Blog

  • இன்று ஒரு முகம் கண்டேன்!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     barathan

     

    இன்று ஒரு முகம் கண்டேன்
    கண்டபொழுதை மறக்க முடியமா?
    இருவரும் சந்தித்த இடத்தை
    மறக்க இயலுமா?

    எனக்குத் தகுதி யானவள் அவளே;
    எமது சந்திப்பை
    இந்த உலகம் அறிய வேண்டுமென
    விழைபவன் நான்.
    வேறோர் நாளெனின்  நினைவில் கொள்ளேன்.
    தெரியாமல் போகும்.
    இன்றென் கனவில் தோன்றுவாள்!
    வீழ்வேன்  காதலில்! ஆம் நான்
    வீழ்வேன் காதலில்! 

    மீண்டும்  என்னை அழைக்கிறாள்
    மறுபடி!
    இதுபோல் வேதனை இதுவரை
    எனக்கில்லை!

    தனித்துக் கிடந்தேன்!
    சிலவற்றை நான் இழந்தேன்!
    மற்ற பெண்டிரை  நானினி நோக்கேன்!
    உன்னைப் போல் இல்லை
    அப்பெண்டிர்;

    மீண்டும் என்னை விளிக்கிறாள்
    மறுபடி!
    வீழ்ந்தேன் காதலில்ஆம் நான்
    வீழ்ந்தேன் காதலில்

     

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 6

    க. பாலசுப்பிரமணியன்

    தன்னம்பிக்கையில் நாம்  புலியா பூனையா?

    வாழ்ந்து-பார்க்கலாமே-1-1-1-1

    உலகின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தத்துவ மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் மூனிச் என்ற நகரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொது அவருடைய பள்ளி ஆசிரியர் அவருடைய ரிப்போர்ட்டில் ”  இவன் எதையும் சாதிக்க மாட்டான்” என்ற பொருள் படும் வகையில் He will never amount to anything”என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஐன்ஸ்டீன் அவர்களின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஆர்வமும் உழைப்பும் அவரை உலக அளவிலே ஒரு மேதையாக முன்னிருத்தியது.

    ஹென்றி போர்ட் அவர்கள் மோட்டார் தொழிற்சாலைக்கான ஒரு வரைபடத்தோடு ஒரு வங்கி அதிகாரியை தொழில் முதலீட்டிற்காகக் கடன் கேட்டு அணுகியபோது “காரா? அதெல்லாம் வேடிக்கைக்கு நல்லதாக இருக்கும். குதிரை சவாரியை யாரால் நிறுத்த முடியும்?’ என்று பொருள்படப் பேசினார் அந்த வங்கி அதிகாரி ஆனால் ஹென்றி போர்டின் தன்னம்பிக்கையும் , வெற்றி பெற வேண்டும் என்ற சாகச உந்துதலும் அவரை வளர்ச்சியின் படியில் வளர்த்துக்கொண்டு சென்றன.

    ஒருவரின் வளர்ச்சிக்கு நம்பிக்கை மிகவும் அத்தியாவசியமானது. “என்னால் முடியும்” என்ற நம்பிக்கையே வெற்றியின் பாதையில் ஒருவரைக் கொண்டு நிறுத்திவிடும். ஆகவே ஒரு குழந்தையின் வளர்ச்சியில் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பது மிகவும் தேவையானது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகளை வீட்டிலும் பள்ளிகளிலும் வளர்ப்பது அவசியம். தன்னம்பிக்கை வளருவதற்கு பணமோ அல்லது வளமான சூழ்நிலைகளோ தேவையில்லை. அது மனதில் உள்ளே விதைக்கப்பட்டு வளர்க்கப்படும் ஒரு உன்னதமான உணர்வு.

    “இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது” என்று முட்டுக்கட்டை போட்டு ஆர்வங்களைத் தடை செய்யும் பொழுது அவைகள் ஆரம்ப நிலையிலேயே துவண்டு கீழே விழுகின்றன. “சாதிப்பதற்கு நல்ல வசதி இருந்தால் தான் முடியும்” என்ற ஒரு கருத்தை இளைஞர்களின் மனதில் வளர்ப்பது அவர்களின் நம்பிக்கையை வித்திலேயே நசுக்கிவிடுவதாக மாறிவிடும். நோபல் பரிசு பெற்ற சர் சி வீ இராமன், இந்திய துணைக்கண்டத்தின் ஏவுகணை மன்னராக விளங்கிய விஞ்ஞானி திரு அப்துல் கலாம் போன்ற பல பேர்கள் மிகச் சாதாரணமான சூழ்நிலைகளில் வாழ்ந்து, உழைத்து முன்னேற்றத்தைக் கண்டவர்கள்தான்.

    மற்றவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட உன்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பது மிகவும் முக்கியமானது என்று மனநல வல்லுநர்கள் விளக்குகின்றார். “ஒரு மனிதனின் உருவாக்கம் அவன் சிந்தனைகளால் மட்டுமே. நீ என்ன நினைக்கின்றாயோ அவ்வாறே ஆகின்றாய் எனக் கூறினார்”  அண்ணல் மகாத்மா காந்தி. “பாதுகாப்பற்ற உன் எண்ணங்களை விட உனக்கு ஒரு மிகப் பெரிய எதிரி இருக்கமுடியாது”  என்று அறிவுரை கூறினார் புத்தர். நம்முடைய எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. எண்ணங்களின் வலிமையே செயல்களின் வலிமைக்கு வித்தாகின்றது. நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்ற எண்ணம் மனதில் உருவாகி விட்டால் நம்மை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளுவோம்  எந்த ஒரு மனிதன் தன்னைத் தானே மதிக்கவில்லையோ அவனை நிச்சயமாக மற்றவர்கள் மதிக்க  மாட்டார்கள்.

    உயிரினங்களில் புலியும் பூனையும் ஒரே இனத்தைச் சார்ந்தவைதான். ஆனால் ஒன்றோ வீரத்திற்குச் சான்று., மற்றொன்று பயத்திற்கு அடையாளமாக உலவுகின்றது. இவைகளின் எண்ணங்கள் சிந்தனைகள் காலம்காலமாக அவற்றின் உயிரணுக்களில் உறைந்து அவர்களுடய வாழ்க்கை முறையை நிச்சயப்படுத்தி விட்டன.

    வாழ்க்கையில் சாதனை படைத்த பலரும் எளிய ஆரம்பத்தில் இருந்துதான் வந்திருக்கின்றனர். அவர்களின் வெற்றிகள் அவர்களின் தன்னம்பிக்கைக்கும், சாதிக்க வேண்டும் என்ற ஒரு விடாமுயற்சிக்கும் கிடைத்த பரிசு. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? மற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் தவிர, அவர்களுடய வாழ்க்கையை நாமும் வாழ முயற்சிக்கக்கூடாது. முயன்றால் நமது வாழ்க்கை தொலைந்து விடும்.

    1. நாம் நாமாக இருக்க முயற்சிக்க வேண்டும்.
    2. நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
    3. நாம் திறமையும் தகுதியும் உள்ளவர்கள் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்.
    4. நம்முடைய முயற்சிகளைத் தொடர்ந்து செய்தல் வேண்டும்.
    5. தோல்விகளைக் கண்டு தயங்காமல் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும்.
    6. காலத்தால் பழுக்கும் பழத்தைக் கல்லால் அடித்துப் பழுக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்து பொறுமையும் விவேகத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    சற்றே துவண்டுவிட்டீர்களா? பரவாயில்லை.! சில நிமிடங்கள் “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’ என்ற பாட்டை கொஞ்சம் முணுமுத்துக் கொண்டிருங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்துப் பாருங்கள். எ”உங்கள் எண்ணங்களுக்கு சக்தி அதிகம். அவைகளே உங்களுக்கு ஆற்றலைத் தருகின்றன. உங்கள் எண்ணங்களின் மூலமாக நீங்கள் உங்களுக்குத் தேவையான உலகைப் படைக்கலாம் அல்லது அதை அழிக்கலாம். உங்கள் உலகம் உங்கள் கைகளில் ” என்று பல மேதைகள் எடுத்துச் சொல்லி இருக்கின்றனர். ழுந்து வேகமாகச் செயல்பட வேண்டுமென்று தோன்றுகிறதா…?

    அதுதாங்க வாழ்க்கை.. வாழ்ந்து பார்க்கலாமே .

    (தொடருவோம்)..

    Share
  • ஆன்மீகப் பொக்கிஷம் !

     
    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா 
    ஆடைதனைக் குறைத்தார்
    ஆணவத்தைக் களைந்தெறிந்தார்
    நாடிநின்றார் நம்ரமணர்
    நல்வழியைக் காண்பதற்கு
    ஓடிவந்தார் அண்ணாமலை
    ஒடுக்கிநின்றார் மனமதனை
    வாடிவிடா அவரிருந்தார்
    வழங்கிநின்றார் அருளையெலாம் !

    தன்னையே அறிவதற்குத்
    தவமிருந்தார் ரமணரிஷி
    தனிமைதனை இனிமையாய்
    தவமுனிவர் ஏற்றுநின்றார்
    பொய்மையாம் உடலுக்குள்
    மெய்மையைத் தேடிநின்றார்
    மெய்மையை உணர்ந்தவவர்
    மேதினியில் ரிஷியானார் !

    அத்வைத தத்துவத்தை
    அனைவருக்கும் காட்டிநின்றார்
    ஆடம்பரம் அனைத்தும்
    அவர்க்கு வெறுப்பாச்சு
    ஆசைதனைக் குறைத்த
    ஆன்மீகப் பொக்கிஷமாய்
    அகிலமே போற்றும்வண்ணம்
    ஆகிவிட்டார் ரமணரிஷி !

    சொத்துக்கள் சேர்க்கவில்லை
    சுகதுக்கம் நோக்கவில்லை
    சத்தான உணவேதும்
    தானவரும் உண்ணவில்லை
    மாடிமனை ஆடம்பரம்
    மனமதிலும் இருக்கவில்லை
    மாசில்லா வழிதேடி
    மாமுனிவர் தவமிருந்தார் !

    Share
  • மயங்கொலிச் சொற்கள்

    -ஆ. செந்தில் குமார்

    அனையின் அணைப்பு பிள்ளைக்கு இனிமை!
    கனலின் அண்மை பஞ்சிற்கு அன்மை!

    ஊன் கலந்த ஊண் தவிர்த்தல் நலம்!
    கனி உணவே அதனினும் நலமென கணிப்பாய்!

    தண்மதி தண்னென தன்னொளி பாய்ச்சினாலும்
    கனல் கணை தைத்தால் கனைக்கும் பரி!

    காணத்திற்காக கானம் அழித்தால்
    கானலை நாம் காணலாம் என உணர்வாய்!

    சேணையும் சேனையும் கொண்டு வென்றாலும்
    கோன் இல்லா அரசு கோண் ஆகிப்போகும்!

    பொருள் :-
    அனை – அன்னை
    அணை – தழுவுதல்
    கனல் – நெருப்பு
    அண்மை – அருகில்
    அன்மை – தீமை
    ஊன் – மாமிசம்
    ஊண் – உணவு
    கனி – பழம்
    கணி – கணிப்பு
    தண் – குளிர்ந்த
    தன் – தன்னுடைய
    கணை – அம்பு
    கனை – கனைத்தல்
    பரி – குதிரை.
    காணம் – பொன்
    கானம் – காடு
    கானல் – பாலை நிலம்
    காணல் – பார்த்தல்
    சேணை – அறிவு
    சேனை – படை
    கோன் – அரசன்
    கோண் – கோணல்

    குறிப்பு :-
    °°°°°°°°°°

    மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில்கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

    நன்றி : விக்கிபீடியா.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180201 - Yadava 17 Vasudev-lr. Krishna kills kamsa and releases Ugrasena (Viveka-or discrimination) from MahaMoha (the great delusion). Then he meets his parents Devaki and Vasudeva. Vasudeva extolls Krishna as the Supreme one.
    180201 – Yadava 17 Vasudev-lr. Krishna kills kamsa and releases Ugrasena (Viveka-or discrimination) from MahaMoha (the great delusion). Then he meets his parents Devaki and Vasudeva. Vasudeva extolls Krishna as the Supreme one.

    ”உக்கிர சேனனவர், அக்கிரமக் கம்சனின்
    வக்கிர புத்தி விவேகமது -சிக்கிட,
    தந்தைதாய் மீட்பு, தகப்பனறிந் தார்கண்ணன்,
    விந்தை புரிகின்ற விஷ்ணு’’….!

    பேருண்மை, மாயப் பெரும்பொய் பிரகிருதி
    வேரொன்றும் இல்லா விருக்ஷமவர் -யாரென்று
    கேட்டால் விளங்காது! ,கேசவ் வரைந்தவரைக்
    கோட்டில் பிடித்துக் கொடுப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180131 -Yadavabhyudayam 16 — Akrura gets darshan of Krishna. It appeared that Narada was singing the glory of Krishna through sAmagana and the cows, seemed like the vedas, smelling his feet. Akrura extolls Krishna. The cowherds including Nanda leave for Mathura on Kamsa’s orders. The gopikas were in a state of grief of separation.
    180131 -Yadavabhyudayam 16 — Akrura gets darshan of Krishna. It appeared that Narada was singing the glory of Krishna through sAmagana and the cows, seemed like the vedas, smelling his feet. Akrura extolls Krishna. The cowherds including Nanda leave for Mathura on Kamsa’s orders. The gopikas were in a state of grief of separation.

     

    ”அக்ரூரர் கண்ணனை ஆராதித் தல்கண்டு

    உக்கிர(நாராயண பக்தியில்) நாரதர் உற்சாகம்: -வக்கிரன்

    கம்ஸனின் ஆணயால் கண்ணன் மதுராவுக்கு

    இம்ஸையில் கோபியர் இங்கு’’….கிரேசி மோகன்….!

    ”உலகை அளந்தோன் உபாசனை கண்டு
    கலக முனிக்கு களிப்பு: -புளுகனால்(பொய்யன் கம்ஸனால்)
    ’’போகாதே போகாதே போக்கிரிப் பையாபார்!
    தேகாபி மானம் தொலைப்பு!’’….கிரேசி மோகன்….!

    கண்ணன் இருந்தாலும் , சென்றாலும் கோபியர் ‘’தேகாபிமானம்’’ தொலைத்தனர்….!

    Share
  • பகவானின் ‘’உபதேச சாரம்’’….!(பாடல்கள் வெண்பாவாக்கம்….)….!

     

    ’’ஈன்று படைக்கும், இறையே பழம்தரும்,
    தோன்றும்உன் செய்கை தொணதொணப்பின் -சான்றிதழே!-
    சும்மா இருந்து சுகிப்பாய் பழத்தினை
    உம்மால் முடிந்தவரை உண்’’….(1)

    ’’கர்ம்மாய்க்(அட கர்மமே!) காயும்(அழுகிடும்) கனியின் பலனது
    கர்மமாம்(கருமம் -செயல்) கடலதில் கொண்டுதள்ளும் -தர்மமாம்
    ஆன்மீக வேகமோ ஆழியில்(கடலில்) மூழ்கிடும்:
    நான்மீகம் கண்டுணர்ந்து நம்பு’’….(2)

    ”சொந்த வெறுப்பு, சுவாதீனம், அற்றசெய்கை
    தந்த பலாபழத்தை தெய்வபதம் -தந்துவிட
    வேரில் பழுத்து விடுதலை தந்திடும்
    மாறா மனத்தில்தூய் மை’’….(3)

     
    ’’சாத்திரங்கள் சொல்யாகம்,தோத்திரங்கள் ஈசர்தீ
    நேத்திரர் , மற்றும் நெடுந்திருமால் -கோத்திரங்கள்
    செய்யுமயன்,ஆழ்நிலை சூஷ்ஷமங்கள்,யாவுமால்
    மெய்,வாய் மனங்கள்,மேன் மை’’….(4)….!

    ’’உலகுக்கு செய்யும் உபகாரம் ஈசர்
    பலகையில் வைத்திடு பூவை : -அலகிலாதோன்
    எட்டுருவ பூதமாம்,ஏகாக்ரம் கொண்டால்
    தொட்டுவிட லாமவரைத் தேர்’’….(5)….!

    மவுன தியானம் மனத்தால் செய்து
    கவனம் பிசகாது கொள்வாய் -அவன்விருப்பம்,
    சத்தமிட்டு சொல்லும் சகஸ்ரநாமம் அல்லவே
    மெத்தையில் எண்ணுவதே மேல்….(6)…..!

    உடைப்பின்றி கொட்டும் எண்ணையின் தாரை
    தடையின்றிக் கொட்டிடும் தண்ணீர் -படைப்பவர்
    ஆழ்நிலை மோனத்தில் அவ்வா(று) ஆழ்பவரின்
    ஊழ்வினை ,ஆழியுள்(கடலில்) உப்பு….(7)….கிரேசி மோகன்….!

    நானீசர் அல்லது நானென் சொரூபம்
    பூணும் தியானம் பரிசுத்தம்: -தோணுகின்ற
    பேதம் இரெண்டுக்கும் பார்ப்ப(து) அறியாமை
    வேதங்கள் நான்கும் வழி….(8)….!

    எண்ணமே இல்லாத ஏகாந்த மோனத்தில்
    சின்னவன் மன்னனாய் சித்திலே : -பின்னம்
    உயர்ந்திடும் பக்தியில் உன்னதம் காணும்
    அயர்ந்திடா ஆன்மன் அது’’….(9)….!

    மூலத்தில் மூழ்கு மனமே, இதயமாம்
    கோலத்தின் மத்தியில் குந்துவாய்: -தூலத்தின்
    சந்தேகம் அற்றதோர் சாங்கியம்(யோகம்), பக்தியது
    உன்தேகம் உற்ற உணர்வு’’….(10)…..!

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 22

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவனுக்கு வாயில்மறுத்த தலைவியின் உள்ளவுறுதி தோழிக்குப் பிடித்திருந்தாலும் அவனையன்றித் தலைவிக்குப் பற்றுக்கோடு யாது எனும் எண்ணமும் உள்ளத்தின் உள்ளே ஊடாடவே செய்தது. எனினும் தலைவன்பால் தலைவி கொண்டிருந்த ஊடலும் கோபமும் நியாயமானதாய்  இருந்தபடியால் தலைவியின் கருத்துக்கு எதிர்மொழி ஏதும் பகரவில்லை அவள்.

    தலைவியின் மறுமொழியை அறிந்துகொண்டு வீட்டுவாயிலுக்கு வந்த தோழி தலைவனிடம், “ஐய! வேற்றுப்புலம் செல்லாது அண்மையிலிருந்தும் நீர் தலைவிக்குத் தலையளி செய்யாதது அவள் உள்ளத்தை உடைத்துவிட்டது. அவள் அன்பைத் தாழ்போட்டு அடைத்துவிட்டது. ஆகவே அவள் உம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள்” என்று கூறிவிட்டு, தலைவனின் முகம்நோக்கத் தயங்கியவளாய் விருட்டென்று உள்ளே சென்றுவிட்டாள்.

    ஒருகணம் தலைவன் விக்கித்து நின்றான். மறுகணம், மற்றவரை வாயில்களாய்த் தூதனுப்பினால் பலனில்லை என்று உணர்ந்தவனாய்த் தானே தலைவியின் அனுமதிக்குக் காத்திராது அகத்தினுள்ளே நுழைந்துவிட்டான்.

    எதிரே தளர்நடை போட்டவண்ணம் வந்துகொண்டிருந்த பூங்கண் புதல்வனைக் கண்டான். அவனை ஆரத் தழுவித் தோளில் சார்த்திக்கொண்டு பள்ளியறைக்குள் நுழைந்தவன் குழந்தையை அணைத்தவண்ணம் அமளியில் அமளியேதும் செய்யாது படுத்துவிட்டான்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் தம்மெதிரே நடந்துமுடிந்துவிட்ட இக்காட்சிகளைக் கண்டு திகைத்து, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நின்றனர் தோழியும் தலைவியும்!

    சுதாரித்துக்கொண்ட தலைவி பள்ளியுள் புக்காள். அங்கே பள்ளிகொண்டிருந்த தலைவனின் காதில் விழுமாறு, ”உம்மை நான் வெறுக்கவும் இல்லை; அதேசமயம் உம்மோடு சேர்ந்துவாழ விரும்பவும் இல்லை. நீர் உம் விருப்பத்துக்குரிய புதிய காதலியான பரத்தையிடமே சிரத்தையோடு இரும்; எம்மை மறந்துவிட்டு இங்கிருந்து அகன்று செல்லும்” என்றாள் கோபம் கொப்பளிக்க.

    பரத்தைவயிற் பிரிந்துசென்று, தன் மனைக்கு மீண்டுவந்த தலைவன் ஒருவனைத் தலைவியொருத்தி கடிந்துரைத்து, ”நின் அடாத செய்கையை நான் மறக்ககில்லேன்” என்று குறிப்பிடும் பாடல் நற்றிணையிலும் இடம்பெற்றிருக்கின்றது.

    கழுநீர்  மேய்ந்த  கருந்தாள்  எருமை
    பழனத்
     தாமரைப்  பனிமலர்  முணைஇத்
    தண்டுசேர்
     மள்ளரின்  இயலி  அயலது
    குன்றுசேர்
     வெண்மணல்  துஞ்சும்  ஊர
    வெய்யை
     போல  முயங்குதி  முனையெழத்
    தெவ்வர்த்
     தேய்த்த  செவ்வேல்  வயவன்
    மலிபுனல்
     வாயில்  இருப்பை  அன்னஎன்
    ஒலிபல்
     கூந்தல்  நலம்பெறப்  புனைந்த
    முகையவிழ்
     கோதை  வாட்டிய
    பகைவன்
     மன்யான்  மறந்தமை  கலனே.  (நற்: 260 – பரணர்)

    ”தாமரை மலரை வெறுத்துக் கழுநீர் மலரை மேய்ந்த buffaloஎருமை, மணற்குன்றிலே சென்று தங்கும்” என்பது இப்பாடலில் இடம்பெற்றுள்ள உள்ளுறை உவமம் ஆகும். கற்பிற் சிறந்தவளும் உயர்ந்தவளுமான தலைவியைவிட்டுப் பரத்தையை நாடிச்சென்ற தலைவனின் செயலை அது மறைபொருளாய்ச் சுட்டுகின்றது.

    தலைவியின் கோபத்தையும் கொடுமொழிகளையும் கேட்ட தலைவன் அவளிடம் சினங்கொள்ளவில்லை. அவளை ஆழ்ந்துநோக்கியபடி,

    ”என் தலைவி, என்னைத் தழுவுவதில் என்னினும் விருப்பமுடையவள்; விருப்பந்தரும் வனப்புடையவள்; மென்முலைகளையும் நீண்ட கூந்தலையும் உடையவள்; calfபக்கத்தில் மேயச்சென்ற நல்ல சுரப்பையுடைய பசுவின் நடுங்கும் தலையையுடைய சிறுகன்று அப்பசுவைக் காணவேண்டும் எனும் விருப்பொடு இருப்பதுபோல் என்மீது கொண்ட விருப்பத்தை வெளிப்படுத்தும் சிறக்கணித்த பார்வையுடையவள்; அவளை நான் எங்ஙனம் மறந்து வாழ்வேன்?!” என்று அன்று தன் பாங்கனிடம் தலைவிகுறித்துக் கூறியதை நினைவுகூர்ந்து அதனைத் தலைவியிடம் இப்போது மொழிந்தான் அன்பொழுக!

    கவவுக் கடுங்குரையள்  காமர்  வனப்பினள்
    குவவுமென்
    முலையள் கொடிக்கூந்  தலளே
    யாங்குமறந்
     தமைகோ  யானே  ஞாங்கர்க்
    கடுஞ்சுரை  நல்லா  னடுங்குதலைக்  குழவி
    தாய்காண்
     விருப்பி  னன்ன
    சாஅய்நோக்
     கினளே  மாஅ  யோளே.  (குறுந்: 132 – சிறைக்குடியாந்தையார்)

    தலைவனின் கனிந்த காதல்மொழிகளைக் கேட்டதும் தலைவியின் கோபமும் ஊடலும் பொங்கும் பாலிலிட்ட நீராய் அடங்கிப்போயின. புலந்த காதல் உள்ளங்கள் செம்புலப் பெயல்நீராய் கலந்தன மீண்டும்!

    வள்ளுவர் வரைந்த,

    ”பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
    பெண்மை உடைக்கும் படை”
     (1258) எனும் காதற் கவிதை இச்சூழலுக்கு நச்சென்று பொருந்துகின்றது.

    தலைவனின் பணிமொழிகளில் உளம்நெகிழ்ந்த தலைவி,

    “அணிற் பல்லையொத்த முள்ளையுடைய தாதுமுதிர்ந்த முள்ளிச் செடியையும், நீலமணியின் நிறத்தையொத்தHygrophila கரிய நீருடைய கடற்கரையையும் உடைய தலைவனே! இப்பிறப்பு நீங்கப்பெற்று மறுபிறப்பு உண்டாயினும் நீயே என் கணவன் ஆகுக! நின் நெஞ்சுகலந்தொழுகும் யானே அப்போதும் நின்னுடைய மனத்துக்குகந்த காதலி ஆகுக!” என்றாள்.

    அணிற்பல் லன்ன  கொங்குமுதிர்  முண்டகத்து
    மணிக்கே
     ழன்ன  மாநீர்ச்  சேர்ப்ப
    இம்மை  மாறி  மறுமை  யாயினும்
    நீயா
     கியரென்  கணவனை
    யானா
     கியர்நின்  னெஞ்சுநேர்  பவளே.  (குறுந்: 49 – அம்மூவனார்)

    இக்குறுந்தொகைத் தலைவியைப் போலவே,

    ”கண்களுக்கு மை எழுதும்போது இமையகத்துப் புகுந்த எழுதுகோலைக் காணாத கண்போல, கொண்கனது குற்றத்தினையும் அவனைக் கண்டவிடத்துக் காணேனே” என்று நயந்தும், ”தலைவனைக் காண்கையில் அவன் தவறுகள் தெரிவதில்லை; அவனைக் காணாதபோதோ அவன் தவறுகளின்றி வேறெதுவும் தெரிவதில்லை” என்று வியந்தும் பேசும் தலைவியொருத்தியை வாழ்வியல் அறிஞர் வள்ளுவரும் நமக்கு அறியத்தருகின்றார்.

    எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
     பழிகாணேன் கண்ட விடத்து.  (1288)

    காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
    காணேன்
    தவறல்ல வை  (1289)

    இவ்விடத்து, சங்கப் பெண்களின் இல்லறவாழ்வின் தன்மைகுறித்துச் சற்றே சிந்திப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    திருமணமான சங்கப் பெண்டிர் தம் கணவன்மார்களின் தகாத புறத்தொழுக்கத்தைக் கண்டித்தாலும், அதற்காக அவர்களைப் பெரிதாகத் தண்டித்ததாகவோ, அவர்களைவிட்டுப் பிரிந்துறைந்ததாகவோ செய்திகள் நமக்குக் கிட்டவில்லை.

    தலைவியரின் அளவிறந்த பொறையுடைமைக்குக் காரணம் யாது?

    சங்கச் சமூகமானது, நாடோடியாய்த் திரிந்த வேட்டைச் சமூகம் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, அடுத்தடுத்த வளர்ச்சிநிலைகளை எட்டி, நிரந்தரக் குடிகளாய் வாழத்தொடங்கிய நிலவுடைமைச் சமூகமாக மெல்ல மெல்ல மாறிவிட்டிருந்தது. அச்சமூகத்தில் ஆண்கள் புறத்தே சென்று பொருளீட்டுவதையும், பெண்கள் அகத்திலிருந்தபடியே குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதையும், குடும்பத்தைப் பேணுவதையும் தம் கடன்களாகக் கொள்ளத் தலைப்பட்டனர். அச்சூழலில் பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்தரம் இல்லாமல் போய்விட்டிருந்தது. எனவே அவர்கள் உணவு உடை உறையுள் முதலிய தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குக் கூடத் தம் கணவரையே சார்ந்துவாழவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. ஆக, ஆணாதிக்கச் சூழல் அங்கு இயல்பாகவே உருவாகியிருந்தது.

    எனவே மனைவியரோடு இல்லறம் பேணிய கணவன்மார்கள் திடீரென்று அவர்களைத் துறந்து சென்றாலோ, அவர்களைப் பிரிந்து பரத்தையரோடு திரிந்துகொண்டிருந்தாலோ அப்பெண்களின்பாடு இரங்கத்தக்கதாகவே இருந்திருக்க வேண்டும். அத்தகு சங்கடமான தருணங்களில் தலைவியரின் பிறந்தகத்திலிருந்து அவர்களுக்குப் பொருளுதவியோ, உளவியல்சார் ஆதரவோ கிட்டினவா என்பதையும் சங்கப்பாடல்கள் வாயிலாய் அறிந்துகொள்ள இயலவில்லை.

    அனைத்துக்கும் மேலாகக் கணவனைப் பிரிந்து வாழும் மனைவியர்க்கு,

    அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
    துறவோர்க்
    கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர்
    கோடலும்” ஆகிய இல்லறக் கடன்களைச் செய்யும் வாய்ப்பும் சமுதாயத்தால் மறுக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறியும்போது கணவனின்றித் தனித்து வாழும் பெண்களின் அவலநிலை நமக்கு அங்கை நெல்லியெனத் துல்லியமாய்ப் புலப்படுகின்றது.

    இத்துணைச் சமூகச் சிக்கல்களை எதிர்கொள்ள அஞ்சியதாலோ என்னவோ, தலைவர்களின் போற்றா ஒழுக்கம் தலைவியர்க்குச் சீற்றத்தையும் செற்றத்தையும் தந்தாலும், அவர்கள் அதனை (வேறுவழியின்றி) பொறுத்துக்கொண்டு, தலைவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் என்று எண்ணவேண்டியிருக்கின்றது.

    [தொடரும்]

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180131 -Yadavabhyudayam 15. — after he heard of how Krishna vanquished all the asuras he had sent to kill Krishna, Kamsa planned his next move. He called Akrura and asked him to bring Krishna along with the cowherds to Mathura and somehow find a way to kill Krishna. Krishna was Chakri (one who held the Sudarshana) and Kamsa was like a moth attacking a fire. Desika says that in his desperation Kamsa was raising a sword to kill himself.
    180131 -Yadavabhyudayam 15. — after he heard of how Krishna vanquished all the asuras he had sent to kill Krishna, Kamsa planned his next move. He called Akrura and asked him to bring Krishna along with the cowherds to Mathura and somehow find a way to kill Krishna. Krishna was Chakri (one who held the Sudarshana) and Kamsa was like a moth attacking a fire. Desika says that in his desperation Kamsa was raising a sword to kill himself.

    ‘சுகந்த துளசி சிலிர்க்க, வலிமை
    மிகுந்த இருதோளில் பூணும் -முகுந்தன்
    நிதர்ஸனம் என்று நடப்போர் வழியை
    சுதர்ஸனம் காக்கும் சுழன்று”….கிரேசி மோகன்….!

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 4

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ் 

    மெட்ரீனா கதவருகில் நின்று சைமனைப் பார்த்து, “அவன் நல்லவனாக இருந்தால் நிர்வாணமாக இருக்க மாட்டான். அவன் மீது ஒரு சட்டை கூட இல்லை. அவன் நல்லவனானால், நீ அவனை, எங்கே, எப்படிக் கண்டாயென்று சொல்லியிருப்பாய்” என்றாள். அதற்கு சைமன் “நானும் அதைச் சொல்வதற்குப் பல முறை முயற்சித்தேன், நீ இடங்கொடுக்கவில்லை” என்றான்.

    “நான் ஆலயத்தின் அருகே வந்த போது, இவன் நிர்வாணமாகக் குளிரில் உறைந்திருந்தான். இந்தக் கடுமையான குளிரில் எப்படி நிர்வாணமாக இருக்க முடியும்? இறைவன்தான் என்னை அங்கு அனுப்பியிருக்க முடியம். இல்லையென்றால் அவன் மரணமடைந்திருப்பான். நான் என்ன செய்வது? அவனுக்கு என்ன நடந்ததென்று நமக்கு எப்படித் தெரியும்? ஆகையால் நான் அவனுக்கு என் கோட்டைக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தேன். மெடீனா, கோபப்படாதே. நாம் எல்லோரும் ஒரு நாள் மரணமடைவோம்”.

    மெடீனா கோபத்தில் பதில் சொல்ல நினைத்தவள் அந்த மனிதனைப் பார்த்து அமைதியானாள். அவன் கண்களை மூடி, கைகளை மடியில் வைத்துத் தலை குனிந்து பெஞ்சின் ஓரத்தில் அமர்ந்திருந்தான். அவன் புருவங்கள் சுருங்கி, வேதனையோடு இருப்பதைக் கண்டாள்.

    மெட்ரீனா அமைதியானாள். சைமன் அவளை நோக்கி “ மெட்ரீனா, உன்னிடம் இறைவனின் அன்பு இல்லையா?” என்று கேட்டான். அதைக் கேட்ட போது அவள் அந்த மனிதனைத் திரும்பவும் பார்த்தாள். அவள் மனம் திடீரெனெ இளகியது. கதவு அருகிலிருந்து விலகி அடுக்களைக்குச் சென்று குடிப்பதற்கு போதை கொடுக்காத திராவகத்தையும், மீதியிருந்த ரொட்டியையும் மேசை மீது கொண்டு வைத்துவிட்டு அவனைச் சாப்பிடச் சொன்னாள். சைமன் உணவைப் பகிர்ந்து கொடுத்தான். மெட்ரீனா மேசையின் மூலையில் அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரெனெ அவள் மனம் இரக்கத்தால் நிறைந்து அவன்மேல் அன்பு கொண்டாள். உடனே அவன் முகம் பிரகாசமடைந்தது. அவன் கண்களை உயர்த்தி மெட்ரீனாவைப் பார்த்துப் புன்னகைத்தான். புருவங்களில் காணப்பட்ட சுருக்கங்களும், வேதனையும் மறைந்து விட்டன.

    அவர்கள் உண்டு முடித்த பின், மெட்ரீனா எல்லாவற்றையும், சுத்தம் செய்து விட்டு, அந்த மனிதனிடம் “நீ எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டாள்..

    “நான் இந்தப் பகுதியிலுள்ளவனல்ல” என்றான்
    “அப்படியானால், எப்படிக் கோவிலருகில் வந்தாய்?”
    “என்னால் சொல்ல முடியாது”

    “யாராவது உன்னிடமிருந்து திருடினார்களா?”

    “இல்லை, கடவுள் என்னைத் தண்டித்தார்”

    “நீ அங்கே நிர்வாணமாக இருந்தாயா?”

    “ஆம், நிர்வாணமாகவும், குளிரில் உறைந்தும் இருந்தேன். சைமன் என்னைப் பார்த்து இரக்கம் கொண்டு அவன் கோட்டை எடுத்து எனக்கு அணிவித்து இங்கே கூட்டிக் கொண்டு வந்தான். நீ என் மேல் இரக்கம் கொண்டு உண்ண உணவும், குடிக்க நீரும் கொடுத்தாய். இறைவன் உனக்கு கைம்மாறு கொடுப்பாராக” என்றான்
    மெட்ரீனா, தான் தைத்துக் கொண்டிருந்த சைமனின் பழைய கோட்டையும், ஒரு பழைய கால் சட்டையையும் அவனுக்குக் கொடுத்து இரவு தூங்குவதற்கும் இடம் கொடுத்தாள். இரவு முழுவதும் மெட்ரீனாவால் தூங்க முடியவில்லை. வீட்டிலிருந்த கடைசி ரொட்டியும் முடிந்துவிட்டது. மறுநாள் உணவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சைமனும் தூங்கவில்லை. அவள், “சைமன், ஏன் அந்த மனிதன் நாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை? பார்த்தால் நல்லவனாகத்தான் தோன்றுகிறான்” என்றாள்.

    “ஏதோ காரணங்கள் இருக்கலாம்”.
    “சைமன், நாம் எல்லோருக்கும் கொடுக்கிறோம், நமக்கு ஏன் ஒருவரும் கொடுக்கவில்லை?”

    சைமனுக்குப் பதில் தெரியவில்லை. “சரி, நாம் இப்போது தூங்குவோம்” என்று கூறித் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

    தொடரும்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 106

    உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி

    முனைவர் சுபாஷிணி

    மனித உடல் ஆச்சரியங்கள் பல நிறைந்த ஒரு அதிசயப் பொருள். தாயின் கருமுட்டையில் தந்தையின் விந்துக் கலப்பு நிகழ்ந்து கருத்தரிக்கும் போது ஒரு குழந்தையின் உருவாக்கம் தொடங்குகின்றது. சிறு அணுவாக உருவாகி படிப்படியாக நரம்புமண்டல வளர்ச்சி, இருதய வளர்ச்சி, உடல் உருப்புக்கள் வளர்ச்சி எனப்படிப்படியாக வளர்ந்து 10 மாதங்கள் முடிந்து முழு குழந்தையாக தாயின் கருப்பையில் இருந்து குழந்தை வெளிவருவது நிகழ்கின்றது.

    தொல்பழங்காலத்தில் பெண்ணின் வயிறு பெரிதாகி பின்னர் ஒரு மனிதக்குழந்தைப் பிறப்பதைப் பார்த்த மனிதர்கள் தம்மைப் போன்ற இன்னொரு விலங்கினை உருவாக்கும் சக்தி படைத்த பெண்ணையே தெய்வமாகச் சிலை வடித்து வழிபடும் வழக்கத்தை உருவாக்கித் தொடர்ந்தனர். உலகின் பல சமுதாயங்களில் மிகப்பழமையான தாய் தெய்வச் சிலைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் காலம் ஆராயப்பட்டு, அச்சிலைகள் உருவான பகுதிகளில் மக்கள் கொண்டிருந்த பண்பாட்டுக் கூறிகளை ஆராயும் ஆய்வுகள் பல நடந்திருக்கின்றன. இத்தகைய ஆய்வுகள் மனிதன் ஒரு குழந்தை பிறப்பை அவதானித்த தன்மைகளைக் கண்டறியும் வழிகளை ஆய்வுலகத்திற்கு வழங்கியிருக்கின்றன.

    1
    இன்று நமக்குக் கிடைக்கின்ற மிகப் பழமையான தாய் தெய்வ சிற்பங்கள் எனும் போது இன்றைய ஆஸ்திரியாவின் வில்லண்டோர்ஃப் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கிட்டிய Venus of Willendorf என்ற தாய் தெய்வத்தைக் குறிப்பிடலாம். இதன் காலம் கி.மு. 28,000லிருந்து 25,000 எனக்கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல இன்றைய துருக்கியின் காத்தாலோயுக் (Çatalhöyük ) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Çatalhöyük எனப்படும் தாய் தெய்வம் கி.மு. 5500லிருந்து 6000 எனக் கண்டறியப்பட்டுள்ளது, இதேபோல சிரியா, ஜெர்மனி, ஐக்கிய அரபு நாடுகள், பண்டைய பெர்சியா போன்ற நாடுகளிலும் இத்தகைய தெய்வ வடிவங்கள் பண்டைய மக்களின் வழிபாட்டில் இருந்தமையைக் காண்கின்றோம்.

    2
    மனித உடலை ஆராயும் முயற்சி பன்னெடுங்காலமாக அறிவியல் ஆய்வு நோக்கம் கொண்ட பலரால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. பல்வேறு காலகட்டங்களில் உடல்கூறு ஆய்வுகள் பல்வேறு சமூகங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று மேற்கத்திய ஆய்வுமுறைகள் உலகாளவிய அளவில் உடற்கூறு ஆய்வில் துரித வளர்ச்சியை அறிமுகப் படுத்தி செயல்படுத்தியிருப்பதால் மருத்துவத்துறை பன்மடங்கு வேகத்தில் வளர்ந்திருக்கும் சூழலை நாம் காண்கின்றோம். தமிழகச் சூழலில் உடல்கூறு ஆய்வுகள் என்பன இன்று நமக்கு அறிமுகமான புதியதொரு ஆய்வுத்துறை அல்ல. மாறாகச் சித்த வைத்திய முறையில் எப்படி மூலிகைகளை ஆராய்ந்து நோய்களுக்குத் தீர்வைக்கண்டு பிடித்தனரோ அதே போல உடலைக் கூறு செய்து பாகங்களை ஆராய்ந்து சோதனை மேற்கொண்டிருந்தனர் நம் மூதாதையர் என்பதனை நாம் மறந்து விடலாகாது. இத்தகைய ஆய்வுகளைச் செய்தோரை நமது சமூகத்தில் சித்தர்கள் என அடையாளப்படுத்தினர். இவர்கள் ஆய்ந்தறியும் விஞ்ஞானிகள் எனக் காண்பதை விடுத்து புனிதத்துவத்தை ஏற்றி வைத்தமையால் இவர்களது ஆய்வுகளை பொது மக்கள் பெருவாரியாகக் கற்றுப் பலனடைய வாய்ப்பு கிட்டாமல் போனது ஒரு துரதிட்டமே.

    3
    4 வார வளர்ச்சியில் குழந்தை

    ஆனால் ஐரோப்பாவிலோ உடற்கூறு ஆய்வில் ஈடுபட்டோர் அவற்றை அறிவியலாகவும் அழகியலாகவும் காணும் முயற்சியைப் புகுத்தியமை உடற்கூறுகளை அறிந்து கொள்ளும் துறையில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டு இதனை மருத்துவ அறிவியல் துறையாக வளர்த்துள்ளது.

    மேற்கத்திய உலகில் உடற்கூறு ஆய்வுகள் எனக் குறிப்பிடும் போது நமக்கு நன்கறிந்த லியோனார்டோ டாவின்சியின் பங்களிப்புக்கள் மிகச் சிறப்பானவை. மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு இறந்த மனிதர்களின் உடல்களைப் பெற்று, அவ்வுடல்களை கூறு செய்து, உடலின் பாகங்களைத் தனித்தனியாக எடுத்து அவற்றை ஓவியமாக வரைந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஓவியங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவருக்கு அடுத்தார் போல மேலும் பலர் தொடர்ந்தனர் என்றாலும், டாவின்சி இத்தகைய மனித உடற்கூறு பற்றிய ஓவியங்களை வழங்கி அறிவியலைக் கலைப்படப்பாக்கியதில் முன்னோடியாகத் திகழ்கின்றார் என்று குறிப்பிட வேண்டியது மிக அவசியமாகும்.

    இன்று மருத்துவ உலகம் துரித வளர்ச்சி கண்டுள்ளது. ஒவ்வொரு வினாடியும் ஏராளமான புதிய நோய்கள் உருவாகிக்கொண்டேயிருக்கின்ற அதே வேளையில் ஒவ்வொரு விநாடியும் உலகின் பல மூலைகளில் நோய்களுக்கான நிவாரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருவதும் நிகழ்கின்றது.

    4

    மென்மையான தோல் போர்த்திய மனித உடலின் மேல் அழகிய ஆடைகளும் அணிகலன்களும் போட்டு அழகு பார்க்கின்றோம். அந்த தோலுக்குக் கீழ் உள்ள பாகங்களையும் அவை செயற்படும் முறைகளையும் பொதுவாக நாம் எண்ணிப் பார்ப்பது கிடையாது. இந்த பொது நிலை இருப்பதால் நமது சிந்தனையில் மனித உடல் என்பது ஒரு புனிதப் பொருளாகவோ, அல்லது காமப் பொருளாகவோ மட்டுமே பார்க்கும் மனம் வாய்த்து விடுகின்றது. அந்தக் கோணத்திலிருந்து விடுபட்டு தோலுக்குக் கீழே மறைந்திருக்கும் தசைகள், உடல் உறுப்புகள், நரம்புகள், இரத்த நாளங்கள், எலும்புகள், எனக் காணத்தொடங்கும் போது நமக்குக் கிடைக்கும் பார்வை ஒரு மாற்றுப் பார்வையாகவே அமையும். இந்தப் பார்வையை வழங்கும் வகையில் உலகின் சில நாடுகளில் மனித உடலைக் கூறு செய்து பாடம் செய்து அவற்றை ஆய்வில் ஆர்வம் உள்ளோருக்குக் கண்காட்சியாக ஏற்படுத்தியிருக்கின்றார்கள். ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், வட அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இத்தகைய உடற்கூறு கண்காட்சிக் கூடங்கள் அமைந்திருக்கின்றன. அத்தகைய ஒரு கண்காட்சிக் கூடம் தான் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் நகரில் இருக்கும் ”உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம்”.

    5

    ”மகிழ்ச்சியளிக்கும் உடலின் பாகங்கள்” என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்திருக்கின்றனர். இதனை வடிவமைத்தவர்கள் டாக்டர்.குந்தர் வோன் ஹாகென்ஸ் மற்றும் டாக்டர்.அஞெலினா வேலி ஆகிய இருவருமாகும்.

    இந்த அருங்காட்சியகத்தில் 200க்கும் குறையாத மனித உடலின் பாகங்கள் முழுமை யாகவும் பகுதிகளாகவும் எனக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்கனவாக, இங்குள்ள தாயின் கருப்பையில் வளர்ந்த 4 வாரம் தொடங்கி 8 வாரம் வரையிலான குழந்தைகளின் பாடம் செய்யப்பட்ட உடல்கள், கருகொண்ட தாயின் உடலில் குழந்தை முழுமையாக இருக்கும் வகையிலான ஒரு உடல், புகைபிடிப்பதனால் சேதப்பட்ட நுரையீரல், ரத்த நாளங்கள் பாயும் மனித முகம், தலை, மூளை, கால்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம். இங்குள்ள அனைத்து மாடல்களுமே மனிதர்களது உடலுறுப்புக்களேயாகும். இறப்பதற்கு முன்னர் தங்கள் உடலை மருத்துவ சோதனைக்காக அளித்த மனிதர்களின் உடல்களே இங்குப் பாடம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    6

    இந்த அருங்காட்சியகத்திற்கு வருபவர்களுக்கு மனித உடலைப் பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கின்றன. உடல் உறுப்புக்களைக் கண்டு அஞ்சுவோரும், உடலை பாவப்பொருளாகவும் புனிதப் பொருளாகவும் நினைப்போரும் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்தால் உடலைப்பற்றி கொண்டிருக்கும் சிந்தனையில், தெளிவு தரும் வகையிலான அறிவியல் பூர்வமான தெளிவினை நிச்சயம் பெற முடியும்.

    எத்தனையோ அதிசயங்களை நம் மனம் ஆசைப்பட்டுத் தேடி ஓடுகிறது. நாமே ஒரு அதிசயம் தான், நம் உடலும் ஒரு அதிசயம் தான், நம் உடலில் இயங்கும் உறுப்புக்களின் செயற்பாடுகளும் அதிசயம் தான் எனப் புரிந்து கொண்டால் பொய்யான அதிசயங்களில் நம் மனம் நாட்டம் கொள்ளாது.

    போலித்தனத்தை துடைத்தொழிப்பதற்கும், மூட நம்பிக்கைகளை மனதிலிருந்து அகற்றுவதற்கும் அறிவியல் அறிவு ஒன்று தான் ஒரே வழி. அத்தகைய அறிவியல் பார்வையை வழங்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு ஜெர்மனிக்கு வருகை தருவோர் அனைவரும் வந்து பார்த்துச் செல்ல வேண்டும். இந்த அருங்காட்சியகத்தைப் பற்றிய முழு விபரங்களையும் https://bodyworlds.com/ என்ற வலைப்பக்கத்தில் பெறலாம்.

    Share
  • கொண்டாடப்படும் தினங்கள்!

    -பெருவை பார்த்தசாரதி

    Time-Management-Tips

    நாட்களிலே  நல்லதுகெட்டதெது  என்பதொரு கேள்வியே.?
    ……….நாட்களைத்துமே கொண்டாட வேண்டிய  நற்தினங்களே.!
    நாட்காட்டியில்  நாளொன்றின்  தாளைநாம்  கிழிக்கும்போது..
    ……….நம்வாழ்வில்  நாளொன்று  கழிவதைநாம்  அறியவேண்டும்.!
    ஆட்டம்காணா  வாழ்வமைய  ஆன்றோர்  வகுத்துவைத்த..
    ……….இருங்கலையதைக்  கற்றுத்தேற  அரும்பாடு படவேண்டும்.!
    கோட்பாடுடன்  குறிக்கோளையும்  நாம்  கொண்டுவிட்டால்..
    ……….கோள்கள் கொடுக்கும்  கொடுமைகூட  விலகிவழிவிடும்.!

    வளைந்தாலும் நெளிந்தாலும் வீழ்ந்தாலும் தாழ்ந்தாலும்..
    ……….நாளைசெய்வோம்  எனவொரு  எண்ணம் எழவேண்டாம்.!
    இளைஞனே  நற்செயலைத்  திட்டமிடு! அச்செயலில்..
    ……….இறங்கியபின்  நாட்டமுடன்  நல்கியதை முடிக்கப்பழகு.!
    முளைக்கும் விதைக்கு மண்ணைப்பிளக்கும் வீரியமுண்டு..
    ……….மூளையில் உருவாகும் சிந்தனைக்குமொரு சக்தியுமுண்டு.!
    களைகளும் தடைகளும் தடங்கலின்றி தழைத்துவருமாம்..
    ……….தாங்கியதை  எதிர்ப்பின்  எல்லாதினமும் கொண்டாட்டமே.!

    ஒருதினத்தில்  இல்லையெனில்  மறுதினத்தில்  வந்துவிடும்..
    ……….ஓர்விழாவும்  பண்டிகையும்!…உலகமுழுதுமிது இயற்கை.!
    உருவமிலா  நிலையிலவன்  உலகத்தில்  நிறைந்திருப்பான்..
    ……….உருகும்  பக்தர்கள்  இறைஞ்சவெங்கும்  இரைந்திருப்பான்.!
    அருட்கொடை  யோனவன்  ஆசிபெற  அண்டத்திலுள்ள..
    ……….ஆலயமுழுதும்  அரங்கேறும்  அன்றாடம்  கொண்டாட்டம்.!
    இருளகற்றி  வாழ்வில்  வெளிச்சம்பெறும்  வரம்வேண்ட..
    ……….இறைவனைக்  கொண்டாடும்  தினத்திற்கே  பஞ்சமில்லை.!

    கொண்டாட  வேண்டியநல்  வாழ்வையும்  இழந்துவிட்டு..
    ……….திண்டாடும்  மாந்தர்களும்  இவ்வுலகில்  இருக்கிறார்கள்.!
    தண்டச்சோறு  தின்றுவிட்டுத்  திண்ணைக்கதை பேசியே..
    ……….தினமொரு  நாளைவீணே  கழித்தவர்கள்  இருக்கிறார்கள்.!
    துண்டறிக்கை  விடும்சினிமா  அரசியலின்  பின்னலைந்து..
    ……….தொலைத்ததைத்  திரும்பப்பெற  நினைப்பவரும் உண்டு.!
    கண்டறிந்து  கேட்டறிந்து  கற்றறிவுபெறு  தற்கிவர்கள்- நம்..
    ……….தண்டமிழிழைக் கொண்டாட  வேண்டும்  தினமுமதை.!

    ******

    நன்றி:: தினமணி  கவிதைமணி

    நன்றி:: கூகிள் இமேஜ்

     

     

    Share
  • புகழ்ந்து கவி பாடுவோம்! 

     எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

    கண்மூடிக் காதல்கொள்ளும்
    -காதலினை விட்டிடுவோம்
    மண்ணிலுள்ளார் மனங்கவரும்
    -காதலினைச் செய்திடுவோம்
    பெண்மனமும் ஆண்மனமும்
    -பேதமின்றிக் கலக்கும்படி
    மண்மீது காதலினை
    -மலர்ந்துவிடச் செய்திடுவோம்!

    அரும்பாகி   மொட்டாகி
    -மலராகும் காதலினை
    விரும்பாதர் இவ்வுலகில்
    -இல்லையென்றே இயம்பிடலாம்
    நரம்பெல்லாம் முறுக்கேற்றும்
    -நற்காதல் என்றென்றும்
    நம்வாழ்வின் அடித்தளமாய்
    -நமையியக்கும் சக்தியன்றோ!

    காதலிப்பார் வாழ்வெல்லாம்
    -காணுவது பேரின்பம்
    காதலனும் காதலியும்
    -கனவினிலும் காதலிப்பார்
    சோதியெனக் காதலங்கே
    -சுடர்விட்டு  நிற்குமங்கே
    சொர்க்கமதைக் காதலர்கள்
    -சொந்தமாய் ஆக்கிடுவார்!

    காலமெலாம் காதலுடன்
    -கைகோத்துப் பாருங்கள்
    காணுகின்ற அத்தனையும்
    -கற்கண்டாய் ஆகிவிடும்
    ஓடியோடி உழைத்தாலும்
    -உள்ளமதில் காதலின்றேல்
    உங்கள்வாழ்வு உலகினிலே
    -உவப்புதனை ஈந்திடுமா!

    காதலர்கள் தினமதிலே
    -காதலினைப் போற்றிடுவோம்!
    காலமெலாம் காதலது
    -வாழ்கவென வாழ்த்திடுவோம்
    சாதிமத பேதமின்றி
    -காதலர்கள் தினமதனைப்
    பூதலத்தில் பொலிகவென்று
    -புகழ்ந்து கவிபாடிடுவோம்!

                

    Share
  • எங்கள் நீலகிரி

     

    images

    தடதடத்த சாலைகள்
    லொலொடத்த வண்டிகள்
    பதைபதைக்கும் நெஞ்சம்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    சோசோவென பெய்யும் மழை
    படபடவென இடிக்கும் பேரிடிகள்
    பளிச்பளிச்சென வெட்டும் மின்னல்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    மளமளவென வளர்ந்த காடு
    சுளீர்சுளீரென வீசும் காற்று
    சடசடவென முறியும் கிளைகள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    சரசரவென தாவும் மான்கள்
    துருதுருவென இருக்கும் குரங்கு
    நறநறவென குதறும் ஓநாய்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    வதவதவென்ற காட்டுப் பன்றி
    கரகரவென கத்தும் வரையாடு
    ஊஊவென ஊளைடும் நரிகள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    மதமதவென பருத்த பெரும் யானை
    கொழுகொழுத்த வன்புலிகள்
    முசுமுசுவென முடி கொண்ட கரடி
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    திடுதிடுவென வந்தழிக்கும் சிறுத்தை
    கருகருத்த முரட்டு காட்டெருமை
    சிலிர்சிலிர்த்து நிற்கின்ற முள்ளம் பன்றி
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    தைதையென ஆடும் மயில்கள்
    திருதிருவென விழிக்கும் ஆந்தை
    கீச்கீச்செனெ கத்தும் குருவி
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    மினுக்மினுக்கென்ற மின்மினி
    வீச்வீச்சென கத்தும் பூச்சிகள்
    கொர்கொர்ரென கத்தும் தவளைகள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    கிடுகிடுக்கும் பெரும் பள்ளம்
    வழுவழுக்கும் மலைச்சரிவு
    கொழகொழக்கும் சேறு
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    தழதழவென்ற பசும் தேயிலை
    கமகமக்கும் வாசனை பொருட்கள்
    சொரசொரத்த பட்டையுள உயர் மரங்கள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    குளுகுளுவென்றிருக்கும் உதகை
    சிலுசிலுவென தழுவும் தென்றல்
    சுடசுடவே கிடைக்கும் நெய்வர்க்கி
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    சலசலவென ஓடும் நீரோடை
    குபுகுபுவென வெள்ளம் பாயும் நதிகள்
    ஓஓவென இரையும் பேரருவிகள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    நடுநடுங்கும் குளிர்
    தகிதகிக்கும் உள்ளம்
    கிறுகிறுக்கும் எதிர்காலம்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!!

    – ஆ.செந்தில் குமார்.

    நன்றி : கூகிள் இமேஜ்

    Share
  • சுற்றுச்சூழல் தூய்மை

    -ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி

    சுத்துப்புறம் காத்திடுவோம்
    சொத்துசுகம் போல…
    பெத்துப்போட்டபுள்ள குட்டி
    சுத்தமாக வாழ…
    ஒத்துமையா ஊருக்கூரு
    ஒண்ணாக்கூடுவோங்க…
    வெத்துக்குப்பை கூளங்களை
    விரட்டிடுவோம் வாங்க…!

    ஆத்துமேடு குளத்து மேடு
    அசிங்கமாச்சுனா
    பாய்ஞ்சுவரும் நல்லதண்ணி
    பாய்சனாச்சுனா
    உடம்புக்குள்ளே நோவு நொடி
    தேடி வருமுங்க!
    நாடி நரம்பு கெட்டுப்போயி
    பலமிழக்குமுங்க!

    பிளாஸ்டிக்கால பையெடுத்து
    பார்சல் வாங்குறோம்
    பண்டமெல்லாம் விசமாகிப்
    பாழடிக்கிறோம்
    துணியால பையெடுத்தா
    துயரமில்லீங்க!
    நச்சுதரும் பிளாஸ்டிக்கினி
    நமக்கு எதுக்குங்க??

    ஓசோனில் ஓட்டை வந்தா
    உலகந்தாங்குமா?
    காசு பணம் மட்டுமிங்கே
    சுகத்தக் கொடுக்குமா?
    ஒருநிமிசம் யோசிச்சா
    பலவிசயம் புரியுமுங்க!
    ஒவ்வொருத்தர் மனசு வச்சா
    பசுமை வந்து சேருமுங்க!

    திட்டம் போடும் அரசாங்கம்
    மட்டுமிதுக்குக் காரணமா?
    சட்டுபுட்டுனு சர்க்கார
    திட்டீட்டாத் தீந்திடுமா?
    ஒட்டுமொத்தமா எல்லோருக்கும்
    பங்கு இருக்குதுங்க!
    பட்டுத்தொலையும் முன்னால
    பொங்கி எழுவமுங்க!!
     

     

     

    Share