Blog

  • அறுபடை ஆண்டோன் துதி

     

    சத்தியமணி

     

    ஒமெனும் பிரணவ மகிமையைத் தந்தைக்கு
    உணர்த்திய சுவாமிநாதா
    தாமெனும் தண்ட பாணியைகையூன்றி
    மலையாளும் பழனிபாலா
    நாமெனும் அகபத்ம சூரர்படையழித்தாய்
    அலைவாழும் வெற்றிவேலா
    பூமணம் கமழும் தேவசேனையைஏற்று
    தலைவனாய் தணிகைமேலா

    நித்திலம் துதிபாட மதுரைதிருபரங்
    குன்றேறி குளிர்ந்தகுமரா
    முத்தினக் குறவள்ளி காதற்மணங்கொண்டு
    பழஞ்சோலை வாழும்முருகா
    புத்தியில் ஆறுமுகம் சித்தியில் ஆறுபடை
    வித்தையைத் தந்தகுருவே
    சத்தியம் சரவண பவமென்று பாடினேன்
    நித்தமென் நாவிலருளே

     

    படங்களுக்கு நன்றி:

    http://www.tiruchendurmurugan.com/etemple3.html

    Share
  • சிறகுதிர்த்த மின்மினி

    சாந்தி மாரியப்பன்

    மின்மினி மந்தையினின்று
    வழி தப்பிய எரிகல்லொன்று
    கவணிடை
    எறிகல்லாய்ப்புறப்பட்டது..
    வெகுதூரப்பயணமோவென
    ஏங்கி வினவிய சகாக்களைப்
    புறங்கையால் ஒதுக்கிவிட்டு
    உல்லாசமாய்ப்புறப்பட்ட உற்சாகத்துடன்
    துள்ளித்துழைந்தது அண்டப்பெருவெளியில்.
    இலக்கில்லாப்பயணத்தில்
    அதிரும் பிம்பங்களைச் சிதற விட்டபடி
    துழாவித்துழாவி உணர்கொம்புகள் நீட்டி
    முன்னேறிக்கொண்டுதானிருந்தது அது.
    இலக்கில்லா எவரோ.. எதுவோ..
    என்றேனும் ஓர் நாளில்
    இலக்கினை அடைந்தே தீரவேண்டிய
    நியதிக்குட்பட்டு
    பூமாதேவியிடம் மயங்கி
    முத்தமிட முயன்றதில்
    சீறி எரித்தது
    லக்ஷ்மண ரேகை..
    உதிர்ந்து வீழ்ந்தது மின்மினி
    ஆயிரமாயிரம் பரப்பளவில் தன் சிறகுகளை உதிர்த்தபடி..

    படத்திற்கு நன்றி: http://www.foxnews.com/science/2013/02/15/injuries-reported-after-meteorite-falls-in-russia-ural-mountains

    Share
  • தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) – (5)

    திவாகர்

    தேவன் ஒரு சகாப்தம் – பகுதி (4)

    தற்சமயம் கனடாவில் வசிக்கும் பிரபல பதிவர், எழுத்தாளர் பேராசிரியர் திரு பசுபதி எல்லாவற்றிலும் எனக்கு சீனியர். நான் படித்த அதே ராமகிருஷ்ணா (வடக்கு) பள்ளியில் எனக்கு முன்னர் 17 வருட சீனியர். தேவன் எழுத்துக்களின் மீதுள்ள ரசிகத் தன்மையிலும் எனக்கு மிகப்பெரிய சீனியர். தேவன் பற்றிய பல விவரங்கள் தொகுத்தவர்.  அவர் தன் வலைப்பதிவில் தேவன் குறித்த பல செய்திகள், சில கட்டுரைகள், சில சிறு கதைகள் என அப்படியே பதிப்பித்திருக்கிறார். அவர் பதிவுகளிலிருந்து குறிப்பு எடுத்துக் கொள்ளவும் எனக்குத் தாராளமாக அனுமதி கொடுத்த தயாநிதி. அவருக்கு என் நன்றியை தக்கணமே செலுத்துகிறேன்.

    புதினங்களைப் பொறுத்த மட்டில் தேவனின் முதல் நாவலான ‘மைதிலி’ 1939 ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வராமல், அதன் துணைப் பதிப்பான ‘நாரதர்’ இதழில் தொடராக வந்தது. அப்போது நாரதருக்கு ஆசிரியர் துமிலன். கல்கி ஆனந்த விகடனில் இருந்து வெளியேறியதும் கொஞ்சநாட்கள் துமிலனும் நாடோடியும் விகடனின் ஆசிரியர் பொறுப்பில் வந்ததாகவும், ஆனால் விரைவிலேயே தேவனுடைய பொறுப்பில் விகடன் வந்து விட்டதாகவும் சில விவரங்கள் மூலம் தெரியவருகிறது. 1942 இல் மாலதி எனும் வாரம் ஒரு பக்க நாவல் கதையை ஆனந்த விக்டனில் ஆரம்பித்தார். அப்போது யுத்த காலமாகையால் செய்தித்தாள்களுக்கு பஞ்சம் என்ற நிலையில் இந்த சிக்கனத்தையும் கடைப்பிடிக்கவேண்டிய நிலையில், தேவன் இந்த சீரியஸான விஷயத்திலும், தன் ஹாஸ்யத் தொனியை மறவாமல் 14 வாரங்களில் எழுதியது இந்த ‘மாலதி’ எனும் வாரம் ஒரு பக்க நாவலாகும். இதை முழுமையாகப் படிக்க பெரியவர் பசுபதி அவர்களின் வலைப்பூவில் ஒரிஜினல் கதையாகக் கொடுத்திருப்பதால் அப்படியே அக்கதையை இந்த இணைப்பில் http://s-pasupathy.blogspot.in/2012/06/blog-post.html படிக்கலாம்.  தேவன் தன் கதைகளுக்கு எப்போதுமே அந்தந்தக் கதைகளின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாகக் கொடுத்திருக்கிறார். இதனால் கதையைப் படிக்கும்போதே தலைப்பில் உள்ள கதாபாத்திரத்துக்கு வாசக மனம் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கும். தன் முதல் நாவலான ’மைதிலி’ யிலிருந்து இதே உத்தியைத் தான் பின்பற்றி வந்தார். அவர் நாவல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவையாக இருப்பதால் இது மிகச் சிறந்தது.. அல்லது இது சுமார் ரகம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. முக்கியமாக கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் விதமும், அவர்களின் நடவடிக்கைகளையும் கதைகளில் படிக்கையில் இந்தக் கதாபாத்திரத்தை விட சிறந்த கதாபாத்திரம் இன்னொன்று இல்லை என்றும் சொல்லநேரும்.

    தேவனின் ’கல்யாணி’ கதை 1944 இல் எழுதப்பட்டதாகும். இந்தக் கதைக்குப் பின்னர்தான் ‘மிஸ் ஜானகியை’ எழுதினார். கல்யாணியின் கதைச் சுருக்கத்தை எழுதினால் சர்வ சாதாரணமான கதை என்று யார் வேண்டுமானாலும் சொல்லி விடலாம். தாய் தந்தையை இழந்த கல்யாணி அழகான இளம்பெண். கும்பகோணம் சொந்த ஊர். சென்னையில் கல்லூரிப்படிப்புக்காக வந்திருக்கிறாள். கல்யாணியின் தோழி உமா, உமாவின் அண்ணன் நீலு, நீலுவின் தோழன் சுந்தரம். இந்த சுந்தரம்தான் கதையின், கல்யாணியின் நாயகன்.

    கல்யாணியின் பாட்டனார் துரதிருஷ்டவசமாக தன் வீட்டில் வேலைசெய்யும் சமையல்காரக்குடும்பத்தின் வலையில் சிக்கி, அந்த சமையல்காரப் பெண்மணியின் மூத்த மகளையே கல்யாணம் செய்துகொண்டு சில நாட்களிலேயே இறந்தும் போகிறார். ஆனால் இந்த விஷயம் கல்யாணிக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்படுகிறது. பாட்டன் செத்த பதினைந்தாம் நாளில் ஒரு போஸ்ட் கார்ட் அவள் பெயருக்கு ஒரு துளி விவரத்தோடு கிடைக்க உடனே அடித்துப்பிடித்துக் கொண்டு கும்பகோணம் ஓடுகிறாள். அதற்கு முன் சென்னை எழும்பூரில் அகஸ்மாத்தாக ரயிலின் கடைசி டிக்கெட் சுந்தரத்துக்குக் கிடைக்க, அதைத் தவறவிட்ட கல்யாணிக்கு தியாகம் செய்ய, அங்கேயே கண்களும் கண்களும் கலந்து ஒரு அவசரக் காதல் அவர்கள் அறியாமல் பிறந்து விடுகிறது. கும்பகோணம் வந்தாலோ அங்கே வீட்டில் ஒரே ரகளை. தாத்தாவின் மிகப் பெரிய சொத்தான ரத்ன வைடூரியங்களை கெட்டியாக தம் கைக்குள் வைத்துக்கொண்டு சமையல்கார குடும்பம் கல்யாணியை ஏமாற்றுகிறது. இதற்கு ஒரு முடிவுகட்டவும் சோகமயமான கல்யாணிக்கு எவ்வகையாயினும் இந்த நகைகள் கிடைத்தே தீரவெண்டுமென்ற ஆவேசத்தில் சுந்தரம் உதவுவதும் தன் கில்லாடி நண்பன் (வெறும் கில்லாடி இல்லை ஜகத்ஜால கில்லாடி) நரசிம்மனோடு ஜோடி சேர்ந்து திருடுவதும், போலீஸ் கேஸில் மாட்டிக்கொண்டு சிரமப்படுவதும்தான் கதை.

    ஒரு நகைச்சுவைக் கதைதான். எல்லா சம்பாஷணைகளும் இந்த நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டுதான் தேவன் எழுதியிருக்கிறார். கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும், அது அளவில் மிக சிறியதாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தனி மதிப்பையும் கொடுத்திருப்பார் தேவன்.

    சுந்தரத்தால் மூக்கிழுக்கப்பட்டு மூக்கால் முனகும் மதராஸ் மலையப்பராகட்டும், சுந்தரத்தின் அத்தையிடமிருந்து வைரக்கல் மறைக்கப்பட்ட கம்பளியை தானமாகப் பெற்ற மாயவரத்து சாஸ்திரிகளாகட்டும் ஒரு சிறிய அளவே கதையில் பேசப்பட்டாலும் தேவனின் எழுத்துக்களால் மிகவும் புகழப்படுபவர்கள்தான். அதே போல தெனாவெட்டு நரசிம்மன் இந்த அப்பாவி சுந்தரத்தைக் கையில் போட்டுக்கொண்டு அவன் சந்தேகங்களை அவன் பாஷையில் (யூ ப்ளடி ராட்டன் பொடோடோ என்ற முன் வார்த்தையுடன் ) தீர்த்துக்கொண்டு வரும்போதும் படிப்பவர்கள் மிகவும் ரசிக்கத்தான் செய்வார்கள். எந்த கதாபாத்திரமும் சோடை போக்வில்லை என்பது போலத்தான் ‘கல்யாணி’யின் அத்தனை கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். இதோ கதையில் சிறு பகுதியாக இடம் பிடித்து நம்மை நலம் விசாரிக்கும் கும்பகோணம் டாக்டர் பி.ஜி. கிருஷ்ணன பற்றி தேவன் எழுதுவதைப் படிப்போம்.

    ‘கும்பகோணத்தில் மடத்தெருவில் இருந்தது டாக்டர் பி.ஜி. கிருஷ்ணனுடைய வீடும் ஆஸ்பத்திரியும். கீழே குடித்தனம், மாடியில் ‘டிஸ்பென்ஸரி’ என்று வைத்துக் கொண்டிருந்தார் டாக்டர். வாசல்புறமாக இருந்த மாடிப்படி மிக மிக செங்குத்தாக இருக்குமாகையால், அதில் ஏறி பழக்கப்பட்ட பேர் அவ்வளவு பேருக்கும் அதில் இருப்பது முப்பத்திரண்டு படிகள் என்பது ‘நெட்டுருப்’ பாடம்.

    மாடியில் டாக்டரின் அறைக்கு உள்ளே, டாக்டர் உட்காருவதற்காக ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டிருக்கும். மேஜை நிறைய புஸ்தகங்களாகவே அடுக்கியிருக்கும். டாக்டரின் நாற்காலியைத் தவிர இன்னோரு இரும்பு நாற்காலியும் ஒரு ஒற்றை பெஞ்சும் போட்டிருக்கும். இரும்பு நாற்காலியில் உட்கார உரிமை பெற்றவர் ஒன்று, டாக்டரின் அத்யந்த நண்பராக இருப்பர் அல்லது யாராவது பெரிய உத்யோகஸ்தராக இருப்பார்.

    ஒற்றை பெஞ்சு நிறைய வியாதிஸ்தர்கள் கூடி, ஹாலின் பல இடங்களிலும் நின்று, மாடிப்படியிலும் கூட விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் படிக்கு ஒன்றாகப் பதுமைகள் நின்றன போல் சிலர் நிற்கத் தொடங்கிய பிறகுதான் டாக்டர் பி.ஜி.கிருஷ்ணன அதிவேகமாக ‘டிஸ்பென்ஸரிக்குள்’ பிரவேசிப்பார். டாக்டர் வந்தவுடன் யாரையும் கவனிக்காமலே ‘டக் டக்’ கென்று தன் அறைக்குள் சென்று விடுவார். காத்திருப்பவர் கண்களெல்லாம் அதன்பின் அறைகதவை நோக்கியிருக்கும். இரும்பு நாற்காலியில் ‘விருதா’ கால்ட்சேபம் செய்ய வந்திருக்கும் ‘லோட்டா ஆசாமியைப் பார்த்து ஒரு புன்னகை செய்வார்.

    ‘சுக்காம்பாளையத் தெருவிலே ஒரு கேஸ். மூணு நாளாக 105,106 டிகிரி. என்னிடம் சொல்லல்லை. விடியக் கார்த்தாலை வந்து என்னைக் கூப்பிடறான், கேளுங்க ஸார்! நாம் கை வெச்ச உடனே ஆளு ‘க்ளோஸ்’ ஆகும் – நமக்கு கெட்ட பேரு! இருந்தாலும் மனசு கேழ்க்கிறதா? போய் ஒரு இஞ்செக்ஷன் பண்ணிவிட்டு ஒடி வருகிறேன். இப்படித்தான் பாருங்கோ.. நம்ம ஆலந்தூர் ‘கோண்டு’! உங்களுக்குத் தெரியுமே ஸார்! சினிமாவெல்லாம் ‘ஆக்ட்’ பண்ணியிருக்கானே; அவனுக்கு ஸீரியஸாயிடுத்து போனமாசம்…வேற ஒருத்தர் ட்ரீட்மெண்ட்.. ரேழிக்கே கொண்டுவந்துட்டா. நான் அந்தப் பக்கம் அகஸ்மாத்தாப் போனேன். அவன் தாயாதி பங்காளிகள் படீர் படீர்னு நெஞ்சிலே அடிச்சுக்கறா! மெல்லக் ‘கோண்டு’ மார்பிலே கை வெச்சேன்.. ரொம்ப லைட்டா ‘பீட்டிங்’ -அம்மாமார்களே! இங்கே இவருக்கு அடிச்சுக்கிற மட்டும் நீங்க அங்கே அடிச்சுக்கவேண்டாம்.. சித்தெ பொறுத்துக்குங்கோ! இன்னேன். ஒரு ‘கிளிஸரைன்’ இனிமாவைக் கொடுத்து உள்ளே கொண்டுபோகச் சொன்னேன். மறுநாளைக்கு மறுநாள் ‘கோண்டு’ வந்து சாஸ்திரிகள் ஓட்டல்லே ரைஸ்-இட்லி கிடைக்குமா?ன்னு கேழ்க்கிறான்’ என்பார்.

    எதிரில் உட்கார்ந்திருக்கும் ‘லோட்டா’ ஆசாமி பரவசமாகிவிடுவார். இப்படி இன்னும் கதைகளை உதறி விசிறி விட்டு டாக்டர் ஆரம்பிப்பார்.

    ஒரு சீக்காளி மருந்து வாங்கிகொண்டு வெளியே போனவுடன் இதரர்களுக்கு அவனுடைய கதையை ஹாஸ்யரஸத்துடன் சொல்வார் டாக்டர். மற்றவர்கள் தங்களைப் பற்றியும் இப்படி ஒரு பேச்சு நடக்கும்’ என்ற நினைவே இல்லாமல் கேட்டு ஆனந்திப்பார்கள்!

    எல்லோரிடமும் என்ன உடம்பு என்று சொல்லிவிடும் சுபாவம் அவருக்கில்லை. ‘ஒன்றுமில்லை! பயப்படாதே! நீ தெரிந்து கொண்டு என்ன லாபம்? நான்தானே தெரிந்துகொண்டு மருந்து கொடுக்கவேண்டும் உனக்கு! சாப்பிடு..பார்க்கலாம்..போ’ என்பார். அந்த ஆசாமி போன உடனே, ‘ஆச்சு, இவன் இந்த சீசா முழுக்கச் சாப்பிட இருக்கமாட்டானே.. காலப்பிங் டி.பி..- நான் என்ன செய்யறது.. ஏன்? யார்தான் என்ன செய்யமுடியும்?” என்பார். அவர் பேச்சில் நிஜகலப்பு இருந்தால் என்ன.. இல்லாவிட்டால் என்ன? சதா தமாஷாக இருக்கும்!

    கதையில் தேவன் முன்கூட்டியே இந்த டாக்டரைப் பற்றி  கதாநாயகன் கும்பகோணம் வந்தபின், அவன் நண்பன் அரட்டை அய்யாசாமி மூலமாக நமக்கு  ஒரு வார்த்தையில் அறிமுகம் செய்கிறார் – எப்படி என்று படியுங்களேன்:

    ‘பி.ஜி.கிருஷ்ணன் வைத்தியம் என்றால் உனக்கு தெரியாதோ? ஆள் க்ளோஸ்! தம்பி.. பேஷண்ட் ஃபட்..ஆஸாமி ஃபினிஷ்! கிருஷ்ணன் வந்துட்டுப் போனாலே பின்னாலே அழுகுரல்; அதைத் தொடர்ந்து சிவசாம்ப சாஸ்திரிகள் மந்திரம் எல்லாம் கணீரென்று கேட்கும்’

    சி.ஐ.டி சந்துரு எனும் ஒரு கதாபாத்திரம். இவர் மகாபெரிய கைகாரர். கிரிமினல் குற்றவாளிகளின் பெயர்களை மட்டுமல்ல, அவர்கள் முழு ஜாதகத்தையே நினைவில் வைத்து அவர்களை மடக்கிப் பிடிப்பதில் வல்லவர். (பின்னாட்களில் தேவனின் கடைசி கதை சி.ஐ.டி. சந்துரு’ தான். பெரிய அளவில் சந்துரு சம்பந்தப்பட்டது) இப்படிப்பட்டவர் இந்த கல்யாணி சம்பந்தப்பட்ட நகை திருட்டுக் கேஸை சாமர்த்தியமாக நடத்துவதையும், இன்ஸ்பெக்டர் கோபாலன் மேற்பார்வையில் இந்த வழக்கு நகர்வதையும் தேவன் எழுத்துக்களில் படிக்கவேண்டும். இன்ஸ்பெக்டர் கோபாலன் ஏற்கனவே தேவன் எழுதி வந்த துப்பறியும் சாம்பு மூலம்  வாசகர்களுக்கு பிரபலமானவர். கும்பகோணத்தில் மாற்றலாகி வந்த வேளையில் இந்த கேஸ் அவரிடம் வருகிறது. சந்துரு’வின் ஆலோசனையின் பேரில் மாயவரம் சாஸ்திரிகளிடமிருந்து ஒரு கம்பளிப் போர்வையில் இருக்கும் வைரங்களைத் திருப்பிக்கொண்டு வரும் கெட்டிக்கார நரசிம்மன், அவன் பின்னே இன்னொரு காரில் ஏமாற்றமாக வரும் சுந்தரமும் அவன் நண்பன் அய்யாசாமியும், மூவரையும் கும்பகோணம் திரும்பியபின் போலீஸ் வளைத்துப் பிடிக்கிறது. முதலில் நரசிம்மனை விசாரித்த போலீஸ் அவனிடமிருந்து ஏதும் விஷயம் தேறவில்லை என்று தெரிந்ததும், போலீஸ் எனும் வார்த்தையைக் கேட்டே அச்சப்படும் நம் கதாநாயகன் சுந்தரத்தை விசாரிக்க அழைக்க, அவன் அவர்கள் முன்னே வந்து அந்த ‘பிரசித்த பெற்ற’ நாற்காலியில் அமர்கிறான். அந்த நாற்காலியில் அமர்ந்த எந்த அக்கூய்ஸ்டும், கோபாலன் கொக்கிப் பிடி போட்டு கேட்கும் கேள்விகளில் தம் குற்றத்தை எளிதில் ஒப்புக்கொள்வதால், அந்த நாற்காலி ‘பிரசித்தி’ பெற்றுவிட்டதாக தேவன் எழுதுவார்.

    (தொடர்ந்து வரும்)

    Share
  • பிரம்மாவைக் கண்டோம்!

    மாதவன் இளங்கோ

    இந்தக் கட்டுரையின் தலைப்பில் நான் குறிப்பிட்டிருக்கும் ‘இந்த பிரம்மா யார்?’ என்று உங்களுக்கு நிச்சயம் கேள்வி எழுந்திருக்கும். அவர் வேறு யாருமல்ல; சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவனே தான்!

    “இந்த மனிதர்  கதை எழுதுவார் என்று தெரியும். இப்போது கட்டுரைக்குள்ளும் கதையை நுழைக்க ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது” என்று நீங்கள் நினைப்பது எனக்கு டெலிபதி மூலம் வந்தடைந்து விட்டது.

    ஆனால் இது கதையும் அல்ல; ஆன்மீகக் கட்டுரையும் அல்ல. மாறாக, ஒரு பதிமூன்று வயது சிறுவன், தனது ஒன்பது வயது தம்பியுடனும், முப்பது-நாற்பது வயது மதிக்கத்தக்க பெரியவர்களுடன் புரிந்த ஆன்மீகப் பயணங்களின் அனுபவக் கட்டுரை. ஆகையால் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, நான் ஏதோ தவறாக எழுதிவிட்டேன் என்று வெகுண்டெழுந்து வந்து எனது கட்டுரையை முடக்கப் போராடாமல், நீங்களும் ஒரு பதிமூன்று வயது சிறுவனின் மனநிலைக்குச் சென்று படித்து ரசிக்கவும். சிறுவயது நினைவுகளைப் போல இனிமை தரக்கூடிய விஷயம் வேறொன்று இருக்க முடியுமா?

    “வாழ்க்கையிலும் ஒரு ரிமோட் கண்ட்ரோல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்ற திரைப்பட வசனம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை. சென்றது சென்றதுதான். ‘சென்றதினி மீளாது மூடரே!’ என்று பாரதி வந்து தலையில் குட்டுவார்.

    ஆனால் அதுபோன்ற ஒரு ரிமோட் கண்ட்ரோல் இல்லாத குறையை ஒரு சுஜாதா புத்தகம் எனக்கு நிவர்த்தி செய்ததால்தான் இந்த கட்டுரையையே எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த கட்டுரை உங்களுக்கான  அத்தகைய ஒரு ரிமோட் கண்ட்ரோல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

    எனக்கு இப்போதெல்லாம் எதைப் பற்றிப் படித்தாலும் அது தொடர்பாக என் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வந்து, நான் அந்த நினைவுகளில் மூழ்கி, சில சமயங்களில் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தையே மூடிவைத்தும் விடுவதுண்டு.

    அப்படித்தான் நேற்று இரவு, என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா, அவரது  திருச்சி நினைவுகள் பற்றி எழுதியிருந்த மூன்றே மூன்று பக்க கட்டுரையை, எனது நினைவுகளுக்கிடையே படித்து முடிக்க இரண்டு மணிநேரம் எடுத்துக் கொண்டேன். அவரது எழுத்து திருச்சி நகர வீதிகளில் உலா வர, எனது நினைவுகள் திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கோயமுத்தூர் என்று அலைந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக அந்தக் கட்டுரையை வாசித்து முடித்து விட்டு, என்னை அவ்வளவு நேரம் வாசிக்க விடாமல் தொல்லை செய்துகொண்டிருந்த என்னுடைய சிறுவயது நினைவுகளை எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.

    முதலில் திருவண்ணாமலை. ஆம். அங்குதான், தலைப்பில் கூறியுள்ளபடி நாங்கள் ‘பிரம்மாவைக் கண்டோம்’. திருவண்ணாமலை எனக்கு மிகவும் பிடித்தமான, என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு நகரம்.

    எனக்கு அப்போது பதிமூன்று வயது; என் தம்பிக்கு ஒன்பது. அப்போதெல்லாம் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருவண்ணாமலைக்கு நாங்கள், என் தந்தை மற்றும் அவரது நண்பர்களுடன் கிரிவலம் செல்வதுண்டு.

    எங்களின் ஆன்மீகக் குழுத் தலைவர் ஒரு அருமையான மனிதர். அறிய பல ஆன்மீகச் சிந்தனைகளை எங்களுக்குள் விதைத்ததில் அவருக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. தமிழ் வேதங்களாகத் திகழும் பன்னிரு திருமுறைகளையும் அவரது பத்து விரல் நுனிகளில் வைத்திருப்பார்.

    இந்தப் பயணங்களுக்காக என் தந்தையார் எங்களை தயார் செய்த விதம் மறக்க முடியாதது. எனக்கும் என் தம்பிக்கும் ‘மாதம் ஒரு வேதம்’ என்று போட்டியெல்லாம் வைப்பார். தமிழ் வேதங்களை மனனம் செய்து நாங்கள் இருவரும் உரக்கப் பாட அவர் அதை, டேப் ரிகார்டரில் பதிவு செய்து எங்கள் இருவருக்கும் பரிசு வழங்குவார்.

    அதிலும் குறிப்பாக மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை இன்று கூட என்னால் ‘நமச்சிவாய வாழ்க’ என்று ஆரம்பித்து ‘பல்லோரும் ஏத்தப் பணிந்து’ வரை ஒரே மூச்சில் சொல்லி திருச்சிற்றம்பலத்துடன் முடிக்க முடியும்.

    தமிழ் இலக்கிய உலகிற்குள் நான் காலடி எடுத்து வைத்தது இப்படித்தான். தமிழ் இலக்கியம் என்றாலே இன்றும் எனக்கு முதலில் சைவ இலக்கியங்கள் நினைவுக்கு வருவதற்கான காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

    கிரிவலம் செல்லும் போது நானும் என் தம்பியும் சிவபுராணத்தை பக்தியுடன் உரக்கப் பாடி வர, ஒவ்வொரு வரிக்கும் ஒரு கதை சொல்லுவார் எங்களுடைய குழுத் தலைவர்.

    சைவத்தின் நுண்ணிய கருத்துகளையும், சித்தாந்த நெறிகளையும் அவர் போதித்துக்கொண்டே வர, என் தந்தையின் இன்னொரு நண்பர் காற்றைப் பிரித்தவாறு, அவற்றை எல்லாம் ஆமோதித்துக் கொண்டே வருவார். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நான் நடக்க, என் தம்பி அதுமுடியாமல் ‘க்ளுக்’ என்று சிரித்து விட்டு வாயைப் பொத்திக் கொள்வான். இப்படியாக பாடலும், கருத்தும், நடையும், சிரிப்புமாக மாதமாதம்  எங்களது  ஆன்மீகப் பயணம் ஆரவாரமாக இருக்கும்.

    சிவபுராணத்தோடு படுஜோராக ‘முதல் இந்திர லிங்கத்தில்’ பயபக்தியுடன் ஆரம்பிக்கும் எங்களின் ஆன்மீகப் பயணம் எம லிங்கம் தாண்டி கிரிவலப் பாதைக்குள் நுழைந்து, நிருதி லிங்கத்தருகே சிறிது சுருதி குறைந்து, வாயு லிங்கம் தாண்டி குபேர லிங்கம் வந்தவுடன் பாய் சுருட்டிப் படுத்துவிடும்.

    அந்த ஒரே ஒரு மலை, கிரிவலப் பாதையின் ஒவ்வொரு பகுதியிலிருந்து பார்க்கும் போதும் ஒவ்வொரு விதமாக தோற்றமளிக்கும். அந்த ஒவ்வொரு தோற்றத்துக்கும் கூட ஒரு அர்த்தத்தையும், கதையையும் சொல்லுவார் எங்கள் தலைவர். பௌர்ணமி அன்று நிலவொளி படர்ந்த அந்த அழகிய மலையை, செயற்கை சத்தங்களற்ற ரம்யமான, அதி தெய்வீகமான சூழலில் பார்க்கும் போது மனதிற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.

    அந்த மலையையே இறையாக பாவித்து வலம் வருவது தான் ‘கிரிவலம்’ (கிரிவலம் பற்றி தெரியாதவர்களுக்காக). நமது கலாச்சாரத்தில் ‘இயற்கையே இறைவன்’ என்பதற்கு இதை விட சிறந்த சான்று வேறு இருக்க முடியாது. இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், ஞானக்கவி.பெருமாள் ராசு அவர்களின் வரிகள் நினைவுக்கு வருகின்றன:

    நிமிர்ந்த மலையின் கம்பீரம்

    வித்தியாசம் பார்க்காமல் வீசும் காற்று,

    குறைவை நிறைவு செய்ய ஓடும் நீர்

    இப்படி எல்லாமே குருநாதர்களே! 

    புரிந்து கொள்; வேதங்கள் புரியும்…! 

    உன்னையும் புரிந்து கொள்வாய்!

     

    சரி, நாம் இப்போது எங்கு இருக்கிறோம்? குபேர லிங்கம் தானே? குபேர லிங்கம் எங்களுக்கு மிகவும் பிடித்த கோயில். அதற்கான காரணத்தை நீங்கள் கண்டிப்பாக அறிய வேண்டும். ஒவ்வொரு முறையும் குபேர லிங்கத்தை நாங்கள் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் சென்றடைவோம்.

    இன்று கூட ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று யாராவது கூறினாலே நானும் என் தம்பியும் மிரண்டு போய் விடுவோம். அதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. எனது தந்தையார் எங்களை அன்றாடம் பிரம்ம முகூர்த்த வேளையில் (அதிகாலை சுமார் நான்கு மணி) எழுப்பி அவருடன் தியானம் மற்றும் யோகா செய்யச் சொல்லுவார். வேண்டாவெறுப்போடு எழுந்து, அவர் கண்ணை மூடி தியான நிலைக்கு எப்போது செல்வார் என்று காத்திருந்து, பின்பு நானும் என் தம்பியும் ஷிப்ட் முறையில் மாறி மாறி சுவரில் அப்படியே சாய்ந்து உறங்குவோம் (தியானிப்போம்). ஆனாலும் யோகா செய்யும் போது தப்பிக்க முடியாது. எப்போதுதான் சவாசனம் வருமோ என்று ஆகி விடும். இப்படி ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் பரிதாபமாகத் தொடங்கும். நான் கல்லூரி செல்லும் வரை இது தொடர்ந்தது. அதற்குப் பின் நான் தப்பித்துவிட என் தம்பி மட்டும் தனியாக மாட்டிக்கொண்டு அவதிப்பட்டான்.

    மீண்டும் குபேர லிங்கம். என்ன இது நான் சுஜாதா கட்டுரையை படிப்பது போல ஒரே இடத்திலேயே நிற்கிறோம்? பிரம்மாவை வேறு பார்க்க வேண்டும்.

    “குபேர லிங்கத்திடம் அவசியம் தியானம் செய்தே ஆக வேண்டும்; அப்போதுதான் அதிக பலன்கள் கிட்டும்” என்று எங்கள் தலைவர் சொல்ல, அது எங்கள் எல்லோருக்கும் அற்புதமான யோசனையாகப் பட்டதால் உற்சாகத்தோடு தியானத்தைத் தொடங்குவோம். நானும் என் தம்பியும் உட்கார்ந்தவாறே சுவரில் சாய்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் தூங்கும் (தியானிக்கும்) வித்தை அறிந்தவர்களாயிற்றே!

    சில மணித்துளிகளிலேயே, வெவ்வேறு விதமான குறட்டை ஒலிகள் கேட்டு பயந்து போய் நானும் என் தம்பியும் கண்ணைத் திறந்து பார்த்தால் – ‘முதுகு தண்டு வளையாமல் நேர்த்தியாக தியானத்தை தொடங்கிய பெரியவர்கள், முதலில் சுவரின் மேல் சாய்ந்து, பின் லேசாக தரையில் படர்ந்து, கைகளை தலையணையாக்கி, முடிவாக சவாசனத்தில் லயித்து காலை நீட்டிப் படுத்துக்கொண்டு ‘ராக்’ இசைக்கச்சேரி நடத்திக் கொண்டிருப்பார்கள்.

    சில மணித்துளி கச்சேரி முடிவடைந்ததும், அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து எங்கள் நடைபயணம் மீண்டும் தொடங்கும்.

    எங்கள் தலைவரின் ஆன்மீகக் கதைகள் சிலசமயம் பிரமிப்பாகவும், சிலசமயம் பயத்தை உண்டு பண்ணக்கூடியதாகவும் இருக்கும். மலைப்பாதையை சுற்றியுள்ள கோயில்களின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது, திடீரென்று சுவரில் காதை வைத்து ‘ஓங்கார ஒலி’ கேட்கிறது என்பார்; சித்தர்கள் தவம் செய்கிறார்கள் என்பார். எல்லோருமே பக்தி சிரத்தையோடு காதை வைத்துக் கேட்டு அதை ஆமோதிப்பார்கள். நானும் என் தம்பியும் பலமுறை முயற்சிசெய்தும் கடைசிவரை எங்களுக்கு அந்தச் சத்தம் கேட்கவேயில்லை. எங்களுடைய பிரம்ம முகூர்த்த வித்தையினால் தெய்வ குற்றம் ஆகிவிட்டதோ, எங்களுக்கு கடவுள் அருள் இல்லை என்று கூறிவிடுவார்களோ என்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பின் பயந்து ‘கேட்கிறது கேட்கிறது’ என்று கூறி விடுவோம்.

    ஒருமுறை அதே பிரம்ம முகூர்த்த வேளையில், குபேர லிங்கத்திலிருந்து வெளியே வந்த போது கிட்டத்தட்ட ஆதிசங்கரர் போன்ற உடையணிந்த ஒருவர் எங்கள் முன்னே சென்று கொண்டிருந்தார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை. திடீரென எங்கள் தலைவர் தன்னுடைய நடையை நிறுத்தி விட்டு, கண்களை மூடிக்கொண்டார். நாங்களும் நின்றுவிட்டோம். சில நொடிகளில் தியான நிலையிலிருந்து சிலிர்த்துக்கொண்டு வெளியே வந்தவர், “அவர் யார் என்று தெரியுமா?” என்று எங்கள் எல்லோரையும் பார்த்துக் கேட்டார். நாங்கள் ஒன்றும் புரியாமல் கண்களை அகல விரித்தவாறு அவரையே நோக்கிக் கொண்டிருந்தோம்.

    அவர் தான் பிரம்மா!” என்று கூறிவிட்டு, கிடுகிடுவென ஓடிச் சென்று மனிதர் சாஷ்டாங்கமாக பிரம்மாவின் காலில் விழுந்து விட்டார்.

    அவ்வளவு தான், நாங்கள் அனைவரும் பதறி அடித்துக்கொண்டு அவர் பின்னாலேயே ஓடிச்சென்று பிரம்மாவின் காலில் விழுந்து வணங்கினோம்.

    பிரம்மாவும் எங்களை வாழ்த்திவிட்டு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்துவிட்டார்.

    கைகளைக் கட்டிக்கொண்டு அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்த எங்கள் தலைவர், “இது யாருக்கும் கிடைக்காத பாக்கியம்!” என்று பெருமிதத்துடன் கூறினார்.

    எனக்கும் என் தம்பிக்கும் பிரம்மாவையே பார்த்துவிட்ட சந்தோசம். அம்புலிமாமா, பாலமித்ரா புத்தகங்களின் ரசிகனான என் தம்பி, “பிரம்மா கிட்ட ஏதாவது ஒரு வரம் கேட்டிருக்கலாண்டா?” என்றான். (நான் கல்லூரி செல்லும் வரை, அவர் என்னை ‘டா’ என்று மரியாதையோடு விளிப்பது வழக்கம்.)

    எனக்கும் அப்படித் தோன்றியது. பிரம்மாவையே பார்த்துவிட்டதால் மறுநாள் பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை என்று என் தம்பி கூறியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    நாங்கள் நடையைத் தொடர்ந்தோம். சற்றுமுன் நாங்கள் கண்ட பிரம்மா, அங்கே சாலையோரத்தில் இருந்த ஒரு பாறையின் மீது பத்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வருவதை பார்த்துக் கொண்டிருந்தார்.

    எனக்கும், என் தம்பிக்கும் பயங்கர ஆச்சரியம்; மகிழ்ச்சி.

    “இந்த முறை வரம் கேட்டே ஆக வேண்டும்” என்றான் என் தம்பி.

    “அட்டமா சித்தி கேட்கலாம்!” என்றேன் நான்.

    எங்கள் குருநாதர் பவ்யமாக வாயைப் பொத்திக்கொண்டே முதலில் பிரம்மாவின் அருகே சென்றார். நாங்களும் பயபக்தியோடு அவரை பின்தொடர்ந்தோம்.

    பிரம்மா மெதுவாகக் கூறினார் –

    “நாளைக்காலை எங்களுடைய சத்திரத்தில் அன்னதானம் செய்ய இருக்கிறோம். நன்கொடை வழங்குகிறீர்களா?”

    எனக்கும் என் தம்பிக்கும் பேரிடி விழுந்தது போல் இருந்தது.

    “என்னடா பிரம்மாவே காசு கேட்கிறார்?” என்று அப்பாவியாக என் காதருகே வந்து கேட்டான் என் தம்பி.

    “பிரம்மா தற்போது இருக்கும் நிலைமையில் இவரிடம் எப்படி வரம் கேட்பது?” என்று நானும் யோசித்து கொண்டிருந்தேன்.

    மற்றவர்களுக்கும் அதிர்ச்சி தான். ஆனால், அவர்கள் ஏனோ அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.

    பிரம்மா தொடர்ந்தார் –

    “நன்கொடை தந்தீர்களேயானால் நாளை காலை பெரிய கோவிலில் நடக்கும் ஆருத்ரா தரிசனத்தை வெகு அருகிலிருந்து பார்க்கலாம்!”

    எங்களுக்கு மீண்டும் பேரதிர்ச்சி. சீக்கிரம் மலையை சுற்றிவிட்டு, கோவிலுக்கு எதிரில் இருக்கும் தேநீர் கடையில் தேநீர் அருந்திவிட்டு, பேருந்தில் தூங்கிக்கொண்டே பயணிக்கலாம் என்று நினைத்தால், இந்த பிரம்மா வேறு இப்படிக் குழப்புகிறாரே என்று நொந்து கொண்டோம்.

    வேறு வழியில்லாமல் எல்லோரும் அன்னதானம் செய்ய பணம் கட்டி ரசீது பெற்றுக்கொண்டார்கள். அதற்குப் பிறகு யாரும் வாய் திறக்கவில்லை; குறிப்பாக எங்கள் தலைவர். விடியற்காலை, கோபுரமருகே எங்களுக்காக பிரம்மா காத்துக்கொண்டிருந்தார்.

    ஆயிரங்கால் மண்டபத்தில், எங்கள் குழுவிலிருந்த அனைவரும் ஆருத்ரா தரிசனத்தை வெகு அருகே அமர்ந்து, கண்ணாரக் கண்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டிருக்க, அங்கேயிருந்த பக்தகோடிகள் அனைவரும் “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்று உரக்கச் சொல்லிக்கொண்டிருக்க, நானும் என் தம்பியும் பிரம்ம முகூர்த்த வித்தையை தூணின் மீது சாய்ந்தபடி பழகிக் கொண்டிருந்தோம்.

    அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அந்த நாள் மட்டுமல்ல, அந்த பயணங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் மற்றும் அந்தக் குழுவிலிருந்த ஒவ்வொருவரிடம் இருந்தும் நாங்கள் கற்றவையும் பெற்றவையும் ஏராளம் ஏராளம். அந்தக் குழுவில் மருத்துவர், ஆசிரியர், வங்கி மேலாளர், அலுவலக ஊழியர், பேராசிரியர் என்று பலதரப்பட்ட பின்னணிகளை கொண்ட மனிதர்களும் உள்ளடக்கம்.

    குறிப்பாக எனது தந்தையின் ஆத்ம நண்பர் திரு.அனந்த நாராயணன் அவர்கள். அந்தப் பயணங்களில் ஏதாவது அறிவைத் தூண்டும் வகையில் நகைச்சுவையான விஷயங்களைச் சொல்லி எங்களுக்குச் சிரிப்பு காட்டிக்கொண்டே வருவார். தலைவரையும், மற்றவர்களையும் விட்டுவிட்டு எப்பொழுதும் எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டு விடுவார். இவருக்கு நான் எழுத எண்ணியிருக்கும் ‘என்னை கவர்ந்த மனிதர்கள்’ புத்தகத்தில் நிச்சயம் ஒரு அத்தியாயம் காத்திருக்கிறது; சொல்வதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. எனக்கு முப்பதுகளிலேயே பின்தலையில் வளர்பிறை ஆரம்பித்துவிட்டது. ஆனால் இந்த மனிதர் தலைமுடி ஒன்று கூட விழாமல், நரைக்காமல், அன்று பார்த்தது போலவே இன்றைக்கும் இளமையாக காட்சி தந்து, எனக்கு தீராத மன உளைச்சலையும், வயிற்றெரிச்சலையும் தந்து கொண்டிருக்கிறார். நான் கூறுவது மிகையில்லை என்பதை நீங்கள் அவரை நேரில் கண்டீர்களேயானால் ஆமோதிப்பீர்கள்.

    இது போன்ற மனிதர்களை நான் சந்திப்பதற்கும், பழகுவதற்கும், இதுபோன்ற அறிய பல அனுபவங்களை நான் பெறுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த என் தந்தைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

    தொலைகாட்சி, சினிமா போன்ற பொழுதுபோக்கு சமாச்சாரங்கள் மட்டுமே வாழ்க்கை என்கிற அளவில் சீரழிந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இது போன்ற அனுபவங்கள் எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

    நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் நமக்கு அண்டைவீட்டார் யாரென்று கூட தெரிவதில்லை. பெற்றோர்களுடன் பேசவே நேரமில்லாத நமக்கு எங்கிருந்து அவர்களின் நண்பர்களுடன் பழகவும், பயணம் செய்யவும் நேரமிருக்கிறது? இன்னும் சொல்லப்போனால், சென்னை போன்ற நகரங்களில் வாழும் நிறைய பேருக்கு ஆத்ம நண்பர்களே கிடையாது என்பது நிதர்சனமான உண்மை.

    இதுபோன்ற பயணங்களில், இன்று வரை எனக்கு விடைதெரியா – MYSTERIOUS – அனுபவங்கள் கூட கிடைத்திருக்கிறது.

    அதுபற்றி இன்னொரு நாள் பேசுவோம்.

    நிழற்படத்திற்கு நன்றி : திருவண்ணாமலை முகநூல் பக்கம்
    Share
  • ​ பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்

    பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த

    விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்

    [பிப்ரவரி 15, 2013]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”

    நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program]

    ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது ! எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது. 30-50 கி.மீ. உயரத்தில் நேர்ந்த அந்த வெடிப்பு ஒலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன. பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன்.

    வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது. அந்த ஒளிமயமான தோரணக் காட்சி பூமியின் ஈர்ப்பு விசையால் குவிந்து வளைந்து வந்தது. இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது ! 150 அடி நீளமுள்ள பெரிய முரண்கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளமுள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது !

    Meteorite Light -1

    ஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி. சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார். நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர் அனுப்பட்டிருப்பதாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார். முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க முயன்றார். இதுவரை எதுவும் கிடைத்தாகத் தெரியவில்லை.
    1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி ஒன்று ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு 2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது. “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.

    Impact of a Meteor

    இம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.

    ++++++++++++++++++++++++++++

    தகவல்:

    1. 1. http://www.telegraph.co.uk/news/worldnews/europe/russia/9872020/Meteoroid-falling-over-Russia-caught-on-camera.html
    2. 2. http://www.telegraph.co.uk/news/newsvideo/9872507/The-science-behind-Russian-meteor-strike.html
    3. 3. http://www.telegraph.co.uk/science/space/9872991/Asteroid-passing-Earth-is-closest-ever-of-this-size.html
    4. 4. http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded
    5. 5. http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/10-ton-meteor-explodes-over-russia-injuring-hundreds-this-am.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29
    6. 6. http://rt.com/news/meteorite-crash-urals-chelyabinsk-283/
    7. 7. http://rt.com/news/scientists-explain-chelyabinsk-bolide-337/

    +++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 17, 2013)

    YouTube – Videos from this email
    Share
  • கலைமகள்

     

    பொன் ராம்

     

    கலைமகளே! பாராயோ!

    பணவாசம் வேண்டி

    பக்குவமாகச் சிரித்திடும் பகட்டு உலகில்

    பெண்ணுரிமையும் உளதோ!

    உலகை மறந்த சுதந்திர தேவி சிலையின் வாசம்

    அடி நெஞ்சில் இனித்திடும் அதிசயம் கேளாயோ?

    உடன்பிறந்தார் நினைவின்றி சுகபோகம்

    யாவையுமே நித்திய வாழ்வின் பொருளாய்

    ஊணுக்காக உற்றதுணையின் கைப்பிடியில்

    உழலுவதைப் பாராயோ!

    மண்ணுக்குள்ளே நல்லறிவைக் கொடுத்த மாதா

    மண்ணுக்குள் மக்கும்போதாவது வருவாரோ?!

    தாத்தா வைத்த தென்னையுமே

    தாகம் தீர்த்திட வந்ததே!

    தாகம் உலர்ந்த உதட்டிற்கு

    தண்ணீர் தரவே ஆளில்லை!

    பச்சை ஓலை போடுகையிலே

    பரிதவிக்கும் நடிப்பைக் காண

    கலைமகளே வாராயோ!

    பாசப்பனியினை விலக்கிய

    பரிதியும் சோகத்தில்

    மேகத்தாயின் மடியினிலே

    வெட்கப்பட்டு மறைந்திடுதே!

    இதயம் ஒன்று இருப்பதையே

    மறந்த நெஞ்சங்களுக்கு

    கலைமகளே என்ன வரமளிப்பாய்?

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2013/02/sad-woman-silhouette-225×300.jpg
    Share
  • மழை!….

    ரிஷி ரவீந்திரன்

     

    பால்ய காலத்தில் மழையில் நனைந்து ரசிப்பது மிகவும் பிடிக்கும்..

    கல்லூரிக்காலங்களில் எங்கள் கிராமத்திலிருந்து கல்லூரிக்கு சைக்கிளில் பயணிப்பது வழக்கம்.பெருமழைக் காலங்களில் சிலசமயம் சைக்கிளை மேற்செலுத்த இயலாமல் பேய்மழை கண்களை மறைக்கும். ஒரு புறம் மழையில் நனைவதென்பது  மற்றவர்கள் நினைப்பது போல் எதோ ஷவர் பாத்தில் தூவாளையாகக் குளிப்பது போலன்று.

    எங்கள் கிராமங்களில் பெய்யும் மழையானது பேய்மழை ! கன்னத்திலும் உடலிலும் பொளேர் பொளேர் என அறையும். அதிக திசைவேகத்துடன் புவியீர்ப்பு முடுக்கத்தினால் வேகமாய் நம் மீது வந்தறையும். அறைதலின் வலி அனுபவித்தவர்களுக்கே புரியும். ஒரு புறம் புத்தகப் பை முழுதும் நனைந்து பேனா மசியினால் எழுதிய த்துக்களெல்லாம் மறைந்து போகும்.

    என் கல்லூரிக் காலங்களில் எங்கள் கிராமத்திலிருந்து அந்தக் கல்லூரிக்கு தினமும் ஒரு 21 + 21 கிலோமீட்டர்கள் காட்டுப் பாதையில் சைக்கிள் பயணம். அப்பொழுதெல்லாம் நான் பயன்படுத்திய நோட்டுப் புத்தகங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. நோட்டீஸ்களின் பின்புறம் வெறுமையாய் இருக்கும். அப்பக்கங்களை இணைத்து நானே ஒரு நோட்டுப் புத்தகம் தயாரித்துக்கொள்வேன். அதில்தான் பாடங்கள் எழுதிவைப்பேன். இந்த மழையினால் பேனா மைய்யும் கறைந்து அத்துடன் அந்த நோட்டீஸிலுள்ள வண்ணங்களும் கறைந்து ….. புத்தகப் பை ஒருவித புது வண்ணத்தில் நிறம் மாறியிருக்கும்.

    மழையினால் காட்டுப் பாதை சகதியாயிருக்கும். கரிசல் நிலங்கள். மேற்கொண்டு சைக்கிளைச் செலுத்த இயலாது. மெல்ல உருட்டிக்கொண்டே நடைபயிலவேண்டும். மழை வலுக்கும். நிலம் வழுக்கும். மரங்களின் கீழே ங்கலாமாவென்றால், மரங்கள் இடி, மின்னல்களை வெகுவாய் ஈர்க்கும் என்ற என் பெளதிக அறிவு தடுக்கும். மேற்கொண்டு பாம்புகள் நம்மை எப்பொழுதும் அன்பாய் ஓட ஓட விரட்டும், குறிப்பாக இந்த மழைக் காலங்களில்…!

    நோட்டுக் குறிப்புக்கள் காணாமல் போவதில் எனக்கு சிறிதும் வருத்தமே ஏற்படுவதில்லை. என் சைக்கிள் பயணத்திலேயே நியூட்டனும், ஐன்ஸ்டீனும், ரூதர்ஃபோர்டும் ஆசானாய் பெளதிகப் பாடங்கள் வெகு ஆர்வமாய் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பர்.

    நோட்டுப் புத்தகத்தில் அழிந்து போனவைகளை மீண்டுமொருமுறை என் நினைவுப் பெட்டகத்திலிருந்து மீட்டெடுத்துவிடுவேன். பெளதிகமும் கணக்கும் தவிர மற்ற பாடங்களனைத்தும் வேப்பங்காயாகியிருந்தது. குறிப்பாக வேதியியல் மற்றும் ஆங்கிலம்.

    மழையினால் பலமுறை பாடசாலைகளும் கல்லூரிகளும் விடுப்பாகிவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.(I Love School, When it is closed….!) ஒருமுறை நான் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் பெளதிகவியல் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்க ஒரு பெரும் புயல் ஒன்று வீசியது. புயல் ஒருவார காலம் நீண்டது. இதனால் நடக்கவிருந்த எங்களது பல்கலைக் கழகத் தேர்வுகள் ரத்தானது கண்டு எனக்கு சொல்லொணா இன்பம் ஏற்பட்டு அந்த புயலிலும் என் அறையிலிருந்து வெளியே ஓடிவந்து மொட்டை மாடிக்குச் சென்று அப்பொழுது பெய்த மழையில் நனைந்து நடனமாடியது ஒரே உற்சாகமாயிருந்தது.

    நடுக்காடுகளில் மழைபொழியும் பொழுது நனைவதில் எனக்கு வெகு ஆனந்தம். நம்மைச் சுற்றி யாரும் இருப்பதில்லை. மக்களின் பார்வை இல்லை. சர்வ சுதந்திரம். அங்கே நனைந்து கொண்டே நடனமாடுவது, தொடர்ந்து மழையில் நனைந்து அதன் லயத்துடன் நம் லயத்தினையும் ஒன்றிணைப்பது ஏறக்குறைய ஒரு நெடுந்தவம் செய்த பரம திருப்தி கிடைக்கும்.

    மழைக்காலங்களின் சைக்கிள் பயணத்தில் தவறாமல் ஒரு கொங்காணி( கொங்காணி என்பது கோணிப்பையில் செய்யப்படும் மழைத் தடுப்பு்) எடுத்துச் செல்லப் பணிக்கப்படுவேன் வீட்டினரால். ஆனாலும் இந்தப் பெருமழையில்
    கொங்காணிகளினால் ஒரு பயனும் விளைவதில்லை. மாறாக மழையில் அதுவும் நனைவதால் அதனது எடை கூடி நமக்கு அது ஒரு சுமையாகிப் போய்விடுவதுண்டு

    நெடும்பயணத்தில். குடை மழைக்காற்றில் அடித்துச் செல்லப்படும். பல குடைகளை நான் மழைக்காற்றினால் இழந்ததுண்டு. சில குடைகள் வளைந்து நெளிந்து உருக்குலைந்து போனதுமுண்டு. குடை பிடித்துக்கொண்டு காட்டுவழியே நெடும் சைக்கிள் பயணம் அந்தப் பெரும் மழையுடன் கூடிய பேய்க்காற்றில் சிரமமே. சில நேரங்களில் பனிக்கட்டி மழை விழுவதுண்டு. பனிக்கட்டிகள் என்பது எங்கள் பால்ய காலத்தில் அரிதான ஒன்றே.

    அப்பொழுதெல்லாம் எங்கள் சுற்றுவட்டாரங்களில் சிவகாசி போன்ற நகர்களில் மட்டுமே உயர்குடிகளிடம் செயற்கை பனிக்கட்டிகளின் பயன்பாடு இருந்தது. ஜன்னலை ஊடுருவி பனிக்கட்டி மழை வீட்டினுள்ளும் வருகை புரியும். நான் வீட்டின் பரந்து விரிந்து கிடக்கும் நிலவெளிக்கு ஓடிச்சென்று பனிக்கட்டிகளைப் பொறுக்கி ஒரு எவர்சில்வர் தூக்கிவாளியில் போட்டு அதன் வெளிப்புறம் சிறிது நேரத்தில் நீர்த்திவலைகள் ஜனிப்பதைக் கண்டு ரசிப்பேன். அது வியர்வை போல் வியர்த்திருப்பதைப் போல் எனக்குள் ஒரு வித பிரமிப்பு ஏற்படுத்தும்.

    அப்பொழுதெல்லாம் எனக்குள் ஆழ் சிந்தனை ஏற்படும். இது எப்படி நீர்த்திவலைகள் எவர்சில்வர் தூக்குவாளியின் பின்புறத்தில் பிறப்பிக்கின்றது ? என ஆச்சர்ய அலைகளை அது ஏற்படுத்தும். அப்பொழுதெல்லாம்Properties of Matterஐ சரியாகப் புரிந்துகொள்ளாத பால்ய காலப் பிராயம்.

    ஆனாலும் ஒன்று மட்டும் புரிந்தது. ஒன்று இன்னொறாக மாறுகின்றதோ….? என ஆச்சரியப்படுவேன். அந்த நீர்த்திவலைகள தொட்டுப் பார்ப்பேன். அதனது சில்லென்ற வெப்பம் எனக்குள் பரவசமேற்படுத்தும். மழை பெய்யும் சிறிது நேரத்திற்கெல்லாம் இயற்கையே நீரானது ஒரு ஆறு போன்ற அமைப்பினை ஏற்படுத்திவிடுவது எனக்குள் மிகப் பெரிய ஆச்சர்யம் விளைவிக்கும். மழை நீரானது ஓடிக்கொண்டிருக்கும் அதன் அழகு அபாரம். அந்த
    நீரில் மழைத் துளிகள் விழும்பொழுது நீர் மேற்பரப்பில் அது ஏற்படுத்தும் ஒரு வித அழகான வட்டவடிவ அமைப்பும் அதன் கடைசி துளி நீருடன் சங்கமிக்கும் அந்த அழகும் ஆயிரம் ஃபில்டர் காஃபிகளை ரசித்து ருசித்துக் குடிப்பதைவிட ஒரு படிமேலான லயமான ஒருவித சுகானுபவம். அது ஏற்படுத்தும் ஒலியானது ஆயிரக்கணக்கான இளையராஜாக்களைத் தன்னுள் ஒளித்துவைத்திருக்கின்றதோ என பிரமிப்பேன்.

    மழையில் நனையும்பொழுது மேலே அண்ணாந்து பார்ப்பேன். சில சமயங்களில் சூரிய ஒளியானது வானில் நீர்த்திவலைகளில் பட்டு நிறப்பிரிகைகளை ஏற்படுத்தி வானவிற்களை ஜனிக்க வைத்திருப்பதை (எங்கள் கிராமங்களில், ‘ராமர் வில் விட்ருக்கார்…’ என்போம்) பலமுறை ரசித்திருக்கின்றேன். மழை நீர்த் திவலைகள் இலைகளிலிருந்து சொட்டுச் சொட்டாக விழுவதைக் கவனித்தாலே ஆயிரம் தவங்களுக்குச் சமம். அதன் அழகே அழகு. ஒரே சீராக ஒருவித லயத்துடன் இலைகளிலிருந்து நீர்த்திவலைகளானது புவியினை நோக்கிவிழுவது, அடடா… எத்தனை அழகு….!

    மழைபொழிந்த சில சமயங்களில் நீரினால் பாம்புகள் அடித்துச் செல்லப்படுவதுண்டு. அது நீரினில் துள்ளிக்கொண்டே செல்லும். மீன்களும் மழைநீரினால் அடித்துச் செல்லப்படுவதுண்டு. சில மீன்கள் நீரின்
    மேற்பரப்பில் துள்ளித் துள்ளி நடனமாடித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும். எனக்கென்னவோ அந்த மீன்களும் என்னைப் போல் மழையினில் நனைய ஆசைப்படுவதாய்த்தான் நான் நினைப்பதுண்டு. அவைகள் அதிக உற்சாகமாய் நீரின் மேற்பரப்பில் துள்ளிக்கொண்டிருக்கும். ச்ச்ச்சடேரென கொக்குகள் மிக லாவகமாகத் தங்களது அலகினால் அவைகளைக் கவர்ந்து செல்லும். அலகுகளினிடையே மாட்டிக்கொண்டும் மீன்கள் துள்ளி நெளியும். நான் அப்பொழுதெல்லாம் அது மழையில் மகிழ்ச்சியாக நடனமாடுகின்றதோ என எண்ணிக்கொண்டாலும் அதன் மரணபயமும் என்னை பயமுறுத்தும். சில நேரங்களில் பாம்புகள் அவைகளை நீர்ப்பயணத்திலேயே விழுங்குவதும் எனக்குள் கிலியினை ஏற்படுத்தும்.என்னையொத்த பல சிறார்களும் பல பெரியோர்களும் நீரினை லாவகமாக
    நீர்பரப்பிற்கு வெளியேத் தட்டிவிட அதிலிருந்து சில கெண்டை,அயிரை,கெளுத்தி ரக மீன்கள் தரையில் நடனமாடுவதைக் கண்டு ரசிப்பதைவிட உடனே அதனை எடுத்து சூட்டான் போட்டு சாப்பிடுபவர்களே திகமாகியிருந்தனர். அந்த மீன்களானது எதையோ சொல்ல முயல்கின்றது. என்னை ஏன் நீரிலிருந்து பிரித்தாய்….?
    உனக்கு இது அதர்மமாய் படவில்லையா…..? என்பதைப் போலிருக்கும்.

    நீரினால் அடித்துச் செல்லப்படும் சில பாம்புகள் நீரின் மேற்பரப்பில் துள்ளி விளையாடிக்கொண்டே செல்லும் சில மீன்களை லாவகமாய்த் தன் வாய்க்குள் தள்ளுவதைக் கண்டு இயற்கையின் கோட்பாடே இதுதானோ என எண்ணிக்கொள்வேன்.

    வலிமைவாய்ந்தவை வாழ்கின்றன. போராட்டத்தில் வெற்றி பெறுபவை வாழ்கின்றன. மற்றவை சாகின்றன என டார்வினின் தியரி ஃப்ளாஷ் ஆக அவ்வப்பொழுது மனதினில் வந்து மறையும்.ஒருமுறை நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் படிக்கும்பொழுது ஒரு பெருத்த மழை, புயலின் காரணமாக எங்கெங்கும் ஒரே வெள்ளம், இடிபாடுகளும் சேதங்களும் ஏற்பட்டிருந்தன. மழை நின்றவுடன் நாங்கள் வழக்கமாய் ஒன்று சேரும் தோப்பிற்குச் சென்றால் அங்கே அந்த பிரமாண்டமான ஆலமரம் சாய்ந்துகிடந்தது. எங்களனைவருக்கும் சோகம் கப்பிக்கொண்டது. ஏனெனில் அம்மரத்திற்கென ஒரு சரித்திரம் உண்டு.

    எங்கள் கிராமத்தில் நாச்சியாரம்மாள் என்ற பெண் கடவுளர் பிறந்ததாய் ஒரு சரித்திரம் உண்டு. நாராயணசாமி எங்கள் கிராமத்திற்கு வந்து நாச்சியாரம்மாள் அவர்களைக் க்ரம்பிடித்ததாய் ஒரு வரலாறு. இதன் நிமித்தமாக ஆண்டிற்கொருமுறை நாராயணசாமியும் நாச்சியாரம்மாளும் தம்பதி சமேதரராய் எங்கள் கிராமத்திற்குத் திருத்தங்கல்லிலிருந்து ஒவ்வொரு பங்குனி மாதத்திலும் வருகை புரிவர். அவர்களின் வருகை மற்றெல்லா பண்டிகைகளையும்விட வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே நாங்கள் தயாராகிக்கொண்டிருப்போம்.

    இத்திருவிழாவினை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் முறுக்கு சுடுவது என்பது ஒரு வழக்கம். காலப்போக்கில் ‘முறுக்குச்சாமி’ என மறுவிப்போனது. இன்றும் இந்த விழா கொண்டாடப்படுகின்றது.

    நாராயணசாமியும் நாச்சியாரம்மாளும் திருத்தங்கல்லிலிருந்து பல்லக்கில் வருகை புரியும்பொழுது எங்கள் ஊர் கிருஷ்ணன் கோவிலின் எல்கைக்கு வெளியே இரண்டு ஆலமரங்கள் இருந்தன. இவை பறவைகளின் சரணாலயமாகத் திகழ்ந்தன. ஒரு மரம் நாச்சியாரம்மாள் இளைப்பாற; இன்னொரு மரம் நாராயணசாமி இளைப்பாற.

    சாமிகள் கிருஷ்ணன் கோவிலுக்கெதிரே கூரைப்பள்ளியில்தான் தங்குவது வழக்கம். ஊர் மக்கள் அங்கு தரிசனம் செய்து இரவினில் நடக்கும் நாடகங்களோ வில்லிசைகளையோ கண்டு ரசிப்பர். இப்பொழுது இந்த மழையின் காரணமாக நாராயணசாமியின் மரம் வீழ்ந்து கிடந்தது எங்களுக்குள் ஒரு மிகப்பெரிய வலியினை ஏற்படுத்தியது. எங்கள் கிருஷ்ணன் கோவில் அம்பி எதேதோ சாத்திரங்கள் சொன்னார். அதெல்லாம் எனக்குப் புரியவில்லை.

    அவ்வொப்பொழுது நான் அந்த வயதினில் நாத்திகம் பேசிப் பிதற்றித் திரிந்துகொண்டிருந்தாலும் கூட மரம் செடி கொடிகள் என வரும்பொழுது அது எனக்குள் மிகப்பெரும் வலியையே தந்தது. மரங்கள் காற்றினில் ஆடும்பொழுது
    அதில் பூக்கும் பூக்களும் இலைகளும் காய் கனிகளும் எப்பொழுதும் என்னுடன் பேசி சிநேகிப்பதாகவே இருக்கும்.

    அதன் பாஷையில் எதேதோ சொல்லி அழகாய்ச் சிரிப்பதாகவே எனக்குத் தெரியும். அதன் மீது ஏறும்பொழுதுகூட அதற்கு வலிக்குமோ என நினைப்பதுண்டு. பாவம் என நினைப்பதுண்டு. நம் பயன்பாடுகளுக்காக அதிலிருந்து காய் கனிகளைப் பறிக்கும் பொழுது அதன் வலி என்னுள் பாய்வதை உணர்வேன்.

    உண்மையில் செடிகொடிகள் குழந்தைகளைப் போன்றே வெண்மையான மனம் கொண்டவையாய் இருப்பதைக் கண்டு ஆனந்தித்திருக்கின்றேன். எங்கள் தோட்டங்களில் பயிருடும்பொழுது அதற்கு நீர்ப்பாய்ச்சும்பொழுதெல்லாம் ஒரு குழந்தைக்கு உணவளிப்பது போன்று அகமகிழ்ந்திருக்கின்றேன்.

    சில கால வெளியில் அவைகள் பளிச்சென வளரும்பொழுது என்னுள் அளப்பறியா ஒரு மகிழ்ச்சி. அது பூ பூக்கும்பொழுது நான் வானில் பறப்பேன். பிஞ்சு விடும்பொழுதெல்லாம் நான் அதனை ஆசை ஆசையாய் வாஞ்சையாய் அன்பால் கோதிவிடுவேன். அது நிஜமாகவே என்னுடன் பேசுவது போலும் எனக்குள் அது எதையோ பரிமாறிக்கொள்வது போன்றுமே இருக்கும். ஒரு இனம் புரியா அன்பால் பிணைக்கப்பட்டிருப்பேன். காய் காய்ப்பது, பழமாவது என அதன் இறுதி நொடிவரை அதனுடன் உறவு. அறுவடைசெய்யும்பொழுது மட்டும் மனம் கனத்துப்போகும். ஒரு வார காலத்திற்கு யாருடனும் பேசாமல் தனியாய் புலிப்பாறைகளுக்குச் சென்று அமர்ந்துகொண்டு மிகவும் யோசிப்பேன்.

    இத்தனை காலம் அன்பாய் உறவாடிய செடி கொடிகள் இப்பொழுது நம் சுய நலத்திற்காக அதனை அழிக்கின்றோமே….? என்ன தர்மமிது….? ஒரு குழந்தையை வளர்த்து அதனை அந்தத் தாயே கொல்வது எத்தனை கொடூரம்…..? அந்த குழந்தை அந்த தாயின் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தது…..? கொல்லும்பொழுது கூட குழந்தை ‘அம்மா….’ என்றுதானே அழைக்கும்….? ஆயிரம் சிந்தனைகள் மனதினுள் அலை அலையாய் ஆர்ப்பரித்து உணர்வுகள் பீரிட்டு கண்களில் நீர்த் திவலைகள் ஓடும். என் உணர்வுகள் எவருக்கும் புரியவில்லை. பெரியவர்கள் என்னை எள்ளி நகையாடியது எனக்குள் இன்னமும் , ‘நன்றியற்ற பிணந்தின்னிக் கழுகுகள்……’ என கோபம் கோபமாய் வரும்.

    அடச் சே…. நான் எங்கோ ட்ராக் மாறுகின்றேனே….! மழையில் நனைவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்…..? ஒன்றிலிருந்து மனம் எங்கெங்கோ ஓடுகின்றதே…! இதுதான் என்னிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம். ம்ம்ம்….சரி எங்க விட்டேன்….? இருங்க ஒரு முறை ஸ்க்ரோல் அப் பண்ணி பாத்துட்டுவர்ரேன்….

    என் நினைவலைகளைக் கிளர்ந்தெழ இக்கட்டுரை காரணமாகிவிட்டதே….! காட்டாற்று வெள்ளமென அதன் திசையில் என் எண்ண அலைகள் பயணிப்பதால் இத்துடன் நிறுத்திவிட்டு மீண்டும் வருகின்றேன்.

    Share
  • “தமிழ்தாத்தா” பிறந்த நாள்

    பெருவை பார்த்தசாரதி

     

    (19-02-1855 – 28-04-1942)

    பண்டிதர்க்கெல்லாம் பண்டிதரான ‘மஹாமஹாஉபாத்தியாயர்’என்ற  த்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதய்யர் அவர்களின் 157 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றய தினம் அவரைப்பற்றி நம் சிந்தனையைச் செலுத்துவோம். சுருக்கமாக அவரது பெயரை ‘உவேசா’ என்பதைவிட “தமிழ்தாத்தா” என்று சொன்னால் தமிழ்மக்கள் அனைவரும் அறிவர்.

    உண்மையாகச் சொல்லப்போனால், வாழ்நாள் முழுவதையும், தமிழுக்காக அற்பணித்த அவருக்குக் கிடைத்த வெகுமதி, ஏனையோரைக் காட்டிலும் மிகக் குறைவே.

    ஒவ்வொரு வருடமும் உவேசா அவர்கள் பிறந்த திருவாருர் மாவட்டத்தைச் சேர்ந்த “உத்தமதானபுரம்” கிராமத்தில், அவருடைய நினைவு இல்லத்தில் தமிழ்சங்கங்கள் பல கூடி கலந்தாய்வுக் கூட்டம் நடத்தும், நாடெங்கிலும் உள்ள உவேசா அவர்களின் திரு உருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவிக்கப் படும். இது தொடர்ந்தாலும், இதுவரை அவரது நினைவு இல்லம் புதுப்பிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் இருப்பதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகும்போது, தமிழ்மேல் பற்றுள்ளவர்களை வருத்தமடையச் செய்கிறது.

    கடந்த 16-09-2012 அன்று, ஒரு துயரமான செய்தி ஒன்று ‘தி ஹிண்டு’ நாளிதழில் வெளியானது. திருவெட்டீஸ்வரன்பேட்டையில் அவர் வாழ்ந்த வீட்டில் இருந்த “உவேசா இல்லம்” என்ற பெயர்ப்பலகை நீக்கப்பட்டு, தமிழ்மக்களின் தலையில் இடிவிழுந்ததுபோல், அந்த உத்தமரின் வீடும் கடப்பாறையால் இடிக்கப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள் பலர் இச்செய்தி கேட்டறிந்து, முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியதாகக் தகவல், அந்த இடத்தைப் பற்றி தற்போதுள்ள நிலை குறித்து அறியமுடியவில்லை.

    வெளி இணைப்புகள்

    http://www.thehindu.com/news/cities/chennai/article3901883.ece

    தமது சிறு வயதில் உவேசா அவர்கள் பெற்ற பட்டங்களையும், ஓலைச்சுவடிகளைச் சேகரிக்க எப்படி அரும்பாடுபட்டார் என்பதையும் 21-02-2012 அன்று வல்லமையில் குறிப்பிட்டிருந்ததையும், இங்கே நினைவு கூற விழைகிறேன்.

    http://www.vallamai.com/literature/articles/16553/

    ஓலைச்சுவடியில் இருந்த பழங்காலத்து இலக்கியங்களை அச்சிட்டு, தமிழுக்காகத் தொண்டாற்றி தனது வாழ்நாள் முழுவதையும் அற்பணித்த தமிழ்தாத்தாவின் புகழ் ‘தமிழ்நாட்டின்’ புகழாகும். ‘கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப்புலவன்’ என்று மஹாகவியால் பாராட்டு பெற்ற ‘உவேசா’ அவர்களின் பெயரில் இதுவரை ஒரு பல்கலைக்கழகமோ, கல்வி நிறுவனமோ தமிழ்நாட்டில் இல்லை என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் வருத்தமளிக்கவே செய்கிறது,

    Share
  • இஸ்ரேல் பயணம் – 9

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஜோர்டனைச் சேர்ந்த வெஸ்ட் பேங்கின் (ஜோர்டன் நதியின் மேற்குப் பகுதி) பெரும்பகுதியை இஸ்ரேல் 1967 போரில் பிடித்துக்கொண்டது.  இந்தப் பகுதி தற்போது A, B, C  என்னும் மூன்று நிர்வாகப் பிரிவுகளாக இருக்கிறது.  ஒரு பிரிவு முழுவதும் இஸ்ரேலின் நிர்வாகத்திலும் மற்றொரு பிரிவு பாலஸ்தீன நிர்வாகத்திலும் மூன்றாவது இரண்டின் நிர்வாகத்திலும் இருக்கின்றன.  ஒரு நாள் பாலஸ்தீன நிர்வாகத்தில் இருக்கும் பெத்லஹேம் (Bethlehem ),   ராமல்லா (Ramallah) போன்ற இடங்களைப் பார்க்க சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யும் கம்பெனிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தேதியையும் குறித்துக்கொண்டோம்.  இந்த ஏற்பாடுகளைச் செய்த போதே ‘நாங்கள் உங்களை அங்கு கொண்டுபோய்விட்டுவிட்டு எல்லா இடங்களையும் காட்டிவிடுவோம்.  அதன் பிறகு நீங்களாகத்தான் திரும்பி வரவேண்டும்.  அப்படி நீங்களாக வந்தால்தான் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்குள் வரும்போது எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று உங்களுக்குப் புரியும்’ என்று சொல்லியிருந்தார்கள்.  நாங்களும் அந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டோம்.

    அன்று காலை ஒன்பது மணிக்குப் பிரயாணத்தை ஆரம்பித்தோம்.  எங்களை அழைத்துச் செல்ல வந்த டாக்ஸி எங்களை ஏற்றிக்கொண்டு சென்றது.  சுமார் பத்து மைல் தூரம் சென்றதும் ஒரு சோதனைச் சாவடி அருகில் எங்களை இறக்கிவிட்டுவிட்டு அந்த ஓட்டுநர் சென்றுவிட்டார்.  அவரால் வெஸ்ட் பேங்கிற்குச் செல்ல முடியாது.  இஸ்ரேலிய குடியுரிமை பெற்றவர்கள் யாரும் வெஸ்ட் பேங்கிற்குச் செல்ல அனுமதி இல்லை.  சோதனைச் சாவடியைத் தாண்டியதும் அந்தப் பக்கம் இன்னொரு ஓட்டுநர் எங்களை அவருடைய டாக்ஸியில் அழைத்துச் செல்வார் என்றார்கள்.

    இரு பக்கமும் கம்பிகளால் அடைக்கப்பட்ட நீண்ட சோதனைச் சாவடிப் பாதையைக் கடந்து சென்ற பிறகு அந்தப் பக்கம் எங்களுக்காகக் காத்திருந்த ஓட்டுநரைச் சந்தித்தோம்.  அவரால் இஸ்ரேலுக்குள் வர முடியாது.  சோதனைச் சாவடியைத் தாண்டி வெளியே வந்தவுடன் பெத்லஹேம் ஊர் துவங்குகிறது.  இங்கேயும் வளைந்து நெளிந்து செல்லும் பிரமாண்ட தடுப்புச் சுவரைப் பார்த்தோம்.  பாலஸ்தீனர்களுக்காக ஐ.நா. 1947-இல் ஒதுக்கிய இடங்களில் 1967 போரில் இஸ்ரேல் பிடித்துக்கொண்ட இடங்களைச் சுற்றிக்கொண்டு இந்தச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது.  இந்தப் பகுதியின் சுவரில் பாலஸ்தீனியர்கள் தங்கள் கோரிக்கைகளையும், கனவுகளையும் ஸ்பிரே பெயிண்டில் (spray paint) எழுதியிருந்தார்கள்.  ஊரைப் பார்க்கவரும் பயணிகளும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுதியிருந்தார்கள்.  என் கணவரும் அவர் பங்கிற்கு ‘விடுதலை’ என்று தமிழில் எழுதி வைத்தார்.

     

    1948-லிருந்து யூதர்களின் வன்முறையாலும் பல முறை நடந்த போர்களாலும் பல பாலஸ்தீனியக் குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறின.  இவர்கள் பக்கத்திலுள்ள லெபனான், ஜோர்டன் ஆகிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தார்கள்.  இப்போதைய பாலஸ்தீனத்திலும் அகதிகள் முகாம் இருக்கிறது.  அதில் ஒன்று ஐ.நா. மேற்பார்வையில் பெத்லஹேம் நகரில் இருக்கிறது.  அதற்கு நடந்து போனோம்.  இங்கே நெருக்கமான வீடுகள், குறுகிய சந்துகள் இருக்கின்றன.  ஜனநெருக்கமும் அதிகமாக இருக்கிறது.  தண்ணீர் சில நாட்களுக்கு ஒரு முறைதான் வருமாம்.  ஐ.நா. ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறது.  பல வீடுகளில் குண்டடி பட்ட துவாரங்கள் இருந்தன.  அகதிகளின் இரண்டாம் தலைமுறையினர் வேறு நாடுகளுக்குப் போய் சம்பாதித்துப் பணம் அனுப்புவதால் மோசமான வறுமை இல்லை.  இந்த முகாமில் வேலைவாய்ப்பே கிடையாது.   இதில் தொண்டு நிறுவனம் ஒன்று சிறுவர்களுக்கு வேலைப் பயிற்சி அளிப்பது போன்ற காரியங்களைச் செய்து வருகிறது.  அகதிகள் செய்யும் கைவினைப் பொருள்களை விற்கிறது.  இதன் அலுவலகத்தில் ஒரு சிறு கண்காட்சியும் இருந்தது.  பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையையும் கஷ்டங்களையும் பற்றிய புத்தகங்களையும் விற்கிறார்கள்.  அதில் மனதை நெகிழ வைத்தது பெரிய சாவிகள்.  1948-இல் இஸ்ரேல் உருவானதாக அறிவிக்கப்பட்டதும் அங்கிருந்து அவர்களாக ஓடிவந்த அகதிகளும் இஸ்ரேலால் விரட்டியடிக்கப்பட்டவர்களும் வெஸ்ட் பேங்கிலும் ஜோர்டனிலும் சிரியாவிலும் லெபனானிலும் தஞ்சம் அடைந்தனர்.  இவர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கு என்றாவது திரும்புவோம் என்ற நம்பிக்கையில் சாவிகளைப் பத்திரமாக வைத்திருக்கிறர்களாம்.  அதைக் காட்டும் அடையாளம்தான் கண்காட்சியிலுள்ள சாவி.  இவர்கள் தங்களுடைய பழைய இடங்களுக்கு எப்போது திரும்பிச் செல்வார்கள் என்பது இன்னும் கேள்விக் குறியாக இருக்கிறது.

    இந்த அகதிகள் இருக்கும் இடம் ஒரு மேட்டுப் பிரதேசத்தில் இருக்கிறது.  அங்கு செல்வதற்கு முன் எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது.  என்னைப் பயண வழிகாட்டியின் தந்தை நடத்தும் ஒரு கடையில் அரை மணி நேரம் உட்கார வைத்துவிட்டு என் குடும்பத்தினர் பக்கத்து இடங்களுக்குச் சென்று வந்தனர்.  அது ஒரு சிறிய கடை.  நான் அங்கு இருந்தபோது வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை.  முக்கியமாக பாலஸ்தீனியர்கள் உடை, அவர்களின் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் பொருள்கள் ஆகிய நினைவுப் பொருள்கள்தான் (souvenir) இருந்தன.  ஜூன் மாதமாதலால் வெயில் கடுமையாக அடித்துக்கொண்டிருந்தது.  குளிர்சாதன அமைப்பு எதுவும் இல்லை.  அந்த வெக்கையால் அசதி ஏற்பட்டு நான் சில நிமிடங்கள் கண்ணயர்ந்துவிட்டேன்.  கண்களைத் திறந்து பார்த்தால் கடைக்காரரைக் காணோம்.  நான் எழுந்திருந்து பார்த்தபோது அவர் கடைக்கு வெளியில் நின்றிருந்தார்.  நான் கண்ணயர்ந்து இருக்கும்போது, தான் கடையில் இருப்பது நாகரிகமல்ல என்று நினைத்துவிட்டார் போலும்.  நான் விழித்துவிட்டது தெரிந்ததும் உள்ளே வந்தார்.  முஸ்லீம்கள் எல்லாம் முரடர்கள் என்று நினைப்பவர்கள் இந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கட்டும்.

     

    அகதிகள் முகாமை முடித்துக்கொண்டு பெத்லஹேமில் உள்ள பெரிய தேவாலயத்தைக் காணச் சென்றோம்.  இயேசுவின் பெற்றோர்கள் நாசரேத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இயேசு பிறந்தது பெத்லஹேம் நகரில்.  அங்கு அவர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்வார்கள்.  அவர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு வெள்ளி நட்சத்திரம் நட்டுவைக்கப்பட்டிருக்கிறது.  இது ஒரு குகை போன்ற பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது.  கி.பி. 160-இல் இந்த இடம் இயேசு பிறந்த இடமாக அடையாளம் பெற்றது.  ஆனால் 326-இல் தான் ரோமானிய அரசன் கான்ஸ்ட்டாண்டின் இங்கு ஒரு கோயில் கட்டும்படி ஆணையிட்டான்.  கி.பி.530-இல் இது மறுபடி புதுப்பிக்கப்பட்டது.  பின்னால் 10-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சிலுவைப் போராளிகள் (Crusaders) அதை மேலும்  அழகுபடுத்தினார்கள்.  அதன் பிறகு இது பல முறை அழகுபடுத்தப்பட்டது.  இப்போது பெரிய தேவாலயமாகக் காட்சியளிக்கிறது.  பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட பிரமாண்டமான தூண்களோடும் சாண்டிலியர் விளக்குகள் பொருத்தப்பட்ட கூரைகளோடும் மிக அழகாக காட்சியளிக்கிறது.  பெத்லஹேம் ஊரின் மையப் பகுதியில் மேஞ்சர் ஸ்கொயர் (Manger Square) என்னும் இடத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.

    பெத்லஹேம் நகரம் ஜெருசலேம் போன்று பலர் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.  இது கிறிஸ்தவர்களுக்குரிய புண்ணிய ஸ்தலம் என்பதால் இதில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள்.  இப்போது இஸ்ரேலிலிருந்து பல பாலஸ்தீன அகதிகள் வந்திருப்பதால் முஸ்லீம்களின் எண்ணிக்கை கிறிஸ்தவர்களை விட அதிகமாக இருக்கிறது.

    பெத்லஹேமில் மதிய உணவை முடித்துக்கொண்டு ராமல்லா என்ற ஊருக்கு எங்களை அழைத்துச் சென்றனர்.  இது இப்போது பாலஸ்தீன அத்தாரிட்டியின் (Palestinian Authority) தலைமைச் செயலகமாக விளங்குகிறது.  ராமல்லா என்ற பெயரிலிருக்கும் ‘ராம்’ என்றால் உயரம் என்று அர்த்தமாம்;  அல்லா இஸ்லாமியரின் கடவுள்..  இந்த இரண்டும் சேர்ந்து உயரத்தில் இருக்கும் கடவுளின் இருப்பிடம் என்ற பெயர் இதற்கு வந்ததாம்.

    ஜெருசலேம், பெத்லஹேம் போன்ற மற்ற தொன்மையான நகரங்களைப் போன்று ராமல்லாவும் தொன்மை வாய்ந்த நகரம்.  இது பல ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.  பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் இருந்தபோது பெரிய நிலச்சுவான்தார்கள் நிறைய கட்டடங்கள் கட்டினர்; 1936-இல் இந்த ஊருக்கு மின்சாரம் வந்தது.  மொத்தத்தில் இந்த ஊர் வளமடைந்தது.  பி.பி.சி. ஒரு வானொலி நிலையத்தைத் துவக்கியது.  1947-இல் ஐ.நா. பாலஸ்தீனத்தைப் பிரித்தபோது வெஸ்ட் பேங்கில் இருக்கும் இது பாலஸ்தீனர்களுக்காக ஒதுக்கப்பட்டது.  1948 போருக்குப் பிறகு இது ஜோர்டனுக்குக் கீழ் வந்தது.  ஜோர்டன் அரசு சிரியா, லெபனான், ஜோர்டன் போன்ற நாடுகளுக்கு இங்கு வசித்த பாலஸ்தீனர்கள் போய்வர சுதந்திரம் அளித்தது.

    1967-இல் நடந்த போருக்குப் பிறகு இது இஸ்ரேலின் கீழ் வந்தது.  இஸ்ரேல் வெஸ்ட் பேங்கில் பிடித்துக்கொண்ட இடங்களில் இதுவும் ஒன்று.  போர் முடிந்ததும் இஸ்ரேல் இங்கு வசித்த மக்கள் பற்றிய ஒரு கணக்கெடுப்பு எடுத்தது.  அங்கு வசிக்கும் எல்லோருக்கும் இஸ்ரேலுக்குள் வருவதற்கும் அங்கு வேலைபார்ப்பதற்கும் ஒரு அனுமதி அட்டை வழங்கியது.  அப்போது வெளிநாட்டில் இருந்தவர்கள் அந்த அட்டையைப் பெற முடியாமல் போனது.  அவர்கள் ராமல்லாவில் வசிக்கும் உரிமையை இழந்தனர்.   இஸ்ரேல் ராமல்லா உட்பட தான் பிடித்துக்கொண்ட வெஸ்ட் பேங்க் இடங்களில் பல கெடுபிடிகளைக் கையாண்டது.  ராமல்லாவைச் சுற்றிப் பாதுகாப்புக்காக என்ற பெயரில் இஸ்ரேலியர்கள் மட்டுமே உபயோகிக்கக் கூடிய சாலைகளை அமைத்தது.  இதனால் ராமல்லா ஜெருசலேமிலிருந்து துண்டிக்கப்பட்டது.  ராமல்லாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் ஜெருசலேமிற்குப் போவதற்கு இஸ்ரேல் அமைத்திருக்கும் சோதனைச் சாவடிகளைத் தாண்டித்தான் போக வேண்டும்.  இந்தச் சோதனைச் சாவடிகளில் இருக்கும் (stationed) இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் ராமல்லாவாசிகளுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.

    1964-இல் பாலஸ்தீனத்தை விடுவிக்கப் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (Palestinian Liberation Organization) தோன்றியது.  1969-இல் இதன் தலைவராக யாசர் அராபத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இஸ்ரேலியர்களுக்கு எதிராக வெஸ்ட் பேங்கில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் செய்த வன்முறைச் செயல்களை இவர் தடுக்கவில்லை என்பதால் இவரைத் தீவிரவாதி என்று இஸ்ரேலும் இஸ்ரேலை ஆதரித்துவந்த அமெரிக்காவும் என்று அழைத்தன.  பாலஸ்தீன நாடு உருவாக வேண்டும் என்ற கோரிக்கையோடு  இஸ்ரேல் என்ற நாடு இருக்கக் கூடாது என்று அராபத் கூறிவந்தார்.  ஆனால் இந்தக் கொள்கையிலிருந்து மாறி 1992-இல் நார்வே அதிகாரிகள் செய்த முதற்சிகளின் மூலம் இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டார்.  இஸ்ரேலும் பாலஸ்தீன நாடு உருவாவதை ஒப்புக்கொண்டது.  1993-இல் ஆஸ்லோ ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பிரதிநிதிகளுக்கும் இடையே கையெழுத்தானது.  ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாலஸ்தீனம் தனி நாடாக இயங்கும் என்றும் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் வெஸ்ட் பேங்கில் தான் பிடித்துக்கொண்ட இடங்களிலிருந்து வெளியேறும் என்றும் அறிவிக்கப்பட்டது.  ஜெருசலேமின் எதிர்காலம், இஸ்ரேலிலிருந்து வெஸ்ட் பேங்கிற்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் குடிபெயர்ந்த அகதிகள், வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் அமைத்த குடியிருப்புகள் ஆகியவை பற்றிய விபரங்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை.  பாலஸ்தீன தேசிய அத்தாரிட்டி (Palestinian National Authority) உருவாக்கப்பட்டு ராமல்லா வளர்ச்சி அடையத் தொடங்கியது.

    ஆஸ்லோ ஒப்பந்தத்தின் காரணகர்த்தாக்களுள் ஒருவரான இஸ்ரேல் பிரதம மந்திரி யிட்சக் ராபின் (Yitzhak Robin) தீவிரவாத யூதன் ஒருவனால் கொலைசெய்யப்பட்டர்.  அதன் பிறகு 1996–இல் பதவிக்கு வந்த நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை.  2001-இல் பதவிக்கு வந்த ஏரியல் ஷேரன் காலத்தில் தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் வருவதைத் தடுக்க இஸ்ரேலையும் பாலஸ்தீனப் பகுதிகளையும் பிரிக்க பிரமாண்டமான சுவரை 2002-இல் கட்ட ஆரம்பித்தார்.   ராமல்லா இருக்கும் பகுதியிலும் இந்தச் சுவர் செல்கிறது.

    இந்த ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக எங்களை ஏற்றிச் சென்ற வேன் சென்றது.  பல இடங்களையும் காட்டிவிட்டுக் கடைசியாக பேருந்து நிலையத்தில் எங்களை விட்டுச் சென்றனர்.  வழியில் யாசர் அராபத்தின் (இவர் 2004-இல் பாரீஸில் இறந்தார்) கல்லறை இருந்தது.  அது பல இடிபாடுகளுடன் காணப்பட்டது.  பயண வழிகாட்டி ‘அராபத் இறந்த பிறகும் ஏமாற்றப்பட்டர்’ என்று கல்லறை சரியாகக் கட்டப்படாததைச் சுட்டி காட்டினார்.  (பாரீஸில் அவரை விஷம் கொடுத்துக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு சமீபத்தில் அவர் கல்லறையிலிருந்து அவர் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.)

    முதலில் கூறியபடியே எங்களை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டுப் பயண வழிகாட்டி சென்றுவிட்டார்.  நம் நாட்டு பேருந்துகள் போல்தான் கூட்டம் அங்கு வழிந்துகொண்டிருந்தது.  108-ஆம் எண் பேருந்துகள் எல்லாவற்றிலும் எங்களைக் கட்டணம் எதுவும் இல்லாமல் ஏற்றிக்கொள்வார்கள் என்றும் நேரே ஜெருசலேமிற்கு வந்துவிடலாம் என்றும் பயண வழிகாட்டி கூறியிருந்தார்.  ஜெருசலேமிற்கும் ராமல்லாவிற்கும் இடையே உள்ள தூரம் பத்து மைல்களுக்கும் குறைவு.  தடுப்புச் சுவர் இருப்பதால் அதைச் சுற்றிக்கொண்டு போக வேண்டியிருப்பதால் இருபது மைல்களுக்கு மேல் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது.

    108-ஆம் எண் பேருந்துகள் வந்த வண்ணமாக இருந்தன.  அதில் ஒன்றில் ஏறி நாங்கள் ஜெருசலேமை நோக்கிப் பயணம் செய்தோம்.  வழியில் இஸ்ரேலின் சோதனைச் சாவடி ஒன்று இருந்தது.  அங்கு பேருந்தை நிறுத்தச் சொன்னார்கள்.  திடீரென்று இஸ்ரேலியப் படைவீரர்கள் இருவர் – ஒரு ஆணும் பெண்ணும் – பேருந்திற்குள் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு ஏறினர்.  (இஸ்ரேலில் இளவயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாய ராணுவ சேவை உண்டு.  யூதர்களுடைய வேத புத்தகமான தோராவை (Torah) ஓதும் சநாதன யூதர்களுக்கும் (Orthodox Jews) இஸ்ரேலில் வாழும் அரபு இஸ்ரேலியர்களுக்கும் இதிலிருந்து விலக்கு உண்டு.  அரேபியர்களை இஸ்ரேல் அரசு நம்புவதில்லை.  அதனால் அவர்களை ராணுவத்தில் சேர்த்துக்கொள்வதில்லை. வேதம் ஓதுவதால் சநாதன யூதர்களுக்கு விலக்கு உண்டு.  ஆனால் இப்போது அதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.)

    எல்லோருடைய பாஸ்போர்ட்டுகளையும் பரிசோதித்துவிட்டு இளைஞர்கள் அனைவரையும் தங்களோடு அழைத்துச் சென்றனர்.  அப்படி அழைத்துச் சென்றவர்களில் எங்கள் மகள்கள் இருவரும் சேர்த்தி.  இதை எதிர்பார்க்காத நான் கொஞ்சம் வெலவெலத்துப் போய் படைவீரர்களிடம் ஏதோ கேட்கப் போனேன்.  ஆனால் அவர்கள் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் எல்லோரையும் பேருந்தை விட்டுக் கீழே இறங்கச் சொல்லி சாலையின் ஓரத்திலிருந்த சோதனைச் சாவடிக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றனர்.  அதன் பிறகு இருபது நிமிடங்கள் கடந்தன.  உள்ளே சென்ற சிலர் சிறிது நேரத்தில் வெளியே வந்தனர்.  ஆனால் எங்கள் மகள்கள் வரவில்லை.  அதுவரை பேருந்தை நிறுத்தியிருந்த ஓட்டுநர் பேருந்தை மறுபடி ஓட்டத் தொடங்கினான்.  எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  மகள்கள் வராமல் போக வேண்டாம் என்று முடிவுசெய்து நாங்களும் பேருந்தை விட்டு இறங்கினோம்.  சோதனைச் சாவடிக் கட்டடத்திற்கு முன்னால் நின்றுகொண்டு எங்கள் மகள்கள் வருகிறார்களா என்று வாயிலைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.  சிறிது நேரத்தில் இன்னொரு 108-எண் பேருந்து வந்தது.  அதிலிருந்தவர்களில் சிலரையும் படைவீரர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர்.  அவ்வப்போது சிலர் வெளியே வந்த வண்ணம் இருந்தனர்.  இதுவரை எங்கள் மகள்கள் வெளியே வராததால் எங்களுக்கு மிகவும் பயமாகிவிட்டது.  இரண்டாவதாக வந்த பேருந்து ஓட்டுநரை அணுகி அவர் பேருந்திலிருந்து உள்ளே அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா என்று கேட்டோம்.  அவர் தன் பேருந்தில் வந்தவர்கள் சிலர் இன்னும் உள்ளே இருப்பதாகவும் முதல் பேருந்தில் (அதாவது நாங்கள் வந்த பேருந்து) இருந்தவர்கள் எல்லோரும் வெளியே வந்துவிட்டதாகவும் கூறினார்.  எங்களுக்கு ஒரே அதிர்ச்சி ஆகிவிட்டது.  என்ன செய்வது என்று தெரியாமல் கட்டடத்திற்கு வெளியே நின்றிருந்த படைவீரர்களை அணுகினோம்.  (இவர்கள் கைகளிலும் துப்பாக்கி.)  அவர்கள் உள்ளே சென்று விபரம் அறிந்து வருவதாகக் கூறினர்.  உள்ளே சென்ற பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தவர்கள் எங்கள் மகள்கள் இன்னும் உள்ளே இருக்கிறார்கள் என்றும் சிறிது நேரத்தில் வெளியே வருவார்கள் என்றும் கூறினர்.  மிகவும் கலவரப்பட்டுப் போயிருந்த எங்கள் முகங்களைப் பார்த்ததனாலோ என்னவோ இரண்டு சிறிய நாற்காலிகளைக் கொண்டுவந்து எங்களை அவற்றில் அமரச் சொன்னார்கள்.  கட்டடங்களுக்கு வெளியே – சாலையின் ஓரத்தில் – பதைபதைத்துக்கொண்டு – குறிப்பாக நான் – உட்கார்ந்திருந்தோம்.  அதன்பிறகும் மகள்கள் வெளியே வர கால் மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.  அதிலும் பெரிய மகள் வந்து பத்து நிமிஷங்களுக்குப் பிறகுதான் சிறிய மகள் வெளியே வந்தாள்.  சில நிமிஷங்கள் கழித்து வந்த ஒரு 108-எண் பேருந்தில் ஜெருசலேம் நோக்கிப் பயணித்தோம்.  இந்தச் சோதனையும் அவதியும் பாலஸ்தீனர்களுக்கு தினசரி அனுபவம்.  ஏன் நாங்களாகத் திரும்பி வர வேண்டும் என்று சொன்னார்கள் என்பது புரிந்தது.

    பெத்லஹேம், ராமல்லா படங்களைக் கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.

     படங்களைக் காண கீழே சொடுக்குங்கள்

    https://picasaweb.google.com/108173580006522327175/BethlehemAndRamallah?authkey=Gv1sRgCLjJ_cGU3dmz9gE

    (தொடரும்)

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    மனிதர்களுக்கு இளமைப் பருவமும், இளமையில் காதலும், காமமும் மிக முக்கியமான கட்டங்களாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆண் பெண் இடையே காதலும் அதன் பின்னர் வரும் காமமும் மிகவும் அவசியமான ஒன்றாகவே நம் மூதாதையர் கருதி வந்திருக்கின்றனர். எத்தனையோ இலக்கியங்கள் இந்தக் காதலுக்கும் காமத்துக்கும் மிகவும் முக்கியமான இடத்தைக் கொடுத்தே வந்திருக்கின்றன.

    இலக்கியத்தில் காதல் சுவையை இனிக்க இனிக்க சொல்லும்போதும் எழுதும்போதும் தேனுண்ட வண்டு போல நாமும் மயங்குவது கூட இயல்புதான். ஆனாலும் காதல் என்பதில் அன்பு எனும் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதும், இங்கே அன்பு எல்லையில்லாமல் பரந்து விரிந்து இருப்பதையும், அதே சமயத்தில் உடல் சம்பந்தப்பட்ட காமத்துக்கு எல்லை வகுக்கப்பட்டிருப்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

    இந்த முக்கியமான தெளிவைத்தான் திருக்குறளின் காமத்துப்பால் நமக்கு விளக்கி வருவதாக நினைக்கிறேன். இந்த திருவள்ளுவர் எல்லா வகை மக்களையும் மிக நன்றாக அறிந்தவர் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனால் குறட்பாக்களில் காமத்துப் பால் இனிமையின் உச்சகட்டம். அறிவுரையை விட ருசிக்க இனிப்பு கொடுப்பது என்பது எல்லோருக்கும் இஷ்டம்தானே.

    அப்படிப்பட்ட சுவையான காமத்துப்பால் பாடல்களை சிலவற்றை எடுத்துக்கொண்டு இந்த வார வல்லமையில் மேகலா இராமமூர்த்தி அவர்களின் ‘வள்ளுவர் வரைந்த காதற்கவிதை’ என்றதொரு அருமையான கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்.

    ”நீ என் தலைவியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினாயானால் இப்படி நாணம் இல்லாமல் எல்லாரும் காணும்படி வானில் தோன்றாதே என்றுவேறு கூறுகின்றான்! புதுமையான வேண்டுகோள் இல்லையா?

    ”மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி.” .

    தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளுக்கும் அவன்மீது அன்பு தோன்றுகின்றது. ஆயினும், பெண்மைக்கே உரிய நாணம் தடை போடுவதால் தலைவன் தன்னை நோக்கும் போது நிலத்தை நோக்குகின்றாள். அவன் தன்னைப் பார்க்காத தருணத்தில் அவனை நோக்கி மெல்லப் புன்னகைத்துக் கொள்கின்றாள். இதனையே

    “யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.” என்கின்றார் வள்ளுவப் பேராசான்.

    ”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு.”

    மாந்தர்களே! இத்தலைவியொடு எனக்குள்ள நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது என்கின்றான். இங்கே உறவு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் நட்பு என்ற சொல்லை அவன் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு இதைவிட அருமையான விளக்கம் எதனையும் கொடுத்துவிட முடியாதென்றே தோன்றுகின்றது.

    இவ்வாறு காமத்துப்பாலில் படித்து இன்புறத்தக்க பல குறட்பாக்கள் குவிந்து கிடக்கின்றன. சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களின் சுருங்கிய வடிவாகவே (abridged version) காட்சியளிக்கின்றன இக்குறட்பாக்கள் எனலாம். களவு என்று சொல்லப்படுகின்ற காதல் வாழ்வையும், கற்பு என்று அறியப்படுகின்ற இல்லற வாழ்வையும் இருபத்தைந்து (25) அதிகாரங்களில் திருவள்ளுவப் பெருந்தகை சுவைபட நகர்த்திச் செல்லும் பாங்கு படித்து இன்புறத்தக்கது. காமத்துப்பால், கற்புநெறி பிறழா நல்லதோர் இல்லறத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனலாம். (மேலும் படித்து இன்புற  http://www.vallamai.com/literature/articles/32085/#comment-6111

    நல்லதொரு சுவையான வள்ளுவ விருந்தினைப் படைத்த மேகலா இராமமூர்த்தி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமையாளர் குழு தேர்ந்தெடுக்கிறது. அவருக்கு நம் இனிமையான வாழ்த்துகள்.

    கடைசி பாரா: அமைதிச் சாரல் சாந்தி அவர்களின் கவிதை. இந்த இலையுதிர்களில் மரத்தின் கீழே படுத்திருக்கும் நாயையும் அவர் விடவில்லை.

    பிளிறலுடன் நிலையத்தினுள்
    நுழைந்தது ரயில்
    மதம் பிடித்ததுவோ எனவஞ்சும்படி
    ஆர்ப்பரித்துக்கொண்டு.
    அரைகுறை உறக்கத்தில்
    ஒவ்வொரு இலையாயுதிர்த்துக்கொண்டிருந்த
    அரச மரமொன்று
    தடதடவென அகிலமெங்கும் கிடுகிடுத்ததில்
    சரசரவென வியர்த்துக் கொட்டியது
    இலைத்துளிகளை
    மடியில் உறங்கிக்கொண்டிருந்த
    நாய்க்குட்டியின் மேல்..
    அதிகபட்ச எதிர்ப்பாய்த்
    திரும்பிப்படுத்துறங்குதலைக் காட்டிய
    நாயிடம் கோபித்துக்கொண்டு
    வெளியேறிக்கொண்டிருந்தது ரயில்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 59

     

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் -07. கானல் வரி

    குறியிடத்துத் தலைமகளைக் கண்ட பாங்கன் கூற்று அல்லது தலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைமகன், அவளை விடுத்தல் அருமையால்,
    ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்
    (20)

    பவளத்தால் செய்த உலக்கையைக்

    கையால் பற்றிக் கொண்டு
    வெண்மையான முத்துகளைக் குற்றுகிறாளே,
    இவளுடைய செவ்வரி படர்ந்த
    கண்கள்தாமும் குவளை மலர்களோ?அல்ல! அல்ல! குவளை மலர்கள் அல்ல!
    இவை மிகவும் கொடியவை!

    (21)

    புன்னை மரத்தின் நிழலில்
    புலால் நாறும் அலைமீதினில்
    அன்னப்பறவையது போன்று
    அசைந்து நடக்கிறாளே,
    இவளின் சிவந்த கண்கள், கண்களா?
    அல்ல! அல்ல! கண்கள் அல்ல!
    மிகவும் கொடிய கூற்றமாகும்!

    (22)
    தேனைத் தன் வாயிடத்துக் கொண்ட
    நீல மலரினைக் கையில் ஏந்தி
    மீன் வற்றலைத் தின்ன வரும்
    பறவைகளை ஓட்டுகிறாளே!
    இவளின் சிவந்த கண்கள்தாமும்
    வெள்ளிய வேல்களோ?

    அல்ல! அல்ல! வேல்கள் அல்ல!
    அதனினும் கொடிது கொடிது!

     

     

    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    படத்துக்கு நன்றி:

     

    http://www.dollsofindia.com/product/contemporary-hand-painted/fisher-woman-from-kerala-painting-on-woven-bamboo-strands-HF77.html

     

     

    Share
  • தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) – 4

    திவாகர்

    தேவன் ஒரு சகாப்தம் – (3)

    ஆந்திர நாட்டியமணி பங்காரு முந்தைய நாளிரவு தன் காதலனுடன் ஓடிப்போவதாக திட்டமிட அதற்கு உதவுவதற்கு நடராஜனின் உதவியை நாடினாலும், அந்த உதவி கிடைக்காமல் போக, விஷயம் தெரியாத பங்காரு வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு ஓடி நடராஜனின் வீட்டில் வந்து ஒதுங்குகிறாள். நடராஜனும் அவன் நண்பன் மணியும் வீட்டுக்குள் வந்து அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முயல்கின்றனர். அதே சமயம் டில்லியிலிருந்து கோபத்துடன் அப்பா ஹரன் மகனைத் தேடிக்கொண்டு  நடராஜன் வீட்டுக்கு வர, பதட்டப்படும் நண்பர்கள் பங்காருவை சமாதானப்படுத்தி அவளை பீரோவுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள வைத்து அப்பாவை கொல்லைப்பக்கம் உள்ள கிணற்றடிக்குக் குளிப்பதற்காக அனுப்புகிறான் நடராஜன். இந்த பங்காருவை அப்பா வருவதற்குள் எப்படியும் வெளியேற்றவேண்டுமே என்ற கவலையில் அவளை வெளியே வரச்சொல்லிப் பேச முயலும்போது மறுபடியும் அறைக் கதவு திறந்துகொள்ள இந்தமுறை அரக்கப்பரக்க உள்ளே வருவது வில்லங்கம் செய்யும் நாகநாத ஐயர்தான். இனி நடப்பதை தேவன் கை மூலம் பார்ப்போம்.

    வாசலுக்கு வெளியே வள்வள் என்று நாய் குரைப்பது, உர்..உர்.. என்று உறுமுவதும், அதைத் தொடர்ந்து, சீ சீ, சட், பு..’ என்று யாரோ கத்துவதும் முன்னோக்கி ஓடிவருவதும் கேட்டது. சற்றும் எதிர்பாராத வகையில் நாகநாதய்யர் உளறி அடித்துக்கொண்டு பஞ்சகச்சம் ஐந்து பக்கங்களில் பறக்க உள்ளே ஓடி வந்தார்; அவர் கால்களை நோக்கி எழும்பிக் குதித்துக் கொண்டு ‘டைகர்’ பின் தொடர்ந்தது. இந்தக் காட்சி தென்படுவதற்கு முன்பே ‘பங்காரு’ மின்னற்கொடி போல, பீரோவுக்குப் பின்னால் தனது யதாஸ்தானத்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டுவிட்டாள். அதைக் கவனித்த நடராஜனும் மணியும் தலைக்கொரு நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டு, மேலே நடக்கவேண்டியது என்ன வென்று கவனிக்கத் தலைப்பட்டனர்.

    இந்தச் சந்தர்ப்பத்தில் நாகநாதய்யர் இங்கே எப்படி வந்து சேர்ந்தார் என்ற காரண காரியங்களைச் சாவகாசமாக ஆராய்ச்சிச் செய்வதற்கு வைத்துக்கொண்டு, அடுத்த ஐந்தாறு நிமிஷங்களில் நடந்ததோர் அகோரமான யுத்தத்தை நாம் வர்ணித்துதான் ஆக வேண்டும். டைகரின் உண்மைச் சொரூபத்தை நாகநாதய்யரும் நடராஜனும் அறிவார்கள். மணி அறியமாட்டான். அறிந்திருந்த நாகநாதய்யரே அதன் வாலையும் மிதித்து அலட்சிய பாவத்துடன் வந்து விட்டதாலேயே ’டைகரின்’ கடுங்கோபத்துக்கு ஆளாகி, இப்போது ஓடி வரும் நிலைக்கு வந்தார். எந்த வீட்டுக்குள் காலை வைக்கக்கூடாது என்று பிரதிக்ஞை செய்திருந்தாரோ அங்கேயே வரவும், யாருடன் முகாலோபனமே வைத்துக்கொள்வதில்லை என்று விரதம் கொண்டிருந்தாரோ, அவனிடமே அடைக்கலம் புகுந்து கொள்ளவேண்டிய அவசியமும் அவசரமும் நேர்ந்து விட்டன அவருக்கு!

    ‘டைகர்’ தன் வாயைத் திறந்து சிவந்த நாக்கையும் இரு வரிசைப் பற்களையும் காட்டி உ..ற்..ற்.. என்று வல்லின ‘ற’னா போட்டுத் தன் கோபத்தை வெளியிட்டது. பிறகு பாய்ந்தது. மனிதனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் காலத்தில் அசாத்தியமான காரியங்களையும் யத்தனிப்பான் என்பதற்கு அத்தாட்சியாக – இலங்கையை நோக்கி ஆஞ்சநேயப்பெருமான் கடல் தாண்டியதையும் லேசாக ஞாபகப்படுத்தியவாறு, நாகநாதய்யர் அங்கிருந்த மேஜை மீது தாவினார். அந்த அற்ப மேஜை கனமற்றதாகையால் இவ்வளவு கனத்த மனிதரைத் தாங்கமாட்டாது பின்னால் வந்த ‘டைகர்’ மீது சாய்ந்து வைத்தது.

    “யாரப்பா இவர்கள்”? என்றான் மணி

    “இரண்டு பேர்களுமே நம் விரோதிகள்தான்!” என்று நடராஜன் ஒதுங்கி, தற்காப்புக்காக ஒரு தலையணையைத் தூக்கிக்கொண்டான்.

    முதுகில் அடி வாங்கிக்கொண்ட டைகர் கீழே விழுந்து விட்ட நாகநாதய்யரைப் பழி வாங்கியே தீருவதென்ற வைராக்கியத்துடன் அவர் பின்புறத்தை நோக்கிப் பாய்ந்தது. தக்ஷணமே நடராஜன் வீசிவிட்ட தலையணையால் ஓர் அடியும் வாங்கிக்கொண்டது.

     

    நாகநாதய்யர் சுற்றி சுற்றி ஓடினார். ஒரு போது நடராஜன் பின்னாலும், மறுபோது மணியின் பின்னாலும் ஒண்டினார். சோழனைப் பற்றிய பிரம்மஹத்திபோல் டைகர் எங்கேயும் விடாமல் துரத்தியது. ’உற் உற்’ என்று தன் பாஷையில் பேசி அவர் வயிற்றைக் கலக்கியது. மணி ஒரு கட்டை மணையை எடுத்துக் குறிபார்த்து டைகரின் மீது வீசினான். அப்போதே யமலோகத்தில் யமஸதஸில் யமக் கணக்கணான சித்திரகுப்தன் வேகமாக நோட்டைப் புரட்டினான். யம ஜூரர்களான பன்னிரண்டு க்ஷபணாள்களும் ஆஜராகத்தான் இருந்தார்கள். எனினும் ‘டைகரின்’ ஆயுள் தீரவில்லை என்று சித்திரகுப்தன் தலையை ஆட்டிவிட்டான். கட்டைமணை குறி தவறி  சுவரில் ‘படீரென்று’ இடித்து, டைகரின் கோபத்தையும் பயங்கரத்தையும் தூண்டிவிட்டது. மேலும் அதிவேகமாக அது துரத்த, நாகநாதய்யர் துரிதமாக ஓட, பழைய நாடகமே துரித காலத்தில் நடைபெறலாயிற்று. ஆனால் ஒரு பெருச்சாளியை ஓர் அறையில் பூட்டிச் சுற்றுச் சுற்றி விரட்டினால் எத்தனை நாழி அதன் பலம் தாங்கும். நாகநாதய்யருக்கு பெரும் சோர்வு பிறந்தது. முன்னொரு காலத்தில் தமக்கு இருப்பதாக் நினைத்த ‘பிளட்பிரஷர்’ இப்போதே வந்துவிட்டதாக எண்ணி, கஜேந்திரன் ‘ஏ ஆதிமூலமே!” என்று கத்தியது போல், ‘ஹே திரிபுரசுந்தரி! இனித் தாங்காது! என்னை நீ ஏற்றுக்கொள்ளடீ” என்று கதறிவிட்டுத் தொப்பென்று கீழே உட்கார்ந்துகொண்டு பெருமூச்சு விடலானார்.

    நிராயுதபாணிகளான நடராஜனும் மணியும் இரு மூலைகளில் செயலற்று நின்றார்கள்.

    ‘டைகர்’ ஒருமுறை சுற்றிலும் பார்த்துக்கொண்டு தயங்கியது. தனது வெற்றி என்று கர்ஜனை செய்தது. மறுகணம் நாகநாதய்யர் குரல் வளையை நோக்கி அதி உத்ஸாகத்துடன் பாய்ந்தது. சித்திரகுப்தன் மறுபடி நோட்டைப் புரட்டினான். யம ஜூரர்களும் மறுபடி தொண்டையைக் கனைத்து விட்டுக்கொண்டார்கள். ஆனால் இப்போதும் முன் போலவே தலையை ஆட்டிவிட்டான் யமக்கணக்கன்.

    “ஆச்சு! நாகநாதய்யர் காரியம் தீர்ந்தது!” என நான்கு ஆத்மாக்கள் நினைத்தபோது பீரோவின் மறைவிலிருந்து சாக்ஷாத் திரிபுரசுந்தரியே போல் வெளிப்பட்டாள் ‘பங்காரு’.

    “ஏய்! டைகர்.. சீ.. போகிறாயா.. என்ன!” என்று அதட்டினாள். சினிமாக் காட்சிகளில் ஓங்கின கை ஓங்கினபடி நிற்பதை மணியும் நடராஜனும் பார்த்திருக்கிறார்கள். இங்கே பாய்ந்த நாய் பாய்ந்தபடியே நின்றுவிட்டதை தத்ரூபமாகக் கண்டார்கள். டைகருக்கு ஷாக் அடித்திருந்தது. காண்பது நிஜமா, கேட்பது உண்மையா என்று அது பிரமித்தது. “நீ போ! போய்விடு!” என்றாள் பங்காரு. சப்தநாடியும் அடங்கியதாக, டைகர் சடேலென்று திரும்பியது. வாசலை நோக்கி நகர்ந்தது.

    அறுபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நகைச்சுவையும் திகிலும் கலந்த இந்த ரசமயமான் நிகழ்ச்சியின் வர்ணனை இன்னமும் தேவனின் வாசக ரசிகர்களுக்கு விருந்துதான். இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பாகக் காண்பித்திருப்பார் தேவன். வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்திலும் எந்த நிலையிலும் எந்த ஆபத்திலும் யாரேனும் நினைவு வைத்துக்கொண்டு ஆண்டவனை நோக்கிக் கூவினால், அவன் கயவனாக இருந்தாலும் கூட ஆண்டவன் பேதம் இல்லாமல் வந்து ரட்சிப்பதாக ‘பங்காரு’ பாத்திரத்தின் மூலம் நம் அனைவருக்கும் உணர்த்துகிறார் பாருங்களேன். நாகாநாதய்யர் இதன் பின்னரும் கீழ்மையாகச் சென்று தன்னைக் காப்பாற்றிய பங்காருவையே அவள் தந்தையிடம் காட்டிக் கொடுப்பதோடு சபையிலும் கேவலமாக நிந்திப்பார் என்பது வேறு விஷயம். கேவலமான எண்ணம் கொண்ட மாநிடர் திருந்துவதில்லை என்பதற்கும் கடவுளின் கருணைக்கும் என்ன சம்பந்தம்.. ராவணனும் விபீஷணனும் கடவுளைப் பொறுத்தவரை ஒன்றுதானே..

    தேவனுக்கு தெய்வ பக்தி அதிகம். முருகன் அவருக்கு ஆத்மார்த்த தெய்வம் என்றால் அம்பிகை அவர் என்றென்றும் கொண்டாடும் தெய்வம். அந்த அம்பிகை தன்னையே வணங்கிகொண்டு தன்னையே அண்டி வருபவர்களைக் கைவிடுவதில்லை என்பதை வெகு அழகாக தன் ‘கல்யாணி’ கதையில் காண்பிப்பார். கடைசியில் வேறு வழியில்லாமல் கல்யாணியை கைது செய்துதான் தீரவேண்டும் என்று வரும் போலீஸ்காரர்களை அப்படி செய்யவிடாமல் திரும்பிப் போக வைப்பதும் அம்பிகையின் அருளாகவே காட்டுவார் தேவன்..

    மனது சரியாக நல்ல நகைச்சுவை கதை படிக்கவேண்டும் என்று விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு நான் சிபாரிசு செய்வது முதலில் ‘கல்யாணி’ கதையைத்தான். கல்யாணியின் கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் நமக்குத் தெரிந்தவர்களாக இருப்பதாக பட்டிருந்தால் அதற்கு தேவனைத்தான் வெகுவாகப் பாராட்டவேண்டும். கல்யாணியின் பாத்திரங்கள் அனைவரும் காலாகாலத்துக்கும் எங்காவது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான். இப்போதும் பல குடும்பங்களில் கல்யாணியைப் போன்றோர்களும், சுந்தரம் நரசிம்மன் போன்றோர்களும் இருப்பதை நானே கவனித்திருக்கிறேன். மனித மனங்களை மிகத் திறமையான முறையில் படித்திருந்த தேவனால் மட்டுமே இத்தகைய பாத்திரங்களை அமைக்கமுடியுமோ என்னவோ.. இருந்தும் கல்யாணியையும் சற்று கேட்போமே.. சொன்னது சரிதானா’ என?

    (தொடர்ந்து வரும்)

    Share
  • கணக்குப் பார்த்துக் காதல் வந்ததா?

    தேமொழி

    படத்தில் உள்ள காதலர் தின சிறப்புப் படம் ஃபேஸ்புக் சமூகவலைதள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  இந்தக் கணிதக் கேள்வியினைச் சமன் செய்தால் வரும் விடை “நான் உன்னைக் காதலிக்கிறேன்” (I Love You என்பதன் சங்கேதக் குறியான IOU, இங்கு ‘O’ என்பது இதயத்தைக் குறிக்கும் குறி) என்பதாகும்.

    ஆனால் வேறு வகையில் கணக்குப் பார்த்து வரும் இக்காலக் காதல்களைச் சாடுகிறார் கவிஞர் மீரா. சமுதாய மறுமலர்ச்சிக்கான புரட்சிக் கருத்துக்களை கவிதைகள் மூலம் சொல்லும் அவர், அன்றைய சங்ககாலக் குறுந்தொகை சொல்லும் காதலுடன் இக்காலக் காதலை ஒப்பிடுகிறார். அக்காலத்தில் முன்னறிமுகம் இல்லாத, எவ்வகையிலும் தொடர்பு இல்லாத தலைவனும்  தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு, அச்சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு,  செம்புலப் பெயல் நீர் போல அவர்கள் மனம் ஒன்றுடன் ஒன்று அன்பால் இணைந்து விடுகிறது.  ஆனால் இக்காலத்தில் காதலர்கள் கணக்கிட்டு அபாயம் குறைவான (calculated risk) வகையில் துணையைத் தேர்ந்தெடுத்து காதலிக்கிறார்கள் என்பதைக் கீழ் வரும் கவிதை மூலம் சுட்டிக் காட்டி நகைக்கிறார்.

    உனக்கும் எனக்கும்
    ஒரே ஊர் –
    வாசுதேவ நல்லூர் …
    நீயும் நானும்
    ஒரே மதம்…
    திருநெல்வேலிச்
    சைவப் பிள்ளைமார்
    வகுப்பும் கூட…
    உன்றன் தந்தையும்
    என்றன் தந்தையும்
    சொந்தக் காரர்கள்…
    மைத்துனன் மார்கள்.
    எனவே
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

    – கவிஞர் மீரா (மீ. ராசேந்திரன்), ஊசிகள் (1974) பக். 48

    இதுபோல கணக்குப் போட்டுத் துணை சேர்க்கும் சேவையையும் இக்கால இணையதளங்கள் செய்து வருகின்றன. இருவருக்கிடையே பேதங்கள் அதிகரிக்கும் பொழுது அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுகிறது. இவற்றினால் சண்டை சச்சரவுகள் எழுந்து, மனக் கசப்பு ஏற்பட்டு உறவு முறிகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு சரியானப் பொருத்தம் உள்ள துணைகளைத் தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்து வைப்பது இந்த சேவைகளைச் செய்யும் இணையதளங்களின் குறிக்கோள்.  இது போன்ற டேட்டிங் (dating) இணையதளங்கள் அதிகரித்து வருகின்றன, அவற்றை உபயோகப் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கோடிகளைத் தாண்டுகிறது.  இந்த முயற்சி காதலின் வெற்றிக்கு வழி வகுக்கிறதா? அதன் விளைவாக திருமணமுறிவுகளும் குறைகிறதா? என்பதனைப் பொறுத்திருந்துதான் அறிந்து கொள்ள முடியும்.

    இந்த தளங்கள் இயங்கும் வழி முறை, அவை பொருத்தம் செய்யும் வழி முறையின் அடிப்படையாவும் கணிதம்தான்.  இக்கணித முறையை ‘கிறிஸ்டியன் ரட்டர்‘ (Christian Rudder) என்பவர் விளக்கியுள்ளார். இவர் ‘ஒகேகுப்பிட்’ (OKCupid – dating websit) என்ற பொருத்தம் செய்யும் ஒரு சேவை நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.

    துணை தேடும் இருவரிடம் அவர்களைப் பற்றியக் கேள்விகள் பலக் கேட்கப்படுகிறது.  அவற்றில் இருந்து அவர்களுக்குப் பொதுவாக எவற்றில் ஆர்வம் உள்ளது, தங்கள் துணை எவ்வாறு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்ற தகவல்கள் சேகரிக்கப் படுகிறது. இப்பதில்களை ஆராய்ந்து சரியானப் பொருத்தம் உள்ள நபர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள் என்பதை நாமறிவோம்.  ஆனால், இந்த முடிவு எவ்வாறு எடுக்கபடுகிறது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

    கணிப்பொறி நிரலாக்கத்தின் விதிமுறை (Computational Matching Algorithm) இந்த பொருத்தம் செய்யும் கணித முறைக்கு அடிப்படை. பலரும் ‘அல்காரிதம்’ என்று அறியும் இந்தப் பதத்தின் பொருள் எளிமையானது.  முறையாக, படிப்படியாக கொடுக்கப்பட்ட விதிமுறைகளின் படி ஒரு கணக்கிற்கு விடை காண்பது என்பதுதான் அதன் விளக்கம்.  கூட்டல், பெருக்கல், வர்க்க மூலம் (addition, multiplication and square root) ஆகியவைதான்  இந்த நிரலியில் (program) அடிப்படைக் கணித முறைகள்.  தகவல்களும், புள்ளிவிவரங்களும் (data) பல கேள்விகள் வழியாக உறுப்பினர்களிடம் இருந்து கேட்டுப் பெறப்படுகிறது.

    இக்கேள்விகள் பொதுவாக பெரும்பாலும் உறுப்பினர்களின் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளாகவும், அவர்களது விருப்பங்கள், கொள்கைகள், ஆர்வங்கள் போன்ற பல பின்னணிகளையும் அறிந்து கொள்ளும் வகையில் தேர்வு செய்யப் பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக;
    உங்களுக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆசை உள்ளதா?
    ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்குவீர்கள்?
    திகில் திரைப் படங்கள் பார்க்கப் பிடிக்குமா?
    கடவுள் நம்பிக்கை உள்ளதா?
    எனக் கேள்விகள் மிகச் சாதாரண தகவல்கள் முதல் கொண்டு மிக முக்கியத் தகவல்கள் வரை யாவற்றையும் தெரிந்து கொள்ளுமாறு அமைக்கப் பட்டிருக்கும்.

    சில பதில்கள் ஒத்திருப்பது ஒருவகையில் நல்ல பொருத்தத்தை தேர்ந்தெடுக்க உதவும், காட்டாக இருவருக்கும் திகில் படங்கள் பார்ப்பதில் உள்ள விருப்பம் அவற்றில் ஒன்று.  ஆனால், நான்தான் முக்கிய நபராக இருக்க வேண்டும், என் விருப்பத்திற்கு ஏற்றவாறுதான் அனைத்தும் நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ள இருவர் பொருந்த மாட்டார்கள்.  அவர்களுக்குள் நாளும் பிரச்சனைதான் வரும். யாராவது ஒருவர் இதை ஒரு பொருட்டாகக் கருதாதவராக இருக்க வேண்டியது அவசியம். அதனால் மேலும் பல தகவல்களும் தேவைப்படுகிறது.

    இத்தகவல்கள் மூலம் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையாக வருபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், அந்த பண்புகளுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது.  எனவே மூன்று வகைத் தகவல்கள் ஒரு நபரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவை,
    (1) ஒரு நபரைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள்
    (2) அவர் வாழ்க்கைத்துணையாக வரும் நபரிடம் எதிர்பார்க்கும் பண்புகள்
    (3) அவற்றிற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம்

    இந்த மூன்று வகை தகவல்களும் நிரலியில் உபயோகப் படுத்தப் பட்டு சரியானப் பொருத்தமுள்ள துணை தேர்வு செய்யப் படும்.
    இந்தக் கணித நிரலியின் உதவியுடன் இருவரது பொருத்தத்தை நிர்ணயிக்கும் முறையை, அதாவது நிரலி எவ்வாறு ஒரு ஒழுங்கு முறையுடன் படிப்படியாகத் தீர்வு காண்கிறது என்பதை ஒரு எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம். விளக்குவதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு இரண்டு கேள்விகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

    ஒன்று: ஒழுங்குமுறையைப் பற்றியக் கருத்து.  எதுவும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று விரும்புபவரா நீங்கள்? அடுத்தவரும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புபவரா?  இந்த ஒழுங்குமுறைக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?

    மற்றொரு கேள்வி: வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்? இதைப் பற்றி உங்கள் துணையின் கருத்து என்னவாக இருக்க வேண்டும்?  இக்கேள்விக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவம் என்ன?

    இக்கேள்விகளை இருவரிடம் கேட்டு அவர்கள் அளித்த பதில்களைக் கொண்டு பொருத்தம் தெரிவு செய்யப்படுவதைக் கொடுக்கப்பட்டுள்ள படம் விளக்குகிறது. முதல் கட்டமாக, இக்கேள்விகளின் பதில்களை கணினி புரிந்தும் கொள்ளும் வகையில் அவை எண்களாக மாற்றப் பட்டு மதிப்பெண்கள் வழங்கப் படுகிறது. குறைவான முக்கியத்திற்கு குறைந்த மதிப்பெண்ணும், அதிக முக்கியத்துவம் என்பதற்கு அதிக மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக கணினி இரு சிறிய கணக்குகளை தீர்வு செய்கிறது.
    முதலில், இருவரது பதில்களும் ஒப்பிடப்பட்டு, அனைத்துக் கேள்விகளின் மதிப்பெண்களும் கூட்டப் பட்டு ஒரு சதவிகிதம் நிர்ணயிக்கப் படுகிறது.


    (1) ஒருவரின் பதில்கள் அடுத்தவருக்கு எவ்வளவு திருப்தியாக இருக்கிறது என்பதை இருவர் பதிலையும் ஒப்பிட்டு ஒருவரின் கண்ணோட்டத்தில் திருப்தியின் சதவிகிதம் அறியப்படுகிறது. படத்தில் பெண்ணின் கோணத்தில் குறிப்பிட்ட அந்த ஆண் 98% திருப்திகரமாகத் தெரிவார் என கணினி மதிப்பிடுகிறது.

    (2) அடுத்தவரின் கோணத்தினைக் காண முதலில் உள்ளவரின் பதில்களுடன் மற்றவரது பதில்களை ஒப்பிட்டு அவர் அடையப்போகும் திருப்தியின் அளவு கணினியால் கண்டறியப்படுகிறது.  படத்தில் ஆணின் எதிர்பார்ப்புகளின் படி  பெண் அவருக்கு 91% திருப்திகரமாகத் தோன்றுவார்.  படத்தில் அடுத்தவர் கோணத்தில் மற்றவர் பெரும் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வாறு பொருதுவார் என கணக்கிட இருவரது சதவிகிதங்களும் பெருக்கப்பட்டு, எத்தனை கேள்விகள் கேட்கப் பட்டதோ அக்கேள்விகளின் எண்ணிக்கை அடிப்படையில் வர்க்க மூலம் கண்டுபிடிக்கபடுகிறது.  இவ்வாறு வரும் விடையே அவர்கள் இருவரின் பொருத்ததிற்கான மதிப்பெண்.  அதிக சதவிகிதம் இருவரும் சச்சரவின்றி அதிகம் ஒருவருக்கொருவர் ஒத்துப் போவார்கள் என்பதைக்  குறிக்கும்.  படத்தில் காட்டப் பட்டவர்களின் பொருத்தம் 94% அக இருக்கிறது. இது விடைகளின் பெருக்கலின்  சராசரி (geometric mean) மதிப்பாகும்.

    இங்கு உதாரணமாகக் காட்டப் பட்டிருப்பது இரு கேள்விகள் மட்டுமே.  ஆனால் கேள்விகள் அரசியல் மதம், நம்பிக்கைகள், திரைப்பட விருப்பங்கள் போன்று பற்பல கேள்விகளைக் கணக்கில் கொள்வதால் பொருத்தத்தின் துல்லியம் அதிகரிக்கும்.  அவ்வாறு பொருத்தம் அதிகமான இருவர் ஒருவருக்கொருவர் பரிந்துரைக்கப் படுகிறார்கள்.

    இவ்வாறு அறிமுகப் படுத்தப் படுபவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பழகும் பொழுது அவர்களுக்குள் காதல் பிறக்கிறதா?   அது திருமணத்தில் முடிகிறதா? அவ்வாறு அமையும் திருமணங்களும் மணமுறிவு கேட்டு நீதிமன்றங்களை நாடாமல் இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    சிந்தனைக்கு: பொருத்தம் பார்ப்பதன் அடிப்படையே மணமக்கள் ஒத்துபோகும் மணவாழ்க்கையை அமைத்துக் கொடுக்கத்தான். இந்தியாவில் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப் படுகிறது. அம்முறையில் கணினி நிர்ணயிப்பது போலவே, பெற்றோர்களும் ஆண் பெண் இருவரின் பின்புலத்தையும் கருத்தில் கொண்டு, முடிந்தவரை குடும்ப வாழ்வில் சச்சரவுகளைக் குறைக்கும் பண்புகளைத் தவிர்த்து பொருத்தம் செய்கின்றனர்.  கீழை நாடுகளில் ஜோசியம் பார்க்கும் வழக்கமும் உள்ளது.  இந்தியாவில் இது திருமணத்தை நிச்சயம் செய்வதிலும் பங்கு வகிக்கிறது. இதன் அடிப்படை, வானில் கோள்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமைந்திருக்கும் நேரத்தில் பிறந்தவர்களை அவர்கள் பிறந்த நட்சத்திரம், அது அமைந்த ராசியினைக் கொண்டு பிரித்து அவர்களுக்கு சில பிறவிக் குணங்கள் அமைந்திருக்கும் என அறிந்து கொள்வது.  அந்தக் குணங்களுக்கு ஒத்துப் போகும் குணங்கள் மற்றொரு  நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு இருக்கும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு ஜோசியப் பொருத்தமும் பார்க்கப் படுகிறது.  கணினி, பெற்றோர், ஜோசியம் எனப்  பொருத்தம் காணும் முறைப் பலவாறாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து வாழும் பண்புகள் உள்ள ஆணுக்கும் பெண்ணுக்குமே மனவாழ்க்கை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

        அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
        பண்பும் பயனும் அது. [குறள் 45]

    Sources:
    How OkCupid Sets You Up With The Perfect Match, Megan Rose Dickey, February 14, 2013, San Francisco Chronicle – http://www.sfgate.com/technology/businessinsider/article/How-OkCupid-Sets-You-Up-With-The-Perfect-Match-4278690.php

    “The math of online dating, the algorithm behind ‘hitting it off,” Christian Rudder, OkCupid co-founder of dating site OKCupid, TED-Ed – http://ed.ted.com/lessons/inside-okcupid-the-math-of-online-dating-christian-rudder

    How the Matching Algorithm Works, an example – http://www.nrmp.org/res_match/about_res/algorithms.html

    OkCupid – http://en.wikipedia.org/wiki/OkCupid

    Join the best dating site on Earth – http://www.okcupid.com/

    Picture Sources:

    TED-Ed, http://www.facebook.com/pages/Nerd-love-solve-for-i-9x-7i33x-7u-i3u/123506964330770

    Share
  • விரிசலுக்குப் பிற்பாடும்

                                                        – பத்மநாபபுரம் அரவிந்தன் –

     

    உனக்கும் எனக்குமான நட்பில்
    விழுந்த விரிசல் – உன்
    ஒரு சொல்லால் விளைந்தது
    பிற்பாடு நீ கேட்ட மன்னிப்புகள் அத்தனையும்
    உன்னையே நிலை நிறுத்தி
    என்மீதுக் கவிழ்ந்ததாய் இருக்க
    விரிசல் விரிவடைந்த பிற்பாடு
    நீயோ, நானோ பரஸ்பரம்
    பார்ப்பதைத் தவிர்த்தும்
    எதேச்சையாய் உன்னை எங்காவது
    காணும் போதினில் இதயம் சுற்றி
    வலையொன்று இறுக்கும்..

    கண்கள் தானாய் வேறிடம் நோக்கி
    கால்கள் அதுவாய்த் திரும்பி நடக்கும்
    மனதுள் மட்டும் ஏக்கம் புரண்டு
    நீ அழைக்கும் குரல் கேட்க
    காதுகள் விடைத்துக் கூர்மையாகும்

    உனக்கும் வாய்வரை வார்த்தைகள் வரலாம்
    அடக்கிக் கொள்கிறாய் என்னைப் போலவே

    எது எப்படியாயினும் உன்னைப் பற்றி
    தவறாய் எவரேனும் சொல்லும் போது
    என்னையும் அறியாக் கோபம் வரும்
    இன்னமும் உள்ளே
    எங்கோக் கிடக்கிறது உனக்கான
    என் நட்பின் உதிரித் துளிகள் ..

     

    படத்துக்கு நன்றி: http://www.youthkiawaaz.com/2011/04/power-of-friendship/

     

    Share
  • பறவை மனசு

    வள்ளி ராஜா

    வேதா சில்லென்ற காலைப் பொழுதை ரசித்தபடி காபி குடித்தாள். மனதில் நிம்மதி, பெருமிதம். அதற்குக் காரணம் இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டு தனி ஆளாய் நின்று தன் ஒரே மகள் தீப்தியை வளர்த்து ஆளாக்கி  திருமணமும் முடித்துவிட்டாள். தெரிந்தவர்கள் அத்தனை பேரும் கெட்டிக்காரி என்று பாராட்டினர். ஆண்  துணை இல்லாமல் ஒரு பெண் பலரும் பாராட்டத்தக்க வாழ்வது பெரிய விஷயமில்லையா? இருபது நாட்கள் ஆகியிருந்தது மகள் தீப்தி அண்ணா நகரில் தனிக்குடித்தனம் போய். வேதாவுக்கு தீப்தியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

    கை நிறைய பொருட்களை வாங்கிக் கொண்டு வேதா போன போது தீப்தி தூக்க கலக்கத்துடன் கதவைத் திறந்தாள். ”ஹாய் தீப்தி டார்லிங் எப்படியிருக்கே?” தீப்தி கொட்டாவியுடன்,”பைன். என்னம்மா காலையிலே வந்திருக்கே?” வேதா புன்னகையுடன் ,”காலையிலேயா? இப்ப மணி பத்து. இவ்வளவு நேரமாவா பொம்பளை தூங்கறது? மாப்ளே என்ன நினைப்பார்?” தீப்தி எரிச்சலுடன்,”அவரும்தான் தூங்கறார். வேலைக்குப் போற எங்களுக்கு இந்த ஞாயிற்றுகிழமைதான் ரிலாக்ஸ்டான நாள். என் தூக்கத்தையும் கெடுத்துட்டு அட்வைஸ் வேற பண்ணிட்டுருக்கே.” வேதா அமைதியாய்,” நீ போய் தூங்கு. நான் டிவி பார்த்துட்டுருக்கேன்.” என்றதும் தீப்தி தன் ரூமிற்குள் சென்று கதவை மூடினாள்.

    வேதா சிறிது நேரம் டிவி பார்த்தாள். பிரிட்ஜை திறந்து பார்த்தாள். காய்கறிகள் இருந்தன.வேதா கடகடவென்று சமையலை முடித்தாள். சாம்பார், நூல்கோல் பொரியல், ரசம் என்று செய்து முடித்துவிட்டு அடுப்படியை சுத்தம் செய்த போது தீப்தியும், மனோஜும் வந்தார்கள். ”அடடே சமையலையே முடிச்சுட்டியா?” மனோஜ்,”அத்தே எப்ப வந்தீங்க? வந்த இடத்தில் உங்களுக்கு ஏன் வீண் சிரமம்?” வேதா,”நான் யாருக்குச்செய்றேன்? இதில் ஒண்ணும் சிரமம் இல்ல. ரெண்டு பேரும் குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்” மூவரும் சாப்பிட்டனர்.

    தீப்தி ”நாங்க ஹனிமூன் கொடைக்கானல் போனபோது உனக்கு ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்தேன்.” வேதா ஆச்சர்யமாய்,” என்னது ஹனிமூன் போனீங்களா? எங்கிட்டே சொல்லவேயில்லை” தீப்தி கூலாக,” உங்கிட்டே ஏன் சொல்லணும்?” வேதா ஆடிப்போய்விட்டாள். தன் மகளே தனக்கு அந்நியமாய் போய் விட்ட மாதிரி ஒரு உணர்வு.  சாப்பிட்டு முடித்ததும் மனோஜ் தீப்தியிடம் ,”சீக்கிரம் புறப்படு. டயமாயிடுச்ச.” தீப்தி,”ம் சரி. கிளம்ப வேண்டியதுதான்.” வேதா,” வெளியே போறீங்களா?” தீப்தி,” ஆமாம்மா. நீ இன்னொரு நாளைக்கு வாம்மா.” என்று உள்ளே போய் ஒரு வாக்கிங் ஸ்டிக்கை கொண்டு வந்தாள்.” இந்தாம்மா.இது தான் நான் வாங்கிட்டு வந்த கிப்ட்.” வேதா,”எனக்கு எதுக்கு வாக்கிங் ஸ்டிக்?” தீப்தி அவசரமாய்,”இது சந்தனமரத்துல செய்தது. ஹனிமூன் டிரிப்ல கூட அம்மாவை ஞாபகம் வச்சு வாங்கிட்டு வந்ததற்கு நீ பெருமைப் படணும்.”  மனோஜ் ,” நீயும்தான் பெருமைப் படணும் தீப்தி… தனி ஆளாய் ஒரு குறையும் இல்லாம வளர்த்திருக்காங்களே உன்னை அதுக்கு.” தீப்தி,” பெத்தா வளர்க்கத்தான் செய்யணும். அது பெரிய விஷயமில்லை.” வேதா பதில் எதுவும் பேசவில்லை. சிறிது நேரங்கழித்து வேதா,”தீப்தி எனக்கு கொஞ்ச நாளாய் கால் வலி இருக்கு. டாக்டரைப் பார்க்கணும். நீயும் கூட வர்றீயா?” தீப்தி,” எனக்கு பல வேலை இருக்கும்மா. தெரிந்த டாக்டர்தானே நீயே போயிட்டு  வந்துடு. சரிம்மா உனக்கு ஆட்டோ பிடிச்சுத் தரணுமா?”” வேதா ,”நானே பிடிச்சுக்கிறேன்.”என்று குரல் கமற கூறிவிட்டு வேதா கிளம்பினாள்.

    காலையில் தன் மகள் வீட்டுக்கு வந்தபோது லேசாய் இருந்த மனசு இப்போது பாரமாய் கனத்தது.”ஏ மனமே எப்போதும் நீ நிச்சலனமாய் இருந்தால்தான் என்ன? வெளியில் நடக்கும் நிகழ்வுகளுக்கேற்ப மாறி மனிதர்களை துன்பப்படுத்துகிறாய்?”சற்று தொலைவு நடந்தவள் திரும்பி தீப்தியின் வீட்டைப் பார்த்தாள்.ஏதோ தான் அனாதை ஆகிவிட்டது போல ஒரு உணர்வு. தீப்தி கூறியது காதில் ஒலித்தது,”பெத்தா வளர்க்கத்தான் செய்யணும்.அது பெரிய விஷயமில்லை.” எவ்வளவு ஈசியாய் சொல்லிட்டா.’ பெத்தா வளர்க்கிற கடமை எனக்கு இருந்த மாதிரி வளர்த்த தாய்க்கு மகள் செய்ய வேண்டிய கடமை ஒண்ணுமில்லையா?” ஆதரவிற்கு ஆள் இல்லாமல் தாயைக் காணாது தவிக்கும் குழந்தை போல ஒரு தவிப்பு. தெரிந்தவர்கள் யாரும் தன்னிடம் பேசினால் தான் அழுதுவிட நேரிடும் என்று அவசரமாக வீட்டிற்குள் வந்து கதவை தாளிட்டு கட்டிலில் படுத்து குமுறி அழுதாள்.

    ரொம்ப நேரம் அழுதவள் தேற்ற ஆளில்லாமல் தானே எழுந்து முகம் கழுவினாள். மன பாரம் குறையவில்லை. பெட்ரூம் ஜன்னலருகே வந்து வேப்பமரக் காற்றை அனுபவித்தாள். வேப்பமரத்தில் எப்போதும் இருக்கும் காக்காவின் கூடு வெறுமையாக இருந்தது.மேல் கிளையில் ஒரு காலில் விரல்கள் இல்லாத அந்த தாய் காக்கா தனியே உட்கார்ந்து இருந்தது. ”எங்கே போயின குஞ்சுகள்? காக்காவின்  மேல் பச்சாதாபம்  வந்தது.” உன் பிள்ளைகளும் தொலைந்து போனார்களா?’ தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள். அப்போது தாய் காக்காவின் அருகே ஒரு குஞ்சு காக்கா வந்து தன் சிவப்பு வாயைத் திறந்தது. அதனிடமிருந்து தள்ளிப் போனது தாய் காக்கா. குஞ்சு காக்கா தாய் அருகில் திரும்பவும் வந்தது. தாய் காக்கா சற்றும் தாமதிக்காமல் குஞ்சை கொத்தி கொத்தி விரட்டியது. வேதாவிற்கு ஆச்சர்யம். தன் குஞ்சை நிராகரித்துவிட்டு தனியே பறந்துபோய்விட்டதே அந்த காக்கா. இந்த மனசு ஏன் மனிதருக்கு இல்லை? தன் குஞ்சுகள் குறிப்பிட்ட வளர்ச்சியடைந்ததும் அதை விலக்கி எப்போதும் போல் தன் ஜீவிதத்தை கவனிக்கிறது. ஆனால் மனிதன் பெத்து வளர்த்த பிள்ளைகளை எதிர்பார்த்து எதிர்பார்த்து மடிந்து போகிறார்கள். இந்த பறவைக்குள்ள மனசு மனிதருக்கும் இருந்துட்டா வீண் ஏமாற்றமில்லை, துன்பமில்லை. ஏன் முதியோர் இல்லங்கள் கூட இருக்காது. மனதில் பாரம் லேசாய் விலகியது. தெம்பு பிறந்தது போல ஒரு உணர்வு. இனி நான் கலங்க மாட்டேன். எனக்காக கடவுள் கொடுத்த நாட்கள் இவை. அதை சந்தோஷமாய் வாழ்வேன். ஐந்தறிவு பறவைக்குள்ள தெளிவு நமக்கு ஏன் இல்லாமல் போச்சு?

    ”ஹலோ சுகன்யாவா? நான் வேதா பேசுறேன். நீ ப்ரீயா? ஓகே பக்கத்து தியேட்டருக்கு வந்துடு. நான் டிக்கெட் எடுத்துட்டு நிற்கிறேன். வந்துடு.”என்று பேசிவிட்டு புது மனுஷியாய் தான் பளிச்சென்று ரெடியாகி வீட்டைப் பூட்டிவிட்டு துள்ளல் நடையுடன் தெருவில் இறங்கி நடந்தாள்.

    படத்துக்கு நன்றி: http://nature.gardenweb.com/forums/load/bird/msg031736163036.html

    Share