Blog

  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 16, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள்

    Parthasarathy Ra

     

    வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர் எழுத்தாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள். வல்லமை வாசகர்களுக்கு இவர் தனது கவிதைகள் பலவற்றையும், சிறுகதைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். குறிப்பாக சென்ற வாரம் “எண்ணமும், சிந்தனையும்!” என்ற எழுச்சிக் கவிதையையும், காதலர் தின சிறப்புப் பதிவாக “காதல் என்றால். . . ?!”  என்ற கவிதை என இரு கவிதைகளை வழங்கியுள்ளார். அத்துடன் “மாறிய ஜென்மங்கள்”  என்ற இன்றைய உலகில் மூத்த குடிமக்களின்  யதார்த்த வாழ்க்கையையும், பந்தபாசத்தின் மேன்மையையும் உணர்த்தும் சிறுகதையையும் வழங்கியுள்ளார்.

    தற்பொழுது சென்னையில் வசிக்கும் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள், பாலா, இனியவன் என்ற புனைப்பெயர்களிலும் எழுதி வருபவர். தனியார் நிறுவனம் ஒன்றின் மேலதிகாரியாகப் பணிநிறைவு பெற்ற இவர் தமிழ் மற்றும் பொருளியியலில் முதுநிலை பட்டங்கள் பெற்றவர். பணிநிறைவிற்குப் பின்னும் கவிதைகள் சிறுகதைகள் எழுதும் தனது பொழுதுபோக்கைத் தொடர்கிறார். கவிதை உறவு, தமிழ்ப்பணி ஆகியவற்றில் இவரது கவிதைகளும், குமுதம், தினமலர் பத்திரிக்கைகளில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. தனது “கவிதைப்பூகள்”  என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். சிந்தனை தரும் மேன்மையை உணர்த்தும் அவரது இரு கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    எண்ணமும், சிந்தனையும்!
    ______________________________________

    எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
    வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
    நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
    எழும்பியடங்கும் அலைகளே உணர்த்தும்!

    மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
    இலைகளே அதன் பசுமையே நமக்கு உணர்த்தும்!
    நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
    வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!

    சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
    நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
    நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
    தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!

    நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
    துணிந்தபின் மனமும் எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
    துயரமடைந்த எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
    அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!

    நமக்குள் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம் இருந்தாலும்
    நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
    தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
    நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !
    ***

    மனிதனே சற்றே நினைத்துப்பார்
    ______________________________________

    எல்லாவற்றிற்கும் காரணம் ஆசை என்று அறிந்தே
    நம் கைவிட்டு போகும் நாணயமில்லாத நாணயங்கள் !

    பேராசையால் கைதவறிய வாய்ப்புக்கள்
    நம்மை பார்த்து தொலைவில் இருந்தபடி நகைக்கின்றது !

    மனதை கல்லாக்கி கைக்கு எட்டியதை
    வாய்க்கு எட்டாததைக் கண்டு ஏமாந்த போது
    வறட்டுக் கவுரத்திற்காக விலக்கி வைத்தால்
    புரிந்ததும், புரியாததும் சேர்ந்து
    தொலைந்துபோன காலகட்டத்தில் !

    பெருமைக்காக நட்புகொண்டு, கைகுலுக்கி,
    அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்
    இழக்கம் பொழுது ,ஏற்பட்ட இழப்பின் வலிகள் !

    மூட நம்பிக்கையுடன் ஜாதி, மத விழுதுகளை நம்பி,
    பகுத்தறிவு வேர்களை புறந்தள்ளியதால்
    அவனியில் சிக்கித் தவிக்கும் மனிதம்!

    கிடைத்ததை கொண்டு திருப்தி கொள்ளாமல்
    கடந்ததை எண்ணி வருந்துவதால் எக்ககாரணம்மின்றி
    கரைந்துபோகும் மனிதம்.!

    எண்ணுபவர் – விழிப்பர்
    விழிப்பவர் – உழைப்பர்
    உழைப்பவர் – உயர்வர்
    உயர்வோர்க்கே இவ்வுலகம்!

    இவையாவும் உய்வோர்க்கு
    புரிதல் எப்போது;
    மனிதமும், மனிதநேயமும் உயர்வதெப்போது?

     

    வல்லமையாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்களைப் பாராட்டி அவர் தனது இலகியப் பயணத்தில் வெற்றிகள் பல பெற வல்லமை நண்பர்கள் வாழ்த்துகிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    தொடர்புக்கு:
    https://plus.google.com/113104518638625010842/

    Share
  • நாதமழை பொழிந்தது! இதயங்கள் நனைந்தன!!

    akavi

    பாரதி நட்புக்காக.. 13.02.2015 மாலை 6.45 மணிக்கு இந்தியன் சமூக கலாச்சார மையத்தில் நடைபெற்ற 14ஆம் ஆண்டு தொடக்கவிழாவும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு நினைவாஞ்சலியும்..

    அரங்கம் நிரம்பி வழிகிறதென்றால் அங்கே பாரதி நட்புக்காக விழாவென்றே பொருள்! அட்சரம் பிசகாமல் முன்னோட்டம் நடத்தி முழுமையான வெற்றி ஈட்டும் உங்கள் தலைமைக்கும் குழுவிற்கும் முதற்கண் நன்றி!! பிரம்மாண்ட வெற்றியை நல்ல தரமான இலக்கிய விழா வாயிலாக ஈட்டிடும் பாரதிக்கு அபுதாபி மற்றும் ஐக்கிய அமீரக வாழ் தமிழர்கள் யாவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றனர் என்பதுவும் மிகையில்லை!

    அபூர்வ ராகம் என்கிற தலைப்பில் நீங்கள் தந்த நிகழ்வின் மயக்கம் பல நாள் இருக்கும் என்று கருதுகிறேன்! தமிழகத்திலும்கூட இத்தனைச் சரியாக ஒரு போற்றுதல் நிகழ்ச்சி இன்னும் நடைபெறாத நிலையில் அதிலும் அபுதாபி.. பாரதி நட்புக்காக முன்னணிவகிப்பது பெருமைக்குரியதாகும்!

    நிகழ்ச்சிக்கு பொருத்தமான பிரமுகர்களை வரவழைத்து திட்டமிட்ட வகையில் திகட்டாத பேரின்பம் அனைவரும் பெறச் செய்தது உங்களின் ராஜமுத்திரை!! எத்தனை பாராட்டினாலும் இன்னும் பாராட்ட வேண்டியிருக்கும் விழா என்பது பாரதி நட்புக்காக குழுவினர் நடத்தும் விழா!!

    பாரதி நட்புக்காக என்னும் திரைச்சீலை ஓவியத்தில் புதிய இசை சேர்க்கப்பட்டதில் – சிங்கத்தின் உறுமல் மாற்றம் செய்யப்பட்டிருப்பது.. தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு மாபெரும் வரகவிஞனை.. அவன் தமிழ்மீது அவன் கொண்டிருந்த காதலுக்கு.. பற்றிற்கு.. கர்வத்திற்கு.. அடையாளம் அந்த கர்ஜனை! முடிந்தால் அதனை மீட்பது நலம்!!

    விழாவில் வழக்கம்போல் இடம்பெறும் ஆஷா நாயரின் எண்ணத்தில் உதித்த ஓவியமா? காவியமா? புதுமை..இனிமை நிறைந்த அற்புத நடனங்கள்.. குழந்தைகள் வைத்து இத்தனை அருமையான நிகழ்வை அவரால்தான் தொடர்ந்து தரமுடியும்! அதுவும் பாரதி நட்புக்காக மேடையில்தான் இத்தனைச் சிறப்புகள் அமையும்!! பாராட்டுகள்.. நடனமாடிய ஒவ்வொரு குழந்தைக்கும் உரித்தாகும்!!

    திரு.ராஜேஷ் வைத்தியா.. வார்த்தைகளுக்குள் வசப்படாத உச்சங்களை தன் வீணையால் மீட்டெடுக்கத் தெரிந்த வித்தகர்! அபூர்வ ராகம் என்கிற தலைப்பில் அவர் தொட்டெடுத்த அத்தனைப் பாடல்களும் முத்துக்கள்! பாரதி கண்ணம்மாவில் தொடங்கி.. சம்போ..சிவ சம்போவில் முடித்தவரை.. அவர்மட்டும் வீணையுடன் கொஞ்சவில்லை.. நம்மையுமே கொஞ்ச வைத்தார்! அசுரத்தனமான பயிற்சியின் விளைச்சல்தான் நாம் மேடையில் கண்டது! கலைமகள் அருளில் நடமிட்ட விரல்கள் நர்த்தனம் ஆடியது! நாதமழை பொழிந்தது! இதயங்கள் நனைந்தன!! ஒற்றைத்திசை நோக்கி மட்டுமே நம் உள்ளங்கள் நகர்ந்தன!! உண்மையிதுதானே?

    திரு.யூகி சேது அவர்கள்.. நையாண்டி தர்பார் போன்ற நிகழ்வுகளில் நாம் கண்ட சேதுதான்! பஞ்சதந்திரம் முதலான திரைப்படங்களில் நடித்த சேதுதான்! இவர் இயக்குனர் சிகரத்துடன் இத்தனை நெருக்கமாய் இருந்தவரா என்றறியும்போது மெய்சிலிர்ப்பு! உலக சினிமா முதல் இவரின் சிந்தனையில் பாய்ந்துவரும் செய்திகள் இவரைப்பற்றி முழுமையறிய வழிகாட்டின! நகைச்சுவை குறையாமல் நல்ல பல செய்திகள்தந்து ஒவ்வொருவரையும் தன் குறும்பான பேச்சால் கொள்ளையடியத்தார் என்பதுவும் மிகையில்லை!!

    திரு.டெல்லி கணேஷ்.. அவ்வை சண்முகி முதல் சிந்துபைரவி என தன் பாத்திரங்களால் மின்னும் கலைஞர்! டெல்லி கணேஷ் என்கிற பெயர்க் காரணம் சபாஷ் போடவைத்தது! இயல்பாய் பேசிய இவரின் பேச்சு எவரையும் ஈர்த்தது என்பதில் இருவேறு கருத்தில்லை! ஒவ்வொரு சூழலிலும் இயக்குனர் சிகரத்துடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை அருமையாக எடுத்துரைத்தார்! இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என்று ஏங்கவைக்கிற சூட்சுமம் தெரிந்துவைத்திருக்கிறார். நீங்கள் எடுக்கும் விழா அத்தனைக்கும் நானே செலவு செய்து வந்துவிடுவேன் என்று பாங்குற அவர் பகன்றது பகட்டில்லை.. பளிச்சிடும் அவர் தூய உள்ளம்!!

    இயக்குனர் சிகரத்தின் இருகரங்களையும் பற்றிவளர்ந்த மோகன் அவர்கள் கொஞ்சம்கூட சினிமாத்தனமின்றி.. இயக்குனர் சிகரத்திற்கு கிடைத்த இன்னொரு நிழலாக.. கள்ளமில்லாமல் அவரின் எதார்த்த பேச்சுக்கு இணையே கிடையாது என்று சொல்லலாம்! எளிமையின் இலக்கணமாய் திகழ்ந்த பாலசந்தர் அவர்களின் மறுபக்கத்தை.. தன் மீது காட்டிய அக்கறையை.. திருமணம் நடத்திவைத்த விஷயத்தை.. இன்னுமின்னும் அவரில்லாமல் அயலகம் வந்திருப்பது இதுவே முதல் முறை.. அதுவும் அவருக்காக என்கிற பட்சத்தில் கண்ணீர்மல்கிக் கனிந்த உரையது கேட்டோர் உள்ளமெல்லாம் கனக்க வைத்தது!

    நம் மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாபெரும் கலைஞன் பாரதி ராஜா தன் உள்ளத்தைத் திறந்து வைத்தேப் பேசிப் பழகியவராக.. தனக்கும் இயக்குனர் சிகரத்திற்கும் இடையே மலர்ந்த நட்பை ஆதிமுதல் அழகாக எடுத்துரைத்து அவர் அமரத்துவம் பெற்றபோது.. முன்னொரு நாள் 15 ஆண்டுகளுக்கு முன்னதாக இருவரும்பேசிக் கொண்டபடி.. அவர் உடலைச் சுமந்துசெல்கிற பாக்கியம் கிடைத்ததை உணர்வுடன் பகிர்ந்து கொண்டது என பேசிய 30 நிமிடங்களுமே முலாம்பூசாத தங்கத்தை நிகர்த்த பேச்சு! எந்த ஒரு கலைஞனுக்கும் பாராட்டுதான் முக்கியம் என்பதை இயக்குனர் சிகரம் முன்னோடியாகத்திகழ்ந்ததை தனது 16வயதினிலே படத்தைப் பற்றிய பாராட்டுக் கடிதம் முதற்கொண்டு எடுத்துக்காட்டியது சிந்தை நிறைந்தது! இமயத்திற்கு நடக்கின்ற விழாவில் சிகரம் வந்து கலந்துகொண்ட அற்புதத்தை பாரதி நட்புக்காக நடத்திக்காட்டியதை என்னவென்பது? கலையுலக பாரதி என்று விருதளித்த பாரதி இன்று அவரின் நினைவஞ்சலியையும் நடத்திடுவது மட்டுமின்றி பார்வையாளர்களாக எங்களையும் இணைத்துக் கொண்டதில் நன்றி பாராட்டுகிறோம்!

    என்றும் உங்களில் ஒருவனாக.. உங்களோடு ஒருவனாக..

    காவிரிமைந்தன்

    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்

    பம்மல் சென்னை 600 075

    www.thamizhnadhi.com

    &

    நாகராஜன் சபீக் (அஸ்கான் நிறுவனம்) அபுதாபி..

    Share
  • குறளின் கதிர்களாய்….(59)

    -செண்பக ஜெகதீசன்

    கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்.  (திருக்குறள்:774-படைச்செருக்கு)

    புதுக் கவிதையில்…

    கையிலிருந்த வேல்
    களத்தில்
    யானையோடு போனது…
    மேனியில் குத்தியிருக்கும் வேல்
    மேலும் போரிட உதவுமென
    மகிழ்ச்சியில் பிடுங்கும்
    படைச்செருக்கு அவனுடையது…!

    குறும்பாவில்…

    எறிந்தவேல் யானையோடு போனதால்,
    உடலில் குத்திய வேலைப்
    பிடுங்கி மகிழும் வீரன்…!

    மரபுக் கவிதையில்…

    எதிர்த்து வந்த யானையதும்
    எறிந்த வேலுடன் ஓடியதே,
    புதிதாய்ப் போரிட வேலொன்று
    பெற்றிடப் போதிய பொழுதில்லை,
    எதிரி எறிந்த வேலுடலில்
    இருப்பது கண்டு மகிழ்வுற்றே
    மெதுவாய்ப் பிடுங்கிப் போர்தொடரும்
    மேன்மை வீரச் செருக்கன்றோ…!

    லிமரைக்கூ…

    யானையுடன் எறிந்தவேல் சென்றது போரில்,
    உடலில் தைத்த வேலதையே
    உவப்புடன் பிடுங்கிடும் வீரனைப்பார் நேரில்…!

    கிராமிய பாணியில்…

    வீரம்பாரு வீரம்பாரு
    சண்டயில வீரம்பாரு,
    எறிஞ்சிருந்த வேலோட
    யானயுந்தான் ஓடிப்போச்சே…

    எறியவேற வேலுக்குத்தான்
    கவலயில்ல வீரனுக்கு,
    மாருமேல குத்திநின்ன
    வேலயுமே புடுங்கிக்கிட்டே
    சண்டபோடுறான் சந்தோசமா…

    வீரம்பாரு வீரம்பாரு
    சண்டயில வீரம்பாரு…!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 154

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை

    வேனில் காலக் கடை நாளில் பொழுது போக்கு

    தம் கன்றுகளை விரும்பும் பெண்யானைகள் கூட்டத்தோடு
    அவற்றை விரும்பும் ஆண்யானைகளும் நடுங்கும்வண்ணம்
    நன்கு வெயில் சூழ்ந்து காணப்படும்
    குன்றுகள் சார்ந்த நாட்டில் உள்ள
    காடுகள் முழுதும் தீப்பிடிக்கும் வண்ணம்          kanigai
    நெருப்பை மூட்டி,
    கோடைக்காற்றுடன் வந்து புகுந்து,

    கூடல் நகரை ஆட்சி செய்யும் வேனில் வேந்தன்
    வேறு இடம் தேடிச்செல்ல முயல்கின்ற
    வேனில் காலத்தின் கடைசி நாளில்-

    பெருஞ்செல்வர்களும் மன்னர்களும் விரும்பும்
    கணிகையர் வீதியில்
    கூடார வண்டியும் பல்லக்கும்
    மணிகள் இழைத்த கால்கள் உடைய கட்டிலும்
    ஆகிய இவற்றுடன்
    சோலைகளில் மன்னர்களுடன்
    விளையாடி மகிழும் உரிமையும்
    வெண்சாமரக் கவரியும்
    பொன் வெற்றிலைப்பெட்டியும்

    கூர்மையான முனையுடைய வாளும்
    தம் அரசன் கொடுக்க…

    இங்ஙனம் பெற்ற செல்வங்கள்
    எந்தக்காலத்திலும் மாறாத வண்ணம்
    அரசப் பரத்தையரும்
    அந்த வீதியில் வாழ்ந்து வந்தனர்.

    அவர்கள் அன்றாடம்
    புதுமணம் புரிந்து வாழ்ந்து வருவதால்
    உண்டான களைப்பு தீரும் வண்ணம்,
    ஏவல் பணி புரியும் பெண்கள் ஏந்திய
    செம்பொன் கிண்ணங்களில் இருக்கும்
    இனிய கள்ளின் தெளிவைப் பருகி மயங்குவர்.

    அவ்வாறு மயங்கி
    அவர்கள் பூவிழி மூடும்போது
    பூவின் இதழுக்குள்
    தம் இனமான வண்டுதான்
    மறைகின்றதோ என்றெண்ணி

    புள்ளிகள் பொருந்திய பாடல் இசைக்கும் வண்டுகள்
    அக்கண்களைத் தழுவ வரும்.

    அவற்றை விரட்ட எண்ணும் அம்மாதர்கள்
    வண்டுகள் இல்லாத இடத்தில் மலர்மாலை வீசி
    அவற்றை விரட்ட எண்ணுவார்கள்.
    பின் தம் அறியாமை அறிந்து
    சிவந்த இலவம்பூ போன்ற தம் இதழால்
    புன்னகை புரிவார்கள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 120 – 136
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: http://kadaitheru.blogspot.in/2011_04_01_archive.html

     

    Share
  • காதல் நாற்பது – 33 செல்லப் பெயரில் அழைப்பாய்

    ajay

    செல்லப் பெயரில் அழைப்பாய்

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

    என்னை அழைத்திடு, என் நாயின்

    செல்லப் பெயரில் !

    சின்னஞ் சிறு பிள்ளையாய்

    ஒன்றும் அறியாமல் விளையாடும் போது

    அழைத்தால் ஓடி வரும்

    அந்தப் பெயர்

    எனது செவிதனில் விழட்டும் !

    செவ்வந்திப் பூக்கள்

    என்னிதயம் கவர்ந்தவர் முகத்தின்

    விழியோரப் பார்வையை

    முன்னோக்கும் !

    தெளிவான தேவ கானமாய்த்

    தெரியாமல்

    ஈர்த்திடும் அவ்வாய்ச் சொற்களில்

    எனக்கினி அழைப்பு

    இல்லாததை உணர்கிறேன்.

    கடவுளை நான் வேண்டும் போது

    சுமைதாங்கி மேல் நிற்கும்

    சவப்பெட்டியில்

    அமைதி நிலவுது !

    மரித்துப் போனவள்

    உடமைக்கு

    உரிமை அளிக்கட்டும் உன் வாக்கு.

    வடபுறத்துப் பூக்களைச்

    திரட்டி வந்து

    தென்புறத்தை நிரப்பு !

    இளம் பருவத்தில் எழும் காதலை

    மேற்கொண்டு

    முதுமையிலும் தொடரட்டும்

    ஆம் ! அந்தச் செல்லப் பெயராலே

    அழைத்திடு என்னை !

    குழந்தை மனத்துடன் மெய்யாகப்

    பதில் உரைப்பேன் நான்

    காத்திராமல் !

    ************

    Poem -33

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    Yes, call me by my pet-name! let me hear

    The name I used to run at, when a child,

    From innocent play, and leave the cow-slips piled,

    To glance up in some face that proved me dear

    With the look of its eyes. I miss the clear

    Fond voices which, being drawn and reconciled

    Into the music of Heaven’s undefiled,

    Call me no longer. Silence on the bier,

    While I call God–call God!–So let thy mouth

    Be heir to those who are now exanimate.

    Gather the north flowers to complete the south,

    And catch the early love up in the late.

    Yes, call me by that name,–and I, in truth,

    With the same heart, will answer and not wait.

    **********

    Share
  • துணைவன் வேண்டும் !

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    சீதனம் எதுவு மில்லை
    சீரமைக்குப் பஞ்ச மில்லை
    ஆதனம் அதுவு மில்லை
    பேதையவள்  வாழ்வில் ஒன்றாய்ப்
    பிணைந்திட வரனும் இல்லை!

    கல்வியும் கற்றவள் – நல்ல
    கனிவினை உள்ளத்தில் பெற்றவள்
    சொல்லினில் தெளிவு கொண்டவள்
    சுயநலம் துளியும் இல்லை
    நல்லதோர் துணைவன் அவளை
    நாடியே வரவும் இல்லை!

    குடிசை தான் வாழ்க்கை
    கோபுரம் அவள் உள்ளம்
    நடிகையாய் வாழ்வில் மாறும்
    நரித் தனம் எதுவும் இல்லை!
    அடிமையாய் அவளை அன்பால்
    ஆண்டிடத் துணைவன் வேண்டும் !

    அந்நிய நாட்டுக் கவளை
    அனுப்பியே உழைக்கத் தூண்டித்
    தின்றிடத் துடிக்கும் பேயர்
    தேவையே இல்லை ஆண்மை
    தன்னகம் கொண்டு வாழும்
    தகைமைசேர் துணைவன் வேண்டும்!

     

    Share
  • பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்

     
     

    [1942— ] 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.biography.com/people/stephen-hawking-9331710

    http://www.ted.com/talks/stephen_hawking_asks_big_questions_about_the_universe

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OPV3D7f3bHY

    “என்னைப் போல் நீயும் விஞ்ஞானத்தை நம்பினால், எப்போதும் பின்பற்றப்படும் ஏதோ  சில பிரபஞ்ச விதிகள் இருந்தன என்பதை நீ ஏற்றுக் கொள்ளலாம்.  அவற்றைக்  கடவுளின் வேலையென்று நீ விரும்பினால் சொல்லிக் கொள்ளலாம். அது கடவுளின்  விளக்கத்தைக் கூறுகிறதே தவிர அவரது இருப்பை நிரூபிக்க வில்லை.”

    ஸ்டீஃபன் ஹாக்கிங்

    “பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதைத் தீர்மானிக்க விஞ்ஞான விதிகள் இருக்கலாம்  என்று நான் காட்டியிருக்கிறேன்.  அந்த ரீதியில் எப்படிப் பிரபஞ்சம் தோன்றத் துவங்கியது  என்று கடவுளிடம் கேட்கத் தேவையில்லை. ஆனால் அது கடவுள் இல்லை என்று  நிரூபிக்காது. கடவுள் தேவையில்லை என்பதைக் காட்டுகிறது.”

    Der Spiegel, German Weekly Magazine (October 17, 1988)

    கடவுள் எப்படி இந்த உலகைப் படைத்தார் என்று நான் அறிய விரும்புகிறேன். இந்தக்  கோட்பாடு அந்தக் கோட்பாடு என்பதைக் கேட்பதில் எனக்கு இச்சையில்லை. அந்தப்  படைப்புக் கடவுளின் உள்ளக் கருத்துக்களைத் தேட விழைகிறேன்; மற்றவை எல்லாம்  அதன் விளக்கங்கள்தான்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (காலவெளிக்கு அப்பால் பிரபஞ்சங்கள்)

    ajay

    (காலம் என்னும்) நான்காவது பரிமாணம் 1910 ஆண்டுகளில் பெரும்பாலும் புழங்கும் ஒரு  வீட்டுச் சொல்லாக ஆகிவிட்டது. பிளாடோ, கந்தின் பூரண மெய்ப்பாடு (An Ideal Platonic or  Kantian Reality) முதல் துவங்கி வானுலகும் உட்படத் தற்காலப் புதிரான விஞ்ஞானப்  பிரச்சனைகள் அனைத்துக்கும் விடையாக எல்லாராலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.

    பேராசியை டாக்டர் லிண்டர் ஹென்டர்ஸன் (கலையியல் விஞ்ஞானம்)

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் !  ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பி  யுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும்  தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை  முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந் துளையின் அழுத்தம், திணிவு  கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure &  Density of a Black Hole are Infinite) !

    விண்வெளி விடைக் கைநூல் (Ths Handy Space Answer Book)


    நியூட்டன், ஐன்ஸ்டைனுக்கு நிகரான தற்கால விஞ்ஞானி

    1974 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் ஒரு நாள் காலை வேளை! லண்டனில் கோட்டும்,  சூட்டும் அணிந்த ஓர் இளைஞரைப் புனிதர் ஜேம்ஸ் பூங்காவின் எதிரே நிற்கும் வெள்ளை  மாளிகைப் படிகளில் தூக்கிக் கொண்டு சென்றார்கள்! உள்ளே இருந்த உருளை  நாற்காலியில் [Wheelchair] அமர வைத்துக், கார்ல்டன் மாளிகை யின் திறந்த மாடியில் [Carlton  House Terrace] இருந்த ஒரு பெரும் அறைக்கு அவர் கொண்டு செல்லப் பட்டார்! அங்கே  பிரிட்டனின் மிகச் சிறந்த விஞ்ஞான மேதைகளின் பேரவையான ராஜீயக் குழுவின் [Fellow  of Royal Society] சிறப்புநராக ஒரு மாபெரும் கெளரவத்தைப் பெறுவதற்கு வந்தார்! 32  வயதில் அந்த மதிப்பைக் கோட்பாடு பெளதிகத்திற்கு [Theoretical Physics] அடைந்த ஸ்டீஃபன்  ஹாக்கிங்தான் [Stephen Hawking] இதுவரை சிறப்புநராக இருக்கும் எல்லோருக்கும் மிக  இளையவர்!

    இருபது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளின் ஒப்பற்ற பெளதிக மேதையாகத் தற்போது  கடுமையான நோயில் காலந் தள்ளி வரும், 2010 இல் அறுபத்தெட்டு வயதான ஸ்டீஃபன்  ஹாக்கிங் ஞான ஆற்றலில் காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  ஆகியோருக்கு இணையாகக் கருதப்படும் ஓர் பிரிட்டிஷ் விஞ்ஞானி! விரிந்து செல்லும்  பிரபஞ்சத்தின் தோற்றம், மறைவு [The Origin & Fate of the Universe], ஈர்ப்பியல்பின்  கதிர்த்துகள் நியதி [Quantum Theory of Gravity], நிச்சயமற்ற கோட்பாடு [The Uncertainty Principle],  அடிப்படைத் துகள்கள், இயற்கையின் உந்தியல் [Elementary Particles, the Force of Nature],  பிரபஞ்சத்தின் கருந்துளைகள் [Black Holes], கால அம்பு [The Arrow of Time (காலத்தின்  ஒருதிசைப் போக்கு)], பெளதிகத்தின் ஐக்கியப்பாடு [The Unification of Physics] ஆகியவற்றில் தனது  ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாக, எளிதாக எடுத்துக் கூறியவர். பிரம்மாண்டமான  பிரபஞ்ச அண்டங்களின் இயக்க ஒழுக்கங்களையும், கண்ணுக்குப் புலப்படாத அடிப்படைத்  துகள்களின் [Fundamental Particles] அமைப்பையும் ஒன்றாக விளக்கக் கூடிய ‘மகா ஐக்கிய  நியதி’ [Grand Unified Theory, GUT] ஒன்றை விஞ்ஞானிகள் என்றாவது ஒருநாள் உருவாக்க  வேண்டும் என்று கேட்டுக் கொள்பவர், ஹாக்கிங்!

    இப்போது இங்கிலாந்தில் ஹாக்கிங் லுகாஸியன் கணிதப் பேராசிரியராக [Lucasian Professor of  Mathematics] கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணி யாற்றி வருகிறார். முன்னூறு  ஆண்டுகளுக்கு முன்பாக அதே பதவியில் அதே இடத்தில் அமர்ந்திருந்தவர், ஈர்ப்பியலைக்  [Gravitation] கண்டுபிடித்த கணிதப் பெளதிக மேதை, ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1726)!  நோபெல் பரிசு பெற்றக் கணித மேதை பால் டிராக் [Paul Dirac (1902-1984)] என்பவரும் அதே  இடத்தில் பின்னால் பதவி வகித்தவர்!

    ஸ்டீஃபன் ஹாக்கிங் இளமை வாழ்க்கை வரலாறு

    காலிலியோ இறந்து துள்ளியமாக 300 ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தில் ஸ்டீஃபன்  ஹாக்கிங் 1942 ஜனவரி 8 ஆம் தேதி ஆக்ஸ்போர்டு நகரில் பிறந்தார். மருத்துவ டாக்டரான  தந்தை பிராங்க் ஹாக்கிங், தேசிய மருத்துவ ஆய்வுக் கூடத்தில் [National Institute for Medical  Research] வேனில் நாட்டு நோய்களில் [Tropical Diseases] சிறப்பாக ஆராய்ச்சி செய்து வந்த  உயிரியல் விஞ்ஞானி [Research Biologist]. தாயார் இஸபெல் ஹாக்கிங், ஆக்ஸ்போர்டு  பல்கலைக் கழகத்தில் வேதாந்தம், அரசியல், நிதித்துறை பற்றிப் படித்தவர். அவர்களது  நான்கு குழந்தைகளில் ஸ்டீஃபன்தான் மூத்த பையன். அவன் பிறந்த சமயம்தான்  இரண்டாம் உலகப் போர் துவங்கி, ஜெர்மன் கட்டளை ராக்கெட்டுகள் அடிக்கடி ஏவப்பட்டுக்  குண்டுகள் விழுந்து, பிரிட்டனில் பல நகரங்கள் தகர்க்கப் பட்டன!

    சிறுவனாக உள்ள போதே ஸ்டீஃபன் பெளதிகத்திலும், கணிதத்திலும் மித மிஞ்சிய  சாமர்த்தசாலியாக இருந்தான்! ஹைகேட் [Highgate] ஆரம்பப் பள்ளியில் படித்தபின்,  ஸ்டீஃபன் பிறகு புனித ஆல்பன்ஸ் [St. Albans] உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தான். 1958  இல் மேற்படிப்பிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். தந்தையார்  மருத்துவம் எடுக்கத் தூண்டியும் கேளாது, ஸ்டீஃபன் கணிதம், பெளதிகம் இரண்டையும்  விரும்பி எடுத்துக் கொண்டார்! அங்கே அவர் வெப்பயியக்கவியல், ஒப்பியல் நியதி,  கதிர்த்துகள் யந்திரவியல் [Thermodynamics, Relativity Theory, Quantum Mechanics] ஆகிய  பகுதிகளைச் சிறப்பாகப் படித்தார். 1961 இல் ராஜீய விண்ணோக்கிக் கூடத்தில் [Royal  Observatory] சேர்ந்து, தன் சிறப்புப் பாடங்களின் வேட்கையில் சில மாதங்கள் ஆராய்ச்சியில்  ஈடுபட்டார். 1962 இல் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் B.A. பெளதிகப் பட்டதாரி ஆகி, அடுத்துக்  கேம்பிரிட்ஜ் சென்று பொது ஒப்பியல், அகிலவியல் துறைகளில் [General Relativity, Cosmology]  ஆராய்ச்சி செய்யப் புகுந்தார்.

    கேம்பிரிட்ஜில் முதற் காலவரைப் படிப்பு [First Term] முடிந்த பின் மிகவும் சோர்ந்து  நொய்ந்து போன ஸ்டீஃபனைக் கண்ட தாய், டாக்டரைப் பார்க்கும்படி மகனை  வற்புறுத்தினார். இரண்டு வார உடம்பு சோதனைக்குப் பின், அவருக்கு ALS என்னும்  [Amyotropic Lateral Disease] ஒருவித நரம்புத் தசை நோய் [Neuro-muscular Disease (Motor Neurone  Disease)] உள்ளதாக, டாக்டர்கள் கண்டு பிடித்தார்கள்! அமெரிக் காவில் அந்நோயை ‘லோ  கேரிக் நோய்’ [Lou Gehrig ‘s Disease] என்று குறிப்பிடுகிறார்கள்! அந்நோய் மூளை, முதுகுத்  தண்டு [Spinal Cord] ஆகியவற்றில் சுயத்தசை இயக்கத்தை ஆட்சி செய்யும் நரம்புச்  செல்களைச் [Nerve Cells] சிதைத்து விடும்! ஆனால் மூளையின் அறிவாற்றலைப்  பாதிக்காது! அடுத்து நோயாளிக்குச் சுவாசிக்கும் தசைகள் சீர்கேடாகி மூச்சடைத்தோ  அல்லது நிமோனியா தாக்கியோ சீக்கிரம் மரணம் உண்டாகும்! திடீரென அவரது  உடல்நிலை மிகவும் மோசமாகி, டாக்டர்கள் அவர் Ph.D. பட்டம் வாங்குவது வரை கூட  வாழ மாட்டார் என்று முன்னறி வித்தார்கள்! அதைக் கேட்ட ஸ்டீஃபன் ஹாக்கிங்  அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாலும், பெளதிக ஆராய்ச்சி செய்யும் போது மன  உறுதியும், வலிவும் பெற்று ஆய்வுகளில் முன்னேறிக் கொண்டு வந்தார்!

    மாதர் குல மாணிக்கம் மனைவி ஜேன் ஹாக்கிங்!

    வாழ்க்கையில் நொந்து போன ஹாக்கிங், 1965 இல் ஜேன் ஒயில்டு [Jane Wilde] என்னும்  மாதைத் திருமணம் செய்து கொண்டார். மனைவி ஜேன் ஹாக்கிங் மாதருள் ஒரு  மாணிக்கம்! மில்லியனில் ஒருத்தி அவள்! அவரது கடும் நோயைப் பற்றி அறிந்த பின்னும்,  அவர் நீண்ட காலம் உயிர் வாழமாட்டார் என்று தெரிந்த பின்னும், மன உறுதியோடு  ஸ்டீஃபனை மணந்து கொண்டது, ஓர் வியக்கத் தக்க தீரச் செயலே! ஹாக்கிங் கசந்த  போன வாழ்வை வசந்த வாழ்வாய் மாற்றி, மாபெரும் விஞ்ஞானச் சாதனைகள் புரிய  வசதி செய்த வனிதாமணி, ஜேன் ஹாக்கிங்! 1962 இல் லோ கேரிக் நோய் [Lou Gehrig ‘s  Disease] வாய்ப்பட்டதும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஸ்டீஃபன் ஆயுள் முடிந்துவிடும் என்று  டாக்டர்கள் கணக்கிட் டார்கள்! ஆனால் நாற்பத்தெட்டு ஆண்டுகள் தாண்டியும் [2010] அவரது  ஆயுள் இன்னும் நீண்டு கொண்டே போகிறது! அவர்களுக்கு இரண்டு புதல்வர்களும், ஒரு  புதல்வியும் உள்ளார்கள்!


    துரதிர்ஷ்ட வசமாக நகர்ச்சி நரம்பு நோயில் [Motor Neurone Disease] துன்புறும் ஸ்டீஃபன்,  முழுவதும் நடக்க முடியாது முடமாகிப் போய், பேச்சுத் தடுமாறி உருளை நாற்காலியில்  நகர்ந்து செல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டது! மற்றும் சில முறைகளில் அவருக்கு  யோகமும் இருந்தது! அவரது மனைவி ஜேன், ஹாக்கிங் [Jane Hawking] புதல்வர், புதல்வி  அளிக்கும் உதவி, ஆதரவு ஸ்டீஃபனுக்கு விஞ்ஞானப் பணிகளில் வெற்றியும், சுமுகமான  வாழ்க்கையும் பெற ஏதுவாக இருந்தது! அவரது விஞ்ஞானக் கூட்டாளிகளான ராஜர்  பென்ரோஸ் [Roger Penrose], ராபர்ட் ஜெரோச் [Robert Geroch], பிரான்டன் கார்டர் [Brandon Carter],  ஜார்ஜ் எல்லிஸ் [George Ellis] ஆகியோர் ஆராய்ச்சியிலும், பெளதிகப் பணியிலும்  அவருக்குப் பேராதரவாகவும், பெருந்துணைவராகவும் அருகே இருந்தனர்!

    1985 இல் ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு’ [A Brief History of Time] என்னும் அவரது நூலின்  முதற்படி எழுத்தாக்கம் [Draft] முடிந்தது. ஜெனிவாவுக்குச் சென்று செர்ன் பரமாணு  விரைவாக்கியில் [CERN Particle Accelerator] ஆராய்ச்சிக்காகத் தங்கிய போது, நிமோனியா  நோய் வாய்ப்பட்டு மருத்துவக் கூடத்திற்குத் தூக்கிச் செல்லப் பட்டார். உயிர்த்துணைச்  சாதனத்தை [Life Support System] அவருக்கு இணைத்திருப்பதில் எதுவும் பயனில்லை என்று  டாக்டர்கள் கூற, மனைவி ஜேன் ஹாக்கிங் கேளாமல், அவரைக் கேம்பிரிட்ஜ் மருத்துவக்  கூடத்திற்கு விமானத்தில் கொண்டு வந்தார்! அங்கே தொண்டைக் குழாய் அறுவை  [Tracheostomy Operation] அவருக்குச் செய்ய நேரிட்டது. என்ன ஆச்சரியம்! அறுவை வெற்றி  யாகி ஸ்டீஃபன் உயிர் பிழைத்தார்! ஆனால் அவரது குரல் முழுவதும் போய் விட்டது!  அதன் பின் அவர் எந்த விதத் தொடர்பும் பிறரிடம் வைத்துக் கொள்ள முடியாமல்  போய்விட்டது!

    அப்போது அவரது மாணவருள் ஒருவரான பிரையன் விட் [Brian Whitt] என்பவர் நூலை  எழுதி முடிக்க உதவியதோடுப், பிறரிடம் தொடர்பு கொள்ள ‘வாழ்வு மையம் ‘ [Living Center]  என்னும் தொடர்புக் கணனிப் பொறி [Communication Program] ஒன்றை ஸ்டீஃபனுக்கு  அமைத்துக் கொடுத்தார். ‘வாழ்வு மையம்’ சன்னிவேல் கலிஃபோர்னியாவில் உள்ள வால்ட்  வால்டாஸ் [Walt Woltosz of Words Plus Inc. & Speech Plus Inc. Sunnyvale, California] அவரின்  அன்பளிப்பு! அதைப் பயன்படுத்தி ஸ்டீஃபன் கட்டுரை எழுதலாம்; புத்தகம் தயாரிக்கலாம்;  அதில் உள்ள பேச்சு இணைப்பியின் [Speech Synthecizer] மூலம் ஸ்டீஃபன் பிறருடன்  பேசலாம்! டேவிட் மேஸன் [David Meson] என்பவர் பேச்சு இணைப்பி, மின்கணனி  இரண்டையும் அவரது உருளை நாற்காலியில் வசதியாகப் பிணைத்து வைத்தார்.  இப்போது ஸ்டீஃபன் மின்னியல் குரலில் [Electronic Voice], முன்னை விடத் தெளிவாக இவை  மூலம் பேச முடிகிறது!

    1966 இல் ஸ்டீஃபன் ஹாக்கிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக டிரினிடி கல்லூரியில் தனது  Ph.D. பட்டத்தைப் பெற்று அங்கேயே பட்ட மேல்நிலை ஆராய்ச்சியையும் [Post-doctoral  Research] தொடர்ந்தார். 1973 இல் வானியல் கல்விக் கூடத்தில் [Institute of Astronomy]  ஆராய்ச்சியை விட்டுவிட்டு, கேம்பிரிட்ஜில் கணிதப் பெளதிகத் துறையகத்தில்  ஆசிரியராகச் சேர்ந்தார். முப்பத்திரண்டாம் வயதில் எல்லாருக்கும் இளைய ஹாக்கிங்,  ராயல் குழுவின் சிறப்புநராக [Fellow of Royal Society] 1974 இல் ஆக்கப் பட்டார்! டிரினிடி  கல்லூரியில் 1977 இல் ஈர்ப்பியல் பெளதிகப் [Gravitational Physics] பேராசிரியராகவும் ஆனார்.  முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஐஸக் நியூட்டன் ஆட்கொண்ட ஆசனத்தில், 1979 இல்  ஸ்டீஃபன் ஹாக்கிங் லுகாஸியன் கணிதப் பேராசிரியராக [Lucasian Professor of Mathematics]  கேம்பிரிட்ஜில் பதவி மேற்கொண்டார்!

    கடவுள் பிரபஞ்சத்துடன்  பகடை ஆடுவதில்லை!

    ‘எது முதலில் வந்தது ? கோழிக்குஞ்சா ? அல்லது முட்டையா ? பிரபஞ்சத்திற்கு ஓர்  ஆரம்பம் இருந்ததா ? அப்படி யென்றால் அதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது ? எங்கிருந்து  பிரபஞ்சம் வந்தது ? அது எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?’ இவ்வாறு வினாக்களை  எழுப்பியவர், ஸ்டீஃபன் ஹாக்கிங்! ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி  மெய்யென்றால், சென்ற காலத்தில் முடிவில்லாத் திணிவு கொண்ட நிலை [The State of  Infinite Density] இருந்திருக்க வேண்டும்! அதுவே பெரு வெடிப்பு ஒற்றை மாறுபாடு [Big Bang  Singularity] என்று கூறப்படுவது. பிரபஞ்சத்தின் ஆரம்பம் அதுதான் என்றும் சொல்லலாம்.  அறியப்பட்ட விஞ்ஞானத்தின் விதிகள் அனைத்தும் ஒற்றை மாறுபாட்டில் அடிபட்டுப்  போகின்றன! பொது ஒப்பியல் நியதி மெய்யென்றால், பிரபஞ்சம் எப்படித் தோன்றியது  என்று விஞ்ஞானம் முன்னறிவிக்க முடியாது!

    வெப்ப இயக்கவியலின் இரண்டாம் நியதி [Second Law of Thermodynamics] கூறுகிறது: ‘ஓர்  தனிப்பட்ட ஏற்பாட்டில் எப்போதும் ‘என்றாப்பி’ [ஒழுங்கீனம்] மிகுந்து கொண்டே போகிறது  [The Entropy or Disorder of an isolated system always increases]’. கீழே விழுந்து நொறுங்கிய  முட்டையை மறுபடியும் ஒன்றாய்ச் சேர்த்து முன்பிருந்த வடிவத்திற்குக் கொண்டு வர  முடியாது! கருந்துளையின் ‘நிகழ்ச்சி விளிம்பு’ [Event Horizon] காலம் செல்லச் செல்ல  எப்போதும் பெரிதாகிறது! நிகழ்ச்சி விளிம்பின் பரப்பு பெருகிக் கொண்டு போவ தால்,  கருந்துளை ‘என்றாப்பி’ கொண்டுள்ளது என்பது தெரிகிறது! அதாவது கருந்துளையில்  எவ்வளவு ஒழுங்கீனம் [Entropy or Disorder] நிறைந்துள்ளது என்பதை ‘என்றாப்பி’ காட்டும்.  என்றாப்பி இருந்தால் நிச்சயம் கருந்துளையில் உஷ்ணம் இருக்க வேண்டும்! பழுக்கக்  காய்ச்சிய இரும்பில் வெப்பக் கதிர் வீசுவது போல், கருந்துளையிலும் வெப்பக் கதிர்கள்  [Heat Radiation] வெளியாகிக் கொண்டு இருக்க வேண்டும்!

    நிச்சயமற்ற விதிகளும், சூதாட்டம் போல் [Chance & Uncertainty] நிகழ்ச்சிகளும் இருப்பதால்,  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கதிர்த்துகள் யந்திரவியலை [Quantum Mechanics] ஒருபோதும் ஒப்புக்  கொள்ள மாட்டார்! அதைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘கடவுள் பிரபஞ்சத்துடன் பகடை  ஆடுவதில்லை’ [God does not play dice with the universe] என்று பல தடவைச் சொல்லி  யிருக்கிறார்! ‘ஐன்ஸ்டைன் அப்படிச் சொல்லியது, முற்றிலும் தவறு! கருந்துளையின் மீது  ஒளித்துகள் பாதிப்பு நிகழ்ச்சியை ஆராய்ந்தால், கடவுள் பகடை ஆடுவதோடு மட்டும்  நில்லாமல், சில சமயம் அவற்றைக் காண முடியாதபடித் தூக்கி விட்டெறிந்தும் விடுகிறார்  ‘ என்று ஹாக்கிங் மறுதலித்துக் கூறினார்!

    பிரபஞ்சத்தின் மெய்க் காலம்! கற்பனைக் காலம்!

    ‘பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக்  கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய  பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து  போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்  விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறி வித்த முனிவர்களை விட  எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டு களுக்குப்  பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு  இருக்கப் போவதில்லை’ என்று புன்னகை புரிகிறார், ஸ்டீஃபன் ஹாக்கிங்!


    பிரபஞ்சத்தின் பிறப்பை அனுமானிப்பதாய் இருந்தால், அது தோன்றிய காலத்தின்  நியதிகளைப் பற்றி ஒருவர் அறிய வேண்டும்! மெய்க் காலத்துக்கு இருவிதக் கோலங்களை  எடுத்து விளக்கலாம்! ஒன்று காலக் கடிகாரம் பின்னோக்கி வரையில்லாமல் தொடர்ந்து  போய்க் கொண்டே இருக்கும் ஒரு நிலை! அல்லது பெரு வெடிப்பு போல் [Big Bang] ஒற்றை  முறைகேட்டில் [Singularity] காலம் ஆரம்பம் ஆகி யிருக்கலாம்! மெய்க் காலம் [Real Time]  என்பது பிரபஞ்ச பெரு வெடிப்பில் ஆரம்பம் ஆகிப் பெரு நொறுங்கலில் முடியும் வரை  செல்லும் ஒரு மெய்யான கோடு! இன்னும் ஒரு திசையில் வேறொரு காலம் உள்ளது.  அதுதான் கற்பனைத் திசையில் செல்லும் காலம் [Imaginary Direction of Time]! அது மெய்க்  காலத்திற்கு நேர் செங்குத்தான திசையில் செல்வது! அந்தக் கற்பனைத் திசையில் பெரு  வெடிப்போ அல்லது பெரு நொறுங்கலோ போன்று எந்த வித ஒற்றை முறைகேடும்  கிடையாது! அம்முறையில் அத்திசையில் பார்த்தால் பிரபஞ்சத்துக்குத் தோற்றமும்  இல்லை! அடுத்து முடிவும் இல்லை! அத்தகைய கற்பனைக் காலத்தில் தற்போதைய  விஞ்ஞான நியதிகள் யாவும் தகர்ந்து போய் விடுகின்றன! அதாவது பிரபஞ்சம் படைக்கப்  படவும் இல்லை! பிரபஞ்சம் முடியப் போவதும் இல்லை! பிரபஞ்சம் இப்படியே இருக்கும்!  இவ்வாறு பிரபஞ்சத்தைப் பற்றி, ஹாக்கிங் தன் புதுக் கருத்தைக் கூறுகிறார்!

    அந்தக் கற்பனைக் காலத்தைத்தான் நாமெல்லாம் மெய்க் காலமாய்க் கருதிக் கொண்டு  வரலாம்! மெய்க் காலம் என்று நாம் பின்பற்றி வருவது வெறும் கற்பனையே! மெய்க்  காலத்தில் பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் உண்டு! முடிவும் உண்டு! கற்பனைக் காலத்துக்கு  ஒற்றை முறைகேடு எதுவும் இல்லை! எல்லையும் இல்லை! அதாவது கற்பனைக்  காலந்தான் மெய்யான அடிப்படை! நாம் கணித்த மெய்க்காலம் என்பது பிரபஞ்சம்  இப்படித்தான் உண்டானது என்று யூகித்து, நம் சிந்தையில் உதயமான ஒரு கருத்தே!  இப்படிச் சொல்கிறார், ஹாக்கிங்!

    அண்டவெளிக் கருந்துளைகள் பற்றி ஹாக்கிங் ஆராய்ச்சிகள்

    1965-1970 இவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பிரபஞ்சவியலைப் [Cosmology] பற்றி  அறியப் புது கணித முறைகளைக் கையாண்டு, ஸ்டீஃபன் பொது ஒப்பியல் நியதியில்  [General Theory of Relativity] ஒற்றை முறைகேடுகளை [Singularities] ஆராய்ந்து வந்தார்.  அப்பணியில் அவருக்கு விஞ்ஞானி ராஜர் பென்ரோஸ் [Roger Penrose] கூட்டாளியாக  வேலை செய்தார். 1970 முதல் ஸ்டீஃபன் அண்ட வெளிக் கருந்துளைகளைப் [Black Holes] பற்றி  ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார்.  அப்போது அவர் கருந்துளைகளின் ஓர் மகத்தான  ஒழுக்கப்பாடு குணத்தைக் [Property] கண்டு பிடித்தார்! ஒளி கருந்துளைக் கருகே செல்ல முடியாது! ஒளித்துகளை அவை விழுங்கி விடும்! ஆதலால் அங்கே காலம்  முடிவடைகிறது! கருந்துளையின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது! ஜெர்மன் விஞ்ஞானி  வெர்னர் ஹைஸன்பர்க் ஆக்கிய கதிர்த்துகள் நியதி [Quantum Theory], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  படைத்த பொது ஒப்பியல் நியதி இரண்டையும் பயன்படுத்திக் கருந்துளைகள் கதிர்வீச்சை  [Radiation] வெளி யேற்றுகின்றன என்று ஹாக்கிங் நிரூபித்துக் காட்டினார்!

    அந்த வெற்றியின் முடிவில் ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியையும், கதிர்த்துகள்  நியதியையும் ஒன்றாக இணைக்க முற்பட்டு, பிரபஞ்ச இயக்கங்களை ஒருங்கே விளக்கக்  கூடிய ‘மகா ஐக்கிய நியதி ‘ [Grand Unified Theory, GUT] ஒன்றை உண்டாக்க முடியுமா என்று  முயன்றார்! மர்மமான கருந்துளைகளைப் பற்றிய விபரங்களை அறிய முடியாத  சமயத்தில், அவற்றைப் பற்றி ஆராய முற்பட்டார். 1971 இல் பிரபஞ்சப் படைப்பை  ஆராய்ந்து, பெரு வெடிப்புக்குப் [Big Bang] பிறகு ஒரு பில்லியன் டன் கனமான, ஆனால்  புரோட்டான் [Proton] அளவு வடிவில் மிகச் சிறிய பல அண்டங்கள், தோன்றி யிருக்க  வேண்டும் என்று எடுத்துக் கூறினார்! அவற்றை ‘மினிக் கருந்துளைகள்’ [Mini Black Holes] என்றார், ஹாக்கிங்! பொது ஒப்பியல் நியதியைப் பின்பற்றும், பிரம்மாண்டமான ஈர்ப்பியல்  கவர்ச்சியைக் கொண்ட இந்த மினிக் கருந்துளைகள் சிறியதாய் இருப்பதால், கதிர்த்துகள்  யந்திரவியல் நியதியும் [Laws of Quantum Mechanics] இவற்றுக்குப் பொருந்தும் என்று  ஹாக்கிங் கூறினார்! கதிர்த்துகள் நியதியின் விதிப்படி, கருந்துளைகள் சேமிப்புத் தீரும்  வரைப் பரமாணுக்களை [Subatomic Particles] வெளியேற்றி, முடிவில் வெடித்துச்  சிதைகின்றன என்று கண்டறிந்தார்! ஸ்டீஃபன் ஹாக்கிங் கண்ட இந்த அரிய விஞ்ஞான  முடிவு, கருந்துளைகளின் ஆயுட் கால வரலாற்றில் பூர்வீக வெப்ப யியக்கவியல் [Classical  Thermodynamics], கதிர்த்துகள் யந்திரவியல் [Quantum Mehanics] இரண்டுக்கும் தொடர்புள்ளது  என்று எடுத்துக் காட்டும் முக்கியத்துவம் பெற்றது!

    மேலும் ஒரு மகத்தான ஹாக்கிங் சாதனை 1983 இல் ஸான்டா பார்பராவைச் சேர்ந்த ஜிம்  ஹார்ட்டிலுடன் [Jim Hartle of Santa Barbara] ஆராய்ந்து அறிவித்த ‘விளிம்பற்ற கூறுபாடு’ [No  Boundary Proposal]! விண்வெளி, காலம் இரண்டும் வரையரை கொண்டவை [Space & Time are  finite]! ஆனால் அவற்றுக்கு எல்லையோ, விளிம்போ இருக்க முடியாது [They do not have any  boundary or edge]!

    ஸ்டீஃபன் ஹாக்கிங் படைத்த நூல்கள், பெற்ற பாராட்டுகள்

    1973 இல் எல்லிஸுடன் [G.R.S Ellis] எழுதிய ‘விண்வெளிக் காலத்தின் பேரளவு அமைப்பு’  [The Large Scale Structure of Space Time], 1981 இல் எழுதிய ‘பிரம்மாண்ட விண்வெளி பெரு ஈர்ப்பியல்’ [Superspace & Supergravity], 1983 இல் எழுதிய ‘மிக இளைய பிரபஞ்சம்’ [The Very  Early Universe]. ஸ்டீஃபன் எழுதி 1988 இல் வெளியிட்ட ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு ‘ [A  Brief History of Time] சிறப்பு விற்பனை நூலாக பல மில்லியன் பிரதிகள் விற்கப் பட்டன! 1993  இல் எழுதிய ‘கருந்துளைகள், குழந்தை அகிலங்கள்’ [Black Holes & Baby Universes]. 1992 இல்  படாதிபதி எர்ரல் மாரிஸ் [Errol Morris] ஸ்டீஃபன் ஹாக்கிங் ‘வாழ்க்கையும் பணியும்’ என்னும்  தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்து, அவர் எழுதிய ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு’  என்னும் நூலுக்கு வடிவம் தந்துள்ளார்! மிக இளைய வாலிப வயதிலே ஸ்டீஃபன் F.R.S  [Fellow of Royal Society] பெற்று, 12 கெளரவப் பட்டங்களையும் இதுவரைப் பெற்றுள்ளார்.  அவர் 1989 இல் ‘மதிப்பு மிகு தீரர்’ [Champian of Honour], பெயர் எடுத்து, அமெரிக்காவின்  தேசிய விஞ்ஞானப் பேரவையில் [National Academy of Sciences] உறுப்பினர் ஆனார்!

    1991 மார்ச் 5 ஆம் தேதி இரவு 10:45 மணிக்கு ஹாக்கிங் வீடு திரும்பும் போது, உருளை  நாற்காலியின் முன்னும் பின்னும் சிவப்பு விளக்குகள் மின்ன, அவர் வீதியைப் பாதி  கடந்து செல்கையில், வேகமாய் எதிர்த்து வந்த கார் வாகனம் ஒன்று எதிர்ப்பட பணிப் பெண் [நர்ஸ்] ‘அங்கே பாருங்கள்’ என்று அலறினாள்! ஆனால் ஸ்டீஃபன் தப்ப முடிய  வில்லை! வாகனம் வேகமாய் உருளை நாற்காலியை மோதித் தள்ள, ஹாக்கிங் வீதியில்  குப்புற விழுந்தார்! அந்தக் கோர விபத்து உருளை நாற்காலியை சிதைத்து, மின்கணனியை  உடைத்து, அவரது இடது கையையும் முறித்து விட்டது! தலையில் பல வெட்டுக்  காயங்களுடன் எப்படியோ ஹாக்கிங் உயிர் தப்பினார்! அவருக்குப் பதிமூன்று இடங்களில்  தலையில் தையல் போட வேண்டிய தாயிற்று! பலமுறைக் காப்பாற்றி விட்ட கடவுள்,  இந்த விபத்திலும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் பாதுகாத்து விட்டார்! சரியாக இரண்டு நாள்  கழித்து, ஹாக்கிங் வேலை செய்ய ஆய்வுக் கூடத்திற்குக் கிளம்பினார்!

    2010 ஆம் ஆண்டில் அறுபத்தெட்டு வயதாகும் ஹாக்கிங் கடும் நோயுடன் துன்புற்றாலும்,  இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து விண்வெளி விஞ்ஞானத்தை விருத்தி செய்யப்  போகிறார்! வருங்காலத்தில் அண்டவெளிப் பெளதிக ஆக்கத்திற்கு ஒரு நாள் அவருக்கு  நோபெல் பரிசு கிடைக்கப் போவதை, நாமும் உறுதியாக எதிர்நோக்கி இருக்கலாம்!

    ஆதாரங்கள்:

    1. A Brief History of Time, By: Gene Stone & Stephen Hawking [1992]
    2. Scientific Genius, By: Jim Glenn [1996]
    3. Stephen Hawking ‘s Universe, By: John Boslough [1889]
    4. A Brief History of Time, By: Stephen Hawking [1988]
    5.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210223&format=html (பிரபஞ்ச விஞ்ஞான  மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)
    6. http://jayabarathan.wordpress.com/2007/12/07/black-holes/ [பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள்  ! பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)]

    7.  http://www.biography.com/people/stephen-hawking-9331710
    8. http://en.wikipedia.org/wiki/Stephen_Hawking  (February  12, 2015)

    ***********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  February 15, 2015 [R-1]

    Attachments area
    Preview YouTube video Last Week Tonight with John Oliver: Stephen Hawking Extended Interview (HBO)

    Last Week Tonight with John Oliver: Stephen Hawking Extended Interview (HBO)
    Share
  • பணம்

    -றியாஸ் முஹமட்

    போனதும் விமானம்
    வந்ததும் விமானம்
    மறக்க முடியவில்லை
    ஏழையாகப் பிறந்ததால்
    நான்பட்ட அவமானம்…!

    வண்ண வண்ணக் காகிதம்
    வதங்கியது என் வாலிபம்
    எல்லாமே செய்தது
    இந்தப் பணம்
    இல்லாமல் ஆனேன்
    நடைபிணம்…!

    எல்லாம் கழன்ற பட்ட மரம்
    யாருமில்லாத் தனி மரம்
    போட்டார்கள் பல கோஷம்
    கண்டேனே பல வேஷம்
    ஆடினார்கள் நல்ல
    ஆட்டம்…!

    உயிரானவளும் மௌனம்
    உயிரெடுக்க வந்தான்
    எமனும்
    உறவுகள் என்னைப் பந்தாட
    ஏறியது விமானம்
    பறந்தது ஆகாயம்
    வளைகுடாப் பயணம்

    தொலைத்தேன் உறக்கம்
    சிந்தினேன் இரத்தம்
    ஆனாலும் விடவில்லை
    என் ஊக்கம்
    சேர்த்தேன்
    பணம்… பணம்….!

    இப்ப என் பையோ
    கனம் கனம்
    உறவுக் கடிதங்களோ
    தினம் தினம்
    உறவாடக் கூப்பிடுகிறார்கள்
    ஊர் சனம்…சனம்…!

    பணமில்லா வாழ்க்கை
    பூஜ்யம்
    இதையறிய எதற்குடா
    மியூசியம்?

    இதைப் புரிந்தால்
    நீதானடா
    வாலிபச் சிங்கம்

    வருத்தப்படாத
    வாலிபர் சங்கம்
    உங்களுக்கு இந்தக்
    கவிதை சமர்ப்பணம்!


    Share
  • நல்லவனாய் இரு!

        -ரா. பார்த்தசாரதி 

         அன்பில் அன்னையாய்  இரு
          புன்னகையில் சிறு குழந்தையாய்  இரு
          நடையினில் ஓர்  வீரனாய் இரு
          சொல் செயலில் கொஞ்சம் உத்தமனாய் இரு

          ஆழ்மனதில் அதிகத் தூய்மையாய் இரு
          உன் நலனில் என்றும் அக்கறை காட்டுபவனாய் இரு
          பிறர் நலனில் கடுகு அளவாது  இரக்கம் காட்டுபவனாய் இரு
          மறுபிறப்பிலே கொஞ்சம் நம்பிக்கையாய்  இரு

          இப்பிறவியிலே கர்ம வினைகளைப் போக்குபவனாய் இரு
          ஊரறிய மகானாய்  வாழ்வதைவிட
          இறைவன் மனம்குளிர மனதில் நல்லவனாய் வாழ்வதே போதும்
          உலகில் மாற்றங்கள் நிகழும் அன்புப்  பூக்கள்  பூக்கும்!

     

    Share
  • அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    அந்த நாள் ஞாபகம் …..

    வழக்கம்போல் இல்லாமல் புதிய யுக்தியில் பாடல்கள் பிறப்பதுண்டு! வாழ்வில் எதார்த்தமாக பேசும் வார்த்தைகளையே பாடலின் உள்ளீடாகத் தரும்போது.. அதையும் சவாலாக எடுத்துக்கொண்டு.. இசையமைத்த விதமும்.. உயர்ந்த மனிதனில் இடம்பெற்ற இப்பாடலை இன்னும் உயரச் செய்திருக்கிறது!

    நடிகர் திலகமும் மேஜர் சுந்தரராஜனும் இணைந்து தங்கள் பால்யகால நட்புமுடல் பள்ளிப் படிப்பு என – இன்றைய வாழ்வு வரை அலசிடும் அழகையெல்லாம் அப்படியே எழுதிக் காட்டிய வாலி அவர்களையும் அதற்கு அப்படியே இசை அமைத்த மெல்லிசை மன்னரையும் மெச்சலாம்! பலவித உணர்வுகளை ஒன்றிணைத்துத் தன் குரலில் வழங்கிய டி.எம்.சௌந்தரராஜன் அவர்களை மறக்க முடியுமா?

    இளமையில் தொடங்கி.. முதுமை வரை ஓடுகின்ற இல்வாழ்க்கையில் எத்தனை எத்தனை விருப்பங்கள்? எத்தனை எத்தனை திருப்பங்கள்? எல்லாம் நடந்தேற இணைபிரியா நண்பர்கள் இருவர் சந்திக்கும்போது அவர்களின் பரிமாற்றம் இப்படித்தான் இருக்குமோ?

    akavi

    அழகிய மறுபதிவாக அல்லாமல் வாழ்க்கையை ஒருமுறை திருப்பிப் பார்த்து பெருமூச்சு விடுதல் அலாதியானது! இது நம் அனைவரின் வாழ்விலும் இடம்பெறக் கூடிய ஒன்றுதான்! அதை நாம் எழுதி வைப்பதில்லை! யாரும் இசை அமைப்பதில்லை! நாமும் அதற்குக் குரல் கொடுப்பதில்லை! என்றாலும் இதோ நமது எதிரொலியாக! அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!!

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேakavii
    நண்பனே! நண்பனே! நண்பனே!
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

    பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
    இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

    புத்தகம் பையிலே
    புத்தியோ பாட்டிலே
    பள்ளியைப் பார்த்ததும்
    ஒதுங்குவோம் மழையிலே

    நித்தமும் நாடகம்
    நினைவெல்லாம் காவியம்
    உயர்ந்தவன் தாழ்ந்தவன்
    இல்லையே நம்மிடம்

    பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
    கடமையும் வந்தது கவலையும் வந்தது

    பாசமென்றும் நேசமென்றும்
    வீடு என்றும் மனைவி என்றும்
    நூறு சொந்தம் வந்த பின்பும்
    தேடுகின்ற அமைதியெங்கே?
    நூறு சொந்தம் வந்த பின்பும்
    தேடுகின்ற அமைதியெங்கே?
    அமைதி எங்கே?

    (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

    அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
    அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

    பெரியவன் சிறியவன்
    நல்லவன் கெட்டவன்
    உள்ளவன் போனவன்
    உலகிலே பார்க்கிறோம்
    எண்ணமே சுமைகளாய்
    இதயமே பாரமாய்
    எண்ணமே சுமைகளாய்
    இதயமே பாரமாய்
    தவறுகள் செய்தவன் எவனுமே
    தவிக்கிறான் அழுகிறான்

    (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

     

    படம்: உயர்ந்த மனிதன்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல்: கவிஞர் வாலி
    பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன்

    https://www.youtube.com/watch?v=1LavYqp80CA

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் முதன்முறை மூன்று சூரியன்கள் தோன்றும் அற்புதக் காட்சிப் படமெடுப்பு

    ajay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ​************​


    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NuXPAQOLato

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pV9R5sqRnW8

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WQ2c9DB3EnU

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FYOZv8dNheM

    ++++++++++++++++

    Star formation process

     

     

    பிரபஞ்சப் பெரு வெடிப்பில்
    பொரித்த முதன்மை விண்மீன்களில்
    கருவிண்மீன்
    ஒருவிதப் பூர்வீக விண்மீன் !
    பரிதி விண்மீன் போல்
    ஒரு யுகத்தில் ஒளி வீசிக்
    கருவிண் மீன்களாய் நமக்குக்
    காணாமல் போனவை !
    ஆற்றலுடன் அசுர வடிவம் கொண்ட
    அபூர்வ விண்மீன்கள்  !
    ஆயினும் திணிவு மிக்கவை !
    நியூட்ரான் விண்மீன்கள்
    நிறை பெருத்தாலும்
    உருவம் சிறுத்தவை ! ஆனால்
    பிரியான் விண்மீன்கள்
    திணிவு பெருத்த
    நுணுக்க விண்மீன்கள் !
    மும்முக விண்மீன் அமைப்பு முதலாய்
    உற்பத்தி யாகும் ஓர்
    அற்புதம் கண்டார் இப்போது !
    உண்டாகும் மும்முக விண்மீன்கள்
    இரண்டாகும் பிறகு !
    ஒற்றை யாகி  முறிந்து ஒளிக்
    கற்றையாய்  மறையும் !
    கருஞ்சக்தி, கருந்துளை, கரும்பிண்டம்
    காலவெளிக் கருங்கடலில்
    கண்ணுக்குப் புலப்படா
    கடவுளைப் போல் !

    +++++++++++++

     

    Tripple star system 2

    பரிதி மண்டலக் கோள்களின் அமைப்புகள் எக்காலத் தவணையில்,  எந்த வசிப்பு முறைப்பாட்டில் [Frequency & Habitability]  உருவாகும் என்றறிய முதலில் பன்முக விண்மீன் ஏற்பாடுகள் எப்படி, எப்போது தோன்றின என்று முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஆரம்பத்தில் ஓர் அமைப்பில் தோன்றும் விண்மீன்களின் எண்ணிக்கையே, பரிதி ஒன்றின் உதிப்பை நிர்ணயம் செய்கிறது.  அது உருவாவ தற்குரிய அவசிய இயக்கங்கள்  பொதுவாக மறைந்தே திரண்ட முகில் போன்ற தூசி, வாயு  [Dense Clouds of Dust & Gas] ஆகியவற்றால் நிகழ்கின்றன.

    ஜைன் பினேடா  [Institute of Astronomy ETH Zurich]

    புதிய விண்வெளிக் குறிநோக்குகள்  உதவுவது :  விண்மீன் பிறப்புக்கு முன்னர் குவிந்தடங்கும் வாயுவால் [Pre-stellar Gas Condensation]  நமது சூரியன் போல் ஒற்றை மண்டலமாய் உருவான தென்றும், இரட்டை விண்மீன் அமைப்புகள் [Binary Star Systems], அல்லது பன்முக விண்மீன் ஏற்படுகள் தோன்றுகின்றன வென்றும் ஆய்ந்து கொள்வதே.

    ஸ்டெல்லா ஆஃப்னர் [Massachusetts Amherst Astrophysicists]  

     

    Solar Sytem formation

     

    பூர்வீகத்தில் பன்முக விண்மீன் அமைப்புகளின் தோற்றம்

    2015 பிப்ரவரி மாதத்தில் பிரபஞ்சத் தோற்ற ஆரம்ப காலத்தில் உருவான பன்முக விண்மீன் அமைப்புகள் [Multi-Star Systems] பற்றி அகில நாட்டு விஞ்ஞானக் குழுவினர் ஓர் புதிய அறிக்கையை “இயற்கை” [Nature] இதழில் வெளியிட்டுள்ளார்.   இந்த ஆய்வு முடிவுகள், இருமுக விண்மீன் அல்லது மும்முக விண்மீன் அமைப்புக்காகத் [Binary or Triple Stars Systems]  தாம் வடித்த கணினிப் போலி மாடல் விளைவுகளை ஒட்டியே வந்துள்ளன என்று அமெரிக்க வானியல் விஞ்ஞானி ஸ்டெல்லா ஆஃப்னர் கூறுகிறார். அவரே அண்டவெளி விண்மீன்களின் பிறப்புக் காலவெளித் தோன்றலுக்குப் [Stars’ Natal Environments]  போலிக் கணனி மாடல் [Computer Simulations] தயாரித்து ஒப்பு நோக்கி வருபவர்.   அவரே பன்முக விண்மீன் அமைப்புகளில் விண்மீன்களின் தூரத்தைக் கணித்து அறிவித்தவர்.  அவரே விண்மீன் சிசு வளர்ப்பு மந்தை வெளிகளில் [Stellar Nursery]  ஆரம்ப கால நிலைப்பாடுகளில் வாயு வேகங்களும்,  ஈர்ப்பாற்றலும் [Gas Velocity & Gravity]  ஆளுமை புரிந்ததைக் காட்டியவர்.

     

    New born Stars

     

    பொதுவாக நமது பால்மய ஒளிமந்தையில் [Milkyway Galaxy]  பற்பல பன்முக விண்மீன் அமைப்புகள் காணப் படுகின்றன.  இன்றைய புதிய குறிநோக்குகள் கூறியவை என்ன : மும்முக வாயுக் குவிப்படக்கங்கள் [Triple Gas Condensations]  ஒரு திரண்டவாயு முகில் உதிரிகள் ஆகும்.   அவற்றுடன் நமது பரிதிபோல் தனிப்பட்ட விண்மீன் ஒன்று நிறையை மிகுதி ஆக்கி வருவது.   அந்த வாயு முகில் குவிப்புகள் ஒவ்வொன்றும் சுமார் 40,000 ஆண்டுகளில் விண்மீன் ஒன்றை உண்டாக்கும். இதுவே வானியல் விஞ்ஞானிகள் முதல் தடவையாகக் காணும் ஆரம்ப கால விண்மீன் தோற்றக் காட்சி. அவ்வித முதல் தோற்றத்தில் வாயு முகில் வல்லமை மிகுந்து, நிலையற்ற நான்முக விண்மீன் அமைப்பில் [Unstable Quadruple Star System] உருவாகி ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குள் ஒன்று வெளியே தள்ளப்பட்டு, நிலையற்ற மும்முக விண்மீன்  [Unstable Triple Star System] அமைப்பாகும்.  இறுதியாக அவை நிலையான இருமுக விண்மீன் [Stable Binary Star System] அமைப்பாக நிலவி ஒளிமந்தையில் இயங்கும்.

     

    “கரு விண்மீன்கள் கரும்பிண்டத்தின் துகள்களாகப் பலவீனத் தொடர்பால் உண்டான திணிவு பெருத்த துகள்களின் (WIMP -Weakly Interacting Massive Particles) இயற்கை விளைவுகள்.  இதை நிலைநாட்டத் தேவையான உபரிகளைச் சேர்க்க எங்களுக்குச் சில காலம் எடுத்தது. 2007 ஆம் ஆண்டில் நாங்கள் அறிவித்த போது இவை ஒளிவீசும் நிலைத்துவ அண்டங்களாய் நிலவிய மெய்யான விண்மீன்கள் (Hydrostatically Stable Objects) என்பதை உணராமல் போனோம்.  இப்போது அவற்றின் வானியல் கட்டமைப்பைக் (Steller Structure) கண்டுபிடிப்பதில் வெற்றி அடைந்ததால் கரு விண்மீன்களின் பண்பாடுகளைப் புரிந்து கொண்டோம்.  கரு விண்மீன்கள் நமது பரிதியைப் போல் பன்மடங்கு பெரிதான பூத வடிவில் நிறை பெருத்த வானியல் அண்டங்கள் (Giant Puffy Objects).  அவை பரிதிபோல் பல மில்லியன் மடங்கு உடல் பெருத்து ஒளி வீசுபவை.”

    காதரின் ஃபிரீஸ் (Katherine Freese) வானியல் விஞ்ஞானி மிச்சிகன் பல்கலைக் கழகம்

    “துகள் பௌதிக இயல்புநிலை மாதிரியில் (Standard Model of Particle Physics) நிலைத்துவம் பெறும் சுருக்க விண்மீன்களின் திணிவு நிறைக்கு ஓர் உச்ச வரம்பு (Upper Limit to the Density of Stable Compact Stars) உள்ளது ! ஆனால் பிரியான்கள் (Preons) வடிவத்தில் இன்னும் மிகையாய் நுண்ணிய அடிப்படைப் பரமாணுக்கள் இருப்பின் அந்த வரம்புத் திணிவைக் கடந்து மீண்டும் நிலைத்துவம் (Stability) உறுதிப்படுத்தப் படலாம் !”

    ஜோஹான் ஹான்ஸன் & ·பெரடிரிக் ஸான்டின், லுலீயா தொழில் நுணுக்கப் பல்கலைக் கழகம், ஸ்வீடன் (June 8, 2004)

     

    How a star is born


    பிரபஞ்சத் தோற்றத்தில் பெரும் புதிரான கரு விண்மீன்கள்

    பிரபஞ்ச வெடிப்பின் துவக்க யுகங்களில் தோன்றிய முதற் பிறப்பு விண்மீன்கள் இப்போது நாம் காணும் விண்மீன்களுக்கு முற்றிலும் வேறாக இருந்திருக்க வேண்டும்.  அந்த ஆதி யுக விண்மீன்கள் பிரபஞ்சத்தின் புதிரான அமைப்புகளைப் புரிந்து கொள்ள ஓரளவு உட்குறிப்புகளைக் கொண்டிருக்கலாம்.  2007 ஆம் ஆண்டில் நியதியாக்கப் பட்ட “கரு விண்மீன்கள்” (Dark Stars) நவீன விண்மீன்களை விடப் பன்மடங்கு பெரிதாக வளரலாம் என்றும் அவை கரும்பிண்டத்தின் துகள்களால் (Dark Matter Particles) ஆற்றல் ஊட்டப் படலாம் என்றும் வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.  அந்தத் துகள்கள் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறையில் அல்லாமல் கரு விண்மீன்களின் உள்ளே பிணைந்து அழியலாம் என்றும் எண்ணப்படுகிறது.  பிள்ளைப் பிரபஞ்சத்தில் கரு விண்மீன்கள் நமது பரிதி போல் கண்ணுக்குப் புலப்படும் ஒளியை வீசியிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.  ஆனால் இப்போது அந்த ஒளிவீச்சு நம்மை அணுக முடியாது உட்சிவப்பு நீட்சியில் “செந்நிறக் கடப்பாகி” (Redshifted into the Infrared Range) தெரியாமல் போனது என்று விளக்கம் கூறப்படுகிறது.  ஆதலால் கரு விண்மீன்கள் நமது கண்களுக்குத் தெரியாமல் போய் விட்டன !

    கடந்த ஈராண்டுகளாக (2007–2009) வானியல் ஆய்வு நிபுணர் பலர் மேலும் கரு விண்மீன்களைப் பற்றி ஆழ்ந்து உளவி அத்தகைய அபூர்வ விண்மீன்கள் விஞ்ஞானிகளுக்குக் கரும்பிண்டம் என்றால் என்ன, கருந்துளை என்றால் என்ன என்னும் வினாக்களுக்கு விடை கிடைக்கவும் வானியல் நூதனங்களை அறிவதற்கும் உதவி செய்யும்.  மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த காதிரைன் ஃபிரீஸ் (Katherine Freese), யூடா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பவோலோ கொண்டோலோ (Paolo Kondolo), காலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் பீட்டர் போடஹைமர் (Peter Bodenheimer), ·பெர்மி ஆய்வுக் கூடத்தின் டக்லஸ் ஸ்போலியார் (Douglas Spolyar) ஆகியோர் நால்வரும் சமீபத்தில் வந்த நியூ ஜர்னல் ஆஃப் பிசிக்ஸ் (The New Journal of Physics) இதழில் கரு விண்மின்களின் விளக்கத்தைப் புதுப்பித்து வெளியிட்டுள்ளார்கள்.

    1783 இல் பிரிட்டிஷ் புவியியல்வாதி ஜான் மிச்செல் (Geologist John Mitchel) கரு விண்மீன்களின் பண்பாடுகளைப் பற்றி ஹென்றி கவென்டிஷ¤க்கு (Henry Caventish) ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  கரு விண்மீனின் மேற்தளத்தில் விடுதலை வேகம் (Escape Velocity) ஒளிவேகத்துக்குச் சமமாக அல்லது மீறும் போது உண்டாக்கப் பட்ட ஒளியானது  ஈர்ப்பு விசைக்குள் அடைபட்டு விடும் (Gravitationally Trapped) என்று கணக்கிட்டார்.  அப்போது அந்த விண்மீன் தூரத்து நோக்காளர் கண்ணுக்குப் புலப்படாமல் போய்விடும் !  இந்தக் கோட்பாடு ஒளிச் சக்தியானது ஈர்ப்பு விசையால் பாதிக்கப் படுகிறது என்னும் யூகத்தைக் கடைப்பிடிக்கிறது.  மிச்செல் கூறினார் : “காணப்படும் ஒருசில இரட்டை விண்மீன்களில் ஒன்று கரு விண்மீனாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.”  1796 இல் பிரெஞ்ச் கணித ஞானி பியர் சைமன் லாப்பிளாஸ் (Pierre-Simon Laplace) இதே கருத்தைக் கூறியிருக்கிறார்.

    வானியல் விஞ்ஞானிகளின் கரு விண்மீன் கோட்பாடு

    நான்கு விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் இதுதான் :  கரு விண்மீன்கள் எனப்படும் அபூர்வ விண்மீன்கள் பிரபஞ்ச விண்மீன் பரிணாம வளர்ச்சியின் ஒரு புதுமுக நோக்கு, முதல் நோக்கு, பெரு வெடிப்புக்குப் பிறகு பிள்ளைப் பிராயத்தில் 200 மில்லியன் ஆண்டுக்குப் பின்னால் விளைந்தவை !  அப்போது கரும்பிண்டங்களின் திணிவு (Density of Dark Matter) பிரபஞ்சத்தின் ஆரம்ப யுகங்களில் இப்போது உள்ளதை விடப் பேரளவு இருந்தது.  மேலும் முதற்பிறப்பு விண்மீன்கள் ஆரம்ப யுகக் “கரும்பிண்டத்தின் ஒளிச்சுழி” (Dark Matter Halo) மையத்தில் உண்டாகி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் முன்னறிவிக்கிறார்.  அந்த நிகழ்ச்சியே ஒளிமந்தைகள் (Galaxies) தோன்றுவதற்கும் அடிகோலி இருக்க வேண்டும்.  மாறாக இப்போது காணப்படும் ஒளிமந்தைகளில் விண்மீன்கள் சிதறிப்போய் விளிம்புகளில் ஒட்டிக் கொண்டுள்ளன !  அந்த நான்கு விஞ்ஞானிகளின் கோட்பாட்டில் முதற்பிறப்பு விண்மீன்கள் தம்மைச் சுற்றியுள்ள பிண்டங்களைப் பிணைத்துக் கொண்டு அருகிலிருக்கும் கரும்பிண்டத்தின் வாயு முகிலை இழுத்துக் கொள்ளும் என்று கூறப் பட்டுள்ளது.

    கரு விண்மீன்களின் உள்ளே இருக்கும் உட்துகள்கள் எப்படிச் சேர்கின்றன ?  கரும்பிண்டத்தின் உட்துகள்கள், பலவீனத் தொடர்பால் உண்டான திணிவு பெருத்த துகள்களாய்க் (WIMPs -Weakly Interacting Massive Particles) கரு விண்மீனில் சேர்கின்றன.  விம்ப் (WIMPs) துகள்களில் அவற்றின் எதிர்த்துகள்களும் உள்ளதால் அவை இரண்டும் பிணைந்து அழிந்து சக்தியை உண்டாக்கும் மூலாதாரச் சேமிப்பாய் அமைகிறது.  கரும்பிண்டத்தின் திணிவு பேரளவாயின் அதுவே ஆக்கிரமித்து அணுப்பிணைவு இயக்கத்தை விட (Nuclear Fusion) வெப்பசக்தி எழுப்பும் அல்லது தணிக்கும் இயக்கமாகிறது.  அணுப்பிணைவு இயக்கத்தோடு ஒப்பிட்டால் விம்ப் அழிவு சக்தி (WIMP Annihilation Process) ஒரு மேம்பட்ட ஆற்றல் ஊற்றாக அமைகிறது !  ஆதலால் பூர்வீக விண்மீனுக்கு ஆற்றல் ஊட்ட சிறிதளவு கரும்பிண்டமே தேவைப்பட்டிருக்க வேண்டும் !

    “கரு விண்மீன்கள் கரும்பிண்டத்தின் துகள்களாகப் பலவீனத் தொடர்பால் உண்டான திணிவு பெருத்த துகள்களின் (WIMP -Weakly Interacting Massive Particles) இயற்கை விளைவுகள்.  இதை நிலைநாட்டத் தேவையான உபரிகளைச் சேர்க்க எங்களுக்குச் சில காலம் எடுத்தது. 2007 ஆம் ஆண்டில் நாங்கள் அறிவித்த போது இவை ஒளிவீசும் நிலைத்துவ அண்டங்களாய் நிலவிய மெய்யான விண்மீன்கள் (Hydrostatically Stable Objects)  என்பதை உணராமல் போனோம்.  இப்போது அவற்றின் வானியல் கட்டமைப்பைக் (Steller Structure) கண்டுபிடிப்பதில் வெற்றி அடைந்ததால் கருவிண்

    ​ ​

    மீன்களின் பண்பாடுகளைப் புரிந்து கொண்டோம்.  கரு விண்மீன்கள் நமது பரிதியைப் போல் பன்மடங்கு பெரிதான பூத வடிவில் நிறை பெருத்த வானியல் அண்டங்கள் (Giant Puffy Objects).  அவை பரிதிபோல் பல மில்லியன் மடங்கு உடல் பெருத்து ஒளி வீசுபவை.” என்று காதரின் ஃபிரீஸ் கூறுகிறார்.

    கரு விண்மீன்களின் உருப் பெருக்க வளர்ச்சி !

    நவீன விண்மீன்கள் படிப்படியாக தமது எரிவாயு ஹைடிரஜனை எரித்து இறுதியில் முற்றிலும் வற்றி ஒளியற்ற நியூட்ரான் விண்மீனாக மாற்றம் அடைகின்றன.  அதற்கு மாறாக கரு விண்மீன்கள் சுற்றிலும் உள்ள கரும்பிண்டத் தூள்களைப் பற்றிக் கொள்வது வரையிலும் நித்திய வளர்ச்சி அடைந்து உருப் பெருக்கமாகின்றன.  அவை பாதிக்கப் படாதவரை அசுர வடிவம் அடைந்து நமது பரிதியைப் போல் பல்லாயிரம் மடங்கு பெரிதாகின்றன !  பெரும்பான்மையான கரு விண்மீன்கள் கரும்பிண்டத்து ஒளிச்சுழி மையத்தில் (Dark Matter Halo Center) படிப்படியாகத் தமது இடத்திலிருந்து நகர்ந்து செல்கின்றன.  இறுதியாக கரு விண்மீனின் எரிசக்தி தீர்ந்து வடிவம் சிதைந்து போய் சாதாரண விண்மீன் போல் ஹைடிரஜன் வாயு அணுப்பிணைவு இயக்கத்தில் ஆற்றல் பெற்று முடிவாக ஒரு கருந்துளையாக மாறுகிறது !  விஞ்ஞானிகள் கரு விண்மீன்களின் ஆயுட்காலம் ஒரு மில்லியனிலிருந்து பல பில்லியன் ஆண்டுகள் இருக்கும் என்று கணித்திருக்கிறார்.  அவற்றில் சில கரு விண்மீன்கள் இப்போதும் இருக்கலாம் என்று கூறுகிறார்.

    கரு விண்மீனை எப்படி உளவிக் கண்டுபிடிப்பது ?

    கரு விண்மீன்கள் மறைமுகக் கதிர்வீச்சை (Indirect Radiation) வெளியேற்றுபவை.  நவீனக் கோட்பாடுகளின்படிக் கருந்துளைகள் (Black Holes) “ஹாக்கிங் கதிர்வீச்சை” (Hawking Radiation) உண்டாக்குகின்றன.  1975 இல் முதன்முதலாக பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் அந்தக் கதிர்வீச்சைக் குறிப்பிட்டார்.  ஆனால் கரு விண்மீனிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு அதன் உட்பொருளையும் கட்டமைப்பையும் பொருத்தது.  ஹாக்கிங் கதிர்வீச்சு “மயிரில்லா நியதிப்படி” (The No-Hair Theorem) பொதுவாகக் கருந்துளையின் நிறை, மின்னேற்றம், கோண நெம்புதல் (Mass, Charge & Angular Momentum) ஆகிய மூன்றையும் சார்ந்தது.  ஆனால் அந்தக் கருத்து தர்க்கத்துக்குரியது !

    ஒளியைக் காணும் புதிய விண்ணோக்கிகள் மூலமோ அல்லது கரு விண்மீனில் உதிரும் நியூடிரினோக்களைக் காணும் நியூடிரினோ தொலைநோக்கிகள் (Neutrino Telescopes) மூலமோ கரு விண்மீனைக் கண்டுபிடிக்க முடியும் என்று வானியல் விஞ்ஞானிகள் முன்னறிவிக்கிறார். கரு விண்மீன் இறுதியில் ஒரு கருந்துளையாக மாறுகிறது !  கரும்பிண்ட மில்லா முதற்பிறப்பு விண்மீன்கள் வழக்கமான முறையில் ஒரு சூப்பர்நோவாவாக (Supernova) முடியும் !  அதுவே கரு விண்மீன் ஆய்வாளருக்கு ஒப்புநோக்க வேறுபாடுகளைக் காட்ட உதவும்.

    துல்லியமான பின்ன அளவில் மூலகங்கள் செழித்த (Abundance of Elements) சூப்பர்நோவாக்கள் பிரபஞ்சத்தில் பெருவாரியாகத் தென்படுபவை.  ஆனால் அம்மாதிரி அபூர்வக் கரு விண்மீன்களில் மூலகங்கள் காணப்படுவ தில்லை என்று காதிரைன் ஃபிரீஸ் சொல்கிறார்.  ஆதலால் அந்த வேறுபாடு இருவித விண்மீன்கள் இருப்புக்குப் பாதை காட்டியுள்ளது.  “அடுத்த ஐந்தாண்டுகள் மூலகச் செழிப்புகளை நாங்கள் உளவி அளவு காணுவோம்,” என்று காதிரைன் ஃபிரீஸ் கூறுகிறார்.

    சுருக்க விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள் (Compact Stars & Preon Stars)

    வானியல் விஞ்ஞானத்தில் “சுருக்க விண்மீன்கள்” எனக் குறிப்பிடப்படும் நான்கு விண்மீன்கள் : வெண்குள்ளி, நியூட்ரான் விண்மீன், விந்தை விண்மீன், அல்லது கருந்துளை (White Dwarf, Neutron Star, Exotic Star or Black Hole).  ஒரு விண்மீனின் இயற் பண்பாடை அறியாத போது அது சுருக்க விண்மீன் குழுவில் சேர்க்கப்படுகிறது.  ஆனால் சுருக்க விண்மீன் பெருநிறை கொண்டு, அசுரத் திணிவு பெற்று சிறு ஆரமுடைய விண்மீனாக விஞ்ஞானிகள் அனுமானம் செய்கிறார். (A Compact Star is massive, dense & has a small size).  சுருக்க விண்மீன்கள் விண்மீன் பரிணாமத் தளர்ச்சியின் முடிவுப் புள்ளி ! (Compact Stars form Endpoint of Stellar Evolution).  அவற்றை இந்தக் கட்டுரையில் நான் “கடுகு விண்மீன்கள்” என்று குறிப்பிட விரும்புகிறேன்.

    சுருக்க விண்மீன்கள் விண்மீன் பரிணாமத் தளர்ச்சியின் முடிவுப் புள்ளி என்றால் என்ன ?  ஒரு விண்மீன் ஒளிவீசித் தன் எரிசக்தியைப் படிப்படியாக இழக்கிறது.  அதன் கதிர்வீச்சுத் தளத்தின் இழப்பு ஒளியை உண்டாக்கி ஈடு செய்து கொள்கிறது.  விண்மீன் தனது எரிசக்தி முழுவதையும் தீர்த்து மரண விண்மீனாக மாறும் போது அதன் உட்கரு வெப்ப வாயு அழுத்தம் விண்மீன் நிறையைத் தாங்க முடியாது (அதாவது ஈர்ப்பற்றிலின் இழுப்பை எதிர்க்க இயலாது) திணிவு அடர்த்தியாகி விண்மீன் முறிந்து சுருக்க நிலை அடைகிறது !  வாயுப் பிண்டம் முடிவில் திடவ நிலை அடைகிறது ! (Gas —> Solid State).  அதாவது சாதாரண விண்மீன் முடிவில் பரிணாமத் தளர்ச்சி நிலை முடிவடைந்து குறுகிச் சுருக்க விண்மீன் ஆகிறது !

    பிரியான் விண்மீன்கள் வெண்குள்ளி (White Dwarfs), நியூட்ரான் விண்மீன்களை விடச் சிறியவை !  அவற்றின் இருக்கை வானியல் விஞ்ஞானத்தில் முக்கியத்துவம் பெறுகிறது !  காரணம் : பிரியான் விண்மீன்கள் குளிர்ந்த கரும் பிண்டத்துக்கு மூலக் களஞ்சியமாக இருக்கிறது.  அதி உயர்சக்தி அகிலக்கதிர்கள் (Ultra-high Energy Cosmic Rays) உண்டாகும் சேமிப்புக் களமாக உள்ளது !  குவார்க், லெப்டான் துகள்களின் (Quarks & Leptons) உட்கருவில் இருக்கும் அடிப்படை நுண் துகள்கள் “பிரியான்கள்” எனப்படுபவை.  “பிரியான் விண்மீன்” (Preon Star) எனப்படுவது ஒருவகையான அனுமானச் சுருக்க விண்மீனே (Hypothetical Compact Star) !  அவற்றைக் காமாக் கதிர்களின் ஈர்ப்பாற்றல் ஒளிக்குவிப்பு முறையில் (Gravitational Lensing of Gamma Rays) காணலாம்.  புதிரான கருந்துளைகளின் மர்ம இருப்பைக் காண எதிர்காலத்தில் பிரியான் விண்மீன்களே உதவி புரியும்.

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How do Massive Stars Explode ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html
    11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40308155&format=html
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html
    13 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    14 “Physics of the Impossible” Michio Kaku – Article By : Casey Kazan (March 4, 2008)
    15 Space & Earth – Seeing the Invisible – First Dark Galaxy Discovered (Feb 23, 2005)
    16 Did Dark Matter Create the First Stars ?  (March 15, 2006)
    17 Dark Matter in Newborn Universe, Doused Earliest Stars (Dec 3, 2007)
    18 Space & Earth – Dark Matter in a Galaxy (October 30, 2009)
    19 The Newrork Timea – Black Holes, A Riddle All Their Own, May be Fueling the Blobs By : Dennis Overbye (July 7, 2009)
    20 Science Daily – Mysterious Space Blob Discovered at Cosmic Dawn (April 2009)
    21  New Book – Physics Theory – The First Stars -The Interconnectedness of Reality Phyisics Org – (November 3, 2009)
    22 Stars Fueled By Datrk Matter Could Hold Secrets to the Universe (Nov 3, 2009)
    23 Wikipedia – Dark Star (November 8, 2009)
    24 Daily Galaxy – Dark Stars – Were There Once Dark Stars Powered By Antimatter ?  (Nov 9, 2009)
    25 Daily Galaxy – Were Gigantic Dark Stars of the Early Universe Powered By Antimatter (November 12, 2009)
    26 Daily Galaxy – Are Black Holes Powering the Most Massive Objects in Space (Nov 11, 2009)
    27 The Dark Attractor : What’s Pulling the Milky Way Towards it at 14 million mph. (Nov 13, 2009)
    28. https://jayabarathan.wordpress.com/2009/08/20/katturai-62-1/(Compact Stars & Preon Stars) (Aug 20, 2009)

    29.  http://science.nasa.gov/astrophysics/focus-areas/how-do-stars-form-and-evolve/

    30.  http://ircamera.as.arizona.edu/NatSci102/NatSci102/lectures/starform.htm

    31. http://en.wikipedia.org/wiki/Star_formation  [February 10, 2015]

    32. http://www.spacedaily.com/reports/In_a_first_astronomers_catch_a_multiple_star_system_in_the_process_of_forming_999.html  [February 12, 2015]

    33.  www.dailygalaxy.com/my_weblog/2015/02/birth-of-a-star-quartet-observed-1.html? [February 12, 2015]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  February 14, 2015

    Attachments area
    Share
  • மாறிய ஜென்மங்கள்

    — ரா.பார்த்தசாரதி.

    கமலாவும், சாரதியும் அந்த முதியோர் இல்லத்திற்கு வந்து இரு வருடங்கள் ஓடிவிட்டது. இருவரும் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். சாரதி ஓய்வு பெற்று, கிராமபுரத்தில் இருந்த ஒரு கிரௌண்டை விற்று, அந்தப் பணத்தை வங்கியில் போட்டு, அதில் வரும் வட்டியில் அந்த முதியோர் இல்லத்திற்கு மாத வாடகை கொடுத்துவிட்டு காலம் தள்ளினர். சிட்கோ நகரில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்தப் பணத்தை இதர செலவிற்கு வைத்து கொண்டார்.

    சாரதிக்கும், கமலாவிற்கும் ஒரு மகள், ஒரு மகன். இருவருக்கும் வெளிநாட்டில் வேலை. தூர இருந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, பக்கத்தில் இருந்தால் செடியும் பகை. இது யாவரும் அறிந்ததே. சில வருடங்களுக்கு முன் தான் செய்ததை நினைத்து பார்த்தார் சாரதி. இரு பிள்ளைகளிடத்திலும் மாறாத அன்பும்… சனி, ஞாயிறு அவர்களை பீச், பார்க் என்றும்; பெண்ணை பாட்டு கிளாஸ் என்றும், பையனை ஓவிய வகுப்பு என்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிக்க வைத்தார். பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்தது, அவளுக்கு ஓர் ஆண் குழந்தை மூன்று வயதில் … பேரன் பெயர் கேஷவ். மகன் கார்த்திக்கிற்கு பெண் குழந்தை அனுஷா, இரண்டு வயதில் .

    இவ்வளவு தூரம் படிக்கவைத்து பிள்ளைகளிடமிருந்து ஒதுங்கி வாழக் காரணம் என்ன?

    வருடத்திற்கு ஒரு முறையாவது போய் அவர்களைப் பார்த்து வந்தனர் கமலாவும், சாரதியும். அவர்களுக்கு மகன் கார்த்திக், மகள் பிரியா இருவருமே இரு கண்கள். அதிலும் கமலா பாசத்திற்கு அடிமையானவள். சாரதியோ என்றும் தாமரை இலை தண்ணீர் மாதிரி. மகனுக்கு வரன் பார்க்கும்போது ஏற்பட்ட சண்டை அவர்களை நிரந்தரமாக விலக்கியே வைத்து விட்டது.

    தனக்கு நல்ல மருமகள் வரவேண்டும் என்று எந்த தாயும் விரும்புவாள். கார்த்திக் பாரத் மேற்றிமோனியில் பதிவு செய்து வரன்களை தானே முடிவு செய்வதாகவும், அப்பா, அம்மா இருவரையும் புகைப்படத்தையும், ஜாதகத்தையும் பார்க்க அனுமதித்தாலும் தானே பதில் அனுப்ப முடிவு கொண்டான் கார்த்திக். ஒரு நாள் மகனுக்குத் தெரியாமல் ஒரு வரனுக்கு புகைப்படமும், ஜாதகமும், அனுப்பச் சொல்லி பதில் அனுப்பினார் சாரதி. இதைக் கம்ப்யூட்டரில் பார்த்து அறிந்து மிகுந்த கோபத்துடன் தந்தை என்றும் பாராமல் அவமரியாதை செய்தான் மகன். உன் அப்பாவை நீ பேசியது தவறு, மன்னிப்பு கேள் என்று கூறிய தாயையும் கேட்க கூடாத கேள்விகளை கேட்டான். கடைசி வரை அவன் தவற்றை உணரவில்லை, மன்னிக்கவும் இல்லை.

    பிறகு பெற்றோர்கள் மகள் பிரியா வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கிவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார்கள். இதற்கிடையில் பிரியாவும் மற்றவர்களும் அறிவுரை கூற நிதானமாக சிந்தித்துத் தன் தவறை உணர்ந்தான் கார்த்திக். அவன் நிச்சியதார்த்தம் அமெரிக்காவிலே அப்பா அம்மா வருகை இல்லாமல் நடந்து, திருமணம் மட்டும் சென்னையில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் கைபிடித்த சுமதி மிக அழகாக இருந்தாள், பண்பாடு, கலாச்சாரம் அறிந்து அமெரிக்க வரும்படி அழைத்தாள். திருமணத்திற்கு முன் நடந்தவை ஒன்றும் அவளுக்குத் தெரியாது.

    இரண்டு வருடங்கள் சென்றன. சுமதி கருவுற்றாள். வளைகாப்பு, சீமந்தம் எதற்குமே தன் மாமியார், மாமனார் கூப்பிட்டும் வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். அவள் அப்பா, அம்மா, உத்தியோகத்திற்குச் செல்வதால், ஏதோ ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தான் அவளுடன் இருக்கமுடியும். நாத்தனருக்கும் இதே நிலைமைதான். அவளது குழந்தையை சீசேரியன் செய்து எடுத்தார்கள். அம்மா, அக்கா, நாத்தனார் ஒரு மாதத்திற்கு அருகில் இருந்து உதவினர்.

    பிரியாவை ஏர்போர்ட்டில் காரில் கொண்டு விடும்போது அவள் கார்த்திக்கிடம், “எனக்கு அம்மா, அப்பா பிரசவத்தின் போது ஆறு மாதம் கூட இருந்தா.
    உனக்கு என்றால் ஓடி வந்து செய்வா” என்றாள்.

    “எனக்கு செய்ய மாட்டா. நான் பணம் அனுப்புவதற்குதான் பிள்ளை.”

    “அப்படி எல்லாம் பேசாதே. நீ அனுப்பிய பணத்தை உன் மகள் மேல் டெப்பாசிட் செய்ய சொல்லி என்னிடமே அனுப்பிட்டா. நான்தான் ஒரு மாதம் விட்டு ஒரு முறை அவர்கள் பேங்க்குக்கு பணம் அனுப்புகின்றேன். உன் குழந்தயை கிரீச் அனுப்பி கஷ்டபடுகிறாய் !” என்றவள், தொடர்ந்தாள் …

    “அப்பா இப்போது ஒரு சீனியர் சிடிசன் ஆஷ்ரமத்தில் வேலை செய்துகொண்டே, அங்கேயே தங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அம்மாவும் பக்கத்தில் உள்ள குழந்தை காப்பகத்தில் வேலை செய்கிறாள். நீ செய்த தப்பை என்றைகாவது உணர்ந்தாயா ! இல்லை உனக்கு மன்னிக்கும் குணம்தான் இருக்கா?”

    இவர்களது உரையாடலை பின்னால் அமர்ந்திருந்த சுமதி கேட்டு கொண்டு இருந்தாள்.

    “நம்ம அப்பா, அம்மா மாதிரி யாருக்கும் கிடைக்காது! அப்பா நமக்கு ஸ்கூல் போகும் டிரெஸ்ஸை அயர்ன் பண்ணி, வண்டி வரவில்லை என்றால் நம்மை கொண்டுவிட்டு, என் படிப்பிற்காக தன் தம்பிகளிடம் பணம் கேட்டு, பாட்டு கிளாஸ், உன்னை கிரிக்கெட், டிராயிங் கிளாஸ் எல்லாம் கொண்டுவிட்டு அழைத்து வந்து, பள்ளிகூடத்தில் விண்ணப்பதிற்காக விடியற்காலையில் நின்று இவ்வளவும் பண்ணின அப்பாவை உன்னால் எப்படி ஏத்துக்க முடியவில்லை. அவருக்கு உரிய மரியாதையை நீ கொடுக்கவில்லை. அதனால்தான் இருவருமே உனக்கு செய்வதற்குத் தயங்குகிறார்கள். நீ இங்கு வருவதற்கு காரணமே அப்பாதான். பாங்கில் கடன்வாங்கி உன்னை முதலில் இங்கு அனுப்பி படிக்கவச்சி இன்று நீ சம்பாதித்து கடனை நீயே அடைத்தாலும், பிள்ளையார் சுழி போட்டது அப்பாதானே ! இன்னிக்கி நாம் நன்னா இருக்கோம் என்றால் அதற்கு அப்பா அம்மா தான் காரணம். The integrity of man is to be measured by the conduct and character and not by their profession. இந்த வார்த்தயை அப்பா அடிக்கடிசொல்வா.” என்றாள் பிரியா.

    சுமதி, “பிரியா அக்கா அடுத்த மாதம் என் அத்தை மகன் கல்யாணத்திற்கு இன்வைட் பண்ணிருக்கா நான் இவரையும் அழைச்சுண்டு போகப்போறேன்” என்றாள். திருமணம் தேதி, இடம், அத்தைமகன் பெயர், வேலை போன்றவற்றை விவரித்தாள். அவர்கள் என் கல்யாணத்திற்கு வரமுடியாதவங்க என்னை கூப்பிட்டால் போய்விட்டு வருவேன் என்றாள்.

    மறுநாள் பிரியா சுமதிக்கு போன் பண்ணி தான் பத்திரமாக வந்து சேர்ந்ததை சொன்னாள். “சுமதி உன் அத்தை பெயர் கொண்ட திருமண பத்திரிகை எங்களுக்கும் வந்திருக்கு. மணமகள் என் கணவனின் மாமா பெண்தான் நல்லதா போச்சு. நானும் இவரும் உடனே சென்னை வருவதற்கு ஏற்பாடு செய்கிறோம், உங்களுக்கும் டிக்கெட் புக் செய்யவா? இதை கார்த்திக்கை கேட்டு எனக்கு சொல்லு” என்றாள்.

    பிரியாவிற்கு தனது அம்மா அப்பாவை பார்க்க ஆசை. தன் மூன்று வயது கேஷவ்வை அவர்களிடம் காண்பிக்க ஆசைப் பட்டாள். அவள் அம்மா ஒரு வயது வரைக்கும் அவளது மகனை வளர்த்தாள்.

    இருபது நாட்கள் கடந்தன. சென்னைக்கு பேக்கிங் செய்த சுமதிக்கு கார்த்திக்கும் உதவி செய்தான். தன்னுடையதையும் எடுத்து வைத்தான். கார்த்திக்கும் பிரியாவும் ஏர்போர்ட்டில் சந்தித்து கொண்டார்கள்.

    “பிரியா எனக்கு எப்படியாவது இவருடைய அப்பா அம்மாவை அழைதுவரவெண்டும். என்ன செய்யலாம். நேற்று இரவே அவரிடம் கேட்டேன்.”

    “அது முடியாத காரியம் சுமதி. அவர்கள் வரமாட்டார்கள்” என்றாள் பிரியா.

    குழந்தை இருப்பதால் விமானத்தில் பிரியாவுக்கும், சுமதிக்கும் பக்கத்து பக்கத்து சீட். மறுநாள் விமானம் சென்னையை காலை ஐந்து மணிக்கு அடைந்தது. மூன்று நாள் ஜெட்லாக், நான்கு நாள் ரெஸ்ட் , மூன்று நாட்களுக்கு,நண்பர்கள் உறவினர்கள் விருந்து, ஆக பத்து நாட்கள் முடிந்தது.

    கடைசி நாள் அப்பா, அம்மாவைப் பார்பதற்கு சுமதியும், பிரியாவும் காலையில் கால் டாக்ஸி பிடித்து குடும்பத்துடன் ஆஷ்ராமத்தை அடைந்தார்கள். சாரதிக்கு ஒரு பக்கம் கோபம், மறுபக்கம் எரிச்சல். செகரட்டரிக்கு போன் செய்து அவர்களை பார்க்க விருப்பும் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடு என்றார்.

    கமலாவைப் பார்த்து, “உனக்கு வேண்டுமானால் பிள்ளை, பேரன் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்றால் நீ போய் பார்த்து வா. என்னைக் கூப்பிடாதே” என்றார்.

    கமலாவும், அரை மனதுடன் கேட்டை நெருங்கினாள். அம்மா என்று பிரியாவும் சுமதியும் ஓடிவந்தார்கள்.

    “அப்பா எங்கே? என்றாள் பிரியா.

    “அவர் இங்கு வர மறுத்துவிட்டார்”

    “அப்பாவைப் பார்க்காமல் நானும் சுமதியும் இங்கிருந்து நகர மாட்டோம்!”

    செக்கியூரிட்டியும் மூன்று தடவை சாரதிக்கு போன் செய்து, “சார், உங்க மகளும் மருமகளும் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாங்க தயவு செய்து வந்து எட்டி பார்த்துவிட்டு போங்க சார்” என்றார்.

    grandparentsதலை எழுத்தே என்று சாரதி கேட்டிற்கு வந்தார். உடனே பேரன் கேஷவ், தாத்தா, தாத்தா என்று ஓடி வந்ததும், பின்னாடியே பேத்தி ஓடி வந்து காலை கட்டிக்கொண்டு, குழந்தைகள் இரண்டும் தூக்கு, தூக்கு என்று கையை உயர்த்தியது.

    கமலாவும் பேத்தியை எடுத்துக் கொஞ்சினாள். இருவருமே குழந்தயை கொஞ்சிவதிலேயே இருந்தார்களே தவிர, பெண்ணையும், மருமகளையும் கவனிக்கவே இல்லை.

    அவர் மாப்பிளை, “அப்பா, நானும் உங்க மகனும் இரண்டு மணி நேரம் ஹாலில் வெயிட் பண்றோம், எங்களை நீங்க இருவருமே கண்டுகொள்ளவே இல்லை.” என்றார்.

    சுமதி பிரியாவிடம், “பார்த்தியா பிரியா, என் பொண்ணும் உன் பையனும் அவர்களிடம் எப்படி ஒட்டுகிறார்கள். இதுதான் ‘ப்ளட் இஸ் திக்கர் தான் வாட்டர்’ என்பது,” என்றாள்.

    கார்த்திக், “அப்பா, என்னை நீங்க மன்னிக்கணும். எப்போ இரண்டு பேரும் யு.எஸ் வருவிங்க. நான் டிக்கெட் வாங்கட்டுமா?” என்றான். சுமதியும், “அம்மா உங்க பேத்திக்காகவாவது எங்ககூட வந்து இருங்கள்” என்றாள்.

    “எல்லாம் அவரைக் கேளு” என்றாள் கமலா.

    சாரதி, “தூரத்துப் பச்சை கண்ணனுக்குக் குளிர்ச்சி. எங்களுக்கு இங்கேயே வசதியாய் இருக்கிறது. நாங்க இங்கேயே இருந்துவிடுகிறோம்” என்றார்.

    பிரியா அழுது விட்டாள். “அப்பா, தம்பி பண்ணின தப்பிற்கு என்னை தண்டிகின்றாய். அம்மா நீ இல்லாமல் நகரமாட்டாள்” என்றாள்.

    சாரதி கமலாவின் மீது பார்வையை செலுத்தினார். அவள் முகம் பேரன், பேத்தியின் பக்கமே இருந்தது.

    “நான் வரவில்லை. உன் அம்மா வந்தா அழைச்சிண்டு போ”

    கமலாவிடம் அவர்கள் போகலாமா என்று கேட்க, அவள் கணவரிடம் நாம் வேண்டுமென்றால்பேரன், பேத்தியை விமான நிலையம் வரை வழி அனுப்ப செல்வோமே என்றாள்.

    விடுதியில் பெர்மிஷன் சொல்லிவிட்டு அவர்கள் காரிலேயே கிளம்பினார்கள். வழி நெடுக பேரன், பேத்தி பற்றிதான் பேச்சு. இவ்வளவு ஆசை வச்சிண்டு வர மறுக்க காரணம் என்ன என்று தெரிந்தும் சுமதி காரணத்தைக் கேட்டாள்.

    “பட்டமரம் ஒட்டுவதில்லை, சுட்ட மண் ஒட்டுவதில்லை. இது தெரியாதாம்மா !” என்றாள் கமலா.

    அந்த அளவிற்கு கார்த்திக் அவர்கள் மனதை புண்படுத்தி இருந்தான். இவர்களிடம் பேரனையும், பேத்தியையும் விட்டுவிட்டு பிரியாவும், சுமதியும் குழந்தைகளுக்கு பால் வாங்கச் சென்றார்கள். சாரதியும் கமலாவும் குழந்தைகளின் மழலை பேச்சில் மயங்கினார்கள். பேத்தியின் சிரிப்பிலும், பேரனின் ஆங்கிலத்திலும் தன்னையே மறந்தார்கள். ஆயிரம் துக்கங்கள் குழந்தை பேச்சில் அமிழும் என்பது உண்மைதான்.

    பால் வாங்கிய பின் பிரியாவும், சுமதியும் குழந்தைகளை இவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் போது, “தாதா, கம்பா பாட்டி” என்ற பேரனின் அலறலும், பேத்தியின் அழுகையும், அவர்களை அழுத்தியது. வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டு இருந்தார்கள்.

    மாப்பிளையும், மகனும் இம்மிக்கிரேஷன் முடித்து விடை பெற வந்தார்கள். கார்த்திக் “அப்பா நான் வரட்டுமா, வரடுமாம்மா” என்றான்.

    “டேய் , கார்த்திக் எனக்கும் உங்க அம்மாவிற்கும் விசாவும், டிக்கெட்டும் ஏற்பாடு செய்” என்றார் சாரதி.

    கார்த்திக் அப்பா அம்மாவையும் கட்டிக்கொண்டு அழுதான்.

    “நீங்க இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ரொம்ப தேங்க்ஸ் அப்பா.”

    வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் எது?

    தாய் தந்தையிடம் பார்த்த பாசமா? மகனிடமும், மகளிடமும் உணர்ந்த அன்பா? அண்ணன், தம்பி, தங்கைகள் இடையே உள்ள பந்த பாசமா?

    இது எந்த ரகம் என்று புரிந்துகொள்ள முடியாமல் நம்மை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கும் நமது பேரன்,பேத்திகளின் கள்ளமற்ற சிரிப்பா? பேரக்குழந்தைகளுக்காக மற்றவர்கள் செய்யும் தவறினை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனித நேயமா? பாசத்திற்காக நாம் எல்லோரையும் அரவணைத்துத்துதான் செல்லவேண்டுமா?

    உணர்தவர்கள் பதில் கூறட்டும்.

    Picture Source: http://daycare.sulekha.com/care-corner_all-about-the-grandchild-grandparent-bonding_blog_6158

    Share
  • சுட்டும் விழிச்சுடர்! – காதல் செய்வீர்!

    பவள சங்கரி

    09631e30b9747c5c35320934f18f522c

     

     

    சுட்டும் விழி

    காதல் செய்வீர்! இளந்தளிரே காதல் செய்வீர்!
    காவியுடன் மனக்காவியாய் திரியும்
    பாவிகளையும் சூரியாய் சூதும்
    வாயூறு கொண்டே கூவித்திரியும்
    அனல்கக்கும் பார்வைகள் பதித்துச்செல்லும்
    விடம்கக்கும் நாகங்களதன் உயிர்க்கூட்டில்
    மலிந்துகிடக்கின்றன மாபாதகமெனினும்
    மயிலிறகு மொழிகள் ஆதலினால் காதலினிது!
    பட்டாம்பூச்சியாய்த் திரியும் பருவத்தில் முளைக்கும்
    பாதையறியா பரவசங்களின் நீட்சிகள்தானது!

    பொன்னிற சிறகுகளை விரித்துச் செல்லும்
    சிறுபறவையின் படபடக்கும் விழியசைவில்
    மலிந்துகிடக்கும் பொன்னுலகக் கனவுகள்
    கனவு காணுங்கள் கனவு காணுங்கள்
    சொன்னவர் அப்துல்கலாம் காணச்சொன்னதோ
    சோர்விலா சூழ்வரங்கள்! வாழ்வியல்வேதங்கள்!
    மலிந்த சிறகுகளை உதிர்த்துப் பறந்திடுங்கள்
    பாரமனைத்தும் பரிதியைக்கண்ட பனியாகும்பாருங்கள்!
    விரியும் சிறகுகளனைத்தும் விண்ணும்
    மண்ணுமளக்கும் வாமனப்பாதங்களாக மின்னும்!
    நற்தானிய மணிகளனைத்தும் சேமித்து
    பொற்றாமரையாள் கமலப்பாதம் சேவித்து
    வீழ்ச்சியில்லா வாழ்விற்கு செங்கம்பளமாக்குங்கள்!

    காதல் செய்வீர்! இளந்தளிரே காதல் செய்வீர்!
    உயரும் உபாயம் நோக்கி சிறகுவிரிப்பீர்!
    உச்சங்களை எட்டச் சிந்திப்பீர்!
    பட்டங்கள் ஆள வடிவெடுப்பீர்!

    Share
  • எதிர்ப்புத் தின்னி காதல்

    எஸ் வி வேணுகோபாலன்

     

    images (2)

    காதல் செய்பவரை விடவும்
    அரைமணி முன்னதாக எழுந்திருக்கின்றனர்
    காதல் எதிர்ப்பாளர்கள்
    காதலர் தினத்தன்று

    எதிர்ப்புத் தின்னி காதல்
    இன்னமும் செழித்துப் பயிராகிறது

    கண்களை இறுக்க மூடிக் கொள்வோரிடம்
    காதுகள் வழியாக உள்ளிறங்கும் காதல்
    செவிகளும் மூடப்படுகையில்
    உடல்மொழியாகிச் சிலிர்க்கவைக்கிறது

    ‘இன்னிக்காவது எனக்கு கடுதாசி வந்திருக்கா’ என்று
    அஞ்சல்காரரைக் கேட்கும் கிராமத்து ஆசாமிபோல
    வழிமறித்துக் கேட்கிறது காதல்
    கடந்து போகும் இளவட்டங்களை

    கடிகார முள் வெளியே வந்து
    குத்திப் போகிறது
    தாமத வருகையில் தத்தளிக்கும்
    காதல் உள்ளத்தை

    நேரத்தோடு வருகிற காதல் பின்னர்
    நேரம் காலமற்றும் போகிறது

    வெற்றி பெற்றவர்களை வாழ வைக்கும் காதல்
    தோற்றவர்களைச் சொல்லித்தான்
    மேலும் மேலும்
    தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது

    காதலின் இளம் தோள்களில்
    ஊஞ்சலாடிச் செல்வோர்
    விஷப் பாம்புகள் சூழ்கையில்
    காதலைப் பாதுகாப்பாகத்
    தலைமீது ஏற்றி வைத்துக்கொண்டு
    தாங்கள் விரைகின்றனர்
    அபாயமிகுந்த வெளியைக் கடக்க

    நேயத்தின் பெயரால்
    வேகமாக வரத் தலைப்படுகிற காதல்
    சாதியின் பெயரால் அளக்கப்படுகையில்
    மத அடையாளத்தால் சோதிக்கப்படுகையில்
    தலைகுனிந்து நிற்கிறது

    அமைதியாகக் காட்டிக் கொள்ளும்
    சமூகத்தின் வன்மத்தை
    அம்பலப்படுத்தும் காதல்
    வெறுப்பின் நெருப்பால்
    எரிக்க முடியாத நேயத்தை
    அன்பில் கரைத்து
    உட்கொள்ளக் கேட்கிறது

    வெயிலும் மழையும்
    இடியும் மின்னலும்
    புயலும் வெள்ளமும்
    அமைதியும் ஆவேசமும்
    புன்னகையும் கண்ணீருமாய்
    எதிர்ப்பையும் எதிர்ப்பின் எதிர்ப்பையும்
    எல்லாம் தனக்கே
    உவமையாக்கிக் கொண்டு
    எப்போதும் அழியமுடியாதபடி
    எங்கும் தழைக்கிறது காதல்.

    **************************

    Share