க. பாலசுப்பிரமணியன்

தன்னம்பிக்கையில் நாம்  புலியா பூனையா?

வாழ்ந்து-பார்க்கலாமே-1-1-1-1

உலகின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தத்துவ மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் மூனிச் என்ற நகரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொது அவருடைய பள்ளி ஆசிரியர் அவருடைய ரிப்போர்ட்டில் ”  இவன் எதையும் சாதிக்க மாட்டான்” என்ற பொருள் படும் வகையில் He will never amount to anything”என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஐன்ஸ்டீன் அவர்களின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஆர்வமும் உழைப்பும் அவரை உலக அளவிலே ஒரு மேதையாக முன்னிருத்தியது.

ஹென்றி போர்ட் அவர்கள் மோட்டார் தொழிற்சாலைக்கான ஒரு வரைபடத்தோடு ஒரு வங்கி அதிகாரியை தொழில் முதலீட்டிற்காகக் கடன் கேட்டு அணுகியபோது “காரா? அதெல்லாம் வேடிக்கைக்கு நல்லதாக இருக்கும். குதிரை சவாரியை யாரால் நிறுத்த முடியும்?’ என்று பொருள்படப் பேசினார் அந்த வங்கி அதிகாரி ஆனால் ஹென்றி போர்டின் தன்னம்பிக்கையும் , வெற்றி பெற வேண்டும் என்ற சாகச உந்துதலும் அவரை வளர்ச்சியின் படியில் வளர்த்துக்கொண்டு சென்றன.

ஒருவரின் வளர்ச்சிக்கு நம்பிக்கை மிகவும் அத்தியாவசியமானது. “என்னால் முடியும்” என்ற நம்பிக்கையே வெற்றியின் பாதையில் ஒருவரைக் கொண்டு நிறுத்திவிடும். ஆகவே ஒரு குழந்தையின் வளர்ச்சியில் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பது மிகவும் தேவையானது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகளை வீட்டிலும் பள்ளிகளிலும் வளர்ப்பது அவசியம். தன்னம்பிக்கை வளருவதற்கு பணமோ அல்லது வளமான சூழ்நிலைகளோ தேவையில்லை. அது மனதில் உள்ளே விதைக்கப்பட்டு வளர்க்கப்படும் ஒரு உன்னதமான உணர்வு.

“இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது” என்று முட்டுக்கட்டை போட்டு ஆர்வங்களைத் தடை செய்யும் பொழுது அவைகள் ஆரம்ப நிலையிலேயே துவண்டு கீழே விழுகின்றன. “சாதிப்பதற்கு நல்ல வசதி இருந்தால் தான் முடியும்” என்ற ஒரு கருத்தை இளைஞர்களின் மனதில் வளர்ப்பது அவர்களின் நம்பிக்கையை வித்திலேயே நசுக்கிவிடுவதாக மாறிவிடும். நோபல் பரிசு பெற்ற சர் சி வீ இராமன், இந்திய துணைக்கண்டத்தின் ஏவுகணை மன்னராக விளங்கிய விஞ்ஞானி திரு அப்துல் கலாம் போன்ற பல பேர்கள் மிகச் சாதாரணமான சூழ்நிலைகளில் வாழ்ந்து, உழைத்து முன்னேற்றத்தைக் கண்டவர்கள்தான்.

மற்றவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட உன்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பது மிகவும் முக்கியமானது என்று மனநல வல்லுநர்கள் விளக்குகின்றார். “ஒரு மனிதனின் உருவாக்கம் அவன் சிந்தனைகளால் மட்டுமே. நீ என்ன நினைக்கின்றாயோ அவ்வாறே ஆகின்றாய் எனக் கூறினார்”  அண்ணல் மகாத்மா காந்தி. “பாதுகாப்பற்ற உன் எண்ணங்களை விட உனக்கு ஒரு மிகப் பெரிய எதிரி இருக்கமுடியாது”  என்று அறிவுரை கூறினார் புத்தர். நம்முடைய எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. எண்ணங்களின் வலிமையே செயல்களின் வலிமைக்கு வித்தாகின்றது. நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்ற எண்ணம் மனதில் உருவாகி விட்டால் நம்மை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளுவோம்  எந்த ஒரு மனிதன் தன்னைத் தானே மதிக்கவில்லையோ அவனை நிச்சயமாக மற்றவர்கள் மதிக்க  மாட்டார்கள்.

உயிரினங்களில் புலியும் பூனையும் ஒரே இனத்தைச் சார்ந்தவைதான். ஆனால் ஒன்றோ வீரத்திற்குச் சான்று., மற்றொன்று பயத்திற்கு அடையாளமாக உலவுகின்றது. இவைகளின் எண்ணங்கள் சிந்தனைகள் காலம்காலமாக அவற்றின் உயிரணுக்களில் உறைந்து அவர்களுடய வாழ்க்கை முறையை நிச்சயப்படுத்தி விட்டன.

வாழ்க்கையில் சாதனை படைத்த பலரும் எளிய ஆரம்பத்தில் இருந்துதான் வந்திருக்கின்றனர். அவர்களின் வெற்றிகள் அவர்களின் தன்னம்பிக்கைக்கும், சாதிக்க வேண்டும் என்ற ஒரு விடாமுயற்சிக்கும் கிடைத்த பரிசு. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? மற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் தவிர, அவர்களுடய வாழ்க்கையை நாமும் வாழ முயற்சிக்கக்கூடாது. முயன்றால் நமது வாழ்க்கை தொலைந்து விடும்.

  1. நாம் நாமாக இருக்க முயற்சிக்க வேண்டும்.
  2. நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
  3. நாம் திறமையும் தகுதியும் உள்ளவர்கள் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்.
  4. நம்முடைய முயற்சிகளைத் தொடர்ந்து செய்தல் வேண்டும்.
  5. தோல்விகளைக் கண்டு தயங்காமல் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும்.
  6. காலத்தால் பழுக்கும் பழத்தைக் கல்லால் அடித்துப் பழுக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்து பொறுமையும் விவேகத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

சற்றே துவண்டுவிட்டீர்களா? பரவாயில்லை.! சில நிமிடங்கள் “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’ என்ற பாட்டை கொஞ்சம் முணுமுத்துக் கொண்டிருங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்துப் பாருங்கள். எ”உங்கள் எண்ணங்களுக்கு சக்தி அதிகம். அவைகளே உங்களுக்கு ஆற்றலைத் தருகின்றன. உங்கள் எண்ணங்களின் மூலமாக நீங்கள் உங்களுக்குத் தேவையான உலகைப் படைக்கலாம் அல்லது அதை அழிக்கலாம். உங்கள் உலகம் உங்கள் கைகளில் ” என்று பல மேதைகள் எடுத்துச் சொல்லி இருக்கின்றனர். ழுந்து வேகமாகச் செயல்பட வேண்டுமென்று தோன்றுகிறதா…?

அதுதாங்க வாழ்க்கை.. வாழ்ந்து பார்க்கலாமே .

(தொடருவோம்)..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *