையை எவ்வளவு ஆழ்ந்து கற்பனை செய்தீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். கடைசியில், எது வேலை செய்கிறதோ அது தான் மனது மொழிவழி நிரலாக்கம் .

    குறிப்பு; இந்தக் கட்டுரை, ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் 2019ஆம் ஆண்டுத் தீபாவளி மலரில் வெளிவந்தது

    Share
  • படக்கவிதைப் போட்டி – 244

    படக்கவிதைப் போட்டி – 244

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (09.02.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 243-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 243-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. பிரேம்நாத் திருமலைச்சாமியின் நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 243க்குப் பரிந்துரைத்தவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

    சிறுசெடிப் பெருமரமாகிக் கனியும் களைப்பு நீக்கும் நிழலும் தருவதுபோல் மனிதனும் தன் சிறிய உள்ளத்தை அன்பாலும் நற்பண்பாலும் உயர்த்தினால் குமுகாயத்துக்குப் பயனுடையானாய் – நயனுடையானாய்த் திகழ்வான்.  

    படத்தில் முகங்காட்டும் சிறுசெடி கண்டு எழும் தம் அகத்துணர்வுகளைக் கவிதையாய் வடித்துத்தரக் காத்திருக்கும் பாவலர்களை அன்புபாராட்டி அழைக்கிறேன்.

    *****

    ”மரத்தை அழித்து மாடிகட்டும் மனிதா! வாழ்ந்து மறையப்போகும் சொற்ப காலத்துக்குள் இயற்கையை அழிக்கும் அற்பகுணத்தை விட்டொழிப்பாய்!” என்று இன்னுரை இயம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மரம் நடுவாய்…

    மரங்களை வெட்டி யழித்துவிட்டு
    மாடிகள் கட்டும் மனிதாகேள்,
    இருப்பது சிலநாள் இவ்வுலகில்
    இதற்குள் இயற்கையை அழிப்பதேனோ,
    மரங்களால் தானே மழைவந்தே
    மன்னுயி ரெல்லாம் பிழைத்திருக்கும்,
    கருத்தினி லிதனைக் கொண்டேதான்
    காசினி வாழவை மரம்நட்டே…!

    *****

    ”சிறுதுளி பெருவெள்ளமாய் ஆவதுபோல், வீரியம் கொண்ட விதை விருட்சமாய் விண்ணைத் தொடுவதுபோல் நாமும் தடைகள் உடைத்துச் சென்றிடுவோம்; வாழ்வில் வென்றிடுவோம்” என்று ஊக்கமூட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    விளையும் பயிர்

    சிறுகடுகு என்றாலும் அதன் காரம் குறைவதில்லை
    சிறுமனிதன் என்று எண்ணித் துவளுவதில் ஞாயமில்லை
    தீச்சுடரைக் கானகத்தில் இட்ட கதை அறிவோம்
    தத்தரிகிட நாதம் நமது நெஞ்சினிலே வைப்போம்!

    சின்னத் துளிகள் என்று எண்ணி
    துடைத்தழிக்க நினைப்போர் இருந்தாலும்
    மடைகள் உடைக்கும் வெள்ளமாய் மாறித்
    தடைகள் தாண்டிச் சென்றிடுவோம்!

    காரியம் யாவும் செய்திடும் வகையில்
    வீரியம் கொண்ட விதையாய் ஆகி
    விண்ணைத் தொடும் விருட்சமாய்ப் படர
    மண்ணைப் பிளந்து முளைத்திடுவோம்!

    *****

    சின்னஞ்சிறு செடியை வைத்துச் சீரிய சிந்தனைகளைக் கூரிய வார்த்தைகளில் கவிதைகளாய் வடித்துத் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    விதையாய் விழுந்தாலும்
    விண்ணை நோக்கி
    மண்ணைப் பிளந்து
    முயன்றால் தான்
    முளைத்திட முடியும்!
    முயலாமையால்
    பயனேதும் இல்லை!
    வானளாவ உயர்ந்திட
    முயற்சி ஒன்று போதுமே!
    விதையாய் நெஞ்சில்
    விழுந்த யாவும்
    திருவினையாய் மாறிடுமே!

    விதையாய் விழுந்தாலும்
    பழுதாகிப் போகாமல்
    மண்ணைப் பிளந்து
    முளைத்தெழ
    மண்ணில் ஈரம் வேண்டும்!
    எழும் எண்ணமும்
    கண்ட கனவும்
    மெய்ப்படுமே
    நெஞ்சில் வீரமும்
    ஈரமும் சேர்ந்திருந்தாலே!

    விதையாய் விழுந்து
    முளைத்துச் செடியாய்
    மரமாய் வளர்ந்திட
    நீர் வேண்டும்
    அன்பெனும் விதையை
    நெஞ்சில் விதைத்து
    நீர்விட்டு
    மனிதநேயமேனும்
    மரத்தை வளர்த்திடுவோம்!

    நிழல் தரும் மேகமாய்
    இதயங்கள் கொண்டாடும் வானமாய்
    எதிரியையும் அரவணைத்து
    எல்லைகள் கடந்து வாழ்ந்திருப்போம்!
    என்றென்றும் புன்னகையுடன்
    ஒன்றே குலமென்று
    இவ்வுலகுக்கு உணர்த்தி நிற்போம்!
    வளமுடன் வாழ்ந்திடவே
    நெஞ்சில் விதையாய்
    அன்பை மட்டும் விதைத்திடவே!

    ”விதையாய் விழுந்தாலும் அது பழுதாகாது பக்குவமாய் முளைத்திட ஈரம் வேண்டும்; அதுபோல் மாந்தர்களும் நெஞ்சில் அன்பை விதைத்து வீரமும் ஈரமும் தமதிரு குணங்களாய்க் கொண்டு முயன்றால் வானம் வசப்படும்; கனவு மெய்ப்படும்!” என்று மானுட வெற்றியின் இரகசியத்தைக் கூறிடும் இக்கவிதையின் படைப்பாளி திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்து மகிழ்கின்றேன்.

     

     

    Share
  • தஞ்சைப் பெருவுடையான்

    தஞ்சைப் பெருவுடையான்

    -விவேக்பாரதி

    தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு நன்னாள்…

    உருவுடை யானை உருவமி லானை உளத்தமரத்
    தருவுடை யானைத் தமிழுடை யானைத் தனதுடல்மேற்
    றிருவுடை யானைத் திரள்சடை யானைத் திசையளந்த
    பெருவுடை யானைப் பிடிப்பவர்க் கில்லை பிறப்பினியே!!

     

     

    Share
  • ஒளிவிளக்கு அணைந்தது!

    ஒளிவிளக்கு அணைந்தது!

    முனைவர் ஔவை நடராசன்
     
    இந்தி ஆசிரியராக வாழ்கையைத் தொடங்கி, இடர்கள் பல கடந்து, இலக்கியத் தாரகையாக மின்னித் திகழ்ந்த சேலம் ருக்மணி மறைந்ததைக் கேட்டுப் பெரிதும் வருந்தினேன் .

    ருக்மணி அவர்களின் வாழ்க்கை அமைதி அடைந்தது என்பது ஒரு வகையில் ஆறுதல் தான். அவர் வாழ்வு தியாக வாழ்வு .
    “கடல் மடை திறந்தது போல்” இலக்கிய உரைகளை – சமயப் பொழிவுகளை ஆற்றிய அவர் திறம் வியப்புக்குரியது .அண்ணா என்று வாய் மணக்க அழைத்த இலக்கியத் திலகம் ருக்மணிக்கு எந்நாளும் ஓர் ஏக்கம் மனத்தில் படர்ந்தபடியே இருந்தது .”கற்ற கல்வியைப் பெற்று மகிழும் பேற்றினைத் தமிழகம் சரியாக வழங்குவதில்லை ” என்று அடிக்கடி கூறுவார்கள் .

    காலை மலர்ந்த மலர் மாலையில் உதிர்ந்து சருகாகிறது. தன்னைப் பறிக்கவில்லையே என்று அது தளர்வதில்லை என்று நான் சொல்வதைக் கேட்டுப் புன்னைகைத்தார்கள். அது பொருத்தமான விடையென்று அவருக்குப் புலப்படாமலேயே போயிற்று .

    சேலம் தந்த செம்மனத் திலகத்துக்குக் கம்பர் கழகங்கள் பெரிதும் கடன்பட்டவை .

    தமது மேடையில் நின்று முழங்கிய நித்திலத்தை என்று காண்போம் என்று ஏங்குவது இயல்பு தான் .

     
    ==========================================
     
    சேலம் ருக்மணி உரை
     

     

     

    Share