Blog

  • மாறுமோ இந்த நிலை?

    சக்தி சக்திதாசன்

    வருமா? வராதா? வருமா? வராதா? எனும் கேள்வி இங்கிலாந்து மக்கள் அனைவரின் மனங்களிலும் இழையோடிக்கொண்டிருந்தது. அக்கேள்வியின் விடை பீரிட்டுக்கொண்டு வெளிவந்துவிட்டது.

    எதை நான் சொல்ல வருகிறேன் என்று எண்ணுகிறீர்களா? கடந்த மூன்றரை வருடங்களாக இங்கிலாந்து அரசியல் களத்தில் நர்த்தனமாடிக் கொண்டிருந்த “பிரெக்ஸிட்” எனும் பூதாகரமான பிரச்சனையின் தீர்வு ஒரு பொதுத்தேர்தலினால்தான் தீர்க்கப்பட முடியும் எனும் நிலையை எட்டிய பின்பு அந்தப் பொதுத்தேர்தல் வருமா? வராதா? எனும் கேள்வியே ஊசலாடிக் கொண்டிருந்தது.

    புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட போரிஸ் ஜான்சன், இந்த பிரெக்ஸிட் எனும் பிரச்சனையை அக்டோபர் மாதம் 31ஆம் திகதி முடித்து விடுவேன் என்று சூளுரைத்தே பதவியேற்றார். ஆனால் காலம் செய்த சதியோ, இல்லை அவரது போதாத காலமோ, பலவிதமான சாணக்கிய நகர்வுகளை மேற்கொண்டும் அவரால் அவரது வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

    பாராளுமன்றத்தில் அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்த அவரது கட்சி, ஒரு சிறுபான்மை அரசமைத்த நிலையில், அறுதிப் பெரும்பான்மை இழந்த ஒரு நிலையில் முடமாகி நின்றமையே அவரது இந்தத் தோல்விக்குக் காரணம்.

    ஏற்கெனவே வட அயர்லாந்துக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவுடன் அரசு நடத்திக்கொண்டிருந்த போரிஸ் ஜான்சன் “ஆண்டவன் சோதனையோ, யார் கொடுத்த போதனையோ” தான் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள் அதாவது எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்றினார்கள் எனும் குற்றச்சாட்டில், இதுவரை கண்டிராத வகையில், தமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர்களைத் தமது கட்சியிலிருந்து விலக்கினார்.

    விளைவு!

    ஏற்கெனவே பெரும்பான்மை இழந்திருந்த அவரது கட்சியின் பலம், மேலும் குன்றியது. நொண்டி நொண்டி நடந்துகொண்டிருந்த அவரது அரசு, முடமாகி நின்றது. .

    பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவரது சகாக்களும் தமது நிலையை மீள்பரிசீலித்துக் கொண்டார்கள். நாட்டில், பிரெக்ஸிட்டுக்கான ஆதரவு  50%க்கும் அதிகமாகவே இருக்கிறது என்று பொதுக் கருத்துக் கணிப்புகள் கூறின. எதிர்க் கட்சியான லேபர் கட்சி வெற்றியீட்டிய தொகுதிகளில் பல, பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் ஒரு நிலை, இங்கிலாந்து வட மாகாணங்களில் இருப்பதை அவர்கள் இனங்கண்டு கொண்டார்கள்.

    இதற்கு ஏதுவாக, பிரெக்ஸிட் குறித்த, எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் நிலைப்பாடு தெளிவற்றே இருக்கிறது. மற்றொரு முக்கிய கட்சியான லிபரல் டெமகிரட்ஸ், பிரெக்ஸிட்டை முற்று முழுதாக எதிர்க்கிறார்கள். அனைத்துக்கும் மத்தியில் பிரெக்ஸிட்டுக்கு முழு ஆதரவான ஒரேயொரு கொள்கையை முன்வைத்து பிரெக்ஸிட் எனும் கட்சியை ஆரம்பித்து பலமான ஆதரவு பெற்று வருகிறார் நைஜல் வெராஜ் எனும், இங்கிலாந்துக்கான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற அங்கத்தினர்களுள் ஒருவர்.

    இவையனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், பொதுத்தேர்தல் ஒன்றின் மூலம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு அவருக்கிருப்பதாகப் போரிஸ் ஜான்சனும் அவரின் ஆதரவாளர்களும் நம்புகிறார்கள். இவற்றுக்கெல்லாம் முடிசூடிக் கொண்டாற்போல் அவர் திருத்தியமைத்துக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான உடன்படிக்கை, அவரது கட்சியில் கணிசமான ஆதரவினைப் பெற்றிருக்கிறது. அதன் அடிப்படையில் இவ்வுடன்படிக்கை, பொதுமக்களிடையேயும் கணிசமான ஆதரவினைப் பெறும் எனும் நம்பிக்கையும் அவர்களுக்குத் துணை நிற்கிறது.

    பொதுத்தேர்தல் ஒன்றிற்கு இத்தனை சாதகமான காரணிகள் இருக்கும்போது, அவரால் ஏன் இதுவரை ஒரு பொதுத்தேர்தலை அறிவிக்க முடியவில்லை. இங்கேதான் அவருக்கு ஒரு சிக்கல் இருந்தது. முன்னால் பிரதமர் டேவிட் கமரன், லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த போது அவ்வரசு விரைவில் கவிழ்ந்துவிடக்கூடாது என்பதில் இரு கட்சிகளும் குறியாக இருந்ததனால் ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஆட்சியைக் கலைப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டும் என்றொரு சட்டத்தை இயற்றினார்கள்.

    எதிர்க்கட்சிகளின் ஆதரவு இன்றிப் பாரளுமன்றத்தை அரசு தன்னிச்சையாக கலைக்க முடியாத நிலையிருந்தது. எதிர்க்கட்சிகளின் பிரதான நோக்கமே ஆட்சியைக் கவிழ்த்து தாம் ஆட்சியமைப்பதுதானே அப்படி இருக்கையில் ஏன் அவரது இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள முன்வரவில்லை ?

    இங்கேதான் மீண்டும் பிரெக்ஸிட், பிரச்சனையாக உருவெடுக்கிறது. சாணக்கியத் தந்திரங்களில் ஊறிப் போனவர், போரிஸ் ஜான்சன். அவரை நம்பி அரசைக் கவிழ்த்துப் பொதுத்தேர்தலுக்கு உடன்பட்டுவிட்டால், இந்தத் தேர்தல் அமளியைப் பயன்படுத்தி, அக்டோபர் 31ஆம் திகதி வெளியேற வேண்டும் எனும் காலக்கெடுவினைத் தமக்குச் சாதகமாக்கி உடன்படிக்கையற்ற ஒரு பிரெக்ஸிட்டை அமல்படுத்தி விடுவார் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

    அதற்காக, எதிர்க்கட்சிகள் ஒரு நிபந்தனையை முன்வைத்தன.

    தாம் பொதுத்தேர்தலுக்கு உடன்படுவதானால் அக்டோபர் 31ஆம் திகதி விலகும் காலக் கெடுவினை நீட்டிப்பதற்கான ஆதரவினை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெற வேண்டும் எனும் நிபந்தனையே அது.

    பத்தும் பலதும் பண்ணிப் பார்த்தும் எதுவும் பலனளிக்காத பட்சத்தில் தான் எதை உயிர் போனாலும் நிறைவேற்றமாட்டேன் என்று சூளுரைத்தாரோ அதனை நிறைவேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார், போரிஸ் ஜான்சன். “எனதருமை நாட்டு மக்களே, உங்கள் ஆணையின்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தை வெளியேற்றுவதை அக்டோபர் 31ஆம் தேதி நிறைவேற்றத் தீர்மானித்த என்னைப் பாராளுமன்ற ஜனநாயகம் எனும் மந்திரக் கயிற்றால் கட்டிப்போட்டு இக்காலக்கெடுவை 2020 ஐனவரி 31 வரை நீட்டிக்க வைத்துவிட்டார்கள் எதிர்க்கட்சியினர்” என்று அறிவித்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். ஒன்று இக்கட்டான பிரெக்ஸிட் சிக்கலைக் கொஞ்சம் தள்ளி வைத்தது, இரண்டு அதற்கான பழியை எதிர்க்கட்சியினர் மீது சுமத்தியது.

    அக்டோபர் 31ஆம் திகதி உடன்படிக்கையற்ற ஒரு பிரெக்ஸிட்டுக்கான சந்தர்ப்பம் முற்றாகத் தவிர்க்கப்பட்ட சூழலில், பொதுத் தேர்தலுக்குத் தமது ஆதரவினை எதிர்க்கட்சியினர் அளிக்க முன்வந்தனர். இந்த ஆதரவினை அளிக்க பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி பலவந்தப்படுத்தப்பட்டது என்றே கூறவேண்டும். ஏனெனில் மற்றைய எதிர்க்கட்சிகளான ஸ்காட்லாந்து தேசிய முன்னணி, லிபரல் டெமகிரட்ஸ் மற்றும் சில இதர சிறு எதிர்க்கட்சிகள் என்பன ஒன்றிணைந்து பொதுத் தேர்தலை ஆதரித்ததுவே லேபர் கட்சியின் மனமாற்றத்தைப் பலவந்தப்படுத்தியது.

    விளைவாக, பல வருடங்களின் பின்னால் முதன்முறையாக ஐக்கிய இராச்சியத்தில் டிசம்பர் மாதத்தில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. . ஆமாம் 2019 டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இப்பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. ஐக்கிய இராச்சியத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஓர் அதிமுக்கிய பொதுத்தேர்தல் இதுவென்றே அரசியல் அவதானிகள் பலரும் இதை நோக்குகின்றனர்.

    அடுத்து வரும் கட்டுரையில் இப்பொதுத்தேர்தலின் தன்மைகளையும் கட்சிகளின் நிலையையும் விரிவாகப் பார்க்கவுள்ளோம்.

    நடக்கப் போகும் இந்தப் பொதுத்தேர்தலினால் மாறுமோ இந்த நிலை?

    சக்தி சக்திதாசன்

    லண்டன்

    14.11.2019

    Share
  • படக்கவிதைப் போட்டி – 232

    படக்கவிதைப் போட்டி – 232

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதாமதி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (17.11.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அண்ணனின் அரவணைப்பில் தன் அச்சத்தைத் துச்சமெனத் தொலைக்க முயலும் சிறுமியாகத் தெரிகின்றாள் இவள். அண்ணனின் முகத்திலோ யாமிருக்க பயமேன் எனும்படியான மந்தகாசப் புன்னகை மந்தார மலராய் இதழ் விரித்திருக்கின்றது.

    கவியுள்ளம் ஊற்றெடுக்கக் கனிமழலை ஒன்றின் வசீகரக் காட்சியே போதுமானது; இங்கோ இருவர்! எனவே பஞ்சமின்றிக் கவிபாடக் கவிநெஞ்சங்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

    *****

    ”இச்சிறுமி, அன்னையையும் தந்தையையும் அண்ணன் உருவில் கண்டாள்; அவன் அரவணைப்பில் அமைதி கொண்டாள் ” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அம்மையப்பனாய்…

    அன்னை தந்தை சேர்ந்தேதான்
    அண்ணன் உருவம் ஆனதுவோ,
    அன்பைக் கொடுப்பதில் அன்னையாக
    ஆசையாய் வளர்ப்பதில் தந்தையாக,
    என்றும் காப்பான் நன்றாக
    என்னும் உறுதி தங்கைக்கே,
    இன்னும் என்ன பயமென்றே
    இறுக்கிப் பிடித்தாள் அண்ணனையே…!

    *****

    ”உயரப் பறக்கும் பட்டத்திற்கு உதவிடும் வாலாய், நூலாய் உதவிடுவேன் உனக்கு நான்; உயரப்பறந்திடவே எனை நம்பிக்கையோடு பற்றிக்கொள்!” என்று பொன்மொழி உதிர்க்கும் உயர்ந்த சிறுவனைக் காண்கிறோம் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜின் கவிதையில்.

    அன்பே ஆருயிரே!

    மொட்டு விட்ட மலரே!
    இருள் சூழ்ந்திருக்கக் கண்டு பயந்தாயோ?
    இருளெனச் சூழ்ந்திருக்கும்
    இன்னல்கள் கண்டு பயந்தாயோ?
    வெளிச்சம் தரும் விளக்காய் நான்
    அணையாமல் என்னைக் காக்கும்
    உதவும் கரங்களாய் நீ!

    அஞ்சாதே, அச்சம் தவிர், நெஞ்சம் நிமிர்
    இரவென்று இருள் சூழ்ந்த வானம்
    வெளிச்சம் எனும் விடியல் வந்து
    நீலமாய் நிறம் மாறும்
    உறங்கி இருக்கும் இயற்கை கூட
    விழித்தெழும் விடியலாய்
    வெளிச்சம் வந்ததும்!

    குஞ்சுகளை இறகுகளில் மறைத்துக்
    காத்து நிற்கும் தாய்ப் பறவை!
    இறகுகளாய் நான் இருப்பேன்
    உன் இறகுகளை விரித்துப் பறக்க முயன்றிடு
    அந்த வானம் உனக்கு வசப்படும்!

    உயரப் பறக்கும் பட்டத்திற்கு
    உதவிடும் வாலாய் நூலாய்
    உதவிடுவேன் உனக்கு நான்
    உயரப்பறந்திடவே
    நம்பிக்கையோடு பற்றிக்கொள்!
    உன்னை ஏற்றிவிடும் ஏணியாய்
    நான் இருப்பேன்!

    அம்மை அப்பன் இன்றி
    இங்கு யாரும் பிறப்பதில்லை!
    உதவிக்கரம் நீட்டும் உருவங்களில்
    அண்ணனாய், தந்தையாய், தாயாய்,
    தோழனாய், தோழியாய், துணையாய்
    அன்பைப் பொழியும் உறவுகளைக் கண்டால்
    அனாதைகள் அழிந்து
    அன்பும் பாசமும் பொழியும்
    உள்ளங்களால் இவ்வுலகம் நிறைந்திடுமே!
    உறவாய் மாறி உள்ளங்கள் போற்றிடுமே!

    *****

    சிறுமிக்கு அன்னையாய் அத்தனாய் அத்தனையுமாய் நிற்கும் சிறுவனின் மனமுதிர்ச்சியை அழகிய கவிதைகளில் வார்த்தெடுத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    பிஞ்சு (நெ)நஞ்சு!

    கனியமுதுக் குழந்தையென்றால்
    கள்ளமில்லாப் புன்சிரிப்பும்
    வெள்ளைத் தும்பைப்பூ மனதும்
    கண்முன்னே நின்றதொரு காலமம்மா – அது
    கனவாகப் போனதிந்த காலமம்மா!

    வஞ்சமில்லாப் பிஞ்சு நெஞ்சில்
    சூதானமாய் இருக்கச் சொல்லி
    நஞ்சதனைக் கலந்திட்டோம்
    வெம்பியிங்கு நிற்க வைத்தோம்

    வெள்ளாவியில் விதைநெல்லால் பொங்கல் வைத்தோம்!

    இன்ப துன்பமெல்லாமே
    இரு நொடியில் மறந்துவிடும்!
    கள்ளமில்லா நெஞ்சதனில்
    தந்திரத்தைப் புகுத்திவிட்டோம்!
    நம்பிக்கையின்மையை நிலைக்கவிட்டோம்!

    பஞ்சு போன்ற நெஞ்சதனைப்
    போட்டி பல போடச் சொல்லி
    ஊடகச் சோதியிலே
    எரிபானையாக்கி விட்டோம்!

    ஏய்த்துப் பிழைப்பதைக் கற்க வைத்தோம்!

    அறிவு வளர்க்கும்
    கல்வியதைக் கற்பிக்காமல்
    வெற்று வெற்றியே குறிக்கோளாய்
    முற்றிப்போகச் செய்துவிட்டோம்!
    முளைக்குருத்தை முட்செடியாய் ஆக்கிவிட்டோம்!

    பெற்றோர் தம் பேராசையால்
    பிஞ்சினிலே பழுத்து
    சுயநல ஆழ்துளையில் வீழ்ந்து
    மறைந்ததுவே அவர்தம் குழந்தைத்தனம் – இதில்
    வெற்றுக் கொண்டாட்டமே மழலையர் தினம்!

    ”வஞ்சமில்லாப் பிஞ்சுநெஞ்சில் நாம் நஞ்சதனைக் கலந்து விட்டோம்; வெள்ளாவியில் விதைநெல்லால் பொங்கல் வைத்தோம்! ஊடகச் சோதியிலே மழலையின் நெஞ்சதனை எரிபானை யாக்கிவிட்டோம்!” என்று  இன்றைய பெற்றோரின் நிர்ப்பந்தத்தால் குழந்தைத்தனத்தைத் தொலைத்து, பிஞ்சிலேயே பழுத்து வெம்பிப்போகும் மழலையருக்காக வேதனைப்படுகின்ற இக்கவிதையின் ஆசிரியர் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • சேக்கிழார் பா நயம் – 55

    சேக்கிழார் பா நயம் – 55

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    —————————————————-

    திருவாரூர்த் திருக்கோயிலில் பரவையாரைக் கண்டு காதல் கொண்ட சுந்தரர், அப்பரவையார் விரைந்து தம்மில்லம் சார்ந்தபின் அவரைத் தேடினார். தம்முள்ளத்தைக் கொள்ளை கொண்ட பரவையாரை மீண்டும் காண விரும்பினார். முன் யாவரோடும் உரை இயம்பாதிருந்த நம்பிகள், தனிமையாகக் காதல் மேன்மேற் படர்ந்து பெருகியபோது அக்காதலைத் துன்பமயமாக்கும் பொருள்களை நோக்கி, இயம்பும் உரைகளைக் கூறுகின்றார். காதற்றுன்பமிகுதியால் இவ்வாறு தனிமையில் இயம்புவது இயல்பு. அது அத்துன்ப மிகுதிப் பாட்டைக் காட்டும். இதனைத் தொல்காப்பியம், களவியலில்,

    ‘’காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி
    வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்’’

    என்று கூறும். அதன்படி மன்மதன் தம் முன் வந்து நின்று மலரம்புகளை எய்து தம் காமத்தைத் தூண்டுவதை உணர்ந்து வேட்கையால் மயங்கிச் செய்வதறியாது நின்றார். தாம் சிவபெருமானின் நெருங்கிய தோழர் என்பதை உணர்ந்தும், மன்மதன் மலரம்புகளைத் தொடுக்கலாமோ? என்றெல்லாம் கலங்கினார்.

    முன்பு முருகப்பிரான் திருவவதாரம் நிகழ , சிவபிரான் யோகத்திலிருந்த போது, மன்மதன் அவர் முன் நின்று மலரம்புகளை எய்தான். அப்போதே இறைவனின் நெற்றியிலிருந்த ஒற்றைக் கண்ணால் மன்மதன் எரிந்து, உருவழிந்தான். அத்தகைய சிவபெருமானுடன் தோழமை கொண்ட சுந்தரர், ஆரூரில் பரவையார் மேல் காதல் கொண்டதை அவரே வியந்து கொள்கிறார். அதனால்தான், சிவபெருமான் திருவருளையே சிந்தித்துக் கொண்டிருந்த தமக்குக் காதல் உண்டானது எவ்வாறு ? என்றெண்ணிய அவர் அக்காதலை ‘’அற்புதமோ, சிவனருளோ,’’ என்றெல்லாம் சிந்தித்தார். இப்போது மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த சிவபெருமான் தோழராகிய என் கண்முன் மன்மதன் தோன்றியதும், அவன் வில்லை எடுத்ததும், மலரம்புகளைத் தொடுத்ததும், நிகழக்கூடியவை அல்லவே. எரிந்ததன் பின் அவன் மீண்டும் தன் உருவத்தை அடைய மாட்டான் என்று சுந்தரர் எண்ணி யிருந்தார். ஆனால் திருவாரூரில் பரவையார் மேல் கொண்ட காமத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அவர் முன் வந்து, நின்று கரும்பு வில்லுடனும், ஐந்து மலர்களாகிய அம்புகளுடனும் மன்மதன் தோன்றினான். வெந்த காமன் பின்னர் உயிர் பெற்றா னாயினும் உருவிலனேயாவன். ஆனால் இவன் அவ்வாறன்றி உருவத்துடன் கூடினன் அதாவது, செயல் மிகுதியால் உருத் தோன்றுதல். என் முன்னால் வரவுங்கூடாத இவன் என் முன்னரும் வரவல்லவனாகி விட்டானே! அவ்வாறு என் முன் வருதலே பெருங் காரியம்; என் முன். வருதலேயன்றி என்மேல் அம்புகளையும் எய்கிறானே! ‘’ என்கிறார் சுந்தரர்! இதனைச் சேக்கிழார்,

    ‘’வெந்த காமன் வெளியே உருச்செய்து
    வந்து என்முன் நின்று வாளி தொடுப்பதே ‘’

    என்று பாடுகிறார். மன்மதன் எரிந்தபின் சிவனடியார் முன் காமனும், காலனும் தோன்ற மாட்டார்கள் என்றே உலகம் கருதியது! ஆனால், திருவாரூரில் சுந்தரரின் காதல், மன்மதன் செயலால் படர்ந்து வளர்ந்தது.

    ‘’சுற்றும் அமரர் சுரபதி நின்திருப் பாதம் அல்லால்
    பற்று ஒற்ற இலோம்என்று பரவையுள் நஞ்சை உண்டான்
    செற்றங்கு அநங்கனைத் தீவிழித்தான் தில்லை அம்பலவன்
    நெற்றியில் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே!’’

    என்று, சிவனடியார் முன் மன்மதன் தோன்றாத சிறப்புக் குறித்து அப்பரடிகளே பாடியுள்ளார். அச்சிவபிரானின் நெற்றிக் கண்ணின் ‘எரிதழல்’ அடியார்கள் முன் குளிர்ச்சி செய்து காக்கும். இக்கண்ணின் தழலுக்கு எரிக்காது குளிர்ச்சி செய்து காக்கும் குணமுமிருத்தலின் அதனின்றும் பிரித்து வேறு தன்மையைக் கொண்ட தழல் என்றார். அடுக்களையின்கீழ் வைத்த தழல் பாகம் செய்தும்,, கூரையில் வைத்த தழல் வீட்டை எரித்தும் தொழில் செய்தல்போலக் காண்க.. ஆனாலும் தீ சுடும் என்று கூறும் பொருளியல்புக்கும் மாறுபாடிலாமையுங் காண்க. இதனைச் சேக்கிழார் ,

    ‘’தம் திருக்கண் எரிதழலில் பட்டு’’ என்ற தொடரால் குறித்தார். மேலும் சுந்தரர், ‘’எமது தலைவனாருடைய திருவருளும் இவ்வாறாவதொன்றோ? திருவருளின் முன் வரவும், நிற்கவும், வாளிதொடுக்கவும் மாட்டாதவன் மதனன்! அவன் தம்பிரான் தம்மையே தோழனாகத் தந்த திருவருள் நிரம்பிய என்முன் வந்து நின்று வாளி தொடுப்பதாயினன். அவனன்றி ஓர் அணுவு மசையாதாதலின் இதுவும் அவர் திருவருளின் ஒரு வண்ணமோ? எந்தையுடைய ஆரருளோ? இதனை,

    எந்தையார் அருள் இவ் வண்ணமோ?” என்பார்.
    என்று சேக்கிழார் பாடுகிறார். இனி, நாம்முழுப்பாடலையும் பயில்வோம்.

    “தந்திருக் கண் எரிதழலிற் பட்டு
    வெந்த காமன் வெளியே உருச் செய்து
    வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே
    எந்தையார் அருள் இவ் வண்ணமோ?” என்பார்.

    என்பது பாட்டு! சிவனடியார் ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொள்ளுவதும், அது குறித்துச் சிந்திப்பதும் , மேலும் அக்காதல் நிறைவேறச் சிவபெருமானே அருள வேண்டும் என்று சுந்தரர் வேண்டுவதும் , முன்பு திருக்கயிலையில் நிச்சயிக்கப் பெற்ற சிவசங்கல்பமே என்பதை நமக்கு இப்பாடல் உணர்த்துகிறது.

    Share
  • போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)

    போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)

    -சி. ஜெயபாரதன், கனடா.

    மூலம் ஆங்கிலம் : ஜான் மெக்ரே
    (கனடா போர்த் தளபதி)
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    போர்த் தளங்களில் அணி அணியாய்ப்
    பூத்துக் கிடக்கும்,
    எண்ணிலா
    செந்நிறப் பாப்பி மலர்கள்
    சிலுவைகளுக்கு இடையே!
    நெஞ்சை உலுக்கும் காட்சி!
    மேலே பாடிப் பறக்கும் குயில்கள்
    பயம் ஏதுமின்றி,
    கீழே பீரங்கிச் சத்தம் மெதுவாய்க்
    கேட்டுக் குறையும்!

    செத்துப் போனது நாங்கள்!
    சில நாட்களுக்கு முன்பு பூமியில்
    சீராய் வசித்தவர் நாங்கள்!
    காலைப் பொழுதை உணர்ந்தோம்!
    மாலைப் பொழுதில் மங்கிச்
    செங்கதிர் மறைவதைக் கண்டோம்.
    நேசித்தோம்,
    நேசிக்கப் பட்டோம் நாங்கள்!
    இப்போது
    போர்த்தளப் புழுதியில்
    வீழ்ந்து கிடக்கிறோம்!

    பகைவரோடு
    எம் போரைத் தொடர்வீர் !
    தளரும் எமது கைகள்
    தருவது
    உமது கைக்கு
    எரியும் தீப்பந்தங்கள்!
    ஏந்திக் கொண்டு தாக்குவீர்.
    இறந்தவர் நம்பிக்கை
    நிறைவேறாது போனால் ,
    உறக்கம் வாராதெமக்கு!
    போர்த் தளம் யாவும்
    எண்ணிலா
    செந்நிறப் பாப்பி மலர்கள்
    செழித்துக் குலுங்கினும்!

    Share
  • சட்டை

    சட்டை

    -சேஷாத்ரி பாஸ்கர்

    ”இப்ப இந்த செலவு தேவையா?”
    மகன் பதில் சொல்லவில்லை

    ”இரண்டாயிரம் பெரிய தொகை என்பதே உனக்கு உறைக்கவில்லையா?”

    ”அப்பா ப்ளீஸ்! சில சுதந்திரம் எனக்கும் வேண்டும்”

    ”நான் தப்பு சொல்லலே. ஆனாலும் கொஞ்சம் யோசி ஒரு சொக்காய் இரண்டாயிரமா? என் கடைசி மாச சம்பளம் இதை விட கம்மி.”

    ”அதைத்தான் சொல்றேன்! அது அந்தக் காலம்! இப்ப என்ன மாதிரி யோசி. இது மொத மாச சம்பளம். நான் ஆசையாய் வாங்கினேன்.”

    ”சாரி. யூ ஆர் லாவிஷ்”

    ”அம்மா இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பா”

    ”ஒரு தகப்பன் மனசை நீ புரிஞ்சுக்கல. அப்புறம் உன் இஷ்டம்.”

    ”தப்பு! நீ தான் மகனோட மனசை தெரிஞ்சிக்கல.”

    ”கோபப்படாமல் இதை ஒரு தப்பாய் பார்த்து விட்டு மன்னித்து விடு. ஆனால் என் செயலில் இருக்கும் மனசைப் பார்.”

    ”உன் அகலக்கால் எனக்கு பயமாய் இருக்கு”

    ”தப்பாய் சொல்றப்பா! விசாலமா யோசிச்சு பாரு”

    ”நீ லட்ச ரூபாய் சம்பாதிச்சா கூட, இதைத்தான் சொல்வேன்”

    தலைக்கவசம் அணிந்து கொண்டே சொன்னான்.
    ”அப்பா! இன்னும் ஒன்னு சொல்றேன். உன் கோபம் அதிகமாகும்.”

    ”சொல்லு. என்ன பேண்ட் மூவாயிரமா?”

    ”இல்ல! இந்தச் சட்டை உனக்கு தாம்பா!”

    Share
  • மெய் வாழ்க்கை

    மெய் வாழ்க்கை

    -ராதா விஸ்வநாதன் 

    வாழ்க்கையே முடிந்து விட்டது
    வாழ்வது எப்படி என்ற தேடலில்!
    வாழ்ந்தவரை வழி கேட்டேன்
    வந்தது பதில் வாழ்ந்து பாரென!

    குழந்தையின் முகத்தில் தேட
    குறைகளைக் காணாதே எங்கும்
    நிறைதனை எதிலும் பாரடா
    நிம்மதி உன் காலடியிலே என்றது

    சாதித்தவர்களைக் கேட்டேன்
    சாதிப்பதற்கு எல்லையே இல்லை!
    சாதிக்க வேண்டியது என்ன என்று
    சோதித்துப் பார் உனை என்றனர்!

    மனத்தைச் சோதனைக் கூடமாக்கி
    எண்ணங்களை வேள்வித் தீயிலிட்டு
    என்னையே இழந்ததும் புரிந்தது,
    தன்னை இழப்பதே பூரணம் என்று!

    பூரணத்தில் நிற்பவன் மெய்ஞானி
    புரிந்தவனைத் தேடுபவன் மெய்யன்பன்
    புரிந்ததைக் காட்டுபவர் நல்லாசான்–அப்
    புரிதலில் வாழ்தலே மெய் வாழ்க்கை!!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 77

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 77

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    77.படை மாட்சி

    குறள் 761:

    உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
    வெறுக்கையுள் எல்லாம் தலை

    எல்லா  வகைப்படையும் கொண்டு எடஞ்சலுக்கு அசராம செயிக்க ஒதவுத படை ராசாவோட செல்வங்கள் எல்லாத்திலயும் ஒசந்தது.

    குறள் 762:

    உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
    தொல்படைக் கல்லால் அரிது

    போர்ல சேதம் ஏற்பட்டு பலம் கொறைஞ்சாலும் எந்தவித எடஞ்சலுக்கும் பயப்படாதநெஞ்சுறுதி பழம்பெருமை கொண்ட படைக்கு இல்லாம வேற எதுக்கு இருக்க முடியும். .

    குறள் 763:

    ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை 
    நாகம் உயிர்ப்பக் கெடும்

    எலிகள் கூட்டமா சேந்து பகையக் காட்டினாலும் பாம்பு மூச்சு விட்டுச்சுன்னா அதுங்க கெட்டழிஞ்சு போவும். 

    குறள் 764:

    அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
    வன்க ணதுவே படை

    எந்த நெலமயிலயும் அழிஞ்சு போவாம பகையாளியோட சதிக்கு தொணை போவாம பரம்பரையாவே பயமில்லாம உறுதியா இருக்கதுதான் படை. 

    குறள் 765:

    கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை

    உசிர எடுக்குத சாவே முன்ன வந்தாலும் பயப்படாம ஒண்ணாநின்னு எதித்து நிக்குத சக்தி உள்ளதே படை. 

    குறள் 766:

    மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
    எனநான்கே ஏமம் படைக்கு

    வீரம், மானம், நல்லவழில நடக்குதது, தலைவனோட நம்பிக்கையப் பெறுதது இந்த நாலும் படையைப் பாதுகாக்குத பண்புகள் ஆவும்.  

    குறள் 767:

    தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
    போர்தாங்கும் தன்மை அறிந்து

    சண்டயத் தடுக்குத மொறையத் தெரிஞ்சுக்கிட்டு மொதல்ல வருத படைய செயிச்சி பின்னால வருதவங்க தாக்காதமாரி தடுக்குதது படை.

    குறள் 768:

    அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
    படைத்தகையால் பாடு பெறும்

    சண்டபோடுத வீரமும் எதித்து நிக்குத பலமும் இல்லன்னா கூட அது தன் அழகான அணிவகுப்பால் பெரும பெத்துக்கிடும். 

    குறள் 769:

    சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
    இல்லாயின் வெல்லும் படை

    தன் அளவுல கொறஞ்சு சிறிசாப் போவுதது, தலைவன வெறுக்குதது, வறுமை இது ஏதும் இல்லன்னா படை செயிச்சிக்கிடும். 

    குறள் 770:

    நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
    தலைமக்கள் இல்வழி இல்

    நெறைய நாள் நெலச்சு நிக்குத வீரர்கள் ரொம்ப பேர் இருந்தாலும் தலைவன் இல்லன்னா அந்தப் படை நெலச்சி நிக்காது.

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • குறளின் கதிர்களாய்…(274)

    குறளின் கதிர்களாய்…(274)

    -செண்பக ஜெகதீசன்

    கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய
    கோடியுண் டாயினு மில்.
    -திருக்குறள் -1005(நன்றியில் செல்வம்)

    புதுக் கவிதையில்…

    பிறர்க்கு ஈவதுமின்றித்
    தானும் துய்க்காமலிருப்பவன்,
    ஈட்டும் செல்வம்
    அடுக்கடுக்காய்
    எத்தனைக் கோடியிருந்தாலும்,
    எவ்வித
    பயனுமில்லை அதனால்…!

    குறும்பாவில்…

    கோடிகோடியாய்ச் செல்வம் சேர்த்தாலும்,
    பிறர்க்கும் கொடுத்துத் தானும் அனுபவிக்காதவனுக்கு
    அதனால் பயனேதும் இல்லை…!

    மரபுக் கவிதையில்…

    அடுத்தவர் மகிழக் கொடுக்காமலும்
    ஆசை தீர அனுபவித்திட
    எடுத்துச் செலவும் செய்யாதவன்
    ஏங்கிச் சேர்த்த செல்வமதும்
    அடுக்காய்ப் பற்பல கோடிகளாய்
    அவனிடம் குவிந்தே இருந்தாலும்,
    கொடுக்கா ததுவே பயனெதுவும்
    கொள்வீ ரிதனைக் கருத்தினிலே…!

    லிமரைக்கூ…

    சம்பாதிப்பான் அடுக்கடுக்காய் கோடி,
    பிறர்க்கதைக் கொடுக்காமல் தானும் துய்க்காதவனுக்கு
    வராதே பயனெதுவும் தேடி…!

    கிராமிய பாணியில்…

    பயனில்ல பயனில்ல
    சேத்துவச்ச செல்வத்தால பயனில்ல,
    அடுத்தவனுக்குக் குடுத்து அனுபவிக்காத
    செல்வத்தால பயனில்ல..

    அடுத்தவனுக்குக் குடுத்து ஒதவி
    தானும் அனுபவிக்காதவன்,
    அசராமப் பாடுபட்டு
    அடுக்கடுக்கா
    கோடிகோடியா சம்பாதிச்சாலும்,
    அதுனால
    எந்தப் பயனும் கெடயாதே..

    தெரிஞ்சிக்கோ,
    பயனில்ல பயனில்ல
    சேத்துவச்ச செல்வத்தால பயனில்ல,
    அடுத்தவனுக்குக் குடுத்து அனுபவிக்காத
    செல்வத்தால பயனில்ல…!

    Share
  • பெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்

    பெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்

    -சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) 

    பெண்களின் உளவியல் பற்றிப் பேசும் உரிமை பெண்களுக்கே உண்டு. அவள் உள் உணர்வுகளும், தெளிவடையாது மனதுக்குள் தோன்றுகின்ற தவிப்புக்களும், வெளியே சொல்ல முடியாது சமூகத்தின் கண்களுக்கு திரையிடத் துடிக்கும் துடிப்புக்களும், அவளை அவளாக வாழமுடியாது செய்து விடுகின்றன. பெண் என்பவள் தன்னுடைய மனதை மையமாக வைத்து ஆராய வேண்டியது அவசியமாகின்றது. மொத்தத்தில் தம்முடைய மனதைக் கொன்றுவிட்டே பல பெண்கள் தம்முடைய வாழ்க்கைக்குப் பாதை போட்டிருக்கின்றார்கள். 

    மூச்சுவிடத் தெரியாது ஒரு குழந்தை பிறக்கும்போது, மருத்துவர் பிறந்த குழந்தையை தலைகீழாகப் பிடித்து முதுகிலே தட்டி மூச்சுவிடச் செய்கின்ற போது முதல் முறையாக மூச்சுவிட்டாலேயே உலகத்தில் வாழலாம் என்று அக்குழந்தை ஆழ்மனதிலே பதிக்கின்றபோது, அக் குழந்தை நினைக்காமலே நித்திரையில் கூட மூச்சுவிடுகின்ற தன்மையைப் பெறுகின்றது. இது போன்றுதான் சிறுவயதிலே ஆழ்மனதிலே பதியப்படுகின்ற பதிவுகள் மனிதனை முழுவதுமாக ஆட்டிப்படைக்கின்றன. ஆண்களின் உளவியலின் படி தமக்கு ஏற்படுகின்ற கருப்பை இழப்புப் பொறாமை, மார்பக இழப்புப் பொறாமை, தாய்மை இழப்புப் பொறாமை, போன்ற பொறாமைகளால் பெண்களை அடக்கி வைக்க முற்படுகின்றனர். குழந்தைகளைப் பெறுதல், அதற்குத் தம்மைத் தயார்படுத்தல், குழந்தைக்குப் பாலூட்டுதல் போன்ற முயற்சிகளைத் தம்மால் செய்ய முடியாத இயலாமையின் வெளிப்பாடாகப் பெண்களை அடக்கி ஆள முற்படுகின்றனர் என்பது உளவியல் உண்மையாகப்படுகின்றது.

    உயிர்ப்படைப்பாக்கங்களின் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு இலக்கியப்படைப்பாக்க முயற்சிக்கு வழியில்லாமல் போகிறது. ஆயினும் அவற்றையும் மீறி எழுதுகின்ற பெண்கள் தம்முடைய பெண்ணியல் சார்ந்த பிரச்சினைகளை எழுதுவதற்குத் தயங்குகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். பெண் சுதந்திரம் என்ற போர்வையில் தம்முடைய எழுத்துக்கு முலாம் பூசுகின்றார்கள். 

    பொதுவாக சங்ககாலத்துப் பெண்புலவர்களில் 32 பெண்பாற்புலவர்களே சங்கப் பாடல்களில் எமக்கு இனங்காட்டப்படுகின்றார்கள். அவர்களில் உயிர்களைப் படைக்க முடியாத அதிகமான பெண்களே அதிகமான பாடல்கள் புனைந்திருப்பது அறியக் கூடியதாக உள்ளது. அவர்கள் காரைக்கால் அம்மையார், ஆண்டாள், ஒளவையார், நக்கண்ணையார், ஆதிமந்தியார், வெள்ளிவீதியார் போன்றோர் ஆவார்கள். இவர்களில் அகப்பாடல்களை மட்டுமே பாடிய வெள்ளிவீதியார் பாடல்கள் பெண் உளவியல் சம்பந்தமாக சிந்தனையைத் தூண்டுவனவாகக் காணப்படுகின்றன. இவர் பாடல்களில் வெண்மை என்னும் சொல் அதிகமாக இடம்பெற்றதனால் வெள்ளிவீதியார் என்னும் பெயர் இவருக்கு வரக் காரணமாக இருந்தாலும் ஆடைமலறயல  என்று சொல்லப்படுகின்ற பால்வீதியைக் குறிப்பதுவாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாம் காணும் விஞ்ஞான உலகத்தை சங்ககாலத்திலேயே கண்டுதேறிய மக்கள் இவருக்கு இப்பெயரைச் சூட்டியிருக்கலாம். இதேவேளை வெள்ளி என்பது வானத்திலிருக்கின்றது. வீதி என்பது நிலத்தில் இருக்கின்றது. இவை இரண்டும் சேராதது போல் இவருடைய காதல் நிறைவேறாத காதலால் இவ்வாறு அழைக்கப்பட்டார் என்று கூறுவாரும் உண்டு. இவர் பாடல்கள் கற்புநிலை அற்று காமம் நிறைந்த பாடல்களாகவே காணப்படுகின்றன.

    இப்பாடல்களில் வெள்ளிவீதியார் பாடல்கள் நிறைவேறாக் காதலினால், தன்னை விட்டுப்பிரிந்து சென்று எவ்வித தொடர்பும் இல்லாத தன் தலைவனை நினைத்துப் பாடும் அகத்திணைக்குரிய பாடல்களே முழுவதுமாக இருக்கின்றன. காதல் தோல்வியைச் சந்தித்த இவர் பாடல்கள், பெண் உளவியலின்படி சிந்திக்கத்தக்கனவாக இருக்கின்றன என்பதை முனைவர் மு.பழனியப்பன் சுட்டிக் காட்டியுள்ளார். வெள்ளிவீதியாரைத் தன் காதலன் ஏன் விட்டுப்பிரிந்தான் என்பது கேள்விக்குறி. வெள்ளிவீதியாரிடம் இருக்கும் உயிர்ப்படைப்பாக்கத் திறன், இலக்கியப்படைப்பாக்க இயல்பு தலைவனுக்கு அச்சத்தையும் இவள் எனக்கு அடங்கி நடப்பாளா என்னும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று சான்றுகள் காட்டி விளக்குகின்றார். இது இன்றும் இயல்பாகவே ஒரு ஆணிடம் உள்ள அச்ச உணர்வாகக் காணப்படுகின்றது. 

    வெள்ளிவீதியார் பாடல்களில் பெண் உளவியல் எவ்வாறு எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நோக்கினால்,

    “கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
    நல்ஆன் தீம்பால் நிலத்து உக்காஆங்கு
    எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
    பசலை உணீஇயர் வேண்டும்
    திதலை அல்குல் மாமைக் கவினே‘‘

    இனிய சுவையுடைய பசுவின் பாலானது அதனுடைய கன்றாலும் அருகப்படாமல் பாத்திரத்திலும் கறக்கப்படாமல் நிலத்திலே சிந்துவதுபோல எனக்கும் பயனின்றி என் தலைவனுக்கும் உதவாமல் என் அழகு பசலை நோய் உண்ணும் நிலையைப் பெற்றுவிட்டதே என்று பாடுகின்றாள். பசலை நோய் எனப்படுவது தலைவனை பிரிந்து வாடும் தலைவிக்கு உடல் மெலிந்து, உடல் அழகு போய், முகப்பொலிவு இழந்து, கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் கழன்று விழும் நிலை ஏற்படல். இதனை ஒரு பெண் ஆண் இல்லாமல் தனிமையில் பசலைநோய் வாய்ப்பட்டு நிற்கும் நிலையை வெள்ளிவீதியார் அழகாகப் பாடுகின்றார்.

    ”இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
    நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
    ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
    கையில் ஊமன் கண்ணில் காக்கும்
    வெண்ணெய் உணங்கல்போலப்
    பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்க அரிதே”

    என்னைப் பற்றித் தப்பாகக் கருதும் உறவினர்களே! ஞாயிறு கதிர் பரப்பும் வெப்பமாகிய பாறையிலே வைக்கப்பட்டிருக்கின்ற வெண்ணெய் கையிழந்த ஊமையால் காவல் காக்கப்படுகின்றது. அவ்வெண்ணெய் அவனால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது உருகி அழிவது போல காமநோய்  பரவிய எனது உடலில் உள்ள உயிரும் அழியப் போகிறது முடிந்தால், நீங்கள் என்னுடைய காதல் நோயைத் தடுத்து நிறுத்துங்கள் என்கின்றாள். இவ்வாறு தலைவனைப் பிரிந்து வாடுகின்ற ஒரு பெண் அவனுக்காகக் காத்திருந்து அவனைத் தேடிச் செல்லும் மன உறுதியையும் கொண்டிருக்கின்றாள் என்பதை 

    ”நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
    விலங்கிரு முந்நீர் காலில் செல்லார்
    நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
    குடிமுறை குடிமுறை தேரின்
    கெடுநரும் உளரோ நம் காதலோரே” 

    என்னும் பாடலிலே தலைவன் நிலத்தை அகழ்ந்து அதனுள் புகுந்து செல்ல முடியாது. வானின் உயரே பறந்து செல்ல முடியாது. பெரிய கடலிலே காலால் நடந்து சென்றிருக்க முடியாது. எனவே ஒவ்வொரு நாடு தோறும், ஊர்தோறும், குடிதோறும், சென்று தேடினால், நிச்சயமாகக் கண்டுபிடித்து விடலாம் என்கிறார். இப்போதுள்ள முகநூல் இல்லாத சமயத்திலேயே ஒரு பெண் இவ்வாறு சிந்திக்கின்றாள் என்றால், அவள் காதலுக்காக எவ்வாறு மனவுறுதி பெற்றிருக்கின்றாள் என்பது அறியக்கூடியதாக இருக்கின்றது. 

    பலகாலம் ஒரு பொருளை நினைத்து ஏங்குபவர்கள், கனவிலே அப்பொருள் கிடைத்துவிட்டதாக நினைத்து நிறைவு பெறுவதைக் குறிக்கும் பாடல்களும் வெள்ளிவீதியார் பாடல்களில் காணப்படுகின்றது. 

    தொல்காப்பியப் பொருளதிகாரத்திலே மண்கலத்திலே நீருள்ளது என்பதை அதன் கசிவு காட்டுவது போல ஒரு பெண்  தன் வேட்கையை உணர்த்த வேண்டும் எனப்படுகிறது. இப்போது கூட ஒரு பெண் தன் உணர்வுகளை சமுகத்திடையே வெளிப்படையாகக் கூறத் தயங்கும் நிலை காணப்படுகின்றது. ஆனால், சங்க காலத்திலேயே வெளிப்படையாகத் தன் உணர்வுகளைப் பாடிய ஒரு முற்போக்குவாதியாகவே வெள்ளிவீதியாரை நான் காண்கின்றேன். 

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 76

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 76

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    76.பொருள் செயல்வகை

    குறள் 751:

    பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்ல தில்லை பொருள்

    தகுதியில்லாதவங்களக் கூட ஒசத்தி மதிக்க வைக்கது அவுக கிட்ட குவிஞ்சு கெடக்க  பணம் தான். 

    குறள் 752:

    இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
    எல்லாரும் செய்வர் சிறப்பு

    பணம் இல்லாதவுகள எல்லாரும் எளக்காரம் பண்ணுவாங்க. பணம் இருந்திச்சின்னா பெருமப் படுத்துவாங்க. 

    குறள் 753:

    பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று

    பொருள் னு சொல்லுத அணையா விளக்கு நெனச்ச எடத்துக்குப்போயி எல்லா எடஞ்சலையும் தீத்து வச்சிரும். 

    குறள் 754:

    அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்

    நல்ல வழியில கெடுதல் செய்யாம சம்பாதிச்ச பணம் தான் ஒருத்தனுக்கு அறநெறியக் காட்டி சந்தோசத்தக் கொடுக்கும்.

    குறள் 755:

    அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல்

    பொறத்தியார் மேல இரக்கம் காட்டாம, நேசம் இல்லாம சேத்த பணத்த வச்சிக்கிட்டு சந்தோசப்படாம அது கெடுதலத்தான் கொடுக்கும்னு நெனச்சி விட்டுப்போடணும். 

    குறள் 756:

    உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
    தெறுபொருளும் வேந்தன் பொருள்

    வரியும், சுங்கமும், செயிச்ச பகையாளி நாடு கட்டுத கப்பமும் ராசாவோட பொருள்கள் ஆவும். 

    குறள் 757:

    அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
    செல்வச் செவிலியால் உண்டு

    அன்புங்குத ஆத்தா பெத்த அருள் ங்குத பச்சப்புள்ள பொருள் னு சொல்லுத வளர்ப்புத்தாயல வளரக் கூடியது.

    குறள் 758:

    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
    றுண்டாகச் செய்வான் வினை

    தன் கையில பணத்த வச்சிக்கிட்டு ஒரு காரியத்த தொடங்குதது மலை மேல ஏறி நின்னுக்கிட்டு பதனமா யானைச் சண்ட பாக்குதது போல ஆவும். 

    குறள் 759:

    செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃதனிற் கூரிய தில்

    பொருள சம்பாதிச்சி சேத்துவச்சிக்கிடணும். ஏம்னா பகையாளியோட அகராதிய (செருக்கு) அழிக்குத கூரிய அரிவாள் கணக்கா இருக்கது அதுஒண்ணுதான்.

    குறள் 760:

    ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
    ஏனை இரண்டும் ஒருங்கு

    நல்ல வழியில நெறைய பணம் சேத்தவங்களுக்கு மத்த அறமும், இன்பமும் சுளுவாக் கெடச்சிப்போடும். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • ஐயப்பன் காவியம் – 9

    ஐயப்பன் காவியம் – 9

    -இலந்தை சு. இராமசாமி

    இந்திரலோகப் படலம் – தொடர்ச்சி

    அழகெனில் இஃதே அழகெனச் சொல்லும்
    அற்புத மோகினி யாகப்
    பழகிய வள்போல் படபட விழிகள்
    பரிவுடன் அரக்கனை நோக்கக்
    குழைவொடும் ஈர்க்கும் குறுநகை யோடும்
    குறுகினள் அரக்கனின் பக்கம்
    ஒழுகிடும் வாயன் பத்மனும் பார்த்தான்
    உடன்கரம் பற்றிடப் போனான் 122

    “இருயிரு, பத்மா, ஆடலில் சிறந்தோன்
    என்பதை முன்னரே அறிவேன்
    ஒருபெரும் போட்டி ஆடுவோம் நாமே
    உன்னையும் வென்றிடு வேன்நான்
    சரிவர ஆடி என்னைநீ வென்றால்
    தந்திடுவேன் உனக் கெனையே
    பருவரை யதனைச் சரிசமப் படுத்து
    பந்தயம் தொடங்குவம் என்றாள் 123

    மரத்தினை ஒடித்தான், மலைகளைப் பொடித்தான்
    வடிவுடன் தளத்தினை அமைத்தான்
    தரத்தினில் மிகுந்த தனையவள் வெல்லச்
    சாத்தியம் இலையென நினைந்தான
    கரத்தினைத் தட்டித் தொடங்கெனச் சொன்னான்
    கால்களை தூக்கிக் குதித்தான்
    வரத்தினைப் பெற்ற செருக்கினால் பத்மன்
    மகிழ்ச்சியின் எல்லையில் நின்றான் 124

    *

    கால்களால் குதித்தாள் – இரு
    கைகளால் நொடித்தாள்- விழி
    காட்டியே நடித்தாள்-பின்
    மேல்குதிப்பதும் கீழ்குதிப்பதும்
    வேகமே பதித்தாள்- தரை
    மீதிலே மிதித்தாள் 125

    கால்களால் குதித்தான் – மரம்
    கைகளால் பொடித்தான்-கனல்
    கக்கியே குடித்தான்- பின்
    மேல்குதிப்பதும் கீழ்க் குதிப்பதும்
    வேகமே சிதைத்தான் – தரை
    வீழ்ந்திடப் புதைத்தான் 126

    முத்திரை விரித்தாள்- மிக
    மோகமாய்ச் சிரித்தாள்- விழி
    மூடியே பிரித்தாள்-பின்
    சித்திரந்தனை ஆட்டுவித்தாய்ச்
    சீக்கிரம் அசைத்தாள்- இசை
    தேனென இசைத்தாள் 127

    முத்திரை விரித்தான் – பயம்
    மூட்டிடச் சிரித்தான்-மலை
    மோட்டினைச் சரித்தான்-பின்
    தத்தரத்தரத் தத்தரத்தரத்
    தாளமே பிடித்தான் பல்லைச்
    சத்தமாய்க் கடித்தான் 128

    *

    வேகம் வேகம் வேகம் வேகம் வேகமெடுத்தாள்- தன்
    வித்தகங்கள் யாவும் காட்டி வீசி நடித்தாள்
    பாகம் பாகம் பாகம் பாகம் ஆட்டி நடித்தாள்- காணும்
    பக்க மெல்லாம் தானிருக்கும் தோற்றம் கொடுத்தாள் 129

    வேகம் வேகம் வேகம் வேகம் வேகமெடுத்தான் -தன்
    வித்தகங்கள் யாவும் காட்டி விந்தை தொடுத்தான்
    பாகம் பாகம் பாகம் ஆட்டிப் பல்லை இளித்தான் – தன்
    பக்கத்தில்தான் வெற்றியென்று பாடிக் களித்தான் 130

    வளைந்தாள் விழுந்தாள் எழுந்தாள் குழைந்தாள்
    இடுப்பில் கரம் வைத்தாள்
    நெளிந்தாள் துளைந்தாள், குனிந்தாள் நிமிர்ந்தாள்
    சிரத்தில் கரம் வைத்தாள் 131

    வளைந்தான் விழுந்தான் எழுந்தான் குழைந்தான்
    இடுப்பில் கரம் வைத்தான்
    நெளிந்தான் துளைந்தான், குனிந்தான் நிமிர்ந்தான்
    சிரத்தில் கரம் வைத்தான் 132

    *

    சடபட படபட சிரமும் வெடித்தது
    தரையோ அவனுடல் எடையில் பொடித்தது
    கடகட கடகட அகிலம் சிரித்தது
    கடுமன அரக்கரின் கருவம் மரித்தது
    எடுமெடு மெடுமென திசைகள் அதிர்ந்தன
    எரிகல் பலப்பல இறங்கி உதிர்ந்தன
    படபடபடபடவென அமரர் இறங்கினர்
    பரவசம் மிகமிகக் களியில் கிறங்கினர் 133

    -தொடரும்

    Share
  • படக்கவிதைப் போட்டி – 231

    படக்கவிதைப் போட்டி – 231

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (10.11.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. முகமது ரபியின் ஒளிப்படக்கருவி பதிவாக்கித் தந்த இப்புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 230க்குத் தெரிவுசெய்து தந்தவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். ஒளிப்பட நிபுணர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள் சென்று சேரட்டும்!

    இளைஞனின் நீலநிற வண்ணம் தீட்டிய கோலமுகம் சலனமற்றிருந்தாலும், அகத்துள் ஆயிரம் சிந்தனைகள் சிறகடித்துப் பறப்பதை உணர முடிகின்றது.

    அரியகலை நிகழ்த்தும் இவ் இளைஞனின் வாழ்வைக் கவலைகள் தின்னத் தகா! பெரிய சாதனைகள் படைக்கும் ஆற்றலைக் காலம் இவனுக்கு அளிக்க வேண்டும். இவனைப் பெற்றோர் மனம் களிக்கவேண்டும்!

    நீலவண்ணக் கண்ணனாய் ஆடிமுன்னே நின்றிருக்கும் இளைஞனின் இதய எண்ணங்களைக் கவிதைகளில் வடித்துத் தாருங்கள் எனக் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கிறேன்!

    *****

    ”உள்ஒன்று வைத்துப் புறமொன்றுபேசி வயிறு வளர்க்கும் நாடகத்தை
    உயிர்வாழ்க்கை எனக்கூறி உழன்று நாளும் நாம் திரிவதனை
    எடுத்திங்கே காட்டுதம்மா என் மனக்கண்ணாடி” என்று  வஞ்சக மனிதரின் நெஞ்சகத்தை ஆடியில் காட்டுகிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மனக்கண்ணாடி

    வீண் படாடோபம் கொண்டு
    வெற்று வார்த்தை பேசி
    நல்லவனாய்
    வல்லவனாய்
    நாலும் தெரிந்த தூயவனாய்
    நித்தம் நூறு வேடம் கொண்டு
    சுயநலப் பச்சோந்தியாய்
    பிணந்தின்னும் சாத்திரம் சொல்லித்
    தன்னுருவே தனை வெறுக்க
    உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசி
    வயிறு வளர்க்கும் நாடகத்தை
    உயிர் வாழ்க்கை எனக்கூறி
    உழன்று நாளும் திரிவதனை
    எடுத்திங்கே காட்டுதம்மா
    என் மனக்கண்ணாடி!

    அரிதாரம் தனை நீக்கித்
    தன்மானம் கொண்டு
    சுயபிம்பம் எதுவென்று
    தெளியும் நாள் எந்நாளோ?

    *****

    ”ஏடெடுத்துப் படித்ததில்லை; எழுத்தாணி பிடித்ததில்லை. எனினும், போடும் வேடம் எதிலும் இவன் பொய்யாய் நடித்ததில்லை. இன்றோ முடங்கிக்கிடக்கிறான்; விடியட்டும் இவன் வாழ்வு” என்று நன்மொழி நவில்கின்றார் திரு. யாழ். நிலா. பாஸ்கரன்.

    ஓட்டைக் கீற்றின் ஒதுக்கின் மறைவில்
    ஒருசாண் வயிற்றுக்குக் கஞ்சி வார்க்க
    ஒய்யாரமாய் ஒப்பனை செய்கிறான்
    ஓயாது உழைக்கும் ஓர் குப்பத்து ராசா

    அரியாசனம் இல்லாமலே, அரண்மனைதான் செல்லாமலே
    அரிதாரம் பூசிக்கிட்ட அவன்தானே இந்நாட்டு ராசா
    அரங்கேற்றம் ஆகின்ற அரங்கத்தில் எந்நாளுமே
    அரசாளும் மகராசன் இவன் வந்தாலே கரகோசந்தான்

    தெருவோரம்தான் இவன் அரசாங்கம்
    இரவானால்தான் நடந்தேறும் இவன் அதிகாரம்
    தெரியாத கதையாடல் இங்கேது திரைவிலகி ஒளி
    தெரிந்தால் இவனாலே உருவாகும் புதுஉலகம்!

    ஆயிரம் வழிகள் அவனுக்கு எது அடைத்தாலும் திறந்திடுவான்
    ஆயிரம் வலிகள் அவனுள்ளே ஆனாலும் சிரித்திருப்பான்
    ஆயிரம் விழிகள் அவன்மீது அதனாலே மகிழ்ந்திருப்பான்
    ஆயிரம் வாழ்த்துகள் அவைதரும் ஆனந்தவாழ்கை அவனுக்கு

    ஏடு எடுத்து படித்ததில்லை எழுத்தாணி பிடித்ததில்லை ஆனாலும்
    போடும் வேடம் எதிலும் பொய்யாய் நடித்ததில்லை
    ஆடும் கூத்தில் எங்கும் மனம் தடுமாறவிட்டதில்லை
    ஓடும் நதிபோல ஓயாமலே தாவும் இவன் ஆட்டம்

    முடிசூடா மன்னன் இவன் இ‌ப்போது முடங்கிக் கிடக்கின்றான்
    முன்எப்போதும் இல்லாமல் இப்போது மூழ்கித் தவிக்கின்றான்
    முகச்சாயம் பூசாமல் பல மாதம் முடிந்து போனது – இனி
    முடியட்டும் பகல் முளைக்கட்டும் இரவு விடியட்டும் இவன் வாழ்வு!

    *****

    ”முகம்மூடிச் செல்லுமுன்னே மனிதன் முகமூடி அணிகின்றான்; ஒப்பனையே இல்லாத இவன் நாடகம் எப்போது முடியும்?” என்று வினா எழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அரிதாரம்…

    பாரினில் நாம்
    பார்க்கும் முகங்களில் பல
    பொய்ப்பூச்சில் மிளிரும்
    போலி முகங்கள்..

    உண்மை முகங்களைக்
    காட்டுவதில்லை ஒருவரும்,
    முகம்மூடிச் செல்லுமுன்னே
    மனிதன் பல
    முகமூடிகளை மாட்டிக்கொள்கிறான்..

    அரங்கத்தில் நடித்திடவும்
    ஆலய வேண்டுதல்களிலும்
    அரிதாரம் பூசுபவர்களை
    அடையாளம் கண்டுகொள்ளலாம்
    எளிதாக..

    ஒப்பனையே இல்லாமல்
    வேடம் போடும்
    மனிதனின் நாடகம்
    எப்போது முடியும்…!

    *****

    முகவண்ணம் தீட்டிய இளைஞனின் அகவெண்ணத்தைக் காட்ட முற்பட்டிருக்கின்ற, அவன் வருங்காலம் வளமாயிருக்க வேண்டும் என்று வாழ்த்தியிருக்கின்ற கவிஞர்பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    அழகு!

    பொய்யாய்ப் போகும் மெய்க்குப்
    போராடிச் செய்கிறோம்
    அலங்காரம் தினம்
    அழகாய்த் தோன்றிடவே
    அகத்தின் அழகு
    முகத்தில் தெரியும்
    என்று சொன்னதாலோ?
    போராடித் தினம்

    அலங்காரம் செய்து
    உள்ளிருக்கும் மிருகத்திற்கு
    முகமூடி போட்டுப்
    புன்னகை பூட்டிய
    பொய்முகம் தேவையில்லை!
    சிந்தனைகள் சீராய் இருந்தால்
    அகத்தின் அழகு தானாய் மெய்ப்படும்!

    அசுரனாய் வேடமிட்டு
    மேடை ஏறி
    வர்ணஜாலம் காட்டிடவே
    வர்ணம் பூசி
    வந்து நின்றேன்
    கண்ணாடியின் முன்னாடி!
    தொண்டை வறண்டு

    வாய்கிழிய வசனம் பேசி
    அழிந்து போகும்
    அசுரனாய் நான்
    சூரஸம்ஹாரம் நாடகத்தில்!
    பாராட்ட யாருமில்லை

    பார்த்து ரசிக்கக் கூட்டமில்லை
    அழிந்து போகும் இக்கலையால்
    நஷ்டம் வந்து
    நலிந்து போனேன்!
    என்னுள் இருக்கும்
    பசியெனும் மிருகம்தனைப்
    போக்கிடவே
    வந்த இந்த வாய்ப்பில்
    அசுரனாய் முகமூடி அணிந்து
    மேடை ஏறி அழிந்து போனேன்!
    நிலைமாறும் இவ்வுலகில்
    என் நிலை மாறும்
    என்ற நம்பிக்கையில்!

    கரகோஷம் மட்டும்
    கலையை வளர்க்க உதவாது
    கலையை அறிந்த
    உயிரோட்டமாய் வாழும்
    அந்த உயிர்களைக்
    காத்து நிற்க
    உதவிக்கரம் நீட்டுவோம்!
    இப்புவியெங்கும்
    நம் கலை அழகைப்
    போற்றிடச் செய்வோம்!

    நிகழ்த்துகலை (performing arts) வடிவங்களில் ஒன்றான நயமிகு கூத்துக் கலை, திரைப்படத்துறையின் அசுர வளர்ச்சியால், இப்போது நாடுவார் யாருமின்றி அழிவின் விளிம்பில் வாடிக்கொண்டிருக்கின்றது. நலிந்துவரும் இக்கலைக்கு உயிர்கொடுப்பதும், தம் வாழ்வாதாரத்துக்கு இக்கலையையே நம்பியிருக்கும் கலைஞர்களை ஆதரித்துப் புரப்பதுமே மக்கள் செய்யவேண்டிய உடனடிச் செயல்களாகும் என்பதைத் தம் கவிதையில் இதயம் தொடும் வகையில் பதிவுசெய்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2

    -மீனாட்சி பாலகணேஷ்

    (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) 

      சிறுபறைப்பருவப் பாடல்கள் கருத்துவளமும் சந்தநயமும் மிகவும் நிறைந்து விளங்குபவை. சைவத்தின் தனிப்பெருங்கடவுளான சிவபெருமான் பிறப்பிலிப் பிஞ்ஞகன்; சிவபிரான் மீது பிள்ளைத்தமிழ் பாடவியலாத குறையை அடியார்கள் அவனுடைய பலவிதமான நடனங்களைப் பற்றிக் குழந்தையின் பல்வேறு பருவங்களிலும் பாடிமகிழ்ந்து நிறைவுசெய்து கொண்டனர். சந்தநயம் மிகுந்த பல பாடல்கள் சிவபிரானின் திருநடனத்திற்கேற்பக் குழந்தை முருகன் தனது சிறுபறையின் ஒலியினை எழுப்புவதாக அமைந்து இன்புறுத்தும்.

    சிறுபறை முழக்கி வரும் முருகன் எனும் சிறு குழந்தை பெரிய மணி போன்று ஒளிர்கின்றான்; வாடாத  புதுமை நிறைந்த மென்மலர் போலப் பொலிகின்றான். கண்ணூறு பட்டுவிடப் போகின்றதே எனத் தாய் உள்ளம் எண்ணுகிறது. 

    படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து விதமான தொழில்களையும் செய்யும் சிவபிரான் நடனமாடுகிறான். அவனுடைய நடனத்திற்கேற்ப குமரனின் சிறுபறை முழங்குகிறது. இறைவனின் கூத்துக்கு ஆயிரம் கைகளாலும் மத்தளம் கொட்டும் வாணன் என்பவன் தோற்று வெட்கும்படியாக முருகனின் சிறுபறை சிறப்பாக முழங்குகின்றதாம்!

    நந்திதேவன் இதைக்கேட்டு அதிசயித்து, “எமக்கு இதற்கேற்ப ஜதி சொல்ல வராது அப்பா குழந்தாய்!” எனக் குமரக்குட்டனிடம் தனது இயலாமையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டான்! முருகனின் சிறுபறை முழக்கத்தைக் கேட்டு உள்ளம் உவந்த தந்தை சிவபிரான், நடனம் ஆடும்பொழுதே தலையை இயைவாக அசைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான். பக்கவாத்தியக்காரர்கள் அனுசரணையாகவும் திறமையாகவும் இசைக்கருவிகளை வாசிக்கும்போது தலையை அசைத்து அவர்களைப் பாராட்டித் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் கலைஞர்கள் இயல்பு. இதனைச் சிரக்கம்பம் என்பர்.

    ‘தந்தன தந்தன திந்திமி,’ என்று ஜதிகளை முதலில் வாயால்கூறி பின் அவற்றை சிறுபறையில் தோன்றுமாறு முழக்குகிறான் குமரன். தாயான உமையவளுக்கு ஆனந்தம் பொங்குகிறது; குமரன் கூறும் ஜதிகளுக்குத் தானும் பொருத்தமாகக் கைத்தாளம் இட்டு காலப்பிரமாணம் வரையறுக்கின்றனளாம்!

    ‘இவ்வகையாக கொத்துக் கொத்தான மலர்கள் பூத்த சோலைகள் நிறைந்த எட்டிக்குடி குகனே, சிறுபறை முழக்குவாயாக!’ எனத் தாய் ஆசை பொங்க வேண்டுவதாகப் புலவர் நடேச கவுண்டர் எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழில் முருகப்பெருமானை வேண்டுகிறார். படிக்கும் நமது உள்ளங்கள் ஆனந்த வெள்ளத்தில் முழுகுகின்றன. இது 20-ம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற அருமையான ஒரு பிள்ளைத்தமிழ் நூலாகும்.

    ஐந்தொழி லுஞ்செயு மெந்தை நடஞ்செய 

    வாயிர மங்கைகளால்

        அணிமத் தளமறை யுந்தொழில் வாணனும் 

    அகமிக வெள்குறவே

    நந்தியு மிந்த விதஞ்சதி கொட்ட 

    நமக்குவ ராதெனவே

        நாதனு மாதர வாகித் தலையை 

    யசைத்து நடஞ்செயவே

    தந்தன தந்தன திந்திமி யென்று 

    சதிக்கண முந்துறவே

        தாயுமை யானந் தக்கொடியுங் 

    கைத்தாளங் கொட்டிடவே

    கொந்தண வும்பொழி லெட்டிக் குடிக்குக 

    கொட்டுக சிறுபறையே

        கோவா மணியே வாடா மலரே 

    கொட்டுக சிறுபறையே1.

    சிறுபறையில் ஒலி சந்தநயத்துடன் நமது காதுகளில் கேட்கின்றதல்லவா? அதுவே இப்பாடலின் பெருமையாகும்!

    சில பாடல்களில் சிறுபறையின் ஒலிக்கேற்ப இன்னும் என்னவெல்லாம் ஒலித்தன எனக்கண்டு களிக்கலாம். சில பாடல்கள் முருகப்பெருமான் போர்க்களத்தில் செய்த வீரதீரப் பிரதாபங்களைப் பேசுவனவாகும். இத்தகைய பாடல்களின் சந்தம் போர்முரசம் போன்றும் அமைந்திருக்கும். இன்னுஞ்சில, ஐவகை நிலங்களின் அருமைபெருமைகளைப் பாடும். அத்தகையதொரு பாடல்தான் நாம் இப்போது காணப்போவது:

    அழகான திருப்போரூர் முல்லைநிலங்கள் செறிந்த ஊர். இவ்வூரின்கண் பலவிதமான ஒலிகள் எப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளன. முடைநாற்றம் கமழும் மெல்லிய உருவம் கொண்ட இடைப்பெண்களின் மத்துக்கள் தயிர்கடையும் கலங்களில் முழங்குகின்றன; தம் கன்றுகளை நினைத்த மாத்திரத்திலேயே பசுக்கூட்டங்கள் அழகான குடம்போலும் மடித்தலத்திலுள்ள பாலைச்சுரந்து, அன்போடு விம்மிக்கதறும் முழக்கமும் மிகுகின்றது. மூங்கில்களின் துளைகளின் வழியே விரல்களை விட்டுப்பிடித்து இசையினை எழுப்பும் தொறுவர்கள் எனப்படும் இடையவர்கள் ஊதும் குழலோசையும் கேட்கின்றது. பலநிறம் பொருந்திய காட்டுக்கோழிகள் முறைமுறையாக நின்று நெருங்கிக்கூவும் ஒலியும் எழுந்த வண்ணம் உள்ளது. விளைந்து மலர்ந்த செம்முல்லை மலர்களில் வண்டுகள் அமர்ந்து விளரிப்பண்ணை இசைக்கும் அழகிய முழக்கமும் கேட்கின்றது. காலை விடியலில் கடலின் ஒலியைப்போல இந்தப் பலவகை முழக்கங்களும் மிகுதியாக எழுகின்ற தன்மை கொண்டது இந்தப் போரூரின் முல்லைநிலங்கள். இப்போரூரின் இறைவன் குமரவேள் ஆவான். 

    ஒருவரை அறிமுகம் செய்யும்போது அவருக்கு என்ன ஊர், பிறப்பால் எந்தக்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிப்பது வழக்கம். அதுபோன்று இங்கு புலவர் முருகன் வளரும் போரூரின் சிறப்பைப் பற்பல சொற்களிற் கூறினார். அவனுடைய குலம்- குடிப் பெருமை கூற ‘குளமலிகண்ணன் தரும் இறை’ எனச் சில சொற்களையே கூறினார். இதுவே மிகவும் பெருமை தரும் அறிமுகமாக விளங்கி அழகு செய்கின்றது. குளம்- நெற்றி; அலிகம்- நெற்றி; – நெற்றிக் கண்ணனான சிவபிரான் தந்தருளிய முருகக் கடவுள் என்கிறார். வேறு என்ன பெருமை வேண்டும் மகனுக்கு? அவனும் தன் பங்கிற்கு முத்தமிழையும் தனது பெற்றோரைப்போல் தொடர்ந்து வளர்த்து அருளியவன்தான் அல்லவா?  

    “திருப்போரூர்க் குமரனே! நீ சிறுபறை முழக்குக,” எனப் புலவர் சிதம்பர அடிகளார் வேண்டுகின்றார். திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் இவர் பாடிய திருப்போரூர் சந்நிதி முறையில் உள்ள முப்பத்தாறு நூல்களுள் ஒன்றாகும். பொருள் வளமும் கற்பனை வளமும் மிக்கு விளங்குவது.

    அளைகடை முடைகதுவிய தளிர் வடிவத்து ஆய்ச்சியர் மத்தொலியும்

    அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி ஆன்நிரை கத்தொலியும்

    கிளைபடு தொளைவழி விரல்விடு தொறுவர்கள் கீதக் குழலொலியும்

    கேழ்செறி கானக் கோழிகள் முறைமுறை கிட்டிக் கூவொலியும்

    விளைதரு தளவத் தளிபல விளரி விளக்கிய சீரொலியும்

    விடியற் காலைக் கடலைப் பொருவ மிகுத்தெழு மாமுல்லைக்

    குளமலி கண்ணன் தருபோரூர் இறை கொட்டுக சிறுபறையே

    கொத்துறு முத்தமிழ் மெத்த வளர்த்தவ கொட்டுக சிறுபறையே2. 

    புல்லாங்குழலை இடையர்கள் வாசிக்கும் முறை இப்பாடலில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கிற்குழலில் அமைக்கப்பட்ட துளைகளில் (இசைக்கேற்ப) விரல்களை மாற்றிமாற்றிப் பொருத்தி (அவற்றை மூடியும் திறந்தும்) இசைக்கிறார்கள் என விளக்கமாகக் கூறியுள்ளமுறை நயக்கத்தக்கது. இவ்வாறு நுணுக்கமான நயங்களைப் புலவர் பெருமக்கள் தாமியற்றியுள்ள பாடல்களிலும் நூல்களிலும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளமை வியக்கத்தக்கது.

    முல்லைநிலத்திற்கான பண் ‘விளரிப்பண்’ என்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் தமிழிசை மரபுப்படி விளரிப்பண்ணானது மருதநிலத்துக்கு உரிய பண்ணாகும். வண்டுகளின் ஒலியே விளரிப்பண் என அறியப்படுகின்றது. இவ்வாறு திணைமயங்கி வருவதும் ஒரு இலக்கிய உத்தியாகும்.  

    இதேபோன்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப் பருவத்துப் பாடலொன்றில், ‘விளரிப் பண்ணைப் பாடுகின்ற வண்டுகள் முழங்குகின்ற கூந்தலையுடைய கொடி போன்றவளே!’ என அன்னை விளிக்கப்படுகிறாள்.

    ‘விளரிமி ழற்றருளி குமிறுகு ழற்கொடி3.’ என்பன பாடல்வரிகள்.

    திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழில் இன்னொருவகை இனிமையைக் கண்டு ரசிக்கலாம். தகப்பன்சுவாமியாகிய முருகப்பெருமான் உறையும் சுவாமிமலையின் சிறப்புகளைக் கூறுமுகமாக அங்கு என்னவெல்லாம் எவ்வாறு முருகனின் சிறுபறை ஒலிக்கேற்ப ஒலிக்கின்றன எனப் புலவர் கூறும்விதம் மிகுந்த நயம் வாய்ந்தது.

    அரங்கமெல்லாம் மத்தளம் எனப்படும் பறைமுழக்கம் ஒலிக்கும்; சாலைகள் அனைத்திலும் தருமமாகிய முரசொலி கேட்கும்; ஊரின் சபைகள் அனைத்திலும் தமிழின் இனிமை கேட்கும்; அங்கு வாழும் மக்கள் சிந்தை முழுவதும் சாந்தம் எனும் தன்மை நிரம்பியிருக்கும். பெண்கள் விளையாடும் இடங்களிலெல்லாம் கழங்கு, அம்மானைப் பண்கள் ஆகியவை பெருமளவில் பாடப்படும். மேகங்கள் கூடுவதைக் கண்ட மயில்களின் ஆனந்த அகவலோசை மலர்ப்பூங்காக்களில் நிறைந்திருக்கும். 

    வயல்கள் சூழ்ந்த தடங்களிலெல்லாம் பூந்தேனைச் சொரியும் கனிவாழைகளும், முதிர்ந்து வெடித்த தேன்மாங்கனிகளும் நிறைந்து, பறவைகளின் இன்னொலியால் நிறைந்திருக்கும்; இங்ஙனம் பலவித ஓசைகள் முழங்கும் சாமிமலை முருகனே! நீயும் உனது சிறுபறையை இவ்வோசைகளுக்கு ஈடாக முழக்கியருளுக! என்பார் புலவர்.

    தழங்கு முழவ மரங்கமெலாம் தரும முரசஞ் சாலையெலாம்

    தமிழி னினிமை சபைகளெலாம் சாந்த நிலைமை சிந்தையெலாம்

    கழங்கு கழலம் மனைப்பண்கள் கனிவாய் மகளிர் பண்ணையெலாம்

    களிக்கு மயிலி னகவல்மழைக் கலிப்பு மலர்ப்பூங் காவிலெலாம்

    விழுங்கு பூந்தேன் கனிவாழை வெடிப்புத் தேமா விளைந்தகனி

    வீழ விரியும் புள்ளினொலி விளைந்த வயற்சூழ் தடங்களெலாம்

    முழங்குஞ் சாமி மலைமுருகா முழக்கி யருள்க சிறுபறையே

    முடியா முதலே வடிவேலா முழக்கி யருள்க சிறுபறையே4.

    குழந்தை முருகன் சிறுபறையைக் கையில் ஏந்தி முழக்குகின்றான்- அவ்வொலியைக் கேட்பவர்களுக்கு அது ஒவ்வொரு விதமாகத் தோன்றுகிறதாம். இது ஒருவிதமான இனிய கற்பனை! 

    வடகலையோடு தென்கலையைப் பயிலுகின்ற புலவர் குழாம் ஒன்று ஆர்வமாகப் புரவலர்களைத் தேடி வருகின்றது. அவர்கள் செவியில் குமரன் முழக்கும் சிறுபறையொலி விழுகின்றது. உடனே கவிவாணர்கள் பரபரப்புடன் ஒருவருக்கு ஒருவர், “வாருங்கள், புலவர் பெருமக்களே, இந்நகரில் முழங்கும் கொடைமுரசின் ஒலி உங்களுக்குக் கேட்கவில்லையா? அது நம்மை, ‘வருக,’ என அழைக்கிறது; விரைந்து வாருங்கள், சென்று நமது கலைத்திறமை விளங்கப் பாடிப் பரிசில் பெறுவோம்,” என கூறிக் கொண்டு மற்றவர்களை ஊக்குவித்தபடி விரைகின்றனர்.

    சிவபெருமானுடன் அமர்ந்து உமையம்மை உரையாடிய வண்ணம் இருக்கிறாள். அவர்கள் செவியில்  இந்தச் சிறுபறையொலி கேட்கின்றது. சின்னஞ்சிறு பிராயத்திலேயே சூரசங்காரம் போன்ற பெரிய வீரச் செயல்களை எல்லாம் செய்து புகழ் பெற்றுவிட்டான் இவர்கள் மைந்தன் முத்துக்குமரன். இனி இப்போது அவனுக்கு மணம்முடித்துப் பார்க்கவேண்டும் எனும் ஆவல் பெற்றோர் இருவர் உள்ளத்திலும் பொங்கி எழுந்துள்ளது. மெல்லிய இளம்பிடி போன்ற தேவ உலகத்துப் பெண்ணானவளும் தேவர்க்கு அதிபதியின் மகளுமான தெய்வயானை எனும் அணங்கை மணம்முடிக்க எண்ணம் கொண்டுள்ளனர்!  அவ்வாறு அவளைக் குமரன் மணந்துகொள்வதற்கு உரிய மணமுரசு தான் ஒலிக்கின்றது என்று எண்ணி ஒருவருக்கொருவர் புன்முறுவல் கொண்டு உள்ளம் மகிழ்கின்றனராம். 

    தேவர்கள், அவர்களது அரசன் இந்திரன் ஆகியோர் எப்போதும் பகைவர்கள் தம்மை வெருட்ட வருகின்றனர் என எண்ணியவாறே உள்ளனர். தேவசேனாபதியாகிய குமரப்பெருமான் அவர்களது குலத்தை யாங்கணும் காத்து வருகின்றவன். இச்சமயம் அத்தேவர்கள் செவியில் முருகனான இச்சிறுபிள்ளை முழக்கும் சிறுபறையொலி விழுகின்றது. உடனே அவர்கள் உற்சாகமடைந்து ஒரு திருவிழாவிற்கே ஏற்பாடு செய்ய முனைகின்றனராம். எதனால்? இன்னுமொரு பகைவனின் படைதனை செங்குருதி பாயும் போர்க்களத்தில் வென்று வாகைசூடிவிட்டான் அவன்; அவனுடைய வெற்றியைக் கொண்டாடும் வெற்றிமுரசின் ஒலியாக இவ்வொலி அவர்கள் செவிகளில் கேட்கின்றதாம்!

    இவ்வாறு ஒரு திருநாட்டுக்கு உரிய கொடை, வீரம், மங்கலம் எனும் மூன்றுவிதமான முரசங்களும் இக்காவிரி நாட்டில் (புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீசுவரன் கோவிலில்) முழங்குகின்றன. ‘இந்நாட்டினை உடையவனும் முத்தமிழைப் பயில்கின்றவனுமாகிய பருதிப்பதியின் முருகவேளே, சிறுபறை முழக்குக,’ என மகிழ்வுமிகக் குமரகுருபரனார் முருகப்பெருமானைத் தாயின் நிலையில் நின்று பெருமிதம் பொங்க வேண்டுகிறார்.

    வம்மினெனப் புலவோரை அழைத்திடு

    வண்கொடை முரசமென

        வடகலை தென்கலை யொடுபயி லும்கவி

    வாணர்கள் ஓடிவர

    அம்மென் மடப்பிடி பொன்னுல கீன்ற

    அணங்கை மணம்புணரும்

        அணிகிளர் மணமுரசென்ன எம் ஐயனொடு

    அம்மை மனங்குளிர

    தெம்முனை சாயச் சமர்விளை யாடிச்

    செங்கள வேள்வி செயும்

        திறன்முரசு என இமையவர் விழவயரச்

    செழுநகர் வீதிதொறு

    மும்முரசமும் அதிர் காவிரி நாடன்

    முழக்குக சிறுபறையே

      முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன்

    முழக்குக சிறுபறையே5 

    தாரகாசுரன் முதலான அரக்கர்களுடன் முருகன் போரிடுகிறான்; முருகப்பெருமானின் படையின் நவகோடி வீரர்கள் அட்டகாசம் செய்தவாறு வருவதனால் நாற்றிசைகளும் பதறிக் கலங்குகின்றனவாம்; நாற்கோணமாக வியூகம் வகுத்து நான்குவிதப் படைகளும் அணிவகுத்து வருவதனால் கருங்கடல் கலங்கியது; பலவாறு தவமியற்றிப்பெற்ற வரங்களால் கிடைத்த கோடிகோடியான வெற்றிகள் அழிந்தொழியப் போவதனால் தாரகாசுரன் தன் மனம் கலங்கலானான்; தோல்வியையடையாத படைகளைக்கொண்ட மாயாபுரியைச் சேர்ந்த அவுணர்கள் இனி வரப்போகும் தோல்விக்கு அஞ்சித் தம் கண்கள் கலங்கி வருந்தினர். தீய மனத்தவர்களான அசுரர்களின் பெண்டிர் தமது அருமையான கருப்பம் கலங்குமாறு அச்சம் கொண்டனர். கோடிக்கணக்கில் வரும் அரக்கர்களின் கோடிக்கணக்கான உயிர்கள் அலறிடவும், அந்தகனான காலன் திசைகளில் நின்று கலங்கவும், சிவனுடைய அவதார வடிவமாக வந்துதித்துள்ள முருகவேளே! நீ உனது சிறுபறையை முழக்குவாயாக, என வேண்டுவதாக அமந்த பாடலிதுவாம்.

    நவகோடிவீரர்வரு மட்டகாசத்தினா

           னாற்றிசைகள் கெடிகலங்க

    *தகசதுரங்கபத சதுரங்கவர்க்கத்தி

          னாற்கருங் கடல்கலங்கத்

    தவகோடியால்வந்த செயகோடிசாயவே

           தாரகன் மனங்கலங்கச்

    சாயாதபடையான மாயாபுரத்தவுணர்

          தம்மிலே கண்கலங்க

    அவகோடிபெருமவுணர் புணர்கோடிமடவார்க

           ளரியகர்ப்பங் கலங்க

    வருகோடிவருமசுர ருயிர்கோடியலறவே

           யந்தகன் றிசைகலங்க

    சிவகோடியவதார வடிவாகவருமுருக

           சிறுபறை முழக்கியருளே 6       

    இப்போரின் காட்சிகள் குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழில் காட்சியாக்கப்பட்டுள்ளன.

    முருகன் தமிழ்த்தெய்வமல்லவா? முருகனின் சிறுபறை ஒலிக்கேற்பப் புலவர்கள் தமிழ்மொழியின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐவகை இலக்கணங்களின் துணைகொண்டு சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி எனும் ஐம்பெரும் காப்பியங்களை அமைத்தனர். மேலும் தமிழின் பலதுறைகளையும் ஆராய்ந்து செய்யுட்களின் நடைவகையான க்ஷீரபாகம், திராக்ஷாபாகம், கதலீபாகம், இக்ஷுபாகம், நாளிகேரபாகம் முதலானவைகளைக் கொண்டும், ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி எனும் கவிதைவகைகளைக் கொண்டும் தமிழ்மொழியைத் துதித்து முழக்குகின்றனர். இதற்கியைய நீயும் உனது சிறுபறையை முழக்குவாயாக என வேண்டும் பாடல். 

    தமிழ்க்கடவுளான குமரனைத் தமிழ்மொழியின் நயங்களுடன் இணைத்துப் போற்றும் இனியதொரு பழனிப்பிள்ளைத்தமிழ்ப் பாடலிதுவாகும்.

    ‘ஐவகை யிலக்கணமு மைங்காவி யத்துறையு

    மாராய்ந்து பாகமுறையால்

        ஆசுமது ரஞ்சித்ர வித்தார முஞ்சொலு

    மருங்கவிஞர் துதிமுழக்க7‘ என்பன பாடல்வரிகள்.

    ‘பான் முந்திரிகை வாழைக் கனியாய்க், 

    கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத்து- இளங்கனியாய்த் 

    தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான

    முத்திக் கனியேஎன் முத்தமிழே8,‘எனும் தமிழ்விடு தூதின் கவிதைவரிகளை இங்கு நினைவு கூரலாம்.

    முருகனின் சிறுபறை முழக்கொலி ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களது சமயம் சார்ந்த ஒலியாகத் தோன்றுகின்றது: சங்கரனாம் சிவபிரானின் அன்பர்களான சைவர்களுக்கு அது அவர்களது சமய முழக்கமாகக் கேட்கின்றது; பாம்பணையில் வளரும் சங்கேந்திய திருமாலின் அன்பர்களுக்கு அது வைணவசமய முழக்கமாகக் கேட்கின்றது. புத்தனின் அடியார்களுக்கும் அருகப்பெருமானின் தொண்டர்களுக்கும் அவரவர் சமய முழக்கமாகக் கேட்கின்றது. தூய ஏசுநாதனின் தாமரைமலர்ப் பதங்களைப் பணியும் அடியவருக்கும் அல்லாவின் பக்தர்களுக்கும் தமது மதமுழக்கமாகவே இச்சிறுபறையொலி கேட்கின்றது.

    ‘சங்க ரன்பா லன்பு கொண்ட

    சைவ ரோடு பாம்பணை

        தங்கு சங்க ணிந்த வன்றன்

    தாள்வ ணங்கு வைணவர்

    ………………………………………….

    பங்க யம்ப ணைந்து ளோரும்

    பகரு மல்லா பக்தரும்

        பால னுன்மு ழக்கு தத்தம்

    மதமு ழக்க மென் றிட9

    …………………………………..’ என்பன பாடல் வரிகள்.

    (குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- தி. சு. ஆறுமுகம் சிவதாசன்)

    இப்பாடலின் உட்பொருள் மிக அருமையானது. ஒன்று, இப்பாடலில் அனைத்து சமயங்களும் ஒன்றே எனும் கருத்து தொக்கி நிற்கின்றது. அவை பரம்பொருள் எனும் பெருங்கடலில் நாம்  சென்று சேர்வதற்கு இறைவனைக் குழந்தையாகக் கொண்டு நாம் செலுத்தும் அன்பும் ஒரு காரணமாகும். 

    இவ்வாறு பல சுவைகளையும் இப்பாடல்களில் நாம் படித்து இன்புறலாம். 

    (வளரும்)

    ———————–&—————-

    பார்வை நூல்கள்:

    1. நடேச கவுண்டர்- எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
    2. சிதம்பர அடிகள்- திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    3. குமரகுருபரர்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
    4. நடேச கவுண்டர்- திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்
    5. குமரகுருபரர்- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
    6. மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்- மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ்
    7. விசயகிரி வேலோச்சின்னவையன்- பழனிப் பிள்ளைத்தமிழ்
    8. தமிழ்விடு தூது
    9. தி. சு. ஆறுமுகம் சிவதாசன்- குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்.
    Share