-மேகலா இராமமூர்த்தி

தலைவனுக்கு வாயில்மறுத்த தலைவியின் உள்ளவுறுதி தோழிக்குப் பிடித்திருந்தாலும் அவனையன்றித் தலைவிக்குப் பற்றுக்கோடு யாது எனும் எண்ணமும் உள்ளத்தின் உள்ளே ஊடாடவே செய்தது. எனினும் தலைவன்பால் தலைவி கொண்டிருந்த ஊடலும் கோபமும் நியாயமானதாய்  இருந்தபடியால் தலைவியின் கருத்துக்கு எதிர்மொழி ஏதும் பகரவில்லை அவள்.

தலைவியின் மறுமொழியை அறிந்துகொண்டு வீட்டுவாயிலுக்கு வந்த தோழி தலைவனிடம், “ஐய! வேற்றுப்புலம் செல்லாது அண்மையிலிருந்தும் நீர் தலைவிக்குத் தலையளி செய்யாதது அவள் உள்ளத்தை உடைத்துவிட்டது. அவள் அன்பைத் தாழ்போட்டு அடைத்துவிட்டது. ஆகவே அவள் உம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள்” என்று கூறிவிட்டு, தலைவனின் முகம்நோக்கத் தயங்கியவளாய் விருட்டென்று உள்ளே சென்றுவிட்டாள்.

ஒருகணம் தலைவன் விக்கித்து நின்றான். மறுகணம், மற்றவரை வாயில்களாய்த் தூதனுப்பினால் பலனில்லை என்று உணர்ந்தவனாய்த் தானே தலைவியின் அனுமதிக்குக் காத்திராது அகத்தினுள்ளே நுழைந்துவிட்டான்.

எதிரே தளர்நடை போட்டவண்ணம் வந்துகொண்டிருந்த பூங்கண் புதல்வனைக் கண்டான். அவனை ஆரத் தழுவித் தோளில் சார்த்திக்கொண்டு பள்ளியறைக்குள் நுழைந்தவன் குழந்தையை அணைத்தவண்ணம் அமளியில் அமளியேதும் செய்யாது படுத்துவிட்டான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தம்மெதிரே நடந்துமுடிந்துவிட்ட இக்காட்சிகளைக் கண்டு திகைத்து, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நின்றனர் தோழியும் தலைவியும்!

சுதாரித்துக்கொண்ட தலைவி பள்ளியுள் புக்காள். அங்கே பள்ளிகொண்டிருந்த தலைவனின் காதில் விழுமாறு, ”உம்மை நான் வெறுக்கவும் இல்லை; அதேசமயம் உம்மோடு சேர்ந்துவாழ விரும்பவும் இல்லை. நீர் உம் விருப்பத்துக்குரிய புதிய காதலியான பரத்தையிடமே சிரத்தையோடு இரும்; எம்மை மறந்துவிட்டு இங்கிருந்து அகன்று செல்லும்” என்றாள் கோபம் கொப்பளிக்க.

பரத்தைவயிற் பிரிந்துசென்று, தன் மனைக்கு மீண்டுவந்த தலைவன் ஒருவனைத் தலைவியொருத்தி கடிந்துரைத்து, ”நின் அடாத செய்கையை நான் மறக்ககில்லேன்” என்று குறிப்பிடும் பாடல் நற்றிணையிலும் இடம்பெற்றிருக்கின்றது.

கழுநீர்  மேய்ந்த  கருந்தாள்  எருமை
பழனத்
 தாமரைப்  பனிமலர்  முணைஇத்
தண்டுசேர்
 மள்ளரின்  இயலி  அயலது
குன்றுசேர்
 வெண்மணல்  துஞ்சும்  ஊர
வெய்யை
 போல  முயங்குதி  முனையெழத்
தெவ்வர்த்
 தேய்த்த  செவ்வேல்  வயவன்
மலிபுனல்
 வாயில்  இருப்பை  அன்னஎன்
ஒலிபல்
 கூந்தல்  நலம்பெறப்  புனைந்த
முகையவிழ்
 கோதை  வாட்டிய
பகைவன்
 மன்யான்  மறந்தமை  கலனே.  (நற்: 260 – பரணர்)

”தாமரை மலரை வெறுத்துக் கழுநீர் மலரை மேய்ந்த buffaloஎருமை, மணற்குன்றிலே சென்று தங்கும்” என்பது இப்பாடலில் இடம்பெற்றுள்ள உள்ளுறை உவமம் ஆகும். கற்பிற் சிறந்தவளும் உயர்ந்தவளுமான தலைவியைவிட்டுப் பரத்தையை நாடிச்சென்ற தலைவனின் செயலை அது மறைபொருளாய்ச் சுட்டுகின்றது.

தலைவியின் கோபத்தையும் கொடுமொழிகளையும் கேட்ட தலைவன் அவளிடம் சினங்கொள்ளவில்லை. அவளை ஆழ்ந்துநோக்கியபடி,

”என் தலைவி, என்னைத் தழுவுவதில் என்னினும் விருப்பமுடையவள்; விருப்பந்தரும் வனப்புடையவள்; மென்முலைகளையும் நீண்ட கூந்தலையும் உடையவள்; calfபக்கத்தில் மேயச்சென்ற நல்ல சுரப்பையுடைய பசுவின் நடுங்கும் தலையையுடைய சிறுகன்று அப்பசுவைக் காணவேண்டும் எனும் விருப்பொடு இருப்பதுபோல் என்மீது கொண்ட விருப்பத்தை வெளிப்படுத்தும் சிறக்கணித்த பார்வையுடையவள்; அவளை நான் எங்ஙனம் மறந்து வாழ்வேன்?!” என்று அன்று தன் பாங்கனிடம் தலைவிகுறித்துக் கூறியதை நினைவுகூர்ந்து அதனைத் தலைவியிடம் இப்போது மொழிந்தான் அன்பொழுக!

கவவுக் கடுங்குரையள்  காமர்  வனப்பினள்
குவவுமென்
முலையள் கொடிக்கூந்  தலளே
யாங்குமறந்
 தமைகோ  யானே  ஞாங்கர்க்
கடுஞ்சுரை  நல்லா  னடுங்குதலைக்  குழவி
தாய்காண்
 விருப்பி  னன்ன
சாஅய்நோக்
 கினளே  மாஅ  யோளே.  (குறுந்: 132 – சிறைக்குடியாந்தையார்)

தலைவனின் கனிந்த காதல்மொழிகளைக் கேட்டதும் தலைவியின் கோபமும் ஊடலும் பொங்கும் பாலிலிட்ட நீராய் அடங்கிப்போயின. புலந்த காதல் உள்ளங்கள் செம்புலப் பெயல்நீராய் கலந்தன மீண்டும்!

வள்ளுவர் வரைந்த,

”பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை”
 (1258) எனும் காதற் கவிதை இச்சூழலுக்கு நச்சென்று பொருந்துகின்றது.

தலைவனின் பணிமொழிகளில் உளம்நெகிழ்ந்த தலைவி,

“அணிற் பல்லையொத்த முள்ளையுடைய தாதுமுதிர்ந்த முள்ளிச் செடியையும், நீலமணியின் நிறத்தையொத்தHygrophila கரிய நீருடைய கடற்கரையையும் உடைய தலைவனே! இப்பிறப்பு நீங்கப்பெற்று மறுபிறப்பு உண்டாயினும் நீயே என் கணவன் ஆகுக! நின் நெஞ்சுகலந்தொழுகும் யானே அப்போதும் நின்னுடைய மனத்துக்குகந்த காதலி ஆகுக!” என்றாள்.

அணிற்பல் லன்ன  கொங்குமுதிர்  முண்டகத்து
மணிக்கே
 ழன்ன  மாநீர்ச்  சேர்ப்ப
இம்மை  மாறி  மறுமை  யாயினும்
நீயா
 கியரென்  கணவனை
யானா
 கியர்நின்  னெஞ்சுநேர்  பவளே.  (குறுந்: 49 – அம்மூவனார்)

இக்குறுந்தொகைத் தலைவியைப் போலவே,

”கண்களுக்கு மை எழுதும்போது இமையகத்துப் புகுந்த எழுதுகோலைக் காணாத கண்போல, கொண்கனது குற்றத்தினையும் அவனைக் கண்டவிடத்துக் காணேனே” என்று நயந்தும், ”தலைவனைக் காண்கையில் அவன் தவறுகள் தெரிவதில்லை; அவனைக் காணாதபோதோ அவன் தவறுகளின்றி வேறெதுவும் தெரிவதில்லை” என்று வியந்தும் பேசும் தலைவியொருத்தியை வாழ்வியல் அறிஞர் வள்ளுவரும் நமக்கு அறியத்தருகின்றார்.

எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
 பழிகாணேன் கண்ட விடத்து.  (1288)

காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன்
தவறல்ல வை  (1289)

இவ்விடத்து, சங்கப் பெண்களின் இல்லறவாழ்வின் தன்மைகுறித்துச் சற்றே சிந்திப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

திருமணமான சங்கப் பெண்டிர் தம் கணவன்மார்களின் தகாத புறத்தொழுக்கத்தைக் கண்டித்தாலும், அதற்காக அவர்களைப் பெரிதாகத் தண்டித்ததாகவோ, அவர்களைவிட்டுப் பிரிந்துறைந்ததாகவோ செய்திகள் நமக்குக் கிட்டவில்லை.

தலைவியரின் அளவிறந்த பொறையுடைமைக்குக் காரணம் யாது?

சங்கச் சமூகமானது, நாடோடியாய்த் திரிந்த வேட்டைச் சமூகம் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, அடுத்தடுத்த வளர்ச்சிநிலைகளை எட்டி, நிரந்தரக் குடிகளாய் வாழத்தொடங்கிய நிலவுடைமைச் சமூகமாக மெல்ல மெல்ல மாறிவிட்டிருந்தது. அச்சமூகத்தில் ஆண்கள் புறத்தே சென்று பொருளீட்டுவதையும், பெண்கள் அகத்திலிருந்தபடியே குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதையும், குடும்பத்தைப் பேணுவதையும் தம் கடன்களாகக் கொள்ளத் தலைப்பட்டனர். அச்சூழலில் பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்தரம் இல்லாமல் போய்விட்டிருந்தது. எனவே அவர்கள் உணவு உடை உறையுள் முதலிய தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குக் கூடத் தம் கணவரையே சார்ந்துவாழவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. ஆக, ஆணாதிக்கச் சூழல் அங்கு இயல்பாகவே உருவாகியிருந்தது.

எனவே மனைவியரோடு இல்லறம் பேணிய கணவன்மார்கள் திடீரென்று அவர்களைத் துறந்து சென்றாலோ, அவர்களைப் பிரிந்து பரத்தையரோடு திரிந்துகொண்டிருந்தாலோ அப்பெண்களின்பாடு இரங்கத்தக்கதாகவே இருந்திருக்க வேண்டும். அத்தகு சங்கடமான தருணங்களில் தலைவியரின் பிறந்தகத்திலிருந்து அவர்களுக்குப் பொருளுதவியோ, உளவியல்சார் ஆதரவோ கிட்டினவா என்பதையும் சங்கப்பாடல்கள் வாயிலாய் அறிந்துகொள்ள இயலவில்லை.

அனைத்துக்கும் மேலாகக் கணவனைப் பிரிந்து வாழும் மனைவியர்க்கு,

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க்
கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர்
கோடலும்” ஆகிய இல்லறக் கடன்களைச் செய்யும் வாய்ப்பும் சமுதாயத்தால் மறுக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறியும்போது கணவனின்றித் தனித்து வாழும் பெண்களின் அவலநிலை நமக்கு அங்கை நெல்லியெனத் துல்லியமாய்ப் புலப்படுகின்றது.

இத்துணைச் சமூகச் சிக்கல்களை எதிர்கொள்ள அஞ்சியதாலோ என்னவோ, தலைவர்களின் போற்றா ஒழுக்கம் தலைவியர்க்குச் சீற்றத்தையும் செற்றத்தையும் தந்தாலும், அவர்கள் அதனை (வேறுவழியின்றி) பொறுத்துக்கொண்டு, தலைவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் என்று எண்ணவேண்டியிருக்கின்றது.

[தொடரும்]

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.