நாதமழை பொழிந்தது! இதயங்கள் நனைந்தன!!

akavi

பாரதி நட்புக்காக.. 13.02.2015 மாலை 6.45 மணிக்கு இந்தியன் சமூக கலாச்சார மையத்தில் நடைபெற்ற 14ஆம் ஆண்டு தொடக்கவிழாவும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு நினைவாஞ்சலியும்..

அரங்கம் நிரம்பி வழிகிறதென்றால் அங்கே பாரதி நட்புக்காக விழாவென்றே பொருள்! அட்சரம் பிசகாமல் முன்னோட்டம் நடத்தி முழுமையான வெற்றி ஈட்டும் உங்கள் தலைமைக்கும் குழுவிற்கும் முதற்கண் நன்றி!! பிரம்மாண்ட வெற்றியை நல்ல தரமான இலக்கிய விழா வாயிலாக ஈட்டிடும் பாரதிக்கு அபுதாபி மற்றும் ஐக்கிய அமீரக வாழ் தமிழர்கள் யாவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றனர் என்பதுவும் மிகையில்லை!

அபூர்வ ராகம் என்கிற தலைப்பில் நீங்கள் தந்த நிகழ்வின் மயக்கம் பல நாள் இருக்கும் என்று கருதுகிறேன்! தமிழகத்திலும்கூட இத்தனைச் சரியாக ஒரு போற்றுதல் நிகழ்ச்சி இன்னும் நடைபெறாத நிலையில் அதிலும் அபுதாபி.. பாரதி நட்புக்காக முன்னணிவகிப்பது பெருமைக்குரியதாகும்!

நிகழ்ச்சிக்கு பொருத்தமான பிரமுகர்களை வரவழைத்து திட்டமிட்ட வகையில் திகட்டாத பேரின்பம் அனைவரும் பெறச் செய்தது உங்களின் ராஜமுத்திரை!! எத்தனை பாராட்டினாலும் இன்னும் பாராட்ட வேண்டியிருக்கும் விழா என்பது பாரதி நட்புக்காக குழுவினர் நடத்தும் விழா!!

பாரதி நட்புக்காக என்னும் திரைச்சீலை ஓவியத்தில் புதிய இசை சேர்க்கப்பட்டதில் – சிங்கத்தின் உறுமல் மாற்றம் செய்யப்பட்டிருப்பது.. தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு மாபெரும் வரகவிஞனை.. அவன் தமிழ்மீது அவன் கொண்டிருந்த காதலுக்கு.. பற்றிற்கு.. கர்வத்திற்கு.. அடையாளம் அந்த கர்ஜனை! முடிந்தால் அதனை மீட்பது நலம்!!

விழாவில் வழக்கம்போல் இடம்பெறும் ஆஷா நாயரின் எண்ணத்தில் உதித்த ஓவியமா? காவியமா? புதுமை..இனிமை நிறைந்த அற்புத நடனங்கள்.. குழந்தைகள் வைத்து இத்தனை அருமையான நிகழ்வை அவரால்தான் தொடர்ந்து தரமுடியும்! அதுவும் பாரதி நட்புக்காக மேடையில்தான் இத்தனைச் சிறப்புகள் அமையும்!! பாராட்டுகள்.. நடனமாடிய ஒவ்வொரு குழந்தைக்கும் உரித்தாகும்!!

திரு.ராஜேஷ் வைத்தியா.. வார்த்தைகளுக்குள் வசப்படாத உச்சங்களை தன் வீணையால் மீட்டெடுக்கத் தெரிந்த வித்தகர்! அபூர்வ ராகம் என்கிற தலைப்பில் அவர் தொட்டெடுத்த அத்தனைப் பாடல்களும் முத்துக்கள்! பாரதி கண்ணம்மாவில் தொடங்கி.. சம்போ..சிவ சம்போவில் முடித்தவரை.. அவர்மட்டும் வீணையுடன் கொஞ்சவில்லை.. நம்மையுமே கொஞ்ச வைத்தார்! அசுரத்தனமான பயிற்சியின் விளைச்சல்தான் நாம் மேடையில் கண்டது! கலைமகள் அருளில் நடமிட்ட விரல்கள் நர்த்தனம் ஆடியது! நாதமழை பொழிந்தது! இதயங்கள் நனைந்தன!! ஒற்றைத்திசை நோக்கி மட்டுமே நம் உள்ளங்கள் நகர்ந்தன!! உண்மையிதுதானே?

திரு.யூகி சேது அவர்கள்.. நையாண்டி தர்பார் போன்ற நிகழ்வுகளில் நாம் கண்ட சேதுதான்! பஞ்சதந்திரம் முதலான திரைப்படங்களில் நடித்த சேதுதான்! இவர் இயக்குனர் சிகரத்துடன் இத்தனை நெருக்கமாய் இருந்தவரா என்றறியும்போது மெய்சிலிர்ப்பு! உலக சினிமா முதல் இவரின் சிந்தனையில் பாய்ந்துவரும் செய்திகள் இவரைப்பற்றி முழுமையறிய வழிகாட்டின! நகைச்சுவை குறையாமல் நல்ல பல செய்திகள்தந்து ஒவ்வொருவரையும் தன் குறும்பான பேச்சால் கொள்ளையடியத்தார் என்பதுவும் மிகையில்லை!!

திரு.டெல்லி கணேஷ்.. அவ்வை சண்முகி முதல் சிந்துபைரவி என தன் பாத்திரங்களால் மின்னும் கலைஞர்! டெல்லி கணேஷ் என்கிற பெயர்க் காரணம் சபாஷ் போடவைத்தது! இயல்பாய் பேசிய இவரின் பேச்சு எவரையும் ஈர்த்தது என்பதில் இருவேறு கருத்தில்லை! ஒவ்வொரு சூழலிலும் இயக்குனர் சிகரத்துடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை அருமையாக எடுத்துரைத்தார்! இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என்று ஏங்கவைக்கிற சூட்சுமம் தெரிந்துவைத்திருக்கிறார். நீங்கள் எடுக்கும் விழா அத்தனைக்கும் நானே செலவு செய்து வந்துவிடுவேன் என்று பாங்குற அவர் பகன்றது பகட்டில்லை.. பளிச்சிடும் அவர் தூய உள்ளம்!!

இயக்குனர் சிகரத்தின் இருகரங்களையும் பற்றிவளர்ந்த மோகன் அவர்கள் கொஞ்சம்கூட சினிமாத்தனமின்றி.. இயக்குனர் சிகரத்திற்கு கிடைத்த இன்னொரு நிழலாக.. கள்ளமில்லாமல் அவரின் எதார்த்த பேச்சுக்கு இணையே கிடையாது என்று சொல்லலாம்! எளிமையின் இலக்கணமாய் திகழ்ந்த பாலசந்தர் அவர்களின் மறுபக்கத்தை.. தன் மீது காட்டிய அக்கறையை.. திருமணம் நடத்திவைத்த விஷயத்தை.. இன்னுமின்னும் அவரில்லாமல் அயலகம் வந்திருப்பது இதுவே முதல் முறை.. அதுவும் அவருக்காக என்கிற பட்சத்தில் கண்ணீர்மல்கிக் கனிந்த உரையது கேட்டோர் உள்ளமெல்லாம் கனக்க வைத்தது!

நம் மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாபெரும் கலைஞன் பாரதி ராஜா தன் உள்ளத்தைத் திறந்து வைத்தேப் பேசிப் பழகியவராக.. தனக்கும் இயக்குனர் சிகரத்திற்கும் இடையே மலர்ந்த நட்பை ஆதிமுதல் அழகாக எடுத்துரைத்து அவர் அமரத்துவம் பெற்றபோது.. முன்னொரு நாள் 15 ஆண்டுகளுக்கு முன்னதாக இருவரும்பேசிக் கொண்டபடி.. அவர் உடலைச் சுமந்துசெல்கிற பாக்கியம் கிடைத்ததை உணர்வுடன் பகிர்ந்து கொண்டது என பேசிய 30 நிமிடங்களுமே முலாம்பூசாத தங்கத்தை நிகர்த்த பேச்சு! எந்த ஒரு கலைஞனுக்கும் பாராட்டுதான் முக்கியம் என்பதை இயக்குனர் சிகரம் முன்னோடியாகத்திகழ்ந்ததை தனது 16வயதினிலே படத்தைப் பற்றிய பாராட்டுக் கடிதம் முதற்கொண்டு எடுத்துக்காட்டியது சிந்தை நிறைந்தது! இமயத்திற்கு நடக்கின்ற விழாவில் சிகரம் வந்து கலந்துகொண்ட அற்புதத்தை பாரதி நட்புக்காக நடத்திக்காட்டியதை என்னவென்பது? கலையுலக பாரதி என்று விருதளித்த பாரதி இன்று அவரின் நினைவஞ்சலியையும் நடத்திடுவது மட்டுமின்றி பார்வையாளர்களாக எங்களையும் இணைத்துக் கொண்டதில் நன்றி பாராட்டுகிறோம்!

என்றும் உங்களில் ஒருவனாக.. உங்களோடு ஒருவனாக..

காவிரிமைந்தன்

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்

பம்மல் சென்னை 600 075

www.thamizhnadhi.com

&

நாகராஜன் சபீக் (அஸ்கான் நிறுவனம்) அபுதாபி..

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க